நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 1

June 19, 2025 | Ezhuna

இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன்

நான்காவது உலகம்’ (The Fourth world), அவ்வுலகிற்குள் சிறைப்பட்டிருக்கும் அரசு இல்லாத தேசிய இனங்கள் (Stateless Nations) என்ற இரு கருத்தாக்கங்கள் உலகின் புவி அரசியலை (Geo – Politics) புரட்சிகரமான புதிய கோணத்தில் நோக்குவதற்கு உதவிய எண்ணக்கருக்களாகும்.

மிக்சிக்கன் பல்கலைக்கழகம் (1970-1977), பேர்க்லி பல்கலைக்கழகம் (1977-2009) ஆகிய இரு பல்கலைக்கழகங்களிலும் புவியியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் பெர்னாட் நைட்ஸ்மன் (1941-2000) நான்காவது உலகம் பற்றிய ஆய்வுகளின் முன்னோடிகளில் ஒருவர். அவர் நான்காவது உலகம், அரசு இல்லாத தேசிய இனங்கள் ஆகிய இரு கருத்தாங்களையும் அறிமுகம் செய்யும் ஆய்வுகள் பலவற்றை எழுதியுள்ளார். அவரின் ஆங்கிலக் கட்டுரையொன்றினைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது. 

அறிமுகம்

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஆசியா, ஆபிரிக்கா ஆகிய இரு கண்டங்களிலும் புதிய அரசுகள் உதயமாகின. கிழக்கு ஐரோப்பாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்ட் அரசுகள் தோன்றின. இப்பின்புலத்தில்தான் மூன்றாவது உலகம் என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது. முதலாளித்துவ பொருளியல் மூலம் வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளையும், ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் முதலாவது உலகம் என்றும்; சோவியத் ரஷ்யா தலைமையிலான கம்யூனிஸ்ட் நாடுகளை இரண்டாவது உலகம் என்றும் பிரித்து நோக்கியதோடு, இந்த இரண்டு உலகத்தினின்றும் வேறுபட்ட பொருளியல், சமூக, அரசியல் நிலைமைகளைக் கொண்டிருந்த நாடுகள் யாவற்றையும் ஒன்றுசேர்த்து மூன்றாவது உலகம் (The third world) என்றும் சமூக விஞ்ஞானிகள் கூறலாயினர். 1990களின் தொடக்க ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்தின் உடைவுடன் இரண்டாவது உலகம் என்ற வகை பொருளற்றதாயிற்று. இக்கட்டத்தில் ‘நான்காவது உலகம்’ (The fourth world) என்ற வகையும் சேர்ந்து கொண்டது.

1980களின் பின்னர் உலகின் தேசிய இனங்களின் (Nations) போராட்டங்கள் வலுப்பெற்றன. 1945 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 72 அரசுகள் இருந்தன. இந்த எண்ணிக்கை 1993 இல் 191 ஆக உயர்ந்தது. இந்த 191 அரசுகளின் எல்லைகளுக்குள் 5000 தேசிய இனங்களும், அவற்றின் வாழிடங்களும், தாயகங்களும் உள்ளடங்கி இருந்தன. 191 வரையான அரசுகளுள் 10க்கும் குறைவான அரசுகளே ஒரு தேசிய இனம், ஒரு அரசு (One Nation, One state) என்ற வரையறைக்குள் அடக்கக்கூடியனவாக இருந்தன. ‘நேஷன் ஸ்ரேற்’ (Nation State) என்ற கருத்துக்குப் பொருத்தமற்ற பல்தேசிய இன அரசுகளாகவே (Multi National States) உலகின் 95% ஆன அரசுகள் இருந்தன. தேசிய இனங்களை அடக்கி, ஒடுக்கி அவற்றின் பண்பாட்டை உருக்குலைத்து, மேலாதிக்கம் பெற்ற தேசிய இனத்தோடு உருத்தெரியாத வகையில் இணைத்துக்கொள்ளும் கொள்கைகளை அரசுகள் பின்பற்றின.

