பெருந்தோட்டங்களின் இருண்ட வாழ்வை வெளியுலகத்துக்கு வெளிச்சமிட்டுக்காட்டி, அவ்வாழ்வு பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் நடேசய்யரின் சமூக, அரசியல் இயக்கத்தின் முக்கியமான அங்கங்களுள் ஒன்றாக விளங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளரிடையே சீர்திருத்தச் சிந்தனைகளைப் பரப்பி, அவர்களைச் சமூக, அரசியல் சக்தியாகக் கட்டியெழுப்புவதும் இந்திய மக்களிடையே தோட்டத் தொழிலாளர்களின் யதார்த்த வாழ்வை எடுத்துரைத்து, இலங்கைக்குத் தொழிலாளர்களாகப் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் அதன் அடிப்படை நோக்கங்களாக இருந்துள்ளன.
மேற்படி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக திட்டமிட்டவகையில் துண்டுப்பிரசுரங்கள், சட்டவழிகாட்டி நூல்கள் முதலானவற்றை வெளியிட்டுள்ள நடேசய்யர், பத்திரிகைகளிலும் அவை குறித்துத் தொடர்ந்தும் எழுதி வந்துள்ளார்; தோட்டங்களுக்குள் உள்நுழைவதற்கிருந்த தடைகளைமீறி மக்களிடத்தில் பிரசங்கங்கள் செய்துள்ளார்; மீனாட்சியம்மாளின் பாடல்களைச் சிறுபிரசுரங்களாகப் பதிப்பித்து வெளியிட்டும் அவரைக்கொண்டு பாடல்களைப் பாடுவித்தும் விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்க முயன்றுள்ளார். இத்தகைய தொடர்முயற்சிகளின் ஓர் உத்தியாகவே ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்’ எனும் நூலை எழுதியுள்ளார். அந்நாடகத்தின் முன்னுரையில் இடம்பெறும், “இலங்கையில் உள்ள தோட்டங்களில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளர்களுடைய உண்மையான நிலைமையை எடுத்துக்காட்ட வேண்டியே இந்நாடகம் எழுதப்பெற்றுள்ளது” என்ற நடேசய்யரின் தன்னிலை விளக்கமும் ‘இந்நாடகத்தின் நோக்கம்’ என்ற பகுதியில் இடம்பெறும், “இந்தியத் தொழிலாளர்கள், பிறநாடுகளில் அவஸ்தைப்படாதிருக்க வேண்டுமானால் அவர்களுடைய கேவலமான நிலமையை அவர்களுக்கும், தென்னிந்தியாவிலுள்ள அவர்களது உறவினர்களுக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறியக்கூடியதாயிருக்க வேண்டும். தென்னிந்தியாவிலுள்ள கிராமவாசிகள் தங்களுடைய உறவினர்கள் அந்நிய நாடுகளில் கண்டுள்ள வாழ்க்கையைவிடத் தங்களுடைய வாழ்க்கை எவ்விதம் மேன்மையுடையது என்பதையும் அதனைத் தாங்கள் எவ்விதம் மென்மேலும் விருத்தி செய்துகொள்ளலாம் என்பதையும் அறியக்கூடியவிதமாய் பிரசாரம் செய்ய வேண்டியது அவசியமாய்விட்டது” என்ற கருத்துகளும் அதனை நேரடியாக வெளிப்படுத்திநிற்கின்றன.

துண்டுப்பிரசுரங்கள், பிரசங்கங்கள் முதலானவற்றைவிட நாடகங்கள் சமூக மாற்றச் செயன்முறையில் மிகுந்த பயனளிக்கும் என்ற நோக்கிலே இந்நாடக ஆக்கத்தை நடேசய்யர் மேற்கொண்டுள்ளார். “பொது ஜனங்களுடைய உணர்ச்சியைக் கிளப்ப மூவகைச் சாதனங்களுண்டு. பிரசுரங்கள் மூலம் உண்டாக்குவது முதலாவது. பத்திரிகைகளும் புஸ்தகங்களும் வேறு பிரசுரங்களும் ஒருவாறு பலங்கொடுக்கும் எனினும் போதிய அளவு கொடுக்கும் என எண்ணவிடமில்லை. நமது நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். இனாமாய்த் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுப் பரப்புவதற்காகச் செலவாகும் தொகைக்குத் தக்கபலன் கிடைக்குமென்பதே சந்தேகம். பிரசங்கங்கள் மூலம் அறிவைப் பரப்புவது இரண்டாவது ஆகும். பிரசுரங்களைவிட பிரசங்கங்கள் அதிக உணர்ச்சியை உண்டாக்குமெனினும் அதுவும் போதிய பலனைக் கொடுக்கும் என்று எண்ண இடமில்லை. மூன்றாவதாக நமக்குள்ள சாதனம் நாடகமாகும். நமது நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் கோவில் திருவிழாக் காலங்களில் பள்ளு பாடிக் காப்புக் கட்டுவது என்ற புராதன வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. பூர்வீகமுறைப்படி பள்ளு நாடகம் நடத்தப்படாவிட்டாலும் அந்தப் பெயர்கொண்டு ஏதோ ஒரு பாட்டைப் பாடிக் காரியங்கள் முடிக்கும் வழக்கமிருக்கிறது. அவ்வித சந்தர்ப்பங்களில் பிறநாடுகளுக்குச் சென்றவர்களின் பரிதாப நிலையை உள்ளது உள்ளபடி காட்டக்கூடிய முறையில் நாடகங்கள் நடித்துக்காட்ட ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன் அவர்களுடைய செல்வநிலையை உயர்த்துவதற்கான காரியங்களும் கைக்கொள்ளப்படுமானால் இந்தியக் கிராமவாசிகள் கூடியசீக்கிரம் விருத்தியடைவார்கள் என்பது திண்ணம்” என்ற நடேசய்யரின் பிரகடனம், அவர் நாடக ஆக்க முயற்சியில் ஈடுபட்டமைக்கான தேவையை வெளிப்படுத்தி நிற்கிறது.
