தமிழர்களும் தேசமும்: இந்திய - இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
24 நிமிட வாசிப்பு

தமிழர்களும் தேசமும்: இந்திய – இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு – பகுதி 3

May 16, 2025 | Ezhuna

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.

“இலங்கை இனமுரண்பாட்டில் மேற்கின் சமாதான அணுகுமுறை, பனிப்போர் காலகட்டத்தின் சமாதானத் தலையீடுகளை ஒத்த ஓர் ஊடுருவும் தன்மையின் தொடக்கம் என உணர முடிகிறது. இந்தியா, அதன் தோல்வியடைந்த இராணுவத் தலையீட்டினை அடுத்து, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னணியில், அடிப்படையாக மாற்றியமைக்கப்பட்ட புவியியல் சூழலுக்குள் அகப்பட்டுக்கொண்டது. இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டில் நேரடியாக ஈடுபடுவதை விலக்கிக்கொண்டது. இலங்கையை ஓர் இனத்துவ இணைவாக்கம்கொண்ட சந்தை ஜனநாயகமாக மாற்றும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்குலகின் தலையீடுகளும் முயற்சிகளும் அமைந்தன.”

தமிழர்களும் தேசமும் எனும் தலைப்பில் மாதுரிகா இராசரட்ணம் எழுதிய ஒப்பீட்டு ஆய்வு நூலின் இறுதி மூன்று அத்தியாயங்களையும் ‘திக்குகள் எட்டும்’ தொடரின் இந்தப் பகுதி அறிமுகப்படுத்துகின்றது. ‘இலங்கையின் உள்நாட்டுப் போரின் தொடக்கம்’, ‘உள்நாட்டுப் போரின் முடிவு’, ‘தமிழ்த் தேசியம் இன்று’ என்பன முறையே இறுதி அத்தியாயங்களின் தலைப்புகளாகும்.

உள்நாட்டுப் போரின் தொடக்கம்

இலங்கையின் உள்நாட்டுப் போரின் பின்னணியில் பௌத்த – சிங்கள தேசியவாதம் மற்றும் தமிழ்த் தேசியவாத அரசியலின் போக்குகளை உருவாக்கிய கூறுகளை ‘இலங்கையின் உள்நாட்டுப் போரின் தொடக்கம்’ எனும் அத்தியாயம் பகுப்பாய்வு செய்கிறது. 1970களின் இறுதியிலிருந்து 2009 வரை நீடித்த உள்நாட்டுப் போர்ச்சூழலின் போக்கினைச் சர்வதேச தரப்புகளின் செயற்பாடுகளும் அணுகுமுறைகளும் எவ்வாறு வடிவமைத்தன என்பதையும் விளக்குகின்றது. அத்தோடு தேசியவாத சக்திகளை, குறிப்பாக பௌத்த – சிங்கள தேசியவாதத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாகச் சர்வதேச அணுமுறைகள் எத்தகு தாக்கங்களைச் செலுத்தின என்பதுவும் பேசப்படுகின்றது.

தாராளவாத சமாதானம்

தாராளவாத சமாதானம்/ அமைதி (Liberal peace) என்ற சொல் ஜனநாயகம் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட உலக ஒழுங்கினை உருவாக்கும் இலக்கினைக்கொண்ட சர்வதேச திட்டங்களைக் குறிக்கிறது. சர்வதேச சக்திகளின் இலங்கைத் தீவு மீதான தலையீடு இந்த அணுகுமுறையின் பாற்பட்டது. இது இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் கடுமையாகப் பாதித்தது. பின்-பனிப்போர் காலத்தில் நாடுகளின் உள்ளக முரண்பாடுகள்மீது சர்வதேசம் அல்லது அமெரிக்கா தலைமையிலான துருவமுனைப்பட்ட சக்திகள் அதிக கவனம் செலுத்தத்தொடங்கின. குறிப்பாக தாராளவாத உலக ஒழுங்கிற்குத் தடையெனக் கருதப்பட்ட இன முரண்பாடுகள், உள்நாட்டு முரண்பாடுகளில் தலையிடுவதில் சர்வதேசம் முனைப்புக் கொண்டிருந்தது.

ஐ.தே.க ஆட்சியும் தாராளவாத சந்தைமுறை அமுலும் விளைவுகளும்

1977 – 1994 வரையான காலப்பகுதியான 17 ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நீடித்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலில் தொடர்ச்சியான பல முக்கிய மாற்றங்களைத் தொடக்கிவைத்தார். அரசினாற் கட்டுப்படுத்தப்பட்ட அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி அரசியலிருந்து விடுபட்டு, சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். இந்த மாற்றம் உலக வங்கி உட்பட்ட பிற நிதிக்கொடை நிறுவனங்களின் ஆதரவை ஈர்த்தது; மேலும், உதவித் தொகைகளின் விரைந்த பெருக்கம் உலகின் முன்னணி நன்கொடை பெறுநர் நாடாக இலங்கையை மாற்றியது. இந்த ஆதரவு இன முரண்பாடு தீவிரமடைந்து தமிழர் விரோதக் கலவரங்கள் உக்கிரமடையும் 1980களின் தொடக்கம் வரை நீடித்தது. அமெரிக்காவின் ரீகன் (Ronald Reagan administration) நிர்வாகம் உலகம் முழுவதும் கொம்யூனிச எதிர்ப்பினைத் தீவிரப்படுத்தியதால், இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் வலுவான ஆதரவையும் பெற்றது. இதற்கிடையில், முந்தைய அரசுகளின் அணிசேரா இயக்கங்களின் (Non-Aligned Movement) உறுதிமொழிகளை இலங்கை அரசு கைவிட்டு, மேற்கின் பக்கம் திரும்பியது.

