ஆங்கில மூலம்: லக்ஸ்மன் மாறசிங்க
குறூ – மக்கலம் சீர்த்திருத்தம்
1911 ஆம் ஆண்டு குறூ – மக்கலம் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியல் யாப்பு கோல்புறூக் அரசியல் யாப்பின் பிரதான குறைகள் சிலவற்றைத் திருத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வரையப்பட்ட யாப்பாகும். பிரித்தானிய அரசாங்கம் கோல்புறூக் யாப்பில் அடையாளம் கண்ட குறைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட திருத்தங்களை நான்காக வகுத்துக் கூறலாம்.
1. சட்டசபையில் உத்தியோகப்பற்றுள்ள உறுப்பினர்கள் (Official Members) எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களின் (Un-official Members) எண்ணிக்கையை அதிகரித்து சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது முதலாவது நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு அமைய சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது கோல்புறூக் சட்டசபையில் 8 ஆக இருந்த எண்ணிக்கை 2 ஆல் உயர்த்தப்பட்டது. கீழே தரப்பட்டுள்ள அட்டவணை இந்த மாற்றத்தை விளக்குவதாக உள்ளது.
| சமூகம் | பிரதிநிதிகளின் எண்ணிக்கை | |
|---|---|---|
| கோல்புறூக் | குறூ – மக்கலம் | |
| ஐரோப்பியர் | 03 | 02 |
| பறங்கியர் | 01 | 01 |
| தமிழர் | 01 | 02 |
| சிங்களவர் | 01 | 02 |
| கண்டிச் சிங்களவர் | 01 | 01 |
| முஸ்லிம்கள் | 01 | 01 |
| படித்த இலங்கையர் | 00 | 01 |
| மொத்தம் | 08 | 10 |
மேற்படி அட்டவணையின்படி, ஐரோப்பியப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3 இல் இருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டது. பறங்கியர், கண்டிச் சிங்களவர், முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகங்களினதும் பிரதிநிதிகள் எண்ணிக்கையில் மாற்றம் எதுவும் இருக்கவில்லை. புதிதாக ‘படித்த இலங்கையர்’ (Educated Ceylonese) என ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தி அச்சமூகத்திற்கு ஓர் ஆசனம் சட்டசபையில் ஒதுக்கப்பட்டது. சட்டசபை 21 பேர் கொண்ட சபையாக இருந்தது. சட்டசபையின் தலைவரான ஆளுநரும் இவர்களுள் ஒருவராவார். திருத்தி அமைக்கப்பட்ட சட்டசபையில் கோட்பாட்டு அளவில் சமநிலை காணப்பட்டது. அதாவது உத்தியோகப்பற்றுள்ளவர்கள் 10 பேர், உத்தியோகப்பற்றற்றவர்கள் 10 பேர் என்ற வகையில் சமநிலை காணப்பட்டது.
2. உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களில் குறிப்பிட்ட இரு சாதிகளதும், குடும்பங்களதும் ஆதிக்கம் இருந்து வந்தது. இதனை மாற்றவும், உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களாக சிங்கள கராவ சாதிப் பிரதிநிதி ஒருவரையும், தமிழ்க் கிறிஸ்தவர் ஒருவரையும் சேர்த்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. சிங்களவர்களின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் கராவ சாதியைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருந்தார். தமிழர்களின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தமிழ்க் கிறிஸ்தவரைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருந்தார். இவ்விதமாக சட்டசபையின் கலவையில் (Composition) மாற்றம் ஏற்பட்டது.
3. ‘படித்த இலங்கையர்’ (Educated Ceylonese) என்னும் சமூகக் குழுவை காலனிய ஆட்சியாளர்கள் அடையாளம் கண்டதும், அச்சமூகத்திற்குச் சட்டசபையில் ஓர் ஆசனத்தை ஒதுக்கியதும் குறூ – மக்கலம் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கியமான மாற்றமாகும். இச்சமூகக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலம் கற்றவர்களாயும், மேற்கத்தைய நாகரிகத்தையும் பழக்கவழக்கங்களையும் தழுவிக்கொண்டவர்களாயும் இருந்தனர். இவ்வகுப்பினருக்கும் இலங்கையின் சாதாரண சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகியிருந்தது. ஆயினும் எதிர்கால இலங்கையின் ஆட்சி அதிகாரப் பொறுப்பை ஏற்கும் தகுதியுடைய வகுப்பு இதுவென காலனிய ஆட்சியாளர்கள் கருதினர். குறூ – மக்கலம் அரசியல் யாப்பினால் ‘படித்த இலங்கையர்’ (Educated Ceylonese) என அடையாளம் காணப்பட்ட இச்சமூகப் பிரிவினருக்குச் சட்டசபையில் ஓர் ஆசனம் ஒதுக்கப்பட்டது.
