கூத்தின் நிலைபேற்றுக்கான பிரதானமான காரணங்களைத் தந்து, அவற்றுள் ஐந்தினைச் சென்றமுறை விளக்கி இருந்தேன். இன்னும் சில காரணங்களும் உண்டு. அக்காரணங்களையும் இங்கு பார்ப்போம்.
மீதிக் காரணங்களை இந்த கட்டுரையில் பின்வருமாறு நோக்குவோம்:
- திருமணத்திற்கு மாப்பிள்ளைகளை, பெண்களைக் கண்டுபிடித்தல்
- குழந்தைகளின் கும்மாளமும் மகிழ்ச்சியும்
- பெற்றோர்கள் அடையும் பெரு மகிழ்ச்சி
- ஊரிலே அனைவரையும் இணைத்துச் செல்லும் பாங்கு
- உருவாக்கலில் முழு ஊரும் பங்கு கொள்ளுதலும் உள்ளூர் அறிவும்
- குடும்ப, சாதி, மத, பிரதேச, இன அடையாளமாக அது அடையாளப்படுத்தப்படுதல்
6. திருமணத்திற்கு மாப்பிள்ளைகளை, பெண் பிள்ளைகளைக் கண்டுபிடித்தல்
தமிழரிடையே மாப்பிள்ளை, பெண் தெரிவு பல வகைகளில் நடைபெறுவது மரபு. தமிழரின் திருமண முறைகள் பற்றி பலர் ஆராய்ந்து எழுதியும் உள்ளனர். இந்த மரபில் கூத்தரங்கின் பணியாது? கூத்தரங்கு வயதுக்கு வந்த மாப்பிள்ளையையும் பெண்ணையும் சந்திக்க வைக்கும் ஓர் இடமாகச் செயற்படுவதுடன், பெண் வீட்டார் சிறந்த மாப்பிள்ளையை கண்டுபிடிப்பதற்கான இடமாகவும் அமைந்துவிடுவது உண்டு.
மட்டக்களப்புக் கூத்துப் பற்றி எழுதிய பலர், இச்சமூகப் பண்பு பற்றி எழுதியுள்ளனர். ஒரு பெண்ணோ, ஓர் ஆணோ இயல்பாகத் தோன்றுவதை விட, வேடம் அணிந்து தோன்றுவது கவர்ச்சியைக் கொடுக்கும். கூத்திலே இளைஞர்கள், இளம் வயதுப் பாத்திரங்களை ஏற்று ஆடுவர். ஒருவனது ஆட்டக் கவர்ச்சியும், குரலும், ஒப்பனையும் அவனது பாத்திரம் பற்றிய ஓர் அபிப்பிராயத்தினை கூத்துப் பார்க்கும் பெண்ணின் பெற்றோருக்கு ஏற்படுத்தும். அவர்கள் அவன் மீது ஒரு புதுக்கவர்ச்சி கொண்டு, குறிப்பிட்ட ஆடவரை தம் பிள்ளைக்குக் கல்யாணம் பேசலும் நடைபெறும். இதற்கும் அப்பால் சிறந்த கூத்து ஆடிய ஆடவனிடம் தன் மனதைப் பறிகொடுத்த பெண்களும் உண்டு. இவர்களுக்கிடையே ஏற்படும் காதல் தொடர்பை, பெற்றோருக்கு உரைப்பவளாகப் பெண்ணின் தோழி அமைவாள். இவ்வகையில் ஒரு காலத்தில் கூத்தரங்கு இச்சமூகக் கடமையை ஆற்றியது.

7. குழந்தைகளின் கும்மாளமும் மகிழ்ச்சியும்
ஆடலும் பாடலும் குழந்தைகளைக் கவருபவை. இவ்வகையில் ஊரில் கூத்து ஆடத் தொடங்கினால் முதலில் மகிழ்பவர்கள் குழந்தைகளே. கூத்து ஆடுதல் கண்டு மகிழ்தலும், கூத்தரைப்போல வீட்டில் ஆடிக்காட்டுவதும், பாடிக்காட்டுவதும், அவர் திறன் கண்டு பெற்றோரும் மற்றோரும் மகிழ்ந்து பாராட்டுகையில், அப்பாராட்டுகளால் பெறும் பேரின்பமும், ‘தானும் ஒரு ஆளாகச் சமூகத்தில் ஏற்கப்படுகிறேன்’ என்ற உள இன்பமும் குழந்தைக்குக் கிடைக்கிறது. பாலர் பாடசாலைகள் தோற்றம் பெறாத அக்காலத்தில், பாலர் பாடசாலையின் பங்கினைக் கூத்து ஆற்றியது. கூத்தில் வரும் அற, ஒழுக்க, நீதிக் கருத்துகள் பிஞ்சு மனதில் சிலையாக எழுத்தாய்ப் பதிந்தன. இதனை நான் என் குழந்தைப்பருவ அனுபவம் மூலமாகப் பெற்றிருக்கிறேன்.
8. பெற்றோர்கள் அடையும் பெரு மகிழ்ச்சி
குழந்தைகள் அடையும் உற்சாகமும் பெரு மகிழ்ச்சியும் பெற்றோரையும் பற்றிக் கொள்ளும். தம் மக்கள் மகிழ்வது கண்டு தாமும் இன்புறுவர் பெற்றோர். தம் மக்கள் கூத்தில் பங்கு கொண்டால் ஊருக்குச் சொல்வதிலிருந்து, அவன் கூத்து ஆடி முடிய, அவனை உரலில் இருத்தி, அவன் தலையில் பலகாரம் சொரிந்த கதைகளையும் நான் கள ஆய்வில் கேட்டுள்ளேன்.
