புலப்பெயர்வும் மலையகம் எனும் சமூக உருவாக்கமும்
பூர்வீகத் தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு சமூகம், தன்னை ‘மலையகச் சமூகம்’ என அடையாளப்படுத்துவதில் தொடர்ந்து முனைப்பைக்காட்டி வந்துள்ளது. இருநூறு வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட புலப்பெயர்வை, ‘புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம்’ என்ற அடிப்படையில், ஆழமாக அணுக வேண்டிய தேவை நிலவுகிறது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தினதும், சுதந்திர இலங்கையினதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய பணிகளில் பல தியாகங்களைச் செய்த சமூகமாக மலையகம் விளங்குகிறது. உரிமையற்ற கூலிச் சமூகமாகவே வரலாற்றில் காணப்பட்ட இச்சமூகம், பல்வேறு இன்னல்களை அனுபவித்த வரலாற்றைத் தன்னகத்தே கொண்டதாகவும், அதனை மனவுறுதியுடன் எதிர்கொள்ளும் சமூகமாகவும் பரிணமித்துள்ளது. இயற்கைச் சவால்கள் மத்தியிலும் எதிர்ப்பு உணர்வுகளை தன்னகத்தே வளர்த்துக்கொண்ட இச்சமூகம், அதை ஊக்கமாகக் கொண்டு தம்மை வடிவமைத்துள்ளது. கடுங் குளிருடன்கூடிய மார்கழி மாதங்களில், அதிகாலை குளித்து, ஊர்வலமாக வந்து வழிபாட்டில் ஈடுபடுவது, இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இதேபோல், பயிற்சி நிலையங்களில் இடம்பெறும் கூத்து நிகழ்வுகளில் தீயைக் கைக்கொள்வது போன்ற செயல்கள் அபரிமிதமான ஆன்ம உறுதியை வெளிப்படுத்துகின்றன. அம்மன் வழிபாட்டுச் சூழலில் தீமிதித்தல், வேல் குத்துதல் போன்ற ஆன்மபல விருத்தியை நோக்கிய பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மலையக சமூக உருவாக்கத்தின் அடித்தளமாக விளங்கும் நாட்டார் மரபில், அழகியலும் வாழ்வியலும் பிரதிபலிக்கின்றன. அதேநேரத்தில், மலையக நாட்டார் பாடல்கள் எதிர்ப்பும் எழுச்சியுமான சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன. இவ்வகை உணர்வுகளின் மேலெழுச்சி, மலையக நாடக முயற்சிகளிலும் தெளிவாகக் காணப்படுகிறது. இந்த எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்துவதிலும், எழுச்சிக் கோசங்களை முன்வைப்பதிலும், மலையக வீதிப்பாடல்களும் முக்கிய பங்கு வகித்துள்ளன. அடக்குமுறைகளுக்குள் அழுத்தப்படுகின்ற எந்தவொரு இனமும், தாம் மீள எழுச்சியடையும் விருப்பத்துடன் குரலை உயர்த்துவது உலக வரலாற்றின் தொடர்ச்சியில் பதிவாகி உள்ளது.
அவ்வகையில் முச்சந்தி இலக்கிய வகையாக இவ் இலக்கிய வடிவம் முக்கியத்துவம் பெறுகிறது. பேராசிரியர் கா. சிவத்தம்பி, முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் இவ்வகை இலக்கியம் தொடர்பில் ஆர்வத்தைக் காட்டியுள்ளார்கள். சமூக அவலங்களை அவதானித்த நிலையில் தனியொரு கவிஞனால் இவை பாடப்பட்டு வந்துள்ளன. இவை பின்னர் சிறுசிறு பிரசுரங்களாக அச்சில் வெளிவந்துள்ளன. இவ்வகை இலக்கியத்தை ‘பாதி வாய்மொழிப் பாடல்கள்’, ‘எழுத்து நிலைபெற்ற வாய்மொழிப் பாடல்கள்’ என வகைப்படுத்த முயற்சிக்கின்றனர். இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள், புலப்பெயர்வு வேதனைகளை நாட்டார் பாடல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார்கள். அப்பாடல்களில் எதிர்ப்புவாதச் சிந்தனைகளும் மேலோங்கியிருப்பது அவதானத்திற்குரியதாகும். அதிலிருந்து மேலோங்கிய நிலையில் எதிர்ப்புவாதத்தை முதன்மைப்படுத்துகின்ற போக்கில் பாடலை இயற்றிப் பிரசாரப்படுத்தியதில் முதன்மையானவராக மீனாட்சியம்மாள் நடேசய்யர் கொள்ளப்படுகிறார். இலங்கையின் நாடகத்துறையின் முன்னோடி தேசபக்தன் கோ. நடேசய்யரின் ‘தொழிலாளர்களின் அந்தரப் பிழைப்பு’ நாடகப் பிரதியாக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடல்கள் இவ்வாறான அணுகுமுறையில் உருவாக்கப்பட்டவைகளாகும். இப்பாடல்களில் தொழில் உரிமை தொடர்பான கருத்தியல்கள் வலிமை பெறுகின்றன.

