வீட்டுக்கு அழைத்தலும் திவசமும்
மனித நாகரிகத்தின் தோற்றத்திலிருந்தே, வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் செயல்முறை நிகழ்ந்து வந்ததை காண முடிகின்றது. இதன் ஒரு பாலமாக மூதாதையர் வழிபாடு இருந்து வருகிறது. இது வெறும் சடங்கு ரீதியான மரபு என்பதைத் தாண்டி, ஒரு சமூகத்தின் வரலாறு, அறநெறி மற்றும் உளவியல் கட்டமைப்பின் அடித்தளமாகத் திகழ்கிறது. குறிப்பாக தமிழகத்தில் ‘தென்புலத்தார்’ என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கான கடமைகளை ஆற்றுவது இல்லறத் தர்மத்தின் தலையாயக் கடமையாகக் கருதப்படுகிறது. அதன் வழி வந்த மலையக மக்களும் இதன் தொடர்ச்சியைப் பேணுவதைக் காண முடிகின்றது.
மூதாதையர் வழிபாடு என்பது இறந்துபோன உறவினர்களின் ஆவிகளிடத்தில் பிரார்த்தனை செய்தல் மற்றும் காணிக்கைகளைப் படைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நம்பிக்கையமைப்பாகும். உலகெங்கிலும் உள்ள பல கலாசாரங்களில், மூதாதையர்களின் ஆவிகளுக்கு இயற்கை உலகில் தங்கியிருந்து தற்போதைய தலைமுறையினரின் நல்வாழ்வையும் அதிர்ஷ்டத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, சீனக் கலாசாரத்தில் ‘சிங் மிங்’ (Qingming) திருவிழா முன்னோர்களைக் கௌரவிக்கும் நாளாகும். சீனர்கள் தங்கள் வீடுகளில் முன்னோர்களுக்கென்று தனிப் பலிப்பீடங்களை (Domestic Altars) அமைத்து தினமும் ஊதுபத்தி ஏற்றி வழிபடுகிறார்கள். ஆன்மாக்களுக்குத் தேவையான காகிதப் பணம் மற்றும் உணவுகளைப் படைப்பது அவர்களின் மரபாகும். அந்த வகையில் ஆவிகள் படைப்பவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மத்தியஸ்தர்களாகச் செயற்படுவதாகக் கருதப்படுகிறது.
அத்தோடு இது தனிமனிதனுக்கு மட்டும் உரியதல்ல; அது ஒரு குடும்பத்தின் கூட்டுப் பொறுப்பாகவும் கருதப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் தலைமுறைகளைக் கடந்த கர்மவினைகளால் பிணைக்கப்பட்டுள்ளனர். முன்னோர்களைக் கௌரவிப்பதன் மூலம் ஒரு குடும்பத்தின் கூட்டுக் கர்மவினைகளைத் தூய்மைப்படுத்தவும், கடந்த காலத் தவறுகளுக்கு மன்னிப்புத் தேடவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் சுபிட்சமான எதிர்காலத்தை உறுதி செய்வதாகவும் நம்புகின்றனர்.

தமிழகத்தின் மரபுசார் வழிபாடாக இருந்த ‘வீடு எடுத்தல்’ அல்லது ‘கூப்பிடு சடங்கு’ தமிழகத்தின் கிராமப்புறப் பண்பாட்டிலும் குலதெய்வ வழிபாட்டு முறைகளிலும் முக்கியமானதாகும். ‘வீடு எடுத்தல்’ அல்லது ‘ஆன்மாவை வீட்டிற்கு அழைத்தல்’ என்பது மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்காகும். இதன் தொடர்ச்சியே மலையகத்திலும் ‘வீட்டுக்கு அழைத்தல்’ என்ற முறையில் செய்யப்படுகின்றது. ஒரு நபர் இறந்து ஓராண்டு நிறைவடைந்த பிறகு அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, காற்றில் அலைந்து கொண்டிருப்பதாகக் கருதப்படும் அந்த ஆன்மாவை முறைப்படி அழைத்து வந்து வீட்டின் முன்னோராக அல்லது காவல் தெய்வமாக நிலைநிறுத்துவதே இந்தச் சடங்கின் சாராம்சம்.
தமிழர் மரபில் இறப்பு என்பது ஒரு முடிவல்ல; அது ஒரு நிலை மாற்றம் மட்டுமே. இறந்தவர்கள் ‘தென்புலத்தார்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களின் வாரிசுகளைக் காக்கும் சக்திகளாக மாறுகிறார்கள் என்பது நம்பிக்கை. ஒரு நபர் இறந்தவுடன் அவரது ஆன்மா உடனடியாகத் தெய்வ நிலையை அடைவதில்லை. ஒரு வருடம் வரை அந்த ஆன்மா பித்ரு லோகத்திலோ அல்லது வெளியிலோ தங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. அந்த ஓராண்டு காலத் தீட்டு முடிந்தவுடன் அந்த ஆன்மாவைத் தனிமைப்படுத்தாமல் மீண்டும் தன் சொந்த வீட்டிற்கே அழைத்து வந்து குடும்பத்தோடு இணைப்பதே ‘வீடு எடுத்தல்’ ஆகும்.