4. தெரிவு செய்தல் என்னும் தத்துவம் (Elective Principle) குறூ – மக்கலம் யாப்பில் புகுத்தப்பட்ட நான்காவது மாற்றமாகும்.
படித்த இலங்கையரைத் தெரிவு செய்வதற்கான வாக்களார்கள்
குறூ – மக்கலம் சீர்திருத்தம் இலங்கையர் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கவில்லை. படித்த இலங்கையரைத் தேர்வு செய்வதற்கான வாக்களர்களாக மொத்தச் சனத்தொகையில் 1.1% மக்களே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டுப்படுத்தப்பட்ட இந்த வாக்குரிமை முறையின் முக்கிய அம்சங்கள் பின்வருவன.
- கரைநாட்டுச் சிங்களவர், கண்டியச் சிங்களவர், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய நான்கு இனத்தவர்களில் இருந்து வாக்களிக்கும் தகுதியுடையவர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் அட்டவணையில் பதிவு செய்யப்பட்டனர்.
- 25 வயதுக்கு மேற்பட்டவர்களான ஆண்கள், ஏனைய தகுதிகளும் இருந்தால் வாக்களார் அட்டவணையில் சேர்க்கப்பட்டனர்.
- மேற்படி விதி பெண்கள் அனைவரையும் விலக்குவதாக அமைந்தது.
- இலங்கையில் பிறந்தவராக இருக்க வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற இரு விதிகளும் இந்தியத் தமிழர், இந்திய மூர்கள் (Indian Moors), இலங்கையில் குடியேறியிருந்த மலேயர்கள் ஆகிய இனக்குழுமங்களை விலக்குவதாக அமைந்தது.
- இறுதியாக தொழில், வருமானம், சொத்து, ஆங்கிலக்கல்வி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் வாக்காளர் அட்டவணையில் சேர்க்கப்பட்டோர் மேலே குறிப்பிட்டது போல் மக்கள் தொகையின் 1.1% ஆக இருந்தனர் என்பது ஆச்சரியத்திற்குரியதன்று.
1911 ஆம் ஆண்டில் ‘படித்த இலங்கையர்’ ஆசனத்திற்கான தேர்தல், சிங்கள – தமிழ் உயர்குழாம்களிடையே தேசியவாத உணர்வை வளர்த்தது. மிதவாதிகளான சிங்கள, தமிழ்த் தலைவர்கள் 1917 ஆம் ஆண்டில் ‘இலங்கைச் சீர்திருத்தக் கழகம்’ (Ceylon Reform League) என்ற அமைப்பை உருவாக்கினர். அதே ஆண்டில் ‘இலங்கை தேசிய அமைப்பு’ (Ceylon National Association) என்னும் அமைப்பும் உருவாக்கப்பட்டது. பின்னர் இரு ஆண்டுகள் கடந்த பின் 1919 ஆம் ஆண்டில் இவ்விரு அமைப்புகளும் ஒன்றிணைக்கப்பட்டு ‘இலங்கை தேசிய காங்கிரஸ்’ (Ceylon National Congress) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஒன்றிணைந்த சிங்கள, தமிழ் தலைவர்களிடையே பின்னர் கருத்து வேறுபாடுகள் முற்றின. 1921 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் உடைவுற்றது.
குறூ – மக்கலம் அரசியல் யாப்பின் எதிர்மறை விளைவுகள்
படித்த இலங்கையருக்கு ஓர் ஆசனத்தைச் சட்டசபையில் ஒதுக்கியமை, அந்த ஆசனத்திற்கு தெரிவு முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தமை என்பன சிங்கள – தமிழ் உயர் குழுக்களிடையே தேசியவாத உணர்வுகளைத் தூண்டி வளர்த்தன என்பதை மேலே குறிப்பிட்டோம். ஆயினும், குறூ – மக்கலம் அரசியல் யாப்பின் முற்போக்கான இந்த நடவடிக்கைகள் எதிர்பாராத எதிர்மறை விளைவுகளை உருவாக்கின. அரசியல் யாப்பைச் செயற்படுத்திய போது அரசாங்கம் பின்வரும் விடயங்களில் தவறுகளை இழைத்தது.
