இலங்கையின் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதங்கள்: அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வாளர்களுக்கான கையேடு - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

இலங்கையின் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதங்கள்: அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வாளர்களுக்கான கையேடு – பகுதி 1

December 15, 2025 | Ezhuna

‘அரசறிவியல் கலைக்களஞ்சியம்’ (Encyclopedia Of Political Science) என்னும் தலைப்பில் அமையும் இத் தொடரில் அரசியல் கோட்பாடுகள் (Political Theories), அரசியல் விஞ்ஞான எண்ணக்கருக்கள் (Concepts) சமகால அரசியல் விவாதங்கள் என்பன குறித்த கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. பொதுவெளியில் (Public Sphere) நடைபெறும் அரசியல் விவாதங்களை ஆரோக்கியமுடையனவாக ஆக்குவதற்கு, அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், சமூகத்தின் பல மட்டங்களிற்கும் அரசியல் அறிவை எடுத்துச் செல்வதும் அவசியமான பணி என நாம் உணருகின்றோம். தமிழ் அரசியல் சூழலில் நிலவும் கோட்பாட்டு வறுமையை (Theoretical Poverty) நீக்குவதற்கு இக் கட்டுரைத் தொடர் உதவும் என்பது எமது நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் மூலதனம் (Intellectual Capital) ஒரு சிறு மேட்டிமைக் குழுவிடம் (Elite Group) குவிந்திருப்பதை நீக்கி, அறிவுச் செல்வத்தின் மறுபங்கீட்டின் மூலம் சமூக விடுதலை, ஜனநாயக மயப்படுத்தல், அடிமட்டத்தினர் அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய இலக்குகளை அடைதல் இத் தொடரின் நோக்கமாகும்.

இலங்கையின் அரசமைப்பைத் திருத்துதல் அல்லது சீர்திருத்தம் செய்தல் என்னும் விடயம் ஆங்கிலத்தில் ‘State Reform’ என்ற தொடரால் குறிப்பிடப்படுகிறது. ‘ஸ்டேட் றிபோம்’ என்ற சொற்தொடர் அரசுக்கட்டமைப்பை மாற்றம் செய்தல், அரசமைப்பு ஒன்றின் அங்கங்களுக்கிடையிலான உறவுகளையும், அதிகாரப்பகுப்பையும், மறுகட்டமைப்புச் செய்தல் (Restructuring the State) என்ற விரிந்த பொருள் உடையதுமாகும். அரசமைப்புத் திருத்தம் என்ற தொடரை ‘Amendment to the Constitution’ என்ற குறுகிய பொருளில் இல்லாது அரசுக்கட்டமைப்பைத் திருத்தம் செய்தல் என்ற விரிந்த பொருளில் இக்கட்டுரையில் உபயோகிக்கின்றோம். அரசுக்கட்டமைப்பை மாற்றுதல் என்னும் விடயம், இலங்கை சுதந்திரம் அடைந்தகாலம் முதல் இன்றுவரை ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றையாட்சி முறையை மாற்றுதல் என்பதில் மையங்கொண்டு இருந்தது. இவ்வாறு மாற்றுவதால், மத்தியில் அதிகாரங்களைக் குவிக்கும் இயல்புடையதான அரசுக்கட்டமைப்பை (Unitary and Centralised State Structure) திருத்தலாம் என்று தமிழர்களின் அரசியல் தலைவர்கள் கருதினர். இது இலங்கையின் அரசியலில் மையப்பிரச்சினைகளில் ஒன்றாகவும் இலங்கையின் இனத்துவ அரசியல் (Ethnic Politics), இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பனவற்றுடன் பிரிக்க முடியாத தொடர்புடையதாகவும் இருந்து வருகிறது. 

