ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட
தாராண்மை மறுப்பு அரசு
இலங்கையில் பின்காலனித்துவ அரசு ஒன்று தாபிக்கப்பட்டு 64 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த அரசு பயணித்த பாதையினையும், அதன் பயணத்தின் வெவ்வேறு முக்கிய கட்டங்களையும் திரும்பிப் பார்ப்பதற்கும், பரிசீலனை செய்வதற்கும் இந்த நீண்ட இடைவெளி எமக்குப் பயனுடையதாக உள்ளது. நாம் ஒரு காலப்பகுப்பு ஒன்றைச் செய்து கொள்ளலாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் இப் பின்காலனித்துவ அரசை நிர்வகித்த அரசாங்கங்கள் எவை? அவற்றின் குண இயல்புகள் எவை? என்ற விடயங்களின் அடிப்படையில் இக்காலப் பகுப்பைச் செய்து கொள்ள வேண்டும். முதலாவது காலப்பகுதியாக 1947-1956ஐ குறிப்பிடலாம். இக்காலப்பகுதியில் முதல் இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்கள் ஆட்சி செய்தன. இக்காலப் பகுதியை ஜனநாயக – தாராண்மைவாத ஆட்சிக்காலம் என அழைக்கலாம். இக்காலப்பகுதியில் அரச சீர்திருத்த முயற்சிகள் முக்கியமானவை எவையும் இடம்பெறவில்லை. இக்காலத்தில் முக்கியமான அரசியல் சமூகக் கொந்தளிப்புகளும் இடம்பெறவில்லை. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான தொழிலாளர் வர்க்க எதிர்ப்பியக்கம் இக்காலத்தின் விதிவிலக்கான சமூகக் கொந்தளிப்பு எனலாம். இக்காலப்பகுதியிலேயே இனக்குழுமச் சிறுபான்மையினரான தமிழர்களின் எதிர்ப்பியக்கம் ஆரம்பித்தது. ஆனால், இவ்வெதிர்ப்பு தேர்தல் அரசியல், பாராளுமன்ற நிலைப்பட்ட பேச்சுவார்த்தை என்ற வகையிலேயே அமைந்தது.
இரண்டாவது காலப்பகுதி, 1956–1960 காலத்தின் ஐக்கிய முன்னணி அரசாங்கம், 1960-1964 காலத்தின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் என்பனவற்றை உள்ளடக்கிய காலப்பகுதியாகும். இக்காலத்தில் அரசின் குண இயல்புகள் இரு விடயங்கள் சார்ந்து மாற்றம் பெற்றன. முதலாவதாக அரசின் இனக்குழும அடிப்படை மாற்றம் பெற்றது. இனக்குழுமப் பெரும்பான்மைவாத வரைசட்டகத்துள் அமையும் அரசாக அம்மாற்றம் அமைந்தது. இரண்டாவதாக அரசு தலையிடும் அரசு (Interventionist State) என்ற இயல்பைப் பெற்றது. பொருளாதாரத் துறையில் அரசின் வகிபாகத்தை விரிவாக்கல், சமூக நலச் சேவைகளை அதிகரித்தல், உள்நாட்டு முதலாளிகளிடமும் அந்நிய முதலாளிகளிடமும் இருந்து வந்த பல வர்த்தகத் கைத்தொழில் முயற்சிகளைத் தேசிய மயமாக்கல், கலாசாரப் பாதுகாப்புக் கொள்கை, கல்வியின் மீது அரச கட்டுப்பாடு என்பன 1956 – 1964 காலப்பகுதியின் தலையிடும் அரசின் முக்கிய அம்சங்களாக இருந்தன.
இக்காலத்தின் பின்னர், 1965 – 1970 காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் கீழ் தாராண்மைமயமாக்கல் ஓரளவு இடம்பெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட அரச முதலாளித்துவம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தொடரப்பட்டது. முதலாளித்துவத்தின் கீழான சமூகநல அரசு நடவடிக்கைகள் என்ற அடிப்படைச் சட்டகத்தை மாற்றாது, அவ்வரசாங்கம் தனியார் துறை மூலதனத்திற்கு ஊக்கம் கொடுத்தது. கைத்தொழிலிலும், விவசாயத்திலும் தனியார் மூலதனத்திற்கு உதவியும் ஊக்கமும் கொடுக்கும் நடவடிக்கைகள் தொடக்கப்பட்டன. 1965 – 1970 கால ஐக்கிய தேசியக் கட்சி, பல்லினக் குழுமங்களின் கூட்டாகவும் அமைந்திருந்தது. 1947 இன் பின்னர் அவ்வாறான பல்லினக்கூட்டு முதன்முறையாக அப்போது தான் அமைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி தனியார்துறை மூலதனம் மூலம் பொருளாதார விருத்தி செய்யலாம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி அளவிற்கு தலையிடும் அரசுக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதனால் தான் 1965 – 1970 ஆண்டுகளை தாராண்மைவாதம் ஓரளவுக்கு மீளப்புகுந்த காலம் எனலாம்.
1970 – 1977 காலப்பகுதியின் ஐக்கிய முன்னணி அரசு முதிர்ச்சி பெற்ற தலையிடும் அரசாகப் பரிணாமம் பெற்றது. இக்காலத்தில் அரச முதலாளித்துவக் கொள்கைகள் தொடரப்பட்டன; வலுப்படுத்தப்பட்டன. குறிப்பாக 1971 இல் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின் பின்னர் அரச முதலாளித்துவம் வேகம் பெற்றது. தோல்வியடைந்த கிளர்ச்சியின் கருதப்படாத விளைவுகளில் (Un-intended Consequences) இதுவும் ஒன்று. அரச முதலாளித்துவத்தின் புதிய கட்டத்தில் தோட்டங்களின் தேசியமயமாக்கலும், காணிச் சீர்திருத்தமும் முதன்மையிடம் பெற்றன. இவற்றை ஐக்கிய முன்னணி அரசு உணர்ச்சி வேகத்துடன் செயற்படுத்தியது. 1971 கிளர்ச்சியின் பயனாகச் செய்யப்பட்ட கொள்கைத் திருத்தம் போலவும் இவை அமைந்தன. இலங்கைப் பொருளாதாரத்தில் தீவிர கட்டமைப்புக் குறைபாடு உள்ளது. அதுவே கிளர்ச்சிக்கும் காரணமாயிற்று. அதனைத் திருத்த வேண்டும் என்ற சிந்தனை அக்காலத்தில் நிலவியது. அதன் பயனே இச்சீர்திருத்த நடவடிக்கை. தேக்கமடைந்த கிராமியப் பொருளாதாரம் கிராமப்புற இளைஞர்களிற்கு வேலைவாய்ப்புகளை வழங்கத் தடையாயிற்று. இந்நெருக்கடியே கிளர்ச்சியைத் தூண்டியது என்றும் கருதப்பட்டது. தோட்டங்கள் தேசியமயமாக்கப்படுதல், நிலச் சீர்திருத்தம், தோட்டங்களை நிர்வகிப்பதற்குப் பெரிய புதிய கூட்டுத்தாபனங்கள் அமைக்கப்படுதல், பொதுத்துறையில் அதிகாரங்கள் உடைய அலுவலர் ஆட்சிமுறை உருவாக்கப்படுதல் என்பன கிளர்ச்சிக்குப் பிந்திய கட்டத்தின் அரச முதலாளித்துவத்தின் இயல்புகளாக இருந்தன.
அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதனால் இலங்கை அரசின் தன்மை எப்படி மாறியது என்பதைப் பற்றி அடுத்து நோக்குவோம். அரசுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணி (JVP) கிளர்ச்சி ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிடுகிறது என்ற செய்திகள் வந்துகொண்டிருந்தன. இதனால் 1971 மார்ச் மாதம் முதன்முதலாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவ்வாண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது. தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவசரகால நிலை தொடரப்பட்டது. ஆயினும் அரசாங்கம் 1976 வரை அவசரகால நிலையைத் தொடர்ந்தது. ஏறக்குறைய தனது ஆட்சிக்கால முடிவு வரை அவசரகால நிலையை வைத்திருந்தது. 1972 அரசியல் யாப்பினை உருவாக்கியவரும், 1975 இல் கூட்டணி முறியும் வரை மந்திரிசபையில் அங்கம் வகித்தவருமான கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா தம் நினைவுகளை மீளாயும் கட்டுரையொன்றைப் பின்னர் எழுதினார். அக்கட்டுரையில் 1971 – 1977 காலத்தின் அவசரகால நிலைமை ‘நிர்வாகத்துறையின் சட்டவாக்கத்திற்கு’ (Executive Legislation) வழிவகுத்தது என்று குறிப்பிட்டார் (டி சில்வா, 1986:337). பாரளுமன்றமே சட்டங்களை இயற்றுதல் வேண்டும். இதற்குப் பதில், நிர்வாகத்துறையான அமைச்சரவையும் பிரதமரும் சட்டங்களை இயற்றும் முரண்பட்ட நிலை ஏற்பட்டது. இதனையே அவர் நிர்வாகத்துறைச் சட்டவாக்கம் எனக் குறிப்பிட்டார். நிர்வாகத்துறையானது பாராளுமன்றத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டதாக்கியது; பாராளுமன்றத்தை மீறிச்சென்றது என்றும் அவர் இக்கட்டுரையில் குறிப்பிட்டார். அவர் இக்கட்டுரையில் வெளிப்படையாக அழுத்திக்கூறாமல் விட்ட விடயம், அரச அதிகாரத்தின் மிக முக்கியமான மையமாக நிர்வாகத்துறை மாறிவிட்டது என்பதையே. இவ்வாறு அதிகாரம் மாறுகின்ற செயல்முறை அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதோடு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் தொடக்கி வைக்கப்பட்டது. இது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
அரசு என்றொரு விடயம் உள்ளது. அரசைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆட்சியை நடத்தும் அரசாங்கம் (Regime) என்பது இன்னொரு விடயம். இந்த இரு விடயங்களிற்கும் இடையிலான வித்தியாசத்தை இல்லாமல் செய்து அரசும், அரசாங்கமும் ஒன்று என்ற நிலை 1970 இல் ஏற்படுத்தப்பட்டது. ஐக்கிய முன்னணி அரசாங்கமும் அரசும் ஒன்றுதான் என்ற தோற்றம் உருவாகியது. 1971 ஆம் ஆண்டில் இருந்து அவசரகால நிலை என்பது இலங்கையில் இயல்பான ஒரு விடயமாகியது. இது லிபரல் ஜனநாயகப் பண்புடையதாக இருந்த அரசை தாராண்மை மறுப்பு அரசாகவும், சர்வாதிகார அரசாகவும் மாற்றியது. அரசு வேறு, அரசாங்கம் வேறு என்பதை முற்றாக இல்லாமல் செய்துவிடவும் முடியவில்லை. ஐக்கிய முன்னணி அரசின் செயற்பாடுகள் ‘அரசு – அரசாங்கம்’ என்ற ஒரு வித்தியாசம் இருப்பதை மிகவும் எதேச்சதிகாரமான முறையில் உதாசீனம் செய்வதாக இருந்தன.
ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்குப் பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அரசு – அரசாங்கம் என்ற வித்தியாசத்தை இல்லாமலாக்கும் உத்திகள் பலவற்றைக் கையாண்டன. இந்த உத்திகள் பலவகையின. ஐக்கிய முன்னணி அரசாங்கம் முதலில் இதனைப் புதிய கொள்கைத் திட்டங்கள் என்ற புதுமையோடு இணைத்தது. பலம் வாய்ந்த பாராளுமன்றத்தை அது உருவாக்கியது. இப்பாராளுமன்றம் பலம் வாய்ந்த மந்திரிசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இம்மந்திரிசபை அரசு – அரசாங்கம் என்ற மரபுவழி வேறுபாடுகள் பற்றிச் சிறிதும் அக்கறை அற்றதாக இருந்தது. மாவட்ட அரசியல் அதிகாரி (District Political Authority) முறை புகுத்தப்பட்டது. இதன் மூலம் அரசாங்கம் நிர்வாகத்துறையில் ஊடுருவித் தன் பிடியை வலுப்படுத்தியது. ஆளும் கட்சியின் தொண்டர்களும் உறுப்பினர்களும் அரசாங்க நிர்வாகத்தின் எல்லா நிலைகளிலும் ஊடுருவினர்.
இவ்வாறு அரசாங்கத்தின் இரும்புக் கரங்கள் சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் தன் பிடியை இறுக்கின. அரசுக்குள் அரசாங்கம் நுழைந்து அதன் இடத்தைப் பிடித்தல் என்னும் கொள்கையை ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் ஆர். பிரேமதாசவும் ஜனாதிபதிகளாக இருந்த போது தொடர்ந்தனர். இவர்கள் இன்னும் பல தாராண்மை மறுப்பு, ஜனநாயக விரோத உத்திகளைப் பயன்படுத்தினர். இந்தச் செயல்முறை இன்றுவரை படிப்படியாக முன்னேறிச் செல்கிறது என்றே கூறலாம். 1970கள் முதல் இலங்கையில் ஏற்பட்டுவந்த அரசியல் மாற்றங்களை தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கு பின்வரும் இரு கருத்தாங்கள் உதவக்கூடியன.
அ) சர்வாதிகாரம் (Authoritarianism)
O’Donnel என்ற ஆய்வாளரும் A.O. Hirschman என்பவரும் இலத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகார அரசுகளை இக்கருத்தாக்கம் கொண்டு விளக்கினர்.
ஆ) நிறுவனச் சிதைவு (Institutional Decay)
இலங்கை பற்றிய ஆய்வில் எம். மூர் (M. Moore) அவர்களால் இக்கருத்தாக்கம் பிரயோகிக்கப்பட்டது. அவர் 1990 இல் ஒரு கட்டுரையிலும், பின்னர் 1992 இல் இன்னோர் கட்டுரையிலும் இக்கருத்தை விளக்கினார்.
(உசாத்துணைப் பட்டியலில் இவர்களின் ஆக்கங்கள் பற்றிய விவரத்தைக் காணலாம்.)
அடுத்து இக்கருத்தாக்கங்களின் பொருத்தப்பாட்டை நோக்குவோம்.
தாராண்மை மறுப்பில் இருந்து 1980களில் சர்வாதிகாரத்தை நோக்கிய மாற்றம்
ஜனநாயகமும், சர்வாதிகாரமும் ஒன்றோடொன்று கலப்புற்றுச் சங்கமமாகிய செயல்முறை 1977–1994 காலத்தின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் நடைபெற்றது. 17 வருடகாலம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், ஆர். பிரேமதாசவும் ஜனாதிபதிகளாக ஆட்சி செய்தனர். இக்காலத்தில் பாராளுமன்ற ஜனநாயகம் இலங்கையில் ஒரு கட்சி ஆட்சியாக (One Party Rule) மாற்றம் பெற்றது. 1977 யூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பங்கு பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது. எதிர்க்கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. இடதுசாரிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. முன்னாள் ஆளும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனங்களை மட்டுமே பெற்றது. 1978 ஆம் ஆண்டில் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையைப் புகுத்தியது. இதனால் அரசின் நிர்வாகத்துறை பலம் பெற்றது. அதன் தலைமை அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்தது. நிர்வாகத்துறை அரசின் மிக முக்கியமான அதிகார மையம் ஆகியது. பலமற்ற சட்டசபை, நிர்வாகத்துறைக்குப் பணிந்து போகும் கட்டுப்படுத்தப்பட்ட நீதித்துறை, விரக்தியுற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட எதிர்க்கட்சி, ஒப்பீட்டளவில் அளவுக்கு மீறிய அதிகாரங்களைக் கொண்ட நிர்வாகத்துறை என்ற இயல்புகளையுடைய அரசு தோற்றம் பெற்றது. இவ்விதம் 1980கள் முதல் 1990களின் முற்பகுதிவரை அரசு அதிகாரத்தில் நிறுவனச் சமநிலை இன்மை வெளிப்பட்டது. இம்மாற்றங்கள் நிகழ்ந்த வேளையில் வேறு இரு போக்குகள் வெளிப்பட்டன. 1983 முதல் தமிழ்ப் பிரிவினைவாதக் கிளர்ச்சி மேலெழுந்தது. 1987 இல் ஜனதா விமுக்தி பெரமுன எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தோன்றியது. மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி தென்பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டதாய் இருந்தது. மக்கள் விடுதலை முன்னணியினது கொரில்லாப் பேராளிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்குமிடையே இரத்தம் சிந்திய தீவிர உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது. இக்கிளர்ச்சி 1989 இல் அடக்கப்பட்டது. நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தோன்றிய கிளர்ச்சி முடிவுறாத நீண்ட உள்நாட்டுப் போராக மாறியது. வடக்குக் கிழக்கில் ஒரு கிளர்ச்சி, தென் பகுதியில் இன்னோர் கிளர்ச்சி என இரண்டு கிளர்ச்சிகளில் நாடு சிக்குண்டது. அவ்வேளை, வெளிநாட்டு இராணுவத் தலையீடும் ஏற்பட்டது. இலங்கையின் சமாதான முயற்சியிலும், பின்னர் போரிலும் இந்தியா பங்கு கொண்டது. இவ்வாறான வெளிநாட்டு இராணுவத் தலையீடு 1987–1990 ஆண்டுக் காலத்தில் ஏற்பட்டது. 1989 இல் மக்கள் விடுதலை முன்னணி தோற்கடிக்கப்பட்டதும், பின்னர் 1990 இல் சமாதானத்தை ஏற்படுத்தும் தனது முயற்சியை இந்தியா முடிவுக்குக் கொண்டுவந்ததும், இலங்கை அரசு சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளச் சந்தர்ப்பத்தை வழங்கின. விடுதலைப் புலிகளின் ஆளணியைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்ட ஒருவரின் தாக்குதலால் ஜனாதிபதி ஆர். பிரேமதாச கொல்லப்பட்டார். 1994 இல் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இத்தேர்தல் அதுவரை நாட்டில் நிலவிய உறுதியற்ற நிலையையும் நெருக்கடிகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.


