வட இலங்கைப் பெருநிலத்தில் ஆதிமனிதக் குடியேற்றங்கள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
33 நிமிட வாசிப்பு

வட இலங்கைப் பெருநிலத்தில் ஆதிமனிதக் குடியேற்றங்கள்

November 6, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

ஹோமோ இரக்டஸ் எனப்படும் ஆதி மனிதன் (பச்சை) ஆபிரிக்காவிலிருந்து ஆசியா வரை பெயர்ந்ததையும், நியண்டதல் எனப்படும் ஆதி ஐரோப்பியரின் (மஞ்சள்) பரவலையும், ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதனின் (சிவப்பு) அகில உலக இடப்பெயர்வையும் காட்டும் படம். ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆதி மனித இனங்கள் வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் வன்னிப் பகுதி முக்கியமானதொரு இடமாகும்.

காலவரிசை (Chronology)

  1. இந்திய – இலங்கை மண்ணில் ஆதி மனித இனங்கள்: இ.மு. 1800,000
  2. வட இலங்கை வன்னிப் பகுதியில் பழைய கற்கால மக்கள்: இ.மு. 125,000
  3. நவீன மனிதனின் தென்னாசிய வருகை: இ.மு. 70,000-65,000
  4. இலங்கை தென்னிந்தியாவிலிருந்து தனித்தீவாகப் பிரிதல்: இ.மு. 7,000
  5. இரும்புக்கால ஆரம்பம்: இ.மு. 3,380

(இ.மு – இற்றைக்கு முற்பட்ட ஆண்டுகள்)

ஒரு குறிப்பு: இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் இன்றைய பெயர்களும், இந்நாடுகளின் நிலப்பகுதிகளுக்கு இக்காலத்தில் வழக்கிலிருக்கும் பெயர்களும் வரலாற்றுக் காலத்திலிருந்த மக்கள் இந்நிலங்களுக்குக் கொடுத்த பெயர்களேயாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் இந்நிலங்கள் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். அவை பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் நமக்குத் தெரியாதாகையால் தற்காலப் பெயர்களைக் கொண்டே பூர்விகமான நிலப்பகுதிகளை நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

நிலவியல் நோக்குகள் (Geological Considerations)

நமது பூமியில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களால் பூமி உருவான காலத்திலிருந்து இதுவரை நான்கு பனிக் கல்பகாலங்கள் (Ice Epochs) நடைபெற்றிருக்கின்றன. இறுதியான பிளிஸ்ரொசீன் (Pleistocene Ice Epoch) கல்பத்தில் மட்டும் 17 பனிப்படிவு யுகங்களும் (பனியுகங்களும்), 17 பனியிடைக் காலங்களும் இடம் பெற்றிருக்கின்றன. கடந்த 12,000 ஆண்டுகளாக நாம் 17 ஆவது பனியிடைக் காலத்தில் (Interglacial Period) வாழ்ந்துகொண்டிருக்கிறோம் (Peter Clark 2002). 

பனிப்படிவு யுகங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பூமியின் மேற்பாகம் குளிர்ந்துபோய் வட, தென் பூகோளப் பகுதிகளில் பல மைல் உயரத்திற்கு பனி உறைந்து பனிமலைகளாக இருந்தன. பூமியின் மத்திய பகுதியை அண்டிய நாடுகளைத் தவிர  மற்றைய கண்டங்களில் ஆறுகள் உறைந்து நிலங்களிலும் பனிக்கட்டி பாளம் பாளமாகப் படிந்திருந்தது. கடல் நீர் ஆவியாக மேலே போய் பின்னர் மழையாக வந்தபோது பெரும்பாலான நிலங்களில் இந்த மழை பனிக்கட்டிகளாக உறைந்து போயிருந்ததனால் கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 120 மீட்டர் முதல் 135 மீட்டர் வரை தாழ்வாக இருந்தது.

இற்றைக்கு முன் (இ.மு.) 115,000 ஆண்டு முதல் இ.மு. 12,000 ஆண்டு வரை நீடித்த கடைசிப் பனியுக காலத்தில் – கடல் மட்டம் இன்றிருப்பதை விட 120 முதல் 135 மீட்டர் வரை குறைவாக இருந்த காலப்பகுதியில் – இலங்கை இந்தியாவோடு இணைக்கப்பட்ட நிலப்பகுதியாக இருந்தது. இந்நிலத்தின் நீள – அகலப் பரிமாணங்களும் இன்றிருப்பதை விடப் பெரியதாகவே இருந்தன. இந்நிலம் ‘இந்திய – இலங்கை’ என்ற ஒரே நிலமாகும் (Peter Clark 2002, Rohling 1998). 

பனிப்படிவு யுகக் காலத்தில் காணப்பட்ட உலகம்:

பனிப்படிவு யுகத்தின்போது பூமியின் மத்திய பகுதியிலிருந்த நிலங்களில் மட்டுமே மனிதர்கள் வசிக்கக்கூடியதாக இருந்தது. வடக்குப் பகுதியிலிருந்த நிலங்களும், தென் பகுதியிலிருந்த அன்டாட்டிக்கா கண்டமும், கடல்களும், பனிப்பாளங்களால் மூடப்பட்டிருந்தன. இவ்விடங்களில் பனிப்பாளங்கள் 2 கிலோமீட்டர் உயரத்திற்குப் படிந்திருந்தன. பிரித்தானியா முழுவதும் பனிப்பாளங்களின் கீழே அமிழ்ந்திருந்தது. கடல் மட்டம் 135 மீட்டருக்குக் கீழே இருந்தமையால் கண்டங்களின் கரைகள் இன்றிருப்பதைவிட 200 – 300 கி.மீட்டர் வரை நீண்டிருந்தன. இலங்கை தென்னிந்தியாவின் நிலப்பகுதியாக இருந்தது. கிழக்காசிய நாடுகள் நிலத்தொடர்பால் ஒன்றாகிவிட்டிருந்தன.

இற்றைக்கு 25,000 – 19,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசிப் பனியுகம் உச்ச நிலையை அடைந்திருந்த சமயம் – கடல் மட்டம் இன்றிருப்பதை விட 135 மீட்டர் தாழ்வாக இருந்த காலப்பகுதியில் – உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளெல்லாம் இன்றிருப்பதைக் காட்டிலும் மிகவும் பெரியனவாக இருந்தன. இந்தியக் கடலோரம் இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றிவர பல கி.மீ. தொலைவிற்கு அகன்றிருந்தது. குமரிமுனைக்குத் தெற்கே குமரிநாடு 200 கிலோ மீட்டர் வரை பரந்திருந்ததாகக் கணிப்பிட முடிகிறது.

