தொடக்கக் குறிப்புகள்
2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த சில மாதங்களில், வடக்கில் மீண்டும் தோன்றிய முதலாவது உட்கட்டமைப்புகள் வீதிகளாகும். நீண்ட பிரிவினைக் கோடான A9 நெடுஞ்சாலையானது, வழமைக்குத் திரும்புதல், வர்த்தகம், அரசு இருப்பின் உறுதிப்பாடு ஆகியவற்றின் அடையாளமாக மாறியது. 2010க்கும் 2024க்கும் இடையில், யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை, மன்னார் வரையிலான இந்த வழித்தடங்களில் – ஒரு காலத்தில் பிரிவினையின் அடையாளங்களாக இருந்த வீதிகள் எவ்வாறு புனரமைப்பு என்பதன் பெயரில் அதிகாரத்தின் கருவிகளாக மறுவடிவமைக்கப்படுகின்ற என்பது கவனிக்கத்தக்கது.
ஒவ்வொரு தடவையும், போரின் தடயங்கள் வளர்ச்சியின் வாக்குறுதிகளால் மூடுண்டன. “இது அமைதி என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்று கிளிநொச்சியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் தேசியக்கொடி போர்த்தப்பட்ட ஒரு புதிய பேருந்து நிறுத்துமிடத்தின் அருகே நின்றுகொண்டு என்னிடம் கூறினார். “ஆனால் அமைதி என்பது தரையில் தார் இடுவது மட்டுமல்ல. அவர்கள் நம்மைக் கண்காணிப்பதை நிறுத்துவதுதான் அமைதி.” வடக்குக் கிழக்கு முழுவதும் பல்வேறு மரபுத்தொடர்களில் மீண்டும் மீண்டும் கூறப்படும் இத்தகைய கருத்துகள், போருக்குப் பிந்தைய இலங்கையில் வீதிப் புனரமைப்பின் இரட்டைத் தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஒரே நேரத்தில் அது தேவையை நிறைவு செய்கிறது, இன்னொரு புறம் அது பரந்த அரசியல் திட்டத்தின் பகுதியாகிறது.
வீதிகள் ஒருபோதும் வெறும் அபிவிருத்திச் செயன்முறைகள் அல்ல. அவை அதிகாரத்தை நிலைநிறுத்த புழக்கத்தில் இருக்கும் வழிவகைகள். போருக்குப் பிந்தைய சூழல்களில், அவை பயணத்தைச் சாத்தியப்படுத்துவது போலவே இறையாண்மையையும் அறிவிக்கின்றன. தார் இடப்பட்ட மென்மையான மேற்பரப்பு அதன் கீழே இருக்கும் சொந்தம், நினைவகம், கண்காணிப்பு ஆகியவற்றின் சீரற்ற நிலப்பரப்புகளை மறைக்கிறது. போரின் பின்னரான 15 ஆண்டுகளில், வடக்குக் கிழக்கில் உள்ள ஒவ்வொரு முக்கிய நெடுஞ்சாலைகளும், உள்ளூர் வீதிகளும் மீண்டும் கட்டமைக்கப்பட்டன அல்லது முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் அரசாலும் நன்கொடையாளர்களாலும் ‘புனரமைப்பின் வெற்றிக் கதைகள்’ என்று கொண்டாடப்பட்டன. அமைச்சர்கள், துறவிகள், இராணுவ அதிகாரிகள் தலைமையில் இதன் திறப்பு விழாக்கள் நடாத்தப்பட்டன. இருப்பினும், இந்த வீதிகளை அண்டிய பகுதிகளில் வாழ்வோர், வீதிகளைத் தினந்தினம் பயன்படுத்துவோர் வீதியை வித்தியாசமாக நோக்கினர். அவர்கள் இந்த வீதிகளின் வருகையை நிலம், மொழி, அதிகாரத்துடனான தங்கள் உறவை மறுவரையறை செய்த மாற்றத்தின் அச்சாகக் கண்டனர்.

பதினைந்து ஆண்டுகாலக் கள ஆய்வை அடிப்படையாகக்கொண்ட இந்தக் கட்டுரை, இலங்கையின் போருக்குப் பிந்தைய வடக்குக் கிழக்கில் வீதி உருவாக்கும் அரசியலைக் கண்டறிந்துள்ளது. வீதிப் புனரமைப்பு என்பது வெறும் பொருளாதார, மனிதாபிமானப் பயிற்சி அல்ல. மாறாக போருக்குப் பிந்தைய நிர்வாகத்தின் ஓர் இடஞ்சார்ந்த உத்தி என்று அது வாதிடுகிறது. முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை ஒருங்கிணைக்க, ஒழுங்குபடுத்த, மீண்டும் அடையாளப்படுத்த வடிவமைக்கப்பட்ட இறையாண்மையின் உட்கட்டமைப்பு வலியுறுத்தலின் ஒரு வடிவமாக இந்த வீதிப் புனரமைப்பு இருந்தது. வீதிகள் கிராமங்களைச் சந்தைகளுடன் இணைத்தன, ஆனால் அவற்றை அரசின் அதிகாரத்துவ, இராணுவப் பார்வையுடன் சேர்த்தே இணைத்தன. அவை பொருட்கள், வீரர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், உளவுத்துறையினர் என அனைத்தையும் அபிவிருத்தி நவீனத்துவம் என்று பெயரிட்டு அதே ஓட்டத்தில் வடக்குக் கிழக்கிற்குக் கொண்டு சென்றது.
இந்தக் கட்டுரை இலங்கையின் போருக்குப் பிந்தைய வீதித் திட்டங்களை, முக்கியமான உட்கட்டமைப்புச் செயற்பாடுகள், போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு ஆகியவற்றின் பரந்த விவாதங்களுக்குள் நிலைநிறுத்துகிறது. கலாசார ஒருங்கிணைப்பு மற்றும் மேலாதிக்க மறுசீரமைப்புக்கான கருவிகளாக பௌதீக உட்கட்டமைப்புகள் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை இது காட்டுகிறது. வீதிகள் உறுதியான நன்மைகளைக் கொண்டு வந்தாலும் – பயண நேரத்தைக் குறைத்தல், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கான மேம்பட்ட அணுகல் – அவை படிநிலைகள் மூலம் சிறுபான்மை நிலப்பரப்புகளை அழிக்கவும், தமிழ், முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளில் பௌத்த வழிபாட்டுத்தலங்களைப் பெருக்கவும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெற்றியின் நினைவுச்சின்னங்களாக மாற்றவும் உதவின.