9. ஊரிலே அனைவரையும் இணைத்துச் செல்லும் பாங்கு
தன்னை உருவாக்கிக்கொள்ளும் வகையில் கூத்து சமூக ஒருமைப்பாட்டைப் பேணுகின்றது எனலாம். இங்கே அது ஊரார் அனைவரையும் அணைத்துச் செல்லும் பண்பினையும் பெற்றுவிடுகிறது.
அதனை விபரமாகப் பார்ப்போம். முன்பு ஒரு கூத்து உருவாவதற்கு 5 தொடக்கம் 8 மாதங்கள் வரை எடுத்தது. கூத்து உருவாக்கமே ஓர் ஒழுங்கான முறையில் நடைபெறுவதையும், இவ்வுருவாக்கலில் ஒரு கிராமத்தில் வாழும் அனைவரும், ஏனைய கிராமத்தில் வாழும் அதே சாதியினரும் ஒன்றுபடுவதையும் காண முடிகிறது.
கூத்து பின்வரும் படிநிலைகளுக்கூடாக உருவாகிறது:
- ஊர் கூடுதலும் அண்ணாவியார் கதை தெரிதலும்
- ஊருக்குச் சொல்லுதல்
- சட்டம் கொடுத்தல்
- தினக்கூத்து
- சதங்கை அணிதல்
- கிழமைக்கூத்து
- அடுக்குப் பார்த்தல்
- அரங்கேற்றம்
- வீட்டுக்கு வீடு ஆடுதல்
- 2 ஆம் அரங்கேற்றம்
என்றொரு படிமுறை வளர்ச்சி, கூத்து உருவாக்கலில் முற்காலத்தில் இருந்தது. இன்று அந்த முறை ஓரளவே கடைப்பிடிக்கப்படுகின்றதாயினும், அது பற்றிய பழைய நினைவுகள் கிராமிய மக்கள் மனதில் இன்றும் உண்டு.
அ) ஊர் கூடுதலும் அண்ணாவியார் கதை தெரிதலும்
ஊரில் கூத்தாட விரும்புவோர் சேர்ந்து சிலரை முகாமையாளர்களாக நியமித்து, தமக்குள் அல்லது வெளியே ஓர் அண்ணாவியாரைத் தெரிவு செய்வதுடன், எந்தக் கதையை ஆடுவது என்று தெரிவு செய்தலும் முதலாவது நிகழும். இங்கே ஊர் முழுவதையும் கூத்து மூலம் இணைக்க எண்ணும் ஆரம்ப முயற்சியைக் காண்கிறோம்.
ஆ) ஊருக்குச் சொல்லுதல்
கூத்தினை நாம் பழக எண்ணியுள்ளோம் என்றும், இதில் சேர்ந்து ஆட விரும்புவோர் கூத்தில் பங்கு கொள்ளலாம் எனவும், வாய்மூலமோ, பறையன் மூலமோ ஊருக்கு அறிவித்தல். இதன்மூலம் ஊரின் சம்மதத்துடன் கூத்து ஆடப்படுகிறது என்ற பிரமை தோற்றுவிக்கப்படுவதுடன், ஊரையும் கூத்துள் இழுக்கும் முயற்சி நடைபெறுவதனையும் காணலாம்.
இ) சட்டம் கொடுத்தல்
கூத்தாட விரும்பும் இளைஞர்களின் குரல் வளம், தோற்றப் பொலிவினைப் பார்த்து, அண்ணாவியார் ஊர் மக்கள் முன்னிலையில் கூத்தரைத் தெரிவு செய்வார். இது ஒரு சடங்காகவே நடைபெறும். தெரிவு செய்யப்பட்ட கூத்தருக்கு, அவர் ஆடவேண்டிய பாத்திரத்தின் பெயரை எழுதிக் கொடுத்தலே ‘சட்டம் கொடுத்தல்’ ஆகும்.
ஈ) தினக் கூத்து
பழகுவதற்குரிய அரங்கை அமைத்து, தினமும் மாலை 8 அல்லது 4 மணி நேரம் கூத்துப் பழகுதல் நடைபெறும். இத் தினக்கூத்தை கிராம மக்களிற் பெரும்பாலோர் தம் வேலைகளை ஏற்கனவே முடித்துவிட்டு வந்திருந்து பார்த்து மகிழ்வர். சிலர் கூத்துப் பழகுபவர்களைவிட ஆடல், பாடல்களில் தேர்ச்சி அடைவதும் உண்டு. இத் தினக்கூத்தில் கிராமத்தவர்களில் சிலர் கடலை, கிழங்கு போன்ற சிறு பொருட்களை விற்றுச் சம்பாதிப்பதும் உண்டு. தினக்கூத்து கிராம மக்களுக்கு தினமும் இரவில் ஓய்வு நேர இன்பத்தை அளிப்பதால், கிராம மக்களைத் தினமும் ஓரிடத்தில் ஒன்றிணைப்பதுடன், அவர்களைக் களிப்பிலும் ஆழ்த்துகிறது.
