ஆங்கில மூலம்: ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா
இலங்கையின் அரசியலில் சமயமும் வன்முறையும் (Religion, Politics and Violence in Sri Lanka) என்னும் பொருள் குறித்த சமூகவியல், வரலாற்று ஆய்வாக (Sociological and Historical Study) அமையும் ‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ (Buddhism Betrayed?) என்ற நூலை மானிடவியலாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா அவர்கள் 1992 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். அந்நூலின் 2 ஆம், 3 ஆம் அத்தியாயங்களில் கூறப்பட்ட கருத்துகளை எடுத்துரைப்பதாக இத்தமிழ்க் கட்டுரை அமைந்துள்ளது.

‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ நூலின் இரண்டாவது அத்தியாயம் ‘The Period of Buddhist Revivalism: 1860–1915’ (பௌத்த மறுமலர்ச்சிக் காலம்: 1860–1915) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் தம்பையா அவர்கள் கூறும் கூற்று உற்று நோக்கத்தக்கது.
‘பௌத்த மறுமலர்ச்சியும் தேசியவாதமும் என்பதை இன்று நாம் எந்த வடிவத்தில் காண்கிறோமோ, அதன் வளர்ச்சிக்கான வித்துகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இடப்பட்டிருந்தன. இக்காலத்தில்தான் பௌத்த மறுமலர்ச்சியின் தேசியவாத உள்ளடக்கம் வெளிப்பட்டுத் தெரியத் தொடங்கியது. சிங்கள உணர்வும் (Sinhala Consciousness), தேசிய அடையாளமும், தேசிய இலக்குகளும் இக்காலத்திலேயே வடிவம் பெற்றன’ (பக். 5).
1860 இல் ‘பத்தேகம விவாதம்’, 1873 இல் ‘பாணந்துறை விவாதம்’ என்பன பௌத்தர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தின. மிகெட்டுவத்தே குணானந்த தேரரும், ஹிக்கடுவே சுமங்கல தேரரும் கிறிஸ்தவ எதிர்ப்பு உணர்வைத் தமது நடவடிக்கைகள் மூலம் கிளரச் செய்தனர். 1880களில் கேர்ணல் ஒல்கொட் இலங்கையில் தியோசொபிக்கல் சபையை நிறுவி, அதன் நடவடிக்கைகள் மூலம் கிறிஸ்தவ எதிர்ப்பு இயக்கத்திற்கு நிறுவனக் கட்டமைப்பையும், பிரசார ஒழுங்கமைப்பையும் வழங்கினார். தியோசொபிக்கல் இயக்கத்தால் கவரப்பட்டு அதில் இணைந்து கொண்ட தர்மபால (1864–1933) என்னும் ஆளுமைக் கவர்ச்சி மிக்க தலைவர் அவ்வியக்கத்தின் கருத்தியலை (Ideology) வடிவமைத்தார்.
