ஒரு சமூகத்தின் வரலாறு பற்றிய நோக்கு, அச்சமூகத்தினரிடையே தன்னம்பிக்கையையும் உறுதியையும் விதைக்க வேண்டும். அதிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் சமூகமொன்றின் வரலாறானது, அச்சமூகத்தின் எழுச்சிக்கும் விடுதலைக்கும் வலுவூட்டும் வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகும். ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள், போராட்டக் களங்களைக் கண்டவர்களின் துணிவு, போராட்டங்களில் மடிந்தவர்களின் வீர வாழ்வு, போராட்டங்களால் அடைந்த வெற்றி முதலானவை பற்றிய செய்திகள் ஆதிக்கத் தகர்ப்புக்கான தூண்டலையும் வலுவையும் வழங்குகின்றன. அதனாலேயே ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராட்டங்களையும் போராட்டங்களில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் உலகெங்கும் இடம்பெற்று வருகின்றன. அவை மடிந்த செயற்பாட்டாளர்களைப் புனிதப்படுத்துவதை – மேல்நிலைப்படுத்துவதை – மட்டுமன்றி அத்தகைய தியாகிகளை – அத்தகைய போராட்டங்களை மறுவுற்பத்தி செய்வதையும் போராட்டக் கனலைத் தொடர்ந்தும் தக்கவைப்பதையும் நிறைவேற்றுகின்றன. சான்றாக, முதலாம் உகல மகாயுத்த காலத்தில் பாரதி மொழிபெயர்த்த ‘செர்வியாவின் வீரக் கதைப்பாடல்கள்’ என்ற பகுதியில் இடம்பெறும்,
“நெஞ்சுருக்கும் இக்கதைகளை வாசிக்கும் ஸ்லாவ் குழந்தை தன் மூதாதையரின் பராக்கிரமங்களை அறிகிறது. செர்வியாவை விடுவித்தவரின் பெயர் அக்குழந்தையின் அடிநாள் ஞாபகங்களிலும் பதிந்துவிடுகிறது. இவ்வாறு உரமூட்டப்பட்ட ஒரு ஜனக்கூட்டம் எக்காலத்தும் அடிமைத்தனத்தில் உழலவியலாது.” (வேங்கடாசலபதி, 2020: 87)
என்ற விவரிப்பை எடுத்துக்காட்டாலாம். ஒரு சமூகத்தின் விடுதலையில் அக்குழுமத்தின் கடந்தகாலப் போராட்ட வாழ்வு பற்றிய வரலாறு பெறும் முக்கியத்துவம் இங்கு உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பெரும் ஆகர்ஷிப்பைப் பெற்றிருந்த இத்தாலிய விடுதலை வீரனான மாஜினி, தன் சங்கத்தில் இணைபவர்களுக்காக உருவாக்கிய சத்தியப்பிரமாணத்தில் இத்தாலிய விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கும் முதன்மை அளித்துள்ளான். அப்பகுதியைப் பாரதி,
“… தாய்த்திரு நாட்டின்
பணிக்கெனப் பல்விதத் துழன்ற
வீரர், நந் நாடு வாழ்கென வீழ்ந்த
விழுமியோர் திருப்பெய ராணை”
எனப் பாடலாக்கம் செய்துள்ளார். மாஜினியின் சபதத்தை ஆங்கிலவழி நேரடி மொழிபெயர்ப்பை மேற்கொண்டுள்ள தொ.மு.சி. ரகுநாதன், “கடவுளின் பெயராலும் இத்தாலியின் பெயராலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொடுங்கோலாட்சியின் கீழ் புனிதமான இத்தாலிய லட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் அனைவரின் பெயராலும்…” (2015: 360) என அப்பகுதியைத் தமிழாக்கம் செய்துள்ளார். இவை ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகமொன்றின் விடுதலைக்கான எழுச்சியில், அச்சமூகத்தின் போராட்ட வரலாறும் போராட்டத்தில் மடிந்தவர்களின் வரலாறும் வலுவான தாக்கம் செலுத்துவதை வெளிப்படுத்தி நிற்கின்றன. அதனாலேயே குறிப்பிட்ட இனத்தில், சமூகக் குழுமத்தில், வர்க்கத்தில் ஆதிக்கத் தகர்ப்புக்கான போராட்டங்கள் இடம்பெறுகின்ற காலத்தில், அக்குறிப்பிட்ட குழுவின் கடந்தகால வீர வாழ்வு, வீரர்களின் துணிவு, அவர்களின் வெற்றி, தியாகம் முதலானவை நினைவுகொள்ளப்படுதலும் மக்கள்மயப்படுத்தலும் அதிகமாக இடம்பெறுகின்றன. அதேவேளை, ஆதிக்கச் சக்திகளும் தம் தரப்பை நியாயப்படுத்தும், தம் ஆதிக்கத்தை இயல்பாக்கம் செய்யும் வரலாறுகளை உண்மைகளிலிருந்தும் புனைவுகளிலிருந்தும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளைத் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்து வந்துள்ளன – வருகின்றன. அதனால் அவற்றைக் கட்டுடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தலும் ஆதிக்கத் தகர்ப்புக்கு அவசியமானதாகும்.
இரு நூற்றாண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் நூற்றாண்டின் விடியலில் கால் பதித்துள்ள மலையகத் தமிழர், காலனியம் உருவாக்கிய பெருந்தோட்டக் கட்டமைப்பின் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. அத்துடன் நாடு சுதந்திரமடைய முன்னரிலிருந்தே வளர்ச்சியடையத் தொடங்கிய இன மற்றும் வர்க்க மேலாதிக்கச் செயற்பாடுகளால் அம்மக்கள் தொடர்ந்தும் தீவிர பாதிப்புக்கு உள்ளாகி வந்துள்ளனர். அவர்களின் போராட்ட வாழ்வு மிக நெடியதாகும். அவர்கள் அனுபவிக்கும் அடிப்படை மனித உரிமைகளுள் அநேகமானவை போராட்டங்களால் பெற்றுக்கொள்ளப்பட்டவையாகும். வளையலணிவதற்குக்கூட அம்மக்கள் போராட வேண்டியிருந்துள்ளது (யட்டியந்தோட்டை – ஹல்கொல்ல குரூப் போராட்டம் – 1952). இருப்பினும், காலனிய வரலாறுகளும் தேசிய வரலாறுகளும் அம்மக்களை இரண்டாம் நிலைப்படுத்தும் வரலாற்று எழுதுகையினையே முதன்மைப்படுத்தியுள்ளன. மலையகத்திலிருந்து வெளிவந்துள்ள வரலாறுகளுள் பெரும்பாலானவையும் அம்மக்களின் இருப்பினை நியாயப்படுத்தும், அதற்கான போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கிற்குப் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.
