அரசியல் தேசியவாதத்துக்கு அடித்தளம் அமைத்த பண்பாட்டு மலர்ச்சி
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

அரசியல் தேசியவாதத்துக்கு அடித்தளம் அமைத்த பண்பாட்டு மலர்ச்சி

October 9, 2025 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

விடுதலை இலக்கு இல்லாத தேசியவாதம்

பொன்னம்பலம் அருணாசலம் தொடக்கியது அரசியல் தேசியவாதத்தில் (Political Nationalism) அடங்கும். அவர் 1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸை அமைத்து, அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, அவர் வைத்த இலக்கு அல்லது குறிக்கோள் ஒரு முழுமையான அரசியல் தேசியவாதப் பண்பை வெளிப்படுத்தவில்லை எனலாம்.

அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு நாட்டில் எழும் அரசியல் தேசிய இயக்கம் அந்த நாட்டவரின் விடுதலையை இலக்காக வைப்பது அவசியமாகும். அருணாசலம் கொண்டிருந்த இலக்கு அதுவரை செல்லவில்லை. “பொறுப்புள்ள ஆட்சியைப் பெற்று, இலங்கையைப் பிரித்தானியப் பேரரசின் ஒருங்கிணைந்த பாகமாக” (“Realization of responsible government in Ceylon as an integral part of the British empire”) வைத்திருப்பதையே அவர் நோக்கமாகத் தெரிவித்தார். பேரரசில் இருந்து விலகுவது அவர் மனதில் இருக்கவில்லை.

அரசியல் தேசியவாதத்துக்கு மிகவும் முக்கியமான இன்னொரு இலக்கு நாட்டின் பல்வகைப்பட்ட மக்கள் குழுக்களின் தேசிய அடையாளம் மற்றும் ஒற்றுமை ஆகியவை தொடர்பான ஓர் உணர்வை வளர்த்தல் (Sense of National Identity and Unity) ஆகும். இதனையும் இலங்கைத் தேசிய காங்கிரஸ் செய்யத் தவறியது.

மொழிசார் மறுமலர்ச்சி

இதே வேளையில் சிங்கள மக்கள் மத்தியில் அநகாரிக தர்மபால தொடக்கிய சமயம்சார் தேசியவாதம் (Religious Nationalism) தடையின்றிப் பரவலாக வளர்ந்து கொண்டிருந்தது. பௌத்த மக்களுடைய கடந்தகாலச் சிறப்பை மீட்சி செய்ய (To Reclaim the Past) அநகாரிக செயற்பட்டுக் கொண்டிருந்தார். இவருடைய இயக்கத்தின் நோக்கம் பௌத்தம் முன்பு அனுபவித்த மேலாதிக்கத்தை மீண்டும் நிலைப்படுத்துவதுடன், அது இழந்த சமயத் தலங்களை மீண்டும் பௌத்தர் கைக்குக் கொண்டுவந்து சீர்படுத்துவதாகும்.

இவரைப் போன்று இன்னொருவர் 1920களில் இன்னொரு துறையில் கடந்தகாலச் சிறப்பினை மீட்சி செய்யும் நோக்குடன் தீவிரமாகச் செயலாற்றத் தொடங்கினார். இவர் மொழிசார் இயக்கம் ஒன்றைத் தொடக்கிய முனிதாஸ குமாரத்துங்க என்பவராவார். பழைய சிங்களமாகிய ஹெள மொழியை மீண்டும் வழங்கச் செய்து, பிறமொழிப் பாதிப்பால் (அவர் கணிப்பில்) மாசு படிந்து காணப்பட்ட சிங்கள மொழியை மாசுநீக்கி மீளமைப்பது (Restore the Lost Hela Language) இவர் குறிக்கோளாகும்.

இதற்கு முன்னர் பாளி மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் சார்ந்த மறுமலர்ச்சி தொடங்கிவிட்டது. அத்துடன் பழைய சிங்கள இலக்கிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் செயலும் நடைபெற்றது. இவை எல்லாம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் இடம்பெற்ற பௌத்த மறுமலர்ச்சியுடன் தொடர்புடையவையாகப் பௌத்த கல்வி நிறுவனங்களில் (பிரிவெனக்களில்), சிறப்பாகப் புதிதாக நிறுவப்பட்ட வித்தியோதய மற்றும் வித்தியாலங்கார பிரிவெனக் கல்லூரிகளில், ஆர்வமுடன் நிகழ்ந்தன.

