ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட
சமூக விஞ்ஞானங்களில் ஒன்றான ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற கல்வித்துறை 1921 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் 80 ஆண்டுகளுக்கு மேலாக, பல்கலைக்கழக நிலையில் ஒரு கற்கைத் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக்கூறும் ‘இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞான கல்வியின் வரலாறு’ என்ற தலைப்பிலான கட்டுரை ‘எழுநா’ செப்டெம்பர் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அக்கட்டுரை ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட என்னும் இரு பேராசிரியர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘Political Science and Public Policy: Cultivating the Critical Spirit’ என்ற தலைப்பிலான ஆங்கிலக் கட்டுரையின் முதல் 5 பக்கங்களில் கூறப்பட்ட கருத்துகளைச் சுருக்கியும் தொகுத்தும் தருவதாக அமைந்தது. 22 பக்கங்கள் நீண்டதான அக்கட்டுரையின் எஞ்சிய 17 பக்கங்களில் கட்டுரையாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துகளைச் சுருக்கியும் தொகுத்தும் வழங்குவதாக இம்மாதக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இம்மாதக் கட்டுரையின் உள்ளடக்கம் அரசியல் விஞ்ஞானம் என்னும் கல்வித்துறையில் பல்கலைக்கழக நிலையில் இடம்பெற்ற ஆராய்ச்சி, அறிவு உற்பத்தி (Knowledge Production), நூல் வெளியீடுகள் என்னும் விடயங்கள் குறித்துக் கவனக் குவிப்பைச் செலுத்துவதாக அமைகிறது. இதனால் இக்கட்டுரையின் தலைப்பை ‘இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி: ஆராய்ச்சியும், அறிவு உற்பத்தியும், நூல் வெளியீடும்’ எனக் குறிப்பிட்டுள்ளோம்.
கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வெளியே அரசியல் விஞ்ஞானக் கல்வி கொழும்பு, சிறி ஜயவர்த்தனபுர, களனி, யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் புதிதாக 1963 இல் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலம் முதல் அரசியல் விஞ்ஞானம் பொதுக் கலைப்பட்டத்திற்கு (B.A) ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத்தினைப் போன்று கொழும்பிலும் அப்பாடம் பொருளியல் துறையின் உபபிரிவாக இருந்து வந்தது. 1973 இல் கலைப்பீடத்தில் மறுசீரமைப்பு நிகழ்ந்த போது, வரலாறும் அரசியல் விஞ்ஞானமும் (The Department of History and Political Science) எனும் பெயரில் புதிய துறை செயற்படத் தொடங்கியது. அப்போது குமாரி ஜயவர்த்தன, லெய்டன் (Leitan) ஆகிய இரு பேராசிரியர்களும் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பித்த முன்னோடிகளாக விளங்கினர். இவர்கள் இருவரும் அரசியல் விஞ்ஞானம் பொருளியல் துறையின் உபபிரிவாக இயங்கிய போது, 1969 இல் இணைந்து கொண்டவர்கள்; பொதுக் கலைப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இப்பாடத்தைக் கற்பித்து வந்தனர். பேராசிரியர் குமாரி ஜயவர்த்தன அவர்கள் ‘லண்டன் ஸ்கூல் ஒவ் இக்கொனமிக்ஸ்’ (LSE) இல் கல்வி கற்றுக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் அப் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் (Ph.d) பெற்றுக்கொண்டார். பேராசிரியர் லெய்டன் அவர்கள் கலைமாணிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட பின் ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்று ‘லண்டன் ஸ்கூல் ஒவ் இக்கொனமிக்ஸ்’ இல் கற்று கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாறும் அரசியல் விஞ்ஞானமும் துறை, அரசியல் விஞ்ஞானப் பாடத்தைப் பொதுக் கலைப்பட்டத்திற்கான ஒரு பாடமாகவே தொடர்ந்து கற்பித்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் கலாநிதி ஜயதேவ உயன்கொட கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொண்ட பின்னர், அங்கு அரசியல் விஞ்ஞானத்தில் சிறப்புப் பட்டப்படிப்பு (B.A – Hons) ஆரம்பிக்கப்பட்டது. புதிய அத்துறையின் விரிவுரையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. அரசியல் விஞ்ஞானத்தைச் சிறப்பு பாடமாகக் கற்ற மாணவர்கள் வரலாறு, சர்வதேச உறவுகள் ஆகிய பாடங்களைக் கற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
