அறிமுகம்
கூத்திலே அதன் பிரதேசத் தன்மைகள் முக்கியமானவை. இவை அதிகம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை, ஆனால் முக்கியமானவை. கூத்தின் பிரதேசத் தன்மைகளை அறிய முன்னர் பிரதேசங்களின் தன்மைகளை முதலில் அறிந்துகொள்வோம்.
பொதுவாக இந்திய நாட்டில் தமிழர் கூத்துகளை அவதானிப்போர், ஆராய்வோர், அக்கூத்துகள் தமிழ் நாட்டின் வடபகுதிகளிலும் மேற்குப் பகுதிகளிலுமே நிலவுவதை இனங்கண்டு கொள்வர். தமிழ் நாட்டின் தென்பகுதிகளில், முக்கியமாக மதுரைப் பகுதிகளில் இவை இல்லை. அங்கு வேறு ஆற்றுகை வடிவங்கள் உள்ளன. இவற்றைக் கூத்து எனவும் தெருக்கூத்து எனவும் அழைத்தனர். பின்னாளில் இது கட்டை கட்டி ஆடுவதனால் கட்டைக்கூத்து எனவும் அழைக்கப்பட்டது. இந்தக் கூத்துகளுக்கும் ஈழத்தமிழ்க் கூத்துகளுக்கும் இடையே ஒற்றுமைகளும் உண்டு, வேற்றுமைகளும் உண்டு. அவை தனியாக ஆராயப்பட வேண்டியவை. தமிழ்நாட்டில் நிலவும் இக்கூத்துகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது அதன் பிரதேசத் தன்மைகளை எளிதாக இனங்கண்டு கொள்வர். இப்பிரதேசத் தன்மைகளைச் சிலர் கூத்தின் வலிமைகளில் ஒன்றெனப் பெயர்ப்பர். வட தமிழகத்திலே மிகப் பிரதான பிரிவுகளாக மூன்று கூத்து மரபைக் குறிப்பிடுவர்: ஒன்று — வடக்கத்திக் கூத்து மரபு, இன்னொன்று — தெற்கத்திக் கூத்து மரபு, மற்றொன்று — மேற்கத்திக் கூத்து மரபு.

இவை ஒவ்வொன்றும் அவ்வப் பிரதேசத்திற்கு ஏற்ப வேறுபாடுடையவை. இவற்றை நிகழ்த்தும் முறையிலும் வேறுபாடுடையவை. கூத்துப் பிரதிகள், கூத்தின் உட்பொருள், பாடும் முறை, நிகழ்த்தும் முறை என்பனவற்றில் இவ்வேறுபாடுகளைக் காணலாம். இவற்றை நிகழ்த்தும் சாதிகளும் வெவ்வேறானவை. சில இடங்களில் ஒரு சாதியும், சில இடங்களில் பல சாதிகளும் இணைந்து இக்கூத்துகளை நிகழ்த்துகின்றன.
தமிழ்மொழி, இந்துமதம் (கிறித்துவ மதமும் அடங்கும்) ஆகியன இவற்றினிடையே காணப்படும் பொதுத் தன்மையாகும். ஆனால் நிகழ்த்தும் முறை அந்தந்தப் பிரதேசத்தின் பண்பாடுகளுக்கேற்ப வேறுபாடுடையவை. அந்தப் பிரதேசப் பண்பாட்டை உருவாக்குவது அப்பிரதேசத்தின் பொருளாதாரமும், பண்பாடும், சுற்றுச் சூழலும் ஆகும்.
இம்மூன்று கூத்து மரபுகளையும் நுணுகி நோக்கின், ஒவ்வொன்றிற்குள்ளும் வட்டார வேறுபாடுகளும் உண்டு என்பதும் யதார்த்தமாகும். பிரதேச வேறுபாடுகள் மாத்திரமல்ல, வட்டார வேறுபாடுகளும் உண்டு என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒன்றுபோலத் தோற்றம் காட்டும் கூத்துகள், பல என்பதுவே யதார்த்தம்.
தமிழகத்தில் நடக்கும் கூத்துகளில் காணப்படும் இப்பண்புகள் ஈழத்தமிழ்க் கூத்துகளிலும் உண்டு. இதில் ஓர் ஒப்பீட்டு ஆய்வு இதுவரை நிகழ்த்தப்படவில்லை. அத்தகையதொரு ஆய்வு தமிழ்க் கூத்துகளை மேலும் புரிந்துகொள்ள உதவும். இங்கே ஈழத்தமிழ்க் கூத்துகள் இவ்வகையில் நோக்கப்படுகின்றன. ஈழத்தமிழர், இலங்கைத் தமிழர் என்ற இரு சொற்பிரயோகங்கள் முக்கியமானவை. ஈழத்தமிழ்க் கூத்துப் பற்றி உரையாடும் நாம் முதலில் இந்தச் சொற்பிரயோகத்தையும் அதன் பொருளையும் வரையறுத்துக் கொள்வோம்.
இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர் சொற்பிரயோகங்கள்
இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர் என இரண்டு சொற்றொடர்கள் அரசியல் உலகில் பாவிக்கப்படுகின்றன. இலங்கைத் தமிழர் என்கையில், அச்சொற்றொடர் இலங்கை முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழரைக் குறிப்பதாகவும், ஈழத்தமிழர் என்கையில், அச்சொற்றொடர் குறிப்பிட்ட பிரதேசங்களில் செறிந்து வாழும் தமிழ் மக்களைக் குறிப்பதாகவும் அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஈழத்தமிழ் எனும் சொற்பிரயோகத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. ‘ஈழத்துணவு’ எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. ஈழம் என்பது இலங்கைக்கு இன்னொரு பெயர். ‘ஈழமண்டல நாடெங்கள் நாடே’ எனப் பள்ளு இலக்கியம் இலங்கையை ‘ஈழம்’ எனக் கூறியிருக்கிறது. நமது தேசிய கீதத்திலும் கூட, ‘ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி நமோ நமோ தாயே’ என ‘ஈழம்’ வருகிறது.
1960களில் ‘ஈழத்து இலக்கியம்’, ‘ஈழத்து நாடகம்’ என இலங்கைத் தமிழருக்கான நாடகம் மற்றும் இலக்கியம் என்ற கலை – இலக்கிய இயக்கம் தன் முயற்சியை ‘ஈழம்’ என்ற பெயரிலேயே முன்னெடுத்தது. பின்னர் ‘ஈழம்’ எனும் சொல், தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலப்பகுதிகளைக் குறிக்கும் சொல்லாக அர்த்தப்படுத்தப்பட்டது. அதாவது, தனிப் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாக அது பொருள் பெற்றது. சொற்களின் அர்த்தங்கள் காலந்தோறும் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறிவருவது இயல்பு.
இலங்கையும் மாகாணங்களும்
இலங்கை பல மாகாணங்களாகப் பிரித்து ஆளப்பட்டது பிற்காலத்திலாகும். மேல் மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம், வட மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் என ஒன்பது மாகாணங்களாக இலங்கை பிரிக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவீர்கள். மாகாணங்கள் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘பிரதேசம்’ என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியைக் குறிக்கிறது. இது பொதுவாக நிர்வாக, கலாசார அல்லது இயற்கைப் பண்புகளின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. இது ஒரு பெரிய பகுதி.
பண்டைய அரசர்களும் பின்னர் வந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களும் தத்தம் ஆளுகை வசதிக்காகப் பிரதேசம் பிரதேசமாக நாட்டைப் பிரித்து ஆண்டனர். பிரதேசமாகப் பிரித்து ஆளுவதன் காரணத்தை நுணுகி நோக்கின், அங்கிருந்த மக்களின் வளங்களைச் சூறையாடுவதற்கும், அம்மக்களிடமிருந்து வரி வசூலிப்பதற்குமான முயற்சியாகவே அது அமைந்தது என்பதை அறியலாம்.
பல பிரதேசங்களை இணைத்து ஒரு மாகாணமாக்கும் செயலும் நடந்துள்ளது. இலங்கையில் அப்படியான மாகாணப் பிரிப்பைக் காண்கிறோம். அப்பிரதேசங்களில் வழக்கிலிருந்த பொருளாதாரமும் பண்பாடும் இப்பிரிப்பில் முக்கியத்துவம் பெற்றன.
வடக்கு, கிழக்கு, மத்திய, வடமேல் மாகாணங்கள்
வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் வாழ்ந்தோரில் பெரும்பாலானோர் தமிழரும் தமிழ் பேசும் மக்களுமாவர். வடக்கு மாகாணத்தின் கீழ் உள்ள ஐந்து மாவட்டங்கள் — யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகியவையாகும். கிழக்கு மாகாணத்தின் கீழ் உள்ள பிரதேசங்கள் — திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகியனவாகும். மத்திய மாகாணத்தின் கீழ் உள்ள பிரதேசங்கள் — மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகியன. வடமேல் மாகாணத்தின் கீழ் உள்ள பிரதேசங்கள் — சிலாபம், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகியன.

இந்தப் பிரதேசங்களில் பேசப்படும் தமிழ் மொழியும், அனுஷ்டிக்கப்படும் இந்துமதமும், பின்னர் வந்த கிறித்துவ மதமும், இஸ்லாம் மதமும் ஒன்றாகக் காணப்படுவது ஓர் ஒற்றுமையாயினும், பேச்சுமொழி, பண்பாடு, கலாசாரம், பழக்கவழக்கம் என வருகையில் சில வித்தியாசங்களும் பிரதேசங்களுக்கிடையே காணப்படுகின்றன. இவ்வாறு ஒற்றுமையும் வேற்றுமையுமான தன்மைகளைக் கொண்டதாக இப்பிரதேசங்கள் அமைந்துள்ளன.

ஒற்றுமையும் வேற்றுமையும்
பண்பாட்டின் அடியாக எழுந்த கலைகளிலும், சிறப்பாக இப்பகுதிகளில் வழங்கும் கூத்துகளிலும் இப்பண்பை நாம் காணலாம். ஒற்றுமையும் வேற்றுமையும் எனும் இந்தக் கருத்து, ஈழத்துக் கூத்துகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு திறவுச் சொல்லாகும். முதலில், இந்தப் பிரதேசத் தன்மைகளை விரிவாக நோக்குவோம்.