உரிமை மறுப்பும் மலையக மக்களும்
சுதந்திர இலங்கையில், இந்திய வம்சாவளி மக்களுக்கான வாக்குரிமைப் பறிப்பு, பிரஜா உரிமை பறிப்பு, கல்வியுரிமை மீதான தடைகள் போன்றவை இம்மக்களிடம் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபை உருவான பின்னரும், இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது வரலாற்றின் இருண்ட பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமையின் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்ட ஸ்ரீமா–சாஸ்திரி ஒப்பந்தம், இந்திய வம்சாவளியினர் மத்தியில் மிகுந்த கவலையையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. குடியுரிமைக்கான உரிமையை எதிர்பார்த்த ஒரு சமூகத்தை, ‘மந்தைக் கூட்டம்’ போன்று பிரித்து அனுப்பும் முனைப்பே இவ்வொப்பந்தத்தின் மையமாக அமைந்தது. இலங்கையில் நூற்றாண்டைக் கடந்த பின்னணியைக் கொண்ட குடும்பங்களும், சமூகங்களும் இந்த ஒப்பந்தத்தால் வேறுபாடுகளுக்கு உள்ளாயின.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் தங்களை ‘மலையக மக்கள்’ என அடையாளம் காண முனைந்தபோதும், அவர்களைப் பாதித்த இந்த அனுபவம் மனங்களில் நீங்காத கறையாகவே பதிந்துவிட்டது. இத்தகைய அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவான பாடல்களே ‘வீதிப்பாடல்கள்’ என அழைக்கப்படுகின்றன.
மேலும், தென்னிந்தியாவில் உருவான திராவிடக் கருத்தியலும், அக்காலத் தமிழகச் சினிமாச் சூழலும் இத்தகைய சமூகநிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. திராவிட இயக்கத்தின் வாதங்களை எதிரொலிக்கின்ற பாடல்களும், புரட்சிகரக் கலைப்பாடல்களும் மலையகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றின் மொழியிலும் நடைமுறையிலும் ஏற்பட்ட தாக்கங்களால் பல வீதிப்பாடல்கள் உருவாயின என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.
மலையகம் எனும் சமூக உருவாக்கத்தின் ஏக்கத்திலிருந்து எழுந்த இந்தப் பாடல்கள் ‘மலையக வீதிப்பாடல்கள்’ எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. இப்பாடல்கள் சித்திரிக்கும் விடயப்பரப்புகளையும், அவற்றை இயற்றிய பாடலாசிரியர்களையும், அவர்களுக்குப் பின்னணியாக அமைந்த சமூக – அரசியல் சூழ்நிலையையும் ஆவணப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
நாட்டார் பாடல், வீதிப்பாடல்களுக்கிடையிலான தொடர்புநிலை
மலையக நாட்டார் பாடல்களில் அழகியல் வர்ணனைகளுக்கு குறைவில்லாதபோதிலும், சமூகப் பாதிப்புநிலைகளும் விரிவாகப் பாடப்படுவது கவனிக்கத்தக்க அம்சமாகும். தமிழகச்சூழலில் பிறந்து வளர்ந்த மக்கள், தமிழர்களின் பூர்வீக உணர்வுடன் வாழ்ந்து பழகிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால், பிரித்தானியர்களின் காலனித்துவத் திட்டத்திற்குள் அகப்பட்டு, புலம்பெயர்ந்த இம்மக்கள் இலங்கையில் சிறுபான்மை இனக்குழுமமாக அடையாளப்படுத்தப்பட்டனர். இந்தக் கடினமான மாற்றத்தை எதிர்கொண்ட இம்மக்கள், அந்தநிலையை விரும்பாத மனநிலையுடன் வாழ்ந்தனர் என்பதை இப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. தமிழகத்தில் நிலவிய பஞ்சநிலைமை, இந்தப் புலப்பெயர்வுக்கு ஒரு முக்கியத் தூண்டலாக இருந்தபோதும், இலங்கையின் வளத்தின்மீது காட்டப்பட்ட ஆசைச் சொற்களும் இந்த இடப்பெயர்வுக்கு காரணமாக இருந்ததைக் குறிப்பிட்டுக் கூறலாம். முழுமையான விருப்பமின்றி கட்டாயத்தால் அழைத்துவரப்பட்டதற்கான அனுபவங்களும் மலையக நாட்டார் பாடல்களில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு அமைந்த பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக பின்வரும் பாடலைக் கவனிக்கலாம்.