1880களில் உருவாக்கம் பெற்ற சமய மறுமலர்ச்சி இயக்கத்தில் முக்கியமான அரசியல், பொருளாதாரப் பரிமாணங்கள் (Political and Economic Dimensions) வெளிப்பட்டன என்ற கருத்தை குமாரி ஜயவர்த்தன அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த பூர்ஷுவா வர்க்கத்தினரின் பௌத்தப் பிரிவினரின் தேசிய உணர்வுகளுடன் பௌத்த மறுமலர்ச்சி பிணைப்புடையதாய் இருந்தது. பிரித்தானியாவில் அக்காலத்தில் கிறிஸ்தவ எதிர்ப்புப் பகுத்தறிவுவாதமும் (Anti–Christian Rationalism) சிலரால் முன்னெடுக்கப்பட்டது. அப்பகுத்தறிவுவாதமும் இலங்கையின் பௌத்த தேசியவாதிகளுக்குத் தூண்டுதலை வழங்கியது.’ (லங்கா கார்டியன், 1979 ஆம் ஆண்டில், Bikkus in Revolt Part 2: ‘Revival, Revolt and Race’, June 15, 1979, பக். 13)
கேர்ணல் ஒல்கொட் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே சில பௌத்த பிக்குகள் மறுமலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்து, அதற்குள் தீவிரவாதத்தைப் புகுத்தியிருந்தனர் என்பதையும் குமாரி ஜயவர்த்தன அவர்கள் மேற்குறித்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மிகெட்டுவத்தே குணானந்த தேரரை ‘An Aggressive and Dynamic Bikku’ எனக் குறிப்பிடும் அவர், கல்வி அறிவில் சிறந்து விளங்கிய பிற பிக்குகளை விட வித்தியாசமானவராக விளங்கிய குணானந்த தேரர் ‘கனல் கக்கும் பேச்சாளராகவும், கண்டனப் பிரசுரங்களை எழுதி வெளியிடுபவராகவும், போராளியாகவும்’ விளங்கினார் எனக் குறிப்பிடுகிறார். அவர் கிறிஸ்தவர்களுக்குச் சவால் விடுத்தார். கிறிஸ்தவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் 1873 இல் நடைபெற்ற விவாதத்தில் குணானந்தரின் வாதத்திறமை வெளிப்பட்டது. அவரது புகழ் பரவியது.
குணானந்த தேரர் பணம் படைத்த சிங்கள வர்த்தகர்களையும், சாராயக் குத்தகை வியாபாரிகளையும், தென்னந்தோட்ட உடைமையாளர்களையும் அணிதிரட்டி தியோசொபிக்கல் சபையில் உறுப்பினர்களாக்கியதோடு தானும் சேர்ந்துகொண்டார். இவர்கள் யாவரும் அக்காலத்தின் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் மிக முக்கியமான பிரமுகர்களாக இருந்தனர். தர்மபாலவும் அக்காலத்தில் இவ்வியக்கத்தில் இணைந்து கொண்டார். பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் இக்காலப்பகுதியில் பங்கேற்றவர்களான பௌத்த பிக்குகளாகப் பின்வருவோரைக் குறிப்பிடலாம்.
- ஹிக்கடுவே சிறிசுமங்கல தேரர்
- வலனே சித்தார்த்த தேரர்
- வெலிகம சிறி சுமங்கலதேரர்
- இரத்மலான சிறி தர்மாலோக தேரர்
இக்காலத்தின் மறுமலர்ச்சி இயக்கம் பௌத்த பாடசாலைகளை நிறுவுதல், மதுவிலக்குப் பிரசாரச் சங்கங்களை அமைத்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியது. 1904–1912 காலத்தில் மதுவிலக்கு இயக்கம் செயல்துடிப்போடு இயங்கியது.
கேர்ணல் ஒல்கொட் அவர்களால் தொடக்கப்பட்ட தியோசொபிக்கல் இயக்கத்தின் சாதனைகளில் முக்கியமானது, 1880களில் பௌத்த பாடசாலைகளை நிறுவிக் கல்வியில் கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த தனியுரிமை ஆதிக்கத்தைத் தகர்த்ததாகும். கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கத் திருச்சபையும் பாடசாலை முறைமை மீது (School System) கொண்டிருந்த ஆதிக்கம் என்ற பிரச்சினை 1940களிலும் 1950களிலும் மீண்டும் தலைதூக்கியது என்பதை இவ்விடத்தில் குறிப்பிடுதல் வேண்டும்.
தர்மபால தியோசொபிக்கல் சபையினருடன் சேர்ந்து தனது பிரசாரத் திறன்களை கூர்மைப்படுத்தி வளர்த்துக் கொண்டார். பின்னர் அவர் தியோசொபிஸ்டுகளுடன் தமக்கிருந்த உறவுகளை முறித்துக்கொண்டு தனிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தார். அவர் போதித்த பௌத்தம் ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ என அழைக்கப்பட்டது. இத்தொடர் அவரது கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கான பொருத்தமான ‘லேபல்’ (Label) எனலாம்.
