இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை – பகுதி 1

October 13, 2025 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: லக்ஸ்மன் மாறசிங்க

‘The Evolution of Constitutional Government in Sri Lanka’ என்னும் நூல் இலங்கையில் அரசியல் யாப்பு ஆளுகையின் (Constitutional Governance) தோற்றமும் அதன் படிப்படியான வளர்ச்சியும் பற்றி வரலாற்று நோக்கில் ஆராயும் நூலாகும். இந்நூலை சட்ட அறிஞரும், பேராசிரியருமான காலம் சென்ற லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் எழுதி வெளியிட்டார். இந்த நூலின் முதலாவது அத்தியாயமான முன்னுரையில் அவர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1950களின் முற்பகுதியில் படித்த காலத்தில் தமக்கு ‘ஒப்பீட்டு அரசியல் சட்டமும் அரசியல் யாப்புச் சட்டவியலும் (Comparative Constitutional Law and Constitutional Jurisprudence) என்னும் விடயப் பொருளின் மீது ஆர்வம் எழுந்ததாகவும்’, அந்த ஆர்வம் தமக்கு உளத்தூண்டலை வழங்கியதன் பெறுபேறாக, இலங்கையின் எட்டு அரசியல் யாப்புகள் பற்றிய ஒப்பீட்டுச் சட்ட ஆய்வினைப் பற்றிய மேற்படி நூலை எழுதி 2007 ஆம் ஆண்டு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சட்டத்தை துறை அறிஞரின் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆராய்ச்சி, கற்பித்தல் அனுபவங்களையும், நுண்ணிய ஆய்வு நோக்கையும் வெளிப்படுத்துவதாக அமையும் இந்நூலின் இரண்டாவது அத்தியாயம், டொனமூர் அரசியல் யாப்புக்கு முற்பட்டவையான பின்வரும் நான்கு அரசியல் யாப்புகளைப் பற்றிய பகுப்பாய்வாக அமைந்துள்ளது.

  1. கோல்புறூக் அரசியல் யாப்பு – 1833 – 1912
  2. குறூ – மக்கலம் அரசியல் யாப்பு – 1912 – 1921
  3. மனிங் அரசியல் யாப்பு – 1921 – 1924
  4. மனிங் – டிவன்சயர் அரசியல் யாப்பு – 1924 – 1931

இந்த அத்தியாயத்திற்கு ‘Constitutionalism (2) The Period of Restrictive Franchise’ என லக்ஸ்மன் மாறசிங்க தலைப்பிட்டுள்ளார். நவீன லிபரல் ஜனநாயக அரசியல் யாப்புகளின் அடிப்படையாக அமைவது வயது வந்த ‘அனைவருக்குமான வாக்குரிமை’ (Universal Franchise) என்பதாகும். மேற்படி நான்கு அரசியல் யாப்புகளும், ஜனநாயக ஆளுகையின் (Democratic Governance) அடிப்படைக்கூறான சர்வசன வாக்குரிமை இல்லாத காலத்து அரசியல் யாப்புகள் என்பதை, அவ்வத்தியாயத் தலைப்பின் ‘மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமைக் காலம்’ (The Period of Restrictive Franchise) என்ற தொடர் உணர்த்தி நிற்கின்றது. 1833, 1912, 1921, 1924 ஆகிய ஆண்டுகளில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நான்கு அரசியல் யாப்புகளின் வளர்ச்சியின் பின்னணியில் அமைந்த அரசியல் – சமூக மாற்றங்களை (Socio – Political Changes) லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் பகுப்பாய்வு முறையில் விளக்கிக் கூறியுள்ளார். நூலாசிரியரின் கருத்துகளைச் சுருக்கியும் தொகுத்தும் கூறுவதாக இத்தமிழ்க் கட்டுரை அமைந்துள்ளது. 

பன்முக நோக்கு

இலங்கையின் அரசியல் யாப்புச் சட்ட வரலாறு பற்றிய கற்கை அரசியல் விஞ்ஞானம் என்னும் கல்வித்துறை சார்ந்த விடயமாகும். அரசியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞானங்கள் (Social Sciences) என்னும் விரிந்த கல்வித்துறையின் ஒரு கிளைப் பிரிவாகும். ஆகையால் இலங்கையின் அரசியல் யாப்புச் சட்ட வரலாற்றைப் பற்றிய கல்வி சமூக விஞ்ஞானங்கள் என்னும் விரிந்த நோக்கில் பார்க்கப்பட வேண்டிய விடயமாக அமைகிறது. ‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’ என்னும் நூலின் ஆசிரியர் சி.அ. யோதிலிங்கம், அந்நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

“சமூக விஞ்ஞானத் துறைகள் எவையும் தனித்துச் செயற்படக் கூடியவை அல்ல. அவை ஒன்றோடொன்று ஊடாட்டம் கொண்டு, ஒன்றன் மீது ஒன்று தாக்கம் புரிந்து செயற்படுபவை. அரசறிவியலும் இதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் வரலாறு, பொருளியல், சமூகவியல், சட்டம் போன்றவற்றுடன் ஊடாட்டம் கொண்டே செயற்படுகிறது.” (நூலின் திருத்திய நான்காம் பதிப்பின் முன்னுரை – 2025).

லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் நூல் மேற்குறித்தவாறான பன்முக நோக்கிலான ஆய்வாகும். குறிப்பாக சட்டம், இலங்கையின் அரசியல் – சமூக வரலாறு என்னும் இரு விடயங்களிற்கு அழுத்தம் கொடுக்கும் முறையில் மாறசிங்க அவர்கள் மேற்குறித்த நான்கு அரசியல் யாப்புகளையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார். மேற்குறித்த நான்கு அரசியல் யாப்புகள் பற்றியும் மாறசிங்க அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளை இலகுபடுத்திய தமிழில் அடுத்துக் கூறுவோம்.

