மொழிசார் தேசியவாதத்தின் ஊற்றுகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
18 நிமிட வாசிப்பு

மொழிசார் தேசியவாதத்தின் ஊற்றுகள்

November 3, 2025 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

அநகாரிக தர்மபால பௌத்த மக்களைத் தட்டி எழுப்பி, முன் நோக்கி வழிநடத்திச் செல்ல, பிற பண்பாட்டுப் புலங்களிலும் காலனியாட்சிக்குப் பணிந்து நடந்த சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்கு வேறு தலைவர்கள் செயற்பட்டனர். 

மொழியின் புது வகிபாகம்

அந்நியர் ஆட்சிக்குள் அகப்பட்டிருந்த ஆசியச் சமூகங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தத்தம் பண்பாட்டு அடையாளத்தை (Cultural Identity) பேணுவதற்குச் செயற்பட்டபோது, அந்த அடையாளத்தின் ஒரு முக்கிய சின்னமாக (Marker) தம் மொழியைக் கருதினர். இதன் விளைவாக இச்சமூகங்களில் மொழிசார் தேசியவாதத்தின் (Linguistic Nationalism) ஊற்றுகள் வெளிவரத் தொடங்கின.

இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அரசியல் தேசியவாதம் எழுச்சிபெற்றிருந்த வேளையிலேயே, மொழிசார் தேசியவாத ஊற்றுகளைக் காணலாம். அனைத்து இந்திய மக்களையும் அணைத்து அந்நியரை எதிர்க்கும் இயக்கத்தைத் தொடங்கியிருந்த இந்திய தேசியக் காங்கிரஸில் அசையாத நம்பிக்கைகொண்டு ஆவேசத்துடன் செயற்பட்ட மராட்டியராகிய பால கங்காதர திலகர் இந்திய மாகாணங்கள் மொழி அடிப்படையில் மீளமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். பிறரும் இக்கருத்தைக் கொண்டிருந்தபடியால், 1917 இல் காங்கிரஸ் மொழிசார் மாநிலங்களை அமைப்பதை தன் கொள்கையாக வெளிப்படுத்தியது. பின்னர், 1924 இல், மகாத்மா காந்தியும் இதனை ஆதரித்தார். இதே காலத்தில், தெற்கில் சுப்பிரமணிய பாரதியார், ‘தமிழ்த் திரு நாடு’ பற்றிப் பாடி, மொழிசார் தேசியவாதத்துக்கு வலுவூட்டத் தொடங்கியதையும் கவனிக்காமல் இருக்க முடியாது.

இவ்வாறு தொடங்கிய போக்கு அதிக காலம் செல்லுமுன் மொழி, இனம், இடம் ஆகியவற்றை இணைத்து முடிச்சு இடுவதற்கு வழிவகுத்தது எனலாம். இலங்கையில் சிங்கள சமூகத்தில் மேலும் ஓர் அடையாளச் சின்னம் (Identity Marker) சேர்க்கப்பட்டது. உண்மையில் அது முதல்நிலைச் சின்னமாக உயர்த்தப்பட்டது – அதுதான் மதம்.

இலங்கையில் மொழியும் இனமும்

முன்னர் கூறியதுபோல், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி அளவில், கீழைத்தேசவியல் அறிஞர்கள் (Orientalists) ஆய்வுசெய்து வெளியிட்ட கருத்துகளும் தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியவையும் பிராமிக் கல்வெட்டுகளின் வாசிப்புகளும் கல்விகற்ற இலங்கையர் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தி, புதிய கற்பனைகளுக்கு இடமளித்து மிகுந்த உற்சாகத்தைத் தூண்டின.

