நாடு நலம் பெற நட்ட விதைகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

நாடு நலம் பெற நட்ட விதைகள்

August 1, 2025 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

ஐரோப்பாவில் தேசியவாதம்

ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டு தேசியவாதம் எழுச்சி பெற்ற காலம். பல்வேறு பேரரசுகளுக்குள் அடங்கிக் கிடந்த பல்லினச் சமூகங்கள் தனிநாடுகளாகப் பிரிந்து சென்றதன் விளைவே இன்று நாம் காணும் ஐரோப்பிய நாடுகள். இத்தேசியவாதப் போக்கு அண்மைக்காலம் வரை நீடித்தது.

ஐரோப்பாவில் எழுந்த தேசியவாத நிகழ்வுகளுள் இரண்டு முக்கியமானவை. இவை இத்தாலியையும் ஜெர்மனியையும் உருவாக்கிய இயக்கங்கள். பல சிறு அரசுகளாகப் பிரிந்து காணப்பட்ட இத்தாலியத் தீபகற்பத்தின் கூறுகள் 1861இல் இணைந்தபோது நவீன இத்தாலி தோன்றியது. இவ்வாறே, பல ஜெர்மன் மொழிபேசும் அரசுகள் ஒன்றுகூடியதன் விளைவாக 1871இல் நவீன ஜெர்மனி உருவாக்கப்பட்டது.

இந்த அரசுகளை உருவாக்கிய தேசியவாதங்கள் தம் தனியான மொழி, தனிப்பட்ட வரலாறு, தனித்துவமான பண்பாடு ஆகியவற்றைத் தளமாக வைத்துத் தமக்கான தனி அடையாளத்தை வலியுறுத்திய இயக்கங்கள்.

இந்த ஐரோப்பிய இயக்கங்களின் வெற்றி ஆங்கிலக்கல்வி கற்ற வகுப்பினர் மத்தியில் இந்தியா, இலங்கை போன்ற தென் ஆசிய நாடுகளிலும் தேசிய உணர்வுகளை ஊக்குவித்துப் பல்வகைப்பட்ட இயக்கங்கள் எழுவதற்கு வழிவகுத்தது. இப்பின்புலத்திலே தான் 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) தொடக்கப்பட்டது.

இலங்கையில் தேசியவாதம்

முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் (1918 – 1939) தேசியவாதச் சக்திகள் இலங்கையில் பல வடிவங்களில் வெளிப்படத் தொடங்கின. கீழைத்தேசவியல் அறிஞர்கள் கண்டறிந்தவையும் எழுதியவையும், ஐரோப்பாவில் நடைபெற்ற தேசியவாத இயக்கங்கள் பற்றிய தகவல்களும் ஆங்கிலக் கல்விகற்ற இலங்கையர்க்குத் தங்கள் பண்பாட்டு முதுசொம் (Cultural Heritage) பற்றிய விழிப்புணர்வை ஊட்டி, தேசியவாத எண்ணக்கருக்களை எழுப்பின. பலவித தேசியவாத விதைகள் விதைக்கப்பட்டன.

சிங்கள – பௌத்தம்

காலத்தால் முற்பட்டதும் வளம்நிறைந்த மண்ணில் விதைக்கப்பட்டதும் சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் விதையாகும். ஐரோப்பிய அறிஞர்கள் எழுதிய நூல்களை அநகாரிக தர்மபால படித்து, History of an Ancient Civilization என்ற தலைப்பில் இலங்கையின் கடந்த காலத்தைப் பற்றிய ஒரு நூலை 1902இல் வெளியிட்டார். அவர் படித்த நூல்களுள் Sir. Emerson Tennent எழுதிய நூல் அவரைப் பெரிதும் கவர்ந்தது என்று சொல்லலாம். Tennent இலங்கையின் காலனிச் செயலாளராக 1845இல் இருந்து சில ஆண்டுகள் கடமையாற்றியவர். அவர் Ceylon என்ற இலங்கை பற்றிய பெரிய நூல் ஒன்றை 1859இல் எழுதியிருந்தார். இதில் இவர் இலங்கையின் சிறப்புகளை எடுத்துக் கூறியதுடன், மஹாவங்ஸ நூல், அநுராதபுரத்தின் பழைய பௌத்த தாதுகர்ப்பங்கள் ஆகியவற்றையும் மதிப்புக் கொடுத்து வர்ணித்துள்ளார்.