தர்மபால
‘வீடற்றவன்’ (அநகாரிக) என்ற பெயரைச் சூடிக்கொண்ட தர்மபால கிறிஸ்தவ மிசனரிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார். அவர் பௌத்தத்தில் புகுந்த சீர்கேடுகளைக் களைந்து, அதனைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். தர்மபால பௌத்த மறுமலர்ச்சிக்குச் செய்த பங்களிப்பை தம்பையா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘பௌத்த தத்துவக் கோட்பாடுகளுக்கு முரணான சடங்குகளையும் (Non–Buddhist Ritual Practices), மந்திர–தந்திர முறைகளையும், மூடநம்பிக்கைகளையும் பௌத்தத்திற்கு அந்நியமானவை எனத் தர்மபால கண்டித்தார். அவர் பௌத்தர்களான இல்வாழ்வோருக்கு உரிய ஒழுக்க நெறிக் கோவையை (Code of Conduct) வகுத்தளித்தார். அவர் வகுத்தளித்த ஒழுக்க நெறிக் கோவை புதிதாக எழுச்சி பெறும் நகரம் சார்ந்த மத்தியதர வர்க்கத்தினதும், வர்த்தக–தொழில் முயற்சியாளர் வகுப்பினதும் வாழ்க்கையை நெறிப்படுத்த உதவும் ஒழுக்க விதிமுறைகளாக அமைந்தன. அவர் தனிநபர்களின் பாலியல் அற ஒழுக்கத்திற்கும் (Sexual Morality), குடும்ப வாழ்க்கையில் சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். தர்மபால தமது எழுத்துகள் மூலம் பௌத்த சமயத்தினதும் சிங்கள நாகரிகத்தினதும் பண்டைய பெருமைகளை மக்களுக்கு எடுத்துக் கூறினார். மகாவம்சம் போன்ற வம்சவரலாற்று நூல்கள் கூறும் சிங்கள பௌத்தர்களின் வரலாற்றுப் பெருமைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களிடம் தேசிய அடையாள உணர்வையும், தன்மான உணர்வையும் வளர்த்தார். பிரித்தானியர் ஆட்சியின் கீழ் மிசனரிகளின் மேலாதிக்கம் காரணமாக அவமானத்திற்கு உள்ளாகியிருந்த சிங்கள பௌத்தர்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் தர்மபாலவின் எழுத்துகளும் நடவடிக்கைகளும் துணை செய்தன.’ (பக். 7)
தர்மபாலவின் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கமும், தேசியவாதமும் எழுச்சி பெற்று வந்த சிங்கள பௌத்த முதலாளித்துவத்தின் நலன்களுக்குச் சார்பானதாக இருந்தது. இதனால், சிங்கள பௌத்த மத்தியதர வர்க்கமும், வர்த்தக வகுப்பினரும் தர்மபாலவிற்குப் பக்கபலமாக நின்று உதவினர்.
1915 ஆம் ஆண்டின் முஸ்லிம்களுக்கு எதிரான கலகம், சிங்கள முதலாளி வகுப்பின் போட்டியாளர்களாக விளங்கிய முஸ்லிம் வர்த்தகர்களுக்கும், கடை வியாபாரிகளுக்கும் எதிரானதாகும். முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளில் நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வாளர்களான சாதாரண சிங்கள மக்களின் கண்களில், அக்கடை வியாபாரிகள் தம்மைச் சுரண்டிக் கொள்ளும் சுரண்டல்காரர்களாகப் பட்டார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான கலகம் பற்றிய சிறந்த ஆய்வுகளாக அமையும் மூன்று ஆய்வுக் கட்டுரைகளைத் தம்பையா அவர்கள் அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்தக்க கூடிய அந்த உசாத்துணைகளின் தகவல்களைக் கீழே தந்துள்ளோம்.
கலாநிதி அமீர் அலி எழுதிய ‘The 1915 Racial Riots in Ceylon (Sri Lanka): A Reappraisal of its Causes’ என்னும் கட்டுரை ‘Journal of Asian Studies’ என்ற ஆய்விதழில் 1970 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது (தொகுதி 24:2 (1970), பக். 219–266).
