மலையக வீதிப்பாடல் இலக்கியத்திற்கு நாவலப்பிட்டி மண்ணிலிருந்து பல ஆளுமைகள் வலிமை சேர்த்துள்ளனர். அவர்களில் எஸ்.எம். ராஜப்பாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். எஸ்.எம்.ஆர். எனவும் அறியப்பட்ட அவர், நாடகத் துறையில் ஆழ்ந்த ஆர்வத்துடன் செயற்பட்ட ஆளுமையாவார். அக்கால நாடகங்களில் ‘ராஜாபாட்’ என்ற பாத்திரம் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தது. இவர் அந்தப் பாத்திரத்தின் பெயரையே அடைமொழியாகக் கொண்டு அழைக்கப்பட்ட நாடகத்துறைச் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையகக் கலையுலகம் அவரை ‘ராஜாபாட் ராஜப்பா’ என்று அன்புடன் அழைத்து வந்துள்ளது.
“நாட்டுப்புறப் பாடகனாகத் தோட்டங்களில் பாடிவந்த ராஜப்பா, ஏனைய பாடகர்களைப் போலல்லாது, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கப் போட்டியால் ஏற்பட்ட படுகொலைகளைப் பற்றி பாடியவராவார். ‘கட்சிப் போராட்டக் குரல்’ எனும் தலைப்பில் இரண்டு பாடல் நூல்களை ராஜப்பா ஐம்பதுகளில் வெளியிட்டுள்ளார். கட்சி மோதல்களினால் கொலையுண்ட தொழிலாளர்களை நினைவுகூர்ந்து பாடுவதன் மூலம், கட்சிச் சண்டைகளைத் தவிர்க்கும்படி அவர் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வந்தார்.” என்ற பெ. முத்துலிங்கத்தின் அடையாளப்படுத்தல் அவதானத்திற்குரியதாகும்.
ஐம்பதுகள் தொடங்கி தொண்ணூறுகள் வரையில் ராஜப்பாவின் கலை–எழுத்துலக வளர்ச்சி நிலைபெற்றிருக்கிறது. ‘கட்சிப் போராட்டக் குரல் – பாகம் 01’, 02’, ‘பிச்சைக்காரனை எதிர்த்த லட்சப் பிரபு’, ‘கழுகுமலைப் பத்தும் கும்பிடு பத்தும்’, ‘மாரியம்மன் உற்பத்தி’ ஆகிய சிற்றிலக்கியங்களை அவர் தந்துள்ளதாகத் தரவுகள் கிடைக்கின்றன. அவற்றுள் ‘கழுகுமலைப் பத்தும் கும்பிடு பத்தும்’, ‘மாரியம்மன் உற்பத்தி’ ஆகிய நூல்கள் இவரால் தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்புகளில், மூலப்பாடல்களில் சில மாற்றங்களும் தழுவல்களும் இடம்பெற்றுள்ளன; மேலும், அவருடைய சொந்த வரிகளும் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. பாடல் இயற்றுவதில் மட்டுமல்ல, பதிப்பாளர், தொகுப்பாளர், செம்மைப்படுத்துபவர் என்ற நிலைகளிலும் அன்னாரின் பங்களிப்பை அவதானிக்க முடிகிறது. இப்பதிப்பு முயற்சிகள் வாசகர்களிடையே ஆன்மீகத் தெளிவை எழுப்பும் எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றன. மூலத் தொகுப்புகளில் இருந்து பாடல்களைச் சேகரித்து, முக்கியமான பாடல்களை தாமே இயற்றிய பாடல்களுடன் இணைத்து புதிய தொகுப்புகளாக்கியுள்ள போக்கு குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தொகுப்பு முயற்சிகளை எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளையின் பணியிலும் அவதானிக்கலாம்.
இவரது சிற்றிலக்கிய, பதிப்பு, தொகுப்பு முயற்சிகளில் வெளிவந்த நூல்களில், “இப்புத்தகம் திரு. எஸ்.எம். ராஜப்பா இடத்திலிருந்து பெற்றேன் என்ற கையொப்பத் துண்டு இல்லாமல், களவாடியோ அல்லது கள்ளத்தனமாகவோ எவரிடமிருந்து வாங்கி விற்பனை செய்பவர் மீதும் வழக்குத் தொடரப்படும். கவனம்: இங்ஙனம் — திரு. எஸ்.எம். ராஜப்பா” எனும் எச்சரிக்கை மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், ‘விளம்பரம்’ என்ற முன்னுரையில் ராஜப்பாவின் கருத்துநிலை பின்வருமாறு வெளிப்படுகிறது: “பாட்டைத் திருடி பலவாறு உரை கூறி பகட்டும் பாதகத் துரோகிகட்கு சிறிய சாட்டை — கவனிக்கவும். பாடல்களைக் களவாடாதீர்கள்; பாவியென்ற பெயர் எடாதீர்கள். பார்வையில் சிறிது, பலத்தில் பெரிது எது என்பதை பார்த்துணர்ந்து செய்வீர்கள் எனக் கருதுகிறேன். இங்ஙனம் — எஸ்.எம். ராஜப்பா.” இந்நிலையில், மக்கள் கூடும் இடங்களில் இப்பாடல்களைப் பாடி, இத்தொகுப்புகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற அவரது முயற்சியும் அவதானத்திற்குரியது. அதுபோல, மலையக வீதிப்பாடலாசிரியர்கள் பொதுவாக தாங்கள் இயற்றிய பாடல்களுக்கு உரிமை கோரும் வாசகங்களுடன் தொகுப்புகளை வெளியிட்டுள்ள போக்கும் கவனத்திற்குரியது.