ஈ. சதங்கை அணிதல்
சதங்கை, கூத்தின் முக்கிய அம்சமாகும். முதலில் சதங்கை அணிந்து கொண்டு நடப்பதற்குக் கூத்தர் பயிற்சி பெறவேண்டும். ஆடுவதற்கு இன்னும் பயிற்சி தேவை. இதனால் சதங்கை அணிதலை ஒரு பெரும் விழாவாகவே நடத்துவர். பழகத் தொடங்கி 3, 4 மாதங்களுக்குப் பின்னரே இவ்விழா நடைபெறும். அண்ணாவியாரே சதங்கையைக் கூத்தரின் காலில் அணிவிப்பார். இது ஒரு சமயச் சடங்கு போன்றே நிகழும். கூத்தாடும் சாதியினர், கிராமத்திலுள்ள தமது உறவினருக்கும், வெளிக்கிராமத்திலுள்ள தமது சாதியினருக்கும் அழைப்போ, செய்தியோ அனுப்புவர். கூத்தரின் உறவினர் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொள்வர். இதனால் உறவுமுறைகள் இறுக்கமாகின்றன. பல்வேறு வேலைகள் காரணமாகச் சந்திக்க முடியாத இரண்டு, மூன்று கிராம மக்கள், பகலிலே சந்தித்து அளவளாவ முடிகிறது. இதனால் இச்சதங்கை அணிவிழா முழுக் கிராமத்தினதும் விழாவாகிறது.
ஊ) கிழமைக் கூத்து
சதங்கை அணிந்து, கிழமைக்கு ஒரு தடவை பகல் முழுவதும் ஆடப்படும் கூத்து ‘கிழமைக்கூத்து’ எனப்படும். உள்ளூரவரும், வெளியூரவரும் (சொந்தக்காரர்) இதில் கலந்து, இதற்கென வந்து பாட்டுப் பாடி கூத்தரை ஊக்குவித்து, பின்னேரம் அல்லது மறுநாள் மீள்வர். கிழமைக்கு ஒரு தடவை கிராமம் முழுமைக்கும் ஒரு பகல் முழுவதும் இன்பமளிப்பதனாலும், கிழமைக்கு ஒரு தடவை அயலூர்ச் சொந்தக்காரர்களை இணைப்பதனாலும், இது அனைவராலும் விரும்பப்படுகிறது.
எ) அடுக்குப் பார்த்தல்
வெள்ளுடுப்பு நிலையில், ஒரு முழு இரவும் ஒத்திகை பார்ப்பதே ‘அடுக்குப் பார்த்தல்’ என அழைக்கப்படுகிறது. ‘ஆயத்தம் செய்தல்’ என்பது இதன் அர்த்தம். அடுக்குப் பார்த்தலின்போது, ஊரின் சில பிரமுகர்கள், கூத்தாடி அனுபவம் பெற்றோர், அண்ணாவியாருக்கு நண்பர்களான சக அண்ணாவியார்கள் வந்திருந்து கூத்தைப் பார்த்து, அண்ணாவியாருக்குச் சில அபிப்பிராயங்களைத் தெரிவிப்பர். முழு ஊரும் அன்று வெள்ளுடுப்பு நிலையில் கூத்தைக் கண்டுகளிக்கும். இதுவும் ஒரு கிராம விழாவே. அடுக்குப் பார்த்த பிறகு, கூத்தாடப்படும் ஊரில் ஒரு கூட்டம் கூடப்பட்டு, பொது மக்களில் முக்கியமான சிலர் வரவழைக்கப்படுவர். கூத்தை நடத்த, இவர்களில் சிலர் தெரிவு செய்யப்படுவர். இவர்கள் ‘முகாமையாளர்’ என அழைக்கப்படுவர். ஊருக்குள் கலகம் வராத வகையிலும், ஊரில் சாதியின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையிலும், கூத்தினை நடத்தி முடிக்கும் பொறுப்பு, ஊரால் தெரிவுசெய்யப்பட்ட முகாமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்நிலையில், தனிப்பட்ட சிலர் ஆடும் கூத்து என்ற நிலை மாறி, ஊர் அல்லது சாதி முழுவதற்குமான கூத்து என்ற நிலை அடையப்படுகின்றது.
ஏ) அரங்கேற்றம்
அலங்கார உடை அணிந்து, உயர்ந்த அலங்காரமான மேடையில் விடிய விடிய ஆடப்படுவதே ‘அரங்கேற்றம்’ ஆகும். அரங்கேற்றம், அக்கூத்தினை ஆடும் ஊரின் அல்லது சாதியின் பெருவிழாவாக அமைகிறது. மேடை அமைத்தலிலும், இடத்தை அழகுபடுத்தலிலும், ஊரிலுள்ளோர் அழைப்பின்றி வந்து தம் உடலுழைப்பை நல்குவர். வெளியூரார் வரவால் ஊர் விழாக்கோலம் பூண்டிருக்கும். எல்லா வீடுகளிலும், வருகை தரும் தம் உறவினருக்காக விருந்துகள் நடைபெறும். அயலூர் உறவினர், சதங்கை அணிதலின்போது வந்து சிறப்பித்ததுபோல், இச்சந்தர்ப்பத்திலும் வந்து சிறப்பிப்பர். குடிமக்களும் (பறையர், வண்ணார், அம்பட்டர்) தம் கடமைகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவர். அவ்வூர் இளைஞர்களும், யுவதிகளும் இப்பெருவிழாவைப் பெரு விருப்புடன் எதிர்நோக்குவர். ஊரிலுள்ள சிறு வியாபாரிகள், மந்திரவாதிகள் அனைவரும் இவ்விழாவால் பயனடைகின்றனர். இது கிராம விழாவாகவே நடைபெறுகிறது.