சிங்கள மொழி வட இந்திய மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்ட பின் இலங்கை வரலாறு பற்றிய சிந்தனையில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. இச்சிந்தனையில் இரு முக்கிய கருத்துகள் மலர்ந்தன. ஒன்று, சிங்கள மொழி வட இந்திய மொழிகளைப் போல் ஓர் ஆரிய மொழி, இதைப் பேசுவோர் வட இந்தியரைப் போன்று ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து (இது இன்று வரை நிலைத்துள்ளது). மற்றது, சிங்கள மொழி ஒரு தனியான வேறான தொல்கால மொழி, ஆரிய மொழிகளின் சொற்களைப் பின்னர் உள்வாங்கிய மொழி என்ற கருத்து (இது தற்போது கைவிடப்பட்டுள்ளது). இக்கருத்துகள் பரவத் தொடங்க, முன்னர் காணப்படாத மொழிப்பற்று அல்லது மொழி விசுவாசம் (Language Loyalty) வெளிப்பட்டது.

சிங்கள மொழி விசுவாசம் தொடர்பாக முதலில் முக்கியத்துவம் பெறுபவர் ஜேம்ஸ் த அல்விஸ் (James De Alwis, 1823 – 1878) என்பவர் ஆவார். இவர் ஸிதத் ஸங்கராவ (සිදත් සඟරාව) என்ற 13 ஆம் நூற்றாண்டுச் சிங்கள இலக்கண நூலைப் பதிப்பித்து, ஒரு நீண்ட அறிமுகத்தை எழுதி (278 பக்கங்கள்), சிங்கள மொழியின் தொன்மை, தோற்றம், சிறப்பு ஆகியவை பற்றிப் பல கருத்துகளை வெளியிட்டார். சிங்களம் இலங்கையின் ஆதிவாசிகள் (Aborigines) பேசிய மொழி என்றும், ஆசியாவின் பழைய மொழிகளுள் ஒன்று எனவும் எடுத்துரைத்து மொழிசார் விழிப்புணர்ச்சியை எழுப்பினார்.

இதன் பின், ஏட்டு வடிவில் இருந்த பல பழைய சிங்கள (ஹெள) இலக்கியப் படைப்புகள், அமாவதுர ( අමාවතුර), புத்ஸரண ( බුත්සරණ) ஆகியவை உட்பட, அச்சிடப்பட்டன. 

இவ்வாறு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மொழி விசுவாசம் கல்விகற்ற சிங்கள மக்களிடையே வளரத் தொடங்கியபோது, அநகாரிக மொழியையும் இனத்தையும் இணைத்து ஆரிய – சிங்கள அடையாளத்தை வற்புறுத்தினார்.

புதிய வழியில் மொழிசார் தேசியவாதம் முன்னேறிச் செல்ல, அதிலிருந்து விலகித் தூய சிங்கள இயக்கம் ஒன்று உருவாகியது. சம்ஸ்கிருதம், பாளி, தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றின் சொற்களைச் சிங்களத்தில் இருந்து களைந்து, பழைய ஹெள மொழியை மறுமலர்ச்சியடையச் செய்வதே இந்த இயக்கத்தின் நோக்கம். இதனை முன்னின்று வழிநடத்தியவர் முனிதாஸ குமாரத்துங்க ஆவார்.

இத்தூய சிங்கள இயக்கம் தர்மபாலவின் ஆரிய – சிங்கள பௌத்தத்துக்குச் சவாலாகக் காணப்பட்டது. ஆரிய – சிங்கள அடையாளம் மொழியைப் பொறுத்துப் பாளிக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கலப்புச் சிங்களத்தைப் (மிஸ்ர ஸிங்ஹள) பயன்படுத்தியது. தூய சிங்கள இயக்கம் வட இந்தியத் தொடர்பை விடுத்து, ‘விஜயன் வருகைக்கு’ முன்பிருந்தே இலங்கையில் இருந்தவர்கள் சிங்களவர் என்பதை வலியுறுத்த, ஆரிய – சிங்களக் கோட்பாடு, வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களே சிங்களவர் என்பதை முன்வைத்தது. இது மட்டுமல்லாது, தூய சிங்கள இயக்கம் பௌத்தத்தை விட்டு மொழிக்கு உயர்வு கொடுத்தது.

இதே காலமளவில் தமிழ்நாட்டிலும் மறைமலை அடிகள் முன்னின்று வழிநடத்திய தனித்தமிழ் இயக்கம் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. இதுவும் தூய சிங்கள இயக்கமும் 1910 இன் பின் எழுந்தவையாகையால் இவற்றைப் பின்னர் கவனிப்போம்.

