இந்தியாவில் பொ.ஆ.மு. காலத்தில் மேலோங்கத் தொடங்கிய பிராமண மதம், கடல் கடந்து இலங்கை, கம்போடியா, தாய்லாந்து, பர்மா, ஜாவா, இந்தோனேசியா முதலான பல நாடுகளில் விரைவாகச் செல்வாக்குப் பெற்றது. அந்நாடுகளின் அரச சபைகளில் பிராமணர்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச மட்டத்திலான சடங்குகள், பிராமணர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரத்திற்கான சம்பிரதாயபூர்வமான அங்கீகாரத்தைப் பிராமணச் சடங்குகள் வழங்கியுள்ளன. பிராமணர் அரச ஆலோசகர்களாகவும் புரோகிதர்களாகவும் விளங்கியுள்ளனர். அரச மட்டத்தில் முதன்மைபெற்ற பிராமணச் சடங்குகள் மக்கள் மத்தியிலும் பரவத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் பொ.ஆ. முற்பட்ட காலத்திலேயே பிராமணர் செல்வாக்கு மேலோங்கியிருந்துள்ளது. இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளிலும் பாளி நூல்களிலும் அதற்கான சான்றுகள் உள்ளன. அச்சான்றுகள் தென்னிந்தியாவைவிட இலங்கையில் பிராமணச் செல்வாக்கு தொடக்ககாலத்தில் மேலோங்கியிருந்துள்ளமையை வெளிப்படுத்தி நிற்கின்றன. தென்னிந்தியப் பிராமிக் கல்வெட்டுகளில் பிராமணர் பற்றிய குறிப்புகள் இல்லை. சங்ககாலத்தின் பிற்பகுதியிலேயே பிராமணச் செல்வாக்கு மேலோங்கத் தொடங்கியுள்ளது. அதன்பின்பே, “நிலவுடைமையை அடிப்படையாகக்கொண்டு மங்கலம் என்ற பெயரில் அந்தணர்களுக்கு ஊர்களைத் தானமாகத் தரும் வழக்கம் இடம்பெற்றிருக்கின்றது” (வேதாசலம், 2019: 98). பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டுக்குரிய பூலாங்குறிச்சி கல்வெட்டில் வெள்ளேற்றான்மங்கலம், சிற்றையூர் எனும் இரு பிராமண ஊர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன (மேலது: 99). பிரம்மதேயம் பற்றிய முதற்கல்வெட்டுப் பதிவாக அவை விளங்குகின்றன.
இலங்கையில் பிராமணர் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகளை ஆராய்கின்றபோது சிங்கள மன்னர்களும், தமிழ் மன்னர்களும் பிராமணர்களைப் போற்றி ஆதரித்துள்ளமையையும் பௌத்த மரபிலும், இந்து மரபிலும் அவர்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றிருந்துள்ளமையையும் அறியவியல்கிறது. பிராமணர் பற்றிய தமிழ்க் கல்வெட்டுக் குறிப்புகள் இந்துக் கோயில்களிலும், பௌத்த விகாரைகளிலும் கிடைக்கப்பெற்றுள்ளமை தனித்துக் குறிப்பிட வேண்டியதாகும். அனுராதபுர காலத்துக்குரியதாகக் கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டுகளில் பிராமணர் பற்றிய பதிவுகள் எவையும் இடம்பெறவில்லை. சோழர்காலக் கல்வெட்டுகளிலும் சோழருக்குப் பிந்தையகாலக் கல்வெட்டுகளிலும் பிராமணர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சோழர்காலத்து இந்துக்கோயில்களில் பிராமணர்கள் பூசகர்களாக விளங்கியுள்ளதைக் கல்வெட்டுகளிலிருந்து கண்டுகொள்ள முடிகிறது. திருக்கேதீஸ்வரத்தில் கிடைத்த முதலாம் இராசேந்திரன் காலத்துக்குரிய கல்வெட்டில் “மாணி இருவருக்கு