நடேசய்யரின் ‘Under Planter Raj - The Standard Wage in Ceylon: தோட்டத் தொழிலாளர் ஊதிய உயர்வுக்கான அறிவுசார் தலையீடு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
27 நிமிட வாசிப்பு

நடேசய்யரின் ‘Under Planter Raj – The Standard Wage in Ceylon: தோட்டத் தொழிலாளர் ஊதிய உயர்வுக்கான அறிவுசார் தலையீடு

February 27, 2026 | Ezhuna

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.

1

சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலேயே தோட்டத் தொழிலாளரின் ஊதியப் பிரச்சினை முதன்முதல் பரந்தளவிலான கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. அக்காலத்தில்தான் சேர்.பொன். அருணாசலம் தோட்டத் தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்; கருமுத்து தியாகராஜச் செட்டியார் தோட்டத் தொழிலாளரின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமையை விரிவான சான்றுகளுடன் விவரித்து, அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டிய தேவையை வலுவாக எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியில், இந்திய அரசு தோட்டத் தொழிலாளர் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுத்தது. அந்நெருக்கடிக்கு உள்ளான இலங்கை அரசாங்கம் துண்டுமுறை, தண்டனை விதிகள் முதலானவற்றைச் சட்டப்படி நீக்கியதுடன் போதுமான ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. தோட்டத்துரைமார் சங்கமும் அந்நடைமுறைகளை நிராகரிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. 

தோட்டத் தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, அறிக்கைகள் உருவாக்கப்பட்டன. அவை தொடர்பான திறந்த உரையாடல்கள் உயர் மட்டங்களில் இடம்பெற்றன. அத்தகைய செயற்பாடுகள் இடம்பெற்றுவந்த காலத்திலேயே நடேசய்யர் இலங்கையின் சமூக அரசியல் களத்தில் உள்நுழைகிறார். ஒரு பத்திரிகையாளர் என்ற தளத்திலும் அரசியல்வாதி என்ற வகையிலும் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை நிலைமை, அவர்களுக்கான ஊதிய உயர்வு முதலானவை தொடர்பில் மிகுந்த அக்கறைகாட்டியுள்ள அவர், ஊதிய நிர்ணயம் தொடர்பிலான குழுக்களின் அறிக்கைகளை விமர்சனபூர்வமாக ஆராய்ந்து, அவற்றின் போதாமைகளை எடுத்துக்காட்டியுள்ளார். தோட்டத் தொழிலாளருக்கான ஊதிய நிர்ணயம் அதிகார சக்திகளால் வடிவமைக்கப்படுவதையும் அந்நிர்ணயத்தில் தோட்டத் தொழிலாளரின் உண்மையான வாழ்க்கை நிலைமை கருத்தில் கொள்ளப்படாததையும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ள அவர், முன்மொழியப்பட்டுள்ள ஊதிய அளவுகள், தோட்டத் தொழிலாளரின் வாழ்வை மேம்படுத்துவதற்குப் போதுமானதாக அமையாமையை விரிவான சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஊதிய நிர்ணயக் குழுக்கள் தோட்டத்துரைமாரைச் சார்ந்து ஒருதலைப்பட்சமாக இயங்குவதாகக் குற்றம்சாட்டிய நடேசய்யர், இந்திய அரசினதும் அரசியல் தலைவர்களினதும் தலையீட்டின் மூலமே தொழிலாளருக்கு நியாயமான ஊதியத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை வெவ்வேறு தளத்தில் வலியுறுத்தி வந்துள்ளார். அதன் ஒரு வெளிப்பாடாகவே, ‘தோட்டத்துரைமார் ராஜ்ஜியத்தின் கீழ்: இலங்கையில் தரப்படுத்தப்பட்ட ஊதியம்’ (Under Planter Raj – The Standard Wage in Ceylon) என்ற துண்டுப்பிரசுரம் அமைந்துள்ளது. அத்துண்டுப்பிரசுரத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளைக் குமாரி ஜயவர்த்தன, ரஷேல் குரியன் ஆகியோர் வெளிப்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, பின்வரும் குறிப்புகளைச் சுட்டிக்காட்டலாம்:

“தரப்படுத்தப்பட்ட ஊதியம் குறித்த குழுவின் அறிக்கை பற்றிய கடுமையான விமர்சனமாகத் ‘தோட்டத்துரைமார் இராச்சியத்தின்கீழ்: இலங்கையில் தரப்படுத்தப்பட்ட ஊதியம்’ என்ற துண்டுப்பிரசுரம் அமைந்தது. தரப்படுத்தப்பட்ட ஊதிய நிர்ணயம் பாரபட்சமானது, அந்த ஊதிய அளவு தொழிலாளருக்குப் போதுமானது இல்லை என்று நடேசய்யர் குறிப்பிட்டார். மறுக்கமுடியாத உண்மைகளையும் புள்ளிவிபரங்களையும் கொண்டு அவ்வறிக்கையின் ஒருபக்கச் சார்பை அவர் வெளிப்படுத்தினார். அத்துடன் முன்மொழியப்பட்டுள்ள தரப்படுத்தப்பட்ட ஊதியம் தொழிலாளரின் மிகக்குறைந்த வாழ்வாதார மட்டத்துக்கும் கீழாக இருக்கிறது என்பதை அவர் தெளிவாக எடுத்துக்காட்டினார். அக்குழுவில் உள்ளடங்கியிருந்த நால்வர் தோட்டத்துரைமார்கள் என்பதால், அந்நிர்ணயத்தால் பாதிக்கப்படுகின்ற ஆறரை இலட்ச இந்தியத் தொழிலாளர்களின் நலனைச் சிறிதளவும் கருத்தில் கொள்ளாது, திட்டமிட்டுத் திரித்து உருவாக்கப்பட்ட அறிக்கையாக அது மாறிவிட்டது எனக் கூறியதுடன் அக்குழு, குரலற்ற இந்தியத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க எந்த முயற்சியும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்” (Kumari Jayawardena & Rachel Kurian, Class, Patriarchy and Ethnicity on Sri Lankan Plantations, 2015: 104,105).