1980களில் அரச முதலாளித்துவம் என்ற கொள்கை கைவிடப்பட்டு பொருளியல் தாராண்மைவாதமும், சுதந்திரச் சந்தைப் பொருளாதாரமும் உருவாகிய காலகட்டத்தில் இலங்கை அரசு மேலும் மேலும் சர்வாதிகாரத் தன்மை உடையதாக மாறலாயிற்று. இது விசித்திரமான ஒரு போக்கு ஆகும். இவ்விடத்தில், லத்தீன் அமெரிக்கா தொடர்பாக ‘O’Donnel’ (1973; 1978) மற்றும் ‘Hirschman’ (1978) ஆகியோர் முன்வைத்த விளக்கம் இலங்கையின் புதிய போக்கிற்கும் பொருந்துகிறதா என்பதை நோக்குவோம். மேற்கூறிய ஆய்வாளர்கள் பொருளாதாரத் தாராண்மைவாதத்திற்கும் அரசியல் அடக்கு முறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற வாதத்தை, லத்தீன் அமெரிக்க நிலையை உதாரணம் காட்டி முன்வைத்தனர். லத்தீன் அமெரிக்காவில் தாராண்மைவாதம் முதலாளித்துவ அபிவிருத்தியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில் தோன்றியது. அவ்வேளை லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய பொருளாதாரம் அந்நிய வர்த்தகத்திற்கும், அந்நிய முதலீடுகளுக்கும் திறந்துவிடப்பட்டது. இம்மாற்றத்தை நிர்வகிப்பதற்கு குறிப்பிட்ட வகை அரசியல் கொள்கையுடைய சர்வாதிகார அரசாங்கங்கள் தேவைப்பட்டன. லத்தீன் அமெரிக்க உதாரணம் பொருளாதாரத் தாராண்மைவாதத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. பொருளாதாரத் தாராண்மைவாதத்தை நடைமுறைப்படுத்த சர்வாதிகாரம் அவசியமான முன்தேவை என்ற இந்தக் கருத்தினை இலங்கை பற்றிய சில ஆய்வாளர்களும் கூறியிருந்தனர் (பொன்னம்பலம், 1981). இலங்கையின் இடதுசாரிகளும், தொழிற்சங்கவாதிகளும், சிவில் சமூகத்தினரும் இதே கருத்தைக் கூறியுள்ளனர். மூர் (Moore) தமது கட்டுரையில் (1990) இதற்கு மாறான வாதத்தை முன்வைத்தார். பொருளாதாரத் தாராண்மைவாதத்திற்கும், அவர் கூறும் அரசியல் சிதைவு (Political Decay) என்பதற்கும் நடைமுறையில் காரணகாரியத் தொடர்பு குறைவாகவே உள்ளது. மூர் ‘அரசியல் சிதைவு’ என்பதில் மூன்று அம்சங்கள் வெளிப்பட்டதாகவும் கூறுகிறார்.
அ. அரசியல் அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டது.
ஆ. ஜனநாயக எதிர்ப்புப் போராட்டங்கள் அடக்கப்பட்டன. எதிர்க்கட்சியின் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டன.
இ. சிங்கள – தமிழ் இனக்குழு உறவுகள் மோசமடைந்தன.
1980களில் பொருளாதாரத் தாராளமயமாக்கல் பூரணமான நிலையை நோக்கிச் செல்லவில்லை என்றும், நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் கட்டுப்பாடு தளரவில்லை என்றும் மூர் கூறுகிறார். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பொதுத்துறை வியாபாரத் தொழில் முயற்சிகளைத் தொடர்ந்து பேணியது. அரசியல் தேவைகளுக்காகவும், தமது கட்சி ஆதரவாளர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்காகவும் பொதுத்துறை முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து வைத்திருக்கும் தேவையும் இருந்தது. ஆதலால் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக ஏற்பட்ட தாராளமயமாக்கம் பலவீனமுடையதாக இருந்தது என்றே கூற வேண்டும். மூர் ‘சர்வாதிகாரம்’ என்ற கருத்தையும் அழுத்துவதாகத் தெரியவில்லை. அவர் ‘அரசியல் சிதைவு’ என்பதையே முக்கிய போக்கு என்கிறார். 1977 ஆம் ஆண்டின் பின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் ஏற்பட்ட ‘அரசியல் சிதைவு’க்கான காரணங்களை பொருளாதார தாராண்மைவாதச் செயல்முறைக்குள் தேடிக் காண முடியாது; அவை அதற்கு வெளியில் இருந்து எழுந்தன என்றும் மூர் கூறுகிறார்.
இலங்கையின் அரசு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் என்ன வடிவத்தைப் பெற்றது, என்ன போக்கில் சென்றது என்பதை விளக்குவதற்கு மூர் குறிப்பிடும் ‘அரசியல் சிதைவு’ என்னும் கருத்திற்கு மாறான வாதத்தை முன்வைக்கும் தேவை உள்ளது. அரசியல் அதிகாரம் மத்தியில் குவிதல், பிரிவினைவாதக் கிளர்ச்சி என்பவற்றிற்கும் பொருளாதாரத் தாராண்மைவாதத்திற்கும் இடையிலான தொடர்பு யாது எனப் பார்ப்போம். இவ்விசாரணை எமக்கு இலங்கையின் அரசின் விசேட இயல்பைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்குகிறது. இலங்கையின் வெவ்வேறு சமூகக்குழுக்களும், இனக்குழுமங்களும் முன்வைத்த அரசியல் கோரிக்கைகளை எதிர்கொண்டு, அவற்றிற்குத் தீர்வுகளைக் காணும் திறனை இலங்கையின் அரசியல் நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை. இவ்வரசியல் கோரிக்கைகளை முன்வைத்த குழுக்களை அதே நிறுவனங்களைப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டது. வன்முறையையும் போரையும் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டது. ‘அரசியல் சிதைவு’ என்றும் ‘நிறுவனச் சிதைவு’ என்றும் மூர் மற்றும் டிவொட்டா (Devotta) (2000, 2004) கூறியிருப்பது, 1965 காலத்தில் சமுவல் ஹண்டிங்டன் எழுதிய கட்டுரையில் கூறிய கருத்தொன்றின் வழிவரும் தொடர்ச்சியே எனக் கூறலாம். ஹண்டிங்டன் அக்கட்டுரையில் அரசியல் அபிவிருத்தி (Political Development) என்ற கோட்பாட்டையும் அதனோடு இணைந்த ‘அரசியல் சிதைவு’ என்ற கோட்பாட்டையும் முன்வைத்தார். ஹண்டிங்டன் கூறிய ‘அரசியல் அபிவிருத்தி’ 1950களிலும் 1960களிலும் ஒப்பீட்டு அரசியல் விஞ்ஞானம் என்ற ஆய்வுப் பிரிவின் முக்கிய கருத்தாகும். அரசியல் அபிவிருத்தியை ஹண்டிங்டன் ஒரு நேர்கோட்டு வளர்ச்சியாகவே நோக்கினார். அத்தோடு ‘அரசியல் அபிவிருத்தி’ என்ற கோட்பாட்டை அரசியல் சிதைவு என்ற கோட்பாட்டுடன் இணைக்கவும் வேண்டும் என்றும் ஹண்டிங்டன் கூறினார். ‘அரசியல் சிதைவு’ என்ற கருத்தை ஹண்டிங்டன் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தினார்? என்பதைக் கவனித்தல் வேண்டும். சமூகப் பொருளாதார நவீனமாதல் நடைபெறும் வேளையில், அதன் காரணமாக எழும் அரசியல் கோரிக்கைகளை எதிர்கொண்டு தீர்வுகாணும் செயல்திறன் அரசியல் நிறுவனங்களிடம் இல்லாமல் போவதையே ‘அரசியல் சிதைவு’ என்று ஹண்டிங்டன் குறிப்பிட்டார். அரசியல் நவீனமாதல் (Political Modernisation) என்ற செயல்முறை ஊடாக உருவாக்கப்பட்ட அரசியல் பங்கேற்பு (Political Participation) காரணமாக எழும் அரசியல் கோரிக்கைகளை எதிர்கொண்டு தீர்வுகாண முடியாதனவாக நிறுவனங்கள் ஆகின்றன. இந்நிறுவனங்கள் செயல்துடிப்பு அற்றனவாய் தேக்கமடைந்தும், ஊழல் மலிந்தனவாயும் இருந்தன. புதிய தேவைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறனற்றனவாயும் இருந்தன. ஹண்டிங்டன் இவ்வாறு கூறுகிறார்: ‘சமநிலை குலைதல், ஊழல், சர்வாதிகாரம், உள்நாட்டு வன்முறை, நிறுவனச் சீரழிவு, அரசியல் சீரழிவு ஆகிய சொற்கள் குறிக்கும் கோட்பாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் நிகழ்வுகளைப் பற்றி இச்சொற்களின் எதிர்ச்சொற்களால் குறிக்கப்படும் கோட்பாடுகள் கூறுவதை விட நிறைவான சித்திரத்தைத் தருகின்றன.’ மூர் மற்றும் டிவொட்டா கூறுவனவும் ஹண்டிங்டன் கூறியதற்கு ஒப்பானதாகவே இருந்தன. அவர்கள் 1980களிலும், அதற்குப் பின்னரும் ஏற்பட்ட ‘அரசியல் சிதைவு’வின் பல்வேறு பரிமாணங்களை ஒன்றிணைத்து ஒரு விளக்கத்தை வழங்குகின்றனர்.
