இன்றைய இருப்பின் மீதான கடந்தகாலத் தாக்கம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

இன்றைய இருப்பின் மீதான கடந்தகாலத் தாக்கம்

September 22, 2025 | Ezhuna

இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை மேற்கொள்கின்றன; இதன்வழியாக, கடந்தகாலச் சமூக சக்திகள் வழிவகுத்துவிட்டிருந்த இயங்குமுறை அமைந்த அடித்தளங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. இதேபோன்ற பின்னணிக்குரிய ஏனைய சமூகங்களில் இயங்கிய ஆளுமைகளுடன் எமது இயங்கு தளத்துக்குரிய ஆளுமைகளை ஒப்பிடுவதன் வாயிலாக செய்யப்பட்டவற்றையும், செய்திருக்கத்தக்கன எவை என்பதையும் மதிப்பீடு செய்வது அவசியமானது. இவற்றின் பெறுபேறுகள் எமக்கான எதிர்கால மார்க்கத்தை வடிவமைப்பதற்கு மிகமிக முக்கியமானவை ஆகும். “சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்” எனும் இத்தொடரானது நாவலரின் பங்களிப்புக் குறித்த மதிப்பீட்டின் வழியாக சமகால இயங்குமுறையைக் கணிப்பிட்டு, சுயவிமரிசனங்களுடன் புதிய பாதையையும், அதற்குரிய சரியான மார்க்கத்தையும் கண்டடையும் நோக்கில் எழுதப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுப் போயிருந்த இஸ்ரேல் எனும் நாட்டை கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ‘கண்டுபிடித்து’ மீள் குடியேற்றம் மேற்கொள்ள யூதர்கள் உத்தேசித்த போது ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் அதனுடன் பிணைந்திருந்த தமது மேலாதிக்க நலன் காரணமாக இணக்கம் தெரிவித்தன. ஜெர்மனி புதிய மேலாதிக்க வல்லரசாகும் முனைப்பில் யுத்த வெறியுடன் இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடக்கிய போது அதன் தலைவரான ஹிட்லர் நடாத்திய யூத எதிர்ப்புக் கொலைத் தாண்டவத்தால் யூதர்கள் மீது கழிவிரக்கம் ஏற்பட்டிருந்த காலம் அது. சென்ற நூற்றாண்டின் நடுக்கூறில் தொடங்கிய யூதக் குடியேற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அனுதாப உணர்வும் மேலிட்டிருந்த காரணத்தால் தஞ்சம் வழங்கிய பலஸ்தீனம் தன்னைக் காணாமலாக்கும் சியோனிஸ வெறி மேற்கிளம்பி இத்தனை தூரம் விசுவரூபம் கொள்ளுமென அப்போது எண்ணியிருக்கவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அந்த மண்ணுக்கே உரிய மக்களை வெளியேற்றிவிட்டு பலஸ்தீனம் முழுவதையும் ஆக்கிரமித்து ஏப்பமிடும் இஸ்ரேலின் யுத்த வெறியை மட்டுப்படுத்துவதற்கு ஏகாதிபத்தியத் திணை எந்தவொரு உருப்படியான செயற்திட்டத்தையும் முன்னெடுப்பதாக இல்லை. தேசங்கள் இடையே சமத்துவமான வர்த்தகப் பரிமாற்றத்தை மேற்கொள்ள ஏற்ற வகையில் ஒற்றை மையத் தகர்ப்புடன் கூடியதான புதிய உலக ஒழுங்கொன்று இப்போது ஏற்பட்டு உள்ளது; அதனை முறியடித்துத் தொடர்ந்தும் தமது தலைமையிலான ஏகாதிபத்திய அணியே உலகின் தீர்மானகரமான இயக்கு சக்தியாக இருக்க வேண்டும் எனக் கருதுகின்ற ஐக்கிய அமெரிக்கா, வெளிப்படையாக இஸ்ரேலின் யுத்த முன்னெடுப்பை ஆதரித்து வருகிறது. உக்ரேன் – ருஷ்யப் போரில் ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்த்த ஆதாயங்களுக்கு இடமளிக்காமல் ஐக்கிய அமெரிக்கா தனக்குரிய வெகுமதியை உக்ரேனில் இருந்து ஒட்ட வறுகியெடுத்துக் கொண்ட திருப்தியுடன் சமாதானக் காற்றை அங்கே வீசுவதற்கு சமிக்ஞை காட்டியது தொடர்பில் ஏகாதிபத்தியத் திணைக்குள் தலைமைக்கு எதிராகப் புகைச்சல் தோன்றியதான தோற்ற மயக்கம் ஏற்பட்டு நீங்கி உள்ளது. சீனாவுடனுள்ள நட்புறவை ருஷ்யா விலக்கிக் கொள்வதற்கென ஐக்கிய அமெரிக்கா விரித்த தந்திர வலையை அறுத்தெறிந்து சுதந்திரமான முன்னெடுப்பை ருஷ்யா மேற்கொண்ட உடன் ஏகாதிபத்தியத் திணை சமாதான மாய்மாலங்களைக் களைந்தெறிந்து மீண்டும் வலுவான ஒற்றுமையுடன் தனது கோரமான போர் முகத்தை வெளிப்படுத்தத் தொடங்கி உள்ளது. இடைப்பட்ட ஊடல் காலத்தில் “இஸ்ரேலை உருவாக்கியதற்காக மன வருத்தம் கொள்கிறோம்” எனப் பிரித்தானியா கவலை வெளியிட்டு இருந்தது; ஜெர்மனியும் பிரான்சும் இஸ்ரேலுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது!