ராஜப்பாவின் ஆன்மிக ஈடுபாடும் சமூக உந்துதலும் கலந்த உணர்வுகள், அவரது பாடல் இயற்றும் முயற்சிகளை ஆராயும்போது தெளிவாகப் புலப்படுகின்றன. இவரது செயற்பாட்டு முயற்சிகள் நாவலப்பிட்டி, மட்டக்களப்பு, ரோசல்லை ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ளன என்பதும் தெரிய வருகிறது. 1950 இல் அவர் ‘கட்சிப் போராட்டக் குரல்’ இரண்டாம் பாகம் நூலை இயற்றி வெளியிட்டுள்ளார். இந்நூல் ரோசல்லையில் இருந்து வெளியிடப்பட்டதோடு, அங்கிருந்தே விநியோகமும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நூலில், இத்தொகுப்பை ஜவுளிக் கடையில் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் சிறப்பாகப் பார்க்கத்தக்கது. அந்த வாசகத்திலிருந்து, அன்னார் ஒரு வர்த்தகராகவும் செயற்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளிப்படுகிறது. ஜவுளி வர்த்தகத்தில் இவருடன் ஜி.எல்.எம். நாணயக்கார என்ற பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த நண்பரும் இணைந்து இருக்கலாம் என ஊகிக்கத் தோன்றுகிறது. மேலும், முப்பது சதத்துக்கு விற்பனை செய்யப்பட்ட இந்நூல் 1950.06.19 அன்று வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நூல் இரண்டாம் பாகமாக வெளியிடப்பட்டிருப்பது, இதற்கு முந்தைய காலத்திலேயே அவரது பாடல் இயற்றும் முயற்சிகள் தொடங்கியிருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. சிவன், அம்மன், முருகன் மீதான பக்தியுணர்வு ராஜப்பாவில் ஆழமாகப் பதிந்திருந்தது என்பது தெளிவாகிறது. “உ சிவமயம்”, “ஓம் சக்தி துணை”, “ஸ்ரீ முருகா துணை” போன்ற வாசகங்கள் இந்நூலின் முகப்பில் இடம்பெற்றுள்ளமை அதற்குச் சான்றாகும்.
மலையகம் பல போராட்டங்களை எதிர்கொண்டுள்ளது. உரிமைப் போராட்டங்களில் பல தியாகிகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. “தொழிற்சங்கம் 1939 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தாக்கம் பெருந்தோட்டத் தொழிற்துறை தொழிலாளர்களையும் ஈர்த்தது. தொழிற்சங்கத்தைத் தொழிலாளர்கள் ஸ்தாபிக்கவும், உழைப்புக்கேற்ற ஊதியம், மனித உரிமைகள், அடக்குமுறைக்கெதிரான சிந்தனைகள் ஆகியவை போராட்டங்களாக வெடித்தன” என்ற மாத்தளை ரோகிணி எனும் டி. அய்யாத்துரையின் கூற்று கவனத்திற்குரியதாகும். 1925 சட்டசபைத் தேர்தலில் கோ. நடேசய்யர் தெரிவாகியுள்ளார். அவர் கொழும்பு வாழ் இந்திய வர்த்தகர்கள் சார்பில் தெரிவுசெய்யப்பட்டிருந்த போதிலும், மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான கரிசனையுடனேயே தனது குரலை உயர்த்தியுள்ளார். அதற்கு முன்பாகவே, 1908 ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலிமைபெற்றது. தோட்டத் துரைமார்களின் கடுமையான எதிர்ப்பு சம்பள உயர்வை மிகவும் சவாலானதாக மாற்றியது. இந்நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் உரிமை மறுப்பு தொடர்பில் சேர்.பொன். இராமநாதனின் முன்னெடுப்புகளும் தாக்கம் செலுத்தின. 1919 இல் அமைக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராகச் செயற்பட்ட சேர்.பொன். இராமநாதனின் பங்களிப்புகளைப் பற்றி இரா. சடகோபன் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கோ. நடேசய்யர், ஐ.எக்ஸ். பெரேரா ஆகியோரின் இடைவிடாத முயற்சிகளின் பயனாக பிரித்தானிய அரசு தொழிற்சட்டத் திருத்தங்களை சட்டசபையில் நிறைவேற்றியது. அந்தத் திருத்தச்சட்டம் தொழிலாளர்களுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மலையகத்தின் தொழில் உரிமைப் போராட்ட வரலாற்றில், 1940ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஹேவாஎட்ட பகுதியில் நடைபெற்ற போராட்டம் குறிப்பிடத்தகுந்ததாகும். இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் எழுந்த முதலாவது தீவிர களப்போராட்டமாகவும் இது நினைவுகூரப்படுகிறது. பதினாறு சதம் சம்பள உயர்வு உட்பட ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பதின்மூன்று நாட்கள் தொடரப்பட்ட வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிறைவுக்கு வந்தது. இந்நிலையில், நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் தோட்டத்திற்குள் நுழைந்த பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முல்லோயா கோவிந்தனின் தியாகம், தோட்டத் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றில் அழியாத தடத்தைப் பதித்தது. 1939க்குப் பின்னர் பெரும்பான்மையினத் தலைவர்களின் துவேஷ மனப்பான்மை மேலும் வலுவடைந்தது. அதன் விளைவாக, இந்தியத் தொழிலாளர்கள் துறைமுகம், புகையிரதம் மற்றும் அரசாங்கத் துறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். “இலங்கைத் தொழிலாளர்கள் மாத்திரம் நியமிக்கப்பட வேண்டும்” என்ற கோசம் வலிமைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்தியர்கள் அரசாங்கக் காணிகளில் குடியேறுவதையும் விவசாயம் செய்வதையும் தடைசெய்யும் சட்டம் 1942 இல் கொண்டுவரப்பட்டது. இந்திய வம்சாவளியினரின் காணிகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் இதே ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டன. முதற்கட்டமாக நுவரெலியா, கந்தப்பளை பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளியினரை வெளியேற்றி, அந்த நிலங்களில் உள்ளூர் பெரும்பான்மையினரைக் குடியமர்த்தினர்.
1946 ஆம் ஆண்டில், கிராம விரிவாக்கத் திட்டத்தின் கீழ் பெருந்தோட்டக் காணிகளைச் சுவீகரித்து பெரும்பான்மையினக் கிராம மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் தொடங்கப்பட்டன. எட்டியாந்தோட்டை வெற்றிலையூர் உருளவள்ளித் தோட்டத்தில் இந்தத் திட்டம் முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட தொழிலாளர் சமூகம் போராடியபோதிலும், காணி அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்காவின் நடவடிக்கைகள் பல சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. இறுதியில், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்போராட்டத்தில் தொழிற்சங்கத் தலைமைகளாக விளங்கிய கே.ஜி.எஸ். நாயர், சி.வி. வேலுப்பிள்ளை ஆகியோர் முக்கியமான வழிநடத்தல்களை மேற்கொண்டனர். உருளவள்ளித் தோட்டப் போராட்டத்தையும் அதன் விளைவுகளையும், எதிரொலிகளையும் வெளிக்கொணருவதில் மலையக வீதிப்பாடகர்களின் பங்களிப்புக் காத்திரமானதாக இருந்தது என்பதை டி. அய்யாத்துரை குறிப்பிட்டுள்ளார்.
