இலங்கையில் 1956 ஆம் ஆண்டின் தேர்தல் புரட்சி
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
25 நிமிட வாசிப்பு

இலங்கையில் 1956 ஆம் ஆண்டின் தேர்தல் புரட்சி

March 11, 2026 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: சி. அரசரத்தினம்

இலங்கையின் நவீனகால வரலாற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள் சிலவற்றை எழுதிய சின்னப்பா அரசரத்தினம் முதன்மையிடத்தைப் பெறுகின்ற வரலாற்றுப் புலமையாளர்களில் ஒருவராவார். ‘Ceylon’ என்ற தலைப்பில் 1964ஆம் ஆண்டில் இவர் ஒரு முன்னோடியான நூலை எழுதினார். அந்நூல் ‘The Modern Nations in Historical Perspective’ (வரலாற்றுப் பார்வையில் நவீன தேசங்கள்) என்ற நூல்வரிசையில் ‘Prentice Hall Inco.’ என்னும் பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரமாயிற்று. இந்நூல் சமகால இலங்கையின் வரலாற்றை ‘Ceylon Since Independence’ என்னும் முதலாவது அத்தியாயத்தில் 35 பக்கங்களில் விவரிப்பதோடு, இலங்கையின் வரலாற்றை நூலின் மீதி நான்கு அத்தியாயங்களில் விளக்குவதாக அமைந்தது. இற்றை நாளில் இலங்கை எதிர்நோக்கும் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் விளக்கக்கூடிய வரலாற்றுக் காரணங்களை (Historical Causes of the Present Dilemmas) ஆய்வு நோக்கில் எடுத்துக் கூறுவதே தமது ‘Ceylon’ நூலின் நோக்கம் என்பதை அந்நூலின் நூன்முகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசரத்தினம் அவர்களின் நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டன. அவரது நூல்கள் மேற்குநாட்டுப் பதிப்பகங்களால் வெளியிடப்பட்டன. அவரது நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும் புலமையாளர்கள் மட்டுமே வாசிக்கும் தரமான பருவ இதழ்களில் (Journals) வெளியிடப்பட்டன. இக்காரணங்களால் தமிழ் அறிவுலகத்தால் இவர் நன்கு அறிந்துகொள்ளப்படாத ஒருவராகவே இருந்து வந்தார். ‘Sri Lanka after Independence: Nationalism, Communalism and Nation Building’ என்னும் இவரது நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் 1989 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் கற்கைப் பிரிவின் மாணவர்களுக்கு இவர் ஆற்றிய விரிவுரைகளின் எழுத்துவடிவிலான தொகுப்பாக மேற்படி நூல் அமைந்தது. அந்நூலில் ‘The Electoral Revolution of 1956’ (பக். 18–26) என்ற விடயத்தலைப்பில் உள்ள பகுதியைத் தழுவி இத்தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

1956இல் தேர்தல் நடைபெற்ற வேளையில் இலங்கையின் பிரதமராக சேர் ஜோன் கொத்தலாவல பதவி வகித்தார். அவர் மேற்குமயப்பட்ட பண்பாட்டுப் பின்னணியை உடைய இலங்கையின் உயர் வர்க்கங்களின் பிரதிநிதியாக இருந்தார். சமயத்தைப் பற்றிய அக்கறையற்றவரான கொத்தலாவல, இலங்கையில் சமயக் கொந்தளிப்பு உச்சத்திற்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் பிரதமராக இருந்தார் என்பது வரலாற்றின் நகைமுரண் ஆகும். ஏனெனில் நாட்டின் உயர் குழாம்கள் எதனைப் புனிதமானவை எனக் கருதியிருந்தனவோ அவை அனைத்தையும் ஒதுக்கும் மனோநிலை நாட்டில் உருவாகிய கருத்தியலின் மூலம் வெளிப்பட்டது. 1940களிலும் 1950களிலும் ஏற்பட்ட பொருளாதார சமூக மாற்றங்கள் புதிய கருத்துகளை மக்கள் மத்தியில் தோற்றுவித்தன. கல்வித்துறையின் முன்னேற்றம் சுதேசமொழிக் கல்வி கற்ற வகுப்பினரின் எண்ணிக்கையையும் பெருகச் செய்தது. நாட்டின் உட்பகுதிகளின் பட்டணங்களிலும் கிராமங்களிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கல்வியில் முதலீடு பரவலாகியதால் ஒவ்வொரு ஆண்டிலும் சுதேச மொழியில் இரண்டாம் நிலைக் கல்வியை நிறைவு செய்தவர்களின் தொகை அதிகரித்துச் சென்றது. பாடசாலைகளில் இருந்து இரண்டாம் நிலைக் கல்வியை முடித்து வெளியேறுபவர்களில் பெரும்பான்மையினர் மூன்றாம் நிலைக் கல்விக்கு உயர முடியாத நிலை இருந்தது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் தவிர்ந்த பிற கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஆங்கிலமே போதனா மொழியாக இருந்து வந்தது. சிங்கள, தமிழ் மொழி வழியே கல்வி கற்றோர் குறைந்த தரப் பதவிகளையே பெற முடிந்தது. ஆனால் அவர்கள் செலவிட்ட அதே அளவு ஆண்டுகள் செலவிட்டு (ஏறக்குறைய 11 ஆண்டுகள்) ஆங்கில மூலம் கற்றவர்கள் அரசாங்கத்திலும் தனியார் துறையிலும் சுயபாசைக் கல்வி பெற்றவர்களைவிட உயர்வான உத்தியோகங்களைப் பெற்றனர். சுயபாசைக் கல்வியின் தரம் உயர்ந்து சென்றது. அதன் வழி பயிலும் மாணவர் தொகையும் படிப்படியாக உயர்ந்து சென்றது. அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத காரணத்தினால் தாம் நிரந்தரமாகவே கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்ற உணர்வு விரக்தியாகவும் கோபமாகவும் அவர்களிடம் வெளிப்பட்டது. சுயபாசையில் கல்வி கற்றோர் தம் உணர்வுகளையும் மனக்குறைகளையும் வெளியிடத் தொடங்கினர்.

