ஆறுமுக நாவலரும் நன்னூல் பதிப்பு நெறிமுறையும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

ஆறுமுக நாவலரும் நன்னூல் பதிப்பு நெறிமுறையும்

July 15, 2025 | Ezhuna

பண்டைய தமிழர்கள் பனைஓலைகளை எழுத்து ஊடகமாகப் பயன்படுத்தினர். காலப்போக்கில் ஓலைச்சுவடிகள் பழுதடைந்த காரணத்தால், அவை படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அச்சு ஊடகங்கள் தோன்றியபிறகு, பழந்தமிழ் நூல்கள் அச்சாக வெளியிடப்பட்டன. இதற்காகப் பல பதிப்பாசிரியர்கள் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, பாடவேறுபாடுகளைக் கவனித்து, மூலபாடங்களை நிலைநாட்டி, பதிப்புப் பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக ஈழத்துப் பதிப்பாசிரியர்கள், பதிப்புத்துறையில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்கள் பதிப்பித்த நூல்கள் இலக்கியம், இலக்கணம், இசை, சோதிடம், தருக்கம், வைத்தியம், வரலாறு போன்ற பலதுறைகளை உள்ளடக்கியவை. சுவடிகளின் குறியீடுகளை அடையாளம் காணும்திறன், பாட வேறுபாடுகளை அலசும் திறமை, மூலபாடத்தை உறுதிப்படுத்தும் திறமை போன்றவை இவர்களிடம் இருந்தன. இத்தகைய ஈழத்துப் பதிப்பாசிரியர்கள் பதிப்பித்த நூல்களில் அவர்கள் கையாண்ட பதிப்பு உத்திகள், நெறிமுறைகள் குறித்து ஆராய்வதாக ‘ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும்’ எனும் இத்தொடர் அமையவுள்ளது.

ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் பதிப்பு நெறிமுறைகளை அவர்களின் பதிப்பு நூல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆராய்வதாக இத்தொடர் கட்டுரைகள் அமையவிருப்பதினை முன்னரே கூறியுள்ளோம். அவ்வகையில் ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் மிகவும் இன்றியமையாதவர் ஆறுமுக நாவலர் ஆவார். நாவலர் காலகட்ட சமுதாய நிலையினைக் குறித்தும் அவரது நன்னூல் பதிப்பு முறைகள் குறித்தும் காணலாம். 

ஆறுமுக நாவலர் 

19 ஆம் நூற்றாண்டில் தமிழுக்குத்தொண்டு செய்த மிகப்பெரும் தமிழறிஞருள் தலையானவர் ஆறுமுக நாவலர். இலங்கையில், யாழ்ப்பாணம், நல்லூரில் வாழ்ந்த கந்தப்பிள்ளைக்கும், சிவகாமி அம்மையாருக்கும் புதல்வராக 1822 ஆவது ஆண்டு பிறந்தவர் ஆறுமுக நாவலர். ‘இளமையில் கல்’ என்னும் ஔவையின் வாக்கிற்கேற்ப, பெற்றோர் ஆறுமுகத்தை நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் கல்வி கற்கச் செய்தனர். மேலும் இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத்துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறையில் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சைவநெறிச் சாத்திரங்களையும் நன்கு பயின்றார். வடமொழியையும் உடன் படித்தார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியையும் கற்றுக்கொண்டார். அத்தோடு அக்கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அக்காலகட்டத்தில் பர்சிவல் பாதிரியாரின் கூற்றிற்கிணங்க பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

இவரது காலம் 12.12.1823 – 06.12.1879 ஆகும். இந்தியாவும் இலங்கையும் அந்நியர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த காலகட்டம். சைவமும் தமிழும் அதனால் சிறிது நலிவுற்றுக் காணப்பட்டன. இலங்கையின் வடபாகமாகிய யாழ்ப்பாணத்தை, சைவ சமயத்தவரும், தமிழ்ப் புலவர்களும் உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்தனர். அங்கு சைவ சமயக் கோயில்கள் அதிகம். பின்னாளில் அவ்விடம் போர்த்துக்கீசர் வசமாகியது. அதனால் அங்கு கிறித்துவர்களின் ஆதிக்கம் பெருகியது. பின்னர் ஒல்லாந்தர் கை ஓங்கியது. அதன்பின் 1719 வாக்கில் அப்பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.  

சமுதாயப் பணி

யாழ்ப்பாணத்து நல்லூரில் உள்ள ஒரு சிறிய திண்ணைப்பள்ளியில் சுப்பிரமணியப் பிள்ளை என்பவரிடம் கல்வி கற்ற நாவலர் அவரது ஒன்பதாவது அகவையில் அவர் தந்தை எழுதிய நாடகத்தின் குறைப்பகுதியை எழுதி முடித்தார். சம்பளம் பெறாமல் கல்வி புகட்டிய நாவலர் 1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வண்ணார் பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.

நாவலர் யாழ்ப்பாணத்திலிருந்தாலும், தமிழகத்தின் சிதம்பரத்தில் 1864 ஆம் ஆண்டு சைவப் பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.

