ஆங்கில மூலம்: பேராசிரியர் தயா சோமசுந்தரம்
பலர் சித்திரவதையிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை, ஆனால் அப்படிப் பிழைப்பவர்கள் கடுமையானதும் அசாதாரணமானதுமான மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, வளைந்து கொடுக்கக்கூடிய, சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தப்பிக்கொள்கிறார்கள். சித்திரவதையின் குறுகிய, நீண்டகால, நரம்பியல், உளவியல் ரீதியான விளைவுகள் மிகவும் நோய்கொண்ட சூழ்நிலையிலும் உயிர்வாழ்வதைச் சாத்தியமாக்கும் ஒரு ‘வலுவானதும் வலிமையானதுமான அரசியலமைப்பிற்கான அர்த்தமுள்ள எதிர்வினைகளாகக் காணப்படுகின்றன’ (டிராட்மேன், 1964). பாதிக்கப்பட்ட இவ்வகையானவர்களில் பெரும்பாலோர் சமூகத்தைச் சிறப்பாக மாற்றவும், தங்கள் சமூகத்திற்கு எதிரான அநீதிகளை நிவர்த்தி செய்யவும் இலட்சியவாதம், தன்னலமற்ற தன்மை என்பவற்றுடன் புறப்பட்ட வலுமிக்க, ஆரோக்கியமான இளைஞர்களாக இருந்தவர்கள். சித்திரவதைக்குப் பிறகு அவர்கள் உடைந்து உதவியற்றவர்களாக இருப்பதைக் காணும்போது, உயிர்வாழ அவர்கள் செலுத்த வேண்டிய விலை இதுதான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல், சித்திரவதை என்பவற்றுக்கு முன்பு ‘அப்பாவிகளாக’ இருந்த இவர்களின் நீண்ட, குறுகியகால விளைவுகள் மிகவும் கடுமையானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான புலனாய்வாளர்கள், இந்த உடலியல், நரம்பியல், உளவியல் விளைவுகளின் இயல்பான மீட்சியடையும் தன்மை மிகவும் மோசமாக இருப்பதையே காட்டுகின்றன என்று தெரிவிக்கின்றனர் (ஆர்ட்மேனும் மற்றையோரும், 1987). இவை பாதிக்கப்பட்டவரை வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஊனமுற்றவர்களாகவே விட்டுவிடுகின்றன. அதிர்ஷ்டவசமாக, இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்கள் நேர்ப்படியான அக்கறையுள்ள சிகிச்சை முன்னெடுப்புகள், இந்த ‘உயிர் பிழைத்தவர்களில்’ பலருக்குத் தங்கள் சுயமரியாதையை மீண்டும் பெறவும், நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
சமூகம்
துரதிர்ஷ்டவசமாக, இலங்கை போன்ற பல மூன்றாம் உலக நாடுகளின் கலாசார கட்டமைப்புகளில் சித்திரவதையின் காரணமாக ஏற்படும் உளவியல் தாக்கங்கள் பற்றிய புரிதல் இல்லாமை, எந்தவொரு வகையான மனநலக் கோளாறையும் ஒப்புக்கொள்வதன் காரணமாக ஏற்படும் களங்கம், தடுப்புக்காவல், சித்திரவதை என்பவற்றின் விளைவாக ஏற்படும் பாரிய அளவிலான சமூகத்திலிருந்து ஒதுங்குதல் என்பவை காரணமாக, உதவி தேவைப்படும் பலர் சிகிச்சைக்கு முன்வருவதில்லை. இது, தொடர்ச்சியான மோதல் நிலவும் சூழ்நிலைகளில் சித்திரவதைக்கான உண்மைக் காரணத்தை வெளிப்படுத்துவது ஆபத்தானது என்பதன் காரணமானதாகவும் இருக்கலாம். ஏனெனில், அதற்காக மீண்டும் கைது செய்யப்படுவதற்கான அல்லது பழிவாங்கப்படுவதற்கான உண்மையான ஆபத்தும் இதில் இருக்கிறது. ஆனால், இந்த நிலைமை மேற்கத்திய அல்லது முதலாம் உலக நாடுகளில் இருக்கும் நிலமைகளை விடச் சற்று வித்தியாசமானது. அங்கு, உயிர் பிழைத்தவர்கள் (அரசியல்) தஞ்சம் கோருவதற்கு முடிகிறது. இவ்வாறான சூழ்நிலைகளில், குறிப்பாக அவர்களின் புகலிடக் கோரிக்கை சம்பந்தமான வழக்குகளுக்கு அது உதவும் என்ற நிலை இருந்தால், மருத்துவ உதவியை நாடுவதற்கு அவர்கள் ஆர்வமுடன் தயாராக இருக்கக்கூடும்.
அவர்கள் பொதுவாக தங்கள் உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை உடல் ரீதியாகத் ‘தணித்து’, உடல் ரீதியான புகார்களுடன் பொது மருத்துவத்திடம் அல்லது வெளிநோயாளர் பிரிவுகளிடம் தங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள் (சோமசுந்தரம், 2001). PTSD இன் ‘குறைந்துபோகும்’ நிலைமை காரணமாக, (தமது சொந்தங்களுடனான) உறவுகளை கடினமாகக் கருதும் சிலர், சமூக சேவைகளைச் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள வழக்கு வரலாறு, சித்திரவதை அனுபவத்திற்குப் பிறகு தொடர்ந்து இரத்த தானம் செய்த ஒரு பல்கலைக்கழக மாணவரின் வரலாறாகும்.
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் சித்திரவதையின் சமூகப் பரிமாணம், யாழ்ப்பாணத்தில் உள்ள பொது மக்களின் ஒரு கணக்கெடுப்பிலிருந்து தெளிவாகிறது, இது மக்கள் தொகையில் 1% ஆனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது (சோமசுந்தரம் & சிவயோகன், 1994). மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநோயாளர் பிரிவுக்கு (OPD) வருபவர்களில், 8% பேர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் (சோமசுந்தரம், 2001). இந்த ஆய்வு, OPD இல் சிகிச்சை பெறும் பல நோயாளிகள் உண்மையில் போர் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைக் குறிக்கிறது, அவர்கள் தங்கள் பிரச்சினையை ஓர் உடல்நலப் பிரச்சினையாகக் கருதி உடல் ரீதியான புகார்களுக்கு உதவியை நாடுகிறார்கள். இளம் பருவத்தினரிடையே சித்திரவதையும் அதிகமாக உள்ளது, எங்கள் ஆய்வுகள் 3 – 7% பேர் சித்திரவதையை அனுபவித்ததாகக் குறிப்பிடுகின்றன (சோமசுந்தரம், 1998).
சித்திரவதை என்பது, எதிர்க்க முயற்சிப்பவர்களின் தனிப்பட்ட ஆளுமைகளை உடைப்பதற்கான உடல்ரீதியாகவும், உள ரீதியாகவும், ஒரு சமூகத்தைக் கட்டுப்படுத்தி அடிபணிய வைக்கும் ஒருங்கிணைந்த வழிமுறையாக உருவாக்கப்பட்ட ஒன்று.
இஸ்தான்புல் சித்திரவதைத் திட்டக் குழுவின் ‘விசாரணையும் ஆவணப்படுத்தலும்’ என்பதற்கான நெறிமுறை, உடனடியானதும், பரவலானதுமான அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம் மற்றும் தடுப்புக்காவல் என்பவற்றின் அடிப்படையிலான ஓர் ‘அடக்குமுறைச் சூழலை’ உருவாக்குவதன் மூலம் ஏற்படுத்தப்படும் சமூக அதிர்ச்சியைப் பற்றிப் பேசுகிறது. இதன் பொதுவான பாதுகாப்பின்மை, பயங்கரவாதம் மற்றும் சமூகக் கட்டமைப்பின் சிதைவு என்பவற்றை ஏற்படுத்துகிறது (Baykai, Schlar & Kapken, 2004).
(மருத்துவ ரீதியான) தலையீடுகள்
இலங்கையின் வடக்கில், சித்திரவதையில் இருந்து தப்பியவர்களை நிர்வகிக்க, காலப்போக்கில் ஒரு பல்துறை சார்ந்த ஒருங்கிணைந்த, முழுமையான அணுகுமுறையை (சோமசுந்தரம்,1997) நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஒட்டுமொத்த முகாமைத்துவமும், உயிர் பிழைத்தவரின் தனிப்பட்ட தேவைகள், செயற்திறனின் வேகம் என்பவற்றிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தக் கோளாறு (PTSD), பதட்டம் அல்லது மனச்சோர்வு போன்ற வெளிப்படையான மனநல நோய்கள் இருக்கும் இடங்களில், மருத்துவச் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகின்றன. இருப்பினும், பெரும்பாலான உயிர் பிழைத்தவர்களுக்கு வேறு வகையான சிகிச்சைகள் தேவைப்படலாம்.
