லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், புத்தூர்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம்.
புத்தூர்க் கோவிற்பற்றில் புத்தூர், சிறுப்பிட்டி, அச்செழு, ஆவரங்கால் ஆகிய நான்கு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது (படம்-1).

எல்லைகள்
புத்தூர்க் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் அச்சுவேலிக் கோவிற்பற்றும்; மேற்கில் மயிலிட்டி, மல்லாகம் ஆகிய கோவிற்பற்றுகளும்; தெற்கு எல்லையில் கோப்பாய்க் கோவிற்பற்றும்; கிழக்கில் உப்பாறு கடல்நீரேரியும் உள்ளன. அச்சுவேலிக் கோவிற்பற்றின் ஒரு துணைப்பிரிவான நவக்கீரி, அக்கோவிற்பற்றுடன் பொது எல்லை எதையும் கொண்டிராமல் பெரும்பாலும் புத்தூர்க் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருப்பதைக் காணமுடிகிறது. கோவிற்பற்றின் வடக்கு எல்லையை அண்டி ஆவரங்கால் துணைப்பிரிவும், அதற்குத் தெற்கே புத்தூர்த் துணைப் பிரிவும், தெற்கு எல்லையை அண்டிச் சிறுப்பிட்டித் துணைப் பிரிவும் அமைந்துள்ளன. சிறுப்பிட்டிக்கு மேற்கே அச்செழுத் துணைப்பிரிவு காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் காலப் புத்தூர்க் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருந்த பகுதிகள் தற்காலத்தில் கோப்பாய்ப் பிரதேசச் செயலர் பிரிவுக்குள்ளும், உள்ளூராட்சி அமைப்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை நிர்வாகத்துக்குள்ளும் அடங்குகின்றன.
வீதிகள்
லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி, யாழ்ப்பாண நகரத்திலிருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் வீதி மட்டுமே புத்தூர்க் கோவிற்பற்றுக்கூடாகச் செல்கிறது (படம்-2). அக்காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த மிக முக்கியமான வீதிகளுள் இதுவும் ஒன்று. இது தெற்கிலிருந்து வடக்காக சிறுப்பிட்டி, புத்தூர், ஆவரங்கால் ஆகிய துணைப்பிரிவுகளை ஊடறுத்துச் செல்கிறது. அச்செழு துணைப் பிரிவுக்குள் வீதி எதுவும் இல்லை.

நிலப்படத்தில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியை, புத்தூர்க் கோவிற்பற்றுக்கும் அச்சுவேலிக் கோவிற்பற்றுக்கும் இடையிலான எல்லைக்குச் சற்று வடக்கே அச்சுவேலியிலிருந்து வரும் வீதி சந்திக்கிறது. தற்காலத்தில் இது ஆவரங்கால் பகுதிக்குள் இருக்கின்றது. எனவே, நிலப்படத்திலும் இது புத்தூர்க் கோவிற்பற்றுக்குள் அடங்கிய ஆவரங்கால் துணைப் பிரிவுக்குள் இருந்திருக்க வேண்டும் என ஏற்கெனவே சென்ற கட்டுரையில் சுட்டிக்காட்டினோம். அதாவது இதை முன்னர் குறிப்பிட்ட அச்சுவேலி – புத்தூர் எல்லைக்கு அருகில் அதன் தெற்குப் பக்கத்தில் குறித்திருக்க வேண்டும். எனவே, ஆவரங்கால் – அச்சுவேலி வீதியும் புத்தூர்க் கோவிற்பற்றுக்கு உள்ளேயே தொடங்குகிறது எனலாம்.
தற்காலத்தில் புத்தூர்க் கோவிற்பற்றை ஊடறுத்துச் செல்லக்கூடிய சுன்னாகத்தையும் புத்தூரையும் இணைக்கும் புத்தூர் வீதி, புத்தூர் – மீசாலை வீதி, ராச வீதி முதலியவை நிலப்படத்தில் இல்லை. அடிமட்டம் வைத்து வரைந்தாற்போல் நேராக இருக்கும் அவை ஒல்லாந்தர் காலத்துக்குப் பிற்பட்ட, பிரித்தானியர் காலத்து வீதிகளாகவே தோன்றுகிறது. ஆனாலும், உள்நாடி இருந்த குடியிருப்புப் பகுதிகளை முக்கிய வீதிகளுடன் இணைக்கும் சிறிய வீதிகள் இருந்திருக்கக்கூடும். நிலப்படத்தின் நோக்கத்துக்குத் தேவையில்லை என்பதால் அவற்றைக் காட்டாமல் விட்டிருக்கலாம்.
