வல்லிபுரமும் நாகர்கோயிலும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
30 நிமிட வாசிப்பு

வல்லிபுரமும் நாகர்கோயிலும்

September 4, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

வல்லிபுரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் இன்று ஒரு சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் குடியேற்றம் செறிந்த, பிரபலமான, ஓர் ஆரம்பகால கடற்கரை நகரமாக அது விளங்கியிருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? இன்று புன்னாலையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் வடக்குக் கடற்கரை வீதி வழியே சென்றால், வீதி முடிவிலிருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் இக்கிராமம் இருக்கிறது. இப்போதைய வல்லிபுரம் கிராமம் கடற்கரையிலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கிறது.

இன்றைய வல்லிபுரம் கிராமத்திலிருந்து கடற்கரைவரை நீண்டு கிடக்கும் – நான்கு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட மணற்குவியல் – அவ்விடத்தில் வாழ்ந்த பண்டைக்கால மக்களின் அடிச்சுவடுகளையும், குடியேற்ற எச்சங்களையும் தன்னிடத்தில் தாங்கி நிற்கிறது. அப்பகுதியில் நிலத்தை அகழ நேரிட்ட கிராமத்தவர்கள் கட்டடங்களின் அடித்தளங்களையும், செங்கற்களையும், மட்பாண்டங்களையும், நாணயங்களையும் கண்டெடுப்பதாக அடிக்கடி தெரிவிப்பார்கள். வடமேற்கிலிருந்து தென்கிழக்குத் திசையில் மூன்று மைல் தொலைவிற்கு நீண்டு கிடக்கும் மணல் குன்றின் உள்ளே புராதனக் கட்டடங்களின் சுண்ணாம்புக்கல் குவியல்கள் காணப்படுகின்றன. இந்த மணற்குன்றுகளினிடையே புராதனமான ஓர் ஆழ்வார் (மகாவிஷ்ணு) கோவில் – மீண்டும் மீண்டும் புனர்நிர்மாணம் பெற்று – கோபுரமும் கூடமுமாக எழுந்து நிற்கிறது. அக்கோயிலின் வளாகத்திலிருந்து கடற்கரைவரை ஒரு நீண்ட மதில் சுவரின் அழிபாடுகள் புதைந்து கிடக்கின்றன (Lewis, J.P. 1916-17: 96-97).

தொல்லியல் ஆய்வாளரும், அன்றைய யாழ்ப்பாண அரசாங்க அதிபருமான ஜே.பி. லூயிஸ், “ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் குறிப்பிட்ட நான்கு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட மணல் மூடிய பகுதியே பண்டைய வல்லிபுர நகரமாகும். இப்பழைய நகரம் இன்றுவரை இலங்கை அரச தொல்லியல் துறையினரால் அகழ்வாய்வு செய்யப்படவில்லை என்பது வருந்தத்தக்க விடயம்” எனக் குறிப்பிட்டார். 

1900 ஆம் ஆண்டில் ஆழ்வார் ஆலயத்திலிருந்து வடகிழக்காக 50 யார் தொலைவில் மணலில் புதைக்கப்பட்டிருந்த ஒரு புத்தர் சிலை கோயில் பூசகர்களால் கண்டெடுக்கப்பட்டு கோயிலின் மரக்காலை அறையில் 1902 ஆம் ஆண்டுவரை வைக்கப்பட்டு, பின்னர் பிரித்தானிய அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் புத்தரின் சிலையை யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுத்தி வைத்தார்கள் (Lewis, J.P. 1916-17: 96-97).

1936 ஆம் ஆண்டில் புத்தரின் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நிலத்தைக் தோண்ட நேரிட்டபோது பழைய தொல்பொருட்களினிடையே எழுத்துப் பொறிக்கப்பட்ட ஒரு பொற்சாசனம் கிடைத்தது. இலங்கை முழுவதிலும் இதுவரை காலமும் நடைபெற்று வந்த அகழ்வுகளில் இப்படியானதொரு பொற்சாசனம் கிடைத்தது இதுவே முதற் தடவையாகும். இது பற்றிப் பின்னர் விரிவாகப் பேசப்படும். 

போர்த்துக்கேயரால் முற்றாக அழிக்கப்பட்டு 19 ஆம், 20 ஆம் ஆண்டுகளில் புனர்நிர்மாணம் பெற்ற ஆழ்வார் கோயில், அழிந்துபோன பண்டைய வல்லிபுர நகரத்தின் புகழ்தாங்கிய சான்றடையாளமாகும் (Vestige of a Glorious Past). ஐதீகக் கதைகளின்படி இந்த ஆலயம் ‘பெரும்பாணாற்றுப்படை புகழ்’ பல்லவ அரசன் தொண்டைமான் இளந்திரையனால் கட்டப்பட்டது (இது ஏற்கனவே ‘நாகநாடும் நாகர்களும்’ என்ற பகுதியில் கூறப்பட்டிருக்கிறது). தமிழ்ப் பௌத்த நூலான வீரசோழியம் தொண்டைமான் இளந்திரையன் விஷ்ணு, புத்த பகவான் இருவரினதும் பக்தன் எனக் கூறுகிறது. புத்த பிரானை விஷ்ணுவின் அவதாரம் எனக் கூறும் இந்துமத இதிகாச நூல்கள் உள்ளன.

கந்தரோடையைப் போன்று புத்த மதத்தைக் கடைப்பிடித்த மக்களும் வாழ்ந்த பூமி வல்லிபுரம். ஏற்கனவே கூறியதுபோல புத்த பிரான் விஷ்ணுவின் அவதாரம் என பல இந்துக்கள் நம்பினார்கள். இன்றுவரையும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் ஆதி மூலத்தில் வைத்து வணங்கப்படுவது திருமாலின் சக்கராயுதமே ஆகும். இதன் மாற்று வடிவமே பௌத்தர்களின் தர்மச்சக்கரம். வல்லிபுரத்து விஷ்ணு கோயிலை நாம் ஆழ்வார் ஆலயம் என்றே அழைக்கிறோம். தமிழர்கள் பேணிய பௌத்த மரபுரிமையில் (Buddhist Tradition) புத்த பிரானும் ஆழ்வார் என்ற பெயரினாலே அழைக்கப்படுகிறார் என பேரறிஞர் உ.வே. சாமிநாதய்யர் எடுத்துக்காட்டியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது (சாமிநாதையர், உ.வே. 1951: பக். 36).

சிங்களக் கவிதை நூலான கோகில சந்தேஸ போர்த்துக்கேயரால் அழிக்கப்படுவதற்கு முன்பிருந்த வல்லிபுர விஷ்ணு கோயிலைப் பற்றிக் கூறுகிறது. புராதன வல்லிபுர நகரம் பல்லவத்துறை என்ற பெயர் கொண்ட ஒரு துறைமுகத்தைக் கொண்டிருந்தது. இன்றைக்கும் அத்துறைமுகம் இருந்த கடற்கரைப் பகுதி பல்லப்பை என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. மகாவம்சம் இத்துறைமுகத்தை (பாளி மொழியில்) பல்லதித்த எனக் குறிப்பிடுகிறது. அநுராதபுர அரசியின் மேல் காதல் கொண்ட அபயநாகன், அது தெரிய வந்ததும் அரசனது வஞ்சத்திற்குப் பயந்து இந்தியாவிற்குப் பல்லதித்த துறையினூடாக தப்பி ஓடியதை மகாவம்சம் கூறுகிறது (Mahavamsa Ch. XXXVI: 43).

பெருங்கற் பண்பாட்டுப் புதையல்கள்

நீள்கிடத்திய புதையல்

1848 ஆம் ஆண்டில் வல்லிபுரக் கடற்கரைப் பகுதியில் நிலத்திலிருந்து மூன்று அடி ஆழத்தில் நீளக்கிடத்தி, மேற்குக் – கிழக்குத் திசையை நோக்கிய வண்ணம் புதைக்கப்பட்டிருந்த ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இடது கரத்தில் தங்க மோதிரம் உட்பட பல வகையான தங்க ஆபரணங்களும் காணப்பட்டன. அந்த எலும்புக்கூட்டின் காலடியில் நீலமும் – வெண்ணிறத்திலுமான பளபளப்பான ஒரு சாடியினுள்ளே 7,000 புராதன நாணயங்கள் காணப்பட்டன (Journal of the Royal Asiatic Society, Ceylon Branch, Vol. 1, No. 3, p. 156). இந்த விவரங்களிலிருந்து புதையுண்டிருப்பவர் ஒரு பெரிய செல்வந்தராகவோ அல்லது அரச வம்சத்தைச் சேர்ந்தவராகவோ இருந்திருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. 

புதைகிடங்கினுள் தாழிப்புதையல்

1972 ஆம் ஆண்டில் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்குச் சமீபமாக இருந்த ஒரு மண்மேட்டை அகழ்ந்தபோது பெரிய கல் மேசையினால் மூடப்பட்டு, கற்களினால் சுவரமைக்கப்பட்ட ஒரு புதைகுழியும் அதனுள்ளே எலும்புகளைக் கொண்ட ஒரு தாழியும் (Urn in a Cist) காணப்பட்டது. இப்பெருங்கற் பண்பாட்டுப் புதையலில் கார்ணிலியன் மற்றும் மதிப்புமிக்க கற்கள், கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், குடுவைகள், இரும்பு ஆணிகள், நாணயங்கள் என்பன காணப்பட்டன (இந்திரபாலா, கா. 1973).