இவற்றைவிட, முக்கியமாகக் கவனிக்கத்தக்க வகையில் நுண்கலைத் துறையில் புதிய மலர்ச்சி காணப்பட்டது. மொழி, இலக்கியம், சமயம் ஆகியவை தொடர்பாக இடம்பெற்ற செயற்பாடுகளை மறுமலர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் எனலாம். ஏனெனில் இத்துறைகள் முன் பெற்றிருந்த நிலையை இழந்திருந்தபடியால் அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், பழைய சிங்களப் பண்பாட்டில் இசை, நடனம், நாடகம் ஆகியவை உயர் சமூகத்தின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. சைவ, வைஷ்ணவ மதங்களைப் பொறுத்தமட்டில், இக்கலைகள் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றுக் கோயில்களில் வளர்க்கப்பட்டன. பௌத்த வழிபாட்டில் இவை அத்தகைய இடத்தைப் பெறவில்லை.

தேசிய உணர்வு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து மெதுவாக எழத் தொடங்கியபோது நுண்கலைத் துறையிலும் ஒரு தனித்துவ அடையாளம் சிங்கள மக்களுக்குத் தேவை என்று, அதனை உருவாக்க (Quest for a New Identity) சிலர் ஆர்வம் கொண்டனர். அவர்களுள் முதலிடம் பெறுபவர் ஜோன் த சில்வா என்பவர். இவர் 1903 இல் ஸிங்ஹள ஆர்ய ஸுபோத நாட்ய ஸபா என்ற பெயரில் ஒரு நாடக சபையை நிறுவி சிங்கள நாடகங்கள் மூலம் பண்பாட்டை வளர்க்கும் செயற்பாடுகளைத் தொடங்கினார்.

பாரம்பரிய சிங்கள இசை வட இந்திய இசை மரபில் இருந்து பெறப்பட்டது என்ற (தவறான) கோட்பாட்டை ஜோன் த சில்வா முன்வைத்து, ஹிந்துஸ்தானி இராகங்களுக்கு அமைய, சிங்களப் பாடல்களை இயற்றி அரங்கேற்றினார். இவ்வாறாகச் சிங்கள இசைக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இப்படியாக 20 ஆம் நூற்றாண்டின் முதல் காலில் சிங்கள சமூகத்தில் எழுச்சிபெற்ற சமயம், மொழி, பண்பாடு சார்ந்த இயக்கங்கள் பின்னர் எழும் அரசியல் தேசியவாதத்துக்கு அடித்தளம் அமைத்தன.

சிங்கள இயக்கங்களும் யாழ்ப்பாணமும்

இந்த வரலாற்றுப் போக்கினை மேலும் விரித்துக் கூறுமுன், இதனை ஏன் யாழ்ப்பாணத்தைப் பற்றிய இத் தொடர் கட்டுரைகளில் கூறவேண்டி உள்ளது என்பதைச் சிறிது விளக்கவேண்டும்.

இலங்கையின் தென்பாகத்தில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் நடைபெற்ற மிக முக்கியமான நிகழ்வு என்னவெனில் நாட்டின் நவீன வரலாற்றின் போக்கினை நிர்ணயிக்கும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் எழுச்சி ஆகும். இதே நூற்றாண்டின் பிற்பாதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது தெற்கில் தோன்றிய இத்தேசியவாதம் கொடுத்த சவாலுக்கு (Challenge) யாழ்ப்பாணத்து அரசிய தலைவர்கள் தெரிவித்த சவால் ஏற்பு (Response) ஆகும். இக்காரணத்துக்காக, இச்சவால் எவ்வாறு சிறுபான்மைத் தலைவர்கள் அறிந்துகொள்ளாத வகையில் சத்தமின்றி வலுப்பெற்று, 1950களில் வெடித்து வெளிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

