லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் முன்னைய சில கட்டுரைகளில் பார்த்தோம். இனி தென்மராட்சிப் பிரிவில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாக மேற்படி நிலப்படம் தரும் தகவல்களைப் பார்க்கலாம். இந்தக் கட்டுரை தென்மராட்சிப் பிரிவின் சாவகச்சேரிக் கோவிற்பற்றைப் பற்றி ஆராய்கிறது.
சாவகச்சேரிக் கோவிற்பற்றில் சாவகச்சேரி, சரசாலை, மட்டுவில், மீசாலை, தனங்கிளப்பு ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது (படம்-1).

எல்லைகள்
சாவகச்சேரிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் உப்பாறு கடல் நீரேரி உள்ளது. மேற்கில் உப்பாறும், நாவற்குழிக் கோவிற்பற்றும் காணப்படுகின்றன. கிழக்கு எல்லையில் கச்சாய், வரணி ஆகிய கோவிற்பற்றுகளும், தெற்கு எல்லையில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியும் உள்ளன. சாவகச்சேரிக் கோவிற்பற்றுக்குள் வடக்கு எல்லையை அண்டி, மேற்குப் பக்கத்தில் மட்டுவில் துணைப் பிரிவும் கிழக்குப் பக்கத்தில் சரசாலைத் துணைப் பிரிவும் அமைந்துள்ளன. இவற்றுக்குத் தெற்கே முறையே மீசாலைத் துணைப்பிரிவும், சாவகச்சேரித் துணைப் பிரிவும் உள்ளன. தெற்கு முனையில் தனங்கிளப்புத் துணைப் பிரிவு காணப்படுகின்றது (படம்-2).

தனங்கிளப்புக்குத் தென்கிழக்கே கடல்நீரேரிக்குள் பல சிறிய தீவுகள் அல்லது புட்டிகள் காணப்படுகின்றன. ஒடியம் தீவு, ஒடியம் புட்டி, காரை தீவு, கேர தீவு, தாழையடித் தீவு, கண்ணாத் தீவு, உயிலந் தீவு, கேரை தீவு ஆகியவற்றை நிலப்படம் பெயர் குறித்துக் காட்டுகிறது.
நிலப்படத்திலுள்ள மீசாலைத் துணைப் பிரிவைத் தவிர ஏனைய துணைப் பிரிவுகள் அவற்றின் பெயர் குறிக்கும் தற்காலப் பகுதிகளுடன் ஏறத்தாழப் பொருந்தி வருகின்றன. ஆனால், தற்காலத்து மீசாலைப் பகுதி சாவகச்சேரியின் வடக்கு எல்லையை அண்டிக் காணப்பட, நிலப்படத்தில் மீசாலைத் துணைப் பிரிவைச் சாவகச்சேரியின் மேற்கு எல்லையில் காட்டியுள்ளனர். தற்காலத்தில் இப்பகுதியில் கல்வயல், நுணாவில் ஆகிய பகுதிகளே உள்ளன. லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி, நுணாவில் நிலத் தொடர்பற்ற இரண்டு துண்டுகளாக நாவற்குழிக் கோவிற்பற்றுக்குள் அடங்கிக் காணப்படுகின்றது. அதன் அமைவிடமும் உண்மை நிலையுடன் பொருந்தவில்லை.
ஒல்லாந்தர் காலச் சாவகச்சேரிக் கோவிற்பற்று இன்றைய சாவகச்சேரி பிரதேசச் செயலர் பிரிவுக்குள் அடங்குகிறது. உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, இக்கோவிற்பற்றின் ஒரு பகுதி சாவகச்சேரி நகர சபை எல்லைக்குள்ளும், எஞ்சிய பகுதிகள் சாவகச்சேரிப் பிரதேச சபை எல்லைக்குள்ளும் அடங்குகின்றன.