இ.மு. 12,000 ஆண்டு முதலாக – கடைசிப் பனியுகம் முடிவிற்கு வந்த காலத்திலிருந்து உலகைச் சூழ்ந்திருந்த பனிப்படலங்கள் உருகி, கடல் மட்டம் சிறிது சிறிதாக மேலெழுந்த போது – இந்திய – இலங்கையின் கரையோர நிலப்பகுதிகள் சிறிது சிறிதாக கடலினுள் அமிழ்ந்து போயின. குமரிநாடு சிறிது சிறிதாக கடலினுள் அமிழ ஆரம்பித்தது. குமரிநாட்டை முற்றாகக் கடல் கொள்ள இ.மு. 12,000 முதல் இ.மு. 7,000 வரை ஐயாயிரம் ஆண்டுகள் வரை எடுத்திருக்கிறது. அமிழ்ந்த நிலம் அழிந்தோ, கரைந்தோ போய்விடவில்லை. அந்த நிலம் குமரி முனையை அண்டி இந்து சமுத்திரத்தினடியில் இன்றும் கடல் – மேடாகக் (Sea Mount) கிடக்கிறது.   

இ.மு. 7,000 காலப்பகுதியில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த இலங்கை, இந்தியாவிலிருந்து தனித்தீவாகப் பிரிந்து போயிற்று (Deraniyagala, S.U. 1992). அடுத்த ஆயிரம் ஆண்டுகாலப் பகுதியில் – பனிப்படலங்கள் உருகி ஆறுகள் வழியாகப் பெருகி வரும் நீரினாலும், மழையினாலும் ஏற்படும் கடல் பெருக்கமும், கடல் நீர் ஆவியாகப் போவதால் ஏற்படும் கடல் மட்டக் குறுக்கமும் சமநிலை அடைந்த நேரத்தில் – கடல் மட்டம் சீர்நிலை அடைந்தது (Thiagarajah, S. 2011: 38-39).

இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்னிந்திய நிலப்பகுதி. இன்றையகால நிலவரை அதனுள் காட்டப்பட்டிருக்கிறது. குமரிமுனையின் கீழ் நீண்டுகொண்டிருப்பது அன்றைய குமரிநாடு. நன்றி: டர்ஹாம் பல்கலைக்கழகப் புவியியல் துறை.

இலங்கை தென்னிந்தியாவிலிருந்து பிரிந்து வந்ததற்கான புவியியல் ஆதாரங்கள் பலவுள்ளன. தென்னிந்தியாவும் இலங்கையும் ஒரே கண்டத் தகட்டிலேயே (Tectonic plate) அமைந்திருக்கின்றன. தென்னிந்தியாவும் இலங்கையும் உலகின் மிகப் பழமையான கருங்கற்களைக் (Granite) கொண்டிருக்கின்றன. இவை தவிர சுண்ணாம்புக் கல், பேஸோல்ற், அகேற், சல்ஸிடோனி ஆகிய கற்கள் இலங்கைக்கும், தென்னிந்தியாவிற்கும் பொதுவானவை. இலங்கையின் மத்தியிலுள்ள பேதுருதாலகால மலையடுக்கு தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் பொதிகை மலைத் தொடரின் (Western Ghats) தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. தென்னிந்தியாவின் கிழக்குக் கரையோரமாக திருநெல்வேலி வரை தொடர்ந்திருக்கும் தேரி மணல் மேடுகளின் தொடர்ச்சியே இலங்கையின் வட – வடமேற்குப் பகுதிகளில் கடற்கரை ஓரமாக முல்லைத்தீவிலிருந்து குதிரைமலை வரை படர்ந்திருக்கும் இரணைமடு தேரித் தொடராகும்.

ஹோமோ இரக்டஸ் மனிதர்களின் ஆசிய வருகை

ஹோமோ இரக்டஸ் என்றால் முதுகெலும்பு நிமிர்ந்த மனிதன் எனப் பொருள்படும். இற்றைக்கு இரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்ற – இன்றைய மனிதர்களின் மூதாதையர்களான (ஹோமினின் இனம்) இம்மனிதர்களின் எலும்புப் படிவங்களும், அவர்கள் உபயோகித்த கல்லாயுதங்களும் ஆபிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளில் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன (Haviland, W.A. et al. 2007: 162).

வெகு சீராகச் செதுக்கப்பட்ட அச்சூலியன் கைக்கோடரி

இற்றைக்கு இரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் தோற்றம் பெற்ற ஹோமோ இரக்டஸ் வகை மனிதர்கள் காலத்திற்குக் காலம் ஆபிரிக்காவை விட்டு வெளியேறி மேற்கே மத்திய தரைக்கடல் நாடுகள் வழியாகவும், கிழக்கே அரேபியா வழியாகவும் மேற்கு ஆசிய நாடுகளை (சுமேரியா, இலம் – இன்றைய ஈராக், இரான் நாடுகள்) அடைந்தார்கள். அங்கிருந்து கைபர் கணவாய், போலன் கணவாய் (Khyber Pass, Bolan Pass) வழியாக இந்தியாவை அடைந்து, பின்னர் அங்கிருந்து கிழக்காசிய நாடுகள் வழியாக சீனா வரை சென்றிருக்கிறார்கள். இவர்கள் ஆபிரிக்காவை விட்டு வெளியேறி, தலைமுறை தலைமுறையாக இடம்பெயர்ந்து சீனா சென்றடைய 10,000 முதல் 12,000 ஆண்டுகள் வரை ஆகியிருக்கும் எனக் கணிப்பிடப்படுகிறது.

ஹோமோ இரக்டஸ் மனிதர்களால் பரந்த அளவில் – இற்றைக்கு முன்னர் 1.76 மில்லியன் ஆண்டுக் காலத்திலிருந்து இம்மனிதர்கள் பரவியிருந்த இடங்களிலெல்லாம் – நீண்டகாலமாக உபயோகிக்கப்பட்ட பம்பர வடிவுடைய கல்லாயுதம் அச்சூலியன் கைக்கோடரி என அழைக்கப்படுகிறது. இவ்வகையான கல்லாயுதம் முதன்முறையாக பிரான்ஸ் நாட்டில் செயின்ற்-அச்சூல் (Saint-Acheul) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டமையால் ‘அச்சூலியன் கல்லாயுதம்’ எனப் பெயர் பெற்றது.

ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதனும் அவனது இலங்கை வருகையும்

உலகில் தோன்றிய மனித இனங்களில் அகில உலகமெல்லாம் பரவியிருக்கும் மனித இனம் ஹோமோ சேப்பியன்ஸ் (Homo sapiens sapiens) என அழைக்கப்படும் நவீன மனித இனமாகும். இலத்தின் மொழியில் ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ என்றால் ‘அறிவுக் கூர்மையுடைய மனிதன்’ எனப் பொருள்படும். இந்தப் பெயரை சுவீடன் நாட்டைச் சேர்ந்த உயிரினக் கற்கை அறிஞரான கார்ல் லின்னியஸ் (Biologist, Carl Linnaeus)  1735 ஆம் ஆண்டில், தனது 28 ஆவது வயதில் எழுதி வெளியிட்ட ‘இயற்கை ஒழுங்கு முறை’ என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார். மனித இனங்களுக்கு ‘ஹோமோ’ என்ற பெயரையும், தாவர இனங்களுக்கு அவர்களது குடும்ப இனப் பெயரையும் குழுப் பெயரையும் சேர்த்து இலத்தீன் மொழியில் பெயர் கொடுத்தவர் இவர். இவர் மிருக இனக் குடும்பங்களுக்கும், தாவர இனக் குடும்பங்களுக்கும் கொடுத்த பெயர்களே இன்றுவரை விலங்கின, தாவர இனக் கற்கைகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்பகால ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ மனிதர்கள்

மானிடவியல் கற்கைநெறிகளின் படி (Human Anthropology), இற்றைக்கு 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ ஹைடெல்பர்யென்ஸிஸ் (Homo Heidelbergensis) என்ற ஒருவகை ஆதி மனித இனத்திலிருந்து இற்றைக்கு 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மனிதன் உருவானான் எனக் கருதப்பட்டது. ஆனால், 2017 ஆம் ஆண்டில் மொராக்கோ நாட்டில், ஜெபெல் ஈர்ஹூட் என்ற இடத்திலுள்ள ஒரு குகையில் கண்டெடுத்த கபாலம் இற்றைக்கு 300,000 ஆம் ஆண்டுக்குரிய ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் மனிதனுக்கு உரியதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஆபிரிக்க ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் கபாலங்கள் இற்றைக்கு 200,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைக் காட்டாமையால் இந்த ஒரு கணிப்பீட்டை மட்டும் கொண்டு அதைப் பொதுவாகக் கொள்வது கடினம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகும். இன்று பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இ.மு. 300,000 ஆண்டை ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் மனிதர்களின் தோற்ற ஆண்டாகக் கொள்கிறார்கள்.

நவீன மனிதனுக்கு உயர்வான, சிக்கலான மூளை இருந்தமையால் அவனிடம் ‘கருத்துநிலைச் சிந்தனை’ (Power of Abstract Thinking)  செய்யக்கூடிய ஆற்றல் இருந்தது. இதன் காரணமாக தரமான கருவிகளையும், பண்பாட்டையும், பேசும் மொழியையும் அவனால் உருவாக்க முடிந்தது. இம்மனிதனிடம் உயர்ந்த சமூகச் சமாளிப்புத் திறமை இருந்தபடியால் கூடிவாழும் மனப்பான்மையும், போட்டியிடும் மனப்பான்மையும் கொண்ட பலவகை மக்கள் கூடிவாழும் சிக்கலான சமுதாயத்தில் தனது வாழ்க்கையைச் சுலபமாகக் கொண்டு நடத்த முடிந்தது. தான் வாழ்ந்த சூழலை உணர்ந்து அதை மாற்றியமைக்கும் ஆற்றலும், வல்லமையும் கொண்டிருந்தபடியினால் மனித இனத்தின் வளர்ச்சியைப் பெருக்கி, மொழியியல், இலக்கியம், விஞ்ஞானம், பகுத்தறிவு, தத்துவம், சமயம், புராணம் ஆகிய கற்கைநெறிகளை அவனால் விருத்திசெய்ய முடிந்தது.

இற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து ஆண்களும், பெண்களும் என குடும்பங்களாக வெளிவந்த ஒரு மக்கள் கூட்டம் செங்கடலின் முகத்துவாரத்தைக் கடந்து அரேபிய கண்டத்தில் கடற்கரை ஓரமாக வாழ்ந்தார்கள். பின்னர் அவர்களது வம்சாவழியினர் யெமென் – சவுதி அரேபியா – ஈரான் கடற்கரை வழியாக நடந்து, அப்பால் இந்து சமுத்திரக் கடற்கரையோரமாக நகர்ந்து தென்னிந்தியாவை அடைந்தார்கள். தொடர்ந்து ஒரே நிலமாக இருந்த தென்கிழக்கு ஆசியாவின் கரையோரமாக நடந்து இற்றைக்கு 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் கடற்கரையோரமாக இடம்பெயர்ந்ததற்கான முக்கிய காரணங்கள் இரண்டு: ஒன்று, மக்கள் நடந்து முன்னேறுவதற்கு கடற்கரை மணல் தடைகளற்ற அன்றைய விரைவு – நெடுவழியாக (Express Highway) இருந்தது. இரண்டு, அருகிலிருக்கும் கடலிலிருந்து வேண்டிய நேரமெல்லாம் மீன்களை உணவுக்காகப் பெற்றுக்கொள்ள முடிந்தது (Quintana-Murci, L. 1999; Wells, S. 2002; Petraglia, M.D. 2003).

இக்கடற்கரை வழி இடப்பெயர்வால் இம்மனிதர்களின் சந்ததியினர் இ.மு. 68,000 – 65,000 ஆண்டளவில் தென்னிந்தியாவையும், அதன் தொடரான இலங்கையையும் அடைந்திருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் தென்னிந்தியாவும் இலங்கையும் நிறைந்த பச்சிலைக் காடுகளையும், நெடுமர வனங்களையும், வன விலங்குகளையும் கொண்டிருந்தபடியால் மனிதக் குடியமர்விற்கும், உணவு பெறுவதற்கும் ஏற்ற இடமாக அமைந்திருந்தது. அதன் காரணமாக கணிசமான ஒரு தொகையினர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் தங்கிவிட, மற்றைய புலப்பெயர் முன்னோடிகள் மேலே சென்றார்கள். இலங்கையின் கடற்கரையோரங்களில் கண்டெடுக்கப்பட்ட 65,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லாயுதங்களும், தென்பாகத்திலுள்ள பாதாதொம்ப லேனா குகைகளில் கண்டெடுக்கப்பட்ட இந்த மக்களின் எலும்புகளும், இந்த மக்களின் நகர்வையும், அமர்வையும் உறுதிப்படுத்துகின்றன (Deraniyagala, S.U. 1992: 686; 2004).