உலகின் 5000 வரையான தேசிய இனங்களின் நோக்கில், உலகின் அரசியல், பொருளியல், வரலாற்றையும், பண்பாட்டையும் நோக்கும் முறையை ‘நான்காவது உலகம்’ (The Fourth World) என்னும் கோட்பாடு முன்வைக்கிறது. அரசியல் புவியியல் (Political Geography) என்னும் கல்வித்துறையின் ஊடாக கிளைத்த கோட்பாடு இது. உலகின் நிலவரையை அல்லது தேசப்படத்தை மரபுவழிப் புவியியலும், வரலாறும், அரசியலும் 191 வரையான ஒடுக்குமுறை அரசுகளின் பார்வையில் விளக்கம் செய்கின்றன. அவ்விதம் இல்லாமல் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பார்வையில் தேசப்படத்தை விளக்கும் கோட்பாடே நான்காவது உலகக் கோட்பாடு ஆகும். நான்காவது உலகக் கோட்பாடு 5000 வரையான தேசிய இனங்களின் துன்பத்தையும் துயரத்தையும் அவற்றுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளையும் சமூக விஞ்ஞான ஆய்வுகளின் மையப்பொருளாக மாற்றியுள்ளது. 

தேசிய இனங்களும் மக்கள் சமூகங்களும்

புவியியல், அரசியல், வரலாறு தொடர்பான மரபுவழிப்பட்ட ஆய்வு நூல்களில் கையாளப்படும் அரசுகள் மையமுறை ஒன்று உள்ளது. இந்த முறைப்படி நாடுகள் (அரசுகள்) பிராந்தியங்கள், நாடுகளின் கூட்டுகள், வல்லாதிக்க அரசுகள் என்ற முறையிலேயே உலகப்படங்களைப் பார்க்கவும் விளக்கவும் நாம் பழக்கப்பட்டுள்ளோம். புவியியல், வரலாறு, அரசியல் ஆகிய துறைகளும் இவ்வாறுதான் உலக நிலவரையை விளக்கம் செய்கின்றன. இதற்கு மாறாக புவியியலையும், வரலாற்றையும், அரசியலையும், 5000 வரையான தேசிய இனங்களின் நோக்கில் பார்க்க முனைகின்றது இக்கோட்பாடு. இந்தப் பார்வையைத்தான் நான்காவது உலகம் என்ற கோட்பாடு வழங்குகின்றது. உலகப் பிரச்சினைகள், அவற்றிக்கான தீர்வுகள் யாவும் 5000 வரையான ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நோக்கில் பார்க்கப்படும்போது, அத்தேசியங்களை மையப்படுத்தி நோக்கும் போது, மிகவும் வித்தியாசமான படம் ஒன்று விரிகிறது. இதுவே நான்காவது உலகம் வைக்கும் பார்வை. ஏனெனில் வழமையான பார்வை 191 வரையான உலகநாடுகள் அல்லது அரசுகள் என்ற சட்டமுறையான ஒரு வலையமைப்பை வைத்து இந்த 5000 தேசிய இனங்களைப் பார்ப்பதோடு, அவற்றை இனக்குழுமங்கள் (Ethnic groups) என்றும், சிறுபான்மையினர் (Minorities) என்றும் ஒதுக்கிவிடுகின்றது. காலனித்துவகால வல்லரசுகளும் நவீனகாலத்து அரசுகளும் எவ்வாறு இந்த 5000 வரையான தேசிய இனங்களையும், அவற்றின் நியாயபூர்வமான உரிமைகளையும், இருப்பையும் புறந்தள்ளி வந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டும் கோட்பாடே நான்காவது உலகம் என்னும் கோட்பாடு. உலகின் உயிரியல் பன்மைத்துவம், கலாசார பன்மைத்துவம் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்கான முயற்சிகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும், இறுதியில் இவை தேசங்களின் சிதைவுக்கும், உடைவுக்கும் காரணமாகின்றன என்பதையும் இக்கோட்பாடு விளக்குகிறது.