இத்தகைய மிரட்டல் கண்டனங்கள் எவற்றையும் இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை என்பதிலே எந்தவொரு இரகசியமும் இல்லை. ஐக்கிய அமெரிக்காவின் வெளிப்படையான ஆசீர்வாதம் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளது பகட்டு வார்த்தைகளுக்குள் மறைந்துள்ள இரகசியமான ஆதரவின் பலத்துடன் தான் இஸ்ரேல் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை முடுக்கிவிட்டபடி உள்ளது. இஸ்ரேல் பலவீனப்படக்கூடாது என்பது ஏகாதிபத்திய நலன் பேணப்படுவதுடன் பிணைக்கப்பட்ட நியதி.  அதன் காரணமாகவே வெளிப்படையாக யுத்த எதிர்ப்பைப் பேசிய போதிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான செயலொழுங்குகளை ஐரோப்பியத் திணை மேற்கொள்ளாது இருக்கிறது. தமக்குள் மேலாதிக்க வலு அதிகமுள்ள ஐக்கிய அமெரிக்கா உக்ரேன் விவகாரத்தில் மிக அதிகமாக அபகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் அதிருப்திப்பட்ட போதிலும் ஒட்டுமொத்தமாக ஏகாதிபத்திய ஆதிக்கம் வலுவிழந்து மங்கிப்போக இடமளித்துவிட இயலாத நெருக்கடிக்குள் உழல்கின்றனர். ஒட்டுமொத்தமான ஏகாதிபத்தியத் திணைக்குள் எழுந்துள்ள இன்றைய நட்பு முரணைத் தீர்த்தவாறு ஒடுக்கப்பட்ட தேசங்கள் மீது ஐக்கிய அமெரிக்கத் தலைமையில் சுரண்டலை வலுப்படுத்த வேண்டுமெனும் செயலொழுங்குகளையே ஐரோப்பா மேற்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்த நிலை அவர்களைக் கட்டுப்படுத்துகிறது.

ஐரோப்பாவின் மூலதனத் திரட்சி மேலெழத் தொடங்கிய போது எமது தேசங்களை ஆக்கிரமித்த நிகழ்வுடன் இணைந்ததாகப் ‘புதிய கண்டங்களைக் கண்டுபிடித்த’ முயற்சியூடாக நடந்தேறிய ஆக்கிரமிப்பில் உருவான ஐக்கிய அமெரிக்கா இன்று தமக்குத் தலைமை தாங்குவதில் ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை ஆதங்கப்பட ஏதுமில்லை. முழுவதுமாய்க் ‘கூண்டோடு கைலாயம் போவதைவிட’ லாபத்திலொரு பங்கை இழப்பதனால் ஏற்படுகிற பாதிப்புத் தாங்கிக்கொள்ள உகந்ததே என்பது அவர்களுக்கான இருப்பு; அந்த ஏகாதிபத்தியத் திணையின் அபகரிப்புக்கு ஆட்பட்டுத் தொடர்ந்தும் அல்லற்படும் அவதி எமக்கு அவசியமானது தானா?

நிலப்பிரபுத்துவச் சமூக முறைமை கெட்டிதட்டிப்போய்த் தொடர்ந்த முன்னேற்றம் எட்டபட இயலாத முடக்கத்தில் எமது தேசங்கள் வாடி வதங்கிய போது புதிய சமூக எழுச்சிச் சிந்தனைகளுடன் ஐரோப்பிய மூலதனம் எங்களை ஆட்படுத்திக் கொண்டது. அதன் காலனியாக மாற்றப்பட்ட எமது நாடுகள் புதிய வாழ்வியல் அம்சங்கள் சிலவற்றைக் கண்டபோதிலும், மேற்கொண்டு விருத்திகளைக் காண இயலாத வண்ணம் காலனித்துவ விலங்கு முடக்கங்களை ஏற்படுத்தியது. சென்ற நூற்றாண்டின் நடுக்கூறில் பாதிச் சுதந்திரம் எட்டப்பட்ட போதிலும் நவகாலனித்துவப் பிணைப்புக்குள் அகப்பட்ட வடிவத்திலேயே அந்த விடுதலை அமைந்திருந்தது; ஏகாதிபத்தியம் தொடர்ந்து சுரண்டுவதனை முறியடிக்கும் பூரண சுதந்திரம் இன்னமும் சித்திக்கவில்லை. இஸ்ரேல் தனது முயற்சியில் வெற்றிபெற்று ஏகாதிபத்தியத் திணையின் அரசியல் முன்னெடுப்புக்கு உரியதான பழைய உலக ஒழுங்கு தொடருமாயின் மீண்டும் சாதிய, மதவாத, இன பேதங்களின் மோதல்களில் நாங்கள் ஈடுபட்டவர்களாகத் தொடர்ந்தும் அல்லற்படுவோம். குழப்பியடிக்கும் அந்தக் குட்டைக்குள் ஏகாதிபத்தியம் தொடர்ந்து சுழியோடியவாறு ஆதாயங்களை வறுகியெடுக்கும்.