1950 ஆம் ஆண்டு டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டம், சக தொழிலாளர்களையே பயன்படுத்தி அடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டெவன் தோட்டத்தில் வைத்திலிங்கம் எனும் இளைஞர் தொழிற்சங்கத்தை அமைத்து உரிமை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதைத் தொடந்து ஆத்திரமடைந்த தோட்ட நிர்வாகம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களைத் தூண்டி, வைத்திலிங்கத்தை கொலை செய்யச் செய்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். அதன் பின்னர் நிகழ்ந்த சம்பவங்களும் ஆழ்ந்த துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தின.
அதேபோல், 1942 ஆம் ஆண்டு புப்புரஸ்ஸ தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்த வேலாயுதம் வீரசாமியின் மரணமும் ராஜப்பாவின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். இவ்வாறான அனுபவங்களை உள்ளங்கொண்ட நிலையில் ‘கட்சிப் போராட்டக் குரல்’ நூலின் முதல் பாகம் வெளிவந்திருக்கலாம் என்று கருத முடிகிறது. அந்நூல் தற்போது கிடைக்காமல் இருப்பது, இவ்வுணர்வுகளை ராஜப்பா எவ்வாறு வெளிப்படுத்தியிருப்பார் என்பதை அறிவதில் சிக்கலை உருவாக்குகிறது. அந்நூல் கிடைத்தால், அவரது உள்ளக்கிடக்கையின் பதிவுகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் இவ்வனுபவங்களையே எடுத்துரைப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே ‘மக்களைப் பெற்ற மகாராசி’ படத்தில் இடம்பெற்ற “மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் தேரு பூட்டி…” என்ற பாடல் பல வீதிப்பாடகர்களின் படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இப்பாடலின் மெட்டில் வீதிப்பாடல்களை உருவாக்கியுள்ளனர்; அவ்வகையில் ராஜப்பாவும் இதே மெட்டில் பாடலொன்றை அமைத்துள்ளார். காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கும் நோக்கில், அவர் இப்பாடலுக்குத் தொகையறாவாக இணைத்திருக்கும் வரிகள் அவரது எதிர்ப்புணர்வை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகின்றன.
“பந்தம் பிடிக்கிற பாவிக்கடா – நன்மேன்மையே
பாழாக்கி பதுங்குகிற லோவிக்கடா
எத்தனை புத்திகளை புகட்டினாலும் – நம்மளுக்கே
சத்ராதியாக நின்று ஆடுறாண்டா”
என்ற தொகையறா வரிகளுடன் “துரைமாரு காலைக்கட்டி பழிகாரன் பிடிச்சிக்கிட்டு” என்ற அடியோடு தொடரும் வரிகள்,
“மேலான வாழ்க்கையெல்லாம் – ஆளுக்கொரு சங்கத்தினால்
பாழாகிப் போகுதடா – விண்ணப் பட்டு மேலும்
தாழ்ந்து பங்க மாகுதடா – சின்னப் பட்டு”
எனத் தொடர்ந்து,
“முல்லோயா கோவிந்தனும் கல்தோணி வெள்ளையனும்
டயகாமம் ஹேப்றாம் சிங்கும் – வெங்கமுத்து – கொட்டியா
கொலை பிரான்ஜிஸ் ஐயாவும் எங்கேமுத்து
மலுகொல்லை ஆதியப்பன் செங்கதிரை சந்தனமும்
பனிய பத்தனை வைத்திலிங்கமும் – சாக்கபதி – இன்னம்
பலரும் கட்சியால் மாண்டதை சொன்னா என்னகெதி
போகாத உயிரும் போகும் பொல்லாத துயரமாகும்
பொறுமை ராஜப்பா உரையைகோரும் – பங்கமில்லே – நம்ப
பெருமை யோங்கி வறுமை தீரும் – சங்கபுள்ளே”
என்றவாறு நிறைவுறுகிறது.
ராஜப்பாவின் இந்த நூல் ஐம்பதுகளில் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்புகள் காணப்படுகின்ற போதிலும், ஐம்பதுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் இத்தொகுப்புகளில் இடம்பெற்ற பாடல்களின் உள்ளடக்கமாகக் காணப்படுகின்றன என்பது கவனத்திற்குரியது.
ஒன்றுபட்டுத் தொழிற்பட்ட தொழிலாளர்களிடையே ஏற்பட்ட பிளவுகள், அவர்களிடையே ஒற்றுமை சீர்குலைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப் பிளவு நிலைமைகளை உருவாக்குவதில், தொழிற்சங்கத் தலைமைகளில் ஏற்பட்ட முரண்பாடுகளும், அவற்றின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளும் பங்களித்ததாகக் கூறலாம். இப்பிரிவினைவாதச் செயற்பாடுகளைச் சாடும் போக்கை ராஜப்பாவின் ‘கட்சிப் போராட்டக் குரல்’ பாடல்களின் உள்ளடக்கங்களில் அறிய முடிகிறது. கட்சியின் பிளவுகளைச் சாடும் வகையில், ஒரு பாடலில் விருத்தமாக ராஜப்பா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“கட்சியால் நேரும் இச்செகத்தில் தீர உனை
பட்சமுடன் தோத்தரித்தேன் சித்தி விநாயகனே வா வா”
இப்பாடல் சிந்துபைரவி இராகத்தில், பல்லவி ஏகதாளத்தில் அமைந்தது எனக் குறிப்பிடப்படுகின்றது. இது இசையில் ராஜப்பா பெற்றிருந்த புலமையை வெளிப்படுத்தி நிற்கிறது. தொடர்ச்சியாக, தொழிற்சங்கப் பிளவுகளைச் சாடும் அன்னாரின் வரிகள் பின்வருமாறு தொடர்கின்றன. அத்தோடு, கட்சியைக் குறித்த விமர்சனங்களையும் எடுத்துரைப்பது அவதானிக்கத்தக்கது.
