சைவசித்தாந்தம்: ஆறுமுக நாவலரும் வ.உ. சிதம்பரனாரும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
18 நிமிட வாசிப்பு

சைவசித்தாந்தம்: ஆறுமுக நாவலரும் வ.உ. சிதம்பரனாரும்

March 20, 2026 | Ezhuna

இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை மேற்கொள்கின்றன; இதன்வழியாக, கடந்தகாலச் சமூக சக்திகள் வழிவகுத்துவிட்டிருந்த இயங்குமுறை அமைந்த அடித்தளங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. இதேபோன்ற பின்னணிக்குரிய ஏனைய சமூகங்களில் இயங்கிய ஆளுமைகளுடன் எமது இயங்கு தளத்துக்குரிய ஆளுமைகளை ஒப்பிடுவதன் வாயிலாக செய்யப்பட்டவற்றையும், செய்திருக்கத்தக்கன எவை என்பதையும் மதிப்பீடு செய்வது அவசியமானது. இவற்றின் பெறுபேறுகள் எமக்கான எதிர்கால மார்க்கத்தை வடிவமைப்பதற்கு மிகமிக முக்கியமானவை ஆகும். “சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்” எனும் இத்தொடரானது நாவலரின் பங்களிப்புக் குறித்த மதிப்பீட்டின் வழியாக சமகால இயங்குமுறையைக் கணிப்பிட்டு, சுயவிமரிசனங்களுடன் புதிய பாதையையும், அதற்குரிய சரியான மார்க்கத்தையும் கண்டடையும் நோக்கில் எழுதப்படுகிறது.

மதங்களால் மனித மனங்களும் சமூகக் கட்டமைப்பும் வடிவமைக்கப்பட்டிருந்த மத்திய காலத்தின் அடிப்படைப் பண்புகள் சில இன்றும் தாக்குறவுடன் உள்ளன. அனைத்து மதங்களும் தத்தமது பரப்புரைகளை இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தும் ஊடகமாகத் திகழ்ந்த தமிழ், மதச்சார்பின்மைப் பண்பெனும் தனக்குரிய தனித்துவத்தை இழந்து, சைவத் தமிழ் என்ற அடைமொழி ஏற்புடன் வலம் வருவதில் உள்ள முரண் கவனிப்புக்கு உரியது. பக்திப் பேரியக்கத்தில் தேவார – திருவாசகப் பாசுரங்கள் பரவலாக மேலெழுந்து வந்ததுடன் மட்டுமன்றி, உலக மதங்கள் எவற்றினதையும் விடக் கடவுளுக்கான விவரணத்தில் அதிகூடிய தத்துவ வீச்சுக்குரிய சைவசித்தாந்தத்தை வழங்கிய வகையிலும், தமிழுடன் சைவம் இணைபிரியா ஒட்டுதலைப் பெற இயலுமாக இருந்தது எனக் கருதலாம். 

சைவக் காவலர்களாகத் தம்மை முன்னிறுத்திய சோழப் பேரரசு உலகின் முதல் நிலை வல்லரசு எனக் கோலோச்சிய காலம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தியது; ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை, உலகில் அதிகூடிய காலம் வரை நீடித்த கடற்படையுடன் பல்லாயிரம் மைல் தூரங்களுக்கு அப்பாலும் படை நடாத்தி வெற்றிக் கொடி நிலை நாட்டிப் பரந்த நிலப்பரப்பின் மீது ஆளுகை செலுத்திய பேரரசாக சோழர்களின் ஆட்சி அமைந்திருந்தது. அந்தப் பேரரசின் பரந்த வியாபிதம் தாங்கிய, ‘உலகெல்லாம் ஓதுதற்கு அரிய’ பக்திக் கோட்பாடு சைவசித்தாந்தம் என்ற தத்துவ வகைமைக்கு உரியதாக வெளிப்பட்டது சோழப் பேரரசின் வீழ்ச்சி ஏற்பட்ட பின்னர்தான்.

