ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன
குமாரி ஜயவர்த்தன அவர்கள் எழுதிய ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூல் இலங்கையில் காலனிய காலத்து முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றியும், முதலாளித்துவ வகுப்பின் தோற்றத்தின் விளைவாக ஏற்பட்ட சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள் பற்றியும் ஆராயும் நூலாகும். இந்நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங்கையில் காலனித்துவ முதலாளித்துவ வகுப்பின் தோற்றம்’ என்ற தலைப்பில் எம்மால் மொழிபெயர்க்கப்பட்டது. இம் மொழிபெயர்ப்பை குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை, 2015 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்நூலின் இயல் – 15 ‘சமய மறுமலர்ச்சியும் முதலாளித்துவமும்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது (பக். 272 – 295).

இக்கட்டுரையின் பக்கம் 282 முதல் 288 வரையான 6 பக்கங்களில் ‘அநகாரிக தர்மபாலவின் வகிபாகம்’ என்னும் உபதலைப்பின் கீழ், ஆளுமைமிக்க சமயத் தலைவரான அநகாரிக தர்மபாலவின் வரலாற்று வகிபாகத்தைப் பற்றி குமாரி ஜயவர்த்தன அவர்கள் கூறியிருக்கும் கருத்துகள் இங்கே தரப்பட்டுள்ளன.
அநகாரிக தர்மபாலவின் வகிபாகம்
வர்த்தகர்கள், காரீயச் சுரங்கங்களின் உடைமையாளர்கள், குத்தகைக்காரர்கள் பெருந்தோட்ட உடமையாளர்கள் போன்ற முதலாளிகளைவிட இன்னொரு பிரிவினரான கைத்தொழில் முதலாளிகளும் பௌத்த இயக்கத்திற்கு ஆதரவு வழங்கினர். கைத்தொழில் துறையில் சிறு கைத்தொழில்கள் பல ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இம்முதலாளிகளில் பலர் பௌத்த சமயப் பற்றாளர்களாக விளங்கினர். இருப்பினும் பெரும்பாலானோர் பிரித்தானிய அரசின் விசுவாசிகளாக இருந்தனர். இவர்களில் சிலர் தேசியவாதத்தைத் தழுவிக் கொண்டனர். தேசியவாதத்தின் தீவிர ஆதரவாளர்களுள் மிகவும் பிரபலமானவர்களாக அநகாரிக தர்மபாலவும் (1864 – 1933) அவரின் சகோதரர்களும் விளங்கினர். இவர்களது தந்தையார் ஹேவவித்தாரண டொன் கறோலிஸ் தளபாட உற்பத்தியாளராகவும் அதன் சில்லறை வர்த்தகராகவும் விளங்கினார். இவர்களது தாயார் மல்லிகா ஹேவவித்தாரண ஆவார். தந்தை – தாய் இருவரும், பௌத்த தியோசொபிக்கல் சங்கம், பௌத்த கல்வி இயக்கம், மதுவிலக்கு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஒல்கொட்டின் பிரசார நடவடிக்கைகளுக்கு டொன் கறோலிஸ் நிதி உதவி வழங்கினார். பௌத்தப் பிக்குகளிற்குப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனமாகிய வித்தியோதயப் பிரிவேனவின் ஆரம்ப கர்த்தாக்களில் டொன் கறோலிசும் ஒருவராவார். தாயார் மல்லிகா ஹேவவித்தாரண பௌத்த அறக்கொடைகள் பலவற்றிற்கு நிதி உதவினார். பௌத்த பெண்களிற்கான முதியோர் இல்லம் இவற்றுள் ஒன்றாகும். அநகாரிக தர்மபால பௌத்த தியோசோபிக்கல் சங்கத்தில் 1881 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டார். இவர் பின்னர் மகாபோதி சங்கம் என்ற அமைப்பைக் கல்கத்தாவிலும் கொழும்பிலும் நிறுவினார். இச்சங்கம் பௌத்த சமய முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஹவாயைச் சேர்ந்த மேரி போஸ்டர் (MARY FOSTER) என்னும் செல்வச் சீமாட்டியான