வீதிகள்
லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி யாழ்ப்பாணத்திலிருந்து நாவற்குழியூடாக வரும் வீதி மேற்கு எல்லையூடாகச் சாவகச்சேரிக் கோவிற்பற்றுக்குள் நுழைகிறது. இது சாவகச்சேரியில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று தெற்கு எல்லையை அண்டியுள்ள யாழ்ப்பாண நீரேரிக்குச் சமாந்தரமாகச் சென்று கிழக்கு எல்லையைக் கடந்து கச்சாய்க் கோவிற்பற்றுக்குள் நுழைகிறது. இது இன்றைய சாவகச்சேரி – கச்சாய் வீதியின் ஒரு பகுதியாக அமைகிறது. மற்ற வீதி வடகிழக்குத் திசையில் இன்றைய கண்டி வீதித் தடத்திற் சென்று கோவிற்பற்றின் கிழக்கு எல்லையைக் கடந்து கொடிகாமம் நோக்கிச் செல்கிறது. சாவகச்சேரிக் கோவிற்பற்றுக்குள் லெயுசிக்காமின் நிலப்படம் காட்டுவது மேற்குறிப்பிட்ட வீதிகளை மட்டுமே. சாவகச்சேரியைச் சூழவுள்ள நாவற்குழி, வரணி, கச்சாய், கொடிகாமம், எழுதுமட்டுவாள் ஆகிய இடங்களிலுள்ள தேவாலயங்களைச் சாவகச்சேரித் தேவாலயத்துடன் இணைக்கும் வீதிகளாக இவை இருப்பதால் இவ்வீதிகள் நிலப்படத்தில் குறிக்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவையாகக் கொள்ளப்பட்டிருக்கலாம்.
தற்காலத்தில் இந்தக் கோவிற்பற்றுப் பகுதியூடாகச் செல்கின்ற புத்தூர் – மீசாலை வீதி, சாவகச்சேரி – புலோலி வீதி முதலிய முக்கிய வீதிகளை நிலப்படம் காட்டவில்லை. இவை பிற்காலத்திலேயே, பெரும்பாலும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேயே முறையான வீதிகளாக ஆகியிருக்கக்கூடும்.
கட்டடங்கள்
வழமை போல, சாவகச்சேரிக் கோவிற்பற்றிலும் கிறித்தவ தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் நிலப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்துக் குறித்துள்ளனர். இவற்றைத் தவிர ஒரு யானைப் பந்தியையும் இக்கோவிற் பற்றுக்குள் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது.
தேவாலயமும் தேவாலய இல்லமும்
தென்மராட்சிப் பிரிவில் உள்ள தேவாலயங்களுள் சாவகச்சேரித் தேவாலயமே முதன்மையானதும் மிகவும் பெரியதும் என போல்டேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.1 தேவாலய இல்லம் பல பிரிவுகளைக் கொண்டதாக உறுதியாகவும் சிறப்பாகவும் கட்டப்பட்டிருந்ததாகவும் அவர் தகவல் தருகிறார். அங்கிருந்து அழகிய கடற் காட்சியைப் பார்க்கமுடியும் என்றும் அவர் கூறுகிறார். இல்லத்துக்குப் பின்புறம் சிறந்த முற்றம் இருந்ததாகவும் அங்கே இந்தியப் பழ மரங்கள் இருந்ததாகவும் தெரிகிறது.2
நூலில் உள்ள, சாவகச்சேரித் தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் காட்டும் படத்தில் தேவாலயம் ஓலைக்கூரையுடன் கூடிய ஒரு கட்டடமாகவே காணப்படுகிறது3 (படம்-3). இது, தேவாலயக் கட்டடம் உறுதியானதும் சிறப்பானதும் என்ற பாதிரியாரின் விவரிப்புடன் பொருந்தவில்லை. ஆனால், தேவாலய இல்லம் விவரிப்பில் உள்ளது போலவே நிரந்தரமான கட்டடப் பொருட்களால் ஆனதாகவும், பல பிரிவுகளாக அமைந்ததாகவும் காணப்படுகிறது. இல்லத்தின் சில பகுதிகள் இரண்டு தளங்களைக் கொண்டனவாக இருப்பதையும் படத்திற் காண முடிகிறது.

சாவகச்சேரித் தேவாலயம் போர்த்துக்கேயரின் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்கத் தேவாலயமாக அமைக்கப்பட்டது. ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையெடுத்து வந்தபோது வழியில் சாவகச்சேரித் தேவாலயத்திலேயே உணவு உட்கொண்டதாக போல்டேயஸ் பாதிரியார் கூறுகிறார்.4 பின்னாளில் அத்தேவாலயத்தைக் கையகப்படுத்திய ஒல்லாந்தர் அதைப் புரட்டஸ்தாந்த கிறித்தவ தேவாலயமாகப் பயன்படுத்தினர்.
நிலப்படம் தேவாலயமும் தேவாலய இல்லமும் கண்டிவீதி, கச்சாய் வீதிச் சந்திக்குக் கிழக்குப் பக்கத்தில் இருப்பதாகக் காட்டுகிறது. தேவாலயம் கண்டி வீதிக்குத் தெற்குப் பக்கத்திலும் தேவாலய இல்லம் கண்டி வீதிக்கு வடக்குப் பக்கத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியர் காலத்தில் இப்பகுதியில் மதப்பணி புரிந்த அமெரிக்க மிசன் நிறுவிய தேவாலயமும் பாடசாலையும் இப்பகுதியிலேயே அமைந்திருந்தாலும், அவை மேலே குறிப்பிட்ட சந்திக்கு மேற்குப் பக்கத்தில் உள்ளன.