(மருத்துவப்) பரிசோதனைகள்
சொறி – சிரங்கு இரத்தச் சோகை, தொற்றுகளுக்கு உள்ளாகியிருக்கும் காயங்கள் போன்றவற்றுக்குச் சிகிச்சை அளித்தல், அடிப்படை மருத்துவப் பராமரிப்பு என்பவை பலருக்குத் தேவைப்பட்டன. இவற்றைவிட, ஒரு கணிசமான எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிகமான விசேட கவனிப்புத் தேவைப்பட்டது. அவர்களுக்கு உள்ளூர்ப் பொது மருத்துவமனைகளில் பொருத்தமான மருத்துவமனையை, அல்லது மருத்துவ ஆலோசகரைப் பரிந்துரைக்க்கும் ஒரு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றில் எலும்பியல், கண் மருத்துவம், தோல் மருத்துவம், நரம்பியல், அறுவை சிகிச்சை, பல் மருத்துவம் ஆகியவையும் அடங்கும். தேவையற்ற மருத்துவ நடைமுறைகளைத் தவிர்ப்பதில், கவனமாக இருந்ததற்குக் காரணம் அவர்கள் ஏற்கனவே பெற்ற அதிர்ச்சி அனுபவங்களாக அவை இருந்தது தான் (மருத்துவமனைக்கு வருவது, மருத்துவர்கள் போன்ற அதிகாரம் கொண்ட ஓர் அலுவலரைச் சந்திப்பது, அல்லது எக்ஸ்-கதிர்கள், ECGகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்தல் என்பவைகள் கூடப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு நடந்த சித்திரவதைகளை நினைவூட்டக்கூடும் என்பதுடன் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கலாம்). பெண்களுக்கு பெண்நோயியல் (Gynecology) மருத்துவ அபிப்பிராயம் தேவைப்படலாம், அது கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று. அதற்கான பல்துறைகளைச் சார்ந்த நபர்களைக் கொண்ட குழுவின் (Multidisciplinary Team) உறுப்பினர்கள், பொதுவாக இத்துடன் சம்பந்தப்பட்ட சமூகப் பணியாளர்கள், அரச – அரச சார்பற்ற நிறுவனங்கள், பிற சமூக நிறுவனங்கள் போன்ற அமைப்புக்களுக்கான பரிந்துரைகளைப் பதிவு செய்தல், ஆவணப்படுத்துதல், சட்ட உதவி, நிதி உதவி, மறுவாழ்வுக்கான உதவி (பின்னர் பார்க்கவும்) போன்றவற்றை மேற்கொள்ளல் ஆகிய பணிகளை ஒன்றிணைத்தனர். அரச அதிகார அமைப்பின் முன்னால் திரளும் (பாதிக்கப்பட்டவர்களின்) நீண்ட வரிசைகள், அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள், அவர்களுக்கு வழங்கப்படும் படிவங்களை நிரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் அவர்களுக்கு உதவும் பணிகளில் இக்குழுவினர் ஈடுபட்டார்கள்.
உளவியல் சிகிச்சை
தொடர்பு ஏற்பட்ட ஆரம்பத்திலிருந்தே, சிகிச்சை வழங்குவதற்கன ஒரு நம்பிக்கையான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. ஏராளமான சந்தர்ப்பங்களில் அடிப்படையான சில ஆலோசனைகளை வழங்குதலே போதுமானதாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. அச்சுறுத்தல் இல்லாததும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஒரு சூழலில் அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம், ‘தங்கள் கதைகளைச் சொல்லவும்’, அடக்கப்பட்டிருக்கும் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் உரிய ஒரு சிகிச்சையாளரின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை மட்டுமே. அவர்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில், சுருக்கமான உளவியற் சிகிச்சை வழங்குவதுடன், சாட்சியம் வழங்குதல் முறையிலான சிகிச்சை முறை, துக்க நிவாரண ஆலோசனை முறை, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், மன அமைதிப்படுத்தலுக்கான (Relactation) நுட்பங்களை மேற்கொள்ளல் போன்றவற்றுக்கான குறுகிய கால வைத்திய அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
சித்திரவதைக்கு ஆளானவர்களைப் பற்றிய ஆய்வுகள், கணிசமான அளவில் உணர்வு ரீதியானதும், சமூக உறவுகள் தொடர்பானதுமான குறைபாடுகளை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கடுமையான அறிகுறிகளுக்கு நீண்டகாலச் சிகிச்சை தேவைப்பட்டது. அவை சில சமயங்களில் ஆறு மாதங்களுக்கும் மேலாகவும் நீடிக்கலாம். தனிநபரின் அழிக்கப்பட்ட ஆளுமை, அடையாளம், உலகத்தின் மீதான அவநம்பிக்கை உணர்ச்சி, சமூகத்திலிருந்தான விலகல் போன்ற அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகள் என்பவை படிப்படியாக ஓர் ஒழுங்கு முறையில் தீர்க்கப்பட்டன. தனிநபர்களின் தேவைக்கும் அவர்களது மீட்சியின் வேகத்திற்கும் ஏற்ப சிகிச்சை முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. உயிர் பிழைத்தவர் தனது அனுபவங்கள் மூலம் செயற்படவும், தனது தற்போதைய சூழ்நிலையை அர்த்தப்படுத்தவும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த நீடித்த உறவுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். ஆன்மிக நம்பிக்கைகளும் பலங்களும் மக்களை மேலும் மீள்தன்மை கொண்டவர்களாக மாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ‘வாழ்வுக்கான அர்த்தம் அல்லது நோக்கத்தைக் கண்டறிதல்’ – ‘லோகோதெரபி’ (Logotherapy ஃபிராங்க்ல், 1959) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் – அணுகுமுறை மூலம் அவர்களது மனநிலை அடையாளம் காணப்பட்டுப் பராமரிக்கப்படும் போது, பெரும்பாலான உயிர் பிழைத்தவர்கள் விரைவாகக் குணமடைவதாக அடையாளம் காணப்பட்டது. அவர்களது கலாசாரம், மதம்சார் நம்பிக்கைகள் என்பவை, உதாரணமாக, இந்துத்துவ அமைப்பின் மையமான கர்மவினை, துன்பம் என்பவை பற்றிய கோட்பாடுகள் இவற்றில் முக்கியமான பங்களிப்பும் ஆற்றுகின்றன. உயிர் பிழைத்தவருக்கு, பூசாரிகள், துறவிகள் மற்றும் பரியாரிகள் போன்றவர்களது பாரம்பரியக் குணப்படுத்துதல்களும், குணப்படுத்தும் வளங்கள் என்பவைகளும் உதவுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
குடும்பச் சிகிச்சை
சித்திரவதையில் இருந்து தப்பியவர்கள், எரிச்சலடைதல், பின்வாங்குதல், மனச்சோர்வடைதல், பாலியல் தொடர்பான சிரமங்களை எதிர்கொள்ளல், அடக்கப்பட்ட கோபம், சந்தேகம் போன்றவற்றின் தொடர்ச்சியாக வரும் அதிர்ச்சிக்குப் பின்னான அறிகுறிகளின் வெளிப்பாடுகள் என்பவை காரணமாக குடும்பங்களிடையேயான உறவுகளில் விரிசல், திருமண வாழ்வில் ஒற்றுமையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். குடும்ப வாழ்வின் இயங்குமுறை, ஆதரவளிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும், உறவுகளை எளிதாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்ட அதேவேளை, சேதப்படுத்துகின்ற, பொருந்தாத தன்மைகளைக் கொண்ட தொடர்புகளை எதிர்கொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. உயிர் பிழைத்தவரின் அவலநிலை குறித்த விழிப்புணர்வை உருவாக்க, அவர் வழக்கமாக எதிர்கொள்ளும் உடல், உணர்வு அவரது சமூகப் பிரச்சினைகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன. குடும்பத்தையும் சமூக வாழ்க்கையையும் நோக்கித் திரும்புவதில் அவருக்கு ஏற்படும் சிரமங்கள் விளக்கப்பட்டன. குறிப்பாக நெருக்கமான உறவுகளை உருவாக்குவதையும் நிலை நிறுத்துவதையும் கடினமாக்குகின்ற, மரத்துப்போகும் அறிகுறிகள் விவரிக்கப்பட்டன. உயிர் பிழைத்தவர் தொடர்ந்து பின்வாங்குபவராக, பதிலளிக்காதவராக, விறைப்புற்றவர் போல இருந்தாலும் கூட, குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாகவும் அக்கறையுடனும் இருக்க ஊக்குவிக்கப்பட்டனர். எரிச்சல், விரோதம் ஆக்கிரமிப்புப் போக்கு என்பவை, சித்திரவதைச் செயல்முறைகளின் இயல்பான ஒழுங்குவரிசையில் விளக்கப்பட்டன. சித்திரவதையில் இருந்து தப்பியவர்களது பாதுகாப்பு, குடும்பச்சூழலின் வரம்பிற்குள் அவர்களைத் தங்கள் பழைய பாத்திரங்களையும் செயற்பாடுகளையும் மெதுவாக எடுத்துக்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
அறிவாற்றல் – நடத்தைச் சிகிச்சை முறைகள்
அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தக் கோளாறுக்கான (PTSD) சிகிச்சையில், அறிவாற்றல் நடத்தைக்கான சிகிச்சை (CBT) மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்தது. அதுவும் குறிப்பாக நாள்பட்ட ‘PTSD’ நிலைகளில், சித்திரவதை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ‘பேச்சு சிகிச்சை’, ஆலோசனை அல்லது பாரம்பரிய உளவியல் சிகிச்சைகளுக்கு ஏற்றவர்களாக இல்லாதவர்களுக்குமான ஒரு குறிப்பிட்ட சிகிச்சை வடிவமாக, ஷௌவரும் அவரது இணை ஆய்வாளர்களும் (Schauer & Colleagues, 2003) விவரித்த ‘Narrative Exposure Therapy (NET)’ காணப்படுகிறது. இந்த முறையில், பாதிக்கப்பட்டவர் தனது வாழ்க்கைக் கதையை ஒழுங்குபடுத்திச் சொல்லும் செயல்முறையின் மூலம் சிகிச்சைப் பயனை அடைகிறார். அடிப்படையில், ‘CBT’ என்பது உயிர் பிழைத்தவர்களுக்குப் படிப்படியான அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய (திட்டமிடப்பட்ட) நிகழ்வுகளை, அதாவது மிகவும் துன்பத்தை ஏற்படுத்தும் சித்திரவதை விவரங்கள் முதல் குறைந்த அளவான தூண்டுதலைத் தரும் விவரங்கள் வரை வழங்குவதன் மூலம், அவர்களிடம் அதை எதிர்கொள்ளவும், அதை எதிர்த்துப் போராடவும் ஏற்ற வகையிலான ஒரு படிநிலையை நிறுவுவதுடன், படிப்படியாக இந்தச் சிகிச்சைப் படிநிலையை மேம்படுத்துகிறது. உயிர் பிழைத்தவர்கள் நிதானமான நிலையில் இருக்கும்போது காட்சிப் படங்களாகவோ அல்லது வேறுவிதமாகவோ நடந்த சம்பவங்களை அவர்கள் உணரும் வகையில் அவை வெளிப்படுத்தப்படுகின்றன. உயிர் பிழைத்தவர்கள் துன்பம் இல்லாமல் குறிப்பிட்ட சித்திரவதைச் சம்பவங்களை இயல்பாகவே எதிர்கொள்ளும் வரை, இந்த வகையான வெளிப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர் படிநிலையில் அடுத்த சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள், அவர்களது உணர்வுத்தளங்களை நீக்குவதற்கான அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும், அவர்களுக்கு இந்த அடிப்படையிலான அமர்வுகள் அதிகமாகத் தேவைப்பட்டன.