கோல்புறூக் அரசியல் யாப்பு

கோல்புறூக் அரசியல் யாப்பினைப் பற்றிய இந்த ஆய்வில் இரண்டு விடயங்கள் விளக்கிக் கூறப்படும்.

1. கோல்புறூக் அரசியல் யாப்பு மாதிரியின் அடிப்படைக் கூறுகள். நூலின் 6 பக்கங்களில் (பக். 21- 27) கூறப்பட்டுள்ள கருத்துகள் மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கப்படும்.

2. கோல்புறூக் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களின் சமூக – அரசியல் தாக்கங்கள் (The Socio – Political Implications of the Colebrooke Reforms). நூலின் 9 பக்கங்களில் (பக். 28 – 37) கூறப்பட்டுள்ள இந்த விடயம் விளக்கிக் கூறப்படும்.

கோல்புறூக் அரசியல் யாப்பு மாதிரி

1833 இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் யாப்பு மாதிரியின் (Constitutional Model) நான்கு தூண்களாகப் பின்வரும் நிறுவனங்கள் அமைந்தன.

  1. நிர்வாக சபை (Executive Council)
  2. சட்டசபை (The Legislative Council)
  3. காலனிய இலங்கையின் ஆளுநர் (The Colonial Governor)
  4. காலனிகளுக்குப் பொறுப்பான பிரித்தானியாவின் அமைச்சர் (The Secretary of State for Colonies)

மேற்குறித்த நான்கு தூண்களின் மீது அமைந்த கோல்புறூக் அரசுக் கட்டமைப்பின் பிரதான கூறுகளை லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் விவரித்துக் கூறியுள்ளார்.

1796 முதல் 1833 வரை ஆளுநர் சட்ட ஆக்கம், நிர்வாகம் என்னும் இரண்டு விடயங்களிலும் முழுமையான அதிகாரம் உடையவராக இருந்த நிலை, 1833 கோல்புறூக் அரசியல் யாப்பினால் மாற்றப்பட்டது. 1833 இன் பின்னர் ஆளுநர் நிர்வாகசபை (Executive Council), சட்டசபை (The Legislative Council) என்னும் இரு சபைகளின் அனுசரணையுடன் ஆட்சி செய்யும் ஒருவராக மாற்றப்பட்டார். நிர்வாக விடயங்களில் நிர்வாக சபையும், சட்டங்களை ஆக்கும் விடயங்களில் சட்டசபையும் அவருக்கு ஆலோசனை வழங்கும் சபைகளாக விளங்கின.

நிர்வாக சபை

நிர்வாக சபை 6 உறுப்பினர்களைக் கொண்ட சபையாக விளங்கியது. இவ்வுறுப்பினர்கள் அனைவரும் உயர்மட்ட அதிகாரிகளாவர் (ஆளுநர், வேறு ஐவர்). இச்சபையில் ஆளுநருக்கு அனுசரணையாகப் பணியாற்றியவர்கள் பின்வருவோராவர்.

  1. ஆயுதப்படைகளின் கொமாண்டர்
  2. காலனிய செயலாளர் (Colonial Secretary)
  3. பிரதம நீதியரசர் (Chief Justice)

1840 இன் பின்னர் பிரதம நீதியரசருக்குப் பதில் ‘இராணியின் சட்டவாளர்’ (Queen’s Advocate) நிர்வாகச் சபையின் உறுப்பினராகப் பணியாற்றினார். இன்று சட்ட அதிபதி நாயகம் (Attorney General) எனக் குறிப்பிடப்படும் பதவி நிலையினரே ‘இராணியின் சட்டவாளர்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. காலனிய நிதிப் பொறுப்பாளர் (Colonial Treasurer)
  2. மத்திய மாகாணத்தின் அரசாங்க அதிபர் 

1840 இன் பின்னர் மத்திய மாகாணத்தின் அரசாங்க அதிபருக்குப் பதிலாக, மேற்கு மாகாணத்தின் அரசாங்க அதிபர் நிருவாகச் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

மேற்குறித்த ஐவரும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களாக விளங்கினர். அவர்கள் உயர் அதிகாரிகளாக இருந்த போதும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஆளுநரை மீறித் தம் அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவர்களாக இருக்கவில்லை. ஆளுநரின் அதிகாரத்திற்குச் சவாலாக அமையக்கூடியதாக கோல்புறூக் நிர்வாகச் சபை செயற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சட்டசபை

சட்டசபை 15 உறுப்பினர்களைக் கொண்ட சபையாக இருந்தது. ஆளுநரும், மேலே குறிப்பிடப்பட்ட 5 உயர் அதிகாரிகளும், சட்ட சபையிலும் உறுப்பினர்களாயினர். இந்த 6 பேரை விட ஆளுநர் 4 உத்தியோகத்தர்களை சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்தார். அவ்வுத்தியோகத்தர்கள் தமது பதவிநிலை காரணமாக சட்டசபையின் உறுப்பினர்களாக (Ex-officio) நியமனம் பெற்றோர் ஆவர். அவர்களின் பதவிப்பெயர்கள் வருமாறு.

  1. மேற்கு மாகாணத்தின் அரசாங்க அதிபர்
  2. நில அளவையாளர் நாயகம்
  3. சுங்கத் திணைக்களத்தின் பிரதம அதிகாரி (Principal Collector of Customs)
  4. கணக்காளர் அதிபதி நாயகம் (Auditor General)

1890 ஆம் ஆண்டில் கணக்காளர் அதிபதி நாயகம் நிர்வாக சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இக்காரணத்தால் அவ்வாண்டு முதல் மத்திய மாகாணத்தின் அரசாங்க அதிபர் சட்டசபையின் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

ஆளுநர் உட்பட 6 நிருவாக சபை உறுப்பினர்கள் + பிற உத்தியோகத்தர்கள் 4 பேர் எனப் 10 பேர் சட்டசபையில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உத்தியோகப்பற்றுள்ள உறுப்பினர்கள் (Official Members) எனக் குறிப்பிடப்பட்டனர். இவர்களோடு சேர்த்து 5 உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் (Unofficial Members) சட்டசபைக்கு நியமனம் பெற்றனர்.