அந்தப் பேரரசின் வீழ்ச்சியை அடுத்துத் தெலுங்கு ஆட்சியாளர்களுக்குரிய விஜயநகரப் பேரரசு ஏற்பட்ட சூழலில் தமிழின் ஆளும் நிலப்பிரபுத்துவச் சாதியான வெள்ளாளர்கள் பிராமணியத்துக்கு அப்பால் தமக்கே உரிய தத்துவத்தின் அவசியத்தை உணர்ந்து வெளிப்படுத்தியதே சைவசித்தாந்தம். சூரிய சந்திரர் உள்ள காலம் முழுவதும் சோழப் பேரரசு நிலைத்திருக்கும் என்றும், அதன் வாயிலாக வெள்ளாளர்களின் நிலப்பிரபுத்துவ மேலாண்மை நிலைத்து நீடிக்கும் என்பதனாலும் – அதற்கு உதவும் துணைச் சக்தியாகப் பிராமணரை அணைத்து நிலவுடைமைப் பங்குதாரர்களாக ஆக்கியிருந்தனர்.

புதிதாக வந்த ஆட்சியாளர்கள் தமக்கே உரிய தெலுங்கு பேசும் நிலப்பிரபுத்துவச் சாதியை வளர்க்க முனைந்த போது தமிழ்ப் பிராமணர்கள் அவர்களுக்குமான ஆன்மிகத் தலைவர்கள் என்று மாற முடிந்ததைக் கண்டனர். வேத–வேதாந்தத்தைக் கடந்த, ஆகமத்தை முற்றிலும் சார்ந்த சைவசித்தாந்தம் வெள்ளாளர்களுக்கு அதன்போது தான் வெளிப்படுத்தப்பட வேண்டியதாக அமைந்தது.

இத்தகைய ஒரு மாறுநிலை அதிர்வு இன்றைய உலக மேலாதிக்க வல்லரசான ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட இடந்தராமல் தனது ஆணைக்குக் கட்டுப்பட்டதாக உலக ஒழுங்கைக் கொண்டு நடாத்துவதற்கு அமைவான புதிய சித்தாந்தத்துக்கு உலகை ஆட்படுத்தும் வகையில், பழைய ‘ஐ.நா. சபை வகுத்த சட்டங்களுக்குக் கட்டுப்படுத்தாத’ செயலொழுங்குடன் வெறியாட்டம் ஆடும் நிர்ப்பந்தத்தில் ஐக்கிய அமெரிக்கா திணறிக் கொண்டிருக்கிறது.

மனிதர்களின் இடையேயான உற்பத்தி உறவில் நிலம் பிரதான சக்தியாக இருந்த அன்றைய நிலப்பிரபுத்துவ முடியாட்சி முறைமையில், படை நடாத்திக் கைப்பற்றிய நிலப்பரப்பு முழுமையையும் ஆளும் உரிமையைப் பெற இயலும் என்றிருந்த உலக நியதி இன்று இல்லை. மூலதனம் பிரதான உற்பத்தி உறவுக்குரிய சக்தியாக மேற்கிளம்பி வந்த சூழலில் ‘உலக அங்கீகாரத்துடன் இயங்கும் தேசங்கள்’ சுயாதீனமாகவும் இறைமையுடனும் செயற்படுகின்ற உலக ஒழுங்கு நிலவுகின்றது. அதனைக் கண்காணித்து முறைப்படுத்தும் சர்வதேச அமைப்பாக ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசங்கள் அனைத்தையும் சமநீதியுடன் நடாத்துவதாக அந்த அமைப்பு உருவாகி இருக்கவில்லை. தனது மேலாதிக்க நலனைக் காக்கும் ஆதாயத்துடன் அமைந்த ஐ.நா. சபையையும் கவனத்தில் எடுக்காதவர்களாய்த் தன்னகங்காரத்துடன் செயற்படும் தோல்விக் கொந்தளிப்பில் இன்றைய ஐக்கிய அமெரிக்கா!

மூலதன அபகரிப்புக் குணாம்சத்தின் பாற்பட்ட மேலாதிக்கப் பண்பு இதுவெனக் கருத இயலுமா? ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளை ஆக்கிரமித்த போதிலும் அங்கும் தமது மண்ணுக்குரிய நீர்ப்பாசன முறைகள் – விவசாயத் தொழில்நுட்பம் என்பவற்றை அறிமுகப்படுத்தித் விருத்தி பெறுவதற்கு வழிவகை செய்வதாகச் சோழப் பேரரசு செயற்பட்டிருந்தது போல, மூலதன அபகரிப்பைச் செய்யும் ஏகாதிபத்திய நாடுகள் ஏன் இயங்கவில்லை?