பண்பாட்டு மலர்ச்சி

இந்திய அறிஞர் பேராசிரியர் பார்தா சட்டர்ஜி (Prof. Partha Chatterjee) தெரிவித்த ஒரு கருத்தை இங்கு கூறுவது பொருத்தமாகும். காலனியாட்சி நடைபெற்ற நாடுகளில் அரசியல் தேசியவாதம் தோன்றுமுன் முன்னோட்ட நிகழ்வாக (Antecedent) பண்பாட்டுச் சீர்திருத்தம் நடைபெறுகிறது. காலனித்துவத்தால் மாசுபடாத ஒரு தூய பண்பாடு முன்னர் தங்களுக்கு இருந்ததாகச் சுதேச அறிவுத்திறனாளர் கற்பனை செய்து, அதனை மீண்டும் மலரச் செய்வதற்கு முயல்கிறார்கள். இது சட்டர்ஜி முன்வைக்கும் கருத்து. அரசியலிலும் பொருளியலிலும் தங்கள் நாட்டில் அந்நியர் ஆதிக்கம் பெற்றிருந்தபோதிலும், பண்பாட்டுப் புலத்தில் தங்கள் ஆதிக்கத்தை இழக்காதவராய், அந்நியர் தாக்கத்தைத் தடுத்துப் பழைய பண்பாட்டை மீண்டும் மலரச் செய்ய முயல்வதற்கு, சுதந்திரமாக இவர்கள் அந்நியர் ஆதிக்கம் இன்றிச் செயல்படுகிறார்கள்.

பேராசிரியர் சட்டர்ஜி தனக்கு நன்கு அறியக்கூடியதாய் இருந்த வங்காளப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்துத் தன் கருத்தை முன்வைத்தார். இலங்கையில் 20 ஆம் நூற்றாண்டின் முதல் காலில் நடந்தவற்றை நோக்கினால் அவை சட்டர்ஜியின் கருத்துக்குப் பொருத்தமானவையாக அமைவதைக் காணலாம். அரசியல் தேசியவாதம் எழுமுன், சமயம் மற்றும் பண்பாட்டுப் புலங்களில் இலங்கையர் அந்நியருக்குக் கீழ்ப்படியாது தங்கள் ஆதிக்கத்தை மீளப்பெற்றனர் எனலாம்.

சமயப் புலம்

கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு 19 ஆம் நூற்றாண்டின் பெரும்பாகத்தில் மேலோங்கி வளர, பௌத்தமும் சைவமும் வலு இழந்த நிலையில் காணப்பட்டன. மிஷனரிமாருடைய செயற்பாடுகள் இரண்டு மதங்களுக்கும் கடும் சவாலாக அமைந்தன.

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட நிலைமை பிற இடங்களில் இருந்ததை விடப் பெரிதும் வேறுபட்டு இருந்தது. இங்கு அமெரிக்க மிஷனரிமார் ஊர்ப்புறங்களில் பாடசாலைகளை அமைத்துக் கல்வி மூலம் கிறிஸ்தவப் பிரசாரத்தை நடத்தினர். தமிழைக் கற்று, ஊரூராகச் சென்று சைவ வழிபாட்டுமுறைகளை விமர்சித்தனர். ஆங்கிலத்தைக் கற்பிப்பதற்குச் சிறப்புப் பாடசாலைகளை நிறுவினர். ஆங்கிலக் கல்வி அரச நிர்வாகத்தில் தொழில் பெற்று சமூகத்தில் மேல் எழ வாய்ப்புக் கொடுப்பதைக் கண்டதும் யாழ்ப்பாணத்தவர் மிஷனரிமாருடைய பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பினர்.

மிஷனரிமாருடைய செல்வாக்கு வளரத் தொடங்க சைவப் பிரமுகர்கள் அதனைத் தணிப்பதற்கு முயற்சி எடுத்தனர். இவர்களுள் முன்னிலையில் காணப்பட்டவர் ஆறுமுக நாவலர். நாவலர் சைவ சமயத்தை வளர்க்க, மிஷனரிமார் வெற்றிகரமாகப் பயன்படுத்திய செயல்முறைகளைக் கையாண்டு தன் சமயச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தினார் (Modernization).

சைவப் பாடசாலைகள் திறக்கப்பட்டன. நாவலர் 1848 இல் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையைத் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து, அச்சு இயந்திரம் ஒன்றை வாங்கி, சைவ நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் அச்சிட்டு, கிறிஸ்தவப் பிரசாரத்தை எதிர்க்கும் இயக்கத்தை நடத்தினார். ஆங்கிலக் கல்வியையும் புவியியல் போன்ற நவீன பாடங்களையும் நாவலர் வற்புறுத்தி, ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையையும் நிறுவினார்.