அமெரிக்க தியோசோபிஸ்ட் ஒருவர் மகாபோதி சங்கத்திற்குப் பெருந்தொகை நிதியை உதவினார் (ஜயவர்த்தன, 1995: 164 – 7). பிரித்தானிய அரசு அநகாரிக தர்மபாலவை இராஜ துரோக குற்றவாளி என்று சந்தேகித்து வந்தது. அவர் மதுவிலக்கு இயக்கத்தையும், 1921 ஆம் ஆண்டின் ரெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தையும் பகிரங்கமாக ஆதரித்ததால் இச்சந்தேகம் ஏற்பட்டது (ஜயவர்த்தன, 1972:156). எட்மண்ட் ஹேவவித்தாரணவும், டாக்டர் சி.ஏ. ஹேவவித்தாரணவும் மதுவிலக்கு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தனர். எட்மண்ட் ஹேவவித்தாரண 1915 பௌத்த – முஸ்லிம் கலவரத்தின் போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார்.

அரசியல், பொருளாதார விடயங்களில் தர்மபாலவும் அவரது குடும்பத்தினரும் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்தனர். ஹேவவித்தாரண குடும்பத்தினரிடம் முயற்சியாண்மைத் திறன் இருந்தது. அக்குடும்பத்தின் வரலாற்றை எடுத்து நோக்கினால் தர்மபாலவின் தாய் வழிப் பாட்டன் மர வியாபாரத்தில் சிறந்து விளங்கினார் என்பது தெரிய வரும். தர்மபாலவின் தந்தை பெரியதொரு சில்லறை விற்பனை நிலையத்தை நடத்திய வர்த்தகராவார். மரம், தளபாடம் என்பனவற்றின் உற்பத்தி முயற்சிகளிலும் அவர் முதலிட்டிருந்தார். இவ்வாறான உற்பத்தி முயற்சிகள், பெருந்தோட்ட விவசாயம், குத்தகை வியாபாரம் போன்று பிரித்தானிய காலனிய ஆட்சியாளர்களின் தயவில் நடத்தப்படுவன அல்ல. அவர்களது சலுகைகளும் பாதுகாப்பும் இல்லாமல் சுதந்திரமாக இயங்குவன. இருப்பினும் இவை பேரளவு உற்பத்தித் தொழில்களாகவும் இருக்கவில்லை. இக்காரணங்களினால் இத்தொழில்களில் ஈடுபட்டோர் அந்நிய ஆட்சிக்குப் பகிரங்க அறைகூவல் விடுக்கும் அளவி்ற்குச் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் உடையவர்களாய் இருந்தனர்.
கைத்தொழில் உற்பத்தி வர்த்தகர்களிடம் பண்பாட்டு, அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் அளவிற்கு விழிப்புணர்வு இருந்தது. மதுவிலக்கு இயக்கம், பௌத்த கல்வி இயக்கம், அரசியல் சீர்திருத்தம் ஆகியவற்றில் இவர்கள் அக்கறையோடு உழைத்தனர். புதிய முதலாளி வர்க்கத்தின் பௌத்த சமயப் பிரிவினர் இவ்வியக்கங்களிற்கு நிதி உதவி வழங்கினர். டொன் கறோலிஸ் குடும்பம் இவ்விடயத்தில் தீவிர பங்கேற்றது. இம்முதலாளி வர்க்கம் தனது இருப்பை வலியுறுத்த வேண்டும் என்பதைத் தன் எழுத்துகள் மூலம் தர்மபால எடுத்துக்கூறினார். நாட்டில் கைத்தொழில்களும் தொழில்நுட்பமும் வளராது இருப்பதையும், முதலாளி வகுப்பின் பலவீனங்களையும் இவர் கவலையோடு சுட்டிக்காட்டினார். முதலாளி வகுப்பினரின் அடிமை மனோபாவத்தையும் இவர் கண்டித்தார். காலியில் பௌத்தர்கள் நடத்திய ஊர்வலத்தை அரசு தடை செய்ததை எதிர்த்து, 1892 இல் தர்மபால எழுதிய போது ‘கீழ்நிலை உத்தியோகத்தர்களின் தகாத தலையீடு’ எனவும், ‘அப்பாவிகளான சிங்கள பௌத்தர்கள்’ துன்புறுத்தப்பட்டனர் என்றும் குறிப்பிட்டார் (குருகே, 1965: 532 மற்றும் 526). அப்போது அவர் பிரித்தானியக் காலனி ஆட்சியாளரின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியதோடு, சிங்கள மக்களிடம் எதிர்ப்பியக்கம் எதுவும் தோன்றவில்லையே என்றும் கண்டனம் செய்தார்.