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

பண்டைக்கால மக்கள் விட்டுச்சென்ற சான்றுகளின் அடிப்படையில் அக்கால மக்களது வாழ்க்கை முறை பற்றியும், அம்மக்களது பண்பாட்டைப் பற்றியும் எடுத்தியம்பும் இயல் தொல்லியலாகும். இச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே அம்மக்களது நாகரிக வளர்ச்சியைக் காட்டும் காலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (Prehistoric Period), வரலாற்றுதய காலம் (Proto-historic Period), வரலாற்றுக் காலம் (Historical Period) எனத் தொல்லியலாளர்களால் பிரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 

இவற்றுள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்தாதாரங்கள் பயன்படுத்தப்படாத காலகட்டத்தைக் குறிப்பதாகும். இதனால், இக்காலகட்ட வரலாறு பெருமளவிற்கு தொல்லியற் சான்றுகளின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டியுள்ளது. இதற்கு அக்கால மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள், மட்பாண்டங்கள், மண்படைகள், சிற்பங்கள், ஓவியங்கள், அன்றாடம் பயன்படுத்திய பாவனைப் பொருட்கள் என்பன பெரிதும் உதவுகின்றன. உலக நாடுகள் பலவற்றினதும் வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிக வரலாறு இவற்றின் துணைகொண்டே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை தொல்லியலாளர்கள் பண்டைய மக்கள் உபயோகித்த கல்லாயுதங்களின் தோற்ற காலத்தைக் கொண்டு கீழ்க்காணும் காலப்பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை உருவாக்கப்பட்ட காலத்திற்கேற்ப அவற்றின் பருமன், தோற்றம், செயற்றிறன், அவற்றை ஆக்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பத் திறமை, அவற்றின் பயன்பாடு என்பன வேறுபட்டிருக்கும். மக்களின் பண்பாட்டு வளர்ச்சியோடு இக்கற்கருவிகளின் தொழில்நுட்பத் திறமை மேம்பட்டு வந்திருப்பது கண்கூடு.

  1. பழைய கற்காலம் (Palaeolithic or Old Stone Age): இலங்கையில் இக்காலப்பகுதி இ.மு. 125,000 முதல் 33,000 ஆண்டுக்காலம் வரை நீடித்திருக்கிறது. 
  2. இடைக்கற்காலம் (Mesolithic or Middle Stone Age): பிற நாடுகளில் இடைக்கற்கால ஆரம்பம் இ.மு. 12,000 ஆக இருப்பினும் இலங்கையில் உள்ள இடைக்கற்காலக் கருவிகளின் ஆரம்பகாலம் இ.மு. 34,000 ஆக வெப்ப – ஒளியேற்றுவியல் (Thermo-luminescence) கணிப்பின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
  3. புதியகற்காலம் (Neolithic): இக்காலத்தில் வேட்டையாடி நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் ஓரிடத்தில் தங்கி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். கற்காலத்தைத் தொடர்ந்து, இ.மு. 3,380 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இரும்புக்காலம் ஆரம்பமாகியது  (Deraniyagala, S.U. 2013: 51).

ஆதிகாலக் குடியிருப்புகள்

அ. பழைய கற்காலம்

இந்தியாவில் இ.மு. 1800,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனித இனங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன (Mishra, S.1995: 11-16). நெடுங்காலமாக இலங்கையும் இந்தியாவும் நிலத்தொடர்பு கொண்டிருந்தமையால் இலங்கையிலும் இக்காலகட்டத்திற்குரிய மனித எச்சங்கள் வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம். இன்றைய தொல்லியல் ஆய்வுகளின்படி இ.மு. 125,000 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து இலங்கையில் மக்கள் வாழ்ந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுகின்றன (Deraniyagala, S.U. 1996: 277-285). இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பழைய கற்காலத்தைச் சேர்ந்த மக்களாவர்.  

ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதன் இலங்கையை வந்தடைந்த காலப்பகுதி கி.மு. 68,000 – 65,000 ஆகையால், இலங்கையில் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்களில் ஒரு பகுதியினர் ஹோமோ இரக்டஸ் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பர். கி.மு. 50,000 ஆண்டுகாலப் பகுதியில் ஹோமோ இரக்டஸ் இனம் முற்றாக அழிந்து போயிற்று.

வட இலங்கையில் முல்லைத்தீவின் வட பகுதியிலிருந்து வடக்கு – வடமேற்காக பரந்தன், பூநகரி, மாந்தை, புத்தளம், குதிரைமலை வரை கடற்கரையோரமாகப் பரந்திருக்கும் தேரி – மேடு, இரணைமடு அமைப்பு (Iranamadu Formation) என அழைக்கப்படுகிறது. இந்த மேடுகள் – பரந்து கிடக்கும் சரளைக் கற்களுக்கு (Gravel) மேலுள்ள களிமண் கலந்த மணல் மேடுகள் –  பல்லாயிரம் ஆண்டுக்கால சீதோஷ்ண தட்பவெப்பத்தில் சிவப்புநிறமாக மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த இரணைமடு மணல் மேடுகளில் இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதல் இடைக்கற்காலம் வரை பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் – முக்கியமாக அவர்கள் உபயோகித்த கற்கருவிகள் காணப்படுகின்றன (Deraniyagala, S.U. 1992: 686-688).

இக்கால மக்கள் தமது ஆகாரத்திற்காக நாடோடிகளாக இடம்விட்டு இடஞ்சென்று  வேட்டையாடியும், கடற்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் மீன்பிடித்தும் வாழ்ந்தார்கள் என்பதால் இவர்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் காணப்படுகின்றன. இவர்கள் உபயோகித்த மற்றைய பாவனைப் பொருட்களும், உடுத்திய உடுப்புகளும், அவர்களின் எலும்புக்கூடுகளும் அழிவுற்றுப் போனபின் முக்கியமாக எஞ்சியிருப்பவை அவர்கள் விட்டுச்சென்ற கற்கருவிகளே.

ஆதியில் வன்னிப்பகுதியில் வாழ்ந்த மக்கள் விட்டுச்சென்ற கல்லாயுதங்களும், கல்லுபகரணங்களும் கடற்கரையோரமாகக் காணப்படும் இரணைமடு தேரிமணற் குன்றுகளிடையே காணப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் இயற்கையாகக் கிடைத்த கற்களை உபயோகித்த மனிதன் பின்னர் இந்நிலையிலிருந்து ஒருபடி முன்னேறித் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பலவாறு அவற்றைச் செப்பனிடத் தொடங்கினான். இவ்வாறு செய்யும்போது முழுக்கல்லையும் செப்பனிடுவதற்குப் பதிலாக தனது தேவைக்காகப் பயன்படுத்தும் முனையை மட்டுமே செப்பனிட்டான்.

