காலப்பகுதி IV: வரலாற்றுக்காலம் 3: கி.மு.200-கி.பி.300.
பௌத்த மதத்தின் வருகை
கி.மு. 200 ஆம் ஆண்டுக்காலம் கந்தரோடையில் பௌத்தமதம் அறிமுகமான காலப்பகுதி எனக் கொள்ளலாம். கி.மு. 250 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு புத்தபகவான் சமாதியடைந்த அரசமரக் கிளையைக் கொண்டுவந்த சங்கமித்தையை வரவேற்க யம்புகோளத்துறைக்கு வருகைதந்த அநுராதபுர அரசன் தேவநம்பியதீசன் திரும்பிச் செல்லும்போது கட்டிய ‘பாஸீன விகாரை’ இருந்த இடம் கதிரமலையாகிய கந்தரோடை என இராசநாயகம் அடையாளம் காண்கிறார் (இராசநாயகம், செ. 1933: 14). ஆனால் பெரிய அளவிலான ஒரு விகாரை இருந்ததற்கான அடித்தளம் கந்தரோடை அகழ்வுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தத்தரின் பாத்திரம்
1970 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தினர் கந்தரோடையில் நடத்திய அகழாய்வில் பேராசிரியர் இந்திரபாலா பார்வையாளராகக் கலந்துகொண்டார். அங்கே கண்டெடுத்த மட்பாண்ட ஓடு ஒன்றில் முழுமையாக எழுதப்பட்ட பிராமி எழுத்துப் பதிவு கிடைத்தது. அது பற்றி 1973 இல் வெளியான பூர்வகலா இதழில் அவர் எழுதியிருந்தார்:

“பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்து அரும்பொருளகத்தினால் நடத்தப்பட்ட அகழாய்வின்போது யூலை 1970 இல் கந்தரோடையில் ‘விளாமரத்தடி’ என்ற தலத்தில் ஒரு மட்பாண்ட ஓட்டில் தெளிவாகக் கீறப்பட்ட பிராமி எழுத்துகளைக்கொண்ட இச்சிறு கல்வெட்டுக் கிடைத்தது. இம்மட்பாண்ட ஓடு ஒரு துறவியின் பாத்திரம் எனக் கொள்ளலாம். இந்த மட்பாண்டத்தில் காணப்படும் எழுத்துகள் கி.மு. (பொ.ஆ.மு.) இரண்டாம் நூற்றாண்டளவில் வழக்கில் இருந்த எழுத்துகள். கல்வெட்டின் வாசகம் ‘தத ஹ பத’ என்பதாகும். ‘தத’ என்பது சமஸ்கிருதத்தில் ‘தத்த’ எனப்படும் பெயராகும். ‘ஹ’ என்பது உடைய என்று பொருள்படும். ‘பத’ என்பது சமஸ்கிருத்தில் ‘பாத்ர’ என்று வரும் சொல். இது தமிழில் பாத்திரம் என வழங்கும். ஆகவே கல்வெட்டு வாசகத்தின் பொருள் ‘தத்தருடைய பாத்திரம்’ என்பதாகும் (இந்திரபாலா, கா. 2006: 331-2).
தத்தர் என்ற பெயர் ஒரு பௌத்த துறவியின் பெயராகக் கருதப்படுகிறது. அக்காலத்தைய பௌத்த துறவிகள் உணவு கொள்வதற்குத் தங்கள் சொந்த பிக்க்ஷா பாத்திரங்களை வைத்திருந்தர்கள். மேற்குறிப்பிட்ட ஓடு அவரது பாத்திரத்தின் ஒரு துண்டாக இருக்கலாம்.
அபிசிதன்
2004 ஆம் ஆண்டில் கந்தரோடையிலிருந்து கல்லுண்டாய்வரை சென்று கடலில் தொடுக்கும் வழுக்கையாற்றின் வடிநிலப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கிருக்ஷ்ணராசா ‘அபிசிதன்’ என்ற தமிழ்ப்பிராமிப் பெயர் பதித்த மட்பாண்ட ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார் (கிருக்ஷ்ணராசா, செ. 2004). அந்த கலவோட்டைப் பரிசீலித்த பேராசிரியர் பத்மநாதன் கீழ்க்காணும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

“அபிசிதன்’ என்பது ‘அபிசித’ என்ற பிராகிருதச் சொல்லின் தமிழ் வடிவமாகும். அதன் உபயோகத்தை இருவிதமாக விளக்கலாம். ஒன்று, அது எதுவிதமான சிறப்பான காரணமுமின்றிப் பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு இட்ட பெயர் எனக் கொள்ளலாம். மற்றது, அது ‘அபிக்ஷிக்த’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு நிகரான ‘அபிசித’ என்ற பிராகிருதச் சொல்லின் தமிழ் வடிவம் என்பதாகும். அவ்வாறாகில் அச்சொல்லில் ஒரு பெருங்கதை அடங்கியுள்ளது.
அது ஞானஸ்நானம் பெற்ற ஒருவரின் பட்டப்பெயராகக் கொள்ளத்தக்கது. அந்தவகையில் அது பௌத்த சங்கத்திலுள்ள ஒருவரின் பெயராகும். அபிசிதன் என்ற பெயர் எழுதப்பட்ட கலவோடு ஒருவரின் பிக்க்ஷாபாத்திரத்தின் துண்டமாதல் கூடும். அது பிக்க்ஷாபாத்திரமொன்றின் துண்டமென்று கொள்ளப்படுமாகில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே அங்கே வாழ்ந்த தமிழர் சிலர் பௌத்தராகிவிட்டமைக்கு அது சான்றாகும். அதுமட்டுமின்றி அவர்களில் சிலர் சங்கத்தாராக இருந்தனர் என்பதும் அதனால் உணரப்படும் (பத்மநாதன், சி. 2011: 29-30).”
கந்தரோடைப் புத்த சிற்பங்கள்
கந்தரோடையில் போல் பீரிஸ் மேற்கொண்ட மேலாய்வுகளினதும், அகழாய்வுகளினதும் பயனாக பல புத்த சிற்பங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவற்றில் சில யாழ்ப்பாண அரும்பொருளகத்திற்கும், சில அநுராதபுர அரும்பொருளகத்திற்கும் எடுத்துச்செல்லப்பட்டன.
இச்சிற்பங்கள் யாவும் தென்னிந்தியச் சிற்பக்கலை மரபின் செல்வாக்கினைப் பிரதிபலித்து நிற்பதனை நன்கு அவதானிக்க முடிகிறது. கந்தரோடை அகழ்வுகளின்போது வெளிப்படுத்தப்பட்ட வெண் வைரக்கல்லினாலான புத்தர் சிலைகள் அமராவதிக் கலை மரபின் கலைச்செழிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. கந்தரோடைப் பௌத்த மதமானது தென்னிந்தியாவிலிருந்தே இங்கே வருகை தந்ததை உறுதிப்படுத்தும் சின்னங்களாகவே இச்சிற்பங்கள் அமைகின்றன.

