செயல்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலைமைத்துவத்தின் முடிவும், டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின் கொழும்புத் தமிழ்த் தலைமைத்துவத்தின் அரசியலுக்குப் பதிலாக, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் 1920களின் இறுதியில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆயினும், இது தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமல்ல. அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தால் கவரப்பட்ட காந்திய இயக்கச் சிந்தனையுடன் இலங்கையையும் தழுவிய காலனிய ஆதிக்க எதிர்ப்பு இலங்கையர் தேசியவாத அமைப்பாகக் காணப்பட்டது. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசை ஒருபோதும் தமிழ்த் தேசியத்தோடு இணைத்து அடையாளங்காண முடியாது.
ஒற்றை ஆட்சிமுறையை வலியுறுத்திய டொனமூர் அரசியல் யாப்பு
ஹன்டி பேரின்பநாயகம், எஸ்.ஆர். கனகநாயகம் போன்றோர் தலைமையிலான யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அலையுடன் தென்னிலங்கை தழுவிய முழு இலங்கையையும் இழுத்துவிடக்கூடிய ஏதுநிலை இருப்பதாக உணர்ந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள், அதிலிருந்து சிங்கள மக்களை முற்றிலும் பிரித்தெடுக்கும் நோக்கத்துடன், ஈழத் தமிழருக்குப் பாதகமாகச் சிங்களப் பெரும்பான்மை இனவாதத்திற்குத் தளமமைக்கும் வகையில், ஒற்றை ஆட்சி முறையின் கீழ் தலையெண்ணும் பெரும்பான்மை இனநாயக (Head Counting Majoritarianism) அரசியல் யாப்பாக டொனமூர் அரசியல் யாப்பை உருவாக்கினர். தலைகளை எண்ணும் பெரும்பான்மை ஜனநாயகத்தில், சிறுபான்மையினருக்கு அதிகாரம் அளிப்பதற்கான சிறப்பான வழிமுறைகள் உருவாக்கப்படாத நிலையில், இது சிங்களப் பெரும்பான்மையினரின் அதிகாரத்தின் வழியாக, ஜனநாயகத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட இன ஒடுக்குமுறைக்கான ஏற்பாடாக உருவாகியுள்ளது.
1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின் கீழ் முழு இலங்கை தழுவிய ரீதியில் நிகழ்ந்த முதலாவது பொதுத் தேர்தலை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பகிஷ்கரித்தது. அவர்கள் தம்மை முழு இலங்கைக்குமான தேசிய விடுதலை வீரர்களாகக் கற்பனை செய்து, இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிச்சுவட்டில் காந்தியவாதத்தைப் பின்பற்றிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
இந்தப் பகிஷ்கரிப்பை முதலில் கொள்கையளவில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆதரித்தனராயினும், யாரும் தேர்தல் பகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லை. இவர்கள் முதலில் பகிஷ்கரிப்பை ஊக்குவித்தனர். இலங்கை இடதுசாரி இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்பட்ட பிலிப் குணவர்த்தன (Philip Gunawardena), அன்று பகிஷ்கரிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தபோது, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் பகிஷ்கரிப்பை வரவேற்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “Jaffna has given the lead”.
“பிறர் பின்பற்றக்கூடிய ஒரு புதிய, சிறந்த முன்மாதிரியை யாழ்ப்பாணம் முன்னெடுத்துள்ளது” என்பதே இதன் பொருள்.
ஆனால், பின்பு தென்னிலங்கை அரசியல்வாதிகளால் இந்தத் தேர்தல் பகிஷ்கரிப்பானது இனவாதத்தன்மை கொண்டது என்றும், பகிஷ்கரிப்பாளர்கள் வகுப்புவாதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டது. இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தோடு இணைத்துப் பார்த்து இவ்வாறு இனவாத முத்திரை குத்துவது இலகுவானது. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது இத்தகைய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்பதே இங்கு பிரதானமாகக் கவனிக்கப்படக்கூடியது. சிங்களத் தரப்பு, இப்பகிஷ்கரிப்பை இந்திய தேசிய விடுதலைப் போராட்டப் பின்னணியுடன் இணைத்துப் பார்த்தது. ஆனால் அன்று ஜவகர்லால் நேரு மேற்படி யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் பகிஷ்கரிப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் சிறிதும் இனவாதத் தன்மை கொண்டதல்ல. அன்று தேர்தல் பகிஷ்கரிப்புக்குத் தலைமை தாங்கிய முன்னணித் தலைவரான ஹன்டி பேரின்பநாயகம் இறக்கும்வரை இலங்கைத் தேசியவாதியாகவே இருந்தார். 1960களில் அவரைத் தமிழரசுக் கட்சியில் இணையுமாறு கேட்டபோது, அவர் தான் ஓர் இலங்கைத் தேசியவாதி என்றும், தான் ஓர் இனம் சார்ந்த கட்சியில் சேரமாட்டேன் என்றும் மறுத்திருந்தார். இவரைத்தான் சிங்களத் தலைவர்கள் வகுப்புவாதி என்று வர்ணித்தார்கள். இது நடைமுறையில் இந்திய எதிர்ப்பு வாதம், தமிழின அழிப்பு வாதம் ஆகிய இரண்டையும் இணைத்துக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைவாதச் சிந்தனையின் வெளிப்பாடாகும் என்பது இங்கு அடிக்கோடிட்டுக் குறிப்பிடத்தக்கது.
இங்கு பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசும் ஒற்றை ஆட்சி முறையின் கீழான ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கையையே கொண்டிருந்தது. தேர்தல் பகிஷ்கரிப்புக்கான யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் கோரிக்கையானது மிகவும் இலகுவானதும் வெளிப்படையானதுமாகும். அது இத்தகைய தமிழ் இனம் சார்ந்த அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக இலங்கை முழுவதுக்குமான சுயாட்சியை வழங்க டொனமூர் அரசியல் யாப்புத் தவறிவிட்டது என்பதனால், அது சுயாட்சிக் கோரிக்கையை வற்புறுத்தியே பகிஷ்கரிப்பை மேற்கொண்டது.
மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற இந்திய தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்களை இலங்கைக்கு வரவழைத்துப் பெரும் கூட்டங்களை ஒழுங்கு செய்தமை, காந்திய கதர் ஆடை அணிந்து இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ்ப்பாணத்துக்கூடாக இலங்கையில் முதன்மைப்படுத்தியமை போன்ற விடயங்களால் ஆத்திரமடைந்த பிரித்தானியர், சிங்களக் கனவான்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழின அழிப்பிற்கான ஒரு காத்திரமான புதிய பரிமாணத்தைக் கட்டமைத்தனர்.