நிசதம் நல்லெண்ணை” வழங்கப்பட்ட குறிப்பு உள்ளது. ‘மாணி’ என்பது இளம்பிராமணனைக் குறிக்கும் சொல்லாகும். ஆகவே, இராஜராஜேஸ்வரத்தில் இரு இளம் பிராமணர்கள் இருந்துள்ளனர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் உள்ள அதிராசேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டுக்குரிய கல்வெட்டில் “திருவாராதனை பண்ணும் ப்ராஹ்மணன், சிவ ப்ராஹ்மணன்” ஆகிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சோழருக்குப் பிந்தையகாலக் கல்வெட்டுகளிலும் பிராமணர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. முதலாம் விஜயபாகுவின் பளமோட்டைச் சாசனத்தில் கொடை வழங்கியதாகக் கூறப்படும், ‘நங்கைசானி’ ஒரு பிராமணப் பெண்ணாவாள். ஆறாம் பராக்கிரமபாகுவின் நாய்மனைக் கல்வெட்டில் பௌத்த விகாரை ஒன்றில் உள்ள தேவராஜ சந்நிதியில் நாள்தோறும் பன்னிரு பிராமணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டமை இடம்பெற்றுள்ளது. அவனுடைய முன்னேஸ்வரக் கல்வெட்டில் பிராமணர்களுக்குச் சர்வமானியமாக நிலம் வழங்கப்பட்ட செய்தி இடம்பெற்றுள்ளது. இவை சோழர்காலத்து மரபு தொடர்ந்து பேணப்பட்டுள்ளமையைக் காட்டுவதோடு பௌத்த விகாரைகளோடும் பிராமணர்கள் அணுக்கமாக இருந்துள்ளமையையும் சிங்கள மன்னர்கள் பிராமணர்களை ஆதரித்துள்ளமையையும் காட்டுகின்றன.
பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் முதலான பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட நிலப்பகுதிகள் பிராமணர்களின் குடியிருப்புப் பகுதியாக விளங்கியுள்ளன. சங்ககாலத்தின் பிற்பகுதியிலிருந்து பிராமணர்களுக்கு நிலம் வழங்குதல் இடம்பெற்றுள்ளதை இலக்கியச் சான்றுகளின்வழி அறியமுடிகிறது. அவ்வழக்கம் பல்லவர் – பாண்டியர் ஆட்சிக்காலத்தில் அதிகரித்துள்ளதுடன் அதன் தொடர்ச்சியாகச் சோழர் மற்றும் பிற்காலப் பாண்டியர் காலத்திலும் அவ்வழமை பெரும்பான்மையாக அதிகரித்துள்ளது.
“பிராமணர்களுக்குப் பல்வேறு காரணங்களுக்காகப் பிரம்மதேயங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊர்ப்பெயரிலும் அரசன், அரசி, அதிகாரி ஆகியோரது இயற்பெயர், பட்டப்பெயர்களிலும், புரவுவரியார் பெயரிலும், தானமாகப் பிறரது பெயரிலும், இறைவன் பெயரிலும், வெற்றியின் பெயரிலும் பிரம்மதேயங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சிலவேளைகளில் பண்டு பிரம்மதேயமாக வழங்கப்பட்ட ஊர்கள் காலப்போக்கில் தமது உரிமையை இழந்து நின்றன. அவை மீண்டும் பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த அரசர்களால் உறுதிசெய்யப்பட்டு மறுபடியும் பிரம்மதேயமாக்கி அளிக்கப்பட்டிருக்கிற வழக்கமும் உள்ளது” (மேலது: 103).
இப்பிரம்மதேயங்கள் யாவும் வளமான பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சோழர் மற்றும் பாண்டியர் காலப் பிரம்மதேயங்களை ஆராயும்போது உணரவியல்கிறது. அவை இடைக்காலத் தமிழகத்தில் அரச நிர்வாகத்தின் முக்கியமான அமைப்பாக இயங்கியுள்ளன.
