1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பிற்பட்ட காலத்தில் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் (State Reform) ஒற்றையாட்சி – சமஷ்டி (Unitary – Federal), சிங்களவர் – தமிழர் என்ற எதிர் இணைகளின் அடிப்படையில் துருவமயப்படுத்தப்பட்டதை (Polarisation) இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக்காட்டினோம். அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகளான றொபர்ட் என். கெயர்ணி (Robert N. Kerney) என்பவரும், இலங்கையரான ஏ.ஜே. வில்சனும் அரசமைப்பைத் திருத்தும் விவாதம் இனத்துவத் தேசியவாதங்களின் அடிப்படையில் திசை திரும்பியதை தமது ஆய்வுகளில் எடுத்துக்காட்டினர் என்பதையும் மேலே குறிப்பிட்டோம். இவ்வாறு திசை திரும்பிய விவாதம், அரசியலமைப்பை வடிவமைத்தல் (Constitutional Designing) என்பதை மையம் கொண்டதாக அமையத் தொடங்கியது.

அரசியலமைப்பை வடிவமைத்தல்
இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ள ஆய்வுகளை உற்று நோக்கும்போது, அவற்றுள் பெரும்பாலானவை, சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் அரசியல் யாப்பை வடிவமைத்தல் (Constitutional Designing) என்பதை மையம் கொண்டனவாக இருந்ததைக் காணலாம். அரசியல்வாதிகள் ஒற்றையாட்சி – சமஷ்டி ஆட்சி பற்றிய தொலைநோக்கை, உணர்ச்சிக் கலப்புடைய வார்த்தைகளில் முன்வைத்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் அரசியல் யாப்புச் சட்டவாளர்கள் (Constitutional Lawyers) அரசியல் யாப்பை எப்படி வடிவமைக்கலாம் என்ற விவாதத்தில் இக்காலத்தில் பங்கு கொண்டனர். சர்ச்சைக்குரிய விடயங்களை இச்சட்டவாளர்கள் பரிசீலனை செய்வதிலும், ஒற்றையாட்சி, சமஷ்டியாட்சி, அதிகாரத்தைப் பகிர்தல் ஆகிய இலக்குகளிற்கு ஏற்ற நிறுவன வடிவங்களைத் தெரிவு செய்வதிலும் கவனம் செலுத்தினர். இலங்கை ஒற்றையாட்சி முறையை உடையதாகவே இருத்தல் வேண்டும் என்பது ஒருபுறம், சமஷ்டிமுறை மாதிரியிலான அதிகாரப்பகிர்வு மறுபுறம் என்ற எதிர்நிலை விவாதங்களில், ஏதேனும் ஒன்றின் சார்புடையவர்களாக வாதம் புரிந்த சட்டவாளர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டவாளர்கள் (Constitutional Lawyers) எனப் பெயர் பெற்றனர். இவர்களின் விவாதங்களில் அரசுக் கட்டமைப்பைத் திருத்துதல் என்பதைவிட யாப்புத் திருத்தம் (Constitutional Reform) முக்கியம் பெறலாயிற்று. அதாவது ‘State Reform’ என்ற அம்சம் முக்கியத்துவம் இழந்தது. நூற்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகளில் சில, சட்டவாளர்களின் அணுகுமுறைகளில் காணப்படும் சட்ட நிறுவன நோக்கை (Legal – Institutional Approach) கேள்விக்குள்ளாக்குவனாக உள்ளன.