வல்லிபுரப் புத்தர் சிலை

வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையின் உருவ அமைப்பும் (Iconography) அதன் அமராவதி மூலமும் (பண்டைய ஆந்திர தேசத்திலிருந்த பௌத்த மையம்) அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த மகாயான பௌத்தப் பாரம்பரியத்தை விளங்கிக்கொள்வதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்றாகும். 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-18 ஆந் திகதிகளில் பின்லாந்தில் நடைபெற்ற மதம் சம்பந்தமான கருத்தரங்கில், சுவீடன் உப்சலா பல்கலைக்கழகப் பேராசிரியர் பீற்றர் ஷாக் வல்லிபுரப் புத்தர் சிலை பற்றிக் கூறிய கருத்துகள் இங்கு குறிப்பிடத்தக்கவை. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில், வடஇலங்கையின் வடமராட்சிப் பகுதியில், அழியுண்டிருந்த பெருமாள் கோயில் திரும்பக் கட்டப்பட்ட பொழுதில், அக்கோயில் வளாகத்திலிருந்து வடகிழக்கே 50 யார் தள்ளி மணலில் புதையுண்டிருந்த புத்தர் சிலை வெளிக்கொண்டுவரப்பட்டது. கோயிலின் மரக்காலை அறையில் வைக்கப்பட்டிருந்த இப்புத்தர் சிலை பிரித்தானிய அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு 1902 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் ஓர் அரசமரத்தின் கீழ் ஒரு நில மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 1906 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆளுநராகவிருந்த (Governor) ஸேர் ஹென்றி பிளேக்கினால் சியாம் நாட்டு (இன்றைய தாய்லாந்து) அரசருக்கு இச்சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது புத்த பிரானின் ஆரம்பகாலச் சிலைகளில் ஒன்றாக இருந்தபடியினால் சியாம் நாட்டு அரசர் அதைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம்கொண்டிருந்தார் (The Ceylon Antiquary and Literary Register, 1916-17, Vol. 2, Part 2, p.96-97).  

இச்சம்பவம் அதன் பின்னர் அடுத்த 90 ஆண்டுகளுக்கு மக்களின் நினைவுகளிலிருந்து மறந்துபோய்விட்டது. 1906 ஆம் ஆண்டின் பின் பிறந்த இலங்கை மக்கள், தாய்லாந்திற்கு பயணம் செய்திருந்தாலொழிய இப்புத்தர் சிலையைப் பார்த்திருக்கமாட்டார்கள். 

வல்லிபுரப் பொற்சாசனம் இவ்விடத்தில் ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்ட செய்தியைப் பதிவு செய்திருக்கிறது. அந்த விகாரை இருந்த இடமெதுவும் இன்று வெளியே தெரியவில்லை. இந்தப் புத்தர் சிலை ஒன்றுதான் அந்த விகாரையின் எஞ்சியிருக்கும் பகுதிகளில் ஒன்றாக இருக்கும். இம்மாதிரியான பெரிய புத்தர் சிலைகள் விகாரைகளில்தான் காணப்படும். ஓரிடத்தில் ஒரு புத்தர் சிலை காணப்பட்டால் அங்கே ஒரு விகாரை இருக்கிறது அல்லது இருந்தது என்றுதான் அர்த்தம். வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் எழுத்துப்பதிவு அப்புத்தர் சிலை வல்லிபுரத்தில் கட்டப்பட்ட பௌத்த நிறுவனத்திற்கு உரியது என்பதை உறுதிப்படுத்துகிறது (Schalk, Peter 1994).

ஜனவரி 1994 இல் பீற்றர் ஷாக் தாய்லாந்தில் பாங்கொக்கிற்கு விஜயம் செய்தபோது ‘வாற் பெஞ்சா’ என்ற பௌத்த ஆலயத்திலிருந்த வல்லிபுரப் புத்தர் சிலையை இனங்கண்டு கொண்டார். பாங்கொக்கிலுள்ள இந்தப் பிரபல மத்திய பௌத்த ஆலயம் ‘பளிங்குக் கோயில்’ (Marble Temple) என அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் வல்லிபுரப் புத்தர்சிலைக்கு கோயில் மண்டபத்தினுள் இடமேதும் கொடுக்கப்படவில்லை. கோயிலின் பின்பக்கத்தில் ஒரு மூலையில், ஓர் இரும்புக் கிராதியின் பின்னால் வைக்கப்பட்டிருக்கும் இச்சிலையை மக்களால் இலகுவில் கவனிக்க இயலாது (Schalk, Peter 1994).

அக்கோயிலில் பணிபுரியும் காவலர்களுக்கோ, சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டிகளுக்கோ, ஒரு வாழ்நாட்காலம் அங்கே சேவை புரியும் குருமார்களுக்கோ அச்சிலையின் பூர்வீகமோ, அதன் பெயரோ, அது இலங்கையில் வல்லிபுரத்திலிருந்து அங்கே வந்தது என்ற தகவலோ எதுவுமே தெரியாது (Schalk, Peter 1994).

பேராசிரியர் பீற்றர் ஷாக்கின் பாங்கொக்கில் கண்ட வல்லிபுரப் புத்தர் சிலையின் மனக்கிளர்ச்சி உண்டாக்கக்கூடிய விரிவுரை இதுவாகும்.

“கல்லிலே செதுக்கப்பட்ட இயற்கை வடிவளவான சிலை இது. புத்தர் நிற்கும் நிலையில் இது செதுக்கப்பட்டிருக்கிறது. மூலச்சிலையில் உடைந்திருந்த வலதுகையில் புதிய கரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இடது கையில் நான்கு விரல்கள் புதிதாக திருத்தியமைக்கப்பட்டிருக்கின்றன. தலைமுடி சிறிய சுருள்களாகக் காணப்படுகிறது. முகம் வட்ட வடிவாகவும், மிகுதி உடலைப் போலவும் சதைப்பிடிப்பாகக் காணப்படுகிறது. உயர்ந்த புருவங்கள் கொண்ட முக அமைப்பு. விழித்திரை தெளிவாக இல்லை. நாசி பெரியதாக அகன்றும், உதடுகள் தடித்தும் காணப்படுகின்றன. உதட்டில் மெல்லிய புன்சிரிப்பு. காதுகள் கழுத்தின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கின்றன. காதுகளின் அடிப்பகுதி கணுக்கள் நிரம்பிய மடல்களாகக் காட்சியளிக்கின்றன”.

“மேலே அணிந்திருக்கும் அங்கவஸ்திரமான ‘உத்தரசங்கவின்’ (Upper Garment) கீழே வேறு கீழ் ஆடையான ‘அந்தரவாசக’ (Lower Garment) எதுவும் காணப்படவில்லை. மேல் அங்கவஸ்திரம் நீண்ட தடித்த தளர்வான மடிப்புகளாக உள்ளது. வலது கரத்தில் (அது திருத்த முன்னர்) முதலில் இருந்தது ‘அபய முத்திரையாக’ (Fearlessness Gesture) இருந்திருக்கலாம். அதைத் திருத்தி அமைத்தவர்கள் புதிய கரத்தை நேர்த்தியாக அமைக்கவில்லை. புதிய கரத்தில் காணப்படும் ‘அஸிஸ முத்திரை’ (Blessing Gesture) சரியாக அமைக்கப்படவில்லை. இப்படியான அமைப்பு 5-7 ஆம் நூற்றாண்டிற்குரிய ‘சிங்கள பௌத்த உருவ அமைப்பில்’ மட்டுமே காணப்படுகிறது. அமராவதியில் தயாரிக்கப்பட்ட, நிற்கும் புத்தசிலைகள் அனைத்திலும் அபய முத்திரை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இடதுகரம் மேல் அங்கவஸ்திரத்தின் முழு நீளத்தையும் தாங்கி நிற்கிறது. அங்கவஸ்திரம் காலடி வரையும், கால் விரல்கள் மட்டும் தெரியும் வண்ணம் நீண்டிருக்கிறது. குறுகிய இடுப்பும், அகன்ற மார்பும் உடல்வலிமை நிறைந்த தோற்றத்தைக் கொடுக்கிறது” (Schalk, Peter 1994).

இந்த மாதிரியான உருவ அமைப்புக்கொண்ட புத்தர் சிலைகள் ஆந்திராவில் சத்வாகன அரசவம்ச ஆட்சிக்காலத்திலும் (கி.பி. 200-232), அவர்களைத் தொடர்ந்த இக்ஷ்வாகு அரசர்களின் ஆட்சிக்காலத்திலும் (கி.பி. 249-440) தயாரிக்கப்பட்டன. இவர்களின் ஆட்சிக்காலத்தில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதிப் பகுதியில், இலங்கையின் பௌத்த குருமாருக்குரிய – சிகள விகாரை பற்றிய (சிங்கள குருமாருக்கு அல்ல) – சிகள என்ற தீவிலிருந்து வந்த குருமார் தங்குவதற்கான விகாரை பற்றிய தகவல் தரும் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திர கலைப் பாணியில் உருவாக்கப்பட்ட ஒரு புத்தர் சிலை வல்லிபுரத்தில் அமைவதற்கான காலமும் நேரமும் இக்காலப் பண்பாட்டுச் சூழலில் கைகூடி வந்திருக்கிறது (Schalk, Peter 1994).