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஒரு தெளிவான கற்பனாவாத அமைப்பு. அவர்கள் இலட்சியத்தால் தம்மை மேன்மையானவர்களாக நினைத்தாலும், அவர்களது தூய இலட்சியவாதம் சாத்தானுக்குச் சேவை செய்வது. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் சுட்டிக்காட்டத் தகுந்த ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில், அது இலங்கைத் தீவில் தீண்டாமைக்கு எதிராக முதன்முறையாக (1926) சமபந்தி போசனத்தை நடாத்திய அமைப்பாகும்.
அதாவது, 1926 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – கீரிமலையில் பெரும் பந்தலமைத்து சமபந்தி போசனத்தை நடத்தினர். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். சமபந்தி போசனத்தில் உணவு உட்கொண்ட முன்னணித் தலைவர்கள் பலர் பின்பு என்ன செய்தனர் என்பது வேறு கதை. அதாவது, கொள்கை ரீதியாகத் தீண்டாமையை இவர்கள் எதிர்த்தாலும், உளவியல் – பண்பாட்டு அடிப்படையில் தம்மளவிலேனும் இவர்களால் தீண்டாமையைக் கடந்து செல்ல முடியவில்லை என்ற பக்கமும் கவனத்திற்குரியது.
யாழ். குடாநாட்டின் நான்கு தொகுதிகளிலும் யாழ்ப்பாண காங்கிரஸ் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றி பெற்றது. அப்போது பகிஷ்கரிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை திரு. ஜி.ஜி. பொன்னம்பலம் முன்னெடுத்தார். யாழ். குடாநாட்டில் பகிஷ்கரிப்புக்கு ஆதரவிருந்த பின்னணியில், யாழ். குடாநாட்டுக்கு வெளியே மன்னார் – முல்லைத்தீவுத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். ஆனால், தேர்தல் பகிஷ்கரிப்பு மூன்று ஆண்டுகளுக்குள் தோல்வியில் முடிந்து, 1934 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நிகழ்ந்தது. அப்போது பருத்தித்துறைத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்துடன் பொன்னம்பலத்தின் அரசியல் எழுச்சி ஆரம்பமாகியது.
ஒற்றை ஆட்சி முறைமையின் கீழ் ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படைக் கொள்கையுடன் பொன்னம்பலத்தின் தமிழினம் சார்ந்த அரசியல் பிரவேசம் அமைந்தது. நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றில் டொனமூர் அரசியல் யாப்புக் காலத்திற்தான் சிங்கள – தமிழ் இனப்பகைமையானது பிரித்தானிய – சிங்களக் கூட்டு உழைப்பினால் முன்னெப்போதையும் விடப் பெரிதாகக் கட்டமைக்கப்பட்டது.
அக்காலகட்டத் தமிழ்த் தலைவர்களிடம் கடல்சார் அரசியல் ஆதிக்க அறிவு, காலனிய ஆதிக்கம், பன்னாட்டு அரசியல் உறவுகள் பற்றிய அறிவு, உலக அரசியற் கண்ணோட்டம் என்பன போதியளவு இருக்கவில்லை. இவ்வகையில், தமிழ்த் தலைவர்களிடம் காணப்பட்ட அரசியல் அறிவின்மைகளும் கற்பனாவாதங்களும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வளர்ச்சியடைய ஏதுக்களாய் அமைந்தன.
டொனமூர் யாப்பின் கீழ் 1936 ஆம் ஆண்டு தனிச் சிங்கள மந்திரி சபையைச் சிங்களத் தலைவர்கள் வெற்றிகரமாய் உருவாக்கினர். அப்போது தமிழ் மக்களுக்கு திரு. ஜி.ஜி. பொன்னம்பலமும், சிங்கள மக்களுக்கு பரன் ஜெயதிலகவும் தலைவர்களாய் இருந்தனர். பொன்னம்பலத்தை அமைச்சரவையில் உள்வாங்கிவிடக்கூடாது என்பது ஜெயதிலகவின் முடிவாகும். பொன்னம்பலம் தன்னை முன்னிறுத்துவதன் மீதும், தன்னைப் பெரிதுபடுத்துவதன் மீதும் எரிச்சல் கொண்டிருந்த ஒரு தமிழ்க் கணித மூளையை ஜெயதிலக அடையாளம் கண்டிருந்தார். அந்தக் கணித மூளையை அவர் அணுகி, பொன்னம்பலத்தை மந்திரிசபையில் நுழையவிடாது தடுப்பதற்கு உபாயம் சொல்லுமாறு புத்திமதி கேட்டார்.
பின்வரும் அடிப்படையில் கணித மூளை இலகுவாகப் புத்திமதி சொல்லியது. 50 உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்க சபையானது (State Council) தலா 7 உறுப்பினர்களாக – ஆனால் ஒரு சபைக்கு எட்டு உறுப்பினர்களாக – மொத்தம் ஏழு நிர்வாக சபைகளாகப் பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் ஒவ்வொரு சபையும் தமக்குத் தமக்கெனத் தனித்தனியே ஒவ்வொரு தலைவர்களைத் தேர்வு செய்யும். தலைவரே அமைச்சராவார். இதன்படி பொன்னம்பலம் அங்கம் வகிக்கக்கூடிய நிர்வாக சபையில் பொன்னம்பலத்துக்கு மாறான உறுப்பினர்கள் பெரும்பான்மையினராக இடம்பெற்றால் (4 அல்லது 5 உறுப்பினர்), பொன்னம்பலம் தலைவராக முடியாது. அதன்படி பொன்னம்பலம் மந்திரி சபையில் (Board of Ministers) அங்கம் பெற முடியாது.
உண்மையில் இவ்வாறு அந்தக் கணித மூளை புத்தி சொல்லியது, பொன்னம்பலத்துக்கு எதிராக மட்டுந்தான். அரசாங்க சபையை ஏழு சபைகளாகப் பிரிக்கும் போது, ஏழு நிர்வாக சபைகளிலும் தமிழ் அங்கத்தவர்கள் பெரும்பான்மையாக வரமுடியாதவாறு திட்டமிட்டு ஜெயதிலக நிர்வாக சபைகளை வடிவமைத்தார். இவ்வாறு நிர்வாக சபைகள் பிரிக்கப்பட்ட பின்பு, பொன்னம்பலம் அங்கம்பெற்ற நிர்வாக சபையில் சிங்கள அங்கத்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். பொன்னம்பலம் தேர்வு செய்யப்படாமல், அதற்கு ஒரு சிங்களவரே தலைவர் ஆனார். பொன்னம்பலம் ஏமாற்றமடைந்து திகைப்புற்றார். அவர் வெளியே வந்து பார்த்தபோது, ஏழு நிர்வாக சபைகளுக்கும் ஏழு சிங்களவர்கள் தெரிவாகியிருந்தனர். இதுவே தனிச் சிங்கள மந்திரி சபையாய் (Pan Sinhala Board of Ministers) அமைந்தது.