இலங்கையிலும் பிரம்மதேயங்கள் இருந்திருக்கின்றன என்பதைக் கல்வெட்டுகளில் இருந்து கண்டுகொள்ள முடிகிறது. இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள கல்வெட்டுகளில் 05 கல்வெட்டுகளில் பிரம்மதேயம் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. அக்கல்வெட்டுகள் வருமாறு:
பிரம்மதேயங்கள் பற்றிய கல்வெட்டுகள்
| பிரம்மதேயம் | மன்னன் | ஆண்டு |
| இராஜராஜ சதுர்வேதி மங்கலம் | சோழ இலங்கேஸ்வரன் | பொ.ஆ.1033 |
| விஜயராஜ சதுர்வேதி மங்கலம் | 1 ஆம் விஜயபாகு | பொ.ஆ. 1097 |
| கந்தளாய்ப் பிரம்மதேயம் | ஜயபாகுதேவர் | —- |
| கந்தளாயான விஜயராஜ சதுர்வேதி மங்கலம் | ஜயபாகுதேவர் | பொ.ஆ. 1145 |
| ஜயங்கொண்ட சலாமேக சதுர்வேதி மங்கலம் | ஜயபாகுதேவர் | பொ.ஆ. 1134 |
மேற்படி ஐந்து கல்வெட்டுகளுள் முதல் நான்கும் கந்தளாய்ப் பிரம்மதேயத்தோடு தொடர்புடையனவாகும். அவற்றுள் விஜயபாகு காலத்துக் கல்வெட்டு பளமோட்டையிலும் ஏனைய கல்வெட்டுகள் கந்தளாய்ச் சிவன் கோயிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இச்சாசனக் குறிப்புகளின்படி, கந்தளாயில் இருந்த பிரம்மதேயம் இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என இராஜராஜன் பெயரினால் சோழர் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இப்பிரம்மதேயம் எக்காலத்தில் அமைக்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. சோழ இலங்கேஸ்வரன் என்ற பெயரில் இலங்கையை ஆண்ட சோழ மன்னனின் 10 ஆவது ஆட்சி ஆண்டிலே அக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அம்மன்னனின் இயற்பெயர் தெரியவில்லை. அதனால் கல்வெட்டில் இடம்பெறும் பஞ்சாங்கக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அது 1033 அல்லது 1047 இல் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என கா. இந்திரபாலாவும் (1975), செ. குணசிங்கமும் (1974) கருதுகின்றனர். அக்கருத்துகளை ஏற்றுக்கொண்ட சி. பத்மநாதன் சோழர் காலத்து ஏனைய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு அது 1033 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும் என்றுள்ளார் (பத்மநாதன், 2006: 98). எனவே, அக்காலத்துக்கு முன்னரே அப்பிரம்மதேயம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். முதலாம் இராஜராஜன் காலத்தில் அல்லது அவனுக்குச் சற்றுப் பின்னர் அப்பிரம்மதேயம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
இலங்கையில் சோழராட்சி முடிவடைந்த பின்னர் அப்பிரம்மதேயம் தன் செல்வாக்கை இழக்கவில்லை. சோழரை வெற்றிகொண்ட முதலாம் விஜயபாகுவின் பெயரினால் அப்பிரம்மதேயம் விஜயராஜ சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் மாறுகின்றபோது, ஆட்சிகள் மாறுகின்றபோது பிரம்மதேயங்களின் பெயர்கள் மாற்றமடைதல் தென்னிந்தியாவிலும் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். சான்றாக, “வைகையாற்றின் கரையில் அமைந்த சோழவந்தான் பத்தாம் நூற்றாண்டில் பராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் விளங்கியுள்ளது. அதன்பிறகு சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் பட்டப்பெயரால் சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் மாற்றம் பெற்றுள்ளது. முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர் ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்று இராசராசனது பெயருக்கு மாறியுள்ளது. இடைக்காலப் பாண்டியர் காலத்தில் மீண்டும் இவ்வூர் பாண்டியர் பெயருக்கு, சோழ குழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது” (வேதாசலம், 2019: 107).
விஜயபாகுக்குப் பின்னரும் அப்பிரம்மதேயம் தொடர்ந்து நீடித்துள்ளது என்பதற்கு ஜயபாகு தேவரின் பெயரில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள் சான்றாக அமைகின்றன. கந்தளாயில் அமைந்த பிரம்மதேயம் என்பதால் ‘கந்தளாயான விஜயராஜ சதுர்வேதி மங்கலம்’, ‘கந்தளாய் பிரம்மதேயம்’ எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜயபாகு தேவரின் 35 ஆம் ஆட்சியாண்டு என்பது இரண்டாம் கஜபாகுவின் காலத்துக்குரியதாகும் (பொ.ஆ. 1145). ஆட்சியாண்டு இடம்பெறாத கல்வெட்டும் இரண்டாம் கஜபாகுவின் காலத்துக்கு உரியதாகவே கொள்ளப்படுகிறது.
