முன்னுரை
முந்திய கட்டுரையிலே கூத்திலே காணப்பட்ட பாதகமான அம்சங்கள் கூறப்பட்டன. அதன் பாதகமான அம்சங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்வோம்:
- சாதி அமைப்பைப் பேணுகிறது (சாதி கலந்தாடும் வழக்கம் இல்லை).
- பெண்ணுக்கு அதிலே வெளிப்படையாக இடமில்லை (பெண்கள் கூத்தாடக் கூடாது).
- பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துகளை விதைக்கிறது (தொன்மக் கதைகளில் கூறப்படும் நம்ப முடியாத நிகழ்வுகள்).
- விளிம்புநிலைப் பாத்திரங்கள் அதிலே கேலி பண்ணப்படுகின்றன.
- ஒரு நாடகத்துக்குரிய கட்டமைப்பும், பாத்திரப்படைப்பும் கூத்துப்பிரதிகளில் அதிகமாக இல்லை.
- அதன் பிரதியும் ஆற்றுகையும் நிலமானிய விழுமியங்களைப் பேணுபவையாக உள்ளன.
இன்னும் பல உள்ளதாயினும், பிரதானமானவை இவைகளே.
இத்தனை பாதகங்கள் இருந்தும், இன்றும் இவை மக்களால் வரவேற்கப்படுகின்றன; ஊரிலே ஆடப்படுகின்றன. சிலநேரங்களில் போட்டிபோட்டுக் கொண்டு கிராமங்களில் கூத்துகள் நடக்கின்றன. இதற்கான காரணங்கள் யாவை? இந்த ஆய்வு எம்மை சமூக உளவியல் ஆய்வில் கொண்டுவந்து நிறுத்தும். இங்கே நான் பதினொன்று உபகாரணங்களை முன்வைக்கிறேன். இவை மாத்திரம்தான் காரணமல்ல, இன்னும் பல உள்ளன என்பதையும் வாசகர்கள் அறிய வேண்டும்.
அந்தப் பதினொன்றும் இவை:
- தனிமனித உளவியல், சமூக உளவியல்
- சாதியாக, சமூகமாக இணையும் தன்மை
- அதன் கொண்டாட்டத்தன்மை
- கிராமக்கல்விக்கூடமாக அது திகழ்தல்
- சமூகத்தின் சகல தரப்பினருக்கும் அது பாலியல் திருப்தியைத் தரல்
- திருமணத்திற்கு மாப்பிள்ளைகளையும் பெண்களையும் கண்டுபிடித்தல்
- குழந்தைகளின் கும்மாளமும் மகிழ்ச்சியும்
- பெற்றோர்கள் அடையும் பெரு மகிழ்ச்சி
- ஊரிலே அனைவரையும் இணைத்துச்செல்லும் பாங்கு
- உருவாக்கலில் முழு ஊரும் பங்கு கொள்ளுதலும், உள்ளூர் அறிவும்
- குடும்ப, சாதி, மத, பிரதேச, இன அடையாளமாக அது அடையாளப்படுத்தப்படுதல்
- காலத்தோடும், தொழிலோடும், சமூக அசைவியக்கத்தோடும் அது இணைந்திருப்பது
இவை ஒவ்வொன்றையும் சுருக்கமாகப் பார்ப்போம். முதல் ஐந்து காரணங்கள் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன. மீதி ஏழும் அடுத்த கட்டுரையில் விளக்கப்படும்.
1. தனிமனித உளவியல், சமூக உளவியல்
தனிமனிதருக்கென சில உளவியல்கள் உள்ளன. அதனை அவர்கள் வாழும் சமூகமும், அவர்களின் சொந்த அனுபவமும் அளிக்கின்றன. தனிமனிதர்கள் இன்னொரு மனிதரோடு அல்லது பலரோடு உறவாடுகின்றபொழுது, அவர்கள் சமூகமாக மாறுகிறார்கள். இந்த சமூக உறவாடல், அவர்களின் தனிமனித உளவியலில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்தவகையில், தமிழ் நாடகங்களோ கூத்துகளோ இன்னும் பெரிதாக உளவியல் கோணத்தில் அணுகப்படவில்லை. இந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது, கூத்தில் ஈடுபடுகின்ற தனிமனிதருக்கு அவர்களுக்கான உடல் இன்பம், உள இன்பம் ஆகிய இரண்டு இன்பங்களையும் கூத்து தாராளமாக வழங்குகிறது.