1911 இன் சனத்தொகை மதிப்புப் புள்ளிவிவரங்கள் வெளியான போது சுதேசிகளில் பெரும்பான்மையினரான சிங்கள இனத்திற்கு, அவை அதிருப்தி அளிப்பனவாக இருந்தன. சிங்கள மக்கள் ஏறக்குறைய சனத்தொகையின் 61 வீதத்தினராகவும், தமிழர்கள் 12.8 வீதத்தினராகவும் இருப்பதை புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டின. கோல்புறூக் அரசியல் யாப்புக் காலம் முழுமையிலும் சிங்களப் பெரும்பான்மையினம் ஏமாற்றப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. 61 வீத மக்களிற்கு சட்டசபையில் 03 ஆசனங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்த வேளையில், வெறும் 12.8 வீத சனத்தொகையைக் கொண்ட இலங்கைத் தமிழர்களுக்கு 02 ஆசனங்கள் வழங்கப்பட்டிருந்தமையை அநீதியானது எனச் சிங்களத் தலைமை உணர்ந்தது. கோல்புறூக் திட்டத்தையே குறூ – மக்கலம் அரசியல் யாப்பும் பின்பற்றுவதாகவும், சிங்களப் பெரும்பான்மை இனத்திற்கு எதிரான பாரபட்சம் தொடருவதாகவும் விமர்சனம் எழுந்தது. சனத்தொகைப் புள்ளிவிவரங்கள் பற்றிய இரு அட்டவணைகள் கீழே தரப்பட்டுள்ளன. அப்புள்ளிவிவரங்களின் துணையுடன் மேற்படி விமர்சனத்தைப் பரிசீலித்தல் பயனுடையது.
அட்டவணை 4
1911 ஆம் ஆண்டின் சனத்தொகை: சிங்களவர் (கரைநாட்டுச் சிங்களவர், கண்டிச் சிங்களவர்), இலங்கைத்தமிழர், இலங்கையின் மூர்கள்
| ஆண் | பெண் | ||
| கரைநாட்டுச் சிங்களவர் | 1,716,859 | 894,078 | 822,781 |
| கண்டியச் சிங்களவர் | 998,561 | 525,483 | 473,078 |
| இலங்கைத் தமிழர்கள் | 528,024 | 268,649 | 259,375 |
| இலங்கை மூர்கள் (முஸ்லிம்கள்) | 233,901 | 122,114 | 111,787 |
| மொத்தம் | 2.477.305 | 1.810,324 | 1,667,021 |
குறிப்பு: மேற்படி அட்டவணை இலங்கையின் நான்கு சமூகப்பிரிவினர்களின் சனத்தொகையை மட்டும் உள்ளடக்கியுள்ளது. இந்தியத் தமிழர், இந்திய முஸ்லிம்கள், பறங்கியர், மலே இனத்தவர், ஐரோப்பியர் ஆகிய பிற இனக்குழுக்களின் புள்ளிவிவரம் உள்ளடக்கப்படவில்லை.
அட்டவணை 5
சனத்தொகைப் புள்ளிவிவரம் – 1911 – 1921 ஆண்டுகள்
| 1911 | 1921 | |
| மொத்தச் சனத்தொகை | 4,107,350 | 4,498,605 |
| சிங்களவர் (கரை நாட்டவர் + கண்டியர்) | 2,715,420 | 3,016,154 |
| இலங்கைத் தமிழர் | 528,024 | 517,324 |
| மொத்தச் சனத்தொகையின் வீதாசாரமாக சிங்களவர் | 66.1% | 67.02% |
| மொத்தச் சனத்தொகையின் வீதாசாரமாக இலங்கைத் தமிழர் | 12.8% | 11.5% |
12.8 வீதமான இலங்கைத் தமிழர்கள் தமது விகிதாசாரத்திற்கு மிகுதியான அளவில் அரசியல் பலம் மிக்கவர்களாக உள்ளனர்; பொருளாதார பலமும் அவர்களிடம் உள்ளது; இந்தப் போக்கை அனுமதித்தால் இலங்கையின் சிறும்பான்மைக் குழுவான தமிழர்கள், பெரும்பான்மையினரான சிங்களவர்களை ஆள்பவர்களாக மாறிவிடுவர் என்ற அச்சம் சிங்களத் தலைவர்கள் மனதில் எழுந்தது. சிங்கள அமுக்கக் குழுக்கள் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற பிரதிநிதித்துவம் (Proportional Representation) அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.