மன அமைதிப்படுத்தலுக்கான செயல்நுட்பங்கள்
இலங்கையில் இவற்றைப் பயன்படுத்துவதற்கென்று, நெருக்கமான ஆய்வு, பயிற்சி, அனுபவம் என்பவற்றுக்கு மேலாக, பாரம்பரிய நடைமுறைகளிலிருந்தும் நான்கு அடிப்படை முறைகள் தெரிந்தெடுக்கப்பட்டன. ஏனெனில் அவை ஜேக்கப்சனினதும் (1938), நன்கு நிரூபிக்கப்பட்ட தளர்வு நுட்பங்களுடனும் (சோமசுந்தரம், 2002), தொழில்நுட்ப ரீதியாக ஒத்திருப்பது கண்டறியப்பட்டது. யோகப் பிராணாயாமம், பௌத்த வடிவமான மனதை ஒருநிலைப்படுத்திய சுவாசம் (Anapanasati) என்பவை கலாசார ரீதியாக நன்கு அறியப்பட்ட சுவாசப் பயிற்சிகளான, மன ஒருமைப்பாட்டுடனான, ஆழமான, வழக்கமான வயிற்று (உதரவிதானம்) சுவாசத்தை அடிப்படையாகக் கொண்டவை. யோக சாந்தி அல்லது சவ ஆசனம் அல்லது பௌத்தமதம் சொல்லும் மன ஒருமைப்பாட்டுடனான உடல் முழுவதையும் உணரும் (தியான) நிலை போன்றவை உடற்தசைகளில் தளர்வை அல்லது மன இளைப்பாறல் நிலையை மேம்படுத்துகின்றன. இதுபோன்றே, ‘பென்சனின்’ இளைப்பாறல் முறையும் (Benson, 1975), ஆழ்நிலைத் தியானமும் (Transcendental Meditation), மந்திரங்கள் அல்லது ஜெபங்களை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் நடைமுறைகளும், கிறிஸ்தவ ஜெபமாலை அல்லது பிரார்த்தனை மணிகளைப் பயன்படுத்தும் வழக்கங்களும் கலாசார ரீதியாகப் பரிச்சயமானவையாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவும் அமைகின்றன. தியானத்திற்கு, தியானம், ஆழ்மனச் சிந்தனை போன்றன பிற முறைகளும் பயன்படுத்தப்பட்டன. மேலதிகமாக, மன ஆறுதல் நிலைகளை அடைவதற்கான தேவைகளைப் பொறுத்து சில குறிப்பிட்ட இடங்களில் பாரம்பரிய ‘மசாஜ்’ செய்யும் முறையும் பயன்படுத்தப்பட்டது:
இலங்கையில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய இளைப்பாற்று (Relaxation) முறைகள்
1. சுவாசப் பயிற்சிகள் (பிராணாயாமம், அல்லது ஆழ்ந்த, மனதை ஒருநிலைப்படுத்திய சுவாசித்தல் பயிற்சி): சுவாசத்தை மனதின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அதை ஆழமாகவும், சீராகவும் மேற்கொள்ள வைப்பதே இவற்றின் குறிக்கோளாக இருந்தது. ஒரு நபர் தனது சுவாசத்தை உள்ளே எடுத்து வெளியே விடும்போது அதன்மீது கவனத்தைக் குவிக்கவும், மெதுவாகவும், தொடர்ச்சியாகவும், ஆழமாகவும் சுவாசிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்கள் உள்ளே இழுக்கும்போது அவர்களின் வயிறு மெதுவாக விரிவடைவதில் (இதற்காக அவர்கள் தங்கள் உள்ளங்கையை வயிற்றில் வைக்கலாம்) கவனம் செலுத்துவதற்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆழமாக உட்புறமாகச் சுவாசிக்கிறார்கள். பின்னர், மார்பும் வயிறும் ஓய்வெடுக்க அவர்கள் அனுமதிக்கிறார்கள். இதன் மூலம் மூச்சு தானாகவே வெளியேறுகிறது. உள்ளிழுத்து வெளிவிட்டுச் சுவாசிக்கும்போது ‘ஓம்’ போன்ற ஒரு மந்திரம் அல்லது சொல் சொல்ல வைக்கப்பட்டது. இதைப் பல முறை திரும்பத் திரும்பச் செய்யலாம். படிப்படியாக, மாதக்கணக்கில், ‘ஓம்’ என்ற வார்த்தையைச் சொல்ல எடுக்கும் நேரத்தை அதிகரிப்பதாக இப்பயிற்சி நடைபெற்றது. மாற்றாக (மேற்கண்ட முறையை அவர்கள் கடினமாகக் கண்டால்), அவர் மூச்சை உள்ளிழுக்கும் போது ஆரம்பத்தில் ஒன்றிலிருந்து மூன்று வரை எண்ணவும், வெளிவிடும் போதும் மீண்டும் மூன்று வரை எண்ணியபடி வெளிவிடவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரிக்கலாம்.
2. படிப்படியாக உடற்தசைகளை தளர்வுநிலைக்குக் கொண்டுவரல் (சாந்தி அல்லது சவ ஆசனம், மன உறுதியுடன் கூடிய உடல் விழிப்புணர்வு): முழு உடலும் தளர்வடையும் வரை உடலின் ஒவ்வொரு உறுப்பையும் படிப்படியாகத் தளர்த்துவதே இதன் நோக்கமாகும். அவர்கள் ஒரு பாய் அல்லது படுக்கையில் மேல்நோக்கி முகம் பார்த்துப் படுக்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் முதலில் தங்கள் கால் விரல்களில் மனதை ஒருமுகப்படுத்தவும், அவற்றை ஓய்வு நிலைக்குக் கொண்டுவரும் போது (தளர்த்துவது அல்லது விடுவிப்பது), தங்களுக்குள் “என் கால் விரல்கள் தளர்வாக உள்ளன, சாந்தி, சாந்தி, சாந்தி” என்று சொல்லவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்த வழியில், அவர்களின் உடலின் மேற்பகுதிகளான கால் விரல்கள், உள்ளங்கால்கள், கணுக்கால், கன்று, முழங்கால், தொடை, பிறப்புறுப்புகள், ஆசனவாய், வயிறு, முதுகு, மார்பு, விரல்கள், கைகள், முழங்கை, தோள்கள், கழுத்து, முகம் மற்றும் இறுதியாகத் தலை என்று படிப்படியாகத் தளர்த்தவும், அவை தளர்வாக இருப்பதாகச் சொல்லவும் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். அதாவது, அவர்கள் ஒவ்வொரு பகுதியையும் தளர்த்தும்போது “என் ….. தளர்வாக உள்ளது, சாந்தி, சாந்தி, சாந்தி” என்று தங்களுக்குள் சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்தப் பகுதியில் ஆழ்ந்த அமைதி, இளைப்பாறிய நிலையிலான அதன் இருப்பு என்பவற்றையும், இறுதியில் முழு உடலும் ஆழமான தளர்நிலைக்கு வரும் வரை அவற்றை மனதால் உணரும்படியும் அவர்களிடம் கேட்கப்பட்டது. மாற்றாக (நவீன மனப்பான்மை கொண்ட நோயாளிகளுக்கு), ஜேக்கப்சனின் முற்போக்கான தசைத் தளர்வு முறையும் கற்பிக்கப்பட்டது.