ஈரான் தனக்கான தொழில்நுட்ப விருத்தியைத் தொடர்வதனால் தனது பொருளாதார நலனுக்கு மட்டுமின்றிப் பாதுகாப்புக்கும் தீங்கு ஏற்பட்டுவிடும் என்று ஐக்கிய அமெரிக்கா கருதுவதாகக் கொள்ளலாமா? ஈரான் சுயமாக முன்னேறுவதாக மட்டுமல்லாமல் தன்னையும் மேவி வளரும் சீனாவுக்கு உறுதுணையாக இருப்பதனாலே இந்த யுத்தம் ஐக்கிய அமெரிக்காவுக்கு அவசியப்பட்டுள்ளது எனச் சொல்லப்படுவதில் உண்மை உள்ளதா?

இதுவரையான மூலதன அபகரிப்பு என்பது தொழிலாளர்களின் உற்பத்திச் சக்தி உருவாக்கித் தந்த உபரி உழைப்பில் இருந்து மட்டும் வெளிப்பட்டிருக்கவில்லை. கார்ல் மார்க்ஸ் ‘மூலதனம்’ நூல் வாயிலாக ‘உபரி உழைப்புத்தான் மூலதனத் திரட்சியாக அமைகிறது’ என்பது அடிப்படையான உண்மை என்றார்; உலக வரலாற்றில் அவ்வாறு மட்டுமே மூலதன அபகரிப்பு நடந்ததாக அவர் சொல்லியிருக்கவில்லை. அதுவரை வணிகத்தைப் பாவத் தொழிலென நிராகரித்திருந்த கிறிஸ்தவர்கள் ஐரோப்பாவில் இருந்து மூலதன வேட்டைக்காக நாடுகாண் வீரர்களாகக் கிளம்பிக் குடியேற்றம் மேற்கொண்ட காலனித்துவ நாடுகளில் கொள்ளையடித்துத் திரட்டியிருந்த ஆதி மூலதனத் திரட்சி பற்றியும் கார்ல் மார்க்ஸ் விலாவாரியான ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.

சோழப் பேரரசு முதல் மொகலாயப் பேரரசுகள் வரை வெற்றி கொண்ட நாடுகளின் நிலங்களில் அன்றைய காலங்களின் விருத்தியோடு இணைந்து பயணிக்க வேண்டியிருந்தது என்றால், பிரதான உற்பத்திச் சாதனமான நிலம் பெயர்த்தெடுக்க இயலாது என்பதனால் ஆகும். காலனி நாடுகளில் மூலதன அபகரிப்பு மேற்கொண்டு ஏகாதிபத்தியம் தனது தேசங்களுக்குக் கடத்திச் செல்வது புதிய வகை உற்பத்தி உறவு. சென்ற நூற்றாண்டின் நடுக்கூறில் காலனி நாடுகள் விடுதலை பெற்று சுதந்திரமும் தன்னாதிக்க இறைமையும் பெற்றிருந்த போதிலும், நவகாலனித்துவ முறையில் தொடர்ந்தும் ‘ஒடுக்கப்பட்ட தேச’ வரம்புகள் இயங்க நேர்ந்துள்ளது. இதுவரை ஏகாதிபத்தியத் திணை ஒடுக்கப்பட்ட தேசங்கள் மீது பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்து தனது அபகரிப்பை மேற்கொள்ளும் உலக ஒழுங்கு வழக்காறாக இருந்தது. பெற்றோல்–டொலர் பரிவர்த்தனையில் ஏகாதிபத்தியம் பெற்று வந்த அந்தச் சுரண்டலுக்குத் தடை ஏற்படுத்தி, பலவேறு நாணயங்கள் வாயிலாக நாடுகள் இடையே வர்த்தக ஊடாட்டம் மேற்கொள்ளும் நடைமுறையைச் சாத்தியமாக்கிய புதிய உலக ஒழுங்கு கடந்த வருடம் ஏற்பட்டிருந்தது.

அதனை உத்தரவாதப்படுத்தும் பிரதான மையமாகத் திகழ்ந்த ஈரானை ஆக்கிரமிக்க முனைந்த ஐக்கிய அமெரிக்காவின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது; வரலாற்றுப் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக இனியும் ஏகாதிபத்திய மேலாதிக்கம் இருக்கப் போவதில்லை. ஒடுக்கப்படுதலுக்கு இடமின்றித் தேசங்கள் இடையே சமத்துவமான பரிவர்த்தனை சாத்தியம் எனும் வரலாற்றுத் திருப்புமுறை ஈரானில் மேற்கிளம்பி வந்துள்ளது!

