இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
29 நிமிட வாசிப்பு

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 3

February 23, 2026 | Ezhuna

கோப்பி, தேயிலைத் தோட்ட உழைப்பிற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை மலையகத் தமிழர்கள், 200 ஆண்டுகள் கழித்தும் தங்கள் வழிபாட்டு மரபுகளையும், சடங்கு முறைகளையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அவர்களின் சமூக வாழ்வியலில் வழிபாடு அல்லது சடங்கு என்பது வெறும் மத நிகழ்வன்று; அது சமூகத்தின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் உயிர்த்துடிப்புள்ள பண்பாட்டுச் செயல்முறையாகவும் உள்ளது. எனினும், சமகால மாற்றங்களால் இச்சடங்குகள் அருகி வருவதால், அவற்றை ஆவணப்படுத்தும் தேவை உண்டாகின்றது. சடங்குகளை வெறும் வாய்மொழித் தகவல்களாக அல்லாமல், நேரடிச் செயல், இசை, உணர்வியல் ஆகியவற்றின் நிகழ்த்துகை (Performance) வடிவமாகப் புரிந்துகொள்ள, நிகழ்த்துகை ஆய்வு அணுகுமுறை அவசியமாகின்றது. அந்தவகையில் இத்தொடர் ‘நிகழ்த்துகை நோக்கில் மலையகத்தின் வழிபாடுகளும், சடங்குகளும்’ எனும் தலைப்பில் எழுதப்படுகின்றது. இது வாழ்க்கைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், கலைகளோடு இணைந்த சடங்குகள் எனப் பல அடுக்குகளில் ஆராயப்படும். நிகழ்த்துகை முறைமைகளை ஆவணப்படுத்துவதன் மூலம், மலையகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகவும் இது அமையும்.

மரணச் சடங்குகள் 

மரணச் சடங்குகள் என்பவை வெறும் உடல் சார்ந்த இறுதி நிகழ்வுகள் மட்டுமல்ல; அவை சமூகத்தின் ஆன்மிகம், தத்துவம், உறவுமுறை மற்றும் வாழ்வியல் விழுமியங்களின் ஆழமான வெளிப்பாடுகளாகும். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் கடந்து வரும் பதினாறு நிலைகளில், இறுதிச் சடங்கு என்பது மிகவும் முக்கியமானது. மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல; மாறாக அது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லும் மாறுதல் அல்லது இடப்பெயர்வு என்று தமிழ்ப் பண்பாடு கருதுகிறது. இந்த மாறுதல் நிலையில் ஆன்மா அமைதியாகவும் பாதுகாப்பாகவும் அடுத்த நிலையை அடையச் செய்வதே இச்சடங்குகளின் அடிப்படை நோக்கமாகும். இச்சடங்குகள் பிரிக்க முடியாத மூன்று நிலைகளைக் கொண்டுள்ளன: பிரிநிலை (Separation), மாறுநிலை (Transition), மற்றும் இணைநிலை (Incorporation). இக்கட்டுரை மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மரணச் சடங்குகளின் நிகழ்த்துகை நுணுக்கங்கள், அவற்றின் பின்னணியில் உள்ள தத்துவங்கள் மற்றும் நவீனகால மாற்றங்களை விரிவாக ஆராய்கிறது.

இலங்கை மலையகத் தமிழ்ச் சமூகம் என்பது ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு விளங்கும் ஒரு சமூகமாகும். பிரித்தானியக் குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து தேயிலை மற்றும் கோப்பித் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்துவரப்பட்ட இச்சமூகத்தினர், தங்களுடன் தமது பூர்விகக் கலாசாரம், மதம் மற்றும் சடங்கு முறைகளையும் கொண்டு வந்தனர். காலப்போக்கில் இவர்கள் வாழ்ந்த தோட்டப் பகுதிகளின் புவியியல் சூழல், தனிமைப்படுத்தப்பட்ட வாழ்விடம் (Ghetto Lifestyle) மற்றும் பொருளாதாரக் காரணிகளால் இவர்களது சடங்கு முறைகள் புதிய பரிமாணங்களைப் பெற்றன. குறிப்பாக, ஒரு மனிதனின் வாழ்வின் இறுதிக் கட்டமாகக் கருதப்படும் மரணச் சடங்குகள், மலையகத் தமிழர்களின் சமூகக் கட்டமைப்பு, சாதியப் படிநிலைகள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளின் வெளிப்பாடாகத் திகழ்கின்றன. இச்சடங்குகள் வெறும் துயர வெளிப்பாடாக மட்டுமன்றி, சமூக ஒற்றுமை, வர்க்க அடையாளம் மற்றும் பாரம்பரியத் தொடர்ச்சியை நிலைநிறுத்தும் வழிமுறையாகவும் அமைகின்றன. இச்சமூகத்தினரில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதால், பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் சுழற்சி குறித்த வேதகால மற்றும் ஆகம விதிகளின் தாக்கம் இவர்களது சடங்குகளில் ஆழமாகப் பதிந்துள்ளது. மரணம் குறித்த இவர்களது அணுகுமுறை, உலகியல் வாழ்வின் நிலையாமையை (Impermanence) உணர்த்தும் அதேவேளையில், இறந்தவர் ஒரு மேலான உலகிற்குச் செல்வதை உறுதிப்படுத்தும் சடங்கியல் கடமைகளையும் உள்ளடக்கியுள்ளது.

மலையகத் தமிழர்களிடையே நிலவும் ஒரு பொதுவான நம்பிக்கை என்னவென்றால், ஒரு நபர் தனது நீண்டகாலக் கனவுகளை அல்லது ஆசைகளை நிறைவேற்றாமல் இறந்துவிட்டால், அவர் ஒரு தீய ஆவியாக மாறித் திரும்புவார் என்பதாகும். இத்தகைய நம்பிக்கைகள் மரணச் சடங்குகளை மிகத் துல்லியமாகவும் பக்தியுடனும் நடத்த வேண்டிய அவசியத்தை உருவாக்குகின்றன. ஆன்மா சாந்தி அடையவில்லை எனில், அது குடும்பத்தினருக்குத் துன்பத்தை விளைவிக்கும் என்ற அச்சம் இச்சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதன் அடிப்படையில் சடங்குகளும் அதன் முறைமைகளும் மிகத் தெளிவாக பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்துள்ளன.

