மலையக மக்களின் வாழ்வியல் ஏனைய இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். தென்னிந்தியாவில் இருந்து காலனித்துவ ஆட்சியாளர்களால் அழைத்துவரப்பட்ட இம்மக்கள் முழுமையாக தமிழர்களாகவே இருந்தார்கள். இலங்கையில் பூர்விகமாக வாழும் தமிழர்களின் வாழ்வியல் முறையிலிருந்து இவர்கள் வேறுபட்டாலும், கலாசார ரீதியாகவும், மொழி ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒருமைப்பாடு உடையவர்களாக இருந்தார்கள். ஆனாலும், இவர்களின் வாழ்வியல், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு என்பன இவர்களை இலங்கைவாழ் மக்களிடமிருந்து தனித்துவமாக்கியது.

இவர்களின் வருகையானது பட்டுக் கம்பளத்தில் நடந்த நடை போன்றதாக இருக்கவில்லை; காடும் மேடும், கரடும் முரடும் நிறைந்த கானக வாழ்வில் நிகழ்ந்த வழித்தடங்களாக அது அமைந்தது. இவர்களின் வரலாறு ஜீவ–மரணப் போராட்டத்தில் சிதைந்து எழுந்து நிற்கும் வரலாறாகும். இந்த வரலாற்றுப் பாதையில் இவர்கள் இழந்த இழப்புகள், சிந்திய ரத்தம், வியர்வை, அவமானங்கள், அடக்குமுறைகள் — இவை அனைத்தும் வருணிக்க முடியாத வடுக்களாகும். இங்கு அவர்கள் கடுமையான உழைப்பினாலும் பெற்றுத்தந்த வருமானத்தினாலும் இந்நாட்டு மக்களின் தவிர்க்க முடியாத ஒரு பிரிவினராக மாறினார்கள்.

இவர்கள் நாட்டுக்கு வந்த காலம் முதல் எவ்வித தலைமைத்துவப் பின்னணியும் அற்ற உழைக்கும் கூட்டமாக இருந்ததால், வாழ்வின் பெரும் பகுதி உழைப்பதிலேயே முழுமையாக்கப்பட்டது. அதைத்தவிர அவர்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வாழ்வியல் வசதிகளோ உரிமைகளோ வழங்க காலனித்துவ அரசோ, ஏன்? சுதந்திர அரசும் கூட முன்வரவில்லை.
இந்நிலையில், இம்மக்களின் உழைப்பின் கொடுமையையும் ஏற்பட்ட துயரங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் ஒரே ஆதாரமாக விளங்குவது நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். இது இம்மக்களின் இருப்பையும் மண் சார்ந்த உணர்வையும் நில உரிமைச் சார்ந்த விருப்பையும் பேசுவதற்கு எமக்கு கிடைக்கின்ற சான்றுகளாக நிற்கின்றன.
அந்தவகையில், மலையக நாட்டார் இலக்கியம் இம்மக்கள் மனதிலிருந்த கோபங்களையும் ஆத்திரங்களையும் வெளிப்படுத்தும் வெடித்தெழுந்த உரிமைக் குரலாகவும், உழைப்பாளர் வர்க்கத்துக்கே உரிய மனக்குமுறலாகவும் வெளிப்பட்டு நிற்கிறது. மக்களின் இப்பாடல்களே இம்மக்களுக்குரிய இருப்பைப் பெறுவதற்கும், மண் சார்ந்த உணர்வை இன்றைய சமூகத்தினர் கட்டியெழுப்புவதற்கும், உரிமை சார்ந்து குரல் எழுப்புவதற்கும் எமக்குத் துணை நிற்கின்றன.
இதில் முக்கியமாக ஆரம்பகால நாட்டார் பாடல்களாக கோப்பிக்காலப் பாடல்கள் இருந்தன.
“கோணக் கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையில
ஒரு பழம் தவறுச்சினு
ஒதச்சான் அய்யா சின்னத்துரை”
கோப்பிக் காலத்திலேயே இவர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டார்கள் என்பதற்கு இந்தப் பாடல் சான்றாக அமைகின்றது.
