2.1 அறிமுகம்
வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியவை. இப்பகுதியின் பரப்பளவு 18,881 சதுர கிலோமீட்டர் ஆகும். 1981 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் தொகை 2.08 மில்லியனாக இருந்தது. இதன்பிறகு, மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறையின் மதிப்பீடுகளின்படி, 1989 ஆம் ஆண்டில் இது 2.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. 2001 முதல் 2017 வரையிலான மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பரவல் அட்டவணை 2.1 இல் கொடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மக்கள் தொகை 2.798 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Table 2.1: Population growth and distribution 2001-2017

Source: Economics and Social Statistics of Sri Lanka 2018 of Central Bank
2.2 வடக்கு – கிழக்கில் நீர் வளங்களின் நிலை
மக்கள் தொகை, தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் அதிகரிப்புடன், நீர்த் தேவையும் பெருகியுள்ளது. வீடு மற்றும் தொழில்துறை நீர்ப் பயன்பாடு, வேளாண்மைத் துறையின் நீர்த்தேவையுடன் சேர்த்து முழுமையாகக் கவனிக்கப்பட வேண்டும். 1996ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தொழில்துறையின் பங்கு 23% ஆக இருந்தது. அதேவேளையில், நாட்டின் வேளாண்மை, வனத்துறை மற்றும் மீன்வளத் துறைகளின் மொத்தப் பங்கு சுமார் 19% ஆக இருந்தது. தனிநபர் வீட்டு நீர்ப்பயன்பாடு, பாசனத்துறையின் நீர்த்தேவை, தொழில்துறை மற்றும் வணிக நீர்த்தேவைக்கான முன்னறிவிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், முன்னிலைக் கணக்கீடுகள் அனைத்தும், நீர்த்தேவை அதிகரிக்கும் போக்கைக் காட்டுகின்றன.
அரசாங்கம் பொருளாதார மற்றும் சமூக நலனை முன்னேற்றும் வகையில் நீர்வளங்களை (மேற்பரப்பு பாசன வசதிகள் மற்றும் நிலத்தடி நீர் பிரித்தெடுக்கும் வசதிகள்) வளர்த்து வருகிறது என்பதும், மேலதிக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன எனவும் கண்டறியப்பட்டுள்ளது. புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொழில்நுட்பரீதியாகவும் , பொருளாதாரரீதியாகவும் குறைந்த சாத்தியத்தையே கொண்டிருப்பதால், நீர்வள அதிகரிப்பு ஒரு வரையறுக்கப்பட்ட வாய்ப்பாக உள்ளது. எனவே, ‘ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை’க் (Integrated Water Resources Development – IWRM) கொள்கைகளின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய நீர்வளங்களைப் பாதுகாப்பதற்கும், திறமையாக மேலாண்மை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் உள்ள முக்கியத்துவம் முழுமையாகக் கவனிக்கப்பட வேண்டும்.
நிலத்தடி நீர் வீடு, வேளாண்மை, வணிக மற்றும் தொழில்துறைப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான அரசு நிறுவனங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகள் (விவசாயிகள் உட்பட) நீண்டகாலத் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமலும், எந்தவொரு கட்டுப்பாடு அல்லது தடைகளும் இல்லாமலும் நிலத்தடி நீரைப் பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கின்றன. இந்த ஒழுங்கற்ற நிலத்தடி நீர்ப் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்பாடு ஏற்கனவே உள்ள நிலத்தடி நீர்க்களங்களை மிகைப்படுத்திப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்து, நீரின் தரத்தில் உப்புத்தன்மை ஏற்படக் காரணமாகிறது. மட்டுமல்லாமல், தேவையான அளவுக்கு, தேவையான நேரத்தில், நீரின் அளவு மட்டுப்பட்டு இருக்கும் தன்மையும் ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீரைப் பொறுத்தவரை, முக்கியமான மேலாண்மை சவால்களில் ஒன்றாக இருப்பது அதன் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்பாடு ஒழுங்கற்ற முறையில் நடைபெறுவதே ஆகும். இது அடிப்படை நீர்வள ஒதுக்கீடு மற்றும் தேவை மேலாண்மை முறைகள் தேவைப்படும் ஒரு பகுதியாகும்.
2.3 வடக்கு – கிழக்கில் விவசாயத்தின் நிலை
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ளது. வறண்ட மண்டலத்தில் இருந்தபோதிலும், அங்குள்ள மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர்வளங்கள் பல்வேறு வேளாண்மைச் செயற்பாடுகளுக்கு ஆதரவாக உள்ளன.
இன மோதல்/ முரண்பாடு தொடங்குவதற்கு முன்னர், இம்மாகாணங்கள் நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 33%, உலர்த்திய சிவப்பு மிளகாயில் 40%, சின்ன வெங்காயத்தில் 85% மற்றும் தானியப் பருப்பு வகைகளில் 30% உற்பத்தி செய்து வந்தன. நாட்டின் மொத்தக் கால்நடை உற்பத்தியில் 30%த்திற்கும் மேல் இம்மாகாணங்களிலிருந்து உற்பத்தியாகியது. மொத்த மீன் உற்பத்தியில் 55% வடக்கு – கிழக்கு மாகாணங்களிலிருந்து வந்தது.