அநகாரிக தர்மபால தன் நூலில் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. “Read the History of Ceylon by Sir. Emerson Tennent” என்று அவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். கீழைத்தேசவியல் அறிஞர்கள் எழுதிய நூல்கள் எந்தளவுக்குப் பௌத்தர்களுடைய விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்கும் அவர்கள் தன்னம்பிக்கையைப் பெருக்குவதற்கும் வழிவகுத்தன என்பதை இதில் இருந்து கண்டுகொள்ளலாம்.

Tennent மட்டுமல்ல, பிற ஐரோப்பியரும் 19ஆம் நூற்றாண்டில் இலங்கையின் வரலாற்றை எழுதும்போது தொல்காலத்தில் இலங்கையில் நாகரிகம் சிறப்புற்று இருந்தது என்றும் பின்னர் அது சிதைவுற்றது என்றும் காட்டியமை தர்மபால போன்றோரைப் பெரிதும் கவர்ந்து, தேசிய உணர்வைத் தூண்டியது. தொல்காலத்தில் ஐரோப்பாவில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகள் எவ்வாறு ஐரோப்பியரைப் பெருமை அடைய வைத்தனவோ, அவ்வாறே சிங்கள மக்கள் வரலாற்றிலும் அவற்றை ஒத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதைத் தர்மபால எடுத்துக்கூறினார். இதன் மூலம், ஒருபுறம் “நாம் உங்களுக்குக் குறைந்தவர் அல்லர்” என மேலைத்தேசத்தவர்க்கு அறிவித்தார்; மறுபுறம் சிங்கள மக்களுக்கு “நீங்கள் ஐரோப்பியர் வரலாற்றுக்குச் சமானமான பெருமைதரும் வரலாற்றை உடையவர்கள்” என்ற உறுதிமொழியை வழங்கினார். 

ஆரிய – சிங்களர்

வலிமையிழந்து, ஐரோப்பியரால் அடிமைப்படுத்தப்பட்ட சிங்கள சமூகத்துக்கு ஒரு பெருமைமிக்க வரலாறு இருந்தது என்பதைக்காட்டி, இச்சமூகத்தைத் தட்டி எழுப்புவதே தர்மபால கொண்டிருந்த நோக்கம். இவை தான் அவர் வார்த்தைகள்: “There exists no race on this earth today that has a more glorious triumphant record of victory than the Sinhalese…The sons of Aryan ancestors…”.

மேலும் ஒரு வகையில் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிஞர் எழுதியவை தர்மபாலவின் நோக்கத்தை நிறைவேற்ற உதவின. இது என்னவெனில், சிங்கள மக்கள் தம்மை ஆரியர் என அடையாளம் காண வைக்கும் நோக்கம். அவ்வாறு அடையாளம் காணும்போது, ஒருபுறம் சிங்கள மக்கள் தம்மை ஐரோப்பியருக்குச் சமானமானவர்களாகக் கருதிப் பெருமையும் தன்னம்பிக்கையும் பெற முடிகின்றது; மறுபுறம், தமக்கு இலங்கையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டு தாம் இலங்கையில் வாழும் பிறரில் இருந்து வேறானவர்கள் என்பதையும் மேலானவர்கள் என்பதையும் வற்புறுத்திப் பெருமை கொள்ள உதவுகின்றது. 

இதனை விளங்கிக்கொள்ள 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மொழியியலாளர் செய்த பங்களிப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் இந்திய மொழிகளை ஆய்வுசெய்து வெளியிட்ட கருத்துகள் ஆரியர், திராவிடர் என்ற இரு ‘கற்பனைச் சமூகங்களை’ (Imagined Communities) உருவாக்க உதவின.

William Jones முன்வைத்த மொழிக் கோட்பாடாகிய இந்து – ஐரோப்பிய மொழிக்குடும்பம் பற்றிய கோட்பாட்டை அவருக்குப் பின் பல ஐரோப்பிய மொழியியலாளர் மேலும் முன்னெடுத்துச் சென்றனர். இவர்களுள் இருவர் முக்கியமானவர்கள். இருவரும் ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்கள். ஒருவர் ஜெர்மன் அறிஞராகிய மக்ஸ்முய்ல்லர் (Friedrich Max Müller), மற்றவர் பிரித்தானியராகிய மோனியர் – வில்லியம்ஸ் (Monier Monier-Williams).