மீனாட்சியம்மாளும் தன்னுடைய பதிவுகளில் நாடகங்கள் பிரசாரத்துக்கு வலிமையான கருவியாகத் தொழிற்படுமாற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக, இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு என்ற சிறிய பிரசுரத்தில் இடம்பெறும் மீனாட்சியம்மாளின், “இலங்கைத் தோட்டங்களில் வேலைசெய்யும் 8 லட்சம் இந்தியத் தொழிலாளர் நிலைமையைப் பற்றி சாதாரண சனங்கள் அறிய வேண்டியது மிக்க அவசியமாகிவிட்டது. இத்தகைய பிரசாரத்திற்கு நாடகங்களே தக்க சாதனங்களாகும். அந்நோக்கம் பற்றியே தோட்டத் தொழிலாளர் நாடகம் ஒன்று எழுதப்பெற்று வருகின்றது…” என்ற குறிப்புகளைச் சுட்டிக்காட்டலாம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நாடகங்கள் வலிமையான கருவியாக விளங்கி வந்தமையும் நடேசய்யருடைய கள அனுபவங்களும் மேற்படி நாடக ஆக்க உத்திக்குத் தூண்டுகோலாக விளங்கியுள்ளன எனலாம். மேடை நாடகங்களும் நாடக நூல்களும் இந்திய விடுதலைக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புவதிலும் காலனிய ஆட்சியின் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் அம்பலப்படுத்துவதிலும் விடுதலைப் போராட்ட உணர்வை வளர்த்தெடுத்து மக்களை அணிதிரட்டுவதிலும் வலுவான பங்கினை வகித்தன. நாடகக் கம்பனிகள் பல தோற்றம்பெற்று, நாடகத்தை வலிமையான மக்கள் கலையாக்கின. தேசவிடுதலை, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை மையப்படுத்திய தமிழ்நாடங்கள் பல அக்காலத்தில் மேடையேற்றப்பட்டன. சான்றாக, கிருஷ்ணசாமிப் பாவலர் குறித்த கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் பின்வரும் கருத்துகளைச் சுட்டிக்காட்டலாம்:
“காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டக் கனல் எங்கும் பரவியிருந்த அக்காலத்தில், மதுவிலக்குத் திட்டத்திற்கு உரமூட்டும் வகையில் பதிபக்தி நாடகத்தையும் கதர் இயக்கத்திற்கு ஆதரவாக கதரின் வெற்றி என்ற நாடகத்தையும் நாகபுரிக் கொடிப் போராட்டத்தை மையமாக வைத்து தேசியக்கொடி என்ற நாடகத்தையும் குதிரைப் பந்தயத்தால் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிவதை எடுத்துக்காட்டும் கவர்னர்ஸ் கப் என்னும் நாடகத்தையும் நடத்தி அரசாங்கத் தடை, அடக்குமுறைகளுக்கெல்லாம் ஈடுகொடுத்து எதிர்நீச்சல் போட்ட தேசபக்த மாவீரர் பாவலர் ஆவார்” (தமிழ் நாடக வரலாறு, 1989: 141).
இந்திய விடுதலைப் போராட்ட நகர்வுகளை ஓர் இதழியலாளனாகவும் சமூக, அரசியல் செயற்பாட்டாளனாகவும் நுட்பமாக அவதானித்தும் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்குப் பங்களித்தும் வந்த நடேசய்யர், நாடகங்கள் விடுதலைப் போராட்டத்திலும் சமூக சீர்திருத்தத்திலும் செலுத்திவந்த தாக்கத்தினைக் காணத்தவறியிருக்க மாட்டார். அத்துடன் பத்திரிகை, துண்டுப்பிரசுரம், பிரசங்கம் எனப் பலதளங்களிலும் தோட்டத் தொழிலாளரின் துயர வாழ்வையும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வுக் கருத்துகளையும் வெளிப்படுத்திவந்த நடேசய்யர், அவற்றின் போதாமைகளை – மட்டுப்பாடுகளை அவதானித்திருப்பார் – அறிந்திருப்பார். இந்தப் பின்புலமே அவரை நாடக ஆக்க முயற்சியில் ஈடுபடத் தூண்டியுள்ளது எனலாம்.
நடேசய்யர் நாடக ஆக்கத்தில் ஈடுபட முன்னரே இலங்கைவாழ் இந்தியரிடையே நவீன நாடக ஆற்றுகை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை இந்தியர் சங்கம் அத்தகைய நாடக ஆற்றுகையொன்றை 1920 ஆம் ஆண்டே நிகழ்த்தியுள்ளது. அது குறித்த செய்தி ஆதி திராவிடன் பத்திரிகையில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
“இலங்கை இந்தியர் சங்கம்
நாளது 9.11.20 தீபாவளியன்று இரவு மேற்படி சங்கத்தின் ஆதரவின்கீழ் ‘பொதுநிதிக்காக’ சங்கத்தினங்கத்தவர்கள் கோவிந்தன் என்னுமோர் சிறிய சரிதையை நவீன நாடகமுறையில் நடித்துக் காண்பித்தார்கள். அன்று தினம் அந்நாடகத்தினை கண்ணுற திரளான ஜனங்கள் குழுமியிருந்தார்கள். தவிரவும் மேற்படி சங்கத்தினங்கத்தவர்களால் இதுவே முதலாவதாக நடத்தப்பட்டபோதிலும் யாதொரு குறைவின்றி விஜயஞ் செய்திருந்த கனவான்கள் யாவரும் ஆச்சரியப்படத்தக்க விதமாகவும் சந்தோஷசாகரத்தில் மூழ்கடிக்கும்படியாகவும் ஒவ்வொரு ஆக்டர்களும் அவரவர்கள் ஆக்டை மிகவும் திறமையுடன் நடித்துக் காண்பித்தார்கள்” (ஆதி திராவிடன், 2020: 268).