கோப்பிக்காலத்தில், பெரும்பாலும் தென்னிந்தியத் தமிழ் மக்கள் கோப்பி அறுவடைக்காக வந்துவிட்டு, அறுவடை முடிந்ததும் மீண்டும் தாயகம் திரும்புபவர்களாக இருந்தார்கள். இக்காலத்தில் இவர்கள் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருக்கவில்லை. ஆனாலும் இதற்கு முன்பதாகவே ஒரு கூட்டம், கறுவா உற்பத்திக்காக அழைத்துவரப்பட்டார்கள். அவர்கள் நீண்டகாலம் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து, சிங்களத் தேசிய இனத்திற்குள் மறைந்துபோன கூட்டமாகிவிட்டார்கள்.
கோப்பிக்கு ஏற்பட்ட நோய் காரணமாக கோப்பிச் செய்கை பெரும் வீழ்ச்சியடைந்ததால், காலனித்துவக்காரர்கள் இலாபம் பெறுவதற்காக கோப்பிக்குப் பதிலாக தேயிலையை இலங்கையில் அறிமுகப்படுத்தினர். தேயிலை அறிமுகமான பின்னர் தொழிலாளர்கள் இங்கு நிரந்தரமாகத் தங்கவைக்கப்பட்டனர். இதன் பின்னரே நிரந்தரமான இருப்பும் உழைப்பும் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் அழைத்துவரப்பட்ட இம்மக்களின் வாய்மொழிப் பாடல்கள்தான் அவர்களின் துயரம் மிகுந்த வருகையையும் வலியையும் எடுத்துக்காட்டும் ஆதாரங்களாக அமைந்தன.
“பானையில நெய் இருக்க
பழனி சம்பா சோறு இருக்க
எருமைத் தயிர் இருக்க
ஏண்டி வந்தோம் கண்டி சீம”
“கால் நடையா தானடந்து
காடுமல தான் கடந்து
முள் எலும்பு வழிகாட்ட
மூணாறு வந்து சேர்ந்தோம்”
இம்மண்ணில் வந்து இம்மக்கள் மகிழ்வான வாழ்க்கை வாழவில்லை. அதற்குப் பதிலாக கொடுமையான வாழ்க்கையையே அனுபவித்தனர். அந்தத் துயரமும் துன்பமும் இம்மண்ணை நேசிக்கும் மனநிலையைப் பெறுவதற்குக் காரணமாக அமைந்தன. அதேவேளை, கல்விப்புலம் சார்ந்த புதிய பரம்பரையின் எழுச்சியும், மண் சார்ந்த போராட்டமும், அதன் விளைவாக ஏற்பட்ட இழப்புகளும் இம்மண்ணின் மீதான பற்றையும் பாசத்தையும் வலிமைப்படுத்தின. ஒடுக்குமுறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளான சமூகமொன்றின் விடுதலை பெறுவதற்கான போராட்டமும், அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் வரலாறும் மண்ணின் மீதான பற்றுதலை மேம்படுத்துவதற்கான வடிகாலாய் அமையும் என்பதை உலக நாடுகளின் வரலாறுகள் பதிவு செய்துள்ளன.
இத்தகைய வலிமை சார்ந்த எழுச்சிக்கும், போராட்டத்திற்கும் மக்களிடம் காணப்பட்ட நாட்டுப்புற இலக்கியங்களும் அவை அளித்த உற்சாகமும் அடிப்படையாக அமைந்தன. அவற்றில் இம்மக்கள் பட்ட துயரத்தின் வலிகள் புதைந்து கிடந்ததாலேயே இத்தகைய மாற்றமும் எழுச்சியும் வீறுகொண்டு எழுந்தன.
மக்களின் உழைப்பின் கடுமையை எடுத்துக்காட்டும் பாடல்களாகப் பின்வரும் பாடல்களைக் குறிப்பிடலாம்.