மீளக் கண்டறிதல்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியக் காலனித்துவத்துக்குள் இலங்கை முழுமையாக ஆட்படுத்தப்பட்டு நவீன அரசியல் முறைமை தொடங்கிய போது தமிழ் ஆளுமைகளில் ஒருவரான ஆறுமுக நாவலர் செயற்பட்டிருந்த பாங்கினை மறுமதிப்பீடு செய்ய வேண்டியுள்ள இந்தத் தளத்தில், காலனித்துவ முறைமையில் இன்று ஏற்பட்டவாறுள்ள வரலாற்றுத் திருப்புமுனை காரணமாகப் பாரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதைப் பற்றிப் பேச வேண்டியுள்ளது. இன்றைய எமது பிரச்சினைகள் முதலாளித்துவம் ஏற்படுத்தியவை என்ற வகையில் அதனை ஒழித்துக்கட்டும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பது அவசியம் எனக் கருத்துரைக்கும் மார்க்சியர்கள் உள்ளனர்.

நவகாலனித்துவப் பிடியிலிருந்து பூரணமாக விடுதலை பெறாத வரையில் உள்நாட்டின் முதலாளித்துவ உற்பத்தி உறவு முழுமையாக அற்றுப்போக இயலாது. பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் விடுதலைத் தேசியச் சோசலிசக் கட்டுமானத்தை முன்னெடுக்கும் மக்கள் சீனத்தின் மாஓ சேதுங் சிந்தனைப் பிரயோகமானது தேசிய முதலாளித்துவத்துடன் தொடர்ந்தும் ஐக்கியப்பட்டவாறு சந்தைச் சோசலிச முறைமையை மேற்கொண்டு வருகின்றமை கவனிப்புக்குரியது. ‘சீனப் பிரத்தியேக நிலைமைக்கான சோசலிசம்’ என்று சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி சொல்ல வேண்டியிருப்பதானது திணை அரசியல் குறித்த தகவல் பெறப்படாமையின் பேறினாலாகும்.

திணை அரசியலுக்குரிய தமிழ்ச் சூழலில் அது குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் மேற்கிளம்பாத போது, பாட்டாளி வர்க்கச் சோசலிச நிர்மாணத்தில் இருந்து வேறுபட்ட சீனாவுக்கான பிரத்தியேகத் தன்மையைச் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியினால் ஏன் கண்டுகாட்ட இயலவில்லை எனக் கேட்க இயலாது. வர்க்க அரசியல் மட்டுமே நிதர்சனம் என்று பழகிப் போன காரணத்தால் விடுதலைத் தேசிய இயங்கு முறைமையை வெளிப்படுத்தும் வரலாற்றுச் செல்நெறித் தொடக்கமான மருதத் திணை மேலாதிக்கம் குறித்த தேடல் சாத்தியப்படாமல் இருக்கின்றது. முழுமையாக வர்க்கப் பிளவுறாத ‘ஆசிய உற்பத்தி முறைமைக்குரிய’ எமது நாடுகளில் முழுச் சமூக சக்தியாக (திணையாக) இயங்கி வந்த தனிவகைப்பட்ட வரலாற்றுப் போக்கு நிதர்சனமாக இருந்தது என்பது மறைபொருளாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

காலனியமயப்பட்ட சிந்தனைச் சூழல் இன்றும் நீடிக்கும் நவகாலனித்துவப் பிடி காரணமாக விலக இயலாததாக உள்ளது. நவீன சிந்தனையே வெள்ளையரின் கொடை எனக் கருதி அரசியல் வரலாற்றை கிரேக்க–ரோம், பிரெஞ்சு–ருஷ்யப் புரட்சிகளுடன் மட்டுப்படுத்திப் பார்க்கப் பழகிய தவறு இன்னமும் நீடித்தபடியே உள்ளது.

‘பெற்றோல் வணிகத்தை டொலரில் அல்லாமல் சீனாவின் யுவான் நாணயத்தில் மேற்கொள்ள வேண்டும்’ என ஈரான் நிபந்தனை விதித்திருப்பதாகப் பேசப்படுகின்றது; ‘அப்படியென்றால் ஐக்கிய அமெரிக்கா வகித்து வந்த மேலாதிக்கப் பாத்திரத்தை மக்கள் சீனம் இனி கையேற்கப் போகிறதா?’ என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுவதைக் காண்கிறோம். ‘அதெப்படி சாத்தியமாக முடியும்? உலக மேலாதிக்கத்தின் பிரதான கருவியாக இருந்து வருகின்ற ஆங்கில மொழியின் இடத்தைச் சீனமொழியால் பெற இயலுமா? மிக இலகுவாகக் கற்பதற்கு ஏற்ற சர்வதேச மொழியாகிவிட்ட ஆங்கிலத்துடன் திகழும் காப்பரேட் மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகத் துறையானது சீன மேலாதிக்கத்துக்கு இடமளிக்கப் போவதில்லை’ எனத் தீர்க்கதரிசனம் கூறப்படுவதனையும் அவதானிக்கலாம்.