மலையகத் தமிழரை வெறும் கூலிகளாக, பஞ்சப் பராரிகளாக வகைப்படுத்தி, அவர்களின் வரலாற்றை விளிம்புநிலை மக்கள் வரலாறாகவும் மாற்றமுறாத தேக்கநிலைச் சமூக வரலாறாகவும் எழுதும் தன்மை மிகுந்துள்ளது. அவ்வரலாறுகள் அம்மக்களின் உழைப்பையும் உருவாக்கங்களையும் கவனத்தில்கொள்ளாது நலிவடைந்த ஒரு சமூகப்பிரிவினரின் வரலாறு என்ற பக்கத்தையே அழுத்தமாகத் தூக்கிப்பிடித்துள்ளன. அவை அச்சமூகத்தின் எழுச்சியையும் தன்னம்பிக்கையையும் பலவீனப்படுத்தி, தம்மைத்தாமே இரண்டாம்நிலைப் பிரஜையாக உணரத் தள்ளுவதோடு தமது சமூக அடையாளங்களை மறுதலித்து ஏனைய இனங்களுடன் ஒன்றுகலக்க முனையவும் தூண்டுகோலாக அமைகின்றன. அதனால், இச்சிதைவிலிருந்து மீளும் வரலாறுகள் அவசியப்படுகின்றன. அத்தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்வதாக மாத்தளை ரோகிணியின் ‘உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்’ என்ற நூல் அமைந்துள்ளது.
மாத்தளை ரோகிணி என அறியப்படும் திரு. ஐயாத்துரை அவர்களுக்கு மலையகத் தமிழர் வரலாற்றிலும் இலங்கை வரலாற்றிலும் தனித்துவமானதோர் இடமுண்டு. ஒரு தொழிலாளியாக இருந்து, அத்தொழிலாளர் குழுவிற்குத் தலைமை தாங்கும் தொழிற்சங்கத்துக்குத் தலைவராக உயர்ந்த சிறப்புக்குரியவர், அவர். தொழிற்சங்கவாதியாக இயங்கிய காலத்திலும் அரசியல்வாதியாகப் பரிணமித்த காலத்திலும் கொள்கைப் பற்றுடன் அவர் செயலாற்றி இருப்பதை அவதானிக்க முடிகிறது. இத்தனைக்கும் மேலாக அவர் ஒரு மக்கள் படைப்பாளியாகவும் ஆய்வாளராகவும் பயணித்துள்ளார். அவரின் பங்களிப்புகளுள் முக்கியமானதொன்றாக, ‘உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்’ என்ற நூல் விளங்குகிறது. அந்நூலே மலையகத்தில் இடம்பெற்ற உரிமைப் போராட்டங்களில் உயிர் நீத்தவர்களின் அடிப்படையான செய்திகளை முதன்முதல் விரிவாகத் திரட்டித் தந்துள்ளது. அதனைத் தவிர்த்துவிட்டு, அல்லது அந்நூலின் துணை இல்லாமல் மலையகப் போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகள் பற்றிப் பேச முடியாதுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவலி இதழில் எழுதப்பட்ட சில தொடர்களே பின்னர் விரிவாக்கப்பட்டு, ‘உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்’ என சென்னை இளவழகன் பதிப்பகத்தால் 1993 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்நூல் வெளிவந்து மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போது (2025) மறுபதிப்புப் பெற்றுள்ளது. இதனை இரா. இராஜாராம் புதிய செய்திகளையும் இணைத்து வெளிக்கொணர்ந்துள்ளார். அல்டோரி தோட்டத்தில் தோட்டத்துரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் பங்குபற்றியுள்ள அவர், மலையக மக்கள் முன்னணியில் இயங்கிய காலத்தில் அரசியல் கைதியாகச் சிறையிலடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை பெற்றவராவார். அவரின் இம்மறுபதிப்பு முயற்சி பாராட்டுக்குரியதாகும்.

‘மலையகப் போராட்டத் தியாகிகளின் வரலாறு’ தொடக்கம் ‘1977ம் ஆண்டில் காணி சுவீகரிப்பின் விளைவாக எழுந்த போராட்டம்’ வரை பதினேழு உபதலைப்புகளில் பதினாறு போராட்டங்கள் பற்றியும் அப்போராட்டங்களில் உயிரிழப்புகள் இடம்பெற்றவாற்றையும் மாத்தளை ரோகிணி அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார். தொழிற்சங்க நிர்வாகி என்றவகையில் சில போராட்டங்களில் அவர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார். அவர் பதிவு செய்துள்ள போராட்டங்களையும் உயிர் இழப்புகளையும் அவதானிக்கின்றபோது, துரைத்தன அடக்குமுறைகளை எதிர்த்தல், சம்பள உயர்வு கோருதல், காணிச் சுவீகரிப்பினை எதிர்த்தல், தொழிற்சங்கத்தை ஸ்தாபித்தல், மாற்றுத் தொழிற்சங்கங்களை உருவாக்குதல், மொழி உரிமை, பிரசவத்திற்கு வாகனம் மறுக்கப்பட்டமையை எதிர்த்தல் முதலானவற்றுக்காகப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் போராட்டக் களத்தில் இருந்தவர்களும் சிறுவர்களும் ஆதிக்கத் தரப்பினால் கொல்லப்பட்டுள்ளதையும் கண்டுகொள்ள முடிகிறது.