  • சிங்களவர் – 01
  • தமிழர் – 01
  • பறங்கியர் – 01
  • ஐரோப்பியர் – 01
  • வர்த்தகர்கள், தோட்ட முதலாளிகள் சமூகத்தின் பிரதிநிதி – 01

மேற்குறித்த 5 உறுப்பினர்களில் சிங்களவர், தமிழர், பறங்கியர் ஆகியோர் ‘சுதேசிகளை’ (Natives) பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவும், மற்ற இருவரும் ஐரோப்பியர் சமூகத்தினைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவும் இருந்தனர். 1889 இல் சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது. விவரம் வருமாறு:

  • கரைநாட்டுச் சிங்களவர் – 01
  • கண்டிச் சிங்களவர் – 01
  • தமிழர் – 01
  • பறங்கியர் – 01
  • முஸ்லிம் – 01
  • ஐரோப்பியர் – 03

சட்டசபையின் உறுப்பினர் எண்ணிக்கையில் 1889 இல் ஏற்பட்ட மாற்றத்தைத் தவிர்த்து 1910 வரை சட்டசபையின் அமைப்பு எவ்வித மாற்றமும் இல்லாமல் எட்டுத் தசாப்த காலம் தொடர்ந்தது.

ஆளுநர்

சட்டங்களை வரைதல், அவற்றைச் சட்டமாக இயற்றுதல், இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகிய சட்டவாக்கச் செயல்முறைகளின் அனைத்து விடயங்களிலும் ஆளுநருக்கு முழுமையான அதிகாரங்கள் இருந்தன. சட்டசபையின் ஆலோசனையையும் சம்மதத்தையும் ஆளுநர் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. சட்டசபைக்கு ஆளுநரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கவில்லை. (The governor was authorised ‘to make, enact ordain and establish laws’ with the ‘advice and consent of the legislative council’). 

ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போன்றே செயற்பட்டார்.

காலனிகளுக்குப் பொறுப்பான அமைச்சர்

பிரித்தானியாவின் அமைச்சரவையில் காலனிகளுக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் (The Secretary of State for Colonies) பிரித்தானிய மகாராணியின் சார்பில் உயர் அதிகாரமிக்கவராகச் செயற்பட்டார். இலங்கையின் ஆளுநர் இந்த அமைச்சருக்குப் பொறுப்புக்கூற வேண்டியவராக இருந்தார்.

கோல்புறூக் சீர்திருத்தங்களின் சமூக – அரசியல் தாக்கங்கள்

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் பயனாக சட்டசபை (Legislative Council) என்ற அமைப்பு அறிமுகமானது. இவ்வாறு அறிமுகமான சட்டசபை என்ற நிறுவனம் படிப்படியாக வளர்ச்சியுற்று, சனப்பிரதிநிதிகள் சபை, செனற் என்ற இரு சபைகளைக் கொண்ட பராளுமன்றமாக உருவாகியது. இலங்கை, பாராளுமன்ற முறை ஜனநாயக நாடாக வளர்ச்சி பெறுவதற்கான மூலவித்து 1833 இல் இடப்பட்டது. ஆயினும் இந்த வளர்ச்சி ஏற்பட ஏறக்குறைய 120 ஆண்டுகள் கடந்து போயின. 1833 இன் கோல்புறூக் சீர்திருத்தங்கள் பல குறைபாடுகளைக் கொண்டிருந்தன.

முதலாவது குறைபாடு இலங்கையின் மக்கள் சமூகங்களின் பங்கேற்புக்கான (Popular Participation) ஒரு நிறுவனமாக சட்டசபை வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை.

அச்சபை ஆளுநரின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தது. அது காலனி நாடான இலங்கையின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களைக் கொண்ட சபையாக இருக்கவில்லை. அச்சபையில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை முன்மொழியும் அல்லது தெரிவு செய்யும் அதிகாரம் அதன் உறுப்பினர்களுக்கு இருக்கவில்லை. இவ்வாறு செயல்வலு அற்ற ஒரு சபையை கோல்புறூக் அரசியல் யாப்பு உருவாக்கியதற்குப் பின்னால் இருந்த காலனிய கொள்கைத் திட்டத்தின் அனுமானங்கள் பின்வருவன.

  1. இலங்கையின் சுதேசிகள் படிப்பறிவற்றவர்கள், பிற்போக்கானவர்கள். அவர்களிடையே சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள் என எவரும் இப்போது இல்லை.
  2. இக்காரணத்தால் சட்டசபைக்கு நேரடிப் பிரதிநிதித்துவ முறையில் (Direct Representation) ஆட்களைத் தெரிவு செய்தல் பொருத்தமுடையதன்று. தெரிவு செய்யப்படுதலுக்கு மாற்றாக ‘நியமித்தல்’ (Appointment) முறையே ஏற்றது. அதாவது தெரிவுமுறை அல்லாத பிரதிநிதித்துவமே (Non – elected Representation) ஏற்றது.

மேற்படி அனுமானங்களின் அடிப்படையில் அமைந்த பிரித்தானியாவின் கொள்கை தெட்டத் தெளிவானது. லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் கூற்றொன்று வருமாறு.

“The British government planned to create a small English–speaking elite emulating the ideals, manners, and ways of life of the European community who may at some distant point in time be elected to represent the masses in the legislative council until that stage of Ceylonese social development is reached, the principle of ‘Appointment’ or ‘Non–elected representation’ appears have been the chosen method for membership in the legislative council (பக். 28-29)”

“ஐரோப்பியர் சமூகத்தின் இலட்சியங்கள், பழக்கங்கள், வாழ்க்கைமுறை என்பவற்றை உள்ளீர்த்துக் கொண்டவர்களான ‘சிறிய ஆங்கிலம் பேசும் உயர்குழு’ (A Small English-speaking Elite), மிகத் தொலைவில் உள்ள எதிர்காலத்தில் உருவாகும் இலங்கை என்ற காலனியை அது முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்பதே பிரித்தானியாவின் கொள்கையாகும்.”

