வெற்றியுனதே: சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம் பகுதி – 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
11 நிமிட வாசிப்பு

வெற்றியுனதே: சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம் பகுதி – 2

July 18, 2025 | Ezhuna

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.

ஒருவன் தனது நினைப்புக்களை மேம்படுத்தினால் மாத்திரமே உயர்வும் வெற்றியும் காரியசித்தியும் பெறுதல் கூடும். தனது நினைப்புக்களை மேம்படுத்தாது பின்னிட்டால் அவன் பலஹீனமும் கீழ்மையும் தரித்திரமும் உற்றேயிருப்பான்” – (ஜேம்ஸ் ஆலன்).

இளைஞர்களிடத்தில் தோன்றும் மயக்கங்களைக் களைந்து, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழித்தடத்தை, ‘நீ மயங்குவதேன்’ என்ற நூலின் மூலம் செப்பனிட முனைந்த நடேசய்யர், அதன் தொடர்ச்சியாக ‘வெற்றியுனதே’ என்ற நூலை 1934 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். கொழும்பு தினத்தபால் பிரஸ், ஹட்டன் சகோதரி பிரஸ் ஆகியன இணைந்து அந்நூலைப் பதிப்பித்துள்ளன. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய பண்புகளையும் அவற்றை அடைவதற்கான வழிகளையும் எடுத்துரைப்பதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ள இந்நூல், பொருள், தான், தன் சுற்றம் என்ற நிலையிலிருந்து விடுபட்டு மானுட வாழ்வை உயர்ந்த தளத்தில் அணுகும் மனவிசாலத்தைக் கட்டியெழுப்ப முயன்றுள்ளது.

வாழ்க்கையில் வெற்றிபெறுதல் என்பதன் அடிப்படைகளை, உளநூல் வல்லுநர் தளத்தில் நின்றும் சமூகமேம்பாட்டுச் சிந்தனையாளர் தளத்தில் நின்றும் நடேசய்யர் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளார். அவை உலகளாவிய ரீதியில் போற்றப்படும் சுயமுன்னேற்றச் சிந்தனைகளுக்கு இணையானவையாக அமைந்துள்ளன. புகழ்பெற்ற சுயமுன்னேற்ற நூல்களில் வலியுறுத்தப்படும் வாழ்க்கை இலட்சியங்களை உருவாக்கிக்கொள்ளல், அந்த இலட்சியத்தை இறுகப் பற்றிப் பயணிக்கும் உணர்வைத் தூண்டுதல், தன்நம்பிக்கையை வளர்த்தல், திட்டமிடலின் தேவையை உணர்த்தல், அறவழியில் இயங்குவதன் அவசியத்தை எடுத்துரைத்தல், நேர்மறையான சிந்தனைகளை விதைத்தல், நேர முகாமைத்துவத்தை வலியுறுத்தல், தோல்வியை அனுபவமாகக் கொள்ளச் செய்தல், முயற்சியைக் கைவிடாது செயற்பட உந்துதலளித்தல், வாழ்வில் வெற்றிபெற்றவர்களின் சரித்திரங்களை உதாரணங்காட்டல் முதலானவை இந்நூலில் செறிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நூலில் இடம்பெறும் கருத்துக்கள், தமிழ் மரபுக்கு அந்நியமுறாதவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பேசப்படும் விடயங்களின் மையத்தை உள்ளடக்கிய தமிழ் இலக்கியப் பகுதிகள், அத்தியாயத்தின் தொடக்கத்திலோ இறுதியிலோ மேற்கோளாக வழங்கப்பட்டுள்ளன. அவை நடேசய்யரின் கருத்துகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன் நூலின் பொருண்மையைத் தமிழர் வாழ்வியலோடு நெருக்கமாகப் பிணைத்துள்ளன. 