தமிழரைப் பயன்படுத்தித் தமிழரை வீழ்த்த சிங்களவர்களுக்குத் தெரிந்திருந்தது. சிங்களத் தலைவர்களுக்குப் புத்தி உயர, கொடி உயர்ந்தது. தமிழ்த் தலைவர்களுக்குப் புத்தி போனது, கோபம் வந்தது.
கோபம் கொண்ட பொன்னம்பலத்தின் கண்களில் டியூக் ஒப் டிவென்சியாரின் (Duke of Devonshire) ‘50 : 50 சூத்திரம்’ (Balanced Representation) தென்பட்டது. பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் பெரும்பான்மை இனத்திற்கு 50% ஆசனங்களும், ஏனைய சிறுபான்மையினங்கள் அனைத்துக்கும் மிகுதி 50% ஆசனங்களும் என அமையும்போது, பெரும்பான்மை இனத்தால் சிறுபான்மையினத்தை அடக்கி ஆள முடியாது என்பதே இவரது சூத்திரமாகும். இதன்படி இலங்கையில் ‘50 : 50’ என அமையுமிடத்தில், சிங்களப் பௌத்தர்களுக்கு 50 வீதமும், முறையே இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், மலே இனத்தவர்கள், பறங்கியர், சிங்கள – தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கு மிகுதி 50 வீதமும் பங்கிடப்படும் என்பதாகும்.
மேற்படி சிறுபான்மை இனத்தவர்களின் மத்தியில் இருந்து சில உறுப்பினர்கள் சிங்களவர் பக்கம் மாறினால், சிங்களவர் பக்கம் எப்போதும் பெரும்பான்மை கிடைப்பது சாத்தியம். ஆதலால், இந்த 50 : 50 என்ற சூத்திரம் இனப் பிரச்சினைக்குத் தீர்வில்லை. ஆனாலும், பொன்னம்பலம் ஒற்றை ஆட்சியின் கீழ், 50 : 50 என்ற சூத்திரக் கொள்கையை, அடுத்த அரசியல் யாப்புக் குழுவான சோல்பரி அரசியல் யாப்புக் குழுவில் முன்மொழிந்தார்.
‘ஒன்றுபட்ட இலங்கை’யில் ஒற்றை ஆட்சி – சோல்பரி யாப்பு
சோல்பரி யாப்புக் குழுவினர் (Soulbury Commission) 1944 ஆம் ஆண்டு இலங்கையில் கால்வைத்த காலத்தில், டொக்டர் என்.எம். பெரேரா (Dr. N.M. Perera) தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி (Lanka Sama Samaja Party – LSSP – 1935) மற்றும் டொக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க (Dr. S.A. Wickramasinghe) தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of Sri Lanka – C.P. – 1943) ஆகிய இரு இடதுசாரிக் கட்சிகளுமே அரசியல் கட்சிக்குரிய தரத்தில் இருந்தன. அப்போது டி.எஸ். சேனநாயக்க தலைமையில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress – CNC – 1919, ஸ்தாபகத் தலைவர் சேர். பொன். அருணாசலம்) கட்சி காணப்பட்டது. ஆனாலும், இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சிக்குரிய தரத்தில் காணப்படவில்லை; அது ஒரு சங்கத்துக்குரிய அமைப்புடன் காணப்பட்டது.

சோல்பரி குழுவின் வருகையை எதிர்கொள்ளும் முகமாக, கொழும்பு சாஹிராக் கல்லூரியில் தமிழ்த் தலைவர்கள் மற்றும் தமிழ்ப் பிரமுகர்கள் ஒன்றுகூடி திரு. ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு கால்கோள் இட்டனர். இதுவே தமிழ் மக்கள் மத்தியில் தொடங்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சியும், இலங்கையில் காணப்பட்ட மூன்றாவது அரசியல் கட்சியும் ஆகும். இது அரசியல் கட்சிக்குரிய தரத்தைக் கொண்டிருந்தது. இந்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற தமிழ் வலதுசாரிக் கட்சியும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிமுறை என்ற கொள்கையைக் கொண்டிருந்தன.
ஓர் அரசியல் கட்சியாக அல்லாமல், ஒரு சங்கமாகக் காணப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸ், இலங்கையின் அரசியலில் மிகவும் பலம் பொருந்திய வலதுசாரி அமைப்பாக இருந்தது. சோல்பரி குழுவின் வரவைத் தொடர்ந்து, இலங்கைத் தேசிய காங்கிரசை அடிப்படையாகக் கொண்டு, திரு. டி.எஸ். சேனநாயக்க தலைமையில் 1946 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) உருவானது. மொத்தத்தில் இப்போது நான்கு கட்சிகளும் ஒன்றுபட்ட இலங்கையில் ஒற்றை ஆட்சி முறைமை என்ற கொள்கையைக் கொண்டிருந்தன.
சோல்பரி குழுவினர் ஒற்றை ஆட்சி என்ற உறுதியான, இறுக்கமான தொப்பியை அணிந்தவாறு இலங்கையில் கால் வைத்தனர். இலங்கையில் கால்வைத்த காலனிய ஆதிக்க சோல்பரி குழுவும், டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் உருவான ஐக்கிய தேசியக் கட்சியும், முதுபெரும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளும், கூடவே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிமுறை என்ற கொள்கையையே கொண்டிருந்தன.
1925 ஆம் ஆண்டு கண்டியர் மகாசபை (Kandyan Assembly) சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்திருந்தது. சிங்களத் தலைவர்களுள் ஒருவராய் இருந்தவரும், பின்னாளில் இலங்கையின் பிரதமராக இருந்தவருமான திரு. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க (S.W.R.D. Bandaranaike) 1926 ஆம் ஆண்டு இலங்கைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் முறைமையைக் கோரி நின்றார். ஆனால், சோல்பரி யாப்புக் குழுவினர் 1940களின் மத்தியில் இலங்கை வந்திருந்த காலத்திலும், தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி முறையைக் கோரி நிற்கவில்லை.
