சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத் துறைகள் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத் துறைகள் – பகுதி 1

August 27, 2025 | Ezhuna

1920களில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் கொழும்பு நகரில் ஓர் உயர்கல்வி நிறுவனம் தாபிக்கப்பட்டது. இக்கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலை/ விஞ்ஞானப் பட்டப்படிப்புக்கு வெளிவாரி பரீட்சார்த்திகளான இலங்கை மாணவர்களைத் தயார்ப்படுத்தும் கல்வி நிறுவனமாகச் செயற்பட்டது. 1942 இல் இக்கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு தனித்து இயங்க ஆரம்பித்தது. காலப்போக்கில் நாட்டின் பிறபகுதிகளிலும் பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்பட்டன. இலங்கையில் பல்கலைக்கழக முறை (University System) ஒன்று உருவாகியது. இம்மாற்றங்கள் மேற்குறித்த மூன்று கற்கைத்துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. ‘இலங்கையின் வரலாறும், பொருளியலும், சமூகவியலும்’ என்ற இத்தொடரில் இக்கற்கைத்துறைகளின் வளர்ச்சி பற்றிய மதிப்பீடுகள், முக்கிய ஆய்வாளர்களின் நூல்களினதும், ஆய்வுக் கட்டுரைகளினதும் அறிமுகமும் விமர்சனமும், ஆய்வாளர்களின் கோட்பாட்டுப் பங்களிப்புகள் (Theoretical Contributions), அவர்களின் புலமைத்துறை வாழ்க்கை வரலாறு, மாணவர் பரம்பரைகளின் உருவாக்கம், அரசியல் – சமூக – பண்பாட்டு உயர்குழக்களின் (Elites) உருவாக்கம் என்பன குறித்த பகுப்பாய்வுகளாக அமையும் கட்டுரைகள் பதிவிடப்படும்

ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா

இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப்பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் ஒரு நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக்கூறும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதியொன்றை வெளியிட்டது. இத்தொகுதியின் தலைப்பு ஆங்கிலத்தில் ‘Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Science in Sri Lankan Universities’ என்பதாகும். 1921 ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று அமைக்கப்பட்டது. அன்று தொடக்கி வைக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்வி ஒரு நூற்றாண்டு காலத்தில் விழுதுகள் பல பரப்பி ஓர் ஆலமரம் போன்று இலங்கையின் பல்கலைக்கழக முறைமையாக உருவாக்கம் பெற்றுள்ளது. மேற்படி, நூற்தொகுப்பு இந்த ஒரு நூற்றாண்டு வளர்ச்சிகளைக் கொண்டாடுவதோடல்லாமல், குறைகளையும் நிறைகளையும், சாதனைகளையும் மதிப்பீடு செய்யும் ஆக்கமாகவும் விளங்குகிறது. இப்பெரு நூலைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இத்தொகுப்பின் இரண்டாவது தொகுதியின் 7 ஆவது அத்தியாயமாக அமைந்துள்ள ‘Sociology and Anthropology: Evidence Based Inquiry Into The Social World’ என்னும் தலைப்பிலான கட்டுரையினைச் (பக்கம் 97-119) சுருக்கித் தமிழில் தரும் வகையில் இத்தமிழ்க் கட்டுரையை வரைந்துள்ளோம். இலங்கையில் சமூகவியல் கல்வி (மானிடவியல் உட்பட) தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்ற வரலாறு ஆங்கில மூலக் கட்டுரையில் மிகச் சிறப்பாக பகுப்பாய்வு முறையில் கூறப்பட்டுள்ளது. இத்தமிழாக்கம் ‘ஆசையால் அறையலுற்றேன்’ என்னும் உணர்வால் தூண்டப்பெற்று எழுதப்பட்டுள்ளது.