2

தோட்டத்துரைமார் ராஜ்ஜியத்தின் கீழ் என்ற துண்டுப்பிரசுரம் 1925 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. வெளியீடு பற்றிய குறிப்புகள் இடம்பெறவில்லை. ஆனால், பிரசுரத்தின் இறுதிப் பகுதியில் வெளியீட்டாளர் குறிப்பு என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“காலனித்துவ நாடுகளில் பெருந்தொகையான இந்தியக் கூலித் தொழிலாளர்களின் நிலை மிக மோசமானதாக உள்ளது. அதிலும் இலங்கையில் மிகவும் மோசமான நிலையிலுள்ளது. அங்கு ஆறரை இலட்சம் தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் போதுமான வாழ்வாதாரமற்று மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள தரப்படுத்தப்பட்ட கூலி என்ற திட்டமானது, ஒரு குழுவின் அறிக்கையின் கீழ் அத்தொழிலாளர்களின் வருமானத்தை ஒடுக்க முயற்சி செய்கிறது. 

இது ஒரு தீய நடைமுறையாகும். அதனால் இதனை எல்லாவகையிலும் எதிர்க்க வேண்டும். இலங்கையில் தொழிலாளர்களின் நிலைமையை விரிவாக ஆராய்ந்துள்ள திரு. நடேசய்யர், இத்துண்டுப்பிரசுரத்தில் அந்தக் குழுவினுடைய அறிக்கையின் ஒருதலைப்பட்ச தன்மையை வெளிப்படுத்தியுள்ளதுடன் மறுக்கமுடியாத உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் கொண்டு, முன்மொழியப்பட்டுள்ள நிலையான கூலி எவ்வாறு குறைந்தபட்ச வாழ்வாதாரத் தேவைகளைவிடக் கீழாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். குடியேறியுள்ள தொழிலாளர்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறையை முன்னெடுக்கும்படி காலனித்துவ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் திட்டமிட்ட வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கு இந்தியத் தலைவர்கள், அத்தொழிலாளர் பிரச்சினையை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டுமென்ற உருக்கமான வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார். இறுதி முயற்சியாக, குடியேற்றத்தைக்கூட நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், தோட்டத்துரைமார் ஆட்சியின் இரக்கமற்ற சுரண்டலிலிருந்து தன் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு இந்தியா எந்தவொரு தயக்கத்தையும் காட்டக்கூடாது.”

இக்குறிப்புகள், அத்துண்டுப்பிரசுரத்தின் அடிப்படை நோக்கையும் முக்கியத்துவத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளன. 23 பக்கங்களில் அமைந்துள்ள அத்துண்டுப்பிரசுரம், அறிமுகப்பகுதி நீங்கலாக அறிக்கையின் தோற்றம், ஜனநாயகத் தன்மை வெளிப்பாடு, இலங்கை அரசின் பதற்றம், சட்டம் இல்லை ஆனால் நிர்வாக ஆணை, முக்கிய அம்சங்கள், தொழிலாளர்களின் உண்மையான வருமானம், நாட்பெயரும் பகுதி வேலைக்கான சம்பள அளவுகளும், வேலைத்திறன் விகிதம், நிலையான கூலி என்பதன் அர்த்தம், ஊக்கத் தொகைகளின் இடைநிறுத்தம், தோட்டங்களின் பிரிவுகள், நிலையான ஊதியத்தின் கணக்கீடு, நாட்பெயருக்கான வேலை, அரிசி வழங்கல், நிலையான வரவு செலவுத் திட்டங்கள் முதலான உபதலைப்புகளைக் கொண்டுள்ளது.

3

உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிடப்பட முன்னரே நடேசய்யர் அவ்வறிக்கை மீதான தன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதனைத் துண்டுப்பிரசுரத்தின் தொடக்கத்திலே, “இந்த அறிக்கை, அறிக்கையைத் தயாரித்த மூன்று அதிகாரிகளின் முழுமையான அறிக்கையோ அதனை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையோ இல்லை. இந்தியக் குடியேற்றத் தொழிலாளர் குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் கூட்ட முடிவுக் குறிப்புகளிலிருந்து சில பகுதிகளைச் சேர்த்து, இந்தியத் தொழிலாளர் கட்டுப்பாட்டாளருக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே பரிமாறப்பட்ட கடிதத் தொடர்புகளையே அது கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதிலும், அதுவே தோட்டத்துரைமார் சங்கம் முதலானவற்றின் கருத்துகளுக்கு அனுப்பப்பட்ட வடிவமாகவும் இருந்துள்ளது. அதனால், அவ்வறிக்கை தொடர்பான விரிவான விமர்சனத்தை நடேசய்யர் முன்வைத்துள்ளார். தோட்டத் தொழிலாளரின் ஊதிய உயர்வில் அவர் கொண்டிருந்த அக்கறைக்கு ஒரு சான்றாக அம்முயற்சியைக் கொள்ளலாம்.

தரப்படுத்தப்பட்ட ஊதிய நிர்ணயத்துக்கான பின்புலத்தையும் அறிக்கை ஆக்கச் செயற்பாடு இடம்பெற்ற முறைமையையும் சுருக்கமாகத் தெளிவுபடுத்தியுள்ள நடேசய்யர், அந்நடைமுறையில் தொழிலாளருக்கு இழைக்கப்பட்ட பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தரும் தகவல்களிலிருந்து அந்த அறிக்கையின் உருவாக்கப் படிமுறையைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்:

  • இந்திய அரசு முன்னெடுத்த செயற்பாடுகளால் இலங்கை அரசாங்கம் தோட்டத் தொழிலாளர் ஊதியத்தைத் தரப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. முதலில் பேட்மென் என்பவரைக் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 
  • பேட்மெனின் அறிக்கை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான பின்னர் இந்திய அரசாங்கம் தொழிலாளரின் ஊதியம் தொடர்பில் கூட்டு ஆணையம் அமைக்க விரும்பியுள்ளது.
  • கூட்டு ஆணையத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம் புள்ளிவிவர இயக்குநர், இந்திய அரசாங்க முகவர், வெயிட் ஆகியோர் இணைந்து ஒரு விசாரணை மேற்கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளது. 
  • இந்திய அரசின் முகவராக விளங்கிய திரு. ரங்கநாதன் தானாகவே தோட்டங்களில் தகவல்களைத் திரட்ட முயன்றமைக்குத் தோட்டத்துரைமார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதன்போது இலங்கை அரசாங்கம் புள்ளிவிவர இயக்குநர், இந்தியக் குடியேற்றத் தொழிலாளர் கட்டுப்படுத்துநர் ஆகியோர் மூலமாகத் தேவையான தகவல்களை ரங்கநாதன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதன் விளைவாக, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகள் இணைந்த கூட்டு விசாரணை நடைபெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
  • அறிக்கையைத் தயாரித்த மூவருடன் இன்னும் நால்வரை உள்ளடக்கிய குழுவினால் அறிக்கை மதிப்பிடப்பட்டு, இறுதி வடிவத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று விவரிப்பிலிருந்து, “இந்தியாவிலிருந்து ஒரு ஆணையம் மூலம் விசாரணை நடத்தப்படுவதில் இலங்கை அரசாங்கம் தயக்கம் காட்டியதையும் ஒரு சுயாதீனமான இந்திய அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்படுவதில் தோட்டத்துரைமார் சங்கத்தினர் தயக்கம் காட்டியதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது” என்ற முடிவுக்கு வந்துள்ள நடேசய்யர், இரண்டு இலங்கையர்களும் ஓர் இந்திய அதிகாரியும் இணைந்து தயாரித்துள்ள இந்த அறிக்கை, தோட்டத்தொழிலாளர் சார்பான பிரதிநிதிகளற்று, தொழிலாளர் சாட்சியங்களில் கவனம் செலுத்தாது, பாகுபாடான தரவுத் தேர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாரபட்சமான ஆவணம் என அடையாளப்படுத்தி உள்ளார்.

தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனநாயகத் தன்மைகொண்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முகமாக, இந்தியக் குடியேற்றத் தொழிலாளர் மன்றத்தின் மூலமாகக் குழுவொன்றைத் தாபித்து, அறிக்கையை ஆராய்ந்த போதிலும் அது ஜனநாயகத் தன்மையுடையதாக அமையவில்லை என்பதை, “அந்தக் குழுவில், அறிக்கையைத் தயாரித்த மூன்று அதிகாரிகளும் அனுபவமிக்க நான்கு தோட்டத்துரைமார்களும் இடம்பெற்றனர். அவர்களின் பணி அறிக்கையை ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், அந்தக் குழு இலங்கை முழுவதும் சுற்றிப் பார்த்து இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்யவில்லை; சாட்சிகளை அழைக்கவில்லை; தோட்ட உடைமையாளருக்கு இணையாக – அல்லது அதைவிடவும் அதிகமாக – இதில் ஆர்வம் கொண்டிருந்த இந்தியச் சமூகத்தினருடன் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை” என அம்பலப்படுத்தியுள்ளார், நடேசய்யர்.

இந்திய அரசின் அழுத்தத்தினால் இலங்கை அரசாங்கம் தோட்டத் தொழிலாளரின் ஊதிய நிர்ணயம் தொடர்பான அறிக்கையைத் தயாரித்திருந்தாலும் இந்திய அரசு, தோட்டத் தொழிலாளர் சமூகம் ஆகியன குறித்த அக்கறை, இலங்கை அரசாங்கத்தாருக்கு இருக்கவில்லை எனக்கூறும் நடேசய்யர், அறிக்கையை இந்திய அரசுக்குச் சமர்ப்பிப்பதற்கு முன், தோட்டத்துரைமாருக்குக் கையளித்து அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கே இலங்கை அரசாங்கம் முயன்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை, அறிக்கைமீதான விவாதத்தின்போது குழுவின் தலைவரான டர்னர், “இந்திய அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு உட்பட மறுப்பது, இந்தியாவிலிருந்து ஓர் ஆணையத்தைக் கோருவது, முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வது என்ற மூன்று வழிமுறைகள் தற்போது உள்ளன. அவற்றுள் முதலாவது ஆபத்தானது, இரண்டாவது பாதகமானது. நடைமுறையில் சாத்தியமான ஒரே வழி இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வது” எனக் கூறியதைச் சுட்டிக்காட்டி, இலங்கை அரசாங்கத்தாரின் பதற்றத்தை அது வெளிப்படுத்தி நிற்குமாற்றை எடுத்துக்காட்டியுள்ளார். 

அறிக்கையானது தரப்படுத்தப்பட்ட ஊதியத்தைச் சட்டத்தினால் அல்லாமல் நிர்வாக உத்தரவு மூலம் நிர்ணயிப்பதை முன்மொழிந்துள்ளதுடன் அதற்கு மலேசியாவில் பின்பற்றப்படும் மாதிரியைப் பரிந்துரைத்துள்ளது. அதன் பொருத்தமின்மையை எடுத்துக்காட்டியுள்ள நடேசய்யர், மலேசியாவில் அந்நடைமுறை எளிதில் மீறப்படுவதையும் இலங்கையின் சூழலுக்கு ஏற்றதான நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளதுடன் கடந்தகால அனுபவங்கள் நிர்வாக ஆணைமீது தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்க முடியாதவையாக உள்ளமையையும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். அதற்கு இந்த அறிக்கையின் பக்கச்சார்பே சிறந்த சான்றெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்கூலி, துண்டு வேலை (பகுதி) ஆகியவற்றின் ஊதிய விகிதங்கள், ஆண் – பெண் ஊதிய அளவுகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளின் பலவீனமும் துண்டுப்பிரசுரத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் முகவரான திரு. ரங்கநாதன், “தொழிலாளர்களுள் 60 சதவீதமானவர்கள் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவைவிட அதிக ஊதியம் பெறுகிறார்கள். ஏனையவர்களும் தொடர்ந்தும் பணிக்கு வருவார்களாக இருந்தால் அவர்களும் அத்தகைய உயர்ந்த வருவாயைப் பெறுவார்கள்” எனக்கூறிய கருத்து, உண்மைநிலையின் பிரதிபலிப்பல்ல என்பதை, 