இச்சடங்கின் தொன்மம் மற்றும் வரலாற்றைப் பற்றி அறிவது முக்கியமானது. இது ஆரியப் பண்பாடு கலப்பதற்கு முந்தைய மெய்யியல் மற்றும் நடுகல் வழிபாட்டு முறையோடு ஆழமான தொடர்புடையதாகும். இதன் வரலாற்றுப் பின்னணியை ஐந்து முக்கியக் கட்டங்களாகப் பிரிக்கலாம்.
ஒன்று, நடுகல் வழிபாடு. இந்தச் சடங்கின் மிக முக்கியமான தொன்மம் ‘நடுகல்’ மரபாகும். சங்க காலத்தில் (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்) போரில் வீர மரணம் அடைந்த அல்லது ஊரைக் காத்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்தது. தொல்காப்பியம் மற்றும் புறநானூறு ஆகிய நூல்கள் வீரர்களைத் தெய்வமாக்கும் முறையை விளக்குகின்றன. எல்லைக்குச் சென்று கல்லைத் தேர்ந்தெடுத்து, அதை நீரில் நீராட்டி, முறைப்படி வீட்டிற்கோ அல்லது ஊர் பொது இடத்திற்கோ கொண்டு வந்து நட்டு வழிபடுவதே இன்றைய ‘வீடு எடுத்தல்’ சடங்கின் ஆதி வடிவம்.
இரண்டாவது, ‘தென்புலத்தார்’. தமிழர்கள் இறந்தவர்களை ‘தென்புலத்தார்’, அதாவது தெற்குத் திசையில் வாழும் முன்னோர்கள் என்று அழைத்தனர். திருக்குறளில் “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்ற ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, தெய்வத்திற்கு முன்பாக முன்னோர்களுக்கே (தென்புலத்தார்) முதலிடம் அளிக்கப்பட வேண்டும். இறந்தவர் காற்றில் அலைவது குடும்பத்திற்குப் பாதுகாப்பற்றது என்றும், அவர் வீட்டுக்குள் வந்துவிட்டால் ‘காவல் தெய்வமாக’ மாறிச் சந்ததியினரைக் காப்பார் என்பதும் தமிழர்களின் தொன்மையான நம்பிக்கை.
மூன்றாவது, ஆவி வழிபாடும் குலதெய்வ உருவாக்கமும். வரலாற்று ரீதியாக இன்று நாம் வணங்கும் பல குலதெய்வங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்து மறைந்த மனிதர்களே. ஒரு குடும்பத்தில் அகால மரணமடைந்தவர்களை அல்லது பெரும் சாதனைகள் புரிந்து இறந்தவர்களை, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து ‘சுடலை மாடன்’, ‘பேச்சியம்மாள்’ போன்ற பெயர்களில் வழிபடத் தொடங்கினர். ‘வீடு எடுத்தல்’ என்பது ஒரு சாதாரண மனித ஆன்மாவை வழிபாட்டிற்குரிய ‘குலதெய்வமாக’ மாற்றும் ஒரு வரலாற்றுப் பரிணாமச் சடங்காகும்.
நான்காவது, சமண மற்றும் பௌத்தத் தாக்கம். தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் உருவ வழிபாட்டை விட ‘நினைவுச் சின்னங்களுக்கு’ முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ‘பள்ளிப்படைக் கோயில்கள்’ இதன் ஒரு வளர்ச்சியே. சாதாரண மக்கள் பெரிய கோயில்களைக் கட்ட முடியாமல், தங்கள் முன்னோர்களை ஒரு கல் வடிவிலோ அல்லது அடையாளப் பொருளிலோ வீட்டுக்கு அழைத்து வந்து வணங்கும் எளிய முறையைப் பின்பற்றினர்.
ஐந்தாவது, சமூகப் பரிமாணம். வரலாற்று ரீதியாக ஒரு குடும்பத்தில் தீட்டு என்பது சமூகப் புறக்கணிப்பாகக் கருதப்பட்டது. இறந்த ஒரு வருடம் வரை அந்தக் குடும்பத்தினர் ஊர்ப் பொது நிகழ்வுகளில் பங்கேற்க முடியாது. ‘வீடு எடுத்தல்’ சடங்கு என்பது அந்தத் தீட்டை அதிகாரபூர்வமாக நீக்கி, அந்தக் குடும்பத்தை மீண்டும் சமூகத்தோடு இணைக்கும் ஒரு சமூக அங்கீகாரச் சடங்காக வரலாற்றில் உருவெடுத்தது.