படித்த இலங்கையர் என்ற சமூகக் குழுவை குறூ – மக்கலம் அரசியல் யாப்பு அடையாளப்படுத்தி, அச்சமூகக் குழுவிற்கு தனிச்சலுகையொன்றை வழங்கியது. சட்ட சபையில் ஓர் ஆசனம் என்பதே இச்சலுகையாகும். 1911 ஆம் ஆண்டுக் காலத்தில் ‘படித்தவர்’ என்பது ‘ஆங்கிலம் கற்றவர்’ என்ற பொருளைப் பெற்றது. இதனால் ஆங்கிலம் கற்றவரே வாக்களிக்கும் தகுதி உடையவரென்று அறிவிக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி சமூகத்தின் உயர்குழு ஒன்றிற்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பண்டமாக இருந்த காலத்தில், அக்கல்வியைப் பெறமுடியாத மக்கள் அனைவரையும் குறூ – மக்கலம் சீர்திருத்தம் வாக்களிக்கத் தகுதியற்றவர் எனப் பிரகடனம் செய்ததெனலாம். ‘படித்த இலங்கையர்’ என்ற சமூகக் குழுவை அடையாளப்படுத்தியதன் மூலம் சிங்களம், தமிழ் என்னும் இரு மொழிகளினதும் தரம் தாழ்த்தப்பட்டது. அம்மொழிகளில் கல்வி கற்றவர்கள் வாக்கைப் புத்திசாலித்தனமாகவும், சரியாகவும் பிரயோகிக்கும் தகுதியற்றவர்கள் என இழிவுபடுத்தப்பட்டனர். மேலும், ஆங்கிலக்கல்வி இலங்கையின் தேசிய இனங்களிடையே பரவியிருந்த முறையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கரைநாட்டுச் சிங்களவர், இலங்கைத் தமிழர் ஆகிய இரு இனக்குழுக்களும் ஒப்பீட்டளவில் ஆங்கிலக்கல்வியில் முன்னிலையில் இருந்தன. சட்டவாளர்கள், மருத்துவர்கள் போன்ற உயர்தொழில்களில் இலங்கைத் தமிழர்கள் சனத்தொகை விகிதாசாரத்திலும் கூடிய அளவு இடங்களைப் பிடித்திருந்தனர். கீழே தரப்பட்டுள்ள அட்டவணை 6 இல் தரப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் இந்த ஏற்றத்தாழ்வுகளை ஒப்பீட்டு முறையைில் விளக்குவதற்கு உதவக்கூடியன.
அட்டவணை 6
தொழில்கள் சிலவற்றின் இனவாரியான சனத்தொகை – 1911
| வீதாசாரம் | |||||
| பதவிநிலை | எல்லா இனங்களும் மொத்தம் | கரைநாட்டுச் சிங்களவரும் கண்டிச் சிங்களவரும் | இலங்கைத் தமிழர் | தமிழர் | சிங்களவர் |
| பொது நிர்வாகத்துறை (Publicadministaration) | 5375 | 2862 | 960 | 17.8 | 53.2 |
| சட்டவாளர்கள்(Lawyear) | 854 | 481 | 205 | 24 | 56.3 |
| மருத்துவர்கள் | 1370 | 348 | 625 | 45.6 | 25.4 |
| ஆசிரியர்கள் | 6959 | 3932 | 1868 | 26.8 | 56.5 |
மேற்குறித்தவை போன்ற புள்ளிவிவரங்கள் இனவாத அடிப்படையிலான சர்ச்சைகளினைத் தோற்றுவித்தன.
1921 அரசியல் யாப்பு மாற்றங்களின் வரலாற்றுப் பின்புலம்
1919 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு இலங்கையின் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய அனைத்துச் சமூகப் பிரிவினரையும் உள்ளடக்கிய புதிய உயர் குழுவாக (A New Elite Group) விளங்கியது. பொன்னம்பலம் அருணாசலம் இக்குழுவின் தலைமைப் பதவியை ஏற்றிருந்தார். பிரித்தானியாவின் காலனிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் மில்னர் பிரபுவிற்கு (Lord Milner) அனுப்பி வைத்த மனுவொன்றில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தது.