சமூகவியலும் சமூக மானிடவியலும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடைய புலமைத்துறைகளாகும். இவை 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றி வளர்ச்சி பெற்றன. தொடக்ககாலத்தில் சமூகவியல், ஐரோப்பாவினதும் வட அமெரிக்காவினதும் சமூக உருவாக்கங்களை (Social Formations) ஆராயும் துறையாக இருந்தது. சமூக மானிடவியல், ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட காலனி நாடுகளின் சமூகங்கள் பற்றிய ஆய்வாக, ஐரோப்பியர் அல்லாத (Non – European) சமூகங்கள் பற்றிய ஆய்வாக அமைந்தது. தொடக்ககாலத்தில் இவ்விரு துறைகளிற்கிடையே இருந்த பிரிவினை ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் சமூகவியல், மானிடவியல் கல்வி அறிமுகமாகி வளர்ச்சியுற்றபோது பொருத்தமற்ற பிரிவினையாகவே தோன்றியது. ஏனெனில் இரண்டு கல்வித்துறைகளும் ஒரே சமூகத்தின் சமூகச் செயல்முறைகளை (Social Processes) ஆராய்வனவாக இருந்தன. வேறுபாடு அர்த்தமுடையதாக இருக்கவில்லை. ஆயினும் சில பல்கலைக்கழகங்கள் இந்த வேறுபாட்டைப் பின்பற்றுவதோடு, இவ்விரண்டிற்கும் தனித்தனித் துறைகளைத் தாபித்துள்ளன. மானிடவியல், பழங்குடியினர் சமூகங்களை ஆராய்வது. சமூகவியல் குடியான் சமூக உருவாக்கங்களையும், செயல்முறைகளையும், சமூக நிலைமாற்றத்தையும் (Social Transformations) ஆராய்வதாக உள்ளது.

இலங்கையில் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடத்துறையாக 1946 ஆம் ஆண்டில் சமூகவியல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் சமூகவியல் கல்வி இலங்கையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட பொழுது, சமூகவியலின் ஓர் அங்கமாகவே சமூக மானிடவியல் வளர்ச்சி பெற்றது. இவை இரண்டினதும் எல்லைகள் தெளிவற்றனவாக அமைந்துள்ளன. சமூகவியல் பல்கலைக்கழகத்தில் அறிமுகமாக முன்னர், இலங்கைச் சமூகவியல் பற்றி ஆராயும் பழம்மரபு (Older Tradition) ஒன்று இருந்தது. பின்னர் இம்மரபு எவ்வாறு சமூகவியலுடன் இணைவுற்றது என்பது ஆராயப்பட வேண்டியது என்று யொனதன் ஸ்பென்சர் (1990) குறிப்பிட்டுள்ளமை உற்று நோக்கத்தக்கது. ஆங்கிலக்கட்டுரை ஆறு உபதலைப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. அவை வருமாறு:

  1. தோற்றமும் வளர்ச்சியும்.
  2. இக்கல்வித்துறைகள் சமூகத்திற்குச் செய்த பங்களிப்பு.
  3. உலகுக்கு வழங்கிய பங்களிப்பு (Global Contributions).
  4. எதிர்நோக்கிய சவால்கள்.
  5. சர்வதேசப் பரிமாணமும், இந்தியாவோடு ஒப்பீடு செய்தலும் (International Dimension and Comparison with India).
  6. எதிர்காலத்தை நோக்கிய பயணம்.

பல்வேறு வழிகளிலும் தேடித்தொகுத்த தகவல்களை ஆதாரமாகக்கொண்டு, தமது சொந்த அனுபவத்தையும் கலந்து கட்டுரையாளர்கள் சுவாரசியமான முறையில் இக்கட்டுரையினை எழுதிச் செல்கின்றனர்.

தோற்றமும் வளர்ச்சியும்

1948 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடநெறியாக அறிமுகம் செய்யப்பட்ட சமூகவியல் துறை ஒரு நேரான பாதையில் உறுதியாக முன்னேற்றம் பெற்றது என்று கூறமுடியாது. இத்துறையில் பல ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டன. இந்த ஏற்ற இறக்கங்களை பல்வேறு கட்டங்களாக வகுத்து அடையாளம் காண முடியும். 