‘Politics, Debates and Discourses of State Reform in Sri Lanka: an Annotated Bibliography’ என்னும் தலைப்பில் நூற்பட்டியல் ஆய்வு நூல் ஒன்றை இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கம் 2013 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த ஆங்கில நூலின் தலைப்பில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய ‘State Reform in Sri Lanka’ (இலங்கையின் அரசுக்கட்டமைப்பு மாற்றம்) என்ற விடயம் தொடர்பாக 1960கள் முதல் 2013 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்ட முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள், எழுதிப் பிரசுரிக்கப்பட்ட முக்கியமான நூல்கள் ஆகியவற்றின் நூல் பட்டியல் ஆய்வாக மேற்படி நூல் விளங்குகிறது. இந்நூலை அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் ஜயதேவ உயன்கொடவும், ஆய்வாளரான சனஜி மார்சலின் (Sanayi Marcelline) அவர்களும் இணைந்து எழுதியுள்ளனர். இந்நூலை அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வுக் குறிப்புகளுடன் கூடிய நூற்பட்டியல்

இந்நூல் ‘Annotated Bibliography’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வகையைச் சேர்ந்ததாகும். இலங்கையில் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான ஆய்வு நூல்களில் மிக முக்கியமானதொன்றாக விளங்கும் இப்புதுமையான நூலின் உள்ளடக்கத்தை, ‘ஆய்வுக் குறிப்புகளுடன் கூடிய’ (Annotated) என்ற சொற்பதத்தின் பொருளைப் புரிந்துகொள்வதன் மூலமே விளங்கிக் கொள்ளுதல் முடியும். நூற்பட்டியல் ஒன்றை நூலின் பெயர், பதிப்பகத்தின் பெயர், நூலாசிரியரின் பெயர், பிரசுரிக்கப்பட்ட ஆண்டு போன்ற அடிப்படைத் தகவல்களுடன் பிரசுரிப்பதை ‘நூற்பட்டியல்’ என அழைப்பர். அடிக்குறிப்புகளுடன் கூடிய நூற்பட்டியல் நூலகவியல் தகவல்களுக்கு மேலாக நூலின் உள்ளடக்கம் பற்றிய முக்கியமான தகவல்களைத் தருவதாக அமையும். நூல் எழுந்த புலமை வரலாற்றுப் பின்னணி (Context) என்ன? அந்நூல் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆய்வுப் பிரச்சினை (Research Problem) யாது? நூலாசிரியர் முன்வைக்கும் முக்கியமான வாதங்கள் (Arguments) எவை? அவரது ஆய்வு முடிவுகள் யாவை? போன்ற வினாக்களுக்கும் விடைத்தரும் முறையில் சுருக்கமாகவும், அதேவேளை செறிவான கருத்துடையனவுமான குறிப்புகளைத் தருவதே ‘அடிக்குறிப்புகளுடன் கூடிய நூற்பட்டியல்’ ஒன்றின் நோக்கமாகும். நூற்பட்டியல்கள் பொதுவாக நூலகவியலில் நிபுணத்துவம் பெற்ற நூலகவியலாளர்களால் தயாரிக்கப்படுவதுண்டு. ஆயினும் பொதுவான நூற்பட்டியலாக இல்லாது ஏதாவது சிறப்புத்துறை சார்ந்த நூற்பட்டியலாயின் அதனைக் குறித்த சிறப்புத்துறை சார்ந்த புலமையாளர்களின் உதவியுடன் எழுதப்படும் ஆக்கமாகவே அமைவதுண்டு. இக்கட்டுரையின் பேசுபொருளாக அரசியல் விஞ்ஞானம் அமைந்துள்ளது. இந்நூலின் பிரதான ஆசிரியராகிய ஜயதேவ உயன்கொட அரசியல்துறைப் பேராசிரியர் ஆவார். சனஜி மார்சலின் அவர்களும் அனுபவம்மிக்க ஆய்வாளர் என்பதை ஊகிக்க முடிகிறது. 

நூலின் முன்னுரை

இந்நூலின் முன்னுரை 9 பக்கங்களில் அமைந்துள்ளது. இதனைப் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்கள் எழுதியுள்ளார். நூலின் இறுதியில் தரப்பட்டுள்ள நூலாசிரியர் அட்டவணையில் (Author Index) ஏறக்குறைய 130 வரையான புலமையாளர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் 10 வரையான ஆய்வு நிறுவனங்களின் பெயர்களும், ஆய்வு நூல்களை வெளியிட்ட நிறுவனங்கள் என்ற வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்புலமைசார் ஆய்வுகள், வெளியீடுகளில் ஆராயப்பட்டுள்ள விடயங்களைத் தொகுத்து நோக்கும் முறையில் பேராசிரியர் அவர்களின் முன்னுரை அமைந்துள்ளது. அம்முன்னுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் இந்நூலைப் படிப்பதற்குரிய சிறந்த அறிமுகமாக விளங்குகின்றன.

நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயப்பொருள்

அடிக்குறிப்புகளுடன் கூடிய இந்நூற்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வு நூல்கள், கட்டுரைகள் என்பன எவ்வெவ் விடயப் பொருட்களை ஆராய்வனவாக உள்ளன (Themes Covered in the Book) என்பதை முன்னுரை விளக்கிக்கூறுகிறது. ஆய்வாளர்களால் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயப் பொருட்கள் அல்லது அடிக்கருத்துகள் ஆய்வு எழுதப்பட்ட காலத்தின் சூழமைவைப் (Context) பொறுத்து வேறுபடும் தன்மை உடையதாக இருந்தது என பேராசிரியர் குறிப்பிடுகிறார். அரசமைப்பைத் திருத்துதல் பற்றிய விவாதத்தை 1950களின் முற்பகுதியில் தமிழரசுக்கட்சி (சமஸ்டிக் கட்சி – Federal Party) தொடக்கி வைத்தது. இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு மூலம் சுயாட்சியை வழங்க வேண்டும், இதற்கான அரசு மாதிரி சமஸ்டிமுறை எனவும், இலங்கையின் ஒற்றையாட்சி முறையைச் சமஸ்டிமுறையாக மாற்ற வேண்டும் என்றும் தமிழரசுக்கட்சி கோரிக்கையை முன்வைத்தது. ஆகையால் சமஸ்டிக் கோரிக்கையை பின்காலனிய இலங்கையின் அரசுக்கட்டமைப்பைத் திருத்துவதற்கான கோரிக்கை (Structural Reconstitution of the State) என வரையறை செய்யலாம். தமிழரசுக்கட்சியின் சமஸ்டிக் கோரிக்கைக்கு எதிர்வினையாக சிங்களத் தரப்பில் இருந்து இலங்கை ஒற்றையாட்சி அமைப்பாகவே இருத்தல் வேண்டும் என்ற எதிர்வாதம் முன்வைக்கப்பட்டது. இக்காரணத்தால் 1950கள் தொடக்கம் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் ‘சமஸ்டி எதிர் ஒற்றையாட்சி’ என்னும் விவாதமாக அமைந்தது. இவ்விவாதம் 1950கள் முதல் உணர்ச்சியைக் கிளறும் சூடான விவாதமாகவும் அமைந்தது. ஈயினும் சமஸ்டி எனும் விடயம் இலங்கைக்குப் புதியதல்ல; இலங்கைக்குச் சமஸ்டிமுறை அரசமைப்பே உகந்தது என்ற கருத்தை 1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்கள் முன்மொழிந்தார். பின்னர் 1929 ஆம் ஆண்டில் கண்டிய தேசிய காங்கிரஸ் (Kandyan National Congress) என்ற அமைப்பும் சமஸ்டிமுறையை ஒரு கோரிக்கையாக முன்வைத்தது. இலங்கையில் சிவில் சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்றிருந்த லியனார்ட் வூல்வ் (Leonard Woolf) என்பவரும் 1936 இல் சமஸ்டிமுறை இலங்கைக்கு ஏற்புடையது என்ற கருத்தைக் கூறினார். அவ்வாறாயின் இலங்கையின் சிறுபான்மை மக்கள், குறிப்பாகத் தமிழ்ச் சிறுபான்மையினர் ஏன் அப்போது சமஸ்டிமுறையைக் கோரவில்லை? பண்டாரநாயக்க அதனைக் கொடுக்கலாம் என முன்வந்த போது ஏன் அதனைத் தமிழ் மக்கள் நிராகரித்தார்கள்? என்ற கேள்விகள் வாசகர்கள் மனதில் இயல்பாகவே எழுகிறது. இதற்கான விடையை ஜயதேவ உயன்கொட அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “The focus of ethnic minority demands during the late colonial period was on representation in the colonial legislature and not on state reform as such” (பக். ix).

இவ்வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு வருமாறு: “காலனிய ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சிறுபான்மை இனக்குழுமத்தின் கோரிக்கைகள் காலனிய சட்டசபையின் பிரதிநிதித்துவம் பற்றியதாகவே இருந்தது, அன்றி அரசுக் கட்டமைப்பின் சீர்திருத்தம் என்ற கோரிக்கையாக இருக்கவில்லை.”