இவர் இயற்றிய நூல்கள் இருபத்தி மூன்று (23), உரை செய்தவை எட்டு (8), பரிசோதித்துப் பதிப்பித்தவை முப்பத்தி மூன்று (39). மொத்தமாக எழுபதிற்கும் (70) அதிகமான நூல்களை வெளியிட்டார். தமிழில் பிரசங்க முறையை முதன்முதலில் ஆரம்பித்தவர் நாவலர். இவர் பதிப்பாளர், சைவப்பிரசங்கர், கல்விச்சாலை நிறுவனர், எழுத்தாளர், ஆசிரியர் முதலான பல்வேறு வகைப்பட்ட பணிகளை ஆற்றியுள்ளார். சைவத்தையும் தமிழையும் வளர்க்கத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்நாள் முழுதும் திருமணம் செய்யாமல் துறவியாக வாழ்ந்தார்.

யாழ்ப்பாணத்துச் சமயநிலை

ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் தாம் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட உற்றறிவின் வழி ‘யாழ்ப்பாணச் சமய நிலை’ எனும் நூலை 1872 ஐப்பசியில் வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்துச் சமயநிலையையும் மக்களின் வாழ்க்கை நிலையினையும் அவர்களது மனநிலையையும் அறிந்துகொள்ளும் பொருட்டு நாவலர் இயற்றிய நூல் இதுவாகும். இந்நூலின் பதிப்புரையில் “நாவலர் ஒளித்துமறைத்து சொல்லத் தெரியாதவர், அக்காலத்தின் போலி நடிப்பை எடுத்துக்கூற நாவலரைப் போல ஆட்களில்லை” என்று இவரைப் பற்றிப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுச் செல்கின்றார்.

இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள புரோடெஷ்டாண்டு கிறித்துவப் பாதிரியார்கள் யாழ்ப்பாணம் வந்து சைவ சமயத்தைப் பழித்துப் பேசினமை குறித்து “சீவனத்திற்காகவே பெரும்பாலும் இங்கிலிஷைப் படித்தனர்” என்றும், “அன்னம், வஸ்திரம் முதலியவை பெற்றுப் படிக்கும் பொருட்டும், உத்தியோகம் பெற்று சம்பளம் வாங்கும் பொருட்டும் துரைமார்களிடம் சிபாரிசு பெறும் பொருட்டும் கிறிஸ்துவச் சமயத்திலே ஈடுபாடு கொண்டனர்” என்றும் குறிப்பிடும் நாவலர், இவற்றோடு போலிக் கிறித்துவர்களின் செய்கைகளை எல்லாம் ஒவ்வொன்றாகச் சான்றாதாரங்களுடனும் தான் நேரில் கண்டவற்றுடனும் சேர்த்துக் கூறுகின்றார். “படிப்பிற்காக கவர்மெண்ட் செலவு செய்யும் பணம் லௌகிக நூற் கல்விக்கன்றிச் சமய நூற் கல்விக்கன்று” என்றும் சுட்டுகின்றார். அத்துடன் பாதிரிமார்களுக்கும் துரைமார்களுக்கும் உள்ள வேறுபாட்டினைப் பட்டியலிட்டுக் காட்டுவதோடு, இவர்களுக்கிடையேயான ஏற்ற இறக்கங்களையும் சுட்டிச் செல்கின்றார். அத்தோடு ஆங்கிலப் பள்ளிக்கூடம் பற்றிய செய்தியையும், அதில் கிறித்தவப் பாதிரிமார்களின் ஆதிக்கத்தையும் வெளிப்படையாகக் குறிப்பிடுகின்றார்.

உரைநடை 

உரைநடை நூல்கள் தொடக்கத்தில் இல்லை. அக்காலத்திய நூல்கள் எல்லாம் பெரும்பாலும் செய்யுள் வடிவில்தான் இருந்தன. சிலகாலம் கழித்துச் செய்யுளும் உரை நடையும் கலந்த நூல்கள் வெளிவரத் தொடங்கின. பிற்காலத்தில் ஐரோப்பியர் வருகையின் காரணமாகத்தான் தமிழ் உரைநடை புத்தொளி பெற்றது எனலாம். காலப்போக்கில் வளர்ந்து வந்த உரைநடை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில்தான் அது செழுமை பெறத்தொடங்கியது எனலாம். தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஆறுமுக நாவலரின் தொண்டு போற்றத்தக்கதாகும். ஆறுமுக நாவலரின் உரைநடை ஆற்றலைக்கண்டு வியந்த பரிதிமாற் கலைஞர் “ஆங்கில உரைநடைக்கு டிரைடன் (Dryden) போன்று தமிழ் உரைநடைக்கு ஆறுமுக நாவலர் சிறந்து விளங்கினார்” என்று போற்றுகிறார். மேலும் அவர் நாவலரை “வசனநடை கைவந்த வள்ளலார்” என்றும் கூறிப் புகழ்கிறார்.

