தமிழ்பேசும் குயர் மக்களும் ஊடகங்களும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
10 நிமிட வாசிப்பு

தமிழ்பேசும் குயர் மக்களும் ஊடகங்களும்

December 23, 2025 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதில் கலாசாரம் – சமயம் அல்லது மதக் கட்டமைப்புகளின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புகள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட  மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அது சார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றிப் பேசவிழைகின்றது.

தமிழ்ச் சூழலில் குயர் மக்களுடைய பிரதிநிதித்துவப்படுத்தலில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கிருக்கின்றது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் பால், பால்நிலை மற்றும் பாலியல்பு சார்ந்த மீள்வருவார்ப்புகளைக் (Stereotype) கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. குயர் மக்கள் பற்றிய மீள்வருவார்ப்புகள் பல்வேறு வடிவங்களில் கட்டமைக்கப்படுவதை அவதானிக்கலாம். மீள்வருவார்ப்புகள் எந்த வடிவங்களில் இருந்தாலும் அவை சமூகத்தில் பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும். பால், பால்நிலை அசமத்துவமானது பல்வேறு ஒடுக்குமுறைகளை ஏற்படுத்துகின்றது. பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான முற்கற்பிதங்களால் ‘குயர் மக்களுக்கும்’ சமூகத்திற்குமான இடைவெளி ஊடகங்களால் விரிசலாகின்றமையை அவதானிக்கலாம்.

இலங்கையில் குயர் (LGBTQIA+) மக்கள் தொடர்பான விவாதங்கள் பெரும்பாலும் ஆங்கில ஊடகங்களில் இடம்பெற்றுள்ளன. கடந்தகாலங்களில் தமிழ் ஊடகங்கள் குறிப்பாகப் பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி, மற்றும் இணையவழி ஊடகங்கள் குயர் மக்களைப் பற்றிய செய்திகளையோ, கட்டுரைகளையோ, நிகழ்ச்சிகளையோ குறைந்தளவிலேயே வழங்கிவந்திருகின்றன. தமிழ்ச் சமூகத்தில் பால் மற்றும் பால்நிலை பற்றிய பாரம்பரியமான  கருத்துகள் ஆழமாகப் பதிந்திருப்பதால், குயர் அடையாளங்களை ஊடகங்கள் அதிகம் வெளிப்படுத்துவதில் பின்நிற்கின்றன. சில சமயங்களில் ஊடகங்களில் வரும் செய்திகள், கட்டுரைகள், மற்றும் ஏனைய உள்ளடக்கங்கள் குயர் மக்களைக் கேலி செய்வதாக அமைகின்றன. குயர் மக்கள் தொடர்பான தவறான புரிதலைச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஊடக உள்ளடக்கங்கள் அமைவதைக்  காணலாம். 

தமிழ்ச் சமூகங்களில் குறிப்பாக ஊடகங்களில் குயர் உரிமைகள் சமூக, அரசியல், மத பண்பாட்டு விழுமியங்களால் ஒடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. வெகுசன ஊடகங்களான பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் ஆரோக்கியமான வெளிப்பாடுகள் இல்லை எனலாம். தமிழ்த் திரைப்படங்களில் குயர் கதாபாத்திரங்கள் காணப்பட்டாலும் அவை பெரும்பாலும் ‘நகைச்சுவை’ மற்றும் ‘விதிவிலக்கு’ என்ற வகையிலேயே குயர் மக்களைச் சித்திரிக்கின்றன. புதிய ஊடகங்களில், குறிப்பாகச் சமூக ஊடகங்களில் குயர் வெறுப்பினை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இருந்தாலும்கூட, சமூக ஊடகங்கள் மூலமாக இளம் தலைமுறையினர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். சில சுயாதீன ஊடகங்கள் மற்றும் சில இணையவழி ஊடகங்கள் குயர் மக்கள் பற்றிய தமிழ் உள்ளடக்கத்தை உருவாக்கி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆவணப்படங்கள், குறும்படங்கள் என்பனவற்றின் மூலமாக குயர் மக்களுடைய கதைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.  

தமிழ்ச் செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் இன, மத, அரசியல் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதால் குயர் உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், குயர் மக்களை ஆதரிப்பது தமது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனக் கருதும் பலர் தமது நிலைப்பாட்டைப் பொது வெளியிலும் ஊடகங்களிலும் வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். 