சோல்பரி ஆணைக்குழு

1940களில் சோல்பரி ஆணைக்குழுவின் வருகை அரசியல் யாப்புப் பற்றிய விடயத்தில் ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது. அக்காலத்தின் அரசியல் விவாதங்களை நுணுகிப் பார்க்கும் போது, ஒற்றையாட்சி அரசு மாதிரிக்கு (Unitary State Model) எதிர்ப்பு எழவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. சமஸ்டி முறைப்படியான அரசமைப்பு மாற்றமே வேண்டும் என்ற வாதத்தை அக்கால இடதுசாரிக் கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியே முன்மொழிந்தது. அக்கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (CTFU) இக்கோரிக்கையை முன்வைத்தது. இத்தொழிற்சங்கச் சம்மேளனத்தின் குழு 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இவ்விடயம் பற்றி ஓர் அறிக்கையை (Memorandum) அனுப்பியது. அவ்வறிக்கை இற்றை நாளின் அரசியல் கோட்பாட்டில் உபயோகிக்கப்படும் சொற்தொடரான ‘பல்தேசிய சமஸ்டி அரசு’ (Multi –nation Federal State) என்ற தொடரை உபயோகித்து, இலங்கையின் அரசுக் கட்டமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்ற தனது நோக்கு நிலையை வெளிப்படுத்தியது. அந்த அறிக்கையின் பிரதான பகுதியினை கீழே மொழிபெயர்ப்பாகத் தந்துள்ளோம். சுதந்திரத்திற்குப் பிந்திய காலத்தில் அரசமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக நடைபெற்ற – நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதங்கள் சார்ந்த பிரதான கருத்துகள் (Key Ideas) இந்த அறிக்கையில் பொதிந்துள்ளதைக் காணலாம். 

“இலங்கையின் எதிர்காலச் செல்நெறியும், வளர்ச்சிப்பாதையும் ஒரு தேசியம், ஒற்றையாட்சி அரசு (One Nation, Unitary State), சிங்கள மக்கள் தவிர்ந்த பிற மக்கள் யாவரும் சிறுபான்மையினர் என்று இருத்தல் ஆகாது என இக்குழு பிரகடனம் செய்கிறது. இதற்கான காரணம் யாதெனில் இலங்கையில் வரலாற்று ரீதியாக உருவாக்கம் பெற்ற இரு தனித்துவமான தேசிய இனங்கள் உள்ளன. சிங்களவர், தமிழர் என்ற இவ்விரு தேசிய இனங்களும் தத்தமது சொந்த இடம் எனக் கூறத்தக்க தொடர்ச்சியான நிலப்பரப்பை (Contiguous Territory) உடையவை. இவ்விரு தேசிய இனங்களின் நிலப்பரப்புகளில் வேறு சிறுபான்மைக் குழுக்கள் அங்கும் இங்குமாகக் குடியிருக்கிறார்கள் (Interspersed). எனினும் இந்தப் பரப்புகளில் வளர்ந்து வரும் இவ்விரு தேசிய இனங்களும் தமக்கெனச் சொந்தமான ஒரு மொழி, தமக்கென ஒரு பொருளாதார அமைப்பு, பண்பாடு, உளவியல் பாங்கு (Psychological Make – up) என்பனவற்றை உடையனவாய் இருந்து வந்துள்ளன. ஆகையால் சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பு பின்வரும் தத்துவங்களின் (Principles) அடிப்படையில் அமைதல் வேண்டும் என இக்குழு பிரகடனம் செய்கிறது.”

மேலே தரப்பட்ட மொழிபெயர்ப்பை ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டு விளங்கிக் கொள்வதற்காக ஆங்கில மூலத்தைக் கீழே தந்துள்ளோம்.

“This committee declares – that Ceylon’s future development will not be along the lines of a one nation unitary state, with all except the Sinhalese people being regarded as minorities living within this state. As in fact there are two distinct nations historically evolved nationalities – each with their own contiguous territory; their own language, economic life, culture, and psychological make – up as well as interspersed minorities living in the territory of these nationalities, this committee declares that the constitution of a free Ceylon must be based on the following principles.”