அமராவதி – அநுராதபுர பௌத்த கலைப் பள்ளிகள்

அக்காலத்தில் ஆந்திர நாட்டின் அமராவதியிலிருந்த பௌத்த கலைப்பள்ளியில் உருவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட பௌத்தமதக் கலைச்சின்னங்களின்  திராவிடக் கலைப்பண்புகள் இலங்கையிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன. தூரகிழக்கு நாடுகளுக்கும், இலங்கைக்கும் வியாபித்திருந்த தமிழகத்தின் வர்த்தக நடவடிக்கைகள், சங்ககாலத் தமிழகத்தில் இந்நாடுகளுக்கிடையிலான கலாசாரப் பரிமாறல்களுக்கும் ஏதுவாக இருந்தன. உதாரணமாக கந்தரோடையிலும், வல்லிபுரத்திலும் காணப்பட்ட புத்தரின் சிலைகள் ஆந்திராவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கலாசார உறவின்  இயக்க விளைவுகளைக் காட்டுவதாக இருந்தன. 

அக்காலத்தில் இலங்கையில் காணப்பட்ட சுண்ணாம்புக் கற்களினாலான பௌத்த சிலைகளினதும், கல்வெட்டு உருவங்களினதும் பண்புகளை ஆராய்ந்த ஜேர்மனிய சிற்பவியல் வல்லுனரான கலாநிதி உல்றிச் வொன் ஷ்ரோடர் (Dr Ulrich von Schroeder) இவை அனைத்தும் அமராவதி பௌத்தக் கலைப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் இறக்குமதி செய்யப்பட்ட சிற்பங்கள் எனக் கூறிச் சென்றிருக்கிறார்: Imported Sculptures from Early Amaravati School and Imported Sculptures from Late Amravati (Nagarjunakonda) (Schroeder, U.V. 1990).

மேற்குறிப்பிட்டுள்ள உல்றிச் வொன் ஷ்ரேடரின் ஆய்வுகளிலிருந்தும், பிரித்தானிய பேராசிரியர் ஆஷ்லி தொம்ஸனின் ஆய்வுகளிலிருந்தும், ஆந்திராவில் அமராவதியிலும், நாகர்ஜுனாகொண்டவிலுமிருந்த கலைஞர் சபைகள் (Artist Guilds) இலங்கைக்கும் மற்றும்  தூரகிழக்கு நாடுகளுக்கும் பெருவாரியான பௌத்த சிற்பங்களை விநியோகம் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. சமயக் கோட்பாடுகள், பண்டைய வர்த்தக சமூகங்களுக்கான தனித்துவத்திற்கும், ஒருங்கிணைவுக்கும் ஏதுவான இறுக்கமான உந்துதலைக் கொண்டிருந்தபடியினால், இவர்கள் மூலமாகவே இலங்கைக்கு பௌத்த சிற்பங்கள் வந்தடைந்தன.

வரலாற்று ரீதியாக இப்பௌத்த சிற்பங்களின் வருகையைக் கற்பது முக்கியமானது. வல்லிபுரம் புத்தர் சிலையின் உருவாக்கம், அமராவதிக் கலைப்பண்பின் வெளிப்பாடாகும். இதன் வருகை, ஈழத்தில் பௌத்தத்தின் வருகையையும், அநுராதபுரக் கலைப்பள்ளியில் அமராவதிக் கலைப்பாணியின் தாக்கம் வெளிப்பட்ட காலத்தையும் பதிவு செய்கிறது. இதன் முதலாவது கட்டம் அமராவதி, அநுராதபுரம், வல்லிபுரம் ஆகிய மையங்களுக்கிடையே இடம்பெற்ற முக்கோணக் கலாசார தொடர்புகளையும் எடுத்துரைக்கும் காலப்பகுதியாகும் (Peter Schalk 1994).

இது நடைபெற்ற காலப்பகுதியில், இலங்கையில் பரவியிருந்த பௌத்த மதம், உலகளாவிய பௌத்த மதமாகப் பார்க்கப்பட்டதே தவிர, சிங்கள பௌத்தமாக இனங்காணப்படவில்லை. இந்தப் புத்த சிலையை கந்தரோடையில் கண்டெடுத்த புத்தரின் சிலைகளோடு ஒப்பு நோக்கினால் ஆந்திர பௌத்தம் ஈழ பௌத்தத்தில் கொண்டிருந்த பாரிய தாக்கவிளைவை உணர முடியும் (Peter Schalk 1994).

வல்லிபுரப் புத்தர் சிலையின் தோற்றம், ஆந்திராவின் கலாசாரத் திறனைக் கொண்ட திராவிட மையங்களான அமராவதி, பத்திப்புரோலு, யக்கையபேட்டை, கண்டசாலா, கோலி, நாகர்ஜுனகொண்ட ஆகியவற்றின் கலைப் பண்பாட்டுப் பரிமாணமாகக் கருதப்படுகிறது. இம்மையங்களின் புதிதாக ஆக்கும் திறன்கொண்ட பௌத்தக் கலைகளின் வளர்ச்சி கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் சத்வாகன, இஷ்வாகு அரசுகளால் பராமரிக்கப்பட்டது.

இந்தக் கலாசார மையங்களில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து புத்தரின் சிலைகள் தோற்றம் பெற்றன. அதுவரை காலமும் மக்கள் வணங்கி வந்த புத்தபாத பீடிகைகளையும், மற்றும் புத்த பகவானின் சின்னங்களையும், புத்தரின் சிலைகள் பதிலமர்த்தின. இச்சிலைகளின் படிமுறை வளர்ச்சியில் கி.பி. மூன்றாம் – நான்காம் நூற்றாண்டுகளில் தனித்துவமான அமராவதிப் பாணி புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டன. வல்லிபுரப் புத்தர் சிலை இந்த அமராவதிக் கலைப்பாணியில் அமைந்த சிலையாகும். இவ்வகையான புத்த படிமங்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தென்னிந்தியா, இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளைச் சென்றடைந்தன (Peter Schalk 1994).

இந்தச் சந்தர்ப்பத்தில் உபயோகிக்கப்படும் ‘அநுராதபுரக் கலைப்பள்ளி’ என்ற சொல்லமைப்பு, அக்காலத்தில் அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த, புத்த சிலைகளை உருவாக்கும் ஒரு சிங்களப் பள்ளி இருந்ததை உணர்த்தி நிற்கிறது. அதனைத் தொடர்ந்து வல்லிபுரப் புத்தர் சிலையில் அநுராதபுரக் கலைப்பள்ளியின் தாக்கங்கள் இருப்பதாகவும் சிலரால் கூறப்படுகிறது. ‘அநுராதபுரக் கலைப்பள்ளி’ என்றால் என்ன? இதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். இதன் முதல் பகுதி தாதுசேன அரசனின் கி.பி. 459 ஆம் ஆண்டு வரையிலான பகுதி. அடுத்த பகுதி கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் அநுராதபுரம் கைவிடப்பட்ட காலம் வரையிலான பகுதி. இதன் முதல் பகுதியின் புத்தர் சிலைகள் அமராவதி கலைப் பாணியையே காட்டிநிற்கின்றன. இவற்றில் மிகப் பழையதான, அநுராதபுர மாவட்டத்திலுள்ள மஹா இலுப்பலமவிலுள்ள ஆறு அடி உயரமான, வெண்ணிறப் பளிங்குக் கல்லில் (Marble) அமைந்த புத்தர் சிலை அமராவதிக் கலைப் பாணியிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பளிங்குக் கல் ஆந்திராவிலுள்ள வேங்கி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. மதவாச்சியில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. நான்கம் நூற்றாண்டிற்கான 46 செ.மீ. உயரமான வெண்கலப் புத்தர் சிலையும் அமராவதிக் கலைப் பாணியிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது (Peter Schalk 1994).

அநுராதபுரக் கலைப்பள்ளியின் இரண்டாவது பகுதியில்தான் ‘சிங்கள பௌத்தத்திற்குரிய’ தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. முதலாவது பகுதியான அநுராதபுரத்திலும், இலங்கையின் வட பகுதியிலும், தென்னிந்தியாவிலும், தென்கிழக்காசியாவிலும் காணப்படும் புத்த சிற்பங்கள் அனைத்தும், அமராவதிக் கலைப்பாணியிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. வல்லிபுரப் புத்தர் சிலை அமராவதிக் கலைப்பாணியில் கி.பி. 3 ஆம், 4 ஆம் நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது (Peter Schalk 1994).

“1906 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்த இலங்கைத் தமிழர் எவரும், தாய்லாந்தில் பாங்கொக்கிலுள்ள வாற் பெஞ்சா ஆலயத்திற்குச் சென்றிருந்தால் ஒழிய வல்லிபுரப் புத்தர் சிலையைக் கண்டிருக்க முடியாது. அதைப் பற்றி தமிழ் மக்களுக்கு இப்போது எடுத்துக்கூறுகிறேன்: 

“திராவிடக் கலைப்பண்பாட்டின் மரபுரிமையான இந்த தலைசிறந்த படைப்பை பார்த்து வியக்க வேண்டுமானால் நீங்கள் வாற் பெஞ்சா ஆலயத்திற்குப் போக வேண்டும். வருங்காலத்தில் ஒருநாள், தாய்லாந்து அரசரிடமிருந்து தமிழ் மக்கள் இதை மீண்டும் பெற்றுக்கொள்ள நேரிடலாம். அரசியல் நலங்களுக்காக சிங்களவர்களால் உருவாக்கப்பட்ட இச்சிலையின் பிரதியை மௌனமாகப் புறக்கணித்துவிடலாம். அப்படி மூலச்சிலை கிடைக்குமானால் அதைப் பெயர்த்தெடுத்த யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் மீண்டும் அச்சிலையை நிறுத்தி வைக்கலாம். அங்கிருந்து இலங்காதீபத்தின் சகல தீங்கான நோக்குகளையும் அது ஒழித்துவிடக்கூடும்.”