ஒ) வீட்டுக்கு வீடு ஆடுதல்
விடிய விடிய ஆடி, முதலாம் அரங்கேற்றத்தை முடித்ததும் கூத்தர்கள் தமது வீட்டிற்குச் செல்வதில்லை. மாறாக அன்று பகல் முழுவதும் கிராமத்திலுள்ள வீடு முழுவதிலும் வீட்டுக்கு வீடு ஆடச் செல்லுவர். வீட்டுக்கு வீடு ஆடுவதனால் பின்வரும் சமூகத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன:
- கூத்துப் பார்க்கமுடியாத நிலையிலுள்ளோருக்கு ஒரு வாய்ப்பளித்தல்.
- குடும்பச் சண்டைகளைத் தீர்த்தல்.
- ஊரோடு ஒட்டாமல் இருப்பவர் வீட்டுக்கு ஆடப்போவதன் மூலம் ஊர் இயக்கத்திற்குள் அவரை இழுத்தல்.
- ஊர்மக்கள் அளிக்கும் உணவு, குடி பானங்களை கூத்தர் நேரடியாகப் பெறல்.
- அண்ணாவியாருக்கு மேலதிக பணம் சேர்த்தல்.
- விழாவை ஓரிரவோடு முடிக்க விருப்பமின்மை.
இவற்றின்மூலம் ஊரின் ஒற்றுமையுணர்வு மேலும் மேலும் இறுக்கப்படுவதைக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு ஆடுவதற்கு இன்னொரு முக்கிய சமூகக் காரணமும் உள்ளது. சமூகத்தின் அல்லது ஊரில் மேனிலையிலிருந்து கீழ்நிலைக்கு, வரிசைக் கிரமத்திலுள்ள சமூக அதிகார அடைவின்படியே (Hierarchy) வீட்டைத் தெரிந்து கூத்தர் ஆடுவர். சில கிராமப்புறங்களில், இன்ன குடியினர் வீட்டில் முதலில், இன்ன குடியினர் வீட்டில் இரண்டாவது என்ற ஒழுங்குமுறை உண்டு. சில இடங்களில் கோயில் வகுத்த சமூக அதிகார அடைவின்படி வண்ணக்கர், ஊர்ப்பணக்காரர், விதானையார் என்ற வரிசையில் ஆடுவர். ஒருவகையில் இதன்மூலம் சமூக அதிகார அடைவு (Social Hierarchy) நிலைநிறுத்தப்படுகிறது எனலாம்.
ஓ) 2 ஆம் அரங்கேற்றம்
முதலாவது அரங்கேற்றம் பார்க்க வாய்ப்பில்லாதோருக்கு வாய்ப்பு வழங்கவும், பார்வையாளரின் பரிசு வழங்கல் என்ற இடையீடின்றிக் கூத்தை நடத்தவும் 2 ஆம் அரங்கேற்றம் நடைபெறும். 2 ஆம் அரங்கேற்றத்திற்தான் கூத்துச் சிறக்கும் என்பது பலரது அபிப்பிராயம். கிராம மக்களுக்கு இதுவும் ஒரு விழாவே. 2 ஆம் அரங்கேற்றத்தின் பின் வீட்டுக்கு வீடு ஆடும் பழக்கம் இல்லை.
மேற்குறிப்பிட்ட பத்துப் படிநிலைகளையும் தாண்டி, பல மாதங்கள் பழக்கத்தில் கூத்து உருவாகையில் அக்கூத்து ஊர் ஒற்றுமை, சாதியின் உறுதிப்பாடு, ஊரின் தேவைகள் யாவற்றையும் பூர்த்தி செய்வதைக் காண்கிறோம். இதனாலும் கூத்து வடிவம் சிறப்பாக மட்டக்களப்பு கிராமிய வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாக இன்றும் திகழ்கிறது.
10. உருவாக்கலில் முழு ஊரும் பங்குகொள்தலும் உள்ளூர் அறிவும்
மட்டக்களப்பு கூத்துக்களுக்கு மேடை அமைக்கும் முறையில், முழு ஊரும் பங்கு கொள்வதுடன், உள்ளூர் அறிவும் அங்கு பயன்படுத்தப்படுகிறது. மட்டக்களப்பில் கூத்துகள் நடைபெறும் மேடை, ‘கூத்துக் களரி’ என அழைக்கப்படுகிறது (மேடை, அரங்கம் என்ற சொற்கள் இப்பகுதியில் பாவனையில் இல்லை).
இம்மேடை வகையினை மூன்றாக வகுக்கலாம்:
- நாடகம் பழகும்போது, பழகுவதற்காக அமைக்கப்படும்.
- சதங்கை அணியும் நாளன்றும், கிழமைக்கு ஒரு தடவை கிழமைக்கூத்துப் பழகும்போதும், அடுக்குப் பார்க்கும் பொழுதும் நாடகம் நடத்துவதற்கெனப் போடப்படும் களரி.
- அரங்கேற்றத்திற்கென அமைக்கப்படும் முழுமையான கூத்துக் களரி.