3. வழக்கமான திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தைகள் (ஜெபம், ஜெபமாலை, பிரார்த்தனை மணிகள்): இந்தச் ஜெப முறையில், ஒரு புனித வசனம், கடவுளின் பெயர், ஒரு மந்திரம், அர்த்தமுள்ள மரபுச் சொல் அல்லது ஒரு வழக்காற்று வசனம் என்று ஏதாவதொன்றை திரும்பத் திரும்பக் கூறுதல் பயன்படுத்தப்பட்டது. இந்துக்களுக்கு, தீட்சையின் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட மந்திரம் அல்லது பிரணவ மந்திரமான ‘ஓம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு, இயேசு ஜெபம் (‘இயேசு கிறிஸ்து, என் மீது கருணை காட்டுங்கள்’) அல்லது பிரார்த்தனை மணிகள் பயன்படுத்தப்பட்டன. நோயாளி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தையை ஒரு நாளைக்கு இரண்டு முறை மீண்டும் மீண்டும் (பல முறை) சொல்லும்படி கேட்கப்பட்டார். முதலில் இது குரல் மூலம் செய்யப்பட வேண்டும்; பின்னர் சில வாரப் பயிற்சிக்குப் பிறகு ஒரு கிசுகிசுப்பாக, பின்னர் வெறும் குரலொலி மூலம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர், இறுதியாக வெறும் சிந்தனையாக அது அமையும்.
4. தியானம் (தியானம், அமைதி, விபாசனா): முதலில் நோயாளி தியானத்திற்கு ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கச் சொல்லப்படுவார். அந்த நபரின் தெய்வம், கடவுள், மரியாதைக்குரிய துறவி அல்லது பெரியவர், ஓர் அழகான இயற்கைக் காட்சி அல்லது சுடர் போன்றவற்றில் ஏதாவதொன்று பெரும்பாலும் தியானத்தின் பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாற்றாக, மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற சொல் அல்லது சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. இதைச் சிரமமாகக் கருதிய நோயாளிகளுக்கு, சுவாசத்தை (மூக்கின் நுனியில் உள்ளே எடுக்கப்படும், வெளியேற்றப்படும் சுவாசத்தை) அல்லது வயிற்றின் எழுச்சியையும் தாழ்வையும் கவனிக்கச் சொன்னார்கள். அவர்களுக்கு வசதியான ஒரு தோரணையில் அமர்ந்துகொள்ளக் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மனதைத் தேர்ந்தெடுத்த பொருளின் மீது தொடர்ந்து ஒருமுகப்படுத்தி வைத்திருக்கச் சொல்லப்பட்டார்கள். மனம் திசைதிருப்பப்பட்டால் அல்லது வேறொரு விஷயத்துக்குச் சென்றால், மெதுவாக அதைப் பற்றி அறிந்து கொள்ளவும், படிப்படியாக, வலுக்கட்டாயமாக அல்லாமல், அதை அவர்கள் தேர்ந்தெடுத்த பொருளுக்குத் திரும்பக் கொண்டுவரவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மிகவும் மென்மையாக, அதிக சக்தி அல்லது முயற்சி இல்லாமல், மனதை தேர்ந்தெடுத்த பொருளின் மீது வைத்திருக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது சில நிமிடங்கள் பயிற்சி செய்யப்பட்டு, பின்னர் படிப்படியாக நேரம் அதிகரிக்கப்பட்டது.
5. உருவிவிடல் (மசாஜ்): பாரம்பரிய ஆயுர்வேத அல்லது சித்த எண்ணெய் உருவுதல் (மசாஜ்) முறைகள் பயன்படுத்தப்பட்டு, அவற்றை, வீட்டிலேயே மீண்டும் செய்வதற்கு, இவை ஓர் உறவினருக்குக் கற்பிக்கப்பட்டன.
அதிர்ச்சியின் பல விளைவுகளுக்கு, அதாவது விழிப்புணர்வு, பதட்டம் மற்றும் வலி அல்லது சோர்வு நிலைகளுக்கு யோகா மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பெரும்பாலான சித்திரவதைக்கு ஆளானவர்களில் காணப்படும் சோர்வும் வலிகளும், தசை இறுக்கத்தால் ஏற்பட்டவையாக இருந்தன. தளர்வுநிலை இதற்கு எதிரான நல்ல விளைவுகளைத் தந்தது. இதேபோல், விரைவானதும் ஆழமானதுமான சுவாசிப்பு ஒரு பொதுவான பிரச்சினையாகவும், பல மனோதத்துவப் புகார்களுக்கு அடிப்படையாகவும் இருந்தது. சித்திரவதையிலிருந்து தப்பியவர்களிடம் காணப்படும் தசைக்கூட்டு வலிகள், உடலின் பல்வேறு பகுதிகளில் நீடித்துக் காணப்படும் கடுமையான வலிகள், மேலும் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட காயங்களால் உடல் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்காக தளர்வு முறைகள், உருவிவிடல் மற்றும் யோகா போன்ற நடைமுறைகள் பயனுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
மருந்தியல் சிகிச்சை
மனச்சோர்வும் இணைந்து இருக்கும்போது, மருந்துச் சிகிச்சை தேவைப்படும் கடுமையான சித்திரவதைக்குப் பிந்தைய அதிர்ச்சிகரமான நிலைகளில் உள்ளவர்களுக்கு, மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளால் நல்ல பதில் கிடைக்கும். PTSDயிலும் கூட, குறிப்பாக ஊடுருவும் நிகழ்வுகள் மற்றும் கனவுகளில், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளால் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. ‘ட்ரைசைக்ளிக் அன்டி டிப்பிரசன்ட்ஸ்’ (Tricyclic Antidepressants) இன் குறைந்த அளவு இமிபிரமைன் (Imipramine) (25 mg) பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேலை செய்கிறது. ஒருபுறம் அதன் நல்விளைவையும், மறுபுறம் அதன் பக்கவிளைவுகளையும் கணக்கில் எடுத்து மாத்திரையின் அளவைப் படிப்படியாக அதிகரிக்கலாம். அதிக அளவுகளில் (>50 mg), பக்கவிளைவுகள் தோன்றத் தொடங்குகின்றன. சிலர் குறைந்த அளவைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் போகலாம். மாற்று மருந்தான அமிட்ரிப்டைலின் (Amitriptyline) இதனுடன் தொடர்புடைய தூக்கக் கோளாறுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது குறிப்பாக புதிதாக வந்துள்ள ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மீள் பயன்பாட்டுக்குரிய செரோடோனின்’ மறு பயன்பாட்டுக்கான தடுப்பு மருந்துகள் (SSRIகள்) பயனுள்ளவையாக இருக்கும். நெருக்கடி அல்லது அதிகப்படியான பதற்றத்திற்கு டயஸெபம் (Diazepam) என்ற மருந்து பயனுள்ளதாக இருக்கும். கனவுகள் தொந்தரவாக இருந்தால், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் உதவாதபோது, டயஸெபமைச் சேர்ப்பதால் கனவுகளை அடக்கி தூக்கத்தை மீட்டெடுக்கலாம்.
வெளிப்பாட்டுச் சிகிச்சை
உணர்ச்சிகள் மற்றும் அதிர்ச்சி தொடர்பான கலை வெளிப்பாடுகள் தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் மனப்பாரங்களைக் குறைப்பவையாக அமைகின்றன. கலை, நாடகம், கதை சொல்லல், கவிதை அல்லது நாவல்கள் எழுதுதல் (சாட்சியம்), பாடுதல், நடனம், களிமண்களில் உருவங்களைச் செய்தல், சிற்பம் போன்றவை பொருத்தமான இடங்களுக்கேற்ற உணர்ச்சி வெளிப்பாட்டு முறைகளாகப் பயன்படுத்தப்பட்டன. அதிர்ச்சியடைந்த ஒரு நபர் ஊடகம் ஒன்றின் மூலம் தனது அதிர்ச்சிகரமான அந்த அனுபவத்தை வெளிப்படுத்த முடிகிறது. இதன் மூலம், தொடர்புடைய உள்மனத் துயரம் இல்லாமலே வெளிப்புறமாகச் செயற்படும் வகையில் அவரை ஒரு சிகிச்சையாளரால் (Therapist) கையாளவும் முடிகிறது. சிகிச்சையளிப்பவரும் கூட, இந்தச் செயற்பாட்டில் உயிர் பிழைத்தவரது அதிர்ச்சிகரமான அனுபவத்தின் பாதிப்பிலிருந்து இறுதியாக அவரை விடுவிப்பதற்கான தனது உதவியை வழங்குவதற்கு ஒரு வசதியான நிலையில் இருப்பார். நாடகம் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் கூட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் ஒரு சக்திவாய்ந்த சமூக முறையாகும். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாடகம் ‘அன்னை இட்ட தீ’, சித்திரவதைச் செயல்முறை பற்றியும் ஒரு உயிர் பிழைத்தவரின் வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்தியது. தனித்தனியாக, இந்த மனோதத்துவ நாடகம் உயிர் பிழைத்தவருக்கு துன்பகரமான சம்பவங்கள், தொடர்புடைய உணர்ச்சிகள் என்பவற்றைச் செயற்படுத்த உதவியது. மறுவாழ்வின் போது, சமூகத் திறனூட்டற் பயிற்சிகளுக்குப் பொருத்தமான பாத்திரங்களைக் கொண்ட நாடகங்கள் பயன்தருபவையாக இருந்தன.