1983இல் தொடங்கிய ஆயுத இன மோதல்/ முரண்பாடு, 2009இல் ஆயுத மௌனிப்புக்குக் கொண்டுவரப்பட்டாலும், அதன் அடிப்படைக் காரணங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இது பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட பரவலான சேதம், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வெளியேற்றம், முதலீட்டில் சரிவு மற்றும் ஆதரவுச் சேவைகள் குறைதல் ஆகியவற்றின் காரணமாக வேளாண்துறைக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக உற்பத்தித்திறன் கடுமையாகக் குறைந்தது, இழப்புகள் அதிகரித்தன, இருக்கும் சொத்துகள் புறக்கணிக்கப்பட்டன, வேலையின்மை, வறுமை மற்றும் சமூக அமைதிக்கேடு, கலாசாரப் பிறழ்வுகள் பெருகின. வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பொது – தனியார் சொத்துகளுக்கான சேதம் என்பன பல பில்லியன் ரூபாய்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2.4 வடக்கு – கிழக்கில் நீர்வள மேம்பாட்டு உத்தி
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலம் அங்குள்ள நில மற்றும் நீர்வளங்களை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துவதை நேரடியாகச் சார்ந்துள்ளது. இங்கு முன்மொழியப்படும் நீர்வள மற்றும் வேளாண்மை மேம்பாட்டு மூலோபாயத்தின் நோக்கங்கள்:
- திறமையான நீர் மேலாண்மை, பயிர் வேறுபாடாக்கம், நுண்பாசன முறைகளைப் பயன்படுத்தி நீர்வளங்களைப் பல்துறைப்படுத்துதல் மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாத்தல்.
- வாழ்வாதார வேளாண்மையிலிருந்து வணிக ரீதியான வேளாண்மைக்கு மாற்றம். குறிப்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் எளிதாக விற்பனையாகக்கூடிய, உயர் மதிப்புள்ள பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் வருமானத்தை உருவாக்கி, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையிலான நிலையான வேளாண் மேம்பாட்டின் தேவை நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
உற்பத்தித்திறன் மற்றும் மேம்பட்ட விவசாய முறைகளைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த மூலோபாயம், மண், நீர் மற்றும் ஆற்றல் வளங்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. இந்த மேம்பாட்டு மூலோபாயத்தின் முக்கிய அம்சங்கள்:
- கடுமையான நீர் மேலாண்மைக் கொள்கைகள் மற்றும் நுட்பங்களைப் பின்பற்றி மேற்பரப்பு நீரைப் பாதுகாத்தல்.
- எந்தவொரு நீர்நிலை அல்லது பாசனத் திட்டத்தில் சேமிக்கப்பட்ட மேற்பரப்பு நீரில் 40 வீதத்தை வீடு, சமூக, சுற்றாடல் மற்றும் தொழில்துறைப் பயன்பாடுகளுக்கும், மீதமுள்ள 60 வீதத்தை வேளாண் பயன்பாட்டுக்கும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் நிலத்தடி நீரை வருங்காலத் தலைமுறைகளுக்காக இருப்பு வைத்தல்.
- குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நீர் ஆதாரங்களைப் பெறுவதற்கான பின்வரும் வழிகாட்டுதல்களுடன் அனைத்து முக்கிய நீர் வழங்கல் திட்டங்களையும் கண்டிப்பாகச் செயற்படுத்துதல்:
- a. குடிநீர்த் தேவையின் 60% வரை மேற்பரப்புப் பாசனத் திட்டங்களிலிருந்து பெறுதல். இதில் 50 வீதத்தினை ஏற்கனவே உள்ள பாசனத் திட்டங்களிலிருந்தும், 10 வீதத்தினை புதிய திட்டங்கள் அல்லது திசைதிருப்புத் திட்டங்களிலிருந்தும் பெறுதல்.
- b. குடிநீர்த் தேவையின் 40% வரை கடல்நீர் தலைகீழ் வடிகட்டல் (வறட்சிக் காலங்களில் முக்கியமாக), நிலத்தடி நீர் மற்றும் யாழ்ப்பாணத்திற்கான ஆறு, ஆற்றுமுகத் திட்டம் மற்றும் கடல் நீரேரியை நன்னீராக்கும் திட்டங்களின் சேர்க்கையிலிருந்து பெறுதல்.
- 1964 ஆம் ஆண்டின் நீர்வள வாரியச் சட்டத்தின் 29ஆவது சட்டப்பிரிவின் 12 (1) பிரிவில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் தொடர்பாக, 16 (1) மற்றும் 16 (2) பிரிவுகளின்கீழ் நீர்ப்பாசன மற்றும் நீர்வள மேலாண்மை அமைச்சரால் வழங்கப்பட்ட உத்தரவுகளை, 2017 மார்ச் 16, வியாழக்கிழமை வெளியான 2010/23 எனும் அரச வர்த்தமானி மூலம் கண்டிப்பாகச் செயற்படுத்துதல். கட்டுரையின் இறுதியில் இந்த வர்த்தமானி, இணைப்பு 1 இல் இணைக்கப்பட்டுள்ளது.
- புதிய குழாய்க் கிணறுகள் தோண்டுவதைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் மின்சாரம், மண்ணெண்ணெய் அல்லது டீசல் பம்புகள் மூலம் குழாய் கிணறுகளிலிருந்து நீர் எடுப்பதைக் கட்டுப்படுத்துதல். சுருக்கமாக, துளையிடுதலுக்கு உரிமம் முறையும், எடுக்கப்படும் நீரின் அளவிற்கு அனுமதி முறையும் அமல்படுத்தப்பட வேண்டும். இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும்.
- வியாபார நோக்கமாக நடைபெறும் சிறிய, நீர் தலைகீழ் வடிகட்டல் மூலம் நடைபெறும் குடிநீர் ‘RO Water’ வியாபாரத்தை, அண்மைய சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய கண்டிப்பாகக் கண்காணித்தல். இது சம்பந்தமான சுகாதார அமைச்சின் கடிதமும் வழிகாட்டல் குறிப்பும் கட்டுரையின் இறுதியில் இணைப்பு 2 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
- காட்டுப் பகுதிகளைப் பாதிக்காமல், பிராந்தியத்தில் கிடைக்கும் மழைநீரை அதிகபட்சமாகப் பயன்படுத்தி, நிலத்தடி நீரை ஈரப்பதமாக்கவும் பிற பயன்பாடுகளுக்காகச் சேமிக்கவும், முடிந்தவரை தடுப்புச் சேமிப்பு வசதிகளை அமைத்தல்.