ரோகிணி அவர்கள் நூலின் தொடக்கத்திலேயே, “1940ம் ஆண்டு முதல் எழுதப்பட்ட இந்த வீரப்போராட்ட வரலாற்றில் ஒருசிலரின் விபரங்களைப் பெறமுடியாமற் போய்விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளதுடன் அவ்வாறு விவரங்களைப் பெறமுடியாமற்போன போராட்ட நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார் (எட்டு நிகழ்வுகள்). அவற்றுள் ஒரு சம்பவம் குறித்த தகவலையும் (1942 ஆம் ஆண்டு புப்புரஸ்ஸ கந்தா தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த வீராசாமி, வேலாயுதம்) அவற்றுள் உள்ளடங்காத மூன்று புதிய நிகழ்வுகளின் தகவல்களையும் இணைத்து இராஜாராம் இந்நூலை விரிவாக்கியுள்ளார்.
ரோகிணி அவர்களின் நோக்கிலிருந்தும் எடுத்துரைப்பிலிருந்தும் இராஜாராமின் நோக்கும் எடுத்துரைப்பும் வேறுபட்டுள்ளன. ரோகிணி தனிமனிதனை முன்நிறுத்தியதாக போராட்டங்களை அணுகவில்லை. அவர் இட்டுள்ள எந்தத் தலைப்பிலும் போராட்டத்தில் உயிர்நீத்த தனிநபர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இராஜாராம் சேர்த்துள்ள பகுதிகள் தனிமனிதனை முன்னிலைப்படுத்தியதாக அமைந்துள்ளதுடன் தலைப்புகளும் தனிநபர்களைச் சுட்டிநிற்கின்றன. சான்றாக, புசல்லாவ டெவன்பேர்க் தோட்டத்துரை போப்பின் கொலையும் வீராசாமி, வேலாயுதம் என்ற தொழிலாளர்களின் வீர மரணமும், அல்டோரி தோட்டப் போராட்டமும் ராஜி ஜெயமணி எனும் இளைஞனின் உயிர்த்தியாகமும், திருமதி ஜேக்கப் மேரியம்மாவும் சிறை வாழ்வும் என்பவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் ரோகிணி போராட்டத்திலும் போராட்டத்தையொட்டியும் கொல்லப்பட்டவர்களையே தியாகிகளென அடையாளப்படுத்தியுள்ளார். ஆனால், இராஜாராம் உயிரிழப்பற்ற போராட்டத்தையும் (1986 தலவாக்கலை எழுச்சி), பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனச் சிறையிலடைக்கப்பட்டவரையும் (திருமதி ஜேக்கப் மேரியம்மா) நூலுள் உள்ளடக்கியுள்ளார். இவை மூலநூல் விவரிக்கும் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் என்ற எல்லைக்கு வெளியே நிற்கின்றன. அதனால் புதிய இணைப்புகள் மீது விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாதுள்ளது.
மலையகத் தமிழரின் சமூக, அரசியல் அசைவின் முக்கியமானதொரு காலகட்டத்தில் இந்நூல் மறுபதிப்புப் பெற்றுள்ளமைக் குறிப்பிட்டுக் கூறவேண்டியதாகும். குறிப்பாக, மலையகத்தில் தொழிற்சங்கப் போராட்டங்கள் ஸ்தம்பிதம் அடைந்து, தொழிலாளர் நலனுக்கான கூட்டுக்குரல் பலமிழத்தல், தொழிற்சங்கங்களினதும் தொழிற்சங்கத் தலைமைகளினதும் சுயநலமும் பிற்போக்குத் தனங்களும் போலிமையும் பரவலாக அம்பலப்படுதல், மலையகத்தின் மக்கள்நல வரலாற்றை – மக்கள்நல அரசியலை முன்னெடுத்தவர்களின் பங்களிப்புகளைத் திட்டமிட்ட அடிப்படையில் சிதைக்கும் முயற்சிகள் இடம்பெறுதல், மலையகத் தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் – அது தொடர்பிலான உரையாடல்கள் என்றுமில்லாத அளவுக்குப் பெருகுதல் முதலானவை நிகழ்கின்ற காலத்திலேயே இந்நூல் மறுபதிப்புப் பெற்றுள்ளது. இது கடந்தகால வரலாற்று வெளிச்சத்தில் மேற்படி சமகால அசைவுகளை அணுகுவதற்கான வாயிலைத் திறந்துள்ளது.
தோட்டத் தொழிலாளரது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு – அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு – உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடுவதற்கு இன்று வலிமையான எந்த அமைப்பும் இல்லை. அண்மைக்காலங்களில் மலையகம் முழுதும் அராஜகங்கள் – அத்துமீறல்கள் பல இடம்பெற்றுள்ளன. பெருகிவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளருக்குச் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆளும் அதிகாரத் தரப்புகள் வழமைபோல் போலி வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. ஆனால், இவற்றுக்கு எதிராக வலுவான போராட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. மலையக இளைஞர் யுவதிகள் காலி முகத்திடலில் தொழிலாளர் சம்பள உயர்வுக்காக நடத்திய போராட்டம், அரகலவில் மலையக மக்களின் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டமை முதலானவை தனித்த கவனத்தைப் பெற்றபோதும் தோட்டத் தொழிலாளர்களை நேரடியாக இணைத்துக்கொள்வதிலும் அவர்களுக்கான ஸ்தாபனத் தலைமையை வழங்குவதிலும் அப்போராட்டங்கள் அக்கறை செலுத்தவில்லை. அத்துடன் அப்போராட்டங்களின் விளைவுகள் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை முன்னேற்றத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அதனால் தொழிலாளர் சக்தியை மீள எழுச்சியடையச் செய்யும் முயற்சிகள், அதற்கான ஸ்தாபன முன்னெடுப்புகள், நிலவுகின்ற அமைப்புகளின் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முதலானவை அவசியமானவையாக விளங்குகின்றன. அதற்கான வாயிலைத் திறக்கும் வலு, இந்நூலுக்குள் புதைந்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைப் போராட்டத்தைப் புதிய தளத்தை நோக்கி நகர்த்தியதில் தொழிற்சங்க உருவாக்கம் முதன்மையான இடத்தை வகித்துள்ளது. தொழிற்சங்கச் செயற்பாடுகள் மூலமே தொழிலாளர்கள் எழுச்சியும் விழிப்புணர்வும் பெற்றதோடு தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும் அநீதிகளை எதிர்த்துப் போராடவும் முடிந்தது.