இலங்கையில் சோழருக்குப் பிந்திய காலக் கல்வெட்டுகளில் ஜயபாகு தேவர் பெயரிலான கல்வெட்டுகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள கல்வெட்டுகளுள் பத்துக் கல்வெட்டுகள் ஜயபாகுவின் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளமையை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளன. இவற்றுடன் ஹிங்குராங்கொடையில் கிடைக்கப்பட்ட கல்வெட்டில் இடம்பெறும் 40 ஆவது ஆட்சி ஆண்டும் ஜயபாகுவைக் குறிக்கிறது (ET: 17). இங்கு ஜயபாகுவின் ஆட்சிக் காலத்துக்குரியனவாகப் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றாலும் அவை எவையுமே அவனுடைய ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்படவில்லை. முதலாம் விஜயபாகுவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜயபாகு (1110) ஒரு வருடம்கூட ஆட்சி செய்யவில்லை. கிடைக்கின்ற சான்றுகளின்படி முதலாம் விஜயபாகுவின் மகனும் முறைப்படி ஆட்சி உரிமைக்கு உரித்துடையவனுமாகிய விக்கிரமபாகு தனது சித்தப்பாவான ஜயபாகுவை எதிர்த்து ஆட்சியை மிகவிரைவில் கைப்பற்றியுள்ளான். அதனால் ஜயபாகுவின் ஆட்சி சிறிது காலமே இடம்பெற்றுள்ளது.
விக்கிரமபாகுவும் (1110 – 1132) அவனுடைய மகன் கஜபாகுவும் (1132 – 1153) நான்கு தசாப்தகாலம் ஆட்சி செலுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் முறைப்படி முடிசூட்டிக்கொள்ளாமல் ஆட்சி நடத்தியுள்ளதால் தம்காலத்துக் கல்வெட்டுகளை முறைப்படி முடிசூட்டிக்கொண்ட ஜயபாகுவின் பெயரில் பொறித்துள்ளனர். அவ்விருவரும் முடிசூட்டிக்கொள்வதற்கான அங்கீகாரம் சங்கத்தார்வழி கிடைக்கப்பெறவில்லை என்பதை வம்ச வரலாற்றுக் கதைகளினூடாக அறியமுடிகிறது. ஜயபாகு தேவரின் 04, 08 ஆகிய ஆட்சி ஆண்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள 03 கல்வெட்டுகள் உறுதியாக விக்கிரமபாகுவின் காலத்துக்கு உரியனவாகும். ஏனைய கல்வெட்டுகளுள் 18, 24, 28, 35, 38, 43 ஆகிய ஆட்சி ஆண்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளவை கஜபாகுவின் காலத்துக்குரியனவாகும். ஜயவாகு தேவரின் 12 ஆம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ள பெரியமடு கோடலிப்பறிச்சான் கல்வெட்டு விக்கிரமபாகு காலத்துக்குரியதா, கஜபாகு மன்னன் காலத்துக்கு உரியதா என்பதை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.
கந்தளாயில் கிடைத்த நிஸ்ஸங்க மல்லனின் (பொ.ஆ.1187-1196) கல்லாசன சிங்களக் கல்வெட்டில் ‘சதுர்வேத பிரம்மபுர’ எனக் கந்தளாய்ச் சதுர்வேதி மங்கலம் குறிப்பிடப்பட்டுள்ளது (EZ. 2: 285-290). சதுர்வேதி மங்கலத்தில் அமைக்கப்பட்ட பார்வதி சத்திரத்திலிருந்து ஆடல், பாடல், இசை முதலானவற்றை மன்னன் கண்டு களித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது கந்தளாய்ப் பிரம்மதேயம் இரண்டு நூற்றாண்டுகளாகப் பெற்றிருந்த தொடர் செல்வாக்கைக் காட்டுகின்றன.
மஹாகிரித்தேகமவில் கிடைத்த கல்வெட்டில் ஜயங்கொண்ட சலாமேக சதுர்வேதி மங்கலம் என்ற பிரம்மதேயம் பற்றிய பதிவு இடம்பெற்றுள்ளது. இது ஜயவாகுதேவரின் 24 ஆம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டதாகும். அதன்படி இது, இரண்டாம் கஜபாகுவின் இரண்டாவது ஆட்சி ஆண்டுக்குரிய கல்வெட்டாகும் (பொ.ஆ. 1134). இப்பிரம்மதேயம் சோழர் காலத்திலிருந்து தொடர்வதா, பின்னர் அமைக்கப்பட்டதா? என்பதை அறியமுடியவில்லை.
