“சட்டத்தின் முன்பாக அனைத்து நபர்களும் சமமானவர்கள்.”
இலங்கை அரசியலமைப்பின் 12 ஆவது உறுப்புரையானது இனம், மதம், மொழி, பால், அரசியல், பிறந்த இடம், கருத்து போன்ற எதன் அடிப்படையிலும் மனிதர்கள் சமமானவர்கள் ஆவர் எனக் குறிப்பிடுகின்றது. ஆனால் இலங்கையில் குயர் மக்கள் இரண்டாந்தரமான அணுகுமுறைகளையே எதிர்கொள்கிறார்கள். இலங்கையில் குயர் மக்களைப் பாதிக்கும் சட்டங்கள் காலமாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமடையாமலே காணப்படுகின்றன. குயர் மக்கள் கொலனித்துவகாலச் சட்டங்களாலும் சமூகத்தில் காலங்காலமாகக் கடத்தப்பட்டுவரும் பிற்போக்குத்தனமான கருத்தியல்களாலும் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கின்ற அதேவேளை சமூகத்தில் ஆபத்தானவர்களாகவும் சமூகத்திற்கு அச்சுறுத்தலானவர்களாகவும் கட்டமைக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் குயர்மக்கள் தொடர்பான சட்டங்கள் எனும் போது, கொலனித்துவகாலச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட 1883 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக்கோவையின் 365 மற்றும் 365A பிரிவுகளின் அடிப்படையிலும், 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டத்தின் அடிப்படையிலும், தன்பாலீர்ப்பானது குற்றமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 365 மற்றும் 365A ஆகிய பிரிவுகள் அதனை “இயற்கையின் நியதிக்கு மாறான குற்றம்” எனக் குறிப்பிட்டு, “எந்த ஆணோ பெண்ணோ அல்லது விலங்கோ இயற்கையின் நியதிக்கு மாறாகத் தானாக முன்வந்து உடலுறவில் ஈடுபட்டால், அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்….” என்று கூறுகின்றன. அதாவது, எதிர்பால் உறவு தவிர்ந்த தனிப்பட்ட நபர்களின் பாலியல் செயற்பாடுகள் குற்றமாகக் கருதப்படுகின்றன. இக்குற்றத்திற்காகப் பத்து ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இந்தச் சட்டத்தால் குயர் மக்கள் தண்டனை பெற்ற வழக்குகளையும் அவதானிக்க முடியும்.
இலங்கைத் தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 399 என்பது ஆள் மாறாட்டம் தொடர்பில் குறிப்பிடுகின்றது. இச்சட்டம் மோசடி அல்லது மோசடிக்காகத் தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்துவதுடன் தொடர்புடையதாகும். ஒருவர் தன்னை வேறு ஒருவராகச் சாமர்த்தியமாகக் காட்டி, அல்லது வேறு ஒருவராக நடித்துக்கொண்டு, மோசடிக்கு முயற்சித்தால், அது அடையாளத் திருட்டு மூலம் மோசடி (Cheating by Personation) எனக் கருதப்படுகிறது. உதாரணமாக ஒருவர் வேறு ஒருவரின் பெயர் அல்லது அடையாள அட்டையைப் பயன்படுத்தி நன்மை பெறுதலைக் குறிப்பிடலாம். திருநர்கள் மாற்றிய பால்நிலை அடையாளம் கொண்டு மோசடி செய்வதாகக் கூறிச் சிலர் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இந்தச் சட்டம் திருநர்களுக்கு எதிராகப் பாகுபாடான வகையில் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன. இக்குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. இலங்கையில் பொலிஸ் நிலையங்களில் திருநர்களின் அடையாளங்களை நம்ப மறுக்கும் சூழ்நிலைகள், வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் அதிகம் இடம்பெறுகின்றன.