ஆசனநிலையில் அமைக்கப்பட்ட வெண் வைரக்கல்லினாலான புத்தர் சிற்பத்தின் சிறப்பியல்புகள் இங்கு நோக்கத்தக்கவை. சுமார் 15 அந்தர் நிறையுடைய இச்சிற்பமானது ஐந்தரை அடி அகலமான மார்புப் பகுதியைக் கொண்டுள்ளது. சிற்ப அமைப்பு முறையை நோக்கும்போது இங்கு அமராவதிக் கலைமரபில் பின்பற்றப்பட்ட ‘ஒட்டும்முறை’ பின்பற்றப்பட்டிருந்தமையைக் காண முடிகிறது. அதாவது கைகள், கால்கள் என்பன வெவ்வேறாகச் செய்யப்பட்டு அவற்றை உடலோடு பொருத்துகின்ற முறை ஒன்று இருந்தமையினை கந்தரோடையிலிருந்து பெற்றுக்கொண்ட புத்தர் சிற்பங்கள் காட்டிநிற்கின்றன (கிருக்ஷ்ணராசா, செ. 1998: 35). அநுராதபுரத்தில் காணப்படும் ஆரம்பகாலப் பௌத்தச் சிற்பங்களும் இந்த அமராவதிக் கலைமரபின் ஒட்டும் முறையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆனந்தா குமாரசாமி குறிப்பிட்டிருக்கிறார் (Coomaraswamy, A. K. 1935, 1980).
நிற்கும் வகையைச் சேர்ந்த புத்தர் சிற்பமொன்று 1917 இல் போல் பீரிஸ்ஸினால் சுன்னாகத்திற்கு அண்மையில் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது. சுன்னாகத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இச்சிற்பமே ஓரளவுக்குப் பூரணத்துவமான நிலையில் பாதுகாக்கப்பட்டிருந்தது. சிற்பத்தின் தலைப்பகுதி வேறாக அருகே காணப்பட்டது (Pieris, P.E. 1917: 20-21). இச்சிற்பமானது 12 அடி உயரம் கொண்டதாகும். அதன் மார்பகம் 20 அங்குலங்களாகும். தனி வெண்வைரக்கல்லினால் அமைக்கப்பட்ட இச்சிற்பத்தின் அமைதி அமராவதிக் கலைப்பாணியை மாதிரியாகக் கொண்டுள்ளது (கிருக்ஷ்ணராசா, செ. 1998: 35).
இச்சிற்பத்தின் அமைப்பு முறையைப் பொறுத்தமட்டில், வலது மார்பு, தோள் ஆகிய பகுதிகள் தவிர ஏனைய பகுதிகள் போர்வையினால் மறைக்கப்பட்ட நிலையில் தோற்றமளிப்பதனைக் காணலாம். போர்வையின் அமைப்பு பாதத்தினை மறைத்தநிலையில் பாதத்திலிருந்து மடிக்கப்பட்டு மீண்டும் இடது கரத்தினூடாக கீழ்நோக்கித் தொங்குவதாகச் செதுக்கப்பட்டுள்ளது. மடிப்புகள் யாவும் மிகத் தெளிவாகவும், ஒன்றுக்கொன்று சமாந்தரமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் தலையமைப்பு காந்தாரக்கலை மரபின் சுருள்கேச முறையில் வடிக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் மதுராக்கலை மரபில் காணப்படும் உச்சிக்கொண்டை முறையும் இச்சிற்பத்தில் பின்பற்றப்பட்டுள்ளது (கிருக்ஷ்ணராசா, செ. 1998: 35-36).
நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிற்பங்களில் பல தலையற்றவையாகவே அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவும் வெண்வைரக்கல்லினாலேயே செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுள் ஒன்று மைத்திரேயர் வகையைச் சேர்ந்தது. இதன் உயரம் 3 அடி 6 அங்குலங்களாகும். மைத்திரேய புத்தரின் ஆடையலங்காரமும், உடைந்த நிலையில் வேறாகக் கிடைத்த அதன் தலையின் அமைப்பும், கலைவனப்பு வாய்ந்தவையாக உள்ளன. இங்கு மைத்திரேய புத்தரின் மேலாடையானது வலது கரத்தினூடாகக் கீழே தொங்குவது குறிப்பிடத்தக்கது. இச்சிற்பத்தில் புத்தரின் சுருள் சுருளான கேச அமைப்பு காந்தார கலைப்பாணியை வெளிப்படுத்துவதாக உள்ளது (கிருக்ஷ்ணராசா, செ. 1998: 36).
கந்தரோடை பனந்தோப்பு அகழாய்வுகள்
கந்தரோடைக் கிராமத்தின் தெற்கேயிருந்த பனந்தோப்புப் பகுதியிலிருந்த மண்மேடுகளை 1917 ஆம் ஆண்டில் கவனித்த போல் பீரிஸ் அவை பௌத்த தாதுகோபங்களிலிருந்த மேடுகளாக இருக்கலாம் என எண்ணினார் (Pieris, P.E. 1917: 24). ஆனால் அந்த இடமெல்லாம் பற்றையும் பறகும் மூடப்பட்டுக் காடாக இருந்தபடியினால் அங்கே அகழாய்வு எதையும் அவர் மேற்கொள்ளவில்லை. மேலும் அவரது மேலாய்வுகள் கந்தரோடை, மல்லாகம், சுன்னாகம், வல்லிபுரம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. அவரது ஆய்விற்காக ரூபா. 150 மட்டுமே வழங்கப்பட்டிருந்த படியினால் அப்பணம் முடிந்ததும் அவரது ஆய்வுகள் நிறுத்தப்பட்டன (Pieris, P.E. 1919: p. 40).
1966 – 1967 ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளராகவிருந்த சாள்ஸ் எட்மண்ட் கொடகும்புர கந்தரோடையின் தெற்குப்பக்கத்தில் பனந்தோப்புகளிடையே காணப்பட்ட மேட்டை முதல் தடவையாக அகழாய்வு செய்யும்படி பணித்தார். 24 ஏப்ரல் 1966 ஆம் ஆண்டு அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்விடத்தில் பற்றையும் பறகுமாகக் காடு பற்றியிருந்தமையால் அவற்றை நீக்கி நிலத்தைச் சுத்தம் செய்வதற்கே சில மாதங்கள் பிடித்தது. மேலும், இடையில் வளர்ந்திருந்த இளம் பனை வடலிகளையும் தறிக்கவேண்டியிருந்தது.
அகழ்வுகள் திட்டமிட்ட வலைச்சட்ட முறையில் (Grid basis) மேற்கொள்ளப்பட்டன. முதலில் கிழக்கு – மேற்காக 100 அடி நீளமும், வடக்குத் – தெற்காக 100 ஆடி நீளமும் கொண்ட நிலம் அளந்து ஆப்புக்கட்டை அடிக்கப்பட்டது. அகழ்விற்கு எட்டடிச் சதுரங்கள் அமைக்கப்பட்டு, இரண்டடி அகல நடைபாதைகள் இடைவெளியாக விடப்பட்டன. அகழ்வுச்சதுரங்கள் மேற்கிலிருந்து கிழக்காக D1, D2, D3, D4 என அடையாளப்படுத்தப்பட்டன (Godakumbura, C. E. 1968: 71).