வாழ்வின் வெற்றியானது இலட்சியத்தை உருவாக்கிக்கொள்ளலில் தொடங்கி, அந்த இலட்சியத்தை அடைவதற்கான மனப்பாங்கிலும் திட்டமிடலிலும் வளர்ந்து, செயலில் முழுமை பெறுவதை விளக்கிக்காட்டும் இந்நூல், பொருளொன்றல்ல வாழ்க்கையின் நோக்கம், அச்சமென்பதில்லையே, தன்நம்பிக்கை இல்லான் பிறர் உதவி பெறான், கவலைப்பட வெட்கப்படு, திடமுண்டேல் இடமுண்டு, விதையொன்று போட செடியொன்று முளையா?, காலந்தவறின் யாவுந் தவறும், பொறுத்தார் பூமியாள்வார், உனது மனசாட்சி என்ன சொல்கிறது?, வெற்றிபெற்ற முறை எனும் பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

வாழ்க்கையில் வெற்றிபெறுதல் என்பது இலக்கினை அடைதலைக் குறித்து நிற்பதால் இலட்சியம் ஒன்றின் தேவை, இலட்சியத்தின் பயன் என்பனவற்றை நடேசய்யர் முதலில் தெளிவுபடுத்தியுள்ளார். “உலகே ஒரு பெருங்கடல். உனது வாழ்க்கை அதில் ஓர் கப்பல். அக்கப்பலை ஓட்டும் மாலுமி நீ. கப்பல் சேரவேண்டிய இடமே உனது வாழ்க்கையின் இலட்சியம். இத்துறை சேரவேண்டும் என்ற திட்டமில்லாத மாலுமியின் நிலை எவ்விதம் கடலில் இருக்குமோ அது போல லட்சியமில்லாத உன் வாழ்க்கையிருக்கும். இந்தவிடம் போக வேண்டும் என்ற நிலையறியாது திகைத்து நிற்கும். அல்லது காற்றில் அங்குமிங்கும் அல்லல்பட்டு மூழ்கி மடியும்” என இலட்சியம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டியதன் தேவையை நிராகரிக்க முடியாதளவுக்கு விளக்கிக்காட்டியுள்ள அவர், இலட்சியமொன்று எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டுவதற்குப் பின்வரும் வினாக்களை எழுப்பியுள்ளார்:

“யாவருக்கும் பலன் இல்லாமலும் தோன்றிய அறிகுறி இல்லாமலும் தோன்றித் தோன்றி மறையும் சிருஷ்டிகளைப் போல் நீயும் ஒருவனாகக் காலங்கழித்துப்போக எண்ணிவிட்டாயா? 

அல்லது மலையுச்சி விளக்கைப்போல் யாவரும் கண்டு கொண்டாடக் கூடியதும், பிறர் பற்றி வழி நடக்கக் கூடியதுமான உயர்நிலைக்கு வர எண்ணியுள்ளாயா? 

உனது நோக்கம் தான் என்ன?” 

மேற்படி வினாக்கள், இலட்சியமொன்று உள்ளடக்கியிருக்க வேண்டிய விசாலத்தையும் அதன் சமூகப் பெறுமதியையும் உணர்த்த முயன்றுள்ளதைக் காணலாம். அவற்றின் பின்னணியில், “உலகத்தாருக்கு நன்மை பயக்குவதாய்க் கொள்ளும் எந்நோக்கமும் நன் நோக்கமே. அதைப் பெறவே நீ முயற்சிப்பாயாக” எனத் தனிமனிதனொருவன் தன் இலக்கை, தன்னளவில் குறுக்கிக்கொள்ளாது, உலக நன்மை எனும் விரிந்த தளத்தில் வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அதனை உணர்த்தவே, ‘பொருளொன்றல்ல வாழ்க்கையின் நோக்கம்’ என்பதை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார்; வறியநிலையிலிருந்து உலக மேன்மைக்காகப் பங்களித்த பலரைச் சான்றுகாட்டி, “ஒருவனுடைய உயர்ந்த நோக்கமும் வாழ்க்கை நெறியும் பொருளைவிட அதிக பலமுள்ளவை” என்பதை நியாயப்படுத்தியுள்ளார். 