இந்நாடகத்தின் பொருண்மை குறித்து அறியமுடியவில்லை. ஆனால், நாடகம் பார்த்த கனவான்களைச் சந்தோஷ சாகரத்தில் மூழ்கடிக்கும்படியாக நடித்தார்கள் என்ற குறிப்பு, இந்நாடகம் பொழுதுபோக்குத் தன்மையை மிகுதியாகக் கொண்டிருந்திருக்கும் என்ற ஊகத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்நிலைக்கு மாறாக நடேசய்யரின் நாடக ஆக்கமானது, சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டமைந்துள்ளது. இந்நாடகம் வெளிவந்த காலத்து இலங்கையின் நாடகப் போக்கில் இதிகாச புராணக் கருத்துகளை நாடகமாக்குவதே முதன்மையான போக்காக விளங்கியுள்ளது. அதனால் சமூக பிரச்சினைகளைப் பேசி, சமூக மாற்றத்துக்கான கருவியாக நாடகக் கலையைக் கைக்கொண்ட முன்னோடி முயற்சிகளுள் முதன்மையான ஒன்றாக நடேசய்யரின் இந்நாடக ஆக்கம் அமைகிறது.
இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் 1937 ஆம் ஆண்டு, கொழும்பு கமலா பிரஸ்ஸினால் வெளியிடப்பட்டுள்ளது. தனிப்பிரதி ஒன்று 50 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நாடக நூலை அரிதின்முயன்று அந்தனி ஜீவா 2018 ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

நடேசய்யர் இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகத்தை 1937 ஆம் ஆண்டுக்கு முன்னரே வெளியிடத் திட்டமிட்டுள்ளார் என்பதை இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் (1928) என்ற நூலில் இடம்பெறும் பின்வரும் விளம்பரத்திலிருந்து அறியமுடிகிறது:
“வெளிவருகின்றது! வெளிவருகின்றது!
‘சுந்திரம் அல்லது அந்தரப்பிழைப்பு’
கௌரவ கோ. நடேசய்யரால் இயற்றப்பெற்றது
உடனே ஆர்டர் செய்யுங்கள்
தனிப்பிரதி விலை சதம் 30, 4 புத்தகங்களின் விலை ரூபா 1.00.
ஆரு. முத்தையா அம்பலம்
154, செட்டித்தெரு, கொழும்பு”
இவ்விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ‘சுந்திரம் அல்லது அந்தரப்பிழைப்பு’ என்ற நூல் வெளிவந்ததாகத் தெரியவில்லை. சிறிய இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்துள்ள ‘இலங்கைத்தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு’ நாடகத்தை அந்நூலாகக் கொள்ளலாம். நாடக நூலைத் திட்டமிட்டபடி வெளியிடமுடியாமற் போனதாலேயே நாடகத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை மட்டும் முதலில் தனிப்பிரசுரங்களாக வெளியிட்டுள்ளனர்.
இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகத்தில் உள்ள பாடல்கள் யாவும் மீனாட்சியம்மாளால் இயற்றப்பட்டவையாகும். அந்நூலின் முன்பக்கத்திலேயே “இந்நாடகத்திலுள்ள பாடல்கள் சந்தச்சரபம் உடுமலை முத்துசாமிக் கவிராயர் அவர்கள் மாணவியும், ஆசிரியரின் பெண்சாதியுமான ஸ்ரீமதி கோ.ந. மீனாட்சியம்மாளால் இயற்றப்பட்டவை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தச்சரபம் உடுமலை முத்துசாமிக் கவிராயர் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட மேடை நாடகங்கள் பலவற்றுக்குத் தேசப்பக்திப் பாடல்களை எழுதியவராவார். அதனால் மீனாட்சியம்மாளின் பாடலாக்க முயற்சிகளுக்கும் இந்நாடகத்தில் பாடல்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியமைக்கும் உடுமலை முத்துசாமிக் கவிராயரின் தாக்கமும் காரணமெனலாம்.
நாடகத்துக்கென மீனாட்சியம்மாளால் எழுதப்பட்ட பாடல்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டவை, ‘இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு’ என்ற தலைப்பில் இருபாகங்களாக 1931 ஆம் ஆண்டு சகோதரி பிரஸினால் வெளியிடப்பட்டுள்ளன. அப்பிரசுரங்களுக்கு மீனாட்சியம்மாள் எழுதியுள்ள முன்னுரைக் குறிப்புகளில் இப்பாடல்கள் நாடகத்துக்கென்று எழுதப்பட்டவை என்பதையும், தோட்டத் தொழிலாளர் பற்றிய நாடகமொன்று எழுதப்பட்டு வருகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளதுடன் இந்நூல்களை வாங்கி, நாடகநூல் வெளிவருவதற்கு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீனாட்சியம்மாளின் பாடல்கள் நாடகத்தின் கதை நிகழ்வுகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன. அக்கால நாடக மரபையொட்டி வசனங்களும் பாடல்களும் இணையாக இடம்பெற்றுள்ளன. அப்பாடல்களைத் தனிப்பிரசுரமாக வெளியிடப்பட்டபோது, நாடகத்திலுள்ள அனைத்துப் பாடல்களும் பிரசுரிக்கப்படவில்லை. அதேவேளை, அப்பிரசுரத்தில் உள்ள பாடல்களுள் ஒன்று, நாடகத்தில் உள்ளடங்கியிருக்கவில்லை.
இந்நாடகத்தில் உள்ள பாடல்களுள் சில, உண்மையாக இடம்பெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளன என்பதை, இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நூலின் இரண்டாம் பாகத்துக்கு எழுதிய முன்னுரையில், “இதில் ஆங்காங்கு தோட்டங்களில் நடைபெற்றுள்ள உண்மைச் சம்பவங்கள் இசைக்காக சிற்சில திருத்தங்களுடன் பாடப்பெற்றிருக்கின்றன” எனப் பதிவு செய்துள்ளார், மீனாட்சியம்மாள். அத்துடன் அத்தகைய பாடல்கள் எந்தத் தோட்டத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டன என்ற குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. சான்றாக, “இலங்கைக்கு வந்து பலவருஷம் உழைத்து ஒருவாறு சிறிது பொருள் தேடிய ஓர் தொழிலாளியின் குடும்பம் எவ்விதம் அந்தரப்பட்டு, தேடிய தேட்டமெல்லாம் இழந்த வரலாற்றைச் சொல்லிப் புலம்பல். இது பூண்டலோயா பகுதியிலுள்ள ஓர் தோட்டத்தில் நடைபெற்றது” என்ற பதிவைக் குறிப்பிடலாம். நாடகமாக வெளிவந்தபோது, நாடகத்தினுள் இத்தகைய குறிப்புகள் இடம்பெறவில்லை. ஆனால், ‘இந்நாடகத்தின் நோக்கம்’ என நடேசய்யர் எழுதியுள்ள குறிப்பில், “இந்நாடகத்தில் காட்டப்பெறும் ஒவ்வொரு விஷயமும் நடைபெற்ற சம்பவங்களினின்றுமே தொகுக்கப் பெற்றவையென்பதை நாம் சொல்ல வேண்டியவர்களாய் இருக்கிறோம்” எனப் பதிவுசெய்துள்ளார்.