இலங்கையின் அரசின் இயல்பு என்ன? அதன் இயக்கம் எவ்வாறு அமைகிறது? என்றவாறான பரிசீலனையில் ‘அரசியல் சிதைவு’ என்ற கோட்பாடு போதிய விளக்கத்தைத் தரவில்லை. இந்த விளக்கம் நேர்காட்சிவாதத் தன்மை உடையது; அத்தோடு விளக்க முறையிலும் அமைகிறது (It is positivistic and descriptive). இக்கோட்பாட்டை நேர்காட்சிவாதத் தன்மையுடையது என்று ஏன் கூறுகின்றோம்? அரசு பற்றிய விசாரணையை இக்கோட்பாடு தவிர்த்துவிட்டு, அனுபவத்தின் அடிப்படையில் பரிசீலிக்கக்கூடிய நிகழ்வுகள், செயல்முறைகளில் கவனம் செலுத்துவதால் இவ்வாறு கூற வேண்டியுள்ளது. இந்த அனுபவவாத விவரிப்பைக் கொண்டு இக்கோட்பாடு அரசியல் மாற்றம் பற்றிய நிறுவல் அல்லது பரிசோதனை வழி நிர்ணயத்தையும் செய்கிறது. இதை விளக்க முறையானது (Descriptive) என்று ஏன் கூற வேண்டும்?
அ) அரசியல் சிதைவு ஏற்படும் சூழ்நிலை விவரிக்கப்படுகின்றது.
ஆ) அரசியல் சிதைவின் விளைவுகளும் விவரிக்கப்படுகின்றன.
இ) அரசியல் சிதைவு என்பதன் மூலம் வெளிப்படும் அரசின் இயல்புகள் எவை என்பதும் விவரித்துக் கூறப்படுகின்றன.
இந்த மூன்று விடயங்களையும் பற்றிய ஒரு விவரிப்பை மட்டும் இக்கோட்பாடு வழங்குகிறது. அதற்கு அப்பால் விசாரணையை இக்கோட்பாடு எடுத்துச் செல்லுவதில்லை. நேர்காட்சிவாத முறையிலான விவரிப்புகளைத் தருவது அரசியல் விஞ்ஞானத்தின் பணி அல்ல என்று நாம் கூறவில்லை. ஒரு செயல்முறையின் வரலாற்றுப் பின்னணியையும் தேவையையும் இந்த வகை விவரிப்புகள் மூலம் முழு நிறைவான முறையில் புரிந்துகொள்ள முடியாது என்றே கூறுகிறோம். ‘அரசியல் சிதைவு’ என்னும் கருத்தை வேறு சில வினாக்களுடன் தொடர்புபடுத்துவதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
‘அரசியல் சிதைவு’ இலங்கையின் அரசின் இயல்பைப் பற்றி என்ன கூறுகிறது? அது இலங்கை அரசின் மாற்றமுற்றுச் செல்லும் போக்குகளை விளக்குகிறதா? சிதைவு நிகழ்கிறது என்றால் இச்சிதைவின் பின்னர் இலங்கையின் அரசியல் எப்படி இருக்கும்?
இந்த அத்தியாயத்தில் நாம் தொடர்ந்து வரும் விசாரணைகள் ஓர் உண்மையை எடுத்துக் கூறுகின்றன. இலங்கையின் அரசு முழுமையான சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக அது அரசியல் யாப்புக்கு வகுத்திருக்கும் எல்லைகளுக்குள் இயங்கும் சர்வாதிகாரம் என்ற வகையினதாக உள்ளது. மூர் மற்றும் டிவொட்டா ‘அரசியல் சிதைவு’ என்ற செயல்முறை பற்றி விவரித்திருப்பது இந்தப் பண்பை விளக்கிக்கொள்ள உதவுகிறது. அரசியல் யாப்புச் சர்வாதிகாரம் (Constitutional Authoritarianism) என்பதன் அர்த்தம் என்ன என்று பார்ப்போம். இவ்வகைச் சர்வாதிகார அரசில் தாராண்மை மறுப்பு நிறுவனங்களையும் நடைமுறைகளையும் அரசாங்கம் ஜனநாயக அரசியல் யாப்பின் சட்டகத்திற்குள் புகுத்துகிறது. இவ்வாறு புகுத்தப்பட்ட நிறுவனங்களும் நடைமுறைகளும் அரசின் ஜனநாயக அடித்தளத்தை மாற்றி அதனைச் சர்வாதிகாரத்துடன் செயல்பட வைக்கின்றன. இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் ஜனநாயகமும் சர்வாதிகாரமும் அரசின் அதிகாரம் செயல்படுவதற்குத் துணைசெய்து கொண்டு ஒருங்கே இருப்பதைக் கண்டுகொள்ள வேண்டும். வெளிப்படையான தோற்றத்தில் எதிர்க்கருத்துகளாக இருக்கும் ஜனநாயகமும் சர்வாதிகாரமும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதைக் காண்கிறோம். 1977 முதல் 1993 வரை பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இலங்கை அரசின் ஜனநாயக முறைகளை முற்றாகக் கைவிட்டு சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவரவில்லை. இலங்கையின் அரசியல் நிறுவனங்களில் மாற்றங்களைப் புகுத்தி அவற்றை மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பதற்கு ஏற்றவையாக அரசாங்கம் மாற்றியது. அரச வன்முறையையும் அரச பயங்கரவாதத்தையும் பயன்படுத்தி சமூகத்தைத் தனக்குப் பணிந்து கீழ்ப்படிய வைத்தது. நீதித்துறையினதும் பொது நிறுவனங்களினதும் சுயாதீனத்தை இல்லாமல் செய்தது. பாராளுமன்ற எதிர்க்கட்சியின் முதுகெலும்பை உடைத்து அதனைச் செயலிழக்கச் செய்தது. அரசை சிங்கள இனக்குழுமத்திற்கு உரியதாக்கி அதன் அடையாளத்தை மாற்றியது.