A.P. கன்னங்கரா (A. P. Kannankara) என்ற ஆய்வாளர் எழுதிய ‘The Riots of 1915 in Sri Lanka: A Study in the Roots of Communal Violence’ என்னும் கட்டுரை ‘Past and Present, No. 102 (1983), P. 130-65’ இதழில் வெளியானது.
குமாரி ஜயவர்த்தன அவர்கள் எழுதிய ‘Ethnic and Class Conflicts in Sri Lanka’ என்னும் நூலை 1986 இல் கொழும்பு நவகம பிரிண்டர்ஸ் வெளியிட்டது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் வெளியான சிங்களப் பத்திரிகைகள் இனவாதத்தை மக்களிடம் பரப்பின. இவ்விடயம் குறித்து குமாரி ஜயவர்த்தன அவர்கள் மேற்குறிப்பிட்ட நூலில் விரிவாகக் கூறியுள்ளார். பியதாச சிறிசேன என்ற சிங்கள நாவலாசிரியர் ‘சிங்களஜாதிய’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை வெளியிட்டார். அப்பத்திரிகை சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான கதைகளைச் செய்திகளாகவும், பத்தி எழுத்துகளாகவும் வெளியிட்டு இனவாத உணர்வுகளைத் தூண்டிவிட்டது. சிங்களவர்கள் ‘தேசிய விழிப்புணர்வை’ பெற வேண்டும் என ‘சிங்களஜாதிய’ பத்திரிகை மூலம் சிறிசேன வேண்டுகோள் விடுத்தார். 1915 இல் சிறிசேன ‘கரையோர மூர்கள், கொச்சிகள் (மலையாளிகள்), அந்நியர்கள்’ ஆகியோரின் கடைகளுடன் சிங்கள மக்கள் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என எழுதினார்.
கரையோர முஸ்லிம்களுக்கு (Coast Moors) எதிரான விரோத உணர்வு உச்சநிலையிலிருந்த வேளையில் ‘லக்மின’ பத்திரிகை கரையோர முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என எழுதியது. ‘தினமின’ என்ற பத்திரிகை கரையோர மூர்களை ‘நமது எதிரிகள்’ என எழுதியது. இம்மூன்று பத்திரிகைகளும் பயன்படுத்திய கடும் சொற்களை தம்பையா அவர்களின் நூலின் 7 ஆம் பக்கத்தினைப் படித்து அறிந்துகொள்ளலாம். ஏனைய ஆய்வாளர்கள் பலரும் இக்காலப் பத்திரிகைகள் கக்கிய இனவாதம் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.
மேற்படி பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எவ்விதத்திலும் தாம் சளைத்தவர் இல்லை என்பதை தர்மபால தாம் நடத்திய ‘Mahabodhi Journal’ என்ற ஆங்கில சஞ்சிகையிலும், அவரது எழுத்துகள் மூலமும் நிரூபித்துள்ளார். தர்மபாலவின் ‘சிங்கள பௌத்தய’ பத்திரிகை பல கேலிச் சித்திரங்களையும், கவிதைகளையும், செய்யுட்களையும் பிரசுரித்து இனவாதப் பிரசாரத்தை முன்னெடுத்தது. தம்பையா அவர்களின் நூலின் 8 ஆம் பக்கத்தில் இவை பற்றிய விவரங்களைப் படித்தறிந்து கொள்ளலாம். தர்மபாலவின் பத்திரிகை எழுத்துகளைக் கூர்மையாக அவதானித்து வந்த அரசாங்கம், 1915 ஆம் ஆண்டு ‘சிங்கள பௌத்தய’ பத்திரிகை மீது வழக்குத் தொடுத்ததோடு அப்பத்திரிகையைத் தடை செய்தது. பியதாச சிறிசேனவின் ‘சிங்களஜாதிய’ பத்திரிகையும் அவ்வாண்டு தடை செய்யப்பட்டது.