பிரித்தானியாவின் கொள்கையின் இரண்டாவது குறைபாடு முற்கூறிய முதலாவது குறைபாடுடன் நேரடித் தொடர்புடையது. சட்டசபைக்கு சிங்களவர், தமிழர் ஆகிய சமூகத்தவர்களையும் பிற சமூகத்தவர்களையும் ‘நியமித்தல்’ (Appointment) முறையை தேர்வு செய்த காலனிய ஆட்சியாளர்கள், இலங்கையில் சில குடும்பங்களையும் (Families), குடும்பக் குழுமங்களையும் (Clans) ஆளும் உயர்குழுக்கள் (Ruling Oligarchy) என்ற நிலைக்கு உயர்த்தும் செயல் முறையைத் தொடக்கி வைத்தனர். ‘கோல்புறூக் காலம்’ (Colebrooke Period) என்பதன் தனித்துவமான அடையாளம் என ஒன்றைக் குறிப்பிட முடியுமென்றால் அது ‘பண்டாரநாயக்க – ஒபயசேகர குடும்பம்’ என்ற ஒரு குடும்பத்தை ஆளும் உயர்குழு என்ற நிலைக்கு உயர்த்தியது தான் என்று கூறலாம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1835 இல் தொடங்கி 60 ஆண்டு காலத்திற்குள் சட்டசபையின் ஏகப்பிரதிநிதித்துவம் தமக்கே உரியதென்பதை நிலை நாட்டினர்.

கீழே தரப்பட்டுள்ள ‘சட்டசபையில் சிங்களவர் பிரதிநிதித்துவம்’ என்னும் அட்டவணையில் உள்ள விவரங்கள் ஒரு குடும்பக் குழுமம் ஆளும் உயர்குழுவாக உருவாக்கம் பெற்றதை எடுத்துக்காட்டுகிறது.

அட்டவணை I

சட்டசபையில் சிங்களவர் பிரதிநிதித்துவம் – கோல்புறூக் அரசியல் யாப்புக் காலம்: 1833 – 1911

நியமன உறுப்பினர் பெயர்முந்திய நியமன உறுப்பினரோடு உள்ள உறவுகுடும்பத்தின்/ குழுமத்தின் பெயர்சாதிபதவிக் காலம்
கௌரவ.J.G. பிலிப்பஸ் பண்டிதரத்தினமுதலாவது நியமன உறுப்பினர்பண்டாரநாயக்க – ஒபயசேகரகொவிகம15.12.1835 – 16.10.1841
கௌரவ.J.G. டயஸ்முந்திய உறுப்பினரின் (பிலிப்பஸ் பண்டிதரத்தினவின்) மருமகன்பண்டாரநாயக்க – ஒபயசேகரகொவிகம10.08.1843-19.12.1859
கௌரவ.E.J. தெகிகமபண்டாரநாயக்க ஒபயசேகர குடும்பத்தை சாராத அந்நியர்அந்நியர்கொவிகம27.09.1865- 01.07.1875
கௌரவ. ஜேம்ஸ் டி அல்விஸ்சேர். ஹரி டயஸ் அவர்களின் இரத்த உறவினர்பண்டாரநாயக்க- ஒபயசேகர கொவிகம17.08.1864-21.10.1877
கௌரவ.சேர்.J.P. ஒபயசேகரசேர். ஜேம்ஸ் டி அல்விஸ் அவர்களின் இரத்த உறவினர்பண்டாரநாயக்க- ஒபயசேகர கொவிகம11.09.1878-15.12.1880
கௌரவ. அல்பெர்ட் லூயிஸ் டி அல்விஸ்சேர். ஜேம்ஸ் டி அல்விஸ் அவர்களின் இரத்த உறவினர்பண்டாரநாயக்க- ஒபயசேகர கொவிகம20.09.1882-18.01.1888
கௌரவ.A.de.A. செனவிரத்தினஅந்நியர்அந்நியர்கொவிகம31.10.1888-10.01.1900
கௌரவ. பானபொக்கே டிக்கிரி பண்டாசேர்.J.P. ஒபயசேகரவின் இரத்த உறவினர்பண்டாரநாயக்க-ஒபயசேகரகொவிகம29.10.1889-07.11.1894
கௌரவ.S.C. ஒபயசேகரஅல்பேர்ட் டி அல்விஸ் அவர்களின் உறவினர்பண்டாரநாயக்க- ஒபயசேகரகொவிகம11.06.1897-15.11.1911
கௌரவ. வில்லியம் எல்லாவல எக்கநாயக்க ராஜபக்ச பசநாயக்க முதியான்சேசேர்.J.P. ஒபயசேகரவின் இரத்த உறவினர்பண்டாரநாயக்க- ஒபயசேகரகொவிகம09.04.1895-21.02.1900
கௌரவ.S.N. வன்னி நாயக்கஒபயசேகர குடும்பத்து உறவினர்பண்டாரநாயக்க- ஒபயசேகரகொவிகம21.03.1900-25.07.1905
கௌரவ.J.B.L. மூனமலேசேர்.J.P. ஒபயசேகரவின் இரத்த உறவினர்பண்டாரநாயக்க- ஒபயசேகரகொவிகம18.07.1906-15.11.1911
  • இந்த அட்டவணை லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் நூலின் 9 பக்க (29-30) அட்டவணையைத் தழுவியது.
  • இந்த அட்டவணை பல ஆவணங்கள், நூல்களில் உள்ள தகவல்களைத் திரட்டித் தொகுத்து எழுதியது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

மேற்தரப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்படும் கௌரவ. ஜேம்ஸ் தெகிகம (Hon. James Dehigama) 1865 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டார். கண்டியைச் சேர்ந்த சிங்களவரான தெதிகம பண்டாரநாயக்க – ஒபயசேகர குடும்பத்தைச் சேராத அந்நியராவர். இவரது நியமனம் ஆச்சரியத்தைத் தருவது. இதற்கான காரணத்தை லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறார்.