இந்தக்காலம் இலங்கையின் சர்வதேச உறவுக்கும் உள்நாட்டு அரசியலுக்குமிடையிலான இடைவெளியின் தொடக்கமாகக் கொள்ளத்தக்கது என்கிறார் மாதுரிகா. சர்வதேசரீதியில் இலங்கையானது தாராளவாத சந்தைமுறை மற்றும் கொம்யூனிச எதிர்ப்பு எனும் இருமுனைச் சர்வதேசக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. சமகாலத்தில் நாட்டின் உட்தளங்களில் பௌத்த – சிங்கள மேலாதிக்கத்தையுடைய அரச மற்றும் சமூகக் கட்டமைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் – தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு எதிரான விரிவடைந்த இராணுவ நடவடிக்கைகள் – அரசாங்கத்தில் அதிகாரப்பிடியின் இறுக்கம் எனவாக உள்நாட்டு நிலைமைகள் தீவிரமடைந்தன.

1978 ஆம் ஆண்டில், ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பை நிறுவியது. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தை மையமாகக் கொண்ட அரசியலமைப்பு மாற்றம் அது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அந்தப் பதவியில் அமர்ந்தார். சர்வதேச பொருளாதார நெருக்கடி, அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் தேர்தலிற் தமது வெற்றியைக் கடினமாக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் கணித்தனர். எனவே ஜனாதிபதி தன்னிச்சையாக முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பதை அனுமதிக்கும் அரசியலமைப்புச் திருத்தத்தை (மூன்றாவது திருத்தச் சட்டம்) நிறைவேற்றினர்.

திறந்த பொருளாதாரக் கொள்கை குறிப்பிடத்தக்க நன்மைகளை உருவாக்கியிருந்தாலும் (1977 – 1982 காலப்பகுதியில் ஒருவருக்கான சராசரி வருமானம் வருடாந்தம் 6 சதவீதம் உயர்ந்தது, 1970-77 காலங்களில் அது 3.5 சதவீதமாக இருந்தது.) இது பௌத்த – சிங்கள மதவாத ஆதரவாளர்களிடையே அதிருப்திகளை உண்டுபண்ணியது. பொதுநிறுவனங்கள் பலவற்றை மூடுதல், தனியார்மயமாக்கல், சமூக நலத்திட்டக் கொடுப்பனவுகளில் வெட்டு, தொலைக்காட்சிப் பாவனையின் விளைவான ‘மேற்கத்தியமயமாக்கல்’, நுகர்வோர் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் தாக்கம், வளைகுடா நாடுகளுக்கு வேலையாட்களாகப் புலம்பெயர்தலின் அதிகரிப்பு, மற்றும் தமிழ் நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவை தாராளவாத சந்தைப் பொருளாதாரத்தின் விளைவுகளிற் சிலவாகும்.

இக்காலத்தில் இன மோதல் தீவிரமடைந்தது. அதிகாரத்திற்கு வந்ததும், எழுச்சிபெற்றுவந்த தமிழர் ஆயுதக்கிளர்ச்சியை அடக்க, ஜெயவர்த்தன ‘தீவிரவாதிகளை’ அழிப்பதற்கெனத் தமிழர் தாயகத்தின் வடபகுதிக்குப் படைகளை அனுப்பினார். மேலும் 1978 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அரசு (Prevention of Terrorism Act, PTA) நிறைவேற்றியது.

திறந்த பொருளாதாரக் கொள்கையானது சிங்கள அரசியற் தரப்பிற் தமிழர் எதிர்ப்பு மனநிலையை வலுப்படுத்தியது. 1983 ஜூலை கலவரங்கள் தமிழர்களின் பொருளாதார அடிப்படையைப் பாதித்தன. தமிழர் உள்நாட்டில் அகதிகளாக இடம்பெயரவும் வெளிநாடுகளுக்குப் புகலிடம் தேடிச் செல்லவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். தமிழர்களுக்கு எதிரான வன்முறையை அரசாங்கம் சட்டபூர்வமாக்கியது. மேலும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) அரசியல் நிலைமை மேலும் பலவீனமடைந்தது. கலவரங்களுக்குப் பிறகு போராளிக் குழுக்கள் வளர்ந்தன. ஆயுதமோதல் தீவிரமைந்தது. மேற்கத்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரித்துவந்தன.

இந்தியத் தலையீடு

தொடர்ந்து இந்த அத்தியாயம் 1980களில் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டினையும் செல்வாக்கையும் விவரிக்கிறது. அப்போது இந்தியா தமிழீழப் போராளி இயக்கங்களை ஆதரித்தது. பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தினை இலங்கைக்குக் கொடுத்துவந்தது. அமெரிக்காவுடனான இலங்கையின் வலுப்பெற்றுவந்த உறவுக்கான எதிர்வினையாக இந்தியா தமிழீழப் போராளி இயக்கங்களுக்கு நிதியளித்து, பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியது. இது இலங்கையின் இராணுவ இலக்குகளை நோக்கிய போராளிகளின் தாக்குதல்கள் அதிகரிக்க வழிவகுத்தது. இதன் விளைவுகளில் ஒன்று, 1987 இல் நேரடி இந்திய இராணுவ தலையீட்டிற்கு வழிவகுத்த ஒரு பெரும் மனிதாபிமான நெருக்கடியை உண்டுபண்ணிய வரலாறாகும்.

1987 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய உடன்படிக்கை, மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கி, வடக்கு – கிழக்கு (தமிழர் தாயகம்) மாகாணங்களை இணைப்பதன் மூலமும் இனப்பிரச்சினையைத் தீர்க்க முயன்றது. ஆனால் இலங்கை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் இறுதியில் அம்முயற்சி தோல்வியடைந்ததாக நூலாசிரியர் விவரிக்கின்றார். 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் சிங்கள அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது.  ஒப்பந்தத்திற்கு எதிரான வன்முறைகளும் தூண்டிவிடப்பட்டன. அந்த வன்முறை மோதல்கள், தமிழர் எதிர்ப்பு உணர்வுகளை அதிகரித்தன.

