மலையக நாட்டார் பாடல்களில் வெளிப்படும் காதல் உணர்வு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
13 நிமிட வாசிப்பு

மலையக நாட்டார் பாடல்களில் வெளிப்படும் காதல் உணர்வு

February 15, 2026 | Ezhuna

கப்டன் ஹென்றி பேர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிச் செய்கையோடு மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் வரலாறு ஆரம்பிக்கின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் பூரண கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட்டு இம்மக்கள் வாழ்ந்தமையால், உலகில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் இருந்து இவர்களின் பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. இத்தகைய இருள் சூழ்ந்த வாழ்வியலுக்குள் சிக்கிய மக்களின் வரலாறு, துன்பம், துயரம் ஆகியவற்றை இவர்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று, மலையக மக்களின் 200 வருடகாலப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளாகவும் இவை திகழ்கின்றன. அந்தவகையில், மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் அவர்களது வாய்மொழிப்பாடல்கள் வழியாகப் புரிந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்படுவதாக, ‘மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்’ எனும் இத்தொடர் அமைகின்றது

நாட்டுப்புறப் பாடல்கள் ஆண்டுகள் பல கடந்தும் மக்களின் மனதை உறுத்துகின்றன என்றால், ஆய்வாளர்களைத் தேடித்தேடி ஆய்வு செய்யத் தூண்டுகின்றன என்றால், இதன் ஆழமும் அகலமும் விரிவானதே. உலகில் மனிதன் மொழியைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல் நாட்டுப்புற வாழ்வியலைப் பேசும் இலக்கியமும் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. எனவே ஒவ்வொரு இனத்தினதும் மொழியினதும் அடிப்படை இலக்கியமாகவும் மூல இலக்கியமாகவும் திகழ்வது நாட்டுப்புற இலக்கியமே ஆகும். இன்று உலகில் பேசப்படுகின்ற புராண, இதிகாசக் கதைகள், செவ்வியல் இலக்கியங்கள் யாவற்றிலும் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் முழுமையாக இடம்பிடித்திருக்கிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

அதேபோல உலக இயக்கத்துக்கும் மானிட இருப்புக்கும் அச்சாணியாகத் திகழ்வது, பசியும் காதலும் ஆகும். இவ்விரண்டும் உலகை இயக்கும் பிரதான சக்திகளாக இடம்பிடிக்கின்றன. இந்தக் காதலை இன்று உலகம் போற்றுகின்ற அனைத்துத் தத்துவ நூல்களும் சமய இலக்கியங்களும் புனிதமான செயற்பாடாகவே போற்றுகின்றன. அவை அதனைத் தெய்வீகத் தன்மை கொண்டதாகச் சித்தரிக்கின்றன. ஆனால் வர்க்கச் சமூக அமைப்பு வலுவடைந்த பின்னர், இந்தக் காதலைத் தெய்வீகத் தன்மை கொண்டதாக மட்டும் பார்க்க முடியவில்லை. ஆதிக்க சாதிகளின் காதல் புனிதமானதாகவும், அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் காதல் விரும்பத்தகாததாகவும் நாகரிகமற்றதாகவும் சித்தரிக்கப்படும் தன்மை பிற்காலப் படைப்பாளர்களிடத்தில் மேலோங்கிச் செல்வதைக் காணலாம். எனவேதான் இன்றைய மானிடவியலாளர்கள் மக்களின் உண்மையான பண்பாட்டை விளங்கிக் கொள்வதற்கு, நாட்டுப்புற இலக்கியங்களையும் அதன் வேர்களையும் தேடி ஆராயும் தன்மை தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது.

இன்றைய ஆய்வாளர்கள் நாட்டார் இலக்கியத்தை இரு நிலைகளில் வைத்துப் பார்க்கின்ற தன்மையும் காணப்படுகிறது. பழங்குடி மக்களிடத்தில் காணப்படும் பாடல்கள், கதைகள், பழமொழிகளை ஒருபுறமாகவும், நாகரிகம் அடைந்த மக்களிடத்தில் வாய்மொழியாக வழங்கிவரும் பாடல்கள், கதைகளை மறுபுறமாகவும் ஆராய்கின்றனர். அந்த வகையில் பழங்குடி மக்கள் தங்களது வாய்மொழி இலக்கியங்களை தலைமுறை தலைமுறையாகப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். அதுவே அவர்களுக்கான அடையாளமாகவும் பண்பாட்டுக் கருவூலமாகவும் போற்றப்படுகிறது. 

