தொல்லியலாய்வின் முக்கியமானதொரு அம்சம் அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்களின் வயதைக் கணிப்பிடுவதாகும். இக்காலத்தில் கதிரியக்கப் பரிசோதனைகளான கதிரியக்கக்கரிம வயதுக்கணிப்பு (Radiocarbon Dating), வெப்பேற்று கதிரொளிவீச்சு கணிப்பு (Thermo-Luminescence: TL), ஒளிக்கிளர்ச்சியூட்டிய கதிரொளிவீச்சு கணிப்பு (Optically Stimulated Luminescence: OSL) ஆகிய ஆய்வுகள்மூலம் இத்தொல்பொருட்களின் வயது கணிப்பிடப்படுகிறது. இப்பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வுகூடங்கள் இலங்கையில் இல்லை. இந்தியாவில் வெப்பேற்றக் கதிரொளி வீச்சு, ஒளியேற்றக் கதிரொளிவீச்சு ஆய்வுகூடங்கள் உள்ளன. கதிரியக்கக் கரிம வயதுக்கணிப்பு ஆய்வுகூடம் அங்கும் கிடையாது. கதிரியக்கக் கரிம ஆய்வுகளுக்கு தொல்பொருட்களை அமெரிக்க அல்லது பிரித்தானிய ஆய்வுகூடங்களுக்கு அனுப்பியே அவற்றின் வயதைக் கணிப்பிடுவார்கள்.

கந்தரோடை ஆய்வுகளில் 1970 ஆம் ஆண்டில் அமெரிக்க பென்ஸில்வேனிய பல்கலைக்கழக அருங்காட்சியக ஆய்வாளர்கள் அகழ்ந்தெடுத்த தொல்பொருட்கள் கதிரியக்கக் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிவியல்ரீதியான காலக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. முன்பெல்லாம் யாழ்ப்பாண அகழ்வுகளில் கண்டெடுக்கப்படும் தொல்பொருட்கள், பிற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு தேதி கணிக்கப்பட்ட அதேமாதிரியான பொருட்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டே (Cross-match Dating) தேதி கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. சமீபகாலங்களில்தான் புதிய முறையிலான தேதிக்கணிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
1.
இரகுபதியின் மட்கல நிகரொழுங்கு (The Ragupathy Sequence)
யாழ்ப்பாண மட்பாண்ட அடுக்குத் தேதிக்கணிப்பு
யாழ்ப்பாணத் தொல்லியல் அகழ்வுகளில் எல்லா அடுக்கமைவு மட்டங்களிலும் (Stratified Layers) காணப்படும் ஒரு பொருள் பண்டைய மட்கலன்களாகும். இந்தக் கணிப்பில் மட்கல வகைகளின் நுணுக்கமான பகுப்பாய்வும், அவ்வகைகள் சில காலகட்டங்களில் ஒன்றுடன் ஒன்று கவிந்திருக்க முடியும் (Overlapping) என்பதற்கான முன்னறிவும் அவசியமானது. வெவ்வெறு அடுக்கமைவு மட்டங்களில் இந்த மட்பாண்டங்கள் அல்லது கலவோடுகளுடன் காணப்படும் நாணய வகைகளுடனோ, அல்லது ஏற்கனவே பிற இடங்களில் தேதி கணிக்கப்பட்ட அதேவகையான மட்பாண்டங்களுடனோ ஒப்பீட்டாய்வு (Cross-Matching) செய்யும்போது நம்பகரமான ஒரு தேதியை அடைய முடிகிறது. இத்திகதியை அறிந்த மட்பாண்டங்கள் உள்ள அடுக்கமைவு மட்டங்களில் காணப்படும் மற்றைய தொல்பொருட்களுக்கும் இந்த மட்பாண்டங்களின் வயதுப்பரப்பின் கால எல்லையைக் கொடுப்பது இந்த ஆய்வுமுறை. இந்த ஆய்வுமுறையை யாழ்ப்பாணத் தொல்லியலாய்வில் அறிமுகப்படுத்திய கலாநிதி பொன்னம்பலம் இரகுபதியின் பெயரால் இக்கணிப்பு முறை ‘இரகுபதியின் மட்கல நிகரொழுங்கு’ என வழங்கப்படுகிறது.

மட்பாண்ட வகைகளின் நிகரொழுங்கையும், அவற்றின் வயதையும் கொண்டு, அந்த அகழ்வு மட்டங்களில் காணப்படும் மற்றைய தொல்பொருட்களின் வயதைக் கணிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. எகிப்தில் தொல்லியல் அகழ்வுகளை மேற்கொண்ட பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளரான ஸேர் பிளின்டேர்ஸ் பீற்றி (Sir Flinders Petrie) இந்த முறையைக் கொண்டே அங்கு தொல்பொருட்களின் வயதைக் கணிப்பிட்டார் (Petrie, W.M.F. 1931).
எகிப்திலும் எல்லா மட்டங்களிலும் பலதரப்பட்ட மட்பாண்டங்கள் காணப்படுவதால் இந்த ஆய்வுமுறை உபயோகிக்கப்பட்டது. இதன் காரணமாக பீற்றியை ‘மட்பாண்டங்களின் தந்தை’ (Father of Pots) என அழைப்பார்கள். இன்றைக்கும் எகிப்தில் அகழ்வுகளை மேற்கொள்ளும் தொல்லியலாளர்கள் தொல்பொருட்களின் தோராயமான காலக்கணிப்பை இந்தமுறையைக் கொண்டு அறிகிறார்கள் (Tyldesley, J. 2005: 160). கலாநிதி இரகுபதி நவீனமயமாக்கப்பட்ட ‘பீற்றி முறை’யை (Petrie System) அடிப்படையாகக் கொண்டு – மட்பாண்டங்களின் வயதைக்கொண்டு அதே அடுக்கமைவிலுள்ள மற்றைய தொல்பொருட்களின் வயதைக் கணிப்பிடும் இந்த ஆய்வுமுறையை – தனது ஆய்வுகளில் பயன்படுத்தியிருக்கிறார் (Ragupathy, P. 1987: 9-14).
மட்கல வகை 1
ஆரம்ப பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்கலன் அல்லது
ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்கலன்
காலம்: கி.மு. 1500 – கி.மு. 300.
இந்த வகையான மட்கலன்களின் விளிம்பு மழுங்கலாகவும் (Blunt Rim), விளிம்பிலிருந்து தொடரும் பகுதி ஆரம்பத்திலிருந்து சற்று வளைந்தோ அல்லது நேராகச் சென்று அடிப்பாகம் சடுதியாக உள்வளைந்த முறிவளைவு (Carination) கொண்டோ காணப்படும். இவை குடுவைகளாகவோ (கிண்ணங்கள்), ஆழ்ந்தகன்ற தட்டங்களாகவோ காணப்படும். இக்கலன்களின் உட்பக்கம் பளபளப்பான கறுப்பு நிறமாகவோ, அல்லது மந்தமான கறுப்பாகவோ இருக்கும். இந்த மட்பாண்டங்களின் வெளிப்பக்கம் பெரும்பாலும் சிவப்பு நிறமாகவும், சில சமயங்களில் சாம்பல் நிறமாகவும் காணப்படும். இக்கலன்களின் கழுத்துப்பகுதியின் வெளிப்புறத்தில் குறுகலான கறுப்புநிற பட்டைக்கோடு சுற்றவரக் காணப்படும். இந்த மட்பாண்டங்களில் காணப்படும் இரட்டை வண்ணம், சூளையில் சுடும் தொழில்துறை நுட்பத்தினால் ஏற்பட்டதாகும் (Ragupathy, P. 1987: 9).