“காலையில நேரம் பிடிச்சு
காடு தொங்க போய் முடிச்சு
கூட நிறைலையே
கூன பைய தோட்டத்துல”
“முன்னூறு ஆளுக்குள்ள
முள்ளு குத்தும் ஏ சாமி
முள்ளு ரெண்டும் மண்ணுக்குள்ள
முழிகள் ரெண்டும் ஏ மேல”
“எண்ணி எண்ணி குழி வெட்டி
இடுப்பு அடிச்சி நிக்கயில
வெட்டு வெட்டு என்கிறானே
வேலயத்த கங்காணி”
“பொழுது இறங்கிருச்சு
பூ மரமும் சாஞ்சிருச்சு
இன்னமும் இரங்கலையோ
எஜமானே உங்க மனம்”
இவர்கள் பெரும்பாலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உழைக்க வேண்டியிருந்தது. இங்கு ஆண்கள் காலை ஆறு மணிக்கு முன்பதாகப் பிரட்டுக்களம் செல்ல வேண்டும். ‘பிரட்டுக்களம்’ என்பது ஆண்கள் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலை எது என்பதை கணக்கப்பிள்ளை தீர்மானித்து, அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய களம் பற்றி அறிவிக்கும் இடமாகும். பிரட்டுக்குப் போகாவிட்டால் அந்த நபர் அன்றைய நாள் முழுவதும் பெண்களோடு கொழுந்தெடுக்கச் செல்ல வேண்டியிருக்கும். பிரட்டுக்குப் போனால் தான் ஏனைய வேலைகளுக்கு, அதாவது சில்லறை வேலைகளுக்கு, ஒதுக்கப்படுவார்கள். எனவே பிரட்டுக்களம் என்பது ஆண்களுக்கு மிகவும் முக்கியமான நாளாந்தச் செயற்பாடாகும். காலை ஆறு மணிக்கு முன்னர் போய் முதலில் நிற்பவர்களுக்கு சாதாரணமான வேலைகள் வழங்கப்படும். எனவே ஆண்கள் அனைவரும் காலை ஆறு மணிக்கு முன்பதாகப் பிரட்டுக்களம் செல்வது வழக்கமாக இருந்தது.
அதேபோல் பெண்கள் காலை 7:30 மணிக்கு அவர்கள் வேலைத்தலத்தில் நிற்க வேண்டும்; எனவே அவர்கள் காலை ஏழு மணிக்கே வேலைக்குச் சென்று ஆக வேண்டும். வெயிலோ மழையோ, எந்த நிலையிலும் அதனைத் தவிர்க்க முடியாது. அன்றைய நாளின் உழைப்பின் முடிவில்தான் அன்றைய நாளின் வருமானம் உறுதியாகும். இத்தகைய கஷ்டங்களின் போது, தன் சொந்த தேசத்தை விட்டுவந்து, தாய் மண் நினைவுகளில் மூழ்கி இருப்பதை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.
“சீரான சீமை விட்டு
சீரழியக் காடு வந்தோம்
கூட தல மேல
குடி வாழ்க்கை கானகத்தில்”
ஒருபுறம் தேயிலை சார்ந்த வாழ்வியலும், இன்னொருபுறம் ரப்பர் தோட்டம் சார்ந்த வாழ்வியலும் இந்த மண்ணில் நிறைந்து கிடந்தன. அந்தவகையில், ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலைக் காட்டும் இப்பாடல் குறிப்பிடத்தக்கதாகும்.
“ரப்பர் மரமானேன்
நாலு பக்க வாதுமானேன்
எரிக்க விறகுமானேன்
இங்கிலீஷ்காரனுக்கு
ஏறிப் போக காருமானேன்”
நாட்டில் புதிய பொருளாதாரப் பண்பாட்டை உருவாக்கிய ஆங்கிலேயர்கள், தேயிலை, ரப்பர், கோப்பி, கறுவா ஆகியவற்றின் மூலம் உலகளவில் சம்பாதித்த பணத்தை தங்களுடைய வாழ்வியலை செழுமைப்படுத்தவே பயன்படுத்தினர். எனவே, நாட்டின் முக்கிய பொருளாதார சக்தியாக பெருந்தோட்டத்துறை திகழ்ந்தது.