சிங்கள பௌத்த இயக்கம்

சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற பிரிவினரிடையே ஏற்பட்ட விரக்தியுணர்வோடு, பௌத்த சமய இயக்கம் என்ற அரசியல் சக்தியும் இக்காலத்தில் படிப்படியாக எழுச்சி பெற்றது. இதனைச் சமய மறுமலர்ச்சி இயக்கம் எனக் கூறுதல் தவறாகும். ஏனெனில், அவ்வாறு கூறுவது 1950களுக்கு முந்திய காலத்தில் அப்படியான மறுமலர்ச்சி இயக்கம் இருக்கவில்லை என்று கருத இடந்தரும். பௌத்த மறுமலர்ச்சியும் சீர்திருத்தமும் சிங்கள சமூகத்தில் நீண்ட காலமாகவே இருந்து வந்த ஒரு விடயமாகும். வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் சமய மறுமலர்ச்சி இயக்கம் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது. அவை அவ்வக் காலத்துத் தேவைகள், அரசியல் பின்னணி என்பனவற்றுக்கு ஏற்ப வேறுபட்ட வடிவங்களைப் பெற்றன. பௌத்தர்கள் நவீன காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் சமய இயக்கமாக அணிதிரண்டமை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடம்பெற்றது. இந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் மேற்குமயப்பட்ட பௌத்த அறிவாளிகள் வகுப்பினரேயாவர். அக்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வியக்கம் தீவிரம் பெற்றது. சமூகப் படிநிலையில் உயர்ச்சி பெற்றுச் சென்ற பிரிவினர் சாதாரண மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கு பௌத்த சமய இயக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். இக்கட்டத்தில் வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள் என்போரிடம் சமய இயக்கத்தின் தலைமைத்துவம் கைமாறிச் செல்வதையும் காணலாம். ஆயினும், 1915 கலவரம் வரை சமய இயக்கம் தேசிய நிலையில் வெளிப்படாமல் உள்ளடங்கியே இருந்தது.

காலனிய ஆட்சிக் காலம்

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பௌத்த சமய இயக்கம் அரசியல் இயக்கமாக மாற்றம் பெறவில்லை. சொத்துடைய வகுப்பினரிடம் சமய இயக்கத்தின் தலைமைத்துவம் இருந்தபடியால் அரசை எதிர்க்கும் துணிச்சல் அவர்களுக்கு இருக்கவில்லை. கிறிஸ்தவ மிசன்களின் மீது தம் கோபத்தை சமய இயக்கம் வெளியிட்டதே அல்லாது காலனிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழ முயற்சிக்கவில்லை.

டொனமூர் அரசியல் யாப்புக் காலத்தில் நாட்டிற்கு அறைகுறைச் சுயாட்சி அதிகாரங்கள் கிடைத்தன. இதனால், சமய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் டொனமூர் அரசியல் யாப்புக் கால அமைச்சர்களின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதன் மூலம் சமயம் தொடர்பான சில முன்னேற்றகரமான காரியங்களை நிறைவேற்றினர். ஆயினும், அக்காலத்தில் பௌத்த சமய இயக்கம் அரசியல் இயக்கமாகப் பரிணமிக்கவில்லை. சுதந்திரம் பெற்ற காலத்தில் பௌத்த குருமார்களில் தீவிரவாதிகள் சிலர் இடதுசாரிகள் மீது அனுதாபம் கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இடதுசாரிக் குழுக்களின் நடவடிக்கைகளிலும் பங்குபற்றினர். இடதுசாரிகள் அந்நிய ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டதால் பௌத்த குருமார் சிலருக்கு அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சுதந்திரத்தின் பின்னர் ஆட்சியாளர்களின் மனப்பாங்கில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. பௌத்தத்திற்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க முன்வரவில்லை. கிறிஸ்தவ சமயக் குழுக்களும் நிறுவனங்களும் தொடர்ந்து செல்வாக்கைச் செலுத்திவந்தன. இது பௌத்த சமயக் குருமார்களிடமும் பௌத்த சமயத்தவர்களிடமும் அதிருப்தியை உண்டாக்கியது. பௌத்த சமய நிறுவனங்களும் அதிருப்தியடைந்தன. சிங்கள சமூகத்தில் சிங்கள மொழி, இலக்கியம் என்பன பற்றிய கல்வியின் காவலர்களாக பௌத்த பிக்குகள் இருந்து வந்தனர். இக்கல்விக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை. ஆங்கிலக் கல்விக்கு அளிக்கப்பட்ட மதிப்பின் காரணமாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட சிங்கள மொழி மூலம் கல்வி பெற்றவர்களின் தரத்தில் வைத்தே குருமாரும் நோக்கப்படும் நிலை இருந்தது.

