முன்னுரை
ஈழத்து தமிழ்க் கூத்துகள் பற்றிய தேடலும் ஆய்வும் கடந்த 65 வருடங்களாக நடந்து வருகின்றன. 1960களிலே கூத்துகளின் அறிமுகமாக ஆரம்பித்த இவ்வாய்வு, 1970களிலே ஆழம் பெறத் தொடங்கியது. 1980களில் இது பல்கலைக்கழக ஆய்வுப் பொருளாக வளர்ச்சி கண்டது. அக்காலங்களிலும் பின்னரும் இது பிரதேச ஆய்வுகளாகவும் நுணுக்க ஆய்வுகளாகவும் மலர்ந்து, இப்போது அது விமர்சன ஆய்வாக வளர்ந்து செல்வதைக் காணுகிறோம்.
இந்த 65 வருட கால ஆய்விலேயே ஈழத்தில் கூத்து நிகழ்ந்த எல்லாப் பிரதேசங்களும் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டனவா என்ற வினாவை நாம் எழுப்ப வேண்டும். இன்னும் ஆய்வு செய்யப்படாத பிரதேசங்கள் உள்ளன. ஆங்காங்கே அந்தப் பிரதேசங்கள் பற்றி ஓரிரு கட்டுரைகள் வந்தாலும், ஆழமான ஆய்வுகள் சில பிரதேசங்களில் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வகையில், இந்தக் கூத்தாய்வுப் பிரதேசங்களை ஆய்வு வெளிச்சம் பாய்ச்சப்படாத பகுதிகள், ஆய்வு வெளிச்சம் பாய்ச்சப்பட்ட பகுதிகள் என இரண்டு வகையாக நாங்கள் பிரிக்கலாம்.
வெளிச்சம் பாய்ச்சப்படாத பகுதிகள்
ஈழத்துக் கூத்து ஆய்வில் வெளிச்சம் பாய்ச்சப்படாத பகுதிகளும் உண்டு. அந்தப் பகுதிகளில் ஒன்று ஈழத்தின் வடமேற்குப் பகுதி. இங்குதான் மன்னார், மாதோட்டம், உடப்பு, முந்தல், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய கரையோரப் பகுதியை அண்டிய முக்கிய ஊர்கள் இருக்கின்றன. இதனை நாம் வடமேற்கு எனலாம். இங்கெல்லாம் தமிழர் வாழ்ந்தனர்; இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மன்னார் தவிர்ந்த வடமேற்குக் கூத்து மரபு பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. மன்னார்க் கூத்து மரபு தனியாக எழுதப்பட வேண்டியது; அது வெளிச்சம் பாய்ச்சப்பட்ட பகுதி.
வெளிச்சம் பாய்ச்சப்பட்ட பகுதிகள்
ஈழத்துக் கூத்து மரபு பற்றிய தேடல்களிலும் ஆராய்ச்சிகளிலும் 1960களில் பிரதானப்படுத்தப்பட்டது கிழக்கு மாகாணமாகும். அதிலும் முக்கியமாக மட்டக்களப்புக் கூத்து மரபே ஆகும். அன்றைய கலைக்கழகம் அதில் அதிக அக்கறை செலுத்தியது. பேராசிரியர் வித்தியானந்தனும் சிவத்தம்பியும் அந்தப் பிரதேசத்துக் கூத்துகளைத் தேட ஆரம்பித்தார்கள். உள்ளூர் அறிஞர்களான வி.சீ. கந்தையா போன்றோரும் அது பற்றி எழுதினர். அது இன்று பெரியதோர் ஆய்வுப் பரப்பாக பரந்து விரிந்து வளர்ந்து இருக்கிறது.
அடுத்து அதிகம் கவனம் செலுத்தப்பட்ட இடம் யாழ்ப்பாணப் பிரதேசமும் அதன் கூத்து மரபுமாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின், யாழ்ப்பாணக் கூத்து மரபில் புலமைத்துவப் பார்வை திரும்பியது. ஏற்கனவே அங்கு கூத்துகள் ஆடப்பட்டிருந்தும், அது பற்றி நூல்கள் வந்திருந்தும், அதுவரை அது புலமைத்துவ ரீதியில் அணுகப்படவில்லை.
அதற்குப் பின்னால் மன்னார்க் கூத்து மரபு பற்றிய ஆய்வுகளும் நூல்களும் வரத் தொடங்கின. 1970களின் பிற்பகுதியில் வன்னி மாவட்டக் கலை விழா ஒன்று புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. அதையும் கலைக்கழகமே நடத்தியது. அதிலே வன்னி மரபு நோக்கி ஆய்வுப் பார்வைகள் திரும்பின. கோவலன் கூத்து அங்கு ஆய்வுப் பொருளாக மேற்கிளம்பியது.
மன்னார்க் கூத்து மரபு ஒரு வித்தியாசமான மரபாகும். கத்தோலிக்க மரபுக் கூத்தாக ஈழத் தமிழ்க் கூத்து மரபு அங்கு கிளைவிட்டது. அது பற்றிய ஆய்வுகள் பின்னால் எழுந்ததுடன், இன்று அதுவும் ஒரு கவனிப்புக்குரிய ஈழத் தமிழ்க் கூத்து மரபாக மேல் எழுந்து நிற்கிறது.