இக்கல்வெட்டுகளின்படி, கந்தளாய்ப் பிரம்மதேயம், ஜயங்கொண்ட சலாமேக சதுர்வேதி மங்கலம் என இரண்டு பிரம்மதேயங்கள் இடைக்கால இலங்கையில் சிறப்புற்றிருந்துள்ளன என்பதைக் கண்டுகொள்ள முடிகிறது. இவற்றையொத்த பிரம்மதேயங்கள் இன்னும் அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதைக் கல்வெட்டுகளிலும் பிறசான்றுகளிலும் இடம்பெறுகின்ற பிராமணர் பற்றிய குறிப்புகளிலிருந்து ஊகிக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, 14 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த இபுன் பதூதாவின் தீனூர் (தேனுவரையைத் தேனூர் என்றும் அக்கோயிலின் மூலமூர்த்தியைத் தீனூராண்டவன் என்றும் இபுன் பதூதா குறிப்பிட்டுள்ளார்.) பற்றிய குறிப்பில் இடம்பெறும் “அந்தக் கோயிலில் பார்ப்பனரும் யோகியரும் ஆயிரம் பேர் இருக்கின்றனர்” (நீலகண்ட சாஸ்திரி, 2022: 460) என்ற செய்தியைக் கூறலாம்.
சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கல்வெட்டிலிருந்து கந்தளாய்ப் பிரம்மதேயம் குறித்த சில முக்கியமான தகவல்களை அறிந்துகொள்ள முடிகின்றது. அப்பிரம்மதேயமானது, “ராஜேந்திரசோழ வளநாட்டு ராஜவிச்சாத்திர வளநாட்டு ப்ரஹ்மதேசம்” எனச் சுட்டப்படுவதிலிருந்து ராஜேந்திர சோழ வளநாட்டு ராஜவிச்சாத்திர வளநாட்டு எனும் வளநாட்டுப் பிரிவுக்குள் அப்பிரம்மதேயம் அமைந்திருந்துள்ளது. அவ்வளநாடு ராஜேந்திரசோழ வளநாடு, ராஜவிச்சாத்திர வளநாடு என இரு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. பிரம்மதேயங்களானவை சோழ அரசின் நிர்வாகப் பிரிவின் மண்டலங்களுக்கு அடுத்த பிரிவாக விளங்கிய வளநாடு என்ற பிரிவினுள் அடக்கப்பட்டிருந்தன. அதற்கிணங்க இலங்கையில் இருந்த பிரம்மதேயமும் வளநாடு என்ற பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
இக்கல்வெட்டில் ‘பெருங்குறி பெருமக்களோம்’ என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளது. பெருங்குறி பெருமக்கள் என்பது பிராமண ஊர்ச்சபைக் கூட்ட உறுப்பினர்களைக் குறிக்கும் தொடராகும் (சுப்பராயலு, 2002: 450) பிரம்மதேயங்களில் நிர்வாகப் பொறுப்பைச் சபை என்ற அமைப்பு மேற்கொண்டுள்ளது. “அச்சபையில் நிலவுடைமை கொண்ட பிராமணர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்” (வேதாசலம், 2019: 123). அச்சபையின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய கூட்டமே பெருங்குறி பெருமக்கள் என அழைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இராஜராஜ சதுர்வேதி மங்கலம் நன்கு வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்துள்ளது. அது தென்னிந்தியப் பிரம்மதேயங்களைப் போலவே நிர்வாக முறையினைக் கொண்டிருந்துள்ளது.
பெருங்குறி பெருமக்களோம் எனத் தன்மைப் பன்மையில் கல்வெட்டில் இடம்பெறுவதால், இக்கல்வெட்டு பெருங்குறி மக்களால் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் ஒன்றுகூடி ஏதோ முடிவெடுத்து அதனைக் கல்வெட்டாகப் பொறித்துள்ளனர். ஆனால், கல்வெட்டுச் சிதைவடைந்துள்ளதால் அவர்கள் எடுத்த முடிவு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. கல்வெட்டில் இடம்பெறுகின்ற, “நம்மூர் தண்டுகிற முத்தங்கை கோயில்மானி…, காசு மூன்று இக்காசு மூன்றில் இரட்டிப்பான காசு ஆறுக்கு கல்லூர் நீர்நிலத்தில் வாசதேவ…, விக்கிரமசோழ வாய்க்கால், இரண்டாங்கண்ணாற்று மூன்றாஞ் சதுரத்து நீர்நிலம்” முதலான தொடர்களைக்கொண்டு அவர்கள் எடுத்த முடிவினை ஊகிக்க முடிகிறது. அதன்படி, வாய்க்கால், கண்ணாறு, நீர்நிலம் முதலானவை தொடர்பான வரிவசூலிப்பு குறித்த ஏற்பாடாக அம்முடிவு இருக்கலாம்.