கூத்தை நிகழ்த்துபவர், அதைப் பழக்கும் பயிற்சியாளர் என்ற இரு சாராருக்கும் இது ஒரு பெரும் உடற்பயிற்சியாக அமைகிறது. முக்கியமாக, கூத்துக்கலைஞனின் அங்கம், பிரத்தியங்கம் ஆகிய முழு உறுப்புகளுக்கும் பயிற்சி கிடைக்கிறது. ஒரு நாள் அல்ல, இரண்டு நாளல்ல — ஆறு மாதகாலப் பயிற்சி. இந்தத் தொடர்ச்சியான பயிற்சி, கூத்தனின் உடலை வலிமைப்படுத்துகிறது. இதனோடு கூத்தில் ஈடுபடுகின்ற கொப்பி பார்ப்பவர், பிற்பாட்டுக்காரர், தாளமிசைப்போர் ஆகியோருக்கும் இந்த உடல் வலிமை கிடைக்கிறது. உடல் மாத்திரமல்ல — மனிதர்களின் முக்கிய அடையாளம், அவர்களுக்குள்ளே இருக்கும் உளம்தான். அந்த உள மகிழ்ச்சியே வாழ்வின் சாரம். அந்த மகிழ்ச்சியை, கலைஞருக்கும், கூத்து உதவியாளர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இந்தக் கூத்து அளிக்கிறது.

பண்டையகாலங்களில் ஒரு கூத்தைப் பழகி முடிக்க ஆறு மாதங்கள் எடுக்கும். நான்கு மாதங்கள், அவர்கள் தினமும் இரவு 7.00 மணியிலிருந்து 12.00 மணிவரை கூத்துப்பழகுவார்கள். அடுத்த இரண்டு மாதங்கள், கிழமைக் கூத்தாக 8 வாரங்கள் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை அதனைப் பழகுவார்கள். ஆறாம் மாத ஆரம்பத்தில் ‘அடுக்குப் பார்ப்பார்கள்’. ‘அடுக்குப் பார்த்தல்’ என்றால் — கூத்துக்குரிய அலங்கார உடைகள் அணியாது, வெறும் உடுப்பில் ஒரு நாள் விடிய விடிய அந்தக் கூத்தை நடத்துவதாகும். இந்த ஆறு மாதகாலப் பயிற்சி, ஊருக்கும், ஆடும் கலைஞருக்கும், ஆட்டுவிக்கும் ஆட்களுக்கும் உடல், உள சுகங்களைத் தரும். ஒருவித போதைநிலைதான் — ‘கூத்துப் போதை’ என்பேன். அந்த நிலையில், ஏதோ ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் முழுக்கிராமமும் இருக்கும். ஊர்முழுவதும் இந்தக் கூத்தைப் பற்றியே பேச்சாக இருக்கும்.
கூத்தின் வலிமைப்பாட்டிற்கு இது ஓர் உதாரணமாகும். இவையெல்லாம் இப்போது இல்லை என்பதையும், இதைப் வாசிப்போர் மனதில் கொள்ள வேண்டும்.