1915 இல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலகம் நடைபெற்றவேளை தர்மபால கல்கத்தா நகரில் தங்கியிருந்தார். அங்கு தர்மபால மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளையும், முன்னர் இலங்கையில் அவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளையும் கவனத்தில் கொண்ட பிரித்தானிய இந்திய அரசாங்கம் அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டது.
‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ நூலின் 9–14 வரையான பக்கங்களில் எஸ்.ஜே. தம்பையா அவர்கள் 1860–1915 வரையான காலத்தின் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் போக்குகள் பற்றி விரிவாக விவரித்திருப்பதைத் தொகுத்தும், சுருக்கியும் மேலே கூறியுள்ளோம். அடுத்து ‘அரசியலும் அரசியல் யாப்பு வளர்ச்சியும், 1915–1946’ (Politics and Constitutional Progress 1915–1946) என்னும் தலைப்பில் அமைந்துள்ள 3 ஆம் அத்தியாயத்தின் கருத்துகளைச் சுருக்கமாக எடுத்துக் கூறுவோம்.
அரசியலும், அரசியல் யாப்பு வளர்ச்சியும், 1915 – 1946
1915 கலவரத்தை பிரித்தானிய ஆட்சியாளர்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கினர். மதுவிலக்கு இயக்கத்தின் தலைவர்களாகப் பௌத்தர்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த எவ்.ஆர். சேனநாயக்க, டி.எஸ். சேனநாயக்க ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா சென்றிருந்த தர்மபால அங்கு நீண்டகாலம் தங்கியிருந்தார். அவர் அங்கு புத்தகயாவைப் பௌத்தர்களுக்கு மீட்டுக் கொடுப்பதற்கான இயக்கத்தில் ஈடுபட்டு அவ்வேலைகளில் மூழ்கியிருந்தார். இதனால், இலங்கையின் அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
இந்த வெற்றிடத்தை நிரப்புபவர்களாக புதிய அரசியல் தலைவர்கள் சிங்களவர், தமிழர் ஆகிய இரு தரப்பிலிருந்தும் அரசியல் அரங்கிற்குள் நுழைந்தனர். இந்த அரசியல்வாதிகள் பிரித்தானிய ஆட்சியாளர்களோடு ஒத்துழைத்து, மிதவாத அரசியலை முன்னெடுத்தனர். இப்புதிய அரசியல்வாதிகள் ஆங்கிலத்தில் கல்வி கற்றவர்களாயும், மேற்கு நாட்டு நாகரிகத்தைத் தழுவியவர்களாயும் இருந்தனர். அவர்கள் மேற்கத்தியப் பாணியில் உடை அணிந்தனர்; அவர்களின் வாழ்க்கைமுறை வெள்ளையர்களின் வாழ்க்கைமுறையை ஒத்ததாகவே இருந்தது. அவர்களும் காலனிய ஆட்சியாளர்கள் போன்றே இலங்கையின் சுதேச மக்கள் அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதற்கு இன்னும் தகுதியுடையவர்கள் ஆகவில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். ஆகையால், படிப்படியான சீர்திருத்தங்களையே அவர்கள் வேண்டி நின்றனர்.
1916 ஆம் ஆண்டில் இந்தத் தலைவர்கள் இலங்கைச் சீர்திருத்தச் சங்கம் (Ceylon Reform League) என்ற அமைப்பை உருவாக்கினர். இவ்வமைப்பு 1919 ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress – CNC) எனப் பெயர் மாற்றம் பெற்றது. இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆளுநருக்கும், குடியேற்ற நாட்டு அலுவலகத்திற்கும் (Colonial Office) கோரிக்கை மனுக்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தது.
இலங்கையின் உயர் வகுப்பினருக்கு (Elite Class) இலங்கையின் நிர்வாகத்தில் கூடிய அளவு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கையாகும். இலங்கைத் தேசிய காங்கிரஸின் கொள்கையாக படிமுறை வளர்ச்சி (Gradualism) அமைந்தது. காங்கிரஸ் முன்னைய காலக்கட்டத்தின் சிங்கள பௌத்த தேசியவாதிகள் போன்று சமய–பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை எதிர்த்த பௌத்த தேசியவாதிகளில் இருந்து வேறுபட்ட கொள்கைத் திட்டத்தை இலங்கைத் தேசிய காங்கிரசின் அரசியல் தலைவர்கள் முன்வைத்தனர். பிரதிநிதித்துவ அரசாங்கம் (Representative Government) மூலம், சுதந்திரத்தை நோக்கிப் படிப்படியாக முன்னேறுதல் இத்தலைவர்களின் கொள்கையாக இருந்தது.