நடேசய்யர் சுயமுன்னேற்றம் என்பதைத் தனிமனித வளர்ச்சியாகவோ அது தனிமனித முயற்சியினால் மட்டும் முழுமையடைவதாகவோ கருதவில்லை. வாழ்வின் வெற்றி என்பது சமூக நலனை – உலக நலனை இணைத்தது என்பதை அவர் மீளமீள வலியுறுத்தியுள்ளார். அவ்வாறே, “எக்காரியத்தில் சித்தியடைய நீ கருதிய போதிலும் உன்னுடைய திடநம்பிக்கை மாத்திரம் இருந்தாற் போதுமா? உன்னுடன் ஒத்துழைக்க வேண்டியவர்களது நம்பிக்கையும் இருக்க வேண்டியது அவசியமல்லவா? பிறர் உன் பேரில் கொண்டுள்ள நம்பிக்கையே அவர்களை உன்னுடன் சேர்ந்து உழைக்கச் செய்யும் என்பதை உணர்வாய்” எனக் கூட்டு வாழ்வின் பிணைப்பே வெற்றியை நுகரச் செய்யும் எனச் சுயமுன்னேற்றத்தில் சமூக பங்களிப்பு இணைந்துள்ளமையை எடுத்துக்காட்டியுள்ளார். தனிமனித வளர்ச்சியானது சமூகப் பங்களிப்பற்றுச் சாத்தியமில்லை என்பதால், தனிமனித முன்னேற்றமானது சமூக வளர்ச்சியையும் அவாவியதாக அமைய வேண்டும் என்ற அறப் பார்வைக்கு நடேசய்யர் முதன்மை கொடுத்துள்ளார். அத்துடன் தனிமனித முன்னேற்றமும் அறவழியிலே நிகழ வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். பொய், களவு முதலானவையற்று, பொருளுக்காகக் கீழ்மையான செயல்களைப் புரியாது, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தூயகுணத்துடன் வாழ்வதிலேயே பெரிய மனிதத் தன்மை அடங்கியிருக்கிறது எனக்கூறும் அவர், அதனையே வாழ்வின் வெற்றியாக முன்நிறுத்தியுள்ளார்.

இலட்சியத்தின் முக்கியத்துவத்தையும் நோக்கையும் எடுத்துரைத்தபின், அந்த இலட்சிய வழியில் பயணித்து இலக்கை அடைவதற்குக் கொள்ளவேண்டிய பண்புகளையும் தள்ளவேண்டிய பண்புகளையும் தொடர்ந்துவரும் அத்தியாயங்களில் நடேசய்யர் விரிவாக விளக்கியுள்ளார். கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளால் விளையும் நன்மைகளையும் நிராகரிக்க வேண்டிய பண்புகளால் அடையும் வீழ்ச்சிகளையும் ஒப்பியல் அடிப்படையில் விளக்கிச் செல்லும் உத்தியை அவர் சிறப்பாகக் கைக்கொண்டுள்ளார். அவ்வுத்தி, எவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும், எவற்றைக் கைவிட வேண்டும்? என்பதை இலகுவாக வாசகர்களிடம் கொண்டுசேர்க்கத் துணைசெய்கிறது.

வாழ்வில் வெற்றிபெற தன்நம்பிக்கை, மனத்திட்பம், உடன்பாடான மனப்பாங்கு – தூய உள்ளம், காலந்தவறாமை, நல்லொழுக்கம், நேர்மை முதலானவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அச்சம், கவலை, கோபம், தீய நடத்தை, கெட்ட சிந்தனை முதலானவற்றைக் களைய வேண்டும் என்றும் நடேசய்யர் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளார். உதாரணமாக, ‘அச்சமென்பதில்லையே’ என்ற அத்தியாயத்தில் அச்சம் தரும் தோல்வியையும் அச்சமின்மை தரும் வெற்யையும் விளக்கியுரைத்துள்ளமையைக் குறிப்பிடலாம்:

“பயம் ஒருவனுடைய குணத்தை மாற்றுகிறது. அது அவனை அடிமையாக்குகிறது. அவனது ஆசையைக் கெடுக்கிறது. அவனது முன்னேற்றத்தைக் தடுக்கிறது. வியாதியை உண்டாக்குகிறது. சந்தோஷத்தைப் போக்கி மனத்தைக் கலக்குகிறது. பயம் என்பது ஓர் பேய். அப்பேய் ஒருவனைப் பிடிக்குமானால் அவனை நடைபிணமென்றே சொல்ல வேண்டும். அவன் பிறன் கை இயந்திரமாகிறான். தன்நம்பிக்கை இழக்கிறான். சந்தோஷ உலகத்தில் அவனைக் காணமுடியாது. கிழத் தன்மையைச் சீக்கிரம் அடைகிறான்…” எனப் பயம் தரும் வீழ்ச்சியை எடுத்துரைத்துள்ள நடேசய்யர், பயமெனும் பேயை விரட்டி தைரியத்தை வளர்த்தவர்கள் வாழ்வில் அடைந்த உயர்ச்சியையும், உலக இயக்கம் அச்சமின்மையாலேயே மேல்நோக்கி நகர்கின்றமையையும் சுட்டிக்காட்டி, அச்சமின்மை தரும் வெற்றியை எடுத்துக்காட்டியுள்ளார். 