இயற்றப்பட்ட பல பாடல்களும் நாட்டார் பாடல் தன்மையைப் பெற்றுவிடுகின்றன. இதற்கான காரணம் அவை எழுதப்பட்ட தன்மையில் அல்லாமல், மக்களிடத்தில் பரப்பப்பட்ட விதத்திலேயே நாட்டுப்புற இலக்கியச் செல்வாக்கைப் பெற்றுவிடுகின்றன.

“மனித உள்ளத்தின் ஆழத்தையும், அங்கே தோன்றி ஒலிக்கும் பல்வேறு இதய ஒலிகளையும், வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் எழும் இயற்கையான எண்ணங்களையும், இன்ப துன்பங்களையும், ஆசாபாசங்களையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் நாட்டுப்புற இலக்கியங்களில் காண்கிறோம்” என்பார் சு. சக்திவேல். இத்தகைய நாட்டுப்புறப் பாடல்கள் மனித உணர்வின் வடிகாலாகவும் கட்டுப்பாடற்ற கற்பனை நிறைந்த களஞ்சியமாகவும் திகழ்கின்றன. நாட்டார் பாடல்களின் பண்புகளாக பின்வருவனவற்றை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

    1. வாய்மொழியாகப் பரப்பப்படுவது.

    2. மரபு வழிப்பட்டது. 

    3. பல்வேறு வடிவங்களாகத் திரிபடைவது. 

    4. ஆசிரியர் அற்றது. 

    5. ஒருவித வாய்ப்பாட்டுக்குள் அடங்குவது.

தமிழில் வீரயுகப் பாடல்கள் முதல், உலகில் தோன்றிய அனைத்து வீரயுகப் பாடல்களும் வாய்மொழிப் பாடல்களாகவே இருந்திருக்கின்றன என்பதை பேராசிரியர் க. கைலாசபதி தனது ‘தமிழ் வீரயுகப் பாடல்கள்’ என்ற கட்டுரையில் நிறுவியுள்ளார். இவ்வாறு நாட்டார் இலக்கியத்தின் செழுமை உலகம் முழுவதும் செல்வாக்குப் பெற்றிருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் பெரும் செல்வாக்கைப் பெற்று அனைத்துச் செவ்வியல் இலக்கியங்களுக்கும் வடிகாலாக அமைந்தது.

அத்தகைய பின்புலத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மலையக மக்கள், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் இந்தியாவிலிருந்து கூலிகளாக ஒப்பந்த அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டனர். ஆள்பிடிக்கும் முகவர்களுக்கு அன்றைய பிரித்தானிய அரசு உரிமை வழங்கியது. ஆனால் தென்னிந்தியத் தமிழ் மக்கள், ஒப்பந்த முறைக்கு அப்பால் தரகர்களால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இவ்வாறு காலனி நாடுகளுக்கு மக்கள் செல்வதற்கு இரண்டு காரணிகள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஒன்று பொருளாதார மேம்பாடு. அக்காலத்தில் நாட்டில் நிலவிய பஞ்சமும் பிரித்தானிய அரசின் கெடுபிடிகளும் மக்களை வறுமை நிலைக்குத் தள்ளின. இதிலிருந்து மீள்வதற்காக மக்கள் இடம்பெயர்ந்தனர். மற்றொன்று சமூக ஏற்றத்தாழ்வு. சமூக ஏற்றத்தாழ்வுகளால் ஒடுக்கப்பட்ட நிலமற்ற ஏழை விவசாயிகளே விடிவை நோக்கி வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களின் நெடுங்கால நடைப்பயணம் மிகவும் கொடுமையும் கொடூரமும் நிறைந்ததாக இருந்தது. இவர்கள் பிரித்தானியக் காலனித்துவவாதிகளால் குடியேற்றப்பட்ட இடங்கள் கடல் மட்டத்திலிருந்து 4000 அடிக்கு மேற்பட்ட மலைப்பிரதேசங்களாகும். இங்கு குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் மலையக வாய்மொழிப் பாடல்கள் உலகில் எங்கும் காண முடியாத துன்பம், துயரம், உழைப்பு, ஆசைக் கனவு ஆகியவற்றால் நிரம்பியவையாக உள்ளன.

