‘மலையகம்’ என்ற எண்ணக்கரு உருவாக்கத்திற்கு வலிமை சேர்ப்பதாக வீதிப்பாடல்களின் வகிபங்கு முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்துப்பதிவை பெறாத நிலையில், வாய்மொழிப் பாடல்களும் ‘மலையகம்’ எனும் சமூக உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டவைகளாகத் திகழ்கின்றன. ஏனைய சமூகத்தினரின் நாட்டார் பாடல்களில் இருந்து மலையக நாட்டார் பாடல்கள் உணர்ச்சியிலும் கருத்து நிலையிலும் வேறுபட்டு நிற்கின்றமை கவனத்திற்குரியதாகும். அதன் தொடர்ச்சி நிலையிலேயே அவலங்களையும் பாதிப்பு நிலைகளையும் விடுதலை வேட்கையையும் உட்சுமந்ததாக மலையக வீதிப்பாடல்கள் அமையப்பெற்றுள்ளன. ஆரம்பக் காலத்தில், பாரதியின் பாடல்கள் சமூக உணர்வுக்கும் உந்துதலுக்கும் அடித்தளமிட்டுள்ளதை அறிவோம். அதன் தொடர்ச்சி நிலையிலேயே எழுச்சிப் பாடல்களுக்கான உத்வேகம் அமையப்பெற்றுள்ளது. பாரதியின் தாக்கம் மீனாட்சி அம்மையாருக்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அதனாலேயே பாரதியின் வீச்சுகளைத் தழுவிய நிலையில் மீனாட்சி அம்மையாரினாலும் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இலங்கையின் பெண் கவிஞர்கள் எனும் வகுதிக்குள் பத்மாசினி அம்மையாரும், மீனாட்சி அம்மையாரும் முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள். மீனாட்சி அம்மையாரைப் போலவே பத்மாசினி அம்மையாரின் கவிதைகளிலும் பாரதியின் தாக்கத்தை அறியலாம். மீனாட்சியம்மாள் தனது கணவரான கோ. நடேசய்யர் முன்னெடுத்த மலையகம்சார் சமூக, அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டார். அதன் மூலம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு மலையகம்சார் கவிதைகளையும் பாடல்களையும் புனைவதிலும், கட்டுரை எழுதுவதிலும் ஆர்வம் செலுத்தியுள்ளார்.

சுதந்திரத்திற்கு பின்னரே இந்தியா பாரதியைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கியது. பாரதியியலை நிலைநிறுத்துவதில் காலத்தால் முன்னோடியான செயற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளது. அம்முன்னோடிச் செயற்பாடுகளினை மேற்கொண்ட ஆளுமைகளில் மீனாட்சியம்மாளுக்கு முக்கிய இடமுள்ளது. பத்மாசினி அம்மையாரும் இவ்விடயம் குறித்த அவதானிப்பில் கவனத்தைப் பெறுகிறார். பாரதியின் கவிதைகள் கவிதைகளே இல்லை என்ற கோசம் நிலவிய காலத்தில், பாரதியின் பாடல்கள் இவர்களுக்கு ஆதர்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமகாலத்திலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்தர் கடமையாற்றிய போது “பாரதி தமிழ் மொழியைக் காக்க வந்த சாரதி” என்ற கோசத்தோடு பாரதி கழகத்தை அமைத்தார். அவ்வகையில் சுவாமி விபுலானந்தர் வரிசையில் பாரதியியலுக்கு வலிமை சேர்த்தவர்களுள் மீனாட்சியம்மாளும் இணைகிறார்.
மலையகத்தின் முதல் நூலாக அறியப்படும் ‘கோப்பி சிருஸ்டிக் கும்மி’ கவிதை நூலின் ஆசிரியராக ஆப்ரஹாம் ஜோசப் விளங்குகிறார். பிரித்தானியர்களது நலன் சார்ந்த நோக்கம் கருதியே இந்நூலில் கவிதைகள் உள்வாங்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. தொழிலாளர்களிடத்தே உழைப்பை உறிஞ்சும் கைங்கரியத்துடனேயே இதன் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளன. துரைமார்களைத் திருப்திப்படுத்தும் நோக்கம் கருதியதாகவே இந்நூலின் வரவு அமைகிறது. இந்நூலிலுள்ள கவிதைகளில் எடுத்துக்காட்டாக ‘கண் நடும் மாதிரி’ குறித்த வழிப்படுத்தல் பின்வருமாறு எடுத்துரைக்கப்படுகிறது.
“நட்டிடு கண்கள் சாயாமல் வை
நசுங்கிக்கோணி முறியாம ற்
திட்டமாய் வெகு பத்திரமாக வே
சிந்தையாய்க் கண்கள் நட்டிடுவீ ர்”
வீதிகளை அமைக்கும் பணி தொடர்பான வலியுறுத்தலை வெளிப்படுத்தும் வரிகளும் பின்வருமாறு அமைந்துள்ளன.