இச்சடங்குகள் தமிழரின் வாழ்வியலோடு ஆரம்பத்தில் இருந்தே மலர்ச்சியடைந்து வந்துள்ளமையை இலக்கிய ஆதாரங்களுக்கூடாக நோக்கும் போது, சங்க இலக்கியங்களில் ‘நடுகல் வழிபாடு’ குறித்த செய்திகள் ஏராளமாக உள்ளன. நடுகல் எடுக்கும் முறை, அதாவது இறந்த வீரனைத் தெய்வமாக்க எடுக்கப்படும் ஆறு நிலைகளைப் பற்றித் தொல்காப்பியம் விளக்குகிறது. இன்று பூசாரி செய்யும் சடங்குகளோடு இது நெருங்கிய தொடர்புடையது.
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தென்று” (தொல்காப்பியம், பொருளதிகாரம் – 63)
காட்சி என்பது கல்லைத் தேர்ந்தெடுத்தல் (இன்று பூசாரி ஆற்றங்கரையில் கல்லைத் தேடுவது), நீர்ப்படை என்பது கல்லைத் தூய்மைப்படுத்துதல் (மஞ்சள் நீராட்டு), நடுதல் என்பது முறைப்படி நிலைநிறுத்துதல் (வீட்டில் குடிவைத்தல்), வாழ்த்தல் என்பது புகழ்ந்து பாடுதல் (பூசாரி பாடும் அழைப்புப் பாடல்கள்), பெயரும் பீடும் எழுதுதல் (இறந்தவரின் பெயரைச் சொல்லி அழைக்கும் இன்றைய முறை) என்றவாறு இன்றைய சடங்குகளோடு ஒத்துப்போவதாக இப்பாடல் அமைகிறது.
“பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்” (புறநானூறு – 264)
இறந்த வீரனின் பெயரையும் அவனது பெருமையையும் (பீடு) கல்லில் எழுதி, அதற்கு மயில் தோகைகளைச் சூட்டி வழிபட்டனர். இன்றும் ‘வீடு எடுத்தல்’ சடங்கில் இறந்தவரின் வம்சாவளியைப் பூசாரி பாடுவதை இதோடு ஒப்பிடலாம்.
அடுத்து, படையல் இடுதல். இன்று ‘வீடு எடுக்கும்போது’ இறந்தவருக்குப் பிடித்த உணவுகளைப் படைப்பது போல, சங்க காலத்திலும் படையல் இட்டனர். ஆதாரமாக:
“பரல்நடைப் படுத்த பசுந்தடிப் பிண்டம் நடுகல் பீலி சூட்டி நாரரி தேறல் மாந்தி…” (அகநானூறு – 35)
நடுகல்லுக்கு மயில் பீலி சூட்டி, ஊன் சோற்றைப் (இறைச்சி கலந்த சோறு) படையலாக இட்டு, கள்ளைப் பருகி மக்கள் வழிபட்டனர். இது இன்றைய ‘அசைவப் படையல்’ முறையின் தொன்மமாகும். மேலும் வில்லும் வேலும் சாற்றுதல், இறந்தவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து வணங்கும் முறை ஆகியனவும் விளக்கப்படுகிறது.
“வில்லும் வேலும் தொலையாத் தகைப்பின் பல்லவர் ஏத்தும் படிவழி நடுகல்” (மலைபடுகடாம் – 394)
வீடு எடுத்தல் சடங்கில் இறந்தவர் பயன்படுத்திய கத்தி, கைத்தடி அல்லது உடைகளை வைத்து வணங்குவது இந்தத் தொன்மையான ‘ஆயுத வழிபாட்டின்’ தொடர்ச்சியே ஆகும்.
சமூகவியல் மற்றும் மானிடவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் நோக்கும் போது, இது வெறும் ஒரு சடங்காக மட்டுமன்றி சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் மனித உளவியலின் வெளிப்பாடாக அமைகிறது. இதனை விளக்கும் முக்கிய மேலைத்தேயக் கோட்பாடுகளை நோக்குவது அவசியமாகின்றது.