தென்னாசிய சூழமைவில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் சிந்துவெளி மையங்களில் ஆரம்பமாகி, இந்திய துணைக்கண்ட மையங்களில் பரவி, தென்னிந்திய பெருங்கற்கால மட்பாண்டமாகப் பரிணமித்திருக்கிறது. மேற்குறிப்பிட்டுள்ள ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் தென்னிந்தியப் பெருங்கற்கால அகழ்வுகளில் கண்டெடுக்கப்படுகின்றன (Gururaja Rao 1972: 258-261; Soundara Rajan, 1969: 69-89; Sahney, V. 1965: 172-175). யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது இலங்கையின் பெருங்கற்கால மையங்களிலெல்லாம் இந்தவகையான மட்பாண்டங்கள் காணப்படுகின்றன (Deraniyagala, S.U. 1972: 1-18, 48-169; Begley, V. 1981: 84-93; Sitrampalam, S.K. 1980; Pushparatnam, P. 1993).
சிந்துவெளி அகழ்வுகளில் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்ட இந்த மட்பாண்டங்களுக்கு ‘கறுப்பு-சிவப்பு மட்பாண்டம்’ என்ற பெயரைக் கொடுத்தவர் பிரித்தானிய தொல்லியலாய்வாளரான ஸேர். மோட்டிமர் வீலர் ஆவார். “இந்த மட்பாண்டம் தனித்துவமான உருவத்தையும் கட்டுமானப்பொருளையும் கொண்டு, மெல்லச் சுற்றும் சில்லில் வனையப்பட்டு, மெருகேற்றப்பட்டு, மட்பாண்டத்தைத் தலைகீழாகப் புரட்டி சூளையில் சுடவைத்தபடியினால் அதன் உட்பக்கம் கறுப்பாகவும், வெளிப்பக்கம் பெருமளவில் சிவப்பாகவும், கறுப்பு அதன் மேற்பாகத்தில் (கழுத்துப்பக்கம்) வரையறுக்கப்பட்டும் காணப்படுகிறது”
“The pottery is distinctive in shape and fabric, it is turned on a slow wheel, polished and is characteristically black inside and more often black and red outside, with black confined to the upper part of the vessel, resulting from ‘inverted firing’ (Wheeler, 1947).
எமது ஆய்வில் இவ்வகையான மட்பாண்டங்கள் யாழ்ப்பாணத்தில் ஐந்து மையங்களில் கண்டெடுக்கப்பட்டன. இரு மையங்களில் – ஆனைக்கோட்டையிலும், களபூமியிலும் இவை பெருங்கற்கால ஈமப்படையல்களுடன் காணப்பட்டன. கந்தரோடையில் இவ்வகையான மட்கலன்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. மண்ணித்தலையிலும், வேலணையிலும் இவை குறைந்த அளவில் காணப்பட்டன. இந்த வகையான மட்கலன்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆரம்பகால மையங்களில் காணப்பட்டு பொதுயுகத்திற்கு (கிறிஸ்தாப்த காலம்) முன்னரே மறைந்துபோய் விடுகின்றன (Ragupathy, P. 1987: 9).
இவ்வகையான மட்கலன்களில் இரு உட்பிரிவுகள் காணப்படுகின்றன:
மட்கல வகை 1 – உட்பிரிவு 1: மெலிந்த மழுங்கலான விளிம்பு கொண்ட மட்கலன்கள்.
மட்கல வகை 1 – உட்பிரிவு 2: மட்டமான விளிம்பு கொண்ட மட்கலன்கள்.
மட்கல வகை 2
மற்றவகை கறுப்பு-சிவப்பு மட்கலன்கள்
காலம்: கி.மு. 700 – கி.பி. 300.
ஆரம்பகால மெலிந்த விளிம்பு கொண்ட அல்லது கூர்மையான முறிவளைவு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்கலன்களைவிட மேலும் மூன்று வகையான கறுப்பு-சிவப்பு மட்கலன்கள் மத்திய பெருங்கற்காலத்திலிருந்து பொதுயுகத்தின் ஆரம்ப நூற்றாண்டுகள்வரை யாழ்ப்பாண மையங்களில் காணப்படுகின்றன.
உட்பிரிவு 2.1: பெருங்கற்கால, வளைந்த விளிம்பு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்கலன்கள் வரலாற்று உதயகால, ஆதி வரலாற்றுக்காலத்தில் தயாரிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன.
உட்பிரிவு 2.2: தடிப்பான விளிம்பு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள். இவை பொதுயுகத்தின் ஆரம்ப ஆண்டுகளில் (கி.பி. 100-300 ஆண்டுக்காலங்களில்) பாவனையில் இருந்தவை.
உட்பிரிவு 2.3: இந்த மட்பாண்டங்களின் விளிம்பில் சுற்றவர பள்ளத்தடம் (Groove) காணப்படும். இந்த பள்ளத்தடத்தில் கறுப்பு-சிவப்பு நிறங்கள் காணப்பட்டபோதிலும் இவை பாரம்பரியமான கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் என்பது தெளிவாக நிறுவப்படவில்லை. இம்மாதிரியான மட்கலன்கள் மத்திய காலம்வரை தயாரிப்பில் இருந்திருக்கின்றன.
2011-12, 2017-18 ஆண்டுகளில் நடைபெற்ற யாழ்ப்பாணக்கோட்டை அகழ்வுகளில் குழிகளின் அடி மட்டங்களிலிருந்து இவ்வகையான கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன. இவ்வகை பெருங்கற்கால மட்கலன்கள் கி.மு. 700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 200 ஆம் ஆண்டுவரை அங்கே தயாரிப்பில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது (Thiagarajah, S. 2022: 24-25).
மட்கல வகை 3
ஆரம்பகால சிவப்பு மட்கலன்கள்
காலம்: கி.மு. 1200 – கி.மு. 300.
முழுவதும் சிவப்பு நிறமான இம்மட்பாண்டங்கள் மற்ற வகையான கறுப்பு-சிவப்பு மட்கலன்களுடன் கந்தரோடை, ஆனைக்கோட்டை, களபூமி ஆகிய பெருங்கற்கால மையங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் காணப்படுகின்றன. இவை கி.மு. 1200 ஆம் ஆண்டிலிருந்து கி.மு.300 ஆம் ஆண்டுக்காலம் வரை தயாரிப்பில் இருந்திருக்கின்றன.
இந்த ஆரம்பகால சிவப்பு மட்கலன்களில் நான்கு வகையான உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
உட்பிரிவு 3.1: தடித்து, உருண்டு, வெளியே தள்ளிக்கொண்டு புடைத்து நிற்கும் விளிம்பைக் கொண்ட சிவப்பு நிற மட்கலன்கள்.