பிரதேசத் தன்மைகள்
இலங்கைத் தமிழர் எனக் கூறப்படும் அரசியல் உரிமைத்தன்மை உடைய தமிழ் சமூகத்திடையே, பிரதேச நிலைப்பட்ட ஒரு பன்முகப்பாடும் நிலவி வந்துள்ளது. பிரதேச நிலைப்பட்ட பன்முகப்பாடு என்ற சொற்றொடர் இங்கு முக்கியமானதாகும். இலங்கைத் தமிழ் என்னும் ஓர் அலகை ஒரு பண்பாட்டுக் கூறாக எடுத்துக்கொண்டால், அதனை நாம் பின்வரும் பிரதேசங்களாக வரையறுக்கலாம்:
- மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டம் (மூதூர்)
- வன்னிப் பகுதி
- யாழ்ப்பாணம்
- மன்னார்
- வடமேல் மாகாணம், குறிப்பாக சிலாபம் பகுதிகள்
- கொழும்பு
- தென் மாகாணம்
- மலையகம்
இவற்றுள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், வன்னி, திருகோணமலை, மலையகம் ஆகிய பகுதிகளிலேயே தமிழர்கள் செறிந்து வாழ்கிறார்கள். இந்த ஒவ்வொரு பிரதேசமும் தனித்துவமான கலாசாரப் பண்புகளைக் கொண்டுள்ளன.
பண்பாடு என்பதற்கு அடித்தளமாக இருப்பது மிக முக்கியமாக அந்தப் பிரதேசங்களில் இருக்கின்ற பொருளாதார அமைப்பும், அதன் அடித்தளமாக அமைந்துள்ள சமூக அமைப்பும் ஆகும். மொழியால் அவர்கள் ஒன்றுபட்டு இருப்பினும், பண்பாட்டால் வேறுபட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரதேசங்களுக்கிடையே பண்பாட்டு உறவுகளும் அரசியல் உறவுகளும் காலந்தோறும் நிலவி வந்தமையால், பிரதேசப் பண்பாடுகளுக்கிடையே கொடுத்தலும் எடுத்தலும் எனும் பண்பு நிகழ்ந்து வந்துள்ளது. இதனால், பண்பாட்டு மோதல்கள், பண்பாட்டுக் கலப்புகள், குறிப்பிட்ட சூழலில் பிரதேசப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உதவியிருக்கின்றன. இந்த வகையில் முதலில் ஒவ்வொரு பிரதேசப் பண்பையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
யாழ்ப்பாணப் பிரதேசம்
யாழ்ப்பாணப் பிரதேசம் இன்றைய நிலையில் தீபகற்பத்தையும் அங்குள்ள தீவுகளையும் குறிக்கும். யாழ்ப்பாணச் சாதி அமைப்பும் அதன் அதிகார அடுக்குமுறையும் முக்கியமானதாகும்; அதற்கான பொருளியல், பண்பாட்டுக் காரணிகள் உண்டு.
யாழ்ப்பாணப் பிரதேசம் காலனித்துவத்தை எதிர்கொண்டபோது, ஆரம்பத்தில் சமூக மேலாண்மை கொண்ட பிரிவினர் தங்கள் பாரம்பரியத் தொடர்ச்சி மற்றும் பேணுகைக்குத் தேவையான அதிகாரத்தைச் சைவக் கருத்தியலின் வழியாக ஏற்படுத்திக் கொண்டனர். இந்தச் சைவ மேலாதிக்கக் கருத்துநிலை மேலாண்மை முக்கியமானது. யாழ்ப்பாணச் சமூகத்தில், இந்து மதத்தினைப் பேணும் நிலை ஒருபுறமாகவும், ஆங்கிலக் கல்வி வழியாக வந்த ஒரு தராண்மை வாதப் போக்கினைப் பேணும் நிலை இன்னொரு புறமாகவும் காணப்பட்டது.
அரசியல், பொருளாதாரப் பலம் இருந்ததன் காரணமாக யாழ்ப்பாணமே இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சமூகமாக மாறியது. அரசியலில் இது துல்லியமாகத் தெரிந்தது. இதற்கான எதிர்ப்பு ஏனைய பிரதேசங்களில் காணப்பட்டது என்பதும் இங்கு நாங்கள் நினைவுகூரத்தக்கது. சைவக் கருத்துநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் சமூக அடுக்கமைவு உணர்வு வலிமையுடன் இருந்தது; அங்கு சாதி இறுக்கம் பேணப்பட்டது. கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்து மதம் சார்ந்தவர்களும், முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்துள்ளனர்.
யாழ்ப்பாண சமூக அமைப்பில் பொருளாதார, பண்பாட்டு தலைமை ஸ்தானம் பெற்ற வேளாளர்கள் சமூக அதிகார அடைவில் மேல்நிலை மிக்கவர்கள். இவர்களோடு கட்டுப்பட்ட சாதிகளும் இருந்தன; கட்டுப்படாத சாதிகளும் இருந்தன. அங்குள்ள சாதி அமைப்பை இவ்வாறு பார்த்தவர் கென்னத் டேவிட். கட்டுப்பட்ட சாதிகளை குடிமைகள், அடிமைகள் என இரு வகையாகப் பிரித்தனர். குடிமைகள் வேளாளர்களின் வீட்டு ஊழியம் செய்தனர்; இவர்கள் கட்டுப்பட்டவர்களாகவும், சிலர் கட்டுப்படாதவர்களாகவும் இருந்தனர். அடிமைகள் வேளாளர்களின் வயல்களிலே ஊழியம் செய்தனர். அடிமைகள் எனப்பட்ட பஞ்சமரான பள்ளர், நளவர், அம்பட்டர், பறையர், வண்ணார் எனும் சாதியினர் தீண்டத்தகாதவராகவும் வைக்கப்பட்டனர். கட்டுப்படாத சாதியினர் பொற்கொல்லர் போன்றோரும் கரையார் மற்றும் இன்னும் சில குழுக்களுமாம். இவ்வொவ்வொரு சாதிக்கும் தனித்தனிக் கோயில்களும் வழிபாட்டு முறைகளும் இருந்தன. பொதுவாக அதிகார அடைவில் மேல்நிலைச் சாதியினர் ஆகம வழிபாட்டு முறையையும், கீழ்நிலையில் இருந்த சாதியினர் ஆகம முறையில் அல்லாத வழிபாட்டு முறையையும் கைக்கொண்டனர்.