2. சாதியாக, சமூகமாக இணையும் தன்மை
வரலாற்றுப்போக்கிலே தமிழரிடையே சாதி வேறுபாடும் சமூக வேறுபாடும் வந்து விடுகின்றன. அதிலிருந்து எவரும் தப்பவே முடிவதில்லை. நிலவிய நிலமானிய சமூக அமைப்பு அதனை மேலும் இறுக்கி வைத்திருக்கிறது. சாதி ஒருங்கிணைப்பு, சமூக ஒருங்கிணைப்பு என்பன ஓர் ஊரிலே மிக இறுக்கமாகக் காணப்படுகின்ற ஓர் அம்சமாகும். சாதிக்கு ஒரு கோவில் இருக்கும் தமிழர் சமூகத்தில் சாதிக்கு ஒரு கூத்தும் இருக்கிறது. சாதி கலந்து ஆடக்கூடாது என்ற கொள்கையோடு கூத்துகள் ஆடப்படுகின்ற பின்புலத்தை இதனை வைத்துக் கொண்டுதான் நாங்கள் விளங்கிக் கொள்ளலாம்.
சில கூத்துகள் சாதியின் பெயரால் அழைக்கப்படுகின்றன. குறைந்த சாதியினர் எனக் கணிக்கப்படும் சாதியினர் மத்தியிலே மிகச் சிறந்த கூத்துகள் வந்தமைக்கு ஆதாரங்கள் உண்டு. மிகச்சிறந்த ஆட்டக்காரர்கள் குறைந்த சாதியினர் என கருதப்பட்ட சாதியினரிடம் காணப்பட்டுள்ளனர். மிகச்சிறந்த அண்ணாவிமாரும் காணப்பட்டுள்ளனர்.
சாதி என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்கின்ற சில குடும்பங்களின் இணைப்புதானே? சாதிக்கும் முன்னால் குடும்பம் என்பது முக்கியமாகப்படுகின்றது. குடும்பங்களின் இணைப்பே சாதியாகும். ஒரு குடும்பத்தில் ஒருவர் கூத்தாடினால் அந்தக் குடும்பம் மதிப்புக்குரிய குடும்பமாகிறது, இதனால் குடும்பத்திற்கு அங்கீகாரம் கிடைக்கிறது.
ஒரு சாதி கூத்தாடினால் அந்தச் சாதிக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. குறைந்த சாதியினர் எனக் கருதப்படும் ஒருவர் அரசன் வேடம் தாங்குகையில் அவர் பெருமிதம் அடைகிறார். அதனைப் பல சாதியினரும் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள்; இதனால் இணைகிறார்கள்; இதனால் ஒரு சாதி அங்கீகாரம் கிடைக்கிறது.
சில மதக்கூத்துகளை ஆடுகின்றபொழுது அந்த மதக்கூட்டம் ஒன்றாக இணைகிறது. கத்தோலிக்கக் கூத்துகள் இதற்கு உதாரணம். ஆடுபவர்களுக்கு சாதி கடந்த ஒரு மத அங்கீகாரம் கிடைக்கிறது, இது அவர்கள் மனதைத் திருப்திப்படுத்துகிறது.
மட்டக்களப்பில் மாத்திரமல்ல, தமிழர் மத்தியிலே கிராமங்கள் தோறும் சாதிகள் உள்ளன. ஒரு கிராமத்தைக் கூறினால் அது என்ன சாதிக்கிராமம் என இலகுவாகக் கூறிவிடுவார்கள். இவ்வண்ணம் கிராமங்கள் சாதிகளாக அமைந்து, அந்தக் கிராமத்தின் சாதியினர் முழுவதுமே அந்தக்கூத்தில் ஈடுபடுகின்றனர். இந்தக் கிராமங்களின் இணைப்பில் உருவானவைதான் பிரதேசங்கள். தங்கள் பிரதேசங்களின் பெருமையை, சிறப்பை, வெளி உலகுக்குக் காட்டுவதாக கூத்து அமைகின்றது. இவையெல்லாம் சேர்ந்துதான் இனமாக முகிழ்க்கின்றன. தமிழ் இனம் என்பதன் அடையாளம் இந்தக் கூத்தே. இவ்வகையில், குடும்பமாக, சாதியாக, மதமாக, ஊராக, பிரதேசங்களாக, இனமாக இணைகின்ற ஓர் இணைப்பினை இந்தக் கூத்துகள் தருகின்றன.