“ஓடியுமாடியும் வேலைசெய்யப்பல
ஒய்யார ரோட்டுகள் வெட்டி வைப்பீர்
நீடிய கட்டைக கோணபலகோண
நிண்ணய ரோட்டுகள் செய்துவைப்பீர்”
தொழிலாளர்களுக்கும் துரைமார்களுக்கும் இடைநடுவே உழைப்பைப் பரிமாற்றும் வகுதியினர்களாக கணக்கப்பிள்ளைமார்களுக்கு முக்கிய இடமுண்டு. உழைப்பை உறிஞ்சும் கைங்கரியத்தில் கங்காணிமார்களின் வகிபங்கும் குறிப்பிடத்தக்கது. மேற்படி வரிகளுக்குச் சொந்தக்காரரான ‘ஆப்ரஹாம் ஜோசப்’ கணக்கப்பிள்ளையாகவே தொழில் பார்த்தார். துரைத்தன நோக்கங்களுக்குத் துணைபோகும் அவரது முனைப்பும் கவனிக்கத்தக்கதாகும்.

மலையக சமூக உருவாக்கம் குறித்த அவதானிப்பில் இந்நூலாக்க முயற்சியும் முக்கிய மைல்கல்லாகவே அவதானிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சி நிலையில் துறைசார் நூல்களின் வரிசையில் மலையகத்தின் முதல் நாவல் குறித்த அவதானம் முனைப்புப் பெறுகிறது. ஆ. போல் எழுதிய ‘சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி’ எனும் நாவலே முதல் நாவலாக அடையாளப்படுத்தப்படுகிறது. அவ்வாறே மலையகத்தின் முதல் நாடகப் பிரதியாக்க நூலாக கோ. நடேசய்யரின் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்திரப் பிழைப்பு’ நாடக நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நாடக நூல் இரண்டு வகையில் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. ஒன்று நாடக நகர்வு தொடர்பில் கவனத்தை ஏற்படுத்துகிறது. மற்றொன்று இந்நாடகத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பாடல்கள் தனித்துவ அவதானத்தைப் பெறுகிறது எனலாம். இப்பாடல்கள் மலையக வீதிப்பாடல்களுக்கான தன்மையை வலியுறுத்துவதோடு பிற்காலத்தில் எழுந்த வீதிப்பாடல்களுக்கான முன்னோடி முயற்சியாகவும் அமைந்துள்ளமை கவனத்திற்குரியதாகும். இந்நூல் கோ. நடேசய்யரால் இயற்றப்பட்டது என்ற குறிப்பைத் தொடர்ந்து “இந் நாடகத்திலுள்ள பாடல்கள் சந்தச்சரபம் உடுமலை, முத்துச்சாமி கவிராயர் அவர்களின் மாணவியும், ஆசிரியரின் பெண்சாதியுமான ஸ்ரீமதி.கோ.ந. மீனாட்சியம்மாளால் இயற்றப்பட்டவை” என்ற பதிவும் இடம்பெறுகின்றது. 1937 இல் கொழும்பு கமலா பிரஸ்சில் அச்சிடப்பட்ட இந்நூல் அந்தனி ஜீவாவினால் 2017 இல் மீள்பிரசுரம் பெற்றுள்ளது.
‘தொழிலாளர்களின் அந்திரப் பிழைப்பு’ நாடக நூலில் உள்வாங்கப்பட்டுள்ள பாடல்கள் இந்நூல் வெளிவருவதற்கு ஆறு வருடங்களுக்கு முன்னரே இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளமை அவதானத்திற்குரியதாகும். 1937 ஆம் வருடமே இந்நாடக நூல் வெளிவந்துள்ள நிலையில், 1931 ஆம் வருடமே பாடல்களின் முதல் இரண்டு பாகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடல்களின் மூன்றாவது தொகுப்பு நாடகத் தொகுப்புடன் இணைந்த நிலையிலேயே வெளிவந்துள்ளது. நாடகமும் மூன்று அங்கங்களைக் கொண்டுள்ள நிலையில் அவ்வவ் அங்கங்களுக்கு ஏற்ற வகையிலேயே பாடல்களின் தொகுப்புகளும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். முதல் இரண்டு பாகங்களும் 06.12.1931 திகதியிடப்பட்டே வெளியிடப்பட்டுள்ளன. முதலாம் பாகத்திற்கான ஆசிரியரின் முன்னுரை வரிகள் பின்வருமாறு அமைகின்றது. “இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்யும் 8 லட்சம் இந்தியத் தொழிலாளர் நிலைமைப் பற்றி சாதாரண சனங்கள் அறிய வேண்டியது மிக்க அவசியமாகி விட்டது. இத்தகைய பிரசாரத்திற்கு நாடகங்களே தக்க சாதனங்களாகும். அந்நோக்கம் பற்றியே தோட்டத் தொழிலாளர் நாடகம் ஒன்று எழுதப்பெற்று வருகிறது. அந்நாடகத்தில் சேர்க்கப்பெற்றுள்ள சில பாடல்களைச் சேர்த்து, ஓர் சிறு புஸ்தகமாய் இப்புஸ்தகம் பிரசுரிக்கப் பெற்றிருக்கிறது.” இவ்வரிகள் ஊடாக, நாடகத்திற்கு முன்னரே இயற்றப்பட்ட பாடல்களுக்கு அமையவே நாடகம் உருப்பெற்றிருப்பதற்கான வாய்ப்பு நிலவுவதை அவதானிக்க முடிகிறது.