எமில் துர்கெய்மின் புனிதமும் சாதாரணமும் (Sacred and Profane) என்ற கருத்தை நோக்கும் போது, இறந்த ஒரு சாதாரண மனிதரை (Profane) சடங்குகளின் மூலம் புனிதமான ஒரு தெய்வமாக (Sacred) மாற்றுவதன் மூலம் அந்தச் சமூகத்தின் விழுமியங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
மேலும் ஆர்னால்ட் வான் கென்னப்பின் ‘நிலை மாற்றச் சடங்குகள்’ (Rites of Passage) கோட்பாட்டை நோக்கும் போது, இவர் மனித வாழ்க்கையின் மாற்றங்களை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார். முதலாவது பிரிவு (Separation) – மரணம் ஒரு நபரைச் சமூகத்திலிருந்து பிரிக்கிறது. இடைநிலை (Liminality) – இறந்ததிலிருந்து ‘வீடு எடுத்தல்’ சடங்கு நடைபெறும் வரை அந்த ஆன்மா சமூகத்திற்கும் தெய்வ நிலைக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் அலைவதாகக் கருதப்படுகிறது. இணைப்பு (Incorporation) – ‘வீடு எடுத்தல்’ சடங்கு மூலம் அந்த ஆன்மா மீண்டும் குடும்பத்திற்குள் ஒரு ‘தெய்வமாக’ இணைக்கப்படுகிறது. இதுவே அந்த மாற்றத்தின் முழுமையாகும்.
மேலும் சிக்மண்ட் பிராய்டின் ‘துயரமும் துயரம் களைதலும்’ (Sigmund Freud – Mourning and Melancholia) கோட்பாட்டின்படி உளவியல் ரீதியாகப் பார்த்தால், இந்தச் சடங்கு ஒரு ‘ஆன்மீகச் சிகிச்சை’ ஆகும். ஒரு பிரியமானவரை இழந்த துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர் “அவர் மீண்டும் வீட்டுக்கே வந்துவிட்டார்; இனி நம்மைப் பாதுகாப்பார்” என்று நம்புவது அவர்களின் ஆழ்மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இறந்தவரை ஒரு பயங்கரமான ஆவியாகப் பார்க்காமல், அன்பான தெய்வமாக மாற்றும் இந்த உளவியல் மாற்றம் குடும்பத்தினரின் குற்ற உணர்வை நீக்கி நிம்மதியைத் தருகிறது.
‘வீட்டுக்கழைத்தல்’ என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல; அது ஒரு சமூக இயந்திரம். இது மரணம் என்ற இழப்பை ஒரு புனிதமான வழிபாட்டு நிகழ்வாக மாற்றி, குடும்ப உறுப்பினர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரு கலாசாரத் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.

ஹெர்பர்ட் ஸ்பென்சரின் ‘முன்னோர் வழிபாட்டுக் கோட்பாடு’ குறிப்பிடத்தக்கது. ஸ்பென்சர் தனது சமூகவியல் கோட்பாடுகளில் மனிதர்களின் மத நம்பிக்கையின் ஆரம்பப் புள்ளியே ‘ஆவி வழிபாடு’ (Ghost Worship) தான் என்கிறார். ஆதி மனிதன் கனவில் தோன்றும் இறந்தவர்களின் உருவங்களைக் கண்டு பயந்து, அவர்களைத் திருப்திப்படுத்த உணவும் வழிபாடும் செய்தான். மலையகத்தில் ‘வீட்டுக்கு அழைத்தல்’ சடங்கில் படையலிடுதல் மற்றும் பூசாரி பாடும் பாடல்கள், ஸ்பென்சரின் இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில், மரணத்திற்குப் பிந்தைய வாழ்வு குறித்த மனிதனின் ஆதி நம்பிக்கையை நிரூபிக்கின்றன.
மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தை ‘தெய்வம்’ என்ற புதிய அடையாளத்தால் நிரப்புவதன் மூலம் அந்தச் சமூகம் தனது தொடர்ச்சியை உறுதி செய்கிறது. மேலே குறிப்பிட்ட மேலைத்தேயக் கோட்பாடுகளைக் கொண்டு ‘வீட்டுக்கு அழைத்தல்’ சடங்கு எவ்வாறு ஒரு குடும்பத்தின் உளவியல் மற்றும் சமூகச் சமநிலையை மீட்டெடுக்கிறது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
மலையகத்தில் பொதுவாக ஒரு நபர் இறந்து ஓராண்டு முடிந்த பிறகு வரும் அதே நாட்களில் இந்தச் சடங்கு நடத்தப்படும். குடும்பத்தில் ஏதேனும் சுப காரியங்கள் (திருமணம், காதுகுத்து) செய்யத் திட்டமிடும்போது, அதற்கு முன்னதாக முன்னோர்களின் ஆசி வேண்டி இந்தச் சடங்கைச் செய்வது கட்டாயமாகக் கருதப்படுகிறது. இந்தச் சடங்கு பெரும்பாலும் ஒரு பூசாரி அல்லது குடும்பப் பெரியவர் முன்னிலையில் மாலை ஆறு அல்லது ஏழு மணிக்குத் தொடங்கும். அந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். பூசாரியே ‘வீட்டுக்கு அழைத்தல்’ சடங்கில் முக்கியமானவர். இறந்தவர் எந்த அறையில் இறந்தாரோ அந்த அறையிலேயே இந்தச் சடங்கு நிகழ்த்தப்படும். சில நேரங்களில் வேறு ஏதாவது இடத்தில் இறந்து பின்னர் வீட்டுக்குக் கொண்டுவந்திருந்தால், பிரேதம் வைக்கப்பட்ட அந்த இடத்தில் இந்தச் சடங்கை நிகழ்த்துவர்.
