மானிடவியலாளர் ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்கள் 1990 ஆம் ஆண்டில் ‘Buddhism Betrayed? Religion, Politics and Violence in Sri Lanka’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின் தலைப்பையே மேலே தமிழில் தந்துள்ளோம். பௌத்த நாடான இலங்கையில் 1970க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வன்முறைக் கிளர்ச்சிகளும், கலகங்களும் ஏற்பட்டன. 1971 இல் ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியை இலங்கை அரசாங்கம் கொடிய முறையில் அடக்கியது. இளைஞர்களது ஆயுதப் போராட்டம் அரச வன்முறையைக் கொண்டு அடக்கப்பட்டது. 1987 – 89 காலத்தில் ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி முன்னரைவிடக் கொடிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியது. நாட்டில் இரத்த ஆறு ஓடியது. இந்த இரு கிளர்ச்சிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில், 1983 இல் கறுப்பு யூலை வன்முறைக் கலகம் (Riots) இடம்பெற்றது. இக்கலகத்தின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு இளைஞர் கிளர்ச்சிகள், ஓர் இனக்கலவரம் ஆகிய மூன்று நிகழ்வுகள் குறுகிய 20 ஆண்டு காலத்தில் நிகழ்ந்தேறின. இந்த உயிரழிவை ஏற்படுத்திய நிகழ்வுகளுக்குப் பின்னணியாக சமயமும் அரசியலும் (Religion and Politics) இருந்துள்ளது. சமயம், அரசியல், வன்முறை என்ற மூன்றிற்குமான இடைத்தொடர்புகளை மானிடவியல் நோக்கில் ஆராயும் நூலைத் தம்பையா அவர்கள் எழுதினார். இந்நூலின் முதலாவது அத்தியாயமான ‘Introduction’ என்ற பகுதியின் முதலாவது பக்கத்தின் தொடக்கப் பந்தி பின்வருமாறு அமைந்துள்ளது.

“Frequently during travels in the United States, colleagues, friends and acquaintances asked the discomfiting question. ‘If Buddhism preaches non-violence: why is there so much political violence in Sri lanka today”

“நான் அமெரிக்கா செல்லும் போது, அங்கு எனது புலமைத்துறைத் தோழர்களும், நண்பர்களும், தெரிந்தவர்களான பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி ஒன்று உள்ளது. இது என்னைச் சங்கடத்தில் ஆழ்த்திய கேள்வி ஆகும். ‘பௌத்த மதம் அகிம்சையைப் போதிக்கும் மதம், இவ்வாறிருக்கும் போது, பௌத்த நாடான இலங்கையில் இன்று அளவுக்கு மிகையான அரசியல் வன்முறை நிலவுவது ஏன்?’ இந்த வினாவுக்கான பதிலாகவே இந்நூல் அமைகிறது என்பதை தம்பையா அவர்கள் நூலின் முதல் பந்தியிலேயே கூறி வாசகர்களை ஆழமான விவாதம் ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறார்.
இந்த வினாவைத் தமது தோழர்களும் நண்பர்களும் பிறரும் கேட்ட சந்தர்ப்பங்களில், தாம் மேற்கு நாட்டவர்களான அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலான போலியான வாதங்களை முன்வைக்கவில்லை என்பதை அவர் குறிப்பிடுகிறார்.
கிறிஸ்தவம் சக மனிதர்களிடம் அன்பு செலுத்து என்று போதிக்கிறது. ஆனால் வட அயர்லாந்தில் கத்தோலிக்கர்களும் புரட்டஸ்தாந்தியர்களும் தம்முள் மோதிக் கொள்கிறார்கள், கொலை புரிகிறார்கள். இது ஏன்? என்று நான் கேட்டிருக்கலாம்.
இதைவிடச் சமயம் வேறு, அரசியல் வேறு, இரண்டிற்கும் தொடர்பு இல்லை. மேற்கத்தைய சமயம் என்றால் என்ன, கிழக்கத்தைய சமயம் என்றால் என்ன, அரசியலில் சமயம் கூறும் அறநெறியின் தாக்கம் பெரிதாக இருப்பதில்லை என்றும் கூறியிருக்கலாம் என்ற பொருள்பட இவ்வாறு கூறுகிறார்.
“காந்தி அகிம்சை வழியை இந்தியர்களுக்குக் காட்டினார். சத்தியாக்கிரகம் என்னும் அறவழி அகிம்சை முறையை நடைமுறையில் பின்பற்றினார். ஆனால், இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது? அங்கு சமய அடிப்படையிலும், இனத்துவ அடிப்படையிலும் மோதல்களும் வன்முறைகளும் இடம்பெறுகின்றனவே என்று திருப்பிக் கேட்டிருக்கலாம்.”