மீனாட்சி சுந்தரம்பிள்ளையைப் போன்று செய்யுளியற்றுவதில் ஆறுமுக நாவலருக்கு அதிகம் ஈடுபாடு இருக்கவில்லை. நாவலரின் சரித்திரத்தை நான்காம் முறையாக எழுதிய நல்லூர் த. கைலாசபிள்ளை நாவலர் செய்யுளியற்றுவதில் ஆர்வங்காட்டாமைக்குரிய காரணங்களைக் கீழ்வருமாறு கூறுவார்,

“பாட்டுக்கள் தோத்திரம் ஒன்றற்கேயல்லாமல் மற்றவைகளுக்கு அவ்வளவு சிறந்தன அல்ல என்பதும், பாட்டு வடிவமான நூல்களாற் சாமானிய சனங்களுக்குப் பிரயோசனம் இல்லை என்பதும், தற்காலத்தில் இங்கிலிஷ், சம்ஸ்கிருதம் முதலிய பாஷைகளிலும் வசன நூல்களே வழங்குகின்றன என்பதும், இனித் தோத்திரத்துக்கும் தேவார திருவாசகம் முதலிய அருட்பாக்கள் இருக்கும்போது அவற்றிற்கு மேலாக நாம் என்ன தோத்திரத்தைச் செய்யப்போகிறோம்” என்பதும் இவர் கருத்துக்களாம்.

மதக்கண்டனம்

‘கிறித்தவ மதக்கண்டன சபை’ என்கிற ஒன்றை இவர்தான் முதன்முதலில் தொடங்கினார். சைவ சமயத்தைப் பற்றிப் பிரசங்கமும் (பரப்புரை) தொடர்ந்து செய்தார். தமிழில் பரப்புரை என்னும் கலையை முதலில் பயன்படுத்தி, அதனைச் செய்தவர் ஆறுமுக நாவலர்தான் என்பார் கு. சுந்தரமூர்த்தி.

பைபிளை மொழிபெயர்க்கும்போது அந்த பைபிளையும் அதற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலத்தில் பைபிளுக்குச் செய்யப்பட்ட உரைகளையும் நன்றாக அறிந்து வைத்திருந்தார் நாவலர். அதனால் அதில் உள்ள மாறுபட்ட பல கருத்துகளையும் குற்றங்களையும் தெளிவாய் ஆதாரத்துடன் குறித்து வைத்திருந்தார். பைபிளில் உள்ள கருத்துகளை இவரளவுக்கு அக்காலத்தில் யாரும் அறிந்து வைத்திருக்கவில்லை. இவையெல்லாம் இவரின் கிறித்து மதக் கண்டனத்திற்கும் சைவ சமயம் வளர்ப்பதற்குமான பரப்புரைக்கும் உதவியாய் இருந்தன.

நூற் பதிப்பு

நாவலர் தமிழ் உரைநடையில் காற்புள்ளி, அரைப்புள்ளி போன்ற நிறுத்தற் குறியீடுகளை முதன்முதலில் பயன்படுத்தியவர். இவரைப் ‘புதிய தமிழ் உரைநடையின் தந்தை’ என மு. வரதராசனார் பாராட்டியுள்ளனர். “உரைநடை நூலாசிரியர்களில் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் தலைசிறந்தவர்” என கா.சு. பிள்ளை பாராட்டியுள்ளார். 1850 ஆம் ஆண்டு நவீன அச்சு இயந்திரம் நிறுவிய நாவலர், தான் எழுதிய இருபத்திமூன்று (23) நூல்கள் உட்பட கிட்டத்தட்ட தொண்ணூற்று ஏழு (97) தமிழ் நூல்களைச் சிறப்புற வெளியிட்டார்.

‘தமிழ்ப்புலமை’ என்னும் கட்டுரையிலே தமிழ் கற்க விழையும் சைவசமயத்தைச் சேர்ந்தவர்கள் கற்க வேண்டியனவற்றைப் படிமுறையில் வரிசைப்படுத்தித் தந்துள்ளார். பாலபாடங்கள், இலக்கணச் சுருக்கங்கள், நிகண்டு, நீதிநூல்கள், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், திருவாதவூரடிகள் புராணம், கந்தபுராணம், உபதேச காண்டம், கோயிற்புராணம், சேதுபுராணம், பதினொராம் திருமுறையில் உள்ள பிரபந்தங்கள், குமரகுருபர சுவாமிகள் அருளிச்செய்த பிரபந்தங்கள் ஆகிய இலக்கியங்கள், இலக்கண நூல்கள் மற்றும் அவற்றின் உரைகள், பூகோள நூல், கணிதம், வீச கணிதம், சேத்திரக் கணிதம் என்ற படிநிலைகளில் அவற்றைக் கொள்ளலாம். இவற்றைக் கூறுவதோடு நின்றுவிடாமல் இந்நூல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய வழி வகைகளையும் நாவலர் செய்ய முற்பட்டார். நூல்களையும் உரைகளையும் திருத்திப் பதிப்பித்தும் தாமாகவே நூல்கள் சிலவற்றை இயற்றி அச்சிட்டும் தமிழ்க் கல்விக்கு நாவலர் தொண்டாற்றினார்.

நன்னூல் பதிப்பு வரலாறு

நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் எத்தகைய சிறப்பு வாய்ந்தவர்களோ அத்தகைய சிறப்பு வாய்ந்தவர்கள், போற்றத்தக்கவர்கள் பதிப்பாசிரியர்கள் ஆவர். பதிப்புப்பணி என்பது மூலநூல் ஆசிரியனின் கோட்பாடுகளும் கருத்தியலும் கட்டமைப்புகளும் எவ்வகையிலும் சிதையாமல் உள்ளதை உள்ளவாறே வெளிக்கொணர்தலோடு, இதற்கு அரணான உறுப்புகளையும் உடன்சேர்த்து செவ்வியல்முறையில் அவற்றை அச்சில் கொண்டுவருவதாகும். அவ்வகையில் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் நன்னூல் பதிப்பு வரலாறும் போற்றுதலுக்குரியதாகும். 