ஆனால், விதிவிலக்காக சமஷ்டி முறையின் தேவையைப் பற்றி, தான் தனிப்பட்ட முறையில் சிந்தித்ததாக திரு. வி. நவரத்தினம் கூறியுள்ளார். அதாவது, சோல்பரி குழுவை எதிர்கொள்வதற்காக, திரு. ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் 1944 ஆம் ஆண்டு சாஹிரா கல்லூரியில் கூடிய கூட்டத்தில் உருவாக்கப்பட்ட உப குழுவில் (இந்த உப குழுவே தமிழ்க் காங்கிரஸ் கட்சியாகப் பரிணமித்தது) தன்னையும் ஒருவராக இணையுமாறு கோரப்பட்டபோதிலும், தான் அதில் இணையவில்லை எனக் கூறும் திரு. வி. நவரத்தினம், அவ்வாறு தான் இணைய மறுத்ததற்குக் கூறும் மூன்று காரணங்களில் இரண்டு முக்கிய அரசியல் காரணங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.
“… சமநிலைப் பிரதிநிதித்துவம் (Balanced Representation) என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அது நியாயமான ஒரு வழிமுறையென்றோ, தமிழர்களின் பிரச்சினைகளின் தீர்வுக்கு திறன்மிகு வழிமுறையென்றோ நான் கருதவில்லை. நான் அக்காலத்தில் சமஷ்டி முறை பற்றிய அரசியல் சிந்தனையால் கவரப்பட்டிருந்தேன். இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பகைமை உணர்வை அம்முறையே தீர்க்கவல்லது என்றும் கருதினேன். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பிய சில நாட்களின் பின்னர் இலங்கைக்கு சமஷ்டி முறை வேண்டுமென்று வாதிடும் முறையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அக்கட்டுரையால் நான் கவரப்பட்டிருந்தேன்.”
வி. நவரத்தினம் கூறுவதன் வாயிலாக, சோல்பரி யாப்பு உருவாகிய காலத்தில் ஒற்றை ஆட்சிக்கு மாறாக சமஷ்டி முறை பற்றிச் சிந்திக்கக்கூடிய அளவிற்கு தமிழர்களில் சில உதிரிகளாவது இருந்திருக்கின்றனர் என்பதனை ஊகிக்க முடிகின்றது.
1931 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த டொனமூர் அரசியல் யாப்பும், 1947 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியல் யாப்பும் காலனியத்தின் பின் வரக்கூடிய நவகாலனிய கடல் ஆதிக்கத்துக்கான புவிசார் அரசியல் (Geopolitics) அடிப்படையில் வடிவமைக்கப்பட்டன. ஆனால், தமிழ்த் தலைமைகளிடமும், தமிழ் அரசியல் – அறிவியல் பரப்பிலும், சர்வதேச அரசியல் பற்றிய பார்வையோ, புவிசார் அரசியல் பற்றிய அறிவோ குறிப்பிடக்கூடிய அளவு இருக்கவில்லை. இவை சார்ந்து அறிவியல் வறுமையும், அறிவியல் வெறுமையும் இருந்தன. இன்றுங்கூட இவை சார்ந்த மூலோபாய ரீதியான அறிவியல் வளர்ச்சியை நடைமுறைக்கேற்ப பெற முடியவில்லை.
பிரித்தானியர்களை எஜமானர்களாகப் பார்த்த தமிழ்த் தலைவர்களின் மனப்பாங்கால், தமிழ் மக்களின் நலன்கள் புவிசார் அரசியலின் அடிப்படையில் நசுக்கப்படுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. புவிசார் அரசியலுக்கும், காலனிய ஆதிக்க அரசியல் நலன்களுக்கும், சிங்கள பௌத்த மேலாதிக்க நலன்களுக்கும் இடையிலான உறவுகளால், இனப்படுகொலையின் வெளிப்பாடாய் அரசியல் யாப்புகள் கட்டமைக்கப்படுவதைச் சிறிதும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது, அரசியல் யாப்புகள் இனப்படுகொலைகளைக் கட்டமைக்கும் சாதனங்களாய் அமைந்தன.
அரசு, அரசியல் அமைப்புகள் அல்லது யாப்புகள், புவிசார் அரசியல், சர்வதேச அரசியல், சிங்கள பௌத்த பேரினவாதம், அண்டை நாட்டு அரசியல் பற்றி ஒவ்வொன்றையும் தனியாகவும், கூட்டாகவும் பார்க்கின்ற அரசியல் தத்துவார்த்தப் (Political Philosophy) பார்வையின்றி, அரசியல் யாப்பையோ அல்லது அரசியல் நபர்களையோ புரிந்துகொள்ள முடியாது.
அரசியல் யாப்பின் வரிகளை மனனம் செய்து வைத்திருப்பதனாலோ, அன்றி எழுதப்பட்ட வரிகளை நூல் பிடித்து அளந்து பார்ப்பதனாலோ அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது. அது நீதிமன்றத்தில் வழக்காட மட்டுமே உதவும். அரசியல் யாப்பு என்பது, எழுதப்பட்ட வரிகளுக்குப் பின்னால் காணப்படும் அரசுகளின் நலன், புவிசார் நலன், ஆதிக்க நலன், வரலாற்றுப் பாரம்பரியம், பழக்கவழக்கம், நீடித்து நிலைத்துவரும் அரசியல் கலாசாரம் என்பனவற்றின் கூட்டுத் திரட்சியாய் வடிவமைக்கப்படுகின்றது. அரசியல் யாப்பை, எழுதப்பட்ட வரிகளுக்கு அப்பால், எழுதப்பட்ட வரிகளுக்கு இடையிலான எண்ணங்களினாலும், எழுதப்படாத வரிகளினாலும், முன்னெடுக்கப்படுகின்ற நடைமுறைகளினாலும் புரிந்துகொள்ள வேண்டும்.
இராமாயணம், மகாபாரதம், இந்தியாவின் சாதிக் கட்டமைப்பு ஆகிய இந்தியாவின் மரபுவழி அம்சங்களைப் புரிந்துகொள்ளாமல், இந்தியாவின் இன்றைய நவீன அரசியல் யாப்பைப் புரிந்துகொள்ள முடியாது. குறிப்பாக, இந்திய நவீன யாப்பானது (1950 இல் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம்), மகாபாரத கலாசாரத்தின் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மகாபாரதத்தில் இடம்பெறும் சம்பாசனைகளில் பன்முகத் தன்மையும், கருத்து ரீதியான ஜனநாயக உள்ளடக்கமும் காணப்படுகிறது.
இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும், சோல்பரி யாப்பும்
டொனமூர் யாப்பை பிரித்தானியர் உருவாக்கும் போது, எதனை எண்ணினார்களோ, எதனை எதிர்பார்த்தார்களோ, எதனை இலக்காக வரைந்திருந்தார்களோ, அதனை அந்த யாப்பு தனது 17 ஆண்டுகால நடைமுறையில் நிறைவேற்றிக் கொண்டது. அதன்படி, நவீன அரசியலில் இந்திய எதிர்ப்பு – தமிழின எதிர்ப்பு என்பனவற்றை முதலீடாகக் கொண்டு, சிங்களத் தலைவர்களை அரவணைத்து, இந்தியாவிற்குப் பாதகமான இராணுவத் தளங்களையும், தமிழருக்குப் பாதகமான அரசியல் யாப்பையும் சோல்பரி யாப்பால் உருவாக்க முடிந்தது.