யாழ்ப்பாணத்தில் மொழியும் இனமும்

யாழ்ப்பாணத்தில் மொழி உணர்ச்சியின் (Language Consciousness) எழுச்சி வரலாறு தெற்கில் நடந்தவற்றில் இருந்து வேறுபட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலில், யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த அமெரிக்க மிஷனரிமாருடைய செயற்பாடுகள் தமிழ் மொழிக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, இந்த அமெரிக்கர் தமிழைக் கற்றுத் தங்கள் மதப் பரப்பலுக்குப் பயன்படுத்தியது மட்டுமல்லாது, தமிழ் மொழியின் சிறப்பியல்புகளைக் கண்டு அவற்றைப் பற்றி எழுதினர். மேலும், ஒருவர் (Dr. H.R. Hoisington) இம்மொழியை நன்கு கற்றுப் பழந்தமிழ் நூல்கள் சிலவற்றை (சிவஞானபோதம், சிவப்பிரகாசம், தத்துவக்கட்டளை) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்.

அமெரிக்க மிஷன் அமைத்த வட்டுக்கோட்டை செமினரியில் (Batticotta Seminary) தமிழ் இலக்கியத்தை வளர்ப்பது (‘The Cultivation of Tamul Literature’) தங்கள் குறிக்கோள்களுள் ஒன்றாக அந்த நிறுவனத்துக்கு வகுக்கப்பட்ட திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. “சம்ஸ்கிருதம், எபிரேயம், கிரேக்கம் ஆகியவற்றைப் போன்று தமிழ் மொழி (வேறு மொழிவழி வராத) மூல மொழியாகவும் செம்மையானதாகவும் உள்ளது” (“The Tamul language like the Sanskrit, Hebrew, Greek & is an original and perfect language…”) என இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய நோக்குடன் வட்டுக்கோட்டை செமினரியில் தமிழுக்கு ஒரு பேராசிரியர் நியமிக்கப்பட்டு, நன்னூல், திருக்குறள், தத்துவக்கட்டளை போன்ற நூல்கள் பாடநூல்களாகப் பயன்படுத்தப்பட்டன. இங்கு கல்வி கற்ற ஒருவர் பின்னர் தமிழ்நாட்டில் ஏட்டு வடிவில் அழியும் நிலையில் இருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடிப்பெற்று உரையுடன் அச்சிட்டார். அவர்தான் சி.வை. தாமோதரம்பிள்ளை.

தமிழை நவீனமயப்படுத்த உதவும் வகையில் அமெரிக்க மிஷன் 1841 இல் உதயதாரகை என்ற செய்தித்தாளை வெளியிடத் தொடங்கியது. இதுவே தமிழில் வெளியாகிய முதலாவது செய்தித்தாள் என்ற சிறப்பைப் பெறுகின்றது. காலனித்துவம் அறிமுகப்படுத்திய புதிய மேலைத்தேச அறிவைத் தமிழ்மூலம் பரப்புவது இச் செய்தித்தாளின் முக்கிய நோக்கம் என்பது முதலாவது இதழிலே கூறப்பட்டது:

“எங்கள் தேசத்தவர்கள் பலவிதமான அறிவிலுந்தேறவேண்டுமென்ற

விருப்பத்தினால் இப்படிப்பட்ட பத்திரத்தைக் காலத்துக்குக் காலம்

அச்சடிப்பிக்கக் கையிட்டுக்கொண்டோம்.” (1841/ஜனவரி 7)

ஆறுமுக நாவலர் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் உரைநடையை வளர்த்தும் தமிழில் சமய நூல்களை வெளியிட்டும் மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்தார்.

