லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் தெல்லிப்பழைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், மயிலிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். (படம்-1) நிலப்படத்தில் உள்ளபடி மயிலிட்டிக் கோவிற்பற்று, ஏழு துணைப்பிரிவுகளை உள்ளடக்கியது. இவை மயிலிட்டி, பலாலி, வயாவிளான், வறுத்தலைவிளான், தையிட்டி, வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை என்பன.

எல்லைகள்
லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி மயிலிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் பாக்கு நீரிணை அமைந்துள்ளது. கிழக்கு எல்லையில் அச்சுவேலிக் கோவிற்பற்றும், தெற்கில் மல்லாகம் கோவிற்பற்றும், மேற்கு எல்லையில் தெல்லிப்பழைக் கோவிற்பற்றும் உள்ளன. மயிலிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையை அண்டிக் கடலோரம் மேற்கிலிருந்து கிழக்காகத் தையிட்டி, மயிலிட்டி, வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை, பலாலி ஆகிய துணைப் பிரிவுகள் வரிசையாகக் காணப்படுகின்றன. தென்மேற்கு எல்லையை அண்டி வறுத்தலை விளானும் தெற்கில் வயாவிளானும் உள்ளன. (படம்-2)

வீரமாணிக்கதேவன் துறையும் பெரியநாட்டுத் தேவன் துறையும்
தற்காலத்தில் முக்கியமான பிரிவுகளாகக் கொள்ளப்படாத வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை ஆகிய இரண்டு ஊர்களை லெயுசிக்காமின் நிலப்படத்தில் மயிலிட்டிக் கோவிற்பற்றின் துணைப் பிரிவுகளாகக் காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது. இவ்விரு ஊர்களும் தேவர் எனப்படும் கரையார் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள். தேவர் சமூகத்தினர் அப்பகுதியில் வாழும் சாதாராண கரையார் சமூகத்தினருடன் ஒப்பிடும்போது உயர்வான சமூகத் தகுதியும் செல்வ வளமும் கொண்டவர்களாவர்.1 மயிலிட்டியில் வாழும் தேவர் சமூகத்தின் இரு பிரிவினரும் சோழர் காலத்தில் படைத் தளபதிகளாக வந்த வீரமாணிக்க தேவன், பெரியநாட்டுத் தேவன் ஆகியோரின் வழிவந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். மேற்படி இரண்டு தளபதிகளின் பெயர்களைத் தழுவியே தேவர் சமூகத்தில் இரண்டு பிரிவுகள் உருவாகின. 2 இப்பிரிவினர் வாழ்ந்த ஊர்களே வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை ஆகிய இரண்டு ஊர்களாக உருவாயின என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
இவ்விருவரும் சோழர் காலத்துக்கு முன்பே பல்லவர் காலத்திலோ அதற்கு முன்னரோ வந்திருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் நரசிங்கதேவன் என்பவனை மயிலிட்டியில் குடியேற்றியது பற்றிய குறிப்பொன்றை யாழ்ப்பாண வைபவமாலையில் காணமுடிகிறது.3 இது சரியானால் நரசிங்கதேவன் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவன். இவ்வாறான ஐதீகங்களின்படியான கால வேறுபாடுகளையே கணக்கில் கொள்ளாமல் வீரமாணிக்கதேவனும் பெரியநாட்டுத் தேவனும் நரசிங்கதேவனும் சகோதரர்கள் எனக் கருத்து வெளியிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எவ்வாறெனினும் மேற்படி மூவரினதும் குடியேற்றங்கள் குறித்தோ அவற்றின் காலம்குறித்தோ தீர்மானிப்பதற்கு நம்பத்தகுந்த சான்றுகள் இல்லை. லெயுசிக்காம் வலிகாமத்தைக் காட்டும் நிலப்படத்தை வரைந்த காலத்தில் வீரணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை ஆகிய ஊர்கள் முக்கியத்துவம் பெற்று விளங்கின என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்விரு ஊர்களும் வீரமாணிக்கதேவன், பெரியநாட்டுத்தேவன் என்னும் இருவரது பெயர்களைத் தழுவி உருவானவை என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், இவ்விருவரும் யார், எக்காலத்தில் மயிலிட்டியில் குடியேறினர், எக்காரணத்துக்காக அவர்கள் பெயர்கள் ஊர்களுக்கு இடப்பட்டன போன்றவை ஆய்வுக்குரியன.