கரையோரப் பகுதியில் கத்தோலிக்கத் தாக்கத்தினால் கிறிஸ்தவம் மேலோங்கி இருந்தது. கிறிஸ்தவர்கள் மத்தியில் சாதிப் பிரிவினைகள் இருந்த போதிலும் வழிபாட்டு முறைகள் ஒன்றாக இருந்தன. நாடகமும் இச்சமூக அமைப்புக்கு விதிவிலக்காக இருக்கவில்லை. ஆங்கிலேயர் வருகையும் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் சூழல் ஏற்பட்டதுமே முக்கிய அம்சங்களாகும். எல்லோரும் கல்வி கற்று அரசு உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டதனால் சமூக அசைவியக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன; அது கூத்துகளையும் தாக்கியது.
யாழ்ப்பாண சமூக அமைப்புப் பற்றி வெளிநாட்டார் நல்ல ஆய்வுகளைச் செய்துள்ளனர். முக்கியமாக மைக்கல் பாங்ஸ் சிறுப்பிட்டியை மையமாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளார்; சிறுப்பிட்டி ஒரு விவசாயப் பிரதேசம். கென்னத் டேவிட் மயிலிட்டியை மையமாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளார்; அது ஒரு மீன்பிடிப் பிரதேசம். பிறையன் பவ்வன் பேர்ஜர் சாவகச்சேரியை மையமாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளார்.
உள்ளூர் வாசிகளின் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. சி. அரசரத்தினத்தின் ஆய்வுகள் யாழ்ப்பாணத்தின் விவசாயம், கைவினை, கரையோரத் தொழில்களின் உற்பத்தி முறைகளைப் பற்றிப் பேசுகின்றன. சித்தார்த்தன் பேரின்பநாயகம் யாழ்ப்பாணத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர்; இவருடைய ஆய்வுகள் மேற்சொன்னோரின் ஆய்வுகளை இட்டு நிரப்புகின்றன.
இவையாவும் போருக்கு முன்னரான யாழ்ப்பாணத்தைப் பற்றிய ஆய்வுகளாகும். போருக்குப் பின்னர் இந்தச் சமூக அமைப்பில் சிறிது அசைவியக்கம் ஏற்பட்டுள்ளது. பத்மநேசன், சஹ்றாஹஸ்மி, பிரசாந் ரகுநாதன், சாரிகா திரணகம, பகீரதி ஜீவேஸ்வரா, பரம்சோதி தங்கேஸ் ஆகியோரின் ஆய்வுகள் போருக்குப் பின்னரான யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் மாற்றங்களைக் கூறும் ஆய்வுகளாகும். அண்மைக்காலமாக உள்ளூர் ஆய்வாளர்கள் யாழ்ப்பாணச் சமூக அமைப்பையும் சாதி அமைப்பையும் பற்றி ஆராயத் தொடங்கி உள்ளனர். இவை யாழ்ப்பாண சமூகத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்; அந்தப் புரிந்துகொள்ளல் யாழ்ப்பாணக் கூத்துகளையும் புரிந்துகொள்ள உதவும்.
மன்னார்ப் பிரதேசம்
மன்னார்ப் பிரதேசத்தை வன்னிப் பகுதியின் ஓர் அங்கமாகவே கொள்ளும் போக்கு இருந்தாலும், அந்தப் பிரதேசம் தனித்துவமான பிரதேசமாகும். மன்னார் மாவட்டம் மன்னார்த்தீவு, மாதோட்டம் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டது. பொருளாதாரம் என்று பார்க்கும் போது, குளங்களை மையமாகக் கொண்ட விவசாயம் — நெற்செய்கையும் கடலை அடிப்படையாகக் கொண்ட மீன்பிடிப்பும் முக்கியமானவை ஆகும். இவற்றைவிட சிறுதானியப் பயிர்ச்செய்கை, நன்னீர் மீன்பிடி, வியாபாரம், சிறு கைத்தொழில் போன்றவற்றையும் குறிப்பிடலாம். பொருளாதாரப் பலம் — வேளாண்மையைப் பொறுத்தவரை வெள்ளாளர், கரையார், கடையர் மற்றும் ஏனைய சமூகங்களிடமும் இருந்தது; மீன்பிடியைப் பொறுத்தவரை பிரதானமாக பரதவர், திமிலர், முக்குவர், கரையார் ஆகிய சமூகங்களைச் சார்ந்தவர்களிடம் இருந்தது.
சாதி அடிப்படையில்தான் கிராமங்கள் தொடக்கத்திலிருந்தே அமைக்கப்பட்டிருந்தன. அதேவேளை, இரு சமூகத்தினர் அல்லது அதற்கு மேற்பட்ட சமூகத்தினர் கூடிவாழும் நிலையையும் காணலாம். அந்தவகையில், ஓரூரில் ஒரு சமூகத்தினர் மட்டும் வாழும் நிலையையும், ஓரூரில் இரு சமூகங்கள் வாழும் நிலையையும், ஓரூரில் பல சமூகங்கள் வாழும் பாங்கினையும் காணலாம்.