ஐரோப்பாவிலும் தென் ஆசியாவிலும் ஈரானிலும் பேசப்படும் இந்து – ஐரோப்பிய மொழிகளுக்கு மூலமொழியாக ஒரு மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும் அம்மொழியைப் பேசிய மக்கள் சமூகம் ஆரியர் என்றும் ஒரு கோட்பாடு 19ஆம் நூற்றாண்டில் முன்வைக்கப்பட்டது. இக்கோட்பாடு அறிஞர் இடையே பரவுவதற்கு மக்ஸ்முய்ல்லரும் மோனியர் – வில்லியம்ஸும் பெருமளவுக்கு உதவினர். 

ஆரியர் பற்றிய இக்கோட்பாட்டில் மொழியும் இனமும் சமன்படுத்தப்படுவதைக் காணலாம். அதாவது, ஒரு மொழியைப் பேசுவோர் அனைவரும் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சமன்பாடு. அது மட்டுமன்றி, அம்மொழியின் வழிவந்த மொழிகளை (அதாவது, அம்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை) தற்காலத்தில் பேசுவோரும் அதே இனத்தைச் சேர்ந்தோர் என்ற கருத்து இதில் அடங்கியது. இதன்படி, இந்து – ஐரோப்பிய மொழிகளின் மூலமொழியைப் பேசியோர் ஆரியர் ஆகையால் இன்று இந்து – ஐரோப்பிய மொழிகளைப் பேசுவோரும் ஆரியர் என்று கூறிக்கொள்ள இடமளிக்கப்பட்டது.

இந்த வாதத்தின் அடிப்படையில், ஜெர்மன் மொழி பேசுவோர் ஆரியர் என்ற கருத்து எழுந்தது. அதேபோல, சிங்கள மொழி (இது ஓர் இந்து – ஐரோப்பிய மொழி) பேசுவோரும் ஆரியர் என்ற கருத்து எழுச்சிபெற்றது. ஆனால், இத்தகைய சமத்துவத்தை ஏற்காத ஐரோப்பியர் மேலும் சில பண்புகளை ஆரியருக்குக் கொடுத்தனர். ஆரியர் என்போர் நல்ல உடலமைப்பு (Physique), வெண்ணிறத் தோல், நீலக் கண்கள், பொன்னிற முடி (தலைமயிர்/ Blond hair), நல்ல உயரம் (Tall), மேலான வலிமை (Superior Strength) ஆகிய பண்புகளைக் கொண்டிருந்தனர் என்றும் அவர்களுடைய வழித்தோன்றல்களாய்த் தூய்மையான ஆரியராகக் கருதப்படக்கூடியவர்கள் வட ஐரோப்பாவில் வாழும் ஜெர்மானிய/ நோர்திக்கு (Germani / Nordic Race) மக்கள் எனவும் ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆரிய இனம் பிற இனங்களை விட மேலானது (Superior) என்ற கருத்தும் இதனுடன் இணைக்கப்பட்டது.

ஆரியர் பற்றிய இக்கோட்பாடு அரசியல் துறையில் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒருபுறம், ஜெர்மனியில் ஹிட்லருடைய நாற்சிவாதத்தின் இனமேன்மைக் கோட்பாட்டை (Racial Superiority) வலுப்படுத்த உதவியது. இன்னொரு புறம், இலங்கையில் சிங்கள மக்கள் ஆரிய இனத்தவர் என்று கோரச் சிங்களத் தலைவர்களுக்குப் பயன்பட்டது. பின்னர், சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் கூறுகளுள் ஒன்றாகவும் இது மாறியது.

ஆரிய – சிங்கள அடையாளம் உருவாகிய வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு பெறுபவர் அநகாரிக தர்மபால (අනගාරික ධර්මපාල 1864 – 1933) ஆவார். இலங்கையின் நவீன வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் இவர் பலராலும் பலவிதமாக விளங்கப்பட்ட ஒரு சிக்கலான ஆளுமையை (Complex Personality) உடையவர் எனலாம். இதனால் இவரைப் பற்றிச் சிறிது விரிவாக அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.