இலங்கையின் பொலிஸ் மற்றும் இராணுவத்தால், தாம் தவறு செய்யாத போதும், அச்சுறுத்தல்களையும் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்வதாகக் குயர் மக்கள் தெரிவிக்கின்றனர். தாம் எப்போதும் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் குற்றவாளிகளாகவே பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் தண்டனைச் சட்டக்கோவையின் 352 மற்றும் 353 ஆகிய பிரிவுகளின் கீழ் குயர் மக்களுடைய காதல் உறவுகள் குற்றமாகக் கருதப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் திருநங்கைகள் மற்றும் ஏனைய குயர் மக்கள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். பொலிஸார் இந்தச் சட்டத்தை குயர் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. தன்பாலீர்ப்பாளர்களான ஆண்கள் பொலிஸாரால் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றுள்ளமையைக் காணலாம்.
1841 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க அலைந்து திரிவோர் கட்டளைச் சட்டத்தின் 7 ஆவது பிரிவானது திருநர்கள் மற்றும் தன்பாலீர்ப்புள்ள ஆண்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தச் சட்டம் “அலைந்து திரிதல், ஒழுங்கற்ற நடத்தை, பொது அநாகரிகம் மற்றும் பாலியல் தொழிலுக்குக் கோருதல் ஆகிய விடயங்களைக் குற்றமாகக் குறிப்பிடுகின்றது. 1907 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க தடுப்பு இல்லக் கட்டளைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 451 ஆவது பிரிவு ஆகியனவும் குயர் மக்களைப் பாதிக்கின்ற சட்டங்களாக இருக்கின்றன.
சமீபத்தில் இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மாற்றம் மெதுவாகவே நடைபெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. 2022 ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. டோலவத்தே (Premnath C. Dolawatte), தன்பால் ஈர்ப்பைக் குற்றமாக்குவதை முடிவுக்கு கொண்டுவரும் சட்டமூலத்தைத் தாக்கல் செய்தார். இது சட்டப்பிரிவு 365 மற்றும் 365A (2023) இனை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட பாராளுமன்ற தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலம் ஆகும். இவ்விடயம் 2023 ஆம் ஆண்டு மே மாதம் வர்த்தமானியில் வெளியானது. இந்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்தது. உச்சநீதிமன்றம் இந்த சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானதல்ல எனத் தீர்ப்பளித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தலைவர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்திருந்தார். 2024 மற்றும் 2025 இன் நிலவரப்படி, சட்டமூலம் அதன் இரண்டாவது வாசிப்புக்குக் காத்திருக்கிறது. இது இந்த சட்டமூலத்தின் சாத்தியமான திருத்தத்தில் ஒரு முக்கியமான தருணமாகும். இந்தச் சட்டமூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற செல்வாக்குமிக்க நிறுவனங்களிடமிருந்து கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான அரசியல்வாதிகளும் இச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனலாம்.

இலங்கையில் குயர் மக்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டங்கள் இல்லாமையால், அவர்கள் அடிப்படைச் சுகாதார மருத்துவ வசதிகளைப் பெறுவது முதல் அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். பாலினத்தை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC) பெறுவதில்கூடத் திருநர்கள் சவால்களை எதிர்கொள்கிறார்கள். இங்கு குயர் மக்களுடைய சட்டரீதியான திருமணங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. குயர் மக்களுடைய சொத்துகளும், அவர்களுடைய மரணத்தின் பின், உயில் எழுதாத போது, இணையருக்கு உரிமையுடையதாகாது. குயர் மக்களுக்கான சட்டங்கள் இல்லாமை குயர் மக்களை இதுபோன்ற பல்வேறு சூழ்நிலைகளில் பாதிக்கின்றது. இதனால் பாதுகாப்பற்ற ஒரு சமூகப் பின்ணணியிலேயே குயர் மக்கள் தமது வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றனர்.