அவ்வகையில் கத்தோலிக்க மக்களைப் பொறுத்தவரையில், ஓரூரில் ஒரு சமூகத்தினர் அரங்கேற்றும் நாடகங்கள் உள்ளன. உதாரணமாக, மழுவராயன் கட்டையடம்பனில் ‘சந்தொம்மையார் வாசகப்பா’வினை ஒரு குறிப்பிட்ட சாதியினரும், முருங்கன் பள்ளக்கமத்தில் ‘புனித சந்தியோகுமையோர்’ நாடகத்தைக் குறிப்பிட்ட இன்னொரு சாதியினரும், கற்கடந்தகுளத்தில் ‘சற்பிரசாத வாசாப்பை’ இன்னொரு சாதியினரும் அரங்கேற்றுவர்.
ஓரூரில் இரு சாதியினரும் இணைந்து, சேர்ந்து அரங்கேற்றுகின்றனர். உதாரணமாக, கட்டைக்காட்டில் வேளாளரும் கரையாரும் சேர்ந்து அரங்கேற்றும் புனித செபஸ்தியார் நாடகத்தினைக் கூறலாம். ஒரே சமூகத்தைச் சார்ந்த பல ஊர்களைச் சார்ந்தவர்கள் ‘சாதி நாடகமாக’ நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். உதாரணமாக, கட்டைக்காட்டில் ‘என்றிக்கு எம்பரதோர்’ நாடகத்தை வேளாளர் சமூகத்தினரும், முருங்கன் கமத்தில் ‘புனித சந்தியோகுமையோர்’ நாடகத்தை வண்ணார் சமூகத்தினரும், சுண்டிக்குளியில் ‘சந்திரகாசன்’ நாடகத்தை கரையார் சமூகத்தினரும், அடம்பொன்தாழ்வில் ‘இம்மானுவேல்’ நாடகத்தை கடையர் சமூகத்தினரும் மேடையேற்றுகின்றனர்.
சாதி அமைப்பு தனித்துவத்துடனும், அதேவேளை மிகவும் நெகிழ்ச்சித் தன்மையுடனும் இருப்பதை மன்னார் மாதோட்டத்தில் அவதானிக்கலாம். முன்பு, இச்சமூகங்களின் — அதாவது கத்தோலிக்கரிடையே — ஞானப்பெற்றோரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் தங்கள் சமூகங்களைச் சார்ந்தவர்களை விடுத்து, ஏனைய சமூகத்தவர்களை மதித்து அவர்களை ஞானப்பெற்றோராகத் தெரிவு செய்வதை சாதாரணமாகப் பார்க்கலாம். இது சமூகங்களிடையே பெரும் புரிந்துணர்வையும், ஊடாட்டத்தையும், உறவையும் நிறையவே வளர்த்திருக்கிறது. இப்போது இதில் எந்தளவிற்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறதென்றால், சமூகங்களிடையே காதல் திருமணங்களை அங்கீகரித்து, சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் நிலைமையும் உருவாகி இருப்பது, இச்சமூகங்களிடையே உள்ள நெகிழ்ச்சித் தன்மையினைச் சுட்டிக்காட்டுகிறது.
இங்கு வாழும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் ஏறத்தாழ சம முக்கியத்துவம் உடையவர்களாக இருந்து வந்துள்ளனர். கத்தோலிக்கத் தமிழர் பண்பாடு அங்கு மேலோங்கியுள்ளது. இந்தப் பண்பாடு சைவப் பண்பாட்டிற்கும் இடம் கொடுத்தது.
மன்னாரில் முஸ்லிம்கள் எருக்கலம்பிட்டி, தராபுரம், புதுக்குடியிருப்பு, மன்னார் நகரம், முசலி, சிலாபத்துறை, பெரியமடு, விடத்தல்தீவு போன்ற பகுதிகளில் நீண்டகாலமாக முதன்மையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
மன்னார் பகுதியின் சமூக அமைப்பு யாழ்ப்பாணப் பகுதியின் சமூக அமைப்பிலிருந்து வித்தியாசமானது. ஆரம்பத்தில் இங்கு இந்திய, முக்கியமாக தமிழ்நாட்டின் நிலமானிய அமைப்பின் பிரதான பண்பான சாதி நிலமானிய அமைப்பு இருந்தது. திருக்கேதீஸ்வரம் கோயில் இதற்கு மத்திய ஸ்தானமாக இருந்தது. எனினும், மீன்பிடித் தொழிலைக் கொண்ட மக்கள் இங்கு அதிகம் வாழ்வதனாலும், இஸ்லாமியர் அங்கு இருப்பதனாலும், கிறிஸ்தவ மதத்தின் தாக்கத்தினாலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக இங்கு வாழ்வதாலும், அச்சமூக அமைப்பின் பண்பாடு தனித்துவமாய் உள்ளது. கிறிஸ்தவம் அடிநிலை மக்களையும் ஈர்த்து, அவர்களுக்கு இடம் கொடுத்தது. இதனால், அடிநிலை மக்கள் பெருவாரியாக கிறிஸ்தவக் குருமாராக வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கிறிஸ்தவக் கருத்துகளைக் கொண்ட கூத்துகள் மன்னார் பகுதியில் பிரசித்தமானவை.