தமிழ்ப்பதிப்பு வரலாற்றினை 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்து அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் இணைந்தே இட்டுச்சென்றனர். அம்முயற்சியினை ஒவ்வொரு பதிப்பிலும் காண இயலும். அவ்வகையிலேயே இந்நன்னூல் பதிப்பினையும் நோக்க வேண்டியதாக உள்ளது. நன்னூலுக்கு விசாகப்பெருமாள் ஐயரே காண்டிகையுரையினை முதன்முதலாக 1834 இல் அச்சேற்றம் செய்தார். அது மட்டுமல்லாமல் முதன்முதலாக அச்சாக்கம் செய்யப்பட்ட மரபிலக்கணம் என்ற பெருமையையும் பெற்றது நன்னூல் ஆகும். 

விருத்தியுரைப் பதிப்புகள்

  1. முதன் முதலில் ஆறுமுகநாவலர் தான் நன்னூல் விருத்தியுரைப் பதிப்பினை, 1851 இல் வெளிக்கொணர்ந்தார்.   
  2. தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் நன்னூல் விருத்தியுரையை விசாகப்பெருமாளையர் செய்த பதவுரையோடு 1855 இல் வெளியிட்டார்.
  3. ஜி.யு. போப் ‘பவணந்தி முனி செய்த நன்னூல் மூலமும் பொழிப்புரையும்’ என்ற பெயரில் சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரையின் பொழிப்புரைப் பதிப்பினை 1857 இல் வெளியிட்டார்.
  4. திருமயிலை தெய்வசிகாமணி முதலியாரும் சண்முகம் பிள்ளையும் இணைந்து நன்னூல் விருத்தியுரைப் பதிப்பினை 1889 இல் வெளியிட்டனர்.
  5. உ.வே. சாமிநாதையர் 1918 இல் நன்னூல் மயிலைநாதர் உரைப்பதிப்பினை வெளியிட்டுள்ளார்.
  6. கழகப் புலவர் குழுவினர் நன்னூலினை 1956 ஆம் ஆண்டு வெளியிட்டனர்.
  7. தண்டபாணி தேசிகர் விருத்தியுரையினை திருவாவடுதுறை ஆதினம் 1957 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
  8. எம். சுந்தரேசம் பிள்ளை – 1969
  9. சோம. இளவரசு – 1981

இவற்றில் உ.வே. சாமிநாதையர், தண்டபாணி தேசிகர் ஆகியோர் விருத்தியுரைகளை ஏட்டுச்சுவடிகளோடு ஒப்பிட்டுப் பதிப்பித்தார்கள். மற்றவர்கள் அச்சுப்பிரதிகளைப் பார்த்துப் படியெடுத்து வெளியிட்டார்கள்.

சங்கர நமச்சிவாயர் உரை மட்டும் உள்ள உ.வே. சாமிநாதையரின் பதிப்பு 1925 ஆம் ஆண்டு வெளிவந்தது.

சங்கர நமச்சிவாயர் இயற்றிச் சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை உரைவகையில் ஆறுமுக நாவலர் பதிப்பு (1851), கழகப் புலவர் குழுவின் பதிப்பு (1956), தண்டபாணி தேசிகர் பதிப்பு (1957), சுந்தரேசம் பிள்ளை பதிப்பு (1969), சோம. இளவரசு பதிப்பு (1981) ஆகிய பதிப்புகள் உள்ளன.

புத்தம் புத்துரையும் விசாகப் பெருமாளையரின் பதவுரையும் கொண்ட பதிப்புகளாகச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் பதிப்பு (1855), தெய்வசிகாமணியோடு சண்முகம்பிள்ளை இணைந்து வெளியிட்ட பதிப்பு (1889) ஆகியவை காணப்படுகின்றன. 

சங்கர நமச்சிவாயர் இயற்றிச் சிவஞான முனிவர் திருத்திப் புதுக்கிய புத்தம் புத்துரையின் ஒருசில பகுதிகளை மட்டுமே கொண்ட பதிப்புகளாக விசாகப் பெருமாளையரின் காண்டிகையுரை (1834), இராமானுச கவிராயரின் விருத்தியுரை (1857), வேதகிரி முதலியாரின் காண்டிகையுரை (1851), போப்பையர் பதிப்பித்த பொழிப்புரை (1857) ஆகிய பதிப்புகள் உள்ளன.

இவற்றோடு அ. தாமோதரன் பதிப்பித்த கூழங்கைத்தம்பிரான் உரைப்பதிப்பு போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த நன்னூல் பதிப்புகள் ஆகும். மேற்கண்டவாறாக நன்னூலுக்கு மூலமும் உரையுமான பதிப்புகள் அமைகின்றன. இனி ஆறுமுக நாவலரின் நன்னூல் பதிப்புப் பற்றிக் காண்போம்.