நாடகத்தில் இடம்பெறுகின்ற செய்திகளுள் கணிசமானவை, நடேசய்யரின் இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் என்ற சட்டவழிகாட்டி நூலில் விபரணங்களாய் இடம்பெற்றுள்ளன. அந்நூலில் இந்தியாவில் ஆள் சேர்த்தலும் மண்டபம் காம்பும், மண்டபம் காம்ப்பிலிருந்து தோட்டம் சேர்வது, தோட்ட வாழ்க்கை, ஊருக்குத் திரும்புதல், தொழிலாளர் சங்கங்கள் எனும் ஐந்து அத்தியாயங்களில் விபரிக்கப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையான அம்சங்கள் பாத்திரங்களின் கூற்றுகளாகவும் பாடல்களாகவும் நாடகத்தில் இடம்பெற்றுள்ளதுடன் அந்நூலில் விபரிக்கப்பட்டுள்ள சட்டநடைமுறைகளுக்கு மாறாக நடைமுறை யதார்த்தம் விளங்குகின்றமை நாடகத்தின் மைய இழையாகப் பின்னப்பட்டுள்ளது. அவ்வாறே நடேசய்யர் 1931 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட ‘நீ மயங்குவதேன்’ எனும் அகயெழுச்சி நூலில் இறுதியாக உள்ள, ‘திரு. இராமசாமி சேர்வையின் சரிதத்தில்’ இடம்பெறும் செய்திகளுள் சில, நாடகத்தின் இரண்டாவது அங்கத்தில் இடம்பெற்றுள்ளன. சட்டம் திருவிழாக்கள் முதலான பொதுநிகழ்வுகளில் ஆள்திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது என்று விதித்திருந்தபோதிலும் ஆள்கட்டிகள் திருவிழாக்களில் எவ்வாறு சூழ்ச்சிகரமாக ஆட்களைத் திரட்டுகிறார்கள் என்பது ஆள்கட்டி அழகனது செயற்பாடுகள் மூலம் நாடகத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதன்போது இடம்பெறும் ராமசாமி என்ற சிறுவனுடன் தொடர்புடைய செய்திகள், நீ மயங்குவதேனில் இடம்பெறும் திரு. இராமசாமி சேர்வையின் சரிதத்துடன் ஒத்துப்போகின்றன. இராமசாமி சேர்வையின் சரிதம் உண்மையாக நிகழ்ந்தது என்பதை அதன் இறுதியில் நடேசய்யர் சுட்டிக்காட்டியுள்ளார். இது நாடக நூலில் இடம்பெறும் செய்திகள் உண்மைச் சம்பவங்களை அடியொற்றி உருவாக்கப்பட்டவை என்பதற்கு மற்றுமொரு சான்றாகும்.
நாடகத்தில் இடம்பெறும் சில செய்திகள், மலையக வாய்மொழிப் பாடல்களுடன் ஒத்துப்போவதை அவதானிக்க முடிகிறது. சான்றாக, கங்காணி – கணக்கன் ஆகியோருடைய சூழ்ச்சிகள் – குரோதங்களால் தோட்டத் தொழிலாளர் பல்வேறு இன்னல்களுக்கு உட்படுகின்றனர், தோட்டத்துரையின் செயற்பாடுகளுக்குக் கங்காணி, கண்டாக்கு முதலானோரின் தூண்டுதல்கள் காரணமாக இருக்கின்றன முதலானவை நாடகத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் சாரத்தை,
“தோட்டப் பிரளியில்லே
தொர மேலே குத்தமில்லே
கங்காணி மாராளே
கனபிரளி யாகுதையா”
என வெளிப்படுத்தியுள்ளது ஒரு நாட்டார்பாடல். கொழுந்தினை நிறுக்கும்போது, தம்மோடு முரண்பாடு கொண்டவர்களுக்கு நிறையைக் குறைத்தலும் தமக்கு வேண்டிய நபர்களுக்கு நிறையைக் கூட்டுதலும் தோட்டங்களில் நிகழ்ந்துள்ளன. நாடகத்தின் ஒரு காட்சியில் குப்பாயி என்ற பாத்திரத்தின் கொழுந்துக்கூடை 15 றாத்தல் காட்டுகிறது. ஆனால், நிறுக்கும் கங்காணி, “10 ராத்தல்” என்கிறான். குப்பாயி, “என்னய்யா 15 ராத்தல் தெரியுதே” என்கிறபோது, கணக்கப்பிள்ளை, “தண்ணிக்கும் கூடைக்கும் கழிச்சிருக்கு போ இந்தா துண்டு” என்று அப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருகிறான். இதனை,
“ஓடி நெரே புடிச்சு
ஒரு கூடே கொழுந்தெடுக்க
பாவி கணக்கப்புள்ளே
பத்து ராத்த போடுறானே”
என வெளிப்படுத்தியிருக்கிறது ஒரு வாய்மொழிப்பாடல். இவையாவும் இந்நாடகச் செய்திகள் கற்பனையாகப் புனையப்பட்டவையல்ல, அவை நடைமுறை யதார்த்தத்தின் பதிவு என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன.
இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகமானது மூன்று அங்கங்களையும் 26 காட்சிகளையும் கொண்டுள்ளது. முதல் அங்கத்தில் 11 காட்சிகளும் இரண்டாம் அங்கத்தில் 08 காட்சிகளும் மூன்றாம் அங்கத்தில் 07 காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. முதல் அங்கத்தில் இலங்கைத் தோட்டங்களுக்குப் புதிய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றபோது பின்பற்றப்படுகின்ற நடைமுறைகள், கங்காணி – கண்டாக்கு முதலானோரின் சூழ்ச்சிகள் – அவர்களுக்கிடையேயான போட்டிகள், கங்காணி – கண்டாக்கு ஆகியோருக்கிடையேயான குரோதங்களால் தொழிலாளர் படுகின்ற இன்னல்கள், பெரிய கங்காணியின் நடவடிக்கைகள், தொழிலாளர்மீதான சுரண்டல்கள் முதலானவை பேசப்பட்டுள்ளன.
இரண்டாம் அங்கத்தில் இந்தியாவில் ஆள்திட்டும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. கங்காணிகள் சூழ்ச்சிகரமாகத் திருவிழாக்களிலும் சந்தைகளிலும் ஆட்களைத் திரட்டும்விதம், அவர்களுடைய தரகர்களின் செயற்பாடுகள், கங்காணிகளின் போலியான ஆசை வார்த்தைகள், அவற்றை நம்பி தொழிலாளர்களாகப் புலம்பெயர்தல், இலங்கைக்கு ஆள்கட்டுவதற்குக் கங்காணிகள் செய்யும் சூழ்ச்சிகள், மண்டபம் காம்பில் இடம்பெறுகின்ற அரச நடைமுறைகள் முதலானவை அவற்றில் இடம்பெற்றுள்ளன.
மூன்றாவது அங்கத்தில் தொழிலாளர்களாக இலங்கை வந்தவர்கள் படுகின்ற அவஸ்தைகள் – துயரங்கள், தொழிலாளர் சட்டங்கள் நடைமுறையில் பயனற்றவையாக – நடைமுறைப்படுத்தப்படாதவையாக இருத்தல், தொழிலாளர்கள் ஒன்றுகூடி தமக்கான சங்கங்களை அமைத்து விடுதலைக்குப் போராட வேண்டிய அவசியம், தொழிலாளர்களாக இலங்கைக்கு வரவுள்ளவர்களைத் தடுத்தல் முதலான விடயங்கள் இடம்பெற்றுள்ளதுடன் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுவரும் விழிப்பும் அவர்களிடையே முகிழ்க்கும் ஸ்தாபனரீதியான செயற்பாடுகளும் பேசப்பட்டுள்ளன.
இலங்கைக்குத் தொழிலாளர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் வரவில்லை. கங்காணிகளதும் ஆள்கட்டிகளதும் ஆசை வார்த்தைகளை நம்பியே அவர்கள் வருகிறார்கள் என்பது நாடகத்தில் அழுத்தமாக முன்நிறுத்தப்பட்டுள்ளது. கங்காணிகளும் ஆள்கட்டிகளும் கூறும் ஆசைவார்த்தைகளை மீனாட்சியம்மாள் பின்வருமாறு தொகுத்துரைத்துள்ளார்:
“கேளுங்கள் கேளுங்களே இலங்கை வந்தால்
கீர்த்தி யுடன் பணமும் சேர்த்து வரலாம்
குபேரப் பட்டண மது அங்கே
குடி யேறினால் நம்ம மிடிதீரும்
சிங்கார மாளிகையுண்டு அதிலே
சிறந்தநல் லைட்டுகளும் பைப்புகளுண்டு
பாங்கான மோட்டார்களுண்டு அதிலேறி
பார்முழுதும் பார்த்துவர வசதியுண்டு
துரைமார்கள் நேசமுங்கொண்டு அதனால்
துட்டு சேர்க்க நல்ல தொரு மார்க்கமு முண்டு
சம்பளங்களதிக முண்டு நல்ல
சம்பாத்யம் செய்துகொள்ள வழிகளுண்டு
அந்தி பகலாயிங்கே நித்தம் நித்தம்
அலைந்து திரிந்து மனம் வருந்துகிறீர்
புந்தி நிரையக் கஞ்சியு மில்லாமல்
புலம்ப வேண்டாம் மனம் கலங்கவேண்டாம்
சோடி வேட்டி வாங்கித்தருவேன் நல்ல
சொகுசான பிராந்தி வுஸ்கி ஜின் முதலான
வாடிக்கைக் குடிகளெல்லாம் நித்தமும்
வகை வகையாக நானும் வாங்கித்தருவேன்
நித்த மொரு கலியாணம் செய்யவுந்தான்
நேர்த்தியான பெண்களையும் சேர்த்துத்தருவேன்
பொன் குவியல் குவியலாக இலங்கையில்
பூமி முழுது மெங்கு பார்த்தாலும்
நவரத்னம் விளையும் நாடு அங்கே போனால்
நரேந்த்ர பதியைப்போல் நாமும் வாழலாம்
உண்மையை உரைத்தேன் நான் இன்னம்
உள்ள தெல்லாம் சொல்ல நா வொன்று போதாது”
இலங்கைக்கு வருகின்ற வழியிலும் – வந்த பின்னரும் இவை எல்லாம் போலி வார்த்தைகள், கங்காணிகளின் தந்திரங்கள் என்று மக்கள் உணர்ந்துகொள்கிறார்கள். அதனை இந்திய மக்களுக்கு முன்னரே உணர்த்தும் முயற்சியை மேற்கொண்டுள்ள இந்நாடக நூல், தொழிலாளர்களாக இலங்கைவந்து ஏமாற்றமடைய வேண்டாம் என்பதை வலியுறுத்தியுள்ளது.