நாவலருக்குப் பின்பும் சைவப் பிரமுகர்கள் கல்வித் துறையில் தொடர்ந்து வளர்ச்சிக்காகப் பல முயற்சிகளை எடுத்தனர். யாழ்ப்பாணக் கல்லூரி போன்ற கிறிஸ்தவக் கல்லூரிகள் உயர்கல்விக்கான வசதிகளைக் கொடுத்ததுபோல், சைவ இளைஞர்களுக்கு ஆங்கில மேற்படிப்புக்கு வழிவகுக்க 1890 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவினர். அங்கு கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் இளமாணிப் பட்டப் பரீட்சைகளுக்கு மாணவர் தயாராக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நகருக்கு வெளியே சைவ மாணவர்கள் ஆங்கிலக் கல்வியைப் பெற நடுநிலைப் பாடசாலைகளை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவற்றின் விளைவாகக் கொக்குவில், சாவகச்சேரி ஆகிய ஊர்களில் சைவப் பாடசாலைகள் தொடக்கப்பட்டு, அவை பின்னர் அவ்விடங்களின் இந்துக் கல்லூரிகளாக உயர்வு பெற்றன.

கல்வித் துறையில் இந்த முயற்சிகளை மேற்கொள்ள சைவ வித்தியா விருத்திச் சங்கம் (Hindu Board of Education) என்ற ஒரு சபை உருவாக்கப்பட்டது. சைவ பரிபாலன சபை என்ற இன்னொரு கழகம் சைவத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கும் சைவப் பாடசாலைகளை நிறுவுவதற்கும் 1888 இல் அமைக்கப்பட்டது. இச்சபை 1889 இல் இருந்து இந்து சாதனம் என்ற செய்தித்தாளையும் வெளியிடத் தொடங்கியது.

சைவப் பாடசாலைகள் ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கின. பெண் பிள்ளைகளுக்கு ஒரு தனியான பாடசாலையை நிறுவுவதற்குப் பொன்னம்பலம் இராமநாதன் முன்வந்து 1913 இல் சைவப் பெண்களுக்கான முதலாவது பாடசாலையை, இராமநாதன் கல்லூரியை, நிறுவினார். இந்த நிறுவனத்தின் முதலாவது அதிபராக இங்கிலாந்தில் இருந்து புளோரென்ஸ் பார் (Florence Farr) என்ற பெண்மணி வருவிக்கப்பட்டார்.

இராமநாதன் சில ஆண்டுகளின் பின்னர், 1917 இல், சைவ ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு கல்லூரியைத் திருநெல்வேலியில் (பரமேஸ்வராக் கல்லூரி) அமைத்தார். சைவப் பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள் மேலும் வளர, 1928 இல் ஒரு தனியான சைவ ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையும் அமைக்கப்பட்டது.

பௌத்தர் கல்வி

இலங்கையின் தென்பாகத்தில் கல்வித்துறையில் தொடக்கத்தில் வேறான சூழ்நிலை காணப்பட்டது. கொழும்பிலோ வெளி இடங்களிலோ பாடசாலைகளை அமைப்பதில் மிஷனரிமார் அக்கறை காட்டவில்லை. கண்டி அரசைக் கைப்பற்றியபோது பிரித்தானிய காலனித்துவ அரசு கண்டியர் தலைவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு உறுதி அளித்திருந்தது. இதனால் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு மிஷனரிமாருக்கு அரசு ஊக்கம் கொடுக்கவில்லை. மறு பக்கத்தில், பௌத்தர்களும் தங்கள் மதத்துக்கு மிஷனரிமார் சேதம் விளைவிப்பதாகக் கருதவில்லை.

இந்த நிலை 1850 இன் பின் மாறுவதைக் காணலாம். கண்டி உடன்படிக்கையில் கொடுத்த வாக்குறுதியை 1840களில் காலனித்துவ அரசு கைவிடத் தொடங்கியது. இதற்கு, மிஷனரிமாருடைய அழுத்தத்துடன் வேறு காரணங்களும் இருந்திருக்கலாம். பௌத்தர்களும் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தை எதிர்க்கத் தொடங்கினர்.

மிஷனரிமார் பிரதான நகர்களாகிய கொழும்பு, காலி, கண்டி ஆகிய இடங்களில் கல்வி நிறுவனங்களை அமைக்கத் தொடங்கினர். பின்னர் பிரபல கிறிஸ்தவக் கல்லூரிகளாக விளங்கும் நிறுவனங்கள் 1850க்குப் பின்னரே கட்டப்பட்டன: கொழும்பில் St. Thomas College (கல்கிசையில் 1851), Methodist College (1866), Wesley College (1874), St. Joseph’s College (1896), காலியில் Richmond College (1876), St. Aloysius College (1895), கண்டியில் Trinity College (1872).