இச்சடங்கானது ஓர் உயிர் உடலை விட்டு பிரியும் முன்னரே தொடங்கி விடுகின்றது; இது வயதாகி அல்லது நீண்டகாலம் நோய்வாய்ப்பட்ட ஒருவரின் மரணத்தின் போது நிகழும். திடீர் மரணங்களில் அல்லது வைத்தியசாலை மரணங்களில் இவ்வாறான சடங்குகள் இடம்பெறுவதில்லை. அதில் முக்கியமானது சேடமிழுத்தல்; ஓர் உயிர் போகாது இழுத்துக்கொண்டிருப்பதையே இவ்வாறு குறிப்பிடுவர். இச்சந்தர்ப்பத்தில் முதலில் பாலை ஊற்றுவர். அதன் பின்பும் உயிர் போகாது விட்டால், வெள்ளி அல்லது தங்கத்தைக் கரைத்து வாயில் ஊற்றுவர். பின்னர் உயிர் பிரிந்ததும் ஒப்பாரி வைக்கப்படுகிறது. ஒப்பாரி என்பது தமிழர் கலாசாரத்தின் தனித்துவம் என்று கூறலாம். ஒப்பாரியை கணவனுக்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, மாமியார்களுக்கு, மாமன்மாருக்கு எனத் தனித்தனியே வகைப்படுத்திப் பாடுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக ஒப்பாரியில், இறந்தவர் வாழ்ந்தபோது செய்த நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துக் கூறுவர். ஒப்பாரியை ‘ஒப்ப + ஆரி’ எனப் பிரித்து, ஒப்புச் சொல்லி அழுதல் எனப் பொருள் கொள்ளலாம். அத்தோடு பெண்களால் பாடப்படுவது என்றும், இறந்தவர்க்கும் அடுத்த பிற பொருள்களுக்கும் ஒப்புச் சொல்லிப் பாடப்படுவது என்றும் கூறப்படுகிறது. தமிழில் ஒப்பாரியைப் பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலை, புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு எனப் பல்வகையாகக் கூறுவர்.

மரணம் நிகழ்ந்த பின்னர் செய்யப்படும் சடங்குகள்

மலையகச் சமூகத்தில் ஒருவரின் மரணத்தைச் சுட்டிக்காட்டும்போது ‘செத்துவிட்டார்’ போன்ற நேரடியான சொற்களைப் பயன்படுத்த மாட்டார்கள். அதற்குப் பதிலாக, ‘சிவனடி சேர்ந்தார்’, ‘இறைவனடி சேர்ந்தார்’, ‘காலமானார்’ அல்லது ‘தவறிவிட்டார்’ போன்ற மங்கலமான பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நபர் வயது முதிர்ந்து மரணமடைவதை ஒரு நிறைவான வாழ்வின் முடிவாகக் கருதி, அதற்கான சடங்குகளை அதிக முக்கியத்துவத்துடன் நடத்துகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்பது ஒரு தனிமனித வாழ்வு அல்ல; அது ஒரு கூட்டு வாழ்வு. லயங்கள் எனப்படும் நீண்ட வரிசை வீடுகள், ஒருவரின் வீட்டுத் துக்கத்தை மற்றொருவரின் வீட்டு வாசலுக்கு மிக அருகாமையில் கொண்டு வருகின்றன.

துக்கத்தைப் பகிர்தல்: ஒரு லயத்தில் ஒரு உயிரிழப்பு நேர்ந்தால், அந்த லயம் முழுவதும் ஒரு மயான அமைதி நிலவும். இது வெறுமனே ஒரு சடங்கு அல்ல; மாறாக, ‘ஒருவர் துயரம் அனைவரது துயரம்’ என்ற வாழ்வியல் தத்துவத்தின் வெளிப்பாடாகும்.

பொருளாதாரப் பங்களிப்பு: மரண வீட்டின் செலவுகள் என்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் சுமையாகும். இதைக் குறைக்க, லயத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களால் இயன்ற பணத்தையோ அல்லது அரிசி, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களையோ வழங்குவார்கள்.

மரணம் நிகழ்ந்த பின்னர் செய்யப்படும் அடுத்த விடயம் செய்தி அறிவித்தல். தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில், ஒரு மரணச் செய்தி என்பது உடலால் சுமந்து செல்லப்படும் ஒன்றாக இருந்தது. தோட்டத்தின் புவியியல் அமைப்பு மலைப்பாங்கானது என்பதால், ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குச் சென்று செய்தி சொல்வது கடினமான பணி. இதற்காகச் ‘செய்தி சொல்லிகள்’ அல்லது குடும்பத்தின் இளைஞர்கள் நியமிக்கப்படுவர்.

சலவைத் தொழிலாளி (வண்ணார்) மற்றும் சிகையலங்காரம் செய்வோர் (நாவிதர்) ஆகியோருக்கு முதலில் செய்தி அனுப்பப்படும். மரண வீட்டில் தீட்டுக் கழிப்பதற்கும், பிரேதத்தை மூடுவதற்குத் தேவையான வெள்ளைத் துணிகளை (மாற்று) வழங்குவதற்கும் இவர்களது வருகை அவசியம். நாவிதர் இறுதிச் சடங்கின் போது ‘கருமாதிக் காரியம்’ செய்பவர்களின் தலைமுடியை மழிப்பதற்கும், கிரியைகளை வழிநடத்துவதற்கும் முக்கியப் பங்காற்றுவார். இவர்கள் வெறும் தொழிலாளர்களாக அன்றி, அந்தச் சமூகத்தின் சடங்கு ரீதியான பாதுகாவலர்களாகவே மதிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில், இறந்த செய்தி ‘பறையர்’ என்று கூறப்படுபவர்கள் மூலமாகவும் தோட்டம் முழுவதும் அறிவிக்கப்படும். இது ‘கேதம் சொல்லுதல்’ என்று கூறப்படும். கேதம் சொல்லச் செல்பவர்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நின்று இறந்தவர் பற்றிய செய்தியை அறிவிப்பார்கள். தற்போது இது வழக்கில் இல்லை. காரணம், நவீன மாற்றங்களால் உடனடிச் செய்திப் பரிமாற்றக் கருவிகள் தோன்றிவிட்டன. இப்போது, இக்குறிப்பிட்ட சாதியினர் இதனைச் செய்வதற்கு முன்வராமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தோட்டங்களில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அன்று அந்தத் தோட்டத்தில் வேலைக்குச் செல்லாமல் இருப்பது ஒரு மிக முக்கியமான அறமாகப் போற்றப்பட்டது. ஆரம்ப காலங்களில் வெள்ளைக்காரத் துரைகள் (Managers) வேலைக்கு வராத தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைப்பார்கள். இருப்பினும், தொழிலாளர்கள் தங்கள் உறவினரின் அல்லது சக தொழிலாளியின் இறுதி ஊர்வலத்திற்காகத் தண்டனைகளையும் பொருட்படுத்தாமல் வேலையைப் புறக்கணிப்பார்கள்.