இத்தகைய மானிட வாழ்வியல் கூறுகள், இம்மக்களின் வாய்மொழிப் பாடல்களில் காதல் அனுபவங்களின் கலைவடிவங்களாக வெளிப்படுகின்றன. அந்த வகையில் இக்காதல் பாடல்கள், சமூக வாழ்வியலைப் பிரதிபலிக்கும் பண்பாட்டு ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. தமிழ்நாட்டுப் பாடல்களின் தாக்கமும் செழுமையும் மலையகப் பாடல்களில் காணப்பட்டாலும், இம்மண்ணுக்கு உரித்தான இப்பாடல்கள் அப்பகுதி மக்களின் காதல் வாழ்வியலை ஒருங்கிணைந்த சமூக அனுபவமாகச் சித்தரிக்கும் தன்மையால் தனித்துவம் பெறுகின்றன. இதனால் அவை ஒரு விரிவான சமூகக் காவியத் தன்மையை உடையவையாக மதிப்பிடப்படுகின்றன.

“பணியலாயத்து சாவ

பாசமுள்ள வெள்ளை சாவ

காலு வளந்த சாவ

கண்டாலும் பேசுதில்லை”

“அஞ்சும் கிளி அழகே

ஆடு தொடை ரெண்டழகே

கொஞ்சும் கிளி அழகே

கொந்தரப்பா வெட்ட போற”

“குத்து கட்ட மேல ஏறி

கொழுந்து வெத்தலை போடையில

கைப்பிடி லேஞ்சி கண்டு

கள்ள மனம் துள்ளுது ஐயா”

“வெங்கல ரோதையில

வேலை செய்யும் ஏன் சாமி

வெத்தலை வேணுமுனா

வெளியே வந்து கேளுமய்யா”

மேலே குறிப்பிடப்பட்ட ‘வெங்கல ரோதையிலே’ என்ற பாடல், முதன்முதலாக தேயிலைத் தொழிற்சாலை கட்டப்பட்டு அதில் வேலை செய்வது கௌரவமாகக் கருதப்பட்ட காலப்பின்னணியை எடுத்துக்காட்டுகிறது. தேயிலைக் கொழுந்தை அரைக்கும் அந்த ரோதை வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. அதையே கருப்பொருளாகக் கொண்டு பாடல் பாடி, தனது காதல் உணர்வை வெளிப்படுத்தும் தன்மை இதில் வெளிப்படுகிறது. காதலி ஒருத்தி, தன்னைக் கண்டுகொள்ளாமல் போகும் காதலனைச் ‘சேவல்’ என்று உருவகித்துப் பாடுகிறாள். சேவல் தன் பெட்டைகளைக் கண்டால் எங்கிருந்தும் ஓடி வந்து அதனோடு சேர்ந்து விடும். ஆனால் இந்த மனிதன் தன்னைக் கவனிக்காமல் போவதைக் கருவாகப் பயன்படுத்திப் பாடியிருப்பது நயமிக்கதாகும்.

“மஞ்ச அரைக்கையில

மதில் ஏறிப் பார்த்த மச்சான்

எதை நெனச்சிப் பார்த்தீங்களோ

இழுத்து அரைக்க முடியலையே”

இவ்வாறு தன் காதலியை ஒருவன் எட்டிப் பார்த்ததனால் அவள் அடைந்த ஏக்கம், தவிப்பு என்பன இப்பாடலில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

“ஈரல் கருகுதய்யா

இரு தொடையும் நோகுது ஐயா

நினைத்துப் படுத்தாலும்

நித்திரையும் போகுதில்ல”

என்ற பாடல் ஒரு பெண் தன் காதலனைப் பிரிந்து வாடும் நிலையில் பாடுவதாக அமையப்பெற்றுள்ளது.