‘அச்ச மென்பதில்லையே’ என்ற தலைப்பு, பாரதியின் பாடலடியிலிருந்து பெறப்பட்டதாகும். ‘பொருளொன்றல்ல வாழ்க்கையின் நோக்கம்’ என்ற அத்தியாயத்தில், சாதிப்பதற்கு வறுமையொன்றும் தடையல்ல என்பதை உணர்த்துவதற்கு, ‘நமது தென்னாட்டு வீரகவி சுப்பிரமணிய பாரதி தரித்திரக்கடலில் மூழ்கி இறந்தபொழுதிலும் அவருடைய பாடல்கள் தமிழர்களுக்குப் புத்துயிர் கொடுக்கவில்லையா…’ எனப் பாரதியின் வரலாற்றை நடேசய்யர் உதாரணங் காட்டியுள்ளார். பாரதி தன் பாடல்களிலும் கட்டுரைகளிலும் அச்சம், கவலை முதலானவற்றைக் களைய வேண்டியதன் அவசியத்தையும் தைரியம், மனத்திட்பம், தூய சிந்தனை முதலானவற்றைப் பேண வேண்டியதன் தேவையையும் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். உதாரணமாக,

“மனதி லுறுதி வேண்டும் 

வாக்கினி லேயினிமை வேண்டும் 

நினைவு நல்லது வேண்டும்”,

“எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்தநல் லறிவு வேண்டும்”

முதலான வரிகள் சுயமுன்னேற்றச் சிந்தனையாளர் கருத்துகளின் சாரத்தைச் செறிவாக வெளிப்படுத்தியுள்ளதைக் காணலாம். அச்சமே மடமை, அச்சமின்மையே அறிவு எனக்கூறும் பாரதி, “பாரதவாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம் பெறுவதற்குக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். நாம் துணிவு வேண்டும் என்கிறோம். துணிவே தாய். அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன” என்று அச்சமின்மையே அனைத்து ஆக்கத்திற்கும் அடிப்படை என்றுள்ளார். அதனையே சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் முதன்மையாக வலியுறுத்துகிறார்கள். 

‘கவலைப்பட  வெட்கப்படு’ என்ற அத்தியாயத்தில், நடேசய்யர் கவலை என்பது “உயிரை, வாழ்வைப் பாழாக்க வல்ல பேய்” என விபரித்து, வாழ்வில் வெற்றிபெற கவலையை ஒழிக்க வேண்டும் என்றுள்ளார். பாரதியும் “கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்” எனப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனத்திட்பம், தன்நம்பிக்கை ஆகியவற்றின் அவசியத்தை நடேசய்யர் விரிவான உதாரணங்களுடன் விளக்கிக்காட்டியுள்ளார். தன்நம்பிக்கை மிக்கவரினதும் அது இல்லாதவரினதும் இயல்புகளை ஒப்பிட்டு தன்நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். சான்றாக, பின்வரும் பகுதியை எடுத்துக்காட்டலாம்:

“தன்னிடம் நம்பிக்கை இல்லாத காரணத்தால் தான் செய்த காரியம் சரியோ தப்போ என்று தன் எதிர்ப்பட்டவர்களையெல்லாம் கேட்பான். சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு எடுத்த கருமத்தை முடிக்காமல் தலைவிதியை நொந்து, கடவுள் பேரில் பழி சுமத்துவான். லட்சியம் இன்ன தென்பதே இவனுக்குக் தெரியாது. லட்சியமில்லாது திகைத்துத் திகைத்து நின்று பிறர் சொல்பவற்றை யெல்லாம் கேட்டு நடப்பதே மேல் என்ற நம்பிக்கையில் வாழ எண்ணுவான். தரித்திரத்தைக் கண்டு அஞ்சுவான். சிறு கஷ்டங்களை எண்ணி ஏங்குவான். எதிரி எதிர்ப்படுமுன் அவன் காலில் வீழ்ந்து அடிமைப்படுவான்.

