லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். அத்துடன், வலிகாமத்திலுள்ள 14 கோவிற்பற்றுகளைப் பற்றிய விவரங்களும் சென்ற கட்டுரையுடன் நிறைவடைந்தன. இந்தக் கட்டுரையில், வடமராட்சிப் பிரிவிலுள்ள கோவிற்பற்றுகளைப் பற்றிய விவரங்கள் தொடங்குகின்றன. வடமராட்சிப் பிரிவில் பருத்தித்துறை, கட்டுவேலி (கட்டைவேலி), உடுப்பிட்டி ஆகிய மூன்று கோவிற்பற்றுகள் உள்ளன. முதலில் பருத்தித்துறைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம்.
பருத்தித்துறைக் கோவிற்பற்றில் புலோலி, தும்பளை, வராத்துப்பளை ஆகிய மூன்று துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பிலிருந்து அறியமுடிகிறது. நிலப்படமும் அவ்வாறே காட்டுகிறது (படம்-1). வடமராட்சியின் தலைமை நகரமான பருத்தித்துறையின் பெயரில் துணைப்பிரிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலப்படத்தின்படி பருத்தித்துறை நகரப் பகுதி புலோலித் துணைப் பிரிவுக்குள் அடங்கியிருப்பதைக் காணமுடிகிறது. அதேவேளை, ஒல்லாந்தர் காலத்தில் பருத்தித்துறைக் கோவிற்பற்றின் மூன்று துணைப் பிரிவுகளில் ஒன்றாகப் பெயரிடப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்த வராத்துப்பளையின் பெயரில் தற்காலத்தில் ஒரு கிராம சேவையாளர் பிரிவுகூட இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

எல்லைகள்
பருத்தித்துறைக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் பாக்கு நீரிணையும், கிழக்கில் வங்காளக் குடாக் கடலும் உள்ளன. தெற்கிலும் மேற்கிலும் இது கட்டைவேலிக் கோவிற்பற்றால் சூழப்பட்டுள்ளது. ஏறத்தாழச் சதுர வடிவில் அமைந்த இக்கோவிற்பற்றின் மேற்குப் பக்கத்தில் அதன் மேற்கெல்லை நீளத்துக்குப் புலோலி துணைப் பிரிவு அமைந்துள்ளது. வடகிழக்கு மூலையில் தும்பளையும், தென்கிழக்கில் வராத்துப்பளைத் துணைப் பிரிவும் காணப்படுகின்றன (படம்-2).

ஒல்லாந்தர் காலத்துப் பருத்தித்துறைக் கோவிற்பற்றுக்குள் அடங்கிய பகுதிகள் தற்காலத்துப் பருத்தித்துறை பிரதேசச் செயலர் பிரிவின் ஒரு பகுதியாக உள்ளது. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை பழைய கோவிற்பற்றின் ஒரு பகுதி பருத்தித்துறை நகரசபை எல்லைக்குள்ளும் இன்னொரு பகுதி பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குள்ளும் அடங்குகின்றன.
வீதிகள்
லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி யாழ்ப்பாணத்திலிருந்து வல்லையூடாகப் பருத்தித்துறைக்குச் செல்லும் வீதி இந்தக் கோவிற்பற்றுக்குள் உள்ளது. இது பெருமளவுக்கு இன்றைய யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதித் தடத்திலேயே அமைந்துள்ளது. கரவெட்டியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதியொன்று இக்கோவிற்பற்றுக்குள் முன்னர் குறிப்பிட்ட யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியுடன் இணைகிறது. இது, நெல்லியடியிலிருந்து கலிகைச் சந்தியூடாக மந்திகை வரை செல்லும் இன்றைய வீதிப் பகுதியின் தடத்தில் செல்வதாகத் தெரிகிறது. வரணியிலிருந்து வடக்கு நோக்கி வரும் ஒரு வீதியும் கரவெட்டியிலிருந்து செல்லும் வீதியுடன் இணைகிறது. இது தற்காலத்துக் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியின் ஒரு பகுதி. இன்னொரு வீதி தும்பளை, வராத்துப்பளைத் துணைப் பிரிவுகளுக்கு இடையிலான எல்லைக்கு அருகில் கிழக்குக் கடற்கரையிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியைப் பருத்தித்துறைக்கு அண்மையில் சந்திக்கிறது. இது இப்போதைய தும்பளை வீதியாக இருக்கக்கூடும்.