1864 ஆம் ஆண்டு அரசாங்கம் இராணுவச் செலவை 100,000 பவுன்ஸ்சில் இருந்து 135,000 பவுன்சாக உயர்த்தும் வரவு செலவுத் திட்டத்தை சட்டசபையில் முன்வைத்தது. சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களான (Unofficial Members) 6 பேரும் கூட்டாகச் சேர்ந்து இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். அப்போது சபையின் உத்தியோகப்பற்றுள்ள உறுப்பினர்கள் (Official Members) 10 பேரும் ஒன்றாக இணைந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றினர். இதனால், சிங்கள சமூகத்தின் பிரதிநிதியான சேர். ஹரி டயஸ் (Sir. Harry Dias) உட்பட நியமன உறுப்பினர் அனைவரும் பதவி விலகினர். சேர். ஹரி டயஸ் பதவி விலகிய போது ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தெகிகம நியமிக்கப்பட்டார். அதாவது ஆளுநருக்குப் பணிந்து போவதையே தம் மரபாகக் கொண்டிருந்த பண்டாரநாயக்க – ஒபயசேகர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், திடீரென ஆளுநருக்கு எதிர்ப்பான முறையில் நடந்து கொண்டதை ஆளுநரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சேர். ஹரி டயஸ் செயலுக்குப் பதிலடியாகவே கௌரவ தெகிகம அவர்களின் நியமனம் இடம்பெற்றது. இதன் பின்னர் 1888 இலும் பண்டாரநாயக்க – ஒபயசேகர குடும்பத்தைச் சேராத ஒருவரான கௌரவ. A.de.A. செனவிரத்தின என்பவர் நியமனம் செய்யப்பட்டார். சேர். ஆர்தர் கோர்டன் (Sir. Arthur Gordon) என்ற ஆளுநர் காலத்தில் இந்நியமனம் இடம்பெற்றது.

சிங்களவர்களின் பிரதிநிதிகளாக ஒரு குடும்பக் குழுமம் தனியுரிமை கொண்டாடியது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் இதனை ஒத்த தமிழ்க் குடும்பம் ஒன்றையும் உருவாக்கினர். கீழே தரப்பட்டுள்ள அட்டவணை தமிழர் பிரதிநிதிகளின் நியமனங்கள் பற்றிய விவரத்தைத் தருவதாக உள்ளது.

அட்டவணை 2

சட்டசபையில் தமிழர் பிரதிநிதித்துவம்: 1833 – 1911

நியமன உறுப்பினர் பெயர்முன்னைய உறுப்பினருக்கு எவ்வழி உறவினர்குடும்பப் பெயர்சாதிபதவிக்காலம்
கௌரவ.அ. குமாரசுவாமிப் பிள்ளைமுதலாவது நியமனம்குமாரசுவாமி குடும்பம் வேளாளர் குடும்பம்14.12.1835-21.12.1835
கௌரவ. சைமன் காசிச் செட்டிகுமாரசுவாமி குடும்பத்தைச் சேராத அந்நியர்அந்நியர்வேளாளர் அல்லாதவர்14.08.1843-18.12.1844
கௌரவ.எஸ். எதிர்மனசிங்கம்அ. குமாரசுவாமிப் பிள்ளையின் மருமகன், மகளின் கணவர்.குமாரசுவாமி குடும்பம்வேளாளர்07.08.1845-19.06.1860
சேர். முத்துக்குமார சுவாமிஅ. குமாரசுவாமிப் பிள்ளையின் மருமகன் (சகோதரியின் மகன்)குமாரசுவாமி குடும்பம்வேளாளர்17.07.1861– 19.12.1878
கௌரவ. பிலிப் டி மெலோ ஓந்தாச்சிகுமாரசுவாமி குடும்பத்தைச் சேராத அந்நியர்அந்நியர்வேளாளர்02.06.1873-09.04.1875
சேர். பொன்னம்பலம் இராமநாதன்அ. குமாரசுவாமிப் பிள்ளையின் பேரன்குமாரசுவாமி குடும்பம்வேளாளர்27.08.1879-09.04.1895
சேர். பொன்னம்பலம் குமாரசுவாமிஅ. குமாரசுவாமிப் பிள்ளையின் பேரன்குமாரசுவாமி குடும்பம்வேளாளர்13.09.1893-22.12.1897
வைத்திய கலாநிதி W.G. றொக்வூட்குமாரசுவாமி குடும்பத்தைச் சாராதவர்அந்நியர்வேளாளர்16.03.1989-25.07.1905
சேர். கனகசபைகுமாரசுவாமி குடும்பத்தைச் சாராதவர்அந்நியர்வேளாளர்01.02.1906-15.11.1911

மேற்படி அட்டவணை லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் நூலின் பக்கம் 31 இல் தரப்பட்ட அட்டவணையின் தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது.

  • சைமன் காசிச்செட்டி கொழும்பு செட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். நியாயதுரந்தரர், கல்வியாளர், கொழும்புச் செட்டிகள் உயர் சமூக மதிப்பை உடையவர்கள்.
  • வைத்தியக் கலாநிதி W.G. றொக்வூட் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேளாளர் குடும்பத்தவர். உயர்பதவி வகித்தவர். அவர் 1989 இல் நியமிக்கப்பட்ட போது அவருக்கும் குமாரசுவாமி குடும்பத்திற்கும் உறவுத் தொடர்பு இருக்கவில்லை. பிற்காலத்தில் இவரது குடும்பம் திருமண உறவால் குமாரசுவாமி குடும்பத்தோடு உறவு கொண்டது எனக் கூறப்படுகின்றது.
  • சேர். அ. கனகசபை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேளாளர் குடும்பத்தவர். நியாயதுரந்தரராகவும். வர்த்தகராகவும் உயர்நிலையில் இருந்தவர். சேர் பட்டம் பெற்றுக் கௌரவிக்கப்பட்டார்.
  • ‘அந்நியர்’ என்ற சொல் ‘Stranger’ என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு.