அரசியல் யாப்பு வாதம்
சட்டவாளர்களின் கவனம் மேற்குறிப்பிட்டவாறு சட்டம் – நிறுவனங்கள் என்ற எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பின்னணியில், அரசியல் யாப்புவாதம் (Constitutionalism), ஆளுகை (Governance) ஆகிய கோட்பாடுகள் உரிய கவனத்தை, இலங்கைச் சூழலில் பெறவில்லை. இக்கோட்பாடுகள் முதன்முதலாக ரதிகா குமாரசுவாமி (1984, 1990, 1996), ரோஹான் எதிரிசிங்க (1999, 2000, 2001), நீலன் திருச்செல்வம் (1992, 1999) ஆகியோரின் எழுத்துகள் ஊடாகப் பொதுவெளியில் விவாதத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டன என நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றிய சர்ச்சைகளின் போது மேற்குறித்த ஆய்வாளர்கள் அரசியல் யாப்புத் திருத்தம் பற்றிய விவாதத்தில் ‘அரசியல் யாப்பு வாதம்’, ‘ஆளுகை’ என்பனவற்றுக்கு அழுத்தம் கொடுத்தனர். இவர்களது எழுத்துகளில் ‘அரசியல் யாப்பு வாதம்’ என்னும் எண்ணக்கரு மூன்று விடயங்கள் நோக்கில் குவிமையப்படுத்தப்பட்டது. அவையாவன,
- லிபரல் ஜனநாயகச் சிந்தனையின் அடிப்படையிலான நியமங்களும் விழுமியங்களும் (Normative Values of Liberal Democracy)
- பன்மைப் பண்பாட்டுவாதம் (Multi – culturalism)
- இனத்துவ முரண்பாட்டுக்கான தீர்வு (Ethnic Conflict Resolution)
சட்டவாதிகளின் குறுகிய நோக்கில் இருந்து புலமையாளர்களின் நோக்கு வேறுபட்டதையும், அப்புலமையாளர்களின் ஆய்வுகளில் மேற்குறித்த இலட்சியங்கள் உள்ளடங்கியிருந்தன என்பதையும் நூலாசிரியர்கள் சுருக்கமாக எடுத்துக்காட்டியுள்ளனர்.
விவாதத்தின் வழித்தடம்
இந்நூற்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஆய்வு நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் அரசமைப்புத் திருத்த விவாதம் சென்ற வழித்தடத்தை எடுத்துக்காட்டுவனவாய் அமைந்துள்ளதை நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
I. 1957 இல் பண்டா – செல்வா ஒப்பந்தம், 1965 இல் டட்லி – செல்வா உடன்பாடு என்பன அரசியல் தலைவர்கள் என்ற உயர்குழாம் (Elites) மட்டத்தில் இடம்பெற்ற தீர்வு முயற்சிகளாகும். இவ்விவாதங்கள் அதிகாரத்தைப் பரவலாக்குதல், சமஷ்டிமுறைமை என்பனவற்றைப் பரிசீலிப்பனவாகவும் அரசியல் உயர்மட்டத்தினரிடையே சமரசமாகத் தீர்வு செய்யக்கூடியனவும் ஒற்றுமைப்படக் கூடியனவுமான விடயங்களைக் கண்டறிதலை நோக்கியனவாகவும் அமைந்தன.
II. இந்த விவாதங்கள் 1972 இன் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் வரவுடன் முடிவுக்கு வந்தன. அந்த யாப்பு அதிகாரப் பரவலாக்கம், சமஷ்டி என்பன பற்றிய பேச்சுக்கே இனி இடமில்லை என்ற செய்தியை அடித்துக் கூறியது. இந்த அரசியல் யாப்பு, பாராளுமன்ற அரசியல் ஊடான முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாயும் அமைந்தது.
III. 1977 இல் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் முற்றிலும் புதியதான ஒரு தளத்திற்குச் சென்றது. இராணுவமயமாக்கலும் வன்முறையும் (Militarisation and Violence) அரசியல் பேரம்பேசலின் இடத்தை எடுத்தன. இக்கட்டத்தில் ஒற்றையாட்சியா? அல்லது பிரிந்து போதலா? என்பதாக விவாதத்தின் வழித்தடம் மாறியது. தமிழ்த் தேசியவாதத் தலைவர்களின் கோரிக்கையாக முதலில் பிரிந்து போதல் முன்வைக்கப்பட்டது. பின்னர் புதிய தலைமுறையைச் சேர்ந்த தீவிரவாதிகள் பிரிவினைவாதத்தைக் கையிலெடுத்தனர். இதன் விளைவாக அரசியலமைப்பைத் திருத்துதல் (State Reform) என்பதில் இனிமேல் தாம் அக்கறைகொள்ளப் போவதில்லை என்ற செய்தி தமிழ்த்தரப்பில் இருந்து கிடைத்தது. தமிழ்த்தரப்பு இம்முடிவை அடைந்ததன் எதிர்விளைவாக சிங்களத் தரப்பில் ஒற்றையாட்சி நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவும் விலகும் நோக்கம் கிடையாது என்ற செய்தி கிடைத்தது.