- நிலத்தடி நீர் ஈரப்பதம் ‘Recharging’ ஏற்படுத்தும் சிறுபாசனத் திட்டங்களை அடையாளம் காண ஒரு விரிவான நிலத்தடி நீர் மாதிரி ஆய்வை மேற்கொண்டு, அத்திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி விவசாயத்தைத் தவிர்த்து, மீதமுள்ள நீர், நிலத்தடி நீரை ஈரப்பதமாக்க ‘Recharging’ அனுமதிக்கும் ஒரு கொள்கையை வகுத்தல்.
- மாகாண அதிகாரிகள், பொருத்தமான பொறியியல் மற்றும் கால்நடை ஆரோக்கிய ஆலோசனைகளுக்கு உட்பட்டு, நிலத்தடி நீர் ஈரப்பதத்தை அதிகரிப்பதற்கும், கால்நடைகளுக்குக் குடிநீர் வழங்குவதற்கும், அனைத்துச் சிறு நீர்த்தேக்கங்கள் மற்றும் கோவிற் குளங்களைப் புனரமைக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- மாகாணச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும், அதில்:
- a. பிராந்தியத்திலுள்ள அனைத்து பாசனத் திட்டங்களிலும் விளைச்சல் அடர்த்தியை (Cropping Intensity) 1.4% ஆக வைத்திருக்கும் வகையில் சிறுபோகம் (யால) நெல் சாகுபடியை 40% மட்டுமே கடுமையாக வரையறுக்க வேண்டும்.
- b. சிறுபோகம் (யால) காலத்தில் நெல் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் நிலத்தின் சதவீதத்தைக் குறைத்து, பயிர் வேறுபாடாக்கத்தை (Crop Diversification) அறிமுகப்படுத்த வேண்டும். நெல்லுடன் ஒப்பிடும்போது குறைந்த நீர் தேவைப்படும் பருப்பு வகைகளின் சாகுபடிக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- c. பிராந்தியத்தில் நிலத்தடி நீர் மட்டம் எளிதாக அணுகக்கூடிய அளவில் இருக்கும் வகையில், ஒவ்வொரு பாசனத் திட்டத்தின் செயற்பாட்டு ஆழத்தை, (Dead Storage தவிர்த்து) மொத்தப் பயனுள்ள சேமிப்புத் திறனில் 10-15% வரை பராமரிக்க வேண்டும்.
- d. நீர்த்தேக்கங்களின் பயனுள்ள சேமிப்புத்திறனில் அதிகபட்சம் 60% மட்டுமே வேளாண் பயன்பாட்டிற்கும், மீதமுள்ள 40%த்தினை (பல்நோக்கு அணைகள் அல்லது நீர்த்தேக்கங்களுக்கான உலகளாவிய வழக்கமான ஒதுக்கீட்டு விதிகளுடன் ஒப்பிடும்போது இது {வேளாண் பயன்பாடு} அதிகமாக இருந்தாலும்) பிற அனைத்துப் பயன்பாடுகளுக்கும் சமானமான முறையில் (Equitably – Not Equally – சமனாக அல்லாது) ஒதுக்க வேண்டும்.
- இப்பிராந்தியத்தில் அனைத்துக் கட்டுமான ஒப்பந்தங்களும், பணிகள் முடிந்ததும், சுரங்கத் தளங்கள் (Borrow Pits) மற்றும் கடன் பகுதிகளின் நில அமைப்பை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- காடுகளின் பரப்பைப் பாதிக்காமல், பிராந்தியத்தில் கிடைக்கும் மழைநீரை அதிகபட்சமாகப் பயன்படுத்தி, நிலத்தடி நீரை ஈரப்பதமாக்கவும், பிற பயன்பாடுகளுக்காகச் சேமிக்கவும், முடிந்தவரை தடுப்புச் சேமிப்பு வசதிகளை அமைக்க வேண்டும். இதற்காக நிலத்தடி நீர் ஈரப்பதத்திற்காக அணைகள் கட்டுவதற்கு உகந்த வழிகாட்டுதல்கள் தேவைப்படும்:
- a. பிராந்தியத்தின் இயற்பியல் மற்றும் இயற்கை வளங்களை நிலையான அடிப்படையில் அதிகபட்சமாகப் பயன்படுத்துதல்.
- b. வாழ்வாதார வேளாண்மையிலிருந்து விலகி, உயர் மதிப்புள்ள பயிர்கள் உட்பட வணிக வேளாண்மை முறைக்கு மாற்றம் செய்து, மாகாணத்தில் ஒரு வேளாண் தொழில்துறை அடித்தளத்தை நிறுவுதல்.
- c. பிராந்தியத்திற்குள் சமச்சீர் வளர்ச்சியை அடையும் வழியை உருவாக்குதல்.
- d. வேளாண் துறையில் தேவையான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை மாற்றத்தை ஏற்படுத்த, கிடைக்கும் மனித வளங்களைப் பயன்படுத்துதல்.
வளங்களின் பன்முகத்தன்மை மற்றும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவதற்காக, ஒரு மாவட்டத்திற்குள்கூட மேம்பாட்டு மூலோபாயம், பயிர்கள் அல்லது கால்நடைகள் போன்ற வேளாண்மையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் மட்டும் கவனம் செலுத்த முடியாது.
எனவே, ஒரு முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமாகிறது. அதிகபட்ச நன்மைகளை அடைய, எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் ஒரு பகுதியில் பயிர்கள், கால்நடை, மீன்வளம் மற்றும் வனத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும்.