பழைய ஒல்லாந்தத் தேவாலயம் பிரித்தானியர் காலத்தில் அமெரிக்க மிசனின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தற்போது டிறிபேர்க் கல்லூரி இருக்கும் வளவுக்குள்ளேயே இருந்துள்ளது. 1834 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசன் மதப் பணியாளர்கள் இந்தத் தேவாலயத்தைத் திருத்திப் பயன்படுத்தினர். காலப்போக்கில் தற்போதைய இடத்தில் புதிய தேவாலயம் அமைக்கப்பட்ட பின்னர், பழைய ஒல்லாந்தர்காலத் தேவாலயக் கட்டடத்தை ஆசிரியர் பயிற்சிக்காக ஒதுக்கினர். 1950 ஆம் ஆண்டில் பழைய தேவாலயக் கட்டடத்தை இடித்துவிட்டனர். அதன் கட்டடப் பொருட்களைப் பயன்படுத்தியே முன்னர் சாவகச்சேரியிலிருந்த படமாளிகை ஒன்றைக் கட்டியதாகத் தெரிகிறது.5
பழைய ஒல்லாந்தத் தேவாலயம் அமைந்திருந்த டிறிபேர்க் கல்லூரி வளவு சந்திக்கு மேற்குப் பக்கத்தில் இருப்பதால், பழைய ஒல்லாந்தர் தேவாலயமும் சந்திக்கு மேற்குப் பக்கத்திலேயே இருந்தது தெளிவாகிறது. இது நிலப்படம் காட்டும் அமைவிடத்துடன் முரண்படுகிறது. நிலப்படத்தில் தேவாலயத்தின் அமைவிடத்தைப் பிழையாகக் குறித்திருப்பதே இம்முரண்பாட்டுக்குக் காரணம் எனக் கொள்ளவேண்டும்.
யானைப்பந்தி
நிலப்படம் சாவகச்சேரிக் கோவிற்பற்றில் யானைப்பந்தி ஒன்றையும் காட்டுகிறது. இதை, மட்டுவில் துணைப்பிரிவுக்குள் அதன் தெற்கு மூலையை அண்டிக் குறித்துள்ளனர். இதன் அமைவிடத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய வகையில், தற்கால அம்சங்களுடன் அடையாளம் காணத்தக்க எதுவும் நிலப்படத்தில் இல்லாததால், யானைப்பந்தியின் துல்லியமான அமைவிடத்தைக் கண்டறிதல் கடினம். யானைப்பந்திக்கு அருகில் சில குளங்களை நிலப்படம் காட்டுகிறது. ஆனால், அவற்றின் பெயர்கள் தற்காலக் குளப் பெயர்களுடன் பொருந்தாததால் அமைவிடத்தை அறிவதற்கு அவையும் பயன்படா. அப்பகுதியின் குறிச்சிப் பெயர்கள், காணிப் பெயர்கள் முதலியவற்றை ஆராய்ந்தால் யானைப்பந்தி இருந்த இடம் தொடர்பான தகவல்கள் கிடைக்கக்கூடும்.