இச்சடங்கு நிகழ்ச்சிக்கு ‘உடுக்கை’ மிகவும் முக்கியமானது. அத்தோடு கையில் சாட்டையும் ‘சக்தி’ பொருந்திய தடியும் (சில இடங்களில் மந்திரக் கோல் என்று சொல்வார்கள்) இருக்கும். இவற்றைப் பூசாரி வைத்திருப்பார். தரையில் அமர்ந்து கொண்டுவந்த பொருட்கள் அனைத்தையும் முறையாக அடுக்கி வைப்பார், பூசாரி. விளக்கு, கற்பூரம், இளநீர், தின்பண்டங்கள், தேங்காய், சாராயம், சுருட்டு, நூல் என்பன முக்கியமான பொருட்கள். முதலாவதாக முத்துகளைப் போட்டு சம்பிரதாயமாக ‘வீட்டுக்கு அழைத்தல்’ சடங்கைப் பூசாரி தொடங்குவார். பின்னர் மெதுவாக உடுக்கை இசைத்துப் பாடல்களைப் பாடுவார். இதில் பல்வேறு காவல் தெய்வங்களையும் — உதாரணமாக மாரி, காளி, மாடன், மதுரைவீரன் போன்ற தெய்வங்களை — அழைத்து, அந்தத் தெய்வங்களிடமிருந்து தான் இந்த ஆத்மாவை வீட்டுக்கு அழைத்து வரப்போகிறேன்; அதற்குத் துணையாக நீங்களும் என்னோடு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். இவ்வாறு அழைக்கப்படும் தெய்வங்கள் சமூகத்துக்குச் சமூகம் வேறுபடுகின்றன. இறுதியாக மாடனை அழைத்து, மாடனோடு வீட்டின் உறவினர் ஒருவரையும் அவரோடு இன்னும் சில ஆண்களையும் சேர்ந்து ஆத்மாவை அழைத்து வரச் சொல்வார்கள். பெரும்பாலும் பங்காளிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் எல்லைக்கோ, ஆற்றங்கரைக்கோ அல்லது இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கோ செல்வார்கள். இறந்தவருக்குப் பிடித்த உணவுகள் (சைவம் அல்லது அசைவம்), சுருட்டு, வெற்றிலை பாக்கு, துணிமணிகள் போன்றவை படையலாகக் கொண்டு செல்லப்படும். பூசாரி உடுக்கையடித்து பாடல்களைப் பாடி இறந்தவரின் ஆன்மாவை அந்த இடத்திற்கு வருமாறு அழைப்பார். இறந்தவரின் பெயரைச் சொல்லி, “நீ எங்களை விட்டுப் போகவில்லை; மீண்டும் உன் வீட்டிற்கே வந்து எங்களைக் காக்க வேண்டும்” என்று உருக்கமாக வேண்டுவார்கள்.

அந்த ஆன்மா வந்ததற்கான அடையாளமாக ஒரு கல்லைத் தேர்ந்தெடுப்பார்கள் அல்லது ஒரு செப்புக் கலசத்தில் புனித நீரை நிரப்பி அதில் அந்த ஆன்மாவை ஆவாகனம் செய்வார்கள். சில பகுதிகளில் பூசாரி ஒரு கத்தியை ஏந்தி அதன் நுனியில் ஒரு பூவை வைப்பார். அந்தப் பூ அசையும்போது ஆன்மா வந்துவிட்டதாகக் கருதப்படும். பெரும்பாலும் பூசாரி அல்லது வீட்டில் நெருங்கிய உறவினரின் உடலிலும் ஆத்மா புகுந்து கொள்ளும். ஆன்மா புகுந்த நபர் அந்த இறந்த நபர் போலவே பிரதி செய்வார். நம்பிக்கையை நீக்கிப் பார்க்கும் போது, இது ஓர் ஆற்றுகை போலவே தோன்றும். இது பெரும்பாலும் நள்ளிரவு 12 மணியளவில் தான் நடைபெறும். பின்னர் அனைவரும் ஊர்வலமாக வீட்டிற்கு வருவர். ஆன்மா குடிகொண்டதாகக் கருதப்படும் பூசாரி அல்லது நபர் முன்னால் ஆடிக்கொண்டே வருவார். அவர் கையில் அடையாளக் கல் அல்லது பிடி மண் இருக்கும்; அதனையும் சுமந்து கொண்டு ஆடி வருவார். பின்னால் உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டு வருவார்கள். வழியில் சந்திக்கும் கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டு, ஊர் எல்லையில் ஒரு தேங்காய் உடைக்கப்படும். இது அந்த ஆன்மாவுடன் வரும் பிற தீய சக்திகளைத் தடுப்பதற்காகச் செய்யப்படுவதாகும்.