அதன் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகமும் கிழக்குப் பல்கலைக்கழகமும் மலையகக் கூத்துகளில் ஆய்வுகள் செய்யுமாறு மாணவரை வழிப்படுத்தின. அதன் விளைவாக மலையகக் கூத்துகள் பற்றிப் பல ஆய்வு நூல்கள் வந்தன. மலையகக் கூத்து மரபு பற்றிப் பல்கலைக்கழகம் சாராதோர் எழுதிய சிறந்த ஆய்வு நூல்களும் வந்திருக்கின்றன.
வடக்கு, மன்னார், வன்னி, கிழக்கு, மலையகம் பற்றிய மரபு வழி நாடகங்கள் ஆராயப்பட்ட அளவுக்கு இன்னொரு பிரதேசம் பற்றி ஆராய்வார்களின் கவனம் செல்லவில்லை. அந்தப் பிரதேசம் தான் தமிழர்கள் பண்டைய காலத்தில் பரவி வாழ்ந்த வடமேற்குப் பிரதேசம் ஆகும். அதனைப் பற்றிச் சிறிது அறிவோம்.
வடமேற்குப் பிரதேசம்
இந்த வடமேற்குப் பிரதேசத்திலே போர்த்துக்கேயரும் அவர்கள் கொணர்ந்த கத்தோலிக்க மதமும் வர முன்னரே இந்து–சைவக் கோவில்கள் இருந்திருக்கின்றன. அதன் எச்சங்களை இன்று காண்கிறோம். செழுமையான ஆற்றுகை மரபுகளும் கூத்து மரபுகளும் இந்து சைவக் கோவில்களோடு ஒட்டியனவாக அங்கு இருந்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன. முக்கியமாகச் சிலாபத்தில் ஆடப்பட்ட சில கூத்து நூல்கள் பதிப்பிக்கப்பட்டும் உள்ளன. இங்கு நாம் அந்த வடமேற்குத் தமிழரின் கூத்து மரபை, அதிலும் போர்த்துக்கேயரும் அவர்களின் அரச மதமான கத்தோலிக்க மதமும் அங்கு வருவதற்கு முன்னர் இருந்த கூத்து மரபைப் பற்றிப் புரிந்துகொள்ள முயல்வோம்.
போர்த்துக்கேயர் வருகையின் முன்னர் மன்னாரிலும் இதே நிலைமைதான் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அங்கு இந்து மதம்சார் கூத்துகள் ஆடப்பட்டன. ஆனால் அவை பற்றிய செவிவழிச் செய்திகள் கிடைக்கின்றனவே ஒழிய ஆதாரபூர்வமான சான்றுகள் கிடைப்பது குறைவாகவே உள்ளது. இங்கு நாம் வடமேற்குப் பகுதியில், மன்னார் தவிர ஏனைய பகுதிகளில் வாழ்ந்த தமிழர் மத்தியிலிருந்து வழக்கொழிந்து போன ஒரு கூத்து மரபைப் பற்றி பார்ப்போம்.
போர்த்துக்கேயர் வருகையின் முன்னர் ஈழத்தின் வடமேற்குப் பிரதேசம்: மன்னார் – நீர்கொழும்புக் கடலோரத் தமிழர் வரலாறு மற்றும் கலாசாரம்
இலங்கையின் வடமேற்குக் கடலோரம் மன்னாரிலிருந்து நீர்கொழும்பு வரை நீளமாகப் பரவும் பகுதியாகும். இப்பகுதி பண்டைய காலத்திலிருந்தே தமிழ் மீனவர் சமூகம் வாழ்ந்த திராவிடக் கடலோரப் பகுதியாகும். இந்தப் பகுதிகளில் தமிழர்கள் மீன்பிடி, சிறு விவசாயம் மற்றும் கடல்சார் வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். மன்னார், உடப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய நகரங்கள் கடற்கரைக் கிராமங்கள் என்றழைக்கப்படுவதற்குக் காரணம், இங்கே வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் கடலோடு நெருங்கிய வாழ்வை கொண்டிருந்தமையினாலாகும்.

பண்டைய காலத்தில் தமிழர்கள் இந்து மதத்தைப் பின்பற்றினர். சிறிய கிராமங்களில் சிவன், முருகன், காளி போன்ற தெய்வங்களின் தலங்கள் இருந்தன. உடப்பு திரௌபதி அம்மன் கோவில், சிலாபம் முன்னேஸ்வரம் கோவில் போன்ற ஆலயங்கள் அந்தக் காலத்தின் முக்கிய மதச்சின்னங்களாக இருந்தன. கோவில்கள் மட்டும் அல்ல; அதோடு கூடிய கூத்து, நாட்டுப்புற நாடகங்கள், ஊர்வலம், ஆடல்–பாடல், தீமிதிப்பு போன்ற பக்தி–கலாசார நிகழ்வுகள் தமிழர் சமூகத்தின் முக்கிய மரபுகளாக வளர்ந்தன. இவை கிராம மக்கள் வாழ்க்கையைச் சித்திரித்தன; தலைமுறை தலைமுறைக்குப் பாரம்பரியமாகக் கற்றும் கொடுக்கப்பட்டன.