மலையகத் தொழிற்சங்க அரசியலின் ஊற்றுமூலமாக கோ. நடேசய்யரை அடையாளப்படுத்தலாம். அவர் 1931 ஆம் ஆண்டு ‘அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்’ என்ற பெயரில் தொழிற்சங்கமொன்றை உருவாக்கி, ஸ்தாபனநிலைப்பட்ட வகையில் அம்மக்களை வலுப்படுத்தியுள்ளார். அதுவே தோட்டத் தொழிலாளர்க்கென உருவாக்கப்பட்ட முதலாவது தொழிற்சங்கமாகும். அதன்பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கம் பெருந்தோட்டங்களில் ஆழமாக வேரூன்றி, தொழிலாளர் வாழ்வில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியது. அத்தொழிற்சங்கமே பெருந்தோட்டத் தொழிலாளரின் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களைத் தொடக்கிவைத்தது. அதன்பின்னர் இலங்கை – இந்தியக் காங்கிரஸ் (இன்றைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) உதயமானது. காங்கிரஸின் செயற்பாடுகளில் அதிருப்திகள் ஏற்பட பிளவுகள் அதிகரித்தன. ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி முதலான சங்கங்கள் அவ்வாறு உதயமாகின. இடதுசாரித் தளத்தில் இயங்கிய செங்கொடிச் சங்கம் தொடக்க காலத்தில் தோட்டங்களில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால், அதன் நோக்கும் போக்கும் பின்னர் சிதைந்து தேய்ந்தன.
தொழிற்சங்க அரசியலில் சுயநலப் போக்கும் சுரண்டலும் அதிகரித்தபோது தொழிலாளர் நலன் அந்நியப்படத் தொடங்கியது; அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கருவியாகத் தொழிற்சங்க அரசியல் குறுகியது. எண்ணிக்கை ரீதியில் பெருகத்தொடங்கிய தொழிற்சங்கங்கள் தொழிலாளரின் விடுதலை, உரிமைகள், போராட்டங்கள் என்ற தடத்திலிருந்து விடுபட்டு தமது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தொழிற்சங்கங்களிடையே முரண்பாடுகளையும் மோதல்களையும் பெருக்கிக்கொண்டதோடு தொழிலாளர்களிடையேயும் பாரிய பிளவுகளை ஏற்படுத்தின. அதனால் தொழிலாளர் ஐக்கியம் சிதைந்ததோடு வர்க்க ரீதியாக அணிதிரண்டு பொது எதிரியை எதிர்த்தல் என்ற தடத்திலிருந்து விலகி தமக்குள்ளே மோதிக்கொள்ளும் நிலை தோன்றியது. தொழிலாளர்களின் போராட்டங்களும் தியாகங்களும் சொற்ப விலைக்குத் தொழிற்சங்கங்களாலே விற்கப்பட்டன. இந்நிலைமை மலையகத்தில் வர்க்க ரீதியான அணிதிரளலையும் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களையும் சிதைத்தன. இக்காரணிகளால் தொழிற்சங்கம் மீதான மக்களின் நம்பிக்கையும் பற்றும் குறையத் தொடங்கின. அத்துடன் கட்சி அரசியலின் வளர்ச்சியினால் தொழிற்சங்கங்கள் தம் முதன்மையை இழந்து வருகின்றன. அதனால் மலையகத் தொழிற்சங்க அரசியலில் மாற்று முன்னெடுப்பு முயற்சிகள் இன்றைய தேவையாக விளங்குகின்றன.
தொழிற்சங்கங்களின் தோற்றப் பின்புலத்தையும் அவை கடந்துவந்த பாதைகளையும் புறநிலையில் அணுகி, அத்தொழிற்சங்கங்கள் இன்று வந்தடைந்திருக்கின்ற இடத்தை மதிப்பிடல் எதிர்கால நகர்வினை வலுப்படுத்தத் துணைபுரியும். மிகமுக்கியமாக தொழிற்சங்கங்கள் அனுபவிக்கும் எல்லாவித உரிமைகளும் தொழிலாளர்களின் போராட்டங்களினால் பெறப்பட்டவையாகும். அவ்வாறு தொழிலாளரின் தியாகங்களால் வேர்விட்ட தொழிற்சங்கங்கள், அத்தொழிலாளர்களுக்கு என்ன செய்தன, தொழிற்சங்கப் பிளவுகளுக்கான காரணங்கள் எவை, அப்பிளவுகள் தொழிலாளர்களை எவ்வாறு பாதித்தன, முற்போக்குத் தளத்தில் இயங்கிய தொழிற்சங்கங்கள்கூட பிற்போக்குத் தலைமைகளின் ஆதிக்கத்தால் எவ்வாறு சூறையாடப்பட்டன, தொழிற்சங்கங்களே எவ்வாறு விற்பனைப் பண்டமாகின முதலானவை குறித்த புறநிலையான தெளிவு, மலையகச் சமூக எழுச்சிக்கான – மாற்று அரசியலுக்கான பாதைகளைத் திறந்துவிடும். அதற்கான உரையாடல் வெளியை இம்மறுபதிப்பிலிருந்து கட்டியெழுப்பலாம்.
மலையகத் தமிழரின் வரலாறு குறித்த நோக்குமுறையில் பலவீனங்கள் பல நிலவுவதுடன் வரலாற்று இருட்டடிப்புகளும் சிதைப்புகளும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாற்று அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களின் பங்களிப்புகளை மறைக்கும் வரலாறுகள் கட்டியெழுப்பப்படுவதுடன் அதீத தனிமனிதவாதமும் பிற்போக்குச் செயற்பாடுகளும் கொண்டவர்களைப் பெரும் போராளிகளாகச் சித்திரிக்கும் அபத்தமும் நிகழ்ந்துவருகிறது. அவற்றுக்குப் பின்னால் மறைகரங்கள் இயங்குவதையும் இயக்குவிப்பதையும் அவதானிக்க முடிகிறது. போலிகளையும் மக்கள் சாரியிலிருந்து அந்நியப்பட்ட தனிமனித வாதிகளையும் புரட்சிகரப் போராளிகளாக முன்நிறுத்துவதன் அரசியல், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகள் முதலானவை குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சமூக விடுதலைக்கான வரலாற்றைக் கட்டியெழுப்புவதும் மலையக எழுச்சிக்கு அவசியமானவைகளாகும்.