இவ்வாறாக வாதம் புரிவதில் உள்ள தவறுகளை தம்பையா அவர்கள் சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறு கூறும் போது சமயம் சமூகத்தின் மேற்தளம் சார்ந்த விடயம், அதற்கும் அதிகார அரசியலுக்கும் (Realpolitik) சம்மந்தம் குறைவு; அதன் தாக்கம் பெரிதாக இருப்பதில்லை என்ற உட்பொருள் அக்கூற்றில் மறைந்திருக்கும். அப்பதிலில் ஒரு ‘Cynical Implication’ இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.
அடுத்ததாகப் பௌத்தம் குறித்து எழுதிய புலமையாளர்களால் அரசியலும், சமயமும், வன்முறையும் என்னும் விடயம் எவ்வாறு நோக்கப்பட்டது என்பதை தம்பையா அவர்கள் குறிப்பிடுகிறார். அவர்களது ஆய்வுகளில் இருவகை உள்ளது எனவும் குறிப்பிடுகிறார்.
இருவகை ஆய்வுகள்
பௌத்தமும் அரசியலும் குறித்த வரலாற்று நோக்கிலான ஆய்வுகளில் பின்வரும் இருவகைகள் உள்ளன.
- நீண்டகாலத்திற்கு முந்திய கடந்த காலம் பற்றிய ஆய்வுகள் ஒருவகையின. இவ்வாறான கடந்த காலத்தை ‘Deep Past’ (தொல் பழமை) என்று தம்பையா குறிப்பிடுகிறார்.
- இன்னொரு வகையான ஆய்வுகள் அண்மிய கடந்த காலம் பற்றியவை. அண்மிய கடந்த காலம் என்பதை ஆங்கிலத்தில் ‘Recent Past’ எனக் குறிப்பிடுகிறார்.
தம்பையா குறிப்பிடும் இந்த வகைப்பாடு அவரது நோக்குமுறையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. 1970 – 1990 ஆகிய இருபதாண்டுகளில் இலங்கையில் நடைபெற்ற வன்முறைக் கலகத்தையும், 1983 இன வன்முறையையும் விளக்குவதற்குத் ‘தொல்பழமை’ பற்றிய ஆய்வைவிட அண்மிய கடந்தகாலம் (Recent Past) பற்றிய ஆய்வுகள் மிகவும் பயனுடையன எனக்கூறுகிறார். ஆயினும், ‘தொல்பழமையின்’ உரித்துகள் (Legacy) இன்றைய காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மறுப்பதற்கில்லை என்பதையும் தம்பையா தெளிவுபடுத்துகிறார்.
அசோகச் சக்கரவர்த்தியும், துட்டகைமுனுவும்
தொல்பழமை என்பதை ‘செவ்வியல் காலம்’ (Classical Past) என்ற தொடராலும் குறிப்பிடும் தம்பையா பேரரசன் அசோகன், மகாவம்சம் என்னும் வம்ச வரலாற்றுக் காவியம் குறிப்பிடும் துட்டகைமுனு என்னும் மாவீரன் ஆகிய இரு ஆளுமைகளின் வரலாறுகள் பற்றிக் குறிப்பிடுகிறார். நல் ஆளுகை (Governance), அரசாட்சியும் வன்முறையும், போர், அறநெறியின் பாதுகாவலனான அரசனின் கடமைகள் ஆகிய விடயங்களைப் பற்றிய எமது புரிதலுக்கு இந்த ஆளுமைமிக்க நாயகர்களின் வரலாறு பயன் உடையது என அவர் குறிப்பிடுகிறார். இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளில் மட்டுமல்லாது பர்மா (மியன்மார்), தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் பௌத்த சமயமரபு சார்ந்த அரசுக் கோட்பாடு அரசாட்சியை நெறிப்படுத்தும் தத்துவமாக இருந்தது. குறிப்பாக ‘சக்கரவர்த்தி’, ‘தர்மராஜா’ என்னும் இரு கருத்தாக்கங்கள் முக்கியமானவை. ‘சக்கரவர்த்தி’ என்பது தனது ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும் உலகம் முழுதாளும் அரசன் (Wheel Rolling Universal King) என்ற கருத்துடையது. ‘தர்மராஜா’ என்பது தர்மச் சக்கரத்தைச் செலுத்தும் தர்மத்தின் காவலனான அரசன் (Righteous King) என்ற கருத்துடையது. இவ்வகை ஆய்வுகள் பல அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளன என்பதை நூலின் அடிக்குறிப்பு ஒன்றில் (பக். 1 – 2) தம்பையா அவர்கள் குறிப்பிடுகிறார். இந்நூல்கள் சிலவற்றின் ஆசிரியர்களும் நூல்களும் வருமாறு,
I) எஸ்.ஜே. தம்பையா:
‘Buddhist Conception of the Universal King in South and Southeast Asia’ – இந்நூல் 1957 ஆம் ஆண்டு மலேசிய பல்கலைக்கழகப் பிரசுரமாக வெளிவந்தது.