அரசியல் புவியியல் நோக்கில் உலகைப் புரிந்துகொள்வதற்கு சில கலைச்சொற்களின் பொருள் விளக்கம் மிக முக்கியமானது. தேசிய இனம் (Nation), அரசு (State), தேசிய அரசு (Nation State), மக்கள் சமூகம் (A People), இனக்குழுமம் (Ethnic Group) ஆகியனவே இந்த அடிப்படைக் கலைச்சொற்கள். இந்த கலைச்சொற்களையும் அவற்றின் வரைவிலக்கணத்தையும் அறிந்து, அவற்றை ஒன்றில் இருந்து ஒன்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அதைவிடுத்து கண்டபடியும், பொருத்தமின்றியும் அச்சொற்களை உபயோகிக்கக்கூடாது. இச்சொற்கள் குறிக்கும் மக்களையும் அவர்களின் அடையாளத்தையும், வாழிடத்தின் புவியியல் வரையறையையும் பற்றிய கருத்துகளில் குழப்பத்தை உண்டாக்கும் முறையில் இச்சொற்களை உபயோகிப்பதன் மூலமே உலகின் பெரும்பாலான நாடுகளில் யுத்தங்கள், இன அழிப்புகள், இடப்பெயர்வுகள், அகதிகள் புலம்பெயர்வு, மனித உரிமை மீறல்கள் என்பன நடந்தேறுகின்றன. பாடநூல்கள், பத்திரிகைக் கட்டுரைகள், வானொலி, தொலைக்காட்சி யாவற்றிலும் இச்சொற்கள் மிகுந்த கருத்துக் குழப்பம் விளைவிக்கும் முறையில் உபயோகிக்கப்படுகின்றன. அகராதிகளும் குழப்பத்தைத் தீர்ப்பதாக இல்லை. குறிப்பாக Nation, State, Nation State என்பன குழப்பத்தோடு உபயோகிக்கப்படுகின்றன.

தேசிய இனம் (Nation)

தேசிய இனம் என்ற சொல் ஒரு புவியியல் பிரதேச எல்லைக்குள் வாழும் ஓரினத்தன்மையுடைய சனக்குழுமத்திற்குப் பண்பாட்டு பிரதேச அடையாளம் ஒன்றையும் வழங்குகிறது. அவர்கள் தம்மை ஒன்றுபட்ட மக்கள் கூட்டம் (One People – ‘ஒரு தாய் மக்கள் நாமே’) என நினைக்கின்றனர். பொதுவான முன்னோர்களின் வழித்தோன்றல்கள் தாம் என்ற எண்ணம் இவர்களிடம் உண்டு. சமூகம், நிறுவனங்கள், கருத்தியல், மொழி, பிரதேசம் ஆகியவற்றாலும் தாம் ஒன்றிணைந்தவர்கள் என்ற எண்ணம் தேசிய இனம் என்ற கருத்தில் உள்ளடங்கி உள்ளது. சில சந்தர்ப்பங்களில் ஒரு தேசிய இனத்தினர் குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் அமைந்துவிடுவதுண்டு. திபெத்தியர் என்றும் பாஸ்க் (Basque) என்றும் கூறுகின்றோம். இவை தேசிய இனங்கள். இத்தேசிய இனங்களுக்கு ஒரு பண்பாட்டுத் தாயகம் உண்டு. திபெத்துக்குள் நுழைந்து ஒருவர் அங்கு வதிவதால் அவர் திபெத்தியர் ஆவதில்லை. அவர் அந்நியரே. இதேபோல பாஸ்க்மொழியைக் கற்பதால், அதனைப் பேசுவதால் ஒரு பிறத்தியான் பாஸ்க் தேசிய உறுப்பினர் ஆவதில்லை. ஆகவே தேசிய இனம் என்னும் போது, ஒரு மக்கள் கூட்டத்திற்கு ஒரு பண்பாட்டுத் தாயகம் என்று ஒன்றையும் குறிக்கிறோம். அந்தப் பண்பாட்டுத் தாயகத்தில் பிறப்பவன் அந்த தேசிய இனத்தவன். அடுத்து நாம் முக்கியமான சொற்கள் சிலவற்றின் பொருளைப் புரிந்துகொள்வோம்.

State: தமிழில் ‘அரசு’ என்கிறோம். புவியியல் எல்லை ஒன்றிற்குள் வாழும் மக்கள் தொகுதி மீது இறைமை கொண்டது அரசு. 1993 இல் உலகில் 191 அரசுகள் இருந்தன. 1945 இல் 72 அரசுகள் மட்டுமே இருந்தன. அரசு தோற்றம் பெற்ற ஆண்டு, திகதி என்பன உண்டு. அவை திட்டவட்டமாகக் கூறக்கூடியன (தமிழில் ‘அரசு’ என்பதை ‘நாடு’ என்ற சொல்லாலும் குறிப்பிடுவர்).