ஒரு மரணச் சடங்கில் ஒட்டுமொத்தத் தோட்டமே பங்கேற்பது என்பது நிர்வாகத்திற்கு எதிரான ஒரு மறைமுகமான ஒற்றுமைப் பிரகடனமாகவும் அமைந்தது. “எங்களுக்குள் ஒருவருக்குப் பாதிப்பு என்றால், நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்” என்ற செய்தியை இது உரக்கச் சொன்னது. மரணவீட்டிற்கு வராத குடும்பங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சூழல் நிலவியது. இது ஒரு வகையான சமூகக் கட்டுப்பாடாக இருந்து, மக்களிடையே ஒருமைப்பாட்டைப் பேணியது. சமகாலத்தில் இவ்வாறான வழக்கங்கள் சில தோட்டங்களில் மாத்திரமே பேணப்படுகின்றன.

தோட்டப்புறச் சடங்குகளில் காணப்படும் ஒவ்வொரு செயலும் ஒரு சமூகக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மரணம் நிகழ்ந்த வீட்டில் அடுப்பு எரிக்கப்படாது. நெருங்கிய உறவினர்கள் அல்லது பக்கத்து லயத்து மக்கள் உணவைச் சமைத்துக் கொண்டு வருவார்கள். இது துக்கத்தில் இருப்பவர்களின் பசியை உணர்ந்து செயற்படும் ஓர் உன்னதமான மனிதநேயமாகும். ஆனால் சமகாலத்தில் லயக் குடியிருப்புகள் தனிவீட்டுத் திட்டங்களாக மாற்றமடைந்து வருவதால், பழைய அந்தத் தீவிரமான கூட்டு வாழ்வுச் சூழல் சற்றுத் தளர்வடைந்துள்ளது. இருப்பினும், இன்றும் தோட்டப்புறங்களில் ஒரு மரணம் நிகழும்போது, அந்தப் பிரதேசம் முழுவதும் ஒரு நிமிடம் ஸ்தம்பிப்பதையும், மக்கள் சாதி, மத வேறுபாடின்றி ஒன்று கூடுவதையும் காணலாம். இது அவர்களின் முன்னோர்கள் கசப்பான தோட்ட வாழ்க்கையில் தப்பிப்பிழைக்கக் கற்றுக்கொண்ட ‘கூட்டுப் பாதுகாப்பு’ (Collective Security) என்ற ஆயுதத்தின் எச்சமாகும்.

மரணம் நிகழ்ந்த பின்னர் இடம்பெறும் சடங்குகளை எடுத்துக்கொண்டால், அதில் முதலாவதான மரணத் தீட்டை கழிக்கும் சடங்கு முக்கியமானது. மரணத் தீட்டு என்பது தோட்டப்புறங்களில் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். முதல் செயற்பாடு குளிப்பாட்டுதல் மற்றும் கட்டுதல் ஆகும்.

இறந்தவரின் உடலைச் சுத்தப்படுத்துவது மிக முக்கியமான சடங்கு. இறந்த ஒருவரை ‘சடலமாக’ அல்லாமல், ‘இறைவனடி சேர்ந்தவராக’ கருதிச் செய்யப்படும் முதல் மரியாதை இதுவாகும். பெரும்பாலும் வீட்டின் முற்றத்தில் அல்லது மறைவான ஓரிடத்தில் வைத்து பிரேதத்தைக் குளிப்பாட்டுவார்கள். இதற்கு மஞ்சள் கலந்த நீர் அல்லது வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படும். இது உடலைச் சுத்தப்படுத்துவதுடன், கிருமி நீக்கமாகவும் அமைகிறது.

மேலும், கட்டுதல் என்று நோக்கும் போது, உடலின் கால் பெருவிரல்களையும் கைகளையும் ஒன்றாகக் கட்டுவது அதன் வடிவத்தை ஒழுங்காகப் பேணுவதற்காகச் செய்யப்படுகிறது. மனித உடல் இறந்த சில மணிநேரங்களில் விறைக்கத் தொடங்கும் (Rigor Mortis). அப்போது கைகள் மற்றும் கால்கள் கோணலாகவோ அல்லது விரிந்தோ இருந்தால், அதைப் பெட்டிக்குள் வைப்பது சிரமமாகும். எனவே, கைகளையும் கால் பெருவிரல்களையும் ஒன்றாகச் சேர்த்து வெள்ளைத் துணியால் அல்லது நூலால் கட்டுவார்கள். இது அந்த உடல் ஓர் அமைதியான உறக்க நிலையில் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது. இதனைப் பின்வருமாறு வகைப்படுத்துவார்கள்:

கைக்கட்டு: இரண்டு கை விரல்களையும் இணைத்துக் கட்டுதல்; இது உடலின் சக்தியை ஒருமைப்படுத்துவதற்காகக் கட்டப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது. 

கால்கட்டு: இரண்டு கால் கட்டை விரல்களையும் சேர்த்துக் கட்டுதல்; உடல் அசையாமல் இருக்கக் கட்டப்படுகின்றது. 

நாடிக்கட்டு: உச்சந்தலை முதல் நாடி வரை கட்டுதல்; முகம் சிதையாமல் இருக்கக் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. அத்தோடு மூக்கினுள் வெள்ளை நிறத்திலான பஞ்சும் வைக்கப்படுகின்றது.

பின்னர் இறந்தவருக்குப் பிடித்தமான ஆடைகள் அல்லது புத்தாடைகள் அணிவிக்கப்படும். சுமங்கலிப் பெண்கள் இறந்தால், அவர்களுக்குப் பட்டுப்புடவை மற்றும் பூக்கள் சூட்டப்படும். இது அந்த ஆன்மா தனது பயணத்தைத் திருப்தியுடன் தொடங்குவதற்கான குறியீடாகும்.

பின்னர் இறந்தவரைப் பெட்டியில் வைத்து, தேங்காய் உடைப்பர். அதன் பின்னர் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி, பெட்டியைச் சுற்றிக் காட்டுவர். பின்னர், ஒரு பக்கத்தில் விளக்கு வைக்கப்படுகிறது. அரிசிக் கொத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் வெற்றிலை ஒன்றை நேராக ஈர்க்கில் குத்தி நிலைநிறுத்துகின்றனர். அதனுடன் பழங்களும் வைக்கப்படுகின்றன. மறுபுறத்தில் உடைத்த தேங்காயின் பாதியில் உப்பு நிரப்பி, அதில் ஒரு திரியிட்டு எரிக்கப்படும்.

கைகளில் சாணம் வைத்தல் என்பது ஓர் அரிய மற்றும் பழமையான மரபாகும். இறந்தவரின் கையைச் சாணத்தில் பதித்து, அதைச் சுட்டுத் திருநீறாக்குவது, அந்த நபரின் ஆன்மிக இருப்பை வீட்டில் நிலைநிறுத்துவதாகக் கருதப்படுகிறது. அந்தத் திருநீற்றை ஒரு கலசத்தில் வைத்துப் பூஜிக்கும் வழக்கமும் சில பகுதிகளில் உண்டு. இது தோட்டப்புறங்களுக்கே உரித்தான, மிகவும் அரிதான மற்றும் ஆச்சரியமான ஒரு மானிடவியல் சடங்காகும். இது பெரும்பாலும் சமகாலத்தில் செய்யப்படுவதில்லை.