Iv. அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதத்தின் அடுத்தக் கட்டம் ஆயுதம் ஏந்திய யுத்தத்தின் பின்புலத்தில் ஆரம்பமானது. இதனால், இனத்துவ முரண்பாடு (Ethnic Conflict), அம்முரண்பாட்டைத் தீர்வு செய்தல் என்ற விடயம் அரசியலமைப்பைத் திருத்துதல் (State Reform) என்ற விடயத்துடன் இணைக்கப்பட்டது. இக்காலத்தின் விவாதம் ‘இனத்துவ முரண்பாட்டுத் தீர்வும் அரசியல் தீர்வும்’ என்ற உரையாடலாக வடிவம் பெற்றது. அயல்நாடான இந்தியா, இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிடும் நிலை உருவானது. 1985 இன் திம்பு பேச்சுவார்த்தையும், 1987 இன் இந்திய – இலங்கை உடன்படிக்கையும் அரசமைப்புத் திருத்த (State Reform) விவாதத்தின் முக்கியமான திருப்பு முனைகளாக அமைந்தன.
மேற்குறித்தவாறு அரசமைப்புத் திருத்தத்தின் வழித்தடமும் விவாதங்களும் நான்கு முக்கிய கட்டங்களாக நகர்ந்தன. 1984 இன் பின்னர் விவாதத்திற்குரிய விடயங்களாக அரசியல் தீர்வு (Political Settlement), அமைதிப் பேச்சுவார்த்தை (Peace Negotiations) என்பன அமைந்தன எனக் கட்டுரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவற்றோடு சேர்த்துப் பின்வரும் புதிய விடயங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
- சமத்துவமற்ற அதிகாரப்பகிர்வு முறைகள் (Asymmetrical Power Sharing)
- புவியியல் நிலப்பரப்புச் சாராத சமஷ்டி (Non – Territorial Federalism)
- இடைக்கால நிர்வாகம் (Interim Administration)
- ஆழப்படுத்தும் சமஷ்டி (Deep Federalisation)
இவையாவும் புதிய எண்ணக்கருக்களாகும். இவற்றினால் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் விரிவாக்கம் பெற்றது எனலாம்.
விவாதத்தின் விரிவாக்கம்
1980களில் அரசமைப்பைத் திருத்துதல் என்ற விவாதம் சிங்கள – தமிழ் இனத்துவ அடையாளம் என்ற குறுகிய எல்லையைத் தாண்டி விரிவாக்கம் பெற்றது. அரசமைப்பைத் திருத்துதல் என்பதைப் பேரம் பேசுதல் மூலமான அரசியல் தீர்வு (Negotiated Political Solution) என்பதோடு இணைப்பதால் இந்த விவாதம் விரிவாக்கம் பெற்றது. இந்த நோக்கில் இந்த விவாதம் கிழக்கு மாகாணத்தின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸால் முதன்முதலாக முன்வைக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 1987 – 1988 காலத்தில் இதை முன்வைத்தது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். முஸ்லிம்கள் தனித்துவமான சிறுபான்மை இனத்துவக் குழுமம் (Distinct Ethnic Minority) எனவும், பிராந்தியச் சுயாட்சி (Regional Autonomy) என்ற விரிந்த அதிகாரப் பகிர்வு முறையில் முஸ்லிம் இனத்துவக் குழுமத்திற்கு அதிகாரப் பகிர்வை வடக்குக் கிழக்கு மாகாணம் என்ற பகுதிக்குள் கோருவதற்கு உரிமை உள்ளது எனவும் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கைகளை முன்வைத்தது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வடக்குக் கிழக்கு இணைக்கப்படுவதை ஓர் ஆபத்துக்கான சமிக்ஞையாகக் கருதியது. வடக்குக் கிழக்குக்குள் முஸ்லிம்கள் அதிகாரம் இழந்த ஓர் இனக்குழுமமாக ஆகிவிடும் ஆபத்து இருப்பதாக அது கூறியது. வடக்குக் கிழக்கில் முஸ்லிம்களுக்கு புவியியல் தொடர்பற்ற சுயாட்சி அலகு (Non – Contiguous Autonomous Unit) வேண்டும் எனவும், அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தையிலும், சமாதான உடன்படிக்கையிலும் முஸ்லிம்கள் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியது. இக்கோரிக்கை தமிழ்த் தேசியவாதத் திட்டத்திற்கு (Tamil Nationalist Project) ஒரு நேரடிச் சவாலாக அமைந்தது. தமிழ்த் தேசியவாதிகளான மிதவாதிகளும், தீவிரவாதிகளும் தமது தேசியவாதக் கோரிக்கையை,
- முஸ்லிம்கள் தமிழ்பேசும் தேசியத்தின் ஓர் அங்கம் (Muslims were part of the Tamil speaking nation)
- வடக்குக் கிழக்கு தமிழ்பேசும் மக்களின் மரபுவழித் தாயகம்.
