லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி - நாவற்குழி
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
12 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – நாவற்குழி

March 9, 2026 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள சாவகச்சேரிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். 

நாவற்குழிக் கோவிற்பற்றில் நாவற்குழி, நுணாவில், கோயிலாக்கண்டி ஆகிய மூன்று துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது (படம்-1).

எல்லைகள்

லெயுசிக்காமின் நிலப்படம் நாவற்குழிக் கோவிற்பற்றை மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட ஒரு தீவக்குறை போல் காட்டுகிறது. வடக்கு, மேற்கு, கிழக்குப் பக்கங்களில் கடல் நீரேரியால் சூழப்பட்டுள்ளதாக வரையப்பட்டுள்ளது. தெற்கு முனைப் பகுதி மட்டும் சாவகச்சேரிக் கோவிற்பற்றுடன் இணைந்துள்ளது. தற்கால நிலப்படங்களின்படி கோவிற்பற்றின் கிழக்கு எல்லையோரமாகக் கடல்நீரேரி தொடர்ச்சியாக நீண்ட தூரம் ஊடுருவிச் செல்லவில்லை. வடக்கு, மேற்குப் பக்கங்களில் மட்டுமே கடல்நீரேரி காணப்படுகின்றது. நாவற்குழிக் கோவிற்பற்றின் நீளப்பாட்டு அச்சு வடமேற்கு/ தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. வடமேற்கு முனையை அண்டிய பெரும்பகுதியில் நாவற்குழித் துணைப் பிரிவு அமைந்துள்ளது. தென்கிழக்கு முனையை அண்டி நுணாவில் துணைப்பிரிவு காணப்படுகின்றது. நடுப்பகுதியில் மேற்கு எல்லையை ஒட்டியபடி கோயிலாக்கண்டி துணைப்பிரிவு உள்ளது. இத்துணைப்பிரிவு ஒரு பக்கத்தில் கடல்நீரேரியை எல்லையாகக் கொண்டுள்ளது. ஏனைய மூன்று பக்கங்களிலும் நாவற்குழித் துணைப் பிரிவினால் சூழப்பட்டுள்ளது (படம்-2).

ஒல்லாந்தர் கால நாவற்குழிக் கோவிற்பற்று தற்போதைய சாவகச்சேரி பிரதேசச் செயலர் நிர்வாகப் பிரிவின் ஒரு பகுதியாக உள்ளது. உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை இக்கோவிற்பற்றின் நாவற்குழி, கோயிலாக்கண்டி ஆகிய துணைப் பிரிவுகள் சாவகச்சேரிப் பிரதேச சபை எல்லைக்குள் அடங்குவது தெளிவு. ஆனால், மூன்றாவது துணைப்பிரிவான நுணாவிலில் அடங்கியிருக்கக்கூடிய நுணாவில் ஊரின் பெரும் பகுதி இன்று சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் உள்ளது. 

லெயுசிக்காமின் நிலப்படத்தில் நுணாவில் துணைப் பிரிவு கடல்நீரேரியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருப்பதாகக் காட்டியுள்ளனர். நாவற்குழியின் ஏனைய பகுதிகளுடன் இணைந்துள்ள தெற்கேயுள்ள பகுதியே நுணாவில் என முறையாகப் பெயர் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. வடக்கில் மட்டுவில், சாவகச்சேரி ஆகிய கோவிற்பற்றுகளுடன் இணைந்த வடக்குப் பகுதியை “இது நுணாவிலைச் சேர்ந்தது” எனக் குறித்துள்ளனர். அப்பகுதியில் வேறெந்த அம்சத்தையும் நிலப்படம் காட்டவில்லை. லெயுசிக்காமின் நிலப்படத்தில் நுணாவில் துணைப்பிரிவின் தென்பகுதியில் குறித்துள்ள குளங்களைக் கவனத்திற்கொண்டு பார்க்கும்போது அதன் பெரும்பகுதி மறவன்புலோவுக்கே உரியதாகத் தெரிகிறது. நுணாவில் ஊர் வடக்குப் பகுதியில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதி தற்கால நிலப்படங்களில் உள்ள நுணாவில் ஊரின் அமைவிடத்துடன் சரியாகப் பொருந்தவில்லை. இவ்விடத்தில் நிலப்படம் சரியாக வரையப்படவில்லை என்றே தோன்றுகிறது. 