இவை யாவற்றினதும் ஒட்டுமொத்த விளைவாக அரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான வேறுபாடு மறைந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இந்தத் தாராண்மை மறுப்பு நடவடிக்கைகள் யாவும் ஜனநாயக அரசின் செயல்முறைக்குள் மேற்கொள்ளப்பட்டன. அது ஜனநாயக முறையொன்றை சர்வாதிகாரத்துடன் இணைப்பதில் வெற்றியடைந்தது. பல இருமை எதிர்நிலைகள் அரசியல் களத்தில் ஒன்றிணைந்து இருந்தமை விசித்திரமான முரணாக அமைந்தது. ஜனநாயகத் தேர்தல் முறையின் ஊடாக அமைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒருபுறம் இயங்கிக் கொண்டிருந்தபோது ஆயுதம் தாங்கிய போராட்டமும் கிளர்ச்சியும் இன்னொரு புறம் நடைபெற்றன. பயங்கரவாதச் செயல்களும் வன்முறையும் தொடர்ந்தன. சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்னும் கொள்கையை நடைமுறையில் வைத்திருந்தபோதிலும் அவசரகால நிலையின் கீழ் ஆட்சி தொடர்ந்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அரசாங்கத்திற்குத் துணையாக இருந்தது. தாராண்மைப் பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்திய அரசு அமைப்பியல் சீராக்கத் திட்டங்களையும் (Structural Adjustment Programmes) நிறைவேற்றியது. பொருளாதாரத் துறையில் தாராளவாதம் ஒருபக்கம் செயல்பட, அரசியல் துறையில் தாராண்மை மறுப்பு, லிபரல் விரோதச் செயல்முறைகள் தொடர்ந்தன. இவை எடுத்துக்கூறுவது என்ன? இருமை எதிர்நிலைகள் (Binary Opposites) ஒருங்கே சேர்ந்திருப்பதையே இவை காட்டுகின்றன.
1994 – 2003 இல் செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிதல்
1994 – 2003 ஆம் ஆண்டுகளில் மேற்கூறிய போக்கைத் தடுக்கும் முயற்சிகள் இரு தடவைகளில் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் தாராண்மை லிபரல் அரசியலைக் கொண்டு வரும் முயற்சிகளின் தோல்வி (Failed re-liberalisation: 1994–2003) என்னும் இவ்விடயத்தை அடுத்து நோக்குவோம்.
இலங்கையின் பின்காலனித்துவ அரசின் உருவாக்கச் செயல்முறையில் இரு அம்சங்கள் இருந்தன. அவை:
அ) இனக்குழுமப் பெரும்பான்மைவாதம் (Ethnic Majoritarianism)
ஆ) தாராண்மை மறுப்பும் லிபரல் விரோத அரசியலும்
இவ்விரு அம்சங்களும் 1977–1993 கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் உச்சத்திற்குச் சென்றன என்பதை முன்னர் விளக்கிக் கூறினோம். இந்தப் போக்கில் இரு தடவைகள் இடையீடு ஏற்பட்டது. 1994 இன் ஆட்சி மாற்றம், டிசம்பர் 2001 இன் ஆட்சி மாற்றம் என்பனவே இவ்விடையீடுகள். இந்த இரு சந்தர்ப்பங்களும் பின்வரும் இயல்புகளைக் கொண்டிருந்தன:
- அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்த சர்வாதிகார அரசாங்கத்திற்குள் தோன்றிய நெருக்கடி.
- இனக்குழும யுத்தத்தை சமாதான வழியில் தீர்வு காண்பதற்கும், லிபரல் ஜனநாயக ஆளுகை முறைக்குத் திரும்புவதற்கும் பொதுமக்களின் ஆதரவு கிடைத்தமை.
1994 இன் பொதுசன முன்னணியின் ஆட்சி மாற்றத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமை தாங்கியது. இக்கட்சி இடதுசாரிக் கட்சிகளுடன் ஒரு கூட்டணியில் இணைந்திருந்தது. இவ்விடதுசாரிக் கட்சிகள் சமுதாய ஜனநாயக மாற்றம், சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் என்பவற்றில் கூடிய அக்கறை கொண்டவையாக இருந்தன. 2001 இன் ஆட்சி மாற்றம் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்தது. இக்கட்சி பொருளாதாரத் தாராண்மைவாதத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் நாட்டமுடையதாக இருந்தது. அத்தோடு பரந்த அளவிலான லிபரல் ஜனநாயக அரசியலையும் மீண்டும் கொண்டு வருவதில் விருப்பம் கொண்டதாக இருந்தது. 1994 இன் பொதுசன முன்னணி அரசாங்கமும் 2001 இன் ஐக்கிய தேசிய முன்னணியும் (UNF) அரசியல் கொள்கையில் சீர்திருத்தவாதப் போக்கைக் கொண்டவை. ஐக்கிய தேசியக் கட்சியின் (1977–1993) நீண்டகால ஆட்சியின் சர்வாதிகாரத்தில் இருந்து மீள்வது இவற்றின் நோக்கமாக இருந்தது.
1994 இன் பொதுசன முன்னணி அரசுக்குத் தலைமை தாங்கிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, அரசு தாராண்மைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார். அரசியல் யாப்பை மீண்டும் வெஸ்ட்மின்ஸ்டர் முறைக்கு மாற்றி, பாராளுமன்றத்தை மீண்டும் அரச அதிகாரத்தின் மைய நிறுவனமாக்குவதாகவும் கூறியிருந்தார். பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வைக் காணப்போவதாக அறிவித்ததோடு, பொதுசன முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. பின்னர் 1995 ஜனவரி மாதம் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டது. யுத்தம் நிறுத்தப்பட்டதால் மக்கள் நிம்மதியாக மூச்சுவிடக்கூடிய அரசியல் சூழ்நிலை உருவானது. இருந்தபோதும் பொதுசன முன்னணி அரசாங்கம் அவசரகால நிலையை நீக்கவில்லை. 1970களிலும் 1980களிலும் ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் புறம்பான நடவடிக்கைகளைத் தொடரவும் அவற்றிற்குச் சட்டத்தின் கவசத்தை வழங்கவும் காரணமாக இருந்த அவசரகால நிலையை அரசாங்கம் தளர்த்த முன்வரவில்லை. இதனால் ஏறக்குறைய ஒரு வருட காலத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் ஓரளவு தளர்த்தப்பட்டிருந்தன. ஏப்ரல் 1995 இல் விடுதலைப் புலிகளுடனான அரசியல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து யுத்தம் மீண்டும் தொடங்கும் வரை இந்நிலை காணப்பட்டது. ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கிய ஒரு சிறிய இடைக்காலம், போர் நிறுத்தம் குறுகிய காலம் நடைமுறையில் இருந்ததால் சாத்தியமாயிற்று என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர் மீண்டும் தொடங்கிய பின்னர் பொதுசன முன்னணி அரசாங்கம் பழையபடி அரசியல் யாப்புச் சர்வாதிகாரத்திற்குத் திரும்பியது. இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இருந்த கடுமை குறைந்ததாக இச்சர்வாதிகாரம் இருந்தது.

இப்போது மூர் கூறிய கருத்தைத் திரும்பவும் பார்ப்போம். பொருளாதாரத் தாராண்மைவாதத்திற்கும் அரசியல் சர்வாதிகாரத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறுவது கடினம் என்பது மூரின் கருத்து. இதனை நாம் ஏற்றுக்கொண்டாலும் இன்னொரு விடயத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும். பொதுசன முன்னணி அரசாங்கம் அரசியல் யாப்புச் சர்வாதிகாரத்தின் மென்மையான வடிவத்திற்கு, இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குள் திரும்பிவிட்டது. இவ்வாறு திரும்பிய காலத்திலேயே அது பொருளாதாரத்தில் அரசின் பங்கை அதிகரிக்கும் செயல்திட்டத்தை சமுதாய ஜனநாயகப் பொருளாதாரக் கொள்கை மூலம் நிறைவேற்றுவதையும் கைவிட்டது. பொதுசன முன்னணி அரசாங்கம் சமுதாய ஜனநாயகப் பொருளாதாரக் கொள்கையை கைவிட்டதை ‘மனிதாய முகம் கொண்ட முதலாளித்துவம்’ (Capitalism with a Human Face) என்ற சொல் அலங்காரத் தொடரால் குறிப்பிட்டது.
பொதுசன முன்னணி அரசாங்கம் கலப்பற்ற சுதந்திரச் சந்தைப் பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தியபோது சர்வாதிகாரத்தையும் அதன் கடுமையற்ற வடிவத்தில் ஏன் கொண்டு வந்தது என்ற கேள்விக்குப் பதில் கூற வேண்டியுள்ளது. இது எதைக் கூறுகிறது? இங்கே இரண்டு விடயங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக ஒரு கருதுகோள் எடுத்துக் கூறப்படுகிறது. பின்னர் அக்கருதுகோளிற்கான விளக்கம் வழங்கப்படுகிறது. பொருளாதாரத் தாராண்மைவாதம் என்ற கொள்கை அரசியல் சர்வாதிகாரம் நடைமுறையில் உள்ளபோதும் நன்றாகச் செயல்படுகின்றது என்பது கருதுகோள். அதற்கான விளக்கம் என்னவெனில், பொருளாதாரத் தாராண்மைவாதமும் அரசியல் சர்வாதிகாரமும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை அல்ல என்பதாகும். 1970களில் அரச முதலாளித்துவமும் அரசியல் சர்வாதிகாரமும் எவ்வாறு ஒத்துப்போயினவோ, அவ்வாறே இவையிரண்டும் ஒத்து இயங்குகின்றன என்ற விளக்கம் கிடைக்கிறது.