மூன்றாம் உலகச் சமூகங்களில் சடங்குகளுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அவற்றால் மனவலிமை, ஆதரவு, புரிந்துகொள்ளல் என்பவற்றிற்கான அடிப்படை ஆதாரங்களாக இருக்க முடியும். இதனால் குடும்பங்கள் பாரம்பரியச் சடங்குகளை நடத்துவதற்கு ஊக்குவிக்கப்பட்டன. விளையாட்டு, விளையாட்டுப் போட்டிகள், நாட்டுப்புறப் பாடல்கள், நடனம், சமயம் சார்ந்த விழாக்கள் போன்ற ஓய்வுகால நடவடிக்கைகள் அவர்களுக்கு சந்திப்புகளுக்கும், (தமக்கான) ஆதரவைக் கண்டறிவதற்கும், தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும், சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைந்து கொள்ளுவதற்குமான செயல்களுக்கான வழிமுறைகளாக ஊக்குவிக்கப்பட்டன.
செயல்முறைச் சிகிச்சை (Occupational Therapy)
தனிப்பட்ட உயிர் பிழைத்தவர்களுக்கு அடிப்படைச் சமூகத் திறன்களும் சில குறிப்பிட்ட கைவினை வேலைகளும் கற்பிக்கப்பட்டன. அவை அவர்கள் தமக்கான வேலைவாய்ப்பைக் கண்டுபிடித்துச் சமூகத்தில் தங்களை மீண்டும் ஒருங்கிணைக்க உதவுகின்றன. ஆண்களுக்கு பயிரிடல், தோட்டக்கலை, ஓவியம், சைக்கிள் பழுதுபார்த்தல், தச்சு வேலை, காகிதப் பைகள் தயாரித்தல் போன்றவையும், பெண்களுக்கு நெசவு, தையல், சமையல் போன்றவையும் தப்பிப் பிழைத்தவர்களான இவர்களது விருப்பங்கள், திறமைகள் என்பவற்றைப் பொறுத்து அளிக்கப்பட்ட பயிற்சிகளுக்கான சில எடுத்துக்காட்டுகளாகும். இதைவிட, நேரத்தைக் கட்டமைத்து உடற் செயற்பாடுகளைத் திருப்திகரமான இலக்குகளாக மாற்றுவதன் மூலம் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சி போன்றவை, அவர்களது தனிநபர் கட்டுப்பாடு, தேர்ச்சி என்பவற்றின் அடிப்படையில் தமது தகுதியையும் அதன் பயனையும் திரும்பப் பெற்றுக்கொள்ள உதவின. இவை அவர்கள் தமது சுயஆளுமையையும் சுயமரியாதையையும் நிலைநாட்ட உதவின. ஆயினும், பிற அனைத்து நடவடிக்கைகளிலும் போலவே, அவர்களின் உளவியல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் போட்டியோ அழுத்தமோ இன்றி, தங்களது முயற்சியில் முன்னேறக்கூடிய பாதுகாப்பான சூழல் அவசியமாக இருந்தது. நீண்டகால அடிப்படையில் அவர்களது தொழில் திறன்கள் அவர்களுக்கான ஆற்றலை வளர்த்துத் தன்னிறைவை உருவாக்குகின்றன.
மறுவாழ்வு
உயிர் பிழைத்தவர்களை மீண்டும் அவர்களது குடும்பத்துடனும் சமூகத்துடனும் சேர்ப்பது என்பது ஒட்டுமொத்தச் சிகிச்சையின் மிக முக்கியமான பகுதியாக இல்லாவிட்டாலும் கூட, அது இன்றியமையாததாக அமைகிறது. நிதி ஆதாரங்களின் பற்றாக்குறை, இலாபகரமான வேலைவாய்ப்பு, வீட்டுவசதிச் சிரமங்கள் மற்றும் பிற சமூகப் பிரச்சினைகள் ஆகியவை உயிர் பிழைத்தவரின் அடிப்படைத் தேவைகளில் ஒரு முக்கிய பகுதியாக அமைகின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தத் தொடர்ச்சியான பிரச்சினைகளின் அடிப்படையான சவால்கள் அவர்களது மீட்சியைத் தடுக்கின்றன; அதே நேரத்தில், இந்த அடிப்படைத் தேவைகளைத் தீர்ப்பதே சரியான சிகிச்சை முறையாகவும் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, வடக்குக் கிழக்கில் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் முற்றிலும் இல்லாமல் இருந்தன. இருப்பினும், இப்போது ஸ்தம்பித்திருக்கும் சமாதானச் செயற்பாட்டில் சில முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.
சுவாரஸ்யமாக, உலகெங்கிலும் சித்திரவதையில் இருந்து தப்பியவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக உள்ள பிற மையங்களில் பெரும்பாலான நேரமும் முயற்சியும் உடைகள், புகலிடப் பிரச்சினைகள், வீட்டுவசதி போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் செலவிடப்படுகின்றன. ஏனெனில் இது தனிநபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் மீட்சிக்கும் உதவுகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே சிகிச்சையின் ஒரு முக்கிய அம்சம் தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான இறுதி மறுவாழ்வைத் திட்டமிடுவதாகும். இந்தத் திட்டம் ஒரு தனிநபரதும் அவரது குடும்பத்தினரின் தேவைகளுக்கும் ஏற்ப தனித்தனியாக வடிவமைக்கப்பட்டது. ஒரு நபர் சமூகத்தில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள உதவும் நிதி ஆதாரங்கள் அவரது சுயமரியாதையையும் சுயகௌரவத்தையும் மீண்டும் பெறுவதற்கான ஒரு அத்தியாவசியப் படிகளாகும். கடன்கள், வீட்டுவசதி, தொழில் பயிற்சி, வருமானம் ஈட்டும் திட்டங்கள், வேலைவாய்ப்பு போன்ற பொருத்தமான சமூகப் பொருளாதார உதவிகளைக் கண்டறிய பிற அரசு, அரசு சாரா நிறுவனங்களுடன் (NGO) தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. உயிர் பிழைத்தவர்களில் சிலருக்கு உளவியல்சார் சமூகக் குழுவில் (Psychosocial Group) வேலைகள் வழங்கப்பட்டன. சட்டம், மனித உரிமைகள், நீதி மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான அமைப்புகளிலும் இவர்களுக்கான வேலைகளுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொருத்தமான அமைப்பைத் தெரிவு செய்யவும், தொடர்பு கொள்ளவும், சமூகத்தில் உள்ள பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும், மறுவாழ்வுக் கட்டத்தில் அவற்றைப் பின்தொடரவும், பல்துறைக் குழுவைச் சேர்ந்த சமூகப் பணியாளர்கள் உதவினர்.
சமூக அணுகுமுறைகள்
சித்திரவதையின் பரவலான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, சமூகத்தில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். மேலே விவரிக்கப்பட்ட படி, வடக்கில் 1% மக்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்புக் கண்டறிந்துள்ளது (சோமசுந்தரம் & சிவயோகன், 1994). இருப்பினும், சித்திரவதை தனிநபரை மட்டுமல்ல, மேலே விவாதிக்கப்பட்ட படி அவர்களின் குடும்பங்கள், சமூகம் மற்றும் பெரிய சமூகத்தையும் பாதிக்கிறது. உண்மையில், முக்கிய நபர்கள் மற்றும் தலைவர்களை சித்திரவதை செய்வது, பயங்கரவாதத்தின் மூலம் கட்டாய அடக்குமுறைக்கான ஒரு நவீனகால வழிமுறையாக, பெரிய சமூகத்தைக் குறிவைப்பதாகத் தெரிகிறது. சமூகத்தில் ஏற்படும் விளைவுகளில் ஒன்று ‘கூட்டு அதிர்ச்சி’ என்று அழைக்கப்படுகிறது (சோமசுந்தரம், 2003). இந்தச் சூழ்நிலைகளில், ஒட்டுமொத்தச் சமூகம் எவ்வாறு பதிலளித்தது, சமூகம் எவ்வாறு சமாளித்தது, மற்றும் கூட்டு மட்டத்தில் நாம் என்ன செய்ய முடியும் என்பவற்றைப் பார்ப்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, குடும்பம் மற்றும் கிராமக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; அத்துடன், பயங்கரவாதத்தின் விளைவுகளுக்கு ஒரு பொதுவான அர்த்தத்தைக் கண்டறிவதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நோக்கத்திற்காக பின்வரும் முறைகள் (பெட்டி 1 இனைப் பார்க்கவும்) சமூக மட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டன:
Box I
1. Community Approaches
2. Awareness
3. Training of Community Workers
4. Public Mental Health Promotive Activities
5. Encourage Indigenous Coping Strategies
6. Cultural Rituals and Ceremonies
7. Community Interventions
- Family
- Groups
- Expressive Methods
- Rehabilitation
8. Prevention
பொது விழிப்புணர்வு, சித்திரவதையும் அதன் விளைவுகளும் பற்றிய பொதுக் கல்வி என்பவை பொது மக்களுக்கும், மருத்துவர்கள், நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சட்ட அதிகாரிகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவன ஊழியர்கள், இராணுவம் மற்றும் (மனித உரிமைகள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச மரபுகள் போன்றவை உட்பட) போராளிப் படைகள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும் உயர் தொழில்முறை மட்டத்தில் ஊடகங்கள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பிரபலமான சிறப்புச் சொற்பொழிவுகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் குடும்ப மறுவாழ்வு மையம், மனித உரிமைகள் நிறுவனம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்குமான மையம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றால் கணிசமான கல்விப் பணிகள் செய்யப்பட்டன. இந்த அயராத முயற்சிகள் மூலம், சித்திரவதையுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவும், சித்திரவதை நடைமுறையில் வீழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புண்டாகலாம்.