2.5 வடக்கு – கிழக்கில் நீர்ப்பாசனம்
ஒற்றைப் பயிர்ச்செய்கையிலிருந்து ஏற்றுமதி சார்ந்த வேளாண் அமைப்புக்கு மாறுவதற்கான வேளாண் கொள்கை முன்மொழிவின் பின்னணியில், பின்வரும் உண்மைகள் தெரிகின்றன:
- புதிய விவசாய நிலங்களின் வளர்ச்சி, தற்போது அதன் முக்கியமான வரம்பை அடைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
- புதிய பாசன வசதிகளைக் கட்டமைப்பதற்கான அரசாங்கத்தின் முதலீட்டுத் திறன் கடுமையாகக் குறைந்துள்ளது. ஏனெனில் இதற்கு அதிக அளவு ஆரம்ப மூலதனம் தேவைப்படுகிறது.
- புதிய பாசன வசதிகளைக் கட்டமைப்பதிலிருந்து, இருக்கும் பாசன வசதிகளைப் புனரமைப்பதற்கு ஒத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாசனத்திறன் மேம்படுத்தப்பட்டு, உற்பத்தித்திறன் மற்றும் பயிர் அடர்த்தி (Cropping Intensity) அதிகபட்சம் 1.4% ஆக உயர்த்தப்படுகிறது. இது நீர்வளங்களின் மிகவும் உற்பத்தித்திறன் மிக்க மற்றும் சமானமான பயன்பாட்டை உறுதி செய்கிறது.
இதை அடைய, பாசன அமைப்புச் செயற்பாட்டைப் பாதிக்கும் நிறுவன மற்றும் அமைப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும், பயனாளி விவசாயிகள், பிற நீர் பயனர்கள் மற்றும் தரப்பினர் ஆகியோரின் முழுமையான பங்களிப்பை அடிப்படையாகக்கொண்ட ஒரு செயற்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளது. எந்தவொரு சாத்தியமான ஆய்வின் முக்கிய கவனம் இதுவாக இருக்க வேண்டும். அதில் புனரமைப்பு முடிந்த பின்னர் விநியோகக் கால்வாய்கள் முதல் வயல் கால்வாய்கள் வரையிலான ‘O&M’ பொறுப்பு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.
எதிர்காலத்தில், அமைப்புகளின் மேலாண்மையில், உத்தியோகபூர்வ பங்குத் தொழில்நுட்ப மற்றும் நிறுவன விஷயங்களுக்கான ஆலோசனைகளும், பெரிய பாசனத் திட்டங்களின் விஷயத்தில், அணைகள் மற்றும் நீர்த்தேக்க வசதிகளின் செயற்பாடு மற்றும் பராமரிப்பும் மட்டுப்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது பாசனத்திற்கான நீர்த்தேவை மேற்பரப்புப் பாசனத்திட்டங்கள் (பெரிய, நடுத்தர மற்றும் சிறிய) மற்றும் ஓரளவு வேளாண் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளிலிருந்து பூர்த்தி செய்யப்படுகிறது. புதிய மூலோபாயத்தில், நிலத்தடி நீர் எதிர்காலத் தலைமுறைகளுக்காக வைக்கப்படும். இருக்கும் குழாய்க் கிணறுகள் தற்காலிக வீட்டுப் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எடுப்புப் பாசனத்திற்காக எதிர்காலத்தில் கூடுதல் குழாய்க் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது. வேளாண் கிணறுகள் மற்றும் மேற்பரப்புப் பாசனத்திட்டங்கள் ஈர்ப்பு மற்றும் எடுப்புப் பாசன திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
1964 ஆம் ஆண்டின் நீர்வள வாரியச் சட்டம் (எண். 29) பிரிவு 12 (1) இல் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் தொடர்பாக, நீர்ப்பாசன மற்றும் நீர்வள மேலாண்மை அமைச்சரால் பிரிவு 16 (1) மற்றும் 16 (2) கீழ், 2017 மார்ச் 16, வியாழக்கிழமை வெளியான 2010/23 எனும் இணைப்பு 1இல் கொடுக்கப்பட்டுள்ள அரச வர்த்தமானி அறிவிப்புக் கண்டிப்பாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.
மற்றும், அனைத்துப் பெரியது முதல் நடுத்தரப் பாசனத்திட்டங்களிலும் குறைந்தது 40% வரையான பயனுள்ள சேமிப்பு, வீடு, சமூக, சுற்றாடல் மற்றும் தொழில்துறை நீர்ப் பயன்பாட்டிற்காக வைக்கப்படும் என்றும், இது கீழ்நிலை நிலத்தடி நீர் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவும் என்றும், அதிகபட்சம் 60% மட்டுமே வேளாண் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறது. இதுபற்றிய நீர்ப்பாசன இயக்குநரின் கடிதம் இணைப்பு 3 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், சில ஈரப்பதம் – உணர்திறன் மிக்க சிறு பாசனத்திட்டங்களில் வேளாண்மைக்கு ஒதுக்கப்படும் நீரின் சதவீதத்தை வரையறுக்க ஒரு விரிவான நிலத்தடி நீர் மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்படும்.