2001 ஆம் ஆண்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் விஞ்ஞானமும் பொதுக் கொள்கையும்’ எனும் தனித்துறை (The Department of Political Science and Public Policy) தாபிக்கப்பட்டது. ‘பொதுக் கொள்கை’ என்ற விடயம் சேர்க்கப்பட்டதன் பயனாக அரசியலோடு பொது நிருவாகவியல் (Public Administration) எனும் பாடமும் பாடவிதானத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது. அரசியல் விஞ்ஞானமும் பொதுக் கொள்கையும் நான்கு ஆண்டுகள் சிறப்புப் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்ட பின், பாடவிதானம் விரிவாக்கம் பெற்றது. புதிய பாடங்களாக அரசியல் பொருளாதாரம் (Political Economy), பொதுக் கொள்ளை (Public Policy), உள்ளூராட்சி அரசாங்கம், பெண்களும் அரசியலும், அரசியல் சமூகக் கோட்பாடு (Political and Social Theory), முரண்பாடுகளின் தீர்வு (Conflict Resolution), சமூக ஆராய்ச்சியின் மெய்யியலும் முறையியலும் (Philosophy and Methodology of Social Research), அரசியல் சமூகவியல் (Political Sociology), உலகின் பிராந்தியங்களின் அரசியல் (Politics of World Regions) ஆகிய புதிய பாடங்கள் பல மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்ட மாணவர்களுக்கு கள ஆய்வு முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. கள ஆய்வை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிச் சமர்ப்பித்தல் வேண்டும் என்ற விதிமுறையும் பின்பற்றப்பட்டது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்ட வகுப்பில் மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானம் பல்சங்கம நோக்கில் (Multi–disciplinary Approach) அமைந்த கல்வியாக அமைந்தமை குறிப்பிடப்பட வேண்டிய மாற்றமாகும்.
2007 ஆம் ஆண்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி (M.A) கலாநிதி (Ph.d) பின்பட்டப்படிப்பு நோர்வே நாட்டின் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியாக அமைந்த இந்தத் திட்டத்தின் கீழ், முதலாவது அணியைச் சேர்ந்தவர்களான மூவர் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றனர்.
தற்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதுநிலை விரிவுரையாளர்கள் 4 பேரும், முதுகலைமாணிப் பட்டம் பெற்ற விரிவுரையாளர்கள 5 பேரும், முதுகலைப் பட்டம் பெற்ற உதவி விரிவுரையாளர்கள் 5 பேரும், முதுகலைப் பட்டம் பெற்ற உதவி விரிவுரையாளர் ஒருவரும் கடமையாற்றுகின்றனர்.
எழுநா செப்டம்பர் இதழ் கட்டுரையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் செயற்பாடுகள் பற்றி விரிவான குறிப்புகள் தரப்பட்டன. ஏறக்குறைய இவ்விரு பல்கலைக்கழகங்களின் மாதிரியில், அரசியல் விஞ்ஞானம் என்ற கல்வித்துறை இலங்கையின் பிற பல்கலைக்கழகங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (ஒலுவில்), கிழக்குப் பல்கலைக்கழகம் (மட்டக்களப்பு), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
ஆய்வு வெளியீடுகள்
ஆய்வு வெளியீடுகள் மூலம் பல்கலைக்கழகங்களின் சமூக விஞ்ஞானிகள் அரசியல் விஞ்ஞானக் கல்விக்கு வழங்கிய பங்களிப்புப் பற்றி பேராசிரியர் நவரட்ண பண்டாரவும், ஜயதேவ உயன்கொடவும் தந்துள்ள விவரங்களை இத்தமிழ்க் கட்டுரையில் அடுத்துத் தரவுள்ளோம். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 1942 முதல் இற்றைவரையான காலத்தில் கடமையாற்றிய பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் எழுதிய ஆய்வுகள், அவர்களால் வெளியிடப்பட்ட முக்கியமான நூல்கள் என்பன பற்றிய மதிப்பீடாக அமையும் இத்தகவல்கள் இளந்தலைமுறை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுடையதாக அமையும் எனக் கருதுகிறோம்.
சேர் ஐவர் ஜெனிங்ஸ்
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தராகப் பணியாற்றிய சேர் ஐவர் ஜெனிங்ஸ் அரசியல் விஞ்ஞானம், அரசியல் யாப்புச் சட்டம் எனும் இரு விடயங்கள் சார்ந்தும் பல நூல்களை எழுதியுள்ளார். ‘The Constitution of Ceylon’ எனும் நூலை இவர் 1951 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இலங்கையின் சோல்பரி அரசியல் யாப்புப் பற்றிய முதலாவது புலமைசார் ஆய்வு என்ற சிறப்பை இந்நூல் பெறுகிறது. ஜெனிங்ஸ் அவர்கள் இலங்கையில் கடமையாற்றிய காலத்தில் பின்வரும் நூல்களையும் எழுதிப் பிரசுரித்தார்.