பயிற்சி வழங்கல்
அடிப்படை மனநல அறிவிலும் திறன்களிலும் சமூக அடிமட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அது பெரியளவில் மக்களைச் சென்றடைவதற்கான எளிதான ஒரு வழியாகும். அவை பொது (விடயங்கள் சார்ந்த) விழிப்புணர்வுகளை அதிகரிப்பதுடன், அவை பற்றிய அறிவையும் பரவலாக்குகின்றன. சித்திரவதை காரணமாக ஏற்படும் பெரும்பாலான உளவியல் சார்ந்த சமூகப் பிரச்சினைகளை சமூக மட்ட ஊழியர்களாலும், பொருத்தமான மட்டத்தில் குறிப்பிடப்படும் பிறராலும் நிர்வகிக்க முடியும்: மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், குடும்ப சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், கிராம சேவகர்கள், முதியோர், பாரம்பரிய மருத்துவர்கள், பாதிரியார்கள், துறவிகள், கன்னியாஸ்திரிகள் போன்ற கிராம வளங்கள், அரசு, அரசு சாரா அமைப்புகள் (NGO), தன்னார்வ நிவாரண அமைப்புகள், அகதி முகாம் பணியாளர்கள் போன்றோர் இவற்றில் அடங்குவர்.
WHO/ UNHCR (1996) கையேட்டை அடிப்படையாகக் கொண்ட ‘அகதிகள் மனநலம்’ என்ற கையேடு, WHO ஆதரவுடன் இந்த நோக்கத்திற்காக தமிழ்க் கலாசாரச் சூழலுக்கு (தமிழ் சமூகத்தில் மனநலம்) ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. இந்தக் கையேட்டைப் பயன்படுத்தி சமூக மனநலம் குறித்த பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (TOTகள்) UNICEF ஆதரவுடன் செய்து முடிக்கப்பட்டது. அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு சமூக அளவிலான பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர். இந்த வழியில் தேவையான அறிவும் திறனும் பரந்துபட்ட மக்கட் பிரிவினர் மத்தியில் பரவலாகப் பரப்பப்பட்டன. மிகவும் கடுமையான பிரச்சினைகளை விசேட சிகிச்சைப் பிரிவுக்குப் பரிந்துரைக்கக்கூடிய ஒரு ‘பரிந்துரை அமைப்பு’ நிறுவப்பட்டுள்ளது.
பாரம்பரியக் கூட்டுறவு உத்திகள்
உள்ளூர் மக்கள் உயிர்வாழ உதவிய பூர்விக மக்களால் பாவிக்கப்பட்ட கூட்டுவாழ்க்கை உத்திகள் ஊக்குவிக்கப்பட்டன. சடங்குகள், நினைவு விழாக்கள் போன்ற கலாசார ரீதியாகப் பரிந்துரைக்கப்பட்ட, அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் நிகழ்வுகள் தனிப்பட்ட உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டன. அவை அவர்களது மனவலிமை, ஆதரவு, அச்செயல்களின் அர்த்தம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டவையாக இருக்கலாம். தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட சிலர் எப்போதாவது விடுவிக்கப்பட்டால் சில மதச் சடங்குகளைத் தாம் செய்வதாகச் சபதம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழியில் சிலர் இறுதியாகக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட போது காவடி எடுத்தனர்; சில சமயங்களில் தூக்குக் காவடியையும் கூட எடுத்தனர்.
சமூகத்தில் உள்ள பெரிய குழுக்களுக்கு யோகா போன்ற கலாசார ரீதியாகப் பொருத்தமான மன ஆறுதலுக்கான பயிற்சிகளைக் கற்பிப்பது சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கு உதவும்.
மறுவாழ்வளித்தல்
மறுவாழ்வுக்கான சமூக அடிப்படையிலான அமைப்புகளை (CBOs) உருவாக்குவதை ஊக்குவிப்பதன் மூலமும், வசதி செய்வதன் மூலமும் சமூக வலைப்பின்னல்களையும் சமூக உணர்வையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர் பிழைத்தவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி, தொழிற்பயிற்சி, வருமானம் ஈட்டும் திட்டங்கள், கடன்கள், வீட்டுவசதி போன்றவற்றை உள்ளடக்கிய மறுவாழ்வுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிவாரணம், மறுவாழ்வு, புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச, அரசு சாரா நிறுவனங்களுடனான வலைப்பின்னல் வகையிலான நெருங்கிய தொடர்பு, ஒத்துழைப்பு, அவர்களுக்கான வலையமைப்பு என்பவை மிகவும் பயனுள்ளவையாகக் கண்டறியப்பட்டன. சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு அவர்களது உதவியை நாங்கள் நாட முடிந்ததும், உயிர் பிழைத்தோரைப் பரிந்துரைக்கவும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
அரச, அரசு சாராத மற்றும் சர்வதேசத் துறைகளுடன் இணைந்து பணியாற்றும் போது, தனிநபர், குடும்பம், சமூகச் சிகிச்சைமுறை, மீட்பையும் ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கும் உளவியல் செயல்முறைகளுக்கான அவர்களின் திட்டங்கள் அல்லது செயற்பாடுகள் உரிய பரிசீலனையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அத்தகைய எந்தவொரு திட்டமும் சம்பந்தப்பட்ட உள்ளூர் மக்களின் விருப்பங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்பவையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு தங்கியிருக்கும் அல்லது ‘பாதிக்கப்பட்ட’ பாத்திரத்தை விட, ஒரு செயலை ஆற்றுகின்ற, தீர்மானிக்கின்ற பாத்திரமும் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஏனெனில் இது அவர்களின் ஒட்டுமொத்தப் பங்கேற்பு உணர்வையும், அதன் காரணமாக அவர்களது இறுதியான உளவியல் மீட்சியையும் ஊக்குவிக்கிறது. இதைத் (மேற்சொன்ன தங்கியிருக்கும் அல்லது ‘பாதிக்கப்பட்ட’ பாத்திரத்தை) தவிர்க்க, வளர்ந்து வரும் சுய உதவிக்குழுக்களும் உள்ளூர்த் தலைமைகளும், பாரம்பரிய ரீதியான பழக்கவழக்க அடிப்படையிலான நடத்தை முறைகளை மீண்டும் தொடங்கவும், சமூக வலைப்பின்னல்களையும் சமூகச் செயற்பாடுகளையும் அடிமட்ட நிலையிலேயே மீண்டும் நிறுவவும் ஊக்குவிக்கப்பட்டன (ரபேல், 1986). மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்ளூர் ஆற்றல்கள், வளங்கள் என்பவற்றைக் கவனத்தில் எடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் சமூகம் ஒரு வெற்றிகரமான சாதனையையும் நிறைவையும் பெறும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
பகிரப்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்களின் பின்னணியில், இழப்பையும் அதன் அர்த்தத்தையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துதல், ஊடகங்கள், கலை, பொதுப்பணிகள், நினைவுச் சின்னங்கள், சிறப்பு அருங்காட்சியகங்கள் மற்றும் பிற நாடுகளில் நடைமுறையில் உள்ள பொதுத்துக்க நிகழ்வுகள் வழியாக சித்திரவதைக்கு ஆளானவர்களின் வீரத்தை வெளிப்படுத்துதல் (கின்ஸ்டன் & ரோஸர், 1974) போன்ற நினைவூட்டல்களை உள்ளடக்கிய, பாரபட்சமற்ற கலாசாரச் செயல்முறைகளை ஏற்படுத்துவது, இங்கு நிலவும் சர்வாதிகார சூழ்நிலைகளில் மிகவும் கடினமாக இருந்தது. ஒருவேளை அமைதிச் செயல்முறை தொடர வேண்டும் என்ற நோக்கமும், அரசியல் அடக்குமுறைச் சூழ்நிலையில் தளர்வு நிலைமை ஏற்படுவதும் நடந்தால், அது பெரியளவில் சாத்தியமாக முடியும். இதேபோல், சமூக ஒன்றுகூடல்கள், கூட்டங்கள் மற்றும் மத சம்பந்தமான விழாக்கள் ஆகியவை இனவாத உணர்விலிருந்து வெளிவருவதற்கு ஏற்ற கூட்டு மன அதிர்ச்சியை மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ளுதல், சமூக ரீதியாக அவர்களின் அனுபவங்களை வரையறுத்து விளக்குதல், அத்துடன் சமூக இணைப்புகளை மீண்டும் நிறுவுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல் என்பவை சிறப்பான செயற்பாடுகளாக அமையும்.
நெறிமுறைகள் – தற்காப்பு
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரிந்த பிறகு, அது ஏற்படுத்தும் உடல், உள ரீதியான சொல்லொணாத் துயரத்தைக் கண்ட பிறகு, ஒருவர் மிகப்பெரிய உடல், உள ரீதியான, சமூக ரீதியான உள்ளார்ந்த தாக்கத்தை உணரத் தொடங்குகிறார். சித்திரவதையைப் பொறுத்தவரை உண்மையில் நடுநிலை நிலைப்பாடு என்று ஒன்று இருக்க முடியாது. மருத்துவத் தொழிலின் உறுப்பினர்களாக, நமது சமூகம் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதும் நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் சௌகரியத்தையும் அளிக்க முயற்சிக்கும் ஒரு குணப்படுத்தும் தொழிலாக எமது தொழில் இருக்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். பரவலான சித்திரவதையைத் தடுப்பதற்கான ஒரே வழி, அதைப் பயிற்சி செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும் மோதலை நிறுத்துவதாகும் என்பது தெளிவாகிறது. மற்றொன்று, சித்திரவதையை முற்றிலுமாக ஒழிப்பதற்காகப் பாடுபடுவது.