சிங்களவர், தமிழர் இனங்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு ‘ஆங்கிலம் கற்ற உயர்குழுக்களை’ நியமன முறை மூலம் உருவாக்கும் செயல்முறைக்குப் பயன்பட்டது என்பதை மேலே தரப்பட்ட அட்டவணைகள் வெளிப்படுத்துவனவாய் உள்ளன. சிங்கள இனத்தின் பிரதிநிதியாக முதலில் நியமிக்கப்பட்டவர் பிலிப்பஸ் பண்டிதரத்தின ஆவார். திருமண உறவுகளால் பிணைப்புற்ற இரு குடும்பங்களின் குழுமமாக வளர்ச்சியுற்ற இக்குடும்பம் ‘பண்டாரநாயக்க – ஒபயசேகர குடும்பம்’ எனப் பெயர் பெற்றது. தமிழர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அ. குமாரசுவாமிப் பிள்ளையின் குடும்பம் பொன்னம்பலம் என்னும் பெயருடைய இன்னொரு குடும்பத்துடன் திருமண உறவுகளால் பிணைப்புற்றது. இதனால் இக்குடும்பம் ‘பொன்னம்பலம் – குமாரசுவாமி குடும்பம்’ எனப் பெயர் பெற்றது.

லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் மேற்படி அட்டவணைகள் பற்றித் தமிழ் வாசகர்கள் மனதில் எழக்கூடிய ஐயங்களை நீக்குவதற்காக மேலே சில குறிப்புகளைத் தந்தோம். அடுத்து லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் குமாரசுவாமி குடும்பத்தைச் சேராதவர்களின் நியமனம் குறித்துத் தரும் தகவல்களைக் கூறுவோம்.

“கௌரவ அ. குமாரசுவாமி சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்று மூன்று மாத காலம் கழிவதற்குள் காலமானார். அவரின் இடத்திற்கு சேர். முத்துக்குமாரசுவாமியை நியமித்திருக்க வேண்டும். ஆனால், சேர். முத்துக்குமாரசுவாமி அப்போது சிறுவனாக இருந்தார். இதனால் குமாரசுவாமியின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சைமன் காசிச் செட்டி தெரிவு செய்யப்பட்டார். அவர் கொழும்பு நகரில் ஒரு பத்திரிகையாசிரியராக அப்போது செயற்பட்டார். காசிச் செட்டியின் நியமனத்தை அடுத்து தொடர்ச்சியாக நான்கு பேரின் நியமனங்கள் குமாரசுவாமிப் பிள்ளையின் வம்சாவழியினருக்கு வழங்கப்பட்டன. கோல்புறூக் அரசியல் யாப்புக் காலத்தின் தமிழர் பிரதிநிதிகள் நியமனத்தில் குமாரசுவாமி குடும்பத்தின் ஆதிக்கம் இருந்து வந்தது. கௌரவ சைமன் காசிச்செட்டி தவிர்ந்த பிற நியமன உறுப்பினர்கள் வேளாளர் சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்” (பக். 32).

டாக்டர். றொக்வூட் அவர்களின் நியமனம் குறித்து லக்ஸ்மன் மாறசிங்க அடிக்குறிப்பாகச் சில தகவல்களைத் தந்துள்ளார். அவரது நூலின் 31 ஆம் பக்கத்தில் காணப்படும் அடிக்குறிப்பு வருமாறு.

“பொன்னம்பலம் குமாரசுவாமியை சட்டசபை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்பதை ஆதரித்து அக்கருத்தை முன்மொழிந்தவர் டாக்டர். றொக்வூட் அவர்களேயாவார். அவர் நியமிக்கப்படுவதை ஆதரித்துப் பல பொதுக் கூட்டங்களில் றொக்வூட் உரையாற்றினார். அக்காலத்தின் காலனிகளுக்குப் பொறுப்பான அமைச்சராகிய (Secretary of State for Colonies) சேர். வெஸ்ட் றிட்ஜ்வே அவர்கள் அதிரடியான ஆச்சரியம் தரும் முடிவை எடுத்தார். அவர் சட்டசபை நியமனத்தில் குமாரசுவாமி குடும்பத்தின் தொடர்ச்சியை அறுப்பது போல் அமைந்த நியமனம் ஒன்றைச் செய்வதற்கு முடிவு செய்தார். டாக்டர். றொக்வூட் அவர்களுக்கே அந்நியமனத்தை வழங்கினார். இது றொக்வூட் அவர்களுக்குத் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது. மிகுந்த மனச்சங்கடத்துடன் டாக்டர். றொக்வூட் அந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டார். அரசாங்கம் அடுத்தடுத்து இருதடவைகள் குமாரசுவாமிப் பிள்ளை குடும்பத்தைச் சாராத நபர்களை நியமனம் செய்தது. இந்த நிகழ்வுகள் பற்றிய ஆதாரம் Weiman (JIR) என்பவரின் நூலில் உள்ளது. 1918 டிசம்பர் ‘ஹன்சார்ட்’ அறிக்கையிலும் குறிப்புகள் உள்ளன.”