“சட்ட சபையில் உள்ளவர்கள் அனுதாபம் கொஞ்சமும் இல்லாதவர்கள்; சுயநலம் மிக்கவர்கள்; ஆக்கிரமிப்புக் குணம் கொண்டவர்கள். அவர்கள் சில வருடங்கள் சட்டசபையில் பதவி வகித்தபின் கொழுத்த ஓய்வூதியத்துடன் வீட்டில் ஓய்வு எடுப்பவர்கள். இத்தகையவர்களைக் கொண்ட சட்ட சபையில் கொண்டுவரப்படும் ஒவ்வொரு அருவருக்கத்தக்க சட்டத்தையும் மௌனமாக ஏற்று அடிபணிந்து போவது சிங்களவர் செய்யும் பெருந்தவறு (மேலது: 525).”
தர்மபால சுதேச முதலாளி வகுப்பினை தொடர்ந்து கண்டனம் செய்து வந்தார். “நவீன காலத்துக் கலப்பினம் ஒன்று; மேலோட்டமான கல்வியும், அரைகுறையாக ஆங்கிலமயமாதலும் கொண்ட சுயநலமிக்க, தேசப்பற்றற்ற குழுமம்” என்றும் “பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்ற சிங்களவர்களில் இலங்கை மக்களுக்கு நன்மை செய்தவர்கள் என்று கூறத்தக்கவர் ஒருவர் கூட இல்லை. இவர்களிடம் பிறர்நலன் விழையும் சிந்தனை மங்கிப்போய்விட்டது. இராணி மாளிகையில் நடனத்தில் பங்கு கொள்ளலும், ஆளுநரின் விருந்துக்குப் போதலும் இவர்களுக்கு சுவர்க்க போகம் போன்றவை (மேலது: 524-25)” என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை முதலாளி வர்க்கத்தின் பழமைப் போக்குடைய பிரிவினரை தர்மபால தொடர்ந்து விமர்சித்ததோடு அவர்கள் தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையையும், தேசிய உணர்வு அற்றவர்களாய் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். ‘சிலோன் நேஷன்’ பத்திரிகையில் 1921 ஆம் ஆண்டு அவர் பின்வருமாறு எழுதினார்.
“நாம் வறியதொரு இனம். பணம் படைத்த சிங்களவர் சிலரே. அவர்கள் அறிவிலிகளாய் உள்ளனர். ஒரு தேசப்பற்றாளனின் கடமை தனது மக்களின் மகிழ்ச்சிக்காக உழைப்பது தான் என்பதை உணரும் அளவிற்கு அவர்களுக்கு அறிவு இல்லை. நியமனம் செய்யப்பட்ட இலங்கைப் பிரதிநிதிகள் ஆட்சியாளர் பக்கம் சாய்ந்து விடுகின்றனர். இந்நாட்டின் நிரந்தரக் குடிகளின் நலன்கள் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவரின் பொறுப்பில் உள்ளது (மேலது: 534-35).”