– பேராசிரியர் பீற்றர் ஷாக்.

வல்லிபுரப் பொற்சாசனம்

யாழ்ப்பாணத்தில் வல்லிபுரத்திலிருக்கும் ஆழ்வார் கோயிலுக்குச் சமீபமாக இருந்த பௌத்த கோயிலின் அழிபாடுகளைப் பற்றி அப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக அறிந்திருந்தார்கள். 1916 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த ஜே.பி. லூயிஸ் வல்லிபுரத்தைப் பார்வையிடச் சென்ற சமயம் ஆழ்வார் கோயிலின் பூசகர் அப்பகுதியிலிருந்த பௌத்த கோயிலின் அழிபாடுகளை அரசாங்க அதிபரைக் கூட்டிச் சென்று காண்பித்தார் (Lewis, J.P. 1916).

இதைத் தொடர்ந்து 1936 ஆம் ஆண்டில் பௌத்த கோயிலின் அழிபாடுகள் இருந்த இடத்தில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழ்வுகளின் போது புராதன பௌத்த விகாரத்தின் அஸ்திவாரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த ஒரு கற்பேழையில் வல்லிபுரப் பொற்சாசனம் கண்டெடுக்கப்பட்டது. 39.16 அங்குல நீளமும், ஓர் அங்குல அகலமும், 69.5 கிரெய்ன் நிறையும் கொண்ட இப் பொற்தகடு கற்பேழையினுள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது (Paranavitana,S.1941).

வல்லிபுரப் பொற்தகட்டின் நடுவில் பிராமி எழுத்துகளால் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகம் அச்சமயம் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் ஆணையாளராக இருந்த செனரத் பரணவிதான அவர்களால் பொருள் விளக்கம் கூறப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு ‘எப்பிகிராபியா சிலனிகா’ என்ற ஆங்கில அரச கல்வெட்டுச் சாசன நூலில் பிரசுரிக்கப்பட்டது (Epigraphia Zeylanica, Vol. IV, 1934-1941: pp 229-237). அது பிரசுரிக்கப்பட்ட நாட்களிலிருந்தே அச்சாசனத்தின் பொருள் விளக்கமும், பகுப்பாய்வும், மொழி மாற்றமும், முடிபுகளும் ஏகப்பட்ட கற்கை மரபான வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதலால் அதைச் சற்று விவரமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. 

அவரது ஆய்வறிக்கையில் அச்சாசனத்தில் காணப்படும் எழுத்துகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குரிய இலங்கையின் பிராமி எழுத்துகள் என்றும், இலங்கையின் பல பாகங்களிலுள்ள கல்வெட்டுகளில் காணப்படும் பிராமி எழுத்துகளை அது ஒத்திருப்பதாகவும் கூறியிருந்தார். அச்சாசனத்தில் காணப்படும் அ, ற, உ, ல ஆகிய எழுத்துகளின் கீழ்ப்பகுதிகள் நீண்டு கீழே இடப்பக்கமாக வளைந்திருப்பதற்கான காரணம், அவை ‘கல்லில் எழுதப்படாமல் வளைந்து கொடுக்கக்கூடிய ஒரு உலோகத் தகட்டில் எழுதப்பட்டிருப்பதே’ எனவும் கூறியிருந்தார். மேலும், அச்சாசனம் எழுதப்பட்ட மொழி பழைய சிங்கள மொழி எனவும், அக்காலத்தைய ஆவணங்களின் இலக்கணத் தரத்திற்கு ஏற்புடையதாக இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.

பெற்சாசனத்தின் உரைமூலம்

பொற்சாசனத்தில் உள்ள பிராகிருத உரை இது:

1. சித்த மகரஜ வஹயஹ ரஜெஹி அமெதெ

2. இஸிகிரய நகதிவ புஜமெனி

3. படகரஅதநெஹி பியகுகதிஸ

4. விஹர கரிதே

சித்த – சித்தி கிடைக்கட்டும் (சாசனத்தின் ஆரம்பத்திலுள்ள மங்கலச் சொல்).

மொழிபெயர்ப்பும் முடிவுகளும்

பேராசிரியர் பரணவிதானவின் பொற்சாசன மொழிபெயர்ப்பும், விளக்கமும், முடிவுகளும் இவை:

1. மகாராஜரான வஹவின் ஆட்சிக்காலத்தில் அவரது பிரதிநிதியான

2. இஸிகிரய நாகதீவை நிர்வாகம் செய்யும் போது

3. படகர அத்தனாவில் பியகுக திஸ்ஸ

4. விகாரையைக் கட்டுவித்தான் (விகாரை கட்டப்பட்டது).

இந்தச் சிறிய வாசகத்தைக்கொண்டு செனரத் பரணவிதான மிகப்பரந்த வரையறையற்ற முடிவுகளுக்கு வந்திருந்தார்.

1. இந்தச் சாசனம் கி.பி. இரண்டாம்  நூற்றாண்டில் அநுராதபுரத்தை ஆட்சி செய்த அரசன் வசபனின் மந்திரியான இசிகிரயன் என்பவனால் நாகதீப நிர்வாகிக்கப்பட்டது என்பதை எடுத்துரைக்கிறது. 

2. இச்சாசனத்தின் பிராமி எழுத்துகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குரிய இலங்கையின் பிராமி எழுத்துகள். 

3. பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும் இச்சாசனத்தின் மொழி பழைய சிங்கள மொழி (Paranavitana, S. 1934-41: 229).  

இச்சாசனத்தை ஆராய்ந்த பேராசிரியர் பரணவிதான இதில் காணப்படும் எழுத்துகள் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையின் பெருநிலப்பரப்பில் காணப்பட்ட சாசனங்களை ஒத்திருப்பதாகக் கூறி, இதில் காணப்படும் ‘வஹ’ என்ற பதம் கி.பி. 124-168 ஆண்டுக்காலத்தில் அநுராதபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்த வசபனைக் குறிப்பிடுவதாகத் தீர்மானித்தார். இதன் பிரகாரம் நாகதீபம் அநுராதபுர அரசனின் மந்திரியால் நிர்வாகிக்கப்பட்டது என்றும் முடிவெடுத்தார். 

இலங்கையில் காணப்படும் எல்லாப் பிராகிருதக் கல்வெட்டுகளிலும் ‘வஸப’ என்றும், பாளி மொழியில் ‘வஹப’ என அழைக்கப்படும் அரசன் வசபனின் பெயர் எந்தக் கல்வெட்டிலும் ‘வஹ’ என எழுதப்படவில்லை. இலங்கையிலுள்ள புராதன சாசனங்கள் யாவற்றிலும் ‘வஸப’ என எழுதப்பட்ட வசபனின் பெயர் வல்லிபுரச் சாசனத்தில் ‘வஹ’ என எழுதப்பட்டதற்கு பரணவிதான தரும் விளக்கம் நமக்குப் பூச்சுற்றுவதாகவே இருக்கிறது. 

இந்த எழுத்து வடிவத்தின் மூலத்தை விளக்க சிக்கலான ஒரு கருத்தை முன்வைக்கிறார். வடமொழியில் ‘விருஷப’ என்றால் எருது அல்லது மேன்மையான பொருள் என அர்த்தம். வடமொழியில் ‘விருஷப’ என்ற சொற்பதம் சில சமயங்களில் ‘விருஷ’ அல்லது ‘ருஷ’ என சுருக்கப்பட்டது போல ‘வஹப’ என்பது ‘வஹ’ என சுருக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

இலங்கையின் மற்றைய பகுதிகளில் இந்த மன்னனின் பெயரைப் பதிவு செய்த பிராகிருதம், வடமொழி தெரிந்த பௌத்தர்கள் ஏன் இந்த மன்னனின் பெயரை ‘வஹ’ எனச் சுருக்கவில்லை என்பதற்கு எந்த விளக்கத்தையும் அவர் தரவில்லை. மேலும், மூன்று எழுத்துகள் மட்டுமே கொண்ட ஒரு மன்னனின் பெயரை இந்தச் சாசனத்தில் மட்டும் இரண்டு எழுத்தாகச் சுருக்க வேண்டிய ஒரு தேவை இல்லை.

இந்தச் சாசனத்தை எழுதியவர் கல்வியறிவுள்ள பிராகிருத மொழியில் பயிற்சி பெற்ற ஒரு பௌத்த பிக்குவாகவே இருந்திருக்க வேண்டும். அவருக்கு தனது நாட்டை ஆட்சிபுரிந்த மன்னனது பெயரைச் சரியாகப் பதிவு செய்யத் தெரியவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.

மேலும், வசபனின் ஆட்சி வடபகுதியை உள்ளடக்கியிருந்தது என மகாவம்சமோ, சூளவம்சமோ உரைக்கவில்லை. இலங்கை முழுவதும் அநுராதபுரத்தின் ஒற்றை ஆட்சியின்கீழ் ஆட்சி செய்யப்பட்டது என்பதைக் கூறுவதில் மிக அக்கறை கொண்ட பாளி இலக்கியங்கள், வடபகுதி வரை வசபனின் ஆட்சி நீடித்திருந்தால், அப்பகுதியில் அவன் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும்.