1967 ஆம் ஆண்டு யூலை மாதம் முதல் வாரம் வரை 20 ஸ்தூபங்களின் அடித்தளங்கள் காணப்பட்டன. இவற்றில் பெரியது 23 அடி அகலமும் சிறியது 6 அடி அகலமும் கொண்டிருந்தன. இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அகழாய்வில் இந்த ஸ்தூபங்களின் மேல் கட்டுமானம் எதுவும் காணப்படவில்லை என்பதே.
அவை காலப்போக்கில் அழிவுற்றிருக்கலாம், அல்லது செங்கட்டிகள் மக்களால் தங்கள் தேவைக்காக அகற்றப்பட்டிருக்கலாம். அடுத்துக் கவனிக்க வேண்டியது சில அடித்தளங்களின் பகுதிகள் வெவ்வேறு உயர மட்டங்களில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக – ஒன்றோடு ஒன்று செருகிய வண்ணம் அமைந்திருந்ததாகும்.
1967 ஆம் ஆண்டு பெப்ரவரி – மார்ச் மாதங்களில் கந்தரோடைக்கு மேலாய்வு செய்வதற்காக வந்த விமலா பெக்லி இந்த இடத்தில் இலங்கை தொல்லியல் இலாகா அகழாய்வு செய்ததாகவும், இந்த அகழ்வுகளில் தாதுகோபங்களின் அடித்தளங்கள் காணப்படுவதாகவும் மற்றும் குழிகளிலிருந்து முத்திரை நாணயங்கள், உரோம நாணயங்கள், லக்க்ஷ்மி பட்டயங்கள் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் (Begley, V.S. 1967).


கந்தரோடை ஈமக்கல்லறைகள்
இந்த ஸ்தூபங்களின் அடித்தளங்களைப் பரிசோதித்த கொடகும்புர, அவை ஏற்கனவே வார்ப்படமாக (Moulded) வெட்டப்பட்ட கோறல் கற்களால் நான்கு அடுக்குகளாகச் சுற்றிவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். அவற்றின நடுவே கோறல் கற்களின் குப்பைத் துண்டுகள் காணப்பட்டன. ‘இவற்றின் மேல் கட்டுமானம் கோறல் கற்களினால் அமைக்கப்பட்டிருக்கலாம். அதன் உச்சியில் சதுரமாகப் பெட்டிவடிவில் சுண்ணாம்புக்கல்லில் வெட்டப்பட்ட ஹாமிக்கா (Harmika) தளத்தின் மேல் ஸ்தூபத்தில் முடிகள் (Finials) பெருத்தப்பட்டிருக்கும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் (Godakumbura, C. E. 1968: 72).
ஒரு ஸ்தூபத்தின் அடித்தளத்தின் கீழே அகழ்ந்தபோது ஒரு ஈமப்பேழையில் அழுகிய நிலையிலிருந்த எலும்புத்துண்டு காணப்பட்டது. அந்த ஸ்தூபத்தில் அதற்கும் கீழே அழுகிய நிலையிலிருந்த மற்றொரு எலும்பும் காணப்பட்டது (Godakumbura, C. E. 1968: p. 72).
கந்தரோடையில் கிடைத்த பௌத்தச் சின்னங்களின் தோற்றம் என்ன என்ற கேள்வி அடுத்து எழுகின்றது. இச்சின்னங்கள் ஒருவகையான ஈமச்சின்னங்களே ஆகும். பல்வேறு பரிமாணங்களில் அமைந்துள்ள, பல்வேறு காலப்பிரிவுகளுக்குரிய இத்தூபிகளில் இறந்த பௌத்த பிக்குமாரின் சாம்பல், எலும்புகள் என்பன முருகைக்கற்களிலமைந்த பேழைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. ஒருவகையில் இப்பகுதியில் நிலவிய பெருங்கற்கால ஈமச்சடங்குமுறை பௌத்தத்தின் வருகையோடு அதில் சங்கமமாகியதையே (Syncretism of Megalithism with Buddhism) இவை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இத்தூபிகள் காணப்படும் இடங்கூட முன்பொருகாலத்தில் பெருங்கற் பண்பாட்டிற்குரிய ஈமக்காடாகவும் விளங்கியிருக்கலாம் (சிற்றம்பலம், சி.க. 1993: 15).
கந்தரோடையிலுள்ள பௌத்த சின்னங்கள் தனியான பண்புகளைக் கொண்டவை. அவை அநுராதபுரம், மிகுந்தலை, மாகமை முதலான இடங்களில் உள்ளவற்றைக் காட்டிலும் வேறுபட்டவை. கந்தரோடையில் சிறிய அளவிலான தூபிகள் பல நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. அங்கே வழிபாட்டுத்தலங்களான சேதியங்களுக்குரிய அமைப்புக்காணப்படவில்லை. அவற்றின் மேற்பாகம் அண்டவடிவமானது. அவை உயிர்நீத்த சங்கத்தாரின் பள்ளிப்படைகளாக அமைக்கப்பட்டவை. பௌத்த சமயக் கோட்பாடுகளுக்கு ஏற்ப, பெருங்கற் பண்பாட்டுக்குரிய ஈமக்கிடங்குகளுக்கு மேலாக அமைந்த கட்டுமான முறையினை மாற்றிவிட்டனர் போலத் தெரிகின்றது. இவற்றைப் போன்ற அண்டவடிவமான கட்டுமானங்கள் ஆந்திர தேசத்து அமராவதி, நாகர்ஜுனாகொண்ட போன்ற இடங்களிற் காணப்படுகின்றன. அங்குள்ளவை உயிர் துறந்த சங்கத்தாரின் சடலங்களைப் புதைத்த குழிகள் மேல் அமைந்தவை (பத்மநாதன், சி. 2011: 55).


மற்றைய பௌத்த சின்னங்கள்
கந்தரோடையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பௌத்த மரபுச் சின்னங்களில் புத்தரின் பாதச்சுவடுகள் பொறித்த சிற்பம் முக்கியமானதாகும். சிறிபதுல் எனக் குறிப்பிடப்படும் இப்பாதச்சுவட்டு வணக்கமுறையானது புத்தருடைய சிற்பங்களின் தோற்றத்திற்கு முன்னர் வழக்கிலிருந்த வழிபாட்டுமுறையாகும். இது தமிழ்ப் பௌத்த மரபில் நன்கு பிரபல்யம் பெற்றிருந்தது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மணிமேகலையில் இடம்பெறும் புத்த பீடிகையைக் கண்டு தொழுத காட்சி அமைகிறது. பௌத்த வழிபாட்டில் புத்தருடைய பாதச்சுவடுகளை உரு அமைத்து வழிபடும்முறை காலத்தால் முற்பட்டது என்பதனை சாஞ்சி, பாரூட் ஸ்தூபிகளில் காணப்படும் புடைப்புச் சிற்பக் காட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன (கிருக்ஷ்ணராசா, செ. 1998: 36).