இவ்விரு ஊர்களிலும் வாழும் தேவர் சமூக மக்களிடையே சமூகவியல் அடிப்படையில் வேறுபாடுகள் இல்லை.4 அத்துடன், இவை நிலப்படத்தில் உள்ளபடி மிகவும் சிறிய ஊர்களும் அருகருகே அமைந்தவையும் ஆகும். ஆனால், இவ்விரு ஊர்களையும் தனித்தனியான இரண்டு துணைப் பிரிவுகளாகப் பிரித்திருப்பது ஏன் என்பதும் ஆய்வுக்குரியது. போர்த்துக்கேயர்காலப் பதிவுகளின்படி இவ்விரு ஊர்களும் தனிப் பிரிவுகளாக இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாதிகள் செலுத்தவேண்டிய வரி விவரங்களின் பட்டியலில் பெரியநாட்டுத்தேவன் துறை, வீரமாணிக்கதேவன் துறை ஆகிய ஊர்களைச் சேர்ந்த கரையார் சமூகத்தினருக்கான வரிகள் தனித்தனியாகக் கொடுத்துள்ளதைக் காண முடிகிறது.5 இதன் அடிப்படையில் போர்த்துக்கேயர் காலத்திலேயே இவ்விரு ஊர்களும் தனித்தனியான கிராமத் தலைவர்களின் கீழ் அல்லது நிர்வாக ஒழுங்கின் கீழ் இருந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
அண்மைக் காலத்தில் எழுதப்பட்ட கட்டுரையொன்றில் வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை ஆகிய ஊர்கள் கடற்கரையோரமாக மேற்கே காங்கேசந்துறையிலிருந்து கிழக்கே பலாலிவரை பரந்திருந்தது என்கின்றனர்.6 நிலப்படத்தின்படி இவ்விரு ஊர்களும் அந்த அளவுக்குப் பெரியனவாகக் காட்டப்படவில்லை. இரண்டும் சேர்ந்து காங்கேசந்துறை, பலாலி ஆகிய எல்லைகளுக்கு இடையில் உள்ள கடற்கரையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதிக்குள் அடங்கிவிடுவதையே காண முடிகிறது.
வீதிகள்
தெல்லிப்பழையிலிருந்து அச்சுவேலிக்குச் செல்லும் வீதி மட்டுமே மயிலிட்டிக் கோவிற்பற்றினூடாகச் செல்வதாக லெயுசிக்காமின் நிலப்படம் காட்டுகிறது. இது, மயிலிட்டிக் கோவிற்பற்றின் துணைப் பிரிவுகளான வறுத்தலை விளான், மயிலிட்டி, பலாலி ஆகியவற்றை ஊடறுத்துச் செல்கிறது. இது மயிலிட்டித் தேவாலயத்தைக் மேற்கே தெல்லிப்பழைத் தேவாலயத்துடனும் கிழக்கில் அச்சுவேலித் தேவாலயத்துடனும் இணைக்கிறது. நிலப்படம் காட்டும் இவ்வீதியைத் தற்கால வீதிகளுடன் துல்லியமாகப் பொருத்திப் பார்ப்பது கடினம். தற்காலத்தில் தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் வீதி, மயிலிட்டி – கட்டுவன் வீதி ஆகியவற்றின் பகுதிகள் மேற்படி வீதியின் பகுதிகளாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. மயிலிட்டியையும் அச்சுவேலியையும் இணைக்கும் வீதியைத் தற்காலத்து வீதிகளுடன் தெளிவாக அடையாளம் காணக்கூடியதாக இல்லை. பலாலி விமான நிலையம் உள்ளிட்ட பிற்கால வளர்ச்சித் திட்டங்களினால் இப்பகுதியில் வீதிகளின் தடங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும்.
கட்டடங்கள்
பிற கோவிற்பற்றுகளில் இருப்பதுபோல மயிலிட்டிக் கோவிற்பற்றிலும், முக்கியமான கட்டடங்களாக நிலப்படம் காட்டுவது தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையுமே. இவற்றைத் தவிரக் கரையோரமாக மடம் போன்ற அமைப்பு ஒன்றும் உள்ளது.