இலங்கையில் வடக்கு – வடமேற்காக முல்லைத்தீவிலிருந்து குதிரைமலை வரை தொடர்ந்து செல்லும் இரணைமடு தேரிமணற் தொடர். இலங்கையில் ஆதிமனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இந்த செம்மணற் குன்றுகளினிடையே காணப்படுகின்றன. வரைபடம், நன்றி: Dr S.U. Deraniyagala.

இயற்கையாக ஆற்றோரங்களிலும் வேறிடங்களிலும் பாறையாகக் காணப்பட்ட ‘குவாட்ஸ்’ (Quartz) கற்களைக் கொண்டே இக்கருவிகள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டன. இப்பாறைகளை நெருப்பைக் கொண்டு சூடாக்கி பின்னர் அவற்றின் மேல் நீரை ஊற்றியோ அல்லது மற்றொரு பெருங்கல்லால் அடித்தோ பிளக்க வைத்து, பின்னர் அவற்றை உடைத்து வேண்டிய ஆயுதங்களை இவர்கள் செய்திருக்கிறார்கள் (Allchin, B & Allchin, R. 1968: 96-99). இவ்வாறு பாறையை உடைக்கும்போது வெடித்துச் சிதறும் செதில்கள் (Flake Tools) மிகவும் கூர்மையாக இருப்பதனால் சவரம் செய்வதற்கும் நுணுக்கமாக வெட்டுவதற்கும் உபயோகப்படுத்தப்பட்டன. முழுக்கற்களையும் சிறப்பாகச் செப்பனிட்டு கைக்கோடரிகள் (Hand Axe) தயாரிக்கப்பட்டன. தட்டைக் கற்களைக் கொண்டு பிளப்பிகள் உருவாக்கப்பட்டன. கைக்கோடரிகளும் பிளத்தற் கருவிகளும் மரங்களை வெட்டுவதற்கும், மிருகங்களைக் கொன்று இறைச்சியை வெட்டி எடுப்பதற்கும், நிலத்தில் விளையும் கிழங்கு வகைகளை அகழ்ந்து எடுப்பதற்கும் உபயோகிக்கப்பட்டன.  

இரணைமடு தேரி மணற்குன்றுகளினிடையே கண்டெடுக்கப்பட்ட பழையகற்காலக் கருவிகள், உபகரணங்கள். நன்றி: Dr S.U. Deraniyagala.

பழைய கற்காலக் கருவிகள்: 1, 2, 6: வெட்டுக் கருவிகள்; 3, 7: கைக்கேடரிகள்; 4, 8: பிளப்பிகள்; 5: வட்டத்தட்டு வெட்டி. நன்றி: Allchin B & Allchin R.

பழையகற்கால மக்கள் 20 முதல் 40 பேரைக் கொண்ட குழுக் குடும்பமாக 50 சதுர மீட்டர் அளவான ஓரிடத்தில் தங்கி வேட்டையாடியும், உணவு சேகரித்தும் வாழ்ந்தார்கள் எனக் கணிக்கப்படுகிறது. இவர்களது பிரதான தொழிலாக வேட்டையாடுதல் அமைந்திருந்தாலும் தனது உணவிற்காக மிருகங்களின் இறைச்சியோடு மீன், கிழங்கு வகைகள், பழவகைகள் ஆகியவற்றையும் உட்கொண்டார்கள். ஓரிடத்தில் உணவு குறைந்ததும் கூட்டமாக வேறிடம் சென்று இவர்கள் தங்கினார்கள். வட இலங்கையின் உலர்ந்த வலயத்தில் (வன்னிப்பகுதி) ஒரு சதுர கிலோமீட்டருக்கு 0.8 மனிதர்கள் வரை வாழ்ந்தார்கள் எனக் கணக்கிடப்படுகிறது. கடலிலிருந்து கிடைக்கும் கடலுணவுகளின் தாராளத்தால் இலங்கையின் வடக்கு – கிழக்குக் கடற்கரையோரங்களில் சதுர கிலோமீட்டருக்கு 1.5 பேர்கள் வரை வாழ்ந்தார்கள் (Deraniyagala, S.U. 1996: 277-285).

உணவு

பழைய கற்கால மக்கள் தங்கள் உணவிற்காக கல்லாயுதங்களைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடியும், கிழங்குகள் பழங்கள், விதைகள் ஆகியவற்றைச் சேகரித்தும் உட்கொண்டார்கள். மற்றைய மிருகங்கள் கொன்றுபோட்ட விலங்குகளின் இறைச்சிகளையும் எலும்புகளையும் கூட உட்கொண்டிருக்கலாம். கடற்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்தவர்கள் மீன்களையும் உணவாகக் கொண்டார்கள்.

நெருப்பு

ஹோமோ இரக்டஸ் மக்கள் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த நாட்களிலேயே நெருப்பின் உபயோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள். காய்ந்த குச்சிகளை ஒன்றோடு ஒன்று உரசி நெருப்பை உண்டாக்கும் கலையை அறிந்திருந்தார்கள். வேட்டையாடிய விலங்கினங்களை கற்கத்திகளால் வெட்டி கற்தட்டுகளில் போட்டும், மரக்குச்சிகளில் இணைத்தும் நெருப்பில் வாட்டி உட்கொண்டார்கள். இதன் காரணமாக பச்சை ஊனிலிருந்து உண்டாகக்கூடிய நோய்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். திறந்த வெளிகளில் வாழ்ந்தவர்கள் இரவு நேரங்களில் நெருப்பை எரித்து அதைச் சுற்றிவர உறங்கியதன் மூலம் கொடிய மிருகங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

வதிவிடங்கள்  

இரணைமடு கடற்கரை தேரி மேடுகளைத் தவிர இம்மக்கள் திறந்த வெளிகளிலும், ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், கடற்கரைகளிலும், மலைக்குகைகளிலும், பாறை ஒதுக்குகளிலும் வாழ்ந்து வந்திருப்பதை அவ்விடங்களில் காணப்படும் அவர்கள் உபயோகித்த கல்லாயுதங்களைக் கொண்டு அறிய முடிகிறது. தென்னிலங்கையில் உள்ள பாதாதொம்ப லேனா, பெலி லேனா குகைகளிலும் பல நூற்றாண்டுகளாக மக்கள் குடிகொண்டிருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

ஆ. இடைக்கற்காலம்

பழைய கற்கால மக்களைப் போன்று இடைக்கற்கால மக்களினதும் பிரதான தொழில்களாக வேட்டையாடுதல், மீன்பிடித்தல், உணவு சேகரித்தல் போன்ற தொழில்களே அமைந்தன. ஆனால், பழைய கற்கால மனிதனைவிட இவனது வாழ்க்கை சற்று முன்னேற்றமடைந்து காணப்படுகிறது. ஆதியில் நாடோடியாகத் திரிந்த இம்மனிதன் ஓரளவு தொடர்ந்து ஓரிடத்தில் இருந்தது பற்றியும், தான் வாழ்ந்த சூழலை முன்னரைவிடக் கூர்மையாக அவதானித்து அதை மாற்ற முற்பட்டதையும் அண்மைக்கால ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன (Deraniyagala, S.U. 1992: 686-688). 