இன்னும், வசபனின் கல்வெட்டுகள் எதிலும் வடபகுதியில் அவன் ஆட்சி பரவியிருந்தது பற்றி எதுவிதமான தகவலும் இல்லை. இவற்றை நோக்குமிடத்து வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் ‘வஹ’ என்ற பதம் வசபனைக் குறிப்பதாகப் பரணவிதான எடுத்த முடிவு அவரது கற்பனை என்றே கருதவேண்டி உள்ளது. ‘வஹ’ என்ற பெயர் கொண்ட அரசன் ஏன் கந்தரோடையிலிருந்து நாகதீபத்தை ஆண்ட அரசனாகவும், இசிகிராயன் அவனது பிரதிநிதியாகவும் இருக்கக்கூடாது?

இச்சாசனம் எழுதப்பட்டிருக்கும் பிராகிருத மொழியை நாட்டின் பிற இடங்களில் காணப்படுவது போன்ற ‘பழைய சிங்கள மொழி’ எனக் கூறிய பேராசிரியர் பரணவிதான இச்சாசனத்திலிருக்கும் சொற்களுக்கு ‘சிங்கள மொழி மூலங்களையும்’ எடுத்துரைத்தார். அவர் சிங்கள மொழி மூலங்கள் என எடுத்துக்காட்டிய பதங்கள் சமஸ்கிருதமும், பிராகிருதமுமே!

அப்படியிருந்தும் அவரால் ‘இஸிகிரய’ என்ற பெயருக்கு வட மொழிகளிலிருந்தோ, சிங்களத்திலிருந்தோ மூலத்தைக் கண்டுபிடிக்க முடியாமையால், இப்பெயர் இந்நாட்டிற்குப் புறம்பானதொரு பெயர் என முடிவெடுத்தார். ‘இஸிகிரய’ என்ற பெயர் ‘ராயன்’ என்ற பதத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம் எனக் கருதிய பேராசிரியருக்கு இது ஒரு தமிழ்ப்பெயர் என்பது ஏனோ புலப்படவில்லை. தமிழில் ராயன் என்பது ஒரு குழுத்தலைவனைக் குறிப்பிடும் பெயராகும். முடிநாகராயன், மழவராயன், பல்லவராயன், வசந்தராயன், காத்தவராயன் என்பன தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் பெயர்களாகும். இசிகிராயன் (இசிகிரய) என்ற தலைவன் வல்லிபுரத்திலிருந்து நாகநாட்டின் வடகிழக்கை நிர்வகித்த கந்தரோடை அரசனின் பிரதிநிதியாக இருக்கலாம்.

படகர அதநெஹி

பிராகிருத மொழியில் ‘அதநெ’ என்றால் ஆஸ்தானம் என்று பொருள். ‘அதநெஹி’ என்றால் ஆஸ்தானத்தில் என்று பொருள்படும். யாழ்ப்பாணத்தின் வடகரையிலிருக்கும் வல்லிபுர ஆஸ்தானத்தை இது குறிப்பிடுவதனால் ‘படகர’ என்பது ‘வடகரை’ என்ற தமிழ்ப் பதத்தின் பிராகிருதமயமாக்கப்பட்ட பதம் எனக் கொள்வதில் தவறேதும் இருக்க முடியாது. ‘படகர அதநெஹி’ என்றால் ‘வடகரை ஆஸ்தானத்தில்’ என்பதே சரியான பொருள்.

பியகுக விஹர கரிதே

இந்த வாசகத்திற்கு இசிகிராயன் ‘பியகுகதிஸ விகாரை’ என்ற பெயர் கொண்ட விகாரையைக் கட்டுவித்தான் அல்லது இசிகிராயனின் நிர்வாகக் காலத்தில் பியகுகதிஸ என்பவன் இந்த விகாரையைக் கட்டுவித்தான் என இரு விதமாகப் பொருள் கொள்ளலாம்.

யாழ்ப்பாணத் தீபகத்திற்கு அப்பால் மேற்குக் கடலில் உள்ள தீவுகளில் பௌத்தம் பரவியிருந்த முக்கியமான தீவு புங்குடுதீவு. இத்தீவை பாளி  நூல்கள் பியங்கு தீபமெனவும், நம்பொத்த என்ற சிங்கள நூல் புவங்குதீவு எனவும் குறிப்பிடுகிறது. பியங்குதீபம் தூய்மையில் சிறந்த பௌத்தர்கள் வாழ்ந்த இடம் என்பது மகாவம்சம் மூலம் அறியக் கிடக்கிறது. துட்டகாமினி போரில் எல்லாளனைக் கொன்றபின் தனது மாளிகைக்குத் திரும்பி, போரில் நடைபெற்ற கொடுமைகளை எண்ணி மனக்கவலையுற்ற நேரத்தில் பியங்குதீபத்தின் தவப்பள்ளியிலிருந்த தேரர் எண்மர் துட்டகாமினியிடம் சென்று அவனைத் தேற்றினார்கள் என்ற தகவலை மகாவம்சம் தருகிறது. வல்லிபுர விகாரையைக் கட்டுவித்தவர் பெயர் பியகுகதிஸ என வல்லிபுரப் பொற்சாசனம் தெரிவிப்பதிலிருந்து இந்தத் திஸன் புங்குடுதீவில் வாழ்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.

வல்லிப்புரப் பொற்சாசனத்தின் காலமும் எழுத்து வடிவமும்

வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் எழுத்துக்களை ஆராய்ந்த பரணவிதான இச்சாசனத்தின் வரிவடிவம் இலங்கையின் பெருநிலப்பரப்பில் காணப்பட்ட வரிவடிவமே எனக்கூறிய போதிலும், இந்த எழுத்துக்களின் தண்டுகளின் கீழ்ப்பகுதியிலுள்ள நீண்ட வளைவுகளைக் கவனிக்கத் தவறவில்லை.இந்த வளைவுகளுக்கான காரணம் அவ் வெழுத்துக்கள் கற்களிலல்லாமல் மென்மையான பொற்தகட்டில் எழுதியதனால் ஏற்பட்ட வளைவுகள் என்றும் பரணவிதான விளக்கமளித்திருந்தார். இச் சாசனஎழுத்துக்கள் இரண்டாம் நூற்றாண்டிற்கு உரியவை என்றும், இச் சாசனத்தில் காணப்புடும் மொழி இலங்கையின் பிற கல்வெட்டுகளில் காணப்படுவது போன்ற ‘ஆதிச் சிங்களப்பிராகிருதம்’ என்றும் தீர்ப்பளித்தார்.

வல்லிபுரப் பொற்சாசனத்தின் எழுத்து வடிவங்களை ஆராய்ந்த இந்திய தொல்லியராளரும், தொல்லெழுத்துக் கலைஞருமான பேராசிரியர் ஏ. எச். டானி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்ட ‘இந்திய தொல்லெழுத்துக்கலை’ (Indian Paleaography) என்ற அவரது ஆய்வு நூலில், வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் எழுத்துக்கள் ஆந்திராவில் அமராவதி, நாகர்ஜுனா கொண்டா ஆகிய மையங்களில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும், நான்காம் நூற்றாண்டிலும் உபயோகிக்கப்பட்ட இக்ஷ்வாகு வகை எழுத்து வடிவங்கள் எனக் கூறியுள்ளார். இச் சாசனத்தில் காணப்படும் அ, ஐ, உ, க, ம, ய, ற, ல, வ ஆகிய எழுத்துக்கள் இக்ஷ்வாகு வகை எழுத்துக்களே ஆகும். வல்லிபுரப் பொற்சாசனம் பற்றிய அவரது மதிப்பீடு வருமாறு:

“Of these, the gold plate inscription has an individual character of its own. In this case the lower curves of the verticals are over-emphasised and the medial i has a sharp curve to the left. The letters a, i, u, ka, ga, ma, ya, ra, la and va are all Ikshvaku forms.… In the inscription we have definite evidence of the school of Amarāvati and Nagarjunakonda writing reaching Ceylon, probably in the latter half of the third century A.D. (Dani, A.H. 1963: 221)

பேராசிரியர் டானியின் மதிப்பாய்வின்படி வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் அடிப்பகுதி நீண்டு இடப்பக்கம் வளைந்த எழுத்துகள் பொற்தகட்டில் எழுதியமையால் ஏற்பட்டதல்ல. அவற்றின் உண்மையான வடிவமே அதுதான். 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஆந்திர நாட்டின் அமராவதி, மற்றும் நாகர்ஜுனாகொண்டா மையங்களில் ஆரம்பமான இக்ஷ்வாகு வகை பிராமி எழுத்து வடிவங்கள் அவை. இதைப் புரிந்துகொள்ளாத பேராசிரியர் பரணவிதான இத்தவறுக்குக் காரணமானார். இந்த வகையான எழுத்து வடிவங்கள், ஆந்திர நாட்டு மையங்களிலிருந்து இலங்கை வந்தடைந்ததற்கு வல்லிபுரப் பொற்சாசனம் ஒரு சான்று எனப் பேராசிரியர் டானி பதிவு செய்திருக்கிறார். 

தென்னாசியச் சாசனங்களை ஆராய்ந்த பேராசிரியர் சிற்றம்பலம், இக் காலகட்டத்தில் தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் கல்வெட்டுகள் யாவும் பிராகிருத மொழியிலே எழுதப்பட்டிருப்பதையும், இப்பண்பைப் பின்பற்றியே அமராவதி, நாகர்ஜுனாகொண்டா பகுதிகளில் பௌத்தத்தை ஆதரித்த இக்ஷ்வாகு அரச வம்சத்தினரும் தமது ஆட்சிக்கு உட்பட்ட, திராவிட மொழியான தெலுங்கு வழக்கிலிருந்த பிரதேசங்களில் பிராகிருத மொழியிலேயே பௌத்தமத சாசனங்களை எழுதி வைத்திருப்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார் (சிற்றம்பலம், சி.க. 1993: 119-123).