பறங்கியர் சமூகப் பிரதிநிதிகளின் சட்டசபை நியமனங்கள்

பறங்கியர் சமூகத்தின் சட்டசபைப் பிரதிநிதித்துவம் சிங்களவர், தமிழர் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தில் இருந்து வேறுபட்ட சமூகப்பின்னணியை உடையதாக இருந்தது. பறங்கியர் சமூகத்தில் சட்டவாளர்களாக (Lawyers) விளங்கிய சமூகப் பிரிவினரில் இருந்து சட்டசபைக்குப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ‘Hulftsdorp’ (புதுக்கடை) நீதிமன்றத்தில் பறங்கியர் சட்டவாளர்களின் ஆதிக்கம் நிலவியது. பறங்கிய இனத்துச் சட்டவாளர்கள் கல்வியில் சிறந்து விளங்கினர். அவர்கள் சுதந்திர மனப்பான்மையுடையவர்களாயும், அரசியலில் முற்போக்கான கருத்துகளை உடையவர்களாகவும் விளங்கினர். அரசாங்கத்தின் சட்டவாக்க நடவடிக்கைகளைப் பறங்கியச் சட்டவாளர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இதனால், பறங்கிய இனத்துச் சட்டசபைப் பிரதிநிதிகள் மீது அரசாங்கம் வெறுப்பைக் கொண்டிருந்தது. ஜேம்ஸ் வான் லங்கன்பேர்க் (James Van Langenberg) என்ற பிரபலமான பறங்கியர் இனத்துச் சட்டவாளரின் பதவிக்காலம் முடிவுற்றபோது, ஆளுநர் அவ்வெற்றிடத்திற்கு வைத்தியக் கலாநிதி அந்தோனிஸ் (Dr. Anthonisz) அவர்களை நியமித்தார். சட்டவாளர்களை அப்பதவிக்கு நியமிக்காது அவர்கள் மீது பழிதீர்த்துக் கொண்டதாக இச்செய்கை அமைந்தது. அந்தோனிஸ் அவர்களின் பதவிக்காலம் முடிவுற்றபின் மீண்டும் சட்டவாளர் ஒருவருக்கே நியமனம் வழங்கப்பட்டது. H.L. வென்ட் (H.L. Wendt) என்பவர் அந்தோனியஸ் அவர்களுக்கு அடுத்து நியமனம் செய்யப்பட்டார். வென்ட் பின்னர் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற போது அவரின் சட்டசபைப் பிரதிநிதித்துவம் முடிவுற்றது. இதனால், அவரின் இடத்திற்கு F.C. லூஸ் (F.C. Loos) என்ற புறொக்டர் (Proctor) நியமிக்கப்பட்டார். ஆர்தர் கோர்டன (Arthur Gordon) என்ற ஆளுநரே இவ்வாறு பறங்கியச் சட்டவாளர்களின் மீது பழிதீர்த்துக் கொண்டவர். அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த ஆளுநர் மீண்டும் பறங்கியச் சட்டவாளர்களை நியமித்தார்.

அட்டவணை 3

சட்டசபையில் பறங்கியர் பிரதிநிதித்துவம்: 1833 – 1911

சட்டசபை உறுப்பினரின் பெயர்தொழில்பதவிக்காலம்
கௌரவ.R.F. மோர்கன்சட்டவாளர்02.10.1851-24.09.1856
கௌரவ.C.A. லோறன்ஸ்சட்டவாளர்16.10.1856-30.12.1863
கௌரவ.J.A. மார்ட்டினஸ்சட்டவாளர்27.09.1865-16.10.1872
கௌரவ.C.A. பேர்டினாண்ட்ஸ் (Hon.C.A. Ferdinands)சட்டவாளர்02.06.1873-29.11.1875
கௌரவ.J. வான் லங்கன் பேர்க்சட்டவாளர்13.09.1876-13.01.1886
கௌரவ.P.D. அந்தோனிஸ்வைத்தியர்05.10.1886-12.12.1894
கௌரவ.H.L. வென்ட் சட்டவாளர்09.04.1895 -31.10.1900
கௌரவ.F.C. லூஸ்சட்டவாளர்13.06.1900-07.06.1911
கௌரவ.J. வான் லங்கன் பேர்க் சட்டவாளர்30.08.1911-15.11.1911

கோல்புறூக் அரசியல் யாப்பின் குறைகளும் நன்மைகளும்

லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் நூலில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அட்டவணை 1, 2, 3 என்பனவற்றில் மேலே தொகுத்துத் தந்துள்ளோம். இந்த அட்டவணைகள் அவரது நூலில் பக்கம் 29, 30, 31, 32, 33 ஆகியவற்றில் தரப்பட்டுள்ள மூன்று அட்டவணைகளைத் தழுவித் தயாரிக்கப்பட்டன. இம்மூன்று அட்டவணைகளும் கோல்புறூக் கால அரசியலின் போக்குகளை விமர்சன நோக்கில் பரிசீலனை செய்வதற்கு வேண்டிய அடிப்படைத் தகவல்களைத் தருவனவாக உள்ளன. குறிப்பாக கோல்புறூக் அரசியல் யாப்பின் தாக்கத்தால் உருவான உயர்குழு உருவாக்கத்தின் (Elite Formation) இயல்புகளை விளக்கவும் புரிந்துகொள்ளவும் இந்த அட்டவணைகள் உதவுகின்றன. 