கட்டடங்கள்
ஏனைய கோவிற்பற்றுகளுக்குள் இருப்பது போல ஒல்லாந்தரின் கிறித்தவத் தேவாலயத்தையும் அதோடிணைந்த தேவாலய இல்லத்தையும் நிலப்படம் காட்டுகிறது. வடக்குக் கடற்கரையோரத்தில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் கொடியை ஒரு குறியீடாகக் காட்டியுள்ளனர். இது ஒரு கோட்டையைக் குறிப்பதாக இருக்கலாம். இவை தவிர, இக்கோவிற்பற்றுக்குள் வேறு கட்டடங்களை நிலப்படம் காட்டவில்லை.
தேவாலயமும் தேவாலய இல்லமும்
பருத்தித்துறைத் தேவாலயமே வடமராட்சியில் மிகவும் பெரியதும் கம்பீரமானதும் என போல்தேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.1 இத்தகைய தேவாலயக் கட்டடத்தைப் பற்றி விளக்கமான விவரங்கள் எதையும் அவர் தரவில்லை. நூலிலுள்ள படம் பருத்தித்துறைத் தேவாலயத்தை ஓரளவு பெரிய கட்டடமாகவே காட்டுகின்றது (படம்-3). ஆனாலும், படம் அதை முழுவதும் நிரந்தரமான கட்டடப் பொருட்களால் ஆன கட்டடமாகக் காட்டவில்லை. தேவாலயத்தின் சில பகுதிகளும், அதனோடிணைந்த தேவாலய இல்லமும் மண் சுவர்களையும், ஓலைக் கூரைகளையும் கொண்டனவாகவே தோற்றமளிக்கின்றன.2 இந்தத் தேவாலயமும் போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இது ஓரளவு சிதைவடைந்த நிலையில் இருந்ததாகவும் தனது காலத்தில் (1658-1665) அது திருத்தப்பட்டதாகவும் போல்தேயஸ் பாதிரியார் தகவல் தந்துள்ளார்.3

இந்தத் தேவாலயத்துக்கு வெளியே பெரியதொரு புளியமரம் இருந்ததாகவும் அதன் கீழே அமர்ந்து மக்களுக்குத் தான் மதபோதனை செய்ததாகவும் போல்தேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.4 இதைக் காட்டும் படம் ஒன்றும் நூலின் உள்ளது 5 (படம்-3). நிலப்படத்திலும் தேவாலயத்துக்கு எதிர்ப் பக்கத்தில் பெரிய மரமொன்றைக் காட்டியுள்ளனர். இது மேற்குறிப்பிட்ட புளிய மரத்தைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. இப்புளிய மரம் அண்மைக் காலம்வரை இருந்து 1958 இல் வீசிய பெரும் புயலொன்றின்போது வேரோடு பெயர்ந்து விழுந்துவிட்டதாகத் தெரிகிறது.6
பருத்தித்துறைக் கோட்டை
ஒல்லாந்தர் கால நிலப்படங்களில் கோட்டையைக் குறிப்பதற்குக் கோட்டையின் சிறிய தள வடிவத்தைக் காட்டும் ஒரு குறியீட்டை, ஒரு ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக் கொடியை, அல்லது இரண்டையும் காட்டுவது வழக்கம். இந்த நிலப்படத்தில் பருத்தித்துறையில் கொடி மட்டுமே உள்ளது, கோட்டையின் குறியீடு இல்லை. ஆனாலும், இங்கே ஒரு கோட்டை இருந்தது பற்றி வேறு நிலப்படங்களிலும் எழுத்துமூல ஆவணங்களிலும் சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 1690 – 1743 காலப்பகுதியில் வரையப்பட்ட ‘யாழ்ப்பாணப் பட்டினமும் அதைச் சேர்ந்த நிலப்பகுதிகளும் தீவுகளும்’ எனத் தலைப்பிட்ட நிலப்படம் பருத்தித்துறையில் முக்கோண வடிவக் கோட்டையைக் காட்டுகிறது. 