கட்டடங்கள்
ஏனைய கோவிற்பற்றுக்குள் இருப்பது போலவே இக்கோவிற்பற்றுக்குள்ளும் கிறித்தவத் தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் நிலப்படம் முக்கியத்துவம் கொடுத்துக் குறித்துக் காட்டுகின்றது. இவற்றைவிட, இரண்டு அம்பலங்கள், இரண்டு மடங்கள், ஒரு யானைப் பந்தி என்பனவும் நிலப்படத்தில் உள்ளன. இவற்றை விட நிலப்படத்தில் அச்சுவேலிக் கோவிற்பற்றில் குறிக்கப்பட்டுள்ள ஒரு அம்பலமும் புத்தூர்க் கோவிற்பற்று எல்லைக்குள் இருந்திருக்க வாய்ப்புண்டு.
தேவாலயமும் தேவாலய இல்லமும்
ஏற்கெனெவே, மேலே குறிப்பிட்ட யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதிக்கு அருகில் அதன் மேற்குப் பக்கத்தில் இவ்விரு கட்டடங்களும் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது. இவை புத்தூர்த் துணைப் பிரிவுக்குள் உள்ளன. போல்தேயஸ் பாதிரியாரின் நூலில் தேவாலயத்தினதும் தேவாலய இல்லத்தினதும் கட்டட அமைப்புகளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அங்குள்ள மாணவர்களின் தொகையையும் போதனையைக் கேட்க வருபவர்களின் எண்ணிக்கையையும் மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். அதுவும், வலிகாமப் பிரிவின் தேவாலயங்கள் பற்றிய விவரங்கள் அவ்வளவுதான் என முடித்த பின்னர் புத்தூரிலும் தேவாலயம் இருந்ததாகத் தகவல் தருகிறார்.1 இவ்வாறு புத்தூர்த் தேவாலயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், புத்தூர்த் தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் காட்டும் படம் நூலில் உள்ளது.2 படத்தின்படி இவ்விரு கட்டடங்களும் நிரந்தரமான கட்டடப் பொருட்களால் ஆனவையாகவே தோன்றுகின்றன (படம்-3). நூலில் இக்கட்டடங்கள் தொடர்பான எழுத்துமூலத் தகவல்கள் இல்லாததால், படத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதே. எனவே இப்படத்தை வைத்துத் தேவாலயத்தின் அமைப்புத் தொடர்பான எந்த முடிவுக்கும் வரமுடியாது.

எவ்வாறாயினும், 1840 களின் தொடக்கத்தில் புத்தூரில் இருந்த ஒல்லாந்தத் தேவாலயத்தை அரசாங்கம் வெஸ்லிய மிசனிடம் கையளித்ததாகத் தெரிகிறது. அது பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருந்துள்ளது. 1848 இல் அது திருத்தப்பட்டு வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது.3 இதுவே இன்று புத்தூரில் உள்ள வெஸ்லிய மெதடிஸ்த பரி லூக்கா தேவாலயம் ஆகும். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கைவிடப்பட்டுப் பராமரிப்பின்றி இருந்ததற்குப் பின்னரும் அதைத் திருத்திப் பயன்படுத்தக் கூடியதாக இருந்ததால், அது நிரந்தரமான கட்டடப் பொருட்களினால் கட்டப்பட்ட உறுதியான கட்டடமாகவே இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. அத்துடன், ஒல்லாந்தரின் தேவாலயமும் தேவாலய இல்லமும் இன்று மேற்படி பரி லூக்கா மெதடிஸ்த தேவாலயம் இருக்கும் வளவிலேயே இருந்திருக்கும் என்பதும் தெரிகிறது. நிலப்படத்தின்படி நுணுவில் குளத்துக்கு நேர் எதிராகவே ஒல்லாந்தரின் தேவாலயம் குறிக்கப்பட்டுள்ளது. அதே போலவே தற்காலத்திலும் நுணுவில் குளத்துக்கு எதிரிலேயே பரி லூக்கா மெதடிஸ்த தேவாலயம் உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டும் இரண்டு தேவாலயங்களதும் அமைவிடங்கள் ஒன்றே என உறுதி செய்யலாம்.
அம்பலங்களும் மடமும்
ஏதாவது பொருள் வேறுபட்டைக் காட்டும் வகையில் அம்பலம், மடம் ஆகிய சொற்கள் நிலப்படத்தில் பயன்பட்டுள்ளனவா அல்லது ஒரே பொருளில் ஒன்றுக்கொன்று மாற்றீடாகப் பயன்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. அம்பலம் எனக் குறிக்கப்பட்ட இரண்டு அமைப்புகளும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளன. இவ்விரு அம்பலங்களும் முக்கிய வீதியோரம் அமைந்திருப்பதால் பயணிகள் அல்லது வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு இவை பயன்பட்டிருக்கக்கூடும்.