‘தொழிலாளர்களின் அந்தரப் பிழைப்பு’ நாடக நூல் மூன்று பாகங்களையும் இணைத்துள்ள வகையில், முழுமையாக அனைத்துப் பாடல்களையும் கொண்டிருக்கின்றது. பாடல் தொகுப்புகளாக வெளிவந்துள்ள பிரசுரங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். முதலாவதாக பாடல் தொகுப்புகளாக வெளிவந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டு, அத்தொகுப்புகளை மீள்பிரசுரம் செய்யும் அண்மைய முயற்சிகள் கவனத்தில் கொள்ளப்பட வேணடியதாகும். எம்.எம். ஜெயசீலன், ஜெ. ஹறோசனா ஆகியோரின் ஒன்றிணைந்த முயற்சியில் ‘கோ.ந. மீனாட்சியம்மாள் படைப்புகள்’ எனும் தலைப்பில் அவரது பாடல்களும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தொகுப்பு மீனாட்சியம்மாளின் பாடலாக்க முயற்சிகளை ஆவணப்படுத்துவதாக அமையப்பெறுகிறது. “நடேசய்யருக்கு இணையான வகையில் அவருடன் களச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, பெருந்தோட்டத் தொழிலாளர்களைச் சமூக அரசியல் சக்தியாகக் கட்டியெழுப்பி, அமைப்பாக்கம் செய்ய முயன்ற மீனாட்சியம்மாள், பெண் தொழிலாளர்களின் விடுதலையிலும் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார். இந்த அக்கறை, தொழிற்சங்க அரசியல் தளத்தில் இயங்கிய நடேசய்யருக்கு இல்லாத ஓர் அடையாளத்தை மீனாட்சியம்மாளுக்கு ஏற்படுத்தியுள்ளது.” என்ற பதிப்புரை வரிகள் கவனத்திற்குரியனவாகும்.
சமூக அணிதிரட்டலுக்கான உத்திகளை சிறந்த வகையில் கையாண்டுள்ள முற்போக்குப் பெண் ஆளுமையாக மீனாட்சியம்மாள் விளங்குகிறார். அம்மையார் தொடக்க காலங்களில் பாரதியாரின் பாடல் மெட்டுகளைப் பிரயோகித்து சுந்தர வாத்தியாரின் பாடல்களை தொழிலாளர்களிடத்தே சென்று பாடியுள்ளார். அவற்றுள் பாரதியாரின் ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற மெட்டிலமைந்த பின்வரும் பாடல் வரிகள் எடுத்துக்காட்டாக அமைகிறது.
“தேயிலை தோட்டத்திலே – பாரத
சேய்கள் சென்று மாய்கின்றார் ஐயோ (தேயிலை…)
ஓயாது நாள் முழுதும் – சதா
ஊழியம் செய்து உடம்பழுத்தே – கெட்ட
நோயால் வருந்தும் மக்கள்
நொந்து நொந்து தினம் நைந்து மாயிகிறார். (தேயிலை…)
கட்டத் துணியுமின்றி – கொடுங்
கானலிலே புள்ளிமானைப் போல் அலைந்து
நட்டுவாக்காலி, பூரான், பாம்பு
அட்டை கடித்து அலறி புலம்புகிறார். (தேயிலை…)”
நாளடைவில் ஏற்பட்ட சமூகப் பரிச்சயத்தின் பின்னர் களச் சூழலுக்கு ஏற்றவாறு மீனாட்சியம்மையாரால் பாடல் புனையும் செயற்பாடுகள் முன்நகர்த்தப்பட்டுள்ளன.
மீனாட்சியம்மாள் இருபதுகளின் இறுதியில் கள அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளத் தொடங்குகிறார். இலங்கைக்குப் புலம்பெயர்வதற்கு முன்னரே இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்குகிறார். தனது பாடல் தொகுப்புகளில் உடுமலை முத்துசாமிக் கவிராயரது மாணவி என்ற அடையாளத்தைக் குறிக்கத் தவறுவதில்லை. அவ்வாறே ‘தொழிலாளர் அந்திரப் பிழைப்பு’ முதலாம், இரண்டாம் தொகுப்பு நூல்களில் ‘இந்திய சாம்ராஜ்ய போரில் சிறை சென்றவரும், இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் கோ. நடேசய்யரின் பெண்சாதியுமான ஸ்ரீமதி.கோ.ந. மீனாட்சியம்மாள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளித் தமிழர்களிடத்தேயும் ‘கும்மி’ தொடர்பான அவதானம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இது வட்டமாக அல்லது இருபுறமாக நின்று இசைக்கு ஏற்றவாறு கைகளைத் தட்டி, கால்கள், இடுப்பு, தலை ஆகிய அங்கங்களை அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் ஆடும் ஒரு வகை ஆட்டமாகும். பாரதியார் பாடல்களில் கும்மிப் பாடல்களும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. எடுத்துக்காட்டாக,
“கும்மியடி! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைக்கொட்டிக் கும்மியடி!