வல்லிபுரச் சாசனத்தை ஆதாரமாகக்கொண்டு இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தமிழ்மொழி பேசவில்லை, மாறாக சிங்கள பிராகிருதம் பேசினார்கள் எனக் கொள்வது, ஆந்திர மாநிலத்தில் காணப்படும் கல்வெட்டுகளைக் கொண்டு இப்பகுதி மக்கள் தெலுங்கு பேசவில்லை, பிராகிருதம் பேசினார்கள் எனக் கொள்வது போன்ற தவறான கணிப்பாகும். 

வல்லிபுரப் பொன்னேட்டு மொழி பௌத்தர்களின் சமயப் பதிவேட்டு மொழியே ஒழிய, ஓர் இனத்தின் பேச்சு மொழியே அல்ல. பௌத்த மதத்தினரின் சாசன மொழியான பிராகிருதத்தை மக்களின் பேச்சு மொழியாக பரணவிதான குறிப்பிட்டுக் கூறியது மாபெரும் தவறாகும். பேராசிரியர் பரணவிதான வல்லிபுரச் சாசனத்தை ஒரு புறச்சார்வான, பாரபட்சமான கண்களுடனேயே அணுகியிருக்கிறார் என்பதில் எதுவிதமான சந்தேகமும் இல்லை. இவரது தவறான முடிவுகள் பல வரலாற்றாசிரியர்களைப் புராதன யாழ்ப்பாணத்தில் கணிசமான அளவு சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்றும், யாழ்ப்பாண அரசு (நகதீப அரசு) அநுராதபுர அரசின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்திருக்கிறது எனவும் தவறாக எழுதுவதற்கு ஏதுவாயிற்று.  

பேராசிரியர் வேலுப்பிள்ளையின் பொற்சாசன விளக்கத் திறனாய்வு

பிரபல கல்வெட்டியலாளரும், தொல்லெழுத்துக் கலைஞருமான பேராசிரியர் ஆள்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை, பேராசிரியர் செனரத் பரணவிதானவின் வல்லிபுரப் பொற்சாசனம் பற்றிய பொருள் விளக்கம் பற்றியும், பகுப்பாய்வு பற்றியும் (Interpretations and Analysis) தனது கருத்துகளை நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கிறார் (Veluppillai A. 1990: 10-42). அதைச் சுலபமாக விளங்க வைப்பதற்காக இங்கே சுருக்கமாக இலக்கக் குறிகளாகக் கூறப்படுகிறது.

1. வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் எழுத்து வடிவங்கள் இலங்கையில் காணப்படும் மற்றைய கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் எழுத்துகள் போன்றவை என்றும் அவை இரண்டாம் நூற்றாண்டிற்கு உரியவை என்றும் செனரத் பரணவிதான தீர்ப்பளித்திருக்கிறார். தொல்லெழுத்துக் கலை ரீதியாக இந்த எழுத்து வடிவங்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குரிய ஆந்திர நாட்டு இக்ஷ்வாகு வடிவ பிராமி எழுத்துகள் என பேராசிரியர் டானி அறியத்தருகிறார். இக்ஷ்வாகு அமராவதி, நாகர்ஜுனாகொண்டா ஆகிய கலாசார மையங்களை உள்ளடக்கிய அரச பரம்பரையினராவார். இங்கே கவனிக்க வேண்டியது ஆந்திரநாடு ஒரு திராவிடமொழி (தெலுங்கு) பேசிய நாடாக இருந்த போதிலும் பௌத்த குருமார்கள் தங்கள் மத சம்பந்தமான எழுத்துப் பொறிப்புகளை பிராகிருத மொழியிலேயே பதிவு செய்தார்கள். 

2. இந்த வல்லிபுர மையத்திலே அமராவதிக் கலைப் பாணியில் ஒரு புத்தர் சிலையைக் கண்டெடுத்ததாகக் குறிப்பிடும் செனரத் பரணவிதான, அதை ஒரு மறை குறிப்பாகக் கொண்டு வல்லிபுரப் பொற்சாசனத்தை வல்லிபுரப் புத்தர் சிலையோடு தொடர்புபடுத்தியிருக்க வேண்டும். அவரது எண்ணத்தில் அந்த தொடர்பு உதிக்கவே இல்லை. ஆரம்ப நாட்களில் புத்த பகவானின் சிலைகள் பௌத்த விகாரைகளிலேயே காணப்பட்டன. வல்லிபுரப் புத்தர் சிலையும், வல்லிபுரப் பொற்சாசனமும் குறிப்பிட்ட ஒரே இடத்திலிருந்து பெறப்பட்ட போதிலும், அப் புத்தர் சிலை, அப் பொற்சாசனம் குறிப்பிடும் விகாரைக்கு உரியது என்ற எண்ணம் அவருக்கு உறைக்கவே இல்லை.  

3. இச்சாசனத்தில் காணப்படும் மொழியை ‘பழைய சிங்களம்’ என விசைப்பாச்சலாக செனரத் பரணவிதான தீர்மானித்தது விந்தையாக இருக்கிறது. கிறிஸ்தாப்தத்திற்கு முன்னும் பின்னுமான சில நூற்றாண்டுகளில், தமிழகம் ஒன்றைத் தவிர, தென்னாசியாவெங்கும் கல்வெட்டு மொழியாக இருந்தது பிராகிருதம் மட்டுமே. பொற்சாசனத்தில் காணப்படுவது பிராகிருத மொழியே! சிங்களம் அல்ல!  

பிற்காலத்தில் பிராகிருத மொழியிலிருந்து சிங்களம் பிறந்த போதிலும், பிராகிருதமும் சிங்களமும் இரு வித்தியாசமான மொழிகள். மேலும், இலங்கையின் ஆரம்பகால பிராகிருத எழுத்துப் பதிவுகளில் வட இந்தியப் பிராகிருதத்திலோ, சமஸ்கிருதத்திலோ, அல்லது பாளி மொழியிலோ இல்லாத பல வார்த்தைப் பிரயோகங்கள் பதிவாகியிருக்கின்றன. இலங்கையின் ஆதிப் பிராகிருதத்திற்கு கிட்டிய உறவான மொழி ஆந்திரப் பிராகிருதமாகும். சில பிராகிருதச் சொற்பதங்களை தமிழ் அல்லது திராவிட மொழிகள் மூலமாகவே விளங்கவைக்க முடியும். இச்சாசனத்தை வாசித்த பொழுதில், அதை விளங்குவதில் சில பிரச்சினைகள் இருந்ததை செனரத் பரணவிதானவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

4. இச்சாசனத்தில் உள்ள இசிகிரய என்ற சொற்பதத்தை ஆராயுமிடத்து இது சிங்களமோ, சமஸ்கிருதமோ அல்ல என்றும், இச்சொல் ஓர் அயல்நாட்டு மொழியின் தோற்றத்தைத் தருவதாகவும் செனரத் பரணவிதான குறிப்பிடுகிறார். இதன் இறுதி அசைச் சொல்லை ராயன் – ராயர் என வாசிக்கும் பரணவிதானவிற்கு இது ஒரு தமிழ்மொழிப் பதம் என்பது எப்படித் தெரியாமல் போயிற்று? ராயன் என்ற பெயர் ஈழத்தின் அரசன் ஒருவனை அல்லது ஒரு தலைவனைக் குறிக்கும் பெயர். இசிகிராயன் என்பதே ஒரு தமிழ்ப்பெயர்.

5. சாசனத்தில் இடம்பெறும் நகதிவ என்ற பெயர் பகுதி தமிழாக உள்ள பெயர். நாகதீப என்கிற பாளிப் பதத்திற்கும், நாகதீவு என்கிற தமிழ்ப் பதத்திற்கும் இடையில் வரக்கூடிய பெயர் இது.

6. சாசனத்தில் இடம் பெறும் அரசனின் பெயர் வஹா. வஹா என்ற இந்தப் பெயரை செனரத் பரணவிதான இரண்டாம் நூற்றாண்டின் அநுராதபுர அரசன் வசபா (வஹபா) என தீர்மானிக்கிறார். இச்சாசனத்தில் உள்ள எழுத்து வடிவங்கள் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியில் உருவான இக்ஷ்வாகு வகை எழுத்துகள் என தொல்லெழுத்துக் கலை ரீதியாக பேராசிரியர் டானியால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, அரசன் வசபன் என்ற பேச்சு இங்கே இடம்பெற இயலாது. 

(இந்த பொற்சாசனத்திற்கு ஒரு வெப்பேற்றுக் கதிரொளிவீச்சுக் காலக்கணிப்பு − Thermoluminescence Dating செய்தால் அதன் சரியான திகதி தெரிந்துவிடும்.)

7. சாசனத்தில் இடம்பெறும் படகர என்ற சொற்பதம் பாளியில் உள்ள படகர என்னும் சொல்லுக்குச் சமனாக இருக்கலாம். ஆனால் வல்லிபுரம் யாழ்ப்பாணத்தின் வடகரையில் இருப்பதனால் வடகரை என்ற தமிழ்ச் சொல்லே இங்கே படகர எனப் பதிவாகியிருக்கிறது என்பதை செனரத் பரணவிதான ஒப்புக்கொள்கிறார். 