மலையகத்தில் இடம்பெற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு வெளிப்பாடாகவே, மலையகத் தொழிற்சங்கத் தியாகிகள் தினமாக ஜனவரி 10 ஆம் திகதியைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற பிரேரணையை திரு. வேலுகுமார் அவர்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். மலையக உரிமைக் குரல், பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இத்தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை மலையகத்தில் ஒழுங்கமைத்து வருவதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அந்நினைவேந்தலை நிகழ்த்தியுள்ளன. வடக்கு – கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பேரினவாத எதிர்ப்பு மிகுந்துவரும் காலத்தில், அந்நினைவேந்தல்களைப் போலவே மலையகத் தியாகிகளும் நினைவுகொள்ளப்படுவதால், அதற்குப் பின்னால் புலம்பெயர் சக்திகளின் இடையீடு உண்டா என்ற ஐயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
இத்தகைய சூழலில்தான், மலையகத் தமிழரின் எழுச்சிமிக்க வரலாற்றை – தியாகத்தைப் பேசும் இந்நூலின் மறுபதிப்புப் பெற்றுள்ளது. இது மலையகத் தமிழர் கடந்துவந்த காலத்தையும் நிகழ்கால நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் அவர்கள் எந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் – எந்த இடத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டுகொள்ளவும் வழிசமைத்துள்ளது.
திரு. ஐயாத்துரை அவர்களின் நூல் வெளிவர முன்னரும், வெளிவந்த பின்னரும் மலையகத் தியாகிகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க எழுத்து முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, பி.ஆர். பெரியசாமியின் ‘தோட்டத் தொழிலாளர் வீரப் போராட்டம்’ (1957), நடேசனின் ‘A History of the Upcountry Tamil People in Sri Lanka’ (1993), மோகன்ராஜின் (பி.ஏ. காதர்) ‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்’ (1994), வி.ரி. தர்மலிங்கத்தின் ‘மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள்’ (1994 – சரிநிகரில் தொடராக வெளிவந்தது. பின்னர் ‘மலையகம் எழுகிறது’ என எழுநா வெளியீடாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது), இ. தம்பையாவின் ‘மலையக மக்கள் என்போர் யார்?’ (1995), எஸ். இராமநாதனின் ‘மலையக மக்கள் இருளும் ஒளியும்’ (2009), எ.பி. கணபதிப்பிள்ளையின் ‘The Epic of Tea’ (2011), ‘Glimpse of a Tea Bud’ (2023), குமாரி ஜயவர்தன மற்றும் ரஷல் கூரியன் இணைந்து எழுதிய ‘Class Patriarchy and Ethnicity on Sri Lankan Plantations’ (2015), மு.சி. கந்தையாவின் ‘சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்’ (2015), எம்.எஸ். செல்வராஜின் ‘மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு’ (2020), வரதன் கிருஸ்ணாவின் ‘வெந்து தணியாத பூமி’ (2021) முதலான நூல்களில் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர தனியான கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. அவற்றுள் டிக்கோயா ஸ்ரீகாந்தின் ‘உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்’ (1987), லெனின் மதிவானத்தின் ‘தோழர் ஏப்ரகாம் சிங்கோ’ (2013), ‘சிவனு லெட்சுமணனை நினைவுகூரல்’ (2013), என். சரவணனின் ‘முல்லோயா கோவிந்தன்: தொழிலாளர் வர்க்கத்தின் முதல் தியாகி’ (2015), பெ. முத்துலிங்கத்தின் ‘மலையகத்தின் முதல் தியாகிகள்’ (2018), ‘தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பும் சட்டங்களும்’ (2018), ‘ஸ்டலன்பேர்க் வீராசாமி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பெப்ரவரி 27 ஆம் திகதியே மலையகத் தொழிலாளர்களின் விடுதலை நாள்’ (2020) முதலானவை குறிப்பிடத்தக்கன.
படைப்பிலக்கியங்களிலும் மலையகத் தியாகிகள் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, சு. முரளிதரனின் ‘திரும்பிப் பார்க்க வேண்டிய தியாகங்கள்’, ‘தீவகத்து ஊமைகள்’, சுபத்திரனின் ‘மலையினும் பெரியது சிவனுவின் மரணம்’, சிவ. இராஜேந்திரனின் ‘சிவனு இலட்சுமணனுக்கு’, ‘ஒரு மரணம் பல ஜனனம்’ முதலான கவிதைகளையும் சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ குறுநாவலையும் சிவ. இராஜேந்திரனின் ‘இரத்த வரலாறு’ பாடலையும் சுட்டிக்காட்டலாம்.
மேற்படி பதிவுகளை மொத்தமாக நோக்குகின்றபோது, மலையகத் தியாகிகள் என யாரை வரையறுப்பது, மலையகத் தியாகிகள் தினமென எதனை நினைவுகொள்வது என்பன தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் நிலவுவதைக் கண்டுகொள்ள முடிகிறது. அத்துடன் போராட்ட நிகழ்வுகளையும் உயிரிழப்புகளையும் விவரிப்பதிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மலையகத் தியாகிகள் அல்லது மலையகத் தொழிற்சங்கத் தியாகிகள் என யாரை வரையறுப்பது என்பது தொடர்பில் இன்னும் தெளிவான வரையறைகள் எட்டப்படவில்லை. அதனாலேயே மலையகத்தின் முதல் தியாகியாக முல்லோயா கோவிந்தனைப் பலரும் நினைவுகொள்ளும்போது அதனைச் சிலர் ஏற்க மறுக்கின்றனர். எடுத்துக்காட்டாக, பெ. முத்துலிங்கம் கோவிந்தனை முதல் தியாகியாக ஏற்றுக்கொள்ள முடியாமையைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதைச் சுட்டிக்காட்டலாம். அதற்கான நியாயப்பாட்டினை அவர் பின்வருமாறு முன்வைத்துள்ளார்:
“… பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவாகக் கூட்டத்தைப் பார்க்க வந்த தொழிலாளி கோவிந்தன் குண்டடிபட்டு தளத்திலேயே மரணமடைந்தான்” (2023: 337,338).