“திரு. ரங்கநாதன் கூறுவதுபோல வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவைவிட அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அவர் குறிப்பிடும் 60 சதவீதமானவர்கள் அத்தகைய வருவாயைப் பெறுவதில்லை. தொழிலாளர் படையில், தலைமைக் கங்காணிகள் மற்றும் சில்லறைக் கங்காணிகள் சேர்த்து சுமார் 11 சதவீதம் உள்ளனர். தொழிற்சாலைத் தொழிலாளர்கள் சுமார் 6 சதவீதம். முழுநேரப் பங்களா வேலை அல்லது அரைநேரப் பங்களா வேலை செய்து மேலதிக வருமானம் பெறும் தொழிலாளர்கள் 01 முதல் 02 சதவீதம் வரை உள்ளனர். கவ்வாத்து வெட்டுதல் போன்ற பணிகளைச் செய்வதன் மூலம் ‘சராசரி’யை விட அதிகமாகப் பெறக்கூடியவர்கள் சுமார் 5 சதவீதம் இருக்கலாம். கொழுந்தெடுப்பவர்கள், இறப்பர் பால் சேகரிப்பவர்கள் ஆகியோரில் சுமார் 15 சதவீதத்தினர் மட்டுமே வரவுசெலவுத் திட்டத்தை மீறிச் சம்பாதிக்க முடியும். பெரும்பான்மையினர் வறுமையிலேயே உள்ளனர். இந்தியத் தொழிலாளர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனேயே இலங்கைக்கு வருகிறார்கள். அதற்கான எந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிடப்போவதில்லை. வேலைக்கு வராமல் இருக்கிறார்கள் என்றால் வேலை செய்வதை விரும்பாததால் அல்ல. வேலை செய்ய இயலாத சூழ்நிலைதான் அதற்குக் காரணம்” என விரிவாக விளக்கிக் காட்டியுள்ளார், நடேசய்யர்.

அறிக்கையில் நாட்கூலி மட்டுமே தரப்படுத்தப்பட்டுள்ளது. துண்டு வேலைக்கான ஊதிய விகிதங்களில் எந்த மாற்றமும் தேவையில்லை என அறிக்கையிட்ட குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். துண்டு வேலைக்கான ஊதியம் நிர்ணயிக்கப்படாமல் விடுவதால் ஏற்படுகின்ற அபாயங்களை நடேசய்யர் எடுத்துக்காட்டியுள்ளார். ஒவ்வொரு தோட்டமும் தாம் நாட்கூலி முறையை விட்டுவிட்டு துண்டு வேலை முறையை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கக்கூடும் என்றும், தற்போது வழங்கப்படுகின்ற துண்டு வேலைக்கான ஊதிய விகிதங்கள் தொழிலாளரின் சராசரி வாழ்வாதாரத்துக்குப் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டு, துண்டு வேலைக்கான ஊதிய விகிதங்களை நிர்ணயிக்காமல் மேற்கொள்ளப்படும் எந்தச் சட்ட நடவடிக்கையும் பயனற்றதாகவே இருக்கும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

தொழிலாளருக்கான ஊதிய வழங்கல் நடைமுறையில் உள்ள சிக்கல்களையும் இத்துண்டுப்பிரசுரத்தில் நடேசய்யர் விவரித்துள்ளார். தொழிலாளர்கள் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதிய அளவைப் பெறமுடியாத வகையில் செக்ரோல் பதிவுகள் இடம்பெறுவதையும், ஊதியமானது அது கிடைக்க வேண்டிய நாளிலிருந்து 50 நாட்கள் கழித்து வழங்கப்படும் சூழல் நிலவுவதையும், அதனால் தொழிலாளர்கள் தமக்கு எந்த விகிதத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை அறியாது இருப்பதையும் குறிப்பிட்டு, வாரந்தோறும் ஊதியத்தை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். செக்ரோல் நடைமுறையில் பின்பற்றப்படும் அநீதிகளை அவதானித்த நடேசய்யர், பின்நாளில் தொழிலாளர்களுக்கான மாதிரி செக்ரோல்களை வழங்கி, அவர்களையும் பதிவுகளை மேற்கெள்ள வழிவகை செய்தார் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 

தொழிலாளருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவைக் கொண்டு அவர்களின் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படும் அபத்தத்தை எடுத்துக்காட்டியுள்ள நடேசய்யர், ஆண்களுக்கு அதிக பொறுப்பை வழங்கும் வகையில் ஊதிய மட்டம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு அதிக பொறுப்பைச் சுமத்துவதாக ஊதிய நிர்ணயம் அமையக்கூடாது, அது அவர்களின் கல்வி வாய்ப்பைக் குறைக்கிறது என்றும் குறிப்பிட்டு, ஊதிய நிர்ணயத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை தரப்படுத்தப்பட்ட ஊதியம் எனப் பொருள் கொண்டுள்ளமையே போதாமை நிறைந்தது என்பது நடேசய்யரின் வாதமாக அமைந்துள்ளது. “16 வயதுக்கு மேற்பட்ட ஓர் ஆண் தொழிலாளி அல்லது 15 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் தொழிலாளி தினந்தோறும் செய்யும் வேலைக்கு அல்லது சமமான பணிக்கு (Equivalent Task) உரிய விகிதத்தையும், ஒரு தொழிலாளி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் வேலை செய்தால், அத்தொழிலாளி ஒரு நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கைத் தரத்தில் தன்னைத் தானே பேணிக் கொள்ளத்தக்க அளவிலான ஊதியத்தைப் பெறுதலையும்” தரப்படுத்தப்பட்ட ஊதியம் என அறிக்கை பொருள் கொண்டுள்ளது. அந்தத் தரப்படுத்தப்பட்ட ஊதியத்தைப் பெறுவதற்கு ஆணும் பெண்ணும் 24 நாட்களும், குழந்தைகள் 20 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என அறிக்கை வரையறுத்துள்ளது. இந்நிர்ணயங்களின் பொருத்தமின்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ள நடேசய்யர், ஊதியமானது வாழ்க்கைச் செலவுகள், தொழிலாளர் சக்தி, உற்பத்திச் செலவுகள் போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், ஊதிய நிர்ணயத்தில் குறைந்தபட்ச வாழ்வை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், அறிக்கையிட்ட குழுவினர் வாழ்வாதாரத் தரம், திருமணம், குழந்தை பிறப்பு, பிற செலவுகள் முதலானவற்றைக் கவனத்தில் கொள்ளாது, தொழிலாளர்கள் தற்போது வாழும் நிலைமை ஒரு தரமானநிலை எனக்கொண்டு, அதில் வாழ வேண்டிய அளவு சம்பாதிக்கப் போதுமான ஊதியத்தை வழங்கவேண்டும் எனக் கொண்டுள்ளனர் என்று, தரப்படுத்தப்பட்ட ஊதிய நிர்ணயத்தின் அடித்தளமே குறைபாடுடையது என நிறுவியுள்ளார். அத்துடன் வேலைநாட்கள் வரையறையின் நடைமுறைச் சிக்கல்களை விளக்கியுரைத்துள்ள அவர், அவ்வேலை நாட்களின் விகிதம் ஆணுக்கு 23, பெண்ணுக்கு 21, குழந்தைகளுக்கு 20 என அமைவது பொருத்தம் என வரையறுத்துள்ளார்.