உட்பிரிவு 3.2: கழுத்து நீண்ட அல்லது சற்றுக் குறைவான கழுத்துள்ள சிவப்புநிறப் பானைகள்.
உட்பிரிவு 3.3: கழுத்தில்லாத சிவப்புநிறக் குண்டுச்சட்டிகள்.
உட்பிரிவு 3.4: சிவப்பு நிற வட்டில்வகைப் பாண்டங்கள்.
மட்கல வகை 4
யாழ்ப்பாண ‘ரௌலெற்ரெட்’ கலன்கள்
காலம்: கி.மு. 500 – கி.பி. 300.
‘ரௌலெற்ரெட்’ கலன்கள் பொதுயுகத்திற்கு முற்பட்ட ஆயிரத்தாண்டில் கிரேக்க-உரோம இந்தியத் துணைக்கண்ட வர்த்தகத்தின் தனித்துவமான அடையாள உருவங்களாக (Iconic Markers) கணிக்கப்படுகின்றன. இவ்வகைக் கலன்கள் கிண்ணங்களாகவும், தட்டுக்களாகவும் காணப்படுகின்றன. தூய்மையான மெருகேறிய களிமண்ணிளாலான இக்கலன்களின் உட்பக்கம் பளபளப்பான கறுப்பு நிறமாகவும், வெளிப்பக்கம் மினுமினுக்கும் குங்குமப்பூ நிறமாகவும் காணப்படும். கலன்களின் உட்பக்கத்தில் காணப்படும் நேர்த்தியான கோலங்கள் ‘ரௌலெற்றுகள்’ எனப்படும். அதன் காரணமாக இவை ‘ரௌலெற்ரெட்’ கலன்கள் என அழைக்கப்படுகின்றன. ஏராளமான ரௌலெற்ரெட் கலவோடுகள் கந்தரோடையிலும், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக்கோட்டை, பூநகரி மற்றும் கடற்கரை மையங்களிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இக்கலன்களில் ஆதியான பாண்டங்கள் பொ.யு.மு. 500 ஆம் ஆண்டுக்காலத்திலிருந்து கிரேக்க மாலுமிகளால் கொண்டுவரப்பட்டவை. கி.மு. 300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300 ஆம் ஆண்டுவரை 600 ஆண்டுகளாக உரோமாபுரி வர்த்தகத்தின் முக்கியமானதொரு ஏற்றுமதிக்கலனாக இது விளங்கியிருக்கிறது (Krishnan & Coningham 1997: 925).

தமிழ்நாட்டில் அரிக்கமேட்டில் அகழாய்வை மேற்கொண்ட பிரித்தானிய தொல்லியலாய்வாளர் மோட்டிமர் வீலர் இம்மாதிரியான ரௌலெற்ரெட் மட்பாண்டங்கள் உரோம ‘அறிற்றைன்’ பாண்டங்களுடனும், உரோம மதுச்சாடிகளுடனும் ஒரே அகழ்வு மட்டத்தில் காணப்பட்டபடியினால் இவை உரோம மட்பாண்டங்கள் என முடிவெடுத்தார் (Ford Et Al. 2005: 911).
காலப்போக்கில் இதை நிகரொத்த (Duplicate) ரௌலெற்ரெட் மட்பாண்டங்கள் அரிக்கமேட்டிலும், இலங்கையில் அநுராதபுரத்திலும் தயாரிக்கப்பட்டன. இவை கி.மு. 200 ஆம் ஆண்டிலிருந்து அரிக்கமேட்டில் தயாரிக்கப்பட்டதாக ஆய்வாளர் விமலா பெக்லி கணித்துள்ளார் (Begley 1983; Schenk 2006). இவை ‘உள்ளூரில் தயாரிக்கப்பட்ட போதிலும், அதன் அலங்கார வடிவில் மத்தியதரைச் செல்வாக்குக் காணப்படுகிறது’ என்றார் (Begley, V. 1983, 1988).
அநுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட ரௌலெற்ரெட் மட்பாண்டங்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை என நுண்ணாய்வுகள் (Microanalysis) தெரிவிக்கின்றன. இந்தக்கலன்களில் பாவிக்கப்பட்ட களிமண் சமீபத்திலுள்ள ஆற்றிலிருந்து பெறப்பட்டது என்பதையும் இந்த நுண்ணாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த மட்பாண்டங்களின் காலம் கி.மு. 500 ஆம் ஆண்டு முதல் – கி.பி. 300 ஆம் ஆண்டுவரை எனக் காலக்கணிப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன (Krishnan & Coningham 1997: 925).
இரகுபதி தனது 1987 ஆம் ஆண்டின் ஆய்வுகளில் கந்தரோடையைத் தவிர ரௌலெற்ரெட் மட்பாண்டங்கள் காணப்பட்ட இடங்களெல்லாம் கடற்கரையை அண்டிய மையங்கள் எனக் கூறியுள்ளார். இவற்றில் கந்தரோடையில் காணப்பட்ட பெருந்தொகையான கலவோடுகள், இது ஒரு பெரிய வர்த்தக மையமாகவும் இருந்திருக்கவேண்டும் என எண்ணச் செய்கின்றன. இந்த மட்பாண்டங்கள் ஆரம்பகால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், மற்ற வகையான கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், ஆரம்பகால சிவப்பு மட்கலன்கள், தடித்த விளிம்புக்கலன்கள் ஆகியவற்றுடன் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால் இவற்றின் ஆரம்பகாலம் கி.மு. 500 ஆம் ஆண்டுக்காலம் எனக் கொள்ளலாம். ஆனைக்கோட்டையில் கண்டெடுத்த ரௌலெற்ரெட் மட்கலத்தில் கி.பி. இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிற்குரிய பிராமி எழுத்துப்பதிவுகள் காணப்பட்டன. யாழ்ப்பாணத்தில் கண்டெடுத்த ரௌலெற்ரெட் மட்பாண்டங்களை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம் (Ragupathy, P. 1987:13):
உட்பிரிவு 4.1: இந்தக் கலன்களின் இரு பக்கமும் கறுப்பு நிறமானது. ஒரு பக்கத்தில் மட்டும் ரௌலெற் பதிவுகள் உள்ளன.
உட்பிரிவு 4.2: கலன்களின் இரு பக்கமும் சாம்பல் நிறம், ஒரு பக்கத்தில் ரௌலெற் பதிவுகள் உள்ளன.
உட்பிரிவு 4.3: ஒரு பக்கம் குங்குமப்பூ நிறத்திலும், மறுபக்கம் சாம்பல் நிறத்திலும், சாம்பல் நிறப் பக்கத்தில் ரௌலெற் பதிவுகளும் காணப்படுகின்றன.
உட்பிரிவு 4.4: ஒரு பக்கம் குங்குமப்பூ நிறத்திலும், மறுபக்கம் கறுப்பு நிறத்திலும், குங்குமப்பூ நிறப் பக்கத்தில் ரௌலெற் பதிவுகள் உள்ளன.
உட்பிரிவு 4.5: மென்மையான சாம்பல்நிற கலன். அதன் இழைமானம் (Fabric) ரௌலெற்ரெட் கலன்களை நிகர்த்தது.