A9 நெடுஞ்சாலை உள்ளிட்ட பிற முக்கிய வழித்தடங்களின் பயணத்தைக் கண்டுபிடிப்பதில், இந்தக் கட்டுரை வீதியோரங்களில் வசிப்பவர்களின் குரல்களை முன்னெடுத்துச் செல்கிறது: வெளியாட்கள் புதிய வீதியோரச் சந்தைகளை ஆக்கிரமிப்பதைப் பார்க்கும் விவசாயிகள், தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாக தங்கள் வேலையை வடிவமைக்கும் பொறியாளர்கள், சுதந்திரம், பயம் ஆகிய இரண்டையும் வழிநடத்தும் பெண் பயணிகள் ஆகியோரின் குரல்களின் வழி வீதிகள் என்ன செய்கின்றன என்பதை நோக்குகிறது. அபிவிருத்தியின் வெற்றியாகக் கொண்டாடப்படும் வீதிகள் போருக்குப் பிந்தைய மேலாதிக்கத்தின் நிலப்பரப்பாக எவ்வாறு உள்ளன என்பதை இந்தச் சாட்சியங்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்தக் கட்டுரை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் பதினான்கு ஆண்டுகால இனவியல் கண்காணிப்பு, அரை-கட்டமைக்கப்பட்ட நேர்காணல்கள், கொள்கைப் பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அரசாங்கத்தின் ‘உதுரு வசந்தய’ (வடக்கின் வசந்தம்) மற்றும் ‘நாகெனஹிர நவோதயா’ (கிழக்கின் விடியல்) திட்டங்களின் கீழ், பெரிய அளவிலான மறுகட்டமைப்புத் திட்டங்கள் நடந்து கொண்டிருந்த 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கள ஆய்வு தொடங்கியது. மீட்பு, மாற்றம் ஆகியவற்றைக் கொண்ட நீண்ட காலப்பகுதியை உள்ளடக்கியது. இது பல்வேறு கட்டங்களாக 2025 வரை இடைவிடாது தொடர்ந்தது. இந்த ஆய்வு அன்றாடத்திற்கும் நிறுவனத்திற்கும் இடையில் நகரும் பல அளவிலான இனவியல் அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. கள ஆய்வுத் தளங்கள் வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கியது; இவை முக்கிய நெடுஞ்சாலைகளான A9, A32, A35, A34, A15 ஆகியவற்றால் இணைக்கப்பட்ட மாவட்டங்கள். ஒவ்வொரு இடத்திலும், குடியிருப்பாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், பொறியாளர்கள், மதகுருமார்கள், ஆசிரியர்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் முன்னாள் போராளிகளுடனான நேர்காணல்களை உள்ளடக்கியது. 250க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் நடாத்தப்பட்டன.
வீதிப் பயன்பாடு, அடையாள நடைமுறைகள், வீதிச் சந்திகளில் நினைவுச்சின்னங்கள், வீதிச் சோதனைச் சாவடித் தொடர்புகள் ஆகியவற்றில் இனவரைவியல் ரீதியான கவனத்தை இவ்வாய்வு குறித்தது. இயங்கியல் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், புதிய கட்டுமானத் தளங்கள், வீதிகள் குறித்த உள்ளூர் அணுகுமுறைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்யும் விரிவான கள நாட்குறிப்புகள் இதற்குப் பயன்பட்டன. வவுனியாவில் ஒரு பேருந்து ஓட்டுநர் குறிப்பிட்டது போல், “ஒவ்வொரு புதிய அடையாளப் பலகையும் இப்போது இந்த நிலத்தை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை நமக்குச் சொல்கிறது.” உட்கட்டமைப்பு வடிவம், மொழி, வழக்கம் ஆகியன மூலம் அதிகாரம் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை விளக்குவதற்கு இந்த வகையான தன்னிச்சையான வர்ணனை விலைமதிப்பற்றதாக மாறியது.
கொள்கைப் பகுப்பாய்வு களத் தரவை நிறைவு செய்தது. பெருந்தெருக்கள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை (Road Development Authority), நகர அபிவிருத்தி அதிகாரசபை (Urban Development Authority) மற்றும் நன்கொடை நிறுவனங்கள் (ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சீன எக்ஸிம் வங்கி) ஆகியவற்றின் திட்ட அறிக்கைகள் உள்ளூர் அரசாங்கப் பதிவுகளுடன் மதிப்பாய்வு செய்யப்பட்டன. போருக்குப் பிந்தைய வீதி உருவாக்கத்தை வடிவமைத்த தொழில்நுட்ப நியாயப்பாடு, அரசியல் அவசரம் ஆகிய இரண்டையும் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தின. புனரமைப்பு என வரவுசெலவுத் திட்டத்தின் வழி நியாயப்படுத்தப்பட்டவை பெரும்பாலும் பாதுகாப்புக் கட்டாயங்கள் மற்றும் அடையாள அதிகாரத்துடன் பின்னிப் பிணைந்திருந்தன.
ஆய்வு முழுவதும், வீதிகள் உருவகமாக மட்டுமன்றி முறையியலாகவும் செயற்பட்டன. அவற்றுடன் பயணிப்பது கட்டுப்பாடு, சுழற்சியின் தாளங்களைப் பற்றிய நுண்ணறிவை வழங்கியது. போக்குவரத்து, சோதனைச் சாவடிகள், கோவில்கள், அறிவிப்புப் பலகைகள் ஆகியன வடக்குக் கிழக்கை எவ்வாறு அறியக்கூடியதாகவும் நிர்வகிக்கக்கூடியதாகவும் மாற்ற முயன்றது என்பதைப் படிப்பதற்கான ஒரு வழியாக மாறின. மன்னாரில் ஒரு வயதான விவசாயி கவனித்தபடி, “கிணறுகளை மீண்டும் கட்டுவதற்கு முன்பு அவர்கள் வீதியை மீண்டும் கட்டினார்கள். கொழும்பிலிருந்து அதைக் காண முடியும் என்பதால் வீதி முதலில் வருகிறது.”
இந்தப் பின்புலத்திலேயே, கொள்கைச் சொல்லாட்சியைத் தாண்டி, வீதி உட்கட்டமைப்பு எவ்வாறு மக்களை உள்வாங்குகிறது, கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்பதைப் பார்ப்பது தேவையானது. இந்த அடிப்படையான பரிசீலனைகள் மூலம்தான் போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பின் அரசியல் – அதன் அபிலாஷைகள், விலக்குகள், அன்றாடப் பேச்சுவார்த்தைகள் – பார்வைக்கு வருகின்றன.
A9 நெடுஞ்சாலை: இறையாண்மை மற்றும் கண்காணிப்பின் உயிர்நாடி
இலங்கையில் A9 நெடுஞ்சாலையைப் போலவே சில உட்கட்டமைப்புகள் குறியீட்டு ரீதியாக சக்தி வாய்ந்தவை. கண்டியிலிருந்து வவுனியா, கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு வழியாக யாழ்ப்பாணம் வரை நீண்டு, நீண்டகாலமாக ஓர் உயிர்நாடியாகவும், பிரிக்கும் கோடாகவும் இருந்து வருகிறது – தீவைச் சமமாக இணைத்து உடைத்த ஒரு வீதி. உள்நாட்டுப் போரின் போது, அதன் மூடல் வடக்கு மற்றும் தெற்கு இடையேயான பொருளாதார மற்றும் உணர்ச்சி உறவுகளைத் துண்டித்தது. 2009க்குப் பிறகு, அதன் மறுதிறப்பு அரசின் மறு ஒருங்கிணைப்பின் மிகவும் வெளிப்படையான நிரூபணமாக மாறியது, மேலும் அதன் மறுகட்டமைப்பு சக்தியினதும் முன்னேற்றத்தினதும் ஒரு காட்சியாக மாறியது.
முதல் பார்வையில், இந்த நெடுஞ்சாலை போருக்குப் பிந்தைய செயற்றிறனுக்கு ஒரு சான்றாகத் தெரிகிறது (மென்மையான தார் வீதி, புதிய பாலங்கள் மற்றும் ஒரு காலத்தில் வெற்றுநிலங்களாக இருந்த பகுதிகளை வரிசையாகக் கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள், காற்றாலைகள்). ஆயினும் அதன் மேற்பரப்பிற்குக் கீழே இறையாண்மை மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட மிகவும் சிக்கலான கதை உள்ளது.
வவுனியாவில் உள்ள ஓர் அரசுப் பொறியாளர் என்னிடம் கூறினார், “A9 என்பது வெறும் வீதி அல்ல. அது தேசத்தின் முதுகெலும்பு. இதைத் திறக்கும்போது, நாங்கள் மீண்டும் நாட்டைத் திறக்கிறோம்.” அதிகாரிகள் மற்றும் இராணுவத் திட்டமிடுபவர்களுக்கு, வீதி பிராந்தியக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. வடக்குக் குடியிருப்பாளர்களுக்கு, இது அரசின் மீள்குடியேற்றத்தைக் குறிக்கிறது. “நாங்கள் வீதியை விரும்பினோம், ஆனால் அதனுடன் வந்த அனைத்தும் அல்ல” என்று கிளிநொச்சியில் உள்ள ஒரு சிறு வணிகர் கூறினார்.