தரப்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குமிடத்து தற்போது வழங்கப்படும் மேலதிகக் கொடுப்பனவு போன்ற கூடுதல் சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமையைச் சாடியுள்ள நடேசய்யர், ஊதியத்துடன் மேலதிகக் கொடுப்பனவு, இலவசச் சலுகைகள் முதலானவை வழங்கப்பட்டு வரும் நிலையிலும் தொழிலாளர்கள் வெறும் உயிர்வாழ்வதற்கே கங்காணிகளிடமும் சிறுகடை உரிமையாளர்களிடமும் கடன் வாங்கவேண்டிய நிலையில் உள்ளமையையும், தரப்படுத்தப்பட்ட ஊதியமும் போதுமானதாக இல்லாமையையும் சுட்டிக்காட்டி, தொழிலாளரின் ஊதியத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.  

தரப்படுத்தப்பட்ட ஊதியம் குறித்த குழு அறிக்கையில் தோட்டங்கள் உயர்நிலத் தோட்டங்கள், இடைநிலத் தோட்டங்கள், தாழ்நிலத் தோட்டங்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு ஊதிய விகிதம் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடும் ஊதிய வேறுபாடுகளும் அவசியமில்லை என நிராகரித்துள்ள நடேசய்யர், “ஒரே ஒரு பொதுவான ஊதிய விகிதம் (Common Rate) முன்மொழியப்பட வேண்டும். இந்தியக்கரையை விட்டுப் புறப்படும் தொழிலாளர், தனக்கு ஒரு நிரந்தர ஊதிய விகிதம் உறுதி செய்யப்பட்டிருப்பதை நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். வாழ்க்கைச் செலவு அதிகமாகவோ வசதிகள் குறைவாகவோ உள்ள இடங்களில், முதலாளியிடமிருந்து அதிக ஊதியம் கோருவதற்கான உரிமையும் அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்” எனத் தொழிலாளரின் உரிமையையும் சுதந்திரத்தையும் பேணும் வகையில் ஊதிய நடைமுறை அமைய வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையானது தொழிலாளர்களின் வரவு செலவுத் திட்டத்தையும் மூன்று தோட்டப் பிரிவுகளுக்கும் தனித்தனியே தயாரித்துள்ளது. அவ்வரவு செலவுத் திட்ட வரைபு, குறைபாடுடையது என்பது நடேசய்யரின் கருத்தாகும். அத்திட்டத்தில் பொருட்களின் கொள்வனவு அளவுகள் குறைவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையையும் அடிப்படையாகத் தேவைப்படும் பொருட்கள் சில விடுபட்டுள்ளமையையும் எடுத்துக்காட்டி, அவ்வரவு செலவுத் திட்டங்கள் வெறுமனே உயிர்வாழ்வதை மட்டும் கருத்தில்கொண்டு மிகக் குறைந்த வாழ்க்கைத் தரத்தை அடிப்படைச் சட்டகமாக வரித்துள்ளமையைக் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ள நடேசய்யர், அத்தவறான அணுகல் தொழிலாளருக்குரிய நியாயமான தரப்படுத்தப்பட்ட ஊதிய நிர்ணயத்தில் எதிர்நிலையான தாக்கம் செலுத்தியுள்ளமையைத் தெளிவுபடுத்தியுள்ளார். 

“தொழிலாளர்கள் இலங்கைக்கு வருவது வறுமையில் காலம் கழிக்கவோ மிகக் குறைந்த தரத்தில் வாழ்க்கை மட்டும் நடத்தவோ அல்ல. அவர்களுக்குப் பின்னால் நம்பிக்கையுடன் சாய்ந்து நிற்க ஏதாவது இருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே சுமையாக மாறக்கூடாது. ஆரோக்கியமான நிலையில் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்தில் வேலை வாங்கப்பட்டு, உடல்நலம் குன்றியபின் தெருக்களில் பிச்சையெடுக்க வைக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பப்படுகிறார்கள்” என நடைமுறை யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ள நடேசய்யர், தொழிலாளர்கள் சேமிக்கக்கூடிய அளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். ஆண் ஒருவர் இரண்டு ரூபாயும் பெண் ஒருவர் இரண்டு ரூபாயும் குழந்தைத் தொழிலாளி ஒரு ரூபாயும் என ஒரு குடும்பம் மாதமொன்றுக்கு ஐந்து ரூபாய் சேமிக்கும் நிலையில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், “கணவன், மனைவி மற்றும் வேலைக்குச் செல்லும் குழந்தையைக் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதம் ஐந்து ரூபாய் சேமிப்பென்பது பேராசையான கணக்கல்ல” என உணர்ச்சிபூர்வமாகப் பதிவு செய்துள்ளார். 