- The British Commonwealth of Nations (1948)
- The British Constitution
- Approaches to Self – Government
- The Queen’s Government
- Party Politics (1955)
இலங்கையில் கடமையாற்றிய காலத்தில் ஜெனிங்ஸ் அவர்கள் பருவ இதழ்களில் (Journals) எழுதி வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகள் பின்வருமாறு.
- Ceylon General Elections – 1947, The University of Ceylon Review 3 (July 1948) 133-195.
- Nationalism and Political Development in Ceylon. Ceylon Historical Journal iii, (July – October, 1953).
- Additional Notes on General Elections: Ceylon Historical Journal 11: 3-4 (January. April 1953).
I.D.S. வீரவர்த்தன
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (பேராதனை) அரசியல் விஞ்ஞானம் பாடத்தை மாணவர்களுக்குக் கற்பித்த முதலாவது இலங்கையர் என்ற சிறப்பு கலாநிதி I.D.S. வீரவர்த்தன அவர்களுக்கே உரியது. அரசியல் விஞ்ஞானம் பொருளியல் துறையின் ஒரு பிரிவாக விளங்கிய காலத்தில் அரசியல் விஞ்ஞான விரிவுரையாளராக இவர் கடமையாற்றினார்.
Government and Politics in Ceylon (1941 – 46) எனும் இவரது நூல் 1951 இல் வெளியானது. இலங்கையின் அரசியல் பற்றி இலங்கையர் ஒருவரால் எழுதப்பட்ட முதலாவது நூல் என்னும் சிறப்பு இவரது இந்நூலுக்கு உள்ளது. இலண்டன் பல்கலைக்கழகத்திற்கு இவரால் சமர்ப்பிக்கப்பட்ட கலாநிதிப்பட்ட ஆய்வேடு பின்னர் இவரால் மேற்குறித்த நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. இந்நூல் 1962 இல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
சேர் ஐவர் ஜெனிங்ஸ் 1947 பொதுத் தேர்தல் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதினார் என மேலே குறிப்பிட்டோம். அவரைத் தொடர்ந்து 1952, 1956 ஆகிய இரு பொதுத் தேர்தல்கள் பற்றிய ஆய்வுகளை I.D.S. வீரவர்த்தன அவர்கள் எழுதினார். ‘General Elections in Ceylon 1952’ எனும் இவரது ஆய்வுக் கட்டுரை ‘The Ceylon Historical Journal 11: 1+2 (July – October 1952)’ இதழில் பிரசுரமானது. 1956 பொதுத் தேர்தல் பற்றிய இவரது ஆய்வு ‘Ceylon General Election – 1956’ எனும் பெயரில் M.D. குணசேன பதிப்பக வெளியீடாக 1960 இல் வெளிவந்தது. அவரது ஏனைய இரு நூல்கள் பின்வருவன.

- The Senate of Ceylon At Work (1955, Ceylon University Press)
- Ceylon and Her Citizens (1956, Oxford University Press, Madras)
I.D.S. வீரவர்த்தன அவர்கள் இலங்கையின் பொருளியல், அரசியல் என்பன பற்றி சிங்கள மொழியில் பாட நூல்களை எழுதிய முன்னோடியுமாவார்.
ஏ.ஜே. வில்சன்
இலங்கையின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர்களில் உலக அளவில் புகழ்பெற்றவர்களில் ஒருவரான ஏ.ஜே. வில்சன் அவர்கள் 1952 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1972 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1969 இல் இவர் அரசியல் விஞ்ஞானத்துறையின் முதலாவது பேராசிரியராக நியமனம் பெற்றார். 1972 இல் பேராதனையில் இருந்து பதவி விலகிய வில்சன் அவர்கள் அவ்வாண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை கனடாவின் நியு பிரண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றினார். 2000 ஆம் ஆண்டு அவர் காலமானார். அவர் எழுதிய பெறுமதிமிக்க ஆய்வு நூல்களில் சில பின்வருவன.