சர்வதேச அளவில், மருத்துவத் தொழிலில் உள்ள பல உறுப்பினர்கள், தனித்தனியாகவும் ஒரு குழுவாகவும், சித்திரவதைக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்துள்ளனர். உலக மருத்துவச் சங்கம் (WMA); டேனிஷ், சிலி மற்றும் பிரித்தானிய மருத்துவச் சங்கங்கள், மனித உரிமைகளுக்கான அமெரிக்க மருத்துவர்கள், அமெரிக்கப் பொதுச் சுகாதாரச் சங்கம், தென்னாபிரிக்க தேசிய மருத்துவ மற்றும் பல் மருத்துவச் சங்கம் (NAMDA) போன்ற மருத்துவ அமைப்புகள் சித்திரவதைக்கு தங்கள் முழுமையான எதிர்ப்பை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் பிரிவு 5, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. மாநாட்டுத் தீர்மானங்கள் ஆகியவற்றில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 11 ஆவது பிரிவும் சித்திரவதையைத் தடை செய்கிறது.
முடிவெடுப்பது அல்லது தீர்வு காண்பது போன்ற விஷயங்களில் நாம் மிகவும் பலவீனமாகவும் உதவியற்றவர்களாகவும் இருப்பதாக உணரக்கூடும். ‘மோதல்கள் நடக்கும் பகுதிகளில் உள்ள சுகாதார ஊழியர்கள் என்ற வகையில், சுகாதார நிபுணர்களாகிய நாம் அமைதியாக இருக்க முடியாது; நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூகத்திற்குமான ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ என்பதை அவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர் (Chandasri, 1999; Armanian, 1989; Zwi & Ugalde, 1989). மருத்துவத் தொழிலுக்கு ஒரு சக்திவாய்ந்ததும் வலியுறுத்தும் வகையிலானதுமான குரல் இருக்கிறது. குறிப்பாக, சித்திரவதைக்கு எதிராக நாம் அமைதியாக ஒரு நிலையான குரலை எழுப்ப முடியும் போது, அது சக்திவாய்ந்த வலியுறுத்தும் குரலைக் கொண்ட ஒன்றாக இருக்கும். சர்வதேச மாநாடுகளின் வெளியீடுகள், அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் விளக்க உரைகள் ஆகியவை மருத்துவத் தொழில் சார்ந்த அழுத்தத்தைக் கொண்டுவரக்கூடிய வழிகளாகும். அல்லது இது நமது அன்றாட நடவடிக்கைகளிலும் தொடர்புகளிலும் இருக்கலாம். அங்கு நாம் பிரச்சினைகளில் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளை எடுக்கலாம். அத்துடன் சித்திரவதை போன்ற பிரச்சினைகளில் நமது கவலைகளை வெளிப்படுத்தலாம். மிகவும் சகிப்புத்தன்மையுள்ள அரசியல் சூழலில் மிகவும் சுறுசுறுப்பான, வெளிப்படையான வாதங்கள் சாத்தியமாகும். தடுப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான தலையீட்டின் மற்றொரு பகுதி, உள்ளூர் மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் செய்யப்படும் கொள்கை உருவாக்கம், மறுவாழ்வு மற்றும் சர்வதேச உதவித் திட்டங்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சாத்தியமாகும். முரண்பாட்டின் தோற்றம், சூழல், மதிப்பீடு மற்றும் பின்னணி போன்ற தலைப்புகளின் கீழ் மேற்கண்ட பகுப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ள சில முடிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொள்கையில் தாக்கம் செலுத்த முடியும். உள்ளூரிலும் தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளிலும் பெறும் உறுப்பினர் பதவி மூலம் அத்தகைய பங்களிப்புச் சாத்தியமாகிறது.
சமூக நீதி இன்னமும் புரிந்துகொள்ளப்படாத ஒரு கனவாகவே உள்ளது. சித்திரவதைக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை அதிகாரபூர்வமாக அடையாளம் காண்பதும் அங்கீகரிப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டாலும் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் நீண்டகாலத் துன்பங்களுக்கான சிறிது நிவாரணம் பெற வாய்ப்பளிக்கின்றன. இவை நீதி, மன ஆரோக்கியம், சமூக ஆரோக்கியம் என்பவற்றை மீட்டெடுக்க உதவுகின்றன.
நமது சமூகத்தில் நிலவும் சித்திரவதையின் அளவையும் அதன் அபரிமிதமான பாவனையையும், அதைச் செய்யும் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்படுவதில்லை என்ற திடுக்கிடும் உண்மையையும் நாம் காணும்போது, எமது சமூகத்தில் இது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கும். சிலர், இலக்குகள் வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றன என்று வாதிடலாம். இருப்பினும், பயன்படுத்தப்படும் வழிமுறைகளின் போக்கே அடையப்படும் இலக்கை வடிவமைப்பதாகவும் அமைகிறது. சித்திரவதை என்பது பயிற்சியாளரையும் பாதிக்கப்பட்டவரையும் மனிதாபிமானமற்றவர்களாக, கொடூரமானவர்களாக ஆக்குவதற்கான ஒரு வழிமுறைதான். பாதிக்கப்பட்டவர் எதிரியாக முத்திரை குத்தப்படுகிறார். (அதிகாரத்தின் பார்வையில் அவர்) ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன்’ ஒப்பிடத்தக்க ஒரு மனிதர் அல்ல என்பதனால் அவருக்கு வழங்கப்படும் மோசமான தண்டனைகள், அடி, சித்திரவதை எல்லாமே சமூகத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகின்றன. சித்திரவதைச் செயல்முறையும் அதன் சட்டபூர்வமாக்கலும் சமூகத்தின் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு, அவை வாழ்வின் ஒரு பகுதியாகவும் அதன் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பவையாகவும் மாறுகின்றன. இதுதவிர, சித்திரவதை செய்பவர்களும் கூட, தாங்கள் செய்யும் அந்த வேலைகளால் தாமாகவே மிருகத்தனம் கொண்டவர்களாக மாற்றம் அடைந்தும் வருகிறார்கள்.
உலகின் பிற பகுதிகள் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போது, மெதுவாகவும் வேண்டுமென்றே அதிகபட்ச வலியை ஏற்படுத்துவதற்காகவும் சித்திரவதை செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் போது, சித்திரவதையாளர் பாதிக்கப்பட்டவரைப் படித்து அறிந்துகொள்கிறார். குறைந்தபட்சமான உடல் வடுக்களுடன் அதிகபட்சமான உளவியல் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் தனது நடைமுறையை வடிவமைக்கிறார். சித்திரவதை செய்பவர்களுக்கு ஒருவரது துன்பத்தைக் காண்பதில் ஒரு வலுவான இன்பக் கிளர்ச்சி இருக்கிறது. அவர்கள் (சித்திரவதைகளைச் செய்யும் போது) பெரும்பாலும் சிரிக்கிறார்கள், நகைச்சுவைகளை உதிர்ப்பார்கள், குடிப்பார்கள். பொதுவாக அவர்கள் சித்திரவதையைச் செய்யும்போது தங்களைத் தாங்களே மகிழ்விக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். யோனியில் அல்லது ஆசனவாயில் எதையாவது பொருட்களைச் செருகுவது போன்ற சில வகையான சித்திரவதைகள் மிகவும் துன்பகரமானவை என்பது வெளிப்படை. அத்துடன் அவை பாலியல் ரீதியான உந்துதல்களால் செய்யப்படுபவையும் கூட. சில சந்தர்ப்பங்களில், சித்திரவதையின் காட்சிகளைப் பார்க்க உயர் அதிகாரிகளும் வருவதாகக் கூறப்படுகிறது. சித்திரவதை செய்பவருக்கு, ஒருவரது துன்பத்தில் இன்பம் காணும் (Sadistic) ஒருவகை மனநிலையும் இருக்கிறது. எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படும் பாதிக்கப்பட்ட நபரிடம், பழிவாங்கும் மனோபாவத்துடன் வெளிப்படும், இடம்பெயர்ந்த எதிரியின் கோபத்தின் ஒரு கூறும் திசைதிருப்பப்பட்டுச் செலுத்தப்படுகிறது. தங்களது உண்மையான எதிரிக்கு எதிரான எதிர்ப்புணர்வும் (தமது குடும்பங்களைப் பிரிந்திருக்கும் விரக்தி காரணமான), விரக்தியும், இயலாமையும் காரணமாக அவர்களிடம் எழுகின்ற கோபம், சிறைச்சாலையின் பாதுகாப்பிற்குள் இருக்கும் உதவியற்ற பாதிக்கப்பட்டவர்கள் மீது வெளிப்படுகிறது. சித்திரவதை செய்பவர்களை ஒரு குழுவாக எடுத்து அவர்கள் பற்றிய ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஆனால் அவர்களது ஆளுமையின் அசாதாரணங்களாக, வேலை வழக்கத்தின் ஒழுங்குமுறை, சகாக்களால் ஏற்படும் அழுத்தங்கள், நிலவும் கட்டமைப்புக்கு ஒத்துழைத்தல், கட்டுப்பாடுகள், வேலை முறைக்கேற்ப சேர்ந்து ஈடுகொடுத்தல், சட்ட அமைப்புக்கு ஒத்துழைத்தல், மிருகத்தனம், சோகம், தீய ஆக்கிரமிப்பு மற்றும் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். ஆச்சரியப்படும் விதமாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் அன்பான குடும்பங்களைக் கொண்ட சாதாரண – பெரும்பாலான அட்டூழியங்களுக்குப் பொறுப்பான நாஜி அதிகாரிகள் (அரெண்ட், 1963) போல – சராசரியான சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக மாறக்கூடும். மற்றவர்கள், தங்களின் ‘மனிதத் தடை நீக்கம்’ என்ற செயல்முறையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவர்களை மனிதரைவிடக் குறைவானவர்களாகவோ, தண்டனைக்குத் தகுதியான ஆபத்தான எதிரிகளாகவோ, அல்லது தகவல் அல்லது ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட வேண்டியவர்களாகவோ கருதும் தமது இனமையக் கருத்துகளிலேயே நிலைத்திருக்கலாம்.