“மேட்டு லயத்துப் பெண்ணே

மிஞ்சி போட்ட ரஞ்சிதமே

காணத் துடித்தாலும்

காவல் கடுங்காவல்”

பெண் பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கும் மனப்பாங்கு அனைத்துச் சமூகங்களிலும் நிலவி வந்தது. அது இன்றளவும் தொடருகின்றது. இத்தகைய பண்பை மலையக மக்களும் கொண்டிருப்பதை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது. மேலும், தன் காதலன் மேல் கொண்ட பேராசையை ஒருத்தி இவ்வாறு வெளிப்படுத்துகிறாள். 

“எண்ணெய்த் தலை அழகா

எழுத்தாணி மூக்கழகா

கோயில் சிலை அழகா

கொல்லுதடா உன் ஆசை”

கவிதை நயமும் சந்த ஓசையும் கொண்ட இப்பாடல் படிப்பவர் மனதைக் கொள்ளையிடும் தன்மை கொண்ட காதல் பாடாகும். அவ்வாறே காதலியின் சிறப்பைக் காதலன் பின்வருமாறு பாடுகிறான். 

“ஆத்தோரம் கொடிகாரம்

அருகம்பா வெற்றிலையாம்

போட்டா செவக்குது இல்ல

பொண்மயிலே உன் மயக்கம்”

“அந்த லயம் இந்த லயம்

அடுத்த ஒரு தொங்க லயம்

தொங்க லயத்துப் பெண்ணே

சொக்குதடி என் மனசு”

காதலில் பிரிவும் ஏமாற்றமும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. தோட்டப்புற வாழ்வியலில் பிரிவை இரண்டு நிலைகளில் வைத்துப் பார்க்கலாம். ஒன்று, ஒருவனைத் தோட்ட நிர்வாகம் ஏதாவது காரணம் காட்டி தனது தோட்டத்தில் வேலை செய்யாமல் தடுத்து, வேறு தோட்டத்திற்கு அனுப்புவது. இது ‘தோட்டம் விட்டுத் தோட்டம் போதல்’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறான நிலை காதலனுக்கோ காதலிக்கோ ஏற்படுவதுண்டு. மற்றொன்று, இந்த நாட்டை விட்டு பிறந்த மண்ணுக்கு (இந்தியாவிற்கு) மீண்டும் திரும்புதல். இந்த இரண்டுமே காதலர்களைப் பாதித்த முக்கியமான விடயங்களாகும். இவை எவ்வாறு பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

“வட்டுக் கருப்பட்டியே

வாகனச் செங்கரும்பே

புட்டுக் கருப்பட்டியே

போறேனே தோட்டம் விட்டு”

“சாந்தாருக்குச் சந்தனமே

சாதி மரிக்கொழுந்தே

வெறுத்துட்டுப் போறமின்னு

வேலை விட்டு வந்துராத”

“என்னையே நம்பாதே

எழுதிக் கடன் வாங்காத

உன்னையே நான் பிரிஞ்சி

ஊருக்குப் போறேண்டி”

என்ற பாடல்களில் காதலன் பிரிந்து போவதற்கான காரணத்தைச் சொல்கிறான். உண்மையில் இதில் இருக்கும் வேதனையும் துக்கமும், இரு மனங்களின் துயரமும், நெஞ்சை உருக்குவதாகும்.

“தோட்டம் விட்டுப் போறேன்னு

தொயரங்களை வைக்காதடி

எட்டு மணி கோச்சியில

எட்டி வந்து பார்த்திடுவேன்”

“இடி இடிச்சி மழை பொழிய

இரு கடலும் பொங்கி வர

குடை புடிச்சு நான் வருவேன்

குண மயிலே கலங்காதே”

இப்பாடல்கள், பிரிந்து போன காதலன் தன் காதலிக்கு நம்பிக்கையை அளிப்பதையும், உன்னைக் கைவிட்டுச் செல்லமாட்டேன் என்ற உறுதியை இப்பாடல்களின் ஊடாக வழங்குவதையும் வெளிப்படுத்துகின்றன. இதுவே நாட்டுப்புற இலக்கியங்களுக்கு உள்ள தனித்துவமான சிறப்பாகும். தன்னை நம்பி வந்த காதலியை எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடாத மானிடப் பண்பு இப்பாடல்களில் இடம்பெற்றிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