“கண்டிக்கு போறோமுன்னு…
கறி சோறு தின்னுப்புட்டு..
தோணி ஏற மாட்டமுன்னு…
தொங்கலிலே ஒழிஞ்சிக்கிட்டா..
தங்கரத்தினமே..! அவனத்
தொலைச்சுடுவான் ஆளுக்காட்டி
பொன்னே ரத்தினமே..!
எட்டடி குடிசையிலே..
இருப்பது நியாயமில்லே..
எமலோகம் போகலாம் வாடி தாயே..
பட்டுப் பாவாடை கட்டி..
பகட்டு மினுக்கிக் கொண்டு…
பரதேசம் போகலாம் வாடி – தாயே..!
பரதேசம் போகலாம் வாடி…!”
இலங்கையில்பட்ட வேதனைகளைப் பதிவு செய்யும் பின்வரும் பாடலடிகளும் கவனத்திற்குரியவைகளாகும்.
“எட்டுப் பேர் சேவகரும் …
இலங்கைக்கே போனதிலே..
எட்டு பேர் வந்ததென்ன – நீங்க
இலங்கையிலே மாண்டதென்ன…?
அடி அளந்து வீடு கட்ட – நம்ம
ஆண்ட மனை அங்கிருக்க..
பஞ்சம் பொழைப்பதற்கு…
பாற்கடலைத் தாண்டி வந்தோம்…!
பஞ்சம் பொழைக்கலையே – நாம
பட்டணம் போய்ச் சேரலையே..?
ஊரான ஊரிழந்தேன்..
ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்..
பேரான கண்டியிலே..
பெத்த தாயை நான் இழந்தேன்.
பாதையிலே வீடிருக்க..
பழனி சம்பா சோறிருக்க…
எரும தயிரிருக்க..
ஏண்டி வந்த கண்டிச் சீமை…?”
இப்பாடல்கள் இலங்கைக்கான புலப்பெயர்வில் ஈடுபாடு இல்லாத தன்மையின் வெளிப்பாடுகளாக அமைந்தமையை அறியலாம். அதுபோலவே வாழ்விடச் சூழலிலும் தொழிற்களங்களிலும் எதிர்ப்புணர்வைக் காண்பிக்கும் வகையில் எழுந்த பாடல்களும் அவதானத்திற்குரியவைகளாகும். தாங்கள் அனுபவிக்கும் பாதிப்புநிலைகளை பதிவு செய்யும் இப்பாடல்கள், அவ்வனுபவங்களை எதிர்க்கும் கருத்தியல் முனைப்புகளையும் கொண்டிருக்கின்றன.
“கூடயில கொழுந்துமில்லே
கொழுந்தெடுக்க சிந்தையில்லே
கங்காணி சொன்ன சொல்லு
கண்ணீரா கொட்டுதடி..!
ஓடி ஓடி கொழுந்தெடுத்தேன்
ஒரு கூட கொழுந்தெடுத்தேன்
பாவி கணக்கப்புள்ள
பத்து றாத்த சொல்லுறானே..!
கல்லாறு தோட்டத்திலே
கண்டாக்கையா பொல்லாதவன்
மொட்டே புடுங்தின்னு
மூனாள வெரட்டிப் போட்டான்……..”