உட்பிரிவு 4.6: மென்மையான இழைமானம் கொண்ட கலன். குங்குமப்பூநிற வெளிப்பக்கம். சாம்பல் நிற உட்பக்கம்.
உட்பிரிவு 4.7: மென்மையான இழைமானம் கொண்ட கலன். இரு பக்கமும் குங்குமப்பூ நிறமானது.
உட்பிரிவு 4.8: உட்பக்கம் பளபளப்பான கறுப்பு நிறம். வெளிப்பக்கம் சாம்பல்நிற திட்டுக்கள் கொண்ட குங்குமப்பூ நிறம். தட்டையான விளிம்பு.
உட்பிரிவு 4.9: உட்பக்கம் சாம்பல் நிறம். வெளிப்பக்கம் சாம்பல் நிறத் திட்டுக்கள் கொண்ட குங்குமப்பூ நிறம். விளிம்பின் உச்சி தட்டையாக உள்ளது.
மட்கல வகை 5
தடித்த விளிம்பு கொண்ட சிவப்புக்கலன்கள்
காலம்: கி.மு. 500 – கி.பி. 1200.
யாழ்ப்பாண அகழ்வுகளில் அதிகமாக எல்லா மையங்களிலும் காணப்படும் தடித்த விளிம்பு கொண்ட சிவப்புநிற மட்பாண்டங்கள் இதுவாகும். பெருங்கற்கால புதையல்களில் கறுப்பு-சிவப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்களோடு காணப்படும் இக்கலன்கள் பொதுயுக ஆரம்பகாலங்களிலும், மத்திய காலங்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஏறக்குறைய 1700 ஆண்டுக்காலமாக உபயோகத்திலிருந்த இந்த மட்கலன்கள் யாழ்ப்பாண அரசு ஆரம்பமான காலத்தில் மறைந்து போகின்றன.
பல வகையான வடிவங்களையும், பல வகையான இழைமானங்களையும் கொண்ட இக்கலன்களின் விளிம்புகள் ஒரே சீராகத் தடித்தும், புறவளைவு கொண்டும் காணப்படும். இரகுபதி இக்கலன்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்:
1. சேமிப்புச் சாடிகள், 2. கிண்ண வடிவில், மற்றும் வட்டில் வடிவிலுள்ள குண்டுச்சட்டிகள், 3. அரிசி சுத்தம் செய்யும் வட்டில்கள். இவ்வகையான பாத்திரங்கள் 2000 ஆண்டுகளுக்கு மேலாக பாவனையில் இருந்தபடியினால் இவற்றை மட்டும் கொண்டு இவற்றின் காலத்தைக் கணிப்பது இயலாத காரியம். இது இடம்பெறும் அடுக்கமைவு மட்டத்தில் காணப்படும் மற்றைய தொல்பொருட்களையும் கொண்டே இதன் காலத்தைக் கணிப்பிட முடியும்.
அகழ்வுகளில் இவ்வகையான மட்கலன்கள் இடம்பெறும் காலப்பகுதிகளின் அடுக்கமைவில் (Stratified Layer) காணப்படும் கூட்டிணைப்புகள் இவை:
1. ஆரம்பத்தில் பெருங்கற் பண்பாட்டு மையங்களில் முறிவளைவு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்கலன்களுடன் (மட்கல வகை 1) இவை காணப்பட்டன.
2. அடுத்த அடுக்கமைவில் இவை முறிவளைவு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களுடனும் ஆரம்பகால ரௌலெற்ரெட் மட்பாண்டங்களுடனும் காணப்படுகின்றன.
3. பொதுயுகத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளில் இந்த மட்கலன்கள் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களுடனும் ரௌலெற்ரெட் மட்பாண்டங்களுடனும் காணப்படுகின்றன.
4. சற்றுப் பிற்காலத்தில் (மேல் அடுக்கமைவு) 3 ஆம் – 5 ஆம் நூற்றாண்டுகளில் இவை கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களுடன் காணப்படுவது மட்டுமல்லாது, இக்கலன்களிலும் கறுப்பு-சிவப்பு வகைகள் காணப்படுகின்றன.
5. வரலாற்று இடைக்காலத்தில் (Medieval Period) இவை சீன, இஸ்லாமியக் கலன்களுடனும், அக்காலத்தைய நாணயங்களுடனும், ஒரே அடுக்கமைவில் காணப்படுகின்றன.
6. சில மையங்களில் அதற்கும் மேலான அடுக்கமைவில் இந்தக்கலன்கள் மட்டுமே காணப்படுகின்றன. சில சமயங்களில் 11 ஆம் – 12 ஆம் நூற்றாண்டுக்காலத்தைய நாணயங்கள் அவற்றோடு காணப்படுகின்றன.
7. இம்மட்கலன்களின் இறுதிக் காலத்தில் (பொ.யு. 1200) அவற்றோடு வரிப்பள்ள விளிம்பு கொண்ட மட்கலன்கள் (வகை 8) காணப்படுகின்றன. (Ragupathy, P. 1987: 11).
மட்கல வகை 6
சீன – இஸ்லாமிய பீங்கான், கற்கலன்கள்
காலம்: கி.பி. 800 – 1200.
யாழ்ப்பாண மையங்களில் 9 ஆம் – 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் சீனாவிலிருந்தும், அரேபிய – பாரஸீக – சஸானிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட பலவகையான பளிங்கியல் மெருகூட்டப்பட்டதும், அல்லாததுமான பீங்கான்களும், கற்கலன்களும் காணப்படுகின்றன (Carswell, J. 1977-78).
இவ்வகையான கலன்கள் காணப்படும் அடுக்கமைவு மட்டங்களிலுள்ள மற்றைய தொல்பொருட்களின் காலத்தைக் கணிப்பதற்கும், யாழ்ப்பாணத் தொல்லியல் மையங்களின் மேல்மட்ட திகதியை மதிப்பிடவும் இக்கலன்கள் உதவுகின்றன. கலாநிதி இரகுபதி இக்கலன்களை கீழ்க்காணும் உட்பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார் (Ragupathy, P. 1987: 11).
உட்பிரிவு 6.1: கற்கலன் – பச்சைநிற பளிங்கு மெருகு (Glazed)
உட்பிரிவு 6.2: கற்கலன் – இருண்ட மண்ணிற மெருகு.
உட்பிரிவு 6.3: கற்கலன் – இலேசான மண்ணிற மெருகு.
உட்பிரிவு 6.4: கற்கலன் – உட்பக்கம் மஞ்சள்நிற மெருகு, வெளிப்பக்கம் மண்ணிற மஞ்சள் மெருகேற்றப்பட்டது.
உட்பிரிவு 6.5: கற்கலன் – இஸ்லாமிய நீல-பச்சை மெருகு.
உட்பிரிவு 6.6: கற்கலன் – பழுப்புச்-சிவப்பு கண்ணாடி மெருகு.
உட்பிரிவு 6.7: கற்கலன் – மெருகேற்றப்படாதது.
உட்பிரிவு 6.8: பீங்கான் – வெண்ணிறம்.
உட்பிரிவு 6.9: பீங்கான் – மெல்லிய மஞ்சள் நிறம்.