கந்தரோடை அகழ்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட இன்னொரு சிற்பவடிவம் சந்திரவட்டக்கல் ஆகும். பௌத்தமரபில் சந்திரவட்டக் கற்கலையானது தத்துவ அடிப்படையிலும், கலைரீதியாகவும் முக்கியமான இடத்தினைப் பெற்றுள்ளது. இலங்கையில் வளர்ச்சி பெற்றிருந்த தனித்துவமான பௌத்தக்கலை மரபுக்கு சிறந்த உதாரணமாகவும் சந்திரவட்டக் கற்கலையினையே கலைவல்லுநர் எடுத்துக்காட்டுவர். அவ்வகையில் கந்தரோடையில் வெளிப்பட்ட சந்திரவட்டக்கல்லின் தனிப்பண்புகளையும் நோக்கவேண்டும். இங்கு வெளிப்படுத்தப்பட்ட சந்திரவட்டக் கல்லானது மூன்று பிரதான கற்துண்டுகளால் ஆனது. எந்தவிதமான அலங்கார வேலைப்பாடுகளுமற்ற நிலையில், அரைவட்ட வடிவத்தில் வெறுங்கோடுகள் மாத்திரம் செதுக்கப்பட்டதாகக் காட்சியளிக்கிறது. இத்தன்மையானது ஆந்திரக் கலைமரபில் நாகர்ஜுனாகொண்டாவில் காணப்பட்ட சந்திரவட்டக்கல்லின் தன்மையை நினைவூட்டுவதாக உள்ளது. எனவே, கந்தரோடைக்கும் நாகர்ஜூனாகொண்டாவிற்குமான தொடர்பு காலத்தால் முற்பட்டது என்பதனையும், கலைப் பாரம்பரியங்கள் இவ்விரண்டு மையங்களுக்குமிடையே நெருக்கமானவை என்பதையும் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது (கிருக்ஷ்ணராசா, செ. 1998: 36-37).
காலப்பகுதி V: வரலாற்றுக்காலம் 4: கி.பி.300-கி.பி.500.
பொருளாதாரப் பெருக்க காலம்
கி.பி. 300க்கும், கி.பி.500க்கும் இடைப்பட்டகாலம் கந்தரோடையில் அமைந்த அரசு செல்வச்செழிப்பு மிக்க ஓர் அரசாக விளங்கிய காலப்பகுதியாகும். கந்தரோடையில் கண்டெடுத்த உரோம நாணயங்களில், உரோமச்சக்கரவர்த்தி இரண்டாம் தியோடோசியஸ்ஸின் (கி.பி. 401-450) உருவங்கள் பதித்த நாணயங்கள் வரை காணப்படுவதால், உரோம வர்த்தகம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை நடைபெற்றதாகக் கருத இடமிருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து அரேபிய, பாரஸீக, சீன வர்த்தகம் யாழ்ப்பாணத் துறைகளில் பெரிய அளவில் இடம் பெற்றிருக்கிறது (இது ஆறாவது இயலில் விரிவாகப் பேசப்படும்). கந்தரோடை அரசின் சமுதாய – பொருளாதாரக் கட்டமைப்பு அதன் பெருங்கடல் வர்த்தகத்திலும், முத்து வியாபாரத்திலும், விவசாய நடவடிக்கைகளிலும் தங்கியிருந்தது. அதன் பெருங்கடல் வர்த்தகம் உரோமாபுரி, அரேபியா, பாரஸீகம், சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் நடைபெற்றது.

கந்தரோடை அரசு வடகிழக்கே திருகோணமலை வரையும், வடமேற்கே மாந்தை வரையும் பரவியிருந்தது. மன்னார் வளைகுடாவின் முத்துக்குளிப்பு நீண்டகாலமாக யாழ்ப்பாண அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வட இலங்கைத் தமிழ் அரசர்களின் முக்கிய வருவாய் முத்துக்குளிப்புத் தொழில் என இலக்கியச்சான்றுகள் உரைக்கின்றன. பண்டைய உரோமாபுரியின் தத்துவஞானியும், ஆசிரியருமான பிளினி முத்துக்குளிப்பதை ‘உலகின் மிகப்பெரிய வருவாய் தரும் தொழில்’ (World’s most productive occupation) எனக் கூறிச் சென்றிருக்கிறார். அன்றைய கிரேக்கர், வெனிஸியர், ஜெனோவா மக்கள் (Genoese) மத்தியில் மன்னார் முத்து மிகவும் பிரபலமாக இருந்தது. முத்துப் படிவகம் (pearl banks – paars) மன்னாரிலிருந்து சிலாபம் வரை கடற்கரைக்குச் சமீபமாக 15 இருகைப்பாவு (fathoms) ஆழத்தில் பரவிக்கிடந்தது. முத்துக்குளிப்போர் மூச்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு படகிலிருந்து தொங்கும் கயிறு வழியே அடிக்குச்சென்று இடுப்பில் தொங்கும் பையில் முத்துச் சிப்பிகளைப் பொறுக்கி எடுத்துப் போட்டுக்கொண்டு கயிற்றைப் பலமாக ஆட்ட, மேலே இருப்பவர்கள் அவர்களை வெளியில் இழுத்து எடுப்பார்கள்.
இலங்கையின் பண்டைய பிராமிக்கல்வெட்டு ஒன்றில் ‘நாக நகரம்’ என்ற எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது (Epigraphia Zeylanica II, No. 82). இந்த நகரம் கந்தரோடையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பௌத்த மகாதுறவியான ஆச்சாரிய புத்தகோசர் (கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு) எழுதிய சம்மோகவிநோதனி என்ற நூலில் கூறப்படும் ஒரு கதையில் (443), தீபராஜா என்ற அரசன் நாகதீபத்தை ஆட்சிபுரிவதாகக் கூறப்படுகிறது.
கந்தரோடை முத்திரை
இக்காலத்திற்குரிய, கந்தரோடையிற் கிடைத்த ஒரு முத்திரை (Seal) பற்றி பேராசிரியர் கா. இந்திரபாலா இவ்வாறு குறிப்பிடுகிறார்: யாழ்ப்பாணத்திலுள்ள தொல்பொருட் தலங்களுள் மிக முக்கியமானது கந்தரோடையாகும். கந்தரோடையிற் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு சிறு முத்திரை எங்கள் பல்கலைக்கழகத்திற்கு, தொல்லியல் கலாநிதி பரணைவிதான அவர்களின் உதவியால் வாசிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. அதன் சொந்தக்காரர் யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரைையாளர் கலாநிதி W.R. ஹோம்ஸ் (W.R. Holmes) என்னும் அமெரிக்க மகனாவார். இவர் கந்தரோடையிலிருக்கும் ஒரு சிறுவனிடமிருந்து இம்முத்திரையைப் பெற்றுக்கொண்டதாக் கூறப்பட்டது. அதிலுள்ள எழுத்துகளை எளிதாக வாசித்த பேராசிரியர் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக்கூறினார்.