1751 ஆம் ஆண்டில் வரையப்பட்டதும், இலங்கையிலிருந்த எல்லாக் கோட்டைகளின் தளவடிவங்களையும் உட்செருகலாகக் காட்டுவதுமான இன்னொரு நிலப்படத்திலும் பருத்தித்துறைக் கோட்டையின் தளவடிவமும் அடங்கியுள்ளது (படம்-4). யாழ்ப்பாணக் கோட்டை உள்ளடங்கலாக வடபகுதியிலுள்ள நான்கு கோட்டைகளைக் காட்டும் நிலப்படம் ஒன்றிலும் பருத்தித்துறைக் கோட்டையின் தளப்படம் உள்ளது. எனவே, லெயுசிக்காமின் வடமராட்சியைக் காட்டும் நிலப்படத்தில் கொடி, அவ்விடத்திலிருந்த கோட்டையையே குறித்துக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

ஐரோப்பாவில் ஒல்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் நடைபெற்ற காலத்தில் பருத்தித்துறையில் ஒரு சிறிய பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டது. இதுவே பருத்தித்துறைக் கோட்டை. இக்கோட்டையின் அமைப்பைப் பற்றி இலங்கையின் ஒல்லாந்தக் கோட்டைகளைப் பற்றி நூலெழுதிய டபிள்யூ. ஏ. நெல்சன் ஓரளவு விரிவாக விளக்கியுள்ளார்.7 இவருடைய தகவல்களின்படி, கடலுக்குள் நீண்டிருந்த பாறையொன்றின்மீது இக்கோட்டை அமைக்கப்பட்டிருந்தது. பாறையின் வடிவத்துக்கு ஏற்ற வகையில் கோட்டை அமைந்ததால் அது தட்டையான முக்கோண வடிவம் கொண்டதாகக் காணப்பட்டது.
இவ்வடிவம் காரணமாக, வெளிப்புறம் தடிப்பான மதில்களைக் கொண்ட இக்கோட்டையின் உட்புறத்தில் போதிய இடவசதி இருக்கவில்லை. ஒரு கோணம் விரி கோணமாக அமைந்த இருசமபக்க முக்கோணம் இது. விரிகோணத்துக்கு எதிராக அமைந்த நீளமான மதில் 240 அடி நீளம் கொண்டது. சற்று உட்புறமாகக் குழிந்திருந்த இம்மதில் கடலை நோக்கியபடி இருந்தது. இம்மதிலில் பீரங்கிகளுக்கான சுடுதுளைகள் இருக்கவில்லை. உண்மையில் நிலப்பக்கம் இருந்த, கொத்தளத்தின் நீளம் குறைந்த பக்கச் சுவர்களில் காணப்பட்ட இரண்டு துளைகளைத் தவிரக் கடலை நோக்கித் தாக்குதல் நடத்துவதற்கான சுடுதுளைகளைக் கோட்டை கொண்டிருக்கவில்லை. மேற்கு, கிழக்குத் திசைகளை நோக்கியிருந்த இரண்டு மூலைகளிலும் கொத்தளங்களோ வேறு நீட்சிகளோ இல்லாமல் வெறுமனே கூரிய மூலைகளாகக் காணப்பட்டன. இதனால், இப்பகுதிகளிலிருந்தும் தாக்குதல் நடத்தப் போதிய வசதிகள் இருக்கவில்லை.