பிரம்மதேயங்கள் வளமான பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகள் ஆறு, வாய்க்கால், நீர்நிலம் முதலானவற்றைக் கொண்டவையாக விளங்கியுள்ளன. தென்னிந்தியக் கல்வெட்டுச் சான்றுகளைக் காணும்போது, “பிரம்மதேயங்களில் வயல்களும் நீர்ப்பாயும் கால்களும் நீரெடுத்துவரும் கால்களும் வரையறுக்கப்பட்டு அவற்றிற்கு எண்களும் இடப்பட்டு முறையே பிலாறு, வதி, கண்ணாறு, நாராசம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. இதனால் புதிதாகத் திருத்தியமைக்கப்பட்ட திட்டமிட்ட நீர்ப்பாசன முறையைப் பிரம்மதேயங்கள் கொண்டிருந்துள்ளன. மேலும், பிரம்மதேயத்தில் இருந்த நிலங்களும் பல சதுரங்களாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டுள்ளன” (மேலது: 115). அந்நிலத்தில் விவசாயத்தினை மேற்கொள்வதற்காக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததுடன் அவற்றைப் அப்பிரம்மதேயத்தின் சபையும், சபை உறுப்பினர்கள் யாவரும் கூடிய பெருங்குறிப் பெருமக்களும் நிர்வகித்துள்ளனர். இந்தமுறைமை கந்தளாய்ப் பிரம்மதேயத்திலும் பின்பற்றியுள்ளமைக்கு இக்கல்வெட்டுச் சான்றாக அமைந்துள்ளது. வாசுதேவ வாய்க்கால், விக்கிரமசோழ வாய்க்கால், இரண்டாங்கண்ணாறு, மூன்றாங்கண்ணாறு, சதுரத்து நீர் நிலம், பெருங்குறி பெருமக்கள் முதலானவை அதற்குச் சான்றாக அமைகின்றன. இந்த நீர்ப்பாசன வசதிகள் பிரம்மதேயம் உருவாக்கப்பட்ட காலத்தில் ஏற்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். இப்பிரம்மதேயம் குறித்து சோழருக்கு முற்பட்ட காலச் சான்றுகள் எவையும் கிடைக்கப்பெறாததாலும் அதன் நடைமுறை சோழரின் தென்னிந்தியப் பிரம்மதேய முறைமையை ஒத்திருப்பதாலும் சோழர்காலத்தில் தான் கந்தளாய்ப் பிரம்மதேயம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
சோழ இலங்கேஸ்வரனின் கல்வெட்டுக்குப் பின்னர் 64 ஆண்டுகள் கழித்து, கந்தளாய்ப் பிரம்மதேயம் பற்றிய முதலாம் விஜயபாகு காலத்துக் கல்வெட்டு கிடைத்துள்ளது. நங்கைசானி என்ற பெண், காராம்பிச் செட்டு யக்ஞக்ரமவித்தன் என்ற இறந்துபோன தன் கணவனின் நினைவாகக் கொடுத்த கொடை இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. அப்பிராமணன் கந்தளாய்ப் பிரம்மதேயத்தில் வாழ்ந்தவன் என்ற குறிப்பும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. சோழர் ஆட்சி நிறைவுற்று 27 ஆண்டுகளின் பின்னர் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின்படி, வளநாடு முதலான சோழரின் நிர்வாக முறைமை கைவிடப்பட்டுள்ளமையைக் கண்டுகொள்ள முடிகிறது. நிர்வாகப் பிரிவுகள் பற்றிய எந்தக்குறிப்பும் கல்வெட்டில் இல்லை. அத்துடன் சோழ இலங்கேஸ்வரன் கல்வெட்டில் கோயில் பற்றிய நேரடிக் குறிப்பு எதுவும் இல்லை. விஜயபாகுவின் கல்வெட்டில் விஜயராஜ ஈஸ்வரம் எனக் கோயிலின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. முற்காலத்தில் இருந்த கோயில் விஜயபாகுவின் பெயரினால் அழைக்கப்பட்டுள்ளது. நங்கைசானி ஆறு கழஞ்சி பொன்னாலான முடி, மூன்று கழஞ்சி பொன்னாலான மாலை ஆகியவற்றுடன் சந்தி விளக்கு ஒன்றுக்குக் காசு ஒன்று, திருநந்தவனம் செய்வானுக்குக் காசு எட்டு, பொன் அழிவு சோர்வுக்குக் காசு மூன்று, தேவரடியார் எழுவருக்கு 23 காசு என 35 காசினைக் கொடையாக வழங்கியுள்ளாள். இக்காசினை முதலீடாகக்கொண்டு அதிலிருந்து வரும் வட்டியைக்கொண்டு அக்கொடைகளை நிறைவேற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இக்கொடைகளை அவதானிக்கும்போது, பிரம்மதேயத்தில் இருந்த பிராமணர்களுள் மிகுந்த பொருளாதார வளமுள்ளவர்களும் இருந்துள்ளனர் என்பதைக் கண்டுகொள்ள முடிகிறது.