தன்நம்பிக்கை கொண்டவன் நிலைமை வேறு. அவனுடைய நடையிலே வித்தியாசங் காணலாம். அவனது  பேச்சிலும் பார்வையிலும் தன்நம்பிக்கை பரிமணித்து நிற்பதைக் காண்பாய். இக்குணத்தையே ‘செய்திறம், புத்தி சாமர்த்தியம், கெட்டித்தனம்’ என்று பலவாறாகச் சொல்லுவார்கள். அவன் கம்பீரப் பார்வையுடன் எக்காரியத்தையும் ஏற்பான். தரித்திரத்தைக் கண்டஞ்சான். எதிரிகளின் ஏளனத்திற்குப் பயப்படமாட்டான். எதிரி ஒருவன் இருப்பதாகவும் கருதமாட்டான். தன் லட்சியத்திலேயே நேர்முகம் செலுத்தி வேலை செய்வான். முன்னேறுவான்.”

மனத்திட்பம், உடன்பாடான மனப்பாங்கு ஆகியன குறித்த நடேசய்யரின் கருத்துகள் உளநூல் வல்லுநர்களின் கருத்துகளுடன் ஒத்துப்போகின்றன. “மானிட வாழ்க்கைக்கு மனோத்திடமே முதுகெலும்பாகும். முதுகெலும்பில்லாதவன் நிமிர்ந்து நிற்க முடியுமா? உயிர் வாழ்வது தான் எவ்விதம்?” என மனத்திடத்தின் அவசியத்தை எடுத்துரைத்துள்ள நடேசய்யர், “மனத்தைச் சிதறவிடும் பழக்கங்கள் உன்னைக் கெடுக்கும். பலவிதக் கவலைகள், பொறாமைகள், துர் எண்ணங்கள் முதலான மண், கல், முள் என்னும் குப்பைகளைக் கொண்டு மனத்தை நிறப்பாதே! மனதைக் கலக்கமில்லாமல் வைத்துக் கொள்ளும் பழக்கம் உனக்கு இளமை முதற்கொண்டே ஏற்படட்டும். மனதைச் சிதறவிட்டுப் பெருங் காரியங்களைச் செய்யலாம் என்று எண்ணாதே! அது முடியாத காரியம்” என மனத்திட்பத்தையும் மனத்தூய்மையையும் இணைத்து விளக்கியுள்ளார். 

ஜேம்ஸ் ஆலனின் நூல்களில் இடம்பெறும், “எண்ணம் போல் வாழ்வு” என்பதன் வெளிப்பாடுகள், நடேசய்யரின் சிந்தனைகளில் பிரதிபலித்துள்ளன. வ.உ.சி. மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் மனம் போல வாழ்வு, அகமே புறம்  முதலான நூல்கள் நடேசய்யருக்கு ஆதர்சமாக விளங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. உதாரணமாக, மனம் போல வாழ்வு என்ற நூலில் இடம்பெறும் பின்வரும் செய்தியை எடுத்துக்காட்டலாம்:

“நல்ல நினைப்புகளும் செயல்களும் ஒரு காலத்திலும் கெட்ட பலன்களைக் கொடுக்கமாட்டா, கெட்ட நினைப்புகளும் செயல்களும் ஒரு காலத்திலும் நல்ல பலன்களைக் கொடுக்கமாட்டா. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? எட்டியிலே கட்டுமாம்பழம் உண்ணலாமா? தினை விதைத்தவன் தினை அறுப்பதும் வினை விதைத்தவன் வினையறுப்பதுமன்றி வேறில்லையே.”

மேற்படி விளக்கத்தின் சாரமாகவே, விதை யொன்று போட செடி யொன்று முளையா? என்ற அத்தியாயத்தை நடேசய்யர் அமைத்துள்ளார். “உண்மையில் உன் மனம் கெடுவழி நோக்குமாயின் உனக்குத் தீமையே சம்பவிக்கும். வெறுப்பும் பொறாமையும் சந்தேகமும் கொண்டவர்களது வாழ்க்கையில் தோல்வியும் நஷ்டங்களும் கஷ்டங்களும் ஏற்பட்டுக்கொண்டே வரும். தூய எண்ணங்களுடன் எவன் சந்தோஷமாய்க் காலங் கழிக்கிறானோ அவனுக்குக் கஷ்டங்கள் வருவதும் இல்லை. வந்தாலும் அவை சூரியனைக் கண்ட பனிபோலல் விலகும்” என்ற நடேசய்யரின் விளக்கம், மனம் போல வாழ்வு அமையும் என்பதையும் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் அவசியத்தையும் ஜேம்ஸ் ஆலனுக்கு இணையான வகையில் வெளிப்படுத்தியுள்ளதைக் காணலாம். 