ஈழத் தமிழரும் புலச்சிதறலும்

நாவலரை மறுமதிப்பீடு செய்யும் முயற்சியை மேற்கொள்வதாக அமைந்துள்ள இந்தத் தொடரில் இன்னும் ஏற்பட்டு வருகின்ற வரலாற்றுச் செல்நெறி மாற்றம் மிகுந்த முக்கியத்துவம் உடையதாக உள்ளது. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நீண்ட நெடுங்காலம் நிலைபெற்று வாழ்ந்த தேசிய இனமொன்றின் இருப்பை நாசப்படுத்தும் ஆக்கிரமிப்புச் சக்தியான இஸ்ரேலுக்குச் சாதகமாக கரிசனைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் பல எம் மத்தியில் உலவுவதனைக் காண்கிறோம்; தமிழ்த் தேசிய விடுதலைக்காகப் போராடுகிறோம் எனப் பசப்பிக் கொண்டே இந்த வேடிக்கையும் இடம்பெற்றவாறு உள்ளது. எம்மிடையே விடுதலை வேட்கையை விடவும் மேலாதிக்க மனோபாவமே மேவியிருப்பதன் வெளிப்பாடு இது. ஏகாதிபத்தியத் தளத்தில் அடைக்கலம் கிட்டியது என்பதால் மட்டுமன்றித் தமிழ்த் தேசிய யுத்த முன்னெடுப்பைத் தொடக்குவதற்கு முனைந்த காலத்தில் இருந்தே இத்தகைய ஏகாதிபத்திய மனோபாவம் அந்தத் தரப்பினரிடம் இருந்து வந்தது. எழுபதாம் ஆண்டுகளின் நடுக்கூறில் “இஸ்ரேல் போன்ற ஒரு தமிழீழம் வேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசிய மேலாதிக்கத் தமிழ்த் தேசியப் பிரதிநிதிகளின் வாரிசுகளே இவர்கள்.

இலங்கை பூராவும் உத்தியோக ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் வகையில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் யாழ்ப்பாணக் குடாவினுள் ஏராளமான பாடசாலைகள் தோற்றம் பெறுவதற்கு வழிவகுத்தனர். அரைச் சுதந்திரம் 1948 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட பின்னர் சிங்களத் தேசியம் பூரண விடுதலைத் தேசியத்தினை முன்னெடுக்கும் செயலொழுங்குகளுக்கு முன்னுரிமை வழங்கி இருப்பின் கல்வியை மூலதனமாக முதலிட்டு இயங்கிய யாழ்ப்பாணத்துக்கான மாற்றுத் திட்டத்தை வகுத்த வண்ணமாக எமது உத்தியோக ஆக்கிரமிப்பில் இருந்து தமது பிரதேசத்தை மீட்டெடுக்க முற்பட்டிருக்க இயலும். சிங்களத் தேசிய நலனை முன்னறுத்தித் தேசிய முதலாளித்துவ நிலைப்பாட்டில் இயங்கிய சுதந்திரக் கட்சியிடம் அத்தகைய தெளிவு இருக்கவில்லை; அதனிடமாவது தமக்கான விடுதலை குறித்த அக்கறை இருந்தது. ஏகாதிபத்தியத்துடன் இறுக்கமான பிணைப்புடன் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியை முறியடித்துத் தேசிய விடுதலைக்கான அரசியல் – பொருளாதார முன்னெடுப்புகளைத் தேசிய முதலாளித்துவச் சிங்கள அணி மேற்கொண்டது. அதனுடன் இணைந்து இயங்கும் உத்தேசம் அன்றைய தமிழ்த் தலைவர்களுக்கு (அவர்கள் ‘தேசிய’ அடையாளத்தையே வெறுத்தார்கள்; எழுபதாம் ஆண்டுகளின் நடுக்கூறு வரை ‘தமிழ்த் தேசியம்’ பேசுபொருளாகவில்லை) இருக்கவில்லை. ஏகாதிபத்தியத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் அதுவரை அனுபவித்த உத்தியோக ஆக்கிரமிப்பு மனோபாவத்துடன் யுத்த முனைப்பில் ஈடுபட்டு இன்றைய ஏகாதிபத்தியத் திணையினுள் (ஏகாதிபத்திய நாடுகளுக்குள்) சங்கமித்த வெற்றியைப் பெற்றுள்ளது.