குடும்பமாக, சாதியாக, மதக் கூட்டமாக, கிராமமாக, பிரதேசமாக, இனமாக தமிழ்ச்சமூகம் விரிவடைய — அதற்குத்தக்க, கூத்துகளும் அந்தக் குழுமங்களை இணைக்கிறது என நாம் புரிந்துகொள்ளலாம்.
3. கூத்தில் காணப்படும் கொண்டாட்டத்தன்மை
கூத்து, மொத்தமாகப் பார்க்கும்போது ஒரு கொண்டாட்ட அரங்காகும். கூத்தைப் பார்ப்போர் அதன் கதை அமைப்பையோ அதன் உள்ளார்ந்த அர்த்தங்களையோ அதில் நடிகர்களும், அண்ணாவிமார்களும் உருவாக்கிய கற்பனைகளையோ நுணுக்கமாகப் பார்க்கமாட்டார்கள். கூத்தறிந்த சிலரே அப்படிப் பார்ப்பார்கள். ஏனையோருக்குக் கூத்து அரங்கேற்றம் அல்லது கூத்து ஆடுதல் என்பது ஒரு கொண்டாட்டம்தான்.
இந்தக்கொண்டாட்டம் இரவிரவாக நடைபெறும். மாலை 7.00 மணிக்கு அந்த வட்டக்களரியைச் சுற்றிக் குழந்தைகள் திரண்டுவிடுவார்கள். அந்த வட்டக்களரியும் அல்லது பின்னாளில் யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பிரதேசங்களில் உருவாகிவிட்ட ஒரு பக்கம் அடைக்கப்பட்ட அல்லது முற்பக்கம் அடைக்கப்பட்ட மேடைகளும், அதன் அலங்காரங்களும் ஒரு கொண்டாட்ட உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்திவிடும்.
ஏதோ நடக்கப்போகிறது என்ற உணர்வோடு குழந்தைகள் ஊரோடு எதிர்பார்த்திருப்பர். கூத்துக்குப் புறப்படும் வேடதாரிகளைத் தம் வீட்டிலேயே அவர்கள் உருவாக்குவார்கள். எனது சின்ன வயதில், என் பெரியப்பா கரப்பு உடுப்பை இடுப்பிலே அணிந்த வண்ணம், உரலின்மீது இருந்து, ‘கமலாவதி’ என்னும் கூத்துக்காக, பரமாகர மகாராஜாவாக அமர்ந்திருக்க, ஒப்பனையாளர் அவருக்கு ஒப்பனையிட்டதைப் பார்த்த ஞாபகம் வருகிறது.

கரப்பு என்பது மீன்பிடிக்கப் பிரம்பினால் செய்யப்படும் ஓர் பொறி ஆகும். வட்ட வடிவமாகவும் கூம்பிய உருவில் மேலிருந்து ஆரம்பித்துக் கீழே பரந்து கணுக்கால்வரை விரிந்து செல்வதாகவுமே இது அமைக்கப்படும். அதனை இடுப்பில் கட்டிக்கொண்டு கதிரையில் உட்கார முடியாது. இருப்பதானால் உரலில்தான் இருக்க முடியும். உரலில் பிருஸ்டப் பாகத்தை வைத்து, உரலைச் சுற்றிக் கரப்பு உடுப்புப் பரவ ஒப்பனைக்காக அமர்ந்திருப்பார் கூத்தர். இதனைக் கிராமம் எங்கும் காணலாம்.
முழுக்குடும்பமும் அவரைச் சுற்றி நின்றது. அவரை பரமாகர மகாராஜாவாக உருவாக்கும் முயற்சியில் அக்குடும்பம் ஈடுபட்டிருந்தது. சேலையை அவர் மனைவி வழங்கினார், ஒப்பனையை ஒருவர் செய்ய, இன்னொருவர் அவருக்கு உதவிக்கொண்டிருந்தார். அதை ஒப்பனை என்று அவர்கள் சொல்லவில்லை, ‘மாத்துப் போடுதல்’ என அழைத்தனர். மாத்து என்பது மாற்று என்பதன் பேச்சு வழக்கு. அதாவது இருக்கும் நிலையிலிருந்து இன்னொரு ஆளாக அந்தப் பாத்திரத்தை, அந்த ஆளை மாற்றிவிடுவது என்பது இதற்குப் பொருள்.