2.6 வடக்கு – கிழக்கில் பயிர் விவசாய மேம்பாடு
பயிர் விவசாயத்தின் முக்கிய நோக்கம், தன்னிறைவு விவசாயத்திலிருந்து விடுபட்டு, அதிக மதிப்புள்ள பயிர்களைத் தீவிரமான மற்றும் வணிகம் சார்ந்த விவசாய முறைகளின் மூலம் ஊக்குவிப்பதாகும். இந்த நோக்கை அடைய, வள முதன்மைகளின் அடிப்படையில் பாசனத்திட்டங்களை மீட்டமைத்தல், நெல் வயல்களில் அதிக மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற வயல் பயிர்களை பயிர் மாற்று முறைக்கு ஊக்குவித்தல், தனியார் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பழ வகைகளை வணிக ரீதியாகப் பயிரிடுதல், மதிப்புக்கூட்டும் விவசாயம் சார்ந்த தொழில்களை நிறுவுதல், தேங்காய் மற்றும் முந்திரி மரங்களை மீள்நடவு செய்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் கிராமப்புறச் சாலைகள் மற்றும் வயல் – சந்தைச் சாலைகளை மீட்டமைத்தல் ஆகியவற்றில் மேம்பாட்டு உத்திகள் கவனம் செலுத்தும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கியமான அங்களாகும். நம் தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பது, இதய நோய்கள் மற்றும் சில வகைப் புற்றுநோய்கள் உள்ளிட்ட தொற்றாத நோய்களின் (NCD) ஆபத்தைக் குறைக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகள் சர்வதேச அளவில் அதிக திறனுள்ள புதிய சந்தையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் நகர்ப்புற மக்கள்தொகை மற்றும் சுற்றுலாத்துறையின் தேவை காரணமாக, சில அதிக மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தப்பட்ட அல்லது புதிய நிலையில் ஏற்றுமதி செய்யும் திறன் கொண்டவை.
நெல் வயல்களில் பயிர் மாற்று முறையை ஊக்குவிப்பதற்கான காரணங்கள்:
- பாசன வசதிகள் ஏற்கனவே உள்ளன.
- விவசாயிகள் ஏற்கனவே பிற வயல் பயிர்களை சாகுபடி செய்யப் பழக்கமானவர்கள்.
- சுமார் 50,000 ஹெக்டயர் நிலப்பரப்பு இந்த மாற்றத்திற்கு ஏற்றது.
இந்த மாற்றத்தின் மூலம், விவசாயிகள் நீர்வளத்தை மேலும் திறம்பட நிர்வகிக்கத் தயாராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதையதை விட அதிக வருமானம் தரும் புதிய பயிர்கள் அல்லது தொழில்நுட்பங்களை ஏற்கும் திறன் பெறுவார்கள்.
நெல் சாகுபடிப் பகுதிகளுக்கு வெளியேயும், காய்கறி மற்றும் பழ உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். இதற்காக, பொருத்தமான பகுதிகளில் 10-20 ஹெக்டயர் நிலங்களைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அல்லது விற்பனைக்கு ஒதுக்கலாம்.
சிறு விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்க, ‘கருப் பண்ணை/ வெளி விவசாயி முறை’ (Nuclear farm/ Out-grower System) ஊக்குவிக்கப்பட வேண்டும். இது விவசாயப் பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தலுக்கு வணிக ரீதியான வாய்ப்புகளை உருவாக்கும்.
காய்கறி எண்ணெய்களின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, எண்ணெய் வித்துகளின் (எள், கடுகு, சூரியகாந்தி, கனோலா போன்றவை) உற்பத்தியில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாலும், ஒரே நேரத்தில் ஏற்றுமதிச் சந்தைகளிலும் கவனம் செலுத்தப்படும். மாகாணம், சந்தைகள் மற்றும் விவசாயப் பண்ணைகளை இணைக்கும் சாலை வலையமைப்புக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், சுழலும் கடன் மானியங்களை விரிவுபடுத்துவதன் மூலமும், பயிற்சி மற்றும் பிற ஆதரவுச் சேவைகளை வழங்குவதன் மூலமும் தற்போதைய சந்தை வலையமைப்பின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலை ஊக்குவிக்கும்.
விவசாயத் தொழில்துறை வளர்ச்சிக்கான அணுகுமுறையாக, ஏற்கனவே உள்ள விவசாயத் தொழில்துறை மண்டலங்களை உறுதிப்படுத்துதல். நிறுவனங்கள் தங்கள் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கும், இத்தகைய புதிய தொழில்களை நிறுவுவதில் தனியார்துறை முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் கடன் வழிகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
புதிய விவசாய அணுகுமுறைக்குத் தேவையான ஆதரவை வழங்குவதை உறுதிசெய்ய, தற்போதைய மாகாண ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகளை மீண்டும் அமைக்கவும், வலுப்படுத்தவும் வேண்டும். ஊழியர்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி தீவிரமடையும், அதேநேரம் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் பொருத்தமான உணவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கப்படும் தன்னார்வ அமைப்புகள் (NGOகள்) இந்தப் பயிற்சிகளை வழங்கும். உள்நாட்டுத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இணையாக, ஏற்றுமதிச் சந்தைகளுக்கான வாய்ப்புகளும் ஆராயப்படும். மாகாணம் பின்வரும் முயற்சிகள் மூலம் சந்தை வலையமைப்பை மேம்படுத்தும்:
1. விவசாயப் பகுதிகளுக்கும் சந்தைகளுக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல்.
2. சுழலும் கடன் உதவித்தொகைகளை அதிகரித்தல்.
3. பயிற்சி மற்றும் துணைச் சேவைகளை விரிவாக்குதல்.
- மாகாண ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்களை மறுசீரமைத்தல்.
- ஊழியர் திறன் வளர்ச்சித் திட்டங்களைத் தீவிரப்படுத்தல்.
4. விவசாயத் தொழிற்சாலை மண்டலங்களை உருவாக்குவதே தொழில்துறை வளர்ச்சியின் முக்கிய அணுகுமுறையாகும். இதற்காக:
- ஏற்கனவே உள்ள தொழில்மண்டலங்களை மேம்படுத்துதல்.
- நிறுவனங்கள் தங்கள் செயற்பாடுகளை மீண்டும் தொடங்க கடன் வசதிகள் வழங்குதல்.
- புதிய தொழில்துறை முயற்சிகளுக்கு தனியார் துறையை ஊக்குவித்தல்.
5. அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சிகளை தன்னார்வ அமைப்புகள் மூலம் வழங்குதல்.