ஆறுமுகநாவலரின் நன்னூல் பதிப்பு

சங்கர நமச்சிவாயரால் எழுதப்பட்ட விருத்தியுரையினைச் சிவஞான முனிவர் திருத்திய புத்தம் புத்துரையினை முதன்முதலாக ஆறுமுக நாவலர் பதிப்பித்துள்ளார். இதன்வழி நன்னூல் உரைப்பதிப்பின் முன்னோடியாக ஆறுமுக நாவலர் விளங்குகின்றார். ஆதலால் தமிழ்ப் பதிப்புக்கலைக்கு அடிக்கல் நாட்டியவராக நாவலரைக் கொள்ளலாம். அவர் பதிப்பித்த நூல்களுள் இலக்கண நூல்கள் ஏழு; அவ்வாறான பதிப்புகளில் சிறந்த பதிப்பாக நன்னூல் விளங்குகின்றது. இந்த நூலினைப் பதிப்பிக்கும் போது அவருக்கு வயது 29 ஆகும். சுவடியில் உள்ள பாடங்களை உள்ளவாறே பிழையில்லாத தெளிவான பாடங்களாக வழங்குவது, தொடர்களின் அமைப்புக்கு ஏற்றவாறு நிறுத்தல் குறிகளைப் பயன்படுத்துவது, உரையினைப் பொருளமைதிக்கு ஏற்ற வகையில் பத்திகளாகப் பிரித்தல், உதாரணம் என்பதை சுருக்கக்குறியீடாக ‘உ-ம்’ என்றும், இதன்பொருள் என்பதை சுருக்கமாக ‘இ-ள்’ என்றும் குறிப்பிடுதல் ஆகிய உத்திகளோடு தமது பதிப்பை வெளியிட்டுள்ளார். பொதுவாக அவரது பதிப்புகளில் மூலம், உரை, சூத்திர முதற்குறிப்பு அகராதி, சோதன பத்திரம் (பிழை திருத்தம்) முதலியவற்றைப் படிநிலைகளாக அமைத்திருந்தார். மேற்கோள்களின் இடவிளக்கங்கள், பாட வேறுபாடுகள், விளக்கக் குறிப்புகள் முதலியவற்றை அவர் தருவதில்லை. முகவுரை, பதிப்புரை, பின்னிணைப்புகள் ஆகியவற்றையும் அவரது பதிப்பில் காண இயலாது. இத்தன்மைகளை ஆறுமுகநாவலரின் பதிப்புகளில் காணலாம். 

நூற் கட்டமைப்பு

ஆறுமுகநாவலர் பதிப்புகளில் மட்டுமல்ல, பழங்காலப் பதிப்புகளில் யாவற்றிலும் நூலின் முகப்புப்பக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றது. நூலினைப் பற்றிய பல இன்றியமையாத தகவல்களை முகப்புப் பக்கத்தைக்கொண்டே அறிந்துகொள்ள முடிகின்றது. அவ்வகையில் நன்னூல் விருத்தியுரைப் பதிப்பின் முகப்புப் பக்கத்தில் பரமபதி துணை (பரம்பொருள்) என்று உள்ளது. இது சைவத்திற்கும் சமணத்திற்கும் பொதுவான ஒரு சொல்லாக அமைகின்றது. நன்னூல் விருத்தியுரை எனும் நூலின் பெயரும், அதன் உரையாசிரியர் திருநெல்வேலிச் சங்கர நமச்சிவாயப் புலவர் என்றும், அந்த உரையைத் திருத்தியவர் சிவஞானசுவாமிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்வழி, அந்நூலானது சமண சமயத்தைச் சார்ந்த புலவரான பவனந்தி முனிவரால் எழுதப்பட்ட போதிலும், இந்த முகப்புப் பக்கத்தினைப் பார்க்கும் போது இதனைப் பதிப்பித்தவர்கள் சைவசமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதையும், உரையாசிரியரான சங்கர நமச்சிவாயரும் பதிப்பாசிரியரான ஆறுமுக நாவலரும் திருநெல்வேலியையும், யாழ்ப்பாணத்து நல்லூரையும் சேர்ந்தவர்கள் என்பதையும் அறியலாம். அத்தோடு பதிப்பிக்கப்பட்ட அச்சகம், அச்சகத்திற்கு உரியவர், அச்சகத்தின் முகவரி, பதிப்பிக்கப்பட்ட ஆண்டு முதலான தகவல்களை முதல் பக்கத்தின் வழியாகவே அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.  