இவ்வாறான சடங்குகளின் பின்னர், உறவினரின் விருப்பத்திற்கிணங்கவும் பொருளாதார வசதிக்கேற்பவும், ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மரணவீடு நடைபெறும். இரவு நேரங்களில் மரண வீட்டின் வாசலில் காய்ந்த மரக்கட்டைகளைக் கொண்டு தீ மூட்டி, அதைச் சுற்றி ஆண்கள் அமர்ந்திருப்பார்கள்; பெண்கள் இறந்த உடலுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள். குறிப்பிட்ட சில நேரங்களில் ஒப்பாரியும் வைத்துக் கொண்டிருப்பார்கள்.

இறந்த வீட்டின் ஓர் அறையைத் தேர்ந்தெடுத்து, பல ஆண்கள் ஒன்றிணைந்து சினிமாப் பாடல்களைப் பாடி ‘டோலக்’ இசைப்பர்; சோகப்பாடல்களே அதிகமாகப் பாடப்படும்.

மேலும், உறவினர்கள் வந்து ‘கோடி போடுதல்’ முக்கியமான நிகழ்வாகும். செத்த வீட்டிற்கு வருபவர்கள், இறந்தவர் ஆணாக இருந்தால் வேட்டி, லேஞ்சி கொண்டு வருவர்; பெண்ணாக இருந்தால் சேலை கொண்டு வருவர். இந்தக் கோடியானது ஒரு பாத்திரத்தில் தேங்காய், அரிசி என்பனவற்றுடன் வைத்துக் கொண்டுவரப்படும். மிகவும் உரித்துடைய சொந்தங்களே இவ்வாறு கொண்டு வருவார்கள்.

தோட்டங்களில், இறந்தவரின் வீட்டு முன்றலில் அல்லது வாசலில் ஒரு மேசை போடப்பட்டு, தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, புகையிலை என்பன வைக்கப்பட்டிருக்கும். அத்துடன் பக்கத்தில் ஒரு கொப்பியும் பேனையும் வைக்கப்பட்டிருக்கும். இறந்தவரின் உறவினர்கள், நண்பர்கள், அக்கொப்பியில் தமது பெயரை எழுதிவிட்டு, அவ்விடத்தில் தமக்கு விருப்பமான பணத்தைக் கையளித்துச் செல்வர். இவ்வாறு கொடுக்கப்படும் காசு ‘கட்டைமொய்’ எனப்படுகின்றது. இத்தொகை இறந்தவரின் வீட்டுக்கு உபகாரமாக அமைகிறது. மாமன் முறையானவர் கொண்டுவருவது ‘மாமன் சீரு’ எனப்படும்.

சில ஊர்களில் கும்மி அடிக்கும் வழக்கமும் காணப்பட்டது. ஆனால் சமகாலத்தில் கும்மி அடித்து ஒப்பாரி பாடும் முறை குறைந்துவிட்டது எனலாம்.

பிரேதத்தை வீட்டை விட்டு வெளியே எடுக்கும் முன், நெருங்கிய உறவினர்கள் அதை மூன்று முறை சுற்றி வருவார்கள். இது அந்த ஆன்மாவுடனான பந்தத்தை அறுப்பதைக் குறிக்கும் ஒரு குறியீட்டுச் சடங்காகும். பின்னர் பிரேதத்தை வெளியில் எடுத்து வாசலில் வைப்பார்கள்.

இம்மரணச் சடங்குகள் அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை. இதில் வயதும் அந்தஸ்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

குழந்தைகள் மற்றும் திருமணமாகாதவர்கள்: இவர்களுக்கு விரிவான சடங்குகள் செய்யப்படுவதில்லை. இவர்கள் ‘பாவமற்றவர்களாக’க் கருதப்படுவதால், இவர்களது மரணத்தின் போது பெரிய அளவில் கிரியைகள் நடத்தப்படுவதில்லை. அநேகமாக இவர்களது உடல் அமைதியாக அடக்கம் செய்யப்படும்.

பெரிய கங்காணிகள் மற்றும் முக்கியஸ்தர்கள்: தோட்ட நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்திய பெரிய கங்காணிகள் இறக்கும் போது, அந்தத் தோட்டமே திரண்டு வரும். அவர்களுக்கு மேளதாளங்களுடன் ஊர்வலம் நடத்தப்பட்டு, கல்லறைகள் (Monuments) கட்டப்படும். இது அவர்களின் அதிகாரத்தை மரணத்திற்குப் பின்னரும் நிலைநாட்டும் ஒரு முயற்சியாகும்.

இறந்தவரின் வீட்டின் அருகில் உள்ள ஆற்றங்கரையில் இருந்து வீட்டின் வாசல்வரை நீர்மாலை எடுக்கப்படும். இறந்தவரின் பிள்ளைகளை மாமன் வீட்டார் ஆற்றிற்கு அழைத்துச் சென்று குளிக்கச் செய்து, பூமாலை சூட்டி, வேட்டி மற்றும் பூணூல் (இடமிருந்து வலமாக) அணிவிக்கின்றனர். பின்னர் ஈரவேட்டியுடன் ஒரு குடத்தில் நீர் நிரப்பி வீட்டிற்குக் கொண்டு வருவர். அந்த நீரின் உதவியுடன் ‘அம்பட்டன்’ சடங்குகளைத் தொடங்குவார்.

அதனைத் தொடர்ந்து அரப்பு வைத்தல் நடைபெறும். அம்பட்டன் மாமன்மாரை எண்ணெய் அரப்பு வைக்க அழைப்பார். எண்ணெய்யைத் தொட்டவுடன் சட்டியில் கையைக் கழுவ வேண்டும்; கழுவிய கையை உதறக்கூடாது என்பதும் ஐதீகமாகும்.

இறந்தவர் ஆணாக இருந்தால் மாலை மாற்றி, மனைவியின் தலையில் குடத்து நீர் ஊற்றி, நெற்றிக் குங்குமத்தை அழித்து, தாலியையும் கழற்றி விடுவர். சில இடங்களில் இது கருமாதியன்று செய்யப்படும்.

இறந்தவருக்காக நெய்ப்பந்தம் பிடிக்கும் சடங்கில் பேரப்பிள்ளைகள் மட்டுமே பங்கேற்பார்கள்; பேரப்பிள்ளையில்லாதவர்களுக்கு இச்சடங்கு நடைபெறாது. இதனைத் தொடர்ந்து எண்ணெய் தொட்டு வைத்தல் நடைபெறும்.