இதனையடுத்து தொழிற்சங்கச் சம்மேளனத்தின் அறிக்கையில் சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பு எத்தகைய தத்துவங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அப்பகுதியின் மொழிபெயர்ப்பு வருமாறு:

அ. இலங்கை மக்களின் சமத்துவமும் இறைமையும் (அரசியல் யாப்பினால்) ஏற்று உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆ. சிங்களவர், தமிழர் என்ற இரு தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை உள்ளதென்பதை ஏற்று அங்கீகரித்தல் வேண்டும். இவ்வினங்கள், விரும்பினால் தமக்கென தனியான, சுதந்திரமான அரசை நிறுவிக்கொள்ளும் உரிமை உடையன என்பதும் ஏற்று அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.

இ. சிங்களவர், தமிழர் என்ற இரு தேசிய இனங்களின் நிலப்பகுதியில் வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்களுக்கு (Minorities) சமய வழிபாட்டு உரிமைகளும் அரசியல் யாப்பினால் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். 

I) அம்மக்களின் அரசியல், சமூக, பண்பாடு உரிமைகளையும், கல்வி, மொழி, சமயம் தொடர்பான உரிமைகளையும் யாப்புச் சட்டப்படி, உத்தரவாதம் செய்தல் வேண்டும். 

ii) சாதி, இனம் என்பனவற்றின் அடிப்படையிலான சலுகைகளை அனுபவித்தல் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும், இந்த அடிப்படையிலான பாரபட்சம் காட்டுதலும் (Discrimination) ஒழிக்கப்படுதல் வேண்டும்.

iii) மேற்குறித்த உரிமைகளை மீறுதல் அரசியல் யாப்பின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 

மேற்குறித்த பகுதியின் ஆங்கில மூலம் கீழே தரப்பட்டுள்ளது.

a) Recognition of the equality and the sovereignty of the peoples of Ceylon.

b) Recognition that the nationalities (Sinhalese and Tamil) have the right to free self determination, including the right, if they so desire, to form their own separate independent states.

c) Recognition that the interspersed minorities should have .

i) Statutory guarantees protecting their political, social, economic, cultural educational and linguistic rights and their freedom of religious worship.

ii) Statutory abolition of privileges and discrimination based on caste or community.

iii) Making the infringement of the above a penal offence under the constitution.

கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கச் சம்மேளனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயங்கள் சிலவற்றை அடுத்ததாகப் பேராசிரியர் அட்டவணைப்படுத்திக் காட்டுகிறார். சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தின் சாரம்சமான விடயங்களாக அமைந்த இவற்றை நாம் கீழே எமது வார்த்தையில் தந்துள்ளோம்.

அ. நாட்டின் ‘மக்கள்’ சமூகங்கள் (‘Peoples’ of the Country)

இலங்கை மக்களின் சனத்திரளை (Population) இனத்துவப் பன்மைத்துவம் (Ethnic Plurality) உடையதாக இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. அம்மக்களை ‘இலங்கையின் மக்கள்’ என அறிக்கை குறிப்பிடுகிறது. 

ஆ. பகிரப்பட்ட இறைமை (Shared Sovereignty)

இலங்கை மக்கள் (People of Ceylon) எனச் சுட்டப்படும் இம்மக்கள் அனைவரும் இறைமையில் பங்கு (Share) உடையவர்கள். இதனையே பகிரப்பட்ட இறைமை (Shared Sovereignty) என அறிக்கை சுட்டுகிறது. 

இ. சமஸ்டி அரசு (Federal State)

இலங்கையின் அரசுக் கட்டமைப்பை மறுசீரமைத்து சமஸ்டி அரசை நிறுவுதல் வேண்டும் என அறிக்கை குறிப்பிடுகிறது.

ஈ. அரசியல் யாப்பின் மேலாண்மை (Constitutionalism)

அரசியல் யாப்பு மேலாண்மையுடையது என்னும் நவீன அரசியல் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் அறிக்கை இலங்கை மக்கள் யாவரும் சமத்துவம் உடையவர்கள், அவர்களிடையே பாரபட்சம் காட்டப்படலாகாது (Equality and Non-discrimination) என்ற கொள்கைகள் அரசியல் யாப்பினால் உறுதி செய்யப்படுதல் வேண்டும் எனக் குறிப்பிட்டது. 

உ. நிலப்பரப்புச் சாராத சிறுபான்மையினர் (Non–territorial Minorities)

இலங்கையின் பிரதான தேசிய இனங்களின் நிலப்பரப்பில் பல சிறுபான்மை இனங்கள் சிதறிப் பரவி வாழுகின்றன. இந்நிலையில் ‘Non–territorial (Interspersed) Minorities’ எனக் கருதப்பட வேண்டிய சிறுபான்மையினர் உள்ளனர் என்பதையும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியது. 