மன்னார் சமூக அமைப்புப் பற்றிய ஆய்வுகள் அதிகம் வெளிவரவில்லை; எனினும், டொமினிக் எஸ்லருடைய கலாநிதிப்பட்ட ஆய்வு முக்கியமானது. ‘கிராமம், சாதி, கத்தோலிக்க மதம்’ என்ற தலைப்பில் வெளிவந்த அவரது கலாநிதிப்பட்ட ஆய்வு, வட்டகண்டல் கிராமத்தில் வாழும் கடையர் எனும் சாதியினரை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். இத்தகைய சமூக ஆய்வுகள், மன்னார் கூத்துகளைப் புரிந்துகொள்ள உதவும்.
மட்டக்களப்புப் பிரதேசம்
மட்டக்களப்புச் சமூக அமைப்பு, முக்கியமாக அதன் சமூக ஒழுங்கமைப்பும், சாதி அமைப்பும், பழக்கவழக்கங்களும் சில வகையில் யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதி அமைப்பிலிருந்தும், பழக்கவழக்கங்களிலிருந்தும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றன என்று அந்தச் சமூகத்தை ஆராய்ந்த மானிடவியலாளர்கள் கூறியுள்ளனர்.
வரலாற்று ரீதியாக, இது நீண்டகாலம் கண்டியர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது; எனினும், சுய ஆதிக்கம் உடைய ஆட்சியும் அங்கு நிலவியிருந்தது. மட்டக்களப்பின் இந்து சமய முறை, யாழ்ப்பாணத்தைப் போல வரன்முறைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. மட்டக்களப்பில் முக்குவர் நில ஆதிக்கம் உடையோராக விளங்குகின்றனர். நிலம் எல்லோருக்கும் இருந்தது; இதனால், யாழ்ப்பாணம் போல அடிமை – குடிமை முறை அங்கு அழுத்தம் பெறவில்லை. சூழல் இதற்குக் காரணமாக இருந்தது.
சமஸ்கிருதமயப்பாடு மட்டக்களப்பில் குறைவு; இதனால் ஆகம முறை அங்கு முக்கியமாக இல்லை. வருடாவருடம் ஆர்ப்பாட்டமாக நடைபெறும் கோவில் சடங்குகள், தெய்வ உருக்கொண்டாடுதல், அதற்கு ஓதப்படும் மந்திரங்கள், பத்ததி முறையிலான வழிபாடு என்பன, ஏனைய பிரதேசங்களை விட வித்தியாசமானவை. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் வீரசைவ மரபின்படி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பில் வருடந்தோறும் இந்து மதம் சார்ந்த கோவில்களில் நடைபெறும் சடங்குமுறைகள், வெளியிலிருந்து பார்ப்போருக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடியவை. மட்டக்களப்பு சோழர் ஆட்சியின் கீழ் இருந்தமையினால், அதன் எச்சச்சொச்சங்களாக இங்கு சில ஆகமக் கோயில்களும், சோழர் நிலமானியத்தை ஒட்டிய சாதி – சமூக அமைப்பும் உண்டாகின. முக்குவச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக முக்கியத்துவம் உடையது; எனினும், இப்போது அது வழக்கில் இல்லை.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் சமூக அமைப்பு முறை ஒரு வகையில் வன்னியைப் போன்றதாயினும், மட்டக்களப்பில் மேலாண்மை வகுப்பினர் வேளாளரும், முக்குவரும், சீர்பாதக்காரரும், கரையாரும் ஆவர். மட்டக்களப்புக்கு ‘முக்குவதேசம்’ என்ற பெயரும் உண்டு. இங்கே முக்குவர், வேளாளர், சீர்பாதக்காரர் ஆகிய மூன்று வகுப்பினரும் பெரும்பாலும் நில உடைமையாளர்களாக உள்ளனர்.
நிலமானிய முறையில் அமைந்த விவசாயம் இங்கு பிரதான தொழில்; அதனுடன் மீன்பிடித்தலும், கால்நடை வளர்ப்பும் அடுத்து முக்கியமான தொழில்களாகும். உயர் நிலையில் உள்ள வேளாளர், முக்குவர், சீர்பாதக்காரர் ஆகியோர் தம் வயல்களில் தாமே வேலை செய்தலும், ஆட்களை வைத்து வேலை செய்தலும் உண்டு.
போடியார், முல்லைக்காரன், வேலையாள் எனும் பதங்கள் முக்கியமானவை. போடியார் பெருநில உடைமையாளர்; முல்லைக்காரன், போடியார் நியமிக்கும் வயல் மேற்பார்வையாளர்; வேலையாள், அந்த வயலில் வேலை செய்பவர். கிடைக்கும் வருமானம், அதாவது அறுவடை, பங்கிடப்படும் முறை முக்கியமானது. நில உடைமையாளரான போடியாருக்குப் பெரும் பங்கும், அதனிலும் சிறிய பங்கு முல்லைக்காரனுக்கும், அதனிலும் மிகச் சிறிய பங்கு வேலையாட்களுக்கும் பங்கிடப்படும். இப்பங்கீட்டுத் தன்மை சுரண்டல் மிகுந்தது.