பின்னர் ‘சீதேவி வாங்குதல்’ எனும் சடங்கு நடைபெறும். நவதானியங்கள் கலந்த சாணி உருண்டையை இறந்தவரின் வலது கையில் வைத்து அடையாளம் பதியச் செய்து, அதை மனைவியோ அல்லது வேறொருவரோ வாங்குவர். வாங்கிய சீதேவியை (சாணி உருண்டையை), இறந்தவர் உயிர் பிரிந்த இடத்திலுள்ள சுவரில் அடித்து வைப்பர். ‘எட்டு’ச் சடங்கு நடைபெறும் நாள் வரை அதற்கு நீர் ஊற்றப்பட்டு, அன்றைய தினம் அது ஆற்றில் விடப்படும்.

வாய்க்கரிசி போடுதல் இரண்டு முறையாக நடைபெறும். ஒன்று; வீட்டின் வாசலில், மற்றொன்று; புதைகுழி மேட்டில். பிரேதம் முச்சந்தியை அடைந்ததும், அம்பட்டனை அழைத்து, சில்லறைக் காசுடன் அரிசியை மூன்று முறை அள்ளிப்போடுவர். இதனைத் தொடர்ந்து, இறந்தவர் ‘மேலான உலகை’ அடைய வேண்டுமென உறவினர்கள் ஆசி கூறுவர். “சொர்க்கம் சேர்”, “கைலாசம் சேர்”, “வைகுண்டம் சேர்” என்பதே இவ் ஆசியாகும்.

பெட்டியைத் தூக்குவதற்கு முன்னதாக, நெருங்கிய உறவினர்கள் (பிள்ளைகள் மற்றும் துணைவர்) பிரேதத்தைச் சுற்றி மூன்று முறை வலம் வருவார்கள். ஒவ்வொரு சுற்றின் போதும் அந்த நபருடனான தங்கள் வாழ்நாள் உறவை நன்றியுடன் நினைவுகூர்வார்கள். பொதுவாகச் சடங்குகளில் வலமிருந்து இடமாகச் சுற்றுவது வழக்கம். ஆனால் மரணச் சடங்குகளில் சில பகுதிகளில் இடமிருந்து வலமாகச் சுற்றுவதும் உண்டு. இது வாழ்வின் தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது. சில தோட்டங்களில், வலம் வரும்போது ஒருவர் கையில் துளையிடப்பட்ட மண்பானையைச் சுமந்து வருவார். நீர் ஒழுகும் அந்தப் பானை மூன்றாம் சுற்றின் முடிவில் உடைக்கப்படும். இது உடல் அழியக்கூடியது, உயிர் வெளியேறிவிட்டது என்பதைக் குறிக்கும் வாழ்வியல் தத்துவமாகும்.

பின்னர் பிரேதப் பெட்டி மூடப்படும்; அதன் தலைப்பகுதி மாத்திரம் திறந்திருக்கும். பிரேதத்தின் தலைப்பகுதி வீட்டை நோக்கியும், கால்பகுதி போகும் வழியை நோக்கியும் கொண்டு செல்லப்படும். பின்னர் இறந்தவரின் வீட்டின் முன்புறமுள்ள முச்சந்தியில் வைத்து கொள்ளிக்குடம் உடைக்கப்படும். தாய்க்குத் தலைமகனும், தகப்பனுக்குக் கடைசி மகனும் கொள்ளிக்குடம் உடைப்பது வழக்கமாக உள்ளது. கொள்ளிக்குடம் ஏந்துபவர் மூன்று முறை பிரேதத்தைச் சுற்றி வருவார். அவரின் பின்னால் ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது பேர் சுற்றி வருவர். ஒவ்வொரு முறையும் சுற்றிவரும்போது அம்பட்டன் கொள்ளிக்குடத்தில் ஒவ்வொரு ஓட்டை போடுவார். பின்னால் வருபவர்கள் ஓட்டை வழியாக வரும் நீரை இரண்டு பக்கங்களிலும் தட்டிவிட்டு வருவர். மூன்று முறை சுற்றியபின் கொள்ளிக்குடத்தைத் தோளிலிருந்து பின்பக்கமாக எடுத்து அம்பட்டர் தரையில் போட்டு உடைப்பார். இதன் பின்னரே பிரேதம் தூக்கப்படும். கொள்ளிக்குடம் உடைத்தவரின் தலையில் முக்காடு இட்டு, பின்பக்கம் திரும்பிப் பாராது வீட்டுக்கு அழைத்துச் செல்வர்.

முச்சந்தியிலிருந்து பிரேதம் தூக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் பெண்கள் சுற்றி நின்று மாரடித்து, மூன்று முறை அழுதுவிட்டு வீடு செல்வர். அதேவேளையில், பிரேதத்தைத் தூக்கியவுடன் முச்சந்தியில் ஒரு சுண்டுத் தண்ணீரையும் புகையிலையையும் வைத்துவிடுவர். ஆண்களாயின் பீடி அல்லது சுருட்டு வைத்து விடுவர். பிரேதம் தூக்கிச் செல்லப்படும் போது முறுக்கப்பட்ட வேட்டியைப் பிரேதப் பெட்டியின் மேலாக ஒரு புறத்திலிருந்து மறுபுறமாக மாறிமாறி வீசி எறிந்து செல்வர். அத்துடன் சோளப்பொரியுடன் சில்லறைக் காசைக் கலந்து பிரேதப் பெட்டியின் மேலாக இறைத்துக் கொண்டும் செல்வர்.

தமிழ்நாட்டில் மலையக மக்களின் முன்னோர்கள் எரிக்கும் வழக்கத்தையே கொண்டிருந்தனர். ஆரம்பகாலத்தில் தோட்டங்களுக்குப் புலம்பெயர்ந்த மக்கள் தங்களின் பூர்விகக் கிராமத்து மரபுகளைப் பின்பற்றித் தகனம் (எரித்தல்) செய்வதையே விரும்பினர். ஆனால் மலையகத் தோட்டங்களில் பிணங்களைப் புதைக்கும் வழக்கம் நிலவுவதற்குப் பின்னால் பொருளாதார மற்றும் நடைமுறைக் காரணங்கள் உள்ளன. விறகுத் தட்டுப்பாடு மற்றும் தகனம் செய்வதற்கான அதிகப்படியான செலவு காரணமாகவே புதைக்கும் முறை பரவலானது. ஒரு உடலைத் தகனம் செய்ய ஏறத்தாழ 300 முதல் 500 கிலோ வரை விறகுகள் தேவைப்படும். இதற்கான கூலி, விறகு ஏற்றி வரும் செலவு மற்றும் சுடுகாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம் என அனைத்தும் ஒரு சாதாரணத் தொழிலாளியின் பல மாதச் சம்பளத்திற்கு இணையானது. மரணச் சடங்கிற்காக வாங்கும் கடன் அந்தத் தொழிலாளர் குடும்பத்தை மீள முடியாத வறுமையில் தள்ளியது.