தாயக மண்ணில் வாழ்ந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு எமக்கான அர்த்தமுள்ள விடுதலையை வென்றெடுக்கும் அபிலாசையைக் கொண்டிருக்கும் தரப்பினர் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது? எமது இரத்த உறவெனக் கூறியபடி புலம்பெயர் ஏகாதிபத்திய அணி வீசுகின்ற எலும்புத் துண்டுகளுக்கு விலையாக மாறி அழுந்தப் போகிறோமா – இலங்கை மண்ணில் வாழும் அனைத்து இனத் தேசியங்களுடன் கைகோர்த்து எமக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் விடுதலைத் தேசிய மார்க்கத்தைக் கண்டு தெளிந்து பின்பற்றப் போகிறோமா? ஏகாதிபத்திய நலனை முன்னெடுக்கிறவர்கள் இஸ்ரேலை நியாயப்படுத்தியவாறு இங்குள்ள சகோதர இனத் தேசியங்களுடன் கூட்டமைக்க இடந்தராத தனி வழியில் செல்லும்படி தூண்டுகின்றனர். அந்த மேட்டிமைக் கனவான்கள் எம்மை நோக்கி, “இஸ்ரேலின் யூதர்களைப் போல அறிவில் மேலோங்கி இருந்த யாழ்ப்பாணத்தவர் நாம்” எனும் ஓர்மத்தை (மமதையைக்) கைவிட்டுவிட வேண்டாமென வலியுறுத்துகின்றனர்.

இத்தகைய மேலாதிக்க மிதப்பினை இயல்பாகக் கொண்டிருந்த ஆதிக்க சாதி மனோபாவத்தை நூற்றைம்பது வருடங்களின் முன்னர் இனங்கண்ட காலனித்துவவாதிகள் யாழ் மண்ணில் ‘கல்விக்கூடத் தொழிற்பட்டறையை’ நிறுவிக்கொண்ட போது ஐரோப்பியப் பண்பாட்டு அடிமைகளாக விளங்கத்தக்க உத்தியோகத்தர்களை உற்பத்தி செய்யும் நோக்கத்தை உடையவர்களாக இருந்தனர். இலங்கை பூராகவுமாக மட்டுமன்றி கடல் கடந்தும் கிடைத்து வந்த வேலைவாய்ப்பின் அசைவியக்கத்தினூடாக மனதையும் அந்நியரிடம் அடகு வைப்பதற்கான ஆபத்து மேற்கிளம்பி வருவதனை உணர்ந்த நாவலர் சைவப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு அடித்தளமிட்டார்; அங்கு கற்பதன் வாயிலாகவும் அத்தகைய தொழில் வாய்ப்புகளை எட்டுவதற்கு ஏற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சாதக விளைவுகளைத் தரத்தவறவில்லை. வெள்ளைக்காரத் தொழிலின் வாய்ப்பை மனங்கொள்ளும் அதேவேளை, நவீன யுகத்துக்கான மதம் கிறிஸ்தவம் என்று மனமொப்பி மதமாற்றத்தையும் நாடிய சிலர் இதன் வாயிலாகத் தடுத்தாட்கொள்ளப்பட்டனர். அவ்வாறு சொந்தப் பண்பாட்டினைப் பாதுகாக்கும் முனைப்புக்கு ஒரு தரப்பினர் உடன்படாது போயிருப்பின் எமது மண் முழுவதும் அடிமைப் பண்பாட்டு மனவிகாரத்தைச் சந்தித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேவேளை, எமக்கான பண்பாட்டுத் தொடர்ச்சி எனக் கையேற்கப்பட்ட சைவ மனப்பாங்கு மக்கள் நலநாட்டத்தை நோக்கி ஆற்றுப்படுத்தி உள்ளதா என்ற கேள்வியும் எழக் காண்கிறோம். காலனித்துவம் வழங்கிய புதிய மதம்  அதிகாரத் தரப்பாரிடமே அடிமை மனப்பாங்கை ஊட்டி வளர்க்க முனைந்தது என்றால், சாதியச் சழக்குகள் மேவியிருந்த நமது பாரம்பரிய மதம் உழைக்கும் மக்களை இழிவுபடுத்திப் புறக்கணிப்புகள் வாயிலாகச் சுரண்டலை மேற்கொள்வதாக இருந்தது. காலனித்துவத்தில் நிறபேதம் வெள்ளை மேலாதிக்கத்துக்கு வழிகோலி இருந்ததாயினும் படித்துப் பட்டம் – பதவிகள் பெற்று மேனிலையாக்கம் பெற்ற நிறத்தோல் கனவான்களைச் சரியாசனம் தந்து மதிப்பளிப்பதற்குத் தடை ஏதுமிருக்கவில்லை (சாதியவாதம் அளவுக்குப் பிளவாக்கத்தைக் காலனியவாதம் மேற்கொள்ளவில்லை). எத்தகைய உயர்வுகளைத் தனியாளாக ஒருவர் எட்டிய போதிலும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவுகளைச் சேர்ந்த அத்தகைய ஓர் ஆளுமை எந்த இடத்திலும் சரிநிகர் சமானமாக நடாத்தப்பட இயலாதவர் என்ற சாதிய நியதி கவனிப்புக்கு உரியது. நாவலரும் கூட ஒவ்வொருவரும் தமக்கென வரையறுக்கப்பட்ட சாதி ஆசாரங்களை மீறாதிருப்பது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார். பிறப்புக்கு முன்னரான கருவறை தொட்டு இறந்த பின்னர் அடையும் இடுகாடு வரை சாதிய வழக்காறுகள் மக்களைப் பிளவுபடுத்தி இருப்பதனைக் கேள்விக்கு உள்ளாக்காத பண்பாட்டுப் பேணுகை ஏற்புடையதாக இருக்க இயலாது!