இந்திய நிலைமையையும் இலங்கை நிலைமையையும் தொழிலாளருக்கு வழங்கப்படும் கூலி, உணவுப் பழக்கவழக்கம், ஆடை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிட்டுள்ள நடேசய்யர், இந்தியாவில் குறைந்த வருமானத்திலே சராசரியான நல்வாழ்வை வாழக்கூடியதாக இருப்பதையும் இலங்கையில் அவ்வாழ்வுக்கு அதிகமான ஊதியம் தேவையாக இருப்பதையும் சான்றுகளுடன் எடுத்துக்காட்டி, “ஒரு தொழிலாளரின் உடை மற்றும் பிற வசதிகளை, இந்தியாவில் என்ன இருந்தது என்பதைக் கருதி மதிப்பீடு செய்யவேண்டாம். உள்ளூர் சூழலுக்கு ஏற்ப, போதுமான தரத்துடன் வாழக்கூடிய நிலைமையை அவருக்கு வழங்க வேண்டும். இல்லையெனில், அது தேசிய அளவில் தீங்கு விளைவிக்கும்” என்ற ஆழமான மதிப்பீட்டை முன்வைத்துள்ளார். அத்துடன் தொழிலாளரின் கீழான வாழ்க்கைத் தரத்தினால், சிங்களவர்கள் அவர்களைப் ‘பற தெமலா’ என இழிவுபடுத்துகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்களவரின் தமிழர் மீதான வெறுப்பின் ஒரு குறியீடாக விளங்கும் அவ்வடையாளப்படுத்தல், மிக நீண்ட வரலாறு கொண்டது என்பதை அப்பதிவிலிருந்து கண்டுகொள்ள முடிகிறது.

அறிக்கையின் பலவீனங்களைத் தர்க்கபூர்வமாக விவரித்துள்ள நடேசய்யர், அவ்வறிக்கையால் விளைந்த இரு நன்மைகளையும் தனித்து விளக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் நன்மைகளைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்:

  1. இந்த அறிக்கைக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பேட்மென் அறிக்கை, மார்க்கஸ் பெர்ணான்டோ அறிக்கை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதன் மூலம், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தோட்டத் தொழிலாளர்கள் சேமிக்கும் அளவுக்கு ஊதியம் பெறுகிறார்கள் என்ற கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளமையும் தொழிலாளர்களின் ஊதிய அளவு போதுமானதல்ல என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளமையும். (பேட்மென் 10 – 12 ரூபாயும், மார்க்கஸ் பெர்ணான்டோ 24 ரூபாயும் தோட்டத்தொழிலாளி ஒருவர் வருடமொன்றுக்குச் சேமிக்கலாம் என அறிக்கையிட்டுள்ளனர்.)
  2. வழங்கல் – தேவை என்ற அடிப்படையில் தோட்ட முதலாளியால் ஊதியம் நிர்ணயிக்கப்பட அனுமதிக்க முடியாது. ஊதியம் சட்டப்படி தரப்படுத்தப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கமும் தோட்டத்துரைமார் சங்கமும் ஏற்றுக்கொண்டமை.

மேற்படி இரு நிகழ்வுகளும் தோட்டத் தொழிலாளரின் ஊதிய உயர்வில் சாதகமான அறிகுறிகளாக விளங்குவதை நடேசய்யர் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். தேசபக்தன் பத்திரிகையில் பேட்மென் அறிக்கையையும் மார்க்கஸ் பெர்ணான்டோ அறிக்கையையும் அவர் விரிவாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரப்படுத்தப்பட்ட ஊதிய நிர்ணய அறிக்கையை நடைமுறை யதார்த்த நிலைநின்று மதிப்பிட்டுள்ள நடேசய்யர், அது பயனற்றது, ஒருதலைப்பட்சமானது என வெளிப்படையாகச் சாடியுள்ளார். அறிக்கையானது தொழிலாளரின் உண்மையான நிலைமையைப் பிரதிபலிக்கவில்லை என்பதுடன் தொழிலாளரின் உண்மையான வாழ்க்கை நிலையில் எந்த முன்னேற்றத்தையும் அது ஏற்படுத்தாது என்பதையும் வலுவாக வெளிப்படுத்தியுள்ளதுடன், சட்டமும் இலங்கை அரசும் தோட்டத்துரைமாருக்குச் சாதகமானமுறையில் தொழிற்படுவதையும் அந்த அறிக்கை ஆதிக்கத்தின் கருவியாக விளங்குவதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

தோட்டத்துரைமார் சமூகம் மிகுந்த சக்திவாய்ந்ததாகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருப்பதை எடுத்துக்காட்டியுள்ள நடேசய்யர், தோட்டப்பகுதி நிலமும் அங்குள்ள கட்டடங்களும் தோட்ட உடைமையாளருக்கே சொந்தமானவையாகையால் அப்பகுதியில் வியாபாரம் செய்யும் இந்திய வணிகரும், உணவகம் நடத்துபவரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தோட்டத்துரைமாரின் தயவை நாட வேண்டியவர்களாக உள்ளமையையும், சில காலம் மட்டும் இலங்கையில் தங்கி இலாபம் ஈட்ட வரும் அந்த இந்திய வணிகர்கள், தொழிலாளர்களான தம் சகோதரர்களின் நலன்களில் பெரும்பாலும் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்துள்ளார். இந்திய வணிகர்கள் பிற்பட்ட காலத்திலும் இப்போக்கிலிருந்து பெரிதும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் தொழிலாளர்கள் ஒழுங்குபடுத்தப்படாதவர்களாகவும் உதவியற்றவர்களாகவும் இருப்பதைக் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ள நடேசய்யர், வெளிநபர்கள் அவர்களை அணுகுவதே கடினமாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இலங்கைக்குப் புதிதாக வந்த தொழிலாளி சில காலம் அமைதியின்றி இருப்பதையும், பின்னர் வேறு தோட்டங்களுக்கு மாற்றலாகிச் சென்று அங்கும் அதேநிலை இருப்பதைக் கண்டு, தன் வாழ்வு எங்கும் மேம்படாது எனவுணர்ந்து நடைமுறை யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதையும் வெளிப்படுத்தி, தொழிலாளரின் நெருக்கடிமிகு வாழ்வின் சாரத்தை எடுத்துரைத்துள்ளார்.

ஒருபக்கம் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட தோட்டத்துரைமார் சமூகமும், மறுபக்கம் அக்கறையற்ற இந்தியச் சமூகமும், மூன்றாம் பக்கம் தோட்ட உடமையாளரின் செல்வாக்குக்கு உட்பட்ட இலங்கை அரசாங்கமும் உள்ள சூழலில், தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தி அவர்களின் உரிமைக்காகப் போராடுவது இயலாத காரியமாக விளங்குவதையும் நடேசய்யர் எடுத்துக்காட்டியுள்ளார். இம்முத்தரப்பு ஆதிக்கச் சூழலிலேயே அவர் தொழிலாளர் விடுதலைக்கான அடிப்படைச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். அவர் இட்ட அடித்தளத்திலிருந்தே பிற்காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளருக்கான அமைப்புகள் இயங்கின என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. 