1) பழகும்போது அமைக்கப்படும் களரி
15 அல்லது 20 அடி விட்டமுள்ள வட்டத்தினுள், 3 அடி உயரத்திற்கு மண் இட்டு அவ்வட்டத்தை உயரமாக்கி, மண்மீது தண்ணீர் தெளித்து அம்மேடையை இறுக்கிய பின்னர் அதனையே பழகும் மேடையாகப் பாவிப்பர். மேடையின் ஓரத்தில் ஒரு கம்பு நடப்பட்டு, அதன்மீது ஒரு விளக்குத் தொங்கவிடப்படும். வடமோடி நாடகம் பழகுவதாயின், மேடையின் வடக்கு திசை மூலையில் ஒரு கொலுக்கட்டை அமைத்திருப்பர் (8 அடி உயரமுள்ள தென்னங்குற்றிகளை 7 அல்லது 8 அடி இடைவெளியிட்டு நட்டு, அதன்மீது 8 அல்லது 9 அடி நீளமுள்ள இன்னொரு தென்னங்குற்றியைக் குறுக்குப் பாடாக வைத்துக் கொலுக்குற்றி அல்லது கொலுக்கட்டை தயாரிப்பர்). மேடையின் நடுவில் அண்ணாவியாரும், ஏடு பார்ப்பவரும், தாளக்காரர் இருவரும், பக்கப்பாட்டுக்காரர் இருவருமாக மொத்தம் ஏறக்குறைய ஆறு பேர் உட்சபையோராய் நிற்க, அவர்களைச் சுற்றிக் கூத்தர் ஆடிப் பழகுவர். ஊர் மக்கள் மண்ணால் உயர்த்தப்பட்ட இம்மேடையைச் சூழ்ந்து இருந்து கூத்துப் பார்ப்பர்.
2) சதங்கை அணியும் போதும், கிழமைக்கூத்தின் போதும், அடுக்குப் பார்த்தலின் போதும் அமைக்கப்படும் களரி
ஏறத்தாழ 20 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்டதும், நான்கு மூலைக்கு நான்கு கால்கள், மோட்டுக்கு அவற்றைவிட இரண்டு உயர்ந்த கால்கள் கொண்டதுமான 6 பெரும் கால்கள் கொண்ட நீண்ட ஒரு மோடு வைத்த பந்தலே இக்களரியாகும். இக்களரியின் வடக்குத் திசை மூலையிலே கொலுக்கட்டை போடப்படும். நான்கு பக்கங்களிலும் பார்வையாளர்கள் சுற்றியிருந்து நாடகத்தைப் பார்வையிடுவர். நாடகத்தை நடத்தும் சபையோர் பந்தலின் நடுவிலே நிற்க, கூத்தர் அவர்களைச் சுற்றி வெளிச்சபையோரைப் பார்த்தபடி ஆடி வருவர். சதங்கை அணியும் தினத்தன்று, இப்பந்தலின் உள்ளே வெள்ளை கட்டப்பட்டு, வர்ணக் கடதாசிகளினால் பந்தல் அலங்கரிக்கப்படும். பந்தல் கால்களின் மேற்பகுதியில் குருத்தோலைகள் மடித்து அடுக்காகக் கட்டப்படும். கீழ்ப்பகுதியில் சீலை கொய்து கட்டப்படும். பந்தலைச் சுற்றி நான்கு புறமும் குருத்தோலைகளும், பூக்களும், மாவிலைகளும் தொங்கவிடப்படும். இப்பந்தலின் வெளியே வடக்கு திசையில் பாய் விரிக்கப்பட்டு, அதன்மேல் வெள்ளை விரிக்கப்பட்டு, ஊர்ப் பெரிய மனிதர்களுக்காக விடப்பட்டிருக்கும். வடக்குத் திசையின் மூலையில் உரலிட்டு அல்லது மேசையிட்டு வெள்ளை விரித்து, அதன்மேல் பூரணக் கும்பம் வைத்து, அக்கும்பத்துக்குப் பொங்கலும் படைக்கப்பட்டிருக்கும். கிழமைக்கூத்து நடக்கும்போதும், அடுக்குப் பார்க்கப்படும் பொழுதும், குருத்தோலை அலங்காரம், பூரணக் கும்பம், வெள்ளை விரிப்புகள் இன்றி மொட்டையாக நிற்கும் மேடையே பயன்படுத்தப்படும்.
3) அரங்கேற்று மேடை
அரங்கேற்று மேடையே பிரதானமான கூத்தரங்கமாகும். வடமோடி நாடகமாடும் போதும், தென்மோடி நாடகமாடும் போதும் இம்மேடை வட்ட வடிவ அமைப்பிலேயே அமைக்கப்படும்.
இடத்தெரிவு
அரங்கேற்று மேடையை அமைப்பதற்கான இடத்தெரிவு இம்மேடை அமைப்பின் முதற்படியாகும். நாடகத்தினை நடாத்தத் தெரிவு செய்யப்பட்ட முகாமையாளர்கள் ஒன்றுகூடி எந்த இடத்தில் நாடகம் நடத்தலாம் எனப்பேசி இடத்தினைத் தெரிவு செய்வர். இரண்டு சமமான இடங்கள் அரங்கேற்றுக்குத் தெரியப்படுகின்றன.
- ஊரிலே பொதுக்கோயில் அமைந்துள்ள இடத்தின் வெளிப்பகுதி.
- மக்கள் அனைவரும் திரள்வதற்குரிய வசதியான பொது இடம்.