சோல்பரி யாப்பின் பிரதான சூத்திரதாரியாக விளங்கியவர் சேர் ஒலிவர் குணதிலக ஆவார். இவர் பிரித்தானிய அரசின் ஆளும் குழாத்தைச் சேர்ந்த அதியுயர், சிங்கள இன அதிகாரியாவார். இவரைப் பயன்படுத்தியே ‘White Hall’ (பிரித்தானிய அரசாங்க பீடம்) டி.எஸ். சேனநாயக்கவை நெறிப்படுத்தி, பிரித்தானிய இராணுவத் தளங்களை இலங்கையில் அமைப்பதற்கு ஏற்ற கையாளலையும், அதன் அடிப்படையில் யாப்பு உருவாக்கத்தையும் மேற்கொண்டது.

டி.எஸ். சேனநாயக்க, சேர் ஒலிவர் குணதிலக, பிரித்தானியரான பேராசிரியர் ஐவர் ஜெனிங்ஸ் ஆகிய மூவருமே சோல்பரி அரசியல் யாப்பை வடிவமைத்த சிற்பிகளாவர். இவர்கள் மூவரும் யாப்பை உருவாக்கிய முப்பெரும் தூண்கள் – ‘Triumvirate’ – என குறிப்பிடப்படுவது கவனத்திற்குரியது. இவர்கள் மூவரும் இணைந்து Ministers’ Draft இனை உருவாக்கினார்கள். இதில் அரசியல் யாப்பு சார்ந்த அறிவியல் மூளையாகச் செயற்பட்டவர் ஐவர் ஜெனிங்ஸ், இராஜதந்திர சூத்திரதாரியாகச் செயற்பட்டவர் ஒலிவர் குணதிலக, அரசியல் தலைவராக மேற்படி இருவரின் வழிகாட்டலின் படி செயற்பட்டவர் டி.எஸ். சேனநாயக்க.

இவர்கள் தயாரித்த மந்திரிசபை அரசியல் யாப்பு நகல் (Ministers’ Draft) 1944 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்டு பிரித்தானிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நகல் யாப்பானது பிரித்தானிய ‘Westminster’ அரசியல் யாப்பு முறையைப் பின்பற்றி எழுதப்பட்டது. ஒற்றையாட்சி முறையின் கீழான பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தின் கீழ் பெரும்பான்மையின (Majoritarianism) ஆட்சியை மேலும் பலப்படுத்த இந்த ‘Westminster’ முறை உதவும் என்பதைப் புரிந்துகொண்டு, இந்த யாப்பு வடிவமைக்கப்பட்டது.
1940களின் ஆரம்பத்தில் தோன்றிய புவிசார் அரசியல் இராஜதந்திர நகர்வுகளையும், அது தொடர்பான கருத்துருவாக்கங்களையும் இங்கு கவனிக்க வேண்டியது அவசியம். இப்பின்னணியில், பிரித்தானியரின் கேந்திர நலன்களை உணர்ந்திருந்த சிங்களத் தலைவர்கள், அதன் பொருட்டு பிரித்தானியரிடம் தமக்கான பேரம் பேசும் சக்தியை வளர்ப்பதற்கான முற்தயாரிப்புகளில் ஈடுபட்டனர். 1940 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் தேதி, இலங்கை தேசிய காங்கிரசின் சார்பில் ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியத் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்கு பின்வருமாறு கடிதம் எழுதியிருந்தார்:
“சுதந்திர இந்தியாவுடன் சுதந்திர இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சிமுறையோ அல்லது நெருக்கமான கூட்டாட்சி முறையோ (Federation or Close Union) அமைப்பது பற்றி உங்களுடன் நாங்கள் கலந்துரையாட விரும்புகிறோம்.”
அதற்கு ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி பதில் எழுதுகையில், “சிறிய அரசுகளின் காலம் முடிந்துவிட்டது. சமஷ்டி அமைப்பு முறையிலான பெரிய அரசுகளோ அன்றி, இறுக்கமான பிணைப்புகளைக் கொண்ட பெரிய சாம்ராச்சியங்களோதான் எதிர்காலத்தில் தப்பிப்பிழைக்க முடியும். எதிர்கால உலகில் தனித்து நிற்க முடியாத அளவிற்கு, இலங்கை அரசியல், பொருளாதார ரீதியில் ஒரு மிகச் சிறிய அரசே ஆகும். இத்தகைய சூழலில் மிகப்பெரும் ஆபத்து எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படும் என்ற வகையில், உங்களின் கருத்தை நான் பெரிதும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் (மைக்கல் றொபேர்ட் தொகுத்த ‘Documents of the Ceylon National Congress’ என்ற நூலில் மேற்படி கடிதங்களைக் காணலாம்).
அதேவேளை, ‘Times of India’ பத்திரிகைக்கு 1942 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி டி.எஸ். சேனநாயக்க அளித்த நேர்காணலில், “பெரிய பலம் பொருந்திய இந்திய சமஷ்டி அமைப்புக்குள் ஓர் அங்கமாக இலங்கை இணைவது, இலங்கையின் நலனுக்கு உகந்தது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவற்றைத் தொடர்ந்து, பிரித்தானியர் பக்கம் இருந்து, இந்தியா தொடர்பாக சிங்களத் தலைவர்களை அச்சுறுத்தும் கருத்துகள் வெளியாகின. இதன் பின்னணியில், சிங்களத் தலைவர்களின் பேரம் பேசும் தந்திரம் மேல்நிலை அடையத் தொடங்கியது.
“இந்தியாவும் இலங்கையும் இணைக்கப்பட்டால், அவ்விணைப்பானது சமத்துவ அடிப்படையில் அமையாது. அந்த இணைப்பில் இந்திய சமஷ்டி அமைப்புக்குள் இலங்கை விழுங்கப்படுவதாகவே அது அமையும். இத்தகைய போக்கானது ஓர் இயல்பான தலைவிதி என்று இந்தியத் தலைவர்கள் கூறும் அளவிற்குக்கூட சென்றுவிட்டது” என்று ஐவர் ஜெனிங்ஸ் தெரிவித்தார். இக்கருத்தை ஐவர் ஜெனிங்ஸ் 1951 ஆம் ஆண்டு எழுதிய The Commonwealth in Asia என்ற நூலில் பதிவு செய்திருந்த போதிலும், இவர் 1943 ஆம் ஆண்டிலிருந்து டி.எஸ். சேனநாயக்கவின் தலையாய ஆலோசகராகவே விளங்கினார்.