சுதந்திரத்தின் பிந்திய நிலை

டி.எஸ். சேனநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் பௌத்தத்தைப் புனர்நிர்மாணம் செய்யும் தேவை குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவருக்குப்பின் பிரதமராக இருந்த கொத்தலாவல பௌத்த சமயம் பற்றி அக்கறையற்றவராகவே இருந்தார். 1952ஆம் ஆண்டில் கொத்தலாவல ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பின் பௌத்தர்களின் அரசுக்கெதிரான எதிர்ப்பு அழுத்தம் பெற்றது.

உயர் குழாத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தம் கொடுப்பதில் தலைமை வகித்தனர். உயர் குழாத்தின் தேர்வு இல்லாமல் பௌத்த சமய இயக்கம் 1952ற்குப் பிற்பட்ட காலத்தில் பலம்பெற்றிருத்தல் முடியாது. உயர் குழாத்தின் சிந்தனையிலும் மனப்பாங்கிலும் ஏற்பட்ட இம்மாற்றம் இதுவரை நாட்டில் நிலவிவந்த பல்லின, சமயஞ்சார்ந்த இலட்சிய நோக்கை மாற்றியது. பௌத்த உயர்குழாம் பல்லின ஐக்கியம், சமயச் சார்பின்மை என்ற இலட்சியங்களைக் கைவிட்டு, சிங்கள மக்களுக்கான அடையாளம் ஒன்றை தேசியவாதத்தின் நோக்கில் வகுத்துக்கொள்ளத் தூண்டியது. அத்தோடு இக்கட்டத்தில் சிங்கள மக்கள் திடீரென அரசியல் அதிகாரம் பெற்ற குழுவாக தாம் மாறியிருப்பதையும் உணர்ந்தனர். ஆயினும் பிரதமர் பதவியில் அமர்ந்து கொண்ட சேர் ஜோன் கொத்தலாவல சிங்கள உயர் குழாமின் இந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டவராக இருக்கவில்லை. அவரின் அரசியல் நடவடிக்கைகளினால் அல்லாது, அவரின் மேற்குறித்தவாறான மனப்பான்மை காரணமாகவே பௌத்த சமய இயக்கத்தை அவர் பகைக்க வேண்டியதாக ஏற்பட்டது.

கொத்தலாவல பிரதமராக இருந்த காலத்தில் அரசு மதச்சார்பின்மை (Secularism) எனும் கொள்கையைப் பின்பற்றியது. அரசின் கொள்கை இவ்வாறு இருந்த பின்னணியில் பௌத்த சமய இயக்கத்தினரின் மக்கள்வாதம் (Populism) சிங்கள சமூகத்தில் ஆழமாக ஊடுருவியது. இம்மக்கள்வாதம் அடிமட்டத்தில் இருந்து தோன்றி உயர் குழாத்தைத் தாக்கிய ஓர் இயக்கமாக இருக்கவில்லை. இது உயர் குழாம் மத்தியில் தோன்றிய ஒரு சிந்தனைப் பிரிவாகவே இருந்தது. அவ்வாறு மேல்மட்டத்தில் தோன்றிய இச்சிந்தனை அரசியல் அணிசேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் கீழ்மட்டங்களுக்கும் பரவியது. பௌத்த பிக்குகள் நிகாயப் பிரிவுகள் ஊடாக பிராந்திய மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் இயக்கங்களை ஆரம்பித்தனர். அவர்களது அமைப்புகள் அழுத்தக் குழுக்களாகச் செயற்பட்டன. சமயக் குருமார் அல்லாதவர்களான சமயிகளின் அமைப்புகள் அதுவரை காலமும் கல்வி, பண்பாட்டு நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்திவந்தன. இப்போது அவை அரசியல் நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்த ஆரம்பித்தன. உயர் குழாத்தினால் தொடக்கப்பட்ட அரசியல் மயமாக்கல் நடவடிக்கையில் பிக்குகள், சிங்கள மொழி ஆசிரியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள் போன்றவர்களும் சிங்களத்தில் கல்வி பெற்ற படித்த பிரிவினரும் முக்கிய வகிபாகத்தை ஏற்றுச் செயற்பட்டனர். பண்டாரநாயக்க அரசில் இருந்து வெளியேறி தனக்குத் தனியாக ஒரு கட்சியை நிறுவியதை அடுத்தே, கொத்தலாவலயின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்ற உயர் குழாத்தின் முன்முனைவினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் மயப்படுத்தலும் நடைபெற்றது. இவ்வாறு தொடக்கப்பட்ட பௌத்த இயக்கத்தில் இணைவதற்குப் பண்டாரநாயக்கவும் அவரது கூட்டாளிகளும் தயங்கினர். ஆயினும் 1954ஆம் ஆண்டளவில் உயர் குழாம் மத்தியில் ஏற்பட்ட அரசியல் போட்டிச் சுழலில் பண்டாரநாயக்க பௌத்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த இயக்கத்தின் மூலம் தன் அரசியல் தளத்தைப் பலப்படுத்திக் கொள்ள முனைந்தார்.