நம்மை பிடித்த பிசாசுக்கள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)”
என்ற பாடல் வரிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறே பாரதியின் தாக்கத்தால் உந்தப்பட்ட மீனாட்சியம்மாளும் ‘தொழிலாளர் சட்டக் கும்மி’ எனும் தலைப்பில் பாடல்களைத் தொகுத்து வெளியிடுகிறார். தொழிற் சட்டங்கள் தொடர்பான அறிதல் மீதான கவனத்தில் அதனைப் போதிக்கும், தெளிவுறுத்தும் நோக்கில் அம்மையாரின் முன்னெடுப்புகள் அமைகின்றன. தமிழர்களிடையே அழகியல் உணர்வுகளையும், மகிழ்ச்சியின் வெளிப்பாட்டையும் வெளிப்படுத்தி நிற்கும் கும்மி பாடல் வடிவில், சட்டங்கள் தொடர்பிலான அறிவை வளர்த்தெடுக்கும் நோக்கில் அம்மையாரால் புனையப்பட்ட பாடல்களின் தொகுப்பாக ‘தொழிலாளர் சட்டக் கும்மி’ திகழ்கிறது.
“சட்டமிருக்குது ஏட்டிலே
நம்முன் சக்தியிருக்குது கூட்டிலே
பட்டமிருக்குது வஞ்சத்திலே
வெள்ளைப்பவர் உருகுது நெஞ்சத்திலே
வேலையிருக்குது நாட்டிலே
உங்கள் வினையிருக்குது வீடடிலே”
என்றவாறு பாடலின் உள்ளடக்கம் விரிகிறது.
‘தொழிலாளர் அந்திரப் பிழைப்பு’ நாடகப் பிரதியில் முதலாம் அங்கத்தில் தொழிற்களத்தில் துரை, கங்காணிமார்கள், தொழிலாளர்களுடன் கூடிய உரையாடல்கள் பாடல்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை ஒன்று திரட்டும் முயற்சி பற்றியும், சங்கச் செயற்பாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது. துரைத்தனங்களுக்கு துணைபோகும் கங்காணிகளின் தன்மைகளை பாடல்களும், உரையாடல்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன. உரையாடல்கள், சம்பவம் தொடர்பிலான விளக்கத்தை விபரிப்பதற்கு நீண்ட சொற்கள் தேவைப்படுகின்ற நிலையில், பாடல் வரிகள் குறைந்த சொற்களில் விடயத்தைப் பதிவு செய்கின்றமையை உணர முடிகிறது. எடுத்துக்காட்டாக, பின்வரும் பாடல் அடிகள் அவதானத்திற்குரியதாகும். துரையின் வெளிப்படுத்தல் நொண்டிச் சிந்தாகக் குறிப்பிடப்படுகிறது.
“சட்டப்படி நடக்கணும்நான் – இல்லையேல்
சங்கடங்கள் வந்துசேரும் பங்கப்படணும்
தொழிலாளர் சங்க மொன்றுண்டு – அதனால்
தொந்தரைகள் வந்துவிடும் சிந்தைகலங்கும்
இந்தியா ஏஜண்டு துரையும் – இதற்கிடையே
ஏந்துகொண்டு வந்து கேட்பார் பாரந்தமாக
சொல்லுவது சரியல்லவே – நீதான்
சொல்லுவது சரியல்லவே.”
நாடகத்தின் முதற் பாகம் தோட்டத்திற்கு ஆள் தேவை, தொழிலாளர்களை பெற்றுக்கொள்வதிலுள்ள சிரம நிலைகள் தொடர்பிலான கவனத்தை வலியுறுத்துவதாக அமையப்பெறுகிறது. தொழிற்சங்கத்தின் அவசியங்களும் எடுத்துரைக்கப்படுகின்றன. அவ்வாறே இந்தியாவில் ஆள் சேர்க்கும் போது அவர்களுக்கு எடுத்துக்கூறும் ஆசை வார்த்தைகள் குறித்தும் பேசப்படுகின்றது. இவ்விடயம் மீனாட்சியம்மாளின் கவனத்தைப் பெற்ற நிலையில் அவரது சித்தரிப்பில் வர்ணமெட்டில் தெம்மாங்குப் பாடலாக இயற்றப்பட்டுள்ளது.
“இலங்கை நகர் வாழ்க்கைமிகு சோக்குத்தான் – அங்கே
இருந்திடிலோ பெட்டியில் ரொக்கம் ஸ்டாக்குத்தான்
கலங்காமல் கப்பலேற வாக்குத்தான் – கொடுத்தால்
காட்டிடுவேன் கண்டிநகர் பார்க்கத்தான்
கணக்கில்லாமல் காசுபணந் தேடலாம் – பெண்டாட்டிக்கே
கண்டசரம் காசு மாலை போடலாம்
பிணக்கு வந்தால் பெட்டியெடுத் தேடலாம்
பேதமில்லை கேளு லங்கை நாடலாம்”
என்ற பாடல் இலங்கையைச் சொர்க்கபுரியாகக் காட்டும் முனைப்புடன் பிரயோகிக்கப்பட்ட பிரசாரங்களை அடையாளப்படுத்துவதாக அமையப்பெறுகிறது. தென்னிந்தியாவில் இருந்து ஆள் கட்டும் செயற்பாடு பல்வேறு கட்டமைப்புகளோடு கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆள்கட்டி, கங்காணிகள் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதன் பின்னணியில் வலையமைப்புத் தொழிற்பாடுகள் இருந்துள்ளன. ஆசை வார்த்தைகளை நம்பிய நிலையில் இலங்கை வந்து அவதியுற்ற நிலையில் பல்வேறு துன்பங்களை தொழிலாளர்கள் அனுபவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கெதிரான செயற்பாடுகளை, எதிர்ப்புகளை மேற்கொண்ட போதும் அவ்வவ் சந்தர்ப்பங்களில், அடக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறான எதிர்ப்புவாதச் சிந்தனையின் வெளிப்பாடாய் “ஏனிந்த மோச வார்த்தை இயம்பி, இலங்கைத் தீவுக் கிழுத்து வந்தாய் கங்காணி – தேனிலங்கு இந்திய தேசம் எமது – காணி, மானிலந் தனைவிட்டு மயங்கி மனது நாணி” என்ற கோசம் மக்களிடத்தே பெரிதும் அவதானத்தை ஏற்படுத்துகிறது.