- 50 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை அமைக்கப்பட வேண்டும்.
- இந்த உறுப்பினர்களில் 4/5 பங்கினர் பிரதேசவாரியாக (Territorially) தெரிவு செய்யப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
- ஆண்களுக்கு மட்டுப்பாடுகள் இல்லாது வாக்குரிமையை வழங்க வேண்டும். பெண்களுக்கும் சில மட்டுப்பாடுகளுடன் வாக்குரிமையை விரிவாக்கம் செய்தல் வேண்டும்.
- சட்டசபையின் 1/5 பங்கு உறுப்பினர்கள் இலங்கையின் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுதல் வேண்டும். இந்நியமன உறுப்பினர்கள் உத்தியோகப்பற்றற்றவர்களாக (Un-official Members) இருத்தல் வேண்டும்.
- சட்டசபையின் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்ட ஒருவராக இருத்தல் வேண்டும்.
- வரவு செலவுத் திட்டத்தின் மீது சட்டசபை முழுமையான கட்டுப்பாட்டை உடையதாக இருத்தல் வேண்டும்.
- நிருவாக சபையின் (Executive Council) உறுப்பினர்களில் அரைப்பங்கினர் இலங்கையர்களாக இருத்தல் வேண்டும்.
- பிரித்தானியப் பாராளுமன்ற நடைமுறைகளில் அனுபவம் உள்ள ஒருவரை இலங்கையின் ஆளுநராக நியமிக்க வேண்டும். இலங்கையின் மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுய ஆட்சியை இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைத் தேசிய காங்கிரசின் மேற்படி கோரிக்கைகளில் இனவாரிப் பிரதிநிதித்துவம் (Communal Representation) பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பது அவதானிக்கத்தக்கது. 1911 இன் பின்னர் உள்ள காலத்தின் இனவாதச் சர்ச்சைகளில் இருந்து தம்மைத் தூர விலக்கிக்கொண்ட ‘படித்த இலங்கையர்களின்’ சிறு உயர்குழுவினர் இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமையை ஏற்று அதனை வழிநடத்திச் சென்றனர். அவர்களின் கோரிக்கைகள் லிபரல் ஜனநாயக விழுமியங்களில் காங்கிரஸ் தலைவர்களுக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியது. மில்னர் பிரபுவுக்கு இக்கடிதம் 1918 இல் அனுப்பப்பட்ட சமயத்தில் மனிங் இலங்கையின் ஆளுநராக இருந்தார். ஆளுநர் மனிங், இலங்கை தேசிய காங்கிரஸ் ஆகிய இரு தரப்பினரிடையிலும் இடம்பெற்ற பேரம்பேசுதலின் விளைவாக ‘1920 இன் தற்காலிக அரசியல் யாப்பு’ (Temporary Constitution of 1920) உருவாக்கம் பெற்றது. இத்தற்காலிக அரசியல் யாப்பு 1921 இல் நடைமுறைக்கு வந்தது. இத்தற்காலிக அரசியல் யாப்பிற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதன் விளைவாக 1924 மனிங் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் (1924 – 1931) நடைமுறைக்கு வந்தன.
1921 அரசியல் யாப்பு, 1924 அரசியல் யாப்பு என்னும் இரு யாப்புகளும் கோல்புறூக் மாதிரியில் அமைந்தன. 1921 யாப்பில் சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 37 ஆகவும், 1924 இல் அதன் எண்ணிக்கை 49 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. இவ்விரு யாப்புகளின் சட்டசபைகளின் கட்டமைப்பை விளக்கும் படவிளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
1921 – சட்டசபை

1924 – சட்டசபை

பிரதேசவாரி
மேல் மாகாணம் – 5
வட மாகாணம் – 5
தென் மாகாணம் – 3
மத்திய மாகாணம் – 2
கிழக்கு மாகாணம் – 2
வடமேல் மாகாணம் – 2
வடமத்திய மாகாணம் – 1
ஊவா மாகாணம் – 1
சப்பிரகமுவ மாகாணம் – 2
குறிப்பு: சி.அ. யோதிலிங்கம் அவர்களின் ‘இலங்கையின் அரசியல் யாப்புகள் – 2025’ நூலில் முறையே பக்கம் 43, 48 ஆகியனவற்றில் தரப்பட்டுள்ள விளக்கப் படங்களைத் தழுவித் தயாரிக்கப்பட்டுள்ள இப்படங்கள் 1921, 1924 ஆகிய இரு அரசியல் யாப்புகளினதும் முக்கிய கூறுகளை விளக்குவதற்கு உதவுவனவாக உள்ளன.