மொழிக் கொள்கை

மேற்குறிப்பிட்ட பின்னணியில் இலங்கையின் தேசிய மொழி, நிர்வாக மொழி, உயர் கல்விக்கான போதனை மொழி என்பன குறித்த பிரச்சினைகள் மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக்கிய விடயங்களாக மேற்கிளம்பின.

அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை மொழிப் பிரச்சினை விடயத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சட்டசபையில் இறுதியாக இவ்விடயம் எடுக்கப்பட்டபோது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இலங்கையின் உத்தியோக மொழிகள் என்ற இடத்தை ஆங்கிலத்திற்குப் பதில் சிங்களமும் தமிழும் காலப்போக்கில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் ஆங்கிலத்தை உத்தியோக மொழி அந்தஸ்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. சுதேச மொழி ஆர்வலர்கள் கட்டாயத் தாய்மொழிக் கல்வி என்பதை வலியுறுத்திப் பெற்றுக்கொண்டனர். ஆயினும் நகரப் பாடசாலைகள் பலவற்றில் ஆங்கிலமே போதனா மொழியாக நீடித்தது. சிங்கள பௌத்த இயக்கத்தினருக்கு பௌத்தத்தை அரச மதமாக ஏற்றுக்கொள்ளச் செய்தல் என்பதனைவிட ஆங்கிலத்தை அது பெற்றிருந்த உயர் பீடத்தில் இருந்து அகற்றுவது இலகுவானதாக இருந்தது. சுதேச மொழி பற்றிய இவ்வெழுச்சி ஒரு புதிய வடிவத்தைப் பெற்றது. ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களம், தமிழ் என்ற இரு மொழிகளுக்குப் பதிலாக சிங்களம் மட்டுமே ஒரேயொரு மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இலங்கையின் சிறுபான்மைக் குழுக்கள் மீது மேலாண்மையை நிறுவும் திட்டத்தின் முதற்படியாக இது அமைந்தது. இந்தப் பிறழ்வான திருப்பம் மேற்கொள்ளப்பட்டதும் அதுவரை காலமும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிப் பிரிவினரதும் ஆதரவைப் பெற்றிருந்த சுயபாசை இயக்கம் பிரிவினைவாத, இனவாத இயக்கமாக மாற்றம் பெற்றது. சிங்கள பௌத்த இனவாத இயக்கம் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் எதிரான பிரசாரமாகவும் அமைந்தது. பின்னர் தமிழர் மீதான தாக்குதலாகவும் மாறியது. தமிழர்கள் அவ்வேளை இவ்வாறான ஒரு தாக்குதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கவும் இல்லை; அதற்காக அவர்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும் இல்லை.

இனவாதப் பேரலை

1954ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் இயக்கம் இனவாதப் பேரலையாக எழுந்தது. இது அரசியலை முற்றாகவே மாற்றியது. இவ்வேளை பௌத்த இயக்கமும் சில திட்டவட்டமான கோரிக்கைகளை முன்வைத்தது. பௌத்த சமய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ‘பௌத்தத்தின் இன்றைய நிலை’ என்ற விடயத்தை ஆராய்வதற்கு குழு ஒன்றை நிறுவின. அக்குழு விசாரணை நடத்தி அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தது. அவ்வறிக்கை காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பௌத்தர்கள் எவ்வெத் துறைகளில் பின்தங்கிப் போயினர் என்பதையும் சுட்டிக் காட்டியது. பௌத்தர்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகள், அரச ஆதரவு பௌத்தத்திற்கு இல்லாமற் போனமை, மதச்சார்பற்ற அரசுக் கொள்கையின் கீழ் கிறிஸ்தவத்துடன் போட்டியிட முடியாத கீழ்நிலைக்குப் பௌத்தம் தள்ளப்பட்டமை என்பன சுட்டிக்காட்டப்பட்டன. பௌத்தத்திற்கு அரசு ஆதரவு கொடுக்காத நிலை சுதந்திரத்தின் பின்னரும் தொடருவதையும் அறிக்கை சுட்டிக் காட்டியது. கல்வித்துறையைச் சமய நிறுவனங்கள் ஆக்கிரமித்திருப்பதை அறிக்கை எடுத்துக்காட்டியது. இவ்விடயம் பௌத்தர்களின் உணர்வுகளைக் கிளரச் செய்வதாக இருந்தது. பாடசாலைகளுக்கு நன்கொடை வழங்கும் முறை பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இருந்து தொடர்ந்து வந்தது. கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குக் கிடைத்த நன்கொடை கிறிஸ்தவர்களின் சனத்தொகை வீதாசாரத்திற்கு மிகையானதாக இருந்தது. கிறிஸ்தவப் பாடசாலைகளின் கல்வித் தரம் உயர்வாக இருந்தபடியால் ஆயிரக்கணக்கான பௌத்த மாணவர்கள் கிறிஸ்தவப் பாடசாலைகளிலேயே சேர்ந்து கற்கும் நிலை ஏற்பட்டது. கிறிஸ்தவப் பாடசாலைகளின் ஆதிக்கம் காரணமாக கிறிஸ்தவர்கள் தரமான கல்வியை பெற்றதோடு, பொதுச்சேவை, நீதிச்சேவை, ஆயுதப்படைகள், பிற சேவைகள் ஆகியவற்றில் உயர்பதவிகளைப் பிடித்துக் கொண்டனர். கிறிஸ்தவர்களின் சனத்தொகை வீதாசாரத்தைவிட அதிகமான எண்ணிக்கையான உயர்பதவிகள் அவர்களுக்குக் கிடைத்தன. இத்தகைய ஆதிக்கம் கல்வித்துறை மீது கிறிஸ்தவர்கள் செலுத்திய ஆதிக்கத்தின் விளைவே ஆகும்.