தர்மபால

யார் இந்த தர்மபால? இப்பெயர் அவருக்குப் பெற்றோர் கொடுத்த பெயரல்ல. பிறந்தபோது கொடுக்கப்பட்ட பெயர் டொன் டேவிட் (Don David); குடும்பப் பெயர் ஹேவாவிதாரண. தகப்பன் டொன் கரோலிஸ் ஹேவாவிதாரண. பிரித்தானியர் ஆட்சியில் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டபோது மரத்தளபாடங்களையும் பிற மரப்பொருட்களையும் செய்யும் தொழிலில் ஈடுபட்டுக் குடும்பம் செல்வத்தைப் பெற்றது. டேவிட் சில மிஷனரிப் பாடசாலைகளிலும், ரோயல் கல்லூரியிலும் கல்விகற்றுச் சிறிது காலம் அரசாங்க சேவையில் பணியாற்றியபின் தன் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்.

இத்திருப்பத்துக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் அமெரிக்காவில் இருந்து வந்த பிரபல பிரம்மஞானி/ இறையியல் அறிஞர் (Theosophist) ஆகிய Henry Olcott ஆவார். இந்த அமெரிக்கர் 1880இல் இலங்கைக்கு வந்து, பௌத்த மதத்தைத் தழுவி, பௌத்த கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்து, பௌத்த மத எழுச்சிக்கு உதவினார். இவருடன் இணைந்து செயலாற்றிய டேவிட் ஹேவாவிதாரண பௌத்தமதச் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்து, தன் பெயரை அநகாரிக தர்மபால என மாற்றிக்கொண்டார். ‘அநகாரிக’ என்றால் ‘வீடற்றவர்’ என்று பொருள்படும்; ‘தர்மபால’ என்றால் பௌத்த தர்மத்தின் காவலர் என்று பொருள்படும்.

தர்மபால 1880இல் இருந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பௌத்த துறவிபோல இல்லற வாழ்க்கையைவிட்டு முழுமையாகப் பௌத்தத்தின் எழுச்சிக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதன்விளைவாக இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு முக்கியமான பங்கைப் பெற்றுள்ளார். இவருடைய செயல்களைப் பற்றிப் பலர் எழுதியிருக்கிறார்கள். பல அறிஞர்கள் இவற்றை ஆழமாக ஆய்வுசெய்து நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்கள். 

இவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஓர் எல்லையில் இனவாதி (Racialist) எனத் தொடங்கி, மறுமலர்ச்சியாளர் (Revivalist), சீர்திருத்தவாதி (Reformer), தேசபக்தர் (Patriot), தேசியவாதி (Nationalist), புரட்டஸ்தாந்தப் பௌத்தத்தை (Protestant Buddhism)  தொடக்கிவைத்தவர், பௌத்த நவீனத்துவத்தைத் தொடக்கிவைத்தவர் (Founder of Buddhist Modernism) என்ற பலவித தோற்றங்களைக் கொடுப்பதையும், மற்ற எல்லையில் அனைத்துலகவாதி (Universalist) என்று அழைப்பதையும் காணலாம். சிலர் இவரை ‘உள்நாட்டில் ஒரு தேசியவாதி, வெளிநாட்டில் ஓர் அனைத்துலகவாதி’ என்றும் மதிப்பிட்டுள்ளனர் (Nationalist at Home, Universalist Abroad).

இந்த மதிப்பீடுகளை ஆய்வு செய்வதோ தர்மபாலவின் ஆளுமையை மதிப்பிடுவதோ என்னுடைய நோக்கம் ஆகாது. இருபதாம் நூற்றாண்டு உதயமாகியபோது எழுச்சிபெறத் தொடங்கிய சிங்கள – பௌத்த தேசியவாதத்துக்கு அடித்தளம் அமைத்துப் பெரும் பங்களிப்புச் செய்தவர் அநகாரிக தர்மபால என்பது என்னுடைய கருத்து. இத்தேசியவாதம் நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றின் போக்கினைப் பெருமளவுக்கு நிர்ணயித்தது. ஆகவே இது யாழ்ப்பாணத்து அரசியலிலும் தாக்கத்தை உண்டுபண்ணியது. இக்காரணத்துக்காக, இதனைச் சிறிது விரிவாக அறிந்துகொள்வது அவசியம்.