“நாட்டில் தொழில்நுட்பக் கல்லூரிகள் எவையும் இல்லை; கைத்தொழில் சாலைகளும் இல்லை; பொறியியல் கல்லூரியும் இல்லை; புடவைக் கைத்தொழில் பற்றிக் கற்பிக்கும் நெசவுத் தொழில் கல்லூரிகளும் இல்லை” என்று 1909 ஆம் ஆண்டில் தர்மபால எழுதினார் (மேலது: 532). நவீனமயமாகிக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கப் பிரிவினரின் குரலை இக்கூற்றில் கேட்க முடிகிறது. இலங்கையின் பொருளாதார முறைமையை அடிக்கடி கடுமையாக விமர்சித்தும் எழுதி வந்தார். இந்நாடு இறக்குமதியில் தங்கியிருப்பதையும் காலனியச் சுரண்டல் என்னும் யதார்த்த நிலையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பிரித்தானியப் பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள், 900,000 ஏக்கர் தேயிலை, றப்பர் தோட்டங்களைத் தமது உடைமையாக வைத்திருக்கிறார்கள். இவற்றில் இருந்து கிடைக்கும் லாபத்தை அவர்கள் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். இலங்கையரின் பிரதான உணவாகிய அரிசி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குண்டூசி, தையல் ஊசி, மை, காகிதம், கண்ணாடிப் பொருட்கள், மட்பாண்டம், இரும்புப் பொருள், உடைகள், சப்பாத்து, தொப்பி, யந்திரங்கள், துணி வகை, குடை, தளபாடம் போன்ற யாவும் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன (மேலது: 535).”
‘இலங்கையின் இளைஞர்களுக்கு’ என்ற தலைப்பில் ஒரு விண்ணப்பத்தை 1922 ஆம் ஆண்டில் தர்மபால வெளியிட்டார். ‘எங்கள் நாட்டுப் பணக்கார நில உடைமையாளர்கள், காரீயச்சுரங்க முதலாளிகள், றப்பர், தென்னந்தோட்ட உடைமையாளர்கள் ஒப்பீட்டளவில் சிறிய தொகையினரேயாயினும் எழுச்சி பெறும் புதிய தலைமுறையை உயர்த்திவிடுவதற்கு எவ்வளவோ செய்யலாம்’ என்ற நம்பிக்கையை இவ்விண்ணப்பத்தில் தெரிவித்தார். சமயம், நாட்டுப்பற்று ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கொண்ட இவ்விண்ணப்பம், இந்தியா, அயர்லாந்து, சீனா ஆகிய நாடுகளின் தேசிய இயக்கங்களின் பாதையைப் பின்பற்றும்படி இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தது. தன்னம்பிக்கையையும், சுதந்திர உணர்வையும் வளர்த்துக்கொள்ளும் படியும் பிரித்தானியா, யப்பான், அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை கற்றுக்கொள்ளும் படியும் இளைஞர்களுக்கு இவ்விண்ணப்பம் அழைப்பு விடுத்தது.
“நாங்கள் சுயகால்களில் நிற்கப் பழகிக்கொள்ள வேண்டும். அந்நியர்களில் தங்கியிருக்கக்கூடாது. எங்கள் நாட்டுத் தொழில்களை மீளக்கட்டியெழுப்பி நமது மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதற்குப் பதிலாக தூரதேசங்களான ஆஸ்திரியாவுக்கும், பெல்ஜியத்திற்கும் கைத்தொழில் பொருள் வழங்கலுக்காகப் பணத்தை அனுப்புவது முறையற்றது. தேசப்பற்றால் எழும் சுதந்திர உணர்வை நாம் இழந்துவிட்டோம். நாம் பிறரிடம் கையேந்தும் நிலையில் உள்ளோம் (மேலது: 511-12).”