1. இவ்விரு யாப்புகளும் கோல்புறூக் மாதிரியில் (Colebrook Model) அமைந்திருந்தன. நிர்வாக சபை, சட்டசபை ஆகியவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
2. கோல்புறூக் சட்டசபையில் 15 உறுப்பினர்கள் இருந்தனர். அந்த எண்ணிக்கை 1911 சட்டசபையில் 21 ஆக அதிகரித்தது.
1921 சட்டசபை – 37
1924 சட்டசபை – 48
என 13 ஆண்டுகால இடைவெளியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
3. பிரதேசவாரி பிரதிநிதித்துவம் (Territorial Representation) என்னும் முறையினைப் புகுத்துவதன் மூலம் சட்டசபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 1921 சட்ட சபைக்கு பிரதேசவாரியாக 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதையும், 1924 சட்டசபைக்கு 23 உறுப்பினர்கள் பிரதேசவாரியாக தெரிவு செய்யப்பட்டதையும் அவதானிக்க முடிகிறது.
4. பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறையுடன், இனவாரியான நியமனங்களையும் செய்வதன் மூலம் சட்டசபை ஆசனங்கள் நிரப்பப்பட்டன. ஆளுநர் மனிங் இவ்விரு முறைகளையும் கையாண்டு இனங்களின் கலவையுடன் சட்டசபைகளை உருவாக்கினார்.

5. சட்டசபைகளின் இனங்களின் கலவை (Communal Composition) 1921 இல் பின்வருமாறு இருந்தது:
இந்தியர் – 1
முஸ்லிம்கள் – 1
பறங்கியர் – 2
கண்டியர் – 2
இலங்கைத் தமிழர் – 3
ஐரோப்பியர் – 3
சிங்களவர் – 11
மொத்தம் – 23
1924 இல் இனங்களின் கலவை பின்வருமாறு அமைந்தது:
சிங்களவர் – 16
தமிழர் – 8
இந்தியர் – 2
முஸ்லிம்கள் – 3
ஐரோப்பியர் – 3
பறங்கியர் – 1
மொத்தம் – 33
6. இனங்களின் கலவை, சட்டசபையில் சமநிலைப் பிரதிநிதித்துவம் (Balanced Representation) பேணப்படுவதற்கு உதவியது எனக் கூறப்படுகின்றது. இனங்களுக்கிடையே முரண்பாடுகளை வளர்த்து, அவற்றைப் பிளவுபடுத்துவதன் மூலம் தமது ஆட்சியைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர் மனிங் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சித் (Divide and Rule) தந்திரம் எனவும் இது விமர்சிக்கப்பட்டது.
முடிவுரை
கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் முதல் 1931 வரை நடைமுறையில் இருந்த நான்கு அரசியல் யாப்புகள் பற்றிய சமூக – சட்ட (Socio – Legal) அம்சங்களை லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் நூலில் தரப்பட்ட தகவல்களின் படியும், அவரது பகுப்பாய்வு நோக்கின் படியும் இக்கட்டுரையில் விளக்கிக் கூறினோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகால நீண்ட இந்த வரலாற்றில் 1911 தொடக்கம் 1931 வரையான 20 ஆண்டுக்காலத்தில் 3 அரசியல் யாப்புகள் நடைமுறைக்கு வந்தன. இந்த அரசியல் யாப்பு மாற்றங்களின் சமூக – அரசியல் பின்னணி பற்றிய மீளாய்வு தமிழ் மக்களின் இன்றைய அரசியல் தேவைகளை வரலாற்று நோக்கில் புரிந்துகொள்வதற்கு உதவுவதாக அமையும்.
இக்கட்டுரை லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் ‘The Evolution of Constitutional Governance in Sri Lanka’ என்ற நூலின் இரண்டாவது அத்தியாயத்தில் (பக்கம் 19 – 70) கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தழுவித் தமிழில் எழுதப்பட்டுள்ளது.