கிறிஸ்தவர்களுடைய செயற்பாடுகள் வலுப்பெற, பௌத்தர்களும் மிஷனரிமாருடைய தாக்குதல்களை எதிர்த்து எழத் தொடங்கினர். இவர்களுடைய எதிர்ப்பியக்கத்தை முன்னின்று நடத்திச் செல்ல வந்தவர்கள் பௌத்த பிக்குகள். பாரம்பரியமாக ஊர் ஆச்சிரமத்தில் (பன்ஸல) இருந்துகொண்டே பக்தியுடைய ஊர் மக்களுக்கு உபதேசம் செய்து வந்த பௌத்த துறவிகள் வெளியே வந்து தம் மதத்தைக் காக்க மிஷனரிமாருடன் வாதில் ஈடுபடத் தொடங்கினர். இந்த நிலையில் இருந்து பின்னர் அநகாரிக தர்மபாலவின் முயற்சிகளால் இலங்கையில் பௌத்த பிக்கு ஓர் அரசியல் பிக்குவாக மாறுவதைக் காணலாம்.

இப்படி எழுந்த பிக்குத் தலைவர்களுள் முக்கியமானவர்கள் மிகெற்றுவத்தே குணானந்த தேரர் (මිගෙට්ටුවත්තේ ගුණානන්ද), ஹிக்கடுவே ஸுமங்கல தேரர் (හික්කඩුවේ සුමංගල) ஆகியோராவர். சிறப்பாக, குணானந்த தேரர், ஆறுமுக நாவலரைப் போன்று, அச்சியந்திரம் ஒன்றை அமைத்துக் கிறிஸ்தவர்களுடைய கண்டனங்களை மறுக்கும் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு, மிஷனரிமாருடைய செயல்முறைகளைப் பௌத்த இயக்கத்தில் பயன்படுத்தினார். அவருக்கு மிகவும் புகழைக் கொடுத்தது அவர் கிறிஸ்தவர்களுடன் நடத்திய பகிரங்க வாதுக்கள் ஆகும். இவற்றுள் மிகவும் பிரசித்திபெற்றது பாணந்துறையில் 1873 இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்வுகளுக்குப் பின் பௌத்தர்களுடைய கல்விப்புலத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. நவீன பௌத்தத்தின் எழுச்சியில் ஒரு முக்கியமான திருப்பம் 1880 இல் ஏற்பட்டது. அந்த ஆண்டில் அமெரிக்காவில் இருந்து இரு பிரமுகர்கள் இலங்கைக்கு வந்தனர். ஒருவர் அமெரிக்கரான ஹென்றி ஒல்கொட் (Henry Steel Olcott, 1832-1907); மற்றவர் ருஷ்யரான ஹெலெனா பிளவற்ஸ்கி அம்மையார் (Madame Helena Blavatsky, 1831-1891).

இருவரும் தாமதம் இன்றிப் பௌத்தத்தை ஏற்றனர். பௌத்தர்களுடைய மிஷனரி எதிர்ப்பியக்கம் வாதுக்களுடனும் துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதுடனும் நின்றுவிடுவதை ஒல்கொட் கண்டார். இயக்கத்தை முன் நோக்கி வழிநடத்திச் செல்லத் திறமையுடைய தலைவர் (Leader) இருக்கவில்லை. வெற்றிடத்தை ஒல்கொட் நிரப்பிக்கொண்டார். இயக்கம் வெற்றிபெற வேண்டுமாயின், மிஷனரிமாருடைய செயல்முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் நம்பினார். “எங்கள் வலுவை எப்படி ஒழுங்கமைத்து நாம் செயல்பட வேண்டும் என்று நீங்கள் என்னைக் கேட்பீர்களாயின், உங்கள் பெரும் எதிரியாகிய கிறிஸ்தவத்தைச் சுட்டிக் காட்டுவேன்” என்று பௌத்தர்களை விளித்துக்கூறி, கிறிஸ்தவர்களைப் போன்று ஞாயிற்றுப் பள்ளிகள் (Sunday Schools), கழகங்கள், பாடசாலைகள் ஆகியவற்றை அமைப்பதற்கு ஒல்கொட் பௌத்தர்களுக்கு உதவினார்.