தமிழர் பிரதேசங்கள் சிங்களமயமாதல்

சர்வதேச ஆதரவோடு பௌத்த – சிங்களத் தேசியவாதம் வலிமை பெற்றது. சிறிலங்காவின் அரச உயரடுக்குகள் தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு எதிரான, அரசியல் உரிமைகளுக்கு எதிரான தமது போரை, சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதியாகச் சித்திரிப்பதில் வெற்றிகண்டனர். சர்வதேச மாற்றங்கள், இறைமைசார் பெறுமானங்களின் குறைபாடுகளுக்கு மத்தியிலும் பௌத்த – சிங்கள அரசினைத் ஸ்திரப்படுத்த இந்த அணுகுமுறை வழிகோலியது.

1977 இல் ஐ.தே.கட்சியின தேர்தற் பரப்புரை அரசியற் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியது. ஐ.தே.க தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தன தன்னை பௌத்த மன்னன் அசோகாவின் நவீன உருவமாக நிறுவமுயன்றார். பழைய மகாவம்ச அரசாட்சியோடு தனது அரசாங்கத்தினை ஒப்பிட்டார். மகாவம்வம் என்பது சிங்களவர்களை இலங்கைத்தீவின் மூத்த குடிகளாக முன்னிறுத்தும் ஒரு பௌத்த மதம்சார் வரலாற்றுப் புனைவு.

சிறிலங்கா அரசு மகாவலி நீர்ப்பாசனத் திட்டம் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்தியது. இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நோக்கமாக பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் சிங்கள மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் கருவியாகவே செயற்பட்டது. இந்தத்திட்டத்தின் மூலம் பெருமளவிற் புதிய சிங்களக் குடியேற்றங்களைத் தமிழர் பகுதிகளில் முன்னெடுத்தமையும் இன மோதலை மேலும் மோசமாக்கியது. தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் அரச இயந்திரம் அதிகமதிகம் இராணுவமயமாக்கலுக்கு உட்படவும் வழிசமைத்தது. பயங்கரவாதம் என்ற கருத்தியல் தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்கான கருவியாக அரச இயந்திரத்தினாற் கையாளப்பட்டது.

எதிர்வினையாகத் தமிழ்த் தேசியவாதம்

பௌத்த – சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிர்வினையாகத் தமிழ்த் தேசியவாதம் உருவாகி வளர்ந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தில் முதன்மை வகிபாகம் கொண்டிருந்தது. புலம்பெயர் நாடுகளிலும் போராட்டத்திற்கான ஆதரவுத்தளத்தினை அவர்கள் உருவாக்கி விரிவுபடுத்தினர். விடுதலைப்புலிகளின் மூலோபாய உத்தியானது, இராணுவரீதியிலான போராட்டத்தையும் அரசியல் இயக்கத்தையும் உள்ளடக்கியது. அத்தோடு தமது பலத்தினைப் பேணுவதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் பராமரிப்பதற்குமான வலுவான வலைப்பின்னலையும் அவர்கள் உருவாக்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தேசியவாத ஊற்று எவ்வாறு உருவாகியது என்பதை இந்த அத்தியாயம் ஆராய்கிறது. புலிகளின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி வரை விரிவாகச் சித்திரிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு தேசியரீதியிற் தமிழர்களை ஒருங்கிணைப்பதற்கு ஏதுவாக இரண்டு வலுவான திறவுகோல்கள் அமைந்தன. ஒன்று தனியரசை அமைப்பதே இனப்பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்ற மக்கள் ஆணையை வழங்கிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் (1976). இத்தீர்மானம் தமிழர் தேச உருவாக்கத்திற்கும் அதற்கான போராட்டத்திற்குமான நியாயத்தை வழங்குகின்றது. இது அதனை அடைவதற்குரிய மெய்யான தலைமைத்துவம் தாமே என்ற புலிகளின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்த்தது. தமிழர்களின் தன்னாட்சி உரிமை பற்றிய தெளிவான செய்தியை மக்கள் மத்தியிற் புலிகள் இயக்கம் பரப்பியது. அதனுடன் பௌத்த – சிங்கள  அரசு தமிழர்கள் மீது செலுத்திய ஆதிக்க, ஆக்கிரமிப்பு அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டித் தமது தனிநாட்டுப் போராட்டத்தை நியாயப்படுத்தினர். இதுவே புலிகள் இயக்கம் தம்மை ஒரு தேசிய விடுதலை இயக்கமாக நிலைநிறுத்த அடிப்படையாக அமைந்தது. அத்தோடு தமது போராளிகளின் தியாகங்களை தங்களின் நியாயத்திற்கான அடிப்படையாகவும் கொண்டிருந்தனர். இரண்டாவது அம்சம் புலிகளின் அமைப்புசார் கட்டமைப்புகளும் செயல்வலுவுமாகும். அவர்கள் எவ்வாறு ஓர் அமைப்புசார் கட்டமைப்பை உருவாக்கிப் பேணினர் என்பதுவும் விவரிக்கப்படுகிறது. ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்கள் மற்றும ஆயுத இயக்கங்களுக்கிடையிலான சகோதரப் படுகொலைகள், அழித்தொழிப்புகள் பற்றிய தகவல்களும் இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளன.