கிராமத்தில் மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் இடம் கோயிலானமையினாலும், ஆரம்பத்தில் நேர்த்திக்கடனுக்கு நாடகங்கள் போடப்பட்டாமையினாலும், முற்காலத்தில் கோயிலின் வெளிப்பகுதியிலேயே கூத்தாட்ட மேடையை அமைத்திருக்க வேண்டும்.
பின்னாளில் பொது இடங்கள் தெரியப்பட்டிருக்க வேண்டும். கூத்து முடிந்ததும் வீட்டுக்கு வீடு ஆடிச்செல்லும் மரபு மட்டக்களப்பில் உண்டு. கம்புகள் இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காகவே அதிகமான கம்புகளை அவர்கள் வளைத்து நாட்ட எண்ணவில்லைப் போலும். உயரமாக்கப்பட்ட மேடையிலிருந்து 6 அடி உயரத்தில் அல்லது அதற்குச் சற்று மேல் வளையக்கூடிய கம்புகளினால், இவ்வெட்டுக் கம்புகளையும் வட்டமாக இணைப்பர். இணைப்பதற்கு உலுமந்தை, செலுந்தி, பொற்பத்தை, விண்ணாங்கு, பூவரசு போன்ற மரங்களின் கிளைகள் பாவிக்கப்படுகின்றன. இவை யாவும் வளையக்கூடிய மரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையைச் சுற்றி நாட்டப்பட்ட 8 கம்புகளும் இரண்டு விதமாக அலங்கரிக்கப்படும். ஒருவிதம் வர்ணக் கடதாசிகளினால் மேலிருந்து கீழ்வரை அலங்கரிக்கப்படும். இன்னொரு விதம், கம்பின் மேற்பாகம் குருத்தோலைகளினால் அலங்கரிக்கப்பட, கீழ்ப்பாகம் சேலையைக் கொய்து கம்பை வளைத்துக் கட்டி அலங்கரிக்கப்படும். இக்கம்புகளை விட வேறு எந்த அடைப்பும் மேடைக்குக் கிடையாது.
மேடையின் மேற்புற அமைப்பு
மேலே வளைத்துக் கட்டப்பட்ட வளையத்தைச் சுற்றி ஒரே அளவான சேலைகளின் ஒரு புறத்தின் இரு நுனிகளையும் முடிவர். இவ்வண்ணம் எட்டு அல்லது பத்துச் சேலைகளைக் கட்டி முடித்ததும், எட்டுச்சேலைகளினதும் மறு புறத்திலுள்ள 16 நுனிகளையும் மேல் வட்டத்தின் சரியான நடுப்பகுதியில் ஒரு பெரிய முடிச்சாக முடிவர். உயரமாக அமைக்கப்பட்ட மேடையின் அருகே இருமருங்கிலும் உள்ள இரண்டு மரங்களிலோ அல்லது இதற்காக இருமருங்கிலும் நாட்டப்படும் நீண்ட இரு கப்புகளிலோ இணைக்கப்பட்ட கயிற்றின் நடுப்பாகத்திலுள்ள கப்பியில் உள்ள கயிற்றில் முடிச்சினைக் கட்டி, கப்பியின் கயிற்றை இழுக்க இழுக்க களரியின் மேற்புறம் கட்டப்பட்ட சேலைகள் அனைத்தும் குடைபோல நிமிர்ந்து கூம்புவடிவில் அமையும். மேற்பாகத்திலுள்ள வளையத்தைச் சுற்றிக் கயிறு கட்டி அதிலே வர்ணச் சேலைகளைக் கொய்து போடுதலும் மரபு. இவ்வண்ணம் அமைக்கப்பட்ட மேடையே அரங்கேற்ற மேடையாகும்.
மேடையின் உட்புறம்
வட்ட வடிவில் அமைந்த 4 பக்கமும் திறந்ததாக அமைந்த இம்மேடையின் உட்புறத்தில் காட்சியை விளக்க திரைச்சீலைகள் கட்டும் முறையோ, அல்லது அக்காட்சிக்குரிய பொருள்களை வைக்கும் முறையோ இல்லை. வடமோடி நாடகங்களுக்கு மாத்திரம் மேடையின் வடக்கு மூலையில் ஒரு கொலுக்குற்றி போடப்படும். நாடகத்தின் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இக்கொலுக்குற்றி அரசன் சிம்மாசனமாக, அரசியின் ஆசனமாக, அரசன் – அரசியரின் படுக்கையாக, அனுமார் ஏறிநிற்கும் மலையாக, காட்டிலே குமாரன் இளைப்பாறும் மரத்தின் அடியாகப் பயன்படுத்தப்படும். தென்மோடியில் இது கிடையாது. நின்ற நிலையிலேயே சகலவற்றையும் கூத்தர் அபிநயித்துச் செல்வர்.
நடிகர் அல்லது நடிகர்கள் முதன்முறையாக மேடையிலே தோன்றும்போது மேடையின் வடக்கு மூலையில் அவர்களின் முன்னால் இருவர் நின்று திரைமறைப்பாக ஒரு சேலையைப் பிடிப்பார்கள். வரவு விருத்தம் பாடி முடிய இச்சேலை நீக்கப்படும். இதனை திரைபிடித்தல் என அழைப்பர். மேடையின் கிழக்குத் திசை மூலையில் அல்லது மேற்குத் திசை மூலையில் ஒரு குடமும் செம்பும் வைக்கப்படும். கூத்தர் ஆடிக் களைத்தபோது அதிலிருந்து தண்ணீர் பருகுவர். களைப்புத் தீர, மீண்டும் ஆடத் தொடங்குவர்.