“காட்டுக்குள்ள கமுக மரம்

கண்ணி வச்சு ஆறு மாசம்

பேசணும் மின்னாலும்

பெத்த தாய் சத்துறாதி”

காதலுக்கு எதிர்ப்பு என்பது பல்வேறு சமூகங்களிலும் காணப்படும் பொதுவான நிகழ்வாகும். அதுபோலவே, மலையக சமூக அமைப்பிலும் காதல் உறவுகளின் உருவாக்கம் மற்றும் கட்டமைப்பிற்கு கட்டுப்பாடுகளும் எதிர்ப்புகளும் நிலவுகின்றன என்பதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் போது ஏற்படும் உள்ளத்துக் கிளர்ச்சிக்கு இணையான சந்தோஷம் வேறு எதிலும் கிடைப்பதில்லை. இதனை எமது இலக்கியங்கள் காலங்காலமாக எடுத்தியம்பி வந்திருக்கின்றன.

“கொத்தமல்லித் தோட்டத்திலே

கொழுந்து கிள்ளிப் போற புள்ள

கொண்டு வந்தேன் மல்லிகைப்பூ

உன் கொண்டையில சூட்டி விட”

“தொந்தரப்பு காரக்குட்டி

கொழுந்தெடுக்கும் சின்னக்குட்டி – உன்

தொந்தரப்பக் கண்டவுடன்

கொழுந்து எடுக்கக் கூடலையே”

“ஈரப்பலாக் காயே

இன்பம் உள்ள தேங்காய்ப் பாலே

வன்னி நாட்டுக் கொச்சிக்காயே

வருமம் தாண்டி உன்மேல”

“கொண்டையில பூச்சூடி

கோயிலுக்கு போற தங்கம்

உன் கொண்ட அலங்காரம்

உன் குரலோசை சிங்காரம்”

காதலைப் பற்றி, செவ்வியல் படைப்புகளை வழங்கிய எத்தனையோ மகா படைப்பாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். சேக்ஸ்பியர் காதலைப் பற்றி கூறும்போது, “அது ஆழமான, எல்லையற்ற, சில சமயங்களில் துன்பகரமான, ஆனால் எப்போதும் உணர்ச்சிபூர்வமான ஒன்று” என்கிறார். கார்ல் மார்க்ஸ், “அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது; காதல் என்பது மனிதனை மனிதனாக்கும் சக்தி” என்றார். பாரதி காதலைப் பற்றிக் கூறும்போது, “அது இல்லறத்தின் அச்சாணி; பெண்ணைத் தெய்வமாகப் போற்றும் சக்தி கொண்டது; ஆதலால் காதல் செய்வீர்” என மக்களை அழைத்தார். கண்ணதாசன் காதலைப் பற்றி கூறும்போது, “அது உடல் ஈர்ப்பு அல்ல; அது வாழ்க்கையின் ஆதாரம், காலத்தின் ஊற்று, அனுபவங்களின் தொகுப்பு” என்றார்.

இவர்கள் முன்வைத்த கருத்துகள் மலையகக் காதலர்களின் வாழ்வியல் சூழலுடனும் அனுபவ உலகுடனும் தொடர்புடையதாகக் கருதப்படலாம். கடின உழைப்பை மையமாகக் கொண்ட சமூகச் சூழலில், குறிப்பாக ஈவு இரக்கமற்ற உழைப்பின் பின்னணியில் உருவாகும் காதல், பொருளாதார எதிர்பார்ப்புகளற்ற, வாழ்க்கையின் தொடர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட உறவாக வெளிப்படுகிறது.