சர்வதேசத் தலையீடும் இராணுவமயமாக்கலும்

1977 – 1994 வரையான காலப்பகுதிகளில் நிகழ்ந்த வலுவான சர்வதேசத் தலையீடுகள் இனப் பிரச்சினையைத் தீவிரமாக இராணுவமயமாக்கின. இந்தத் தலையீடுகள் இலங்கை அரசாங்கம் மற்றும் தென்னிலங்கைச் சமூகத்திற் சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தைத் தீவிரமாக வலுவடையச்செய்தது. அதேநேரத்தில் சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கு எதிராகத் தமிழ் தேசியவாத இயக்கமும் எழுச்சி பெற்றது. மேற்கத்திய அணுகுமுறைகளும் செயல்களும் சிறிலங்கா அரசையும், தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான அதன் (அரசின்) போரையும் வலுப்படுத்தின. இந்தியாவின் தலையீடு ஆரம்பத்தில் தமிழ் ஆயுத இயக்கங்களை ஆதரித்தது. பின்னர் அவற்றுக்கு எதிராக மாறியது. ஆனால் இந்தியப் படைகள் தமிழ் இயக்கங்களை எதிர்த்துப் போரில் இறங்கியமை – வடக்கு, கிழக்கில் இந்திய இராணுவப் பிரசன்னம் – இந்திய, இலங்கை உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழர் தன்னாட்சிக்கான இணக்கம் ஆகியவை பௌத்த – சிங்கள தேசியவாதத்தின் அடிப்படையை உறுதிப்படுத்துவதில் பங்களித்துள்ளன.

இலங்கையின் பௌத்த – சிங்கள அரசுக்கான மேற்கத்திய ஆதரவானது உலகளாவிய தாராளவாத ஒழுங்குருவாக்கத்தின் ஓர் அங்கமாக சுதந்திர சந்தை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் இலக்கினைக் கொண்டிருந்தது. இலங்கையில் மேற்கின் செல்வாக்கினைத் தடுப்பதும், இலங்கை மேற்கு நோக்கி நகர்வதைத் தடுப்பதும், தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும் இந்தியத் தலையீட்டின் மையமாக இருந்தது. இரண்டு இலக்குகளும் முற்றிலும் தோல்வியைத் தழுவியதாக நிறுவுகின்றார் நூலாசிரியர்.

சர்வதேசத் தரப்புகளுடன் உறவாடுவது பௌத்த – சிங்கள மற்றும் தமிழ்த் தேசியவாத திட்டங்களுக்கு தவிர்க்கமுடியாத தேவையாக மாறியது. இது தனித்தனியான உள்ளக (இனப் பெரும்பான்மைவாதம் – Ethnic majoritarianism) மற்றும் வெளியக (தாராளவாத அமைதி – Liberal peace) உரையாடல்களை உள்ளடக்கியது. தமிழர் போராட்டத்தினை ஒடுக்குவதை உலகளாவிய கொம்யூனிச எதிர்ப்பு (Anti-communism), பயங்கரவாத எதிர்ப்பு (Anti-terrorism) மற்றும் தாராளவாத சந்தை ஒழுங்கு (Liberal order-making) உருவாக்க நிகழ்ச்சித்திட்ட வரைபுகளுடன் இணைப்பதன்மூலம் இனமுரண்பாட்டின் அடிப்படைகள் மறைக்கப்பட்டன. பின்னர், இன முரண்பாட்டின் இராணுவமயமாக்கலும் சர்வதேசமயமாக்கலும் ஆயுதப் போராட்டத்தின் போக்கினை மாற்றின. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியத்தின் முதன்மைச் சக்தியாக உருவெடுத்து, நிலப்பிரதேச ஆள்புல உரிமை, சுயநிர்ணய உரிமைகளை மையக் கோரிக்கைகளாகக் கொண்ட இயக்கத்தை வழிநடத்தினர்.

உள்நாட்டுப்போரின் முடிவு

இலங்கையின் உள்நாட்டுப்போரின் முடிவு என்ற இந்த அத்தியாயம், ஆயுத முரண்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு, இனப்பன்மைத்துவ, திறந்த சந்தைப் பொருளாதார ஜனநாயகத்தினை உருவாக்குவதற்கான சர்வதேச முயற்சிகளை விரிவாக முன்வைக்கின்றது. அந்தவகையில் 1994 – 2009 காலப்பகுதியின் நிகழ்வுகள்மீது கவனம் செலுத்தப்படுகின்றது. காலவரிசையில் நிகழ்வுகளும், அக-புறச் சூழல்களும், விளைவுகளும் பேசப்படுகின்றன. சமாந்தரமாக இக்காலகட்டத்தின் சிங்கள – தமிழ் தேசியவாத அரசியலின் இயக்கவியலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

மேற்கின் சமாதான முயற்சிகள்

1994 இல் சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்ததையடுத்துச் சர்வதேசத் தலையீடு தொடங்கியது. சமாதானம் என்பது போரை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்ல; தமிழர்களின் கோரிக்கைகள், வரையறுக்கப்பட்ட பிராந்திய தன்னாட்சிமூலம் நிறைவேற்றப்படுதல் வேண்டுமென்பதில் சர்வதேசரீதியில் ஏற்பும் இணக்கமும் இருந்தது. 1994 முதல் போரின் முடிவுவரை, சிங்களத் தலைவர்கள் ஒருவகையான அதிகாரப்பகிர்வு (Devolution) குறித்துப் பிரஸ்தாபித்து வந்துள்ளனர். தமிழ்த்தரப்புத் தேசியவாத நடவடிக்கைகள் தாயகம், தேசியத்திற்கான ஆதரவை வெளிப்படுத்துவதிலும், பௌத்த – சிங்களத் தேசியவாதத்தால் அந்த இலக்கிற்கு ஏற்படும் தடைகளை முன்னிலைப்படுத்துவதிலும் கவனம் செலுத்தின.

இலங்கைக்கான மேற்கின் ஆதரவு, 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அன்றைய புதிய ஜனாதிபதி குமாரதுங்காவின் நிர்வாகத்திற்குச் சாதகமாக அமைந்தது. ஆனால் தற்போது நோக்கும்போது மேற்கின் அந்த அணுகுமுறை பனிப்போர் காலகட்டத்தின் சமாதானத் தலையீடுகளை ஒத்த ஓர் ஊடுருவும் தன்மையின் தொடக்கம் என உணர முடிகிறது. அதே நேரத்தில், இந்தியா, அதன் தோல்வியடைந்த இராணுவத் தலையீட்டினை அடுத்து, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னணியில், அடிப்படையாக மாற்றியமைக்கப்பட்ட புவியியல் சூழலுக்குள் அகப்பட்டுக்கொண்டது. இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டில் நேரடியாக ஈடுபடுவதை விலக்கிக் கொண்டது.