பெரியப்பா முருகுப்பிள்ளை பரமாகர மகாராஜாவாக உடல் தோற்றத்திலே, ஒப்பனையிலே மாறிக்கொண்டிருந்ததை எனது பத்தாவது வயதிலேயே பார்த்த ஞாபகம் இன்னும் மனதைவிட்டு அகலவில்லை. இவ்வண்ணமே ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குடும்பத்தில் நடிகர்களை அந்தப் பொதுமேடைக்காக ஒவ்வொரு வீட்டிலும் தயாரித்துக்கொண்டு இருந்தனர். அது ஒரு கொண்டாட்டமாகவே எனக்குத் தெரிந்தது — ஊர்க் கொண்டாட்டம்.
வேடம்கட்டி விடியவிடியக் கூத்து நடத்தியபோது, அந்தக்கூத்தில் வந்த நாடகக் கட்டமைப்பையோ நாடகத் தன்மையையோ யாரும் கவனிக்கவில்லை. அதன் ஆட்டத்தையும் அதன் பாட்டையும், அதன் பின்னணியில் ஒலித்த மத்தள ஒலியையும் சலங்கை ஒலியையும், கூட்டுக் குரலையும் பிற்பாட்டையும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
இருந்து பார்த்தோர் பலர்; பாயிலே படுத்துக்கொண்டு பார்த்தோர் பலர்; நடந்து திரிந்து கொண்டே பார்த்தோர் பலர்; ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே பார்த்தோர் பலர்; இடைக்கிடை சற்றுத்தூரம் சென்று சாராயம், கள்ளு அருந்திவந்து பார்த்தோர் சிலர்.
சிறுவயதிலேயே எனக்கு அது பெரும் கொண்டாட்டமாகவே தெரிந்தது. இந்தக் கொண்டாட்டத்தன்மை தான் கூத்தின் மிகப் பிரதானமான பலமாகும்.
ஆறு மாதகாலம் கூத்துப் பழகும்போதே தினமும் அந்த ஆடலையும் பாடலையும் கேட்ட; கிழமைக்கூத்து ஆடும்போது, பகல் முழுவதும் அந்த ஆடலையும் பாடலையும் கேட்ட; வெள்ளுடுப்பு நிலையில் அடுக்குப்பார்த்தல் என்ற இறுதி ஒத்திகையில் ஓர் இரவு பூராகவும் அந்த ஆடலையும் பாடலையும் கேட்ட ஊர்மக்கள் பலருக்கு, அந்தக் கூத்துப்பிரதி மனப்பாடமாகவே இருக்கும். ஆனாலும், அந்தப் பிரதியை எவ்வாறு நிகழ்த்தப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பே அவர்களிடம் அதிகமாக இருக்கும். தெரிந்த கதை, தெரிந்த ஆடல், தெரிந்த முகம், தெரிந்த தாளக்கட்டுகள், இறுதி ஒத்திகையில் கூத்தை முழுமையாகப் பார்த்த அனுபவம் இருந்தும் ஒளியிலும், உடையமைப்பிலும் அது எவ்வாறு உருவாகப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்துகொண்டே இருக்கும்.