Nation: ‘UNO’ என்ற சுருக்கப்பெயராலும் ‘United Nations Organisations’ (ஐக்கிய நாடுகள் தாபனம்) என்ற தொடராலும் அழைக்கப்படும் உலக அரசுகளின் சங்கமான நிறுவனத்தின் பெயரில் உள்ள சொற்குழப்பத்தை அவதானியுங்கள். இங்கே ‘States’ என்ற சொல்லிற்குப் பதிலாக ‘Nations’ என்ற சொல் உபயோகிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தமிழில் ‘நாடு’, ‘அரசு’ என்ற சொற்கள் ஒத்த கருத்துடையன. ‘UNO’ என்ற பெயரில் ‘நாடுகள்’ அல்லது ‘அரசுகள்’ என்ற சொல் இடம்பெறுவதற்குப் பதிலாக ‘Nations’ உபயோகிக்கப்படுகிறது. இன்று இச்சொல் வழக்கத்தில் வந்துவிட்டது. இன்று ஐ.நா தாபனத்தை எவரும் தேசிய இனங்களின் ஐக்கிய தாபனம் என்று பொருள் கொள்வதில்லை. ஆகவே UNO என்பதில் அடங்கும் ‘அரசுகள்’ Nations என்ற சொல்லால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது. நான்காவது உலகம் கோட்பாடு, Nation என்பதை State இல் இருந்து வேறுபடுத்தி நோக்குவதை அழுத்திக்கூறும். ஒரு அரசின் எல்லைக்குள் பல Nations அல்லது தேசிய இனங்கள் இருக்கும். உலகின் 95% ஆன அரசுகள் பல்தேசிய இனங்களைக் கொண்டவை.

Nation State: ‘ஒரு அரசு, ஒரு தேசிய இனம்’ என்ற கருத்தை Nation, State என்ற இரு சொற்சேர்க்கையாய் அமையும் சொல் குறிக்கின்றது. ‘நேஷன் ஸ்ரேற்’ என்ற கருத்து வரலாற்றுரீதியாக ஐரோப்பாவில் உருவானது. இன்று உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில அரசுகளே தம் எல்லைக்குள் முழுமையாக ஒரே ஒரு தேசிய இனத்தைக் கொண்டுள்ளன. போர்த்துக்கல், யப்பான் ஆகியன நேஷன் ஸ்ரேற்றுகளுக்கு உதாரணம். இத்தாலி பல அரசுகளாகச் சிதறுண்டு இருந்தது. இந்த அரசுகளின் ஒன்றிணைவால் இத்தாலி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. அப்போது இத்தாலிய அரசியல்வாதி ஒருவர் கூறினார்.

“இத்தாலியை உருவாக்கிவிட்டோம். இத்தாலியர்களை உருவாக்குவது இனிச் செய்யவேண்டிய வேலை.”

மேலும் தேசிய இனம் தன்னைத்தானே அடையாளம் காட்டி நிற்கிறது. உதாரணமாக ஸ்பெயின் நாட்டிற்குள் கற்றலோனியர்கள் இருக்கின்றனர். அவர்களது தாயகமான கற்றலோனியா இருக்கிறது. அதை ஸ்பெயின் நாடோ, பிற எவரோ அங்கீகரித்தால் என்ன, அங்கீகரிக்காவிட்டால் என்ன, கற்றலோனியரின் இருப்பை, அதன் யதார்த்தத்தை யாரும் மறுக்க முடியாது. அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. தேசிய இனங்கள் பழைமையானவை. தமது தோற்றம் இன்ன ஆண்டு, திகதி நிகழ்ந்தது எனக்கூறி அவை விழாக்கள் நடத்துவதில்லை. படிப்படியாக, ஒவ்வொரு கண்டத்திலும் இத்தேசிய இனங்கள் உருவாகின. பல்வேறு அளவும், மக்கள் தொகையும் கொண்டனவாக 5000 வரையான தேசிய இனங்கள் உலகில் இன்று உள்ளன.