  1. இக்காலத்தில் சிங்களவரிடையே ஒரு குடும்பக் குழுமமும், தமிழரிடையே ஒரு குடும்பக் குழுமமும் உருவாக்கம் பெற்றன. பறங்கியச் சட்டவாளர்கள் என்ற இன்னொரு சமூகக்  குழுமமும் உருவாக்கம் பெற்றது.
  2. கண்டிச் சிங்களவர், முஸ்லிம்கள் ஆகிய இரு சமூகங்களிற்கும் 1899 இன் பின்னரே சட்டசபைப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இந்நியமனங்கள் இச்சமூகங்களிடையே குறுகிய கால எல்லையில் (1889 – 1911) குறிப்பிட்ட வகைக் குடும்பக் குமுமங்களை உருவாக்கவில்லை.
  3. ‘நியமனம்’ (Appointment) என்னும் ‘இனவாரிப் பிரதிநிதித்துவமுறை’ கோல்புறூக் காலத்தில் ‘உயர்குழாம் உருவாக்கத்திற்கான (Elite Formation)’ கருவியாகச் செயற்பட்டது.
  4. இவ்வாறு உருவாக்கம் பெற்ற உயர்குழாம் கொழும்பை மையமாகக் கொண்டிருந்தது. இலங்கையில் இக்காலத்தில் மையம் – பிராந்தியம் என்ற பிளவும் முரண்பாடும் (Centre Periphery Schism) உருவானது. விஸ்தீரணத்திலும், சனத்தொகையிலும் விசாலமான பிராந்தியம் காலப்போக்கில் அரசியலில் முக்கியம் பெற முடியும் என்ற நிதர்சன உண்மை இக்காலத்தின் அரசியல் நகர்வுகளில் வெளிப்பட்டது. டொனமூர் யாப்புக் காலத்தில் சர்வசன வாக்குரிமை, பிரதேசவாரி பிரதிநிதித்துவம் (Territorial Representation) என்பன அரசியலில் பிராந்தியங்களின் செல்வாக்கை அதிகரித்தன. 
  5. கோல்புறூக் அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட போது, இலங்கை அரசியல் முறைமையில் ஆளுநர் என்ற பதவி சர்வாதிகாரம் கொண்டதாக நிறுவனமயப்படுத்தப்பட்டது. ஆளுநர்களிற்குப் பணிந்து சேவை செய்யும் அமைப்புகளாக நிருவாக சபையும் (Executive Council), சட்டசபையும் (Legislative Council) விளங்கின.
  6. சட்டசபை நியமனங்களை ஆளுநர்கள் தனிநபர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்கான ஒரு கருவியாக உபயோகித்தனர். தமது நடவடிக்கைகளை விமர்சித்தவர்களையும், சுயாதீனமாகச் செயற்பட முனைந்தவர்களையும் தண்டிப்பதற்கான ஒரு கருவியாகவும் சட்டசபை நியமனங்களை ஆளுநர்கள் உபயோகித்தனர்.

கோல்புறூக் அரசியல் யாப்பு பல குறைப்பாடுகளைக் கொண்டிருந்தது. ஆயினும் பிரதிநிதித்துவ அரசாங்கம் (Representative Government) என்னும் ஜனநாயக முறை இலங்கையில் வளர்ச்சி பெறுவதற்கான அடித்தளத்தை அது இட்டது. அரசியல் யாப்புத் தொடர்பான இரண்டாவது சீர்திருத்தமான குறூ – மக்கலம் சீர்திருத்தம் (1912 – 1920), 1921 இன் தற்காலிக அரசியல் யாப்பு, அதனையடுத்து வந்த மனிங் சீர்திருத்தம் (1924-1931) என்பன கோல்புறூக் அரசியல் யாப்பு மாதிரியில் திருத்தங்களை மேற்கொண்டு அதன் குறைகளை நிவர்த்தி செய்ய முற்பட்டன. மேற்படி மூன்று அரசியல் யாப்புகளைப் பற்றியும் ஆராய்வதற்கு முன்னர் கோல்புறூக் மாதிரியின் நன்மையான கூறு பற்றி லக்ஸ்மன் மாறசிங்க குறிப்பிட்டிருப்பதை நோக்குவோம்.

1833 இற்கு முற்பட்ட காலத்தில் ஆளுநர் சட்டங்களை இயற்றும்போது அவற்றை இரகசியமான முறையில் மேற்கொண்டார். அவரும் அவரது ஆலோசகர்களான சிலரும் மட்டும் கூடி இரகசியமான முறையில் ஆலோசனைகளை நடத்திய பின் சட்டங்களை ஆளுநர் பிரகடனப்படுத்துவார். 1833 இன் சீர்திருத்தம் இந்த இரகசிய சட்டவாக்க முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

நிருவாகசபை (Executive Council), சட்டசபை (Legislative Council) என்னும் இரு சபைகள் அமைக்கப்பட்டன. ஆளுநர் இந்த இரு சபைகளுடைய கூட்டங்களை நடாத்தி அக்கூட்டங்களில் இயற்றப்படவுள்ள சட்டங்களை விவாதித்தல் வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. 

1833 இற்குப் பின்னர் சட்டங்களை இயற்றுதல் என்னும் செயல்முறை பொது வெளியில் பகிரங்கமாக நடைபெற வேண்டிய விடயம் ஆக்கப்பட்டது. சட்டங்களைப் பொது வெளியின் வெளிச்சத்தில் (Blaze of Publicity) பகிரங்கமாக விவாதிக்கும் கடப்பாடு ஆளுநர் மீது திணிக்கப்பட்டது.

இந்த விவாதத்தின் ஊடாக சட்டங்களை விமர்சன நோக்கில் பார்க்கும் தேவை உருவானது. மேலே குறிப்பிட்டது போன்று பறங்கியச் சட்டவாளர்கள் (Burger Lawyers) போன்ற படித்த இலங்கையர் குழுவினர்கள் இயற்றப்படும் சட்டங்களைப் பற்றிய விமர்சனங்களை வெளியிட்டனர். 1833 – 1911 காலப்பகுதியில் வளர்ச்சியுற்ற பொதுசன ஊடகமான பத்திரிகைகள் சட்டவாக்கச் செயற்பாட்டை விமர்சனக் கண்கொண்டு நோக்கின. இதனால் பொதுசன அபிப்பிராயம் (Public Opinion) உருவாக்கப்பட்டது. சுருங்கக்கூறின் கோல்புறூக் அரசியல் யாப்பின் நன்மையான இந்தப் பக்கம் அடுத்த கட்டத்தை நோக்கிய முன்னேற்றத்திற்கு வழிசமைத்தது எனலாம்.

தொடரும்.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்