16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் வருகை முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கத்தோலிக்க மதத்தை அறிமுகப்படுத்தினர். இதனால் மன்னாரிலும் நீர்கொழும்பிலும் சில தமிழர்கள் இந்து மதத்துடன் கிறிஸ்தவ மதத்தையும் இணைத்தனர். சில இடங்களில் ஆலயங்கள் கிறிஸ்தவத்துடன் இணைந்தவையாகவும், சில சமூகங்கள் கிறிஸ்தவர்களாகவும் மாறின. இதற்குக் காரணம் பலவாகும்: போர்த்துக்கேயரின் ஆட்சியின் அழுத்தம், வர்த்தக நலன் பெற விரும்பும் சமூகங்கள் மற்றும் அரசியல் பாதுகாப்புத் தேவை ஆகியவை.
டச்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், கிராமங்கள், நெடுங்கடலோடு தொடர்பு கொண்ட மீனவர் சமூகங்கள், சிறிய துறைமுகங்கள் மற்றும் கடற்கரை நகரங்கள் அமைதியாக இருந்தாலும், அவற்றின் மக்கள் தொகையில் மாறுதல் ஏற்பட்டது. சில தமிழர்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர்; சிலர் மக்கள் தொகை குறைந்த சமூகங்களில் மீண்டும் வாழ்ந்து வந்தனர். அதே நேரத்தில் சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்தமையினால், அச்சமூக அமைப்பில் பன்முகத் தன்மை உண்டானது.
நீர்கொழும்பு – சிலாபம் – உடப்பு – மன்னார்க் கடலோரப் பாதையில் தமிழர் சமூகத்தின் கலை மற்றும் மரபுகள் மெல்ல மெல்ல மாறினாலும், சில நிலையான அம்சங்கள் தொடர்ந்து இருந்தன. மீன்பிடித் தொழில், கோவில் வழிபாடு, ஊர்வலம், கூத்து மரபுகள், நாட்டுப்புற இசை ஆகியவை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து பரவிச் சென்றன. இவை சமூக ஒற்றுமையை, பண்பாட்டுத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தின. சுருக்கமாகச் சொன்னால், மன்னார் முதல் நீர்கொழும்பு வரையான தமிழர் சமூகத்தின் வரலாற்றை ஒரு ‘கடலோரத் தமிழர் பண்பாட்டு பாதை’யின் வரலாறு எனக் கூறலாம். ஆரம்பத்தில் இந்து மதமும் தமிழ் மொழியும் பிரதானமாக இருந்தன; போர்த்துக்கேயர் வருகையுடன் கிறிஸ்தவ மதம் அறிமுகமானது. பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் வர்த்தகக் காரணங்கள் சமூக அமைப்பிலும் கலாசார மரபிலும் மெல்ல மெல்ல மாற்றங்களை ஏற்படுத்தின. ஆனால் தமிழ் மொழி, மீன்வளம், கோவில் வழிபாடு மற்றும் கூத்து/ கலை மரபுகள் நிலைத்திருந்து, அந்தப் பகுதியின் கலாசாரச் சிறப்பைப் பேணின. இலங்கையின் வடமேற்குப் பகுதியில் முக்கியமாக இரண்டு பகுதிகளில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிலாபத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் பலர் இப்போது சிங்கள மக்களாகிவிட்டனர். இது சரியா பிழையா என நான் வாதிக்க வரவில்லை; ஆனால் வரலாறு இப்படிச் சமூக அமைப்புகளை மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த வடமேற்குப் பகுதி இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதியாகும். காரணம், தமிழ்நாட்டில் இருந்து அந்தப் பகுதிக் கூடாகத்தான் இலங்கைக்குள் ஆரம்ப காலத்தில் பலர் வந்திருக்கிறார்கள். பொம்பரிப்பு தொடக்கம் பாலாவி வரை அந்த வருகை நடந்திருக்கிறது. அந்த வருகையும், இருந்த சமூகமும் சேர்ந்து ஒரு புதிய சமூகம்—தமிழ்ச் சமூகம்—வடமேற்குப் பகுதியில் உருவாகி இருக்கிறது போலத் தெரிகிறது.
திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகிய இரண்டு சிவ ஈச்சுரங்களும் இந்தப் பகுதியில்தான் இருக்கின்றன. இரண்டும் வரலாற்றுப் பெருமை மிக்கவை. இந்த இரண்டு இடங்களையும் சுற்றி ஒரு பண்பாடும் கூத்து மரபும் வளர்ந்து வந்திருக்கின்றது என்பதைக் காட்டுவதற்கு எங்களுக்குக் கிடைக்கின்ற மிக முக்கியமான ஆதாரம் சிலாபத்தில் கண்டெடுக்கப்பட்டு பேராசிரியர் சிவத்தம்பியால் பதிப்பிக்கப்பட்ட ‘மார்க்கண்டேய நாடகம்’, ‘வாளபிமன் நாடகம்’ எனும் இரண்டு கூத்து நூல்களாகும்.