கந்தளாய்ப் பிரம்மதேயம் பற்றிய ஏனைய இரு கல்வெட்டுகளும் கஜபாகுவின் காலத்துக்குரியவையாகும். அதில் ஒரு கல்வெட்டு விஜயபாகுவின் கல்வெட்டு பொறிக்கப்பட்டு, 48 ஆண்டுகளுக்குப் பின்னர் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில், மன்னர் விஜயராஜ, சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ கைலாசமான விஜயராஜ ஈஸ்வரத்துக்குக் காசு பத்துக் கொடையளித்துள்ளார். இரண்டாவது கல்வெட்டில் ஆட்சி ஆண்டு இடம்பெறவில்லை. அது கந்தளாய்ப் பிரம்மதேயத்தின் எல்லை அளவிடப்பட்டு எல்லைக்கல் நாட்டிய செய்தியைப் பதிவு செய்துள்ளது. யானையை நடக்கவிட்டு அதனை அளவாகக்கொண்டு இடையர் கல் என்ற இடத்தில் ஊரார் கூடி எல்லைக்கல் நாட்டியுள்ளனர். நூறாண்டுக்கு மேல் வழக்கில் இருந்த பிரம்மதேயத்தின் எல்லை தொடர்பாகச் சிக்கல் ஏற்பட்டதால் இந்த எல்லைக்கல் நாட்டப்பட்டிருக்க வேண்டும்.
பிரம்மதேயங்கள் வளமான பகுதிகளில் வழங்கப்பட்டதாலும் அப்பகுதிகளில் இருந்த ஏனைய குடியினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அந்நிலம் பிராமணர்களுக்கு மட்டும் உரித்தானவையாக நிர்ணயிக்கப்பட்டதாலும் காலம் செல்லச்செல்ல பிரம்மதேயங்களின் எல்லைகள் தொடர்பாகச் சர்ச்சைகள் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, தளவாய்புரம் செப்பேட்டின் சமஸ்கிருதப் பகுதியில் இடம்பெறும், “ஆசிநாட்டில் இருந்த திருமங்கலம் என்ற ஊரைப் பன்னிரு பிராமணர்களுக்குப் பாண்டிய மன்னன் ஒருவன் தானமாக வழங்கியிருந்தான். அந்நிலத்தின் ஒரு பகுதியைப் பிற்காலத்தில் சூத்திரர்கள் (வேளான் குடிகள்) ஆக்கிரமித்து மதுரதநல்லூர் எனப் பெயரிட்டுக் குடியேறினார்கள்” (மேலது: 108) என்ற செய்தியைக் குறிப்பிடலாம். இவ்வாறு கந்தளாய்ப் பிரம்மதேயத்தின் எல்லை தொடர்பிலும் ஏதோ சர்ச்சை தோன்றியுள்ளது. அதனாலே மன்னருக்கு அந்நிகழ்வு கொண்டுசெல்லப்பட்டு எல்லைக்கல் நாட்டப்பட்டுள்ளது எனலாம்.