தேவாலயமும் தேவாலய இல்லமும்
ஒல்லாந்தர் காலத் தொடக்கத்தில் மயிலிட்டித் தேவாலயம் முருகைக் கல்லால் கட்டப்பட்டிருந்ததாக அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போல்தேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அது அகலமானதாகவும் நல்ல இடவசதி கொண்டதாகவும் இருந்துள்ளது. அருகிலிருந்த தேவாலய இல்லமும் நல்ல உயரம் கொண்ட கம்பீரமான கட்டடம் எனவும் போல்தேயஸ் குறிப்பிட்டுள்ளார். தேவாலயத்தின் ஒரு பகுதி தட்டையான கூரையுடன் கூடியது என்றும் அதிலிருந்து சூழவுள்ள நிலப் பகுதியினதும் கால் அல்லது அரைமணி நேர நடைத் தூரத்திலிருந்த கடலினதும் காட்சிகளைக் கண்டு ரசிக்க முடிந்ததாகவும் தெரிகிறது.7
போல்தேயசின் நூலில் உள்ள மயிலிட்டித் தேவாலய வளாகத்தைக் காட்டும் படத்தில் அவ்வளாகத்தினுள் பல்வேறு கட்டடங்கள் இருப்பதைக் காண முடிகிறது.8 (படம்-3) இத்தொடரின் வேறு கட்டுரைகளில் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இப்படங்கள் கட்டடங்களின் தோற்றங்களை உள்ளபடி காட்டுவதாகக் கொள்ள முடியாதெனினும், அங்கிருந்த கட்டடங்களின் எண்ணிக்கை, கட்டடப் பொருட்கள் முதலிய தகவல்கள் சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மயிலிட்டியிலிருந்த ஒல்லாந்தத் தேவாலயத்தினதும் இல்லத்தினதும் அழிபாடுகள் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை மயிலிட்டி-கட்டுவன் வீதியை அண்டிய பகுதியில் இருந்துள்ளது. இதுபற்றி கலாநிதி பொ. இரகுபதி அவர்கள் எழுதிய கட்டுரையொன்றில் விரிவான தகவல்கள் உள்ளன.9 இக்கட்டுரையிலுள்ள விவரங்களை வைத்துப் பார்க்கும்போது அத்தேவாலயத்தினதும் தேவாலய இல்லத்தினதும் தொடக்க அமைப்பு போல்தேயஸ் பாதிரியார் தந்துள்ள விவரங்களுடனும் அவருடைய நூலில் காணும் மயிலிட்டித் தேவாலயத்தைக் காட்டும் படத்துடனும் பெருமளவுக்குப் பொருந்துவதாகத் தெரிகிறது. அத்துடன், காலப்போக்கில் தேவாலயத்தின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டதையும் அறியமுடிகிறது.
அழிபாடுகளில் காணப்படும் கோபுரம் போன்ற முகப்பு அமைப்பு போல்தேயசின் நூலில் உள்ள மயிலிட்டித் தேவாலயத்தைக் காட்டும் படத்தில் இல்லை. இதைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கட்டடப்பொருட்களும் செம்மையற்ற வேலைப்பாடுகளும் அவசரத்தில் கட்டப்பட்ட ஒரு அமைப்பாகத் தெரிவதாக இரகுபதி குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோபுரம் உயர்ந்து சென்று உச்சியில் நான்கு தூண்களுடன் கூடிய கூண்டு அமைப்புடன் முடிவடைவதாக அவர் விவரம் தருகிறார். இவ்வாறான முகப்பு அமைப்புக் கொண்ட தேவாலயங்கள் எதுவும் இப்போது யாழ்ப்பாணத்தில் இல்லை எனக் கட்டுரையில் அவர் குறிப்பிடுகின்றார்.10 இது சரியே. எனினும், ஒல்லாந்தர் காலத்தில் இதுபோன்ற கூண்டு அமைப்புகளைக் கொண்ட சில கட்டடங்கள் இருந்ததற்கு வரைபடச் சான்றுகள் உள்ளன.
போல்தேயசின் படத்திலுள்ள தேவாலயத்தின் வாயில் மேற்கு நோக்கியிருக்க அழிபாடுகளில் காணப்படும் முதன்மை வாயில் வடக்கு நோக்கியிருப்பதாக கலாநிதி இரகுபதி குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் தேவாலயம் விரிவாக்கப்பட்டபோது வாயிலின் திசை மாற்றப்பட்டிருக்கக்கூடும் என்பதும் புதிய வாயிற் கோபுர அமைப்பைக் கட்டியிருக்கக்கூடும் என்பதும் அவரது கருத்து.11
மடம்
மயிலிட்டிக் கோவிற்பற்றின் மயிலிட்டி துணைப்பிரிவுக்குள் அடங்கிய வடக்குக் கடற்கரையோரமாக “மண்டாக்கிளட்டி” (டச்சு மொழி: Mandakilati) எனப் பெயரிடப்பட்ட இடத்தில் வழமையாக மடத்தைக் குறிக்கும் சிறு கட்டடம் போன்ற குறியீடும் அதன் அருகில் ஒரு மரமும் காணப்படுகின்றன. இக்குறியீடு ஏற்கெனவே வேறு இடங்களில் குறிப்பிட்டதுபோல ஒரு மீன்பிடித் துறையையோ கடல்வழிப் போக்குவரத்துக்கான துறையையோ அண்டி அமைந்த ஒரு மடமாக இருக்கக்கூடும்.