தமிழ் மரபில் திருக்குறளுக்கு இணையாக வேறு எந்த நூல்களும் மனத்திட்பத்தின் அவசியத்தை வலுவாக முன்வைக்கவில்லை எனலாம். அதனால் தமிழில் மனத்திட்பம் குறித்து நிகழ்த்தப்படும் உரையாடல்களில் திருக்குறளை மறுதலிக்க முடியாதுள்ளது. நடேசய்யர் மனத்திட்பம் பற்றிய தன் கருத்துகளுக்குப் பொருந்துகின்ற வகையில்,

“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை”

“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்”

ஆகிய குறள்களை மேற்கோள் காட்டியுள்ளதுடன் தன்நம்பிக்கை பற்றிய விளக்கத்தின்போது, “வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப மற்றைய வெல்லாம் பிற” என்ற குறளை மேற்கோள் காட்டியுள்ளார். இந்நூலிலும் நீ மயங்குவதேன் நூலிலும் நடேசய்யர் எடுத்தாண்டுள்ள குறள்கள், திருக்குறளைச் சுயமுன்னேற்றச் சிந்தனை நோக்கில் வாசிப்பதற்கான வெளியினைக் கட்டியெழுப்பியுள்ளன.

இந்நூலின் செய்திகளும் எடுத்துரைப்பும் வாசகரிடத்தே புது எழுச்சியையும் புத்துணர்வையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. வாசகருக்கு அருகிலிருந்து உரையாடி, ஐயங்களைத் தவிர்த்து, சரியான வழிக்குக் கரம்பற்றி அழைத்துச் செல்வது போல தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நீ மயங்குவதேன் நூலில் பின்பற்றிய வினாக்களை எழுப்பி, அவற்றுக்கான விடைகளை அடுக்கிச் செல்லுதல், சாதித்தவர்களின் வரலாற்றைச் சான்றுகாட்டுதல் எனும் உத்திகளை இந்நூலிலும் நடேசய்யர் கைக்கொண்டுள்ளதுடன் வெற்றிக்கு அவசியமானவற்றையும் வெற்றியைச் சிதைப்பவற்றையும் ஒப்பிட்டு விளக்கும் முறையை நூல் முழுதும் கையாண்டுள்ளார். அவர் எழுப்பியுள்ள வினாக்கள் வாசகரிடத்து உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. 

திருக்குறள், நாலடியார் முதலான பண்டைய நூல்களிலும் பாரதி, பாரதிதாசன் முதலான நவீன படைப்பாளிகளின் எழுத்துகளிலும் சுயமுன்னேற்றச் சிந்தனைகள் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்களுள் ஒருவரான ஜேம்ஸ் ஆலனின் நூல்களை வ.உ.சி. தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இருந்தபோதிலும் சுயமுன்னேற்றச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் நூல் எது என்று தெளிவாகக் கூறமுடியவில்லை. நடேசய்யர் தன் ‘நீ மயங்குவதேன்’ நூல் பற்றிய விளம்பரத்தில், “இதுவரையில் தமிழில் வெளிவராத நூல்” என அதனையே சுயமுன்னேற்றம் தொடர்புடைய முதல் தமிழ் நூலாக அடையாளப்படுத்தியுள்ளார். அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும் சுயமுன்னேற்றம் தொடர்பாகத் தமிழில் எழுந்த தொடக்கால நூல்களுள் முதன்மையானவையாக நடேசய்யரின் நூல்கள் விளங்குகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் சூட்டியுள்ள தலைப்புகளும் விபரித்த விடயங்களும் சுயமுன்னேற்றம் தொடர்பில் உரையாடுகின்ற யாவரும் நிராகரிக்க முடியாதவையாகவும் ஈர்ப்பு மிக்கவையாகவும் விளங்குகின்றன.



About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்