அவ்வாறே,
“எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சி நிக்கையிலே
‘வெட்டு வெட்டு’ எங்கிறானே
வேலையத்த கங்காணி”
என்ற வசைமொழிகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும். செவிவழியாக பேணப்பட்டு வந்த பாடல்களிலும் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிக்காட்டியுள்ளதுடன் இருப்புத் தொடர்பான ஏக்கங்களையும் பதிவு செய்துள்ளார்கள். நாட்டார் பாடல்களைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சி நிலையில் கருத்துகளை எழுத்தாக்கமாகப் பதியும் முனைப்பில் மலையகக் கவிதைகள் உருவாக்கத்திற்கான களங்கள் அமையப்பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சி நிலையிலேயே மலையகச் சிறுகதைகள், நாவல்கள் என்றவாறு பரிணாமம் பெற்று மலையக இலக்கியத்துறையின் வளர்ச்சிநிலைக்கு தூண்டுதலாக அமைந்தது எனலாம். இத்துறைகளைப் போன்றே நாடகத்துறையின் பரிமாணமும் அவதானத்திற்குரியதாகும். இலங்கையின் நாடக முயற்சிகளுக்கு முன்னோடியாக மலையகம் விளங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நாடகங்களில் பாடப்பட்ட பாடல்கள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. இப்பாடல்களின் வீரியத்தன்மை மற்றும் கருத்துநிலைகள் மலையக மக்களிடத்தே அதீத ஈடுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் நாடகத்துறையின் முன்னோடிகளாக மலையகத்தவர்கள்
பொதுவாக இலங்கையின் நாடகத்துறை வரலாற்றைப் பின்வருமாறு வரையறுக்கும் போக்குக் காணப்படுகிறது. சிங்கள நாடக மரபு 1950களின் பின்னர்தான் பேராசிரியர் சரத் சந்திர தலைமையில் பரிமாணம் எடுத்ததாகக் கூறுவர். அதுபோலவே பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையில் தமிழ் நாடக மரபு வளர்ச்சி பெற்றதாகவும் குறிப்பிடுவர். இக்கூற்றுகளுக்கு அமைய ஐம்பதுகளுக்குப் பின்னர் தமிழ் நாடக மரபும், சிங்கள நாடக மரபும் சமாந்தரமான வளர்ச்சிநிலையை அடைந்து வந்ததாகக் குறிப்பிடுவர். இந்நாடக முயற்சிகள் தொடர்பான பதிவுகளில் மலையக சமூகம் மீதான அவதானம் இடம்பெறாமை கவலைக்குரிய விடயமாகும். மாறாக முப்பதுகளிலேயே கோ. நடேசய்யர் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு’ எனும் நாடக நூலை வெளியிட்டுள்ளார். இலங்கையின் நாடகச் சூழல் பற்றிய அவதானத்தில் மலையகத்தின் வகிபங்கு தொடர்பான ஆதாரங்கள் எடுத்துக்கூறப்பட்டதன் பின்னரே இலங்கையின் நாடகத்துறை வளர்ச்சியை மீள்பரிசீலனை செய்கின்ற போக்கு உருவாகியது. இத்துறை தொடர்பான அழுத்தமான எழுத்துகளின் விளைவாகவே மலையக நாடக முன்னெடுப்புகள் தொடர்பான அவதானமும் கருத்திற் கொள்ளப்படுகின்றமை கவனிக்கத்தக்கது. கோ. நடேசய்யரின் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு’ நாடக நூலே, இலங்கையின் முதலாவது அரசியல் நாடகநூல் என்பதை நாடக உலகு ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நடேசய்யரின் நாடகநூலின் மற்றுமொரு பரிமாணமாக எழுச்சிப் பாடல்களைத் தந்த திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யரின் வகிபங்கை எடுத்துக்கூறலாம். இலங்கையின் அரசியல் கவிதைகளை முதலில் தந்த பெண் ஆளுமையாக மீனாட்சியம்மாள் நடேசய்யர் கருதப்படுகிறார். மலையகக் கவிதை இலக்கியத்துக்கு வலிமை சேர்த்ததில் முதன்மையானவராகவும் அம்மையார் அமைகிறார். இலங்கையின் பெண் கவிதை ஆளுமையாக பத்மாசினி அவர்கள் விளங்குகின்ற அதேநிலையில் மீனாட்சியம்மாளின் சமகாலத்திற்கு உட்பட்டவராகவும் அவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. மீனாட்சியம்மாள் நடேசய்யர் தொழிலாளர்களின் அந்தரப் பிழைப்பு நாடகத்திற்கான பாடல்களை இயற்றியதுடன் தொடர்ந்து வீதிப்பாடல்களுக்கே உரியவகையில் பல பாடல்களை இயற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மலையக இலக்கியத்தின் தனித்துவத்திற்கு பல இலக்கிய வடிவங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன. அவ்வகையில் எழுச்சிபெற்ற இலக்கிய வடிவமாக மலையக வீதிப்பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. 1800களின் இறுதிப்பகுதியில் இருந்தே மலையகம் நாடகத்துறையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில் ஆர்வங்காட்டி வந்துள்ளது. அதற்கு முன்பதாகவே பாரம்பரியக் கூத்துகளை பயில்நிலைக்குரியதாக ஆற்றிய அனுபவத்தின் தொடர்ச்சி நிலையாகவும் இவ் ஈடுபாட்டை அவதானிக்கலாம்.