- Politics in Sri Lanka: 1947 – 1973 (1974 MacMillan)
- Electoral Politics in an Emerging State: The Ceylon General Election of May 1970 (1975, Cambridge University Press)
- The Gaullist System in Asia: The Constitution of Sri Lanka 1978 (1980 MacMillan)
- The States of South Asia: Problems of National Integration (Edited. 1982: Hurst)
- The Breakup of Sri Lanka: The Sinhalese Tamil Conflict (1988. C. Hurst)
- S.J.V. Chelvanayagam and The Crisis of Tamil Nationalism, 1947 – 1977: A Political Biography (1994, University of Hawaii Press)
- The Post – Colonial States of South Asia: Democracy, Development and Identity (2001, Palgrave)
வில்சன் அவர்கள் இலங்கையின் அரசியல் பற்றிய ஆய்வுகளை எழுத் தொடங்கிய 1950களில் இலங்கை அரசியல் பற்றிய நூல்களை மேற்குலகத்தின் ஆய்வாளர்களே எழுதிக் கொண்டிருந்தனர். சேர் ஐவர் ஜெனிங்ஸ், ஹவ்வார்ட் றிஜின்ஸ் (Howard Wriggins) றொபர்ட் கெர்ணி (Robert Kerney), ஜேம்ஸ் யுப் (James Jupp) ஆகிய நான்கு புலமையாளர்கள் இலங்கையின் அரசியல் பற்றிய நூல்களை வெளியிட்டவர்களாக அறியப்பட்டிருந்தனர். றிஜின்ஸ் எழுதிய Dilemmas of a New Nation (1960, Princeton University Press) என்ற நூலும், Kearney எழுதிய The Politics of Ceylon (Sri Lanka ) (1973, Cornell University Press) என்ற நூலும் பிரபலம் பெற்ற நூல்களாக இருந்தன. றிஜின்ஸ் கொலம்பியப் பல்கலைக்கழகத்திலும், கெர்னி நியுயோர்க் நகரின் ‘Syracuse’ பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களாகக் கடமையாற்றினர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகவும் பின்னர் ஹவ்வார்ட் றிஜின்ஸ் கடமையாற்றினார். ஜெனிங்ஸ் இலங்கையில் அரசியல் யாப்பு சார்ந்த விடயங்களுக்கே ஆய்வுகளில் முக்கியத்துவம் அளித்தார். றிஜின்ஸ், கெர்னி ஆகிய இருவரும் பின்காலனிய தேசம் (Post Colonial Nation) என்ற கட்டத்தை இலங்கை அடைந்த வேளையில், தேசத்தைக் கட்டி வளர்த்தல் (Nation – Building), இனங்களுக்கிடையே ஐக்கியத்தை உருவாக்கி நாட்டில் ஒற்றுமையை உருவாக்குவதில் எதிர்கொண்ட சவால்கள் போன்ற அரசியல் பிரச்சினைகள் குறித்து தமது ஆய்வுகளில் கவனம் செலுத்தி வந்தனர். கெர்னியின் Communalism and Language in The Politics of Ceylon (1967, Durham: Duke University Press) என்ற நூல் இலங்கையின் அரசியலும் மொழியும், மொழி அடிப்படையிலான இனவாதமும் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதாக அமைந்தது. கெர்னி அவர்கள் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி பருவ இதழ்களில் வெளியிட்டார். இவ்வாய்வுகள் சிங்கள தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், இலங்கையின் இனத்துவ முரண்பாடுகள், இலங்கையின் இடதுசாரி இயக்கம், இலங்கையின் கட்சிமுறையின் வளர்ச்சி போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றியனவாக அமைந்தன. ஜேம்ஸ் யுப் (James Jupp) அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இவர் இடதுசாரி அரசியல் சார்புடைய ஒருவராவார். இவர் எழுதிய Sri Lanka: A Third World Democracy (1978, Frank Cass) என்னும் நூல் இலங்கையில் சுதந்திரத்திற்குப் பிந்திய காலத்து அரசியல் வளர்ச்சிப் போக்குகள் பற்றி ஆராய்வதாகும். இந்நூல் அரசியல் நிறுவனங்கள் (Political Institutions), அரசியல் செயல்முறைகள், அரசியல் சமூகத்தில் உருவான முரண்பாடுகள் என்பன குறித்துக் கவனம் குவிப்பதாக அமைந்தது.
ஷெல்டன் கொடிகார
1979 இல் பேராதனையில் அரசியல் விஞ்ஞானம் என்ற தனித்துறை உருவாக்கப்பட்ட போது ஷெல்டன் கொடிகார (Shelton Kodikara) அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் (International Relations) தொடர்பான இளங்கலை, முதுகலைமாணிப் பட்ட வகுப்பு தொடங்கப்பட்ட போது அவற்றை நடத்துவதை பொறுப்பேற்க கொழும்புக்கு இடமாற்றம் பெற்றார். கொடிகார அவர்கள் சர்வதேச உறவுகள், இலங்கை – இந்திய உறவுகள், இலங்கையின் அயலுறவுக் கொள்கை ஆகியவற்றைக் கற்பிப்பதில் முன்னோடியாகச் செயற்பட்டார். பின்வருவன அவரது இத்துறைகள் சார் நூல்களாகும்.