இம்முத்திரை சிவப்புக் ‘கார்ணிலியன்’ (Red carnelian) எனப்படும் மணிவகையைச் சேர்ந்த பொருளினாலானது. இதன் நீளம் 1.02 செ.மீ., அகலம் ஒரு செ.மீ. இதிலுள்ள சாசனம் ‘விக்ஷ்ணு பூதிஸ்ய’ (Vishnubhutiaya) என்னும் வடமொழிப் பெயராகும். இச்சாசனம் வளர்ச்சியடைந்த தென்பிராமி எழுத்தில் எழுதப்பட்டது. இவ்வெழுத்துகள் நாகர்ஜுனாகொண்டாவிலுள்ள 3 ஆம், 4 ஆம் நூற்றாண்டுச் சாசனங்களின் எழுத்துகளை ஒத்திருக்கின்றன. இக்காரணத்தினால் இம்முத்திரை கி.பி. 3 ஆம், அல்லது 4 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்க வேண்டுமென்று பேராசிரியர் பரணவிதான அபிப்பிராயம் தெரிவித்தார். அவர் அறிந்த மட்டில், இதுவே இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட ஒரேயொரு எழுத்துப்பொறித்த முத்திரையாகும். தற்போது இது தொல்பொருளாராய்ச்சிப் பகுதியினரிடம் உள்ளது. இதுபோன்ற பல முத்திரைகள் கந்தரோடையிற் புதைந்திருக்கக்கூடும் (இந்திரபாலா. கா. 2006: 331). இந்த முத்திரை இப்போது காணாமல் போய்விட்டது.
காலப்பகுதி VI: வரலாற்றுக்காலம் 5: கி.பி. 500-கி.பி.800.
அரசியல் குழப்ப காலம்
கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்காலத்தில் நாகர் என்ற ஓர் இனம் வட இலங்கையில் இருந்ததாக எதுவிதமான ஆதாரங்களையும் காண முடியவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாக நாணயங்களையோ நாக இலச்சினைகளையோ, நாகச் சின்னங்களையோ காணமுடியவில்லை. அக்காலகட்டத்தில் அவர்கள் இலங்கைத் தமிழர்களுடனும், சிங்கள இனங்களுடனும் இணைந்துவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இலங்கையின் பாளி இலக்கியங்கள் வட இலங்கையை, இலங்கையின் மற்றைய பிராந்தியங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. அநுராதபுரத்தின் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்ற எதிர்க்கிளர்ச்சி செய்யும் அரசகுமாரர்களுக்கும், கலகக்காரர்களுக்கும் வடஇலங்கை அரசர்களின் ஆதரவு கிடைத்தது. அதற்கு முந்திய காலங்களைப் போலல்லாது தென்னிந்தியாவிலிருந்து ஆக்கிரமிப்பாளராக வருவோரின் படைகள் வட இலங்கையில் வந்திறங்கி, தங்கள் படைகளை வலுப்படுத்திக்கொண்டு அப்பால் அநுராதபுரத்திற்குப் படைநடத்திச் சென்றன. இதனால் வடஇலங்கையின் அமைதியும், திடநிலையும் சீர்குலைந்து போயிற்று.
பல்லவர் செல்வாக்கு
ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சிலாமேகவண்ண மன்னன் (கி.பி. 619-628) அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்தபோது சிரிநாக என்பவன் தமிழர் படை ஒன்றின் உதவியுடன் அநுராதபுரத்து அரசனைத் தாக்கி அரசைக் கைப்பற்ற முயன்றான். அவனுடைய படை உத்தரதேசத்திலிருந்தே (வட இலங்கை) தெற்கு நோக்கி அநுராதபுரத்திற்கு முன்னேறியது. ஆட்சியைக் கைப்பற்ற எண்ணிய தலைவன் ஒருவன் வட பகுதியிலிருந்து படை நடத்திச் சென்றமை கவனிக்கத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். இதன்பின்னர் இப்படியான நிகழ்ச்சிகள் அடிக்கடி வடக்கிலிருந்து நடைபெற்றன. இவற்றுள் மிகவும் முக்கியமான நிகழ்வு பல்லவப் பேரரசர் உதவியுடன் மானவர்மன் என்ற சிங்கள இளவரசன் நடத்திய படையெடுப்புகள் எனலாம். இக்காலத்து அரசியல் குழப்ப நிலையை விளங்கிக்கொள்ளவும், இதில் உத்தரதேசம் கொண்டிருந்த பங்கினை மதிப்பிடவும் மானவர்மன் படையெடுப்புகள் உதவுகின்றன (இந்திரபாலா, கா. 2006: 231).
அநுராதபுரத்தில் கி.பி. 650 தொடக்கம் கி.பி. 659 வரை ஆண்ட இரண்டாம் கஸ்ஸப மன்னனின் மகனான மானவர்மன் அவனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் விளைவாக அநுராதபுரத்தை விட்டு ஓடி ஒளித்தான். இப்படியாக உரிமையிழந்த இளவரசர்கள் அநுராதபுரத்தைவிட்டு ஓடி ஒளிவது ஒன்றும் புதிய நிகழ்ச்சி அல்ல. அப்படி ஓடும்போது பெரும்பாலும் இளவரசர்கள் தெற்கு நோக்கி மலைப்பிரதேசத்திற்கு அல்லது அப்பால் ரோஹணத்துக்குச் செல்வதே வழக்கம். வழமைக்கு மாறாக மானவர்மன் வடக்கு நோக்கி ஓடி உத்தரதேசத்தில் அடைக்கலம் புகுந்தான். இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்திருக்க வேண்டும். வடபகுதி இவனுக்குக் கூடுதலான பாதுகாப்பைக் கொடுத்தமை காரணமாகலாம். ஆனால் அவன் அங்கு தஞ்சமடைந்திருந்ததை அநுராதபுரத்தில் ஆட்சிநடத்திய ஹத்ததாட்டா அறிந்து, அவனைக் கைப்பற்ற முயன்றபோது, மானவர்மன் வடபகுதியை விட்டுப் பல்லவ அரசுக்குச் சென்று பல்லவப் பேரரசனின் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டான் (இந்திரபாலா 2006: 232).
மானவர்மன் இலங்கையின் வடபகுதியில் அடைக்கலம் புகுந்தமைக்கும், பின்னர் ஆபத்துத் தோன்றியபோது அங்கிருந்து காஞ்சிக்குச் சென்றமைக்கும் பல்லவர் செல்வாக்கு வடபகுதியில் பரவியிருந்தமை காரணமாக இருந்திருக்கும் எனக் கொள்ளலாம். வடபகுதியில் காணப்பட்ட அரசியல்நிலை பல்லவருக்குச் சாதகமாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் சிம்மவிக்ஷ்ணு இலங்கையை வெற்றி கொண்டதாக தென்னிந்தியக் கல்வெட்டுச் சான்று உள்ளது. அவன் காலத்திலிருந்து வடபகுதியில் பல்லவர்களுடைய செல்வாக்கு இருந்தது எனலாம் (இந்திரபாலா 2006: 232).