2.7 வடக்கு – கிழக்கில் கால்நடை வளர்ப்பு மேம்பாடு
இத்துறையின் மேம்பாட்டு உத்தியானது கால்நடை வளர்ப்பைத் தன்னிறைவு மட்டத்திலிருந்து வணிக ரீதியான இலாபகரமான மட்டத்திற்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உத்தி பின்வரும் தலைப்புகளில் கவனம் செலுத்தும்:
- கால்நடைகளின் மரபணுத்தரத்தை மேம்படுத்தி பால் உற்பத்தியை அதிகரித்தல்.
- தீவன வளங்களின் கிடைப்புத்தன்மையை மேம்படுத்தல்.
- மேம்பட்ட கால்நடை ஆரோக்கியச் சேவைகளை வழங்கல்.
உற்பத்தியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவர்களின் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சிறப்பு விவசாயக் கூட்டுறவுகளை ஏற்பாடு செய்தல்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் தொகை கணிசமாக உள்ளது (விரிவான மற்றும் தீவிர மேலாண்மை முறைகளில்). ஆனால் பசுவின் சராசரிப் பால் உற்பத்தி மிகவும் குறைவு. உடனடி விற்பனை தவிர, பால் உற்பத்திக்கு மதிப்புக்கூட்டும் ஊக்கத்தொகைகள் எதுவும் இல்லாததே இதற்குக் காரணம். இந்த நிலையை மேம்படுத்த கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:
- உயர்தர இனப்பெருக்கக் கால்நடைகள் மற்றும் செயற்கைக் கருவூட்டல் முறைகள் மூலம் மேம்படுத்தல் திட்டங்களை தீவிரப்படுத்துதல்.
- கூட்டுறவுச் சங்கங்களை (MPCS போன்றவை) செயற்படுத்த ஊக்குவித்தல்.
- புதிய பால் மற்றும் UHT பால் (அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால்), தயிர், யோகட், சீஸ் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைச் சேகரிக்க, பதப்படுத்த மற்றும் சந்தைப்படுத்த உதவி வழங்குதல்.
பயிர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு கன்றுகள் மற்றும் ஆடுகளை விநியோகிப்பதன் மூலம் பயிர் – கால்நடை ஒருங்கிணைந்த முறை ஊக்குவிக்கப்படும். இது விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானத்தையும், வறட்சி ஆண்டுகளில் பயிர்சார்ந்த இழப்புகளிலிருந்து பாதுகாப்பையும் தரும். மேலும், சிறு கால்நடைகள் மூலம் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய அங்கமாகும். இப்பகுதியில் இவைபோன்ற பொருட்களுக்கு அதிக தேவை உள்ளதால், தீவனத் தொழிற்சாலைகள், அடைகாக்கும் மையங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் அமைக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு கடன் வசதிகள், மானியங்கள் மற்றும் ஊக்கத்திட்டங்கள் வழங்கப்படும். மேம்பட்ட இனங்களின் கால்நடைகளை வளர்த்து விநியோகிக்கும் வகையில் ஒரு கால்நடைப் பெருக்கப் பண்ணையும் நிறுவப்படும். கால்நடை சுகாதார சேவைகள் உயர் திறன் கொண்ட பகுதிகளில் மறுசீரமைக்கப்பட்டு விரிவாக்கப்படும். இதனுடன், கால்நடை விரிவாக்கச் சேவைகள், பயிர் விரிவாக்கச் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே கட்டமைப்பின் கீழ் செயற்படுத்தப்படும்.
2.8 வடக்கு – கிழக்கில் மீன்பிடி வளர்ச்சி மேம்பாடு
இத்துறையின் முதன்மை நோக்கம், கடல் மீன்பிடித்தலுடன் இணைந்து இயற்கை நீர்நிலைகளில் மீன் பிடிப்பதிலிருந்து மீன் வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் துறைக்கு மாற்றுவதாகும். இந்த உத்தி பின்வரும் தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது:
- மீன்வளத் துறை உள்கட்டமைப்பைப் புதுப்பித்தல்.
- தனியார்துறை முயற்சிகள் மூலம் இருக்கும் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் உபகரணங்களை நவீனமயமாக்குதல்.
- கடலோர மீன் வளர்ப்புத் திட்டங்களைத் தனியார் துறையால் நிறுவுவதை ஊக்குவித்தல்.
- ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வசதிகளை வலுப்படுத்துதல்.
நாட்டிற்குள் மீனுக்கான தேவை கணிசமாக உள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஆண்டுக்கு 100,000 மெட்ரிக் தொன் மீனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. மீன்பிடிப் படகுகள், உபகரணங்கள், பனி உற்பத்தி ஆலைகள் (Ice factory) போன்ற பெரும்பாலான சொத்துகள் அழிந்துவிட்டன அல்லது இழக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய சொத்துகளை மீட்டெடுப்பதற்கு மானியங்கள் மற்றும் கடன் வடிவில் உதவி வழங்கப்படும். முதலீட்டாளர்கள் உள்ளூர் தொழில்முனைவோருடன் இணைந்து செயற்படவும், ஆதரவு சேவைகளை வழங்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள்.
முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டவும் முதலீடுகளை எளிதாக்கவும் ஒரு மீன்வள மேம்பாட்டு ஆலோசனைப் பணியகம் நிறுவப்படும். மீன்பிடித்தலுக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்க கப்பல்களில் குளிர் சேமிப்பு வசதிகளும், கரையில் குளிர் சங்கிலி வசதிகளும் ஏற்படுத்தப்படும்
கடலோர மீன் வளர்ப்பு மிகுந்த சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இறால், நண்டு, கணவாய் மீன், கடலட்டை, கடற்பாசி போன்ற ஏற்றுமதிச் சாத்தியம் மிக்க பொருட்களின் முக்கிய உற்பத்தியாளராக இருந்துள்ளது. வடமேற்கு மாகாணத்தில் பயன்பாட்டில் உள்ள மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்படும்.