இத்தகைய கருத்தோட்டத்தைக் கொண்டிருந்த சேர் ஐவர் ஜெனிங்ஸ்தான் டி.எஸ். சேனநாயக்கவின் நெருங்கிய ஆலோசகராக இருந்தார் என்றால், அவர் டி.எஸ். சேனநாயக்கவை எவ்வாறு கையாண்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. இந்தியாவுடன் இணைப்பு பற்றி சிங்களர்கள் பேசியவுடனேயே, சிங்களத் தலைவர்கள் எதிர்பார்த்தது போல், பிரித்தானியர் அவர்களைத் தம்பக்கம் வென்றெடுக்கும் நோக்கில் புடைசூழத் தொடங்கினர்.
எப்படியோ, இதன் மூலம் சிங்களத் தலைவர்களின் பேரம் பேசும் சக்தியும் உயர்ந்தது. பிரித்தானியாவிற்கான கேந்திர நலன்களும் முதன்மை பெற்றன. அத்துடன், சிங்களத் தலைவர்கள் இந்தியாவுடன் கூட்டாட்சி என்ற பேச்சையும் கைவிட்டு, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தெளிவாக எடுக்கத் தயாராகினர்.
இந்தியாவுடன் ஒட்டியதான இடவமைவை இலங்கை கொண்டிருக்கும் நிலையில், புவியியல் ரீதியிலும், அரசியல் ரீதியிலும், கலாசார ரீதியிலும், இயல்பாகவே அது இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்துவிடக்கூடிய ஆபத்து இருப்பதைப் பற்றி பிரித்தானியர்கள் பெரிதும் பேசிவந்தனர். இப்பின்னணியில், பிரித்தானியருக்கும் சிங்களத் தலைவர்களுக்கும் இடையே புதிய அரசியல் யாப்பு மற்றும் இலங்கை சுதந்திரம் அடைதல் பற்றிய விடயங்கள் பேசப்படலாயின.
பிரித்தானியாவினதும் அதன் அணி நாடுகளினதும் புவிசார் கேந்திர நலனைப் பேணுவதில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் தலையாயது என்பதையும், ஈழத் தமிழர்களின் நலன்களில் இந்தியாவின் அக்கறை பெரிதளவு உண்டு என்பதையும் கருத்திற்கொண்டு யாப்பையும், இலங்கையின் சுதந்திரத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒலிவர் குணதிலகவுக்கும், பிரித்தானியக் குடியேற்றச் செயலாளருக்கும், பிரித்தானிய அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ச்சியான உரையாடல்கள் நிகழ்ந்தன.
ஒரு கட்டத்தில் தமிழர்கள் மீது தமக்கு கடப்பாடு உண்டு எனப் பிரித்தானியத் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றை மேவி, தாம் ‘பிரித்தானியாவின் நல்ல நண்பர்’ என்றும், ‘யுத்தத்தின் போதும் சமாதானத்தின் போதும் பிரித்தானியாவின் பக்கம் நின்றே எப்போதும் செயற்பட்டவர்கள்’ என்றும் கூறி, தம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஒலிவர் குணதிலக பல்வேறு வழிகளில் வலியுறுத்தினார். அதன் ஊடாக யாப்பு உருவாக்கம், இலங்கை சுதந்திரம் அடைதல் பற்றிய தீர்மானம், பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பிரித்தானிய இராணுவத் தளங்களை அமைத்தல் போன்ற முடிவுகளை டி.எஸ். சேனநாயக்கவின் சார்பில் அவர் நிறைவேற்றினார் என்பதை அறிய முடிகிறது (இவை தொடர்பான விவரங்களை Sir Charles Joseph இன் O.E.G: A Biography of Sir Oliver E. Goonetilleke என்ற நூலில் வரும் ‘Prelude to Freedom’, ‘Crucial Negotiations’ போன்ற அத்தியாயங்களில் காணலாம்).
மேற்படி பிரித்தானியரைத் திருப்திபடுத்தும் வகையிலும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் ஒலிவர் குணதிலக பின்வருமாறு கூறிய கூற்றுகள் கவனத்திற்குரியவை.
“நாங்கள் உங்கள் நண்பர்கள். இலங்கை யுத்தத்திலும் அமைதியிலும் உங்களுக்கு உண்மையாகவே இருந்து வந்திருக்கிறது. உங்கள் நம்பிக்கையை நாங்கள் பொய்யாக்கியதே இல்லை.” (“We are your friends. Ceylon has always been loyal to you in peace and war. We have never let you down.” – p. 88.)
“உங்களுக்கு அவசியமானது என்று நீங்கள் கருதும் எந்தவொரு உடன்படிக்கையையும் நாங்கள் உங்களுடன் மகிழ்ச்சியோடு செய்து கொள்வோம். உங்களுடைய பாதுகாப்பு நலன்களுக்காக நீங்கள் நம்பிக்கைக்குரிய இரகசிய ஒப்பந்தங்கள் செய்திருக்கும் வேறு யாரையும்விட எங்கள் மீது நீங்கள் குறைந்தளவு நம்பிக்கை கொள்ள காரணம் ஏதாவது உண்டோ? (“We will gladly enter into any agreements you think necessary… Have you any reason to believe us less trustworthy than others to whom you have confided your defence interests?” – p. 89.)
ஆனால் இக்காலத்தில் தமிழ்த் தலைவர்கள், மேற்படி புவிசார் அரசியல் பின்னணியைப் பற்றியோ அல்லது மேற்கண்டவாறான இராஜதந்திர நகர்வுகளைப் பற்றியோ புரிந்து கொள்ள இயலாதவர்களாகக் காணப்பட்டனர். இதற்கு மாறாக, இத்தகைய அரசியல் ஆட்சிக்கலை நுணுக்கப் போக்குகளைத் தெரிந்துகொள்ளாத தமிழ்த் தலைவர்கள், பிரித்தானியர் மீது நம்பிக்கை வைத்து, ‘பிரச்சினை பிரித்தானியர் அல்லர்; சிங்களவர்தான்’ என்ற கோணத்தில் பிரித்தானியரை நீதிமான்களாகக் கருதி, அவர்களிடம் முறையிடும் அரசியல் பாரம்பரியத்தையே கொண்டிருந்தனர். விதானைக்குப் பயந்து உடையாரிடம் அடைக்கலம் புகுந்த பாமரனின் கதையைப் போலவே இது அமைந்தது.