“அண்ணே அண்ணே சொன்னா புரியுமா – கட்சி
என்னா என்னா இருக்கு தெரியுமா
காங்கிரசு கட்சி ரெண்டால்
கலவர முண்டா குதுங்க
கம்யூனிஸ்ட்டு கட்சி என்றால்
கல்லுங் கரைந் துருதுங்க
சமஸ்டியாட்சி கட்சி ஒன்று
சலுகை மொழி கேட்குதுங்க
சமசமாஜி கட்சி ஒன்று
சம உரிமை கேட்குதுங்க
தமிழரசு கட்சி ஒன்று
தாழ்வடைந்து நோகுதுங்க
திராவிட கட்சி ஒன்று
தேர்ச்சியாய் முன்னேகுதுங்க
பந்தக்கார கட்சி ஒன்று
படிப்படியா உயருதுங்க
பாட்டாளி கட்சி நின்று
பதறி தடுமாறுதுங்க
இன்னம் வெகு கட்சி யுண்டு
ஏறுக்கு மாறு செய்யுதுங்க
வண்ணமொழி நன்மை கேட்டு
ஒண்ணாக வாழ்ந்திடுக
பாரோர் புகழும் புவி
ராஜப்பா நவில் வதுங்க
சீரும் சிறப்பும் மேவ
செல்வம் பெருக்கிடுங்க…”
இவ்வாறே, கட்சி மோதலினால் 1959 ஆம் ஆண்டில் பொகவந்தலாவ, கொட்டியாக்கொல்லை – தொங்கப்பத்தினி தோட்டங்களில் இடம்பெற்ற சென்னன் பூசாரி படுகொலை சம்பவத்தைப் பற்றிய ராஜப்பா இயற்றிய பாடல் கவனத்திற்குரியது. பாடலாசிரியரால் “கனகாலம் பாடுபட்டு” என்ற மெட்டில் பாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக, காமன் கூத்தில் எரிந்த கட்சி, எரியாத கட்சி சார்பாகப் பாடப்படும் எதிர்ப் பாடல்கள் அண்ணாவிமார்களால் வாதப் பாடல்களாக இசைக்கப்படுவது வழக்கமான நடைமுறை. இப்பாடலும் அதே மெட்டிலேயே இயற்றப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தொண்டமான் அஸீஸ் ரெண்டு
பாட்டியிலே மூண்ட சண்டை
தொங்கப் பத்தினி தோட்டத்திலே – ஐயா ஐயா – பெருந்
தொந்தரவில் மாண்டதென்னா பொய்யா பொய்யா”
தொடர்ந்து இக்கொலையின் பின்னர் சென்னன் பூசாரியின் குடும்பத்தினர் முகங்கொடுக்கும் இன்னல்களையும் எடுத்துச் சொல்கிறார். ராமன் என்ற கொலையாளியோடு, இக்கொலைக்கு உதவிபுரிந்த வேலு, சுப்ரமணியன் ஆகியோரும் சிறைவாசம் அனுபவிப்பதால் ஏற்படும் அவர்களது குடும்ப நிலைமையையும், அவர்களது பாதிப்பு நிலைமைகளையும் எடுத்துச் சொல்வதாகப் பாடல் அமைகிறது.
ராஜப்பா, சென்னன் பூசாரியின் மனைவியின் மனநிலையை எடுத்துச் சொல்லும் வகையில், ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “மண்ணுக்கு மரம் பாரமா” என்ற மெட்டில் பாடலமைத்துள்ளார். திரைப்படப் பாடல்கள் மீது மலையக மக்கள் கொண்டிருந்த ஆழமான ஈடுபாடு இதன்மூலம் தெளிவாகப் புரிகிறது. இதன் வாயிலாக, வீதிப்பாடலாசிரியர்கள் தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் மக்களிடையே எடுத்துச் சொல்லியுள்ளனர். இது மக்களிடையிலும் பாடலாசிரியர்களிடையிலும் காணப்படும் கவனம், செவிமடுத்தல், மனனம் செய்தல், இசைஞானம், விடயங்களைப் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் முன்வைக்கும் திறன் போன்றவற்றின் வெளிப்பாடாகும். அத்தோடு இது, மற்றவர்களின் மனநிலையை உளவியல் ரீதியில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. ராஜப்பா கற்பனைச் சொற்களால் பாடலாக்கிய வரிகள் பின்வருமாறு தெளிவாக வெளிப்படுகின்றன.
“கட்சியில் பிரிவாச்சம்மா
கணவனின் உயிர் போச்சம்மா
கழுத்து……. தாலி கேளம்மா….. கழட்டவிதி
கறுமக் கால மாச்சம்மா
தனியாய் தடுமாற்றம்
தர்க்கத்தால் உற்றுணரும்
தகறார் பழியாகும்
தாழ்ந்தால் உயர் வாகும்
கட்சியில் சேர்ந்தால் போதாது
காருண்ய ஞானம் தப்பாது
கருணை மனது வேணும் தெரியுமா
கவிஞன் – எஸ்ஸெம்மார் – உரை புரியுமா”
கட்சி, தொழிற்சங்கப் பேதங்களை மறந்து மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துரைப்பதாக இவரது வலியுறுத்தல் அமைகிறது.