- எந்தவொரு சமாதான உடன்படிக்கையும், இலங்கை அரசுக்கும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் (Sri Lankan State and the Tamil Representatives) இடையிலானதாக இருக்க வேண்டும்.
ஆகிய அடிப்படைகளில் முன்வைத்திருந்தனர். இந்த அனுமானங்களை நிராகரிப்பதாகவும் சவாலுக்கு உட்படுத்துவதாகவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை அமைந்தது.
வடக்குக் கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்களின் சுயாட்சிக் கோரிக்கை, பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் மத்தியில் இருந்து சுயாட்சிக்கான கோரிக்கை எழுவதற்குக் காரணமாயிற்று. பெருந்தோட்டத்துறைத் தமிழர்களின் சார்பாக முன்வைக்கப்பட்ட சுயாட்சிக் கோரிக்கை பின்வரும் இரண்டு வாதங்களின் அடிப்படையில் அமைந்ததை இந்நூலில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. I) முதலாவதாக, பெருந்தோட்டத்துறைத் தமிழர்கள் பல மாவட்டங்களில் சிதறிப் பரவியிருப்பவர்களாக உள்ளனர். அவர்கள் எந்த மாகாணத்திலும் செறிவான சனத்தொகை உடைய பலமான குழுமமாக இல்லையென்பதால் அவர்களுக்குச் சுயாட்சி வழங்கக்கூடிய பிரதேச அலகு என ஒன்றை இனங்காண முடியாது. ஆகையால் புவியியல் பிரதேசம் சாராத அதிகாரப்பகிர்வு முறைமையொன்று (Non – Territorial Power Sharing Mechanism) அவர்களுக்கு உருவாக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இவ்வகை அதிகாரப் பகிர்வுக்கு பெல்ஜியம் உதாரணமாகக் காட்டப்பட்டது. II) இரண்டாவதாக, புவியியல் ரீதியாக நிலத் தொடர்புடையதல்லாத தனியான சுயாட்சி அலகு (Non – Contiguous Unit of Autonomy) உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவின் புதுச்சேரி மாதிரியில் (Pondicherry Model in India) இச்சமூகத்தினரின் அரசியல் அபிலாஷைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அண்மைக்காலத்தில் வெளியான நூல்கள் சிலவற்றில் இக்கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்நூற்பட்டியல் அந்நூல்களைத் தந்துள்ளது. இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களாக முஸ்லிம்களும் பெருந்தோட்டத்துறைத் தமிழர்களும் உள்ளனர். இலங்கையின் இன முரண்பாட்டைச் சிங்களவர் – தமிழர் என்ற இரு இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மட்டும் பார்க்கக்கூடாது; எல்லாச் சிறுபான்மைச் சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அதிகாரப்பகிர்வு வேண்டும் என்பன போன்ற கருத்துகளை வெளிப்படுத்தும் நூல்கள் பல வெளிவந்துள்ளன. இந்நூற்பட்டியலில் இந்த நூல்கள் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
மாற்று நோக்கு முறைகள்
சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை உருவாக்குவதற்கான வழி அரசியல் யாப்பு முறையிலான தீர்வு ஆகும் என்பது முதன்மையிடம் பெறும் சிந்தனையாக இருந்து வந்துள்ளது. இந்தச் சிந்தனையைக் கேள்விக்கு உள்ளாக்கும் மாற்று நோக்குமுறைகள் (Alternative Perspectives) சில எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இம்மாற்று நோக்கு முறைகள் சார்ந்த நூல்கள் பற்றிய விவரங்களும், குறிப்புகளும் இந்நூற்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல்களில் மூன்று வகையான மாற்று நோக்கு முறைகள் முன்வைக்கப்பட்டன. I) அரசியல் யாப்புத் தீர்வு இனத்துவ அடையாளம் (Ethnic Identity) என்பதை