புனரமைப்பின் ஆரம்ப ஆண்டுகளில், இராணுவப் பொறியியல் படையினர் A9 இன் மறுசீரமைப்பில் பெரிதும் ஈடுபட்டனர். கட்டுமான முகாம்கள் ‘கண்டோன்மென்ட்’களாக இரட்டிப்பாகின. மேலும் சோதனைச் சாவடிகள் அகற்றப்படுவதற்குப் பதிலாக மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான பயணத்தை கண்காணிப்பு அடுக்குகளைக் கடந்து செல்வது போல் உணர்ந்ததாக பயணிகள் விவரித்தனர் – “ஒவ்வொரு சில மைல்களுக்கும், ஒரு கொடி, ஒரு பலகை, ஒரு சீருடை,” ஒரு பேருந்து ஓட்டுநர் கூறினார். 2013க்குப் பிறகு முறையான சோதனைச் சாவடிகள் மறைந்தாலும், கவனிக்கப்படும் உணர்வு நீடித்தது. குடியிருப்பாளர்கள் நெடுஞ்சாலையை, ‘கண்காணிப்பின் சாலை’ என்று குறிப்பிடத் தொடங்கினர்.
A9 உள்ளூர்ப் பொருளாதாரங்களையும் மறுசீரமைத்தது. இது விவசாய விளைபொருட்களையும் மீன்களையும் தெற்குச் சந்தைகளுக்குக் கொண்டுசெல்ல உதவியது. ஆனால் பல கிராமவாசிகள், தெற்கு மொத்த விற்பனையாளர்கள் விரைவாக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியதைக் குறிப்பிட்டனர். “முன்பு, நாங்கள் எங்கள் சொந்தச் சந்தைகளில் விற்றோம்” என்று பரந்தனைச் சேர்ந்த ஒரு விவசாயி விளக்கினார். “இப்போது, குருநாகலிலிருந்து வரும் லொறிகள் எல்லாவற்றையும் வாங்குகின்றன. நாங்கள் அதிக பணத்தைக் காண்கிறோம், ஆனால் குறைவான கட்டுப்பாடே உள்ளது.” பொருளாதார மறுமலர்ச்சி சார்புடன் வந்தது. வீதிகள் புழக்கத்தைப் போலவே பிரித்தெடுக்கும் வழிகளாகவும் மாறின.
A9 வழியாக மொழி மற்றும் குறியீட்டுவாதம் கலாசார மேலாதிக்கம் செயற்படும் நுட்பமான வழிகளை வெளிப்படுத்துகின்றன. 2012 மற்றும் 2022க்கு இடையில் நடாத்தப்பட்ட கள ஆய்வுகள் தமிழை விட சிங்களத்தை அதிக அளவில் முன்னுரிமைப்படுத்தும் பலகைகளைப் பதிவு செய்தன. அரசாங்கத்தால் கட்டப்பட்ட அடையாளப் பலகைகளில், சிங்கள உரை முதலில் மற்றும் பெரிய எழுத்துருவில் தோன்றியது. தமிழ் மொழிபெயர்ப்புகள் சில நேரங்களில் தவறாக எழுதப்பட்டன அல்லது முற்றிலும் தவிர்க்கப்பட்டன.
இத்தகைய அடையாளங்கள் நிர்வாக மேற்பார்வையை விட அதிகமாக உள்ளது. போருக்குப் பிந்தைய இலங்கையில் சொந்தமானவர்களின் படிநிலையை இது குறியீடாக்குகிறது. யாழ்ப்பாணத்தில் ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியர், தனது பேரக்குழந்தைகள் தமிழ் எழுத்துகளுக்கு முன் சிங்கள எழுத்துகளைப் படிக்கக் கற்றுக்கொண்டதை விவரித்தார், “ஏனென்றால் வீதி அவர்களுக்கு எது முக்கியம் என்பதைச் சொல்கிறது.” தார் படிந்த நிலத்தில், மொழிகளின் வரிசை அதிகாரத்தின் அமைதியான கற்பித்தலாக மாறுகிறது.
மொழிக்கு அப்பால், A9 இன் வீதியோர நிலப்பரப்பு தேசியவாத அடையாளங்களுக்கான ஒரு பாதைவிரிப்பாக மாறியது. போர் வெற்றி நினைவுச்சின்னங்கள் முக்கிய சந்திப்புகளில் அதிகரித்தன, அவை புத்த கோவில்கள், கொடிகளால் சூழப்பட்டுள்ளன. கிளிநொச்சிக்கு அருகில், தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் ஒரு சிப்பாயின் உயரமான சிலை, ஒரு காலத்தில் காணாமல் போன, பொதுமக்களுக்கு நினைவுச்சின்னமாக இருந்ததை மாற்றியது. “எங்கள் நினைவுகள் இருந்த இடத்தில் அவர்கள் விகாரைகளைக் கட்டுகிறார்கள்” என்று ஓர் உள்ளூர்ப் பத்திரிகையாளர் கூறினார். “வீதி ஒவ்வொரு நாளும் யார் வென்றார்கள் என்பதைக் காட்டுகிறது.” இராணுவத்தால் நடாத்தப்படும் கஃபேக்கள் மற்றும் நினைவுப் பரிசு கடைகளுடன் இணைந்து, இந்த நிறுவல்கள், A9 இனை வெற்றியாளர்களுக்கான நினைவுச்சின்ன நடைபாதையாக மாற்றின.
ஆனாலும், வீதியும் தெளிவற்ற தன்மையைக் கொண்டிருந்தது. பல குடியிருப்பாளர்கள் அது கொண்டுவந்த இணைப்புக்கு உண்மையான பாராட்டுகளைத் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனை நிர்வாகி, “ஒரு காலத்தில் கொழும்பை அடைய இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்ட நோயாளிகள் இப்போது ஏழு மணி நேரத்தில் பயணம் செய்யலாம்” என்று விளக்கினார். தெற்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பயணம் செய்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் இளம் பெண், “இந்த வீதி எங்களுக்கு வாய்ப்பை அளித்தது, ஆனால் வெளிப்பாட்டையும் அளித்தது. நாங்கள் எப்போதும் சமமாக அல்ல, மற்றவர்களைப் போலவே பார்க்கப்படுகிறோம்” என்று பிரதிபலித்தார். இதனால் A9 விடுதலை – கண்காணிப்பு, முன்னேற்றம் – அடிபணிதல் ஆகிய முரண்பட்ட இருமைகளை உள்ளடக்கியது.
2024 ஆம் ஆண்டளவில், A9 இன் இராணுவமயமாக்கப்பட்ட ஒளி மென்மையாகிவிட்டது. ஆனால் அதன் குறியீட்டு எடை அப்படியே இருக்கிறது; போருக்குப் பிந்தைய அமைதியின் முரண்பாடுகளால் மின்னியது. வேகம் மற்றும் தெரிவுநிலையில் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைதி. வீதியின் நேராக்கப்பட்ட வளைவுகள் மற்றும் அகலப்படுத்தப்பட்ட பாதைகள் இணைப்பைப் பற்றியது போலவே, கட்டுப்பாட்டையும் பற்றியது. அதன் மேற்பரப்பு வழியாக, அரசு வெற்றியை விவரித்தது. அதன் பயன்பாட்டின் மூலம், சமூகங்கள் உயிர்வாழ்வைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தின. 2023 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு வயதான பாதிரியார் கூறியது போல், “A9 என்பது வார்த்தைகள் இல்லாத ஒரு பிரசங்கம். அது நம்மை நகரச் சொல்கிறது, ஆனால் கற்களை யார் போட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும் சொல்கிறது.”