வீதிகள்

லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி யாழ்ப்பாணத்திலிருந்து வரும் வீதி உப்பாறு கடல்நீரேரியைக் கடந்து நாவற்குழித் துணைப் பிரிவின் மேற்கு முனையூடாக நாவற்குழிக் கோவிற்பற்றுக்குள் நுழைகிறது. இது நாவற்குழித் துணைப்பிரிவை ஊடறுத்து நீரேரியொன்றைக் கடந்து சாவகச்சேரிக்குச் செல்கிறது. லெயுசிக்காமின் நிலப்படத்தில் இந்த வீதி நாவற்குழிக் கிராய் எனக் குறிப்பிட்டுள்ள நிலப்பகுதிக்குத் தெற்காகச் செல்கிறது. அதற்கு அப்பால் தக்கன்கட்டுக் குளத்துக்கு (தச்சன்தோப்புக் குளம்) மிக அருகாக அதற்கு வடக்குப் பக்கமாகச் செல்கிறது. தற்கால யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வீதி (கண்டி வீதியின் பகுதி) மேற்குறித்த கிராய்ப் பகுதிக்கு வடக்காகவும் தச்சன்தோப்புக் குளத்துக்கு வடக்கே குறிப்பிடத்தக்க அளவு தொலைவிலும் செல்கிறது. லெயுசிக்காமின் நிலப்படத்தில் இந்த வீதியின் தடத்தைப் பிழையாக வரைந்திருக்கலாம் அல்லது உண்மையிலேயே ஒல்லாந்தர் காலத்து வீதி நிலப்படம் காட்டும் தடத்தில் சென்றிருக்கலாம். இரண்டுக்கும் வாய்ப்பு உண்டு. இப்பகுதியில் இன்றைய தொடர்வண்டிப் பாதை நிலப்படத்தின் வீதித் தடத்துடன் பல இடங்களில் பொருந்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

1658 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குப் படையெடுத்து வந்தபோது சாவகச்சேரித் தேவாலயம், நாவற்குழித் தேவாலயம் ஆகியவற்றைக் கடந்து இந்த வீதியூடாகவே சென்றனர்.1 நாவற்குழியிலிருந்து படைகள் நீரேரிக் கரை நோக்கிச் சென்றதாகவும், அங்கிருந்து முன்னேறி சுண்டிக்குழிக்குச் சென்றதாகவும் நூலில் குறிப்புகள் உள்ளன. ஆனால், நீரேரியைக் கடந்த விதம் குறித்த தகவல் எதுவும் இல்லை. நடந்தே அப்பகுதியைக் கடந்திருக்கக்கூடும்.

இந்த வீதியைத் தவிர வேறு வீதியெதையும் இக்கோவிற்பற்றுக்குள் நிலப்படம் காட்டவில்லை. தற்காலத்தில், இக்கோவிற்பற்றுக்கூடாகச் செல்லுகின்ற நாவற்குழி – கேரதீவு வீதி, மானிப்பாய் – கைதடி வீதி என்பன நிலப்படத்தில் இல்லை. அவை பிற்காலத்திலேயே முறையான வீதிகளாக ஆகியிருக்கலாம்.

கட்டடங்கள்

இதுவரை பார்த்த ஏனைய கோவிற்பற்றுகளில் இருந்தது போலவே நாவற்குழிக் கோவிற்பற்றிலும் கிறிஸ்தவ தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் நிலப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்துக் குறித்துள்ளனர். இவற்றைத் தவிர ஒரு மடத்தையும் இன்னொரு மடத்துடன்கூடிய மீன்பிடித்துறை ஒன்றையும் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது.