பேண்தகு/ நிலைகொள் (Sustainable) சமாதானத்தை உருவாக்கவும் அரசின் நிலைத்தன்மையைப் உறுதிப்படுத்தவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவது சர்வதேசக் கோரிக்கையாக இருந்தது. தமது தாராளவாதக் கொள்கையை உள்வாங்கிய ஆட்சியை இலங்கையில் உருவாக்குவதும் மேம்படுத்துவதும் சர்வதேச நிலைப்பாடாக இருந்தது. விடுதலைப் புலிகளை ஓரங்கட்டும் முயற்சிகளைச் சர்வதேசம் செய்தது. விடுதலைப் புலிகள் ஆயுத வன்முறையிலும் எதிர்மறை இனவாதத்திலும் ஈடுபட்டதாக சர்வதேசம் கருதியது; சித்திரித்தது. இந்தக் கருத்துச் சிங்கள உயரடுக்குகளாலும் சில தமிழ்த் தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் களநீக்கம் செய்யப்பட்டு இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்த எதிர்காலத்திற்காகச் செயற்படமுடியும் என்றும் அத்தரப்பினர் பரப்புரை செய்தனர்.

புலிகளை அழிக்கும் இலக்கு

புலிகளையும் அவர்களது அரசியல் ஆதரவுக்கூட்டுகளையும் ஓரம்கட்டித் தோற்கடிக்க வைப்பதற்கான சர்வதேச முயற்சிகள், இலங்கையை ஓர் இனத்துவ இணைவாக்கம் கொண்ட சந்தை ஜனநாயகமாக மாற்றும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டது. ‘சமாதானத்திற்கான போர்’ என்ற பதாகையின்கீழ் புலிகளுக்கு எதிரான போர் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டது. முதலாவது சந்திரிகா குமாரதுங்கா ஆட்சிக்காலத்தில் (1994 – 2002). இரண்டாவது மகிந்த ராஜபக்ச காலத்தில் (2006 – 2009). இரண்டு போர்க் கட்டங்களுக்குமிடையிலான காலம் (2002 – 2006) நோர்வே தலைமையிலான சமாதான முன்னெடுப்புகளைக் கொண்டிருந்தது. இக்காலம் போரிலிருந்து தற்காலிக ஓய்வை வழங்கியது. இந்தக் காலகட்டமே புலிகளை இராணுவ வழிமுறைகளில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியில் ஒடுக்கவும் பலவீனப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

பின்-பனிப்போர் காலகட்டத்தில் இலங்கையின் தேசிய இன முரண்பாட்டுச் சூழலில் சிங்கள – பௌத்த மற்றும் தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் வளர்ச்சியடைந்தன. இந்நிலை தாராளவாத சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான சர்வதேசத்தின் தீவிர முனைப்புகளைக் கொண்டிருந்தது. சர்வதேச தரப்புகள் இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையை விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டமாகக் குறைமதிப்புச் செய்ததோடு, தேசியவாதத்தை ஒரு விளிம்புநிலைப் பிரச்சினையாகக் கருதினர். ஒரு பன்மைத்துவ தாராளவாத அரசை ஆதரிக்கும் ‘பல்லினப் பெரும்பான்மை’ மீதான சர்வதேச சக்திகளின் இந்த நம்பிக்கை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசை வலுப்படுத்தியது.

சிங்கள மற்றும் தமிழ் அரசியற் தலைவர்கள் தீவிர தேசியவாதத் தரப்புகளை அச்சுறுத்தலாகக் காட்டுவதன்மூலம் தாராளவாத சீர்திருத்தங்கள்சார்ந்து சர்வதேச நம்பிக்கையைப் பேணத் துணைநின்றனர். ஆயினும் தேசியவாத ஆதரவு மீதான நம்பிக்கை, தாராளவாத ஜனநாயகம் மற்றும் தேசியவாதக் கொள்கைகளுக்கு இடையிலான முரண்பாடுகளை உருவாக்கியது.

1994 முதல் 2009 வரை, பௌத்த – சிங்கள தேசியவாதப் பரப்புரைகள் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்த சர்வதேச அழுத்தத்திற்கு எதிராக பெரும்பான்மை பௌத்த – சிங்கள அரசைப் பாதுகாத்தது; மகிந்த ராஜபக்சவின் எழுச்சிக்கு வலுவூட்டியதோடு, அவரது அதிகாரக்குவிப்பு, இராணுவ மற்றும் பெருந்தேசியவாத அரசாங்கத்தை ஆதரித்தது. இது தமிழர் தன்னாட்சிக்கு எதிரான சிங்கள இராணுவமயமாக்கலை ஆதரிக்கும் சிங்கள வாக்குவங்கியை ஒருங்கிணைத்தது. தமிழ்த் தேசியவாத முன்னெடுப்புகள் தேசியத்திற்கும் தன்னாட்சிக்கும் சர்வதேச ஆதரவை நாடின. இது தமிழர் மத்தியில் ஒரு வலுவான தேசிய அடையாளத்தை வளர்த்தது.