மொழி, அடையாளங்கள், நிலப்பரப்பை மீண்டும் எழுதுதல்
போருக்குப் பிறகு, மொழி அமைதிக்குப் போட்டியிட்ட மிகவும் புலப்படும் நிலப்பரப்புகளில் ஒன்றாக மாறியது. வீதிகள், அவற்றின் அடையாளப் பலகைகள், மைல்கற்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுடன், மொழியியல் மற்றும் கலாசார அதிகாரத்தின் பாதைவிரிப்புகளாகச் செயற்பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரை, பொது அடையாளங்களில் மொழிகளின் முன்னுரிமை வரிசை, இடப்பெயர்களின் எழுத்துப்பிழைகள் மற்றும் எழுத்துரு அளவுகள் கூட சொந்தமானது, அங்கீகாரம், அதிகாரம் பற்றிய கதைகளைச் சொல்லின.
2011 மற்றும் 2023க்கு இடையில் A9, A32 மற்றும் A35 வழித்தடங்களில் நடாத்தப்பட்ட கள ஆய்வு ஒரு பரவலான வடிவத்தை வெளிப்படுத்தியது. சிங்கள மொழியிலான வீதிக்கற்கள் முதலில் தோன்றின, அதைத் தொடர்ந்து ஆங்கிலம் இறுதியாகத் தமிழ். பெருந்தெருக்கள் அமைச்சின் அதிகாரபூர்வ நியாயப்படுத்தல், அடையாளப் பலகைகளுக்கு ‘தரப்படுத்தப்பட்ட தேசிய வார்ப்புருக்கள்’ என்று மேற்கோள் காட்டியது. ஆனால் நடைமுறையில், மொழியின் படிநிலை போருக்குப் பிந்தைய அரசின் படிநிலையைப் பிரதிபலித்தது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் உள்ளூர்ப் பிரதேசசபை அதிகாரி விளக்கினார், “வடிவமைப்பை மாற்ற வேண்டாம் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. கொழும்பு வடிவமைப்பை அனுப்பியது. நாங்கள் முதலில் தமிழை விரும்பினாலும், உத்தரவின்படி எல்லாம் செய்யப்பட்டது.” இந்த அதிகாரத்துவக் கடினத்தன்மை, அரசு உட்கட்டமைப்பின் அன்றாடத் தெரிவுநிலை மூலம் சிங்கள மொழியியல் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் ஓர் ஆழமான அரசியல் நோக்கத்தை மறைத்தது.
பல நகரங்களில், மொழிபெயர்ப்புப் பிழைகள், விடுபட்டவைகளால் மக்கள் தங்கள் விரக்தியைப் பற்றிப் பேசினர். கிளிநொச்சியில், ஒரு பாடசாலை அதிபர் பேருந்து நிலையத்திற்கு வெளியே ‘கிளிநொச்சிக்கு வருக’ என்று எழுதப்பட்ட பலகையைச் சுட்டிக்காட்டினார். அது சிங்கள ஒலிப்பு அமைப்புடன் எழுதப்பட்டது. “இது சிறிய பிழை மட்டுமே” என்று அவர் கூறினார். “ஆனால் இது நாம் யார் என்பதை மாற்றுகிறது. எங்கள் பெயர் அவர்களின் எழுத்துகளில் வித்தியாசமாக ஒலிக்கிறது.” மட்டக்களப்பில், ஒரு முஸ்லிம் கடைக்காரர் கருத்துத் தெரிவிக்கையில், “இங்கே ஒவ்வொரு அடையாளமும் இப்போது சிங்களத்தில் தொடங்குகிறது. அவர்கள் ஒரு பாலத்தைச் சரிசெய்யும் போது கூட, பெயர்ப்பலகை முதலில் சிங்களத்தில் வருகிறது. அது யாருக்குச் சொந்தமானது என்று சொல்லும் முத்திரை போன்றது.”
இந்த அவதானிப்புகள் அறிஞர்கள் ‘குறியீட்டியல் அரசு’ (Semiotic State) என்று அழைப்பதன் இயக்கவியலை எதிரொலிக்கின்றன. பொது இடத்தில் மொழி அரசியல் அதிகாரத்தை இயல்பாக்கும் ஓர் ஆட்சியே இவ்வாறு அழைக்கப்படுகிறது (லெஃபெப்வ்ரே, 1991; லார்கின், 2013). வீதி அடையாளங்களில் மொழிகளின் வரிசைமுறை அமைதியாக இறையாண்மையைச் செய்கிறது. சிங்களம் காட்சியியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் போது, தமிழ், முஸ்லிம் குடியிருப்பாளர்கள், அவை தம்மை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை நினைவூட்டுவதாக உள்ளதாக விளங்கிக் கொள்கிறார்கள். “நமது சொந்த வழியைக் கண்டுபிடிக்க நாம் அவர்களின் எழுத்து முறையைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று முல்லைத்தீவைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக மாணவர் குறிப்பிட்டார், “அதுதான் இந்த வீதியின் அர்த்தம்.”
ஆனாலும் இந்தக் கதை செயலற்ற வரவேற்பைப் பற்றியது அல்ல. அதே வீதிகளில் உள்ளூர் எதிர்ப்பு நடவடிக்கைகள் வெளிப்பட்டன. 2017 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் உள்ள சமூகக் குழுக்கள் மங்கிப்போன அல்லது தவறான பலகைகளில் தமிழ்ப் பெயர்களை மீண்டும் வண்ணம் தீட்டத் தொடங்கின. “எழுத்துகள் மறைந்தால், நாங்களும் மறைந்துவிடுகிறோம்” என்று இந்த முயற்சிகளில் ஈடுபட்ட ஓர் ஆர்வலர் கூறினார். சில சந்தர்ப்பங்களில், நகராட்சி ஊழியர்கள் மத்திய ஒப்புதல் இல்லாமல் கூட, அமைதியாக தமிழ் சமத்துவத்தை மீட்டெடுத்தனர். 2022 இல் ஒரு மாவட்டப் பொறியாளர் ஒப்புக்கொண்டார், “தணிக்கைகள் முடிந்த பிறகு நாங்கள் தமிழைச் சேர்க்கிறோம். அனுமதி கேட்பதை விட மன்னிப்புக் கேட்பது எளிது.”
மொழி அரசியல் அடையாளங்களைத் தாண்டி நகரங்கள் மற்றும் சந்திப்புகளை மறுபெயரிடுதல் வரை நீட்டிக்கப்பட்டது. போருக்குப் பிந்தைய நிர்வாக வரைபடங்கள் தமிழ் இடப்பெயர்களின் நுட்பமான சிங்களமயமாக்கலைக் காட்டின. உதாரணமாக, பூநகரி, பூனரின் ஆனது. அதேநேரத்தில் துணுக்காய், துனுக்கையாவாகத் தோன்றியது. இந்த மாற்றங்கள், சிறியதாகத் தோன்றினாலும், அதிகாரத்துவ நினைவகத்தில் இடங்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டன என்பதை மாற்றியது. “வரைபடம் மற்றொரு வீதியாக மாறுகிறது” என்று யாழ்ப்பாண நூலகர் ஒருவர் குறிப்பிட்டார். “அந்த வீதியில், நாம் நமது பழைய நினைவுகளை இழந்து கொண்டிருக்கிறோம்.”