தனியொரு நாட்டின் மேலாதிக்கம் இனிச் சாத்தியமில்லை; பல்துருவ உலக ஒழுங்கு தான் இயங்க இயலும் என வெளிப்படுத்தும் மாற்றம் சென்ற வருடமே நிதர்சனமாகி இருந்தது. டொலரைக் கடந்து சீனாவின் யுவான் மட்டுமன்றி ருஷ்யாவின் ரூபிள், இந்தியாவின் ரூபாய் என்பன சர்வதேச நாடுகள் இடையேயான பரிவர்த்தனை நாணயங்களாகப் புழக்கத்தில் வந்துவிட்டன. அதை மீறிச் சீனா தனது தனிப்பட்ட மேலாதிக்கத்துக்கு முனையாதது மட்டுமன்றி, BRICS கூட்டமைப்புக்கான பொது நாணயம் ஒன்றைத் தொடங்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதனை மக்கள் சீனம் ஆதரித்து வருகின்றது.

இதுவரை ஏகாதிபத்தியத் திணையின் மேலாதிக்கம் தீர்மானகரமானதாக இருந்து வந்தது. குறைந்தபட்ச ஜனநாயகத்துடன் இயங்கிய ஐ.நா. சபையில் ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பம் வீட்டோ அதிகாரத்தால் நிறைவேற்றப்பட்டு வந்தது. அந்தக் கூட்டு மேலாதிக்கத்துக்குத் தலைமை தாங்கி வந்த ஐக்கிய அமெரிக்கா அண்மைக்காலமாக நடைமுறையில் இயங்கத் தொடங்கியிருக்கும் புதிய உலக ஒழுங்கை ஏற்க முடியாமல் திணறுவதன் வெளிப்பாடே இன்றைய யுத்தத்தின் தோற்றுவாய்.

தனது சகபாடிகளான ஏனைய ஏகாதிபத்திய நாடுகளையும் தனக்குச் சேவகம் செய்யும் ஏவல் நாடுகளாக இயங்க வேண்டுமென்ற முனைப்பின் உந்துதலினால் தலைமைத் தாதாவாகக் களமாடும் ஐக்கிய அமெரிக்கா, ஈரானுடன் தொடுத்துள்ள யுத்தத்தில் பெற்று வரும் படிப்பினையானது ‘ஒடுக்கப்பட்ட தேசம்’ என்பது இனியும் நவகாலனித்துவப் பிடிமானத்துக்கு உரிய ஒன்றல்ல என்பதனை முரசறைவதாக உள்ளது.

இந்த நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா என்பவற்றில் பெற்றுவந்த வெற்றிகளின் தொடர்ச்சியாக அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் ஈரானிலும் வெற்றியை ஈட்டித் தந்தால் கூட, டொலரைத் தவிர்த்த புதிய நாணயப் பரிமாற்றம் உலகளவில் சாத்தியமற்றதாகியிராது; ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்ட அந்த வர்த்தக ஊடாட்டம் சிறு தள்ளாட்டங்களுடன் மேற்கொள்ளப்படுவதாக ஒரு சலனம் மட்டும் ஏற்பட்டிருக்கும்.