உடப்பில் அமைந்துள்ள திரௌபதை அம்மன் கோவில் மிக முக்கியமான கோயிலாகும். அங்கு நடைபெறும் ‘செவ்வாட்டு’ எனும் ஒரு சடங்கும் ‘கும்மியும்’ முக்கியமான சடங்குகளாகும். நவீனத்தின் வருகை அதன் பாரம்பரியத்தை இன்னும் அழித்துவிடவில்லை என்பதற்கு அது ஓர் உதாரணமாகும். அந்தக் கோயிலை மையமாக வைத்து ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் சடங்குகளில் வீடுகள் தோறும், ஊர்கள் தோறும் வைக்கப்படுகின்ற படையல்களும் கும்பங்களும் மிக முக்கியமானதாகும். சிலாபத்திலும் மன்னாரிலும் ஆரம்பத்தில் ஓர் இந்து மதம் சார்ந்த பண்பாட்டு முறை, வழிபாட்டு முறை வேரூன்றி இருந்தமைக்குச் சான்றாக சில கூத்து நூல்களும் எங்களுக்குக் கிடைக்கின்றன.
ஆனால் 1590ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துக்கேயர்கள் மன்னாரைக் கைப்பற்றிய பின் இந்த நிலைமை மாறுகிறது. அது வெறும் மாற்றம் அல்ல; ஒரு பண்பாட்டு மாற்றமாகவும் அமைந்துவிடுவதனைக் காணுகின்றோம். இந்தப் பண்பாட்டு மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்த மதம் கத்தோலிக்க மதமாகும்.
சிலாபம் – மன்னார்ப் பகுதிகள் முத்துக் குளித்தலுக்குப் பேர் பெற்ற இடங்களாகும். கண்ணகி வழக்குரையிலே கண்ணகியின் காற்சிலம்புக்கு முத்துக்கள் தேடி அந்தப் பகுதிக்கு பணியாளர்கள் வந்ததாக கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு. சிலாபம் பகுதிகளில் முன்னாளில் ஓர் அரசு இருந்திருக்கின்றது; அந்த அரசின் தலைமை ஸ்தானம் முக்குவரிடம் இருந்தது என்றும் அறிகிறோம். வெடியரசன் கதை, கண்ணகி வழக்குரைக் கதை என்பன இதைச் சாடமாடையாகச் சொல்லுகின்றன. மீன்பிடி, முத்துக்குளிப்பு, விவசாயம் போன்ற மூன்றும் இணைந்த பொருளாதார வளம் மிக்க இந்தப் பிரதேசம், கடலை மையமாகக் கொண்டு பாடுபடுவர்களையும் வயலை மையமாகக் கொண்டு வாழ்பவர்களையும் கொண்ட மக்களைக் கொண்டது. இந்த அமைப்பிலே சமூகப் பிரிவினைகளும் காணப்படுகின்றன. இந்தப் பின்னணியிலே தான் நாங்கள் மன்னார்க் கூத்துகளைப் பற்றியும், முக்கியமாக வடமேற்குக் கூத்துகளைப் பற்றியும் பார்க்க வேண்டும்.
இப்படிப் பார்க்கின்ற பொழுது, இந்து மதத்தில் இருந்து வந்த கூத்து மரபு, கத்தோலிக்கக் கூத்து மரபாக மாறி, இன்னொரு கூத்து மரபு தோன்றிய காட்சி எங்களுக்குள் விரிகிறது. அந்தப் பிரதேசங்களில் காணப்பட்ட பொருள்வளம், தொழில், சமூக அமைப்பு என்பன இந்தப் பிரதேசங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் இருந்த உறவுகளையும், கடற்கரை சார்ந்த கிராமங்களையும் நகரங்களையும் நினைவூட்டுகின்றன. இந்தப் பின்னணியில் அங்கு மேற்கிளம்பிய இந்து–சைவ மதம் சார்ந்த கோயில்கள் இந்தப் பகுதியின் பண்பாட்டு உருவாக்கலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிலாபம் முன்னேஸ்வரம் கோயில், திருக்கேதீஸ்வரன் சிவன் கோயில், உடப்பு திரௌபதி அம்மன் கோயில் மற்றும் சிறிய சிறிய ஊர்க்கோவில்கள் என்பன இந்தப் பண்பாட்டு உருவாக்கலில் முக்கிய இடம் பெறுகின்றன.
இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பெரும் நாடகங்கள் மார்க்கண்டேயன், வாளபிமன் என்பனவாகும். அந்த இரண்டு நாடகங்களும் 1967 ஆம் ஆண்டு அச்சில் வந்துள்ளன. அவற்றைப் பதிப்பித்தவர் பேராசிரியர் சிவத்தம்பி ஆவார். இந்த இரண்டு நாடகங்களும் வடமோடி நாடகங்கள். இந்த ஏடுகளைச் சிவத்தம்பிக்குக் கொடுத்தவர் மருத்துவப் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள். இந்தப் பதிப்பு நூலுக்கு பேரா. வித்தியானந்தன் ஒரு முன்னுரையும், சிவத்தம்பி ஒரு பதிப்புரையும் எழுதியுள்ளார்கள். வித்தியானந்தன் தன் முன்னுரையில், சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலில் இராப்பூசையின் பின் இந்த நாடகம் விடிய விடிய நடைபெற்ற செய்தியைக் கூறுகிறார். சிலாபத்திலே ஒரு வடமோடிக் கூத்து மரபு இருந்திருக்கிறது என்ற செய்தி இன்றைய தலைமுறைக்குப் பெருவியப்பளிக்கும் செய்தியாகும்.
அத்தோடு அப்பகுதியில் ஆடப்பட்ட இன்னொரு வடமோடி நாடகம் வாளாபிமன் நாடகம் ஆகும். இந்த இரண்டு நாடகங்கள் பற்றிய அறிமுகம் அந்த இரண்டு நாடகப் பிரதிகளையும் மையமாக வைத்து இங்கே தரப்படுகிறது. அங்கு முன்னர் ஆடப்பட்ட கூத்துகள், அந்த மரபு மற்றும் அதன் தேவைப்பாடு என்பனவற்றை அறிய இது உதவும்.
மார்க்கண்டேயன் வடமோடி நாடகம்: பிரதியில் உள்ளபடி
ஆரம்பத்தில் கட்டியக்காரன் தோன்றுகிறான். குசல ராஜாவின் மகன் மிருகண்ட மகரிஷி கொலுவுக்கு வருவதைக் கூறிச் செல்கிறான். அவர் வருகிறார். பின்னர் தனது மனைவி மருத்தூதியை அழைக்கிறார். அதன் பின்னர் கன்னிமார் தோன்றுகிறார்கள். மருத்தூதி கன்னிமாரை விருந்துக்கு அழைக்கிறாள். விருந்துக்கு வந்த கன்னிமார் அவர்கள் வீட்டில் பிள்ளை இல்லாதபடியால் சாப்பிட முடியாது என்று கூறிச் செல்கிறார்கள். பிள்ளை இல்லை என்று மருத்தூதி அழுகிறாள். சிவபெருமானை நினைத்து அழுகிறாள். மிருகண்டர் இது கண்டு துயரம் அடைகிறார். இருவரும் பிள்ளை வரம் கேட்டுச் சிவனைத் தேடி செல்கிறார்கள். சிவன் ரிஷப வாகனத்தில் வருகிறார். மிருகண்ட ரிஷியும் மனைவியும் தம் குறையை கூறுகிறார்கள். 16 வயது ஆயுளுடைய ஒரு அறிவாளி மகனை அளிப்பதாக சிவன் கூறுகிறார். சோழ மகாராஜாவின் மகனான வீதிவிடங்கனை சிவன் அழைத்து அவர்களுக்கு மகனாகப் பிறக்கச் சொல்லுகிறார். “16 வயதில் உயிர் எடுக்க எமன் வருவானே?” என்று அவன் சிவனைக் கேட்க, “நான் வந்து உன்னைக் காப்பாற்றுவேன்; என்றென்றும் 16 வயது உனக்கு இருக்கும்” என்று சிவன் கூறுகிறார்.
மருத்தூதி கர்ப்பமடைகிறாள். மார்க்கண்டேயன் பிறக்கிறான். மார்க்கண்டேயன் கல்வி கற்கும் வயதை அடைந்ததும் உபாத்தியாயரை அழைத்துக் கல்வி கற்பிக்கிறார்கள். மார்பினில் பூணூல் பூண்ட ஒரு பிராமண வாத்தியார் வருகிறார். அதுவும் போதாமல் நான்முகனையும் அழைத்துச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய எல்லாவற்றையும் கற்பிக்கிறார்கள். கற்பித்தலின் போது சிவன், ஐந்து எழுத்து, சூலம் எல்லாம் விளங்கப்படுத்திச் சிவஞானம் போதிக்கிறார்கள், குருமார். மார்க்கண்டேயன் வளர்ந்ததும் தவம் செய்யத் தாயிடம் விடை கேட்கின்றான். “16 வயது வந்தால் எமன் வருவான்” என்று தாய் எச்சரிக்கிறாள். “சிவனை நோக்கிச் செய்யும் தவம் என்னைக் காக்கும்” என்று கூறி அவன் தவம் செய்யச் செல்கிறான். சதுர்முகனார் உபதேசம் செய்த பின்பு சிவசங்கரனைப் பூஜை செய்ய மார்க்கண்டேயன் விதிமுறையாய் நதியினிலே ஸ்நானம் பண்ணி, விநாயகனை ‘நாயகனே’ என்று நமஸ்கரித்து பூஜை செய்யப் புறப்படுகிறான். இந்தக் காட்சி இந்தக் கூத்திலே மிக மிக நீண்ட நேரம் வருகிறது. சிவனைத் துதிக்கின்ற பாடல்கள் அதிலே மிக அதிகம் வருகின்றன.