அந்தக் கொண்டாட்டத்தை நோக்கி மனம் ஆவல்பட்டுக் கொண்டிருக்கும். இந்தக் கொண்டாட்டத்தன்மையினை ஊரிலே நடைபெறும் கோயிற் சடங்குகளிலே காணலாம். அங்கும், வருடம் ஒருதரம் அந்த ஊர்க்கோயில் அல்லது சாதிக்குரிய கோயில் திறக்கும். ஏழு நாட்கள், பத்து நாட்கள் அல்லது பதினெட்டு நாட்கள் எனச் சடங்குகள் நடைபெறும். ஒரு சாதி அல்லது சமூகம் அல்லது முழு ஊரும் அந்தச் சடங்கில் ஈடுபடும். அந்தச் சடங்கு வெறும் வழிபாடு மாத்திரம் அல்ல — அது ஒரு பெரும் கொண்டாட்டமும் ஆகும். இறுதிநாள் சடங்கு மிகப்பெரிய விழாவாக நடந்து முடியும். அது பலி கொடுத்ததாகவோ, பள்ளயமாகவோ, தீப்பாய்தலாகவோ அமையும். ஒரு வருடம், அந்தப் பெரும் கொண்டாட்டத்தை நோக்கி அந்தச் சமூகமும், அந்தச் சாதியும், அந்த ஊரும் காத்திருக்கும். ஏன் காத்திருக்கும் என்றால், அந்தக் கொண்டாட்டத்துக்குள் அவர்கள் அனைவரும் அடைகின்ற மகிழ்ச்சியே. இந்த மகிழ்ச்சியைத்தான் கூத்துக் கொண்டாட்டமும் தருகிறது.
ஆறு மாதகாலம் கூத்துப்பழகுதல் ஒரு கொண்டாட்டம் என்றால், அரங்கேற்றம் அன்று நடப்பது ஒரு கொண்டாட்டம் என்றால், அரங்கேற்றம் முடிந்தபின் வீட்டுக்கு வீடு ஆடிச்செல்வதும் ஒரு கொண்டாட்டம் தான். அன்று இரவு நடந்த கூத்தாகிய அந்தக் கொண்டாட்டத்தில் இணைய முடியாது வீட்டிலேயே இருக்கின்ற முதியவர்கள், நோயாளர்கள், பெண்கள் போன்றவர்களையும் கூத்தோடு இணைக்கின்ற ஊர்வலக் கொண்டாட்டம் அது. காலில் சதங்கை ‘ஜல் ஜல்’ என ஒலிக்க, சிறுவர்கள் பின்னால்வர, கூட நாய்களும் குலைத்த வண்ணம்தொடர, அது ஒரு கொண்டாட்ட ஊர்வலமாக இருக்கும். இவ்வண்ணமான கொண்டாட்டத்தன்மையினை ஏற்படுத்தி அனைத்து மக்களையும் இணைக்கின்ற ஒரு கலைவடிவமாக அல்லது ஓர் ஆற்றுகைவடிவமாக கூத்து இருந்தபடியினாலே அது சமூக அரங்காக மாறியது. இப்போது பெரும்பாலும் அது இல்லை என்பது தெரிகிறது. எனினும் கூத்து அன்று நிலைபெற்றமைக்கும், சில இடங்களிலாவது இன்று நிலைபெற்றிருப்பதற்கும் இந்தக் கொண்டாட்டத்தன்மையே காரணமாகும்.
4. கிராமக் கல்விக்கூடமாக அது திகழ்தல்
ஆங்கிலேயர் வந்த பின்னரே பாடசாலைகள் ஏற்பட்டு அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் இந்த கூத்துகளே மக்களுக்குக் கல்வி புகட்டும் பங்கினை ஆற்றின. மட்டக்களப்பில் மாத்திரமல்ல, இந்தக் கல்விபுகட்டும் பாங்கு இலங்கைத் தமிழர் மத்தியிலே, அந்தக்காலத்தில் நடைபெற்ற அத்தனை கூத்துகளிலும் இருந்துள்ளது. இராமாயண, மகாபாரதக் கதைகள் அல்லது பழமரபுக் கதைகள், நல்ல மனிதனுக்கு வேண்டிய குணங்களைப் போதித்தன. தர்மம், நீதி, அற ஒழுக்கங்கள் என்பவற்றைக் கூத்தே புகட்டியது.