இக்கால மனிதனால் காடுகள் அழிக்கப்பட்டதை, தாவரங்கள் விட்டுச் சென்ற மகரந்தப் பொடியின் (Pollen) படிவங்கள், எச்சங்கள் ஆகியவை எடுத்துக் காட்டியுள்ளன. இக்காலத்தில் காட்டு மரங்கள் விட்டுச் சென்ற மகரந்தப் பொடியின் எச்சங்கள் எண்ணிக்கையிற் குறைய, சிறு பற்றைகள், புல், பூண்டு ஆகியவை விட்டுச் சென்ற மகரந்தப் பொடியின் எச்சங்கள் மேலோங்கிக் காணப்படுவதை ஆதாரமாகக் கொண்டு இக்கால மனிதன் காட்டை அழித்துச் சூழலை வளப்படுத்த முற்பட்டான் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள் (Allchin B. & Allchin R. 1968: 96-99).    

பழைய கற்காலத்தில் வாழ்ந்த பெரிய மிருகங்களின் இனங்கள் பெருமளவுக்கு அழிந்துபோக, காடுகளில் காணப்பட்ட மான், மரை, முயல் ஆகிய சிறிய மிருகங்களை வேட்டையாட இக்கால மனிதன் கற்றுக்கொண்டான். கூர்மையாக்கப்பட்ட சிறிய (குறுணி) நுண்கற்களை அம்புகளிலும் ஈட்டிகளிலும் முனையாகப் பொருத்தி அவற்றைக் கொண்டு வேட்டையாடியதை அறிய முடிகிறது. இப்பண்பாட்டு மக்கள் காட்டுப் புற்களாகத் தோன்றிய பயிர்களிலிருந்து தானியங்களை அறுக்கவும், உணவுப் பண்டங்களை சிறு துண்டுகளாக வெட்டவும் தட்டையான ‘பிளேட்’ போன்ற கல் அலகுகளைப் பயன்படுத்தினார்கள். 

இச்சிறிய கற்கள் நுண்கற்கள் அல்லது குறுணிக் கற்கள் (Microliths) என தெல்லியலாளர்களால் அழைக்கப்படுகின்றன. வட இலங்கையில் பல இடங்களில் காணப்படும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தொல்லியற் சான்றுகள் குறுணிக்கல் பண்பாட்டிற்குரியனவாகும். இதன் காரணமாக இலங்கையின் இடைக்கற்காலத்தை குறுணிக்கற் பண்பாட்டுக் காலம் எனவும் அழைப்பார்கள். இக்குறுணிக் கற்கள் வன்னியில் இரணைமடு தேரிமணற் குவியல்களிலிருந்தும், மாந்தை (மாதோட்டம்), குருத்தன்குளம், பனங்காமம், உருத்திரபுரம், பூநகரி (கல்முனை, மண்ணித்தலை, வெட்டுக்காடு) ஆகிய இடங்களிலிருந்தும் பெறப்பட்டிருக்கின்றன (புஷ்பரட்ணம், ப. 1993: 14).

ஆயுத முனைகளாக உபயோகப்படுத்தப்பட்ட இவ்வகை நுண்கற்கள் 1 – 2 செ.மீ. நீளமும், 0.5 செ.மீ அகலமும் கொண்டு சேட், சக்கிமுக்கி கற்களில் (Chert, Flint) பல வகையான வடிவங்களில் செய்யப்பட்டிருக்கின்றன. நுண்கல் பிராண்டிகள் (Scrapers) 5 செ.மீ. நீளம் கொண்டவை. இந்த நுண்கற்கள் அம்பு நுனிகள், ஈட்டி முனைகள், கைவேலைக் கருவி முனைகள், பிராண்டிகள் மற்றும் பலவகையான கருவிகளின் முனைகளாக உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நுண்கற்கள் வெப்பேற்றுக் கதிரொளிவீச்சுக் காலக் கணிப்புகளின்படி இ.மு. 34,000 ஆண்டுகளுக்கு உரியனவாகக் கணிக்கப்பட்டிருக்கிறது (Deraniyagala, 1992b). 

பூநகரிப் பிராந்தியத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலக் குடியேற்றங்கள் நுண்கற்காலப் பண்பாட்டுடன் தோற்றம் பெற்றதற்கான சில ஆதாரங்கள் கல்முனை, மண்ணித்தலை, வெட்டுக்காடு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின் போது கிடைத்துள்ளன. இவ்விடங்களில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய சிறிய குவாட்ஸ் (Quartz) கல்லாயுதங்களும், குவாட்ஸ் கற்களைக் கொண்டு கல்லாயுதங்கள் ஆக்கும் போது ஏற்படும் செதில்கள் (flakes) பலவும் கிடைத்துள்ளன. வெட்டுக்காட்டில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மற்றொரு வகையான சேட் (Chert) கற்கள் சில கிடைத்திருக்கின்றன. இவ்விடத்திலிருந்து, குவாட்ஸ் கல்லாயுதங்களோடு, உலோகத்தாலான மீன் பிடிப்பதற்குரிய ஊசியும் (Metal Fish-hook) (பிற்காலத்திற்குரியது), பிளேட் போன்ற தட்டையான ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன (புஷ்பரட்ணம், ப. 1993:14).       

இடைக்கற்கால மக்களின் வாழ்வியல்

இலங்கையின் இடைக்கற்கால மக்கள் வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்க்கை நடத்திய மக்கள். நுண்கற் பண்பாட்டைப் பேணிய இம்மக்களின் நாளாந்த வாழ்க்கையில் கற்கருவிகளே முக்கிய பங்கு வகித்தன. அவர்களது வாழ்வியலை அவர்கள் விட்டுச் சென்ற கற்கருவிகள் மூலமாகவும், மற்றைய தொல்லியல் சான்றுகள் மூலமாகவும் அநுமானிக்க முடிகிறது. கற்கருவிகளின் வடிவமைப்பையும், வகைகளையும், நுணுக்கப்பாட்டையும் கொண்டு அவற்றைத் தயாரித்த மக்களின் எண்ணங்களையும், அக்கருவிகளை உபயோகப்படுத்தும் நோக்கங்களையும் அறிய முடிகிறது.