வீட்டிற்கு வந்தடைந்ததும் சுமந்து வந்த கல்லை அல்லது பிடி மண்ணை நேரடியாக உள்ளே கொண்டு செல்ல மாட்டார்கள். வீட்டின் வாசலில் கழிப்புக் கழிப்பார்கள். பின்னர் இறந்தவரின் காலடிகள் வீட்டிற்குள் நுழைவதைக் குறிக்கும் வகையில் வாசலில் மஞ்சள் நீர் தெளிக்கப்படும். வீட்டின் பூஜை அறையில் அல்லது ஒரு தனிப் பகுதியில் அந்த அடையாளப் பொருள் (கல் அல்லது பிடி மண்) வைக்கப்படும். அதன் மீது புதிய ஆடைகள் சாற்றப்பட்டு, சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்படும். அப்போது முதல் அந்த ஆன்மா அந்த வீட்டின் ‘காவல் தெய்வமாக’ மாறுகிறது. இதற்குப் பிறகு அவர்கள் ‘முன்னோர்கள்’ அல்லது ‘சாமி’ என்று அழைக்கப்படுவார்கள். இந்தச் சடங்கில் தந்தை வழி உறவினர்கள் அனைவரும் கலந்துகொள்வது அவசியம். இது குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துகிறது. வீட்டுக்கு அழைத்தல் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல. அது தமிழர்களின் நன்றியுணர்வையும் முன்னோர்கள் மீதான தீராத அன்பையும் பறைசாற்றும் ஒரு நிகழ்வு. “நீ இறந்த பிறகும் எங்களோடுதான் இருக்கிறாய்” என்ற ஆறுதலை குடும்பத்தினருக்கு இந்தச் சடங்கு வழங்குகிறது. நவீன காலத்தில் பல மாற்றங்கள் வந்தாலும், கிராமப்புறங்களில் இன்றும் இந்த மரபு அதன் தொன்மை மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சடங்கு முறையில் மாவட்டத்திற்கு மாவட்டம் மற்றும் சமூகத்திற்குச் சமூகம் சில மாற்றங்கள் இருக்கின்றன; ஆனால் மரபு தொடர்ந்து பேணப்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘கிராமியத் தெய்வ வழிபாட்டு’ முறையைப் பின்பற்றுபவர்களிடையே இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
வீட்டுக்கு அழைத்தல் சடங்கில் பாடப்படும் மந்திரங்களும் பாடல்களும் மிகவும் உருக்கமானவை. இவை பெரும்பாலும் ‘அழைப்புப் பாடல்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இறந்தவர் எங்கு இருந்தாலும் பாசத்திற்குக் கட்டுப்பட்டு மீண்டும் தன் இல்லத்திற்கு வர வேண்டும் என்பதே இப்பாடல்களின் மையக்கருத்து. அந்தப் பாடல்களில், திசை போற்றி மற்றும் எல்லைத் தெய்வ வழிபாடு முதலில் இடம்பெறும். பூசாரி அந்த ஆன்மாவை அழைப்பதற்குக் காவலாக ஊர் எல்லைத் தெய்வங்களையும் திசைத் தெய்வங்களையும் நோக்கிப் பாடுவார். உதாரணமாக பின்வரும் பாடலை குறிப்பிடலாம்.
“எல்லைக் கருப்பாயி…
எம்மைக் காக்கும் பிடாரியே!
செல்லும் வழி விடம்மா…
சேதி சொல்ல நேரமாச்சு!
காத்து கருப்பு அண்டாம…
கை கொடுத்துக் கூட்டி வர
கோட்டை வாசல் திறந்து…
வழி விடம்மா மாரியம்மா!”
மேலும் ஆன்மாவைத் தேடி அழைக்கும் பாடல்களில், ஆன்மா எங்கு தங்கியிருக்கும் என்று ஊகித்து, பூசாரி அவ்விடங்களைச் சொல்லி அழைத்து வருவார். இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம், அவர் வாழ்ந்த இடங்கள் ஆகியவற்றை இப்பாடல் விவரிக்கும்.
“காட்டோரம் போயிருப்பியோ…
கானகத்தில் நின்றிருப்பியோ?
ஆத்தோரம் அமர்ந்திருப்பியோ…
ஆலமர நிழலிருப்பியோ?
பேரச் சொல்லி அழைக்க வந்தோம்…
பிஞ்சு முகம் பார்க்க வந்தோம்!