பௌத்தத்தை ஆதரித்து வளர்க்க வேண்டும் என்றும் கிறிஸ்தவ மிஷனரிமாருடைய செயற்பாடுகளால் பௌத்தப் பண்பாடு அழிவதை நிறுத்தவேண்டும் என்றும் விரும்பிச் செயற்பட்ட ஒரு குடும்பத்தில் தர்மபால வளர்ந்தார். செல்வாக்குப் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவராகையால் அவர் ஆங்கிலக் கல்வியைப் பெறவேண்டும் என விரும்பிய பெற்றோர் அவரைக் கிறிஸ்தவப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

இவர் 1880களில் ஓர் இளம் பௌத்த செயற்பாட்டாளராக (Activist) வாழ்க்கையைத் தொடங்கியபோது பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுடையவராகவும் கிறிஸ்தவ மிஷனரிமாருடைய செயற்பாடுகளை வெறுத்தவராகவும் இருந்தார். பௌத்தம் தன் சிறப்பு நிலையை இழந்துவிட்டது எனவும், பௌத்தர்கள் கிறிஸ்தவ மிஷனரிமாருடைய செயற்பாடுகளின் விளைவாகத் தாழ்ந்த நிலையை அடைந்துவிட்டனர் என்றும், அந்நியர்கள் பௌத்தர்களைச் சுரண்டிச் செல்வம் பெறுகிறார்கள் எனவும் அவர் கவலையுற்றார்.

இந்த நிலைக்கு மாறாக, ஆங்கிலேயர் ஆட்சியும் கிறிஸ்தவ மிஷனரி ஆதிக்கமும் வருமுன், சிங்கள மக்கள் செல்வம் மிகுந்த ஒரு சமூகமாக வாழ்ந்தனர் என்றும், பௌத்தம் அரச மதமாக விளங்கியது என்றும் மன்னர்கள் அறநெறி தவறாது நல்லாட்சி நடத்தினர் என்றும் தர்மபால நம்பினார். அவர் நடத்திய இயக்கத்தின் குறிக்கோள் நாட்டை மீண்டும் அந்த அறநெறி நிலைக்கு எடுத்துச் செல்வதே (Return to Righteousness).

இருபதாம் நூற்றாண்டில் எழும் சிங்கள – பௌத்த தேசியவாதத்துக்கு தர்மபால அடித்தளம் அமைத்தார். இதனை இவ்விடத்தில் விரிவாக எடுத்து விளக்கவேண்டிய அவசியம் இல்லை. எனினும், பௌத்தத்தை உயர்நிலைக்குக் கொண்டுவருவதற்கு அவர் எடுத்த சில முயற்சிகளும் அவருடைய சித்தாந்தத்தில் (Ideology) முக்கிய கூறுகளாக இருப்பவை சிலவும் கவனிக்கத்தக்கவை.

ஐரோப்பிய ஏகாதிபத்திய காலத்தில் கிறிஸ்தவ மதம் பரவியபோது அதை எதிர்த்து இயக்கம் நடத்திய பிற சமயத் தலைவர்கள் கிறிஸ்தவ மிஷனரிமார் கையாண்ட முறைகளையும் யுக்திகளையும் பயன்படுத்தித் தங்கள் மதங்களை நவீனமயப்படுத்தினர். தர்மபால தனது இயக்கத்தை அவ்வாறு நவீனமயப்படுத்தியது மட்டுமன்றி, பௌத்தர் சமூகம் பாரம்பரிய பண்பாட்டைப் பேணுவதுடன் நவீன தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து ஜப்பான் போன்று முன்னேறிய சமூகமாக மாறவேண்டும் எனவும் விழைந்தார்.

ஐரோப்பியர் அறிமுகப்படுத்திய நவீன கருவிகளுள் மிக முக்கியமானது அச்சு யந்திரம் எனலாம். காலனித்துவத்தால் கட்டுப்பட்டிருந்த சமூகங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு மிகவும் பயன்பட்ட கருவி இது. தர்மபால இதனை நன்கு பயன்படுத்தினார். பௌத்த நூல்களையும் பரப்புரைத் துண்டுகளையும் அச்சிட்டுப் பொதுமக்களிடையே விநியோகித்தார். தனது புதிய பௌத்த சித்தாந்தத்தை இலகுவில் பரப்புவதற்காக ‘ஸிங்ஹள பௌத்தயா’ (සිංහල බෞද්ධයා) என்ற ஒரு செய்தித்தாளை 1906இல் தர்மபால வெளியிடத் தொடங்கினார்.