நன்னூல் விருத்தியுரை

நன்னூல் விருத்தியுரையில் சிறப்புப்பாயிரம் முதலாவதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பாயிர முடிவில் சங்கரநமச்சிவாயரின் உரையும் சிவஞானமுனிவரின் குறிப்புரையும் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்ததாக சங்கரநமச்சிவாயர் உரைக்கான உரைப்பாயிரம் வழங்கப்பட்டுள்ளது. உரைப்பாயிரத்தை அடுத்துப் பொதுப்பாயிரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பாயிரத்திற்கான உரையில் உரைமேற்கோளாக ஆத்திரையன் பேராசிரியர் என்பவரால் எழுதப்பட்ட பொதுப்பாயிர மேற்கோள் தனித்த நிலையில் பதிப்பாசிரியரால் பிரித்துக்காட்டப்பட்டுள்ளது. அடிக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ‘விமரிசம்’ என்ற வடசொல்லுக்கு ‘சிந்தித்தல்’ என்னும் தமிழ்ச்சொல்லினைப் பதிப்பாசிரியர் வழங்கியுள்ளார். சொற்பொருள் விளக்கங்களை அடிக்குறிப்பில் வழங்கும் மரபினை நாவலரின் பதிப்புகளெங்கும் காணலாம். இவ்வடிக்குறிப்புகள் பன்முகத்தன்மை உடையவை. இவை தனித்த ஆய்விற்குரியனவாக அமைகின்றன. சிறப்புப்பாயிரம், உரைக்கான உரைப்பாயிரம், உரைப்பாயிரத்தை செய்தவர் பற்றிய குறிப்புகள் முதலானவற்றை நாவலர் குறிப்பிடவில்லை. இவர் தமது இலக்கண நூல்களில் பதிப்பு முன்னுரை எதனையும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆதலால் இந்நூலுக்கு இவர் பயன்படுத்திய சுவடிகளைப் பற்றிய தரவுகளை அறிய முடியாத நிலையேயுள்ளது. மேற்கோள் பாடல்களின் அடிகள் ஒன்றன்கீழ் ஒன்றாகக் கொடுக்கப்படாமல் அடிகளுக்கிடையே சிறுகோடிட்டுப் பத்திகளாக வழங்கப்பட்டுள்ளன. சான்றாக, ‘ஈவோன் றன்மை யீத லியற்கை – கொள்வோன் றன்மை கோடன் மரபென – வீரிரண் டென்ப பொதுவின் றொகையே’1 என்பதைக் கொள்ளலாம். மேற்கோள் பாடல்கள் எடுத்தாளப்பட்ட நூல்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. குறிப்பிட்ட சூத்திரங்கள் பொருளின் அடிப்படையில் வகைமை செய்யப்பட்டு துணைத்தலைப்புகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. சான்றாக நூல்வகை, முதனூல், வழிநூல், சார்புநூல் என்ற தலைப்பிட்டு வகைப்படுத்தியுள்ளார். சில நூற்பாக்களின் அடிகளை மடக்கி அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளமையினையும் காணமுடிகின்றது.2 இவ்வழமையை பிற்காலத்தில் உ.வே.சா பதிப்புகளிலும் காணலாம். குறிப்பிட்ட பொருண்மையில் வருகின்ற நூற்பாக்களின் இறுதியில் மையத்தில் சிறுகோடிட்டு பிரிக்கப்பட்டுள்ளமையினைக் காணமுடிகின்றது.3 ஒவ்வொரு இயலின் இறுதியிலும் இவ்வியலின் பெயரைக் குறிப்பிட்டு ‘இயல் முற்றிற்று’4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நூற்பாக்கள், சங்கர நமச்சிவாயர் உரை, சிவஞானமுனிவரால் திருத்தப்பட்ட உரைப்பகுதி ஆகியவை தனித்தனியாகப் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. உரையமைப்பில் பொழிப்புரை தனியாகவும், அகலவுரை தனியாகவும் காட்டப்பட்டுள்ளன. 

பதவுரையும் வரலாற்றுப்பகுதியும் தனித்துப் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. மேற்கோள்கள், எடுத்துக்காட்டுகள் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளன. ஆறுமுக நாவலர் பைபிளை மொழிபெயர்த்துப் பதிப்பித்த பட்டறிவின் அடிப்படையில் மற்றப் பதிப்பாசிரியர்களைக் காட்டிலும் குறியீடுகளைத் தமது பதிப்பில் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். 