பெரிய கங்காணிகளும் சில்லறைக் கங்காணிகளும் தொழிலாளர்களை எவ்வாறெல்லாம் சுரண்டுகிறார்கள், தொழிலாளர்கள்மீது எத்தகைய அத்துமீறல்களைப் பிரயோகிக்கிறார்கள், தொழிலாளர்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் முதலானவற்றை நடேசய்யர் இந்நாடகம் முழுதும் பதிவு செய்துள்ளார். வேலைக்கு ஆள் திரட்டுவதற்கு வழங்கப்படுகின்ற நிதியை மனைவிக்கு நகைகள் வாங்குவதற்கும், தன் உறவினர்களுக்கு விருந்துவைத்து கொண்டாடுவதற்கும் பயன்படுத்தும் கங்காணிமார்கள், தொழிலாளர் ஒருவருக்குச் சட்டப்படி தோட்டம் கொடுக்கும் 15 ரூபாவையும் சுரண்டிக்கொள்கிறார்கள்.
வேலைநேரம், உணவு இடைவேளை என்பன சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் உணவு இடைவேளை இன்றியும் வேலைநேரம் கடந்தும் தொழிலாளர்கள் வேலைசெய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். அந்த உரிமை மீறலையும் உழைப்புச் சுரண்டலையும் வெவ்வேறு காட்சிகளில் எடுத்துரைத்துள்ள நடேசய்யர், சட்டத்தைமீறி அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான காரணிகளையும் வெளிப்படுத்தியுள்ளார். சான்றாக, நல்லசுப்பன் கங்காணி கண்டக்டருடனான உரையாடலொன்றில், “தொரை வங்களாவிலிருந்து ‘கோக்கி’ இரண்டாளு, நாலு ஆளு வேணுமெண்ணு கேக்கிறான். ஆள் கொடுத்தா எந்தக் கணக்கிலே போடரது. உங்களுக்கும் மாட்டுப்பட்டிக்கும், அதுக்கும் இதுக்கும் 6 ஆள் வேணும். எனக்கும் அட்டனுக்குப்போக, பில்லறுக்கன்னு 5 ஆள் வேணும். இப்படியெல்லாம் இருக்கச்சே எப்படி வேலைப்பார்க்கிறது. யார் கணக்கில் போடுகிறது?” எனக் கூறுகிறான். இவ்வாறு துரை, கண்டக்டர், கங்காணி முதலானோருக்குப் பணிவிடை செய்வதற்கு அனுப்பப்படுபவர்களின் கணக்குக்காகவே உணவு இடைவேளை இன்றியும் வேலைநேரம் கடந்தும் – சட்டத்தைமீறி தொழிலாளர்கள் வேலைவாங்கப்படுகின்றனர் என்பதைக் கங்காணியின் கூற்றாகவே நடேசய்யர் எடுத்துக்காட்டியுள்ளார்.
கங்காணிகளின் சுரண்டல்களுக்கு உள்ளாகி, அவர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டிருந்த தொழிலாளர்களிடையே விழிப்புணர்வும் கங்காணிகள்மீதான எதிர்ப்புணர்வும் ஏற்பட்டுவருதல் நாடகத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. தொழிலாளர் எழுச்சியை முடக்கும்வகையில் கங்காணியொருவர், “தொழிலாள சகோதரரே, நான் உங்கள் சிநேகிதன். நான் உங்களுடன் வேலை செய்யும் ஊழியன்… இப்பொழுது உங்களுக்குப் போதனை செய்ய வந்திருப்பவர்கள் வேலைகொடுக்க மாட்டார்கள். சம்பளம் கொடுக்க மாட்டார்கள்…” என்றபோது தொழிலாளி ஒருவர், “கங்காணி யடோ, என்ன சாமர்த்தியம்” என்கிறார். மற்றொரு தொழிலாளி, “தலப்பாவைவிட்டு தொரை சப்பாத்து போட உத்தரவு கொடுத்தா இதுவா பேசுவாய்?” என்கிறார். இவை தொழிலாளரிடம் ஏற்பட்டுவந்துள்ள விழிப்புணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றன. “சக்கரை சக்கரையா வக்கணை பேசுங் கங்காணி தந்திரமெல்லா மிப்போ அந்தர மாச்சு” என்ற பாடலும் தொழிலாளர் விழிப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
துண்டுமுறை நீக்கத்துக்கான கங்காணிகளின் எதிர்வினையும் துண்டுமுறை நீக்கத்துக்குப் பின்னரும் தொழிலாளிகளின் கடன்கள் நீங்காமையும் கங்காணிகள் சூழ்ச்சிகளாலும் அராஜகத்தாலும் கடன்களை வசூலித்து வருகின்றமையும் அதற்குப் பெருந்தோட்ட இயக்கம் உடந்தையாக இருக்கின்றமையும் நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சான்றாக, நல்லசுப்பன் கங்காணி துரையிடம், “இந்தத் துரை வந்தபின்னே சம்பளத்தை ஆள் கையில் கொடுக்கிறது. ஆள் நோட்டீஸ் கொடுத்தால் கங்காணியில்லாமலே வாங்கிக் கொள்ளரது. இப்படியெல்லாம் செய்தால் தோட்டத்தில் ஆள் தங்குமா?… கடன் கட்டினா பத்துச்சீட்டு தாரேன் எண்டு தொரை சொல்ரதில்லை. அன்றைக்குப் பெத்தானை கணக்குத் தீத்தீங்க எனக்குந் தெரியாது. எனக்கு ரூபா எழுநூறு போச்சு” எனத் தோட்டத் தொழிலாளர் நன்மையைக் கருதி உருவாக்கப்பட்ட சட்டத்தால் தானும் தோட்டமும் பாதிக்கப்படுவதாகக்கூறி, அச்சட்டத்தை மீறிச் செயற்படுமாறு துரையை வலியுறுத்துகிறான். அத்துடன் தோட்டம்விட்டுச் செல்பவர்களிடம் எஞ்சியுள்ள சிறிய சொத்துகளையும் தன் அடியாட்களை ஏவிவிட்டுப் பறித்துக்கொள்கிறான். நாடகத்தின் மூன்றாம் அங்கத்தின் இரண்டாம் காட்சியில் தோட்டம்விட்டுச் செல்பவர்களின் சொத்துகளைக் கங்காணி ஆட்களை வைத்து கொள்ளையடிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இவற்றின்மூலம் துண்டுமுறை நீக்கச்சட்டம் நடைமுறையில் முழுப்பயனைத் தரவில்லை என்ற விமர்சனத்தை நடேசய்யர் முன்வைத்துள்ளார். அவரின் துண்டுப்பிரசுரங்களிலும் இவ்விமர்சனத்தைக் காணமுடிகிறது.