  1. 1946 – 1960: இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிப்படியாக ஒரு தனித்த துறையாக இக்காலப்பகுதியில் தன்னைத் தாபித்துக் கொண்டது.
  2. 1961 – 1980: இக்காலத்தில் இலங்கையின் சமூகவியலாளர்கள் ஏறக்குறைய அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறி மேற்குலகை நோக்கிச் சென்றனர். இந்த ‘வெளியேற்றம்’ (Exodus) சமூகவியல் துறையை நிலைகுலைய வைத்தது. 
  3. 1981 – 2000: இக்காலம் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமூகவியல் கல்வியில் மீள் எழுச்சியும் துரிதமான விரிவாக்கமும் (Recovery and Rapid Expansion) ஏற்பட்ட காலமாகும். 
  4. 2001 – 2021: இக்காலத்தில் சமூகவியல் கல்வி ஒரு தளம்பலற்ற உறுதிநிலையைப் பெற்றது. கலைத்திட்ட விருத்தி (Curriculum Development) பல்துறைகளாகக் கிளை பிரிதலும் (Diversification), விரிவாக்கம் பெறுதலும் (Expansion) இக்காலத்தில் ஏற்பட்டன. இளங்கலைப் பட்டப்படிப்பு (BA), பின்பட்டப்படிப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சியும், கற்பித்தலும் வளர்ச்சி பெற்றன.

மேற்குறித்த நான்கு கட்டங்களிலும் சமூகவியல் கல்வி எதிர்நோக்கிய சவால்களை அடுத்துப் பார்ப்போம்.

சமூகவியல் ஒரு கற்கைத்துறையாக உருவாக்கம் பெறுதல்

பொருளியல், புவியியல், அரசியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளோடு ஒப்பிடும்போது இலங்கையில் ‘Liberal Arts Education’ என்னும் கலைத்துறைக்கு சமூகவியல் மிகப் பிந்திவந்து சேர்ந்த துறையாகும் என எச்.எல். செனவிரத்தின (2017) குறிப்பிடுகிறார். 1921 – 1942 காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சமூகவியல், மானிடவியல் என்பனவும், அதனோடு தொடர்புடைய பாடங்களும் போதிக்கப்படவில்லை. 1946 இல் அறிமுகம் செய்யப்பட்ட சமூகவியல், 1948 இல் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டது என மேலே குறிப்பிட்டோம். பின்னர் சமூகவியல், 1949 இல் ஒரு தனித்த துறையாக (Department) இலங்கைப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிறைஸ் றயன் (Bryce Ryan) என்னும் அமெரிக்கர் நியமிக்கப்பட்டார். றயன் தொடக்ககாலத்தில் இலங்கை அல்லது தென் ஆசியா பற்றிய ஆய்வாளர் என்ற வகையில் அறியப்பட்ட ஒருவராக இருக்கவில்லை. பிறைஸ் றயன் எத்தகைய சூழ்நிலையில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார் என்ற வரலாறு தெளிவற்றதாகவே உள்ளது. அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த சேர்.ஐவர். ஜெனிங்ஸ் (இவரே முதலாவது உபவேந்தர்) அமெரிக்காவின் பேராசிரியர் ஒருவரை அழைத்துவந்து சமூகவியல் கல்வியை இலங்கையில் ஆரம்பிக்க வேண்டும் எனக் கருதினார் போலும். பிறைஸ் றயன் அவர்களது வருகை, இலங்கையின் சமூகவியலில் அமெரிக்கச் சமூகவியலின் தாக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது. இலங்கை பிரித்தானியாவின் காலனியாக இருந்து வந்தபோதும் பிரித்தானியாவின் மானிடவியல் (British Anthropology) இலங்கையில் கால்பதிப்பதற்குப் பதிலாக அமெரிக்க சமூகவியல் பிறைஸ் றயன் ஊடாக இலங்கையில் கால்பதித்தது. பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்தவரான ஐவர் ஜெனிங்ஸ் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வி முறைமையை பிரித்தானிய மாதிரியில் (British Model) உருவாக்கினார். சமூகவியல் துறையை அறிமுகம் செய்வதில் ஐவர் ஜெனிங்ஸ் புறநடையாகச் செயற்பட்டாரா என்ற வினா எழுகிறது. இது பற்றி எச்.எல். செனவிரத்தின 2017 இல் எழுதிய கட்டுரையொன்றில் ஒரு விளக்கத்தைத் தந்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தில் சமூகவியலை பொருளியலின் உபதுறையாக, அதற்குக் கீழ்வரும் ஒரு கல்வித்துறையாக (Subordinate Component of Economics) கருதும் மரபு இருந்து வந்தது. லண்டன் பொருளியல் பள்ளியில் (London School of Economics) இவ்வாறுதான் சமூகவியல் புகுந்துகொண்டது. அந்த மரபையே ஐவர் ஜெனிங்ஸ் இலங்கையிலும் பின்பற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், பொருளியல் துறை மாணவர்கள் சமூகவியலில் சிறப்புத் தேர்ச்சிக்கான படிப்பை மேற்கொண்டனர். 