ஆனாலும், இந்தச் சாசனத்தில் வடகரை என்ற தமிழ்ச் சொற்பதம் காணப்படுவதை ஏற்றுக்கொள்ளும் செனரத் பரணவிதான, இந்தச் சாசனம் பழைய சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்ற கருத்தை மாற்றவே இல்லை. 

8. வல்லிபுரப் பொற்சாசனம் பழைய சிங்கள மொழியில் எழுதப்பட்டிருப்பதாக உரிமை கோரும் செனரத் பரணவிதான, சாசனத்தின் மூல உரைக்கு நேரடியாக பழைய சிங்களத்திலிருந்து கருத்துக் கூறாமல், மூன்று வகையான மாற்றுப் பொருள் விளக்கங்களை (Three Alternative Interpretations) முன்வைப்பது விந்தையாக இருக்கிறது. பழைய சிங்களம் எனக் கூறப்படும் மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுவதற்கு இரு வகையான பொருள் விளக்கங்களை முன்வைக்கலாம்: ஒன்று சிங்கள மொழியின் உருவாக்கத்தில் தமிழ் மொழியின் தாக்கம். மற்றது தமிழ் மொழியின் (திராவிட) அடித்தளத்திலிருந்து சிங்கள மொழி உருவானது என்ற கருத்து. சிங்கள மொழியின் இலக்கணம், வட இந்திய மொழிகளைப் போல அல்லாது தமிழ் இலக்கணத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

9. தென்னாசியா எங்கும் உள்ள பௌத்த நிறுவனங்களின் கல்வெட்டுகளிலும், எழுத்துப் பொறிப்புகளிலும் பிராகிருத மொழியை உபயோகிப்பது வழக்கம். இக்கல்வெட்டு மொழிக்கும் மக்கள் பேசும் மொழிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. ஆந்திர நாட்டில் அமராவதி, நாகர்ஜுனாகொண்டா ஆகிய இடங்களில் காணப்படும் அனைத்துக் கல்வெட்டுகளும் பிராகிருத மொழியில் இருக்குமிடத்து சாதாரண மக்கள் தெலுங்கு மொழியைப் பேசினார்கள். அக்காலத்தில் பிராகிருதம் தென்னாசியாவின் இடையீட்டுப் பொதுமொழியாக (Lingua Franca) இருந்தமையால் அது உபயோகத்திலிருந்த ஒரு பிராந்தியத்தில் அதுதான் முக்கியமான பேச்சுமொழியாக இருந்திருக்க வேண்டுமென்பதில்லை. சாசனத்திலிருந்த பிராகிருத மொழியை, பழைய சிங்களம் எனத் திரித்துக்கூறி, அது அப்பிரதேச மக்களின் பேச்சுமொழியாக இருந்தது எனத் தீர்மானம் செய்ததே செனரத் பரணவிதான செய்த மாபெரும் அநீதியாகும் (Veluppillai, A. 1981: 6).

சாசனம் சாற்றும் சரித்திரச் சான்றுகள்

நாகதீபம்

இலங்கையின் பௌத்தமத வரலாற்று நூல்களான மகாவம்சம், தீபவம்சம் ஆகியன இலங்கையின் வடபகுதியை ‘நாகதீப’ என அழைக்கின்றன. வல்லிபுரப் பொற்சாசனம் இதை ‘நாகதீவ’ எனப் பதிவு செய்திருக்கிறது. மணிமேகலை இந்நிலப்பகுதியை ‘நாகநாடு’ எனக் கூறுகிறது. இலங்கையின் மேற்குக் கரையோரமாகக் கதம்ப நதியின் (அருவியாறு) முகத்துவாரத்திலுள்ள அரிப்பு என்ற இடத்திலிருந்து, அவ்வாற்றுப் படுக்கை நிலங்கள் வழியாக நாகபொக்கணை வரைக்கும், நாகபொக்கணையிலிருந்து கிழக்குக் கரையோரமாக திரிகூடத்தை உள்ளடக்கிய ஒரு கோட்டுக்கு வடக்கேயுள்ள பிரதேசம் யாவும் நாகதீப என அழைக்கப்பட்டது (Geiger, W. 1960: 108).

நாகதீபத்தில் இன்றைய யாழ்ப்பாணக் குடாநாடு, அதைச் சுற்றியுள்ள தீவுகள், திருகோணமலை, முல்லைத்தீவு, பூநகரி, மாந்தை, மன்னார், மகாவில்லாச்சி, வவுனியா உள்ளிட்ட வன்னிப் பகுதிகள் அனைத்தும் அடங்கியிருந்தன. இருந்த போதிலும், தமிழில் பாண்டித்தியம் பெற்றதாகக் கூறிக்கொள்ளும் சில அறிஞர்கள் நாகதீபம் என்ற பெயர் நயினாதீவைக் குறிப்பிடுவதாகத் தீர்மானித்துள்ளார்கள். ‘வையா’ என்ற யாழ்ப்பாண வரலாற்று நூல் நயினாதீவை ‘நாகநயினாதீவு’ எனக் கூறுவதனால் ஏற்பட்ட மயக்கமாக இது இருக்கலாம். 

இசிகிராயன் (இஸிகிரய) என்னும் தமிழ்ப் பெயர் கொண்ட தலைவன் வல்லிபுரத்திலிருந்து நாகதீபத்தை நிர்வாகம் செய்தான் என்ற சாசனக் கூற்று, நாகதீபம் என்பது நயினாதீவு என்ற சிறிய தீவாக இருக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும், புங்குடுதீவு (பியங்கு தீப) இந்த நாகதீபத்தின் ஒரு பகுதியே என்பதையும் இச்சாசனம் சுட்டி நிற்கிறது. மொத்தத்தில் மகாவம்சம், தீபவம்சம் ஆகிய நூல்கள் இலங்கையின் வடபகுதி முழுவதையும் நாகதீபம் எனக் குறிப்பிடுவதையே வல்லிபுரப் பொற்சாசனமும் உறுதி செய்கிறது.

பரணவிதான பொருளுரைத்திருப்பது போல வல்லிபுரப் பொற்சாசனம் நாகதீவில் சிங்கள மக்களின் குடியேற்றம் பற்றிக் கூறவரவில்லை. மாறாக பேராசிரியர் பீற்றர் ஷாக் சுட்டிக்காட்டுவது போல வல்லிபுரச் சாசனம் வடபகுதியில் இசிகிராயன் என்ற தமிழ்ப் பெயரைக்கொண்ட தலைவனின் தலைமையில் தமிழ் மக்களின் குடியேற்றத்தை உறுதிப்படுத்தும் சிறந்த சாசனமாகும். முக்கியமாக வல்லிபுரப் பொற்சாசனம் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்ட தமிழ் மக்களின் வடஇலங்கைக் குடியேற்றங்களைப் பதிவு செய்திருக்கும் சிறந்த பதிவாகும். வல்லிபுரம் தமிழ் மொழி பேசிய பண்பாட்டுப் பிரதேசம் என்பதை இச்சாசனம் உறுதி செய்கிறது (Peter Schalk 1994).

ஒரு புதிய விகாரை கட்டப்படுவது அவ்விடத்தில் பௌத்த மதம் பரவியிருந்ததற்கான சான்று. பெரும்பாலும் வல்லிபுரப் புத்தர் சிலை அந்த விகாரையில் நிறுவப்பட்டதாகும். அந்த விகாரை கட்டுவதற்குப் பொறுப்பாக இருந்தது அரசன் அல்ல. அரசனின் பிரதிநிதியான இசிகிராயனே. 

நாகதீப அரசு

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் மகோதரன், சூளோதரன் ஆகிய நாக மன்னர்கள் நாகதீபத்தின் அரசுரிமைக்காகப் போர் புரிந்த வரலாற்றை மகாவம்சம் எடுத்துரைக்கிறது (Mahavamsa, Ch. 1: 46). கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வளைவாணன் என்னும் தமிழ் நாக அரசன் நாகநாட்டை ஆட்சிபுரிந்த தகவலை மணிமேகலை கூறுகிறது (மணிமேகலை xxiv: 54). இவற்றின் தொடர்ச்சியாக கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வஹ என்ற அரசனின் பிரதிநிதியான இசிகிராயன் என்ற தமிழ்த் தலைவன் வல்லிபுரத்திலிருந்து நாகதீபத்தை நிர்வாகம் செய்த தகவலை இச்சாசனம் தருகிறது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் உக்கிரசிங்கன், சிங்கைநகரை அரச மையமாகக் கொண்ட யாழ்ப்பாண அரசை ஆரம்பிப்பதற்கு முன்னரே, நாகதீபத்தைத் தமிழ் அரசர்கள் நிர்வாகம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதை உறுதுணை செய்யும் சான்றுகளில் இச்சாசனமும் ஒன்று. 

யாழ்ப்பாண மண்ணின் ஆதி வரலாற்றைப் பதிவு செய்த நூல்கள் ஏதும் இன்று இல்லாத போதும், அநுராதபுரத்தை அரச பீடமாகக் கொண்ட இலங்கையின் ஆட்சி அமைப்புக்கு வெளியே, நாகதீபத்தில் தனித்தன்மையான சுதந்திரத் தமிழ் மன்னர்களின் அரசாட்சி நடைபெற்று வந்திருப்பதற்கான ஒரு சான்று இச்சாசனம். 

இச்சாசனம் கூறும் வஹ மன்னனைப் பற்றி இனிமேல்தான் ஆராயவேண்டும்.