குளங்கள்
மயிலிட்டிக் கோவிற்பற்றுக்குள் மூன்று குளங்களை மட்டுமே நிலப்படம் காட்டுகிறது. இவற்றுள் இரண்டு குளங்கள் மயிலிட்டித் துணைப் பிரிவுக்குள்ளும், மற்றது பலாலி துணைப் பிரிவுக்குள்ளும் உள்ளன. மயிலிட்டித் துணைப் பிரிவுக்குள் உள்ள ஒரு குளம் பொதுப் பெயரால் வெறுமனே “குளம்” (டச்சு மொழி: Tanck) எனக் குறிக்கப்பட்டுள்ளது. மற்றது தொண்டமான் குளம். பலாலி துணைப்பிரிவுக்குள் உள்ள குளம் புலவன் குளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தொண்டைமான் குளத்துக்கு அண்மையில் இருந்து தற்போது அழிந்துவிட்ட தேவர்குளம் என்னும் பெயர் கொண்ட குளம் இருந்ததாகத் தகவல் உள்ளது.12 நிலப்படத்தில் வெறுமனே “குளம்” என்று குறிப்பிடப்பட்ட குளமாக இது இருக்கக்கூடும். இக்குளம் இருக்கும் இடத்துக்கு அண்மையிலேயே இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்ட தேவர் சமூக மக்கள் வாழ்வதால், அச்சமூகத்தின் பெயரைத் தழுவியே இக்குளத்துக்குப் பெயர் இடப்பட்டிருக்கலாம். எனினும், தேவர்களின் ஊர்களான வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை ஆகிய ஊர்களுக்கு வெளியிலேயே இக்குளத்தை நிலப்படத்தில் குறித்துள்ளனர். ஒல்லாந்தர்கால மயிலிட்டிக் கோவிற்பற்றுக்குள் அடங்கிய பகுதிக்குள் தற்காலத்தில் ஐந்து குளங்கள் உள்ளன. இவை கட்டுவன், மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலைவிளான், பலாலி ஆகிய பகுதிகளில் ஒவ்வொன்றாக அமைந்துள்ளன.13
லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் குளங்களுள் மயிலிட்டித் துணைப் பிரிவுக்குள் அடங்கிய தொண்டைமான் குளம் இன்றுவரை பெயர் மாற்றமின்றிக் காணப்படுகின்றது. இது, இப்பெயர் மிகவும் பழமையானது என்பதைக் காட்டுகிறது. தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் கொண்ட பல இடப்பெயர்கள் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. வட இலங்கையில் உக்கிரசிங்கன் ஆட்சி நிலவிய காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்தந்தொண்ட மண்டலத்து அரசன் தொண்டைமான் என்பவர் இங்கிருந்து உப்பு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக வெட்டிய கால்வாயே தொண்டைமான் ஆறு என்று அழைக்கப்படுவதாக யாழ்ப்பாண வைபவமாலை தகவல் தருகிறது.14 யாழ்ப்பாணத்தில் தொண்டைமான் என்னும் முன்னொட்டுகளுடன் கூடிய பெயர்கள் மேற்படி தொண்டைமானுடன் தொடர்புள்ளவை என்னும் கருத்து நிலவுகிறது. இது சரியானால் தொண்டைமான் குளம் என்னும் பெயர் பல நூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும்.
குறிப்புகள்
- Kenneth David, Spatial Organization and Normative Schemes In Jaffna, Northern Sri Lanka, Modern Ceylon Studies, volume 4: 1 4: 2, January 4: July, 1973, 27.
- David, Spatial Organization and Normative Schemes In Jaffna, 27.
- குல. சபாநாதன், மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை (சுன்னாகம்: நா. பொன்னையா, 1949), 28.
- David, Spatial Organization and Normative Schemes In Jaffna, 27.
- P. E. Pieris, The Kingdom of Jafanapatam 1645 (New Delhi: Asian Educational Services, 1995), 49.
- எம். ராஜா யோகானந்தம், மதுரை சங்கரநாதபுர வீரமாணிக்கதேவன் பெரியநாட்டுத்தேவன் நரசிங்கதேவனின் பரம்பரையினர் வாழும் யாழ்ப்பாணத்தின் இரு பழங் கிராமங்கள், ஈழநாடு வாரமலர், 13-07-1986, 4.
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 320.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 293.
- பொ. இரகுபதி, வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி, பாரதி புதிய கட்டடத் திறப்புவிழாச் சிறப்புமலர், மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை, காங்கேசந்துறை, 17-22.
- இரகுபதி, வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி, 17.
- இரகுபதி, வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி, 18.
- யோகானந்தம், மதுரை சங்கரநாதபுர வீரமாணிக்கதேவன் பெரியநாட்டுத்தேவன் நரசிங்கதேவனின் பரம்பரையினர் வாழும் யாழ்ப்பாணத்தின் இரு பழங் கிராமங்கள், 4.
- தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்.
- சபாநாதன், மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை, 14.