மகாகிரித்தேகம கல்வெட்டும் கஜபாகுவின் காலத்துக்கு உரியதாகும். கஜபாகு மன்னன் பிராமணர்களை மிகுதியாகப் போற்றியுள்ளதை அவனுடைய காலத்துக்குரிய பிரம்மதேயம் பற்றிய 03 கல்வெட்டுகளும் காட்டுகின்றன. இக்கல்வெட்டு நிலக்கொடை பற்றியதாகும். “ஜயங்கொண்ட சலாமேகச் சதுர்வேதி மங்கலத்திழவுபட்ட வயலும் யத்தாலையும் வல்லபர் பக்கம் நின்றும் வாங்கிப் பிராமணற்கே தானம் பண்ணி அருளினாரிவர்கள்” என்பது கல்வெட்டு வாசகமாகும். இதில் கொடை பெற்றவர் பிராமணர். கொடை வழங்கியவர் பெயர் நேரடியாக இடம்பெறவில்லை. ஆனால், கல்வெட்டில் இடம்பெறும் ‘அருளினாரிவர்கள்’ என்ற தொடரால் கொடையை மன்னனே வழங்கியுள்ளான் என்பது தெரியவருகிறது. அத்துடன் வழங்கப்பட்ட நிலமானது முன்னர் பிரம்மதேயத்துக்கு உரியதாகவே இருந்துள்ளது. ‘சதுர்வேதி மங்கலத்திழவுபட்ட, பிராமணற்கே’ முதலான சொற்கள் அதனை வெளிப்படுத்தி நிற்கின்றன. அதனால் ஏதோ காரணத்தினால் பிரம்மதேயத்துக்குரிய நிலம் பறிபோய் உள்ளது. அதனை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு இடம்பெற்றமையைக் கல்வெட்டு கூறுகிறது.
‘வல்லபர்’ பக்கம் நின்று நிலம் வாங்கிக் கொடுக்கப்பட்டதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இங்கு வல்லபர் என்பதைத் தனிநபர் ஒருவரின் பெயராக சி. பத்மநாதன் கருதுவார் (2006: 142). கல்வெட்டானது ‘வல்லவரையன் சூழறவு’ என்று முடிவடைகிறது. இங்கு வல்லவரையன் என்பது விநாயகரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு இரண்டு இடத்திலும் வல்லவர் என்ற பெயர் வருவதால், முன்னர் தனிநபராகக் கூறப்படும் வல்லபர், விநாயகராகவும் இருக்கலாம். பிரம்மதேயத்துக்குரிய நிலம் ஏதோ காரணத்தினால் விநாயகர் கோயிலுக்கு உரியதாக மாறியிருக்கலாம். அதனை மன்னர் மீண்டும் பிராமணர்களுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கலாம்.
இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகளில் பிராமணர்கள், பிரம்மதேயம் குறித்து இடம்பெறுகின்ற செய்திகளில் இருந்து, இலங்கையில் பண்டையகாலத்தில் பிராமணர்கள் செல்வாக்கு பெற்றிருந்ததைப் போலவே இடைக்காலத்திலும் அவர்கள் செல்வாக்குடன் விளங்கியுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இலங்கையைச் சோழர்கள் ஆட்சி செய்தபோதும் அவர்களுக்குப் பிந்தைய சிங்கள மன்னர் ஆட்சிக்காலத்திலும் பிராமணர்கள் நன்கு ஆதரிக்கப்பட்டுள்ளனர். இந்துக்கோயில்களில் மட்டுமல்லாது பௌத்த விகாரைகளிலும் பிராமணர்களுக்கு முதன்மையளிக்கப்பட்டுள்ளன. இவை இடைக்கால இலங்கையின் சமூக, சமய வாழ்வில் பிராமணர்கள் பெற்ற முதன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன.
உசாத்துணை நூல்கள்
- Gunasingam, S., (1974) Two Inscriptions of Cola Ilankesvara deva, Trincomalee Inscriptions, Series No.1, Peradeniya.
- Indrapala, K., (1971) Epigraphia Tamilica Volume I part I, A journal of Tamil Epigraphy, Jaffna: Archeological Society.
- Wickremasinghe, D.M.D.Z., (1928) Epigraphia Zeylanica Vol.2, London: Oxford University press.
- இந்திரபாலா, கா., (1975) “கந்தளாயிற் கண்டுபிடிக்கப்பட்ட சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கல்வெட்டு”, பாவலர் துரையப்பாப்பிள்ளை நூற்றாண்டு விழா மலர்.
- சுப்பராயலு, எ., (2002) தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி I & II, சென்னை: சாந்தி சாதனா.
- பத்மநாதன், சி., (2006) இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கொழும்பு: இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
- நீலகண்டசாஸ்திரி, கே.ஏ., (2022) தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் (மீள் அச்சு), மு.ரா. பெருமாள் முதலியார் (மொ.பெ.), தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
- வேதாசலம், வெ., (2019) பாண்டிநாட்டு ஊர்களின் வரலாறு, தஞ்சாவூர்: தனலட்சுமி பதிப்பகம்.