மக்கள் சமூகம் (A people)

A people என்றதன் பொருள் பற்றி அடுத்துப் பார்ப்போம். இதன்மூலம் மக்கள் சமூகம் தன்னைத்தானே அடையாளம் செய்கிறது. ஒரு குறித்த மக்கள் சமூகம் பிறரில் இருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்கின்றது. இவர்களிடையே ‘நாம்’ என்ற எண்ணம் இருக்கும். அருகிலோ, தூரத்திலோ உள்ள பிறரை இவர்கள் தம்மில் இருந்து வேறுபடுத்துவர். பிறரும் இவர்களை வேறுபடுத்தி அடையாளம் செய்வர். பொதுவான வரலாறு, பொதுவான புவியியல் பிரதேசம், இனம், (Race), இனக்குழுமம் (Ethnicity) ஆகியவற்றால் ஓரினத்தன்மை, பிணைப்பு என்பன ஒரு மக்கள் சமூகத்திடம் காணப்படும். மொழி, மதம், கருத்தியல், கலாசாரப் பிணைப்புகள், பொதுவான பொருளியல் முறை என்பனவும் இருக்கும். தம்மை தனித்த குழுவாகத் தொடர்ந்து அடையாளம் காட்டக்கூடிய அளவுக்கு தேவையான சனத்தொகையைக் கொண்டவர்களாகவும் இவர்கள் இருப்பர். ஆகவே ஒவ்வொரு மக்கள் சமூகமும் ஒரு தேசிய இனம் ஆகும்.

அரசு இல்லாத தேசிய இனங்கள் (Stateless Nations) 

‘தேசிய இனம்’ (Nation), தேசிய அரசு (Nation State), அரசு (State), மக்கள் சமூகம் (A people) ஆகிய கலைச்சொற்களின் பொருளை நாம் மேலே விளக்கிக்கூறினோம். இப்போது அரசு இல்லாத தேசிய இனங்கள் (Stateless Nations) என்ற எண்ணக்கருவை எம்மால் இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 191 வரையான உலக அரசுகளின் எல்லைக்குள் சிறைப்பட்டிருக்கும் தேசிய இனங்கள் ஒரு அரசுக்கு இருக்க வேண்டிய அனைத்துப் பண்புகளையும் கொண்டிருந்தபோதும் தமக்கென ஒரு அரசு இல்லாதவை; அவை அரசு இல்லாத தேசிய இனங்கள் (Stateless Nations) என நைட்ஸ்மன் விளக்கம் தருகிறார். இக்கட்டுரையில் இனிவரும் பகுதிகளில் இந்த எண்ணக்கரு பற்றிய மேலதிக விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

அரசும் இனக்குழுமங்களும்

உலகின் நவீன அரசுகள் மூன்று வகையான வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக உருப்பெற்றன. அவை:

  1. ஐரோப்பாவின் முடியாட்சி அரசுகளின் தோற்றம்
  2. ஐரோப்பிய நாடுகள் கடல் கடந்து சென்று கைப்பற்றிய காலனித்துவ சாம்ராச்சியம்
  3. காலனித்துவத்தின் முடிவில் உருவாகிய இன்றைய அரசுகள்

அரசு (State) என்ற சொல்லை மையப்பட்ட அதிகாரத்தைக் கொண்ட அரசியல்முறை என்ற பொருளிலேயே உபயோகிக்கிறோம். இத்தகைய அரசு தெளிவான புவியியல் எல்லையைக் கொண்டதாயும் உலக அமைப்பின் பிற அரசுகளால் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் இருக்கும். அரசுகளில் சிவில் பணித்துறையும், இராணுவம் ஒன்றும் இருக்கும். நாட்டின் நிர்வாகம் இவை இரண்டினாலும் நடத்தப்படும். சட்டங்களும், சட்டங்களினால் ஏற்கப்படும் நிறுவனங்களும் நாட்டில் செயற்படும். அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட புவியியல் எல்லைக்குள் ஒரு மொழி, ஒரு பொருளாதாரம், ஒரு நாணயமுறை, ஒரு கொடி ஆகியவை காணப்படும்.

வளங்கள் யாவற்றின் மீதும் மத்தியில் உள்ள அரசுக்கு மட்டுமே உரிமை இருத்தல் கூடும். இதனைவிட அரசின் எல்லைக்குள் ஒரே ஒரு மதமே இருக்கவும் கூடும். இவ்விதமான ஒருமைத்தன்மையை அல்லது ஒரு நாடு, ஒரு மக்கள், ஒரு மொழி என்றவாறான ஒற்றைத்தன்மையின் அழுத்தத்தையே பெரும்பான்மையான அரசுகள் போற்றுகின்றன. ஆனால் இந்த ஒற்றைத்தன்மை ஒரு திணிப்பு ஆகும். நீண்டகாலம் இருந்து வந்த தேசிய இனங்களையும், மக்கள் சமூகங்களையும் அழிக்கும் நோக்குடன் திணிக்கப்பட்டவையே இவை. இந்த ஒற்றைத்தன்மை தேசிய இனங்களின் வரலாற்றை திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறது.