ஊடகக் கட்டுப்பாடும் தணிக்கையும்

உள்நாட்டுப் போரின் போது ஊடகங்கள் அரசினால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. போர்ப்பிரதேசங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களின் பிரசன்னம் தடுக்கப்பட்டது. போர் நிலைமைகள் தொடர்பான செய்திகளிலும் கதையாடல்களிலும் தணிக்கைகள் விதிக்கப்பட்டன. ரொய்ட்டர்ஸ், அசோசியேற்றட் பிரஸ், ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் (Reuters, Associated Press, Agency France Presse) உட்பட்ட சர்வதேச செய்தி ஊடகங்கள் தலைநகர் கொழும்பை மையமாகக்கொண்டு இயங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டன. புலிகளை மிகக் கொடூரமானவர்களாகவும், அரசாங்கத்தை சீர்திருத்தங்களுக்கு ஆதரவான சக்தியாகவும் வெளியுலகிற்குக் காட்டுவதற்கு ஊடகத் தணிக்கையும், கட்டுப்பாடும் பெரிதும் பயன்பட்டன. போர் மற்றும் இனமுரண்பாடு தொடர்பான ஒருதலைப்பட்சமான தகவல்கள் வழங்கப்பட்டன.

இந்தப் புறநிலையிற் புலிகளும் புலம்பெயர் தேசங்களில் அவர்களின் ஆதரவு சக்திகளும் மாற்று ஊடகங்களை உருவாக்கினர். தமிழ்நெற் அவற்றில் ஒன்று. தமிழ்நெற் இலங்கை அரசாங்கத்தின் கதையாடல்களைச் சவாலுக்கு உட்படுத்தியதோடு, இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கான தமிழர் நிலைப்பட்ட எதிர்ப்பு, விமர்சனங்களுக்குரிய தளமாக இயங்கியது.

பொங்குதமிழ்

பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணிகள் சமாதான காலத்தில் தமிழ்த் தேசிய இயக்கத்தின் முக்கிய அங்கமாக மாறியமை குறித்து இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுகின்றது. இப்பேரணிகள் 2001 இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கியது. இது தமிழர் தாயகத்தின் வடக்கு – கிழக்கு மக்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் பெருந்திரளான பங்குபற்றலுடன் நிகழ்ந்தது. சமாதானத் தீர்வு, சுயநிர்ணய உரிமை, தாயகம், புலிகளின் ஏகபிரதிநிதித்துவம், தேசியம் ஆகிய கோரிக்கைகளைப் பரந்த அளவில் முன்வைத்தது. அரசியற் பரிமாணத்தை வெளிப்படுத்தியதோடு, சமூகத்தின் பல தரப்புகள், செயற்பாட்டாளர்களையும் இணைத்தது. இடைக்கால தன்னாட்சி நிர்வாகம் மற்றும் துணை இராணுவக்குழுக்களின் ஆயுதக்களைவு குறித்த கோரிக்கைகளையும் பொங்குதமிழ் முன்வைத்தது. புலிகளின் தூண்டுதல் என சர்வதேச சமூகத்தினால் இப்பேரணிகள் நிராகரிக்கப்பட்டாலும், தமிழ்த் தேசிய அடையாளத்தை மீள்நிறுவியதோடு, தமிழ்ச் சமூகக்குழுக்களையும் பரந்த அளவில் இந்நிகழ்வு ஒருங்கிணைத்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) உருவாக்கம் மற்றும் வகிபாகம் ஆய்வு செய்யப்படுகின்றது. குறிப்பாகப் புலிகளின் இராணுவ வெற்றிகள் மற்றும் நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அரசியற் பரிமாணங்களை முன்வைத்து த.தே.கூட்டமைப்பின் வகிபாகம் பேசப்படுகின்றது.

2001 இல் பல தமிழ்த் தேசியக்கட்சிகளின் கூட்டணியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழர்களின் கோரிக்கைகளை பிரதிநிதித்துவம் செய்யவும், விடுதலைப் புலிகளைத் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக ஆதரிக்கவும் இது உருவாக்கப்பட்டது. இந்நிலைப்பாடுகளின் அடிப்படையில் கூட்டமைப்பு ஒரு முக்கியமான தேர்தல் வெற்றியைப் பெற்றது. இது வடக்கு – கிழக்குத் தமிழர்களின் ஆதரவை வெளிப்படுத்தியது.

விடுதலைப்புலிகளின் நிழல் அரசு

இந்த அத்தியாயம் விடுதலைப்புலிகளின் நிழல் அரசு (De facto state) குறித்தும் அது தமிழ்த் தேசிய அடையாளத்திலும் ‘டயஸ்போறா’ தமிழர்களின் ஈடுபாடுசார்ந்து ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் ஆராய்கின்றது. புலிகளின் நிழல் அரசும் அதன் நிறுவனங்களும் 2002 ஆம் ஆண்டுக்குப்பின் விரைந்த வளர்ச்சியை அடைந்தன. தமிழீழப் பிரதேசங்களுக்கான சிவில் நிர்வாகவும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான அரசியற் திட்டமாகவும் நிழல் அரசு செயற்பட்டது. புலம்பெயர் தமிழ் நிறுவனங்களும், செயற்பாட்டாளர்களும், துறைசார் நிபுணர்களும் வன்னியில் சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகள் சார்ந்து பங்களித்தனர். சமூக மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிக்க உள்ளூர் நிறுவனங்களை நிறுவுவதிலும் பங்களித்தனர். புலிகளின் நிழல் அரசும் அதன் நிறுவனங்களும் புலம்பெயர் தமிழர்கள் மனிதாபிமானத் திட்டங்களிற் பங்கேற்க அனுமதித்தன. இது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தாயகத்தில் உள்ள தமிழர்கள் இடையேயான ஓர் ஊடாட்டத்தையும் உணர்வுசார் இணைப்பையும் உருவாக்கியது. புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புகள் பொருளாதார விளைவுகளை மட்டுமின்றி, பின்-போர்க்கால அரசியல் வகிபாகத்தைப் பேணுகின்ற ஆழமான தேசிய உணர்வையும் சார்ந்ததாகும்.