நாவலரின் கருத்தியல் தளத்துக்குரிய சாதியத்தை விடாது கையேற்ற மேலாதிக்கத் தமிழ்த் தேசியர்கள் அவரிடம் வெளிப்பட்ட காலனிய எதிர்ப்பு மனப்பாங்கைக் கையேற்பதாக அல்லாமல் காலனியமயமாதலுக்கு ஆட்பட்டனர் என்பது தான் இங்கு கவனிப்புக்கு உரியது. சொந்த மண்ணில் வாழ இயலாமல் வேற்று மண்ணில் பனிக்குளிருடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது  என நீலிக்கண்ணீர் வடித்து அனுதாபம் தேட முனைவது ஒரு பக்கம் என்றால், “என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் உசத்திதான்” என்று கூறியபடி காஸாவில் மேற்கொள்ளப்படும் ஏகாதிபத்தியத்தின் கொலைத் தாண்டவத்துக்கு வக்காலத்து வாங்கும் மனோபாவம் மறுபுறமாக வெளிப்படக் காண்கிறோம். மேலைத்தேசச் சுகபோகத்தில் மூழ்கியபடி வாழ்ந்திருக்கப் புலிகளின் யுத்தம் தொடர வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக அமைந்திருந்தது; அதன் காரணமாகவே  மாவிலாறில் புலிகள் ‘இறுதி’ யுத்தத்தைத் தொடக்கிய போது, அதனைக் கைவிடுமாறு குரல் கொடுக்காமல், புலிகளால் மனிதக் கேடயமாக லட்சக்கணக்கான பொது மக்கள் கட்டாயப்படுத்திக் கொண்டு செல்லப்பட்டதை மூடிமறைத்து இன்றைய பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். தமது தரப்பில் மக்களைப் பாதுகாப்புக் கவசமாக்கும் யுத்த மீறல் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, சிங்களப் பேரினவாத இராணுவம் மட்டும் சர்வதேச யுத்த நியமங்களின் படி ஒழுக வேண்டும் என்பதான எடுகோளை முன்வைக்க முனைகின்றனர். பேரினவாதத்தினதாக மட்டுமன்றி, தமிழின் பேரால் முன்னெடுக்கப்பட்ட மேலாதிக்கவாதச் செயலொழுங்குகளாலும், இறுதி யுத்தத்தில் காவுகொடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கிலான மக்களை வைத்து இன்றைய மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தாலும் ‘பண்டமாற்று வணிக அரசியல்’ தொடரப்படும் அவலம் நிலவுகிறது.

புலச்சிதறலுக்கு உள்ளாகி அங்கே வாழ்கின்ற அனைவருமே மேலாதிக்கத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டினர் என்பதற்கு இல்லை; இருதரப்பு மேலாதிக்கவாதத் தலைமைகளினால் மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம் காரணமாகச் சொந்த மண்ணில் வாழ முடியாத நெருக்கடி காரணமாகப் புலம்பெயர்ந்தோர் பலருள்ளனர். தமக்குரிய வாழ்வியல் புலத்தில் இருப்பைத் தொடர இயலவில்லையே என்ற நியாயமான ஏக்கமுடைய விடுதலை மனம் படைத்தோர் அங்கு கணிசமான அளவில் உள்ளனராயினும், மிகப் பெரும்பாலானவர்கள் மேலாதிக்கத் தமிழ்த் தேசியப் புலப்பெயர்வு மேட்டிமைகளின் கருத்தியலுக்கு ஆட்பட்டவர்களாக உள்ளனர் என்ற வகையில், காலனித்துவத்தின் வாரிசுகளாகவே திகழ்கின்றனர்.