“சொந்தவூர் விட்டு வந்து தொல்லை மிகவுண்டாச்சி
சொன்னதெல்லாம் மறந்து இன்ன லுண்டாக்கப் போச்சு
மந்தை மாடுபோல் கங்காணி மனிதரை மேய்க்கலாச்சு
மதிகெட்டு வந்தோமிங்கே சதிகள் மிகவுண்டாச்சு”
என்ற வரிகள், அச்செயற்பாடுகளுக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தி, சமூக அணித்திரட்டலுக்காக அறைகூவல் விடுக்கின்றது.
“இந்திய கூலிகள் இலங்கையில் படுகிற
இன்னல்கள் தனையெடுத் துரைத்திடுவோம்
தந்திர முதலாளி தரகர் கங்காணிகள்
தன்னலம் கருதுதல் குறைத்திடுவோம்.
சொந்தவூரை விட்டுவந்து துன்பப் பட்டோமே
சிந்தை நொந்து நொந்துமிகு சீருங் கெட்டோமே”
தொழிலாளர்கள் அனுபவிக்கும் பாதிப்பு நிலைகளை எடுத்துக்கூறும் அம்மையார், அதற்கான பிராயச்சித்தத்தை சட்டரீதியாக மாத்திரமே நிலைநிறுத்த முடியும் என்கிறார்.
“எட்டுமணி நேரம் வேலை செய்யச் சொல்லி
ஏற்பட்டிருக்குது சட்டம்
திட்டமில்லாத திருட்டு வேலைசெய்து
தேடுகிறார் பெரும் பட்டம்
பன்னிரெண்டு மணிநேரம் பறந்து வேலைசெய்து
பாதிப்பேர் இல்லையே கட்டம்
இனி எப்படி நாங்கள் இலங்கையில் வாழ்வது
இந்தியா போவது திட்டம்”
என்ற வரிகள் உறுதியான தீர்மானத்திற்கு அடித்தளமிடும் கோசமாக அமையப்பெறுகிறது.
‘தொழிலாளர் அந்திரப் பிழைப்பு’ பாடல் தொகுப்பு நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடல்களில் இருந்து நாடக நூலில் காணப்படும் பாடல்கள் வித்தியாசப்படுவதாக அமைகிறது. நாடகத்திற்கு ஏற்றவாறு பாடல் முறைமை வேறுபடுவதை அவதானிக்க முடிகிறது.
“நடந்ததைத் தானிங்கே சொல்லவந்தோம் அந்த
நாய அநியாயங் கேளுங்களே
இடும்பங் கண்டார்க்குங் கணக்கனும் கூடியே
இட்டார் அரைப்பேரு பாருங்களே
கொந்தரப்புக் காட்டுக் கெத்தனை பேர் போனீர்
கொழுந்தெடுக்கப் போனதெத்தனை பேர்
சொந்தத்தில் கண்டாக்கு கணக்கண் இவர்கட்கு
சோறாக்க போனதெத்தனை பேர்?”
என வினா தொடுக்கும் பாடல்களும் கவனத்திற்குரியவைகளாகும்.
‘தொழிலாளர் அந்திரப் பிழைப்பு’ நாடகப் பிரதியாக்கம் மூன்று அங்கங்களில் வடிவமைக்கப்பட்ட நிலையில், பாடல் தொகுப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடல்கள் நாடகத்தின் தொடரொழுங்கில் தொகுக்கப்படவில்லை. மாறாக வீதிப்பாடல்களுக்கே உரிய தனித்துவத் தன்மையில் அமைந்த பாடல்கள் ஆசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நாடகத்தின் அங்கங்களுக்கு ஏற்ற தொடரொழுங்கில் அல்லாது, முனைப்பு பெற்ற விடயப்பரப்பு என்ற அடிப்படையில், அவற்றைச் சித்தரிக்கும் பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதலில் பாடல்களே வெளியான நிலையில் அப்பாடல்களின் உள்ளடக்கத்தின் தூண்டுதலின் பின்னணியிலேயே இந்நாடகம் உருவாக்கப்பட்டமைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அல்லது நாடகத்தை முழுமைப்படுத்திய பின்னரே பாடல்களைத் தெரிவு செய்து தொகுத்திருக்க வேண்டும். எது எவ்வாறாக இருப்பினும் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடல்கள் வீரியமிக்க கருத்து நிலைகளைக் கொண்டுள்ளமை அவதானத்திற்குரியதாகும். முதலாவதாக நாடகப் பிரதியாக்கமே மீள்பதிப்பு பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து பாடல் தொகுப்புக் குறித்த தேடலும் பெறுமதி வாய்ந்த பணியாக அமைகிறது.
தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற கூலி தொடர்பிலான பல பாடல்களும் அம்மையாரால் இயற்றப்பட்டுள்ளன. உழைப்பை உறிஞ்சும் கங்காணிகள், துரைமார்கள், கணக்கப்பிள்ளைமார்கள் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கான சாடல்களைப் பல பாடல்கள் வலியுறுத்துகின்றன. உழைப்புக்கேற்ற வேதனம் தொடர்பிலான பாதிப்புநிலைகள் பல பாடல்களில் பேசுபொருளாக அமைகின்றன.
“கூலிதான் குறைத்தார்கள் ஏழை எங்கட்கு
கொடுமையை நிறைத்தார்கள்.”
என்ற வரிகளும்,
“முப்பது ராத்தல் கொழுந்தெடுத்தே னெனக்கு
முழுப்பெயர் போடவு மில்லை யில்லை
எப்போது பார்த்தாலும் இந்தத் தொல்லையில்லை
இது கேட்க இங்கே யாரு மில்லை யில்லை”
என்ற வரிகளும் இதற்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. இப்பாடல்கள் ஊடாக உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. பெயர் அல்லது பேர் என்பது ஒரு நாள் கூலியைக் குறிப்பதாக அமைகிறது. அரைப்பேர் என்பது ஒரு நாள் கூலியின் அரைவாசிப் பெறுமானத்திற்குரியதாகும்.
தொழிற் சட்டங்களை போதிக்கும் பணியில் அக்கறை செலுத்தும் மீனாட்சியம்மாள், இலஞ்சம், கையூட்டல்கள் தொடர்பாகவும் அவதானத்தைச் செலுத்தியுள்ளார். அதீதமாக வேலை வாங்கும் கங்காணிமார்களது நடத்தைகளையும் சாடுகிறார். அது போலவே கணக்கப்பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கையூட்டல்கள் தொழிலாளர்களிடத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் ஒருவருக்கு வழங்கப்படும் சலுகை மற்றவரின் மேலதிக உழைப்பினாலேயே ஈடுசெய்யப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் அம்மையார் எழுதிய பல பாடல்களை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
“பொய்யல்ல மருந்து போத்தல் ரெண்டு
புதுக் கோழிமுட்டை டஜன் துண்டு
நெய்யொரு போத்தல் நினைவொடு கொண்டு
நீர் சொன்னப்படியே வரச் சொன்னார்”
“எப்போது பார்த்தாலும் அரைப் பேரு கால்பேரு
எடுத்ததுக் கெல்லாம் போடுரானே
கப்பங்கட்டிப் போத்தல் சாராயமே கொடுப்போருக்கு
கணக்கு சரியாக மூடுரானே!”
அவ்வாறே கையூட்டல் வழங்கும் மற்றொரு நிகழ்வையும் சுட்டிக்காட்ட விழைகிறார் மீனாட்சியம்மாள்.
“கருப்பாயி புருசனைப் பார்
கண்டாக்கைப் பிடித்தான் போத்தல்
ரெண்டாகக் கொடுத்தான்.
கடந்த மாசம் சம்பளம் பத்து
கருத்துடன் எடுத்தான்”
தோட்டங்களில் இவ்வாறான ஊழல்கள் எல்லா மட்டங்களிலும் இடம் பெறுவதுண்டு. இவ்வாறான ஊழல்களுக்கு ஒத்துழைத்துச் செயற்படுபவர்கள் தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்களாகத் திகழ்வார்கள். இவ்வாறு தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்களை ‘காட்டிக்கொடுத்தவர்கள்’ என ஓரங்கட்டும் சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன. அவ்விடயங்களையும் மீனாட்சியம்மாள் தனது பாடல்களில் இணைத்துக் கொண்டுள்ளார்.
“ஒற்றுமையாய் இருக்க வேண்டும்
உறுதி வேண்டும்
எல்லாம் – ஒரு மனதாக வேண்டும்
உண்மை வேண்டும்
சற்றுங் களைக்காதிருக்க வேண்டும்
சங்கங்கள் வேண்டும்
தொழிற்கட்சி பலம்பெற வேண்டும்
துயர் நீங்க வேண்டும்.”