மொழியையும் மதத்தையும் இணைக்கும் போக்குத் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இருந்துவந்துள்ளது. சைவ இலக்கியத்தில் இந்த இணைப்பை வெளிப்படையாகக் காணலாம். குமரகுருபரர் பாடிய மதுரைக்கலம்பகத்தில் வரும் ஒரு செய்யுள் இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது:

“தமரநீர்ப் புவனம் முழுதொருங்கீன்றாள்

தடாதகாதேவி என்றொரு பேர் தரிக்க வந்ததுவும்

தனிமுதல் ஒருநீ சவுந்தரமாறன் ஆனதுவும்

குமரவேள் வழுதி உக்கிரன் எனப் பேர் கொண்டதும்

தண்டமிழ் மதுரம் கூட்டுணவெழுந்த வேட்கையாலெனில் இக்

கொழிதமிழ்ப் பெருமை யாரறிவார்…”

(சிவன் மதுரையில் சவுந்தரமாறனாகவும், பார்வதி தடாதகாதேவியாகவும் முருகன் உக்கிரவழுதியாகவும் பிறந்தது தமிழின் சுவையை நுகர்வதற்காகவே.)

இத்தகைய இணைப்பும் தமிழ்மொழியின் பெருமை பற்றி எடுத்துரைப்பதும் 19 ஆம் நூற்றாண்டு வரை தேசியவாதப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை எனலாம். அதாவது, தமிழ் பேசியவர்கள் தங்கள் மொழி பிற மொழிகளைவிடச் சிறந்தது என்றோ (“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” – பாரதி), மிகவும் தொன்மையானது என்றோ சொல்லிக்கொள்ளும் வழக்கு இல்லை. இவ்வாறான போக்கு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேசியவாதக் கருத்துகள் ஐரோப்பாவில் இருந்து பரவிய பின்பே தொடங்கியது. 

இதே காலத்தில் இதே வகையான தமிழ் உணர்வு தமிழ்நாட்டிலும் எழுச்சி பெற்றிருந்தது. இதனை நோக்கும்போது ஒன்றைக் கவனிக்க முடிகின்றது. யாழ்ப்பாணத்து அறிஞர்களும் தமிழ்நாட்டு அறிஞர்களும் பகிர்ந்துகொண்ட அனுபவமாக (Shared Experience) இந்த எழுச்சி அமைந்தது. ஆறுமுக நாவலர் (அவருக்குப் பின் சிவசங்கர பண்டிதர், செந்திநாத ஐயர், கதிரவேல்பிள்ளை ஆகியோர்) யாழ்ப்பாணத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பொதுவான ஒரு பணியில் ஈடுபட்டுத் தமிழ் உரைநடையை வளர்த்தார். சி.வை. தாமோதரம்பிள்ளையும் (அவரைப் போன்று கனகசபைப்பிள்ளை, சபாபதி நாவலர், கனகசுந்தரம்பிள்ளை ஆகியோர்) தமிழ்நாட்டு உ.வே. சாமிநாதையரும் ஒரு பொதுப் பணியில் செயலாற்றிப் பழந்தமிழ் நூல்களை அச்சிட்டனர். ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு இடங்களும் வேறுபட்ட திசைகளில் செல்வதைக் காண்போம். 

யாழ்ப்பாணத்தில் 19 ஆம் நூற்றாண்டு முடிவடைந்தபோது தமிழ் உணர்வு நன்கு வளர்ந்திருந்ததைக் குறிக்கும் நிகழ்வாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் 1898 இல், பின்னர் பிரசித்தி பெறும் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901 இல் அமைக்கப்படும் முன், நிறுவப்பட்டமை கவனிக்கத்தக்கது.

இத்தமிழ் உணர்வு 20 ஆம் நூற்றாண்டு உதயமாகியபோது தேசியவாதப் பண்புகளைப் பெறத் தொடங்குவதைக் காணலாம். இதற்கு ஒரு காரணம் திராவிட மொழிகள் பற்றிய ஆய்வு வெளிப்படுத்திவந்த சில கருத்துகள் எனலாம். இக் கருத்துகள் மொழியியல் பற்றியவையாக இருந்தபோதிலும், மொழியும் இனமும் சமன்படுத்தப்பட்டு, தமிழ் இனம் பற்றிய கருத்துகளாக மாறின. இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுத்து, எவ்வாறு தமிழ் இன உணர்ச்சி வளரத்தொடங்கியது என்பதைக் காட்டலாம்.