மானவர்மன் பல்லவர் தலைநகராகிய காஞ்சியில் பல ஆண்டுகள் தங்கியிருந்தான். அங்கிருந்த காலத்தில் பல்லவர்கள் தங்கள் பகைவர்களாகிய சாளுக்கியர்களுக்கு எதிராக நடந்த போர்களில், மானவர்மன், முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதிகளில் ஒருவனாகப் போர் புரிந்தான். பின்னர் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலத்தில் பல்லவப் படையுடன் வட இலங்கை வந்து தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டு அநுராதபுரத்தின்மீது படையெடுத்துச் சென்றான்.
அக்காலத்தில் பொத்தகுட்டன் என்ற தமிழ்த் தலைவன் அநுராதபுரத்தில் மிகுந்த அரசியல் ஆதிக்கத்துடன் ஹத்ததாட்ட என்பவனை மன்னனாக நியமித்து வலுவுடன் நிர்வாகம் நடத்திக்கொண்டிருந்தான். மானவர்மன் படை அநுராதபுரத்தை அடையுமுன் பொத்தகுட்டனுடன் ஹத்ததாட்டனும் வடக்கு நோக்கிச் சென்று மானவர்மனை எதிர்த்தனர். ஆனால் பல்லவப் படையை இவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. இருவரும் கொல்லப்பட்ட பின்னர் மானவர்மன் 684 ஆம் ஆண்டில் அநுராதபுரத்தில் மன்னனாக முடிசூடிக்கொண்டான் (இந்திரபாலா 2006: 233).
பல்லவர் படைகள் வடபகுதியில் வந்திறங்கிய நிகழ்ச்சிகளும், பல்லவர் ஆதரவைப்பெற்ற சிங்கள இளவரசன் ஒருவன் அநுராதபுரத்தில் ஆட்சிபெற்ற நிகழ்ச்சியும் இக்காலத்து வரலாற்றையும் வடக்கு இலங்கையின் அரசியல்நிலையையும் விளங்கிக்கொள்வதற்கு முக்கியமானவை. ஆறாம் நூற்றாண்டின் பின்னர் தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசும், பாண்டியப் பேரரசும் எழுச்சிபெற, அவற்றிற்கு அண்மையில் இருந்த வடக்கு இலங்கை, தெற்கு இலங்கையைக் காட்டிலும் கூடுதலான தமிழ்ச் செல்வாக்கிற்கு இலக்காகியது. பல்லவ அரசில் வளர்ந்த பண்பாடு வடக்கு, வடகிழக்கு வழியாக இலங்கையில் பரவியது. தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்த கடல் மீண்டும் ஒரு ஒற்றுமைப்படுத்தும் காரணியாகச் செயற்பட்டது. முதலில் தமிழ் நாட்டின் செல்வாக்கு பௌத்தம் சார்ந்ததாகவும், சைவம் சார்ந்ததாகவும், தமிழ்மொழி சார்ந்ததாகவும் அமைந்தது. பின்னர் அது பெரும்பாலும் சைவமும் தமிழும் சார்ந்ததாக மாறியது. இவ்விரண்டு காரணிகளும் வடக்கிலும், கிழக்கிலும் உருவாகிய இனக்குழுவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்தன (இந்திரபாலா 2006: 234).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, கி.மு. 1300 ஆம் ஆண்டளவில் கந்தரோடையில் ஆரம்பமாகி, பின்னர் நாடெங்கும் பரந்த பெருங்கற் பண்பாண்டின் காலகட்டத்திலிருந்து, முதலில் தமிழ்மொழி பேசிய நாக மன்னர்களின் ஆட்சிகளிலும், தொடர்ந்து தமிழ் அரசர்களின் ஆதரவுடனும் அங்கு உருப்பெற்றுக்கொண்டிருந்த இனக்குழுக்கள், எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உறுதிபெற்று ஒருங்கிணைந்த இலங்கைத்தமிழ் இனமாக உருவெடுத்தது.
உக்கிர சிங்கன்
யாழ்ப்பாண வரலாற்று நூல்களான கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவ மாலை மற்றும் வையா பாடல், மட்டக்களப்பு மான்மியம், திரிகோணாசல புராணம், கோணேசர் கல்வெட்டு என்பன உக்கிரசிங்கன் என்ற பெயர் கொண்ட அரசனையே கந்தரோடையின் கடைசி மன்னனாகக் குறிப்பிடுகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆதீனத்திலுள்ள தலத்தோற்ற வரலாற்றுச்சுவடிகள் அந்தக் கோயிலைக் கட்டுவித்தவனாக உக்கிரசிங்க அரசனையே குறிப்பிட்டுக் கூறுவதனால், இவனது வரலாற்றின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
உத்தரதேசத்திற்கும் அநுராதபுர மன்னர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் அநுராதபுர அரசன் இரண்டாம் மகிந்தன் (கி.பி. 777-797) உத்தரதேசத்தின் தென்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அச்சமயம் கலிங்கநாட்டிலிருந்து பெரும்படையுடன் வந்த உக்கிரசிங்கன், மகிந்தனுடன் போரிட்டு அவன் கைப்பற்றிய பகுதிகளை மீட்டுக்கொண்ட பின்னர், கி.பி. 785 முதல் கதிரமலையினைத் (கந்தரோடை) தலைநகராகக் கொண்டு உத்தரதேசத்தை ஆண்டுவந்தான் (யாழ்ப்பாண வைபவ மாலை 18).
உக்கிரசிங்கனின் வரலாறு ஐதீகங்களுடனும், மரபுவழிக் கதைகளுடனும் கலந்து எழுதப்பட்டிருக்கிறது. அவற்றிலிருந்து பெறக்கூடிய வரலாற்றுப் பகுதி இது:
உக்கிரசிங்கன் கதிரமலையிலிருந்து ஆட்சிசெய்த காலத்தில், சோழ இளவரசியாகிய மாருதப்பிரவல்லி என்பவள் தீர்த்தயாத்திரை மேற்கொண்டு கீரிமலைக்கு வந்தாள். அவளை வலிந்து சிறைகொண்டு உக்கிரசிங்கன் மணந்து கொண்டான். அவளின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து மாவிட்டபுரத்தில் கந்தனுக்கு ஆலயம் சமைப்பித்தான். சோழநாட்டிலிருந்து கோயிலுக்குரிய விக்கிரகங்களையும், பெரியமனதுளார் என்ற பிராமணோத்தமரையும் வரவழைத்தான். சாலிவாகன சகாப்தம் 721 ஆம் ஆண்டு (கி.பி. 799) ஆனி மாத உத்தரநாளில் கொடியேற்றத்துடன் இக்கோயில் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் உக்கிரசிங்கன் தலைநகராகவிருந்த கதிரமலையை விட்டு, சிங்கைநகருக்குத் தனது தலைநகரை மாற்றிக்கொண்டான் (யா.வை.மா 18-23, இராசநாயகம், செ. 1933: 28. குணராசா, க. 1996: 58-59).