ஆந்திர – யாழ்ப்பாண கலாசாரத் தொடர்புகள்

வல்லிபுரச் சாசனத்தில் காணப்படும் ‘அ, உ, க, ம, ய, ற, ல, ள’ ஆகிய எழுத்து வடிவங்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதிக்கும், நான்காம் நூற்றாண்டிற்குமுரிய அமராவதி, நாகர்ஜுனாகொண்டா சாசனங்களில் காணப்படும் பிராகிருத மொழி இக்ஷ்வாகு பாணி (Ikshvaku Style) எழுத்து வடிவங்களாகும். இவ்வெழுத்துப் பாணி இலங்கையின் பெருநிலப் பரப்பிலுள்ள கல்வெட்டுகளில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வெழுத்து வடிவங்கள் ஆந்திராவிலிருந்து கடல் வழியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்து வல்லிபுரச் சாசனத்தில் இடம்பெறுகின்றன என்பது தெளிவாகிறது. இவ் வரிவடிவங்கள் கிறிஸ்தாப்தத்திற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே வட ஈழத்தில் வியாபித்துப் பரவிக்கிடந்த ஆதித் தமிழரின் நீர்ப்பாசன, சமுத்திர வர்த்தக நாகரிகப் பின்னணியில், வட யாழ்ப்பாணத்தின் துறைகளினூடாகக் கசிந்து வந்த கலாசாரப் பரிமாறலின் சின்னங்களாகும்!

ஆந்திர மாநிலத்தில் உருவான அமராவதிக் கலைப்பாணியின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையாகக் கொள்ளப்படுகிறது. இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கும் ஆந்திர தேசத்திற்குமிடையே நடைபெற்ற வர்த்தக, கலாசாரத் தொடர்புகளால் சிற்பம், சித்திரம், எழுத்து வடிவங்கள் போன்ற பல பண்பாட்டுத் துறைகளில் அமராவதிப் பண்பாடு யாழ்ப்பாண மையங்களை வந்தடைந்தது. கந்தரோடை, வல்லிபுரம், அநுராதபுரம் ஆகிய இடங்களில் காணப்பட்ட ஆரம்பகால பௌத்த சிற்பங்கள் அனைத்தும் அமராவதிப் பாணியில் அமைந்த சிற்பங்களாகும்.

வல்லிபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் ஆந்திர மாநிலத்தை ஆட்சிபுரிந்த சத்வாகன, இக்ஷ்வாகு அரசர்களின் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட நாணயங்களும் கிடைத்திருக்கின்றன. இக்காலகட்டத்தில் வல்லிபுரம் துறைமுகத்தைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற நகரமாகவும், பௌத்த மத வழிபாட்டுத் தலமாகவும் விளங்கியமையால் ஆந்திர மாநிலத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வர்த்தகர்களும், பௌத்த யாத்திரிகர்களும் இங்கே வருகை தந்தார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. 

வல்லிபுரத்தைப் போன்றே கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆந்திர நாட்டு நாணயங்களும், அமராவதிக் கலைப்பாணியில் அமைந்த புத்தபிரானின் சிலைகளும், பௌத்த ஸ்தூபங்களும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும், ஆந்திர மாநிலத்திற்குமிடையே நிலவி வந்த பண்பாட்டுப் பரிமாற்றங்களின் சான்றுகளாக விளங்குகின்றன. 

ஆந்திர மாநிலத்தின் நாகர்ஜுனாகொண்டா நகரத்தில் பிறநாட்டுப் பௌத்தர்கள் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட பள்ளிகளில் சிகள விகாரை என்பது, ஈழத்துப் பௌத்தர்கள் தங்கி, பௌத்த மதக் கல்விகளை மேற்கொள்ளுவதற்காக பிரத்தியேகமாகக் கட்டப்பட்டிருந்தது என்பதை மூன்றாம் நூற்றாண்டிற்குரிய நாகர்ஜுனாக்கொண்டா கல்வெட்டு ஒன்று எடுத்துரைக்கிறது.

நாகர்கோயில்

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தின் புராதன நகரங்களில் ஒன்றாக விளங்கிய நாகர்கோயில் இன்று ஒரு சிறிய கிராமமாகக் காட்சியளிக்கிறது. இக்கிராமம் பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் பருத்தித்துறையிலிருந்து 14 மைல் தொலைவில் அமைந்திருக்கிறது. அக்காலத்தில் அவ்விடத்தில் பிரசித்தி பெற்றிருந்த நாகர்கோயிலின் பெயரே அந்த நகருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஆலயத்தை 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் முற்றாக அழித்தொழித்தனர். அவ்விடத்தில் இன்று ஒரு சிறிய நாகதம்பிரான் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. அக்கோயிலின் சுற்றாடலில் ஐந்து தீர்த்தக் கேணிகள் காணப்படுகின்றன.

பண்டைய நகரம் இன்றிருக்கும் நாகதம்பிரான் கோயிலிலிருந்து கிழக்கே கடற்கரை வரை பரந்திருந்தது. கடற்கரை வரை பரந்திருக்கும் கருமணற் கும்பிகளினுள்ளே பலதரப்பட்ட பண்டைய மட்பாண்ட ஓடுகள் காணப்படுகின்றன. கறுப்பு – சிவப்பு மட்பாண்ட ஓடுகள், உரோம ரௌலெற்றெட் ஓடுகள், சீனப் பீங்கான்கள், இஸ்லாமிய மட்பாண்டங்கள், தடித்த பள்ள விளிம்பு கொண்ட கலன்கள் எனப் பல (Ragupathy, P. 1987: 87-88). இவற்றைக் கொண்டு பொதுயுக (கிறிஸ்தாப்த) காலத்தில் இது ஒரு வர்த்தக மையமாக இருந்ததை ஊகிக்கலாம். இவ்விடத்தில் முறையான தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளுவதன் மூலமே நாகர்கோயிலின் பண்டைய நாகரிகப் பங்களிப்பை வெளிக்கொணர முடியும்.

உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள் 

  1. ARCHAEOLOGICAL REPORT (1846): ‘A Burial at Vallipuram’, Journal of the Royal Asiatic Society, Ceylon Branch, Vol. 1, No. 3, p. 156.
  2. CĀMINĀTAIYAR, U. Ve. (1951): Putta Carittiram, Pautta Tarumam, Pautta Caṅkam (Biography of the Buddha, The Buddhist Dharma and the Buddhist Sangha), Tiyakaraja Vilas Publication, Madras.
  3. CALDWELL, R. (1856, Reprint 1987): A Comparative Grammar of Dravidian or South Indian Family of Languages, Asian Educational Services, New Delhi.
  4. DANI, A.H. (1963): Indian Palaeography, Oxford University Press, Oxford.
  5. GEIGER, WILHELM (1960): Culture of Ceylon in Medieval Times, (Ed.) Heinz Bechert, Harrassowitz Publishing House, Germany.
  6. LEWIS, J.P. (1895): Manual of the Vanni Districts, Govt. Press, Colombo.
  7. LEWIS, J.P. (1916-17): ‘Some Notes on Archaeological Matters in the Northern Province of Ceylon’ in The Ceylon Antiquary and Literary Register 1916-17, Vol. II, Part 2, pp. 96-97, Colombo.
  8. MAHAVAMSA, THE (1993): Translated by Wilhelm Geiger, Asian Educational Services, New Delhi.
  9. PARANAVITANA, S. (1934-1941): Vallipuram Gold-Plate Inscription of the Reign of Vasabha, Epigraphia Zeylanica, Vol. IV, pp. 229-237.
  10. PARANAVITANA, S. (1983): “Vallipuram Gold Inscription”, Inscriptions of Ceylon, Vol. 2, Part 1: Late Brahmi Inscriptions, Dept. of Archaeology, Moratuwa.
  11. PARKER, HENRY (1909): Ancient Ceylon, Luzac & Co., London.
  12. RAGUPATHY, P. (1987): Early Settlements in Jaffna, Cre-A, Madras.
  13. SCHALK, PETER (1994): The Vallipuram Buddha Image Rediscovered, Paper presented at the Symposium of Dance, Music and Art in Religions, Abo, Finland, 16th-18th August 1994.
  14. SCHROEDER, ULRICH VON (1990): Buddhist Sculptures of Sri Lanka (752 pages), Visual Dharma Publications.
  15. VELUPPILLAI, A. (1981): “Tamils in Ancient Jaffna and the Vallipuram Gold Plate”, Journal of Tamil Studies 19, pp. 1-14.
  16. VELUPPILLAI, A. (1990): “Religions in Yalpanam up to the 13th Century A.D.”, Lanka 5, pp. 10-42.
  17. இந்திரபாலா, கா. (1973): ‘வல்லிபுரம் தாழிப்புதையல்’, வீரசேகரி வார வெளியீடு, 18 பெப்ரவரி 1973, கொழும்பு.
  18. சாமிநாதய்யர், உ.வே. (1951): புத்த சரித்திரம், பௌத்த தர்மம், பௌத்த சங்கம், தியாகராஜ விலாஸ் வெளியீடு, சென்னை.
  19. மணிமேகலை (1965): உ.வே. சாமிநாதையர் பதிப்பு, அறம் பதிப்பகம், சென்னை.

NOTE:

The Late Professor Alvapillai Veluppillai gained a Triple Doctorate. He received a Ph.D. degree from the University of Ceylon, Peradeniya in 1962; a D. Phil. degree from the University of Oxford in 1964; and a third doctorate (honorary degree) from the Uppsala University, Sweden in 1996.

.



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்