நெடுஞ்சாலைகளில் மொழியியல் நிலப்பரப்புகளின் மாற்றம், தெற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் வருகையுடன் ஒத்துப்போனது. புதிய அடையாளப் பலகைகள் (பெரும்பாலும் சிங்கள மொழியில் மட்டுமே எழுதப்பட்ட விளக்கக் குறிப்புகளுடன்) புத்த கோவில்கள், போர் நினைவுச்சின்னங்களுக்கு பார்வையாளர்களை வழிநடத்தின. தமிழ்க் குடியிருப்பாளர்கள் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட தெரிவுநிலையை குறியீட்டு விலக்காக விளக்கினர். “வழிமுறைகள் கூட வீதி எந்த மதத்திற்குச் சேவை செய்கிறது என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன” என்று வவுனியாவில் உள்ள ஒருவர் கூறினார். இதற்கு நேர்மாறாக, வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்/ முஸ்லிம் மதத்தலங்கள் அரிதாகவே அதிகாரபூர்வ அடையாளங்களைப் பெற்றன. இந்த ஏற்றத்தாழ்வு இருந்தபோதிலும், உள்ளூர்ப் படைப்பாற்றல் நீடித்தது. பயணிகளை வழிநடத்த அல்லது சமூக எல்லைகளைக் குறிக்க குடியிருப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ் எழுத்துகளில் கையால் செய்யப்பட்ட பலகைகள் சிறிய வீதிகளில் தோன்றின. பெரும்பாலும் தகரத்தாள்கள் அல்லது மரப் பலகைகளில் வரையப்பட்ட இந்த வட்டார மொழி அடையாளங்கள், முறையான ஒழுங்கிற்கு அமைதியான எதிர்க்கதைகளாக நின்றன. அவற்றின் இருப்பு ஓர் இணையான வரைபடத்திற்குச் சாட்சியமளித்தது. அரச அதிகாரத்தை விட நினைவிலிருந்தும் சொந்தமானதிலிருந்தும் வரையப்பட்ட ஒன்றாக அது வெளிப்பட்டது.
2010களின் பிற்பகுதியில், சில அரசு நிறுவனங்கள் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கின. 2019 ஆம் ஆண்டில் வீதி அபிவிருத்திச் சபையின் சுற்றறிக்கை ‘சீரான மும்மொழி அடையாளங்களுக்கான தேவையை’ ஒப்புக்கொண்டது. ஆனால் செயற்படுத்தல் சீரற்றதாகவே இருந்தது. 2021 இல் ஒரு பொறியாளர் குறிப்பிட்டது போல், “எங்களிடம் சுற்றறிக்கை உள்ளது, ஆனால் நடைமுறைப்படுத்த விருப்பம் இல்லை.” சமத்துவமின்மை நீடித்தது, ஆணையால் அல்ல, செயலற்ற தன்மையால். குறிப்பாக சமத்துவமின்மையை இயல்பாக்கும் ஒரு கட்டமைப்புப் பழக்கத்தால் இந்தப் பாகுபாடு நீடித்தது.
இந்த மொழியியல் படிநிலைகளைப் பகுப்பாய்வு செய்வதில், போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பின் அரசியல் போர்க்களத்திற்கு அப்பால் நீண்டுள்ளது என்பது தெளிவாகிறது. மொழி, வளர்ச்சியின் அடையாளமாகவும் ஆதிக்கத்தின் சமிக்ஞையாகவும் செயற்பட்டது. ஒவ்வொரு அடையாளப் பலகை, மைல்கல் மற்றும் தகடு அதிகாரத்தின் ஒரு கலைப்பொருளாக மாறியது. சமரசம் அரசியலமைப்புகள் மற்றும் உரைகளில் மட்டுமல்ல, வீதியின் அன்றாட உரையிலும் எழுதப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டுகிறது. திருகோணமலையில் உள்ள ஒரு தமிழ் ஆசிரியர் சுருக்கமாகக் கூறியது போல், “வீதி நம்மை இணைக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எழுத்துகள் கூடச் சந்திப்பதில்லை. சிங்களம் முதலில் செல்கிறது, தமிழ் பின்னால் பின்தொடர்கிறது. அதுதான் இந்தப் பாதையில் எங்கள் பயணம்.”
அன்றாட வீதிகள்: A32, A35 மற்றும் கடலோரப் பாதைகள்
போருக்குப் பிந்தைய இறையாண்மையின் முதுகெலும்பாக A9 இருந்தால், A32 மற்றும் A35 ஆகியன அதன் நீட்டிக்கப்பட்ட நரம்புகளாக இருந்தன. இவை வடக்குக் கிழக்கு மாகாணங்களின் கடலோர விளிம்புகளை நோக்கிக் கிளை பரப்புகின்றன. மன்னாரை – பூநகரி (A32) மற்றும் முல்லைத்தீவை – மட்டக்களப்பு (A35) உடன் இணைக்கும் இந்த வீதிகள், 2011 மற்றும் 2018க்கு இடையில் பல நிதி நீரோடைகளின் கீழ் புனரமைக்கப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் வடக்கு வீதி இணைப்புத் திட்டம், உலக வங்கியின் போக்குவரத்துத்துறை அபிவிருத்தித் திட்டம் மற்றும் சீன அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்ட இருதரப்பு மானியங்கள் ஆகியவற்றின் அதிகாரபூர்வ நோக்கம் ‘சந்தை அணுகல் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாகும்’. இருப்பினும், நடைமுறையில், இந்த வீதிகள் வாழ்வாதாரங்கள், சமூகத்தின் இயங்கியல், அடையாளம் ஆகியவற்றின் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தின.
மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை முழுவதும் 2011 மற்றும் 2023க்கு இடையில் நடாத்தப்பட்ட கள ஆய்வு, இந்தப் புதிய கடலோர அசைவியக்கங்கள் கடலோர வாழ்க்கையின் தாளங்களை மாற்றியமைத்தன என்பதை வெளிப்படுத்தின. மன்னாரில், புதிதாக அமைக்கப்பட்ட A32 பாதை கொழும்பின் சந்தைகளுக்கான பயணத்தை எவ்வாறு குறைத்தது, ஆனால் அதே நேரத்தில் தங்கள் கடற்கரைகளை போட்டிக்கு எவ்வாறு திறந்தது என்பதை மீன்பிடிச் சமூகங்கள் விவரித்தன. “இப்போது வாங்குபவர்கள் நீர்கொழும்பு மற்றும் சிலாபத்திலிருந்து வருகிறார்கள்” என்று 2013 இல் பேசாலையில் ஒரு மீனவர் கூறினார். “அவர்கள் பனிக்கட்டியுடன் லொறிகளில் பணத்தைக் கொண்டு வருகிறார்கள்; எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறார்கள் – எங்கள் மீன், எங்கள் இடம், எங்கள் கதைகள் கூட.”