பிறைஸ் றயனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டில் முறே ஸ்ராஸ் (Murray Straus) என்ற அமெரிக்கர் சமூகவியல் துறையில் இணைந்துகொண்டார். முறே ஸ்ராஸ் சமூக உளவியலில் சிறப்புத் தேர்ச்சியுடையவர். இவரது வரவும் இலங்கையின் சமூகவியலில் அமெரிக்காவின் தாக்கம் அழுத்தம் பெறக் காரணமாயிற்று. முறேயைத் தொடர்ந்து அவரின் மனைவி யக்குலின் (Jacqueline) அவர்களும் சமூகவியல் துறையில் ஆசிரியராக இணைந்துகொண்டார்.

பிறைஸ் றயன் சமூகவியல் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது தொடக்கவுரை (Inaugural Address) ஒன்றை நிகழ்த்தினார். அந்த உரை பின்னர் ‘University of Ceylon Review’ என்ற அக்கால ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்டது. பிறைஸ் றயன் அவ்வுரையில் சமூகவியல் முழுமையான அனுபவவாத அடிப்படைகளில் (Empirical Foundations) நிறுவப்பட வேண்டிய ஓர் ஆய்வுத்துறையெனக் கூறினார். அவரது கூற்றொன்றைக் கீழே தந்துள்ளோம். 

“The future of sociology lies in a well–founded programme of empirical knowledge. This will be different from the old philosophical approach to understanding social reality. I am not devaluing the importance of social theory. But it is important that theories are built in facts and not pure conjecture” (பக். 100).

இதன் தமிழாக்கம் வருமாறு:

“சமூகவியல் ஆய்வு அனுபவம்சார் அறிவு என்ற அடித்தளத்தில் கட்டமைக்கப்பட வேண்டிய ஒன்று, அத்தகையதொரு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அதன் முன்னேற்றத்திற்கு உதவக் கூடியதாக இருக்கும். சமூக யதார்த்தத்தை பழைய மெய்யியல் நோக்கில் விளக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. நான் சமூகக் கோட்பாடு ஒன்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கருதவேண்டாம். கோட்பாடுகள் உண்மையான நேர்வுகளின் (Facts) ஆதாரத்தில் கட்டமைக்கப்பட வேண்டும். அவை வெறும் ஊகங்களின்படி கட்டமைக்கப்படுவன அல்ல” (Ryan, 1949, P. 81).

றயன் இலங்கையின் சமூகவியல் கல்விக்கு வழங்கிய முக்கிய பங்களிப்பு கிராமிய ஆய்வுகள் (Village Studies) என்பதைத் தொடக்கி வைத்தமையாகும். இலங்கையின் கிராமங்கள் பற்றிய ஆய்வில் அவர் தன் மாணவர்களை ஈடுபடுத்தினார். 1948 – 1952 காலத்தில் செயற்படுத்தப்பட்ட இத்திட்டம் றொக்கபெல்லர் நிறுவனத்தின் (Rockefeller Foundation) நிதி உதவியோடு ஆரம்பிக்கப்பட்டது. பிறைஸ் றயன் ‘Sinhalese Village’ (சிங்களக் கிராமம்) என்னும் நூலின் (1958) முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். 