மலையக நாடகத்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட சமகாலத்திலேயே வீதிப்பாடல்கள் ஊடாக எழுச்சிக் கருத்துகளை பரப்பும் முனைப்பு இடம்பெற்றுள்ளது. அக்கால எழுச்சிப்பாடல்கள், தாயகமான தமிழகத்தின் மீதான ஏக்கத்தையும், மீண்டும் தமிழகம் நோக்கி நகரவேண்டும் என்ற ஆவலையும் வெளிப்படுத்தியதோடு, புலப்பெயர்வைப் பற்றிய எதிர்ப்பையும் உள்ளடக்கியதாக இருந்தன. எடுத்துக்காட்டாக “இந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்கு கூலிவேலை செய்யப் போகும் தொழிலாளர்களுடைய நிலைமை விருத்தியடைய வேண்டுமானால் இந்தியாவிலிருந்து தொழிலாளர் வருவது குறைய வேண்டும். இந்தியாவில் கிராம புனருத்தாரண வேலை ஆரம்பிக்கப்பெற்று அவர்களது நிலைமையை உயர்த்த வேண்டும். கிராம புனருத்தாரண வேலை ஆரம்பிக்கப்பட்டால் இந்தியத் தொழிலாளர் அந்நிய நாடு போவது குறைவதோடு, அந்நாடுகளில் அவதியுற்று திரும்பாது இந்தியச் சகோதரர்களுக்கும் தாய் நாட்டில் உழைப்புக்கிடமுண்டாகும் என்பது திண்ணம்.” என்ற கோ. நடேசய்யரின் ‘தொழிலாளர்களின் அந்தரப் பிழைப்பு’ நாடக நூலுக்கான முன்னுரை வரிகளைக் குறிப்பிடலாம்.
மலையக வீதிப்பாடல்களை ஆவணப்படுத்தும் பிரயத்தனங்கள்
மலையக வீதிப்பாடல்களை சேகரிக்கும் செயற்பாடுகள் குறித்த அவதானத்தில் மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம் அவர்களது பணி குறிப்பிடத்தக்கதாகும். மலையக நாட்டார் பாடல்களைச் சேகரிக்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்த மு. சிவலிங்கம் அவர்கள் 2007 ஆம் வருடம் ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் (பல்வகை சேர்க்கை)’ எனும் தலைப்பில் தொகுப்பொன்றினை வெளியிட்டிருந்தார். சிறுசிறு நூல்களில் இருந்த வீதிப்பாடல்கள் இத்தொகுப்பின் ஊடாக ஆவணப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதுபோலவே மலையக அசைவியக்கத்தின் முக்கிய ஆளுமையாக விளங்கும் சிவ. இராஜேந்திரன், ஸ்ரீபாத தேசியக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலத்தில் (2008 ஆம் வருடம்) மலையக ஆவணங்கள் தொடர்பிலான கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். அக்கண்காட்சியில் கணிசமான வீதிப்பாடல் தொகுப்புகளை பார்வையிடும் சந்தர்ப்பம் சமூகத்தினருக்கு கிடைத்தது. 2011 ஆம் வருடம் ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்’ சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்தியது. இம்மாநாட்டில், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அம்மையாரின் தலைமையில் இடம்பெற்ற ஆய்வரங்கில் ‘மலையக வீதிப்பாடல்களின் உள்ளடக்கமும் அவை வெளிப்படுத்திய எழுச்சித் தாக்கங்களும்’ எனும் தலைப்பில் ஆய்வாளர் அ. லெட்சுமணன் அவர்களினால் ஆய்வுரை முன்வைக்கப்பட்டது. இவ் உரையின் பின்னர், தலைமை வகித்த பேராசிரியர் அம்மையார் இவ் ஆய்வுரை தொடர்பாகச் சிலாகித்து, முதற்தடவையாக சர்வதேச தளத்தில் மலையக வீதிப்பாடல்கள் தொடர்பான பதிவுகள் இடம்பெற்றமை தொடர்பிலும் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார். இவ் அரங்கில் பங்கேற்றிருந்த பேராசிரியர் செ. யோகராசா அவர்களும் இவ் உரை தொடர்பிலும், மலையக வீதிப்பாடல்கள் தொடர்பிலும் கருத்துகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தினக்குரல் பத்திரிக்கையின் இணை வெளியீடான ‘உதயசூரியன்’ இதழில் மலையக வீதிப்பாடல்கள் தொடர்பான விவரணத் தொடர் கட்டுரை அ. லெட்சுமணனால் எழுதப்பட்டது. பின்னாளில் ‘ஈழத்து முச்சந்தி இலக்கியம்’ எனும் தலைப்பில் மலையக வீதிப்பாடல்களின் கருத்து நிலைகளையும் உட்படுத்திய ஆய்வு நூலினை செ. யோகராசா வெளியிட்டிருந்தார். 