பௌத்தத்தை அரசமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை

மேற்குறிப்பிட்ட அரச நடவடிக்கைகளின் மூலம் சமநிலைக் குறைவைச் சரி செய்வதற்கான பல நடவடிக்கைகளைப் பௌத்த விசாரணைக் குழு அறிக்கை பரிந்துரை செய்தது. கல்விக்கான நிதியைப் பகிர்ந்தளிப்பதில் உள்ள பாரபட்சம் நீக்கப்படுதல், அதுவரை காலமும் நிகழ்ந்த அநீதியான செயற்பாடுகளால் விளைந்த பாதிப்புகளைச் சரிசெய்வதற்கான நேர்மையான குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் எனப் பல விடயங்கள் சிபாரிசு செய்யப்பட்டன. பௌத்தத்தை அரச மதம் (State Religion) ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பௌத்த இயக்கத்தின் தீவிர கோரிக்கைகளில் ஒன்றாகும். இதன் மூலம் காலனிய ஆட்சிக்கு முந்திய பௌத்த சிங்கள முடிமன்னர்கள் காலத்தில் அரச மதமாக இருந்த பௌத்தம் அரச ஆதரவை இப்போது இழந்து விட்டது; மீண்டும் அம்மதம் அரச ஆதரவு மதமாக இருந்த நிலை திரும்ப வேண்டும் என்பதான இனவாதக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஜனநாயக அரசியல் முறையோடு பொருந்திவராத இந்த இனவாதக் கோரிக்கைகளை முதலில், பிறரைவிட முந்திக் கொண்டு ஏற்ற அரசியல்வாதியாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க விளங்குகிறார்.

இவர் முதலில் சிங்களம் மட்டும் இயக்கத்தை ஆதரித்தார். இவ்வாறு தாம் சிங்களம் மட்டும் கொள்கையை ஆதரிப்பதற்கு சில போலி நியாயங்களை அவர் கண்டுபிடித்துக் கூறினார். தமிழைவிட சிங்களம் வளர்ச்சி குறைந்த மொழி என்ற வாதத்தை இவர் முன்வைத்தார். இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களால் பேசப்படுவது தமிழ்; சிங்களம் இந்நாட்டில் மட்டும் பேசப்படும் மொழி; ஆதலால் சிங்களத்திற்கு விசேட பாதுகாப்பு வேண்டும் என்று அவர் கூறினார்.

அவரது இக்கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்க வேண்டியதாயிற்று. ஐக்கிய தேசியக் கட்சி உளப்பூர்வமாக இதனை ஏற்கவில்லை என்ற தோற்றமே வெளிப்பட்டது. பௌத்த சமயம் தொடர்பான கோரிக்கைகளைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு வேறாக இருந்தது. பௌத்தம் பற்றிய விடயத்தால் அரசும் மதமும் பற்றிய பல சிக்கலான கொள்கைப் பிரச்சினைகளுடனான விவாதம் மேற்கிளம்பியது. தேசியவாத இயக்கங்கள் கடந்த காலத்தை மீளக் கொண்டு வருதல் என்றவாறான திட்டங்களை காலனிய எதிர்ப்புப் போராட்டக் கட்டத்தில் முன்வைப்பதும், அதற்கு அழுத்தம் கொடுப்பதும், அந்நாடுகள் சுதந்திரம் பெறும் கட்டத்தில் பலவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. ஏனெனில் சுதந்திர அரசுகள் ஜனநாயக அரசுகளும் ஆகும். ஜனநாயக அரசுகளில் பெரும்பான்மை இனக்குழுமம் தனது இனக்குழுமத்தின் பண்பாட்டிற்கு (சமயம், மொழி என்பன) மேலாதிக்கத்தை வழங்கும் முறையில் முடிமன்னர் காலத்து நிலைமைகளை மீளக் கொண்டு வருதல் சிக்கலைத் தோற்றுவிக்கும். இலங்கையில் நடைபெற்றதும் இதுவே. சமயம், மொழி இரண்டும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக மேலெழுந்தன. சமூகத்தில் இயங்கிய அரசியல் கட்சிகளுக்கு இந்தச் சக்தியை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கவில்லை. அச்சக்தியின் எழுச்சியை அலட்சியம் செய்யவும் முடியவில்லை.