“நஞ்சை அமிர்தமாக உண்டவா
திருவயிற்றில் நம சிவாய பரமையான குருவே
எங்கும் நீர்நாடி வாழும் வங்கிர மகேஸ்வரா
சிவ சம்போ சிவா
காலன் வராமல் பூஜை செய்கிறேன்
அருள் பெருகி உன் காட்சி கொடுத்து தாக்கி
வாராமல் காப்பாற்றும்” என வேண்டுகிறார்.
இந்தக் கட்டம் இந்தக் கூத்தில் மிக அதிக நேரத்தை எடுக்கிறது. ஒரு வகையில் சைவம், சிவன் பற்றிய பிரசாரம் அல்லது போதனையாகவே இது காணப்படுகிறது.
சிவன் தோன்றுகிறார். “காலனுக்குப் பயப்பட வேண்டாம்; நம்முடைய காலடியில் இருந்து பூஜை செய்யும்” என்று கூறிச் செல்கிறார். அதன் பின் எமதர்மராஜன் வருகிறார். சித்திரபுத்திரனாரை அழைத்துக் கணக்குக் கேட்கின்றார். “மார்க்கண்டேயருக்கு 16 வயதாகிவிட்டது; அவன் கணக்கு முடிந்துவிட்டது” என்று சித்திரபுத்திரனார் கூறுகிறார். செங்கண்மாள் பூதம், செந்தணல் பூதம் என்ற இரண்டு பூதங்களை மார்க்கண்டேயன் உயிரைக் கவர எமன் அனுப்புகிறார். பூதங்கள் மார்க்கண்டேயனைத் தம்முடன் வரும்படி அழைக்கின்றன. மார்க்கண்டேயன் செல்ல மறுக்கிறான். மேலும் மேலும் சிவனை வணங்குகிறான். அவனது உயிரை வாங்கப் பூதங்களால் முடியவில்லை. எமனிடம் சென்று பூதங்கள் தங்கள் இயலாமையைக் கூறுகின்றன. அவர்களைப் விட பெரிதான இன்னும் இரண்டு பூதங்களை எமன் அனுப்பி வைக்கிறார். அவர்களாலும் மார்க்கண்டேயன் உயிரைப் பறிக்க முடியவில்லை. சிவபக்தி அவனைக் காக்கிறது. அப்பூதங்கள் இரண்டும் எமனிடம் சென்று தங்கள் இயலாமையைக் கூறுகின்றன. எல்லாப் பூதங்களையும் அழைத்துக் கொண்டு அட்டகாசமாக மார்க்கண்டேயன் உயிரை வாங்க எமன் செல்கின்றான்.
தன்னைக் காப்பாற்ற வேண்டி சிவனிடம் மார்க்கண்டேயன் முறையிடுகின்றான். சிவன் பயப்பட வேண்டாம் என்று அவருக்கு தைரியம் கூறுகிறார். மீண்டும் எமன் வருகிறார். எமனுக்கும் மார்க்கண்டேயனுக்கும் இடையில் கடுமையான வாதங்கள் நடைபெறுகின்றன. வடமோடிக் கூத்தின் இறுதி எப்போதும் ஒரு சண்டையில் முடியும். அந்தச் சண்டை போல இங்கே எமனுக்கும் மார்க்கண்டேயனுக்கும் இடையில் ஓர் இறுதிச் சண்டை நடைபெறுகிறது. எமன் பாசக்கயிற்றை வீச, தன்னைக் காப்பாற்றும்படி சிவனிடம் மார்க்கண்டேயன் முறையிடுகிறான். “பயப்பட வேண்டாம்; நீ தொடர்ந்து பூஜை செய்” என்று சிவன் மார்க்கண்டேயனுக்கு நம்பிக்கை அளிக்கிறார். எமனும் மார்க்கண்டேயனும் மீண்டும் தர்க்கம் புரிகிறார்கள். மிக நீண்ட தர்க்கம் அது. அதிலே சிவனின் சிறப்புகள் வரிசையாகக் கூறப்படுகின்றன. இறுதியில் எமன் வலிமையான பாசக்கயிற்றை வீசுகிறார். சிவன் தோன்றி எமனை உதைக்கிறார். இந்தக் காட்சியைக் காண விஷ்ணு வருகின்றார்; பூமாதேவியும் வருகின்றாள். எமன் சிவனுடைய உதையினால் பாதாளம் சென்றுவிடுகிறார். இறப்புகள் நடைபெறவில்லையே; பூமி பாரமாகிவிட்டது என்று பூமாதேவி வருந்துகிறாள். சிவனிடம் சென்று அவர்கள் இதுபற்றி முறையிடுகிறார்கள். சிவன் எமனை உயிர் கொடுத்து மீண்டும் பழைய தொழிலுக்கு அனுப்புகிறார். சிவன் எமனுக்குப் பல புத்திமதிகள் கூறுகிறார்.