நன்னூல் காண்டிகையுரை

இக்காண்டிகையுரையில் நன்னூல் விருத்தியுரைப் பதிப்பில் காணப்படாத ஆக்கியோன் பெயர் முதலான செய்திகள் சிறப்புப்பாயிரத்தின் இறுதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.5 இவரது காண்டிகையுரைப் பதிப்பில் சிறப்புப்பாயிரத்தின் மையக்கருத்து தாற்பரியம் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளமையினைக் காணமுடிகின்றது. இவர் தனது பதிப்புகளில் சந்தி பிரித்து பதிப்பிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை. பாயிரத்தின் பெயர்கள் போன்ற உட்தலைப்புகளை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளார். இலக்கணவமைதி எனும் பகுதியில் அவ்விலக்கண நூற்பாக்கள் எவ்வகையில் பொருத்தமுடையதாக அமைந்துள்ளன என்பதினைப் பல்வேறு மேற்கோள்களைக் காட்டி விளக்கிச் சென்றிருப்பார். காண்டிகையுரைப் பதிப்பில் சுவடிகளில் காணப்பட்ட அதே தமிழ் எண்களையே குறிப்பிட்டுப் பதிப்பித்துள்ளார். இவற்றிற்கெல்லாம் மேலாக தன்னுடைய காண்டிகையுரைப் பதிப்பில் பரிஷை வினாக்கள்6 என்ற பகுதியைக் குறிப்பிட்டு வினாக்களைத் தனியே வகைப்படுத்திக் கூறியுள்ளார். மேலும் அப்படி வினாக்களைக் குறிப்பிடும்போது வினாவிற்கு தமிழில் எண்களையும் இணைத்து குறிப்பிட்டுள்ளார். அதுவும் வினாக்களுக்கு சூத்திர எண் வரிசையை அடிப்படையாகக் கொள்ளாமல், அனைத்துச் சூத்திரங்களுக்கும் தனித்த தொடர் எண்கள் தரப்பட்டுள்ளன. எழுத்ததிகாரம் என்பதைக் குறிப்பிட்டு எழுத்ததிகாரம் என்பது ‘எழுத்தினது அதிகரித்தலையுடைய படலம்’7 என அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுத் தனித்துக் காட்டினர். சில இடங்களில் நூற்பாக்களுக்கு உரை எழுதிய நாவலர் நூற்பாக்கள் எந்த உத்தியில் அமைக்கப்பெற்றுள்ளன, அதனை எத்தகைய பார்வையில் பார்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுச் செல்கின்றார். சான்றாக, மாத்திரைக்குப் புறநடை கூறும் நூற்பாவிற்கு உரையெழுதிய நாவலர் அந்நூற்பாவானது ‘பிறநூன்முடிந்தது தானுடன்படுதலென்னு முத்தி’8 என்று அந்நூற்பா அமைந்துள்ள பாங்கினை எடுத்தியம்புகின்றார். ‘அப்பியாசம்’ எனும் பகுதியைத் தனியாக ஈற்றில் குறிப்பிட்டு இருப்பதை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகப் பார்க்க முடிகின்றது. வடமொழியில் அப்பியாசம் என்றால் தமிழில் ‘பயிற்சி’ என்பது பொருள்.  நூலின் இறுதியில் மாணவர்களுக்காகவோ அல்லது நன்னூல் காண்டிகையுரையினைப் படிக்கும் மக்களுக்காவோ சில பயிற்சி வினாக்களைத் தொகுத்து வரிசைப்படுத்தியுள்ளார். இது அன்றைக்கால பதிப்புகளில் மிகவும் போற்றுதலுக்குரிய ஒன்றாகப் பார்க்க முடிகின்றது.9 இலக்கணவமைதி எனும் பகுதியையும் தனித்துச் சுட்டியுள்ளார். இத்தகைய பகுதியினைத் தனித்துக் குறிப்பிட்டதற்கான காரணத்தையும் ‘இலக்கணங் கற்றவர், இலக்கியத்தில் அவ்விலக்கணம் அமைத்து கிடக்கும் முறைமையை ஆராய்ந்து விதியோடு கூறப் பயிலல் வேண்டும். அது செய்யப் பயிலாவிடத்து இலக்கணநூற் கல்வியால் ஒருபயனும் இல்லை’ என்று குறிப்பிட்டுச் செல்கின்றார். அதனால் அதற்கான சில குறிப்புகளை அளித்துச் செல்கின்றார். பகுபத முடிபு, வினைமுற்றுப் பகுபதம், பெயரெச்சப் பகுபதம், வினையெச்சப் பகுபதம் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு அதனைப் பற்றிய விளக்கத்தையும் குறிப்பிட்டுச் செல்கின்றார். சொல்லிலக்கண சூசி எனும் பகுதியை அடுத்துக் குறிப்பிடுகின்றார். சொல்லிலக்கண சூசி என்பது சொல்லின் வகைகளையும், அவற்றின் இலக்கணங்களையும், அவற்றின் பயன்பாட்டையும் விளக்கும் பகுதி ஆகும். பெயர்ச்சொல் எனும் பகுதியில் பொருட்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் (தெரிநிலைவினையாலணையும் பெயர், குறிப்புவினையாலணையும் பெயர்) ஆகியவற்றை விளக்கிச் செல்கின்றார். வினைச்சொல் எனும் பகுதியில் முற்றுவினை (தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று), பெயரெச்சம் (தெரிநிலை, குறிப்பு), வினையெச்சம், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றின் வகைகளைக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இலக்கணங் கூறிய உதாரணங்களையும் குறிப்பிட்டு அதனை விளக்கியுரைக்கின்றார். உபாத்தியாயருக்கு அறிவித்தல், மாணாக்கர்களுக்கு அறிவித்தல் ஆகியவற்றையும் குறிப்பிட்டு விளக்கிச் செல்கின்றார். இறுதியாக நன்னூற் சூத்திரவகராதியையும் வழங்கியுள்ளார். அதில் சூத்திரத்தினையும் பக்க எண்ணையும் அகர நிரலில் குறிப்பிட்டுள்ளார். பிழை திருத்தல் பணியையும் மேற்கொண்டுள்ளார். நூலின் இறுதியில் தான் செய்த திருத்தத்தையும் பிழை திருத்தல் என்ற தலைப்பின் கீழ் வரிசைப்படுத்தி பக்க எண், இடம்பெற்றுள்ள நூற்பா வரி, காணப்பட்ட பிழை, திருத்தம் செய்த சொல் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

நன்னூல் மூலம்

ஆறுமுக நாவலரின் நன்னூற் பதிப்பின் நூற்பாக்களை மட்டும் வைத்து நன்னூல் மூலம் என்ற நூல் வித்தியாநுபாலன யந்திரசாலையினால் வெளியிடப்பட்டது. சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம், அடைப்புக்குறிக்குள் தலைப்புகள் என்ற முறைமையில் இம்மூலம் மட்டும் அமைந்துள்ள பதிப்பானது அமைந்துள்ளது. இக்கால எண் வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு உட்தலைப்பின் கீழ் அமைந்த நூற்பாக்களைக் குறிப்பிட்டு அவை முடியும் இடத்தில் மையத்தில் சிறுகோடிட்டு வேறுபடுத்திக் காட்டுகின்றார். தலைப்புகளைச் சிறிது பெரிய எழுத்துருவில் அமைத்துப் பதிப்பித்துள்ளார்.