2001 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவையும் சேர்த்து, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணி ஒன்றை அவ்வாண்டு டிசம்பரில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அமைத்துக் கொண்டது. ஐக்கிய தேசிய முன்னணி போர் இல்லாத அமைதிச் சூழலில் பொருளாதாரத் தாராண்மைவாதக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் குறிப்பிட்டது. விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் மூலம் இந்த இலக்கு அடையப்படும் என்றும் குறிப்பிட்டது. டிசம்பர் 2001 தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது.
அரசியலில் விநோதமானதும் வித்தியாசமானதுமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு அரசியல் முகாம்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். தலைமை தாங்கும் அரசியல் எதிரிகளான ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒற்றுமையாகச் செயற்படும் ஒழுங்குக்கு இணங்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் அவர்களால் ஒருங்கே செயற்படும் (Co-habitation) இணக்கத்திற்கு வர முடியவில்லை. ஜனாதிபதி – பாராளுமன்றம் என்ற ஒன்றோடொன்று போட்டியிடும் இரண்டு மையங்கள் உருவாகின. இந்த நிலைமையை ‘பிளவுற்ற அரசாங்கம்’ (Fractured Government) என்று கூறலாம் (பெர்ணான்டோ, 2008). இது அரசின் மீது பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியது. எத்தகைய அதிகார மையமும் தன்னிச்சையாக அரசியந்திரத்தை சர்வாதிகார முறையில் பயன்படுத்த முடியாத நிலை உருவானது. நிர்வாகத்துறை சட்டசபை மீது கட்டுப்பாடு விதிக்கும் முறையில் செயற்பட்டது. அதேபோல் சட்டசபை நிர்வாகத்துறையைக் கட்டுப்படுத்தியது.

2002, 2003 ஆகிய இரண்டு ஆண்டுகளும் இவ்விதமான இரட்டை அதிகாரம் செயற்பட்டது. அரசின் சர்வாதிகாரத் தலையீடுகள், ஆற்றல்கள், சர்வாதிகார உந்துதல்கள் என்பன கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த காலம் என்ற வகையில் 2002 – 2003 ஆண்டுகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகச் சிறந்த காலமாகும். அப்போது விடுதலைப் புலிகளுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது என்பதும் அரசு சர்வாதிகாரத்தில் இருந்து விலகிக் கொள்வதற்கான மேலதிக காரணியாக விளங்கியது.
சர்வாதிகாரப் போக்கில் இருந்து பின்வாங்குதல் அல்லது விலகல் ஒரு தற்காலிக விடயமாகவே இருந்தது. 2003 டிசம்பரில் ஜனாதிபதி குமாரதுங்க தேசிய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தைக் கலைத்தார். 2004 ஏப்ரலில் நடந்த தேர்தலில் ஜனாதிபதி குமாரதுங்க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அக்கூட்டணியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, புதிதாக உருவாக்கப்பட்ட ஜாதிக ஹெல உறுமய கட்சி (சிங்கள மரபுரிமைக் கட்சி – JHU) ஆகியன சேர்ந்திருந்தன. அவை சர்வாதிகார அரசை மீண்டும் நிலைநிறுத்த கருத்தியலால் ஒன்றுபட்டன.
2004 ஏப்ரல் மாதம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஓர் இடைவேளை முடிவுக்கு வந்தது. சர்வாதிகார அரசு மீண்டும் உறுதியாக நிலைபெற்றது. சர்வாதிகாரம் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய அம்சமாகவும் இயல்பாகவும் உள்ளது. பாராளுமன்ற ஜனநாயகமும் அரசியல் யாப்புச் சர்வாதிகாரமும் ஒருங்கிணைந்த இயல்புடையதாக இலங்கை அரசு உருவாக்கம் பெற்றது.
முடிவுரை
இலங்கையின் அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டம் நடைபெற்ற வேளையில் இலங்கை அரசு ஜனநாயக முறையை முற்றாகத் தூக்கி வீசிவிட்டு சர்வாதிகார அரசாக அல்லவா மாறியிருக்க வேண்டும்? இதுவல்லவா சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியது? ஆனால் இலங்கையில் ஜனநாயகம் உயிரோடு இன்றும் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்ற புதிரை விடுவிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இக்கட்டுரையில் இருந்து நாம் இரண்டு முடிவுகளைப் பெற முடியும். பிரதான முடிவு: இலங்கையின் பின் காலனித்துவ அரசு தனது ஜனநாயக வடிவத்தை நெகிழ்ச்சியுடையதாக்கி, அதனுள்ளே சர்வாதிகார நடைமுறைகளையும் இணைத்துக் கொண்டது. பின் காலனித்துவ அரசு சில திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்தே ஜனநாயகத்தைத் தன்னுடன் வைத்துக் கொண்டது. அதனை முற்றாகத் தூக்கி வீசவில்லை. ஜனநாயகத்தின் நெகிழ்வுத் தன்மை காரணமாக சர்வாதிகாரத்தை அது தன்னுடன் இணைத்துக் கொண்டது. மறுபுறத்தில் சர்வாதிகாரமும் ஜனநாயக நடைமுறைகளை உள்வாங்கிக் கொள்ள இணங்கிச் சமரசம் செய்து கொண்டது. இத்துடன் வேறு இரண்டு குறிப்புகளையும் சொல்லலாம்:
1. ஜனநாயகமும் சர்வாதிகாரமும் ஒன்றுக்கு ஒன்று எதிரான விடயங்கள் அல்ல. அவை பரஸ்பரம் இணங்கிக் கொண்டு இரண்டினதும் சேர்க்கையான புதிய வடிவமாகத் தாராண்மை மறுப்பு ஜனநாயகம் அல்லது லிபரல் விரோத ஜனநாயகம் என்ற உருவத்தைப் பெறலாம். அதுவே இலங்கையில் நடைபெற்றது.
2. தாராண்மை மறுப்பு ஜனநாயகம் தோன்றிய பின்னர், சர்வாதிகாரத்தில் இருந்து மீண்டும் ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கக் கூடிய அமைப்பியல் மாற்றங்களைச் செய்வதை அது அனுமதிக்காது. இதை இலங்கை அனுபவம் உறுதிப்படுத்துகிறது.
இரண்டாவது முடிவு, அரசு – அரசாங்கம் என்ற இரண்டிற்குமிடையிலான இயங்கியல் பற்றியது. அரசின் உருவாக்கம் என்ற செயல்முறையில் பங்குகொள்ளும் விடயங்கள் குறித்த சில கேள்விகளுக்கான விடையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கங்கள் அரசின் இயல்பை மாற்றிவிட முடியுமா? வெவ்வேறு அரசாங்கங்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய அரசு எப்படி மாறுகிறது? வெவ்வேறு அரசாங்கங்களின் வர்க்கச் சார்பும் பின்னணியும், கருத்தியல் சார்புகள், அரசியல் உறுதிமொழிகள், கடப்பாடுகள் என்பன இலங்கையின் பின் காலனித்துவ அரசை எப்படி உருமாற்றின? அதன் மீது எவ்வாறு தாக்கம் புரிந்தன?
இக்கேள்விகள் விளக்கமுறை அரசியல் பகுப்பாய்வு ஒன்றை நடத்தும்போது கேட்க வேண்டிய சுவாரஸ்யமான கேள்விகளாகும். இக்கட்டுரையில் நாம் நிகழ்த்திய பகுப்பாய்வின்படி வெளிப்படும் உண்மை யாதெனில், இலங்கையின் பின் காலனித்துவ அரசை நன்கு புரிந்து கொள்ள நாம் அரசு – அரசாங்கம் என்ற இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும்; அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதாகும்.
அரசு என்பது ஒரு வகைமை (Category). இதுபோன்றே அரசாங்கம் என்பதும் பகுப்பாய்வுக்கு உதவும் வகைமை. நடைமுறை அரசியல் செயல்முறைகளில் அரசு வேறு, அரசாங்கம் வேறு என்பது வெளிப்பட்டுத் தெரிவதில்லை. நடைமுறையில் வெளிப்பட்டுத் தெரியாத இவற்றை பகுப்பாய்வுத் தேவைக்காக நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். அரசாங்கம் எவ்வாறு அரசை ஊடுருவி நிற்கிறது என்பதையும், அரசு அரசாங்கத்தின் மீது தங்கியிருப்பதாக மாறுகின்றது என்பதையும் அலசிப் பார்க்க வேண்டும்.