மலையக மக்கள் சமூக மற்றும் குடும்பத் தடைகளைத் தாண்டி காதல் உறவை நிறைவேற்றும் மனப்பாங்கைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். குடும்ப மரபு, சாதி போன்ற கட்டுப்பாடுகளை மீறியும் இணையும் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. சீதனம் அல்லது சொத்து போன்ற பொருளாதார அம்சங்களை எதிர்பார்க்காது, பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் ஆணும் பெண்ணும் இணையும் நடைமுறை காணப்படுகிறது. உழைப்பைத் தங்களின் வாழ்வாதார அடிப்படையாகக் கொண்டிருப்பதால், வெளிப்புற ஆதரவு இன்றி வாழ்க்கையை முன்னெடுக்கக் கூடிய சமூக மனப்பாங்கு இவ்விணைப்புகளில் பிரதிபலிக்கிறது.

இதனால், காதல் உறவு என்பது வெறும் உணர்ச்சி வெளிப்பாடு மட்டுமல்லாது, வாழ்வியல் தொடர்ச்சியுடன் இணைந்த சமூக நிகழ்வாகப் புரிந்துகொள்ளப்பட முடிகிறது. காதலர்களின் சந்திப்புகள் மற்றும் இணைவு, அவர்களின் வாழ்வுப் பயணத்தின் மைய அச்சாக அமைகின்றன என்பதையும் இச்சூழலில் குறிப்பிடலாம்.

தமிழர் பண்பாட்டு மரபில் அகமும் (காதல்) புறமும் (வீரம்) வாழ்வின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படுகின்றன. மனித குலத் தோற்றத்தின் தொடக்கத்திலிருந்தே இயல்பூக்கமாக அமைந்துள்ள காதல் உணர்வை, தமிழர் தம் வாழ்வியல் இலக்கணமாகவே போற்றினர். இன்பம், அன்பு, துன்பம் ஆகிய மானுட உணர்ச்சிகளின் வெளிப்பாடாக முறையே காதல் பாடல்கள், தாலாட்டு மற்றும் ஒப்பாரி ஆகிய நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள் அமைகின்றன.

பருவமடைந்த உள்ளங்களின் ஈர்ப்பு மற்றும் பிணைப்பின் விளைவாகத் தோன்றும் காதல் உணர்வுகள், வாய்மொழி இலக்கியங்களில் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மலையக வாய்மொழிப் பாடல்கள், அம்மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த காதல் மற்றும் அகவுணர்வுகளைப் பிரதிபலிக்கும் முதன்மை ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இவை வெறும் பாடல்களாக மட்டுமன்றி, ஒரு சமூகத்தின் நிலவியல் மற்றும் வாழ்வியல் கூறுகளின் ஆவணங்களாகவும் அமைகின்றன.

இத்தகைய வாய்மொழி இலக்கியங்கள் ஒரு சமூகத்தின் தனித்துவமான அடையாளங்கள் (Cultural Identity) ஆகும். மண்ணையும் மனிதத்தையும் நேசிக்கும் பண்பு இருக்கும் வரை, இந்த நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு மக்களிடையே நிலைத்திருக்கும் என்பது திண்ணம். எனவே, இப்பண்பாட்டுப் பொக்கிஷங்களை ஆவணப்படுத்துவதும், அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் வரலாற்று ரீதியான அவசியமாகும்.

சான்றாதாரங்கள்

  1. வேலுப்பிள்ளை, சி.வி. மலைநாட்டு மக்கள் பாடல்கள். கொழும்பு: மகாவலி பிரசுரம்.
  2. சிவலிங்கம், மு. 2007. மலையகத் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள். ரெக்னோ பிரிண்டர்ஸ்.
  3. சாரல் நாடன். 1993. மலையக வாய்மொழி இலக்கியம். சென்னை: சவுத் ஏசியன் புக்ஸ்.
  4. கந்தையா, மு.சி. 2002. சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள். திருப்பூர்: பொன்னுலகம் புத்தக நிலையம்.
  5. காதர், பி.ஏ. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். லண்டன்: சமூக இயல் பதிப்பகம்.


About the Author

வேலாயுதம் இராமர்

வேலாயுதம் இராமர், கொ.புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கவிஞர், நாடகம், திரைப்பட நடிகர், மலையக நாட்டார் இலக்கிய செயற்பாட்டாளர் என பல்துறைசார்ந்து செயற்படுவதோடு மலையக கூத்து தொடர்பாகவும் செயற்பட்டு வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்