சட்டங்களாலும் அறிக்கைகளாலும் பெரும் பயன் கிடைக்கப்போவதில்லை என்பதைக் களத்திலிருந்து கண்டுகொண்ட நடேசய்யர், “இத்தீவில் வாழும் தொழிலாளர்களுக்கு, நூறாண்டு கால நீண்ட போராட்டங்களாலும் பேச்சுவார்த்தைகளாலும்கூட கிட்டாத நன்மைகளை, இலங்கைக்கான குடியேற்றத்தைத் தடை செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்” என அன்றைய யதார்த்தத்தில் தீர்வினை முன்வைத்து, “உதவியற்ற நிலையில், இத்தீவில் உள்ள ஆறரை இலட்ச இந்தியத் தொழிலாளர்களின் சார்பாக, இந்தியத் தலைவர்கள் ஆழமாக ஆராய்ந்து, ஞானம்மிக்க முடிவை எடுக்க வேண்டுமென நான் வேண்டுகிறேன்” என்ற கோரிக்கையுடன் துண்டுப்பிரசுரத்தை நிறைவு செய்துள்ளார். 

4

நடேசய்யரின் துண்டுப்பிரசுரம் வெளிவந்த உடனே அதற்கான எதிர்வினையைத் தோட்டத்துரைமார் சங்கத்தினர் நிகழ்த்தியுள்ளனர். 12.03.1926 அன்று கண்டியில் இடம்பெற்ற 72 ஆவது தோட்டத்துரைமார் சங்கக் கூட்டத்தில், அதன் தலைவர் ஓல்ட்பீல்ட் நடேசய்யரின் துண்டுப்பிரசுரத்தைக் கண்டித்து நீண்ட உரையாற்றியுள்ளார். தரப்படுத்தப்பட்ட ஊதிய நிர்ணய அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நால்வருள் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓல்ட்பீல்ட் தன் உரையில் துண்டுப்பிரசுரத்தில் விவரிக்கப்பட்டுள்ளவை, நடைமுறை நிலைமையைத் தவறாகப் பிரதிபலிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளதுடன், நடேசய்யர் அரசியல் இலாபத்துக்காக அதனை வெளியிட்டுள்ளார் எனக் குற்றம்சாட்டியுள்ளார். அத்துண்டுப்பிரசுரம் பிழைகள் நிறைந்தவை எனக்கூறி நிராகரிக்க முயன்றுள்ள அவர், அப்பிழைகளைப் புள்ளிவிவரப் பிழைகள், விட்டுவிட்ட தகவல்களும் தவறான வியாக்கியானங்களும், வெளிப்படையான பிழைகள் என மூவகைப்படுத்தி விளக்கியுரைத்துள்ளார். புள்ளிவிவரத் தவறுகளைப் பெருங் குற்றங்களாக விவரிப்பதற்கே முன்னுரிமை கொடுத்துள்ள ஓல்ட்பீல்ட், துண்டுப்பிரசுரம் விவாதிக்கும் முதன்மையான அம்சங்களையும் தரப்படுத்தப்பட்ட ஊதியம் தோட்டத் தொழிலாளரின் வாழ்வாதாரத்துக்குப் போதுமானது அல்ல என்ற வாதத்தையும் இரண்டாம் நிலைப்படுத்தி, நடேசய்யரையும் துண்டுப்பிரசுரத்தையும் நிராகரிக்க முயன்றுள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது.  

நடேசய்யர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுள், இலங்கை அரசும் தரப்படுத்தப்பட்ட ஊதியத்தை நிர்ணயிக்க நியமிக்கப்பட்ட குழுவும் தோட்டத்துரைமாருக்கு ஆதரவாகத் தொழிற்படுகின்றன, இந்திய அரசின் முகவரும் தொழிலாளரின் உண்மையான வாழ்க்கை நிலைமையை அறிக்கையில் வெளிப்படுத்தவில்லை முதலானவற்றை ஓல்ட்பீல்ட் தன் உரையில் மறுத்துரைத்துள்ளார். இலங்கை அரசாங்கம் தோட்டத்துரைமாரின் கட்டுப்பாட்டில் இல்லை, அறிக்கையை உருவாக்கிய குழுவினர் சுயாதீனமாகச் செயற்பட்டனர், இந்திய அரசின் முகவரான திரு. ரங்கநாதன் நேர்மையானவர், தோட்டத் தொழிலாளர் நலனில் அக்கறை மிகுந்தவர் முதலானவற்றை முன்வைத்துக் காலனித்துவ நிர்வாகம் தன்னாட்சியுடனும் நீதியுடனும் இயங்குவதாகக் கருத்துரைத்துள்ளார். ஆனால்,  நடேசய்யர் தரும் தகவல்களும் அக்காலத்து ஏனைய வரலாற்றுத் தகவல்களும் ஓல்ட்பீல்டின் வாதத்தின் தற்சார்பை, போலிமையை வெளிப்படுத்தி நிற்கின்றன. 

தொழிலாளர்களாக இலங்கைக்கு வருவதை நிறுத்த வேண்டும் என்ற நடேசய்யரின் கோரிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ள ஓல்ட்பீல்ட், அது தமிழரின் சுதந்திரத்தைப் பறிக்கும், தமிழர்களை வறுமையில் வைத்திருக்கும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாதம் தோட்ட உடைமையாளர் நலன் என்ற மையத்திலிருந்து முகிழ்த்ததாகும். ‘அருவருப்புத்தரும் அநீதி, கொடுமை, நீக்ரோ அடிமைகளைவிடக் கேவலம்’ எனக் குறிப்பிடப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொடக்ககால வாழ்க்கை நிலைமை, ஓல்ட்பீல்டுக்குச் சுதந்திரமானதும் வளமானதுமான வாழ்வாகத் தெரிகின்றமையானது அவரின் நோக்குநிலையையும் அவருடைய பங்குபற்றலுடன் இறுதி செய்யப்பட்டுள்ள அறிக்கையின் தன்மையையும் புரிந்துகொள்ளத் துணை செய்கின்றன.