ஒரு அம்பலம் புத்தூர்த் துணைப் பிரிவுக்குள் மேற் குறிப்பிட்ட வீதிக்குக் கிழக்குப் பக்கத்தில் உள்ளது. இது தேவாலயத்திலிருந்து குறுகிய தூரத்தில் இருப்பதுடன் அம்பலத்துக்கு அருகில் நுணுவில் குளம் என்னும் ஒரு குளமும் உள்ளது. இரண்டாவது அம்பலம் ஆவரங்கால் துணைப்பிரிவில் உள்ளது. இதுவும் வீதிக்குக் கிழக்குப் பக்கத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகிலும் இரண்டு குளங்கள் இருக்கின்றன. ஆனால், அம்பலத்தில் தங்குபவர்கள் வசதியாகப் பயன்படுத்தக் கூடியவாறு இவற்றில் ஒரு குளத்துக்கு மிக அருகில் இவ்வம்பலம் இருந்ததா என்பதை உறுதியாகக் கூறமுடியாது.
இக்கோவிற்பற்றிலுள்ள மேலே குறிப்பிட்ட மடங்களுள் ஒன்று வாதரவத்தைப் பகுதியில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதிக்குக் கிழக்கே குறிப்பிடத் தக்க அளவு தொலைவிலேயே அமைந்திருக்கிறது. இது கடல்நீரேரிக் கரையிலும் அமையவில்லை. இந்தக் கட்டுரைத் தொடரில் இதுவரை மடங்கள் வீதிகளை அண்டி அல்லது கரையோரமாக அமைந்திருந்ததையே பார்த்தோம். இதற்கு அருகாக நிலப்படத்தில் குறிக்காத, முக்கியத்துவம் குறைந்த ஒரு வீதி அல்லது மக்கள் பயன்படுத்தும் ஒரு பாதை இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
இந்த மடம் தேவரின் மடம் எனப் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள இன்னொரு நிலப்படத்தில் இதே கட்டடத்துக்கு அம்பலம் எனப் பெயர் குறித்துள்ளனர். இந்த இடத்தில் மடம், அம்பலம் என்னும் இரு சொற்களையும் ஒன்றுக்கொன்று மாற்றீடாகப் பயன்படுத்தி உள்ளனர் என்பது தெளிவு. ஆனால், எல்லா இடங்களிலும் அவ்வாறு கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது. இதன் அருகிலேயே தேவரின் குளம் என்ற பெயரில் ஒரு குளமும் இருப்பது குறிப்பிடத் தக்கது. ஒரே பெயரால் அறியப்பட்ட மடமும் குளமும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதேவேளை, தேவர் என்ற பெயர் ஏற்கெனவே இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிட்ட வீர மாணிக்க தேவன், பெரிய நாட்டுத் தேவன் போன்று தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரைத் தழுவியதா என்பது ஆய்வுக்குரியது. அதேவேளை, புத்தூர் எல்லைக்குள் இருந்திருக்கலாம் எனஏற்கெனவே குறிப்பிட்ட இன்னொரு அம்பலம் ஆவரங்கால் சந்தியின் வடமேற்கு மூலையில் காட்டப்பட்டுள்ளது. பிற கோவிற்பற்றுகளுடன் ஒப்பிடும்போது புத்தூரிலேயே கூடுதலான அம்பலங்கள் அல்லது மடங்கள் காணப்படுகின்றன.
யானைப்பந்தி
வீதிக்கு மேற்குப் பக்கத்தில் அதற்குச் சற்றுத் தொலைவில் இந்த யானைப்பந்தியைக் குறித்துள்ளனர். வீதிகள், குளங்கள் முதலிய அடையாளங் காணத்தக்க அம்சங்களுடன் தொடர்புபடுத்திக் காட்டப்படாததால் இதன் துல்லியமான அமைவிடத்தை அடையாளம் காண்பது கடினம். ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேவைக்காக வளர்க்கப்பட்ட யானைகளைப் பராமரிக்கும் இடமாக இது இருந்திருக்கக்கூடும்.
குளங்கள்
புத்தூர்க் கோவிற்பற்றுக்குள் 21 குளங்களை நிலப்படம் பெயர் குறித்துக் காட்டுகிறது. இவற்றுள் சிறுப்பிட்டித் துணைப்பிரிவுக்குள் வியாளவில் குளம், வேவியாக் குளம், புக்கெட்டைக் குளம், மருதங் குளம், பெரிய வயல் குளம், கட்டணைக் குளம், தவளைக் குளம், கள்ளியன்வட்டை ஆகிய எட்டுக் குளங்களும் வெறுமனே குளம் எனக் குறிக்கப்பட்ட ஒரு குளமுமாக மொத்தம் ஒன்பது குளங்கள் உள்ளன. புத்தூர்த் துணைப் பிரிவுக்குள் நிலாவரைக் கேணி, கிராலிக் குளம், வண்ணான் துரவு, பண்டாவளை, அட்டானைக் குளம், நுணுவில் குளம், தேவரின் குளம், நவான் குளம், வெட்டுத் துரவு என ஒன்பது நீர்நிலைகள் காணப்படுகின்றன. ஆவரங்கால் துணைப்பிரிவில் கொய்வளைக் குளம், கன்னாரைக் குளம் என இரண்டு குளங்கள் இருக்கின்றன. அச்செழுத் துணைப் பிரிவுக்குள் ஒரேயொரு குளம் மட்டும் உள்ளது.