பெருந்தோட்டக் கட்டமைப்பில் துரைமார்களுக்கு அடுத்த நிலையில் தலைமை கிளாக்கர் உட்பட்ட உத்தியோகத்தர்கள், தொழிற்சாலை உத்தியோகத்தர்கள், கணக்கப்பிள்ளை உட்பட்ட கள உத்தியோகத்தர்கள், கங்காணிகள், காவலாளிகள் என்றவாறு படிநிலைகள் காணப்படுகின்றன. அடுத்தகட்டமாக பிராந்தியங்கள், தலைமையகம் என்ற வகையிலும் இத்துறையின் வலையமைப்பு விரிவு பெறுகிறது. இவ்வலையமைப்பினரின் வாழ்வாதாரத்திற்கு தொழிலாளர்களின் உடல் உழைப்பே மூலமாக அமைகிறது. வேலைக்களத்தில் கள உத்தியோகத்தர்கள் மற்றும் கங்காணிகளினால் பெண் தொழிலாளர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்ற நிலையும் ஏற்படுகிறது. இந்நிலைமை பல்வேறு சிக்கல் நிலைகளைத் தோற்றுவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பான அவதானத்தையும் அம்மையாரின் பாடல்களில் காணலாம். அம்மையாரின் இம்முனைப்பு இலங்கையின் பெண்ணிலைவாதச் சிந்தனைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. பால்நிலைச் சமத்துவம் மற்றும் வர்க்க அடிப்படையிலான உந்துதல் ஆகியவை அம்மையாரின் ஒவ்வொரு பாடல் வரியிலும் வெளிப்படுகின்றன எனக் கூறலாம்.
பிரித்தானியர்களது காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் ஒரு புதிய சமூக உருவாக்கத்திற்கு வழிகோலுகிறார்கள். பெருந்தோட்டப் பொறிமுறையை விருத்தி செய்த நிலையில் இந்நாட்டில் பிரஜைகளாக வாழும் உரிமையைப் பெற்றுக்கொள்ளும் தருணம் வருகிறது. அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டசபை முறையில் டொனமூர் அரசியலமைப்பு சர்வஜன வாக்குரிமையை வழங்குகிறது. அதன் பின்னர் 1947 இல் உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு சிறுபான்மைக் காப்பீடு எனும் சரத்துடன் மலையக மக்களுக்கும் நிவாரணமான உறுதியை வழங்கியிருந்தது. சுதந்திர இலங்கையில் குடியுரிமைப் பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு போன்றன காரணமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்தார்கள். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் பெரும்பான்மையினரிடையே தோன்றிய வன்மம், சுதந்திரத்துக்குப் பிறகு மேலும் உக்கிரமடைகிறது. இந்தியர்களின் நிலையைப் பாதிக்கக்கூடிய சூழ்நிலைகளை, மக்கள் பிரதிநிதிகளும் உருவாக்கினர். சிறுபான்மையினரும் இனவெறி மற்றும் பிரதேசவாத மனப்பான்மையைக் கொண்டு இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான முனைப்புகளை மேற்கொண்டனர். இவ்விடயங்களை மனதில் இருத்தியதன் வெளிப்பாடாகவே மீனாட்சியம்மையாரால் ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ எனும் பாடல் பிரசுரம் வெளியிடப்படுகிறது.
இக்காலங்களில் கோ. நடேசய்யர் சட்டசபையின் உறுப்பினர் என்ற வகையில், தான்பெற்ற அனுபவங்களை மீனாட்சி அம்மையாருடன் பகிர்ந்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதன் ஊடாக, உண்மை நிலைமையை அறியும் வாய்ப்பு அம்மையாருக்கு கிடைக்கப்பெற்றிருக்கும். “இலங்கைவாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக்கொண்டே வருகிறது. இலங்கைவாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீவிரமுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே, அதிலும் முக்கியமாக இந்தியத் தோட்ட தொழிலாளர்களிடையே, பிரசாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம், பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பயனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கைவாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுகளின் மூலம் எடுத்துக்கூற முன்வந்துள்ளேன். இந்தியர்களைத் தூக்கத்தில் ஆழ்ந்துவிடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவிரமாகப் போராடும்படி அவர்களை இப்பாட்டுக்கள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே என் அவா” என அம்மையாரின் முகவுரை வரிகள் அமைகின்றன. அம்மையார் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குறித்துக் கொண்டிருந்த தீர்க்கதரிசனப் பார்வைக்குத் தக்க சான்றாக இவ்வரிகள் அமைகின்றன.
“பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் – அந்நாள்
பலபேர்கள் உயிர்களை யிடைவழி தந்தோம்
புலிகள் தான் வாழ்ந்திட்ட காடு – அது இப்போ
பொழில் சூழும் அழகிய சிங்கார நாடு
பலியிதற் கிந்திய ராடு – களைப் போல்
பல்லாயிரம் பேர்கள் உயிரிதற்கீடு
லங்கா மாதா நம்ம தாய் தான் இந்த
நாட்டினி லெல்லோரும் அவளுக்குச் சேய் தான்”
இவ்வரிகள் புலப்பெயர்வு தொடக்கம் இலங்கையைச் செல்வச்செழிப்பாக மாற்றுவது வரையில் உள்ள நகர்வைப் பதிவுகளாக்குவதாக அமைகின்றன. இலங்கையைச் சீரமைத்ததில் முக்கிய பங்கு வகித்த ஒரு சமூகமாக இருந்ததிலிருந்து, இலங்கைப் பிரஜையாக உரிமைகோரும் நடவடிக்கையை முன்னெடுத்தது வரையிலான அவர்களது முயற்சி முற்றிலும் பொருத்தமானதாகும். தொடர்ந்து,
“காட்டைத் திருத்தினது இந்தியனாலே நீங்கள்
கற்றுக் கொண்டு பேசுவதும் இந்தியனாலே
நாட்டைத் திருத்தினதும் இந்தியனாலே
நன்றி கெட்டுப் பேசுவதாகாது சொல் மேலே”
என்பதோடு,
“இந்தியத் தொழிலாளர் இங்கு வந்தார்கள்
இலங்கையைச் செழிக்கவே செய்து தந்தார்கள்
மந்திரிகள் மயக்கத்தில் மதிமறந்தார்கள்”
என்ற வரிகளும் யதார்த்த நிலையை எடுத்துரைப்பதாக அமைகிறது. குறித்த காலத்தில் ஏற்படும் பாதிப்புக் குறித்த கன்டனத்தை, நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் பணியினை வீதிப்பாடல்கள் ஆற்றி நிற்கின்றன. அப்பொறுப்பில் அம்மையாரின் அக்கால முன்னெடுப்பு மிகுந்த பொருத்தப்பாட்டுடன் அமைந்திருப்பது சிறப்பம்சமாகிறது.