குளங்கள்
சாவகச்சேரிக் கோவிற்பற்றுக்குள் மொத்தம் 49 குளங்களை நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. இவற்றுள் சாவகச்சேரித் துணைப் பிரிவுக்குள் மந்துவில் குளம், கரம்பவில் குளம், கரம்பவில் துரவு, கண்டுவில், சில்லிக் குளம் எனச் சிறப்புப் பெயர்களால் குறிக்கப்பட்ட ஐந்து குளங்களும்; கேணி அல்லது குளம் எனப் பொதுப் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ள மூன்று குளங்களுமாக எட்டுக் குளங்கள் உள்ளன. மீசாலைத் துணைப் பிரிவுக்குள் சின்ன ரமால் குளம், ரமால் குளம், பட்டவல்லைக் குளம், நுணுவில் குளம், கல் குழிக் குளம், பெருங் குளம், ஆனைக்கோட்டைக் குளம், விலாவெளிக் குளம் ஆகிய எட்டுக் குளங்கள் இருக்கின்றன. மட்டுவில் துணைப் பிரிவுக்குள் மானவல்லைக் குளம், கரந்தன் கழி, செரிக் கழி, ஆவாரன் புட்டி, உறிகட்டி, முதலைக் கிராய், சின்ன முதலைக் கிராய், பள்ளன் கேணி, அட்டைக் குளம், பெரிய குளம், சத்திரன் கிராய், புதரன் கேணி, களுவன் குளம், உபிரிவில் குளம், நெருஞ்சிக் குளம், வேவில் குளம், நுணுவில் குளம், மருதங் குளம், சிலுவில் குளம், அம்பலவன் துரவு, வீரகேணிக் குளம் ஆகிய சிறப்புப் பெயர்களுடன் கூடிய 21 குளங்களைக் குறித்துள்ளனர். ஒரு குளம் மட்டும் பொதுப் பெயரால் குளம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
சரசாலைத் துணைப்பிரிவுக்குள் நிலப்படம் காட்டும் ஏழு குளங்களுள் ராமவில் குளம், வில்லுக் குளம் ஆகிய இரண்டு மட்டுமே சிறப்புப் பெயர்களைக் கொண்டவை. ஏனைய ஐந்தையும் குளம், துரவு, கேணி ஆகிய பொதுப் பெயர்களால் குறித்துக் காட்டியுள்ளனர். தனங்கிளப்புத் துணைப்பிரிவில் வண்ணான் குளம், ஆலங்குளம், சுண்டிக் குளம், மடவின் குளம் ஆகிய நான்கு குளங்களைக் காணமுடிகிறது.
லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் சாவகச்சேரிக் கோவிற்பற்றுப் பகுதிக்குள் தற்காலப் பதிவுகளின்படி 70க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.6 நிலப்படத்தில் காட்டியுள்ள 49 குளப் பெயர்களுள் ஒன்பது குளங்களின் பெயர்கள் மட்டுமே தற்காலக் குளப் பெயர்களுடன் ஒத்துவருகின்றன. இவற்றுள் மந்துவில் குளம், கண்டுவில் குளம், ஆவாரம்பிட்டிக் குளம், புதரன் கேணிக் குளம், வண்ணான் குளம் சுண்டிக் குளம் ஆகிய பெயர்கள் மாற்றமின்றி இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நிலப்படத்தில் ராமாவில் குளம் என ஒரு குளத்தைக் காட்டியிருக்க, தற்காலப் பதிவுகளில் பெரிய ராமாவில் குளம், சின்ன ராமாவில் குளம் என இரண்டு குளங்கள் காணப்படுகின்றன. நிலப்படம் இவற்றில் ஒன்றை மட்டும் குறித்திருக்கலாம். நிலப்படத்தில் தனங்கிளப்புத் துணைப் பிரிவில் ஆலங்குளம், மடவின் குளம் என இரண்டு குளப் பெயர்களுக்கு நெருக்கமாக முறையே ஆலங்கட்டையடிக் குளம், மதவில் குளம் ஆகிய இரண்டு பெயர்கள் தற்காலக் குளப் பட்டியலில் உள்ளன. முதலிரண்டு பெயர்களே பிற்காலத்தில் கடைசி இரண்டு பெயர்களாக மருவியிருக்கக்கூடும்.
மீசாலைத் துணைப் பிரிவுக்குள் நிலப்படம் காட்டும் ஆனைக்கோட்டைக் குளத்தின் பெயர்க் காரணம் ஆய்வுக்குரியது. வேறொரு துணைப் பிரிவுக்குள் இருந்தாலும், இக்குளத்திலிருந்து சற்றுத் தொலைவிலேயே மேலே குறிப்பிட்ட யானைப்பந்தி உள்ளது. இதற்கும் ஆனைக்கோட்டைக் குளம் என்னும் பெயருக்கும் இடையே ஏதாவது தொடர்பு உண்டா என்பது ஆய்வுக்குரியது. யானைப் பந்தியைப் பொது வழக்கில் ஆனைக்கோட்டை என அழைத்திருக்கக்கூடிய வாய்ப்புக் குறித்து முன்னைய கட்டுரையொன்றில் குறிப்பிட்டோம். அதற்கமைவாக, யானைப் பந்தியைச் சுற்றியுள்ள பகுதி ஒரு காலத்தில் ஆனைக்கோட்டை என அழைக்கப்பட்டு, அப்பகுதியிலுள்ள ஒரு குளத்துக்கு ஆனைக்கோட்டைக் குளம் எனப் பெயர் வழங்கியிருக்க வாய்ப்புண்டு.
குறிப்புகள்
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 299 and 330.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 330.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 337.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 299.
- “டிறிபேர்க் கல்லூரியின் வரலாறு,” சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி, பெப்ரவரி 7, 2026 அன்று பார்க்கப்பட்டது, https://driebergcollege.lk/college-history/
- தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்.