பெரியமனதுளாரின் சந்ததியினரே இன்றுவரை மாவிட்டபுரக் கந்தவேள் ஆலயத்தின் சொந்தக்காரர்களாயும் அர்ச்சகர்களாகவும் இருக்கிறார்கள் என்கிறார் இராசநாயகம் (இராசநாயகம், செ. 1933: 29). 1970களில் மாவிட்டபுர ஆதீனத்தின் தலைமைக்குருவாக இருந்த பிரம்மஸ்ரீ சு. துரைச்சாமிக் குருக்கள், தான் பெரியமனதுளாரின் சந்ததியில் வந்ததவராகக் கூறியுள்ளார்.
உக்கிரசிங்கன் தனது இராசதானியின் தலைநகராக இருந்த கந்தரோடையை விட்டு சிங்கைநகருக்கு மாறியதற்கான காரணத்தைக் குறித்து வரலாற்றாசிரியர் இராசநாயகம் இவ்வாறு விளக்கமளிக்கிறார். “தன் இனத்தவர்களும், சனத்தவர்களுமாகிய கலிங்கர் அவ்விடத்திற் குடியேறியிருந்தபடியாலும், அது கடற்கரைத் துறைமுகமாகவிருந்தபடியாலும், தான் சிவ வழிபாடுடையவனானபடியாலும், புத்தபள்ளிகள் நிறைந்திருந்த கதிரமலையிலுஞ் சிங்கைநகரே சிறந்ததென நினைத்தான் போலும்” (இராசநாயகம், செ. 1933: 29).
தலைநகரம் கந்தரோடை
யாழ்ப்பாண வரலாற்று நூல்களான கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்பன கந்தரோடையை (கதிரமலை) பண்டைய யாழ்ப்பாணத்தின் தலைநகரமாகக் கொள்கின்றன. ஆரம்பகால ஆய்வாளர்களான முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் இருவரும் கந்தரோடைதான் பெரும்பாலும் புராதன யாழ்ப்பாணத்தின் தலைநகராக இருக்கலாம் (Most likely capital) என்றார்கள். 1917-1919 ஆம் ஆண்டுகளில் கந்தரோடையில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்ட போல் பீரிஸ் “கந்தரோடை ஒரு சிறிய அளவினதான அநுராதபுரம் எனவும், அது யாழ்ப்பாணத்தின் ஆதித் தலைநகரமாக இருந்திருக்கலாம்” என்றும் கூறினார்.
1987 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 41 ஆரம்பகாலக் குடியேற்றங்களின் தொல்லியல் மேலாய்வுகளை மேற்கொண்ட கலாநிதி இரகுபதி இக்குடாநாட்டின் ஆதிக்குடியேற்ற மையங்களின் நடுவம் கந்தரோடை என்றும், இந்நாட்டில் முதன்முதலாக நகரமயமாக்கப்பட்ட குடியிருப்பு மையம் கந்தரோடையே எனவும், அந்த நகரமே இங்குள்ள ஆதித்தலைநகரம் என்பதையும் கீழ்க்காணும் காரணங்களைக் கொண்டு முன்மொழிந்தார் (Ragupathy 1987:169).
- இந்த யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் மிகப்பெரிய தொல்லியல் தலம் கந்தரோடை. இங்கே கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களின் பரந்த விரிபரவலால் அது உணரப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட சிறு குழியில் தொல்பொருட்கள் காணப்படும் அடர்த்தியினாலும், அவை கிடைக்கும் ஆழத்தினாலும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் மற்றெந்தத் தொல்லியல் மையத்தைக் காட்டிலும் இது அதிகமான வளம்மிக்கது.
- இங்கே காணப்படும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகிவந்த வர்த்தகப் பொருட்கள், நாணயங்கள், உயர்விலை மணிகள், இன்ப வாழ்க்கைப் பொருட்கள் என்பன இந்நாட்டின் முக்கியமான வர்த்தக மையமாக கந்தரோடையை இனம் காணுகின்றன. உதாரணமாக மிகச்சிறந்த உயர்தர உரோம நாட்டின் ‘ரௌலெற்றெட்’ மட்பாண்டங்கள் பெருமளவில் கிடைப்பது கந்தரோடையில்தான். மற்றைய இடங்களில் அருமையாக ஒன்றிரண்டு துண்டுகளே கிடைக்கின்றன.
- பண்டைய யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக நகரமயமாக்கப்பட்ட தலம் கந்தரோடை. அது நகரமயமாக்கப்பட்ட காலம் மற்றைய தென்னிந்திய, இலங்கை மையங்களுக்கு ஒப்பானது.
- கந்தரோடையின் அமைவிடம் இந்தத் தீபகற்பத்தின் மிகச்சிறந்த செயல் விளைவினையாற்றல் தரக்கூடிய இடம். அதன் குளங்கள், நெல்வயல்கள், வடிகால்கள், வதிவிடங்கள் எனபன கணிசமான மக்கள்தொகையை ஆதரிக்கக்கூடிய வளங்களாகும்.
- தொல்லியல் சான்றுகள் கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே மத சம்பந்தமான ஒரு தொழுகைத்தலமாக கந்தரோடையைக் காட்டுகின்றன.
- காலத்தொடர்பைக் காட்டும் வழியாக கந்தரோடையின் தொடர்ச்சி கி.மு. 500 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாண அரசுவரை தொடர்ந்திருக்கிறது.
உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்
- ALLCHIN, BRIDGET & RAYMOND (1993): The Birth of Indian Civilization, Penguin Books, India.
- ALLCHIN, F.R. (1990): “Patterns of City Formation in Early Historic South Asia”, South Asian Studies, 6: 163–73.
- ARDICA, I.W., BELLWOOD, P.S., EGGLETON, R.A. and ELLIS, D.J. (1993): “A Single Source for South Asian Export-quality Rouletted Ware?”, Man and Environment, XVII, pp. 101–109.
- BAUMGARTEN, ALBERT, I. (1981): The Phoenician History of Philo of Byblo, E.J. Brill & Co., Leiden, Netherlands.
- BEGLEY, VIMALA (1967): “Archaeological Exploration in Northern Ceylon; Expedition Summer 1967”, (9)4; Bulletin of the University Museum, University of Pennsylvania, Philadelphia.
- BEGLEY, VIMALA (1973): “Proto-Historic Material from Sri Lanka and Indian Contacts” in Kennedy, K.A.R & Possehl, G.L. (eds.), Ecological Backgrounds of South Asian Prehistory, Occasional Papers and Thesis, Cornell University.
- BEGLEY, V. (1988): “Rouletted Ware at Arikamedu: a new approach”, American Journal of Archaeology, 92, pp. 427–440.
- BRITO, C. (1879): Yalpana-Vaipava-Malai: The History of the Kingdom of Jaffna, Colombo; Reprint 1999, Asian Educational Services, New Delhi.