சமூக அணி திரட்டலுக்குரிய முனைப்பை வீதிப்பாடல்கள் நோக்காகக் கொண்டிருந்தன. சமூகத்துக்கான அறிவுறுத்தலையும், தெளிவூட்டும் பணியையும் இப்பாடல்கள் ஒருங்கிணைத்துள்ளன. அம்மையாரின் வரிகளும் அப்பணிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளன.
“நூறு வருசந்தொட்டு லங்கையிலே
நேர்மையாய் வேலை செய்தும்
பாருங்கோ அம்மையாரின்
பட்சபாதச் செயலை”
மேலும்,
“இந்தியர்கள் ஒன்றுகூடி இனிதுரிமைதேடி நமக்கினிதுரிமை
சொந்தமாக ஒன்றுகூடி சுதந்திரத்தை நாடி
சிந்தனைசெய் தெல்லோரும் சீக்கிரமே கூடி
ஜெயம் பெறுவோம் வந்திடுவீர் சிரத்தையுடன் ஓடி”
என்ற வரிகள் அணிதிரட்டும் உணர்வை மேலும் திடப்படுத்துவதாக அமையப்பெறுகிறது.
திருமதி கோ.ந. மீனாட்சியம்மாள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கோ. நடேசய்யர் அவர்களது பாரியார் என்ற வகையில் அவருடன் இணைந்து அம்மையாரின் இலங்கைக்கான பிரசன்னம் அமைந்திருந்தது. நடேசய்யரது இந்திய வம்சாவளி மக்கள் குறித்த அக்கறையோடு இணைந்த வகையில் மீனாட்சியம்மாளினது பங்கேற்பும், பணிகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன. தம்பதியினரின் இணைந்த செயற்பாடுகள் இலங்கையின் நாடகத்துறைக்கும், பத்திரிகைத் துறைக்கும், கவிதைத்துறைக்கும், அரசியல் துறைக்கும் பங்காற்றியுள்ளன.
இலங்கையின் பெண்ணியச் செயற்பாட்டின் முக்கிய அடையாளமாக அம்மையாரின் வகிபங்கு மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அவர் முச்சந்தி இலக்கியம் என்ற வகுதிக்கும் வலிமை சேர்த்த ஆளுமையாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார். அவ்வாறே இலங்கையின் கவிதைத் துறையில் முக்கிய ஆளுமையாகவும், மலையகத்தின் முதல் பெண் கவிஞராகவும், மலையக வீதிப்பாடல் இலக்கியத்தை தோற்றுவித்த பெருந்தகையாகவும் விளங்குகிறார். அவரது பாடல்களின் உள்ளடக்கம் மலையகச் சமூகத்தின் நகர்வுகளுக்கு ஆதர்சமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மலையகம் குறித்த தூரதரிசனப் பார்வையோடு அம்மையாரின் பாடல் வரிகள் மலையகச் சமூக உருவாக்கத்தில் தனித்துவமாக மிளிர்கிறது. மலையக வரலாற்றில் வீதிப்பாடல்கள் யுகம் முக்கியமான புரட்சிக் காலமாகக் கருதப்படுகிறது. அந்த யுகத்தை உருவாக்கிய தலைசிறந்த ஆளுமையாக, மீனாட்சியம்மாளின் பங்கு குறிப்பிடத்தக்கது.
உசாத்துணை நூல்கள்
- அந்தனி ஜீவா, (2017), இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் அந்தரப் பிழைப்பு நாடகம், குமரன் புத்தக இல்லம்.
- யோகராசா. செ, (2023), ஈழத்து முச்சந்தி இலக்கியம், மகுடம் பப்ளிகேசன்.
- ஜெயசீலன். எம், ஹறோசனா. ஜெ, (2022) கோ.ந. மீனாட்சியம்மாள் படைப்புகள், ஊடறு பதிப்பகம்.
- நித்தியானந்தன். மு, (2014), கூலித்தமிழ், க்ரியா.
- தவச்செல்வன். சு, (2016), செவ்வொளி ஆய்வரங்கச் சிறப்பு மலர், சென். ஜோசப் கல்லூரி – மஸ்கெலியா.
- லெட்சுமணன். அ, (2015), வித்தகம், கொத்மலை, கட்டபுலா உப வலய தமிழ் மொழித்தின செயற்பாட்டுக் குழு.