அரசு என்பது சட்டத்தினால் உருவாக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட திகதியில் இருப்புக்கு வருவது. தன் எல்லைக்குள் வாழும் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அந்தத் தினத்தில் இருந்துதான் ஒரு எல்லை, அடையாளம் ஆகியவற்றையும் அது வழங்குகிறது. ஆகவே அரசின்கீழ் உட்படும் நபர்களிற்குப் புதிய அடையாளங்கள் அதன் தோற்றகாலத்தில் இருந்து வழங்கப்படுகின்றன. இன்று பங்களாதேஷிகள் என்றோ, சேர்பியர்கள் என்றோ சொல்லப்படும் அடையாளங்கள் இப்படி உருவானவையே. 1960 ஆம் ஆண்டில் ஒரு திகதியில் ‘நிக்கரகூவர்கள்’ என்ற அடையாளத்துடன் வாழ்ந்த மிஸ்கிற்றோ (Miskito) இனத்தவர்கள் கொண்டுராவிற்கு உரியவர்கள் என்றுகூறி அவர்கள் வாழும் நிலப்பகுதியைக் கொண்டுராஸ் நாட்டுக்கு அளிக்கும் தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியது. இதனால் ‘நிக்கரகூவர்களாக’ இரவு உறங்கச் சென்றவர்கள், மறுநாள் விடிந்ததும் தாம் ‘கொண்டுராக்கள்’ என்பதை அறிந்தனர். அமெரிக்க தேசத்தை உருவாக்கிய அமெரிக்கர்கள் தம் நாட்டின் மக்களிற்கு ஐக்கிய அமெரிக்கர்கள் (United Statesians) என்று ஒரு பெயரை வைத்துக்கொள்ளவில்லை. அமெரிக்கர்கள் என்றே பொதுச்சொல்லால் குறித்தனர். இதை ஒரு விதிவிலக்காகவே கருதலாம். ஏனைய எல்லா அரசுகளும் ஒரு பொதுப்பெயர் மூலம் தேசிய இனங்களைக் குறிப்பிடுகின்றன. ஹங்கேரியின் எல்லைகள் இருபதாம் நூற்றாண்டில் பல தடவைகள் மாறின. சுக்கா என்ற ஒருவரின் குடியிருப்பு ஹங்கேரி – ஸ்லோவாக்கிய எல்லையில் இருந்தது. 1918 இல் ஹங்கேரி ஐரோப்பாவின் வல்லரசுகளில் ஒன்றாக இருந்தபோது, சுக்கா ஹங்கேரியின் குடிமகனாக குறித்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருடைய ஜீவிய காலத்திற்குள், அவர் வேறு நான்கு நாடுகளின் குடிமகன் என்ற நாமத்துடன் வாழ வேண்டி ஏற்பட்டது. எல்லாமாக ஐந்து நாடுகளின் குடிமகனாக தன் சீவிய காலத்திற்குள் வாழும் தலைவிதி சுக்காவிற்குக் கிட்டியதாம். ஹங்கேரி அரசின் தோற்றமும், அதன் உடைவும், மாற்றமும் பற்றி இந்த சுக்கா என்பவரின் கதைமூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