இனவாதமும் அரசியல் கட்சிகளும்

ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு பிரதான அரசியல் கட்சிகளிடையே சமயம், மொழி என்ற விடயங்கள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தின. இக்கட்சிகளின் தலைவர்கள் பலர் தீவிரவாதக் கோரிக்கைகளால் கவரப்பட்டனர். தொடர்ந்தும் மதச்சார்பின்மை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது இத்தலைவர்களுக்குச் சவால் நிறைந்ததாக இருந்தது. சட்டசபையின் செயற்திட்டங்களில் மதச்சார்பினால் அடையக்கூடிய நன்மைகளைவிட தீமைகளே அதிகம். பண்டாரநாயக்க பௌத்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் படியான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது பற்றித் தெளிவற்ற பதிலைக் கூறித் தப்பிக் கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி பௌத்த விசாரணைக் குழுவின் சிபாரிசுகளை நேரடியாகவே எதிர்த்தது. பௌத்த இயக்கத்தினை அக்கட்சி எதிர்கொள்ளவும் தயாராகியது. இந்தப் பின்னணியில்தான் 1956இல் தேர்தல் நடைபெற்றது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் 9 ஆண்டு கால ஆட்சியினால் விரக்தியுற்ற சக்திகள் யாவற்றையும் பண்டாரநாயக்க ஒன்றிணைக்க முயன்றார். ஆளும் உயர் குழாமுக்குள் இருந்தோரில் விரக்தி நிலையில் இருந்தோர் அவருடன் ஒன்று சேர்ந்தனர். பண்டாரநாயக்க கரைநாட்டுப் பகுதியின் செல்வாக்கு மிக்க நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் தோன்றியவர். அவர் கண்டியின் நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டவர். இதனால் மரபுவழி உயர்குலத்தவர்களின் ஆதரவுத் தளம் அவரிடம் இருந்தது. அதுவரை காலமும் இந்த ஆதரவுத் தளத்தைப் பயன்படுத்தியே அவர் அரசியலுக்குள் தன்னைத் தாபித்துக் கொண்டார். உயர்குழாமில் வெவ்வேறு படித்தரங்களைச் சேர்ந்த தலைவர்களும் இருந்தனர். இத்தகைய மரபுவழி உயர் குழாம் பிரிவினரின் ஆதரவைப் பண்டாரநாயக்க பெற்றுக் கொண்டதோடு, வெவ்வேறு மட்டங்களிலும் அழுத்தக் குழுக்களின் ஆதரவையும் அவர் பெற்றுக்கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு அரசியல் யாப்பு வழிகளிலும், யாப்புக்கு அப்பாற்பட்ட வழிகளிலும் முயற்சித்துக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள், அக்கட்சியை அகற்றுவதற்கான வாய்ப்பு பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து செயற்படுவதால் கிட்டும் எனக் கருதினர். பலமற்ற தமது கட்சிகளில் தொடர்ந்து இருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த செல்வாக்கு மிக்க இடதுசாரி அரசியல்வாதிகள் பலர் அக்கட்சிகளை விட்டு நீங்கிப் பண்டாரநாயக்கவுடன் இணைந்து கொண்டனர். இவ்வாறு சேர்ந்து கொண்டதன் மூலம் பண்டாரநாயக்கவின் கட்சியின் கிளர்ச்சிவாத இயல்பைப் பலப்படுத்தியதோடு பண்டாரநாயக்கவை அவரது விருப்பத்திற்கு மாறாகக் கிளர்ச்சிப் பாதையில் இழுத்துச் சென்றனர்.

இடதுசாரிகள்

மார்க்சியக் கட்சிகளில் ஒன்றாகிய பிலிப் குணவர்த்தன தலைமையிலான வி.எல்.எஸ்.எஸ்.பி (V.L.S.S.P) சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தது. பிலிப் குணவர்த்தன இலங்கையில் மார்க்சியத்தின் தந்தை எனக் கருதப்பட்டவர். அவர் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கினார். மேற்குறித்த இரு கட்சிகளும் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிட முன்வந்தன. ஏனைய மார்க்சியக் கட்சிகளும் கூட எம்.இ.பி (M.E.P) கூட்டணியுடன் போட்டித் தவிர்ப்பு உடன்பாட்டின் கீழ், தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிளவுபடாமல் வைத்திருப்பதற்கு உடன்பட்டன.