ஒரு திறன்மிக்க மீன்பிடித் தொழிலுக்கு தேவையான நிபுணத்துவத்தை வளர்ப்பதற்காக பல்கலைக்கழகங்கள், கடல் அறிவியல் மற்றும் மீன் வளர்ப்புப் பீடம் அமைப்பதற்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்கலாம்
NARA பயிற்சி மையத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மீனவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம்.
2.9 வடக்கு – கிழக்கில் வேளாண் சார்ந்த தொழில்களின் மேம்பாடு
வடக்கு – கிழக்கில் ஏற்கனவே நெல், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, மாம்பழம் போன்ற பல பயிர்களின் உற்பத்தி மிகுதியாக உள்ளது. பயிர் வேறுபாடு மற்றும் தோட்டக்கலை வளர்ச்சி மூலம் மேலும் தானியங்கள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படும். அவை பதப்படுத்தலும் செய்யப்படும். அரசு, தொழில்முனைவோருக்கு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை நிறுவ அல்லது விரிவுபடுத்த உதவி வழங்கும், இது ஊரகப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.
வேளாண் தொழிற்துறை வளர்ச்சியின் முக்கிய நோக்கங்கள்:
- மதிப்பேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் – விவசாய உற்பத்திகளைப் பதப்படுத்தி அவற்றின் மதிப்பை அதிகரிப்பதுடன், உள்ளூரில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
- விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஆதரவு – விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்களைத் தயாரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் சேவை செய்தல்.
- மண்டல தொழில்நுட்ப ஆலோசனை மையத்தின் (Regional Industrial Advisory Service Center) செயற்பாட்டை வேளாண் தொழிற்துறைக்கு விரிவுபடுத்துதல்.
- வேளாண் சார்ந்த தொழில்முனைவோருக்கு கடன் வசதிகள், சந்தைத் தகவல் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குதல்.
- தொழில்மண்டலங்கள்/ மண்டலங்களை அமைத்தல்.
2.10 வடக்கு – கிழக்கில் வன வள மேம்பாடு
வடக்கு – கிழக்கில் வனவளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மூலோபாயம், மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் குறைந்தது 30% பகுதியை வனப்பிரதேசமாக மாற்றும் மறுவனமாக்கல் திட்டத்தையும், மாகாணம் முழுவதும் உள்ள சமூகங்களின் தீவிரப் பங்களிப்புடனான சமூக வனவளர்ச்சித் திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனுடன், பசுந்தாள், எரிபொருள், தீவனம், மருந்துச் செடிகள் போன்றவற்றிற்காக விவசாய நிலங்களில் மரங்கள் மற்றும் புதர்களை ஒருங்கிணைக்கும் வேளாண் – வனத்துறைத் திட்டத்தையும் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுப்பாடற்ற வனநாசம் காரணமாக ஏற்பட்டுள்ள சுற்றாடல் சீரழிவைத் தடுப்பதே இந்த நடவடிக்கைகளின் அவசியமாகும். இதன் விளைவாக ஏற்கனவே குறைந்த மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு, நிலத்தடி நீர் மட்டத்தில் குறைவு, மண்ணரிப்பு போன்ற பிரச்சினைகள் உணரப்பட்டு வருகின்றன. சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றின் ஆதரவை நாடுவதுடன், மர நாற்றங்கால்கள் நிறுவப்பட்டு நடவுப் பொருட்கள் விரிவாக விநியோகிக்கப்படும்.
2.11 வடக்கு – கிழக்கில் நீர்வள உட்கட்டமைப்பு மேம்பாடு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வறட்சிப் பகுதியில் அமைந்துள்ளதால், நிலைத்த வேளாண்மைக்கான முக்கிய நீர்வள ஆதாரமாக பாசனத்திட்டங்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. இத்திட்டங்களைச் சுற்றி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்திட்டங்களில் சேமிக்கப்பட்ட நீரை மட்டும் நம்பியுள்ளன. இந்நீர் பாசனத்திற்கு மட்டுமல்லாது, மாட்டுப்பண்ணை மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்காகவும், நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புவதற்காகவும் பயனளிக்கின்றது.
கிட்டத்தட்ட இரு தசாப்தமாக பல பாசனத்திட்டங்களில் அவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பல திட்டங்கள் சீர்கேடான நிலையில் உள்ளன.
இந்த நிலையை ஏற்படுத்திய பராமரிப்புப் பற்றாக்குறைக் காரணிகள்:
- போதிய அளவு வருடாந்த அரசாங்க நிதி ஒதுக்கீடு இல்லாமை.
- திறமையுள்ள பராமரிப்புப் பணியாளர்கள் இல்லாமை.
- பராமரிப்புப் பணிகளில் விவசாயிகளின் பங்கு குறித்து அவர்களுக்கு முறையான பயிற்சித் திட்டம் வழங்கப்படாதது.
உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் உத்தியில், பாசனத் திட்டங்களின் சீரமைப்பு முக்கிய முன்னுரிமையாகக் காணப்படுகிறது. கிடைக்கக்கூடிய நீர்வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தி எதிர்காலப் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், விவசாயிகளின் அமைப்புகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டங்களை நிர்வகிக்க முனைவதே இந்த உத்தியின் குறிக்கோளாகும்.