ஆறுமுக நாவலரின் நன்னூல் பதிப்பினை மூன்று வகையாகக் கொள்ளலாம். இது நன்னூல் மூலத்தினையும் சங்கரநமச்சிவாயரின் விருத்தியுரையினையும் சிவஞானமுனிவரின் திருத்தங்களோடு பதிப்பித்த பதிப்பு; இரண்டாவதாக நன்னூல் மூலத்தினைச் சுவடிகளோடு ஒப்பிட்டுக்கொண்டு தாமே எழுதிய காண்டிகையுரையோடு பதிப்பித்த பதிப்பு; நன்னூல் மூலத்தினை மாத்திரம் பதிப்பித்த பதிப்பு என்பனவாகக் கொள்ளலாம். இப்பதிப்புகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் ஆய்வதற்குரியன. இம்மூன்று பதிப்புகளையும் உற்றுநோக்கும் போது பதிப்புப்பணியில் நாவலரின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலையினை அறிய முடிகின்றது. குறியீடுகளைப் பயன்படுத்தும் முறை விருத்தியுரைப் பதிப்பினைவிட காண்டிகையுரைப் பதிப்பில் சிறந்து விளங்கியுள்ளது. அத்தோடு தாற்பரியம், சூசி எழுதும் பாங்கு, பரிஷை வினாக்கள், பயிற்சி வினாக்கள், தொகுத்துச்சுட்டல், இலக்கணவமைதி கூறல், உத்திமுறைகளை விளக்கிக்கூறுதல், அகரவரிசையில் சூத்திரங்களைக் குறிப்பிடல் என அனைத்தையுமே நாவலரால் பதிப்பியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியாகப் பார்க்கமுடிகின்றது. இவரது இப்பதிப்புகளோடு பிற பதிப்பாசிரியர்கள் பதிப்பித்த மூலப் பதிப்புகளையும் ஒப்பிட்டு ஆய்தல் என்பது பதிப்பியல் ஆய்வில் இன்றியமையாததாகின்றது. அடிப்படையான ஒரு நிலையில் ஆறுமுகநாவலரின் நன்னூல் பதிப்புகள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளமையினை அறியலாம்.   

அடிக்குறிப்புகள்

  1. நன்னூல் விருத்தியுரை – ப.14
  2. நன்னூல் விருத்தியுரை – ப.17, நூற்பா – இரு நூற் சிறப்பு விதி
  3. மேலது – ப. 27
  4. மேலது – ப. 38
  5. நன்னூல் காண்டிகையுரை – ப. 4 (தமிழ் எண்ணில் குறிக்கப்பட்டுள்ளது)
  6. மேலது – ப. 18
  7. மேலது – ப. 33
  8. மேலது – ப. 52
  9. மேலது – ப. 352

துணைநூற்பட்டியல்

  1. ஆறுமுக நாவலர் பதிப்பு, 1957, நன்னூல் சங்கரநமச்சிவாயப்புலவர் விருத்தியுரை, சிவஞானமுனிவர் திருத்தப் பதிப்பு, வித்தியாநுபாலன அச்சகம், சென்னை.
  2. ஆறுமுக நாவலர், 1891, நன்னூற் காண்டிகையுரை, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை.
  3. தாமோதரன். அ, பதிப்பு, 1999, நன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயர் உரையும், சிவஞானமுனிவர் திருத்த உரைப்பதிப்பு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  4. ஆறுமுக நாவலர் பதிப்பு, 1957, நன்னூல் மூலம், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை.
  5. ஆறுமுக நாவலர், 1872, யாழ்ப்பாணச் சமயநிலை, சைவவித்தியா விருத்திச்சங்க வெளியீடு, இலங்கை.
  6. கைலாசபிள்ளை. த, 1881, ஆறுமுக நாவலர் சரித்திரம், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை.
  7. பூலோகசிங்கம். பொ, 1970, தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள், கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பாணம்.


About the Author

இளஞ்செழியன் சண்முகம்

இளஞ்செழியன், பழனி அருகிலுள்ள வயலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது இளங்கலைத் தமிழ்ப் படிப்பினை உடுமலைப்பேட்டை, அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் வ. கிருஷ்ணன் அவர்களிடம் பயின்று, பல்கலைக்கழக அளவில் எட்டாம் இடத்தினையும், அதனைத் தொடர்ந்து திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை செவ்வியல் தமிழ் பாடத்தைப் பயின்று பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் தேசிய தகுதித் தேர்வில் (NET) மூன்று முறை தேர்வாகியுள்ளார். 2022-2023 ஆம் கல்வியாண்டில் டில்லிப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரக்கூடிய இதழியல் துறையில் (Delhi School of Journalism) கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பத்திற்கும் மேற்பட்ட தமிழாய்வு சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் பங்கேற்றுள்ளார். தற்போது கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் தமிழ்த்துறைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி அவர்களிடம் ‘தொல்காப்பிய சேனாவரையம் மூலபாடத் திறனாய்வும் செம்பதிப்பும்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து தமிழியல் ஆய்வுத்துறையில் இயங்கி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்