தேவாலயமும் தேவாலய இல்லமும்

போல்டேயஸ் பாதிரியாரின் நூலில் உள்ள குறிப்பின்படி நாவற்குழித் தேவாலயமும் தேவாலய இல்லமும் மண் சுவர்களையும் ஓலைக் கூரைகளையும் கொண்ட கட்டடங்களாகவே இருந்தன.2 இக்கட்டடங்களைக் காட்டும் அந்நூலிலுள்ள படமும் மேற்படி விவரிப்பை உறுதி செய்யும் வகையிலேயே உள்ளது3 (படம்-3). இந்தத் தேவாலயம் போர்த்துக்கேயர் காலத்திலேயே ஒரு கத்தோலிக்கத் தேவாலயமாக இவ்விடத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஒல்லாந்தப் படைகள் கோட்டையைக் கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணம் நோக்கி வந்தபோது நாவற்குழித் தேவாலயத்தில் ஓர் இரவு தங்கியிருந்ததாக போல்டேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.4 போல்டேயஸ் பாதிரியார் தந்துள்ள விவரங்கள் 1665 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை. அதற்குப் பின்னரும் ஒல்லாந்தர் 130 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை ஆண்டுள்ளனர். அந்தக் காலப் பகுதியில் நாவற்குழித் தேவாலயத்தை நிரந்தரக் கட்டடப் பொருட்களால் கட்டி மேம்படுத்தினார்களா என்பது பற்றிய தகவல்கள் இல்லை.

லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி தேவாலயம் நாவற்குழித் துணைப் பிரிவுக்குள், நாவற்குழியூடாக, யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரிக்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ளது. தேவாலயமும் தேவாலய இல்லமும் மேற்குறிப்பிட்ட வீதியின் வடக்குப் பக்கத்தில், முன்னர் குறிப்பிட்ட நாவற்குழிக் கிராய்ப் பகுதிக்கும் வீதிக்கும் இடையில் இருப்பதாக நிலப்படம் காட்டுகிறது.

பிரித்தானியர் காலத்தில் கிறித்தவ மதப் பணியாற்ற வந்த மிசன்களில் எவரும் நாவற்குழியில் இருந்த ஒல்லாந்தர்காலத் தேவாலயத்தைக் கையேற்று அதைத் திருத்திப் பயன்படுத்தியதாகவோ, அத்தேவாலயம் இருந்த நிலத்தைப் பெற்று அதில் புதிய தேவாலயத்தை அமைத்ததாகவோ உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் கிடைக்கவில்லை. நாவற்குழி மகா வித்தியாலயம் 1868 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ திருச்சபையால் நிறுவப்பட்டது எனவும், பாடசாலையின் பெயர் ‘சி. எம். எஸ்.’ (C. M. S.) என்றும் படசாலை வரலாற்றுக் குறிப்பு ஒன்றில் தகவல் உள்ளது.5 ஆனால், இது தொடர்பான விவரமான தகவல்களோ முறையான எழுத்துமூலச் சான்றுகளோ இல்லை. அத்துடன், பாடசாலையை நிறுவிய கிறிஸ்தவத் திருச்சபை எது என்ற தகவலையும் மேற்படி குறிப்புத் தரவில்லை. பாடசாலையின் பெயர் சி. எம். எஸ் எனக் குறிப்பிட்டிருப்பதால் மேற்கூறிய கிறிஸ்தவ அமைப்பு சேர்ச் மிசன் சபையாக (Church Mission Society – C. M. S.) இருக்க வாய்ப்பு உள்ளது. சேர்ச் மிசன் சபையின் நூற்றாண்டு மலரில் நாவற்குழியில் சமயப்பணி செய்தது பற்றியோ பாடசாலையை நிறுவியதைப் பற்றியோ குறிப்புகள் எதுவும் இல்லை. 