தொழிலாளர் தொடர்பான சட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மண்டபம் காம்பில் உள்ள குமாஸ்தா, அச்சட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் காட்சியை வைத்துள்ளார், நடேசய்யர். அதில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் (1927) கொண்டுவந்த பிறகு நடைமுறையிலிருக்கும் மேற்பகுதி, நடுப்பகுதி, சமதரைப் பகுதி என்ற மூன்று பகுதிகளுக்கும் வழங்கப்படுகின்ற சம்பள விகிதங்கள், வேலை நாட்கள், அரிசி வழங்குதல், துண்டுமுறை இல்லாமை – கடன் இல்லாமை, தோட்டங்களுக்குச் சென்றடையும் வரை செலவு இல்லாமை, பிரச்சினைகளை அறிவிப்பதற்கு உள்ள வழிமுறை, மீண்டும் நாடு திரும்புவதற்கு உருவாக்கப்பட்டுள்ள நடைமுறை முதலானவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் யாவும் நடைமுறையில் பின்பற்றப்படாமையும், சட்டங்கள் பற்றிப் பேசும் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் வஞ்சிக்கப்படுகின்றமையும் மூன்றாம் அங்கத்தில் இடம்பெற்றுள்ளன. அக்கொடுமைகளிலிருந்து விடுபடவே ஸ்தாபன ரீதியாக ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும், தொழிற்கட்சி பலம்பெற வேண்டும் முதலானவை நாடகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
‘நாடகப் பாத்திரங்களும் சீன்கள் விபரங்களும்’ என்ற தலைப்பில் நாடகத்தில் இடம்பெறும் பாத்திரங்களையும் பாத்திரங்களின் தோற்றத்தை – ஒப்பனைகளையும் சுட்டிக்காட்டியுள்ள நடேசய்யர், ஒவ்வொரு காட்சியின் தொடக்கத்திலும் நிகழ்வு இடம்பெறும் களத்தையும் களத்தின் பின்னணியையும் குறிப்பிட்டு, பாத்திரங்களின் தோற்றத்தை விபரித்துள்ளார். பாத்திரங்களின் தோற்றம், அவற்றின் செயற்பாடுகள், உளப்பாங்கு முதலானவற்றை நடேசய்யர் வெகுநுட்பமாகப் பதிவுசெய்துள்ளதைக் காணமுடிகிறது. சான்றாக, நல்லசுப்பன் கங்காணியின் பாத்திர வார்ப்பைச் சுட்டிக்காட்டலாம்.
நல்லசுப்பன் தோட்டத்துத் துரையைச் சந்திக்கவரும் காட்சி, “தோட்டத்துப் பெரியகங்காணி நல்லசுப்பன் என்பவர் வேலைக்காடு சுற்றிக்கொண்டு ஆபீஸ் பக்கம் துரையைக்கண்டு பேச வருகிறார். தலையில் கங்காணி தலைப்பாகை, கையில் ஓர் குடையும் சிறு தடியும். காலில் செருப்பு, மேலே பழைய கம்பளிக்கோட்டு, முழங்கால் வரை தூக்கிக் கட்டப்பெற்ற வேஷ்டியுடன் வருகிறார்” என விபரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வந்தவன் காரியாலயத்தில் துரையைச் சந்திக்கின்றபோது, “காலில் போட்டிருந்த செருப்பைக் கழற்றி ஒளித்தும் பயபக்தியுடன் கையிலிருந்த குடையையும் கம்பையும் ஆபீஸ் வெளிச்சுவற்றின் ஒருபுறத்தில் சாத்தியும் வைத்துவிட்டு துரை முன், ஜன்னல் பக்கம் வந்து குனிந்து, சலாங் துரையே” எனத் தன் பணிவை வெளிப்படுத்துகிறான். துரையுடனான உரையாடல் முடிந்து துரை சென்றபின்னர், எழுதுவினைஞரிடம், “என்ன கிளாக்கரய்யா! தொரப்பய என்னமோ சொல்லிப்போரானே…” எனத் தன் வெறுப்பை வெளிப்படுத்துகிறான். அவன் தொழிலாளர்களுடன் இருக்கும்போது, அவர்களின் தலைவனாக இருக்கிறான். அதன்போது அவனின் தோற்றம், செயற்பாடு, வார்த்தைகள் எல்லாம் ஆதிக்கத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
நாடகத்தில் பேச்சுமொழி மிக இலாவகமாகக் கையாளப்பட்டுள்ளது. வெள்ளைத்துரை பேசும் உடைந்த தமிழ், சாதாரண தொழிலாளர்களின் பேச்சுத் தமிழ், பெருந்தோட்டத் தொழிற்களங்களில் பயன்படுத்தப்படும் தமிழ், அரச அதிகாரிகள் பயன்படுத்தும் நிர்வாகத் தமிழ், பணிவைக் காட்டும்போதும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும்போதும் கையாளப்படும் தமிழ் எனச் சூழலுக்கு ஏற்பவும் பாத்திரங்களுக்கு ஏற்பவும் பேச்சுமொழியை அழகியல்பூர்வமாக நடேசய்யர் பயன்படுத்தியுள்ளார். அவ்வாறே மீனாட்சியம்மாளும் தன் பாடல்களில் பேச்சுமொழியை யதார்த்தம் குன்றாதவகையில் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
தோட்டத்தொழிலாளரின் யதார்த்த நிலைமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் இந்நாடகம் பின்வரும் மூன்று முக்கிய விடயங்களை அழுத்தமாக வலியுறுத்த முனைந்துள்ளது:
- இந்திய மக்கள் கங்காணிகளின் ஆசைவார்த்தைகளை நம்பி தொழிலாளர்களாக இலங்கை வருவதைத் தடுத்தல்.
- இலங்கையில் தொழிலாளர்களாக அல்லல்படுபவர்களுள் இந்தியாவுக்குச் சென்று வாழ்வை வளமாக அமைத்துக்கொள்ளக்கூடியவர்கள் இந்தியாவுக்குச் செல்லல்.