குயர் மக்களைப் பற்றிய தவறான செய்திகள் சமூகத்தில் எதிர்மறையான பார்வைகளை ஏற்படுத்துகின்றன. மேலும் பெண் தன்பாலீர்ப்பாளர்களுடைய குரல்கள் அதிகம் மறைக்கப்படுகின்றனவாக இருக்கின்றன. அதேவேளை பெண் தன்பாலீர்ப்பாளர்களும் ஊடகங்களில் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்துவதில் சவால்களை எதிர்நோக்குகின்றனர். சிலர் தங்களது அடையாளங்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துகின்ற போது பாலியல் சார் இணையவழி வன்முறைகளை அனுபவித்துவருகின்றனர்.

ஊடகங்கள் குயர் மக்களது உரிமைகளைச் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் என்ற கோணத்தில் முன்வைக்கும் போது தமிழ்ச் சமூகத்தில் நீதியான ஒப்புரவான பிரதிநிதித்துவம் உருவாகும் சாத்தியப்பாடுகள் உள்ளன எனலாம்.

வெகுசன ஊடகங்கள் 

இலங்கையில் தமிழ் மொழி மூலமான வெகுசன ஊடகங்கள் குயர் மக்கள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தத் தவறிவிடுகின்றன. குயர் மக்கள் பற்றிய விடயங்கள் பிரசுரிக்கப்படுவதோ ஒலி, ஒளி பரப்பப்படுவதோ மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. பெரும்பாலான செய்திப் பத்திரிகைகள் குயர் மக்கள் தொடர்பான விடயங்ளைத் தவிர்த்துவிடுகின்றமையை ஊடக உள்ளடக்கங்களினூடாக அவதானிக்கலாம். இவ்வாறானதொரு நிலையே இலத்திரனியல் ஊடகங்களிலும் காணப்படுகின்றது. குயர்மக்கள் தொடர்பான ஆவணப்படுத்தல்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வெளியிடப்படுவதைக் காணலாம்.

பால்நிலை ரீதியான கூருணர்வு மற்றும் பால்நிலை சார்ந்த சமூக விழிப்புணர்வானது ஊடகத்துறை சார்ந்த அனைவருக்கும் அவசியமானது. ஆனால், இலங்கைத் தமிழ்ச்சூழலில் பால் மற்றும் பால்நிலை தொடர்பான கூருணர்வு அரிதாகவே காணப்படுகின்றது. அவை மேலும் குயர் மக்களை ஒடுக்குமுறைக்குட்படுத்துகின்றன. 

சினிமாவும் குயர் மக்களும்

அண்மைக்காலங்களில் உலக சினிமா அதிகம் குயர் மக்களையும் குயர் மக்கள் சார்ந்த கருப்பொருளையும் பேசுபொருளாகக் கொண்டுள்ளது. இந்திய சினிமாவிலும் குயர் மக்கள் பற்றிய பல்வேறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. அதேவேளை, இலங்கையில் 2003 ஆம் ஆண்டு அசோக ஹந்தகம இயக்கிய ‘தனி ததுவெண் பியபண்ண’ (Thani Thatuwen Piyabanna) என்ற திரைப்படம் பெண் தன்பாலீர்ப்பைப் பேசுகின்றது. இத்திரைப்படத்தின் திரைக்கதையானது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது இலங்கைச் சினிமா வரலாற்றில் குயர் மக்களது அரசியலைப் பற்றிப் பேசிய குறிப்பிடத்தக்க முதல் திரைப்படம் ஆகும். சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினைப் பெற்ற ஒரு திரைப்படமாகவும் ‘தனி ததுவெண் பியபண்ண’ விளங்குகின்றது.

‘சயபெதி குஸீமா’ (Frangipani) திரைப்படம் இலங்கையில் 2013 ஆம் ஆண்டு உருவான குயர் அரசியலைப் பற்றிப் பேசிய மற்றுமொரு திரைப்படமாகும். இயக்குனர் விசாகேச சந்திரசேகரம் இயக்கிய இத்திரைப்படமானது தன்பாலீர்ப்பாளர்களது காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தன்பாலீர்ப்பாளர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையிலிருந்து சமூகத்தின் ஆதரவை நாடும் திரைப்படமாக விளங்குகின்றது. இத்திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது போன்ற திரைப்படங்கள் பொதுவில் பேசப்படாத சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளைப் பேசுகின்றன. இலங்கையில் குயர் கருத்தியலானது மேலைத்தேய எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இலங்கையில் பலபாகங்களிலும் தன்பாலீர்ப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை இத்திரைப்படம் சுட்டிக்காட்டுகின்றது.