2012 ஆம் வருடம் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் பெ. முத்துலிங்கத்தின் தொகுப்பில் ‘பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்’ எனும் தலைப்பிலான மலையக வீதிப்பாடல்களின் தொகுப்பொன்றினை வெளியிட்டிருந்தது. அண்மைக்காலத்தில் கோ. நடேசய்யரின் ‘தொழிலாளர்களின் அந்தரப் பிழைப்பு’ நாடக நூலின் மீள்பதிப்பும் மலையக வீதிப்பாடல்கள் குறித்த அவதானத்தில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே அண்மைக்காலத்தில் எம்.எம். ஜெயசீலன், ஜெ. ஹறோசனா ஆகியோரின் ‘கோ. மீனாட்சியம்மாளின் படைப்புகள்’ தொகுப்பும், அதனுடன் தொடர்புபடும் படைப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
மலையக நாட்டார் பாடல்களைத் தொகுக்கும் முயற்சிகள்
மலையக நாட்டார் பாடல்களை நூலுருவில் ஆவணப்படுத்தும் முயற்சியில் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களது பணி குறிப்பிடத்தக்கது. மலையக இலக்கியத்தின் காத்திரத்திற்கு அடித்தளமிட்டதில் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களுக்கு முக்கிய இடம் உள்ளது. சி.வி அவர்கள் ஆவணங்களைக் காப்பதிலும் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சி நிலையில் சி.வி வாழ்ந்த மண்ணிலிருந்து வந்த சுப்பையா இராஜசேகரனின் ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளும் அவதானிக்கத்தக்கதாகும். 1976 ஆம் வருடம் இடம்பெற்ற ‘மாமன் மகளே’ (மலைநாட்டு மக்கள் பாடல்கள்) எனும் தலைப்பிலான நூலாக்க முயற்சியும் சிறப்பிற்குரியதாகும். இது கடந்த 2023 ஆம் வருடம் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய மலையக நாட்டாரியல் ஆய்வரங்கு நிகழ்வில் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்களினால் மீள்பதிப்புப் பெற்றிருந்தது. மலையக நாட்டார் பாடல்கள் மலையக கலை, இலக்கிய, அரங்கியல், ஆய்வு முயற்சிகளுக்கு சான்றுகளாகவும் ஊடகமாகவும் அமைந்துள்ளமை கவனத்திற்குரியதாகும். மலையக நாட்டார் பாடல்களை ஆவணமாக்கும் முயற்சிகளில், ஏ.வி.பி. கோமசின் ‘அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான்’ எனும் கதை வடிவ ஆவணப்படுத்தலும் குறிப்பிடத்தக்கதாகும். அதன் தொடர்ச்சி நிலையில் 2004 ஆம் வருடம் ஸ்ரீபாத தேசியக் கல்வியியற் கல்லூரியின் ஐந்து ஆசிரியர், மாணவர்கள் முன்னெடுத்த ‘கண்டி சீமையிலே’ எனும் மலையக நாட்டார் பாடல்களின் தொகுப்பு முயற்சி இத்துறை ஆர்வலர்களுக்கு மகிழ்வைத் தருகின்ற விடயமாக அமைந்திருந்தது. 2007 ஆம் வருடம் இடம்பெற்ற மு. சிவலிங்கம் அவர்களின் தொகுப்பு முயற்சியும் வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறு மலையக நாட்டார் பாடல்களைத் தொகுதிகளாக்க வேண்டியதை உணர வேண்டியது காலத்தின் தேவை ஆகும்.