ஒரு குழுவாக அவர்கள் பெரும்பாலும் தூக்கமின்மை, கனவுகள், எரிச்சல், ஆழ்ந்த சந்தேகம் மற்றும் விரோதம் உள்ளிட்ட உறவுசார்ந்த பிரச்சினைகள், வன்முறைகலந்த ஆத்திரம், கடுமையான தாங்க முடியாத எரிவெடிக்கும் வலி போன்ற சோமாடிசம் (Somatism), திடீர் மயக்கங்கள், துடிக்கும் தலைவலிகள் என்பவை பற்றி புகார் கூறுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் மது அல்லது போதைப்பொருட்களால் தங்களைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்; தற்கொலை எண்ணங்களும் அடிக்கடி வருகின்றன. அவர்களில் பலர் சித்திரவதைச் சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு தப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். மற்றவர்கள் பாதிக்கப்பட்டவரின் துன்பத்திலிருந்து வலியை உண்டாக்கி இன்பம் பெறும்படி கட்டாயப்படுத்தும் ஒரு துன்பகரமான ஆளுமையை தமக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள்.
சித்திரவதைகள் தொடர்பாக நாம் அமைதியாக இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சித்திரவதைகள் தங்கள் மூக்கின் கீழ் நடப்பது கூட பலருக்குத் தெரியாது. சில காலத்திற்கு முன்பு, கொழும்பின் மையப்பகுதியில் ஒரு சித்திரவதைக் குகை இருப்பதை தொடர்ச்சியான நிகழ்வுகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன; அங்கு தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் அவர்களின் உடல்கள் கொழும்பைச் சுற்றியுள்ள ஏரிகளில் வீசப்பட்டன. காவல்துறையின் உயர்மட்ட சிறப்புப் பணிக்குழு இதில் ஈடுபட்டது, ஆனால் அவர்கள் ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை. சில நேரங்களில் கேட்கும் சித்திரவதை செய்யப்பட்டவர்களின் வேதனைகரமான அழுகைகள் குறிப்பாக வேதனையளிக்கும். இது யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளின் (IPKF) ஆக்கிரமிப்பின் போது நடந்தது; அங்கு குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவில் ஒவ்வொரு சில நூறு ‘யார்’ தூர இடைவெளியிலும் அவர்களது முகாம்கள் இருந்தன.
நள்ளிரவில் இராணுவ முகாம்களில் இருந்து சித்திரவதை செய்யப்படும் கைதிகளின் அழுகை அருகில் வசிப்பவர்களை விழித்திருக்க வைத்தது. அது அவர்களுக்குக் கடுமையான உளவியல் தொந்தரவுகளை ஏற்படுத்தியது. மற்றவர்கள் சித்திரவதை நடைமுறையை வெளிப்படையாக மறுக்கிறார்கள்; பெரும்பாலும் அதிகாரிகளது அதிகாரபூர்வ மறுப்பும் உள்ளது. அத்துடன் பல சாதாரண குடிமக்கள் தங்கள் நாட்டின் விரும்பத்தகாத பகுதியைப் பற்றிச் சிந்திக்க விரும்ப மாட்டார்கள். சித்திரவதை பற்றி விவாதிக்கும் போது சிலர் வேறு வகையான ‘சித்திரவதை’க்கு மாறுவார்கள்; உருவகமாகப் பேசினால், அவர்கள் குடும்பத்திற்குள் நடக்கும் சித்திரவதை அல்லது பல்கலைக்கழகங்களில் நடக்கும் ‘ராகிங்’ செய்தலைக் குறிப்பிடுவார்கள். இருப்பினும், ஒரு தனிநபரை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உடைக்கக் கடுமையான அளவிலான வலியை முறையாக பயன்படுத்துவது பற்றியே இங்கே பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது தரமான முறையில் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் நடக்கிறது.
சித்திரவதை என்ற உண்மையை பலர் ஏற்றுக்கொண்டாலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அரசுக்கோ அல்லது அரசிலிருந்தோ வரும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் இது தவிர்க்க முடியாத, அவசியமான தீமை என்று அவர்கள் கருதுவார்கள். சில அப்பாவிப் பொதுமக்கள் துரதிர்ஷ்டவசமாகப் பிடிபடலாம்; ஆனால் பொதுவாக சித்திரவதை செய்யப்படுபவர்கள், தகவல் கொடுப்பவர்கள் அல்லது துரோகிகள் போன்ற குற்றவாளிகள் என்று அவர்கள் வாதிடுகின்றனர். பொதுவாகச் சித்திரவதை என்பது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஓரளவுக்கு அனுமதிக்கப்பட்ட காவல்துறையின் மிருகத்தனத்தின் பின்னணியில் இருந்து உருவாகிறது என்று தோன்றுகிறது. ஓர் அவநம்பிக்கையான சூழ்நிலையில் மோதல் வெடிப்பதும், அதிகரித்து வரும் இராணுவமயமாக்கலும், சித்திரவதையையும் அதுபோன்ற பிற கடுமையான மனித உரிமை மீறல்களையும் எளிதில் நடைமுறைப்படுத்த அனுமதிக்கிறது. இந்த வகையான சமூக ஏற்புடமையை மாற்றுவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
சமூகத்தில் சித்திரவதைப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், இந்த தவிர்க்க முடியாத தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை முறியடிப்பதிலும் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஐ.நா. மரபுகளைச் செயற்படுத்துவதன் மூலமும், அரசியல் அதிருப்தி மற்றும் மோதலுக்கு வழிவகுத்த அடிப்படைத் துயரங்களைப் போதுமான அளவில் நிவர்த்தி செய்வதன் மூலமும், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களை ரத்துச் செய்வதன் மூலமும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பது நீண்ட காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முடிவுரை
இலங்கையில் சித்திரவதை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பங்களுக்கும், அவர்களது சமூகத்திற்கும் குறுகியதும் நீண்டதுமான காலத்திற்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மற்றும் சமூக ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதத் தடுப்பு மற்றும் அவசரகாலச் சட்டங்கள் போன்ற சட்டங்கள், ஒரு சமூகத்தைக் கட்டுப்படுத்தவும் கட்டாயப்படுத்தவும் முயற்சிக்கும் வகையில் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்வதற்கான சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை அரசுக்கு வழங்கியுள்ளன. இதனால் இது ஒரு வகையான அரச பயங்கரவாதத்தையும், எதிர்ப்பையும் கிளர்ச்சியையும் தூண்டுவதன் மூலம் ஒரு நிரந்தரமான பயங்கரவாதச் சட்டமாகவே செயற்பட்டு வருகிறது.
கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு
தயா சோமசுந்தரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மனநல மருத்துவத்தின் மூத்த பேராசிரியராகவும், வட இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மனநல மருத்துவ ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். அவர் கம்போடியாவில் இரண்டு ஆண்டுகள் “டிரான்ஸ்கல்ச்சர் சைக்கோசோஷியல் ஓகனைசேஷன்” ( Transcultural Psychosocial Organization)உடன் சமூக மனநலத் திட்டத்தில் பணியாற்றியுள்ளார். பல்வேறு சுகாதார ஊழியர்களுக்கும், சமூக மட்ட ஊழியர்களுக்கும் அவர் ஆற்றிய கற்பித்தல்,பயிற்சி அளித்தல் என்பவை தவிர, அவரது ஆராய்ச்சிகளும் பிற வெளியீடுகளும், முக்கியமாக பேரழிவுகளின் உளவியல் விளைவுகளும் அவற்றுக்கான சிகிச்சைகளும் என்பவை மீது கவனம் செலுத்தியுள்ளன. அவர் இங்கிலாந்தின் “Royal College of Psychiatrists” கல்லூரியின் ஆய்வுத்துறைச் செயற்பாட்டாளரும் ஆவார். இலங்கையில் சித்திரவதைக்கு ஆளானவர்கள் பற்றிய மிகவும் ஆழமான ஆய்வாகப் பாராட்டப்பட்ட ‘காயப்பட்ட மனங்கள்’ ( ‘Scarred Minds’) உட்பட பல வெளியீடுகளின் ஆசிரியரும் ஆவார். தற்போது அவர் அவுஸ்திரேலியாவில் கிளென்சைட்(Glenside) மருத்துவமனையில் ஆலோசக மனநல மருத்துவராகவும், அடிலெய்ட்(Adelaide) பல்கலைக்கழகத்தில் மருத்துவ இணைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.