- Indo – Lanka Relations Since Independence (1965, Ceylon Institute of World Affairs)
- Foreign Policy of Srilanka : A Third World Perspective (1982, Chanakya Publishers)
- Dilemmas of Indo – Lanka Relations (1991, Bandaranaike Centre for International Studies)
விஸ்வ வர்ணபால
இலங்கையின் அரசியல் தொடர்பாக வெவ்வேறு விடயங்கள் குறித்துக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஆய்வு நூல்களை எழுதியவராகப் பேராசிரியர் விஸ்வ வர்ணபால (Wiswa Warnapala) விளங்குகிறார். இலங்கையின் பொது நிர்வாகம் பற்றிய ‘Civil Administration in Ceylon: A study in Bureaucratic Adaptation’ (Government Press) என்னும் நூல் அவரது முதலாவது ஆக்கமாகும். லீட்ஸ் பல்கலைக்கழகத்திற்கு (University of Leeds) அவர் சமர்ப்பித்த கலாநிதிப்பட்ட ஆய்வேடு (1970) பின்னர் மேற்படி நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. அவரால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பிற நூல்கள் சில பின்வருமாறு.
- The Srilanka Political Scene (1993, Navarang)
- Ethnic Strife and Politics in Srilanka (2001)
- Local Politics in Sri Lanka: An Analysis of the Local Government Election of May 1991 (1993, Windsor)
- Welfare and Politics in Sri Lanka (1997 With David. E. Woodsworth, MacGill University)
- Parliament and Public Accountability in Sri Lanka (2004, Godage Publishers)
- Aspects of Politics and Higher Education in Sri Lanka : A Collection of Essays (2010, Godage Publishers)
ரஞ்சித் அமரசிங்க
1994 இல் விஸ்வ வர்ணபால அவர்கள் பிரதி அமைச்சராக நியமனம் பெற்றதும் பல்கலைக்கழகத்தில் இருந்து பதவி விலகிச் சென்றார். பேராதனையில் அவரின் இடத்திற்கு பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க (Ranjith Amarasinghe) நியமிக்கப்பட்டார். ரஞ்சித் அமரசிங்க அவர்களின் முக்கியமான படைப்பான ‘Revolutionary Idealism: A Study of Trotskyism in Sri Lanka’ இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியின் வரலாறு பற்றிய முக்கியமான முதலாவது ஆய்வு லெர்ஸ்கி (George Tan Lersky) என்னும் அமெரிக்கப் புலமையாளரால் 1968 இல் எழுதப்பட்டது. ‘Origins of Trotskyism in Ceylon: A Documentary History of the Lanka Sama Samaja Party, 1935 – 1942 (1968, Stanford University Press)’ என்ற லெர்ஸ்கியின் நூலிற்குப் பின்னர் வெளிவந்த ரஞ்சித் அமரசிங்கவின் நூலும் இலங்கையின் அரசியல் கட்சி ஒன்றின் வரலாற்றைப் பற்றியது என்ற வகையில் முக்கியமானது. ரஞ்சித் அமரசிங்க பருவ இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். சில நூல்களின் அத்தியாயங்களாக அமைந்த அவரது ஆய்வுகள் சிலவும் உள்ளன. அவை பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

- Legislative Functions of Provincial Councils: Statute Making and Capacity Issues (Y.R. Amarasinghe et. al. (Eds) Thirty Years of Devolution The Working Of The Provincial Councils In Srilanka, ICES Colombo, 2010)
- The Working of The Provincial Councils: Centre Province Relations (Y.R. Amarasinghe et. al. Eds)
- Asymmetrical Devolution: Experience in Power Sharing: The International Experience, (Y.R. Amarasinghe et. al. Eds) (ICES Colombo, 2011)
அ. சிவராஜா
பேராசிரியர் அ. சிவராஜா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். இவர் 2014 ஆம் ஆண்டு காலமானார். இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் குறித்து இவர் இரு நூல்களை எழுதியுள்ளார். அந்நூல்கள் பற்றிய விவரம் வருமாறு.
- Politics of Tamil Nationalism in Sri Lanka (1996, South Asian Publishers)
- The Federal Party of Srilanka: The Strategy of an Ethnic Minority Party in Government and Opposition 1949 – 2002 (2007, Kumaran Books)
பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களின் மாணவரான அ. சிவராஜா அவர்கள் கனடாவின் நியு பிரண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
தொடரும்.