ஒரு சாதிக்குள்ளேயே போடியார், முல்லைக்காரன், வேலையாள் இருப்பர். யாழ்ப்பாணத்தைப் போன்று அடிமை – குடிமை முறை இங்கு இல்லை; எனினும், பறையர், அம்பட்டர், வண்ணார் என்ற குடிமக்கள், கிராமங்களில் மேல்நிலைச் சாதியினருக்கு ஊழியம் செய்யும் குடிகளாக இருந்துள்ளனர். இப்போது அது வெகுவாகக் குறைந்து விட்டது — ஏன், இல்லை என்றே கூறலாம். எனினும், இவர்களுள் அடிநிலை மக்களும் வயல்நிலங்களை உடையவர்களாகவும், வயல் செய்பவர்களாகவும் இருத்தல் குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் இப்பிரதேசம் அதிக தூரத்தில் இருந்தமையினாலும், பிரதேசப் பண்பாடு வேரூன்றி இருந்ததனாலும், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பிராமணியத் தாக்கம் மட்டக்களப்பில் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கவில்லை.
மட்டக்களப்பு பிரதேசத்தின் மிகப் பிரதானமான அம்சம் அங்கு பாரம்பரிய முஸ்லிம்கள் நிலைகொண்டுள்ளதுதான். அவர்களும் தமக்குரிய பாரம்பரியப் பண்பாடுகளை உடையவர்கள். இது கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கேயுரிய ஒரு தனித்துவமாகும். இங்கு முஸ்லிம்களும் நில உடைமையாளர்களாக உள்ளனர். இது மட்டக்களப்பின் கலாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு பிரதேசத்தில் மிறாவோடை, ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய இடங்களிலும், கல்முனைப் பிரதேசத்தில் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய இடங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் செறிவாக வாழ்கின்றனர். ஒரு காலத்தில் இவர்களிடையேயும் இஸ்லாமியக் கருப்பொருள்களை மையமாகக் கொண்ட கூத்து மரபுகள் இருந்துள்ளன என அறிகிறோம். இங்குள்ள முஸ்லிம்கள் விவசாயத்தைத் தளமாகக் கொண்டவர்கள்; ஆதலால் தமிழர்களோடு பிணைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பின் சமூக வரலாறு முழுமையாக இன்னும் எழுதப்படவில்லை. மட்டக்களப்பின் சமூக அமைப்பைப் பற்றிய வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் முக்கியமானவை. முக்கியமாக டெனிஸ் மெக்கில்ரே, விற்றக்கர், பற்றிசியா லோரன்ஸ் போன்றோரின் ஆய்வுகள் மட்டக்களப்புச் சமூகத்தையும் சடங்குகளையும் புரிந்துகொள்ள உதவும். உள்ளூர்க்காரர்களும் சமூகவியல் துறையில் சில ஆய்வுகளைச் செய்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை முக்கியமான ஓர் இடம் எனினும், அதனுடைய வரலாறும் இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம் ஆகிய பகுதிகள் சோழர் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்ற இடங்களாகும். மட்டக்களப்பின் தென்பகுதியும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களும், திருகோணமலை மாவட்டமும் 1970 முதல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டன.
திருகோணமலைப் பகுதி இரண்டு பெரும் பிரதேசங்களின் தாக்கத்திற்குட்பட்டது எனலாம். திருகோணமலையின் வடபகுதியில் யாழ்ப்பாணப் பண்பாட்டுத் தாக்கத்தையும், திருகோணமலையின் தென்பகுதியில் மட்டக்களப்புப் பண்பாட்டுத் தாக்கத்தையும் காணலாம். திருகோணமலையின் தென்பகுதியில், அதாவது மூதூர், சம்பூர், சேனையூர், ஆலங்கேணி, கிளிவெட்டி, தம்பலகாமம் ஆகிய பகுதிகளில், மட்டக்களப்பில் நடைபெறுவது போல ஆகமம் சாரா வழிபாட்டு அம்சங்கள் காணப்படுகின்றன. கூத்துகளும் இப்பகுதிகளில் தான் ஆடப்பட்டுள்ளன.
வன்னிப் பிரதேசம்
வன்னிப் பிரதேசம், நில அமைப்புக் காரணமாகவும் தொடர்புக் குறைவுகளின் காரணமாகவும், தனித்தனிக் கிராமங்களாகவும் குடியிருப்புத் தொகுதிகளாகவும் இயங்கும் நிலையில் இருந்தது. யாழ்ப்பாணத்தைப் போன்ற ஒரு சாதி அமைப்பு இங்கு நிலவுகிறதாயினும், அது நெகிழ்வுத் தன்மையுடையது. ஆகம முறைக் கோவில்களின் செல்வாக்கு இங்கு குறைவு. கிராமியத் தெய்வ வழிபாடு இதன் பிரதான அம்சமாகும். வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவில் இங்கு முக்கியமானது. அதனை மையமாகக் கொண்டு கோவலன் கூத்து இங்கு நிகழ்த்தப்படுகிறது.
வடமேல் மாகாணம்
வடமேல் மாகாணப் பிரதேசத்தில் — புத்தளம், சிலாபம் தொடக்கம் நீர் கொழும்பு வரை — தமிழர்கள் முக்கிய இனக்குழுமமாக வாழ்ந்திருக்கிறார்கள். பின்னர், இந்தக் குடியிருப்புகள் சிங்களம் பேசும் பகுதிகளாக மாறின என கூறுவர்.
சிலாபத்தில் அமைந்துள்ள முன்னேஸ்வரம், இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்று என்பர். இக்கோவிலை மையமாகக் கொண்டு ஆகம முறையிலான வழிபாடுகள் கொண்ட பண்பாடு அங்கு உருவாகியது. இக்கோவில் முன்றலில் பண்டைக் கூத்துகள் ஆடப்பட்டதாக அறிகிறோம்.