நிலப்படம், ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வீதியின் தடத்தைச் சரியாகவே காட்டுகிறது எனக் கொண்டால், நிலப்படம் காட்டும் ஒல்லாந்தர் தேவாலயத்தின் அமைவிடமும் தற்கால நாவற்குழி மகா வித்தியாலயத்தின் அமைவிடமும் பொருந்துவதைக் காண முடிகிறது. இது சரியானால், பாடசாலை வரலாறு குறிப்பிடும் கிறிஸ்தவ திருச்சபையினர் ஒல்லாந்தத் தேவாலயம் இருந்த வளவிலேயே தமது பாடசாலையைத் தொடங்கினர் என எண்ணுவதற்கு ஏதுவாகும். ஆனால், இப்போது எமக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இதை உறுதியாகக் கூற முடியாது.  

மடம்

யாழ்ப்பாணத்திலிருந்து வரும் வீதி உப்பாற்றைக் கடந்து நாவற்குழிக்குள் நுழையும் இடத்தில் ஒரு மடம் உள்ளது. நிலப்படத்தில் இதற்குக் கல்மடம் எனப் பெயர் குறித்துள்ளனர். வீதிகள் கடல்நீரேரிகளைக் கடக்கும் பெரும்பாலான இடங்களில் பயணிகளின் வசதிக்காக இரண்டு பக்கங்களிலும் மடங்கள் இருந்தது பற்றி ஏற்கெனவே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளோம். இவ்விடத்திலும் நாவற்குழிக்கு எதிர்ப் பக்கத்தில் சிவியாதெரு (அரியாலை) கடல்நீரேரிக் கரையிலும் ஒரு மடம் உள்ளது. அக்காலத்தில் இவ்வாறான பல மடங்கள் மண்ணால் கட்டப்பட்டவையாக இருந்திருக்கலாம். நாவற்குழியில் இருந்த மடம் கல்லால் கட்டப்பட்டிருந்ததால் அதைக் கல்மடம் என்ற பெயரால் அழைத்திருக்கக்கூடும்.

மீன்பிடித் துறையும் மடமும்

நாவற்குழித் துணைப் பிரிவில் கோயிலாக்கண்டி, நுணாவில் ஆகிய துணைப்பிரிவுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கடல்நீரேரிக் கரையோரமாக மடம் போன்ற ஒரு குறியீட்டைக் காண முடிகிறது. இதன் அருகே ‘Vis Ratel’ எனப் பெயர் குறித்துள்ளனர். ஒல்லாந்தருடைய டச்சு மொழியில் ‘Ratel’ என்பதற்கு இவ்விடத்துக்குப் பொருந்தக்கூடிய பொருளை அறிய முடியவில்லை. ஆனால், ‘Vis’ என்பது மீனைக் குறிப்பதால் இது மீன்பிடியோடு தொடர்புடைய ஒன்றாக இருக்கலாம். குறிப்பாக ஒரு மீன்பிடித் துறையாக இருக்க வாய்ப்பு உள்ளது. இங்குள்ள குறியீடு வழமையாகத் துறைகளில் காணப்படும் மடம் என ஊகிக்கலாம்.

குளங்கள்

நாவற்குழிக் கோவிற்பற்றுக்குள் 29 குளங்களை நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. இவற்றுள், கந்தன் துரவு, இந்தனைக் குளம், இயத்தைக் குளம், நெருஞ்சிக் குளம், இயட்டவளைக் குளம், பிச்சன்பள்ளன் குளம், காவடுக் கிராய், நாவற்குழிக் கிராய், தக்கென்கட்டுக் குளம், நீர்ப்பென் கிராய், பெரிச்சிக் குளம் ஆகியவற்றுடன் குளம் எனப் பொதுப்பெயரால் குறித்த ஒரு குளமும் உட்பட 12 குளங்கள் நாவற்குழித் துணைப் பிரிவுக்குள் உள்ளன. கோயிலாக்கண்டித் துணைப் பிரிவுக்குள் தெல்லப் பொக்கணை, வேலம்பிராய், சிறு குளம், இறவாலைக் குளம், கம்பில் குளம், மருதடிக் குளம் ஆகிய ஆறு குளங்கள் காணப்படுகின்றன. எஞ்சிய 11 குளங்கள் நுணாவில் துணைப் பிரிவுக்குள் உள்ளன. அவை, பெருச்சிக் குளம், சாலக் குளம், வண்ணாத்திக் குளம், வல்லக் குளம், செல்லைக் குளம், வண்ணாத்திக் குளம், வண்ணான்துறைக் குளம், வல்லக் குளம், பெரிய கிராய், பெரிய தூவல் குளம், குறிய தூவல் குளம் என்பன. இங்கே வண்ணாத்தி குளமும், வல்லக் குளமும் இரண்டு இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன. உண்மையில் இப்பெயர்களில் இரண்டிரண்டு குளங்கள் இருந்தனவா அல்லது தவறுதலாக இரண்டு இடங்களில் குறித்துள்ளனரா தெரியவில்லை. 