மாறாக, ஈரானின் விட்டுக்கொடுக்காத பதிலடியானது ஏனைய நாடுகளும் நவகாலனித்துவப் பிடிக்கு மரண அடி கொடுப்பதற்கான உத்வேகத்தை ஊட்டுவதற்கு வகை செய்ததாகியுள்ளது. மட்டுமன்றி, சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட இயலாதன என்பதோடு ஒவ்வொரு நாட்டினதும் இறைமை பேணப்பட வேண்டும் என்ற உண்மை வல்லரசுகளுக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆக, விடுதலைத் தேசிய உணர்வெழுச்சி நாடுகள் இடையே வீறுபெற்று எழுந்துவர இயலும் என்பதனால் தேசங்கள் இடையேயான சமத்துவ ஊடாட்டம் வலுப்பெறுவதற்கான வாய்ப்பே அதிகரிக்கும். இந்த யுத்தத்தில் பாரிய இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்தித்து வருவதனாலே வல்லரசு எனும் மேலாதிக்கப் பண்பை ஒரேடியாக ஐக்கிய அமெரிக்கா இழந்துவிடப் போவதில்லை. இதுவரை நிலைநாட்டி வந்த முதன்மை காணாமல் போனாலும் அது குறிப்பிட்ட காலம் வரை உலகின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு துருவமாக இருக்கும்; ஏகாதிபத்தியங்களாக இயங்கி வந்த ஏனைய நாடுகளும் அத்தகையவை. அவற்றுடனேயே அவற்றைவிடவும் வல்லமைபெற்றனவாக BRICS அமைப்புக்குரிய பிரேசில் போன்ற நாடுகள் பல்துருவ உலக ஒழுங்கை நிர்வகிப்பதான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுடன் தேசங்கள் ஒவ்வொன்றிலும் உழைக்கும் மக்களின் ஆட்சி அதிகாரம் சாத்தியப்படும் வேகத்தில் ஏகாதிபத்தியப் பிடிப்பு முற்றாகத் தகர்ந்து, நவகாலனித்துவ உறவு முறியடிக்கப்பட்டு தேசங்கள் அனைத்தும் முழுமைப்பட்ட சமத்துவ ஊடாட்டத்தைப் பெறுவது சாத்தியமாகும். பூரண முதலாளித்துவ விருத்தி பெற்று ஏகாதிபத்திய நாடுகளாக மாறியிருந்த வல்லரசுகளும் அதன் பின்னரே சோசலிச மார்க்கத்தை வரிக்க இயலும். முன்னதாக, நிலப்பிரபுத்துவ உச்சத்தில் இருந்த எமது நாடுகள் அடுத்த கட்டமான முதலாளித்துவம் நோக்கிச் சுயமாக வளர இயலாமல் இருந்ததைப் போன்றதுதான் இதுவும். எமக்கான சமூக மாற்றம் தடைப்பட்டிருந்தது மட்டுமல்ல, எமது நாடுகளின் சொந்த வரலாற்றைக் கூட ஐரோப்பிய முதலாளித்துவச் சிந்தனையாளர்களே தொல்பொருளாய்வுகள் வாயிலாக எடுத்துக் காட்ட வேண்டியதாக இருந்தது என்ற உண்மை அழுத்தி வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்!

விடுதலையைக் கண்டுணராத மேலாதிக்க நாட்டம்

ஆய்வறிஞர்களில் பலரும் தமக்கான தேடலூக்கம் உந்தித் தள்ளுவதன் காரணமாக முன்னர் கவனம் செலுத்தப்படாத வரலாற்றுத் தடயங்களை வெளிக்கொணர்பவர்களாக இருந்தனர். அவர்களது ஆய்வுகளுக்கும் அவற்றை அறிக்கைப்படுத்தி வெளிப்படுத்துவதற்கும் பின்புலமாக இருந்து நிதிப் பங்களிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் அத்தகைய ஆய்வு முடிவுகளைத் தமக்கு அமைவாகப் பயன்படுத்துவது குறித்த எச்சரிக்கை உணர்வு பெரும்பாலான ஆய்வறிஞர்களுக்கு இருப்பதில்லை.

ஆதிச்சநல்லூர் தொல்பொருளாய்வு முதல் சோழப் பேரரசின் பிரமாண்டமான பங்களிப்புகள் வரை ஐரோப்பியர்களால் கண்டறிந்து வெளிப்படுத்தப்பட்ட போது, அதே காலனியப் பங்களிப்புடன் கால்ட்வெல் பாதிரியாரது திராவிட மொழிக் குடும்பம் குறித்த ஆய்வின் தொடர் விவாதங்களும் இணைந்த நிலையில், ஆரிய–திராவிட மோதலுக்கான இனவாத அரசியலுக்குத் தூபம் போடும் வேலையைக் காலனித்துவம் தொடங்கி வைத்தது. அதனுடன் இணைந்த சாதிவாத அரசியலுக்குரிய பிராமண எதிர்ப்பும் தொடக்கம் பெற்றது.