மந்திரிசபை நகல் அரசியல் யாப்பில் சோல்பரி பிரபு கையெழுத்திட்டதற்குப் பின்னான பெயரே சோல்பரி அரசியல் யாப்பாகும். மந்திரிசபை நகல் அரசியல் யாப்பில் 29 ஆவது சரத்தும், செனட் சபையும் இருக்கவில்லை. இவை இரண்டையும் சோல்பரி புதிதாக இணைத்திருந்தார். உண்மையில், இன–மத–மொழி சார்ந்த ‘சிறுபான்மையினர்’ என்ற தரப்பில் யாருக்கும் இந்த 29 ஆவது சரத்து பாதுகாப்பு அளிக்கவில்லை. அதேவேளை, செனட் சபையினாலும் மேற்படி எத்தகைய ‘சிறுபான்மை’ப் பிரிவினருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை.
சோல்பரி அரசியல் யாப்புக் காலத்தில், 1950களின் மத்திவரை திரு. ஜி.ஜி. பொன்னம்பலமும், பின்னர் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகமும், தமிழ் மக்களுக்குத் தலைவர்களாக விளங்கினர்.
உலக அபிப்பிராயத்தை மீறி இலங்கை அரசு எதிர்காலத்தில் செயற்பட இயலாது இருக்கும் என்றும், எனவே இலங்கை அரசால் இனங்களுக்குப் பாதகமான ஏற்பாடுகளைச் செய்ய முடியாது இருக்கும் என்றும் ஒலிவர் குணதிலக பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் 1940களின் மத்தியில் எடுத்துக்கூறியிருந்தார். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, அனைத்துச் சட்டங்களையும், நடைமுறைகளையும், சோல்பரி உயிரோடு இருக்கும் காலத்திலேயே இலங்கை அரசு சட்டங்கள் மூலமும், இனக்கலவரங்கள் மூலமும், மற்றும் அரசியல், நிர்வாக நடைமுறைகள் மூலமும் நிறைவேற்றியதைக் காணலாம். இது இன்றும், இனியும் பொருந்தும்.
“சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான திரு. டி.எஸ். சேனநாயக்க உயிருடன் இருந்திருப்பாரானால், அதிர்ச்சிகரமான 1958 ஆம் ஆண்டு நிகழ்வுகளும், இன்று தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே நிலவும் துயரகரமான பதற்றமும் ஏற்பட இடமிருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.” (“But had Mr. D. S. Senanayake, the first Prime Minister of independent Ceylon, lived, I cannot believe that the shocking events of 1958 and the grave tension that now exists between Tamils and Sinhalese would have ever occurred.”)
டி.எஸ். சேனநாயக்கவின் மீது சோல்பரி ஆணைக்குழு நம்பிக்கை கொண்டிருந்ததைப் பற்றியும், ஆனால் அவரது மரணத்தின் பின்பான சிங்கள அரசியல் போக்குகள் தனக்கும் தனது குழுவினருக்கும் ஏமாற்றத்தை அளித்ததாகவும், பாமர் எழுதிய ‘Ceylon: A Divided Nation’ என்ற நூலுக்கான அணிந்துரையில் சோல்பரி மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஒரு தனிநபரை நம்பி ஒரு நாட்டின் வரலாற்றை வகுக்க முடியாது என்பதை அவர் அறியாதவர் அல்லர்.
பரன் ஜெயதிலகவைத் தொடர்ந்து, அவரது ‘Leader of the House’ என்ற பதவியில் டி.எஸ். சேனநாயக்க அமர்ந்து தனிப்பெரும் தலைவராக மிளிரத் தொடங்கினார். அவரது தனிச் சிங்கள மந்திரிசபைக்கால அரசியலையும், கூடவே மலையகத் தமிழரின் குடியுரிமை, வாக்குரிமை போன்ற உரிமைகளை சுதந்திரத்திற்குப் பின் அவர் பிரதமராய் இருக்கும் போதே 1948–49 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழரிடமிருந்து பறித்தெடுத்து மலையகத் தமிழரை கதியற்றவர்களாக்கினார் என்பதையும், மிகவும் சர்ச்சைக்குரிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை ஈழத் தமிழ் மண்ணில் ஆரம்பித்தார் என்பதையும் நோக்கினால், சேனநாயக்க பற்றிய சோல்பரியின் மதிப்பீடு அர்த்தமற்றது என்பது தெளிவாகும்.
1956 ஆம் ஆண்டு யூன் மாதம் தனிச் சிங்கள மசோதா விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, டொக்டர் என்.எம். பெரேரா நாடாளுமன்றத்தில் டி.எஸ். சேனநாயக்க உட்பட்ட சிங்களத் தலைவர்களைப் பற்றிக் கூறிய மதிப்பீடு இங்கு கவனத்திற்குரியது. அதாவது, கடந்தகால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், டி.எஸ். சேனநாயக்க காலத்திலிருந்து ஒவ்வொரு சாத்தியமான திருப்பங்களிலும் சிறுபான்மையினங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவும், டொனமூர் யாப்பு கொண்டுவரப்பட்ட போது குறிப்பாக மலையக மக்கள் உட்பட்ட சிறுபான்மையினங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு பின்பு அவை மீறப்பட்டதாகவும், மீண்டும் சோல்பரி யாப்பின் கீழும் இதுவே நிகழ்ந்ததாகவும் என்.எம். பெரேரா விவரித்துச் சொல்கிறார்.
(“In point of fact, if you go back to the history of the country, you will find that the minorities have been betrayed at every possible turn, from the time of Mr. Senanayake, when the Donoughmore Constitution came up, the minorities, in particular the Indian community, were given certain promises which were broken. Then again, when the Soulbury Commission too…”) – Hansard 1956 June, C. 1861.
டொனமூர், சோல்பரி யாப்புகள் இரண்டும் பிரித்தானியாவின் பூகோள நலன் சார்ந்த அரசியலுக்கு இலங்கைத் தீவைப் பயன்படுத்துவது என்ற உறுதியான, நீண்டகால நோக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. மேற்படி அத்தேவையின் பொருட்டு சிங்களவர்களைத் திருப்திப்படுத்தவும், இலங்கையை இந்தியாவுடன் இணையவிடாது தடுக்கவும் வேண்டிய கட்டாயத்தின் பேரில், தெரிந்து கொண்டே தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்புகளை உருவாக்கி, பிரித்தானியர் தம் இலக்கை எண்ணிய அளவில் அடைந்தனர் என்பதே உண்மை.