விடுதலைப் புலிகளின் அழிவு தாராளவாத சமாதானத்திற்கும் பௌத்த – சிங்கள தேசியவாத ஒழுங்குக்கும் இடையிலான இடைவெளியை துல்லியமான வெளிப்படுத்தியது. தீவிரமான அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய அடையாளம்  நிலைத்திருக்கிறது; தமிழ் அரசியலின் முக்கிய அங்கமாக தாயகத் தன்னாட்சிக் கொள்கை உள்ளது. 2009 போர் முடிவிற்குப் பின்னர், இலங்கை அரசானது சர்வதேசத்தின் தாராளவாத மறுசீரமைப்பு, சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சமாளிப்பதிலும், பௌத்த – சிங்கள மேலாண்மைக்கு ஆதரவான உள்நாட்டு அரசியலைப் பேணுவதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளது என நிறுவுகின்றார் மாதுரிகா இராசரத்தினம்.

சமகாலத் தமிழ் தேசியம்

2009 போர் முடிவுற்ற பின்னரான காலத்தில் இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டுடன் தொடர்புடைய சர்வதேச அரசியல் மூன்று முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அரசியல் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியுடன் (Federal Party) தொடங்கிய தமிழ்த் தேசியத்தின் ஏக அமைப்புப் பிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்தது. தமிழ்த் தேசியம் மேற்கு நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களால் இயக்கப்படும் ஓர் உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது; தமிழ்த் தேசிய அடையாளம் ஒற்றைமைய முடிவெடுக்கும் அமைப்பு முறைமைக்கு மாறாக நாடுகடந்த தமிழ் அமைப்புகளின் வலைப்பின்னல்களைக் கொண்டதாக மாறியிருக்கின்றது என்பது முதலாவது மாற்றமாகும்.

இரண்டாவது, பிரித்தானியாவிலிருந்து இலங்கை சுதந்திரமடைந்த காலம் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கம் ஆகிய காலப்பகுதிகளுக்குப் பின்னர் முதன்முறையாகத் தமிழ்த் தேசியவாதத் தரப்புகள் சர்வதேச தாராளவாத ஒழுங்குகளை உருவாக்குகின்ற சக்திகளுடனும் அவற்றின் செயல்முறைகளுடன் இணைகின்றனர். இந்த மறுசீரமைப்பு போரின் இறுதி மாதங்களில் தொடங்கியது. அதாவது பௌத்த – சிங்கள ஒழுங்குக்கும் தாராளவாத மறுசீரமைப்புகள்சார்ந்த சர்வதேச கோரிக்கைகளுக்கும் இடையிலான முரண்பாடு துல்லியமாகியபோது இது நிகழத்தொடங்கியது. தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகள்சார்ந்து இலங்கைக்கு எதிராகச் சர்வதேசத்தின் கருத்து மாறியது. தாராளவாத மறுசீரமைப்பிற்கான நம்பகமான தரப்பாக இலங்கையைத் தொடர்ந்து பார்க்கச் சர்வதேசம் தயங்கியது. பல சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் இனத்துவப் பன்மைத்துவ அரசை உருவாக்குவது குறித்தும், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுமாறும் இலங்கையை வலியுறுத்தியுள்ளன.

மூன்றாவது தமிழ்நாடு சார்ந்தது. ஈழத் தமிழ்க் கோரிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவு கோரும் செயற்பாடுகளிற் தமிழ்நாட்டுத் தரப்புகள் ஈடுபட்டுள்ளன. இது சிலவேளைகளில் இந்திய வெளியுறவுக் கொள்கையுடன் முரண்படும் தன்மையுடையது. வெளியுறவுக் கொள்கைசார்ந்து தமிழ்நாடு மற்றும் இந்திய மத்திய அரசுக்கிடையில் முரண்நிலை நிலவினும் அவற்றுக்கிடையிலான உறவு, நிலையாக உள்ளது. தமிழ்நாடு – இந்திய மத்திய அரசுக்கிடையிலான நிலைகொள் அல்லது முதிர்ச்சிமிகு உறவு, ஈழத்தமிழர்சார் ஆதரவுச் செயற்பாட்டில் ஈடுபடத் தமிழ்நாட்டினை அனுமதிக்கின்றது. ஆனால் இலங்கை அரசு மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான உறவுகள் இன்னும் பதற்றமாகவே உள்ளன.

பின்-போர்க்கால இலங்கையும் தாராளவாத சமாதானமும்

2009 இறுதிப்போரில் பொதுமக்கள் செறிந்த பகுதிகளில் தொடர் குண்டுவீச்சு மற்றும் விமானத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடங்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ‘தாக்குதலற்ற வலயங்கள்’ கூட தொடர்ந்து குண்டு வீச்சுகளின் இலக்காக மாறியது.

2009 இல் போர் முடிவுக்கு வந்ததைச் சர்வதேச சமூகம் வரவேற்றது. ஆனால் சர்வதேச மனித உரிமைக்குழுக்கள் படுகொலைகளை விசாரிக்குமாறு கோரிக்கைகளை விடுத்தன. இது இலங்கைக்கும் மேற்குலகிற்குமிடையலான ஓர் இடைவெளியை அடையாளப்படுத்தியது. போர் முடிவுற்ற பின்னரும் தமிழ்ப்பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் நீடிக்கின்றது; சிங்களமயமாக்கல் நிகழ்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான அரசியற் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தவிர்த்துவந்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்குரிய சர்வதேச அழுத்தங்களையும் இலங்கை அரசு நிராகரித்து வந்துள்ளது. பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவ இருப்பும் தொடர்ந்து பேணப்படுகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியில் தொடர் அச்சத்தையும் நம்பிக்கையீனங்களையும் மேலோங்கச் செய்துள்ளது. சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் சீனா போன்ற நாடுகளுடன் உறவினை மேம்படுத்திக்கொண்டுள்ள இலங்கை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களைப் புறக்கணித்துவந்துள்ளது.