ஒல்லாந்தர்கால நாவற்குழிக் கோவிற்பற்றுப் பகுதிக்குள் அடங்கும் வகையில் தற்காலத்தில் 80க்கு மேற்பட்ட குளங்கள் உள்ளதாகப் பதிவுகள் காட்டுகின்றன.6 மேற்படி பதிவிலுள்ள பெயர்களுடன் ஒப்பிடும்போது, நிலப்படம் காட்டும் குளங்களுள் இயத்தைக் குளம், நீர்ப்பென் கிராய், வேலம்பிராய், சாலக் குளம், வண்ணாத்திக் குளம், வல்லக் குளம், பெரிய தூவல் குளம் ஆகிய குளங்கள் இன்றும் அதே பெயர்களாலேயே அழைக்கப்படுவதை அறிய முடிகிறது. இயத்தவளைக் குளம், பிச்சன் பள்ளன் குளம், தெல்லப் பொக்கணை, வண்ணான் துரவு என்பன இன்று சிறிய மாற்றங்களுடன் முறையே யட்டவளைக் குளம், பீச்சாம்பள்ளக் குளம், தெக்கிலான் பொக்கணை, வண்ணாதுறைக் குளம் ஆகிய பெயர்களால் அறியப்படுகின்றன. அத்துடன், இன்று சிறிய தூவல் குளம் எனப்படும் குளத்தையே நிலப்படத்தில் பிழையாக ‘குறிய தூவல் குளம்’ எனக் குறித்துள்ளனர் எனத் தோன்றுகிறது. அதேவேளை, தற்காலத்தில் பெரிய ரவாலிக் குளம், சின்ன ரவாலிக் குளம் எனப் பதிவுகளில் உள்ள குளங்களில் ஒன்றையே நிலப்படத்தில் இறவாலைக் குளம் எனக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது. நிலப்படத்தில் தக்கென்கட்டுக் குளம் எனக் குறித்துள்ள குளத்தின் அளவு, வடிவம், அமைவிடம் ஆகியவற்றைத் தற்காலக் குளங்களுடன் ஒப்புநோக்கும் போது அது இன்று தச்சன் தோப்புக் குளம் அல்லது நெடுங்குளம் என அழைக்கப்படும் குளத்துடன் பெருமளவுக்குப் பொருந்துகிறது. எனவே, மேற்படி மூன்று பெயர்களும் ஒரே குளத்தையே குறிக்கின்றன எனலாம். நிலப்படத்தில் குறித்துள்ள ‘தக்கென்கட்டுக் குளம்’ என்ற பெயரில், ‘தச்சன்’ என்பதையே ‘தக்கென்’ எனப் பிழையாக எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

குறிப்புகள்

  1. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 299.
  2. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 330.
  3. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 329.
  4. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 299.
  5. சு. சுதர்சன், “நாவற்குழி மகாவித்தியாலய இற்றைப்படுத்தப்பட்ட வரலாறு,” 150 ஆவது ஆண்டு நிறைவுச் சிறப்புமலர் – யா/ நாவற்குழி மகாவித்தியாலயம் (நாவற்குழி: யா/ நாவற்குழி மகா வித்தியாலயம், 2019), 29.
  6. தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்.


About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்