தோட்டத் தொழிலாளர்களின் மிகக் குறைந்த வருமானத்தில் தகனம் செய்வதற்குத் தேவையான விறகுகளைச் சேகரிப்பதும், அதற்கான மேடையை அமைப்பதும் பெரும் சுமையாக இருந்தது. மேலும் தோட்டங்களில் மயானங்கள் பெரும்பாலும் தேயிலை அல்லது ரப்பர் மலைகளின் ஒதுக்குப்புறப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு காற்றின் திசையினால் தீ விபத்து அபாயமும் இருந்தது. மலைப்பாங்கான பகுதிகளில் காற்று வேகமாக வீசும். எரியும் சிதையிலிருந்து வெளிப்படும் பொறிகள் அருகிலுள்ள காய்ந்த தேயிலைச் செடிகளிலோ அல்லது ரப்பர் மரங்களிலோ பட்டால் பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. ஆகவே பிணங்களை எரிப்பதைக் காட்டிலும் புதைப்பதே பாதுகாப்பானதும் எளிமையானதும் எனக் கருதப்பட்டது.

மேலும், லயக் குடியிருப்புகளிலிருந்து வெகு தொலைவில், மலைகளின் உச்சியிலோ அல்லது சரிவுகளிலோதான் மயானங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவ்வளவு தூரத்திற்கு விறகுகளைச் சுமந்து செல்வது உடல் ரீதியாகவும் கடினமான பணியாக இருந்தது. அத்துடன் மழைக்காலச் சவால்களும் இருந்தன. மலையகத்தில் வருடத்தின் பெரும்பகுதியில் மழை பெய்யும். மழையில் நனைந்த விறகுகளைக் கொண்டு பிரேதத்தை எரிப்பது மிகவும் சிரமமான காரியம். பல மணிநேரம் உடல் எரியாமல் காத்திருக்க வேண்டிய சூழலைத் தவிர்க்க புதைக்கும் முறையே ஏற்றதாகக் கருதப்பட்டது. புதைக்கும் முறை வழக்கத்திற்கு வந்தபிறகு அதற்கெனத் தனித்துவமான சில சடங்குகள் உருவாகின.

அதில் முதலாவது குழி தோண்டுதல்; மயானத்தில் குழி தோண்டுவது என்பது ஒரு கூட்டுப் பணியாகும். இறந்தவரின் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்வந்து இந்தப் பணியைச் செய்வார்கள். இது ஒரு ‘சமூகக் கடமையாக’ப் பார்க்கப்பட்டது. கடினமான பாறை நிலங்களை உடைத்து ஆழமான குழிகளை உருவாக்குவது அவர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றியது. “மண்ணில் உழைத்தவன் மண்ணுக்கே திரும்புகிறான்” என்ற தத்துவம் இவர்களின் புதைக்கும் முறையில் ஆழமாகப் பதிந்துள்ளது. தேயிலைச் செடிகளுக்கு நடுவே அல்லது ரப்பர் மரங்களுக்குக் கீழே தங்களின் முன்னோர்கள் புதைக்கப்படுவதால், அவர்கள் இன்றும் தங்களோடு ஆவியாக வாழ்கிறார்கள் என்று தொழிலாளர்கள் நம்புகின்றனர்.

பிரேதம் இல்லத்திலிருந்து மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு அங்கே சில முக்கியக் கிரியைகள் நிகழ்த்தப்படுகின்றன.

ஈமக்கிரியைகள்: குழியின் நான்கு மூலைகளிலும் காசுகள் மற்றும் சில தானியங்களை வைப்பார்கள். இது அந்த நிலத்தின் தெய்வத்திடம் (பூமித்தாய்) இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு குறியீடாகக் கருதப்படுகிறது.

மண் போடுதல்: முதலில் நெருங்கிய உறவினர்கள் (ஆண் பிள்ளைகள் அல்லது பங்காளிகள்) மூன்று கை மண் எடுத்துக் குழியில் போடுவார்கள். இது அந்த ஆன்மாவுடனான பௌதிக உறவை முறித்துக் கொள்வதைக் குறிக்கும். பின்னர் மயானத் தொழிலாளர்கள் அல்லது ஊர் இளைஞர்கள் இணைந்து குழியை மூடுவார்கள்.

புதைக்கும் வழக்கத்திலும் கூட, தகனம் செய்யும் சடங்கின் எச்சமாகக் ‘கொள்ளி வைத்தல்’ போன்ற சில அடையாளச் சடங்குகள் நடைபெறும்.

மண்பானை உடைத்தல்: மகன் அல்லது தம்பி தலையில் மண்பானையைச் சுமந்து குழியைச் சுற்றிவந்து பின்னர் அதை உடைப்பார். இது “உடல் மண்ணுக்கு, உயிர் இறைவனுக்கு” என்ற தத்துவத்தின் வெளிப்பாடாகும்.

அடக்கம் செய்து முடித்த பின், குழியின் மேல் தலைப்பகுதியில் அகல் விளக்கு ஏற்றி வைத்தோ அல்லது இறந்தவருக்குப் பிடித்த உணவைப் படைத்தோ வழிபடுவார்கள்.

மேலும் நினைவுச் சின்னங்கள் என்று நோக்கும் போது, சுமைதாங்கி மற்றும் நடுகற்கள் வைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது. தோட்டப்புறங்களில் காணப்படும் ‘சுமைதாங்கிகள்’, குறிப்பாகப் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் நினைவாக அமைக்கப்படுகின்றன. தேயிலை மலைகளில் சுமை தூக்கி வருபவர்கள் தங்கள் சுமையைத் தற்காலிகமாக இறக்கி வைக்க இவை உதவுகின்றன. தான் சுமந்த சுமையை (கருவை) இறக்கி வைக்க முடியாமல் போனவள், பிறர் சுமையைத் தாங்குகிறாள் என்ற உயரிய நோக்கம் இதன் பின்னால் உள்ளது.

பெரிய கங்காணிகள் அல்லது சமூகப் பெரியவர்களுக்குச் சீமெந்து மேடைகள் கட்டி, அதில் அவர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தைப் பொறித்து வைப்பார்கள். இவை அந்தத் தோட்டத்தின் வரலாற்றைச் சொல்லும் ஆவணங்களாகக் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு தோட்டப்புற மரணச்சடங்குகள், தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் நிகழ்வாகச் சுருங்கிவிடாமல், ஒட்டுமொத்தத் தோட்டத்தின் ‘கூட்டுச் செயற்பாடாக’ (Collective Action) அமைகிறது. சவப்பெட்டி வாங்குவது முதல், மயானத்தில் குழி தோண்டுவது, சமையல் செய்வது என அனைத்துப் பணிகளும் பகிரப்படுகின்றன. 