“ஒடுக்குமுறைக்கு எதிராக யார் எதிர்த்தெழுந்து போரிட்டு மடிகின்றாரோ அல்லது கொல்லப்படுகின்றாரோ அல்லது போராடி இயற்கை மரணத்தை அடைகின்றாரோ அவரது அறைகூவலே அடுத்த தலைமுறையின் போராட்டத்திற்கு உந்து சக்தியாக அமைகிறது… போராட்டத்தில் கலந்துகொள்ளாது பார்வையாளர்களாக வந்து இறப்பவர்களை நினைவுகூர்வதன் மூலம் மக்களைத் தூண்டுவிக்க முடியாது” (2023: 379-386).
கோவிந்தனைத் தியாகியாக ஏற்க மறுக்கும் அவர், வீராசாமி, வேலாயுதம் ஆகியோரை மலையகத்தின் முதல் தியாகிகளாக முன்நிறுத்தியுள்ளார். அவ்வாறே பி.ஏ. காதர், “கோவிந்தன் போராட்டத்தில் பலியான தியாகி அல்ல என்பதால்தான் ஜுன் 5, 1947 போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான வேலுப்பிள்ளை கந்தசாமி முதலாவது தொழிலாளர் தியாகியாக நினைவுகூரப்படுகிறார்” (2023: 65) என்கிறார். இவை மலையகத் தியாகிகளை வரையறுப்பதில் பொதுவான உடன்பாடுகள் இல்லை என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்நிலையாலே இராஜாராம் இம்மறுபதிப்பில் தன்னுடைய நோக்குநிலைக்கு ஏற்ப புதிய தியாகிகளை இணைத்துக்கொண்டுள்ளார்.
மலையகத் தியாகிகள் தினம் தொடர்பில் வெவ்வேறு குழுவினர் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். திரு.வேலுகுமார் முல்லோயா கோவிந்தன் கொல்லப்பட்ட ஜனவரி 10 ஆம் திகதியை மலையகத் தொழிற்சங்கத் தியாகிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிடிதளராதே, மலையக உரிமைக் குரல் ஆகிய அமைப்பினரும் ஜனவரி 10 ஆம் திகதியையே மலையகத் தியாகிகள் தினமாக நினைவுகொள்கின்றனர். என். சரவணனும் முல்லோயா கோவிந்தன் கொல்லப்பட்ட ஜனவரி 10 ஆம் திகதியையே மலையகத் தியாகிகள் தினமாக முன்வைத்துள்ளார். பெ. முத்துலிங்கம், வீராசாமி தூக்கிலிடப்பட்ட பெப்ரவரி 27 ஆம் திகதியைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்கிறார். பி.ஏ. காதர், வேலுப்பிள்ளை கந்தசாமி கொல்லப்பட்ட ஜுன் 05 ஆம் திகதியைக் குறிப்பிடுகின்றார். ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தேசிய கலை இலக்கியப் பேரவை முதலானவை சிவனு லட்சுமணன் கொல்லப்பட்ட மே 11 ஆம் திகதியைத் தியாகிகள் தினமாக நினைவுகொள்கின்றன. இவை மலையகத்தில் இயங்கும் அமைப்புகள் மலையகத் தியாகிகள் யார் என வரையறுப்பதிலும் தியாகிகள் தினத்தைத் தீர்மானிப்பதிலும் பொது உடன்பாடொன்றை எட்டுவது அவசியம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றன.
போராட்டங்கள், போராட்டங்களில் இடம்பெற்ற உயிரிழப்புகள் தொடர்பிலான விவரிப்புகளில் காணப்படும் முரண்பாடுகளுக்கு முல்லோயா கோவிந்தன் பற்றிய பதிவுகளையே சான்றாகக் குறிப்பிடலாம். முல்லோயா கோவிந்தன் ஜனவரி 15 ஆம் திகதி கொல்லப்பட்டதாக மாத்தளை ரோகிணியும், ஜனவரி 19 ஆம் திகதி கொல்லப்பட்டதாக பி.ஏ. காதர், எம்.எஸ். செல்வராஜ் ஆகியோரும், ஜனவரி 10 ஆம் திகதி கொல்லப்பட்டதாக எஸ். நடேசன், எ.பி. கணபதிப்பிள்ளை, என். சரவணன் முதலானோரும் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் ஜனவரி 10 ஆம் திகதியே அவர் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், கோவிந்தன் நினைவு நீண்டகாலமாக, ஜனவரி 15 ஆம் திகதி இடம்பெற்றுவந்துள்ளது. அது குறித்த என். சரவணனின் கருத்துப் பின்வருமாறு அமைந்துள்ளது:
“முல்லோயா கோவிந்தனின் நினைவாக 28.01.1999 அன்று முதற்தடவையாக ஒரு நினைவுக் கல் நாட்டப்பட்டது. மலையக மக்கள் முன்னணி அதை முன்னெடுத்துச் செய்திருந்தது. ஆனால், அந்த நினைவுக் கல்லில் கோவிந்தன் கொல்லப்பட்ட நாள் 15.01.1940 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாக கோவிந்தனை நினைவுகொள்ளும் வழக்கம் 15 ஆக மாறியது. இக்கட்டுரை வெளிவந்ததன் பின்னர் தான் 2020 இலிருந்து கோவிந்தனின் நினைவு நாளான ஜனவரி 10 ஆம் திகதியை மலையகத் தியாகிகள் தினமாக மலையக சமூகச் செயற்பாட்டாளர்கள் பிரகடனப்படுத்தினார்கள்” (2019: 93,94)
கோவிந்தன் நினைவாக நாட்டப்பட்ட கல்லில் திகதி தவறாகக் குறிப்பிடப்பட்டமைக்கு, மாத்தளை ரோகிணியின் நூலே காரணமெனலாம். மலையகத் தியாகிகள் குறித்த முன்னோடி நூலாக அந்நூல் விளங்குவதால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியைக் கல் நாட்டியவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். எஸ். நடேசனின் நூல் ஆங்கிலத்தில் வெளிவந்ததாலும், பின்னர் கோவிந்தனின் கொலை தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ள எ.பி. கணபதிப்பிள்ளையின் நூல்களும் ஆங்கிலத்திலேயே உள்ளதாலும் அவர்கள் சரியாகச் சுட்டிக்காட்டிய திகதி, மலையகத்தில் பரவலாகச் சென்றடையவில்லை எனலாம். அந்த இடைவெளியை என். சரவணனின் கட்டுரை நிறைவுசெய்துள்ளது.