கல்விப்புலத்தில் கிறிஸ்தவர்கள் அனுபவித்த ஆதிக்கத்தை முறியடிப்பது அவசியம் என்பதை உணர்ந்து, ஒல்கொட் பௌத்த இறையியல் சபையை (Buddhist Theosophical Society – BTS) முதலில் (1880 இல்) அமைத்து, அதன்மூலம் பௌத்தப் பாடசாலைகள் பரவலாகத் திறக்கப்படுவதற்கு வழிவகுத்தார். பௌத்தர்களின் பிரதம கல்லூரியாகிய ஆனந்தக் கல்லூரி (Ananda College) கொழும்பில் 1886 இல் நிறுவப்பட்டது. அதன் முதல் அதிபராக ஓர் ஆங்கிலேயர் (C.W. Leadbeater) நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கண்டியில் தர்மராஜக் கல்லூரி (1887), காலியில் மஹிந்தக் கல்லூரி (1892) ஆகியவை திறக்கப்பட்டன. பெருநகர்களுக்கு வெளியேயும் பல பாடசாலைகள் அமைக்கப்பட்டன. இதன் விளைவாக, 1900 வரை BTS நிறுவனத்தால் 142 பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தன.

துரிதமாக இடம்பெற்ற பிற நிகழ்வுகளுள் குறிப்பிடத்தக்கவை: 1) இளைஞர்களை ஒன்றுகூட்டிப் பௌத்தச் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்வதற்கு பௌத்த இளைஞர் கழகம் (Young Men’s Buddhist Association – YMBA) என்ற சபையை (கிறிஸ்தவர்களுடைய Young Men’s Christian Association – YMCA போன்று) நிறுவியமை; 2) புத்தர் பிறந்த வைசாகப் பெருநாளை (வெஸக்) அரசாங்கம் விடுமுறை நாளாக்க வேண்டும் என 1880 இல் அழுத்த இயக்கம் ஒன்றைத் தொடங்கி, 1885 இல் விடுமுறை வழங்க வழிவகுத்தமை; 3) பௌத்தர்களுடைய செய்தித்தாளாக ஸரஸவி ஸந்தரஸ (සරසවි සඳරැස) தொடக்கப்பட்டமை; 4) பௌத்த மதக் கொடி (Buddhist Flag) ஒன்றை 1885 இல் உருவாக்கியமை.

பௌத்தர்களுடைய செயற்பாடுகள் ஒரு தேசிய இயக்கத்தின் பண்புகளைப் பெறத் தொடங்கின எனலாம். பௌத்த சமயக் கொடி ஒரு தேசியவாதச் சின்னம் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு வெற்றிகரமாக வளரத் தொடங்கிய பௌத்த எழுச்சி இயக்கம் வெகு விரைவில் அநகாரிக தர்மபால கொடுத்த வழிநடத்திச் செல்லும் தலைமைத்துவத்தைப் பெற்றது. இவர் இந்த இயக்கத்தை ஓர் அனைத்துலக எழுச்சியாக மாற்றுவதற்குப் பெரிதும் உழைத்தார்.

இலங்கையைப் பொறுத்தமட்டில், தர்மபால சமயத்தையும் இனத்தையும் இணைத்து ஒரு நவீன கருத்தியலை உருவாக்கினார். ஒல்கொட் வழிநடத்திச் சென்ற தலைமைத்துவத்தில் வெறும் பௌத்த எழுச்சியாக முன் நோக்கிச் சென்ற இயக்கம், தர்மபால வழிநடத்தலில் சிங்கள – பௌத்த இயக்கமாக மாறியது.

இதேவேளையில், மொழியும் கலையும் இணைந்த பண்பாட்டுப் புலத்தில் அந்நியர் ஆதிக்கத்தின் தலையீடு இன்றி, சுதந்திரமாக ஆரவாரம் இல்லாது மலர்ச்சி ஒன்று நடைபெற்றது. இதன் விளைவாக, தர்மபால விட்ட இடத்தில் இருந்து இலங்கையின் பௌத்த இயக்கமானது மொழியையும் இணைத்து, சமயம் – இனம் – மொழி சார்ந்த இயக்கமாக உருவெடுத்தது. இலங்கையர் பெயரில் காலம் தாமத்தித்து எழுந்த அரசியல் தேசியவாதம் (Ceylonese Nationalism) எதிர்நோக்க வேண்டி இருந்தது இதுதான். இதனை அடுத்துப் பார்க்கலாம்.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்