‘மொய்’ எழுதும் பழக்கம், துக்கத்தில் இருக்கும் குடும்பம் பொருளாதார ரீதியாக நசுங்கிவிடாமல் இருக்க ஒரு தற்காலிகப் பாதுகாப்பை வழங்குகிறது.

புதைத்து முடிந்ததும், மயானத்தின் அருகில் கட்டப்பட்டிருக்கும் ஒன்றுகூடல் மடத்தில் அல்லது ஓர் இடத்தில் மரண சமுர்த்தி அமைப்பினரும் ஊர்ப் பெரியவர்களும் கூடி அந்த இறந்த வீட்டின் கணக்குகளை முடிப்பார்கள். சடங்கு நிகழ்த்திய நாவிதர் மற்றும் வண்ணாருக்கான சம்பளம் கொடுக்கப்பட்டு, என்னென்ன வரவு வந்தது, செலவு எவ்வளவு என்பதனைக் கணக்கிட்டு, மீதிப் பணத்தை குடும்ப உறுப்பினர்களில் ஒருவரிடம் ஒப்படைப்பர்.

இறுதியாகக் குடும்ப உறுப்பினர்கள் வரிசையாக நின்று வந்த அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாகக் கைகளைப் பிடித்து வணங்கி விடைகொடுப்பார்கள்.

இறந்தவரை அடக்கம் செய்த பின்னர் செய்யப்படும் சடங்குகள் 

புதைகுழியிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள், வீடு முழுவதும் நீரால் கழுவப்படும். வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் நீர் வைக்கப்படும். கதவின் வாசலில் உலக்கை குறுக்காக இடப்பட்டு, வெற்றிலையில் சாம்பலும் வைக்கப்பட்டிருக்கும். புதைகுழியில் இருந்து வருபவர்கள் தண்ணீரில் கால், கைகளைக் கழுவி, தண்ணீரை உடலில் தெளித்துக் கொண்டு, வெற்றிலையில் உள்ள சாம்பலை நெற்றியில் பூசிக்கொண்டு, உலக்கையைத் தாண்டி உள்ளே வருவார்கள்.

அன்றைய நாள் மாமன்மார்களால் ‘சலிப்புச் சோறு’ அல்லது ‘துக்கச் சோறு’ எனப்படும் ஒரு உணவளிப்பு முறை செய்யப்படும். அதில் இறந்த வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து உணவருந்துவார்கள்.

இறந்து மூன்று நாட்களை அடையும் போது ‘மூன்றாம் குழி மூடல்’ நடைபெறும். ‘மூன்றாம் குழி மூடல்’ என்பது இறந்தவரின் மூன்றாம் நாளில் நடைபெறும் முக்கியமான சடங்காகும். அன்றைய தினம் தென்னை ஓலை கொண்டு வந்து பின்னி ‘பாடை’ தயாரிக்கப்படுகிறது. பின்னப்பட்ட பாடையையும், குரும்பை போன்ற பொருட்களையும் எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வர். பிரேதம் எரிக்கப்பட்டிருந்தால், ‘உச்சந்தலை’ ஓடைத் தேடி எடுத்து ஒரு தகரத்தில் போட்டு மூடி வைப்பர்; மீதமுள்ள சாம்பலைச் சாக்கில் சேகரிப்பர். பின்னர் அந்த இடத்தில் கற்களை அடுக்கி சிறிய மேடையை அமைப்பர். அதன் மேல் அம்பட்டன் கையால் ஒரு உருவம் வரைவார். உருவத்தின் தலைமாட்டில் ஒரு கல்லை வைத்து சாம்பிராணி, கற்பூரம் காட்டி வழிபாடு செய்வர். அந்தக் கல்லின் அருகில் வெற்றிலை, இளநீர், புதிய பானையில் தண்ணீர் ஆகியவை வைக்கப்படும். நான்கு தடியை ஊன்றி மேலே பாடை கட்டுவர். மேலும் தலைமாட்டில் தென்னை, மா, பலா அல்லது கரும்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நட்டுவிட்டு வீடு திரும்புவர்.

இறந்த தினத்திலிருந்து எட்டு நாட்களுக்குப் பின்னர் ‘எட்டுக் காரியம்’ நடைபெறும். இறந்த நாளில் இறந்தவரின் கையில் பதித்து எடுக்கப்பட்ட ‘சீதேவி’ எனப்படும் பாலிகையை மையமாகக் கொண்டு இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது. எட்டாம் நாள் அதிகாலையில் கொள்ளிக்குடம் உடைத்தவர் குளித்து, பாலிகைக்கு நீர் தெளித்துக் கொண்டு வருவார். பின்னர் பாலிகைச் சட்டிக்குப் பூமாலை அணிவிக்கப்படும். 

அரிசிச் சுண்டிலிருந்து அரிசி எடுத்து, ஈர்க்குக் குச்சியில் வெற்றிலையைச் செருகிக் குற்றி வைப்பர்; இதனை ‘நிறைநாழி’ என அழைப்பர். அதன் பக்கத்தில் செம்பில் நீர் எடுத்து, அதன் மேல் தேங்காய் வைத்து, பூமாலை அணிவித்து, நூல் சுற்றி, மீதியுள்ள நூலைச் சுவரில் ஆணி அடித்துக் கட்டுவர். இறந்தவர் அந்த நூலில் ஏறிச் செல்கிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அருகில் இறந்தவர் பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும்.

பெண்கள் அங்கு அமர்ந்து அழுது கேதம் காணுவர். பாலிகைக்கு அருகில் பலா இலையால் தைக்கப்பட்ட மூன்று இலைகள் போடப்பட்டு, அதில் பலகாரங்கள் மற்றும் பழவகைகள் வைக்கப்படும். இரண்டு இளநீர், பால் ஆகியவையும் வைக்கப்பட்டு ‘லட்சுமி விளக்கு’ ஏற்றப்படும்.

பின்னர் வெளியில் வண்ணானை மாற்று விரிக்கச் சொல்லி, மாமன் உறவினர்களை அமர அழைப்பார். எட்டுக் காரியத்தை நடத்த உத்தரவு கோரப்படும். “வந்து விட்டார்களா?” என்று கேட்க, “வந்தும் வராமலும் இருக்கின்றனர்” என்று பதிலளிப்பர்.

பின்னர் மாமன், மச்சினன் ஆகியோர் தண்ணீர் வாளியை முன்னே வைத்து, “எடுத்த வழி, கொடுத்த வழி, கையைக் கழுவிவிட்டு வந்து தண்ணீர் சிலாவுங்கள்” என்று கூறுவர். உறவினர்கள் கைகளைக் கழுவி வந்து தண்ணீர் சிலாவுவர்; பின்னர் அனைவரும் அதனைத் தொடர்ந்து செய்வர். கொள்ளிக்குடம் உடைத்தவர் இறுதியாகத் தண்ணீர் சிலாவுவார்.