முல்லைத்தீவில், போரின் போது முழுமையாக அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட கிராமங்கள் வழியாக A35 வீதி பாம்பு போல இடைவெட்டிச் சென்றதால், வீதிப் புனரமைப்பு ஓர் ஆசீர்வாதமாகவும் காயமாகவும் இருந்தது. “இந்த வீதிக்காக நாங்கள் காத்திருந்தோம்” என்று ஒட்டுசுட்டானைச் சேர்ந்த ஒரு விதவை கூறினார். “ஆனால் அது வந்தபோது, லொறிகளும் இராணுவ வீரர்களும் கூடவே வந்தார்கள். இது எங்கள் முற்றத்திற்கு நாங்கள் அரசை அழைத்தது போல் உள்ளது.” இராணுவ முகாம்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் போக்குவரத்துக் கிடங்குகளுக்கு வீதியோர நிலங்கள் எவ்வாறு விரைவாகக் கையகப்படுத்தப்பட்டன என்பதை உள்ளூர்வாசிகள் கவனித்தனர். இந்த இடங்கள் கட்டுப்பாட்டு நீட்டிப்புகளாக மாறியது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட அறிக்கைகள் A32 மற்றும் A35 இனை பொருளாதார மறுமலர்ச்சியின் இயந்திரங்களாகப் பாராட்டின. இவை பொருட்களின் செயற்றிறன், பயண நேரத்தில் முன்னேற்றங்களை வலியுறுத்தின. ஆனால் இந்த அளவீடுகள் நன்மை விநியோகத்தின் சீரற்ற தன்மையை மறைத்தன. உதாரணமாக, மேற்குக் கடற்கரையில், மேம்படுத்தப்பட்ட A32, தெற்கு முதலீட்டாளர்களுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களால் மணல் அகழ்வு மற்றும் சுண்ணாம்புக்கல் பிரித்தெடுப்பை எளிதாக்கியது. “டிப்பர்கள் ஒருபோதும் நிற்காது” என்று மன்னாரில் ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் கூறினார். “அவர்கள் அபிவிருத்தி என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் எங்கள் நிலத்தை எடுத்துச் செல்கிறார்கள், இயற்கையழிவின் சுமைமை எம்மீது ஏற்றுகிறார்கள்.” இந்தத் திட்டங்களுடன் சேர்ந்து வரும் சுற்றுச்சூழல் சீரழிவு உள்ளூர் விரக்தியை அதிகப்படுத்தியது. நன்கொடையாளர் ஆவணங்கள் நிலைத்தன்மையை வலியுறுத்தியிருந்தாலும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய அதிகார வரம்புகள் மற்றும் கடற்கரையில் இராணுவத்தின் முறைசாரா மேற்பார்வை காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை அமல்படுத்துவது பலவீனமாக இருந்தது.
இந்த வீதிகளில் பெண்களின் அனுபவங்கள் போருக்குப் பிந்தைய நிலையின் மற்றொரு அடுக்கை வெளிப்படுத்துகின்றன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில், ஒரு காலத்தில் சந்தைக்குச் செல்ல மிதிவண்டிகளை நம்பியிருந்த பெண்கள், புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடி, பேருந்தில் பயணிக்கத் தொடங்கினர். இருப்பினும், இந்தச் செயற்பாடு ஆபத்துகளைக் கொண்டிருந்தது. “பேருந்துகள் வேகமாகச் செல்கின்றன” என்று ஒரு சந்தை விற்பனையாளர் கூறினார். “ஆனால் சந்திப்புகளில் உள்ள வீரர்களின் பார்வை மெதுவாக உள்ளது. அவை உங்களுடன் இருக்கும்.” பல பெண்களுக்கு, வீதியானது வாய்ப்புகளின் ஒரு நடைபாதையாகவும், பாலினக் கண்காணிப்புக்கான தளமாகவும் மாறியது.
A35, நடைபாதை வழிபாடு, யாத்திரை முறைகளையும் மறுவரையறை செய்தது. ஒரு காலத்தில் உள்நாட்டுப் பாதைகளைப் பின்பற்றிய கோயில் திருவிழா ஊர்வலங்கள் புதிய போக்குவரத்து முறைகளுக்கு இடமளிக்கும் வகையில் திருப்பி விடப்பட்டன. “எங்கள் கடவுள்கள் பழைய பாதைகள் வழியாகப் பயணித்தனர்” என்று முல்லைத்தீவுக்கு அருகிலுள்ள ஒரு கோயில் அறங்காவலர் விளக்கினார். “இப்போது நாம் ஒவ்வொரு அடிக்கும் காவல்துறையிடம் அனுமதி கேட்க வேண்டும்.” கிழக்குக் கடற்கரையில் உள்ள முஸ்லிம் சமூகங்கள் இதேபோன்ற தடைகளை அனுபவித்தன. குறிப்பாக திருகோணமலைக்கு அருகில், வெள்ளிக்கிழமைக் கூட்டங்களின் அதிகரித்த காவல் வீதிப்பாதுகாப்பு நெறிமுறைகளுடன் குறுக்கிடுகிறது. இந்த மாற்றங்கள் மத வாழ்க்கையை அதிகாரத்துவ மத்தியஸ்தத்தால் நிரப்பி, வீதியை அணுகல், பதட்டம் ஆகிய இரண்டின் அடையாளமாக மாற்றின.
நன்கொடையாளர் கொள்கை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் குறுக்குவெட்டு மற்றொரு பரிமாணத்தைச் சேர்த்தது. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கிக் கட்டமைப்புகளுக்கு பங்குதாரர் ஆலோசனை தேவைப்பட்டாலும், நடைமுறையில் இவை மாவட்டச் செயலகங்கள் மூலம் கடுமையான இராணுவச் செல்வாக்கின் கீழ் நடத்தப்பட்டன. திருகோணமலையில் ஒரு மூத்த அரசு ஊழியர் ஒப்புக்கொண்டார், “நாங்கள் படிவங்களை நிரப்புகிறோம்; நன்கொடையாளர்கள் தங்கள் பங்கேற்பு எண்களைப் பெறுகிறார்கள். ஆனால் மக்களின் குரல்கள் அரிதாகவே திட்டத்தை மாற்றுகின்றன.” கணிசமான ஈடுபாடு இல்லாத இந்த நடைமுறை இணக்கம், பெர்குசன் (1990) ‘வளர்ச்சிக்கான அரசியல் எதிர்ப்பு இயந்திரம்’ (Anti-politics Machine) என்று அழைத்ததை எடுத்துக்காட்டுகிறது. இங்கு தொழில்நுட்பத் தலையீடுகள் அரசியல் நிலப்பரப்பை ஆழமாக நீக்குகின்றன.
இதற்கிடையில், A32 இல், அரசினதும் இராணுவத்தினதும் ஒத்துழைப்பு பொதுமக்கள் எல்லைகளை மங்கச் செய்தது. இராணுவத்திற்குச் சொந்தமான உணவகங்கள் மற்றும் ஓய்வு இல்லங்கள் வீதியோரங்களில் புள்ளிகளாக உள்ளன. அவை ‘சமூக சுற்றுலா முயற்சிகள்’ என்று சந்தைப்படுத்தப்படுகின்றன. தலைமன்னாரைச் சேர்ந்த ஒரு மீனவர் கருத்துத் தெரிவித்தார், “நாங்கள் போட்டியிட முடியாது. வரி செலுத்தாததால் அவர்கள் மலிவாக விற்கிறார்கள். ஆதாமின் பாலத்தைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் கூட அவர்களின் தங்கும் விடுதிகளில் தங்குகிறார்கள்.” இதனால், நன்கொடையாளர்கள் ‘இணைப்பு’ என்று விவரித்தது பெரும்பாலும் உள்ளூரில் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் பொருளாதார இடப்பெயர்ச்சிக்கு வழிவகுத்தது.
இந்த ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், வீதிகள் புதுப்பித்தலின் கதைகளையும் கொண்டிருந்தன. மன்னாரில் உள்ள இளம் தொழில்முனைவோர் சமூக ஊடகங்கள் மற்றும் குளிர்சாதன வேன்களைப் பயன்படுத்தி கொழும்புக்குக் கடல் உணவு விநியோக வலையமைப்புகளை நிறுவினர். திருகோணமலையில், தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் போக்குவரத்துச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள கூட்டுறவுகளை உருவாக்கினர். இந்தச் சிறிய தழுவல் செயல்கள், சமூகங்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளுக்குள் எவ்வாறு நிறுவனத்தை மீட்டெடுத்தன என்பதை விளக்குகின்றன. “நாங்கள் வீதியை நிறுத்த முடியாது” என்று முல்லைத்தீவில் உள்ள ஒரு கடைக்காரர் கூறினார், “ஆனால் அதில் எப்படி நடப்பது என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியும்.”