கோவிந்தனின் கொலை நடந்த திகதி இன்று பரவலாக அறியப்பட்ட போதிலும் இம்மறுபதிப்பில் முன்னர் தவறாகக் குறிப்பிடப்பட்ட 15 ஆம் திகதியே இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் எவ்வித குறிப்புகளும் வழங்கப்படவில்லை. அதனால் திகதி தொடர்பான தவறுகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு இம்மறுபதிப்பும் காரணமாக அமையலாம்.
கோவிந்தனின் கொலை எப்போது நடந்தது (எத்தனை மணியளவில்) என்பதிலும் மாறுபட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன. மாத்தளை ரோகிணி தொழிலாளர்கள் பகலுணவுக்கு வந்த 12 மணியளவில் சம்பவம் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். என். சரவணன், வரதன் கிருஸ்ணா முதலானவர்களும் தொழிலாளர்கள் மதிய உணவுக்குச் சென்றுகொண்டிருந்த 12 மணியளவிலே கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எ.பி. கணபதிப்பிள்ளை திரட்டித் தரும் கோவிந்தன் கொலை தொடர்பான ஆவணங்களில் காலை வேளையிலேயே கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பொலிஸ் அறிக்கையின்படி, பொலிசார் தமக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய காலை வேளையிலேயே தோட்டத்துக்குச் சென்றுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் சாட்சியின்படி, “கோவிந்தன் தொழிற்சாலையிலிருந்து காலை உணவுக்காக வீட்டுக்குவந்த எட்டு மணியளவில் கொல்லப்பட்டார்” (Kanapathypillai, 2023: 304) என்ற குறிப்பே காணப்படுகிறது. வீரகேசரி பத்திரிகைச் செய்தியிலும் (11.01.1940) காலையிலேயே சம்பவம் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிந்தன் பற்றிய சித்திரிப்பிலும் ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. சான்றாக, பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
மாத்தளை ரோகிணி: முழுக்க முழுக்க உடல் உழைப்பால் தினவெடுத்த தோள்களைக் கொண்ட கட்டிளங்காளையான கோவிந்தன், போலிசார் தொழிலாளர்களைத் துன்புறுத்தும் செயல் கண்டு பொங்கி எழுந்தான். தேயிலைத் தொழிற்சாலையில் தேயிலைக் கொழுந்தைச் சேகரிக்கும் மட்டையைக் கையில் எடுத்தவன் லயத்தை நோக்கி ஓடினான். இதைக் கண்ட போலிஸ் தன்னைத் தாக்கவருகிறான் என்று சுட்டான் (2025: 26).
பெ. முத்துலிங்கம்: வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளாது தோட்டத் தொழிற்சாலையில் வேலைசெய்துவிட்டு சிகப்பு தலைப்பாகையுடன் மட்டம் தட்டும் தடியுடன் வந்த கோவிந்தன் என்ற தொழிலாளியைத் தொழிலாளர் தலைவன் எனக் கருதி பொலிஸ் சார்ஜன் சுரவீர துப்பாக்கியால் சுடலானான் (2023: 381).
என். சரவணன்: பொலிசார் தோட்டத்தொழிலாளரைத் தாக்கியபோது பெரியசாமி என்ற தொழிலாளி பொலிஸ் வாகனம் மோதிப் படுகாயமுற்றார். ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ஜீப்களுக்குக் கல்லெறிந்தனர். இதனைக் கண்டு ஆத்திரமுற்ற தொழிலாளி கோவிந்தன் தொழிற்சாலையில் தேயிலைக் கொழுந்தைச் சேகரிக்கும் மட்டையை எடுத்துக்கொண்டு லயத்தை நோக்கி ஓடி வந்தார். பொலிசாரும் தொழிலாளர்களும் நேருக்குநேர் நின்று வாக்குவாதப் பட்டுக்கொண்டிருந்தனர். அங்கு குழுமியிருந்தவர்களை விலத்திக்கொண்டு கோவிந்தன் முன்னே வந்தார். அப்போது சுடப்பட்டார் (2019: 87,88).
பி.ஏ. காதர்: கோவிந்தன் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் நிர்வாகத்தோடு ஒத்துழைத்தபோதும், மலையகத்தில் மாத்திரமல்ல இலங்கை தொழிலாளர் வர்க்கப் போராட்ட வரலாற்றில் முதலில் பலியானவர் இவரே. எனினும் இவர் போராட்டத்தில் ஈடுபட்டுப் பலியான தியாகி அல்ல (2023: 65).
மு.சி. கந்தையா: முல்லோயா தோட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தில் கோவிந்தன் என்ற தோட்டத் தொழிலாளி காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் வீர மரணமடைந்தார். மலையகத் தொழிலாளர் போராட்டத்தில் முதல் தியாகி இவர் (2015: 93).
எம்.எஸ். செல்வராஜ்: கோவிந்தன் என்ற மலையகத் தோட்டத் தொழிலாளி தனது உயிரை துச்சமென மதித்து துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி, தியாகி ஆனார் (2020: 35).
வரதன் கிருஸ்ணா: போராட்டம் நிறைவுக்கு வந்த பின்னரும் அபேகுணசேகர என்ற இனவாதி தொழிலாளரைப் பழிவாங்க முடிவு செய்தார். தொழிலாளர்கள் வழமைபோல வேலைக்குச் சென்றுவிட்டு மதிய உணவுக்காக தமது இருப்பிடம் நோக்கி வந்தபோது அந்த விபரீதம் நடந்தது. திடீரென தோட்டத்துக்குள் புகுந்த பொலிசார், ‘இங்கு யார் யார் மக்களைக் குழப்புவது’ என்று கத்தியவாறே துப்பாக்கிகளுடன் மக்களைத் தாக்கத் தொடங்கினர். ஆத்திரமுற்ற தொழிலாளர் பொலிஸ் வாகனம் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். பொலிசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோவிந்தனை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர் (2021: 12).