“இலங்கைச் சமூகம், அதன் பண்பாடு என்பன பற்றிய அடிப்படைக் கூறுகளைத் தெரிந்துகொள்ளும் நோக்குடன் கிராமிய ஆய்வுத்திட்டம் தொடக்கப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களின் சொந்த நாட்டவர்களான கிராம மக்களின் வாழ்க்கையோடு நெருக்கமாகப் பரிச்சயம் செய்து கொள்வதற்கான ஒரு கருவியாகவும் இது அமைந்தது. இலங்கையில் இதுவரை நவீன சமூகவியல் பண்பாட்டு மானிடவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டம் கிராமங்கள் பற்றிய ‘Baseline Studies’ (‘ஆரம்ப ஆய்வும் தொடக்கப் புள்ளியுமான விசாரணை’ என்ற பொருள் உடைய தொடர்) ஆக வடிவமைக்கப்பட்டன (Ryan, 1958, P.5).”

றயனின் ‘Sinhalese Village’ நூலின் பின்னிணைப்பாக 22 பிரசுரங்கள் அட்டவணையிடப்பட்டன. கிராமிய ஆய்வுகள் வேலைத்திட்டத்தின் பெறுபேறாக அவரது  ‘நவீன இலங்கையில் சாதி’ (Caste in Modern Ceylon) என்னும் முன்னோடியான ஆய்வு நூல் 1953 இல் வெளியிடப்பட்டது. இன்னொரு நூலான ‘Sinhalese Village’ என்ற நூல் பிறைஸ் றயனின் இலங்கை மாணவர்களில் இருவரான L.D. ஜெயசேன, D.C.R. விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து அவரால் எழுதப்பட்டது. இது 1958 இல் வெளியிடப்பட்டது. றயன் Socio-Cultural Regions of Ceylon (1950) எனும் கட்டுரையில் இலங்கையை சமூக பண்பாட்டு வலயங்களாக வகைப்படுத்தி காட்டினார். அவரின் இந்த வகைப்படுத்தல் பிராந்திய அடிப்படையிலான வேறுபாடுகளை எடுத்துக்காட்டியதோடு, இலங்கையில் பிராந்தியத் திட்டமிடலுக்கு (Regional Planning) ஒரு வழிகாட்டியாகவும் அமைந்தது. ஆயினும் பிறைஸ் றயனின் கிராமிய ஆய்வுகள் திட்டம் அவர் எதிர்பார்த்தது போன்று இலங்கையின் எதிர்கால ஆய்வுகளுக்கும் சமூகப் பகுப்பாய்விற்குமான ஆதாரமான தளமாக அமையவில்லை. இதற்கான காரணங்கள் பலவாகும். இந்த ஆய்வுத்திட்டத்தில் தொடர்ச்சி (Continuity) இருக்கவில்லை. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பதவி வகித்தவர்கள் சிலர் இத்திட்டம் தொடரப்படுவதை விரும்பவில்லை, அதற்குத் தடைபோட்டனர். பிறைஸ் றயனின் ஆய்வு முறையியலை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் வேறான ஆய்வு முறையியலை முன்வைத்து, அதன்படி சமூக ஆய்வைச் செய்தல் வேண்டும் எனக் கூறினர். இச்சர்ச்சைகள் பற்றி இக்கட்டுரையில் பிறிதொரு பகுதியில் எடுத்துக்கூறவுள்ளோம். 