பொதுமக்களிடையே பௌத்தமதப் பரப்புரைக்கு அவர் பயன்படுத்திய நவீன கருவிகளுள் குறிப்பிடத்தக்கது ‘கிராமபோன்’ (Gramophone) ஆகும். அவர் கொழும்பில் இருந்த நாட்களில் இராப்பொழுதில் நாட்டுப்புற ஊர்களுக்குச் சென்று இரவிரவாகத் தன் இயக்கத்தை நடத்துவார். இந்த நிகழ்ச்சிகள் பற்றிய செய்தியறிக்கைகளின்படி, தர்மபால மாலைப்பொழுதில் இரட்டைமாட்டு வண்டி ஒன்றில் ஒரு ‘கிராமபோன்’, மந்திர விளக்கு (Magic Lantern), பௌத்தமதப் பரப்புரைத் துண்டுகள் (Religious Tracts) ஆகியவற்றை ஏற்றி ஊர் ஒன்றுக்குச் செல்வார். அங்கு தன் பௌத்த நிகழ்ச்சி பற்றி அறிவிப்புக் கொடுத்துவிட்டு, ஊர் விகாரையில் நிகழ்ச்சியை ஒன்பது மணியளவில் தொடங்குவார். பௌத்த போதனைக்குப் பின் மந்திர விளக்கு மூலமாகப் பௌத்தத்தலங்களின் (மஹாபோதி, சாஞ்சி, அநுராதபுரம் ஆகியவை) படங்கள் காட்டப்படும் (கிராமபோன் பௌத்த பாடல்களைக் கேட்டு மகிழப் பயன்படுத்தப்பட்டது என நினைக்கிறேன்). நள்ளிரவு வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். ஒரு மணி அளவில் தர்மபால மாட்டுவண்டியில் ஏறிப் படுத்து உறங்குவார்.

இத்தகைய நிகழ்ச்சிகள் இரவுக்கு இரவு பல்வேறு ஊர்களில் நாட்டுப்புற வேளாண்மக்களை (Peasantry) இலக்காக வைத்து நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. பெண்கள், பிள்ளைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தர்மபால வழங்கிய மதபோதனைகளைக் கேட்கச் சென்றனர் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்குமுன் ஊர் விகாரைகள் இப்படியான மதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறமுடியாது. பொதுமக்களை முற்றிலும் புதிய வகையில் தர்மபால பௌத்தமத எழுச்சியில் பங்குபற்ற வைத்தார். பௌத்த சமூகத்தின் அடித்தளத்தில் எவ்வாறு இவர் ஒரு புதிய உணர்ச்சியை எழுப்பி ஓர் ஒற்றுமையை உருவாக்கினார் என்பதை இங்கு காணலாம்.

தர்மபால மதத்துடன் மட்டும் நிற்கவில்லை. அவருடைய சித்தாந்தத்தில் மதமும் இனமும் ஒன்றிணைக்கப்பட்டன (Linkage of Race and Religion). அத்துடன் சிங்கள இனமும் ஆரிய இனமும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக இலங்கைப் பௌத்தர்கள் ‘ஆரிய – சிங்கள பௌத்தர்’ என்ற பெயரைப் பெற்றனர். இது ஒரு புதிய பரிமாணம்.

பௌத்ததையும் நாட்டையும் ஒருங்கிணைக்கும் கோட்பாடு (Concept of Lanka as Dhammadipa) மிக நீண்டகாலமாக இருந்துவந்துள்ளது. பின்னர், ஆட்சியாளரையும் பௌத்தத்தையும் இணைக்கும் கோட்பாடு இதனுடன் சேர்க்கப்பட்டது. இதன் அடிப்படையிலேதான் 12ஆம் நூற்றாண்டில் பொலன்னறுவையில் இருந்து ஆண்ட நிஸ்ஸங்க மல்ல மன்னன் பௌத்தர் அல்லாத சோழர், பாண்டியர் போன்றோரை ஆட்சிபுரிய அனுமதிக்கக்கூடாது எனப் பிரகடனம் செய்திருந்தான். ஆனால் இனத்தையும் பௌத்தத்ததையும் இணைக்கும் கோட்பாடு புதியது.

சிங்கள – பௌத்த தேசியவாத விதையை 20ஆம் நூற்றாண்டு உதயமாகியபோது அநகாரிக தர்மபால அயராது உழைத்துச் செழிப்பான மண்ணில் விதைப்பதில் வெற்றிகண்டார்.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்