ஆனால் பாலினத்தை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC) பெற்ற, பாலினத்தை மாற்றிய ஆவணங்களை வைத்திருக்கின்ற ஒருவர் எதிர்ப்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய முடியும். உதாரணமாக ஆணாகப் பிறந்து, தன்னைப் பெண்ணாக உணர்ந்த ஒருவர், பெண் எனப் பாலினத்தைச் சட்டரீதியாக மாற்றிக்கொண்டிருந்தால், ஆண் ஒருவரைச் சட்டரீதியாகத் திருமணம் செய்ய முடியும்.
குயர் அமைப்புகள் மற்றும் LGBTQIA+ உரிமை ஆதரவாளர்கள் போன்றோர் நீண்டகாலமாகச் சட்டச் சீர்திருத்தங்களுக்காகப் போராடி வருகின்றனர். ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கையின் Universal Periodic Review (UPR) மீண்டும் மீண்டும் குயர் மக்களுடைய பிரச்சினைகளை வலியுறுத்தியுள்ளது. குயர் உரிமைகள், பாலினச் சமத்துவம், குயர் மக்களுக்கான சட்டங்கள், வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமைகள் சார்ந்த முக்கிய அம்சங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்ய வலியுறுத்துகின்றது.
இலங்கையில் நாளாந்தம் குயர் மக்கள் பல்வேறு சூழ்நிலைகளிலும் மனித உரிமை மீறல்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களது பால்நிலையின் காரணமாக வேலைத்தலங்களிலும், பொது இடங்களிலும், வார்த்தைப் பிரயோகங்களாலும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் வீட்டு வன்முறைகளையும் அதிகம் எதிர்கொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெரும்பாலான குயர் மக்கள் சட்டம் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையின்மையால் சட்டத்தை நாடவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் தேவைகருதி வெளிப்படுத்தப்பட்ட குயர் மக்களுடைய தனிப்பட்ட விடயங்கள், அறமற்ற முறையில் பொதுவெளியில் பகிரப்பட்ட சந்தர்ப்பங்களையும் குயர் மக்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களுடைய தனியுரிமை சார்ந்த விடயங்கள் மற்றும் பால்நிலை என்பன குறிப்பிட்ட நபரின் அனுமதியின்றிப் பகிரப்படுகின்றன. இவை குயர் மக்களைப் பாதுகாக்கக்கூடிய வலுவான சட்டங்கள் இன்மையினாலேயே இடம்பெறுகின்றன.
நேரடி வன்முறைகளை மட்டுமல்லாது இணையவழி வன்முறைகளையும் குயர் மக்கள் எதிர்கொள்கின்றனர். அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும்கூட வலுவான இணையப் பாதுகாப்புச் சட்டங்கள் இலங்கையில் இல்லை. இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களைக்கூட நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், குயர் மக்கள் நாடுவதற்கு ஏற்றமாதிரியான சூழ்நிலையை வழங்கவில்லை என்பதே யாதார்த்தமாக இருக்கின்றது.
உலகில் பல நாடுகள் குயர் மக்களைப் பாதுகாக்கின்ற சட்டங்களைக் கொண்டுள்ளன. தென்னாசிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்திய தண்டனைச் சட்டக்கோவையின் 377 ஆவது சரத்தை தென்னாசியாவில் இந்தியா முதன்முதலில் 6 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு நீக்கியது. இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் ஒருபாலினத் திருமணங்கள் அங்கு சட்டரீதியாக்கப்பட்டன. அதன் பின்னர் இந்தியாவில் தன்பாலீர்ப்பாளர்களுடைய திருமணங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன எனலாம். ஆனால் இலங்கையில் 365 மற்றும் 365A பிரிவுகளைத் திருத்துவதற்கான விவாதங்கள் இடம்பெற்றாலும், குயர் அரசியல் இலங்கையில் ஒரு பேசுபொருளாக இருந்தாலும்கூடச் சிறப்பான சட்டமாற்றங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
உசாத்துணை
எல்ஜிபிடி+ நபர்களைப் பாதிக்கின்ற சட்டங்களும் கொள்கைகளும், தொகுதி 3, சமத்துவத்தை தேடுதல் செயற்திட்டம்.