இதன் மூலமே அரசாங்கத்தின் கொள்கைகளும் முன்னுரிமைகளும், அரசு அதிகாரத்தின் கொள்கைகளும் முன்னுரிமைகளும், அரசு அதிகாரத்தின் செயற்பாட்டை வரையறை செய்வதையும் மறு வரையறை செய்வதையும் கண்டு கொள்ளலாம். அரசின் மறு உற்பத்தியில் அரசாங்கங்களின் வகிபாகம் யாது என்ற விடயம் தனியாக ஆராயப்பட வேண்டியது.
தொகுப்புரை
பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்கள் 1948ற்குப் பிற்பட்ட கால அரசை ‘பின்காலனித்துவ அரசு’ (Post-Colonial State) என வரையறை செய்துள்ளார். அவரது இவ்வரையறை, இலங்கையின் மார்க்சிய அரசியல்வாதிகளின் ஒரு பிரிவினர் 1948ற்குப் பிற்பட்ட கால இலங்கையின் நிலையை ‘நவகாலனியம்’ (Neo-Colonialism) என வரையறை செய்வதிலிருந்து மாறுபட்டதாக இருப்பதைக் காணலாம். இலங்கையை ‘நவகாலனியம்’ என்று கூறுவதன் பொருள், காலனியம் புதிய வடிவத்தில் இன்னும் தொடர்கிறது என்பதாக அமைகிறது. ஆகையால் ‘நவகாலனியம்’ என்னும் கருத்தின் நீட்சியாக இலங்கையின் அரசை ‘நவகாலனித்துவ அரசு’ என்றே வரையறை செய்ய வேண்டும். ஜயதேவ உயன்கொட அவர்கள் இலங்கையின் அரசை ‘பின்காலனித்துவ அரசு’ என வரையறை செய்வதன் மூலம் ‘நவகாலனியம்’, ‘நவகாலனித்துவ அரசு’ ஆகிய கருத்துகளை நிராகரிக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.
1948 இல் இலங்கை பெற்றுக்கொண்ட சுதந்திரம் போலியானது; இலங்கை அரசு அன்று முதல் காலனித்துவ அரசின் கருவியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற வாதம் ஜயதேவ உயன்கொட அவர்களால் நிராகரிக்கப்படுகின்றது என்றே கொள்ளலாம். இலங்கையின் அரசை நவகாலனிய அரசு என்று கூறுவோர், இலங்கை அரசிடம் சுயநிர்ணய உரிமையைக் (Self Determination) கோரும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டத்தை நவகாலனிய, ஏகாதிபத்தியச் சூழ்ச்சி என்று கொச்சைப்படுத்துவதையும், குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் உள்ளகச் சுயாட்சிக் (Internal Autonomy) கோரிக்கையை நிராகரித்து, இலங்கையின் பெரும்பான்மை தேசியவாதத்தை நியாயப்படுத்துவதையும் காண முடிகிறது.
இலங்கையை பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் ஜயதேவ உயன்கொட ஒப்பிடுகிறார். இலங்கையில் ஒப்பீட்டளவில் ஜனநாயக நிறுவனங்கள் பலமுடையனவாக இருந்தன. இந்நிறுவனங்கள் இராணுவத்தை விடப் பலமுடையனவாக இருந்தன என்றும் அவர் கூறுகிறார். பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் போன்று இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படவில்லை; 1962 இன் இராணுவச் சதி முயற்சி இலங்கையில் தோல்வியுற்றமை இவ்வுண்மையை எடுத்துக் காட்டுகிறது என்று கூறுகிறார். ஆயினும், இலங்கையில் பின்காலனித்துவ அரசின் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் படிப்படியாக ஜனநாயக நிறுவனங்கள் பலமிழந்து போவதற்குக் காரணமாக அமைந்தன என்பதை அவர் எடுத்துக் காட்டுகிறார்.
1956 இன் அரசியல் மாற்றம்
1956–1965 காலத்தில் இலங்கை அரசு தலையிடும் அரசு (Interventionist State) என்னும் தன்மையைப் பெற்றது. இக்காலத்தில்,
1. மக்கள்வாதம் (Populism)
2. இனக்குழுமப் பெரும்பான்மைவாதம் (Ethnic Majoritarianism)
என்பன எழுச்சி பெற்றன. தாராண்மை ஜனநாயகப் பண்புகளை அரசுக் கட்டமைப்பிலும் அரசியலிலும் இருந்து நீக்குவதற்கு இவை துணையாயின. இக்கால அரசு, அரச முதலாளித்துவத்தை வலுப்படுத்தியதோடு, இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதம் என்ற கருத்தியல்களின் அடிப்படையில் அரசுக் கட்டமைப்புகளை வடிவமைத்தது.
1970 இன் அரசியல் மாற்றம்
1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தது. இந்த முன்னணி ஒரு சமூகக் கூட்டணியாகவும், பலம் வாய்ந்த அரசியல் கூட்டணியாகவும் விளங்கியது.
1. சிங்கள முதலாளித்துவத்தின் இரண்டாம் படிநிலையைச் சேர்ந்த முதலாளி வர்க்கம்
2. நகரத் தொழிலாளர் வர்க்கம்
3. கிராமப்புற விவசாயக் குடியான் வர்க்கம்
4. இடைத்தரக சமூக வர்க்கங்கள்
என்பன இக்கூட்டணியில் இணைந்தன. இவை இனவாதத்தைத் தழுவித் தம் அரசியல் கொள்கைகளை வகுத்துக்கொண்டன.
1972 அரசியல் யாப்பு
ஒற்றையாட்சி முறையில் அமைந்த மத்தியப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பை 1972 அரசியல் யாப்பு புகுத்தியது. அரசு தாராண்மை மறுப்பு இயல்புடையதாகக் கட்டமைக்கப்பட்டது. 1972 அரசியல் யாப்பின் ஜனநாயக விரோத, தமிழர் விரோத அம்சங்களை ஜயதேவ உயன்கொட பின்வருமாறு பட்டியலிட்டுக் கூறுகிறார்:
1. தமிழ்ச் சிறுபான்மை இனத்திற்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பதற்கான வழியாக அமைந்த பிரதேச சுயாட்சிக் கோரிக்கையை முற்றாகப் புறக்கணித்து, அரசின் ஒற்றையாட்சி இயல்பை மேலும் வலுப்படுத்தல்.
2. ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மைப் பலம் கொண்டிருந்த கீழ் சபைக்குக் கட்டுப்பாடில்லா சட்ட ஆக்க அதிகாரத்தை வழங்கியதோடு, மேற் சபையான செனட் சபையையும் இல்லாது ஒழித்தல்.
3. சட்டசபையினதும் மந்திரிசபையினதும் அதிகாரங்களை எல்லை மீறாது வைத்திருக்கக்கூடிய ‘கட்டுப்படுத்தல்கள் மற்றும் சமநிலைகள்’ (Checks and Balances) என்னும் பொறிமுறையை நீக்குதல்.
4. சோல்பரி அரசியல் யாப்பின்படி நீதித்துறைக்கு இருந்த மட்டுப்படுத்தப்பட்ட நீதி மீளாய்வு அதிகாரத்தையும் இல்லாது ஒழித்தல்.
5. நிர்வாகத்துறையின் ஆணைக்குக் கீழ்ப்பட்டதாக நீதித்துறையைத் தரம் தாழ்த்தல்.
6. பொதுச் சேவையை மந்திரிசபையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல்.
7. புதிய அரசியல் யாப்பு, அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் நடைமுறைக்கு வந்தது என்ற போலிக் காரணத்தைக் காட்டி, அரசாங்கத்திற்கு ஐந்து வருடங்கள் மட்டுமே பதவியில் இருக்கும் உரிமையை ஏழு ஆண்டுகளாக நீட்டித்தல்.
1972 அரசியல் யாப்பு சிங்களத் தேசியவாத அரசியல் யாப்பாக அமைந்தது. பின் காலனித்துவ கட்டத்தில் சிங்களத் தேசியவாதம் வகுத்துக் கொண்ட இறுதி இலக்குகள் எவையோ, அவை அனைத்தையும் அடைவதற்கான வழியை 1972 அரசியல் யாப்பு அமைத்துக் கொடுத்தது.
1977 – 1993 காலம்
ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் ஆர். பிரேமதாச ஆகியவர்களின் தலைமையில் 1977–1993 காலத்தில்,
அ) இனக்குழுமப் பெரும்பான்மைவாதம்
ஆ) தாராண்மை மறுப்பும் லிபரல் விரோத அரசியலும்
ஆகிய இரு பண்புகளும் அரசியலில் அழுத்தம் பெற்றன.