“ஐந்து எழுத்தை மறக்காதே
சிவனை வணங்குவோரின்
மீது பாசக் கயிறு வீசாதே
கோயில்தோறும் பூஜை செய்பவரை
திருவிளக்கேத்தி வைப்போரை
இராமா என்று பணிபுரிவோரை
பாசக் கயிறால் கலங்கப் பண்ணாதே”
என்று புதிய விதிகள் கூறி சிவன் அவரை அனுப்பி வைக்கிறார். எமன் அதை ஏற்றுக்கொண்டு செல்கிறார்.
விதியையும் சிவன் வெல்லுவார் என்பதை மிகவும் அழுத்திக் கூறும் நாடகம் இது. சிவனுடைய புகழையும், அவரை வணங்குவோர் எமனால் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தியையும் கூறுகின்ற இந்த நாடகம் மிகுந்த நாடகத் தன்மை கொண்டுள்ளது.
மார்க்கண்டேய புராணத்தில் வரும் ஒரு கதை எடுக்கப்பட்டுக் கூத்து வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டியக்காரன், பாத்திரங்களின் வரவு, உச்சக் காட்சியான எமன் பாசக் கயிறு வீசும் காட்சி நோக்கிச் செல்லுதல், எமன் அணி அணியாக மார்க்கண்டேயனின் உயிரைக் கவர பூதங்களை அனுப்புதல் ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன. வடமோடி நாடகக் கட்டமைப்பைப் பின்பற்றி எமனுக்கும் மார்க்கண்டேயனுக்கும் இடையே நடைபெறும் சண்டையில் உச்சம் பெறும் ஒரு முடிவை இது காண்கிறது. இந்த நாடகம் சிலாபம் முன்னேஸ்வரம் கோயிலில் இராக்காலங்களில் விடிய விடிய அரங்கேற்றப்பட்டது என அறிகிறோம். சில வேளைகளில் இது திருக்கேதீஸ்வரத்திலும் அரங்கேற்றப்பட்டிருக்கலாம்.
சமய அரசியல்
பழைய காலங்களில் சமயங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. ஒவ்வொரு சமயமும் தமது இறைவனை உயர்த்திப் பேச முயன்றது. அந்தச் சூழலில் சைவ சமயம் தனது கருத்துகளை மக்களிடம் பரப்ப பல வழிகளைப் பயன்படுத்தியது. அவற்றில் ஒன்று கூத்து.
மார்க்கண்டேயன் கூத்தில் சிவன் மிக உயர்ந்த இறைவனாகக் காட்டப்படுகிறார். யமன் போன்ற தெய்வங்களும் அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் காட்டப்படுகின்றனர். இதன் மூலம் சைவ சமயத்தின் உயர்வு வலியுறுத்தப்படுகிறது. பக்தி மற்றும் சமூக ஒழுக்கம் என்பன இங்கு இடம் பெறுகின்றன. இந்தக் கூத்து மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை வழங்குகிறது: இறைவனை நம்ப வேண்டும்; நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்; தர்மத்தைப் பின்பற்ற வேண்டும். இவை மனித வாழ்க்கையின் முக்கியமான நெறிகள். கூத்து இந்த நெறிகளை மக்களிடம் நினைவூட்டுகிறது.
கிராமியச் சமூகத்தில் கூத்தின் பங்கு
கிராமியச் சமூகத்தில் கூத்து ஒரு முக்கியமான கலாசார நிகழ்வாக இருந்தது. மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி அதை அனுபவித்தனர். அது மக்களுக்கு மகிழ்ச்சியையும் அறிவையும் வழங்கியது. புராணக் கதைகள் இதன் மூலம் தலைமுறை தலைமுறையாகப் பரவின. அதனால் கூத்து ஒரு பண்பாட்டு நினைவகம் போலச் செயற்பட்டது.
சிவபெருமானின் மைய நிலை இங்கு முக்கியமானது. மார்க்கண்டேயன் கூத்தில் சிவன் ஒரு சாதாரணத் தெய்வமாகக் காட்டப்படுவதில்லை; அவர் பரம இறைவனாகக் காட்டப்படுகிறார். அவரது அருள் எல்லாவற்றையும் மீறும். அவரது பக்தன் பாதுகாக்கப்படுவான். இந்தக் கருத்து கூத்தின் முழு அமைப்பிலும் வெளிப்படுகிறது.
மார்க்கண்டேயன் கூத்து ஒரு புராணக் கதையை மட்டும் சொல்லும் நாடகம் அல்ல; அது சமயச் செய்தியையும் சமூகச் சிந்தனையையும் கொண்ட கலாசார வெளிப்பாடாகும். இதில் சிவபக்தி உயர்த்திப் பேசப்படுகிறது. பக்தியின் சக்தி வலியுறுத்தப்படுகிறது. இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் வாழ்க்கை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாக்கப்படுகிறது. இதனால் மார்க்கண்டேயன் கூத்து தமிழ்ச் சமூகத்தில் ஒரு முக்கியமான சமய–கலாசார நாடகமாக விளங்கியது.