இத்தொகுப்பில் மீளவும் “மணப்பாரை மாடுகட்டி” என்னும் மெட்டில் அமைந்துள்ள மற்றுமொரு பாடலைப் புனைந்திருக்கிறார். இப்பாடல் ஊடாக தொழிலாளர்களிடத்தே காணப்படும் ஒற்றுமைச் சீர்குலைவைக் கவலையுடனும், தொழிலாளர் உரிமைகள் மீறப்பட்டு அதீதமாக வேலை வாங்குவதை வன்மையாகவும் கண்டிப்பதை அவதானிக்க முடிகிறது. தொழிலாளர்களிடத்தே தொழில் உரிமை தொடர்பான கவனத்தை ஏற்படுத்தும் முனைப்பும் அவதானத்திற்குரியதாகும். இவ்வாறு பெருந்தோட்ட நிர்வாகம் மிதமிஞ்சிய வகையில் வேலை வாங்குவதால் பிள்ளைகளைப் பராமரிப்பதில் ஏற்படும் சிக்கல்களும், வீட்டு அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்ள சிக்கல்களும் யதார்த்தபூர்வமாக எடுத்துரைக்கப்படுகிறது. அவ்வாறே அட்டன் தரவளை துரைசாமி படுகொலை தொடர்பில் ராஜப்பாவால் பாடப்பட்ட ஏகதாளத்துடன் கூடிய தெம்மாங்கு நடையிலான பாடலும் கவனத்தைப் பெறுகிறது. கொழுந்துக் காட்டில், பெண் தொழிலாளர்களிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொண்டமான் – சமசமாஜக் கட்சியினற்கிடையே கட்சிச் சண்டையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக துரைசாமியின் உயிர் காவுகொள்ளப்பட்டும், சிவலிங்கம் என்ற தொழிலாளி சிறைவாசம் அனுபவிக்கும் நிலையும் ஏற்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட முறுகல் நிலை கொலையில் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையைத் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் நிர்வாகத்தின் சார்பில் சட்டத்தரணி ஜி.ஜி. பொன்னம்பலம் ஆஜராகி, நிர்வாகத்திற்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இறம்பொடை, தவலந்தன்னை தங்கவேல் தலைவரின் படுகொலை தொடர்பான பதிவை உள்ளடக்கிய பாடலும் அவதானத்திற்குரியதாகும். பொதுவாக கொலைகள் பற்றிய பதிவுகளை உள்ளடக்கிய பாடல்களைக் கொலைச்சிந்து என வகைப்படுத்துவார்கள். அவ்வகையில் மலையக வீதிப்பாடல்களில் கொலைச்சிந்துகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துப் பாடல் இயற்றியவராக ராஜப்பாவை பேராசிரியர் செ. யோகராசா அடையாளப்படுத்துவார்.
கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து நிலவிய நிலையில், அவற்றிற்கான தீர்வாகக் கொலைகளே நிகழும் சூழல் உருவாகியிருந்தது. அதன் வரிசையில் அஸீஸ் தலைமை மற்றும் சமசமாஜக்கட்சி ஆகிய தொழிற்சங்கங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பட்ட நிலை மஸ்கெலியா நல்லத்தண்ணித் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்ற தொழிற்சங்கங்களுக்கிடையிலான முரண்பாடு கருமலை என்ற தொழிலாளியின் உயிரைக் காவு கொண்டது. அதன் தொடர்ச்சியாக கே. மலையாண்டி, எம். இராமையா, கே. வீமன், எஸ். நடேசன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். வி. வேலு, ஐ. கந்தசாமி, கோவிந்தசாமி, பெருமாள் ஆகியோர் சிறை சென்றனர். விஜயராகு, ரம்மெனிக்கா ஆகியோர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்றமையையும் பாடலூடாக எடுத்துரைக்கிறார், ராஜப்பா. இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் ஏனைய தோட்டங்களிலும் இனியும் தொடரக்கூடாது என்ற எண்ணம் இவரில் பொதிந்திருப்பதை அறியமுடிகிறது.
இவ்வாறு தோட்டத் தொழிலாளர்களிடத்தே நிலவும் ஒற்றுமைச் சீர்குலைவை வன்மையாகக் கண்டித்து தொழிலாளர்களிடத்தே ஒற்றுமையை ஓங்கச் செய்யும் முனைப்புடனே இத்தொகுப்பில் இவரது பாடல்கள் அமைந்துள்ளன. கொலைகளைச் சாடும் பாடல்களில் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறும் பணியையும் ராஜப்பா ஆற்றுகிறார். அதேவேளை தொழிற்சங்கத் தலைமைகளுக்கும் அறிவுரையை வழங்கும் முனைப்பிலான அணுகுமுறையும் அவதானிக்கத்தக்கது. அப்பணியைப் பொறுப்புடன் “சேஸ்த்திர யாத்திரைக்கே” என்ற மெட்டில் பாடலாக இசைத்துள்ளார்.
“பாட்டி பிரிவதேனோவாட்ட மடைவதேனோ
பாட்டாளி சொல்லை உணர்வீர் – இந்த
நாட்டு சகோதர சோதரியார் கட்சி
போட்டியால் கஸ்டம் தெரிவீர் கேளும்
ஒற்றுமையா யிருந்தா வற்றா சமுத்திரம் போல்
உற்ற தெல்லாம் பெற்றுக் கொள்ளலாம் – நியாயம்
உற்றே உணராமல் சற்றே மனம் பதறி
வேற்றுமையால் நஸ்டம் அடைவீர் கேள்”
மலையகச் சமூக அசைவியக்கத்தில் சட்டத்திருத்தங்களும் ஒப்பந்தங்களும் இம்மக்கள் மீது பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன. மலையக மக்களுக்கு மனதளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மனதளவிலான அழுத்தங்களும் உடலளவிலான வன்முறைக் கொடுமைகளும் நிறையவே இடம்பெற்றுள்ளன. இவ்விடயம் தொடர்பிலான கவனத்துடனும் ராஜப்பாவால் இயற்றப்பட்ட பல பாடல்கள் அமைந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக அவற்றை ஆவணப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் வருத்தத்திற்குரியது. அப்பாடல்களின் உள்ளடக்கம் பிரஜாவுரிமை, வாக்குரிமை பறிப்புத் தொடர்பாகவும் பேச விழைந்திருந்தன. அவற்றோடு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் தொடர்பாகத் தன்னுடைய கண்டனத்தையும் அவர் நிறையவே பதிவு செய்திருந்தமையும் எனது ஞாபகத்துக்கு வருகிறது.