வாசம் உள்ள வீட்டிற்கு…
வரிசையோடு வாரும் ஐயா”
மேலும் இறந்தவர் விட்டுச் சென்ற பிள்ளைகள், பேரன், பேத்திகள் படும் துயரத்தைப் பாடி, ஆன்மாவின் மனதைக் கரைக்க பூசாரி முயல்வார். இது சடங்கில் கலந்துகொள்பவர்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்யும்.
“பெத்த பிள்ளை அழுகுதைய்யா…
வாசல் படி பார்க்குதைய்யா!
கட்டிய பொண்டாட்டி…
கண்ணீரில் நிற்குதையா!
பங்காளிக் கூட்டம் எல்லாம்…
பந்தி வைக்கக் காத்திருக்கு!
சொந்தம் எல்லாம் கூடி நிற்க…
சோகம் தீர்க்க வாரும் ஐயா!”
அடுத்து, வீட்டின் பெருமையையும் படையலையும் பாடுதல், வீட்டிற்கு வந்தால் என்னென்ன சிறப்புகள் காத்திருக்கின்றன, என்னென்ன உணவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பூசாரி விவரிப்பார்.
“மஞ்சள் நீர் தெளிச்சிருக்கோம்…
மங்கலமாய் காத்திருக்கோம்!
புத்தாடை எடுத்திருக்கோம்…
பூச்சூடி அழைக்க வந்தோம்!
பிடிச்ச சோறு படைச்சிருக்கோம்…
பிரியமா வாரும் ஐயா!
குலதெய்வம் ஆகி நின்று…
குறைகளைத் தீர்க்க வாரும்..”
இப்பாடல்களின் மெட்டு பெரும்பாலும் ‘ஒப்பாரி’ மற்றும் ‘சிந்து’ மெட்டுகளின் கலவையாக இருக்கும். ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கி, ஆன்மா வருவதாகக் கருதப்படும் நேரத்தில் உடுக்கைச் சத்தம் வேகமெடுக்கும். அந்த நேரம் உடுக்கையும் ஆட்டமும் அதிகமாகும். பார்ப்பவரை நடுங்க வைக்கும் தன்மை அதில் இருக்கும்; அது பூசாரியின் குரல்வளத்திலும் வெளிப்படும். பூசாரி பாடும்போது கையில் வேப்பிலை அல்லது பிரம்பை வைத்துக்கொண்டு நிலத்தில் தட்டி ஆவேசமாகப் பாடுவார். இந்தப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது ஒரு பூ விழுந்தாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட அடையாளம் தெரிந்தாலோ, ஆன்மா பாசத்திற்குக் கட்டுப்பட்டு வந்துவிட்டதாக மக்கள் நம்புகிறார்கள். பின்னர் அடுத்த நாள் காலை திவசம் இடம்பெறும். இந்தச் சடங்குகள் பெரும்பாலும் குடும்ப வழக்கம் மற்றும் சாஸ்திரங்களின்படி மாறுபட்டாலும், பொதுவான நடைமுறைகளை நோக்கும் போது, முதலாவதாக ஒரு வருடத் தீட்டுக் கழித்தல் இடம்பெறும். இறப்பு நிகழ்ந்த ஒரு வருடத்திற்குள் அந்தக் குடும்பத்தில் சுப காரியங்கள் தவிர்க்கப்படும். ஓராண்டு முடிவில் செய்யப்படும் இந்தச் சடங்கிற்குப் பிறகு குடும்பத்தினர் மீண்டும் கோவிலுக்குச் செல்லவும், பண்டிகைகளைக் கொண்டாடவும் அனுமதிக்கப்படுவர்.
அடுத்து சிராத்தம் என்று சொல்லப்படும் சடங்கு நடைபெறும். இறந்த அதே தமிழ் மாதம் மற்றும் அதே திதியில் இந்தச் சடங்கு செய்யப்படும். புரோகிதர்கள் முன்னிலையில் மந்திரங்கள் ஓதி, இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய வழிபாடு நடத்தப்படும். அரிசி மற்றும் எள் கலந்து பிண்டங்கள் செய்து, முறைப்படி நீர் வார்த்து முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்படும். இறுதியாகத் தானங்கள் வழங்குதல் இடம்பெறும். ஆண்டுத் திதியன்று தானம் செய்வது மிகுந்த புண்ணியமாகப் பார்க்கப்படுகிறது. புரோகிதர்களுக்கு வேட்டி, அரிசி, காய்கறிகள் மற்றும் தட்சிணை வழங்கும் வழக்கம் காணப்படுகிறது. அடுத்து முக்கியமானது அன்னதானம். இறந்தவரின் நினைவாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் ஏழை எளியோருக்கும் அறுசுவை உணவு வழங்குவது மலையகத்தில் மிக முக்கியமான நடைமுறையாகும். மறைந்தவருக்குப் பிடித்த உணவுகளைப் படைத்து வழிபடுவதும் வழக்கம். பின்னர் பந்தி போடுதல் நடைபெறும். சடங்கு முடிந்ததும் ஊர் மக்களுக்கும் உறவினர்களுக்கும் பெரிய அளவில் விருந்து வைக்கப்படும். இதனைச் ‘சாமி கும்பிடுதல்’ என்று கிராமங்களில் அழைப்பார்கள்.