இலங்கைத் தேசிய காங்கிரஸின் அரசியல்வாதிகள் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் நடத்திய பேரம் பேசுதலின் பயனாகச் சில சலுகைகளைப் பெற்றுக்கொண்டனர். அத்தகைய சலுகைகளில் இரண்டு முக்கியமானவை. அவற்றுள் ஒன்று, டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசின் படி பெறப்பட்ட சர்வசன வாக்குரிமையாகும். இலங்கையர்களுக்கு சொத்து, கல்வித் தகைமை ஆகிய தகுதிகளின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையைக் கோரி நின்ற பெரும்பான்மையினரான இலங்கைத் தேசிய காங்கிரஸ் தலைவர்களில் பலர், 1931 இல் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டதை விரும்பி ஏற்கவில்லை.
டொனமூர் ஆணைக்குழுவின் இரண்டாவது முக்கிய சலுகை 61 உறுப்பினர்கள் கொண்ட ‘ஸ்டேட் கவுன்சில்’ (State Council) என்னும் சட்டசபையை வழங்கியதாகும். இச்சட்டசபையின் 50 உறுப்பினர்கள் பிரதேச அடிப்படையிலான தேர்தல் தொகுதிகளிலிருந்து (Territorial Electorates) சர்வசன வாக்குரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருந்தனர். இச்சட்டசபை அரசக் கட்டமைப்பில் உள்ளகச் சுயாட்சி (Internal Autonomy) என்ற அம்சத்தைப் புகுத்துவதாக இருந்தது. 1931 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் இலங்கை அரசியலில் பெருமாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது.
சிங்களப் பெரும்பான்மைவாத ஆட்சியின் தொடக்கம்
சர்வசன வாக்குரிமை, பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் என்பனவற்றின் அடிப்படையில் 1931 இல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது இலங்கையின் சட்டசபை வரலாற்றில் முதல் தடவையாகச் சிங்களவர்களான சட்டசபைப் பிரதிநிதிகள் சபையில் அறுதியான பெரும்பான்மையினைக் கொண்டவர்களாக, சட்டசபையின் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தனர். சட்டசபையின் பிற சிறுபான்மையினங்களின் பிரதிநிதிகளின் கூட்டு எண்ணிக்கையை விடக் கூடிய அளவில் சிங்களப் பிரதிநிதிகள் காணப்பட்டனர். 1931 இன் பொதுத் தேர்தலில் பங்குபற்றாமல் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். 1935 இல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டபின் சிங்களப் பெரும்பான்மை கொண்ட சட்டசபை அமைக்கப்பட்டது. சிங்களப் பெரும்பான்மை ஆட்சியும் (Sinhalese Majoritarian Rule), சிங்கள மேலாதிக்கமும் டொனமூர் அரசியல் யாப்புக் காலத்தின் அரசியல் யதார்த்தமாக நிலைபெற்றது. 1936க்கும் 1942க்கும் இடைப்பட்ட காலத்தில் நிதி, பாதுகாப்பு, வெளிவிவகாரம் என்னும் மூன்று அமைச்சுகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அமைச்சுகளினதும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான நிர்வாகக் குழுக்களில் (Executive Committees) சிங்களப் பிரதிநிதிகளே பெரும்பான்மையினராகக் காணப்பட்டனர். குழுக்களின் தலைவர்களான அமைச்சர்களும் சிங்களவர்களாகவே விளங்கினர். 1943 இல் டி.எஸ். சேனநாயக்க தமிழர் தரப்புக்கு ஒரு சலுகையை வழங்க முன்வந்தார். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் மகனான அ. மகாதேவா அவர்களுக்கு உள்ளூராட்சி அமைச்சர் என்னும் அமைச்சுப் பதவியை அவர் வழங்கினார்.