தர்மபாலவின் கூற்றில் தொடக்கநிலைத் தேசியவாதத்தைக் காண்கிறோம். ஆயினும் இத் தேசியவாதம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பைக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவைப் போன்று சுயாட்சிக் கோரிக்கையை முன்வைக்கும் தேசிய வாதம் அன்று. இலங்கையின் முதலாளிகளுள் தீவிரவாதப் பிரிவினர் தமது தேசப்பற்றினைச் சமய, பண்பாட்டு வடிவங்களில் வெளிப்படுத்தினர். குறிப்பாக பௌத்த மறுமலர்ச்சி, சிங்கள அடையாளத்துவம் என்பனவற்றை இத் தேசியவாதம் அழுத்தியது. இவ்வியக்கத்தின் தலைவர்கள் 20 ஆம் நூற்றாண்டில் எழுந்த எதிர்ப்பியக்கங்கள் பலவற்றிற்குத் தலைமை தாங்கினர். மதுவிலக்கு இயக்கம், தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் என்பனவும் இவ்வெதிர்ப்பியக்கங்களில் அடங்குவன (ஜயவர்த்தன, 1972).
இலங்கையில் முன்னோக்கிய பார்வையுள்ள ‘தேசிய முதலாளித்துவ வகுப்பு’ தோன்றவில்லையாயினும், பௌத்த சமூகத்தினரின் வர்த்தகர்களில் பலர் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருந்தனர். இவர்களிடம் தேசிய முதலாளித்துவத்தின் வகிபங்கைப் பெறும் உள்ளாற்றல் இருந்துள்ளது. இருப்பினும் இது வளர்ச்சி பெறவில்லை. ஒரு பக்கத்தில் பிரித்தானிய முதலாளித்துவம், சுதேசிய முதலாளிகளுக்கு வர்த்தகத்திற்கான கடன் வசதிகளை மறுத்தும் வேறுவகைகளிலும் நெருக்குதலைக் கொடுத்தது. இன்னொரு புறத்தில் இந்திய வர்த்தக மூலதனம், ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சுதேச முதலாளிகளின் முன்னேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருந்தது. இதனால் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் சுதேச முதலாளிகள் முன்னேறுவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறுபான்மையினத்தவர்களுடனான சிங்களவர்களின் மனப்பாங்கிலும், நடத்தையிலும் குரோத உணர்வு வெளிப்பட்டதற்குரிய காரணம் இதுவேயாகும் என்பதில் சந்தேகமில்லை. சிங்கள பௌத்தர்களிடம் ‘இம்மண்ணின் மைந்தர்கள்’ என்ற நோக்கிலான பௌத்த சிங்கள உணர்வுநிலை தீவிரமாக வெளிப்படலாயிற்று. 1880களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலகத்துடன் இக்குரோத உணர்வு வெளிப்படலாயிற்று. 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் இவ்வுணர்வு ‘சிங்களவர் அல்லாத வர்த்தகர்கள்’ மீது திரும்பியது. குறிப்பாக இந்தியர்கள் மீதும், உள்ளூர் முஸ்லிம்கள் மீதும் இக்குரோத உணர்வு வளர்ச்சி பெற்றது. 1915 இல் சிங்கள பௌத்த வர்த்தக முதலாளிகள், குட்டி முதலாளிகள் பிரிவினரால் தூண்டப்பட்ட இந்த உணர்வு பௌத்தர் – முஸ்லிம்கள் கலவரமாக வெடித்தது (ஜயவர்த்தன, 1972 மற்றும் 1985).