பொலிஸ் அறிக்கை (கணபதிப்பிள்ளையின் நூலில் இடம்பெற்றுள்ளது): வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிலாளர்களை லொறியில் ஏற்றிக்கொண்டு தொழிற்சாலைக்குச் செல்லும்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் லொறியையும் லொறியைத் தொடர்ந்து சென்ற கார்களையும் தாக்கத்தொடங்கினர். பொலிசார் கூடியிருந்த 200க்கு மேற்பட்ட தொழிலாளர்களை எச்சரித்து கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். அதன்போது அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கோவிந்தன் சுடப்பட்டார்… அவர் 09 ஆம் திகதி வேலைக்கு வந்துள்ளார். ஆனால், வேலை செய்யவில்லை. 10 ஆம் திகதி வேலைக்கு வரவில்லை (2023: 302-304).
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் கருத்து (கணபதிப்பிள்ளையின் நூலில் இடம்பெற்றுள்ளது): 09 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கோவிந்தன் வேலைக்குச் சென்றார். வழமைபோல் அவர் எட்டு மணிக்குக் காலை உணவுக்காக லயத்துக்கு வந்துகொண்டிருந்தார். அவர் பாதையில் கார்களைக் கடந்து செல்லும்போது மக்கள் கூச்சலிட்டப்படி கார்களின் பின்னால் ஓடினர். கோவிந்தன் வேட்டியும் சிவப்பு நிறச் சட்டையும் (Shirt) அணிந்திருந்தார். அவர் பாதையோரத்தில் நின்றபடி கார்களைப் பார்க்கத் திரும்பினார். அதன்போது சுடப்பட்டார் (2023: 303).
மேற்படி மாறுபட்ட விவரிப்புகள், கோவிந்தன் தொடர்பில் புறநிலையில் விரிவாக ஆராய வேண்டிய தேவையை நியாயப்படுத்துகின்றன. கோவிந்தன் குறித்து மட்டுமல்லாது இனங்காணப்பட்டுள்ள மலையகத் தியாகிகள் தொடர்பிலும் நம்பகமான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் பெயரளவில் மட்டும் அறியப்பட்டுள்ள, இன்னும் அறியப்படாத போராட்டத் தியாகிகளைக் கண்டறிதலையும் அவர்களின் வரலாற்றை எழுதுதலையும் முன்னெடுக்க வேண்டும். அவை யாவற்றையும் கொண்டே மலையகத்தின் போராட்ட வரலாற்றை முழுமைப்படுத்தலாம். அதனை மேற்கொள்வதற்கான ஓர் அடிப்படை ஆவணமாக மாத்தளை ரோகிணியின் ‘உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்’ விளங்குகிறது. இந்நூலாக்கத்துக்கான நோக்கமும் அதையொட்டியதாகவே அமைந்துள்ளது என்பதை, “இதை வாசிக்கும்போது உங்களுக்குச் சிந்தனை துளிர்விடலாம். அதன்மூலம் இந்த வரலாற்றை மேலும் ஆழமாக ஆராய முற்பட்டு புதிய காவியம் படைக்கலாம். அதற்கு இந்தப் போராட்ட வரலாறு ஓர் உந்துசக்தியாக அமைந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியையும் அளிக்கும் என நம்புகிறேன்” என்ற மாத்தளை ரோகிணியின் குறிப்பிலிருந்து கண்டுகொள்ள முடிகிறது. அந்நோக்கத்தை நிறைவேற்றும் அடியெடுப்புகள் பல கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. அதனொரு தொடர்ச்சியாக இம்மறுபதிப்பையும் கொள்ளலாம். இம்மீள் வருகையானது, கடந்தகால எழுச்சியையும் நிகழ்காலப் பின்னடைவையும் அறிந்துகொள்ள வழிசமைத்துள்ளதுடன் அவ்வரலாற்று எழுதுகையில் காணப்படுகின்ற இடைவெளிகளையும் முரண்பாடுகளையும் களைவதற்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. அவை குறித்த ஆக்கபூர்வமான உரையாடல்கள் மூலம் மலையகப் போராட்ட எழுச்சியையும் தியாகிகளின் வரலாற்றையும் மீள்வரைவு செய்தல் காலத்தின் தேவையாகும்.
உசாத்துணை நூல்கள்
1. Kanapathypillai, A.P., (2011) The Epic of Tea, Colombo: Social Scientists’ Association.
2. …………………………… (2023) Glimpses of a Tea Bud, Author Publication.
3. Nadesan, S., (1993) A History of the Upcountry Tamil People in Sri Lanka, Nandalala Publications.
4. கந்தையா, மு.சி., (2015) சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
5. காதர், பி.ஏ., (2023) இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் (02 ஆம் பதிப்பு), லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம்.
6. கிருஸ்ணா, வரதன், (2021) வெந்து தணியாத பூமி, கனடா: சமாதானத்திற்கான கனேடியர்கள் ஸ்ரீலங்கா சார்பு.
7. சரவணன், என், (2019) கள்ளத்தோணி, கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
8. செல்வராஜ், எம்.எஸ்., (2020) மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு, சென்னை: பாரதி புத்தகாலயம்.
9. மதிவானம், லெனின், (2014) சமூக இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும், கிளிநொச்சி: மகிழ்.
10. முத்துலிங்கம், பெ., (2023) மலையகம் நிலைமாற்றத்தினை நோக்கி, கண்டி: சமூக அபிவிருத்தி நிறுவகம்.
11. ரகுநாதன், தொ.மு.சி., (2015) பாரதி: காலமும் கருத்தும், சென்னை: நாம் தமிழர் பதிப்பகம்.
12. வேங்கடாசலபதி, ஆ.இரா., (2020) பாரதி கருவூலம் (05 ஆம் பதிப்பு), நாகர்கோவில்: காலச்சுவடு.
(09.08.2025 அன்று கொட்டகலையில் இடம்பெற்ற உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் (மறுபதிப்பு) நூல் வெளியீட்டில் ஆற்றிய ஆய்வுரையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.)