- மீதமிருக்கின்ற தொழிலாளர்கள் ஒன்றுகூடி தமக்கான சங்கங்களை அமைத்து தம் விடுதலையை உறுதிப்படுத்திக்கொள்ளல்.
நாடகத்தின் நிகழ்ச்சிகள் இவற்றை வெளிப்படுத்தியுள்ளதுடன் நாடகத்தின் இறுதியில் தொழிலாளர் ஒருவரின் குரலாகவே அவற்றை எடுத்துரைத்து, நாடகத்தை வாசிப்போர் – பார்ப்போர் இடையே உணர்வுபூர்வமாகப் பதியவைக்க முனைந்துள்ளார், நடேசய்யர்.
நாடகத்தின் கதையும் காட்சிகளும் அக்கால அரசியல் போக்குகள் மீதான எதிர்வினைகளற்று, பெருந்தோட்ட இயக்கம், தொழிலாளர் வாழ்வு, கங்காணி – கண்டாக்கு ஆகியோரின் செயற்பாடுகள், இந்தியாவில் ஆள்திரட்டும் முறைமை, தொழிலாளரிடையே ஏற்பட்டுவரும் விழிப்பு ஆகியவற்றையே மையப்படுத்தியுள்ளன. டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்தியத் தொழிலாளர் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள், சுதேசிய சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியருக்கு எதிராக முன்னெடுத்துவந்த செயற்பாடுகள், இலங்கைவாழ் இந்தியரின் அரசியல் நகர்வுகள் ஆகியன பற்றி நாடகத்தில் பேசப்படவில்லை.
இலங்கைக்கு சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட பின்னர் (1931), இலங்கைவாழ் இந்தியர் இலங்கைப் பிரஜையாகத் தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்பதை நடேசய்யர் பலதளங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளதுடன் சுதேசிய சிங்கள ஆட்சியாளர்களின் இந்திய எதிர்ப்புக்கான எதிர்வினைகளையும் நிகழ்த்திவந்துள்ளார். இலங்கைவாழ் இந்தியர் தம் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு, அவர்கள் யாவரும் தம்மை இலங்கைப் பிரஜைகளாகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்பது நடேசய்யரின் அரசியல் நகர்வாக இருந்துள்ளது. இவற்றின் வெளிப்பாடுகளை இந்நாடகத்தில் காணமுடியவில்லை. அதனால் இந்நாடகம் வெளிவந்துள்ள ஆண்டிலில்லாமல் அதற்குச் சில வருடங்கள் முன்னரே – மேற்படி அரசியல் பிரச்சினைகள் அழுத்தம்பெற முன்னரே – எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக்கொள்ளலாம். 1928 ஆம் ஆண்டுக்குரிய இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் நூலில் இடம்பெறும் இந்நாடகம் பற்றிய விளம்பரம், இந்நாடகத்துக்கென்று எழுதப்பட்ட பாடல்கள் மட்டும் தனிப்பிரசுரங்களாக 1931 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டமை ஆகியவையும் இம்முடிவுக்கு வலிமை சேர்க்கின்றன.
இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகமனது, பிரசார நோக்கத்துக்காகவே எழுதப்பட்டதாகும். அப்பிரசாரம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவந்த இலங்கைவாழ் இந்தியத் தொழிலாளரின் விடுதலையை – நலனை மையமிட்டுள்ளது. அதனால் இந்நாடகத்தின் நிகழ்ச்சிகளும் கதை நகர்வும் எடுத்துரைப்பு உத்திகளும் சமூகமாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்பயன்படுத்துகை, பிற்காலத்தில் பேசப்பட்ட சமூகமாற்றத்துக்கான அரங்கு, ஒடுக்கப்பட்டோர் அரங்கு முதலானவற்றுடன் ஒத்த அம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளன. க. சிதம்பரநாதன் அவர்கள் ஒடுக்கப்பட்டோருக்கான மாற்று அரங்கு – தளைநீக்க அரங்கு குறித்து உரையாடும்போது, “இந்த ஒடுக்குமுறை சமூகத்துள் தாழ்வுச் சிக்கலுக்குட்பட்டு தமது ஆற்றலிலேயே தமக்கு நம்பிக்கையின்றிச் சுருங்கிப் போயிருக்கும் மக்களைத் தாழ்வுச் சிக்கலிலிருந்து விடுவித்து சுயாதீனமான மனிதர்களாக விழிப்படையச் செய்வதற்கான ஒரு அரங்கு தேவை. பரந்துபட்ட மக்கள் தம்மீதான ஒடுக்குமுறை வடிவங்களைப் பற்றி தாமே அறிந்துகொள்ள வேண்டும். தமது அடக்குமுறைக்கு எதிராகத் தாமே குரலெழுப்புதல் வேண்டும். விழிப்பு இன்றி விடுதலை சாத்தியமில்லை. எனவே, மக்கள் தாமாகவே முன்வந்து கலந்துகொள்ளவும் உறவுகொள்ளவும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளவும் செயற்படவும் உரிய அரங்காக இது இருக்க வேண்டும்…” (சமூக மாற்றத்துக்கான அரங்கு, 1995: 122) எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சமூக மாற்றத்துக்கான அரங்கு குறித்த தெளிவுடன் நடேசய்யர் தன் நாடகத்தை எழுதியுள்ளதுடன் அதன் அரங்கக் கூறுகளை அதற்கேற்ப திட்டமிட்டுள்ளதையும் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால், அந்நாடகம் மேடையேற்றப்பட்டமை குறித்த செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் சமூக மாற்றத்துக்கான அரங்க வரலாற்றில் – சமூக மாற்றத்துக்கான நாடக ஆக்க வரலாற்றில் இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் முன்னோடியானதும் முதன்மையானதுமான முயற்சிகளுள் ஒன்றாக விளங்குகிறது. அந்நாடகத்தைத் தவிர்த்துவிட்டு, தமிழில் சமூக மாற்றத்துக்கான அரங்கு குறித்த உரையாடல்களை முழுமைப்படுத்த முடியாது.