பாதி வாய்மொழிப் பாடல்கள்
‘மலையக வீதிப்பாடல்கள்’ மலையக நாட்டார் பாடல்களுக்குரிய தன்மையில் வளர்ச்சிபெற்று விளங்கினாலும், நாட்டார் பாடலில் இருந்து வேறுபடுகின்றவையாகும். நாட்டார் பாடலை இயற்றிய பாடலாசிரியர்களை அடையாளப்படுத்த முடியாது. மாறாக வீதிப்பாடலாசிரியர்கள் தம்மை அடையாளப்படுத்தியே இப்பாடல்களை அறிமுகம் செய்துள்ளனர். குறைந்த பக்கங்களைக் கொண்ட சிறு நூல்களாக அமையப்பெற்றுள்ள இத்தொகுப்பு நூல்களில், பாடலாசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். பாடலுக்குரிய மெட்டும் இராகமும் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் இத்தொகுப்பில் உள்ள பாடல்களை எழுதியவரே பாடல்களைப் பாடி நூல்களை விற்பனை செய்யும் வழக்கமும் இருந்துள்ளது. ஏலவே இருக்கின்ற பாடலின் மெட்டுகளைத் தழுவிய வகையில் இப்பாடல்கள் அமையப்பெறும். வீதிப்பாடல்களை ஓரளவு வாய்மொழிப் பாடல்கள் அல்லது பாதி வாய்மொழிப் பாடல்கள் என வரையறுப்பர். இலங்கையின் வேறு பிரதேசங்களிலும் இவ்வகையான பாடல்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சிங்களத்திலும் வீதிப்பாடல்களுக்குரிய அம்சங்களுடன் பாடல் பாடும், சிறு நூல்களை விற்பனை செய்யும் மரபு காணப்பட்டுள்ளது. அவர்கள் ‘தாள் பாட்டுக்காரர்’ (கொள கவி காறயா) என அழைக்கப்பட்டுள்ளார்கள்.
எழுத்து நிலை பெற்ற வாய்மொழிப் பாடல் மரபு (Semi Oral), தமிழில் கவனிக்கப்படாத ஓர் இலக்கிய வகை என்பார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. பேராசிரியரது வகைப்படுத்தலுக்கான விளக்கம் பின்வருமாறு அமைகிறது. “இவ்வகைப் பாடல்களை முற்றுமுழுதாக நாட்டார் வழிப்பட்ட பாடல்களுடன் சேர்த்துவிட முடியாது. ஏனென்றால் நாட்டார் பாடல் நிலைக்குள்ள, ஆசிரியர் தெரியாமை அல்லது ஒட்டுமொத்தக் கூட்டுநிலை ஆசிரியர் தன்மை இங்கு காணப்படவில்லை. இங்கு குறிப்பிட்ட ஒருவர் – கவிஞர் அல்லது புலவர் – எழுதுவார், சிலவேளை அவரே அதனை மக்களுக்கு முன்னால் வாசிப்பார். இன்றேல் சிலர் வாங்கி வாசித்துக்காட்டி விற்பார்கள். ஆகவே உண்மையில் இதனுடைய தொடர்பு வலு என்பது வாய்மொழி நிலைப்பட்டதுதான்.” அவருடைய கருத்தின்படி சங்ககாலம் தொடக்கமே இவ்வாறான பாடல் மரபு வளர்ந்து வந்துள்ளமையை அறியலாம். புலவர்களைப் போன்று கல்வி அறிவைப் பெறாதவர்களை ‘கல்லாவாய் பாணர்கள்’ என வகைப்படுத்துவார்கள். இந்தப் பாணர்கள் பற்றி அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இவ்வகையான பாணர் பாரம்பரியத்தின் வளர்ச்சி அல்லது உருமாற்றந்தான் வீதிப்பாடல்களை ஒத்த பாடல்களின் வளர்ச்சி நிலையாக நோக்கப்படுகிறது.