உலகத் திரைப்படத் துறையில் நிகழும் மாற்றங்கள், இலங்கைச் சினிமாத்துறையில் மிகச் சிறிய அளவிலாகிலும் தாக்கம் செலுத்தி வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். இலங்கையில் குயர் மக்களைக் கதைக்கருவாகக் கொண்டு, குறிப்பாகத் தன்பாலீர்ப்பை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் விளைவாக, குயர் மக்களுடன் தொடர்புடைய முக்கிய விடயங்களை வெளிப்படுத்த முயலும் ‘குயர் சினிமா’ என்ற எண்ணக்கருவானது உலகளவில் மட்டுமல்லாது இலங்கையிலும் உருவாகியுள்ளது எனலாம். ஆனாலும் இலங்கைத் தமிழ் சினிமா இன்னமும் குயர் மக்கள் தொடர்பான விடயங்களைப் பற்றிப் பெரியளவில் பேச ஆரம்பிக்கவில்லை என்பதே யதார்த்தம். 

இருந்தாலும் கூட, இலங்கையில் தமிழில் வெளிவருகின்ற குறுந்திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் ஓரளவு குயர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. குயர் மக்கள் பற்றிய குறுந்திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தோற்றுவாயாக சில பல்கலைக்கழக மாணவர்களின் படைப்புகளை மேற்கோள் காட்ட முடியும். அது தவிரவும் தமிழ்ச் சூழலில் குயர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

புதிய ஊடகங்கள் அல்லது இணையவழி ஊடகங்கள்

அண்மைக் காலங்களில் சமூக ஊடகங்களில் தமிழ் பேசும் குயர் இளைஞர்கள் தங்கள் அடையாளம், அனுபவம் பற்றிப் பகிர்ந்து வருகின்றனர். குயர் மக்களுக்கான அமைப்புகளும் இணைய வழி ஊடகங்களைப் பல்வேறு செயற்றிட்டங்களுக்காகப் பயன்படுத்துகின்றன. இவ்வாறான மெய்நிகர் வெளி, குயர் மக்களுக்களின் குரல்கள் ஒலிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும்கூட, இணையவழி ஊடகங்கள் குயர் வெறுப்பை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. அண்மையில் இலங்கையின் பிரபல்யமான தனியார் வானொலி ஒன்றின் முகநூல் பக்கத்தில் குயர் மக்கள் தொடர்பான காணொளி ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. தனிநபர்களின் அனுமதியற்ற வகையில் அவர்களுடைய புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன் பால்நிலைக் கூருணர்வற்ற மொழிப் பாவனையும் இடம்பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல், குயர் மக்கள் பற்றிய செய்திகளின் கீழ் உள்ள பின்னூட்டங்களும் மிக மோசமான குயர் வெறுப்பை வெளிப்படுத்துவனவாக இருந்தன.

இலங்கையில் இணையவழி ஊடகங்கள் குயர் மக்கள் தொடர்பான போலிச் செய்திகள் பகிரப்படுதல், வெறுப்புப் பேச்சு மற்றும் ஏனைய இணையவழி வன்முறைகள் அதிகம் இடம்பெறும் இடமாக இருக்கின்றன. இணையவழி ஊடகங்கள் குயர் மக்களுக்கான ஒரு வெளியை வழங்குகின்ற அதேவேளை, இணையவழி வன்முறைகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகின்றன. தொழில்முறை ரீதியான இணையத்தளங்கள் குயர் மக்கள் தொடர்பான உள்ளடக்கங்களை வெளியிடுகின்ற போதிலும் அவை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. சிலவேளைகளில் ஊடகவியலாளர்கள் குயர் வெறுப்பற்றவர்களாக இருக்கின்ற போதிலும், அவர்கள் குயர் மக்களைப் பற்றிய ஆழமான புரிதலற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