உட்பிரிவு 6.10: பீங்கான் – வெண்ணிறம் அல்லது மெல்லிய மஞ்சள் – பலவித கோலங்களால் அணிசெய்யப்பட்டது (கீழே படம் பார்க்கவும்).

மட்கல வகை 7
தடித்த பள்ள விளிம்பு கொண்ட கலன்கள்
காலம்: கி.பி. 1300.
இந்த வகையான மட்பாண்டங்கள் தடித்த விளிம்பு கொண்ட மட்கலன்களுக்கும், பள்ள விளிம்பு கொண்ட மட்கலன்களுக்கும் இடைப்பட்ட காலத்தவை. இவ்வகையான மட்பாண்டங்கள் வடமராச்சியிலும், பச்சிலைப்பள்ளியிலும் 11 ஆம் – 13 ஆம் ஆண்டுக்காலத்திற்குரிய நாணயங்களுடன் காணப்பட்டன. பாரம்பரியமாக தடித்த விளிம்பு கொண்ட பாத்திரங்களை வனையும் குயவர்கள் புதிதாக அறிமுகமாகிய பள்ள விளிம்பை இதில் புகுத்தியதன் காரணமாக இக்கலன்கள் வனையப்பட்டிருக்கலாம் என கலாநிதி இரகுபதி அபிப்பிராயம் தெரிவிக்கிறார்.
உட்பிரிவு 7.1: தடித்த விளிம்பில் சுற்றவர ஆழமான ஒருவரிப் பள்ளம் (Groove).
உட்பிரிவு 7.2: தடித்த விளிம்பில் சுற்றவர இரு பள்ளவரிகள்.
உட்பிரிவு 7.3: தடித்த விளிம்பில் சுற்றவர மூன்று பள்ளவரிகள்.
உட்பிரிவு 7.4: தடித்த விளிம்பில் சுற்றவர நான்கு பள்ளவரிகள்.
(Ragupathy, P. 1987: 11).
மட்கல வகை 8
பள்ள விளிம்பு கொண்ட கலன்கள்
காலம்: கி.பி. 1300 முதலாக.
தடித்த விளிம்பு கொண்ட சிவப்புநிற மட்பாண்டங்களை அடுத்து யாழ்ப்பாணத் தொல்லியல் மையங்களில் அதிகமாகக் காணப்படும் மட்பாண்டங்கள் இவையாகும். இவ்வகையான பள்ள விளிம்பு கொண்ட மட்பாண்டங்கள் சில இடங்களில் இன்றுவரை காணப்படுகின்றன. இதன் பாவனைக்காலங்களில் இலங்கையின் மத்தியகால நாணயங்கள், யாழ்ப்பாண இராச்சிய நாணயங்கள், டச்சுக்கார நாணயங்கள், ஆரம்பகால பிரித்தானிய நாணயங்கள் என்பன இவற்றுடன் காணப்பட்டன.
இருபாலையில் கைவிடப்பட்ட ஒரு குயவர் மண்குன்றை ஆய்வு செய்தபோது, வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு வகையான மட்கலன்கள் காணப்பட்டன. மேல்மட்டங்களில் சாதாரண விளிம்புகளில் பள்ளங்கள் கொண்ட கலன்களும், அடி மட்டங்களில் தடித்த விளிம்பு கொண்ட சிவப்பு மட்பாண்டங்களும் காணப்பட்டன. இந்த ஆய்வில் ஒரு வகையான மட்பாண்டங்கள் மற்றொரு வகையுடன் மேற்கவிந்திருப்பதை (Overlapping) காணக்கூடியதாகவும், தடித்த விளிம்பு கொண்ட மட்பாண்டங்களின் மேல்வரம்பை அறியக்கூடியதாகவும் இருந்தது (Ragupathy, P. 1987:11).
2.
கதிரியக்கக் கரிம தேதிக்கணிப்பு
தொல்லியல் அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்களின் வயதைக் கணிப்பிடும் ஆய்வு முறைகளில் மிக நம்பகரமானதாக கதிரியக்கக் கரிம ஆய்வுமுறை கூறப்படுகிறது. இன்றைய விரைவுபடுத்தப்பட்ட கதிரியக்கக் கரிம ஆய்வுகள் (Ams) இற்றைக்கு முன் 35,000 ஆண்டுகள்வரையான தொல்பொருட்களின் தெளிவான, நம்பத்தகுந்த வயதுகளை 60 ஆண்டு வேறுபாட்டிற்குள் அறியத்தருகின்றன.

உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் கரிமச் (Carbon) சேர்மானமுடைய உயிர்வேதி அணுத்திரண்மங்களைக் (Organic Molecules) கொண்டிருக்கின்றன. மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் அனைத்திலும் கரிமத்தின் மூன்று வகையான – கரிமம் 12, கரிமம் 13, கரிமம் 14 எனப்படும் ஓரகத்தனிமங்கள் (Isotopes) காணப்படுகின்றன.
இவற்றில் கரிமம்-14 கதிரியக்கம் (Radioactive) கொண்டது. வானவெளியில் உள்ள ‘கொஸ்மிக்’ கதிர்கள் நைற்றொஜின் வாயுவை இணைப்பதால் இந்தக் கதிரியக்கக் கரிமம் உண்டாகிறது. வானவெளியில் காணப்படும் இக்கரிமம் பிராணவாயுவுடன் இணைந்து கரியமிலவாயுவாகி, அதை தாவரங்கள் உள்வாங்கிக்கொள்கின்றன. மற்றைய உயிரினங்கள் தாவர உணவை உட்கொள்ளுமிடத்து இந்தக் கதிரியக்கக் கரிமம்-14 அவர்களின் உடலில் தங்கிவிடுகிறது. அவ்வாறு உயிரினங்கள் உயிர்வாழும்வரை கரிமம்-14 அன்றாடம் உடலில் சேர்ந்துகொண்டே வருகிறது.
கதிரியக்கக் கரிம தேதிக்கணிப்பு ஒரு உயிரினத்தின் உடல் திசுவிலுள்ள கரிமம்-12 (C-12) க்கும், கரிமம்-14 (C-14) க்கும் இடையிலுள்ள வீதத்தொடர்பை அளவிடுவதன்மூலம் கணிக்கப்படும் ஆய்வு. ஓர் உயிரினம் உயிராக இருந்தபொழுதில் கரிமம்-12, 100 சதவீதத்திலும், கரிமம்-14, 100 சதவீதத்திலும் காணப்படும். அந்த உயிரினம் இறந்த பின்னரும் கரிமம்-12 அப்படியே 100 சதவீதம் அந்த உயிரினத்தில் இருக்கும். ஆனால் கரிமம்-14, கதிரியக்கக் கரிமம் ஆனபடியினால் சிறிது சிறிதாக உருக்குலைந்து (Beta Decay) 5,730 ஆண்டுகளில் இறந்துபோன அந்த உடலிலோ, தாவரத்திலோ அதன் அளவு அரைவாசியாகிப் போய்விடும். இப்படியே ஒவ்வொரு 5,730 ஆண்டுகள் கழிய கரிமம்-14 மேலும், மேலும் அரைவாசியாகிக்கொண்டே போகும்.