எஸ்.ஜே. தம்பையா

இலங்கையின் சமூகவியல் வளைவுகளும் நெளிவுகளும் கொண்ட பாதையில் பயணித்த போதும் பிறைஸ் றயன் தொடக்கிவைத்த அனுபவவாத மரபின் (Empirical Tradition) தொடர்ச்சியை றயனின் மாணவரான எஸ்.ஜே. தம்பையாவின் ‘பாததும்பற’ பகுதியைப் பற்றிய ஆய்வில் காணலாம். பாததும்பறவின் இரத்த உறவுக்குடும்ப முறைக்கும், நில உடமைக்கும் (Kinship and Land Tenure) இடையிலான தொடர்பு பற்றிய எஸ்.ஜே. தம்பையா எழுதிய புகழ்பெற்ற ஆய்வினை, றோயல் இன்ஸ்டிரியுற் ஒவ் அந்திரோபொலொஜி நிறுவனத்தின் பருவ இதழ் (Journal) 1958 இல் வெளியிட்டது. இலங்கையில் சமூகவியல் படிப்பை மேற்கொண்டவரும், பட்டதாரி மாணவராகப் பயிற்சியைப் பெற்றவருமான ஒருவர் சர்வதேசப் புகழ் பெற்ற ஆய்விதழில் தனது கட்டுரையைப் பிரசுரித்தமைக்கான காலத்தால் முந்திய முன்னோடிப் பிரசுரமாக இக்கட்டுரை அமைந்தது. 1961 இல் எட்மன்ட் லீச் (Edmund Leach) ‘Pul – eliya’ (பூல்எலிய) என்ற நூலை எழுதினார். தம்பையாவின் பாததும்பற பற்றிய ஆய்வின் செல்வாக்கு (Influence) பூல்எலிய ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டதெனலாம். பூல்எலிய நூலில் எட்மன்ட் லீச், இரத்த உறவுமுறை (Kinship) என்பதை, இரத்த உறவு விதிகளை அல்லது சமூகத்தில் சட்டப்படியாக ஏற்கப்பட்ட நியமங்களை (Jural Norms) மட்டும் கொண்டு விளக்கிப் புரிந்துகொள்ள முடியாது. இரத்த உறவுமுறை நில உடைமையில் (Land Ownership) ஆதாரம் கொண்டுள்ளது என்ற கருத்தை வலியுறுத்தினார்.  நில உடைமை, பொதுவான ஓரிடத்தில் வதிதல் (Common Residence) என்பனவும் இரத்த உறவுமுறையும் பிணைப்புடையனவாய் உள்ளன என்பதை லீச் தெளிவுபடுத்தினார். 

1957 இல் என்.கே சர்க்கார் மற்றும் எஸ்.ஜே. தம்பையா இணைந்து எழுதிய The Disintegrating Village (சிதைவுறும் கிராமம்) என்ற நூல் இலங்கைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது. என்.கே. சர்க்கார் இந்தியப் பொருளியலாளர், புள்ளிவிபரவியல் அறிஞர். அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றினார். தம்பையா இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை விரிவுரையாளராக இருந்தார். பொருளியல், சமூகவியல் என்ற இரு துறைகளின் கூட்டு முயற்சியாக ‘பாததும்பற’ பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் பெறுபேறாக ‘சிதைவுறும் கிராமம்’ நூல் வெளியாயிற்று. இந்நூல் கண்டி மாவட்டத்தின் பாததும்பற பகுதியின் சமூக, பொருளாதார நிலைமைகள் பற்றிய ஆய்வாகும். இந்த ஆய்வில் சமூக மதிப்பீட்டு ஆய்வு முறை (Social Survey Research Method) பிரயோகிக்கப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட கள ஆய்வில் தம்பையாவும் அவரது மாணவர்களும் பங்குபற்றினர். மாணவர்கள் கள ஆய்வு உதவியாளர்களாகப் பங்கேற்றனர். இந்த ஆய்வு முன்னர் பிறைஸ் றயன் அறிமுகம் செய்திருந்த ஆய்வு முறையியலின் தொடர்ச்சியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. 