- COOMARASWAMY, ANANDA K. (1935): Elements of Buddhist Iconography, Harvard University Press.
- COOMARASWAMY, ANANDA K. (1980 reprint): The Origin of the Buddha Image, Coronet Books Inc., India.
- DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, 2 parts, Colombo.
- DERANIYAGALA, S.U. (2011): “Megalithic Culture of Kantarodai belongs to 2,500 years ago”, Press Interview, Uthayan, Tuesday 21 June 2011.
- DERANIYAGALA, S.U. (2013): “Iron Age at Mantai”, in John Carswell (Ed.), Mantai – City by the Sea, Linden Soft Verlag, Aichwald, Germany.
- GODAKUMBURA, C. (1968): “Kantarodai”, Journal of the Royal Asiatic Society, Ceylon Branch, Vol.12, Colombo.
- GOGTE, V.D. (1997): “The Chandraketugarh-Tamluk region of Bengal: Source of the early historic Rouletted Ware from India and Southeast Asia”, Man and Environment, XXII, pp. 69–85.
- HELWING, BARBARA and PERERA, NIMAL (2018): Exploring Ancient Kantarodai: Report on the First Field Season, February 2018.
- INDRAPALA, K. (1973): “A Brahmi potsherd inscription from Kantarodai”, Purvakala, Bulletin of the Jaffna Archaeological Society, No. 1, Jaffna.
- INDRAPALA, K. (2006): The Evolution of an Ethnic Identity, Kumaran Book House, Chennai.
- KENNEDY, K.A.R. (1965): “Human Skeletal Material from Ceylon with an Analysis of the Island’s Pre-historic Contemporary Populations”, British Museum Geological (Palaeontological Series), Vol.2, No. 4.
- KENNEDY, K.A.R. (1975): The Physical Anthropology of the Megalithic Builders of South India and Sri Lanka, Canberra.
- KRISHNAN, K. & CONINGHAM, R.A.E. (1997): “Microstructural Analysis of Samples of Rouletted Ware and Associated Pottery from Anuradhapura, Sri Lanka”, in E.R. Allchin & B. Allchin (eds.), South Asian Archaeology, 1995, Vol.2: 925–37, Oxford and IBH, New Delhi.
- KRISHNARAJAH, S. (2004): “Scripts from Valukkai Aru Basin” (in Tamil), Virakesari, 08.02.2004, 29.02.2004 & 14.03.2004.
- KUNARASA, Dr KANDIAH (2001): Yalpāna Vaipava Mālai, A Retelling, Kamalam Pathippakam, Jaffna.
- MAHADEVAN, IRAVATHAM (2003): Early Tamil Epigraphy, Harvard University, USA.
- MAHAVAMSA, Ed. WILHELM GEIGER (Reprint 1950): Colombo.
- MANIMEKALAI by Chattanar; ed. U.VE. CHAMINATAIYAR (1965): Aram Pathippu, Chennai. / English Transl. ALAIN DANIELOU (1989): New Directions Publishing Corp., New York.
- MOORTI, U.S. (1994): Megalithic Culture of South India, Ganga Kaveri Publishing House, Varanasi.
- ORTON, N. (1995): “The Early Ceramics of Kantarodai”, Ancient Ceylon, 13.
- PARANAVITANA, S. (1959): A History of Ceylon, Part I, University of Ceylon, Colombo.
- PARANAVITANA, S. (1961): “The Arya Kingdom in North Ceylon”, Journal of the Royal Asiatic Society (C.B.), New Series Vol. VII, Part 2: 174–224, Colombo.
- PATHMANATHAN, S. (2011): Kingdom of Jaffna: A Concise History (in Tamil), Kumaran Book House, Colombo.
- PIERIS, PAUL E. (1917): “Nagadipa and Buddhist Remains in Jaffna”, Part I, Journal of the Royal Asiatic Society (C.B.), Vol. XVI, No. 70, Colombo.
- PIERIS, PAUL E. (1919): “Nagadipa and Buddhist Remains in Jaffna”, Part II, Journal of the Royal Asiatic Society (C.B.), Vol. XVIII, No. 72, Colombo.
- POSSEHL, G.L. (1994): Radiometric Dates for South Asian Archaeology, Occasional Publication of the Asia Section, University Museum, University of Pennsylvania, Philadelphia.
- PUSHARATNAM, P. (2002a): Naka Dynasty as Gleaned from the Archaeological Evidences in Sri Lanka, Science Association, Jaffna.
- PUSHPARATNAM, P. (2002): Ancient Coins of Sri Lankan Tamil Rulers, Bavani Publishers, Chennai.
- RAGUPATHY, P. (1987): Early Settlements in Jaffna, Mrs. Ragupathy, Madras.
- SITRAMPALAM, S.K. (1983): “Ancient Jaffna: An Archaeological Perspective”, Journal of South Asian Studies, Vol.3, No. 182.
- WHEELER, R.E.M., GHOSH, A. & DEVA, K. (1946): Arikamedu: An Indo-Roman Trading Station on the East Coast of India, Ancient India, 2: 17–124.
- WHEELER, R.E.M (1947): “Brahmagiri and Chandravalli: Megalithic and Other Cultures in Mysore State”, Ancient India, 4.
- ZVELEBIL, KAMIL (1965): “Harappa and the Dravidians: An Old Mystery in a New Light”, New Orient, 4 (3): 65–69.
- இந்திரபாலா, கா. (2006): இலங்கையில் தமிழர், குமரன் புத்தக இல்லம், சென்னை-கொழும்பு.
- இரா. சிவானந்தம் (பதிப்பாசிரியர்) (2019): கீழடி: வைகை நதிக்கரையில் சங்ககால நாகரிகம், தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை.
- இராசநாயகம், செ. (1933): யாழ்ப்பாணச் சரித்திரம், சென்னை., (மறுபதிப்பு 1999): ஏசியன் எடுகேக்ஷனல் சர்வீசஸ், புதுதில்லி – சென்னை.
- கிருக்ஷ்ணராசா, செ. (1998): தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
- கிருக்ஷ்ணராசா, செ. (2004): வழுக்கையாற்று வடிநிலத்தில் கண்ட தொல்தமிழ் எழுத்துகள், வீரகேசரி, 08.02.2004, 29.02.2004, 14.03.2004.
- சிவசாமி, வ. (1974): யாழ்ப்பாணக் காசுகள், தெல்லிப்பழை.
- சிற்றம்பலம், சி.க. (1993): யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.
- சிலப்பதிகாரம் (இளங்கோ அடிகள்): புலியூர்க்கேசிகன் பதிப்பு (2017): ஸ்ரீ செண்பக பதிப்பகம், சென்னை.
- புக்ஷ்பரட்ணம், ப. (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.
- மணிமேகலை (சாத்தனார்): உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு (1965): அறம் பதிப்பகம், சென்னை.
- யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகனப் புலவர் (1949): குல சபாநாதன் பதிப்பு, சுன்னாகம்.
- யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகனப் புலவர் (1950): குல சபாநாதன் பதிப்பு, கொழும்பு.