பொன்னம்பலம் அருணாசலம் 1901 இல் நடைபெற்ற இலங்கை மக்கள் தொகையின் கணக்கெடுப்புக்கான அறிக்கையை (Report of the 1901 Ceylon Census of Population) எழுதி வெளியிட்டபோது, அதில் தமிழ் இனம் பற்றி அவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது: “திராவிட இனம் ஆரியருக்கு முன்னரே இந்தியாவுக்கு வந்தது; அந்த இனம் பபிலோனியாவின் (இன்றைய ஈராக் நாட்டில்) தொன்மையான நாகரிகத்தை உருவாக்கியது; அந்த இனத்தின் வழித்தோன்றல்களுள் மொக்யர் (Magyars – ஹங்கேரி நாட்டு மக்கள்), ஒத்தொமன் துருக்கியர் (Ottoman Turks – துருக்கி நாட்டு மக்கள்) அடங்குவர்; இந்த இனத்தின் மூத்த, மிகுந்த செல்வாக்குள்ள பிரதிநிதிகள் தமிழர் ஆவர் (“The Tamils are the oldest and most influential representative of the race.”).” இதை ஒத்த கருத்து 1905 இல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணம் பற்றிய ஒரு கைநூலிலும் தெரிவிக்கப்பட்டது (A Handbook to the Jaffna Peninsula by S. Katiresu). இதில், “திராவிட இனங்களுள் தமிழரே முன்னிலையில் நிற்பவர்கள்” என்ற கூற்றைக் காணலாம் (“The Tamils are the foremost of the Dravidian races”).

இத்தகைய இன உணர்வைத் தூண்டும் வகையில் 19 ஆம் நூற்றாண்டில் வேறும் சில காரணிகள் செயற்பட்டன. அவற்றுள் முக்கியமான இரண்டை இங்கு குறிப்பிடலாம்.

ஐரோப்பியப் பிரமுகர்கள் சிலர் தமிழர்களின் முயற்சி, கடின உழைப்பு, ஆங்கில அறிவு ஆகியவற்றைப் புகழ்ந்து எழுதியமை ஒரு காரணி எனலாம். இதற்குச் சான்று பகரும் வகையில் முன்னர் குறிப்பிடப்பட்ட, கதிரேசு எழுதிய,  யாழ்ப்பாணம் பற்றிய கைநூலில் சில கூற்றுகள் அமைகின்றன. திராவிட மொழிகளின் வேறான பண்புகளை எடுத்துரைத்த கால்டுவெல், “இந்துக்களுள் மிகவும் கூடுதலான முன்னேற்ற முயற்சியும் விடாமுயற்சியும் உடைய இனம் தமிழர்கள்” (“…the Tamilians…the most enterprising, and persevering race of Hindus…”) என்று எழுதியுள்ளார் (அவர் இந்துக்கள் என்று கூறும்போது பொதுப்பட இந்தியர்களைக் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்). இதனைக் கதிரேசு எடுத்துக்கூறியுள்ளார்.

கால்டுவெல் எழுதியது பொதுவாகத் தமிழர்களைப் பற்றியது. இலங்கையில் பணியாற்றிய சில ஆங்கிலேய அதிகாரிகள் குறிப்பாக இலங்கைத் தமிழர் பற்றி இதை ஒத்த கருத்தைத் தெரிவித்திருந்தனர். இமெர்ஸன் ரெனென்ற் (Emerson Tennent, 1809 -1869) இலங்கையில் காலனித்துவச் செயலாளராக (Colonial Secretary) செயலாற்றிய காலத்தில் பெற்ற அனுபவங்களைப் பற்றி எழுதும்போது, யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிப்படுத்திய கடின உழைப்புப் பற்றி எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராகப் பணியாற்றிய ஈவர்ஸ் (R.W. Ievers) என்ற ஆங்கிலேயரும் யாழ்ப்பாணத்தவரின் கடின உழைப்பையும் வீண்செலவு செய்யாத பண்பையும் போற்றியிருந்தார் (“The Jaffnese are a singularly industrious and economical race”). 