II) John Strong:
‘The Legend King of Asoka: The Study and Translation of the Ashokavadana’ – இந்நூல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வெளியீடாக 1983 இல் வெளியானது.
III) கணநாத் ஒபயசேகர:
‘A Meditation on Conscience’ – இந்நூல் கொழும்பு SSA நிறுவனத்தால் 1988 இல் வெளியிடப்பட்டது.
IV) R.A.L.H குணவர்த்தன:
‘The People of the Lion: Sinhala Consciousness in History and Historiography’ – இந்த ஆய்வுக் கட்டுரை SSA நிறுவனம் 1985 இல் வெளியிட்ட Ethnicity and Social Change என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தொல்பழமைக் காலம் பற்றிய மேற்படி ஆய்வுகள், பௌத்த தர்மத்திற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பையும், பௌத்த அரசுகள் (Buddhist States), சமயம், இனத்துவம் சார்ந்த பிரச்சினைகளை எவ்வாறு கையாண்டன என்பதையும் ஆய்வு செய்வனவாக அமைந்தன. தம்பையா அவர்கள் இவ்விடயம் குறித்து வேறு இரு நூல்களை எழுதியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். அந்நூல்களில் ஒன்றின் பெயர்: ‘The Buddhist Conception of Universal King’
இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துவரும் பின்புலத்தில் ஒபயசேகர, குணவர்த்தன, தம்பையா ஆகியோர் கடந்தகால வரலாற்றில் இலங்கையின் சமகாலப் பிரச்சினைகளுக்கான விளக்கம் உள்ளதா என்ற தேடலில் ஈடுபட்டனர் என்பதை மேற்படி ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
புரூஸ் கப்பெரரின் நூல்
தொல்பழமை அல்லது செவ்வியல் காலம் பற்றிய ஆய்வுகள் பற்றிக் குறிப்பிட்ட பின்னர் தம்பையா அவர்கள் புரூஸ் கப்பெரர் (Bruce Kapferer) என்னும் மானிடவியலாளர் எழுதிய ‘Legends of People, Myths of State’ என்ற தலைப்பிலான ஆய்வு நூலைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளைத் தருகிறார் (பக். 2). இந்நூல் Washington D.C. Smithsonian Institution Press வெளியீடாக 1988 ஆம் ஆண்டு பிரசுரமானது. கப்பெரரின் நூல் பற்றி தம்பையா கூறியிருக்கும் தகவல்களை எளிமைப்படுத்திய நடையில் கீழே தந்துள்ளோம்.
கப்பெரரின் நூல், சிங்கள வம்சவரலாற்று மரபிலும் (Sinhalese Chronicle Tradition), நாட்டார் மரபான பேயோட்டுச் சடங்குகளிலும் (Exorcism Rituals) பொதிந்துள்ள கருத்துகள் தற்காலத்தின் சிங்கள தேசியவாதத்தையும் இனத்துவப் பிரச்சினைகளையும் நெறிப்படுத்தும் சக்திமிக்கனவாய் உள்ளன என்பதை எடுத்துக்காட்டும் நூலாகும். இந்நூல் பெளத்த சிங்கள மரபின் பிரபஞ்சவியல் சமூகத்தை படித்தரம் (Hierarchy) கொண்ட அமைப்பாகக் காண்கிறது. இப் படித்தர அமைப்புக்குள்ளே உள்ளீர்த்தல் (Assimilation), வெளியகற்றல் (Exclusion), விளிம்பு நிலைக்குத் தள்ளுதல் (Expulsion) ஆகிய செயல்முறைகள் செயற்பாட்டில் உள்ளன.
இச்செயன்முறைகள் சிங்களச் சமூகத்தில் பல்வேறு குழுக்களையும் ஒன்றிணைக்கும் (Integration) கருத்தியலை உடையவை. நாட்டார் மரபின் பேயோட்டுதல், தீய பிசாசுகள் (Demonic) என்னும் அழிவுச்சக்திகளைப் பற்றியது. அழிவை உண்டாக்கும் வன்முறை (Destructive Violence) என்னும் அம்சம் இதில் உள்ளடங்கியிருக்கிறது. சமூகத்தைக் கூறுபடுத்தும் அழிவுச்சக்திகளான தீய பிசாசுகளை வெளியேற்றுவதால் சமூகம் பாதுகாக்கப்படுகிறது; சமூகத்தில் புத்துயிர்ப்பு உண்டாகிறது.