தாராண்மை மறுப்பு அல்லது தாராண்மை நீக்கம் என்பதன் விளைபொருள் தாராண்மையற்ற அரசு ஆகும். இதன் மறுபெயர் சர்வாதிகார அரசு எனலாம். இருப்பினும் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகள் போன்று சர்வாதிகார முறைக்கு நேரடியாக மாறவில்லை. பாராளுமன்ற ஜனநாயக முறைமைகளை வைத்துக்கொண்டே சர்வாதிகாரம் இங்கே புகுந்துகொண்டது. சர்வாதிகாரமும் ஜனநாயகமும் பரஸ்பரம் இணக்கம் செய்து கொண்டு ஒருங்கே உறையும் நிலை காணப்பட்டது.
ஆசியாவின் பிற வல்லாதிக்க அரசுகள் பயணித்த பாதைக்கும் இலங்கையின் பின்காலனித்துவ அரசு சென்ற பாதைக்கும் உள்ள வித்தியாசங்களை நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். ஹம்சா அலவி மூன்றாம் உலக நாடுகளின் பின்காலனித்துவ அரசுகள் பற்றிய விளக்கமொன்றை பாகிஸ்தான், பங்களாதேஷ் உதாரணங்களைக் கொண்டு 1970களில் முன்வைத்தார். அவர் முன்வைத்த ‘மிகை வளர்ச்சியுள்ள அரசு’ (Overdeveloped State) என்ற கருத்தாக்கத்தை நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டு, இலங்கை நிலைமைக்கு அது பொருந்தவில்லை என உயன்கொட குறிப்பிடுகிறார். அரசியல் சிதைவு (Political Decay), நிறுவனச் சிதைவு (Institutional Decay) ஆகிய பிற ஆய்வாளர்களின் கருத்தாக்கங்கள் பற்றியும் உள்ளொளி மிக்க குறிப்புகளைத் தருகிறார்.
இக்கட்டுரை பேராசிரியர் என். சண்முகரத்தினம் அவர்களின் அறிவுத்துறைப் பணிகளைப் பாராட்டும் வகையில் வெளியிடப்பட்ட எழுபதாண்டு நிறைவு வெளியீடான ‘The Political Economy of Environment and Development in a Globalised World’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையின் தழுவலாக இது அமைந்துள்ளது.
உசாத்துணைப் பட்டியல்
- Alavi, H. (1972) The State in Post-Colonial Societies: Pakistan and Bangladesh. New Left Review, No. 74, luly-August, 1972, 145-173.
- Amarasinghe, Y. R. (1998) Revolutionary Idealism and Parliamentary Politics…. Struggle of Trotskyism in Sri Lanka. Colombo: Social Scientists’ Association.
- De Silva, C. R. (1989) Reflections on the Institutional form of the Sri Lanka State in Amaratunga, C. (ed.) Ideas for Constitutional Reform. Colombo: Council for Liberal Democracy, 327-343.
- De Votta, N. (2000) ‘Control Democracy, Institutional Decay, and the Quest for Eelam: Explaining Ethnic Conflict in Sri Lanka, Pacific Affairs, Vol. 73, No. 2 (Spring 2000), 55-76.
- De Votta, N. (2004) Blowback, Linguistic Nationalism, Institutional Decay and Ethnic Conflict in Sri Lanka. Stanford: Stanford University Press.
- Fernando, A. (2008) My Belly is White: Reminiscences of a Peacetime Secretary of Defence. Colombo: Vijitha Yapa Publishers.
- Gosh, P. (2003) Ethnicity Versus Nationalism: The Devolution Discourse in Sri Lanka.New Delhi: SAGE Publications.
- Gunasinghe, N. (1996) Land Reform, Class Structure and the State [in Sri Lanka] in Perera, S. (ed.), Newton Gunasinghe: Selected Essays. Colombo: Social Scientists’ Association, 50-73.
- Herring, R. I. (1983) Land to the Tiller, Political Economy of Agrarian Reform in South Asia. New Haven: Yale University Press.
- Horowitz, D. L. (1980) Coup Theories and Officers’ Motives: Sri Lanka in Comparative Perspective. Princeton, N): Princeton University Press.
- Jupp, I. (1978) Sri Lanka: Third World Democracy. Colombo: KVG de Silva and Sons.
- Kalecki, M. (1972) Social and Economic Aspects of Intermediate Regimes in Selected Essays in the Economic Growth of the Socialist and Mixed Economy. Cambridge: Cambridge University Press.
- Kearney, R. (1967) Communalism and Language in the Politics of Ceylon. Durham: Duke University Press.
- Kothari, R. (1964) The Congress ‘System’ in India. Asian Survey, Vol. 4, No. 12, (December, 1964), 1161-1173.
- Krishna, S. (1999) Postcolonial Insecurities: India, Sri Lanka and the Question of Nationhood. Minneapolis: University of Minnesota Press.
- Loganathan, K. (1996) Sri Lanka, Lost Opportunities: Past Attempts at Resolving Ethnic Conflict. Colombo: University of Colombo.
- Moore, M. (1985) The State and Peasant Politics in Sri Lanka. Cambridge: Cam-bridge University Press.
- Moore, M. (1990) Economic Liberalization Vs. Political Pluralism in Sri Lanka. Modern Asian Studies, Vol. 24, N0. 2, (May 1990), 341-383.
- Moore, M. (1992) Retreat from Democracy in Sri Lanka. Journal of Commonwealth and Comparative Politics, No. 30, 70-84.
- O’Donnel, G. (1973) Modernization and Bureaucratic Authoritarianism: Studies in South American Politics. Berkley: University of California Press.
- O’Donnel, G. (1978) Reflections on the Pattern of Change in the Bureaucratic-Authoritarian State. Latin American Research Review, Vol. 13, No. 1.
- Hirschman, A. O. (1979) The Turn to Authoritarianism in Latin America and the Search for Economic Determinants in Collier, D. (ed.) New Authoritarianism in Latin America. Princeton: Princeton University Press.
- Ponnambalam, S. (1981) Dependent Capitalism in Crisis: the Sri Lankan Economy 1948-1980. London: Zed Press.
- Raj, K. N. (1973) The Politics and Economics of Intermediate Regimes. Economic and Political Weekly, Vol. 8, No. 27.
- Roberts, M. (1978) Ethnic Conflict in Sri Lanka and Sinhalese Perspectives: Barriers to Accommodation. Modern Asian Studies, 12:3, 353-376.
- Russel, I. (1971) Communal Politics under the Donoughmore Constitution, 1931-1947. Dehiwela: Tisara Publishers.
- Shanugaratnam, N. (1980) Emerging Agrarian Trends and Some Reflections on the Agrarian Reforms in Sri Lanka. Social Science Review, NO. 2, January 1980, 56-111.
- Shanugaratnam, N. (1985) Colonial Agrarian Changes and Underdevelopment in Abeysekera, C. (ed.) Capital and Peasant Production: Studies in the Continuity and Discontinuity of Agrarian Structures in Sri Lanka. Colombo: Social Scientists’ Association, 1-20.
- Shanugaratnam, N. (1993) The National Question and Obstacles to Peace in Sri Lanka: Some Reflections. Pravada, Vol. 2, No, 5, 4-11.
- Shastri, A. (1983) The Political Economy of Intermediate Regimes: The Case of SriLanka, 1956-1970. South Asia Bulletin, Vol. 3, No. 2, (Fall 1983), 1-15.
- Sobhan, R. and Ahmad, M. (1979) Public Enterprise in an Intermediate Regime: A Study in the Political Economy of Bangladesh. Dacca: Bangladesh Institute of Development Studies.
- Uyangoda, J. (1999) A State of Desire? Some reflections on the Unreformability of Sri Lanka’s Post-colonial State in Hettige, S. and Meyer, M. (eds.) Sri Lanka at Crossroads. New Delhi: Macmillan, 92-118.
- Uyangoda, J. (2011) Travails of State Reform in the Context of Protracted Civil War in Sri Lanka in Stokke, K. and Uyangoda, I. (eds.) Liberal Peace in Question: Politics of State and Market Reform in Sri Lanka. New York and London: Anthem Press, 35-62.
- Wickramasingha, N. (1995) Ethnic Politics in Colonial Sri Lanka: 1927-1947. New Delhi: Vikas Publishing House.
- Wilson, A. I. (1974) Politics in Sri Lanka. London: Macmillan.
- Wilson, A. I. (1988) The Break-up ofSri Lanka: The Sinhala-Tamil Conflict. Lon-don: C. Hurst 8r Co.
- Wriggins, I-I. (1960) Ceylon: Dilemmas of a New Nation. Princeton: Princeton University Press.