‘முச்சந்தி’ இலக்கியமாக வகைப்படுத்தல்
பாதி வாய்மொழிப் பாடல்கள் நீண்டகாலமாகவே பாடப்படுகின்ற நிலையில், மலையகத்தைப் பொறுத்தமட்டில் அது வீதிப்பாடல்கள் என்றே அழைக்கப்படுகிறது. சமூகத்தின் சிக்கலான தன்மைகளையும், பாதிப்பு நிலைகளையும் எடுத்துக்கூறி அந்நிலைமைகளில் இருந்து மீட்சிபெறும் நோக்கில், அதற்கான தீர்வும் விடிவும் வேண்டும் முனைப்பை வலியுறுத்துவதை இது நோக்காகக் கொண்டமைந்துள்ளது. இங்கு பாடல் புனையும் வித்துவத்தைவிட, சமூகப் பிரச்சினைகள் மற்றும் நிகழ்வுகளை வலியுறுத்துவதே முக்கியமாக அமைவது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வடக்கு, கிழக்கு, மற்றும் தென்னிலங்கையிலும் இவ் எழுச்சிப்பாடல் மரபு முறைமை இருந்து வந்துள்ளது. இவ்வகையான எழுத்து நிலைபெற்ற வாய்மொழிப் பாடல்களை முனைவர் இரா. வேங்கடாசலபதி ‘முச்சந்தி’ இலக்கியம் என அடையாளப்படுத்துகிறார். சந்தை, திருவிழா, வீதி, பாலம் ஆகிய பொது இடங்களில் பாடப்படுவதனால், இப்பாடல் மரபினை முச்சந்தி இலக்கியம் என வரையறை செய்வதாய் அவர் கருத்துரைக்கிறார். அதன் தொடர்ச்சியாக, இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு இனச் சமூகங்களிடையே பாடப்பட்டுவந்த பாடல்கள், ‘ஈழத்து முச்சந்தி இலக்கியம்’ எனும் வரையறைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
முச்சந்தி இலக்கியம் தொடர்பான பார்வைக்கு வலிமை சேர்க்கும் கலாநிதி செ. யோகராசாவின் “புதுவகையான வாய்மொழிப் பாடல் மரபென்றினை என்னால் அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே அறியப்பட்ட வாய்மொழிப் பாடல் மரபு ஆசிரியர் தெரியாத நிலையிலும், ஒட்டுமொத்தக் கூட்டுநிலையிலும் வெளிப்பட்டுள்ளது. மாறாக இம்மரபு தனி ஒரு கவிஞரால் வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்துள்ளது. அச்சு வந்த பின்னர் சிறு பிரசுரங்களாக வெளிவந்துள்ளது, வெளிவருகின்றது. இவ்வகைப் பாடல்களின் பாடுபொருள் பிரதேச வேறுபாடுகளுக்கமைய தனித்துவப் பண்புகளைப் பெற்றிருப்பதே அதற்கான காரணமாகிறது” என்ற கூற்று கவனத்திற்குரியதாகும்.
முச்சந்தி இலக்கிய வகையில் முக்கிய அங்கமாக ‘மலையக வீதிப்பாடல்கள்’
இலங்கையில் மிகுந்த அடக்குமுறைக்கு உட்பட்ட சமூகமாக மலையகச் சமூகம் திகழ்கின்றது. காலனித்துவப் பிடிக்குள் சிக்கித்தவித்த நிலையில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக திறந்தவெளிச் சிறைக்குள் அகப்பட்டுக்கொண்ட உணர்வுடனே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இங்கு நிலவுகின்றது. கட்டாயமாகப் புலம்பெயர வேண்டிய நிலை, புலம்பெயர்விற்குப் பின்னரான அடக்குமுறை வேதனைகள், வாழ்வாதாரச் சிக்கல்கள், இருப்புத் தொடர்பான சிக்கல்கள், உரிமைகளைப் பெறுவதற்கான தடைகள், அவற்றைப் பெற மேற்கொண்ட போராட்டங்கள், பெற்ற உரிமைகள் மீண்டும் பறிக்கப்படும்போது ஏற்பட்ட மனச்சோர்வுகள், சமூக, அரசியல், கல்வி மற்றும் பொருளாதார ரீதியிலான பாகுபாடுகள் எனப் பல்வேறு அனுபவங்களை இப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. சொல்லொணாத் துயரங்களுடன் நீண்டகாலமாக நகரும் சமூகம் என்ற அடிப்படையில், தமது பாதிப்பு நிலைகளை பாடல்களாக வெளிப்படுத்துவதில் இம்மக்கள் ஆர்வங்காட்டி வந்துள்ளனர். இப்பாடல்கள் இருநூறு வருடப் பாரம்பரியத்தைக் கொண்டதாக விளங்குகின்றன. இப்பாடல்கள் வலியுறுத்தும் உள்ளடக்கங்கள் மலையக மக்களின் வரலாற்றுத் தடங்களாகவும் திகழ்வதை அறியலாம். அவ்வாறான வரலாற்றுத் தடங்கள் குறித்த அவதானத்தையும், பல வீதிப்பாடல்களின் ஆசிரியர்கள் வெளிப்படுத்தி நிற்கும் கருத்து நிலைகளையும் ஆவணப்படுத்துவதாக இத்தொடர் அமையப்பெறும்.