இந்த அற, ஒழுக்க, தர்மங்களைப் பற்றிய பார்வைகள் இப்போது மாறிவிட்டன. அவை பற்றிய விமர்சனங்களும் வந்துவிட்டன. ஆனால் ஒரு காலத்தில் இந்த அற, ஒழுக்க, நீதி என்பன கல்வியாக கூத்துகள்மூலம் மக்களுக்குக் கூறப்பட்டன. கிராமமக்கள் இந்தக் கூத்தினை ஒருநாள் மாத்திரம் பார்ப்பவர்கள் அல்ல; கூத்து உருவாகத் தொடங்கியதிலிருந்து அரங்கேறும்வரை, ஏறத்தாழ ஆறு, ஏழு, எட்டு மாதங்கள் தொடர்ச்சியாகப் பார்ப்பவர்கள். எனவே தொழில்நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கூத்துமூலமே அவர்கள் அறிவைப் பெறுகின்றனர். கூத்தின்மூலமே அறக்கருத்துகளைப் பெறுகிறார்கள். பெரியவர்கள் மாத்திரமல்ல, சிறுவர்களும்கூட சிறுவயதில் இருந்தே இந்த அறிவினைப் பெறுகிறார்கள். இதனை ஒரு தொடர் கல்வியூட்டல் என நாம் அழைக்கலாம். இவ்வகையில், ஒரு காலத்தில், கிராமத்தில் வாழுகின்ற மிகச் சாதாரணமான, வறிய மக்களுக்கு கல்வியூட்டும் கல்விச்சாலைகளாக கூத்துகள் விளங்கின.
5. பாலியல் பகிரங்கமாகப் பேசப்பட்டது
கூத்தில் பாலியல் பாடல்கள், பாலியல் பகிடிகள் பகிரங்கமாக இடம்பெற்றன. அது உளமகிழ்ச்சியையும், உளத்திருப்தியையும் மக்களுக்கு ஏற்படுத்தின. பாலியல் பேச்சுகள் கிராமத்தில் சர்வ சாதாரணம். மத்தியதர வர்க்கத்தினரிடையே அவை பேசப்படக்கூடாதவை. அப்படிப் பேசுதல் ஒழுக்கமின்மையின்பால் வைத்துப்பார்க்கப்பட்டது. பாலியல் பேச்சுகள் அநாகரிகமானவை எனச் சமூகத்தால், அதிலும் படித்த சமூகத்தால் அன்று ஒதுக்கப்பட்டன. நமது தமிழ்மரபை எடுத்துக்கொண்டால், சங்ககாலம் தொடக்கம் இற்றைவரை இலக்கியங்களில் பாலியல் பேசப்பட்டு வந்துள்ளது. அகம் என்றும், காதல் என்றும், காமம் என்றும், கைக்கிளை என்றும், பெருந்திணை என்றும் அது பல வகைப்படும். அக்காதல் செய்திகள் தமிழ் இலக்கியமரபில் பேரிடம் பிடித்துள்ளன. காமம் என்பது நோய் அல்ல; அது ஒரு இயல்பு எனத் தமிழ்மரபு கூறுகிறது. இங்கே ஊர்க் கூத்துகளில் இந்த பாலியல் பேச்சுகள் பாடலாகப் புறப்பட்டு முழுமக்களையும் கணநேரம் மகிழ்விக்கிறது. ஓர் ஆணைப்பார்த்து பெண் பாடுவதாக இப்படி ஒரு பாடல் வருகிறது:
தூய தனம் இரண்டும் விறுவிறுப்பு – உன்
தொடுதலுக்கோ – அது பெருவிருப்பு
ஒரு பெண் தன் காதலை வெளிப்படையாகக் கூறுவதை தமிழ்ப் பெருமரபு தடுக்கும். ஆனால் மக்கள் மரபிலே அது கூறப்படும். ஆண்டாளின் பாடல்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். அந்த மக்கள் மரபை கிராமியக் கூத்துத் தருகிறது.