நூல்கள் மற்றும் ஆய்வுகள்

இலங்கையில் குயர் மக்கள் தொடர்பான நூல்கள் மற்றும் ஆய்வுகள் மிக அரிதாகவே வெளிவருகின்றன. அதிலும் குறிப்பாகத் தமிழ்ச் சூழலில் குயர் மக்கள் தொடர்பான நூல்கள் பெரியளவில் வெளிவரவில்லை. வெளிவந்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை குயர் சமூகம் சார்ந்தவர்களுடைய படைப்புகளாக இருக்கின்றன. சில நூல்கள் அவர்களது சுயசரிதைகளாக இருக்கின்றன. அண்மைக்காலங்களில் குயர் மக்கள் தொடர்பான ஆய்வுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன எனலாம். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் குயர் மக்கள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். குயர் மக்கள் தொடர்பான இலக்கியங்கள் வெளிவருவது காலத்தின் தேவையாகும். கலை வடிவங்களினூடாக குயர் மக்கள் சார்ந்த புரிதலை சமூகத்தில் ஏற்படுத்த முடியும். சிலவேளைகளில் குயர் மக்கள் சார்ந்த ஆய்வுகளும் இலக்கியங்களும் சமூகத்தில் ஆரோக்கியமான விழிப்புணர்வையும் மாற்றத்தையும் உருவாக்குவதற்கு மட்டுமல்லாது, குயர் மக்கள் தம்மைப் புரிந்து கொள்வதற்கும் தம்மை அரசியல் ரீதியாக மேம்படுத்திக் கொள்வதற்குமான வாய்ப்பாக அமையும்.

ஊடகங்களின் பண்பாடு மற்றும் மொழி

குயர் மக்களையும் அவர்களுடைய பண்பாட்டையும் பிரதிபலிக்க எவ்வாறான மொழி பயன்படுத்தப்படுகின்றது என்பதும் தமிழ் பேசும் குயர் சமூகங்கள் தங்கள் பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை எப்படி மொழிவழியாக வெளிப்படுத்துகின்றார்கள் என்பதும் முக்கியமானதாகும். தமிழ் மொழியில் குயர் அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடிய எளிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய வார்த்தைப் பிரயோகங்கள் அரிதாகவே உள்ளன. பெரும்பாலும், தமிழ் ஊடகங்களில் குயர் மக்களை அவமதிக்கும் இழிவான சொற்கள் தான் அதிகம் பாவனையில் இருக்கின்றன. ஊடகங்கள் இவ்வாறான மொழியைப் பயன்படுத்தும்போது குயர் மக்கள் பற்றிய சமூகப்பார்வை மேலும் எதிர்மறையாக உருவாக்கப்படுகின்றது.

இலங்கையில் குயர் மக்களை ஊடகங்கள் இன்னும் புறக்கணித்தே வருகின்றன. இலங்கைத் தமிழ் ஊடகங்களில் மொழிப்பயன்பாடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூருணர்வற்ற வகையில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான ஊடகமொழிப் பிரயோகம் குயர் மக்கள் பற்றிய தவறான சித்திரிப்புகளைச் சமூகத்தில் உருவாக்குகின்றன. ஆனாலும் அண்மைக்காலங்களில் குயர் மற்றும் குயர் அல்லாத இளைஞர்கள், கல்வியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் சிலர் வெகுசன ஊடகங்கள் மற்றும் புதிய ஊடகங்கள் மூலமாகக் குறிப்பிடத்தக்க அளவில் பால்நிலை உணர்திறன் மிக்க மொழிப்பயன்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர் எனலாம். ஆனால், இது மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகின்றது. எனவே தமிழில் பாலின அடையாளங்களை வெளிப்படுத்த மொழி அவசியமாகும். பாலின உணர்திறன் உடைய மொழிப்பயன்பாடும் மொழி தொடர்பான புதிய முயற்சிகளும் இன்றைய சூழலில் அத்தியாவசியமானதாகும்.

ஊடகங்களில் நீண்டகாலமாகப் பால்நிலை உணர்திறன் மிக்க மொழிப் பயன்பாடு மற்றும் சித்திரிப்புப் பற்றி மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பால்நிலைச் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனாலும் வலுவான முன்னெடுப்புகளெதுவும் ஊடக உரிமையாளர்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. குயர் மக்களது உரிமைகள் தொடர்பான சட்ட ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பதிலும் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஊடக உள்ளடக்கங்களில் குயர் மக்கள் தொடர்பான சித்திரிப்பில் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ வேண்டும் எனில் அடிப்படைக் கல்வியில் மாற்றம் நிகழவேண்டும். அரச கட்டமைப்பிலும் சமூகக் கட்டமைப்பிலும் பால் மற்றும் பால்நிலை ரீதியிலான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊடகங்களும் தனிநபர்களும் குயர் மக்களைச் சித்திரிப்பதில் ஊடக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.



About the Author

அனுதர்சி கபிலன்

அனுதர்சி கபிலன் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தைத் திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதழியலில் “டிப்ளோமா“ பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரியும் அனுதர்சி முதுமாணிப் பட்டப்படிப்பைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகவியலில் தொடர்கின்றார்.

'இலங்கை அரசியல் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் 2015 இல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நேர்காணல்கள் 2017 இல் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்