இவற்றை எல்லாம் மேற்கோள் காட்டி எழுதிய கதிரேசு, “வெளியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்றோர் யாழ்ப்பாணத் தமிழர்தம் விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் புகழ்ந்துரைத்துள்ளனர் (“…even the most casual travellers have borne such glowing testimony to the perseverance and industry of the Jaffna Tamil”)” என்று அழுத்தியபின், “தமிழர் சிக்கனமாக நடப்பவர்கள், சட்டத்தை மதிப்பவர்கள், விஷயங்களை நன்கு மதிப்பிடும் திறன் படைத்தவர்கள், புத்திகூர்மை உடையவர்கள், கல்வி கற்றவர்கள், நன்றியுடையவர்கள் (“The Tamils are besides a thrifty, law abiding, shrewd, intelligent, educated and grateful people”)” என்று கூறித் தன் உரையை முடித்துள்ளார்.

இத்தகைய மதிப்பீடு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ஆங்கிலக் கல்விகற்றோர் மத்தியில் இருந்தது என்பதில் ஐயமில்லை. இதனை மேலும் வலியுறுத்தும் வகையில் இன உணர்வை வளர்த்த இன்னொரு காரணி ‘தேசிய வாழ்க்கையில்’ யாழ்ப்பாணத்தவர் ஈட்டிய சாதனைகள் எனலாம். ஆங்கிலப் பாடசாலைகளில், குறிப்பாக வட்டுக்கோட்டை செமினரியில், கல்வி கற்ற இளைஞர்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே சென்று, அரசாங்கப் பதவிகளைப் பெற்று, தம்மவர்க்குப் பெருமைதேடிக் கொடுத்தனர். இவர்கள் கொழும்புக்கு மட்டுமல்லாது, தென்னிந்தியா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கும் சென்று யாழ்ப்பாணம் சிறப்புப் பெற உதவினர்.

யாழ்ப்பாணத்தவரைப் பெருமைப்பட வைத்த பிற நிகழ்வுகளுள் குறிப்பிடத்தக்கவை பிற இலங்கை இனத்தவருக்கு முன் யாழ்ப்பாணத் தமிழர் ஈட்டிய சில சாதனைகள். இவை தமிழருக்குக் கிடைத்த பட்டங்கள் அல்லது பதவிகள் தொடர்பானவை. ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இவை இலங்கையர்க்கு இலகுவாகக் கிடைக்காதிருந்த நிலையில் முதல் முறையாக அவை தமிழருக்குக் கொடுக்கப்பட்டமை பெருமைப்படும் விஷயமாகியது. இன்றுகூட இது பற்றிப் பேசப்படுகின்றது.

முதலில் கல்வித் துறையில் வெற்றிகரமாக முன்னேறி ஈட்டிய சில சாதனைகளைப் பார்க்கலாம். மேலைத்தேச முறைப்படியான உயர்கல்வியை 19 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை செமினரியில் பெறமுடிந்தது. அதை ஒத்த கல்வி வசதி இலங்கையில் வேறிடங்களில் இருக்கவில்லை. சென்னையில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் 1857 இல் தனது முதலாவது பரீட்சையைப் பட்டமளிப்புக்காக நடத்தியபோது அதில் இருவர் மட்டுமே சித்தியடைந்து சென்னைப் பல்கலைகழகத்தின் முதல் பட்டதாரிகள் என்ற சிறப்பைப் பெற்றனர். அந்த இருவரும் யாழ்ப்பாணத்தவர், வட்டுக்கோட்டை செமினரியில் படித்து முடித்துச் சென்னைக்குச் சென்று பல்கலைக்கழகத்தின் பரீட்சையை எழுதியவர்கள். ஒருவர் சி.வை. தாமோதரம்பிள்ளை, மற்றவர் கரொல் விசுவநாதபிள்ளை.