இந்தியச் சுதந்திரப் போராட்ட அமைப்பான காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதில் காலனித்துவ ஊடுருவல் எந்த அளவுக்கு இடம்பெற்றிருந்ததோ, அதைக் காட்டிலும் அதிகமாகப் பிராமண மேலாதிக்கத்துக்கான அமைப்பாக அது செயற்படுவதற்குரிய அடித்தளமும் இடப்பட்டிருந்தது. சுதந்திரப் போராட்ட வீறு அதிதீவிர வீச்சுடன் எழுச்சி பெற்று முற்றுமுழுதான விடுதலையை எட்ட இடந்தராமல் நவகாலனித்துவப் பிடிக்குள் சுதந்திர இந்தியாவை இணைத்து வைத்ததில் காலனியம் இந்தியக் காங்கிரசை உருவாக்கியதன் பயன் அறுவடை செய்யப்பட்டிருந்தது. உலக மூலதன அபகரிப்பு அவ்வகையில் அமைந்தது என்றால், இந்தியச் சுரண்டலில் பிராமண–பனியா–உயர்சாதிகளின் பெருமுதலாளித்துவக் கும்பல் ஊதிப்பெருக்கும் வாய்ப்பை பிராமணத் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட காங்கிரசின் சுதந்திரம் உள்ளடக்கியிருந்தது.

மக்கள் விரோத சக்திகள் அவ்வாறு விடுதலை வேள்வியை அபகரித்தும் பாதிச் சுதந்திரத்துடன் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டினர் என்றால், பூரண விடுதலையை நாடிய சக்திகள் சரியான மார்க்கத்தில் மக்களுக்குத் தலைமையேற்று துரோகிகளிடமிருந்து சுதந்திரத்தைக் காப்பாற்றாமல் ஏன் கைவிட்டனர்? தீர்க்கமான ஒரு மார்க்கத்தைக் கண்டறியும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தெளிவற்ற சமூக நியதிகளை ஊதிப்பெருக்க வைத்துக் குழப்ப நிலைகளைக் காலனித்துவம் ஏற்படுத்திய காரணத்தால் விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமை மேலெழ இயலாமல் போனது. காலனித்துவ அரசு திட்டமிட்டு முன்னெடுத்த இந்து–முஸ்லிம் மோதல்களுக்கான களங்கள் காரணமாக இஸ்லாமியர்களிடம் கணிசமானோர் முஸ்லிம் லீக் எனும் தனிக்கட்சியை ஏற்படுத்தி, சுதந்திரத்துக்காக ஒன்றுபட்டுப் போராடிய இந்தியாவைப் பிளவுப்படுத்திப் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாக நேர்ந்தது. பாகிஸ்தான் கோரிக்கை உருவாக முன்னரே திராவிட நாடு தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் தனிவகை அமைப்பைக் கட்டியெழுப்பிய ஈ.வெ.ரா. பெரியார், அதனைப் பண்பாட்டு இயக்கமாக மட்டுமானதாக இயக்கினார்.

பிராமண ஆதிக்கத்துக்குள் தமிழ்நாடும் ஆட்படுகிறது எனச் சுதந்திர தினத்தைத் துக்க நாளாக பெரியார் அறிவித்த போது, அவரது பிரதான தளபதியாகச் செயற்பட்ட அண்ணாதுரை இந்திய சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டார். சுதந்திரத்தின் பின்னர் அண்ணாதுரை சமூக நீதி அரசியலை முன்னெடுத்தாரேயன்றி, சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாகச் சமூக நீதிக் கோரிக்கைகளை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

வட இந்தியாவில் தலித் அரசியலை அம்பேத்கர் முப்பதாம் ஆண்டுகளில் இருந்து முன்னெடுக்கத் தொடங்கி இருந்த போதிலும், திராவிடர் இயக்கம், முஸ்லிம் லீக் போன்றன இந்திய சுதந்திரப் போராட்ட அலைக்கு மாறுபட்ட எதிர் தேசிய அரசியல் வடிவமாகவே அதனைக் கையாண்டன.

ஒடுக்கப்பட்ட மக்கள் அம்பேத்கரைப் பாரிய அளவில் பின்பற்றி விடாமல் தடுக்கும் வகையில் ஹரிஜன் இயக்கத்தை முன்னெடுத்த காந்தியின் செயல்முறைகள், பிராமணத் தேசிய அமைப்பாக இருந்த இந்திய காங்கிரஸ் கட்சியின் வடிவத்தை தாராளவாத அரைப்பிராமணத் தேசியமாக மடைமாற்றியதன் வாயிலாகச் சுதந்திரப் போராட்டத்தில் தலித் மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வெகுஜன இயக்கமாக காங்கிரசைப் பரிணமிக்கச் செய்தன.