தோட்டத்துரைமார் சங்கத்தின் ரகசிய மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை நடேசய்யர் பயன்படுத்தியுள்ளார், அவற்றைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் முதலான குற்றச்சாட்டுகளையும் ஓல்ட்பீல்ட் முன்வைத்துள்ளார். இதனை ஓல்ட்பீல்ட் உள்ளடங்கலான தோட்டத்துரைமாரின் நிலைப்பாட்டுக்கும் அவர்களின் மக்கள்விரோத ஆதிக்கப் போக்கிற்கும் சான்றாகக் கொள்ளலாம். 

தோட்டத்துரைமார் சங்கம், தமது பொருளாதார நலனைத் தொழிலாளர் நலன் என மறைமுகமாகக் காக்க முயல்வதையும், தரவுப் பிழைகளை முன்நிலைப்படுத்தி, தரப்படுத்தப்பட்ட ஊதியம் தொழிலாளரின் நல்வாழ்வுக்குப் போதுமானதா? இல்லையா? என்ற விவாதத்தைப் பொருளற்றதாக்குவதையும், காலனிய இலங்கை அரசு சுயாதீனமாகவும் நீதியாகவும் இயங்குகிறது என்பதை வலியுறுத்துவதையும் ஓல்ட்பீல்டின் உரை மையமாகக் கொண்டுள்ளது. தோட்டத்துரைமார் சங்கம் தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட அமைப்பு என்பதை வலிந்து வெளிப்படுத்த முனைந்துள்ள அவர், தொழிலாளர் நலன்சார்ந்து ஒலித்த குரலைப் பிழையானது, தகுதியற்றது, அபத்தமானது என நிராகரித்துள்ளார். அவ்வுரை காலனித்துவ அதிகாரத்தின் மொழியாகவும் நோக்காகவும் அமைந்துள்ளதுடன் உரையின் நடுவே இடம்பெற்றுள்ள கைத்தட்டல்களும் சிரிப்புகளும் அந்த அதிகாரத்தின் ஆணவத்தைப் பிரதிபலித்துள்ளன. 

5

தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை நிலைமையைக் ‘குறைந்தபட்ச உயிர்வாழ்வு’ என்ற தளத்தில் அணுகி, அதனையே தரப்படுத்தப்பட்ட ஊதியமாக நிலைநிறுத்த முன்னெடுக்கப்பட்ட செயன்முறையை இத்துண்டுப்பிரசுரம் தீவிரமாக விமர்சித்துள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது. அறிக்கையின் உருவாக்க முறைமையில் தொழிற்பட்டுள்ள ஒருதலைப்பட்ச அதிகாரப் போக்கையும் தொழிலாளரின் வாழ்க்கைச் செலவுகள், சமூக முன்னேற்றம், சேமிப்பு, கௌரவமான வாழ்க்கை முதலானவற்றைப் புறக்கணித்துவிட்டு வரையறுக்கப்பட்டுள்ள வரவு செலவுகளையும், அதையொட்டித் தரப்படுத்தப்பட்ட நியாயமற்ற ஊதிய விகிதத்தையும் ஆதாரபூர்வமாக இப்பிரசுரத்தில் விவரித்துள்ள நடேசய்யர், வறுமையையும் மனித இழிவையும் தரப்படுத்தப்பட்ட ஊதிய நிர்ணய அறிக்கை இயல்பாக்கம் செய்ய எத்தனித்துள்ளமையை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.

ஊதியமானது உற்பத்தித் திறனை மட்டுமல்லாது, வாழ்வாதாரத்தையும் சமூக மறுஉற்பத்தியையும் உறுதி செய்யவதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், தரப்படுத்தப்பட்ட ஊதியமானது நடுநிலையான பொருளாதார அளவுகோலாக அமையாது, தோட்டத்துரைகளின் அதிகாரக் கருவியாகத் தொழிற்பட்டுள்ளமையை அம்பலப்படுத்தியுள்ளதுடன் காலனித்துவ ஆட்சியில் உற்பத்தி உறவுகள், அதிகார அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்ற முறைமையையும் தோட்ட உரிமையாளர்களும் அரச நிர்வாகமும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இயக்கம் கொள்வதையும் விமர்சித்துள்ளார். அவர் கையாண்டுள்ள தோட்டத்துரைமார் ராஜ்ஜியம் (Planter Raj) என்ற சொல்லாடல், காலனித்துவ முதலாளித்துவத்தின் அதிகார இயங்கியலை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கிறது.

நடேசய்யரின் விமர்சனம் தோட்டத்துரைமார் சங்கத்தை எவ்வளவு அச்சுறுத்தியுள்ளது என்பதற்கு அத்துண்டுப்பிரசுரம் மீதான ஓல்ட்பீல்டின் எதிர்வினை சான்றாக அமைந்துள்ளது. புள்ளிவிவரப் பிழைகளை முன்வைத்து மையக் கேள்வியைத் தவிர்க்கும் ஓல்ட்பீல்டின் கருத்துகள், காலனித்துவ அதிகார முகத்தின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன.

புள்ளிவிவரங்கள், வரவு செலவுக் கணக்குகள், அறிக்கையில் இடம்பெறும் தகவல்களுக்கும் நடைமுறை யதார்த்த நிலைமைக்கும் இடையிலான ஒப்பீடு, இந்திய வாழ்க்கை நிலைமையுடன் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமை ஒப்பீடு என அமைந்துள்ள இத்துண்டுப்பிரசுரம், தர்க்கபூர்வமான பகுப்பாய்வாக விரிந்துள்ளது. நடேசய்யர் வலியுறுத்தியுள்ள பொதுவான ஊதிய விகிதம், சேமிப்பு வாய்ப்பு, வாராந்த ஊதிய வழங்கல், பகுதி வேலைக்கான ஊதிய நிர்ணயம் முதலானவை இலங்கையில் தொழிலாளர் விடுதலை அரசியலின் முன்னோடி கருத்தாக்கங்களாக விளங்குகின்றன. அவ்வகையில், இத்துண்டுப்பிரசுரத்தைத் தோட்டத் தொழிலாளர் ஊதியம், உழைப்பு – ஊதியச் சிந்தனை, ஊதியத் தரப்படுத்தல் முதலானவை தொடர்பிலான இலங்கையின் முன்னோடி அறிவுசார் தலையீடுகளுள் முதன்மையான ஒன்றாக அடையாளப்படுத்தலாம்.  



About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்