அந்த உயிரினம் இறந்து போய் 5,730 ஆண்டுகளின் பின்னர் இந்த வீதத்தொடர்பு:
கரிமம்-12 : கரிமம்-14 – 100:50 ஆக இருக்கும்.
உயிரினம் இறந்து 11,460 ஆண்டுகளின் பின்னர் இந்த வீதத் தொடர்பு (Ratio):
கரிமம்-12 : கரிமம்-14 – 100:25 ஆகிவிடும்.
இந்த விகிதத் தொடர்பின் அடிப்படையில் அந்தக் கரிமச்சேர்க்கைப் பொருளைக் கொண்டு உயிரினம் இறந்துபோன காலத்தைக் கணிப்பிட முடிகிறது.
இப்படியே அந்த உயிரினம் இறந்து 45,840 ஆண்டுகளின் பின்னர், இறந்துபோன அந்த இனத்தின் உடலில் கரிமம்-14 இன் அளவு, உயிரோடு இருந்த காலத்திலிருந்த அளவிலிருந்து அறுபத்து நான்கில் ஒரு பாகம் மட்டுமே – அதாவது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படும். எனவே 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன உயிரினங்களின் காலக்கணிப்பை அளவிடுவதற்கு வேறு ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்படும்.
அகழ்வுகளில் கண்டெடுக்கப்படும் உயிரற்ற மட்பாண்டங்களினதோ, அல்லது உலோகப் பொருட்களினதோ வயதை இந்தமுறையைக் கொண்டு கணிப்பதற்கு அப்பாண்டங்களில் ஒட்டியிருக்கும் இறந்துபோன நுண்தாவரங்களின் (Organic Matter) வயதைக் கணிப்பதன்மூலம் அறிந்து கொள்ள முடியும்.
விரைவுபடுத்தப்பட்ட கரிமப் பகுப்பாய்வு (Accelerator Mass Spectrometry: AMS)
இப்புதிய முறையான கரிமத்தின் பகுப்பாய்வில், பகுப்பாய்வு இயந்திரத்தினுள்ளே செலுத்தப்படும் கரிமத்தை அந்த இயந்திரம் பகுப்பாய்வு செய்து அந்தக் கரிமப் பொருளில் எத்தனை கரிமம்-14, எத்தனை கரிமம்-13, எத்தனை கரிமம்-12 அணுக்கள் இருக்கின்றன என்பதைச் சரியாக அளவிட்டுக்காட்டிவிடும். இதன்காரணமாக கரிமம்-12: கரிமம்-14 இற்கு இடையிலான மிகச்சரியான விகிதத்தையும், பரீட்சார்த்தப் பொருளின் சரியான வயதையும் கணக்கிட முடிகிறது.

கந்தரோடை அகழ்வின் கதிரியக்கக் கரிம ஆய்வுகள்
1970 ஆம் ஆண்டு ஜீன் – ஜீலை மாதங்களில் கந்தரோடையில் அறிவியல்பூர்வமான அகழ்வாய்வை மேற்கொண்ட அமெரிக்க பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத் தொல்லியலாளர்கள், அங்கே கண்டெடுத்த தொல்பொருட்களை அமெரிக்காவில் மியாமியிலுள்ள கதிரியக்கக் கரிம ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அக்காலத்தைய இலங்கை அரசு இத்தொல்லியலாய்வின் கண்டுபிடிப்புகளில் எதுவிதமான அக்கறையும் காட்டவில்லை. அத்தொல்லிலாய்வைத் தலைமை தாங்கிய விமலா பெக்லியின் அறிக்கை இன்றுவரை அரசினால் பிரசுரிக்கப்படவில்லை.
1977 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்திற்கு ஆணையாளராக நியமிக்கப்பட்ட பிரபல தொல்லியராளரான சிரான் தெரனியகல, 1970 ஆம் ஆண்டில் கந்தரோடை அகழ்வுகளில் பங்குபற்றிய பென்னெற் புரொன்ஸனைத் தொடர்புகொண்டு கந்தரோடையில் கண்டெடுத்த தொல்பொருட்களின் கதிரியக்கக் கரிம கணிப்புத் திகதிகளைப் பெற்றுக்கொண்டார். இந்தத் திகதி அறிவிப்பு 08-02-1982 திகதியிட்ட இலங்கைப் பத்திரிகை Weekend இலும், பின்னர் கலாநிதி இரகுபதியின் 1987 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணத் தொல்லியலாய்வு நூலிலும் வெளியானது.
இத்தொல்லியல் பொருட்களில் P-2515, P-2525 என அடையாளமிட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் முறையே கி.மு. 1290±60 ஆண்டையும், 980±220 ஆண்டையும் தந்திருக்கின்றன. இக்காலக் கணிப்பின்படி இற்றைக்கு 3350 ஆண்டுகளுக்கு முன்னரே இம்மட்பாண்டங்களை உபயோகித்த பெருங்கற்கால மக்களின் குடியேற்றங்கள் கந்தரோடையில் நிகழ்ந்திருக்கின்றன (Ragupathy, P. 1987:205, Thiagarajah, S. 2016: 42).
3.
வெப்பேற்றுக் கதிரொளிவீச்சுக் காலக்கணிப்பு (Thermo Luminescence (TL) Dating)
வெப்பேற்றுக் கதிரொளிவீச்சுக் காலக்கணிப்பானது மட்பாண்டங்கள், பீங்கான்கள், சுட்ட செங்கட்டிகள், சுட்ட ஓடுகள் ஆகிய திடப்பொருட்களின் முழுமையான வயதைக் கணிப்பிடும் ஆய்வுமுறை. தொல்லியல் ஆய்வுகளிலும், நில அமைப்பியல் ஆய்வுகளிலும் இந்தவகையான காலக்கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. வெப்பேற்றுக் கதிரொளிவீச்சுக் காலக்கணிப்பில் இற்றைக்கு முன் 500 ஆம் ஆண்டிலிருந்து 250,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்க முடிகிறது.
செயல்முறைத் தத்துவம் (The Principle)
கதிரொளிவீச்சுக் காலக்கணிப்பின் அடிப்படைத் தத்துவம் மட்பாண்டங்கள், பீங்கான்கள், செங்கற்கள், ஓடுகள் ஆகியன செய்யப்படும் மண்ணில் இயற்கையாகக் காணப்படும் குவாட்ஸ், வெஃல்ஸ்பார் (Feldspar), கல்சைற் (Calcite) போன்ற படிகக்கற்கள், அதே மண்ணில் காணப்படும் கதிரியக்க உலோகங்களான யூரேனியம், தோறியம், பொற்றாசியம் ஆகியன வெளிவிடும் இலெக்றோன் கதிர்களை (Electrons) உறிஞ்சி எடுத்து அவற்றில் சேகரித்து வைப்பதில் தங்கியிருக்கிறது.
மண்ணிலிருந்து செய்யப்பட்ட மட்கலன்களையோ, செங்கற்களையோ சூளையிலிட்டுச் சுடும்போது அவற்றிருக்கும் கதிரியக்க இலெக்றோன்கள் அனைத்தும் அப்பாத்திரத்திலிருந்தோ, செங்கல்லிலிருந்தோ முற்றாக வெளிவந்து அப்பொருளின் ‘தொல்லியல் கடிகாரம்’ பூஜ்யத்தில் போய் நிற்கிறது (The Archaeological Clock Is Set To Zero). சமையல் பாத்திரங்களுக்கு, அவற்றைக் கடைசியாக அடுப்பில் வைத்து எரித்த சமயம், பூஜ்யமாகக் கொள்ளப்படும்.