இலங்கை நாட்டுக்கு உலகம் தழுவிய ஒரு நாமத்தை உருவாக்கித் தந்தது ‘சிலோன் டீ’ என்ற சொல். இந்தத் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பே அதற்கு அடித்தளமாக அமைந்தது. குறிப்பாக, பெண்களின் உழைப்பினாலேயே உயர்நிலை அடைந்தது. ஆனால் பெண்களுடைய வாழ்க்கை, அவர்களுடைய தேவைகள் என்பன எந்த அளவிலும் ஏனைய சமூகத்துக்கு நிகராக மேம்படுத்தப்படவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக, உழைக்கும் இயந்திரமாகவே பயன்படுத்தப்பட்டனர். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் உலகப் பெண்கள் தொடர்பாகக் குறிப்பிடுகையில்,
“தொழிற்சாலை முறையின் அடிப்படையில் அமைந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கையில், குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் மிகவும் தீவிரமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. வர்க்க சமுதாயத்தின் வளர்ச்சியினால் உற்பத்தியில் இருந்து அகற்றப்பட்டிருந்த பெண்கள் மீண்டும் சமூக உற்பத்திக்குள் கொண்டுவரப்பட்டனர்” என்றனர்.
இந்தக் கருத்து பெரும்பாலும் மலையகப் பெண்களுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இங்கு பெண்கள் கடும் உழைப்பாளர்களாக மாற்றப்பட்டு இருந்தனர். அவர்களின் ஒவ்வொரு அசைவும் ஒடுக்குமுறைக்குள் உள்வாங்கப்பட்டிருந்தமை இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும். அத்தகைய அடக்குமுறைகளில் இருந்து அவர்கள் விடுபட முடியாத அளவுக்கு உழைப்பும், இந்தியப் பண்பாட்டோடு கலந்திருந்த சாதி, சடங்கு முறைகளும் அவர்களை அடக்கி ஒடுக்கின. மேலும், அவர்கள் வேலைத்தலத்தில் பெற்ற அவமானங்களும் அதிகமானவை.
“கூட நிறையவில்ல
கொழுந்தெடுக்கச் சிந்தை இல்ல
கங்காணி சொன்ன சொல்லு
கண்ணீரைக் கொட்டுதடி”
கங்காணிமார்களின் அடக்குமுறையும், ஆபாசப்பேச்சும், அவமானப்படுத்தலும் பெண்களை மேலும் துன்பப்படுத்தின. அவர்கள் கங்காணியை எதிர்த்து எந்த வேலையையும் செய்ய முடியாது என்ற மனநிலையும் உருவாகியது. எதிர்த்தால், முறையான அல்லது வளமான வேலைத்தலத்தில், நிம்மதியாகக் கொழுந்தெடுப்பதற்கான நிரை (தேயிலை மரங்களின் வரிசை) பிடிக்க இடம் கொடுக்க மாட்டார்கள் என்ற பயமும் ஏற்பட்டது.
கொழுந்தெடுப்பதில் பல்வேறு நுட்ப முறைகள் உள்ளன: அரும்பைக் கிள்ளிவிடக் கூடாது, கரட்டு இலையை எடுக்கக்கூடாது, முத்தலை எடுக்கக்கூடாது, காது முடிச்சு போடக்கூடாது. கங்காணிமார் இவற்றைக் காரணங்காட்டி, பெண்களை பின்னால் இழுத்து மீண்டும் அவற்றைச் சரி செய்யும்படி சொல்வார்கள். இது சிறந்த தொழிலாளருக்கான அடையாளமாக இருக்காது. ஒவ்வொரு பெண்ணும் இதனை அவமானமாகவே கருதுவார். எனவே, பெண்கள் இந்தச் செயலை விரும்ப மாட்டார்கள். அதனால், கங்காணிமார்கள் தங்கள் வஞ்சத்தைக் காட்டுவதற்கு, மேற்குறிப்பிட்ட செயல்களில் பெண்களை ஈடுபடுத்தி அவர்களைப் பழிவாங்குவார்கள். இந்த அவமானச் செயலுக்கு உட்படாத வகையிலும், பெண்கள் தமது வேலையை முடிக்க வேண்டிய கட்டாய நிலை இருந்தது.