2024 அளவில், A32 மற்றும் A35 போருக்குப் பிந்தைய நிலப்பரப்பின் சாதனங்களாக மாறிவிட்டன. அவை நம்பிக்கையினதும் மேலாதிக்கத்தினதும் அடையாளங்கள். நன்கொடையாளர் அறிக்கைகள் ‘பிராந்திய ஒருங்கிணைப்பை’ மேம்படுத்துவதில் தங்கள் வெற்றியைக் கொண்டாடின. இருப்பினும் கள நேர்காணல்கள் தொடர்ந்து அமைதியின்மையை வெளிப்படுத்தின. வீதிகள் உண்மையில் போரினால் நீண்டகாலமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை இணைத்தன. ஆனால் அவை புதிய வடிவிலான சார்பு, சமத்துவமின்மை மற்றும் கண்காணிப்பையும் அறிமுகப்படுத்தின. தார்வீதிகள் பொருளாதார வாக்குறுதியுடன் மட்டுமல்லாமல், போட்டியிடும் உரிமையின் உராய்வுடனும் மின்னின.
மட்டக்களப்பில் ஓர் ஆசிரியர் சுருக்கமாகக் கூறியது போல், “முன்பு, நாங்கள் துப்பாக்கிகளுக்குப் பயந்தோம். இப்போது வீதிகளின் வருகையால் நாம் பின்தங்கி விடுவோமோ என்று அஞ்சுகிறோம்.” அவரது வார்த்தைகள் போருக்குப் பிந்தைய இயக்கத்தின் முரண்பாட்டைப் படம்பிடித்தன. அங்கு நகரும் சுதந்திரம் இணங்க வேண்டிய கட்டாயத்துடன் இணைந்து செயற்படுகிறது.
நினைவுச்சின்னங்கள், வழிபாட்டிடங்கள், நகரும் நினைவுகள்
இலங்கையின் வடக்குக் கிழக்கில் புதிதாக அமைக்கப்பட்ட வீதிகளில், புனிதத் தலங்களும் நினைவுச்சின்னங்களும் நினைவகத்தினதும் அதிகாரத்தினதும் மைல்கற்களாக நிற்கின்றன. 2010 மற்றும் 2024க்கு இடையில், புனரமைப்பு வேகம் அதிகரித்ததால், இந்தக் கட்டமைப்புகள் பெருகின. இவை சுற்றுவளைவுகள், சந்திப்புகள் மற்றும் பால முகடுகளில் தோன்றின. சில அரசாலும் இராணுவத்தாலும் கட்டப்பட்டவை, மற்றவை உள்ளூர் பக்தி மூலம் வெளிப்பட்டன. ஒன்றாக அவர்கள் வீதியோரத்தை வெற்றி, துக்கம், சொந்தம் என்பன மோதும் ஒரு சர்ச்சைக்குரிய புனிதப் புவியியலாக மாற்றினர்.
கிளிநொச்சியில், ஒரு விதவை தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு குறுக்கு வழியில் ஒரு சிறிய புத்தர் சிலையைச் சுட்டிக்காட்டினார்: “அது எங்கள் நிலம்” என்று அவர் அமைதியாகக் கூறினார். “இப்போது அது ஒவ்வொரு காலையிலும் நம்மைப் பார்க்கிறது.” வீதி விரிவாக்கத்திற்குப் பிறகு ஓர் இராணுவப் பிரிவால் நிறுவப்பட்ட சிலையுடன், ஒரு தேசியக் கொடியும், ஒற்றுமையின் மறுசீரமைப்பு 2009 இனை நினைவுகூரும் ஒரு பலகையும் இருந்தன. உள்ளூர்வாசிகளுக்கு, இது கண்காணிப்பு, புனிதப்படுத்தல் ஆகிய இரண்டையும் குறிக்கிறது. இது போருக்குப் பிந்தைய இடஞ்சார்ந்த மாற்றத்தின் பெரும்பகுதியை வரையறுத்த மதத்தினதும் ஆட்சியினதும் பிணைப்பின் அடையாளம்.
பியர் நோரா (1989) விவரித்தபடி, ‘நினைவின் தளங்கள்’ (Lieux de mémoire) நினைவு வடிவத்தால் உயிருள்ள நினைவகம் இடம்பெயரும்போது வெளிப்படுகின்றன. வடக்குக் கிழக்கில், வீதிகள் அத்தகைய தளங்களின் உயிர்நாடியாக மாறின. அரசின் நினைவுச்சின்னங்கள் இழப்பை மறைத்து வெற்றியை நினைவுகூர்ந்தன. ஆனையிறவுக்கு அருகில், வீரர்கள் தேசியக் கொடியை உயர்த்துவதைச் சித்தரிக்கும் வெற்றி நினைவுச்சின்னம், பொதுமக்களையும் போராளிகளையும் நினைவுகூரும் பொதுவான இடமாக உள்ளூர்வாசிகள் நினைவுகூர்ந்ததை மாற்றியது. “இனி நாம் அங்கு விளக்குகளை ஏற்ற முடியாது” என்று ஒரு முன்னாள் கிராமத் தலைவர் கூறினார். “புதிய நினைவுச்சின்னம் நம்மை மறக்கச் சொல்கிறது” என்பதே அவரின் முடிவாக இருந்தது.
லெஃபெவ்ரேவின் (1991) ‘களத்தின் உற்பத்தி’ (Production of Space) பற்றிய யோசனை இந்த மாற்றத்தை விளக்க உதவுகிறது: இடம் வெறுமனே புனரமைக்கப்படவில்லை, ஆனால் மறுகுறியீடு செய்யப்பட்டது. மென்மையான தார் வீதிகள் மற்றும் சுற்றுவளைவுகள் ஒற்றுமையினதும் மீட்பினதும் தேசிய கதைக்கான தளங்களாகச் செயற்பட்டன. சந்திப்புகளில் உள்ள நினைவுச்சின்னங்கள், எம்பெம்பே (2003) ‘உயிர்ப்பலி அரசியல்’ (Necropolitical) என்று அழைத்த செயற்பாட்டைச் செய்தன. அவை நினைவகத்தையும் தெரிவுநிலையையும் நிர்வகித்து, எந்த மரணங்கள் மதிக்கப்படுகின்றன, எவை அழிக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானித்தன. தனியார் முற்றங்களிலிருந்து இராணுவமயமாக்கப்பட்ட சுற்றுவட்டாரங்களுக்கு துக்கத்தை மாற்றுவதன் மூலம், அரசு துக்கத்தை ஆட்சியியலாக மாற்றியது.
தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் பௌத்த ஆலயங்களின் பெருக்கம், இடஞ்சார்ந்த அரசியலின் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது. 2012 மற்றும் 2022க்கு இடையிலான கள ஆய்வுகள், சோதனைச் சாவடிகள், முகாம்கள், புதிதாக அகலப்படுத்தப்பட்ட வீதிகளுக்கு அருகில் கட்டப்பட்ட டஜன் கணக்கான சிறிய விகாரைகள், ஸ்தூபிகளை ஆவணப்படுத்தின. பல மிதமான அளவில் இருந்தபோதிலும், அவற்றின் அடையாளங்கள் சக்திவாய்ந்தவை. முல்லைத்தீவில் உள்ள ஒரு கோயிலில் உள்ள ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “எங்கள் பூஜைக்கு ஓர் ஆலமரம் இருந்த இடத்தில், இப்போது ஒரு புத்தர் சிலை உள்ளது. அவர்கள் பூக்களுக்கு முன் கொடியை நடுகிறார்கள்.”