காலனித்துவம் ஊடாக ஏகாதிபத்தியம்

நான்கு நூற்றாண்டுகளின் முன்னர் வணிக நாட்டத்தில் உந்தப்பட்ட ஐரோப்பியச் சமூகம் அறிவியலுக்கு விரோதமாகத் தம்மிடம் புரையோடிப் போயிருந்த மனப்பாங்கைத் துடைத்தழிக்கத் தொடங்கினர். முன்னரான மத்திய காலத்தில் இலாபமீட்டும் வர்த்தகத் தொழில் பாவகரமானதெனக் கூறி கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவோர் வணிகத்தில் இருந்து தூரப்படுத்தப்பட்டு இருந்தனர். அதன் காரணமாக ஐரோப்பாவினுள் சிறுபான்மையினராக வாழ்ந்த யூதர்களே வணிகத்தை மேற்கொண்டனர். அத்தகைய இருண்டகால மனப்பாங்கைத் தகர்த்துப் புதிய சமூக உருவாக்கம் ஒன்று மேற்கிளம்பி மறுமலர்ச்சி உணர்வு உந்தித் தள்ளிய போது மதத்தில் இருந்து அரசையும் கல்வியையும் விலக்கிக்கொண்ட முதலாளித்துவ வர்க்கம் உதயமாகி விருத்தி பெறலாயிற்று. புதிதாக மேற்கிளம்பிய அந்தச் சமூகத் தளத்தினர் மூலதன அபகரிப்பை மேற்கொள்ள வேண்டி இருந்த தேவை காரணமாக வணிக நாட்டத்துடன் வந்தடைந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமித்துக் காலனித்துவப்படுத்தி ஆட்சியதிகாரங்களை நிரந்தரமாக்கினர். முன்னதாகச் சோழப் பேரரசு இது போன்று கடல் கடந்த ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வென்றடக்கிய போதிலும் அதே ஆட்சிகளைத் தொடர அனுமதித்துக் கப்பம் அறவிட்டனரே அல்லாமல் நேரடியாகத் தமது  ஆட்சிக்குள் கொண்டுவரவில்லை. நிலவுடமைச் சமூக சக்திக்கு அத்தகைய அரசியல் தேவை அவசியமற்றது. லாபம் – மேலும் லாபம் எனத் தொடர்ந்து மூலதனம் வறுகியெடுக்கப்படுவது புதிய சமூக முறைமையாக ஆனபோது தமது ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சிய’ எல்லைக்குள் தொலைதூர நாடுகளைக் கொண்டு வந்ததுடன், நேரடியாக ஆள இயலாத காலம் ஏற்பட்ட பின்னரும் நவகாலனித்துவ மயப்படுத்தித் தமது மேலாதிக்கத்தைத் தொடர வேண்டி இருந்தது.

எமது தேசங்களைக் காலனிகளாக்கி மேற்கொண்ட சுரண்டல் ஊடாகப் பெற்ற மூலதன விருத்தி ஒரு வகைப்பட்டது; அவர்களுக்கான புலத்தில் பண்ணையடிமைகளாக இருந்த விவசாயிகளை நிலப் பிணைப்பில் இருந்து விடுவித்துத் தமது உற்பத்தி சக்தியை விரும்பிய எந்தவொரு மூலதன உடைமையாளரிடமும் ‘சுதந்திரமாக விற்கும்’ பாட்டாளி என மாற்றிப் புனைந்து அபகரித்த உபரி மதிப்பை மூலதனமாகப் பெருக்கியது இன்னொரு வகை. இத்தகைய இரு முனை அபகரிப்புகளின் பொருட்டு தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியதும் அதற்கு உறுதுணையாக விஞ்ஞான விருத்தியை  விரிவாக்கியதும் என்ற செயலொழுங்குகளின் காரண, காரணிகளாக அமைந்த போக்குவரத்து – தொடர்பாடல் வளர்ச்சிகள் வாயிலாகப் படிப்படியாக உலகம் ஒரு கிராமமெனச் சுருங்கியது. நிலப்பிரபுத்துவத்தில் ஒரு பரம்பொருளோ, ஓரிறையோ ஒன்றிணைக்க இயலா வகையில் அன்றைய பொருளுற்பத்தி உறவு உலகப் பரப்புகளைப் பிளவுபடுத்தி வைத்தது என்றால், தனது சுயலாப வேட்கையில் மூலதனமோ கடவுளை விடவும் மேலான ஆற்றலுடன் உலகப் பரப்பு முழுவதையும் ஒன்று குவித்துவிட்டது!