1920கள் முதல் 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரையான 28 ஆண்டுக்காலத்தில் தர்மபாலவின் தீவிர சிங்கள–பௌத்த இனவாத அரசியல் வானில் இருந்து மங்கி மறைந்துவிட்டது என்ற தோற்றம் வெளிப்பட்டது. ஆயினும், இந்த வெளித்தோற்றத்திற்கு மாறாக டொனமூர் யாப்புக்கால அரசியலில் இனத்துவ அரசியலும், இனவாதமும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையே ஆழமான பிளவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. இலங்கையின் உயர்குழாம் அரசியல் தலைவர்கள் இருமுகங்களோடு அரசியல் அரங்கில் காட்சியளித்தனர். அவர்களின் ஒருமுகம் குறுகிய நோக்குடைய இனவாதத்தையும் (Communalism), இன்னொரு முகம் மதச்சார்பற்ற அரசியல் யாப்புவாதத்தையும் (Constitutionalism) வெளிப்படுத்தின.
இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் காற்பங்கினராக இருந்த சிறுபான்மை இனத்தவர்கள், சனத்தொகையில் நாலில் மூன்று பங்கினரான சிங்கள இனத்தவரின் பெரும்பான்மை ஆட்சிக்குள் அடங்கிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது.
டொனமூர் காலச் சட்டசபையில் சிங்களத் தலைவர்களுக்கும் சிறுபான்மை இனங்களின் தலைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து இடம்பெற்றது. சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் (Minority Representation) அரசியல் யாப்பு ஏற்பாடுகள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் எனச் சிறுபான்மை இனங்களின் தலைவர்கள் வாதாடினர். அரச உத்தியோகங்களுக்கான ஆட்சேர்ப்பு திறமையின் அடிப்படையில் (Merit Principle) அமைய வேண்டும் என சிறுபான்மை இனங்களின் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். பெரும்பான்மையினத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்கள் இனவாதம் பேசுவதாகக் குற்றம் சாட்டினர்.
1920 முதல் 1948 வரையான காலப்பகுதியில் இலங்கையின் அரசியலில் மூன்று அணிகள் செயற்பட்டன எனத் தம்பையா குறிப்பிடுகிறார்.
- இலங்கைத் தேசிய காங்கிரஸ் 1920கள் முதல் அரசியலில் தாராளவாத இலட்சியங்களை (Liberal Ideals) முன்வைத்துச் செயற்பட்ட இயக்கமாக இருந்து வந்தது. தேசிய காங்கிரஸின் தலைவர்களான பொன்னம்பலம் அருணாசலம், ஜேம்ஸ் பீரிஸ், ஈ.டபிள்யு. பெரரா, டி.பி. ஜயதிலக்க, எவ்.ஆர். சேனநாயக்க, டி.எஸ். சேனநாயக்க ஆகியோர் ‘ஒற்றுமை அரசியலை’ (Collaborationist Politics) முன்னெடுத்தனர். சிங்களத் தமிழ்த் தலைவர்கள் யாவரும் ஒற்றுமையோடு ஓரணியில் செயற்பட வேண்டும் என்பதையே ‘ஒற்றுமை அரசியல்’ என்ற தொடர் குறிப்பிடுகிறது.
- இலங்கைத் தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகளின் அரசியல் தனியுரிமைக்கு இடதுசாரிகளிடமிருந்து எதிர்ப்புத் தோன்றியது. 1935 இல் லங்கா சமசமாஜக் கட்சி என்னும் மார்க்சிய அரசியல் கட்சி தோற்றம் பெற்றது. கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக 1943 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. இவ்விரு கட்சிகளும் கொழும்பு நகரின் தொழிலாளர் வர்க்கத்தையும், பெருந்தோட்டத் துறையின் தொழிலாளர்களையும் அணிதிரட்டி தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்தின. இவை இடதுசாரி, மதச்சார்பற்ற, இனவாதம் அல்லாத (Non–Communal) அரசியலை முன்வைத்தன. இடதுசாரிகளின் அரசியல் இலங்கைத் தேசிய காங்கிரஸின் கொள்கைகளுக்கு எதிரானதாக அமைந்தது.