பின்- போர்ச் சூழலின் சவால்களும் வாய்ப்புகளும்

பின்-போர்ச் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள், நிலவும்  வாய்ப்புகள் குறித்தும் இறுதி அத்தியாயம் பகுப்பாய்வு செய்கிறது. கூட்டமைப்பானது தமிழத் தேசியக் கொள்கைகளுக்கும் இலங்கை அரசின் நிபந்தனைகளுக்கும் இடையில் ஓர் ஓட்டத்தைக் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் இல்லாத பின்-போர்ச் சூழலில் தமிழ் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அரசியற் கட்சியாக, அமைப்பாக த.தே.கூ செயற்படும் என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவியது. தேசியவாதக் கோரிக்கைகள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிலைப்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டாலும், அதன் வாக்காளர்கள் தமிழ்த் தேசியம்சார்ந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் குறித்தும் இந்த அத்தியாயம் விவரிக்கின்றது. குறிப்பாகப் போரை நடத்திய அரசின் பொறுப்புக்கூறல் மற்றும் போரின் விளைவுகள் குறித்த நிலைப்பாடுகளில் கூட்டமைப்பில் அங்கம் வகித்த, வகிக்கும் கட்சிகளின் தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கூட்டமைப்பு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றது. ஆனால் அரச தரப்பு தொடர்ச்சியாகப் புறக்கணித்து வந்துள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேச தரப்புகளுடன் இணைந்து பொறுப்புக்கூறல் கோரிக்கைகளை முன்னெடுக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்துள்ளது. அதேவேளை சர்வதேச முயற்சிகளுக்கான ஆதரவுசார்ந்து இரட்டைநிலையுடனும் அது செயற்பட்டுள்ளது.

முடிவுரை

இலங்கையில் தமிழர் தாயகம் மற்றும் தென் இந்தியாவின் தமிழகப் பகுதிகளின் தேசிய அடையாளம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை இந்தநூல் ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்கிறது. இலங்கையின் பௌத்த – சிங்கள மேலாதிக்கப் படிநிலைகள் இனவாதக் கட்டமைப்புகளைப் பேணும் நிலையில், இந்தியத் தேசிய வரையறையானது தமிழ் அடையாளத்திற்கு வழங்கியுள்ள ஏற்புமிகு அணுகுமுறையால், தமிழ்நாடு பெற்ற நன்மைகளும் விவரிக்கப்படுகின்றன.

ஈழத்தமிழ் அரசியலானது இலங்கையில் ஒற்றையாட்சியின்கீழ் சம உரிமை கோரியபோது, தென் இந்தியாவின் தமிழ் அரசியல், இந்து மதம் மற்றும் இந்தியத் தேசியவாதத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தால் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. காலநீட்சிமிக்க அரசியற் செயற்பாடுகள் மூலமே தேசிய அடையாளம் வளர்த்தெடுக்கப்படுகின்றது. இந்தியாவின் காங்கிரஸ் இயக்கமானது மொழி, இன, கலாசார மற்றும் பொருளாதார நலன்களை ஒருங்கிணைக்கும் வகையிற் செயற்பட்டது. இலங்கையின் பலவீனமான இனப்பன்மைத்துவ இயக்கங்கள் அதனைச் சாத்தியப்படுத்துவதிற் தோல்வியுற்றிருந்தன.

இலங்கையில் நிலைபெற்றுவிட்ட பௌத்த – சிங்களப் பெருந்தேசியவாதக் கதையாடல்களைச் சவாலுக்குட்படுத்த, அங்கு வலுவானதொரு பரந்த இனத்துவத் தேசிய இயக்கம் அவசியப்படுகின்றது. உள்ளிணைப்புத் தேசிய அடையாளத்தை (Inclusive national identity) உருவாக்குவதற்குரிய வலுவான அரசியற் செயற்பாடுகளும் தேவைப்படுகின்றன. ஒரு வலுவான பரந்த தேசிய அடையாள அரசியலின் (Pan-ethnic political identity) வெற்றிடத்தில், பௌத்த – சிங்கள ஆதிக்கம்கொண்ட அரசியற் கட்டமைப்பில் தீர்வுகளைக் கண்டடையும் முயற்சிகள் பலவீனமானதாகவும் குறுகியதாகவுமே இருக்கும்.

இலங்கை அரசின் உயரடுக்குத் தலைவர்கள் தொடர்பாகவும், மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தக்கூடிய அவர்களின் ஆற்றல், விருப்பம் போன்றவற்றை உரிய முறையில் மதிப்பீடு செய்யாமல் சர்வதேச சமூகம் அவர்களுக்கு ஆதரவினை வழங்கியமை தொடர்பாகவும் இந்நூலில் விமர்சிக்கப்படுகின்றது. வெறும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைவிட, பேண்தகு இனத்துவ ஒருங்கிணைப்பிற்கான அரசியல் இயக்க அணிதிரட்டல் மற்றும் கொள்கைசார் ஒருங்கிணைப்புப் பற்றியும் வலியுறுத்தப்படுகின்றது.

பௌத்த – சிங்கள மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் நிலைமைகளில் மாற்றங்களை உருவாக்குவதற்கு ஏதுவாக இராணுவமயமாக்கல் – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குதல், சிங்களப் பெரும்பான்மையின் கட்டுப்பாட்டிற்கு வெளியே பரந்துபட்ட மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என அறிவுறுத்தப்படுகின்றது. இம்மாற்றங்கள் மட்டும் இன முரண்பாட்டிற்கான முற்றுமுழுதான தீர்வைத் தந்துவிடாது. ஆனால் தற்போதைய தேக்கநிலையிலிருந்து முன்னேறத் தேவையான புதிய அரசியல் இயக்கவியலை உருவாக்கும் என்றும் வலியுறுத்துகின்றது இந்நூல்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

சிவராஜா ரூபன்

ரூபன் சிவராஜா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்', 'சொற்களைச் செமிக்கும் கடல் (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு தொகுதி 1, தொகுதி 2' (திரை நூல் அரங்கு), '' என்பன இவரது படைப்புகளாகும்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்