பிரதமராகப் பதவி வகித்த சாஸ்திரி தொடர்பில் தனது நல்லெண்ணத்தைப் பதிவு செய்திருந்தமையை அறிய முடிகிறது. இவ்விடயம் தொடர்பில் 2011 ஆம் வருடக் காலப்பகுதியில் ‘மலையக வீதிப்பாடல்கள் எழுப்பிய எழுச்சிக் கோசங்கள்’ எனும் தலைப்பில் தினக்குரல் ‘உதயசூரியன்’ இதழில் தொடர் ஒன்றைப் பதிவு செய்து வந்தேன். அத்தொடரில் ஓர் அங்கமாக, 03 மார்ச் 2011 ஆம் திகதி வெளியான இதழில் பின்வருமாறு எனது பதிவு அமைந்திருந்தது. “பிரதமர் சாஸ்திரிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பல பாடல்களைத் தந்துள்ளார். சாஸ்திரிக்கான புகழ்மொழிகளையும் தனது பாடல்களூடாக வெளிப்படுத்துகிறார்.
‘சாந்த மிகுந்த சற்குண தத்துவ
சாஸ்திரி புகழ் சிறந்தார் – இந்த
சாகரஞ் சூழ் புவி சங்க மனுகோடி
சஞ்சரிக்க உயிர் துறந்தார்’
எனவும்,
‘ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தினாலிலே
பிரதமர் பதவி ஏற்றார் – பல
தேசப் பிரச்சினைகளையும்
லேசாக தீர்த்து வைத்தார்…’
எனவும் சாஸ்திரியின் நல்லெண்ணத்தை வலியுறுத்தி, இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்த அல்லது தீர்வுக்காக உழைத்த விடயம் தொடர்பிலான நன்றியுணர்வையும் ராஜப்பா வெளிப்படுத்துகிறார். மேலும் பேதங்களற்ற சாஸ்திரியின் பங்களிப்பை,
‘தேச மக்களுக்கு சாஸ்திரி போலிந்த
தேசத்தில் செழிப்பாரோ – பொல்லா
துவேசம் யாரையுந் துள்ளிதமாக
துரத்திக் கருவறுத்தார்.’
எனவும் குறிப்பிடுகிறார்.
பிரதமர் சாஸ்திரி அயல்நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பு பற்றி மிதமாகக் கூறும் ராஜப்பா இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர் குறித்த சாஸ்திரியின் பங்குபற்றலை,
‘ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்திநாலாம்
ஆண்டில் இலங்கை இந்தியர் – தீராப்
பிரச்சினைகள் தீர்த்து புதுடில்லியில்
தீர்வினையே வைத்தார்.’
என்கிறார். மேலும், பாகிஸ்தானுடன் சாஸ்திரி கொண்டிருந்த நல்லெண்ணம் குறித்து,
‘இந்தியா பாகிஸ்தான் இருவரும் உச்சிப்
பேச்சுக்களின் முடிவில் – மனப்
பேதகமில்லையென சாஸ்திரி அயூப்கானும்
ஓர்மைக் கையொப்பமிட்டார்’
எனப் பாடுகிறார்.
‘உத்தம பாரதப் பிரதமர் சாஸ்திரி
உண்மை உழைப்பை உணர்ந்த – தென்
இலங்கை கவி ராஜப்பா ஏங்கி மனந்தியங்கி
இசையில் வெளிவிடுத்தார்’
என்றவாறும் பாடல் இசைக்கிறார். எஸ்.எம். ராஜப்பாவின் மற்றுமொரு பாடல் சாஸ்திரிக்கு அனுதாபம் கூறும் வகையில் அமைகிறது.
‘சகுனத் தடையும் காணார்…..
விமானம் ஏறிப் போனார்
மங்களப் புகழோங்க – புவி
எங்கும் மகிழ்வால் பொங்க
எக்காலம் காண்போமோ – நம்
இருதயங் குளிர்வோமோ
பாதுகாத்து வந்தார் – விண்
ணுலகம் போயி சேர்ந்தார்
எழுதி ஒப்பம் போட்டார் – பல
இக்கட்டையுந் தீர்த்தார்
சமரசமாய் நின்றார் – நாம்
சமாதான மென்றார்
சடலமும் துடிப்பாச்சி – மன
சங்கடமும் உண்டாச்சி
வைகுந்தம் போய்ச் சேர்ந்தாச்சி – இவ்
வையகத்தை மறந்தார்’
என்ற வரிகள் ராஜப்பா சாஸ்திரி மீது கொண்டிருந்த பக்தியுணர்வை வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.”
பெரியாம்பிள்ளையின் கொலைச்சிந்துப் பாடல்கள், சமூகத்தில் நிலவும் அவலங்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களாக வெளிப்பட்டன. அவற்றில், தொழிலாளர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றன. இந்தக் கசப்பான அனுபவங்களின் இறுதி வடிவமான தொழிற்சங்கப் பிளவுகளும், அதன் விளைவாகத் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கின. தொழிற்சங்கங்களுக்கிடையேயான போட்டிகளால் தொழிலாளர்களிடையே குறைந்துபோன ஒற்றுமையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்ற முனைப்பு ராஜப்பாவிடமும் மிகுதியாக இருந்தது. அவரது கொலைச்சிந்துப் பாடல்களில், தொழிலாளர்களின் இந்த ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்துகள் தொடர்ந்து இடம்பெற்று வந்ததை அறிய முடிகிறது.
வீதிப்பாடலாசிரியர் பெரியாம்பிள்ளை ஆன்மிக ஈடுபாட்டுடன் சில பாடல்களைத் தந்துள்ளமையையும் அறிய முடிகிறது. ராஜப்பாவும் அவ்வாறான பாடல்களையும் இணைத்துக்கொண்டு ஏற்கனவே வெளியான பாடல்களையும் தொகுத்துப் பதிப்பிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். அவ்வாறான நூல்களுள் ‘கழுகுமலைப் பத்தும் கும்பிடு பத்தும்’ நூல் முக்கியமானதாகும். இந்நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஆதவன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இந்நூலின் விற்பனை விலை, ரூபா 15 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பை வெளியிட்ட காலம் குறிப்பிடப்படாமலே இத்தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இவ்வெளியீடு காலத்தால் பிற்பட்டதாக இருக்கலாம். இவர், நாவலப்பிட்டி ரோசல்லையில் இருந்தே செயற்பட்டுள்ளார். பிற்காலத்தில் நாவலப்பிட்டியிலேயே தன் வாழ்நாளைக் கழித்துள்ளார். இருந்தபோதிலும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்துடனும் தொடர்பினைப் பேணியிருந்ததற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளன.