இக்கற்கருவிகள் பெரும்பாலும் குவாட்ஸ் (Quartz), சேட் (Chert) ஆகிய கற்களிலிருந்தும், மிக அரிதாக யஸ்பர் (Jasper) கற்களிலிருந்தும் வடிவமைக்கப்பட்டிருந்தன (Deraniyagala, S.U. 1992: 266-70; 688-94; 2004:8). இடைக்கற்கால மக்களின் முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றம் அவர்கள் வேட்டையாடுவதற்காகக் கண்டுபிடித்த அம்பும் வில்லுமாகும். அம்பு நுனிகளில் உபயோகித்த குறுக்குத்தலை அம்புநுனிகள் (Transverse Arrowheads) தனித்துவமானதொரு சீர்திருத்தக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இதைக் கொண்டு முன்னர் வேட்டையாட முடியாத பறவைகளையும் மிருகங்களையும் வேட்டையாட முடிந்தது. நுண்கற்கள் பொருத்தப்பட்ட பலவகையான பலசினைக் கருவிகள் (Compound Tools)  உபயோகப்படுத்தப்பட்டன. பிறைவடிவான நுனி பொருத்தப்பட்ட ஈட்டிகள், முக்கோண நுண்கற்கள் வரிசையாகப் பொருத்தப்பட்ட வாட்கள், கத்தி வடிவில் ஆக்கப்பட்ட வளைந்த கற்கள் என்பன இவற்றில் அடங்கும்.

இரணைமடு தேரியில் கண்டெடுக்கப்பட்ட இடைக்கற்கால நுண்கல் ஆயுதங்கள். இவை இ.மு. 28,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன. நன்றி: Dr S.U. Deraniyagala.

இலங்கையில் பாதாதொம்ப லேனா குகை. இதற்குள் இற்றைக்கு 34,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. நன்றி: Lankalibrary.com.

கோல்கள் நட்டு மிருகத் தோல்களால் மூடப்பட்ட தற்காலிகக் கூடாரம்.

நுண்கற்களை இயற்கையான மரப்பிசின் கொண்டு பிளந்த மரச் சட்டங்களினிடையில் பொருத்தி பலசினைக் கருவிகள், வாட்கள் என்பன உருவாக்கப்பட்டன. கற்கள் தவிர எலும்புகளும், கற்களைக் கொண்டு கூராகச் செதுக்கப்பட்ட மரத்தண்டுகளும் ஆயுதங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. இம் மரத்தண்டுகளைக் கொண்டு ஆற்றிலும், கடற்கரைகளிலும் மீன்களைக் குத்திப் பிடிக்க முடிந்தது.

இடைக்கற்கால மனிதர்கள் பெரும்பாலும் நாடோடிகளாகவும், சிலர் நிரந்தரமாக குகைகளிலும் வாழ்ந்தார்கள். திறந்த வெளிகளிலும், ஆற்றோரங்களிலும், கடற்கரைகளிலும், குகைகளிலும் இவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இவர்களது ஆயுதங்கள் குகைகளில் கிடைத்தபோதிலும் குகைகளில் இவர்கள் நிரந்தரமாக வாழ்ந்ததற்கான பிற ஆதாரங்கள் காணப்படாதது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் குகைகளில் இவர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுவதோடு இவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பற்றிய சான்றுகளும் கிடைத்துள்ளன. இத்தகைய கூடாரங்கள் பெரிய மிருகங்களின் எலும்புகளையோ அல்லது மரத் தண்டுகளையோ கால்களாக நட்டு அவைகளின் தோலைக் கூரையாக மூடி அமைக்கப்பட்டவையாகும். 

இம்மக்கள் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப நாடோடிகளாக இடத்திற்கு இடம் சென்று பலவகைப்பட்ட உணவுகளைச் சேகரித்துள்ளனர். தென்னிலங்கையில் பெலன்பண்டி-பலஸா (Bellan-bandi-palassa) என்ற குகையினுள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் இம்மக்கள் பலவகைப்பட்ட தானியங்கன், கிழங்கு வகைகள், பழங்கள், காட்டு விலங்குகள், மீன் போன்ற கடல் உணவுகள் ஆகியவற்றை உட்கொண்டமை தெரியவந்துள்ளது. இம்மக்கள் இந்த உணவுகளைக் காய வைத்துச் சேமித்து வைக்கும் பழக்கத்தையும், நெருப்பின் பயன்பாட்டையும் அறிந்திருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. அடுத்து பெலிலேனா குகையில் (Beli Lena) இற்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட உப்புப் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து அக்காலத்தில் மலை நாட்டிற்கும், கடற்கரைகளுக்கும் இடையே வலைப்பின்னலான பண்டமாற்றுத் தொடர்புகள் இருந்ததை அறிய முடிகிறது (Deraniyagala, S.U. 1992: 326). 

இடைக்கற்கால மக்களின் சந்ததியினரான பழங்குடி மக்கள் இன்றும் குகைகளில் வாழுவதை நாம் அவதானிக்க முடிகிறது. பாதுகாப்பிற்காக இக்குகைகளின் வாசல்களைத் தோல் கொண்டு மறைத்துவிடும் வழக்கமும் இவர்களினிடையே காணப்படுகிறது. இதனால் இடைக்கற்கால மனிதன் முந்தைய பழங்கற்கால மனிதரைப் போலல்லாது குகைகளில் நிரந்தரமாக வாழ்ந்தான் என ஊகிக்க இடமுண்டு. இக்காலத்தில் வேடர்கள் மத்தியில், தாம் ஆயுதங்களை உருவாக்கும் இடத்திலேயே (Factory Sites) தற்காலிகமாகக் குடில்களை அமைக்கும் வழக்கம் காணப்படுவது போன்றே, அக்காலத்திலும் இவ்வழக்கம் இருந்திருக்கலாம் (சிற்றம்பலம், சி.க. 1999:77).  

இடைக்கற்கால மக்கள் வாழ்ந்த இடங்களே சில சமயங்களில் அவர்கள் ஆயுதங்களைத் தயாரித்த இடங்களாக இருந்தன; அதேபோல், சில வேளைகளில் அவர்கள் ஆயுதங்களைத் தயாரித்த இடங்களிலேயே வாழ்ந்ததையும் அறிய முடிகிறது. இம்மக்கள் நீர் நிலைகள், ஆயுதங்களை உருவாக்குவதற்கான கல்வகைகள் கிடைக்குமிடங்கள், வேட்டைக்குத் தேவையான மிருகங்கள் செறிந்து வாழும் இடங்கள் என்பவற்றை மையமாக வைத்தே தமது இருப்பிடங்களை அமைத்தார்கள் (Allchin, B. & R. 1982; 1982; சிற்றம்பலம், சி.க. 1999:77).