இந்திய நாகரிகத்தில் கோயில்கள் பலவற்றில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்கியமாக கஜுராவோ சிற்பங்களைக் குறிப்பிடலாம். மட்டக்களப்புக் கொக்கட்டிச்சோலை, பறாளை விநாயகர் கோவில் பழையதேரில் இத்தகைய பாலியல் சிற்பங்கள் இருந்துள்ளன. உடலுறவுச் சிற்பங்களும் காணப்படுகின்றன. ஏன் இது? பாலியல் என்பது பாதகமானது அல்ல; அது இயல்பு என்பதைப் படித்தவர்களைவிட பாமரர்கள் என்று அழைக்கப்படும் இந்தக் கிராமத்தவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
அலங்காரரூபன் எனும் கூத்துப் பனுவலில் விறகுதலையனாக வரும் அரசகுமாரன் ஒரு பெண்ணுடன் புணரும்போது நடத்தும் செயல்களை இவ்வாறு பாடுகிறான்:
மாணிக்கச் செம்பொன் தெவிட்டு முலை
நாணிக்கப் பூவை பேணும் புட்ப முலை
மார்பை மார்போடணைத்து – அவளிரு
ஊனை ஊனிற் பிணைத்து – இனிச்சென்று
மாட்டக் கிடையாதோ – களி
மூட்டக் கிடையாதோ – பால்
புகட்டக் கிடையாதோ –
நாகபடம் நிகர் கடிதடத்திடை
ஆகம் படத் திடை வேகம் நோக்கியே
மூழ்கி மூழ்கித் தேறி
காம வெள்ளம் ஒழுகி மெழுகி திருமணம்
முடிக்கக் கிடையாதோ – புகழ்
படிக்கக் கிடையாதோ – மேனி
தடிக்கக் கிடையாதோ – தேன்
குடிக்கக் கிடையாதோ
இதனைச் சமூகம் வரவேற்றிருக்கிறது; இரசித்திருக்கிறது; பாடியிருக்கிறது; மகிழ்ந்திருக்கிறது. ஆண் பாத்திரம் மாத்திரமல்ல, பெண் பாத்திரமும் பாலியல் பேசுகிறது. சாரங்கரூபன் நாடகத்தில், சாரங்கரூபனிடம் அவள் சிறியதாயார் சித்திராங்கி அவனை தன்னுடன் புணரவருமாறு வெளிப்படையாகக் கேட்கிறாள். இச்சொல்லாடல் மத்தியதர வர்க்கத்தினரைத் திடுக்கிடவைப்பவை. அதில்வரும் ஒரு பெண் பாத்திரம் ஆண் பாத்திரத்திடம் எனது இரண்டு கால்களின் நடுவே இருக்கும் மூடுண்ட பெட்டியினை உன்னிடம் இருக்கும் திறப்பையிட்டு திறந்து, அசைத்து இன்பம் தருவாய் என்று வேண்டுகின்றாள். அப்பாடல் இது:
கட்டிப்பிடித்து இரண்டு காலின் நடுவேயிருக்கும்
பெட்டிதனிலே திறப்பைவிட்டு பேசிச் சர நகை புரிந்து
இட்டமுடன் மெல்ல அசைத்து இன்பம் அருளாய்
இந்தப் பாலியல் உணர்வை இப்படிச் சுதந்திரமாக வெட்டவெளியில் எந்த நாடகமும் கூறாது. ஆனால் கிராமியக் கூத்துகள் தந்திருக்கின்றன. பூக்கோவின் பாலியல் பற்றிய தத்துவார்த்தக் கருத்துகளோடு இணைத்து ஆராய வேண்டியவை இவை. கூத்து ஆய்வுலகைக் காத்துநிற்கிறது. இதுவரை முன்சொன்ன காரணங்களில் ஐந்து காரணங்களே விளக்கப்பட்டுள்ளன. ஏனைய ஆறு காரணங்களையும் அடுத்த கட்டுரையில் விளக்குவோம்.
தொடரும்.