புத்தளம் – சிலாபம் பகுதியில் இந்துப் பண்பாட்டின் திரௌபதி வணக்கம் மிக முக்கியமானதாகும். அதன் வழிபாட்டு முறை தனித்துவமானது. மட்டக்களப்பிலும் திரௌபதி வழிபாடு உண்டு. இந்த இரண்டு திரௌபதி வழிபாடுகள் பற்றி இன்னும் ஆராயப்படவில்லை.
மலையகம்
தமிழர்கள் பரந்து விரிந்து வாழும் இன்னொரு முக்கியமான பகுதி மலையகமாகும். தோட்டப் பயிர்ச்செய்கைகளுக்காக இவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள்; ஆயினும், அதற்கு முன்னரேயே வந்து சேர்ந்த இந்திய வம்சாவளியினரும் உண்டு என்பர். பெரும்பாலும் இராமநாதபுர மாவட்டத்திலிருந்து ஆசைகாட்டி அழைத்துவரப்பட்ட இவர்கள், சாதி ரீதியான பிரிவுகளை உடையவர்கள். பெரும்பாலும் இச்சாதிப் பிரிவினைகளை குடியிருப்புகள் தோறும், மலைகள் தோறும் காணலாம். பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையைப் பின்னணியாகக் கொண்ட பொருளியல் அமைப்பும் பிரிவுகளும் இவர்களுடைய பண்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன.
மலையகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கைத் தமிழர் என்ற வகைப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதில்லை. ‘இலங்கைத் தமிழர்’ என்ற பதம் இலங்கையின் பாரம்பரிய தமிழ்க் குடிகளுக்குரியதொன்று. இவர்களை ‘பெருந்தோட்டத் தமிழர்கள்’ என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது. 1950களின் பின் இவர்கள் தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என்று குறிப்பிடத் தொடங்கினர். இலங்கையின் மத்திய பிரதேசங்களான கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் இவர்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர்.
1960களில் ஏற்பட்ட கலவரங்கள், பஞ்சம், ஆகியன காரணமாக கணிசமான மலையகத் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் குடியேறினர். குறிப்பாக வன்னிப் பகுதிக்கு அவர்கள் சென்றனர். அவ்வவ் பிரதேசத் தமிழர் வாழ்க்கையுடன் அவர்கள் வாழ்வும் பண்பாடும் இணைக்கப்பட்டன என்பார் சிவத்தம்பி. காமன் கூத்து, பொன்னர் – சங்கர் போன்ற மலையக நாடகங்களை அவர்கள் அந்தப் பகுதிகளில் அரங்கேற்றியதாக தகவல்கள் கிடைக்கவில்லை.
மலையகத் தமிழரைப் பற்றி நிறைய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. வெளிநாட்டவரும் உள்நாட்டவரும் இத்தமிழ்ச் சமூக அமைப்பைப் பற்றி நிறையவே ஆராய்ந்துள்ளனர். அண்மைக்காலத்தில் மலையகத்திலிருந்து உருவான இளம் ஆய்வறிவாளர்கள் மிகச் சிறப்பான ஆய்வுகளைச் செய்துள்ளனர். இந்த ஆய்வுகளையும், பிரதேசங்களின் அகப் பின்னணிகளையும் புரிந்துகொண்டால்தான் அங்கு எழுந்த கூத்துகளையும் புரிந்துகொள்ளலாம். முதலில் கூத்துகளையும் அவை ஆடப்படும் பிரதேசங்களையும் அறிந்துகொள்வோம்.
பிரதேசங்களும் கூத்து வகைகளும்
யாழ்ப்பாணப் பிரதேசம்
1. தென்மோடிக் கூத்துகள்
2. வடமோடிக் கூத்துகள்
3. காத்தான் கூத்து
4. வசந்தன் கூத்து
5. கிறிஸ்தவ தென்மோடிக் கூத்து
6. நாட்டுக் கூத்து
மட்டக்களப்புத் தமிழர் பிரதேசம்
1. பறைமேளக் கூத்து
2. வசந்தன் கூத்து
3. மகிடிக் கூத்து
4. தென்மோடிக் கூத்து
5. வடமோடிக் கூத்து
வன்னித் தமிழர் பிரதேசம்
1. காத்தான் கூத்து
2. கோவலன் கூத்து
3. மகுடிக் கூத்து
4. குடமுதல் கூத்து
5. தென்மோடிக் கூத்து
6. கிறிஸ்தவப் பாரம்பரியத் தென்மோடிக் கூத்து
மன்னார் – சிலாபத் தமிழர் பிரதேசங்கள்
1. கிறிஸ்தவப் பாரம்பரியத் தென்மோடிக் கூத்து
2. வடமோடிக் கூத்து
3. வாசாப்பு
மலையகத் தமிழர் பிரதேசம்
1. காமன் கூத்து
2. அர்ஜுனன் தபசு
3. பொன்னர் – சங்கர்
இந்தக் கூத்துகளில் முழுமையான பிரதியும், ஆடல் – பாடல் வடிவமும், மேடையமைப்பும் கொண்டவை வடமோடி, தென்மோடி, வாசாப்பு என வகைப்படுத்தப்பட்ட கூத்துகளே. இவற்றைப் பற்றிய ஒரு விரிவான பார்வை அவசியம். அப்போதுதான் இவற்றின் தனித்துவங்களையும், அவற்றிற்கிடையே காணப்படும் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் புரிந்துகொள்ள முடியும். அதனை அடுத்த கட்டுரையில் நோக்குவோம்.