அமெரிக்காவின் கோணெல் பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியரான கென்னெத் கென்னெடி நீண்ட ஆண்டுகளாக தென்னிந்திய, இலங்கையின் புராதன மக்களின் மானிடவியல் கற்கைநெறி ஆய்வுகளை மேற்கொண்டவர். அவர் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த இடைக்கற்கால நுண்கற் பண்பாட்டைக் கடைப்பிடித்த மக்கள் ஒரே இன வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார். தொல்லியலாளர்கள் இலங்கையில் நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளுக்கும், தென்னிந்தியாவில் சமகாலத்து மக்களால் பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இருபக்க அலகுடைய நுண்கற் கல்லாயுதங்கள், தமிழகத்தில் பாம்பன் கடற்கரைக்கு அண்மையிலுள்ள தேரிக் கலாசாரத்துடன் ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு ஒற்றுமையைக் கொண்டுள்ளன (Kennedy, K.A.R. 1990:34).   

இடைக்கற்கால மனிதன் நாயை தனது நண்பனாகப் பழக்கக் கற்றுக்கொண்டான். தவிர, மந்தை வளர்ப்பிலும் இக்கால மனிதன் ஈடுபட்டிருந்ததை இக்காலக் குடியிருப்புகளிற் காணப்படும் எலும்புக்கூடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இம்மிருகங்களில் ஆடு, எருது, பசு, செம்மறி ஆடு என்பன குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு மந்தை மேய்ப்பில் இக்கால மனிதன் அக்கறை காட்டியது அவனது நாகரிக வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

மற்றைய நாடுகளில் இடைக்கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் புதிய கற்காலம் எனப்படும். நாடோடிகளாக இடத்திற்கு இடம் பெயர்ந்து வேட்டையாடி, உணவு சேகரித்து வந்த மனிதன் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விவசாயத்திலும், பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்ட காலம் இது. மனிதர்கள் கூட்டாக ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்க, அங்கே முதல் கிராமங்கள் உருவாயின. இக்காலத்தில் செம்பு, ஈயம், வெண்கலம் (Bronze) போன்ற உலோகங்கள் அறிமுகமாயின. இதைத் தொடர்ந்து இரும்பு அறிமுகமான காலம் இரும்புக்காலம் எனப்பட்டது. 

இலங்கையிலோ புதிய கற்காலம் தெளிவாக நிறுவப்படவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இங்கே இரும்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறியத்தருகின்றன. இலங்கையின் இடைக்கற்காலம் இ.மு. 34,000 முதல் ஆதி இரும்புக்காலமான இ.மு. 3380 வரை நீடித்திருக்கிறது (Deraniyagala, S.U. 1992: 695-70; 2013: 511).  

உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்

  1. ABEYARATNE, M. (1996): Multi-dating Studies of Archaeological Sites, Unpublished Ph.D. dissertation, Australian National University, Canberra.
  2. ALLCHIN, BRIDGET & ALLCHIN, RAYMOND (1968): The Birth of Indian Civilization, Harmondsworth, London.
  3. ALLCHIN, B. & ALLCHIN, R. (1982): The Rise of Civilization in India and Pakistan, Cambridge University Press, Cambridge.
  4. CLARK, PETER U. & MIX, ALAN C. (2002): Ice Sheets and Sea Levels of the Last Glacial Maximum; Quaternary Science Reviews 21 (1-3): 1-7.
  5. DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Dept. of Archaeological Survey, Government of Sri Lanka, Colombo.
  6. DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka (as above): pp 686-688. The gravel at Iranamadu Formation had given varying dates of 125,000 BCE (M. Abeyaratne 1996: as above), and 80,000 BCE (Oxford Archaeological Laboratory) from different sites.
  7. DERANIYAGALA, S.U. (1992b): ‘The Prehistoric Chronology of Sri Lanka’ in Memoirs of the Archaeological Department, Govt of Sri Lanka, No. 8, Addendum I.
  8. DERANIYAGALA, S.U. (1996): Pre and Protohistoric Settlements in Sri Lanka, in The Prehistory of Asia and Oceania, Vol. 5, Section 16., pp 277-285.
  9. DERANIYAGALA, S.U. (2004): Pre-historic basis for the rise of Civilization in Sri Lanka and Southern India, Second Vesak Commemoration Lecture, Madras.
  10. DERANIYAGALA, S.U. (2013): ‘General Conclusions’ in Mantai, City by the Sea by John Carswell, Siran Deraniyagala and Alan Graham, Linden Soft Verlag, Aiochwald, Germany.
  11. GOONATILAKE, SUSANTHA (1981): The Formation of Sri Lankan Culture, Ancient Ceylon, No. 4.
  12. KENNEDY, K.A.R. (1975): The Physical Anthropology of the Megalithic Builders of South India and Sri Lanka, Canberra.
  13. KENNEDY, K.A.R. (1990): ‘Palaeodemography of Sri Lanka and Peninsular India: A Cross-regional Survey’, Perspectives in Archaeology: Leelananda Prematillake Festchrift 1990; Ed. Sudharsan Seneviratne et al. Peradeniya: 29-37.
  14. MACDOUGAL, DOUG (2004): Frozen Earth: The Once and Future Story of the Ice Ages, University of California Press.
  15. MISHRA, S. (1995): Chronology of the Indian Stone Age, Man and Environment 20 (2): 11-16.
  16. PETRAGLIA, M. D.(2003): The Lower Palaeolithic of the Arabian Peninsula: Occupations, Adaptations and Dispersals,  Journal of World Prehistory 17: 141-179.
  17. QUINTANA-MURCI, LUIS (1999): The mtDNA evidence for a Coastal  Exodus from Africa, Nature Genetics 23: 437-441.
  18. ROHLING, E.J. et al. (1998): “Magnitudes of Sea-level low-stands of the past 500,000 years”; Nature 394, pp 162-165.
  19. THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre, London.
  20. WELLS, SPENCER (repr. 2003): The Journey of Man, Random House Paperback Edition, New York.
  21. WELLS, SPENCER (2007): Deep Ancestry, National Geographic, Washington DC.
  22. சிற்றம்பலம், சி.க. (1999): பண்டைய தமிழகம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.
  23. புஷ்பரட்ணம், ப. (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.


About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்