வாளபிமன் வடமோடி நாடகம்: பிரதியில் உள்ளபடி
சிலாபத்தில் ஆடப்பட்ட இன்னொரு நாடகம் வாளபிமன் நாடகமாகும். இந்த நாடகம் மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதை; ஒருவகையில் பஞ்சபாண்டவர்களின் பிள்ளைகளின் சாகசக் கதை.
சுந்தரி கிருஷ்ணருக்கு மகள் முறை ஆனவள்; அண்ணன் பலராமரின் மகள். கிருஷ்ணரின் வருகையின் பின்னால் அவள் தோன்றுகிறாள். அவர் அவளை ஆசீர்வதித்துச் செல்கிறார். அதன் பின் அர்ஜுனன் தோன்றுகிறார். அர்ஜுனனின் மனைவி சுபத்திரை கிருஷ்ணரின் தங்கை. அவர்களின் மகன் அபிமன்யு. கிருஷ்ணர் சமூகம் சென்று அவர்கள் தன்னுடைய மகனுக்கு கல்யாணம் பேசுகிறார்கள். அபிமன்யுவுக்கும் சுந்தரிக்கும் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்கிறார்கள்.
அடுத்து துரியோதனன் கொலுவுக்கு வருகிறான். சூதில் தோற்றதனால், எல்லாச் செல்வத்தையும் அள்ளிக்கொண்டு, பஞ்சபாண்டவரை அவன் வனத்துக்கு அனுப்புகிறான். அர்ஜுனன் மனைவி சுபத்திரை தான் தனியே இருக்கப் போவதாகச் சொல்லிக் கவலைப்படுகிறாள். அவன், மகன் வாளபிமன் வனவாசம் போகத் தேவையில்லை என்று கூறுகிறான். சுபத்திரையையும் அபிமன்யுவையும் விட்டுவிட்டு அவர்கள் வனவாசம் போகிறார்கள்.
துரியோதனன் மனைவி, தன் கணவனிடம் தங்கள் மகனுக்கு ஒரு பெண் பார்க்கக் கூறுகிறாள். சுந்தரியைத் திருமணம் பண்ணலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது. திருமணம் நிச்சயமாகிறது. கிருஷ்ணரின் ஆலோசனையை சுந்தரியின் தந்தையார் பலராமர் கேட்கவில்லை. கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. சுந்தரி தனது காதலனான வாளபிமனை நினைத்துத் துயரமடைகிறாள். தோழியின் ஆலோசனைப்படி தன் நிலை உரைத்து வாளபிமனுக்குக் கடிதம் அனுப்புகிறாள்.
வாளபிமன் சுந்தரியைத் திருமணம் செய்ய தனியே புறப்படுகிறான். வரும் வழியிலேயே பீமனின் மகனான கடோற்கசனையும், அர்ஜுனன் மகனான அரவானையும், நகுலன் மகனான தொந்திச் செட்டியையும் சந்திக்கிறான். ஆரம்பத்தில் அவர்களோடு போர் புரிந்து, பின்னர் சகோதரர் என இனம் கண்டு சமாதானமாகி, அனைவரையும் கூட்டிக்கொண்டு சுந்தரியின் மாளிகைக்கு வருகிறான். அங்கு வந்து சுந்தரிக்கு ஒரு பூமாலை கட்டும் கிழவி மூலம் செய்தி அனுப்புகிறான். தயிர் கொண்டுவரும் இடையர்களோடு சேர்ந்து இவர்களும் திருமணத்துக்குள் நுழைகிறார்கள். அங்கு பல குழப்படிகள் செய்கிறார்கள். துரியோதனன் பகுதியாரோடு சண்டை செய்து வெல்கிறார்கள். பின்னர் சுந்தரிக்கும் வாளபிமனுக்கும் திருமணம் நடைபெறுகிறது.
சிலாபத்தில் முன்னொரு காலத்தில் ஆடப்பட்டு, இப்போது அந்த வழமை அழிந்து போன மார்க்கண்டேயன் நாடகத்தையும் வாளபிமன் நாடகத்தையும் ஒப்பிட்டு ஆராய்வது பல விடயங்களை அறிந்து கொள்ள உதவும். அதற்கு இது சமயம் அல்ல. எனினும், மார்க்கண்டேய நாடகத்தில் வாளபிமன் நாடகத்தை விட சைவ சமயப் பிரசாரம் மிக அதிகமாக இருக்கிறது.
வாளபிமன் நாடகத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகமாக இருக்கின்றன. இவை இரண்டும் வடமேற்கு இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே இருந்த ஆகமம் சார்ந்த கோவில்களில் நடைபெற்ற கூத்துகளாகும். இதனை விட ஆகமம் சாரா உள்ளூர் வழிபாட்டுக் கோவில்களில் வைஷ்ணவக் கடவுளான திருமாலும், ஏனைய சிறு கோவில்களில் திரௌபதி, மாரியம்மன், காளியம்மன் முதலான பெண் தெய்வ வழிபாடுகளும் கிராமிய முறையில், நாட்டார் முறையில் அன்று வழக்கிலிருந்தன; இன்றும் உள்ளன. அவற்றை அடுத்து நோக்குவோம்.
தொடரும்.