சிங்கள மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள படித்தர அமைப்பு (Hierarchy), தீய பிசாசுகள் (Demonic) ஆகிய இரண்டும் சமகால இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த வன்முறைகளில் வெளிப்பட்டன என கப்பெரர் குறிப்பிடுகிறார்.
கப்பெரரின் கருத்தின்படி இன வன்முறைக் கலகங்கள் (Riots) இருந்துவரும் படித்தர அமைப்பைக் கலைத்துப் புதிய படித்தர அமைப்பை உருவாக்குகின்றன. அவர் கலகங்களின் வன்முறைகள் சக்திமிக்க மீள் படித்தர அமைப்புச் சாதனம் எனக் கருதுகிறார். இதனை ஆங்கிலத்தில் ‘The Violence of the Riots as an Act of Powerful Re-Hierarchization’ எனக் குறிப்பிடுகிறார். சிங்களவர்கள் தமிழர்களின் பிரிவினைவாத இயக்கத்தை தீய பிசாசுகளின் பிளவுச்செயல் (Demonic Fragmentation) ஆகப் பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். இவை யாவும் சிங்களவர் மனதில் ஆழப்பதிந்துள்ள சக்திமிக்க பிரபஞ்சவியலின் (Deep Seated Powerful Cosmology) இயக்கத்தை வெளிப்படுத்துகிறது எனலாம். கப்பெரரின் நோக்குமுறை, பௌத்தம், அரசியல், வன்முறை என்ற மூன்றிற்கும் இடையிலான பிணைப்புகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அண்மிய வரலாறு
கடந்து போன தொல்பழமையை விட அண்மிய வரலாறும் அண்மிய கடந்தகாலமும் (Recent Past) இலங்கையின் சமகால வன்முறைக் கலகங்களை விளங்கிக் கொள்வதற்குப் பெரிதும் உதவுவன என தம்பையா குறிப்பிடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டிலும் பௌத்தம் ஒரு சமயம் என்ற முறையில் இலங்கையில் எவ்வாறு சிங்களவர்களால் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற இனக்கலகங்களிற்கும் வன்முறைகளுக்குமான காரணங்கள் புலனாகும். பௌத்தம் கூட்டு வன்முறைகளுக்குக் (Collective Violence) காரணமாக இருந்ததென்றால், பௌத்தம் முந்திய காலத்தைவிட என்ன வகையில் வேறுபட்டதாயிருந்தது? 1890 – 1990 காலத்தில் பௌத்தம் ஒரே மாதிரியானதாக இருந்ததா அல்லது அதன் இயல்புகள் மாறிக் கொண்டிருந்தனவா? (How are we to describe the changing or changed shape of Buddhism itself as a lived reality? – பக். 2)
மேற்படி வினாக்களுக்கான விடையைக் காண்பதற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் (Buddhist Revivalism) பற்றி ஆராய்தல் வேண்டும். தம்பையா அவர்களின் ‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ நூல் இலங்கையில் பௌத்தத்தின் செவ்வியல் கடந்தகாலம், அண்மிய கடந்தகாலம் என்ற இரண்டினையும் வரலாற்று நோக்கில் ஆராய்ந்து, நிகழ்காலத்தின் வன்முறைக் கலகங்களிற்கும், இனத்துவ வன்முறை மோதல்களுக்கும் பின்னணியில் பௌத்த பிக்குகளும், பௌத்த சமயிகளும் செயற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
நூலின் அமைப்பு
இந்நூலில் 13 அத்தியாயங்கள் உள்ளன. முதலாவது அத்தியாயம் ‘Introduction: The Question’ என்ற தலைப்பில் உள்ள நான்கு பக்கங்களில் அமைந்துள்ள சிறிய கட்டுரையாகும். அம்முன்னுரை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பிரதான வினா (The Question) பற்றியது. அம்முன்னுரை பௌத்தம் கூறிய அகிம்சையைப் போதிக்கும் இலங்கையில் ஏன் இந்த மிகையான வன்முறை? என்ற வினாவை முன்வைக்கிறது. இந்த வினாவுடன் ஆரம்பிக்கும் இக்கட்டுரையில், இவ்வினாவிற்குத் தாம் எவ்விதம் இந்நூலில் விடையளித்துள்ளார், இலங்கையின் பிக்குகளும் புத்த சமயிகளும் (Monks and