தேசிய இனங்களின் விருப்பங்களிற்கு மாறாக அவர்களின் சம்மதம் இன்றி உருவாக்கப்படும் அரசுகள் அத்தேசிய இனங்களுக்கு புதிய வரலாற்றை எழுதிக்கொடுத்தன. பிரதேசம், மக்கள், வளங்கள் ஆகியவற்றின் மீது தேசிய இனங்களிற்கு இருந்த கோரிக்கை, உரிமைகள் யாவற்றையும் அரசுகள் கவனத்தில் கொள்ளாமல் உதாசீனம் செய்தன. தேசிய இனங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றன என்ற மாயையை, பொய்மையை அவை உருவாக்கின. அரசுகளின் அதிகாரம், மிக அண்மைக்காலத்தில் தோன்றிய ஒன்றே. ஆனால் எந்த அரசும் இந்த உண்மையை ஏற்பதில்லை. அரசுகள் தங்கள் இராணுவங்களை, தமது பிரஜைகள் என்று உரத்துக் கூவிச் சொல்லும் மக்கள் மீது தாக்குதல் நடத்த அனுப்புகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு இராணுவத்தின் வேலையே தேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதுதான். உலகின் மனித உரிமை மீறல்களில் பெரும் எண்ணிக்கையானவை தேசிய இனங்களுக்கு எதிரான அரசுகளின் செயற்பாடுகளின் விளைவுதான். ‘அரசின் குரல்’ ஒன்று எல்லா நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கின்றது. இதற்காகப் புலமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை அரசுகள் பணம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கின்றன. அரசுகள் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றன. சரியான முறையில் சிந்தித்தல், பேசுதல், எழுதுதல் என்பன அவர்களின் வேலை. தேசிய இனங்களிற்கு எதிரான ‘அரசின் குரல்’ சதா ஒலிக்கிறது. சீன நாட்டைப் பற்றிய ஒரு தேசப்படத்தை எடுத்துப் பாருங்கள். அந்தப்படம் திபெத் பற்றி எப்படி வருணித்திருக்கும்? ஹான் (Han) இனத்தவர்களால் அந்த நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை அது கூறமாட்டாது. அதற்கு பதில் சீனாவிற்குள் திபெத்தியர்கள் இருக்கிறார்கள் என்ற விதமாகவே அந்த வருணனை இருக்கும். உதாரணமாக, சீனாவின் தேசப்பட வரலாறு (A Map History of China) என்ற நூலை பிரியன்கம்போல் என்பவர் எழுதியிருக்கிறார். அந்நூலில் ‘சிறுபான்மையின மக்கள்’ என்றொரு அத்தியாயம் உள்ளது. அதில் காணப்படும் ஒரு பந்தி சுவாரசியமானது.

“சீனா முழுவதுமாக 51 தேசிய சிறுபான்மை இனமக்கள் சிதறி வாழ்கிறார்கள். இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் சீனாவின் எல்லைப்புற மாகாணங்களில் (அயல் நாடுகளுடனான எல்லைகளை அண்டியுள்ள பகுதிகளில்) வாழ்கிறார்கள். இதனால் இவர்கள் வாழும் பகுதிகள் சீனாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான பகுதிகள். சீனா இந்த மக்களின் விசுவாசத்தையும், ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதிலும் சீனாவுடன் அவர்களைப் பிணைத்து வைத்துக்கொள்வதிலும் அக்கறையாக உள்ளது. இன்றைய நாள்வரை வேட்டையாடும் அல்லது சேனைப்பயிர் செய்யும் பழைய சமூகங்களாக இருந்தவர்களைக்கூட விவசாயம் செய்பவர்களாக மாற்றி, கூட்டுப்பண்ணைகளில் இணைப்பதற்கு சீனா விரும்புவது இதனால்தான். தங்கள் வாழிடத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தில் உள்ள இயற்கை வளங்களையும் அங்குள்ள கைத்தொழில், விவசாய வாய்ப்புகளையும் பயன்படுத்தக்கூடியவர்களாக அவர்களை மாற்ற சீனா விரும்புகிறது.”

மேலே குறிப்பிட்ட கதையை நான்காவது உலகப் பார்வையில் சொன்னால் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