இராணுவப் பிரிவுகள் பெரும்பாலும் இந்த ஆலயங்களை ‘அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தின் சின்னங்கள்’ என்று நியாயப்படுத்தின. இருப்பினும், குடியிருப்பாளர்களுக்கு, அவை புனிதத்தன்மை மூலம் ஆக்கிரமிப்பைக் குறிக்கின்றன. மன்னாரில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பாதிரியார், “அவர்களுக்கு இனி துப்பாக்கிகள் தேவையில்லை. சிலைகள் அவற்றை மாற்றியுள்ளன” என்று குறிப்பிட்டார். போக்குவரத்து நிறுத்துமிடங்கள், பாலங்கள், சந்திப்புகளில் இந்த பௌத்த வழிபாட்டிடங்கள் வைக்கப்பட்டிருப்பது, அன்றாட இயக்கத்தில் அவற்றின் சர்வவியாபித்தலை உறுதி செய்தது. இந்த வீதிகள் வழியாக ஒவ்வொரு பயணமும் வெற்றியாளரின் நம்பிக்கையில் விருப்பமின்றிப் பங்கேற்பதற்கான செயலாக மாறியது.
2015 ஆம் ஆண்டில் திருகோணமலை நகர நுழைவாயிலில் ஒரு பெரிய புத்த விகாரை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இது நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஒருங்கிணைக்கப்பட்ட பெருநிறுவன நன்கொடைகள் மூலம் ஓரளவு நிதியளிக்கப்பட்டது. அதன் நோக்கம் குறித்துக் கேட்டபோது, ஒரு நகராட்சிப் பொறியாளர் பதிலளித்தார், “ஒவ்வொரு நகர வாயிலும் தேசத்தின் பாரம்பரியத்தைக் காட்ட வேண்டும்.” தமிழ், முஸ்லிம் குடியிருப்பாளர்களுக்கு, செய்தி தெளிவற்றதாக இருந்தது: “பாரம்பரியம் இப்போது ஒற்றை வார்த்தைகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.”
அரசால் வழங்கப்படும் குறியீட்டின் ஆதிக்கம் இருந்தபோதிலும், உள்ளூர்ச் சமூகங்கள் எதிர்நினைவின் நுட்பமான வடிவங்களை வளர்த்தன. முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் வீதியோர மரங்களில் சிறிய கற்கள் அல்லது விளக்குகளை வைக்கத் தொடங்கினர். இது அதிகாரபூர்வ இருப்புடன், நிறைவுற்ற இடங்களில் இல்லாததைக் குறிக்கிறது. “நாங்கள் ஒரு நினைவுச்சின்னத்தைக் கட்ட முடியாது” என்று ஓர் ஆசிரியர் கூறினார், “ஆனால் நாம் இன்னும் ஒரு பாதையை ஒளிரச் செய்யலாம்.” அதிகாரிகளால் அடிக்கடி அகற்றப்பட்ட இந்த முறைசாரா நினைவுச்சின்னங்கள், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் தோன்றின. அவர்களின் விடாமுயற்சி ஓர் இளைஞர் ‘பயணத்தில் நினைவில் கொள்வதற்கான எங்கள் உரிமை’ என்று விவரித்ததைப் பிரதிபலித்தது.
சில கிராமங்களில், இராணுவத்திடம் திரும்பப் பெற்ற பிறகு இந்து, கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் அமைதியாக மீண்டும் கட்டப்பட்டன. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளூர்ப் புனிதப் புவியியல் அம்சங்களை மீண்டும் உறுதிப்படுத்தின. மட்டக்களப்பில் உள்ள ஒரு மெதடிஸ்ட் போதகர் விளக்கினார், “போட்டியிடுவதற்காக அல்ல, நினைவூட்டுவதற்காக வீதியின் அருகே தேவாலயத்தை நாங்கள் மீண்டும் கட்டுகிறோம். வீதி எங்கள் வீடுகளை எடுத்துக்கொண்டது. எனவே நாங்கள் வீதியோரத்தை எடுத்துக்கொள்கிறோம்.” இந்த அன்றாடச் சைகைகள் மூலம், சமூகங்கள் தார் நிலங்களை சகிப்புத்தன்மையின் தார்மீக நிலப்பரப்பாக மாற்றின.
சர்வதேச நன்கொடையாளர்கள், முறையாக நடுநிலை வகித்தாலும், பெரும்பாலும் நினைவின் அரசியலில் சிக்கிக் கொண்டனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் வீதிப் புனரமைப்பு முயற்சிகளில் சந்திப்புகள், வீதிவளைவுகளை ‘அழகாக்குவதற்கான’ நிதிகளும் அடங்கும். பல சந்தர்ப்பங்களில், உள்ளூர் அதிகாரிகள் இந்த நிதியை வெற்றி நினைவுச்சின்னங்கள் அல்லது பௌத்த சின்னங்களை அமைக்கப் பயன்படுத்தினர். அவற்றை ‘அழகியல் மேம்பாடுகள்’ என்று விவரித்தனர். வினவப்பட்டபோது, கொழும்பில் உள்ள ஓர் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரி இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் எதை அலங்கரிக்கத் தேர்வு செய்கிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. இது ஓர் உணர்திறன் வாய்ந்த விஷயம். இதனால் நாம் தலையிடுவதில்லை.” எனவே, அபிவிருத்தி நிதிகள் கூட தற்செயலாக நிலப்பரப்பில் மேலாதிக்கத்திற்குப் பங்களித்தன.
2024 அளவில், வீதியோரம் போட்டியிடும் தற்காலிகங்களின் ஒரு போட்டியரங்காக மாறியது. அங்கு புனிதமானவை, அதிகாரத்துவம் மிக்கவை, தனிப்பட்டவை என்று சொல்லப்பட்டவை ஒன்றுடன் ஒன்று இணைந்தன. வெற்றியின் நினைவுச்சின்னங்கள், துக்கத்தின் அமைதியான அடையாளங்களை எதிர்கொண்டன. ஸ்தூபிகளில் சிலுவைகளும் திரிசூலங்களும் வேல்களும் நிழலாடின. இந்த இணைப்புகள் பயண அனுபவத்தை மாற்றியமைத்தன. “நான் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் காரில் செல்லும்போது, கோயில்கள், சன்னதிகள், கல்லறைகள், கொடிகளைக் கடந்து செல்கிறேன். வீதி யாருக்காக ஜெபிக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என்று 2023 இல் ஒரு தமிழ் மருத்துவர் கூறினார்.
இந்த இடங்களின் உணர்ச்சிபூர்வமான அமைப்பு போரின் சிக்கலான பிந்தைய வாழ்க்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எம்பெம்பே குறிப்பிடுவது போல, யார் துக்கம் அனுசரிக்க முடியும், எங்கு துக்கம் ஏற்படுகிறது என்பதற்கான கட்டுப்பாடு இறையாண்மையின் ஒரு வடிவமாகும். போருக்குப் பிந்தைய இலங்கையில், இந்த இறையாண்மை தார்வீதிகள் மற்றும் அலங்காரம் மூலம் – கட்டப்பட்டவை, அழிக்கப்பட்டவை, எஞ்சியிருக்க அனுமதிக்கப்பட்டவை மூலம் – செயற்படுத்தப்பட்டது. இருப்பினும், நினைவின் இந்த அசைவியக்கத்தின் மத்தியில், எதிர்ப்பின் துண்டுகள் நீடித்தன: வீதியோர மரத்தால் ஏற்றப்பட்ட விளக்கு, தடைசெய்யப்பட்ட இடத்தில் பூக்களை வைக்கும் குழந்தை, தமிழில் மீண்டும் வரையப்பட்ட ஓர் அடையாளம்.
இந்தச் செயல்கள், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நினைவகம் இயக்கம் போன்றது, முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்பதைக் குறிக்கிறது. வீதிகள் போக்குவரத்தை ஒரு திசையில் வழிநடத்தக்கூடும், ஆனால் நினைவகம் அதன் சொந்தப் பாதைகளைக் கண்டுபிடிக்கிறது.
தொடரும்.