மூலதன அபகரிப்பில் ஐரோப்பிய நாடுகளுக்கான முன்னேறிய கம்பனிகள் தமக்குள் கூட்டிணைந்து உருவான ஏகபோக மூலதனம் இன்றைய உலகை ஒரே குடைக்குள் கொணர முனைந்தன. இவ்வகையில் ஏகாதிபத்திய உச்சத்தை முன்னதாக எட்டிய பிரித்தானியா – பிரான்ஸ் – ஐக்கிய அமெரிக்கா என்பன நட்பு நாடுகளாக ஒன்றிணைந்து தமக்குள் உலகைப் பங்கு போட்டிருந்த நிலையில், புதிய ஏகாதிபத்திய நாடுகளாக எழுச்சி பெற்ற ஜெர்மனி – இத்தாலி – ஜப்பான் என்பன அச்சு நாடுகளாகக் கூட்டமைத்து உலகை மறுபங்கீடு செய்யவென முனைந்து இரண்டு உலக மகா யுத்தங்களை (1914, 1939) அரங்கேற்றின. இந்தப் பாரிய யுத்தங்களில் தத்தமது மனித வளங்கள், பொருளாதாரம், ஆற்றல்கள் என்பவற்றைப் பாரிய அளவில் செலவிட்ட ஐந்து வல்லரசுகள் பின்னடைந்து போய்விட, அந்தக் களத்தில் விளிம்பிலிருந்த வண்ணம் தனது பங்களிப்பை அளவோடு வழங்கி அணுகுண்டுப் பரிசோதனையையும் செய்ததன் வாயிலாகத் தனது வல்லமைகளைத் தக்க வைத்து வெளிப்பட்ட ஐக்கிய அமெரிக்கா, ஏகாதிபத்திய அணியின் தன்னிகரில்லாத் தலைவராக மேற்கிளம்பியது. பலவீனப்பட்டுப் போயிருந்த அனைத்து நாடுகள் இடையேயும் தங்கத்துக்குப் பதில் தனது டொலரைச் சர்வதேசப் பரிவர்த்தனைக்கான ஊடகமாக்கியதன் வாயிலாக மென்மேலும் பொருளாதார வல்லரசாக மிளிரும் வாய்ப்பையும் ஐக்கிய அமெரிக்கா பெற்றிருந்தது.

இவ்வகையில் தலைமைப் பாத்திரத்தை வென்றெடுக்க ஏற்றவாறு, முன்னதாக ஐரோப்பியக் காலனித்துவத்தில் இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிய எமது தேசங்களின் விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பதான தோற்றப்பாட்டை ஐக்கிய அமெரிக்கா காட்டி வந்தது. ஐரோப்பியக் காலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசங்கள் ‘சுதந்திரம் பெற்ற’ கையோடு சுய விருப்புடன் தனது டொலருக்குக் கட்டுப்பட்ட நவகாலனிகளாக இயங்க ஏற்ற அரசியல் – பண்பாட்டு நியதிகளை வடிவப்படுத்தும் ஏகாதிபத்திய நடைமுறையை வகுத்துச் செயலுருப்படுத்தியது. ஆக, முந்திய காலனிய இயங்குமுறையில் சிற்சில மாற்றங்கள் எட்டப்பட்ட போதிலும் மேலாதிக்கச் சக்திகளது சூத்திரப் பாவைகளாகக் கையாளப்படும் வளையத்தை உடைத்து வெளியேற இயலாத அரசியல் – பொருளாதார – பண்பாட்டு சூழல் தொடர்வதாகவே அமைந்தது. பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயக் காலனியாக இலங்கை பிணைக்கப்பட்டதில் இருந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாகப் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சியாளர்கள் தத்தமது முடிமன்னரின் சார்பாக இயங்கும் கவனர்கள் ஊடாக ஆட்சியை முன்னெடுத்தனர். முதலிரு நாடுகளும் வெளிப்படுத்தி இருந்த முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவப் பிடிக்குக் கட்டுப்பட்டு இயங்கி வரவேண்டிய ஆரம்ப நிலையுடையன. மதப் பண்பாட்டு முனையிலும் நிலப்பிரபுத்துவத்துக்கு உரிய கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தையே போர்த்துக்கேய முதலாளித்துவம் பின் தொடர்ந்தது. முதலாளித்துவம் இளமைத்துடிப்புடன் முன்னேறி வலுப்பெற்ற 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நிலப்பிரபுத்துவ மதத்தை முற்றாக நிராகரித்துப் புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவம் உருவானது; அதனை வெளிப்படுத்திய புதிய வார்ப்புகளாக ஒல்லாந்தரும் பிரித்தானியரும் வரலாற்று அரங்கில் வெளிப்பட்டனர். முடியாட்சியைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிரித்தானிய முதலாளித்துவமானது தனக்கான ஜனநாயக அமைப்பாக ஆளுமையுடைய பாராளுமன்றத்தைத் தோற்றுவித்திருந்த போதிலும் பழமைப் பாரம்பரியப் பேணுகை எனும் தோரணையில் முடியை ஓர் ஆடம்பரப் பொருளாகத் தொடர்வதற்கு இணங்கியது. மிகப்பெரும் ஏகாதிபத்திய வல்லரசாக இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இயங்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியம், இவ்வாறு பழமைப் பிடிப்புகளை ஏதோவொரு வடிவில் நீடித்து நிலைக்க வழிவகுக்கும் மனப்பாங்கினை எம் மத்தியிலும் விதைப்பதாகத் தனது ஆளும் முறைமையை முன்னெடுத்தது!