மேலே குறிப்பிட்ட அடிப்படையான எண்ணக்கருக்களையும், கோட்பாடுகளையும் தமிழ் அரசியல் தலைமை தமது கவனத்தில் எடுத்துக்கொண்டு தமது அரசியல் வேலைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்வதற்கு, சுதந்திரமடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னர்தான் சாத்தியமாயிற்று என்பது சுவாரஸ்யமான விடயம் எனப் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அதாவது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு 1944 ஆம் ஆண்டில் அறிக்கையில் குறிப்பிட்ட அடிப்படைத் தத்துவங்களின் முக்கியத்துவத்தை, இலங்கையின் தமிழ்த் தலைவர்கள் சுதந்திரத்தின் பின்னர் 1955 இல், ஏழாண்டு கழிந்த பின்னர்தான் புரிந்து கொண்டனர். 1948 இல் சுதந்திரம் அடைந்த போது உருவாக்கம் பெற்றிருந்த பின் காலனித்துவ இலங்கை அரசு (Post–colonial Sri Lankan State) சிறுபான்மையினருக்குப் பாரபட்சம் காட்டுதல் என்ற கருத்தை அரசியல் அமைப்பின் அடித்தளக் கோட்பாடாகக் (Foundation Principle) கொண்டிருந்தது என்பதை இத்தலைவர்கள் கண்டுணர்வதற்கு ஏழாண்டு காலம் பிடித்தது என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும். 

இனத்துவத் தேசியவாதங்களின் தோற்றம்

அரசமைப்பைத் திருத்துதல் என்னும் விவாதம் 1950களில் திசைதிரும்பியது. இவ்விவாதம் சிங்களவர் – எதிர் தமிழர் எனவும், ஒற்றையாட்சியா – சமஸ்டியா எனவும் துருவநிலைப்படுத்தப்பட்டது. சிங்களத் தேசியவாத அரசியலின் நிகழ்ச்சித்திட்டத்தில், ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த ஒற்றையாட்சி அரசு என்ற அடித்தளத்தின் மீது அம்முறையைப் பலப்படுத்தும் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை சமஸ்டிமுறையை நோக்கியதான சீர்திருத்தங்கள் தமிழ்த்தேசிய அரசியல் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தன. 1950களில் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் இனத்துவ அடிப்படையில் துருவமயப்படுத்தப்பட்டது (Ethnically Polarised). இவ்விவாதம் சிங்களவர் – தமிழர் என்ற இரு இனக்குழுக்களின் தேசியவாதங்களில் (Ethnic–nationalisms) நங்கூரம் இடப்பட்டிருந்தது. இந்த உண்மையை புலமைத்துவ ஆய்வுகள் மூலம் முதலில் வெளிக்கொணர்ந்த அரசியல் விஞ்ஞானிகளாக மூவரைக் குறிப்பிடலாம். அமெரிக்கப் பேராசிரியரான ஹவ்வார்ட் றிஜின்ஸ் எழுதிய ‘Ceylon: Dilemmas of a New Nation’ என்ற நூல் 1960 இல் வெளியாயிற்று. றொபர்ட் என். கெயர்ணி (Robert N. Kearney) என்னும் அமெரிக்கப் பேராசிரியர் 1973 இல் ‘The Politics of Ceylon (Sri Lanka)’ என்ற நூலையும், 1978 இல் ‘Language and Separation’ என்னும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையையும் எழுதி வெளியிட்டார். பேராசிரியர் அ. ஜயரத்தினம் வில்சன் 1988 இல் ‘The Breakup of Sri Lanka: the Sinhalese – Tamil Conflict’ என்ற நூலை வெளியிட்டார். இம்மூன்று பேராசிரியர்களின் ஆக்கங்களும் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் சென்ற திசைவழியை அறிந்துகொள்வதற்கு உதவக்கூடியன. இம்மூவரின் நூல்களை விட இன்னும் பலரது ஆய்வுகளும் அரசியலமைப்பு விவாதம் இனத்துவத் தேசியவாதங்களின் அடிப்படையில் திசை திரும்பியதையும், அவ்விவாதத்தின் பின்புலத்தையும் பகுப்பாய்வு முறையில் அலசுவனவாக அமைந்தன.

தொடரும்.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்