மானிப்பாயில் அமெரிக்க மிஷனரியாகிய வைத்தியர் சாமுவேல் கிறீன் தலைமையில் இயங்கிய மருத்துவ நிறுவனம் மேலைத்தேச முறையிலான நவீன மருத்துவப் பயிற்சியை 1848 இல் இருந்து வழங்கியது. இந்த நிறுவனம் கொழும்பில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் முன் தொடக்கப்பட்டது. இங்கு பயிற்சிபெற்று வைத்தியர்களான சிலர் அரசாங்க சேவையில் பதவிபெற்று யாழ்ப்பாணத்துக்கு வெளியே சென்று தொழில்புரிந்தனர். கிறீன் வைத்தியர் தொடக்கிய முதலாவது வகுப்பில் சேர்ந்து வைத்தியராகிய ‘Joshua Danforth’ என்பவர் (இவர் தன் பெயரைத் தமிழில் ‘டன்வதர்’ என எழுதினார்) ஒரு சிறந்த அறுவை சிகிச்சை வைத்தியராகவும் மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பவராகவும் விளங்கினார். இவருடைய திறமையைக் கண்டு மதிப்பளித்த கிறீன் வைத்தியர் இவருக்கு M.D. (Doctor of Medicine) பட்டம் பெறும் தகைமை இருப்பதாகப் பரிந்துரைத்து, வேண்டிய தகவல்களை நியூ யோர்க்கில் இருந்த மருத்துவக் கல்லூரியாகிய ‘College of Physicians and Surgeons’ (இது தற்போது Columbia University Post – Graduate School of Medicine) நிறுவனத்துக்கு அனுப்பிவைத்தார். அவர் அனுப்பிய தகவல்களை வைத்து அந்த நிறுவனம் ‘Danforth’ வைத்தியருக்கு M.D. வழங்கியது. M.D. பட்டத்தைப் பெற்ற முதலாவது இலங்கையர் இவர் எனலாம்.

இதற்குப் பின், 1901 இல் யாழ்ப்பாணத்தவராகிய ‘Samuel Chelliah Paul’ இங்கிலாந்தின் மருத்துவப் பட்டமாகிய F.R.C.S. (Fellow of the Royal College of Surgeons) விருதை எடுத்த முதலாவது இலங்கையராகச் சிறப்புப் பெற்றார்.  

உயர் நிர்வாகப் பதவிகளைப் பொறுத்தமட்டில் இலங்கை சிவில் சேவை (Ceylon Civil Service) மிக மதிப்புவாய்ந்ததாக இருந்தது. இது 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் கையில் மட்டும் இருந்தபோது, 1875 இல் சிவில் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த முதலாவது இலங்கையராகப் பொன்னம்பலம் அருணாசலம் பிரபலம் அடைந்தார்.

இதே காலமளவில் (1878) அருணாசலத்தின் மாமனார் முத்து குமாரசுவாமி இன்னொரு ‘முதல்’ சாதனையை ஈட்டினார். இங்கிலாந்தின் மன்னரால்/ மகாராணியால் வழங்கப்படும் ‘சேர்ப் பட்டம்’ (Knighthood) இவருக்குக் கொடுக்கப்பட்டது. இப்பட்டத்தை முதலில் பெற்ற கிறிஸ்தவர்/ யூதர் அல்லாத பிரமுகர் இவர் என்ற கௌரவம் இவருக்குக் கிடைத்தது.

இத்தகைய சிறப்புகள் பிற இலங்கையருக்கு முன் யாழ்ப்பாணத்தவருக்குக் கிடைத்தமை எவ்வாறு யாழ்ப்பாண வரலாற்றின் போக்கினை விளங்கிக்கொள்ள உதவுகின்றது? இவற்றுக்கும் மொழிசார் தேசியவாதத்துக்கும் தொடர்பு உண்டா? பின் எழும் பிரச்சினை தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பிரச்சினை? ஆங்கிலம் கற்ற தமிழ் மத்திய வகுப்பினர் பிரச்சினை? தமிழர் பிரச்சினை? இப்படியான வினாக்கள் இக்கட்டத்தில் எழுகின்றன. இவற்றைப் பின்னர் நோக்கலாம்.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்