Laity) ஏன் வன்முறைக் கிளர்ச்சிகளுக்கும், ஓர் இனக்குழுமத்திற்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களுக்கும், உள்நாட்டுப் போருக்கும் காரணமாக இருந்தார்கள் போன்றவற்றைத் தம்பையா வரலாற்று நோக்கில் விவரித்துள்ளார். இந்நூல் இலங்கையின் வன்முறைகள் சமயத்தோடும் அரசியலோடும் பிணைப்புற்றுள்ளதையும் இம்மூன்றிற்கும் உள்ள பிணைப்புகளையும் (Linkages) ஆராயும் நூலாகும். பௌத்ததிற்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது; இழைக்கப்பட்டு வருகிறது என்பதால் பௌத்த பிக்குகள் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக, குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். 1936 தேர்தலுக்கு முன்னர் பிக்குகளின் சங்க அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகளையும், பௌத்த சமய அறிவாளிகள் சிலரையும் (G.P. மலலசேகர, P.De.S. குலரத்தின, L.H. மெத்தானந்த) கொண்ட விசாரணைக் குழுவொன்று விசாரணையை நடத்தி ‘The Betrayal of Buddhism’ என்ற பெயரில் அறிக்கையொன்றை வெளியிட்டது. இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பௌத்தர்களை உணர்ச்சிவசப்படுத்தித் தூண்டியதன் விளைவே ‘1956 சமூகப் புரட்சியும்’ அதற்குப் பிந்திய வரலாறும் ஆகும். தம்பையா அவர்கள் இந்த அறிக்கையின் பெயருடன் வினாக்குறி ஒன்றையும் சேர்த்து தமது நூலுக்குத் தலைப்பிட்டார். நூலின் உபதலைப்பாக ‘Religion Politics and Violence in Sri Lanka’ என்ற தொடர் அமைந்துள்ளது. இந்த நூலின் உள்ளடக்கம் குறித்து வாசகர் அறிந்துகொள்வதற்கு உதவும் வகையில் முன்னுரை தவிர்ந்த ஏனைய 12 அத்தியாயங்களினதும் தலைப்புகளைக் கீழே தந்துள்ளோம். ஒவ்வொரு அத்தியாயத்தினதும் உள்ளடக்கம் பற்றிக் குறிப்புரைப்பதாயின் கட்டுரை மிக நீண்டதாக அமைந்துவிடும். ஆதலால் குறிப்புரைகளைத் தவிர்த்துள்ளோம்.
அத். 2: பௌத்த மறுமலர்ச்சிக் காலம் (1860 – 1915).
அத். 3: அரசியலும் யாப்புச் சீர்திருத்தங்களும் (1915 – 1946).
அத். 4: தீவிரவாதப் பிக்குகளும், பிக்குகளின் அரசியல் பிரவேசத்தை நியாயப்படுத்தலும் (Radical Monks and the Legitimation of Monks’ Participation in Politics).
அத். 5: பௌத்தத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் (The Betrayal of Buddhism) – குறை நீக்கமும் புத்தெழுச்சியும்.
அத். 6: பௌத்தத்திற்குத் துரோகம் – விசாரணைக் குழுவின் அறிக்கை.
அத். 7: 1956 ஆம் ஆண்டின் சமூகப் புரட்சியும் அதன் விளைவுகளும்.
அத். 8: பௌத்தத்தின் புத்துயிர்ப்பும் கல்வித்துறை மாற்றங்களும் – 1960களும் 1970களும்.
அத். 9: 1970 – 1990 இருபதாண்டுக் காலம்: ஆழ ஊடுருவும் நெருக்கடி.
அத். 10: ‘மௌபிம சுரக்கீமே வியாபாரய’ – தாய் நாட்டைக் காக்கும் இயக்கம் (MSV).
அத். 11: பிக்குகளும் வன்முறையும் – நேருக்கு நேர் (Monks and Violence: Face to Face).
அத். 12: பெளத்த தேசியவாதத்தினதும் பௌத்த ஜனநாயகத்தினதும் மட்டுப்பாடுகளும் வரையறைகளும் (The Parameters of Buddhist Nationalism and Buddhist Democracy).
அத். 13: முடிவுரை – சிங்கள அடையாளம் – கடந்தகாலம் கையளித்த உரித்து (Epilogue – Sinhalese Identity – The Legacy of the Past).
இந்நூலுக்கு கலாநிதி லால் ஜயவர்த்தன அணிந்துரையொன்றினை வழங்கியுள்ளார். ‘Foreword’ என்ற தலைப்பில் அது முற்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. உசாத்துணைப்பட்டியல், நூலடைவு (Index) என்பனவும் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன.