மேற்குப் பக்கத்தில் நிலத்தை நோக்கியிருந்த 140 அடி நீளமான மதிலில் நிலத்தை நோக்கித் தாக்குதல் நடத்தக்கூடிய வகையில் ஒரேயொரு சுடுதுளை மட்டும் இருந்தது. இதைப் போலவே அதேயளவு நீளம் கொண்டிருந்த கிழக்குப் பக்க மதிலிலும் ஒரு சுடுதுளை மட்டுமே இருந்தது என நெல்சன் குறிப்பிட்டிருந்தாலும், வேறு நிலப்படங்கள் இப்பக்கத்தில் இரண்டு சுடுதுளைகள் இருப்பதைக் காட்டுகின்றன. விரிகோண மூலை நிலப் பகுதியை நோக்கியிருந்தது. விரிகோணத்தோடு இணைந்ததாகக் கோட்டையின் ஒரே கொத்தளத்தை அமைத்திருந்தனர். இக்கொத்தளத்தில் 50 அடி நீளம்கொண்ட முகப்புச் சுவர்களிலும், 20 அடி நீளமான பக்கச் சுவர்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக மொத்தம் நான்கு சுடுதுளைகள் இருந்தன. கோட்டையின் கிழக்குப் பக்கத்தில் வள்ளங்கள் கரை வரை வருவதற்கான வசதி இருந்ததாகத் தெரிகிறது. நிலப்படங்கள் கோட்டையின் நுழைவாயிலைக் குறித்துக் காட்டாவிட்டாலும், இவ்வாயில் கிழக்குப் பக்க மதிலிலேயே இருந்திருக்கும் என நெல்சன் கருதுகிறார். இந்த வாயிலைப் பாதுகாப்பதற்காகவே கிழக்குப் பக்க மதிலில் காணப்பட்ட இரண்டாவது சுடுதுளையை அமைத்திருக்கக்கூடும்.
தனக்குக் கிடைத்த ஒல்லாந்தர்கால நிலப்படத்தின்படி பருத்தித்துறைக் கோட்டையின் உள்ளே கட்டடங்கள் எதுவும் இல்லை என நெல்சன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 1751 ஆம் ஆண்டில் வரையப்பட்ட நிலப்படத்தில் உட்செருகலாகக் காணப்படும் தளப் படம் உள்ளே இருந்த கட்டடங்களைக் காட்டுகின்றது. ஆனால், இறங்குதுறை வசதிகளை நிலப்படம் குறித்துக் காட்டவில்லை. இவ்வாறான வசதிகள் உண்மையில் இல்லாமல் இருந்திருக்கக்கூடும் என்பது நெல்சனின் கருத்து.
மேலே தரப்பட்ட விவரங்களிலிருந்து, இக்கோட்டை நாட்டின் பாதுகாப்புத் தேவைக்கான ஓர் அமைப்பாகத் தெரியவில்லை. அருகிலிருந்த துறைமுக நடவடிக்கைகளின் பாதுகாப்புக்காகவோ, சட்டத்துக்குப் புறம்பான வணிகத்தையும் கடல்வழியான மக்கள் போக்குவரத்தையும் கட்டுப்படுத்துவதற்காகவோ இக்கோட்டையை ஒல்லாந்தர் கட்டியிருக்கக்கூடும். இதன் குறைபாடுகள் காரணமாக ஒல்லாந்தர் காலத்திலேயே இக்கோட்டை கைவிடப்பட்டிருக்கலாம்.