பிரட்மன் வீரக்கோன்

பிரட்மன் வீரக்கோன் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலைக் கற்ற முதலாவது அணி மாணவர்களுள் ஒருவர். இவர் பின்னர் இலங்கையின் சிவில் சேவையில் சேர்ந்து, மிக உயர்ந்த பதவிகளை வகித்த ஒருவராகத் திகழ்ந்தார். அவர் இலங்கையின் ஐந்து ஜனாதிபதிகளின் செயலாளராகக் கடமையாற்றியவர் என்ற சிறப்பைப் பெற்றார். பிரட்மன் வீரக்கோன் எச்.எல். செனவிரத்தினவிற்கு அளித்த நேர்காணலில் (2917, பக். 107) தமது அணியில் சமூகவியலைக் கற்றவர்களாக 10 மாணவர்கள் இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். தமது அணி மாணவர்கள் சமூகவியலின் மூன்று வெவ்வேறு துறைகளைத் தேர்வு செய்து படித்ததாகவும், ‘ஆய்வு முறைகள்’ (Research Methods) அவற்றுள் ஒன்றாக இருந்ததெனவும் பிரட்மன் வீரக்கோன் குறிப்பிட்டார். ஸ்டான்லி தம்பையா பழைய சமூகவியல் மாணவர்களில் ஒருவர். அவர் சமூகவியல் துறையில் உதவி விரிவுரையாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பின்னர் அவர் கொர்ணல் பல்கலைக்கழகத்தில் (Cornell University) மானிடவியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார். அவர் கொர்ணல் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலத்தில் பிறைஸ் றயனும் அங்கு பணியாற்றினார். 

ரால்ப் பீரிஸ் வருகை

பிறைஸ் றயன், 1948 – 1952 காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகக் கடமையாற்றினார். அவர் சமூகவியல் துறையின் பேராசிரியராக இருந்த காலத்தில், 1951 இல், இலங்கையர் மூவரை உதவி விரிவுரையாளர்களாக நியமித்தார். ரால்ப் பீரிஸ், எஸ்.ஜே. தம்பையா, எல்.சி. அருட்பிரகாசம் என்போரே அம்மூவராவார். இவர்களுள் எஸ்.ஜே. தம்பையாவும், எல்.சி. அருட்பிரகாசமும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள். ரால்ப் பீரிஸ் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டத்தை பெற்றவர். ரால்ப் பீரிஸ் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்ற பின்னர், லண்டன் பொருளியல் பள்ளியில் (LSE) சேர்ந்து 1945 – 1950 காலத்தில் அங்கு கல்விகற்றுச் சமூகவியல் கலாநிதிப் பட்டம் பெற்றவர். பிறைஸ் றயன் 1952 இல் விலகிச் சென்றதும் ரால்ப் பீரிஸ் சமூகவியல் துறையின் பிரதம நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். அவர் 1953 இல் விரிவுரையாளர் தரம் – II இற்குப் பதவி உயர்த்தப்பட்டார். அதன் பின்னர் 1955 இல் விரிவுரையாளர் தரம் – I இற்குப் பதவி உயர்த்தப்பட்டதோடு, சமூகவியல் துறையின் தவைலராக (Head of the Department of Sociology) நியமிக்கப்பட்டார். இலங்கையில் சமூகவியல் கல்வி நிறுவனமயப்படுத்தப்படுவதற்கு ரால்ப் பீரிஸ் பலவகையிலும் பங்களிப்பைச் செய்தார். அவர் பொருளியல் பட்டப்படிப்பில் இருந்து வேறாகத் தனித்துவமான பட்டப்படிப்பாக சமூகவியல் கல்வியை மாற்றினார். இரண்டாவதாக இலங்கைச் சிவில் சேவைப் பரீட்சைக்குச் சமூகவியலை ஒரு பாடமாகக் கற்றவர்கள், மதிப்புமிக்க நிர்வாக சேவையில் சேர்ந்துகொள்ள முடிந்தது. அத்தோடு, சமூக சேவைகள் திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு நலன்புரி சேவைத் திணைக்களம், கிராம அபிவிருத்தி திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் பலவற்றில் சமூகவியலைக் கற்றவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு வழிவகுத்தார். இதன்மூலம் இத்திணைக்களங்களின் சேவைகளின் தரம் உயர்வதற்கு வழிவகுத்தார். பின்னர் ரால்ப் பீரிஸ் திட்டமிடல் அமைச்சில் ஆலோசகராக பணியாற்றிய போது சமூகவியல் மாணவர்கள் திட்டமிடல் சேவையில் (Planning Service) சேர்த்துக்கொள்ளப்பட வழிவகுத்தார். அவரது சுயசரிதையைக் கூறும் கட்டுரையில் (1988) குறிப்பிட்டிருப்பது போல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பருவ இதழான ‘Ceylon Journal of Historical and Social Studies’ வெளியிடப்படுவதற்கு காரணமானவராக இருந்தார். ரால்ப் பீரிஸ் அவர்களின் பங்களிப்புப் பற்றி எச்.எல். செனவிரத்தின பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கல்வியின் நிறுவகர் (Founder) என ரால்ப் பீரிஸ் அவர்களைக் குறிப்பிட முடியாது. ஆயினும் சமூகவியல் பட்டப்படிப்பின் (Degree Programme) நிறுவகர் பெருமை அவருக்கே உரியது. இல்லாவிடில் பொருளியல் துறையின் ‘எடுபிடிகள்’ என்ற நிலையிலேயே சமூகவியல் கல்வி நிலை பெற்றிருக்கும் (செனவிரத்தின, 2017, பக். 115).