மேடையின் வெளிப்புறம்
மேடையின் வடக்குத் திசை மூலையில் மேடைக்கு வெளியே தரையிலிருந்து மேடையை நோக்கி இரண்டு தென்னங்குற்றிகள் சாய்த்து வைக்கப்பட்டு அதுவே மேடைக்கு வெளியேயிருந்து நடிகர் மேடைக்கு ஏறும் வழியாகப் பயன்படுத்தப்படும். மேடையின் வெளிப்புறத்தில் மேடையிலிருந்து 4 அல்லது 5 அடிக்கு அப்பால் மேடையைச் சுற்றிக் கம்புகள் நாட்டி அதனைச் சுற்றிக் கயிற்றாற் கட்டி வைக்கும் வழக்கமும் சில இடங்களிலுண்டு. பார்வையாளர்கள் மேடைக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடாது என்ற கருத்தில் இப்படிச் செய்தனரோ தெரியவில்லை. ஆனால் இந்த நாடகத்தின் அமைப்பு நெருக்கமான அரங்கு (Close Theatre) ஆனமையினால் அப்படிக் கொள்வதற்கில்லை. மிக நெருக்கமாக அமர்ந்திருப்பின் கால்கள் தெளிவாகத் தெரியாது என்பதும், கூத்தர் ஆடும்போது முன்னால் மிக நெருக்கமாக இருப்பவர் முகங்களில் மண்தெறிக்கும்; புழுதி பறக்கும் என்பதுமே இப்படிச் சபையோரைச் சில இடங்களிற் தூர வைத்தமைக்குக் காரணமாகும் (இம்முறை சில இடங்களில் மாத்திரமே என்பதும் அவதானத்திற்குரியது). சிலவேளைகளில் மேடை அமைப்பதற்காக சுற்றிவர மண் எடுத்தலால் மேடையைச் சூழ உள்ள பகுதி பள்ளமாகுவதால் இயற்கையாகவே பார்வையாளர்கள் மேடைக்கு 3 அல்லது 4 அடிக்கு அப்பால் இருந்து பார்க்கும் நிலை ஏற்பட்டு விடுவதுமுண்டு.
மேடைக்கு வெளியே கயிறு கட்டி கூத்தம்பலத்தை இரண்டாக வகுத்து, ஆண் – பெண் என்று பார்வையாளருக்குத் தனி இடம் கொடுக்கும் வழக்கம் சில இடங்களிலுண்டு. மேடைக்குச் சற்றுத் தள்ளி 4 பக்கம் அல்லது ஒரு பக்கம் அடைக்கப்பட்ட ஒரு வேலி போடப்பட்டு அதன் மறைவில் நின்று கூத்தர்கள் தமக்குரிய ஒபபனைகளைச் செய்து கொள்வர். ஒப்பனை செய்யுமிடத்தை மட்டக்களப்பில் வேசம் கட்டுமிடம் என அழைப்பர். ஒப்பனை செய்தல் இங்கு வேசம் கட்டுதல் என அழைக்கப்படுகிறது. முகத்திற்கு அலங்காரம் செய்தல், மாத்துப்பூசுதல் என அழைக்கப்படுகிறது. மாத்து என்பது மாற்று என்பதன் பேச்சுவடிவம். ஓர் ஆள் இன்னொரு ஆளாக மாறப்போடப்படும் ஒப்பனை இங்கு மாத்து எனப்படுகிறது எனக்கொள்ளலாம். வேசங்கட்டும் இடத்திற்கும் கூத்து மேடைக்குமிடையே அகலமான ஒரு வழி விடப்பட்டிருக்கும். இவ்வழியினாலேயே கூத்தர் மேடைக்கு வருவர். சிலநேரங்களில் கூத்தர் முதல்வரவாக இவ்வழியால் வரும்பொழுது மத்தாப்பு வெடி கொழுத்தி அழைத்து வருவர்; அல்லது எரிகின்ற பந்தம் கொழுத்திப் பாத்திரத்தை அழைத்து வருவர். இயமன், அரக்கர் போன்ற பயங்கர பாத்திரமாயின் பறை அடித்து அழைத்து வருவர் (சூரனைக் கொண்டு வருகையில் பறை அடித்துக்கொண்டு வரும் சூரன் போர் வழக்கை இங்கு ஒப்பிட்டு நோக்குக).
கன்னன் குடாவின் களரி அமைப்பு
கன்னன்குடா மட்டக்களப்பிலிருந்து 5, 6 மைல் தொலைவில் இருப்பினும் மட்டக்களப்பு வாவியால் மட்டக்களப்புப் பட்டினத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பகாலத்தில் சரியான போக்குவரத்துத் தொடர்புகள் இருக்கவும் இல்லை. இதனால் சில தனித்துவங்களை கன்னன் குடா கலாசாரத்திற் காணமுடிகிறது. அவற்றுள் ஒன்று முதற் புதுக்கூத்துக்குக் களரி போடும் முறையாகும். இங்கு கூத்துமேடையைச் சுற்றித் தோரணம் அமைக்கும் ஒரு புதிய முறையைக் காண்கிறோம். மேடையை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என 4 பிரிவாக பிரித்து, கூத்தர்களும் வேடமணியும் முன்னர் நான்கு பிரிவாகப் பிரிந்து, அன்று காலையில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு பிரிவினர் களரிக்கு முன்னால் தோரணம் போடுவர். தோரணம் மேடையை மறைக்காத விதத்தில் அமையும். இத்தோரணம் தென்னங்குருத்தினாலே ஆக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 4 பக்கமும் சதுரமாகத் தோரணம் அமைய நடுவே வட்டக்களரி அமைப்பு அழகாகக் காட்சி அளிக்கும். மட்டக்களப்பின் வேறு பிரதேசங்களில் இவ்வண்ணம் தோரணம் போடும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காட்சிகளைத் தத்துரூபமாகக் காட்டுவதற்காக இக் களரிக்குள்ளேயும், வெளியேயும் சில அமைப்பு முறைகளை பிற்காலத்தில் மேற்கொண்டமைக்குச் சில சான்றுகள் கிடைத்துள்ளன.