இங்கு அடக்குமுறை என்பது அதிகாரம் சார்ந்த ஒன்றாகும். அதேவேளை, வேலைத்தலத்தில் கங்காணிகளின் அடக்குமுறை அவமானப்படுத்தலோடும், அடிபணிதலோடும் இணைந்த ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே ஊர், ஒரே வாழ்விடம் என்ற போதும், அதிகார நிலையில் கங்காணிகள் துரைமார்களின் சேவகர்களாக மதிக்கப்பட்டதால், அவர்கள் துரைமார்களைவிடக் கொடுமையான அடக்குமுறையாளர்களாகத் திகழ்ந்தனர். 1946 ஆம் ஆண்டு இலங்கையில் கண்காணிமார்கள் சட்டம் ஒழிக்கப்பட்டது. இது, அவர்கள் பெருந்தோட்டத்துறையில் எவ்வளவு வலிமையோடு இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
“அடியும் பட்டோம்
மிதியும் பட்டோம்
அவமானச் சொல்லும் பட்டோம்
முழி பிரட்டி கங்காணியின்
மூங்கிலிலே அடியும் பட்டோம்”
“தோட்டம் பெரலி இல்ல
தொர மேல குத்தம் இல்ல
கண்காணிமாராலே
கணப்பிறலி ஆகுதய்யா”
என்ற பாடல்கள் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் கண்காணிமார்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
இதிலிருந்து விடுபட பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை பல்வேறு வகையில் அடக்கப்பட்டன. இத்தகைய சந்தர்ப்பத்தில்தான் கோ. நடேசய்யரின் வருகையும், தொழிற்சங்க முயற்சியும் இம்மக்களை எழுச்சிப்படுத்தின. அவரின் மனைவி திருமதி மீனாட்சி அம்மாள் எழுச்சிமிக்க பாடல்களை எழுதி, இம்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கால ஓட்டத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் இவர்களின் வாழ்வியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தின. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது டொனமூர் அரசியல் திட்டமாகும். இதன்மூலம் இம்மக்கள் வாக்குரிமை பெற்றதோடு, 100 ஆண்டுகளுக்கு பின்னர் அரசியல் நீரோட்டத்திலும் இணைந்தனர். வர்க்க குணமிக்க அரசியல் சிந்தனைக்குள் உள்வாங்கப்பட்ட இவர்களின் அரசியல் பிரவேசத்தையும், பாராளுமன்ற உறுப்புரிமையையும் எண்ணி அஞ்சிய பௌத்த சிங்களப் பேரினவாதமும், முதலாளித்துவ அரசியல் சிந்தனைகளும் இவர்களை நாடற்றவர்களாக ஆக்கி குடியுரிமையைப் பறித்தன.
“மலையக மக்களின் தோட்டப்புற வாழ்வுடன் இணைக்கப்பட்ட அரை அடிமை நிலை, அதன் அடியாக தோன்றிய வர்க்க இனத்துவ அடக்குமுறைகள், கூடவே அம்மக்கள் தமக்காகச் செய்த தியாகங்கள் யாவும் அவர்கள் இந்த நாட்டின் தனித்துவமான இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தன. அத்தகைய தேசியத்தின் அடியாக எழக்கூடிய எழுச்சிகள், மாற்றங்கள் என்பன ஒரு வகையில் நாட்டின் ஆதிக்க சக்திகளை கதிகலங்கவே செய்திருக்கின்றன” என்ற மு.சி. கந்தையாவின் கருத்து இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இதன் பின்னர் இடம்பெற்ற துன்பங்கள் தனியாகப் பேசப்பட வேண்டும். அடுத்ததாக, இவர்களின் இருப்பிலும், இந்த நாட்டின் பிரஜைகளாக நிலை பெறுவதிலும் இப்பாடல்கள் எப்படித் தாக்கம் செலுத்தின என்பதைப் பார்க்கலாம். இப்பாடல்கள் கற்றுத்தந்த வரலாற்று இழப்புகளும், துயரங்களுமே அதற்கு உந்துசக்தியாக அமைந்தன.