சோல்பரி யாப்பு பற்றிய பிற்குறிப்பு
சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட காலம், பனிப்போர் தோன்றி உலகம் இரு அணிகளாக வியூகம் எடுக்கும் காலம்; பனிப் போர் யுகத்தில் நேட்டோ (NATO) அணிக்கு அமெரிக்கா தலைமை தாங்கத் தொடங்கிய காலம்; இந்தியா சுதந்திரம் அடையும் காலம்; இலங்கை சுதந்திரம் அடையப்போகும் காலம் என்பது போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தலையாய காலச்சந்தியாகும்.
உலகளாவிய அரசியல் (பூகோள அரசியல் – Global politics), இலங்கை–இந்தியா–இந்து சமுத்திரம் சார்ந்த புவிசார் அரசியல் (Geopolitics), கண்ட அரசியல் (Continental politics), சமுத்திர அரசியல் (Oceanic politics), இந்திய–இலங்கை அரசியல், இந்திய உள்நாட்டு அரசியல், இலங்கை உள்நாட்டு அரசியல் போன்ற அனைத்தையும் தழுவிய பல் பரிமாண அரசியல் அறிவியல் பார்வை தமிழ் தலைவர்களிடம் சிறிதும் கிடையாது. ஆனால் சிங்களத் தலைவர்கள் மேற்படி அனைத்தையும் தழுவிய கண்ணோட்டத்துடன், பிரித்தானிய இலங்கை அரசியலுக்கு இடையிலான முரண்பாட்டையும், இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளையும் சரியாக உணர்ந்த நிலையில், சோல்பரி யாப்பை உடனடி மற்றும் நீண்டகால கண்ணோட்டத்துடன் வடிவமைப்பதில் ஈடுபட்டனர்.
பிரித்தானிய நேட்டோ அணிக்கு முதன்மையாகத் தேவைப்பட்டது, இலங்கையில் நவகாலனித்துவ நலனுக்கு ஏற்ற வகையிலான இராணுவத் தளங்களே ஆகும். எனவே, பிரித்தானியாவுக்கு கடற்படை, விமானப்படைத் தளங்களை வழங்கி, தமக்குத் தேவையான வகையில் இந்தியாவை எதிர்கொள்ளவும், ஈழத் தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் ஒடுக்குவதற்கு வாய்ப்பான அரசியல் யாப்பைப் பெற்றுக்கொள்ளவும் சிங்களத் தலைவர்கள் முயன்றனர். இலங்கையில் இராணுவத் தளங்களை பிரித்தானியர் அமைப்பது இந்தியாவுக்கு வெறுப்பான விடயமே ஆயினும், இந்தியா மீள முடியாதவாறு இந்து–முஸ்லிம் இரத்தச் சகதிக்குள் சிக்கிக்கொண்டிருந்த பின்னணியில், இந்தியாவை மீறி, இந்தியாவைக் கடந்து, பிரித்தானியாவுடன் இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்ய முடியும் என்று அவர்கள் கணித்தனர்.
உலக அரசியலில் தாம் எப்போதும் இந்தியாவின் பக்கமே என்று, 1942 ஆம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்க இந்தியாவில் வைத்து இந்தியத் தலைவர்களுக்கு உறுதிப்படுத்திக் கூறியிருந்தார். ஆயினும் தருணம் கிட்டியபோது அதனை மீறி, இந்திய எதிர்ப்பு – தமிழின அழிப்பு என்ற பார்வையுடன் தம் அரசியலை டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். ஒருபுறம் இந்தியாவை ஒரு மூலைக்குள் அமர்த்தி வைத்துக்கொண்டு, மறுபுறம் உள்நாட்டில் முறையே மலையக மக்களையும் ஈழத் தமிழரையும் ஒடுக்குவதற்கான அரசியலை முன்னெடுப்பதற்குரிய வகையில், பிரித்தானியருடன் கூட்டிணைந்து சோல்பரி யாப்பையும், அதைத் தொடர்ந்த அரசியலையும் முன்னெடுத்தனர்.
இலங்கை அரசியல் யாப்பானது ‘Constitutional Evolution’ என்ற பரிணாம வளர்ச்சிக்குப் போகாமல், ‘Constitutional De-evolution’ அல்லது ‘Degeneration’ என்ற கீழ்நோக்கிய சீரழிவுக்கு உள்ளாகும் தொடக்கம், சோல்பரி யாப்பின் 29 ஆவது சரத்து விவகாரத்தில் அரங்கேறத் தொடங்கியது.
புவிசார் அரசியலில் புவியியல் நிலை நிரந்தரமானது. வல்லரசுகள் மாறலாம், ஆனால் புவிசார் அமைவிடம் மாறாது. அன்று, 1940களின் பிற்பகுதியில் வெளி வல்லரசு என்ற நிலையில் பிரித்தானியப் பேரரசு இருந்த இடத்தில், இன்று இலங்கை விவகாரத்தில் சீனப் பேரரசு இருக்கிறது. அன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் டி.எஸ். சேனநாயக்க அரசாங்கம் இருந்த இடத்தில், இன்று ஜே.வி.பி தலைமையிலான அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் இருக்கிறது.
அன்று இலங்கைக்கு பிரித்தானியா உயிர் நண்பன். இன்று இலங்கைக்கு சீனா உயிர் நண்பன். அன்று டி.எஸ். சேனநாயக்க ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒற்றையாட்சி அமைப்பின் கீழ், “ஒரு நாடு, ஒரு மக்கள்” என்ற கூக்குரலோடு ‘United National Party’ (ஐக்கிய தேசியக் கட்சி) என்ற கட்சியை முன்வைத்தார். இன்று, அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினர், “ஐக்கியம் – தேசியம் – சமத்துவம்” என்ற கொள்கையை, சேனநாயக்கவின் வாதத்தின் தொடர்ச்சியாக முன்வைத்துள்ளனர்.
எப்போதும், பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில், அளவால் சிறிய இனங்களுக்குப் பாதுகாப்பு என்பது பிரதான விடயமாகும். ஆனால், இத்தகைய பாதுகாப்புக் கோட்பாடு இங்கு தகர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாதுகாப்பு, அதிகாரம், ஜனநாயகம் என்பன அளவால் பெரிய இனத்திற்கு என்பது இலங்கை அரசியலில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக் கொள்கையின் தெளிவான பிரகடனமாகும்.
சுதந்திர காலத்தில், உலகப் பேரரச வாதத்தோடு இணைந்து, சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக் கொள்கையை எப்படி வடிவமைத்தாரோ, அப்படியே இப்போதும் சிங்கள பௌத்த இனவாத ஆட்சியாளர்கள் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக் கொள்கையை வல்லரசுகளுடன் இணைந்து வடிவமைக்கின்றார்கள்.