சில நாடகங்களில் நாயகர்கள் இறுதியில் கழுவில் ஏறும் காட்சி வருவதனால் மேடைக்கு வெளியே கழு ஒன்று நாட்டி அருகில் ஏணி வைத்து ஒவ்வொரு படியாக ஏறும்போது ஒவ்வொரு பாட்டுப் பாடும் முறையை அமைத்தனர். ஏணியில் ஏறும்போது பாடும் பாட்டு ஏணித்தரு என அழைக்கப்பட்டது. வனவாசம் நாடகத்தில், வெளியே இவ்வண்ணம் ஏணி வைத்து உயரமான ஒரு பரண்போட்டு மலை போலச் செய்தனராம். இதே நாடகத்தில் ஒரு வனத்திலே பாண்டவர்கள் பாம்பால் விழுங்கப்படுவது போன்று வரும் காட்சியை பாம்பின் பெரிய தலை ஒன்றை மேடையின் ஓரத்திற் செய்து வைத்து, அதனுட் பாண்டவர் புகுவதாகக் காட்டிப் பாம்பு விழுங்கியதைப் பார்வையாளருக்கு உணர்த்தினராம்.
சித்திரபுத்திரன் நாடகத்தில் சிவபெருமான் சிவலிங்கம் பிளக்கப் புறப்படுவதை மேடைமீது பெரியதோர் சிவலிங்கத்தை வைத்து, வெடிச் சத்தத்தோடு அது இரு பிளவாகப் பிளப்பதாகக் காட்டினராம். ஞான செளந்தரி நாடகத்தில் வெளியே மரங்களிற் கயிறு கட்டி கப்பி மூலம் கயிறுகளை இணைத்து, சம்மனசுமார் பறந்து வருவதைக் காட்டினராம். கனகசுந்தரன் நாடகத்தில் குமாரன் – குமாரத்தியின் கன்னிமாடம் செல்லும் காட்சியை, இயந்திரத்தால் பெரியதோர் மயில் செய்து, உயர்ந்த மரத்திலிருந்து அதனைக் கம்பியில் இறக்கி மயில் வருவதுபோலக் காட்டினராம். இவையாவும் பிற்கால வழக்காயிருக்க வேண்டும். பார்ஸி நாடக மரபின் தாக்கமே இத்தத்ரூபக் காட்சிகளுக்குக் காரணமாகும். எனினும் திரை கட்டும் வழக்கம் ஒருபோதும் மட்டக்களப்புக் கூத்தரங்கில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மோடி, வடமோடி நாடகங்களிற் காணப்படும் பாடல் அம்சங்களும், ஆடை அணிகளும், அரங்க அமைப்பும் ஏனைய நாடகங்களை விட வளர்ச்சி பெற்றனவாகக் காணப்படுகின்றன. உள்ளூர்க் கலைஞர்களே இவற்றைச் செய்கின்றனர். இதனை உள்ளூர் அறிவு எனலாம்.
11. குடும்பம், சாதி, மத, பிரதேச, இன அடையாளமாக அது அடையாளப்படுத்தப்படுதல்
ஈழத்தமிழர் மத்தியிலுள்ள சமூக அமைப்பையும், சாதி அமைப்பையும் எடுத்துநோக்கில், ஒவ்வொரு சாதியும் ஏனைய சாதியினரைக் கலக்காமல் கூத்து ஆடிய தகவல்களே எமக்குக் கிடைக்கின்றன. ஏனைய ஊரைவிட, ஏனைய சாதியினரை விட, தாம் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற போட்டியையும், கூத்தின் நிலைபேற்றுக்கு ஒரு காரணமாகச் சொல்லலாம். இந்தப் போட்டி மனப்பான்மை, மதம், பிரதேசம், குடும்பம் என்ற அமைப்புகளை ஊடறுத்துச் செல்லும். இற்றைவரை கூத்து ஓரளவாவது நின்று பிடிப்பதற்கு இவை காரணங்களாகும். பிற்காலத்தில், கூத்து ஈழத்தமிழரின் பண்பாட்டடையாளமாக மேற்கிளம்பியமையும், இன்றுவரை கூத்து இயங்குவதற்கான காரணம் எனலாம்.
(மேற்கூறப்பட்ட காரணங்கள் மட்டக்களப்புக் கூத்துகளை ஆராயப் புகுந்தபோது கண்டுகொண்டவை. இக்காரணங்கள் பொதுவாக ஈழத்தின் தமிழர் வாழ் ஏனைய பகுதிகளுக்கும் பெரும்பாலும் பொருந்தும்.)