“சீனாவில் ஆதிக்கம் செலுத்தும் ஹான் இனத்தவர்கள் சீன அரசின் எல்லையை விஸ்தரித்துக் கொண்டுள்ளார்கள். இந்த எல்லை விஸ்தரிப்புக்காக 51 தேசிய இனங்களை கூறுபடுத்துதல், அவர்கள் பகுதிகளை துண்டாடுதல், அம்மக்களையும் அவர்கள் பகுதிகளையும் தமது எல்லைக்குள் அகப்படுத்துதல் ஆகிய வேலைகளைச் செய்தார்கள். இந்த தேசிய இனங்களுள் பெரும்பாலானவை சீனாவின் எல்லைப்புறத்தில் வாழ்கின்றன. இவர்களின் வாழிடங்கள் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளன. சீனா மட்டுமல்ல இந்தியா, வியட்னாம், பர்மா, மொங்கோலியா என்பனவும் இவர்களின் வாழிடங்களை ஆக்கிரமித்துள்ளன. சீனா இந்த மக்களின் பகுதிகளுக்கு இராணுவத்தை அனுப்புகிறது. இம்மக்களைத் தம் நாட்டின் பகுதியாக மாற்றுவதற்கு நிபுணர்களை அனுப்புகிறது. பெயிங்கில் உள்ள ஆட்சிக்கு விசுவாசம் காட்ட வேண்டும். தம் இறைமையை இந்த மக்கள் பெயிங்கிடம் கையளிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் தான் சீனா கூட்டுறவுப் பண்ணைகளை அமைக்கிறது. கசாக், கிரிகி, திபெத்தியன், உஸ்பெக், தஷிக், மிஆஓ, லிசு, லாகு ஆகிய பல்வேறு இன மக்களின் பொருளியல் வாழ்க்கை முறையை மாற்ற சீனா முயல்கிறது.”

அதன்மூலம் அந்தப் பகுதிகளின் வளங்களைச் சுரண்டுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் சீனா முயல்கிறது.

உலகின் எல்லா அரசுகளுமே தேசிய இனங்களின் வரலாற்றையும், புவியியலையும் அழித்துவிடவே முயற்சிக்கின்றன. தேசிய இனங்களிற்கு புதிய பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஊடகங்களும் வெவ்வேறு இன மக்களிற்கு புதிய பாடங்களைப் போதிக்கின்றன. நீங்கள் எல்லோரும் ‘ஒரு மக்கள்’ ஒரு தேசத்திற்குள் வாழ்பவர்கள். நீங்கள் சீனாவின் மக்கள் என்று அவர்களிற்குப் போதிக்கப்படுகிறது.

உலகின் அரசுகள் பெரும்பாலானவை தத்தம் நாடுகளை ஓரினத்தவர்களைக் கொண்டவை எனப் பிரகடனம் செய்கின்றன. மக்களை ஒரு தாய் மக்கள் என்று உரத்துச் சொல்கின்றன. ஆனால் உலகின் 191 நாடுகளில் 95% ஆனவை பல்தேசிய நாடுகளாகும். இவற்றின் எல்லைகளுக்குள் பல இனங்களும் மக்களும் வாழ்கிறார்கள். பல இன மக்களின் பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சில வேளைகளில் இம்மக்களின் சம்மதம் இல்லாமலே இவர்களது பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. உலகின் 5000 வரையான தேசிய இனங்கள் தங்கள் உரிமைகளிற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. உலகின் 40% கடற்பரப்புக்கு இவர்கள் உரிமை கோருகிறார்கள். தம்மைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்திற்கும்கூட உரிமை கோருகிறார்கள். இந்தத் தேசிய இனங்கள் பழைமையானவை. இவற்றோடு ஒப்பிடும்போது அரசுகள் புதியன. அரசுகள் பல்வேறு அளவும் பருமனும் உடையவை. நாயுறு (Nauru) என்ற அரசின் மக்கள் தொகை 10,000; பெலிஸ், பஹமாஸ் போன்ற சில அரசுகள் இரண்டு இலட்சம் மக்கள் தொகையை உடையவை. இவற்றோடு ஒப்பிடும்போது இந்தோனேசியா போன்றவை மிகப்பெரிய நாடுகள். உலகின் மக்கள் தொகையில் நான்காவது இடம்பெறும் இந்தோனேசியா 13,700 தீவுகளைக் கொண்டது. இந்த அரசுக்குள்ளே 250 தேசிய இனங்கள் உள்ளன. ஒரு அரசு, ஒரு இனம் என்ற வகையில் அமையும் அரசுகள் மிகச்சிலவே உள்ளன. உலகின் 5% ஆன அரசுகளே Nation State என்ற இந்த வகையின. ஐஸ்லாந்தும், போர்த்துக்கல் அரசும் ஒரே மக்கள் ஒரே அரசு என்ற வகைக்கு உதாரணங்கள். உலகின் பெரும்பாலான அரசுகள் பல்தேசிய அரசுகள். நைஜீரியா – 450, எத்தியோப்பியா – 50, இந்தியா – 350 என்றவாறு தேசிய இனங்களின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது.

தொடரும். 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்