கலைத்திட்டம்

ரால்ப் பீரிஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்ட சமூகவியல் பட்டபடிப்பின் முதல் அணி மாணவர்கள் 12 பேரில் ஒருவராக எச்.எல் செனவிரத்தின சேர்ந்துகொண்டு 1957 – 1959 காலத்தில் கல்வி கற்றார். அவர் எழுதிய 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Sociology At the University of Ceylon’ (Social Affairs, Vol.07) என்ற கட்டுரையில் தம் அணியைச் சேர்ந்த மாணவர்கள் எட்டு பாடங்களைப் படிக்க வேண்டி விதிக்கப்பட்டிருந்தது எனக் குறிப்பிடுகிறார். அவற்றுள் நான்கு பாடங்கள் பின்வருவனவாகும்.

  1. சமூகக் கட்டமைப்பின் கூறுகள்.
  2. சமூக நிர்வாகம்.
  3. ஒப்பீட்டுச் சமூக நிறுவனங்கள் (Comparative Social Institutions). 
  4. சமூகவியல் கோட்பாடுகளும் முறைகளும் (Sociological Theories and Methods).

  சமூகவியல் மாணவர்கள் பொருளியல் துறையின் பொருளியல் பட்டப்படிப்புப் பாடங்களான, 

அ. அரசியல் சமூகக் கோட்பாடு

ஆ. புள்ளிவிபரவியல்

ஆகிய இரு பாடங்களையும் கற்றனர். அத்தோடு ‘சமூக உளவியல்’ என்ற பாடத்தை கல்வியியல் துறையின் J.E. ஜெயசூரிய அவர்களிடமும், ‘இலங்கை வரலாறு’ என்ற பாடத்தை வரலாற்றுத் துறையினரிடமும் சமூகவியல் மாணவர்கள் கற்றனர். இறுதி ஆண்டில் சமூகவியல் துறையினால் குறிப்பிடப்படும் கட்டுரைத் தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை எழுதிச் சமர்ப்பிக்குமாறும் மாணவர்கள் வேண்டப்பட்டனர். மேற்கண்டவாறு சமூகவியல் மாணவர்கள் பல்சங்கமப் பண்புடைய (Multi-disciplinary Character) கலைத்திட்டம் ஒன்றிற்கு அமையப் பயிற்றுவிக்கப்பட்டனர். அக்கால மாணவர்களில் பலர் அரச நிர்வாக சேவையில் சேரும் விருப்பம் உடையவர்களாக இருந்தபடியால், சமூகவியல் கற்கும் மாணவர்கள் அரச நிர்வாக முறையின் அடிப்படைக்கூறுகளை அறிந்துகொள்வதற்கு உதவக்கூடியதாக ‘சமூக நிர்வாகம்’ (Social Administration) என்ற பாடத்தை ஒரு பாடமாகத் தாம் சேர்த்துக்கொண்டதாக ரால்ப் பீரிஸ் பின்னாளில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தொடரும்.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்