கிராமப்புறத்தின் உயர் குழுக்கள்

மேற்குறித்தவாறான கட்சிகளிடையான உடன்பாட்டை விட இன்னொரு வகையான ஆதரவுத்தளமும் உருவாகியது. உயர்குழாம் வகுப்பின் கீழ்மட்டங்களைச் சேர்ந்தவர்களான கிராமப்புறம் சார்ந்த பிரிவினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பண்டாரநாயக்கவின் கூட்டணிக்கு ஆதரவு வழங்கினர். வர்த்தகம், அரசுத்துறை வேலைகள் என்பன மூலமும் அரசியல் அதிகாரத்தை உபயோகித்தும் மேல் நோக்கிய சமூக அசைவியக்கத்திற்கு உட்பட்டுக்கொண்டிருந்தவர்களாக இப்பிரிவினர் விளங்கினர். இப்பிரிவினரை அதுவரை காலமும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் காலத்தில் தமக்கு வாக்குச் சேர்ப்பதற்காக நன்கு பயன்படுத்தி வந்தது. இப்போது இப்பிரிவினருக்கும் நகரம் சார்ந்த இன்னொரு போஷகர் பிரிவு கிடைத்தது. இப்புதிய போஷகர்கள் மேல்நோக்கிய உயர்ச்சியை உடனடியாக அடைவதற்குரிய வாய்ப்புகளை வழங்குவதற்குத் தயாராக இருந்தார்கள். விரைவான உயர்ச்சியை நாடிய கிராமத்து உயர் குழாத்திற்கு அடுத்த நிலையில் இன்னொரு முக்கியமான பிரிவு இருந்தது. இப்பிரிவினர் தேர்தலின்போது மட்டுமல்லாது அதற்குப் பிந்திய காலத்திலும் பிரயோசனம் உடையவர்களாக இருந்தனர். இவர்களுள் பௌத்த குருமாரும் அவர்களின் போதனைகளைப் பெற்று வந்த கிராமத்து சமயிகளும் உள்ளடங்குவர். 

பௌத்தத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தவற்றை அகற்றுவதற்குத் தேர்தல் ஒரு வாய்ப்பை வழங்கவிருப்பதாக அவர்கள் கருதினர். இப்பௌத்த சமயப் பற்றாளர் குழு சிங்கள மொழிக்குச் சார்பாக ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் எதிராகப் பிரசாரம் செய்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். இவர்கள் மத்தியில் தலைவர்களாக, இவர்களின் கருத்துகளுக்குக் குரல் கொடுத்தவர்களாக, பௌத்த குருமாருடன் சிங்கள மொழி ஆசிரியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், கிராமத்தின் கீழ்நிலை உத்தியோகத்தர்கள் என்போர் விளங்கினர். இவர்கள் யாவரும் தமக்கு ஆங்கில அறிவு இல்லாத காரணத்தால் தமது முன்னேற்றம் தடைப்பட்டிருப்பதாகக் கருதியவர்களாவர். அத்தோடு சிறுபான்மை இனத்தவர்கள் கூடிய எண்ணிக்கையில் உத்தியோகப் பதவிகளில் இருப்பதால் தம் முன்னேற்றம் தடைப்படுவதாகவும் இவர்கள் கருதினர். பௌத்தம், சிங்கள மொழி என்ற இரண்டும் பிரசாரத்திற்குப் பொருத்தமான சிறந்த விடயங்களாயின. மேடைப் பேச்சுகள், துண்டுப் பிரசுரங்கள், அரசியல் கேலிச்சித்திரங்கள் என்பன மூலம் இனவாதக் கருத்துகள் அரங்கேற்றப்பட்டன. இப்பின்னணியிலேயே 1956இன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்தது. பாராளுமன்றத்தின் 54 ஆசனங்களில் 8 ஆசனங்கள் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. போதியளவு பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட மகாஜன எக்சத் பெரமுன (M.E.P) அரசாங்கத்தை அமைத்தது.

தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியையடுத்து அரசியல் அரங்கில் புதிய சக்திகள் பிரவேசித்தன. இம்மாற்றங்களை அரசியல் விமர்சகர்கள் மிகைப்படுத்தி வருணித்தனர். ‘சமூகப் புரட்சி’, ‘சாதாரண மனிதர்களின் யுகம் மலர்ந்தது’, ‘மக்கள் அரசாங்கம்’, ‘தேசியவாதத்தின் இரண்டாம் கட்டம்’ என்ற தொடர்களால் இம்மாற்றம் விளக்கப்பட்டது. ஆனால் இன்று அக்காலத்தை திரும்பிப் பார்க்கும் வரலாற்றாசிரியர்களால் நீண்ட காலநோக்கில், அம்மாற்றங்களின் உண்மை இயல்பை எடுத்துக்காட்ட முடிகிறது. மைக்கேல் ரொபர்ட்ஸ் அத்தகைய  நீண்ட கடந்தகாலத்தின் வரலாற்றுப் பார்வையின் ஊடாக புதிதாகத் தோற்றம் பெற்ற சக்திகளை ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார். அவ்விளக்கத்தின் படி, 1956இல் பழைய உயர் குழு (Old Elites) ஆட்களின் இடத்தில் அதே குழுவின் (Old Elites) இன்னொரு பிரிவினரான ஆட்கள் ஆட்சியில் அமர்ந்தனர். 1956இன் பாராளுமன்றமும் மந்திரிசபையும் பழைய உயர்குழு அகற்றப்படவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பழைய உயர்குழாம் ஒழிக்கப்பட்டது; அகற்றப்பட்டது என்பது உண்மையல்ல. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்த உயர்குழாத்தினர் அகற்றப்பட்டனர். ஆயினும், பழைய உயர்குழாத்தின் ஏனைய பிரிவினர் புதிய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் அமர்ந்து கொண்டனர். ஆகையால், சிங்களம் கற்ற உயர்குழாத்தினர் ஆங்கிலம் கற்ற உயர்குழாத்தினை அகற்றி அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டனர் என்பதில் உண்மையில்லை. அவ்வாறே மத்திய வகுப்பின் கீழ்மட்டத்தினரும், விவசாயிகள் வகுப்பினரும் நகரம் சார்ந்த முதலாளி வகுப்பையும், செல்வம் படைத்த குழுக்களையும் அகற்றிவிட்டனர் என்பதும் உண்மையன்று.