‘கழுகுமலைப் பத்து’, ‘கும்பிடு பத்து’ ஆகிய தலைப்பிலான பாடல்களை வீதிப்பாடலாசிரியரான எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளையும் தனது வெளியீடுகளில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜப்பாவால் தொகுக்கப்பட்ட மேற்படி நூலில் அதே பாடல்கள் இணைக்கப்பட்டிருக்கின்றமை அவதானத்திற்குரியதாகும். இந்நூலில் இரண்டு பாடல்கள் ராஜப்பாவினால் இயற்றப்பட்டமைக்கான வாய்ப்புகள் உள்ளன. மூலங்களில் இருந்து மக்களுக்குத் தேவையான விடயங்களை எடுத்துரைக்கும் பெரியாம்பிள்ளை, ராஜப்பா ஆகியோரது பங்கேற்பு இங்கு கவனத்தைப் பெறுகிறது.

இந்திய வம்சாவளித் தமிழர்களின் புலப்பெயர்விற்குப் பின்னர், இலங்கையில் அம்மன் வழிபாடு தொடர்பான அவதானம் குறிப்பிடத்தக்க உயர்வைப் பெற்றுள்ளது. தமிழர்களிடையே பெண் தெய்வ வழிபாட்டு மரபு நீண்டகாலமாக நிலவி வருவதும் கவனத்திற்குரியது. இந்நிலையில், ராஜப்பாவின் பதிப்பில் வெளிவந்த ‘மாரியம்மன் உற்பத்தி’ எனும் தொகுப்பு நூல் 1985 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. முதற்பதிப்பு எக்காலத்தில் வெளியிடப்பட்டது என்பது பற்றிய குறிப்புக் கிடைக்கவில்லை. நாவலப்பிட்டி ராஜா அச்சகத்தில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு நூல் இருபது பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. பொதுவாக வீதிப்பாடல் நூல்கள் கருப்பு–வெள்ளை நிற அட்டைகளுடன் வெளிவருவது வழமையாகும்; ஆனால் இந்நூல் அம்மன் படத்துடன் நிறமுடைய அட்டையில் வெளிவந்துள்ளது. ‘மாரியம்மன் உற்பத்தி’, ‘மாரியம்மன் காவியம்’, ‘மாரியம்மன் சின்ன காவியம்’, ‘அம்மன் குளத்தி’, ‘கும்மி – கோலாட்டப் பாடல்’ என்ற உபதலைப்புகளின் கீழ் அம்மன் புகழ்வரிகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்குறித்த ராஜப்பாவின் முயற்சியில் வெளிவந்த ‘மாரியம்மன் உற்பத்தி’ தொகுப்பு நூல் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வெளிவந்திருக்கிறது. இந்நூலில் பதிப்பாசிரியர் என எவரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. யாழ்ப்பாணம், நல்லூர், ஸ்ரீ நிரஞ்சனா அச்சகத்தில் அச்சிட்டு வெளிவந்த தொகுப்பு நூலை, கொழும்பு 11, 175 செட்டியார் தெருவில் இருந்து இயங்கிய சரஸ்வதி புத்தகசாலை விநியோகித்துள்ளது. ரூபா 3.50க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள இந்நூல் ராஜப்பாவின் இரண்டாம் பதிப்பிற்கு முன்னரே வெளியிடப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது. எது எவ்வாறாக இருப்பினும் இத்தொகுப்புகளில் இடம்பெறும் பாடல்களை இயற்றியவர் அல்லது மூலமாகத் தொகுத்தவர் யார் என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. இப்பதிப்புகள் இரண்டிலும் ஒரே மாதிரியான முகவுரை வரிகள் காணப்படுகின்றன.
“இந்நூல் உலகத்திலுள்ள ஆன்மாக்களுக்கு வினைப்பகுதியினை நினையாப் பிரசாரமாக உண்டாகும் அவஸ்தையாகிய சுரம், கண்நோய், வைசூரியென்னும் தொற்றுநோய், கண்ணூறு, நாத்திருஸ்டி, சின்னம்மை, பெரியம்மை, முதலிய நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளும், மாட்டு ஆட்டுப்பட்டிகளில் உண்டாகும் கூப்பிடுவானென்னும் கோதாரி முதலிய நோய்களும், நம் மீது சத்துருக்கள் நெருங்கிய போதும்… இந்த மாரியம்மன் காவியம், குளத்தி இவைகளை மிகுந்த பக்தியுடன் தூபமிட்டு பரிசுத்தமான இடத்தில் வைத்து பாராயணம் பண்ண நிவர்த்தியாவது மன்றி தனிவழிகளில் போகும் போது பாராயணம் பண்ணிக் கொண்டு போனால் துஸ்டப் பிசாசு, துஸ்ட மிருகம், விஸ ஜந்துக்கள் விலகிவிடும். நம்பிக்கையுடன் பாராயணம் செய்து பயனடைவார்களாக. சுபம், சுபம்”
பாடலாசிரியர் எஸ்.எம். ராஜப்பா தனது சுயசரிதையை எழுதுவது தொடர்பில் ஆர்வம் கொண்டிருந்தார். 1985 இல் இவரது இரண்டாம் பதிப்பாக வெளிவந்த ‘மாரியம்மன் உற்பத்தி’ நூலில் ‘எஸ்.எம். ராஜப்பா – ஜீவிய: வாழ்க்கை வரலாறு’ தயாராகிறது. இதன் விலை ஐந்து ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரப் பதிவு உள்ளது. இவ்வாறு தனது வாழ்க்கை வரலாற்றைப் பதியும் எண்ணத்தில் இருந்த ராஜப்பா அப்பணியை நிறைவு செய்தாரா? என்பது பற்றிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவ்வாறான குறிப்புகளாவது கிடைக்குமானால் மலையக எழுச்சிப் பாடல்களை ஆவணப்படுத்துவதற்கும், அதன் தாக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கும், அக்காலக் கலை, இலக்கியச் செயற்பாடுகளை ஆவணப்படுத்துவதற்கும் அவை வாய்ப்பாக அமையும் எனலாம்.