சிங்கள பௌத்த முதலாளித்துவப் பிரிவினரிடையே வளர்ச்சி பெற்ற பண்பாட்டுத் தேசியவாதம் 1915 கலவரத்தின் போது காலனிய அரசின் அடக்குமுறையின் மூலம் கட்டுப்படுத்தப்படும் நிலை தோன்றியது. அக்காலத்தில் சிங்கள முதலாளிகள் இன்னல்களுக்கு உள்ளாகினர். இவ்வகுப்பின் முக்கியமான பௌத்தத் தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகையவர்களையே எஸ்.சி. ஒபயசேகரா ‘அநாமதேயங்கள்’ என்றும், முஸ்லிம்களுக்கு எதிராகச் சிங்களவர்களைத் தூண்டிவிட்டு தாம் ‘அறியப்பட்டோராக’ மாறுவதற்கு சூழ்ச்சி செய்கிறார்களென்றும் குறிப்பிட்டார். சிறை சென்ற சிங்களத் தலைவர்களில் ஆர்தர் டயஸ், ஹரி டயஸ், றிச்சார்ட் சல்காடோ, டாக்டர் டபிள்யூ.ஏ.டி. சில்வா ஆகியோர் சாராய வர்த்தகத்துடன் தொடர்புடைய கராவ சாதிக் குடும்பங்களைச் சேர்ந்தோராவர். டி.சி சேனநாயக்க, டி.எஸ். சேனநாயக்க, எப்.ஆர். சேனநாயக்க என்ற மூன்று சகோதரர்களும் சிறை சென்றனர். நிலம், காரீயச் சுரங்கங்கள், சாராயக் குத்தகை என்பனவற்றில் இம்மூவரதும் தந்தையார் கட்டியெழுப்பிய பொருளாதாரத்தளத்தில் இவர்கள் நிமிர்ந்து நின்றனர். இன்னொரு தலைவரான டி.பி. ஜயதிலகவின் தந்தையாரும் கூலிகளை ஒப்பந்தத்திற்கு வழங்கும் வியாபாரத்தில் ஈடுபட்டார். இவ்விதமாகச் சிறை சென்ற தலைவர்கள் சுதேச முதலாளித்துவ நலன்களுடன் தொடர்புபட்டவர்களாய் இருந்தனர். இக்காலத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு உள்ளான வேறு சிலரும் இருந்தனர். இவர்களுள் ஏ.ஈ. குணசிங்க என்ற தீவிரவாதக் கிளர்ச்சியாளரும், அநகாரிக தர்மபாலவும் அடங்குவர். அநகாரிக தர்மபாலவிற்கு 1920 வரை நாடு திரும்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. வர்த்தகத்துறையில் முன்னணியில் திகழ்ந்த சிங்களக் குடும்பங்களான பெர்னாண்டோ, விஜயசேகர, பெட்ரிஸ், ஹேவவித்தாரண, மிராண்டோ ஆகியவற்றைச் சேர்ந்தோர் சிலர் கொலையுண்டனர். வேறு சிலர் சிறைவாசத்தின் போது மரணத்தைத் தழுவினர்.
சிங்கள – பௌத்த இயக்கத்தின் கருத்தியலை எடுத்துக்கூறியவர்கள், சிங்களவர்கள் ‘ஆரிய இனத்தவர்’ என்ற பொய்ப் புனைவையும் பரப்பினர். சிங்களவர்களே இந்த நாட்டின் உண்மையான ஆதிக்குடிகள் என்றும், சிறுபான்மையினர் யாவரும் ‘அந்நியர்கள்’ என்றும் இவர்கள் வாதிட்டனர். சிங்கள – பௌத்த இயக்கத்தின் இக்கருத்தியலின் விளைவாக சிறும்பான்மை மக்களிடம் சமய உணர்வும், இனத்துவ அடையாள உணர்வும் உருவாகத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் பொருளாதார மாற்றங்கள் சிறுபான்மையினரிடம் இவ்வுணர்வுகள் வளர்வதற்கான அடித்தளத்தை இட்டிருந்தது. சிறுபான்மையினர் தமது இனத்துவ அடையாளத்தை வலியுறுத்தத் தொடங்கியதும், இலங்கையின் அரசியலிலும் சமூகத்திலும் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.