இக்கோவிற்பற்றில் 21 குளங்களை நிலப்படம் காட்டுவதாக மேலே குறிப்பிட்டோம். தற்காலப் பதிவுகளின்படி இந்தப் பகுதிக்குள் 30 குளங்கள் இருக்கின்றன.4 இக்காலத்தில் இருப்பதைவிடக் கூடிய குளங்கள் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். எனவே, அவ்வாறான பல குளங்களை நிலப்படம் காட்டவில்லை என்றே கொள்ள வேண்டும்.
நிலப்படம் காட்டும் குளங்களுள் வேவியாக் குளம், மருதங் குளம், கிராலிக் குளம், நாவான் குளம், நுணுவில் குளம், கன்னாரைக் குளம் ஆகிய ஆறு குளங்களின் பெயர்கள் மாற்றமின்றி இன்றுவரை புழக்கத்தில் உள்ளன. அமைவிடத்தையும் ஒலிப்பு ஒற்றுமையையும் கருத்திற் கொண்டால், அச்செழுவில் இருப்பதாக நிலப்படம் காட்டும் வியாவில் குளமும், தற்காலப் பதிவுகளில் உள்ள விசாவலிக் குளமும் ஒரே குளத்தையே குறிக்க வாய்ப்பு உள்ளது. விசாவலிக் குளம் என்ற பெயர் வியாவில் குளம் என்பதன் திரிபாக இருப்பதும் சாத்தியம். நிலப்படத்திலுள்ள பல குளங்கள் பெயர் மாற்றம் பெற்று இன்றும் இருக்கக்கூடும். ஆனலும், பல காரணங்களால் அவற்றை அடையாளம் காண்பது கடினம்.
நிலாவரைக் கிணறு
புகழ்பெற்ற நிலாவரைக் கிணற்றை நிலப்படம் முக்கியத்துவம் கொடுத்துக் காட்டுகிறது. நிலப்படம் வரையப்பட்ட காலத்திலும் இவ்விடம் முக்கியத்துவம் பெற்று விளங்கியதை இது காட்டுவதாகக் கொள்ளலாம். 1658 – 1665 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போல்தேயஸ் பாதிரியாரும் தனது நூலில் இந்தக் கிணற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி அச்சுவேலிக்கு அருகில் இருந்த இது ஆச்சரியப்படும் அளவுக்குப் பெரியதும் அகலமானதும் ஆழமானதும் வட்ட வடிவம் கொண்டதுமென அவர் தகவல் தந்துள்ளார். நடுப் பகுதியில் இதன் ஆழம் 24 பாதம் (144 அடி) என்கிறார். பிரம்மாண்டமான பாறையொன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான வேலை என இக்கிணற்றைக் குறிப்பிடும் அவர், உள்ளூர் மக்கள் இது இடியினால் உருவானது என நம்புகிறார்கள் என்றும் தகவல் தந்துள்ளார்.5 போல்தேயஸ் பாதிரியார் கிணறு வட்டமானது என்று கூறினாலும், நிலப்படம் இதை இன்றிருப்பதுபோல் சதுரமான பெரிய கேணி போன்ற குறியீட்டினாலேயே குறித்துக் காட்டுகிறது.
பிரித்தானியர் காலத்தில், வற்றாத ஊற்று எனக் கருதப்பட்ட நிலாவரைக் கிணற்றிலிருந்து குளாய் மூலம் யாழ்ப்பாண நகரத்துக்கு நீர் வழங்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன. எனினும், இவற்றுக்கான செலவு அதிகம் என்பதால் இத்திட்டங்கள் கைவிடப்பட்டன. இப்போது இது தொல்லியற் திணைக்களத்தினால் மரபுரிமைச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.6 இது இன்று ஒரு சுற்றுலாத் தலமாகவும் பேணப்படுகிறது.
குறிப்புகள்
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 328.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 331.
- Mary B. Barker et all, A History of the Methodist Church in Ceylon 1814-1964 (Colombo: Wesley Press, –), 201.
- தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 316.
- “Part I, Section (1) – General, Government Notification” Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka, 2007 February 23, 129.