நீர்வளங்கள், குறிப்பாக பருவமழை ஆறுகள், விவசாய நோக்கில் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, உயர்ந்த திறன் வாய்ந்த தடுப்பணைகள் அமைக்க ஏற்ற இடங்களை நிர்ணயிக்கவும், சிறிய குளங்களைச் சீரமைக்கவும், வேளாண்மைக் கிணறுகளை அமைக்கும் பகுதிகளைக் கண்டறியவும், அவை வழங்கக்கூடிய பாதுகாப்பான மற்றும் நிலைத்த நீர்த்திறனை ஆராயும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
கிராமப்புறச் சாலைகள் தற்போது மிகவும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவை விவசாயக் கிராமங்கள் மற்றும் மீன்வளப் பகுதிகளை நகரங்களுடனும் சந்தைகளுடனும் இணைக்கும் முதன்மைப் போக்குவரத்துத் தளங்கள் ஆகும். விவசாய உற்பத்திகளையும் உள்ளீடுகளையும் கொண்டுசெல்ல இச்சாலைகள் அவசியமானவை. எனவே, அவற்றிற்கான உடனடி மறுசீரமைப்பும், தொடர்ந்த பராமரிப்பபும் தேவைப்படுகின்றன. தேசிய சாலைகளும் இதற்கும் விதிவிலக்கல்ல. அவற்றுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
வேளாண்மையைக் கருப்பொருளாகக்கொண்ட தொழில்கள், பனிக்கட்டி ஆலைகள், குளிர்பதனக் கூடங்கள், பழுது பார்க்கும் பணிமனைகள் போன்றவற்றை உருவாக்க ஒரு நிலைத்த மற்றும் நம்பத்தகுந்த மின்சார வழங்கல் அவசியமாகும். ஆனால், மாகாணங்களின் பல பகுதிகளில் மின்சாரம் கிடையாது. எனவே, மின்வழங்கலை புதிதாக நிறுவுதல் அல்லது மீண்டும் செயற்படுத்துதல் மற்றும் உயர்திறன் வாய்ந்த பகுதிகளுக்குக் கிராம மின்சாரத் திட்டங்களை விரிவாக்குதல்.
2.12 வடக்கு – கிழக்கில் விவசாய மேம்பாட்டில் பெண்கள்
சராசரியாக, இலங்கையைப் போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், பெண்கள் சுமார் 43% அளவுக்கு வேளாண்மைத் துறையில் உழைக்கும் தொழிலாளர்களாக இருக்கின்றனர். பெண் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது, அவர்களின் வருமானத்தை உயர்த்துவதிலும், நிலைத்த கிராமப்புற வாழ்வாதாரத்தை உருவாக்குவதிலும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வேளாண் மேம்பாட்டு உத்தியிலே பெண்களுக்கு ஆதரவளிக்கும் கூறு இல்லாமல் அது முழுமையடையாது. கடந்த யுத்தம், கணிசமான அளவில் பெண் தலைமையிலான குடும்பங்களை உருவாக்கியுள்ளது. இக்குடும்பங்களில் பெண்கள் தாங்களே விவசாயம் மற்றும் மீன்வளச் செயல்களை மேற்கொண்டு, தங்கள் குழந்தைகள் மற்றும் முதிய பெற்றோர்களைப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதை வலியுறுத்த வேண்டியதாய் உள்ளது, ஏனெனில் பெரும்பாலான ஆண்கள் — விவசாயிகளும் மீனவர்களும் — யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நயமற்ற போக்கைச் சரி செய்யத் தேவையான தீர்வுகளை மேற்கொள்ளாவிட்டால், வறுமை மற்றும் ஆதரவற்றநிலை மேலும் அதிகரிக்கும். வேளாண்மையில் பெண்களின் பங்கு வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களுக்கு வர்த்தக நோக்கிலான விவசாய நுட்பங்கள் மற்றும் முறைகள் குறித்த அறிவும் பயிற்சியும் உடனடியாக வழங்கப்பட வேண்டியுள்ளது. பாரம்பரியச் சூழலில் பெண்கள் பெற்ற அறிவும் மனப்பான்மையும், எதிர்கால வளர்ச்சியின் சவால்களை எதிர்கொள்வதற்கு போதுமானதல்ல.
எனவே, பெண்களுக்கு வருமானம் உருவாக்கும் திறன்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதிலும், மென்மையான கடன் வசதிகள் மற்றும் சந்தை அணுகல்களுடன் அவர்களை ஆதரிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. இந்தப் பிரச்சினையின் அளவை ஆய்வு செய்யும் வகையில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பெண்களின் நிலையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெண்களின் வேளாண்மைப் பங்களிப்பை அடிப்படையாகக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம். யுத்தத்தால் உருவான பெண் தலைமையிலான குடும்பங்களுக்கு வேளாண்மை மற்றும் மீன்பிடியில் முழுமையான பங்கு ஏற்பட்டுள்ளது. தொழில்முறை விவசாய நுட்பங்களில் அவர்களுக்குப் பயிற்சி தேவை. மென்மையான கடன்கள், சந்தை வசதிகள், வருமான உருவாக்கப் பயிற்சிகள் ஆகியவை முக்கிய ஆதரவுகள். இந்நிலையைப் புரிந்துகொள்ள, திட்டமிட, கணக்கெடுப்பு அவசியம்.
2.13 வடக்கு – கிழக்கில் மனிதவள மேம்பாடு
வேளாண்மை மற்றும் மீன்வளத்துறையின் மாற்றத்திற்கான ஏற்ற மனிதவளங்களை உருவாக்குதல் இன்றியமையாத தேவையாகும். இது தற்போது ஒரு தடையாக இருக்கும் நிலையில், பல்வேறு உத்திகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதற்காக, தற்போதைய மனிதவள நிலை மற்றும் திறன்கள் குறித்தும், எதிர்காலத் தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் அடிப்படையில் ஒரு மனிதவள மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக, பல்கலைக்கழகங்களில் தேவையான வசதிகள் மற்றும் புதிய பாடநெறிகளை நிறுவல், தற்போதுள்ள பயிற்சி மையங்களைப் பலப்படுத்தல், அனைத்து மட்டங்களிலும் பயிற்றுநர்களைத் தயாரித்தல், உற்பத்தியாளர்களுக்கான பல்லூடகக் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தல், பெண்களுக்கான தனிப்பட்ட பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவை முக்கியமாகக் கருதப்பட வேண்டும்.