சாதாரண மனிதனின் யுகம்

1956க்கு முந்திய பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த உயர்குழு அகற்றப்பட்டதனால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக, அவ்வேளை பழைய உயர்குழாம் அழிக்கப்பட்டுவிட்டது என்ற வெளித்தோற்றம் ஏற்பட்டது. கிராமப்புற மக்களும் ‘சாதாரண மனிதனின் யுகம்’ மலர்ந்துவிட்டது என்ற விளக்கத்தை நம்பினார்கள். தேர்தலுக்குப் பிந்திய பெருமகிழ்ச்சியின் போது இவ்வாறான கருத்துத் தோன்றியது. ஆயினும், விரைவிலேயே பழைய உயர்குழாமின் ஒரு பிரிவிடமே ஆட்சி அதிகாரம் உள்ளது என்பது தெளிவாயிற்று. ஆட்சியில் அமர்ந்துகொண்ட இப்பழைய உயர்குழு, உப-உயர்குழு (Sub-Elite) ஒன்றின் மீது பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. வரலாற்றில் முதற்தடவையாக கிராமங்களினதும் நகரப்பகுதிகளினதும் உப-உயர்குழுக்கள் அரசியல் அரங்கில் வெளிப்பட்டன. புதிய அரசாங்கம், கிராம, நகர்ப்புற உப-உயர்குழுக்களின் உணர்வு நிலையில் (Conciouness) தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, அப்பிரிவினரைத் திருப்திப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பிராந்தியம், உள்ளூர் என்ற இருமட்டங்களிலும் பல்வேறு குறுகிய நலன்களுடைய குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுத்தலைவர்களோடு ஆளும் உயர்குழு தொடர்புகளை வலுப்படுத்தியது.

இதன் மூலம் உப-உயர்குழுக்கள் அரசியல் அரங்கில் வெளிப்பட்டன. அவற்றின் தலைவர்கள் பிரபல்யம் பெற்றனர். ஆளும் உயர்குழு, பிராந்திய உப-உயர்குழு (Regional Sub-elites) என்ற இரண்டு பிரிவினரும் இணைந்து கொண்ட அரசியல் கூட்டணி (Political Coalition) உருவானது.

இக்கூட்டணியின் இருத்தரப்புகளில் ஒன்றான ஆளும் உயர்குழு தன் நலன்களுக்கு ஏற்றதாக கீழ்ப்பட்ட உப–உயர்குழுக்களைக் கையாள்வதாக எண்ணிச் செயற்பட்டது. கீழ்ப்பட்ட உயர்குழுக்களும் தம் நலன்களை அடைவதற்காக ஆளும் உயர்குழுவை தாம் ஆட்டிவைக்கிறோம் என்ற உணர்வுடன் செயற்பட்டன.

1956இல் அரசியல் அதிகார மாற்றம் அமைதி வழியில் வாக்குரிமையைப் பிரயோகிப்பதன் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இதனால், இத்தேர்தல் அரசியல் யாப்புவாதம் (Constitutionalism) ஒரு கொள்கையாக இலங்கையில் நிலைபெற உதவியது. ஐக்கிய தேசியக் கட்சி தனது நலன்களையும் சலுகைகளையும் பேணுவதற்கு உகந்தது எனக் கருதிய அரசியல் யாப்புவாதம், இலங்கையின் அரசியல் முறைமைக்குள் இரு கட்சி முறையிலான போட்டி அரசியல் வளர இடமளித்தது. குறைந்தளவு பாராளுமன்ற ஆசனங்களையே ஐக்கிய தேசியக் கட்சி பெற்றதாயினும் மொத்த வாக்காளர்களில் 28 வீதத்தினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். அக்கட்சி விரைவில் புதிய அரசியல் சூழ்நிலைக்குத் தகவமைத்துக் கொண்டது.

பண்டாரநாயக்கவின் அரசியல் பங்களிப்புகளில் இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தமை முக்கியமானது என்று சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பண்டாரநாயக்கவின் பிற பங்களிப்புகள் விவாதத்திற்குரியனவாயினும், இலங்கையை ஜனநாயகப் பாதையில் எடுத்துச் செல்ல அவர் உதவினார் என்பதற்காக அவரைப் பாராட்ட வேண்டும் என்பதும் இவ்வரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.

‘Sri Lanka after Independence: Nationalism, Communalism and Nation Building’ என்னும் தலைப்பில் கலாநிதி சின்னப்பா அரசரத்தினம் அவர்களின் நூலொன்று 1986 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாகப் பிரசுரமாயிற்று. அந்நூலின் 18–26 வரையான பக்கங்களில் ‘The Electoral Revolution of 1956’ என்னும் உபதலைப்பில் அமைந்துள்ள பகுதியைத் தழுவி இத்தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்