காலனித்துவ ஒடுக்குமுறையை முதலாளி வர்க்கம் எம்மீது திணித்த போதிலும் எமக்கான நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்தி உறவை முற்றுமுழுதாகவோ, சிந்தனை முறையை அடியந்தமாகவோ மாற்றுவதற்கு முற்பட்டு இருக்கவில்லை. காலனித்துவம் அறிமுகப்படுத்திய விஞ்ஞான – தொழில்நுட்பப் பிரயோகங்கள் அறிமுகப்பட்ட அளவிலும் ஆட்சியாளரின் ஏவலாளர்களாகச் செயலாற்றவென வழங்கப்பட்ட நவீன கல்வி முறைகளாலும் தூண்டப்பட்ட எமது தேசங்களின் சில முன்னோடிகள், எம்மீது திணிக்கப்பட்டுள்ள நுகத்தடி நிலப்பிரபுத்துவம் – காலனித்துவம் எனுமிரு முனைகளைக் கொண்டு எம்மவரைப் பிணைத்து இயக்குகிறது எனும் நிதர்சனத்தைக் கண்டுணர்ந்தனர். சிலர் காலனித்துவச் சலுகைகளில் ஆதாயம் பெறும்போது நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைப் பக்கத்தைக் குற்றம் சாட்டினர்; காலனித்துவ ஒடுக்குமுறையைச் சாடியவர்களில் பலர் நிலப்பிரபுத்துவத்தின் அழுத்தங்களைக் கண்டுகொள்ள மறுப்பவர்களாக விளங்கினர்.

மேலாதிக்கத்தில் சாதியம், தேசியம், இனத்தேசியம்

காலனித்துவ ஒடுக்குமுறையால் எமது பண்பாட்டு அடித்தளம் தகர்க்கப்படும் அபாயத்தை உணர்ந்த ஆறுமுக நாவலர் ‘சாதியின் காவலராக’ கணிக்கப்படுவதனை இந்தப் பின்னணியில் அணுகலாம். ‘காலனித்துவப் பிணைப்பு நீக்கப்படுவது சாதிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கே’ என்பதாக நாவலரது நிலைப்பாடு அமைந்ததா? இது பற்றிய தெளிவை எட்டுவதற்கு அவரது சமகாலத்தில் நிலவிய பாரம்பரியக் கருத்துநிலை, காலனித்துவம் ஊட்டிய கருத்தியல், நிலப்பிரபுத்துவத்தின் சிதைவு குறித்த சமூகப் புரிதல் எனும் தளங்களில் ஏனைய ஆளுமைகள் முன்னெடுத்த இயக்கச் செயற்பாடுகளுடன் நாவலரை ஒப்பாய்வு செய்வது அவசியம். இவற்றை அலசுகின்ற அதேவேளை, பின்னர் எழுச்சியுற்ற விடுதலைப் போராட்டத்தில் நாவலர் முன்னிறுத்திய சைவசித்தாந்தம் எத்தகைய வகிபாகத்தைப் பெற்றிருந்தது என்பதனை மதிப்பீடு செய்யும் வகையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ. சிதம்பரனாருடன் ஒப்பீட்டை மேற்கொள்வதும் அவசியமாகின்றது. 

இத்தொடரின் இரண்டாம் பகுதியாகிய ‘இன்றைய இருப்பின் மீதான கடந்த காலத்தின் தாக்கம்’ எனும் இந்தப் பகுதி இவை சார்ந்து மூன்று இயல்களைக் கொண்டதாகக் கட்டமைக்கப்படுகிறது. இதன் வாயிலாக நாவலர் மீது பாரம்பரியத்தின் வீச்சு எவ்வகையில் வெளிப்பட்டது என்பதனைக் காணும் அதேவேளை, அந்தத் தாக்குறவுடன் அவர் தனது சமகாலச் சமூக நியதியை மாற்றுவதற்கு  எத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தார் என்பதனையும், பின் தொடர்ந்த வரலாற்றில் அவற்றின் பாதிப்புகள் எவ்வாறு அமைந்தன என்பவற்றையும் தரிசிக்க இயலும். 

ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்த்து விடுதலையை வெற்றி கொண்ட தேசியம், ஆதிக்க சாதி நலன்களை முறியடித்து அனைத்துச் சாதிகளையும் சமனாக நடாத்த வல்ல சமூக நீதி நிலைநிறுத்தப்பட ஏற்றதாக அமையவில்லை. அதன் நீடிப்பாகப் பேரினவாதச் செயலொழுங்குகள் மேலோங்கி வருவதற்கும் இடமேற்பட்ட நிலையில் இனத்தேசிய முரண்பாடுகள் பிரிவினைவாத நாட்டங்களை வலுப்படுத்தின. இனத் தேசியங்களினுள்ளேயும் இயங்கும் முதலாளித்துவ நிலைப்பாடுகள் சாதியவாதப் பிளவுகளை வலுப்படுத்தின. 

இவ்வகைப்பட்ட காலனியவாத, தேசியவாத, இனவாத, சாதியவாத அணிகள் சார்ந்த வரையறைகளைக் கடந்து பரந்த மனப்பாங்குடன் மக்கள் விடுதலை உணர்வை முன்னிறுத்தியபடி எமது முன்னோடிகளை மறுமதிப்பீடு செய்யும் பொறுப்பு எமக்குரியது. அந்த வரிசையில் நாவலரையும் அவருடன் வைத்துப் பேச அவசியமுள்ள ஆளுமைகளையும் இந்தப் பகுதியில் தரிசிப்போம்!



About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்