சென்ற நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் உயர் மத்தியதர வர்க்கப் பிரிவினரிடம் சுதந்திரத்துக்கான விழிப்புணர்வு தோற்றம் பெற்ற போது, இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரே சமூக சக்தியான பிராமணர்களே மூல விசையாக இருந்தனர். அதியுயர் சாதிய அதிகாரத்துக்கு உரியவர்கள் எனப்பட்ட சித்பவன் பிராமணரான திலகர் அதன் முதன்மைத் தலைவராக இருந்தார். இந்த முதல் தேசிய எழுச்சியை மக்கள் தளத்துக்குரியதாக வெகுஜனமயப்படுத்திய வ.உ. சிதம்பரனார் பிராமணரல்லாத வெள்ளாளர் என்பது கவனிப்புக்குரியது. 

முப்பதாம் ஆண்டுகளின் காந்தி அலை பேரெழுச்சியாக இருந்த போது அதன் அரசியல் முன்னெடுப்புகளில் வ.உ.சி. காங்கிரசை விட்டு விலகி இருந்தார். காந்தியின் தேசியத்துவத்தை விடவும் திலகரின் அரசியல் உணர்வு வீச்சானது என்ற கருத்தின் அடிப்படையிலானதே இந்த விலகல். பிராமண மேலாதிக்க நிலைப்பட்டவராகத் திலகரைக் கணிக்க மறுத்த வ.உ.சியின் பார்வையில், திலகரைவிடவும் பிராமணியத்துக்கு அதிகம் விட்டுக் கொடுப்பவராகக் காந்தியே இருந்தார். பிராமண வெறுப்பு வ.உ.சியிடம் இருந்ததில்லை; அதேவேளை சுதந்திரப் பேரெழுச்சியின் பலாபலனைப் பிராமண மேலாதிக்கம் கையகப்படுத்துவதையும் அவரால் ஏற்க இயலாமல் இருந்தது. பெரியாரின் திராவிட இயக்கத்தை ஆதரிக்கும் மனப்பாங்கு வ.உ.சியிடம் ஏற்பட்டிருந்தது. தீவிர அரசியல் செயற்பாடுகளில் இருந்து இறுதிக் காலத்தில் ஒதுங்கியிருந்த அதேவேளை தமிழிலக்கிய ஆர்வத்துடன் பழந்தமிழ்ப் பனுவல்களை மக்கள் மயப்படுத்த முனைந்தார். குறிப்பாக, பிராமணமயப்பட்ட பரிமேலழகர் உரையை மறுத்துத் திருக்குறளுக்காக வ.உ.சி. எழுதியுள்ள புதிய உரை தமிழறிஞர்களின் மதிப்பைப் பெறுவதாக அமைந்தது.

இவற்றுடன் சைவசித்தாந்தத்தின் மீது அவருக்கு ஏற்பட்டிருந்த அதீத ஈடுபாடு இங்கு எமக்கான மிகப் பிரதான அம்சம் ஆகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தீவிர அரசியல் கிளர்ச்சியாளராக வ.உ.சி. செயற்பட்ட போது அவரது மகத்தான தலைவரான திலகர் பகவத்கீதைக்கு விரிவான விளக்க உரை எழுதியிருந்தார். தோளோடு தோள் சேர்த்து இயங்கிய மகாகவி பாரதியும் கீதையைத் தமிழாக்கம் செய்ததுடன் விரிவான முன்னுரை வாயிலாகத் தனது ஆதரவை பகவத்கீதைக்கு வெளிப்படுத்தியிருந்தார்; சுதந்திரப் போராட்டக் கருத்தியலாக அத்வைதத்தை முன்வைப்பவராகவும் சுப்பிரமணிய பாரதி இருந்துள்ளார்.

இந்துக்கள் அனைவருக்குமான கருத்துரு, கருத்தியல் எனப்பட்ட அவ்விரு பனுவல்கள் சார்ந்த தத்துவத் தளங்களைக் கண்டுகொள்ளாமல் இயங்கி வந்தவரான ஒரு தீவிர செயற்பாட்டாளரான வ.உ.சி., தனது இறுதிக்காலத் தேடலுக்குரியதாகச் சைவ சித்தாந்தத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்? மிகத் தீவிரமாகப் பண்பாட்டுத் தேசிய எழுச்சி உணர்வைத் தொடக்கி வைத்த ஆறுமுக நாவலர் தனது இளமைத் துடிப்புமிக்க இயக்க வேகத்துக்குத் தேர்ந்தெடுத்த சைவசித்தாந்தம் இதனின்றும் வேறுபாடு எதனையாவது கொண்டுள்ளதா? தொடர்ந்து தேடுவோம்!



About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்