இப்பாத்திரங்களோ அல்லது செங்கட்டிகளோ கடைசியாக நெருப்பில் எரிபட்டு அவற்றிலிருந்த இலெக்றோன் கதிர்கள் அனைத்தும் நீக்கப்பட்டபின்னர் நிலத்தினுள் புதையுண்டிருந்த சமயம், மீண்டும் நிலத்திலிருக்கும் கதிரியக்க உலோகங்களான யூரேனியம், தோறியம், பொற்றாசியம் ஆகியன வெளிவிடும் இலெக்றோன் கதிர்களை உறிஞ்சி எடுத்து, அவற்றில் சேகரித்து வைத்துக்கொள்கிறது. இவற்றோடு வெளி உலகில் உள்ள ‘கொஸ்மிக்’ கதிர்களும் உறிஞ்சியெடுக்கப்படுகின்றன.
தொல்லியல் அகழ்வுகளில் இப்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டு ‘வெப்பேற்றுக் கதிரொளிவீச்சு’க் காலக்கணிப்பிற்கான ஆய்வுகூடத்தில் ஆய்வு செய்யப்படும்போது – அப்பாண்டங்கள் ‘மைக்கிறோவேவ்’ போன்ற ஓர் இயந்திரத்திலிட்டு சூடாக்கப்படுகின்றன. அப்படிச் சூடாக்கும்போது அவற்றிலிருந்து வெளிக்கிளம்பும் அல்பா, பீற்றா, காமா துணுக்குகள் (Alpha, Beta And Gamma Particles Alpha, Beta And Gamma Particles) ஒளிக்கதிர்களாக வெளிவருகின்றன. அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இலெக்றொன்களை, எண்ணும் கருவி (Electron Counter) கணக்கிடுகிறது. ஒரு கட்டத்தில் அப்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இலெக்றோன்களும் வெளியான பின்னர், ஒளிக்கதிர்கள் நின்று போய், எண்ணும் கருவியும் மேலே நகராமல் நின்றுவிடும். எண்ணும் கருவி காட்டும் இலெக்றோன்களின் தொகை அப்பாண்டத்தின் சேமிக்கப்பட்ட மொத்த ஒளிக்கதிர் அளவு (The Accumulated Dose) ஆகும்.
மிகப் பழைமையான பாண்டங்களில் அதிக அளவு கதிர்கள் சேமிக்கப்பட்டிருப்பதனால், அதிக அளவு இலெக்றோன்கன் வெளிவரும்.
அந்த தொல்பாண்டம் கண்டெடுக்கப்பட்ட குழியிலிருந்து வெளிவரும் இலெக்றோன்கள் அதனை அளவிடும் கருவியைக்கொண்டு (Modified Geiger-Muller Counter) கணக்கிடப்படுகிறது. அதோடு வெளியுலகக் கொஸ்மிக் கதிர்களும் சேர்க்கப்படுகின்றன. ஒரு ஆண்டில் அப்பாண்டம் அதன் ‘ஒரு மில்லிகிராம் நிறைக்கு’ எவ்வளவு ஒளிக்கதிர்களை உறிஞ்சுகிறது எனக் கணக்கிடப்பட்டு, பரீட்சார்த்தப் பாண்டத்தின் நிறைக்கேற்ப அது எடுத்துக்கொண்ட ஒளிக்கதிர் அளவு கணக்கிடப்படும். இது அப்பாண்டம் ஆண்டொன்றிற்கு உறிஞ்சப்பட்ட ஒளிக்கதிர் அளவு ஆகும். இந்த அளவுகளைக்கொண்டு அப்பாண்டத்தின் வயது கணிக்கப்படும்.
பாண்டத்தின் வயது = சேமிக்கப்பட்ட மொத்த ஒளிக்கதிர் அளவு
ஆண்டொன்றிற்கு உறிஞ்சப்பட்ட ஒளிக்கதிர் அளவு
இந்த வயது உண்மையில் அப்பொருள் அகழ்ந்தெடுக்கப்பட முன்னர் கடைசியாகச் சூடாக்கப்பட்ட காலமாகும்.
உண்மைத்தனமும் நேர்மைத்தகவும்
இந்த ஆய்வின் உண்மைத்தனம், அந்தப் பரீட்சார்த்தப் பாண்டம் கண்டெடுத்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சூழலிலுள்ள கதிரியக்கத்தை சரியாக அளவிடுவதில் தங்கியிருக்கிறது. பெரும்பாலும் இத்தொல்பொருள் காலக்கணிப்பு, உண்மையான வயதிலிருந்து 15 சதவீத வேறுபாட்டிற்குள்ளேயே இருக்கும். அதே தொல்லியல் குழியில் கண்டெடுத்த பல தொல்பொருட்களை இந்தமுறையில் காலக்கணிப்பு செய்து அவற்றின் சராசரியைக் காண்பதன்மூலம் இந்த வேறுபாட்டை 7-10 சதவீதமாகக் குறைக்க முடியும். இதன்காரணமாக இக்கணிப்பின் மூலம் ஒரு தொல்பொருளின் வயதைக் கொடுக்கும் போது வயது – வேறுபடக்கூடிய எல்லைகளைக் கொடுப்பதும் வழக்கம் (Thiagarajah, S. 2016: 44).
இந்த ஆய்வின்மூலம் பெறப்படும் ஒரு பாண்டத்தின் வயதுக்கணிப்பு அப்பாண்டத்தைக் கொண்டுவரும் குழுவின் நேர்மையிலும் தங்கியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக வனைந்த ஒரு சீன மட்கலனுக்கு செயற்கையாக கதிரியக்கக் கதிர்களை ஏற்றிய பின்னர் அதை காலக்கணிப்பிற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆய்வுகூட கதிரொளிவீச்சுக் காலக்கணிப்பில் அக்கலன் மிகப்பழமையான வயதைக் கொடுத்திருக்கிறது. பின்னர் அக்கலன் நியூயார்க்கில் ஏலவிற்பனைக்குச் சென்றபோது, அக்கலன் செய்யப்பட்ட களிமண் அதன் வயதுக்காலத்தில் சீனாவில் இருக்கவில்லை என்ற உண்மை வெளிவந்து அக்கலன் ஏலத்திலிருந்து நீக்கப்பட்டது.



4.
ஒளிக்கிளர்ச்சியூட்டிய கதிரொளிவீச்சுக் காலக்கணிப்பு (Optically Stimulated Luminescence (OSL) Dating)
செயல்முறைத் தத்துவம் (The Principle)
மேலே வெப்பேற்றுக் கதிர்வீச்சுக் காலக்கணிப்பில் கூறப்பட்ட அதே அடிப்படைத் தத்துவம் இந்த ஆய்வு முறையிலும் பயன்படுத்தப்படுகிறது. மட்பாண்டங்கள், பீங்கான்கள், செங்கற்கள், ஓடுகள் ஆகியன செய்யப்படும் மண்ணில் இயற்கையாகக் காணப்படும் குவாட்ஸ், வெஃல்ஸ்பார் (Feldspar), கல்சைற் (Calcite) போன்ற படிகக்கற்கள், அதே மண்ணில் காணப்படும் கதிரியக்க உலோகங்களான யூரேனியம், தோறியம், பொற்றாசியம் ஆகியன வெளிவிடும் இலெக்றோன் கதிர்களை (Electrons) உறிஞ்சி எடுத்து அவற்றில் சேகரித்து வைப்பதில் தங்கியிருக்கிறது.