இராஜப்பாபுரம் (பின்னிணைப்பாக)
வீதிப்பாடலாசிரியர் எஸ்.எம். ராஜப்பாவை எனது சிறுவர் பராயத்தில் எனக்கு நேரில் கண்டு பேசிப்பழகிய அனுபவம் உள்ளது. ஆனால் அக்கால கட்டத்தில் வீதிப்பாடல் தொடர்பாகவோ ராஜப்பா தொடர்பாகவோ எவ்விதப் பரிச்சயமும் எனக்கு இருந்ததில்லை. ‘கிளி தாத்தா’ என்ற அடையாளம் மட்டும்தான் தெரியும். நாவலப்பிட்டி நகரத்தில் சந்திகளில் அமர்ந்து கிளி சோதிடம் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன். நாம் பாடசாலை முடிந்து வீடு செல்லும் போது கிளிகளுடன் கிளிப்பெட்டியைக் காவிக்கொண்டு எமது ஊரிற்கு நடந்து வருவார். அவர் பின்னாலேயே நாமும் நடந்து வருவோம். ஏழு அடி உயரம் இருப்பார். மெலிந்த, உயர்ந்த உருவம். கூன் விழுந்திருக்கும். சிரமப்பட்டே நடப்பார். எங்கள் ஊரில் தனது மகள் முறையான ஒருவரது வீட்டிற்கு வந்து தங்கியிருப்பார். சில நேரங்களில் ஊரில் சந்தியில் அமர்ந்தும் கிளி சோதிடம் பார்ப்பார். எனக்கும் இவரிடம் கிளி சோதிடம் பார்த்த அனுபவம் உண்டு. குறிப்பு அட்டைகள், கிளிகள் அடைக்கப்பட்ட பெட்டிக்கு முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பெட்டியைத் திறந்தவுடன் வெளியே வரும் கிளி அப்பெட்டியைச் சுற்றி வந்து, ஏதாவது ஓர் அட்டையை தனது வாயால் கௌவி எடுக்கும். கிளியிடமிருந்து அட்டையைப் பெற்று அதில் குறிப்பிடப்பட்ட பாடலின் விளக்கத்தை இவர் முன்வைப்பார். பின்னர் அதற்கான தட்சணையை வழங்க வேண்டும். கூடினால், பத்து ரூபாய் செலுத்த வேண்டும். தோசங்கள் ஏதும் அடையாளம் கண்டால் அதற்கான பரிகாரங்களையும் முன்வைப்பார். இவ்வாறு தொண்ணூறுகளிலும் இவர் எமது ஊரிற்கு வருவதுண்டு. பின்னர் இவரைக் கண்டது கிடையாது. எங்கு, எப்போது மரணமானார் என்பது பற்றிய தகவலை அறியவில்லை.
மேற்குறித்த அனுபவம் எனது மனதில் நிறையவே பதிந்திருந்தது. இந்நிலையில் மலையக வீதிப்பாடல்கள் தொடர்பான எனது தேடலின் போது ராஜப்பாவின் சமூகப் பங்களிப்பு மற்றும் ஆளுமை குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. 2011 கொழும்பில் இடம்பெற்ற ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011’ ஆய்வரங்கில் ‘மலையக வீதிப்பாடல்களின் எழுச்சித் தாக்கங்கள்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினேன். இம்மாநாட்டில் முன்வைத்த கட்டுரைக்கு ஆதாரங்களைத் தேடுகின்ற போதே ராஜப்பா பற்றி மேலும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. இவ் உரையிலும் ராஜப்பாவின் பாடல்கள் குறித்து நிறையப் பேசினேன். அதன் தொடர்ச்சியாகப் பத்தி எழுத்துகளையும் எழுதியுள்ளேன். சமூக அசைவியக்கத்தில் பெரும் பங்காற்றியுள்ள ராஜப்பா அடையாளப்படுத்தப்படாமலே இருந்துள்ளார். இதன் தாக்கம் என்னில் பதிந்திருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரின் முயற்சியினால் எமது தோட்டமான இம்புல்பிட்டி, கல்லாறு பிரிவில் வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது. அத்திட்டத்திற்குப் பெயரிட வேண்டும்; பொருத்தமான பெயரைப் பரிந்துரையுங்கள் என என்னிடம் தொலைபேசி ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார். அதற்கமைய யோசித்த போது, ராஜப்பா பற்றிய உணர்வுகள் என் மனதிற்குள் வந்தன. அப்பெயரைப் பரிந்துரை செய்தேன். இன்று வரையில் இம்புல்பிட்டி, கல்லாறு பிரிவில் அமைந்துள்ள இவ்வீடமைப்புத்திட்டம் ‘இராஜப்பாபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. மலையகச் சமூக உந்துதலுக்காக, தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஆளுமையை இவ்வாறு அடையாளப்படுத்திய வாய்ப்பை எண்ணித் திருப்திகொள்கிறேன்.
உசாத்துணை நூல்கள்
- யோகராசா. செ, (2023) ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேசன்.
- வடிவேலன். பெ, (2025) தமிழ் இலக்கியத்தில் கதிர்காம முருகன் – மலையகத்தில் கவிஞர் அருட்கவி எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை பாடிய சிற்றிலக்கியத் தொகுப்பு. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்.
- ராஜப்பா. எஸ், (1950) கட்சி போராட்டக் குரல், ஜவுளிக்கடை, ரோசல்லை.
- ராஜப்பா. எஸ், (1985) மாரியம்மன் உற்பத்தி, ராஜா அச்சகம், நாவலப்பிட்டி. (இரண்டாம் பதிப்பு).
- சரஸ்வதி புத்தகசாலை (…..) மாரியம்மன் உற்பத்தி, ஸ்ரீ நிரஞ்சனா அச்சகம், நல்லூர்.
- ராஜப்பா. எஸ், (……) கழுகுமலைப் பத்தும் கும்பிடு பத்தும், ஆதவன் அச்சகம், மட்டக்களப்பு.
- முத்துலிங்கம். பெ, (2012) பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.
- சாரல் நாடன், (1997) மலையகம் வளர்த்த தமிழ். துரவி வெளியீட்டகம்.
- மாத்தளை ரோகிணி, (1993) உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள். குறிஞ்சி வெளியீடு.
- சடகோபன். இரா, (2025) சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு, எழுநா.