துறைமுகம்
லெயுசிக்காமின் நிலப்படத்தில், வடக்குக் கரையோரத்தில் பருத்தித்துறை (Parititoere) அல்லது ‘பொன்டோ பெட்ரோ’ (Punto Pedro) எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது ஊர்ப் பெயரையன்றித் துறைமுகத்தையே குறிக்கிறது எனலாம். பருத்தித்துறைத் துறைமுகம் நீண்ட காலமாகவே கடல்வழி வணிகத்துக்கும் போக்குவரத்துக்கும் பயன்பட்டு வந்துள்ளது. குடியேற்றவாதக் காலத்துக்கு முன்னர் தமிழ் மன்னர் ஆண்ட காலத்திலே பருத்தித்துறைத் துறைமுகம் பயன்பாட்டில் இருந்ததைக் குறித்த குறிப்புகள் உள்ளன. 1619 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயப் படைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், சங்கிலியன் பருத்தித்துறை ஊடாகவே இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்தான்.8 பிற்காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றவந்த பிரித்தானியப் படைகளின் ஒரு பிரிவு, திருகோணமலையில் இருந்தும் இன்னொரு பிரிவு தமிழ் நாட்டிலுள்ள நாகபட்டினத்திலிருந்தும் கடல்வழியாகப் பருத்தித்துறையில் இறங்கி அங்கிருந்தே தரை வழியாக யாழ்ப்பாணம் நோக்கி வந்தனர். 1800 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ரொபெர்ட் பேர்சிவல் என்பார், பருத்தித்துறையில் ஒரு கோட்டையும் துறைமுகமும் இருந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பருத்தித்துறையிலிருந்து வள்ளம் மூலம் சில மணித்தியாலங்களில் நாகபட்டினத்துக்குச் சென்றுவிடலாம் என்ற குறிப்பும் அவரது நூலில் உள்ளது.9
இத்துறைமுகம், பருத்தி, பருத்தி நூல், பருத்திப் புடவை என்பவற்றை யாழ்ப்பாணத்திலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கோ, அவற்றைப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கோ பயன்பட்டதால் இது பருத்தித்துறை எனப்பட்டு அதுவே ஊருக்கும் பெயராகியது என்ற கருத்தும் உண்டு.10 ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பருத்தி பயிரிடுவதற்கும், நெசவுத் தொழில், துணிகளுக்குச் சாயமூட்டும் தொழில் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் அக்கறை கொண்டிருந்தனர். இதற்காக, பலவகைப்பட்ட நெசவாளர்களையும் சாயக்காரர்களையும் இந்தியாவிலிருந்து அழைத்துவந்து யாழ்ப்பாணத்தில் குடியேற்றினர். இக்காலத்தில் நெசவுத் தொழில் சார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் பருத்தி உள்ளிட்ட சில மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இத்துறைமுகம் பயன்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. இது சரியானால், பருத்தித்துறை என்ற பெயர் ஒல்லாந்தர் காலத்திலேயே புழக்கத்துக்கு வந்திருக்க வேண்டும். இது உண்மையா என அறிவதற்கு மேலும் ஆய்வுகள் தேவை.
குளங்கள்
பருத்தித்துறைக் கோவிற்பற்றுக்குள் பத்துக் குளங்களைப் பெயர் குறித்துக் காட்டியுள்ளனர். புலோலி துணைப் பிரிவுக்குள் பிரப்பங் குளம், நெடுங் குளம், துரவு, மண்டிக் குளம், பிராய்க் குளம், கொம்பான் குளம், மாவில் குளம் ஆகிய ஏழு குளங்களும்; தும்பளைத் துணைப்பிரிவில் மாதனைக் குளம், வெறுமனே குளம் எனப் பெயர் குறித்த ஒரு குளம் என இரண்டு குளங்கள் காணப்படுகின்றன. வராத்துப்பளைத் துணைப்பிரிவில் பண்டாவத்தைக் குளம் என்னும் ஒரு குளம் மட்டும் பெயர் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. இத்துணைப் பிரிவுக்குள் வழமையாகக் குளத்தைக் குறிக்கும் இன்னொரு குறியீடு இருந்தாலும் பெயர் இல்லை. இது குளமா என்பதும் தெரியவில்லை.
குறிப்புகள்
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 332.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 361.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 334.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 334.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 333.
- பா. இரகுவரன், பருத்தித்துறையூராம் (பருத்தித்துறை: தேடல் வெளியீடு, 2012), 207-208.
- W. A. Nelson, The Dutch Forts of Sri Lanka, The Military Monuments of Ceylon (with updates by R. K. de Silva) (Colombo: Sri Lanka-Netherlands Association, 2004), 103-104.
- Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol II, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), 632.
- Robert Percival, An Account of the Island of Ceylon, (Dehiwala: Tisara Prakasakayo Ltd.,1975), 46.
- இ. பாலசுந்தரம், இலங்கை இடப்பெயராய்வு-2 [வடமாராட்சி-தென்மராட்சி] (யாழ்ப்பாணம்: வல்லிபுரம் இந்துக் கல்வி கலாச்சார மன்றம், 1989), 46.