மட்டும் கவனத்தில் கொள்வதாக அமையக்கூடாது. சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும், ஜனநாயகம் சார்ந்த பிரச்சினைகளும் இனத்துவ அடையாளத்திற்குச் சமமான முக்கியத்துவம் பெறுதல் வேண்டும். இந்த நோக்குமுறையின்படி இனத்துவப் பிரச்சினை நாட்டின் பன்முகப்பட்ட பிரச்சினைகளில் ஓர் அம்சம் மட்டுமே. ஆகையால், முரண்பாட்டிற்கான தீர்வு பல்பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று வாதிடப்படுகிறது. II) பிரதேச அடிப்படையிலான தீர்வுகள் (Territorial Based Solutions) பெரிய இனக் குழுமங்களின் ஆதிக்கத்தைக் குறிப்பிட்ட சில புவியியல் பகுதிகளில் நிலைபெறச் செய்து, அப்பகுதிகளின் சிறுபான்மை இனக்குழுமங்களின் அடையாளங்களை மழுங்கடிக்கச் செய்வதற்கு வழிவகுக்கும் என்பது இரண்டாவது மாற்று நோக்கு முறையாகும். III) மூன்றாவதாக, ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமைகள் (Democracy, Pluralism, Human Rights) என்பன நிலைபெறுவதற்கான அரசியல் யாப்புப் பாதுகாப்புகள் இல்லாதவிடத்து, அதிகாரப்பகிர்வும், சமஷ்டிமுறையும் பிராந்திய மட்டத்தில் சர்வாதிகாரத்தை (Regional Authoritarianism) உருவாக்கிவிடும். ஆகையால், இவற்றுக்கான சட்டப் பாதுகாப்பு அவசியம் என வாதிடப்படுகிறது. குறிப்பாக பெண்ணியம், ஜனநாயகம், சமூக அபிவிருந்தி (Social Development) என்பன சார்ந்த சிந்தனையுடையோர் இம்மாற்று நோக்குமுறைகளை முன்வைத்துள்ளனர்.
இந்த நூற்பட்டியல் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலாசிரியர்கள் இந்நூற்பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்த போது இலங்கையின் இனத்துவ முரண்பாட்டிற்கான தீர்வு பற்றிய விவாதம் தலைகீழாக மாற்றமடைந்திருந்தது. ஆரம்பக்காலத்தில் ஒற்றையாட்சியா? சமஷ்டியா? என்று துருவநிலைப்பட்ட விவாதத்தில் ஈடுபட்டது போல், திரும்பவும் ஒற்றையாட்சி எதிர் சமஷ்டிவாதம் மீண்டும் கிளர்ந்துள்ளது எனவும், சிங்களவர் எதிர் தமிழர் என்ற துருவமயமாதல் மீண்டும் தலைதூக்கியுள்ளதென்றும் ஜயதேவ உயன்கொட அவர்கள் நூலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலம் நம்பிக்கையற்றதாகத் தோன்றிய அவ்வேளையில் தனது உறுதியான நிலைப்பாட்டை அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“If we are to draw one key lesson from the literature annotated in this book, it is the following: Democratic and pluralistic state reform is necessary pre – condition, a first step – only a first step – in the direction of constructively addressing Sri Lanka’s conflict which is multi – dimensional.”
மேற்படி கூற்றின் சாரமான பொருள் கீழே தரப்பட்டுள்ளது.
“இந்நூலில் நாம் பட்டியலிட்டிருக்கும் நூல்களும், அவற்றிற்கான குறிப்புகளும் ஓர் உண்மையை எமக்கு எடுத்துச் சொல்கின்றன: இலங்கையின் முரண்பாடுகள் பல்பரிமாணங்கள் கொண்டவை. இவற்றைத் தீர்வு செய்வதற்கான முன் நிபந்தனையாக ஜனநாயக – பன்மைத்துவ அரசுத்திருத்தம் (Democratic, Pluralistic State Reform) அமைகிறது. இது மிகவும் அவசியமான முன்நிபந்தனை ஆகும். ஆயினும் இது முதலாவது படி மட்டுமே என்பதை அழுத்திக்கூற வேண்டும். இம்முதலாவது படிக்கு அடுத்து பல்பரிமாணங்களுடைய முரண்பாடுகளின் தீர்வை நோக்கிய ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இடம்பெற வேண்டும்.”