- 1928 முதல் 1936 வரையான காலத்தில் பல்வேறு சிங்கள பௌத்த அமைப்புகள் தோன்றின. இச்சிங்கள பௌத்த அமைப்புகள் இனத்துவம், சமயம், மொழி என்பனவற்றின் அடிப்படையில் சிங்கள பௌத்தர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தன. இப்பௌத்த அமைப்புகளும் சங்கங்களும் இணைந்து அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (All Ceylon Buddhist Congress – ACBC) என்ற அமைப்பை உருவாக்கின. 1935 ஆம் ஆண்டில் சிங்கள மகாசபை (Sinhala Mahasabha – SMS) என்ற அமைப்பை எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க உருவாக்கினார். ‘ACBC’, ‘SMS’ என்ற சுருக்கப் பெயர்களால் அழைக்கப்பட்ட இவ்விரு பௌத்த அமைப்புகளும் பியதாச சிறிசேன, குமாரதுங்க ஆகிய இரு தலைவர்களாலும் முன்வைக்கப்பட்ட மொழித் தேசியவாதத்தை (Linguistic Nationalism) முன்னெடுத்தன. 1930களின் பிற்பகுதியில் பியதாச சிறிசேனவும், குமாரதுங்கவும் சிங்கள மகாசபையுடன் உறவுகளை முறித்துக் கொண்டனர். பண்டாரநாயக்கவின் சிங்கள மகாசபை 1930களின் பிற்பகுதியில் பலம் மிக்க ஓர் அமைப்பாக வளர்ச்சி பெற்றிருந்தது. பண்டாரநாயக்க சிங்கள மகாசபையின் கீழ் பல பகுதிகளினரையும் இணைத்து, அதனைச் செல்வாக்குள்ள அரசியல் இயக்கமாக உருவாக்கினார். 1939 ஆம் ஆண்டில் சட்டசபையின் உறுப்பினர்களில் பலர் பண்டாரநாயக்கவின் சிங்கள மகாசபையில் இணைந்து செயற்பட்டனர். 1939க்கும் 1956க்கும் இடைப்பட்ட காலத்தில் செல்வாக்குள்ள அரசியல் இயக்கமாக வளர்ச்சியுற்ற சிங்கள மகாசபை, 1956 தேர்தலில் பண்டாரநாயக்கவின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

மேற்குறித்த மூன்று அணிகளும் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்த காலத்தில் நான்காவது சக்தியாக தீவிரவாதப் பிக்குகளின் (Radical Monks) அரசியல் பிரவேசம் அமைந்தது. 1947 ஆம் ஆண்டில் வித்தியாலங்கார குழு என அழைக்கப்பட்ட பிக்குகள் லங்கா சமசமாஜக் கட்சியின் ஆதரவாளர்களாக அரசியல் மேடைகளில் தோன்றினர். இவர்கள் இடதுசாரி அரசியலையும் பௌத்த தேசியவாதத்தையும் கலந்த ஒரு கலவையான கருத்தியலை முன்வைத்துப் பிரசாரம் செய்தனர். தம்பையாவின் நூலில் ‘Radical Monks and the Legitimation of Monks Participation in Politics’ (தீவிரவாத பிக்குகளும் பிக்குகளின் அரசியல் பங்கேற்பை நியாயப்படுத்தலும்) என்னும் தலைப்பிலான நான்காவது அத்தியாயத்தில் (பக். 15–21) பிக்குகளும் அரசியலும் என்னும் பொருள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: ‘Buddhism Betrayed? Religion, Politics and Violence in Sri Lanka’ என்னும் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா அவர்களின் நூலின் 2 ஆம், 3 ஆம் அத்தியாயங்கள் (பக். 5-14).