படையலை மூன்றாகப் பிரித்து, மூன்று இலையில் இளநீருடன் ஒன்று வண்ணானுக்கும், ஒன்று அம்பட்டனுக்கும், நடுவிலுள்ளது வீட்டிற்குமாகப் பிரிக்கப்படும். பின்னர் பலா இலையால் செய்யப்பட்ட மூன்று தொன்னைகள் கொண்டுவரப்பட்டு, அதிலுள்ள அவித்த உணவில் ஒன்று அம்பட்டனுக்கும், ஒன்று வண்ணானுக்கும் வழங்கப்படும். மீதியுள்ள தொன்னையை வாசலில் வைத்து “மாமன் மச்சினன் உருமாக் கட்டிக்கொள்ளுங்கள்” என்று கூறி, அதில் தண்ணீர் ஊற்றிவிடுவர். கொள்ளி வைத்தவர் பாலிகையைத் தூக்கிக்கொண்டு, மேல் வேட்டியை விரித்துப் பிடித்தபடி ஆற்றோரம் சென்று பாலிகையை வைத்துக் குளித்துவிட்டு வீடு திரும்புவார். பின், அனைவரும் விளக்கைப் பார்த்துக் கும்பிடுவர். பாலிகை எவ்வாறு முளைத்துள்ளது என்பதன் அடிப்படையில் நன்மை – தீமை கணிக்கப்படும்; நன்றாக முளைத்திருந்தால் நல்லதெனவும், இல்லையெனில் தீமையெனவும் நம்புவர்.

‘கருமாதிச் சடங்கு’ பொதுவாக முப்பத்தோராம் நாளில் நடைபெறும்; சில இடங்களில் பதினாறாம் நாளில் நடைபெறுகிறது. முதல் நாள் இரவு, இறந்தவருக்குப் பிடித்த உணவுகள் மூன்று நேரம் படைக்கப்படும். பின்னர் ‘மாரடித்து அழுதல்’ எனும் சடங்கு நடைபெறும்; இது மார்பில் தட்டிக்கொண்டு அழுதலாகும்.

அடுத்த கட்டச் சடங்குகள் ஆற்றோரத்தில் அம்பட்டன், வண்ணான் ஆகியோரின் உதவியுடன், குறிப்பாகப் பெண்கள் மூலம் நடத்தப்படும். இறந்தவரின் நினைவாக ஒரு கல் ஆற்றோரத்தில் ஊன்றப்படும். அந்தக் கல்லைச் சுற்றிப் பந்தல் அமைத்து, வாழைமரமும் கட்டப்படும். பின்னர் சங்கை ஊதியவாறு அந்தக் கல்லை வீட்டிற்குக் கொண்டுவருவர்.

இறுதியில் மொட்டை அடிக்கும் சடங்கு நடைபெறும். தந்தை இறந்திருந்தால் தலைமகனுக்கும், தாய் இறந்திருந்தால் கடைசி மகனுக்கும் மொட்டை அடிக்கப்படும். 

இத்துடன் இச்சடங்கு முறை நிறைவுபெறுவதில்லை; அது ஒரு வருடத்திற்குப் பின்னர் ‘திவசம்’ எனப்படும் சடங்கின் மூலம் தொடர்கிறது. திவசம் தொடர்பிலும், அதற்காகச் செய்யப்படும் ‘இறந்தவரை வீட்டுக்கு அழைத்தல்’ எனும் வித்தியாசமான சடங்கு பற்றியும் அடுத்து வரும் கட்டுரையில் விரிவாக நோக்குவோம்.

உசாத்துணை நூல்கள்

  1. சிவத்தம்பி, க. (1993). இலங்கை மலையகத் தமிழர் பண்பாடும் கருத்து நிலையும். கொழும்பு: உதயம் நிறுவனம்.
  2. சிவரத்தினம், சு. (2008). சடங்குகளினூடாக மட்டக்களப்பு. மட்டக்களப்பு: விபுலம் பதிப்பகம்.
  3. சோமசுந்தரம், அ. (ஆண்டு குறிப்பிடப்படவில்லை). இந்து வாழ்வியல் சடங்குகள்.
  4. தருமராஜன், டி. (2006). சனங்களின் சாமிகள். தமிழ்நாடு, இந்தியா: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.
  5. தர்ஸ்டன், எட்கர். (2025). தென்னிந்திய ஈமச் சடங்குகள் (மொழிபெயர்ப்பு: வானதி). சென்னை: சுவாசம் பதிப்பகம்.
  6. பக்தவத்சல பாரதி. (2012). மானிடவியல் கோட்பாடுகள். சென்னை: அடையாளம் வெளியீடு.
  7. மௌனகுரு, சி. (1988). சடங்கிலிருந்து நாடகம் வரை. யாழ்ப்பாணம்: நாகலிங்கம் நூலாலயம்.
  8. வேல்முருகு, ந. (1993). மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும். வாசகர் பதிப்பகம்.

சஞ்சிகைகள்

  1. குன்றின் குரல். (1993). ஆண்டு 12, இதழ் 03 (ஜூலை–செப்டம்பர்), பக். 19–20.
  2. குன்றின் குரல். (1994). ஆண்டு 13, இதழ் 01 (ஜனவரி–மார்ச்), பக். 19–20.
  3. நட்புறவுப் பாலம். (1987). இதழ் 12 (செப்டம்பர்), பக். 14–16.
  4. நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர். (1993, ஆகஸ்ட்). பக். 25–27.
  5. பண்பாடு. (1992). இதழ் 02 (செப்டம்பர்), பக். 30–56.

தொடரும்.



About the Author

மெய்யநாதன் கேதீஸ்வரன்

மெய்யநாதன் கேதீஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறை விரிவுரையாளராக பணியாற்றுகின்றார். இவர் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கியல் துறையில் இளங்கலைமாணிப் பட்டமும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகள் துறையில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றுள்ளதோடு, தனது கலாநிதிப்பட்ட ஆய்வை ‘பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்’ மேற்கொண்டுவருகிறார். நாடக எழுத்தாக்கம், நடிப்பு, நெறியாள்கை என்ற அடிப்படையில் நாடகச் செயற்பாட்டாளராக பல்வேறு அரச விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நவீன நாடகம், கூத்து மற்றும் தமிழ் பண்பாட்டு மரபுகள் குறிப்பாக மலையக பாரம்பரிய வாழ்வியல், கலை மற்றும் பண்பாடுகள் பற்றி பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்துள்ளார். சகதிப்புழுக்கள் இவரது நாடகப்பனுவல்களின் தொகுப்பு ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்