மண்ணிலிருந்து செய்யப்பட்ட மட்கலன்களையோ, செங்கற்களையோ சூளையிலிட்டுச் சுடும்போது அவற்றிருக்கும் கதிரியக்க இலெக்றோன்கள் அனைத்தும் அப்பாத்திரத்திலிருந்தோ, செங்கல்லிலிருந்தோ முற்றாக விலகிப்போய் அப்பொருளின் தொல்லியல் கடிகாரம் பூஜ்யத்தில் பதிவாகிறது (The Archaeological Clock Is Set To Zero). சமையல் பாத்திரங்களுக்கு அவற்றை கடைசியாக அடுப்பில் வைத்து எரித்த சமயம்தான் பூஜ்யமாக எடுக்கப்படும்.
இப்பாத்திரங்களோ அல்லது செங்கட்டிகளோ கடைசியாக நெருப்பில் எரிபட்டு அவற்றிலிருந்த இலெக்றோன் கதிர்கள் அனைத்தும் நீக்கப்பட்ட பின்னர் நிலத்தினுள் புதையுண்டிருந்த சமயம் மீண்டும் நிலத்திலிருக்கும் கதிரியக்க உலோகங்களான யூரேனியம், தோறியம், பொற்றாசியம் ஆகியன வெளிவிடும் இலெக்றோன் கதிர்களை உறிஞ்சி எடுத்து அவற்றில் சேகரித்து வைத்துக் கொள்கிறது. இவற்றோடு வெளி உலகில் உள்ள ‘கொஸ்மிக்’ கதிர்களும் உறிஞ்சியெடுக்கப்படுகின்றன.
இந்த மட்கலன்களில் சேமிக்கப்பட்டிருக்கும் மொத்த ஒளிக்கதிர் அளவு வெப்பேற்று முறையில் அக்கலன்களைச் சூடாக்கி வெளிக்கொணரப்படுகின்றதை இதற்கு முந்திய காலக்கணிப்பு முறையில் பார்த்தோம். இந்த முறையில் சூடாக்குவதற்குப் பதிலாக குறிப்பிட்ட அலை அளவுகளைக் கொண்ட வெண்ணிற ஒளியைப் பாச்சி (Specific Wavelengths Of Light) அதில் சேமிக்கப்பட்டிருக்கும் இலெக்றோன்களை வெளிக் கொண்டுவருவார்கள். இலெக்றோன்கள் வெளிவரும்போது ஒளிக்கதிர்களாகவே வெளிவரும். இந்த ஆய்வு முறை ஆங்கிலத்தில் ‘optical Bleaching’ எனப்படும்.
மற்றும்படி அனைத்துக் காலக்கணிப்பு முறையும் வெப்பேற்றுக் கணிப்பில் கூறியவாறே நடைபெறும். இக் காலக்கணிப்பு முறையில் ஒரு தொல்பொருளின் காலக்கணிப்பு இற்றைக்குமுன் 500 ஆம் ஆண்டிலிருந்து 500,000 ஆம் ஆண்டுக்காலம் வரை 10 சதவீத வேறுபாட்டிற்குள் கணிப்பிட முடிகிறது.

உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்
- Begley, V. (1981). Excavations at Pomparippu 1970. Ancient Ceylon, (4), May 1981, Colombo.
- Begley, V. (1983). Arikamedu reconsidered. American Journal of Archaeology, 87, 461–481.
- Begley, V. (1988). Rouletted ware at Arikamedu: A new approach. American Journal of Archaeology, 92, 427–440.
- Carswell, J. (1978). China and Islam: A survey of the coast of India and Ceylon. Transactions of the Oriental Ceramic Society, 42 (1977–1978).
- Deraniyagala, S. U. (1972). Archaeological exploration in Ceylon, Kollan Kanatta, Vilpattu. Ancient Ceylon, (2), December 1972, Colombo.
- Deraniyagala, S. U. (1972). The citadel of Anuradhapura 1969: Excavation in the Gedige area. Ancient Ceylon, (2), Colombo.
- Deraniyagala, S. U. (1992). Prehistory of Sri Lanka: An ecological perspective. Sri Lanka Department of Archaeological Survey, Colombo.
- Deraniyagala, S. U. (1996). Pre- and protohistoric settlement in Sri Lanka. In XIIth Congress – Proceedings of the International Union of Prehistoric and Protohistoric Sciences, Forli, Italy, 8–14 Sept. 1996, Vol. 5, Section 16, 277–285.
- Gururaja Rao, B. K. (1972). The megalithic culture in South India. University of Mysore, India.
- Krishnan, K., & Coningham, R. A. E. (1997). Microstructural analysis of samples of rouletted ware and associated pottery from Anuradhapura, Sri Lanka. In E. R. Allchin & B. Allchin (Eds.), South Asian Archaeology 1995 (Vol. 2, pp. 925–937). Oxford and IBH, New Delhi.
- Moorti, U. S. (1994). Megalithic culture of South India. Ganga Kaveri Publishing House, Varanasi.
- Petrie, W. M. Flinders. (1931). Seventy years in archaeology. London. (Reprint 1969): Greenwood Press, Westport.
- Possehl, G. L. (1994). Radiometric dates for South Asian archaeology. An Occasional Publication of the Asia Section, University Museum, University of Pennsylvania, Philadelphia.
- Ragupathy, P. (1987). Early settlements in Jaffna: An archaeological survey. Mrs. Ragupathy, Madras.
- Sahney, V. (Later Vimala Begley). (1965). The black and red ware in the Iron Age of South India (Ph.D. thesis). University of Pennsylvania.
- Schenk, H. (2006). The dating and historical value of rouletted ware. Zeitschrift für Archäologie Außereuropäischer Kulturen, 1, 123–153.
- Sitrampalam, S. K. (1980). The megalithic culture in Sri Lanka (Ph.D. thesis). Deccan College, Poona.
- Soundara Rajan, K. V. (1969). Megaliths and black and red ware. In Seminar Papers on the Problems of Megaliths in India, Varanasi.
- Thiagarajah, S. (2016). Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE – 800 CE. Kumaran Book House, Colombo–Chennai.
- Tyldesley, J. (2005). Egypt. BBC Books, London.
- Wheeler, R. E. M., Ghosh, A., & Deva, K. (1946). Arikamedu: An Indo-Roman trading station on the east coast of India. Ancient India, 2, 17–124.
- Wheeler, R. E. M. (1947). Brahmagiri and Chandravalli: Megalithic and other cultures in Mysore State. Ancient India, 4, 180–310 (1947–48).
- Wheeler, R. E. M. (1966). Civilizations of the Indus Valley and beyond. Thames and Hudson, London.