மலையகத்தில் ஓர் இறந்த ஆத்மா எவ்வாறு ஒரு குடும்பத்தின் குலதெய்வமாக மாறுகிறது என்பதை மேற்குறிப்பிட்ட சடங்கு முறைகள் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். இக்குலதெய்வம் பல தலைமுறைகள் கழித்து ஊர்க் கோவிலில் தெய்வமாக வழிபடப்படுகின்றது. உதாரணமாக, கருப்பண்ணசாமிக்கு அருகிலிருக்கும் சின்னக் கருப்பு, முனியாண்டி போன்றோர் பெரும்பாலும் இத்தகைய சடங்குகள் மூலம் தெய்வமாக்கப்பட்ட முன்னோர்களே ஆவர். ஏன் இது குலதெய்வமாக மாறுகிறது? என்றால் முதன்மையானது நன்றியுணர்வு. அந்த முன்னோரின் உழைப்பால் உருவான சொத்து அல்லது வம்சத்தை அனுபவிக்கும் சந்ததியினர் அவருக்குச் செய்யும் மரியாதையே இதன் அடிப்படை. அடுத்து பயமும் பக்தியும். மறைந்த முன்னோரின் ஆசி இல்லாவிட்டால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடைபடும் என்ற நம்பிக்கை இதனுடன் இணைந்துள்ளது. இறுதியாக, பாதுகாப்பு. வீட்டின் வாசலில் அல்லது மாடத்தில் அமர்ந்து அந்த ஆன்மா குடும்பத்தைக் காக்கும் என்ற ஆழமான நம்பிக்கை நிலவுகிறது. சுருக்கமாகச் சொன்னால், “மண்ணில் வாழ்ந்த மனிதன் – சடங்கால் தூய்மைப்படுத்தப்பட்டு, நம்பிக்கையால் தெய்வமாகி, காலத்தால் குலதெய்வமாக” நிலைபெறுகிறார். குலதெய்வ வழிபாடு என்பது வெறும் கடந்த காலத்தின் நினைவுப் பதிவு அல்ல; அது எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் ஒரு வாழ்வியல் முறையாகும். ஒரு மரத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக மண்ணில் புதைந்துள்ளனவோ, அவ்வளவு உறுதியாக அந்த மரம் வளரும். அதுபோல மனித வாழ்வின் வேர்கள் அவனது முன்னோர்களிடம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உசாத்துணைகள் நூல்கள்
சிவத்தம்பி, க., 1993. இலங்கை மலையகத் தமிழர் பண்பாடும் கருத்து நிலையும். உதயம் நிறுவனம். கொழும்பு.
சிவரத்தினம், சு., 2008. சடங்குகளினூடாக மட்டக்களப்பு. விபுலம் பதிப்பகம். மட்டக்களப்பு.
சோமசுந்தரம், அ., (ஆண்டு குறிப்பிடப்படவில்லை). இந்து வாழ்வியல் சடங்குகள்.
தருமராஜன், டி., 2006. சனங்களின் சாமிகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தமிழ்நாடு, இந்தியா.
தர்ஸ்டன், எட்கர். 2025. தென்னிந்திய ஈமச் சடங்குகள். மொழிபெயர்ப்பு, வானதி. சுவாசம் பதிப்பகம். சென்னை.
பக்தவத்சல பாரதி., 2012. மானிடவியல் கோட்பாடுகள். அடையாளம் வெளியீடு, சென்னை.
மௌனகுரு, சி., 1988. சடங்கிலிருந்து நாடகம் வரை. நாகலிங்கம் நூலாலயம். யாழ்ப்பாணம்.
வேல்முருகு, ந., 1993. மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும். வாசகர் பதிப்பகம்.
சஞ்சிகைகள்
குன்றின் குரல், ஆண்டு 12, இதழ் 03, ஜூலை – செப்டம்பர் 1993, பக். 19–20
குன்றின் குரல், ஆண்டு 13, இதழ் 01, ஜனவரி – மார்ச் 1994, பக். 19–20
நட்புறவுப் பாலம், இதழ் 12, செப்டம்பர் 1987, பக். 14–16
நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர், ஆகஸ்ட் 1993, பக். 25–27
பண்பாடு, இதழ் 02, செப்டம்பர் 1992, பக். 30–56