“கூனி அடிச்ச மல
கோப்பிக் கண்ணு போட்ட மல
அண்ணன் தோத்த மல
அந்தோ தெரியுதடி”
இப்பாடல் இம்மண் சார்ந்த உரிமையை நிலைபெறச் செய்யும் சிந்தனையை வெளிப்படுத்துகின்றது. இது எமது பரம்பரையால் உருவாக்கப்பட்ட மண், பல்லாயிரம் தொழிலாளர்களின் உயிரை விதைத்திருக்கின்ற மண், இதன் உரிமையும் நிலைபேறும் எமக்கு உரித்தானது என்ற மனநிலை மக்களிடத்தில் ஏற்படத் தொடங்கியபோது தான், மலையக மக்கள் நாங்கள், மலையகம் எமது தேசம் என்ற கருத்தாடல்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டன.
“ஊரான ஊர் இழந்தேன்
ஒத்தப் பன தோப்பிழந்தேன்
பேரான கண்டியில
பெத்த தாய நானிழந்தேன்”
என்ற பாடல் வரிகள், இம்மண்ணின் மீது இம்மக்கள் இருப்புக் கொண்டதற்கும், இதுவே என் தாய் மண் எனப் போற்றியதற்கும் ஆதாரமாக அமைகின்றன.
தொழிற்சங்க வளர்ச்சி, இடதுசாரிகளின் எழுச்சி, புதிய கல்விப் பரம்பரைகள், அரசியல் மாற்றங்கள், தொடர்ச்சியாக ஏற்பட்ட இன அழிப்பு முறைகள் — யாவும் இம்மக்களின் எழுச்சிக்கும், இருப்புக்கும் உரம் இட்ட நிகழ்வுகளாகத் திகழ்கின்றன.
இலங்கையில் C.W.W. கன்னங்கராவினால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்திலும் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவ்வாறு, கல்வி நிலையில் புறக்கணிக்கப்பட்ட மக்கள், பல்வேறு போராட்டங்களின் மூலம் கல்வித்துறையிலும் காலடி பதித்து முன்னோக்கி வருவதற்கு இந்த வாய்மொழிப் பாடல்களே உந்துசக்தியாக இருந்துவந்தன. ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளின் எழுச்சிக்கு நாட்டுப்புற இலக்கியங்கள் அடிப்படையாக அமைந்ததுபோல், மலையக மக்களின் இருப்புக்கும், பண்பாட்டு எழுச்சிக்கும் வாய்மொழிப் பாடல்கள் ஆதாரமாக அமைந்தன. அவற்றின் மூலம் மலையக கலாசாரமும் பண்பாடும் கட்டியெழுப்பப்பட்டன.
மலையக மக்களின் உழைப்பு சார்ந்த பல அம்சங்கள், கலாசார உருவாக்கத்தில் வலிமைபெற்று இருப்பதை உணரலாம். எனவே, ‘உழைப்பே மனிதக் கலாசாரத்தை சிருஷ்டிக்கிறது அல்லது உழைப்பை ஒட்டிய சூழ்நிலைக் காரணிகளே கலாசாரத்தைத் தீர்மானிக்கின்றன’ என்ற வாதம் உண்மையாகிறது. இதுவே மலையக மக்களின் இருப்புக்கும், உயிர்ப்புக்கும் அடிப்படையாகவும் அமைகிறது.
சான்றாதாரங்கள்
- சிவலிங்கம். மு., (2007) மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள், ரெக்னோ பிரின்ட்.
- சாரல் நாடன்., (1993) மலையக வாய்மொழி இலக்கியம், சவுத் ஏசியன் புக்ஸ் – சென்னை.
- வேலுப்பிள்ளை., மலைநாட்டு மக்கள் பாடல்கள், கலைஞன் பதிப்பகம் – சென்னை.
- கந்தையா. மு.சி., (2022) சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், பொன்னுலகம் புத்தக நிலையம் – திருப்பூர்.
- கிரிஸ் ஹார்மோன்., (2014) மார்க்சிய இயங்கியல், விடியல் பதிப்பகம் – கோவை.
- லெனின் மதிவானம்., (2014) சமூக இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும், மகிழ் பதிப்பகம் – கிளிநொச்சி.



